29.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் 20. இந்து சமய இயக்கங்கள்

இந்து சமயம் என்று ஒரு சமயமே கிடையாது என்று இந்து சமயத்தின் வரண முறையை, சாதியக் கீழ்மையை எதிர்க்கும் முற்போக்காளர்கள் கூறுவர். இந்து சமயம் என்ற பெயரை முதன் முதலில் வழங்கியவர்கள் முகம்மதியர்கள் என்றும் கூறுவர்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்துப் பள்ளத்தாக்கைப் பாரசீகர்கள் கைப்பற்றித் தங்கள் பேரரசின் ஓர் உறுப்பாக்கினர். பாரசீக மொழியில் சகரம் ஹகரமாக மாறும். அசுரன் என்ற சொல் அசுரா என்று சமற்கிருதத்தில் வழங்குகிறது. அதைப் பாரசீகர்கள் அகுரா என்று வழங்குவர். சமற்கிருதத்துக்கும், பாரசீகத்துக்கும் உள்ள இந்த வேறுபாடு ஐரோப்பிய மொழிகளினுள்ளும் புகுந்து அவற்றை சென்றம் மொழிகளென்றும் கென்றம் மொழிகளென்றும் இரு தொகுதிகளாகப் பகுத்துள்ளது. பிரெஞ்சில் “நூறு” Centum எனவும் ஆங்கிலத்தில் Hundred எனவும் வழங்கப்படுகிறது. எனவே பிரெஞ்சு சென்றம் மொழியும் ஆங்கிலம் கென்றம் மொழியுமாகும்.

இந்த அடிப்படையில் சிந்து மாகாணம் இந்து (ஹிந்து) மாகாணம் என்று பாரசீகர்களால் வழங்கப்பட்டது. சிந்து மாகாணத்துக்கு வழங்கப்பட்ட இப்பெயர் மேற்கிலிருந்து நுழைந்த அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தகம் (இண்டிகா) என்று கிரேக்கர்களால் வழங்கப்பட்டது. அதிலிருந்து இந்தியா என்ற சொல் உருவானது. அரேபியர்கள் இந்தியாவை இந்துத்தானம் என்றனர். இந்தியாவில் வழங்கும் வழிபாட்டு முறைகளை ஒட்டுமொத்தமாக இந்து சமயம் என்று வழங்கினர்.

சமணம், புத்தம், பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் வாழ்ந்த பசவன் உருவாக்கிய லிங்காயதம் எனப்படும் வீரசிவனியம், பதினைந்தாம் நூற்றாண்டில் பஞ்சாபில் தோன்றிய குருநானக்கின் சீக்கியம் போன்ற சமயங்களைத் தவிர இந்தியாவில் தோன்றிய வழிபாட்டு முறைகளில் ஒரு சமய ஆசானோ, ஒருங்கமைந்த சமய நூலோ, வழிபாட்டுச் சடங்கோ கிடையாது. இந்துக் கடவுள்களில் முத்திருமேனிகள் என்று சிவன், திருமால், பிரமன் ஆகியோரைக் குறிப்பிடுவர். அவர்கள் தவிர காளி, முருகன், பிள்ளையார், சாத்தன், நாகன், கதிரவன், நிலவு என்று இன்னும் எத்தனையோ கடவுள்கள் தனித்த செல்வாக்குடன் திகழ்கின்றன. “இந்து” என்று இன்று அழைக்கப்படும் ஒருவன் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்கள், கருடர், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர், வித்தியாதாரர் என்று எண்ணற்ற தெய்வங்களுடன் ஊர்த் தெய்வம், குடும்பத் தெய்வம், குலத் தெய்வம், வீட்டுத் தெய்வம், சாதித் தெய்வம், காவல் தெய்வம், இவை தவிர்த்து வன்கொலையாய் இறந்தவர்களும் வீரமரணம் எய்தியவர்களுமான சின்னத்தம்பி, முத்துப்பட்டன், பலவேசஞ்சேர்வை, சுடலைமாடன், மதுரைவீரன், கருப்பண்ணன், ராக்கி, திரௌபதி, மாரியம்மன், முனியாண்டி, வெள்ளைக்காரச்சாமி, பிள்ளைமிதிச்சம்மன், தீப்பாய்ஞ்சம்மன் என்றும் ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெரு, முடுக்குக்கு முடுக்கு, சந்திக்கு சந்தி என்றும் தெய்வங்களையும் வணங்கிவிட்டு அதுவும் போதாவென்று கிறித்துவ, முகம்மதியத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இன்று இந்தியாவில் பிறக்கும் மக்கள் உண்ண உணவில்லாமல் இளைக்கலாம், உடுக்க உடையின்றி வாடலாம், ஒண்டக் குடிசையின்றி ஒடுங்கலாம், குடிக்க நீரின்றித் தவிக்கலாம், கல்வியின்றித் தற்குறியாகலாம்; ஆனால் அவனுக்குத் தெய்வங்களுக்குக் குறைவே இல்லை. இருக்கும் தெய்வங்களைக் கணக்கிட முடியுமானால் ஒவ்வொரு இந்தியனுக்கும் குறைந்தது சராசரி இரண்டு தோறும். இன்றைப் போல் எத்தனை மடங்கு மக்கள் தொகைப் பெருக்க விகிதம் கூடினாலும் அதற்கு ஈடு செய்யும் வகையில் தெய்வங்களின் எண்ணிக்கையும் கூடும்.

இந்திய மக்களின் சமயங்களை வரையறுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சங்கரர் வேதிய சமயங்கள் என்று ஆறினைக் குறிப்பிட்டுள்ளார். இவை அறுமதங்கள் என்ற தொகுப்பில் வருகின்றன. அவை சிவனியம், மாலியம், சாத்தம் (சக்தி → சாக்தம்), கதிரவன் (சூரியன் → சௌரம்), பிள்ளையாரியம் (கணபதி → காணபத்தியம்), குமரம் (குமரன் → கௌமாரம்) ஆகியவை. இவ்வாறு சமயங்களும் வேதிய (வைதிக) மதங்கள் என்ற பகுப்பில் வருகின்றன.

வேதாந்த சமயங்கள் என்ற பகுப்பில் கபிலம், கணாதம், பதஞ்சலியம், அச்சபாதம், வியாசம், சைமினியம் என்ற அறுமதத் தொகுப்பு வருகிறது.

புறச் சமயங்கள் என்ற பகுப்பில் உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம் என்ற தொகுப்பு வருகிறது.

வீரம் (வைரவம்), வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சிவனியம் என்று ஆறு பிரிவுகளைக் கொண்டது சிவனியம்.

இவற்றில் வேதாந்த சமயமாகிய கபிலம் சாங்கியமெனப்படும். இதன் அடிப்படைக் கோட்பாடு, தன்னிருப்புடைய, தோற்றமோ அழிவோ இல்லாத எண்ணற்றவையாய் வான்வெளியில் உலவும் ஆதன்கள் ஐம்பூதங்களின் கவர்ச்சிக்குட்பட்டு உயிராக உருவாவதாயும் அப்போதிலிருந்து அவ்வாதனின் குறிக்கோளே இந்த ஐம்பூதக் கட்டிலிருந்து விடுபடுவதாகி விடுகிறது என்கிறது இச்சமயம். இவ்வாறு ஐம்பூதங்களின் கட்டுக்குட்பட்ட ஆதன் பல வினைகளிலும் ஈடுபடுகிறது. இவ்வினைகள் அவ்வாதன் மீது கறைகளை ஏற்படுத்துகின்றன. இந்தக் கறைகளைக் களைந்தால்தான் ஆதனால் ஐம்பூதக் கட்டிலிருந்து விடுபட முடியும். அதற்காக ஆதன் மறுபிறவி எடுக்கிறது. இவ்வாறு மீண்டும் மீண்டும் பிறந்து ஒரு கட்டத்தில் செயலில்லா நிலையடைந்து தன் வினைப் பயன்களைக் களைகிறது. இப்போது ஆதன் ஐம்பூதக் கட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் பகுதி எனப்படும் பேரண்டமாகிய அண்டவெளியுடன் இரண்டரக் கலக்கிறது.

இந்தக் கோட்பாட்டிலிருந்து தான் இந்தியாவில் வினையின்மை எனப்படும் மலட்டுக் கோட்பாடு உருவானது. நாம் பிறிதோரிடத்தில் குறிப்பிட்டது போல் புத்தத்தின் வினைவிளைவுக் கோட்பாட்டில் ஏற்பட்ட சிதைவின் விளைவேயாகும் இது.

விவேகானந்தர் கூட வினையைப் பற்றியும் மறுபிறவியைப் பற்றியும் விளக்குவதற்கு ஒருவன் அவன் எந்தத் தீங்கும் செய்யாதவனாயிருந்தும் இன்னல்களைச் சந்திக்கிறான்; பல தவறுகள் செய்பவன் இன்பங்களை நுகர்கிறான். எனவே இன்பம், துன்பம் இரண்டும் ஒருவனுடைய இப்பிறப்பின் விளைவுகளல்ல அவை முன் பிறப்புகளின் விளைவுகளாகவே இருக்க வேண்டும். அல்லது இப்பிறப்பில் அவன் நுகராது போன அவன் இப்பிறப்புச் செயல்களின் விளைவான இன்ப துன்பங்களை வரும் பிறப்புகளில் நுகர்வான் என்று கூறினார்.

ஆனால் நன்றென்பதும் தீதென்பதும் எல்லாக் காலத்திலும் ஒரே அளவுகோலைக் கொண்டவையல்ல. அத்துடன் ஒரு மனிதனுக்கு வரும் இன்ப துன்பங்கள் குமுக விதிகளாலும் இயற்கை விதிகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன் உலகில் நடைபெறும் அனைத்தும் தற்செயல், இயற்கை விதி என்ற இயங்கியல் எதிரிணைகளால் நடத்தப்படுகின்றன என்ற உண்மைகளைக் கணக்கிலெடுக்காததால் அவர் எய்திய முடிவாகும்.

விவேகானந்தரின் இந்த வாதம் இறுதியில் வினையின்மைக் கோட்பாடாகிய மலட்டுக் கோட்பாட்டில் கொண்டு இயல்பாகவே சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவரோ வினை செய்வதை மிகவும் வலியுறுத்தினார். செயலின்மைக் கோட்பாட்டைச் சாடினார். இது அவரிடமுள்ள ஒரு பெரும் முரண்பாடு.

சாங்கியம் எனப்படும் கபிலம் வினையில்லா நிலையைக் குறுக்கு வழியில் எய்த யோகம் எனும் உத்தியைப் பரிந்துரைத்தது. இந்த உத்தியை விரித்துரைத்தவர் பதஞ்சலி. இது ஒரு தனி மதமாகியது.

கபிலத்தின் அடிப்படைக் கோட்பாட்டை ஒட்டியே வேதிய சமயங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக சிவனியத்தை எடுத்துக் கொள்வோம். இதன் கோட்பாடு பசு, பதி, பாசம் என்ற வகைத்திணைகளால் குறிக்கப்படும். சாங்கியத்தின் ஆதன் பசு, பகுதியின் இடத்தைப் பதியாகிய சிவன் பிடித்துக் கொள்கிறார். பாசம் எனப்படுவது ஐம்பூதங்களின் கட்டினால் ஆதனுக்கு ஏற்படும் பிறப்பும் அதில் ஆதன் செய்யும் வினைகளின் விளைவால் ஆதன் மீது படியும் கறைகளுமாகும். பசுவாகிய ஆதன் பாசத்தை விட்டு விலகி சிவனாகிய பதியை நோக்கி நகர்ந்து அதனுடன் இரண்டறக் கலக்கும் நிலையே எல்லையில்லாத இன்பமும் நிலையான மகிழ்ச்சியும் தரும் வீடுபேறு என்பது சிவனியம். இதன் அடிப்படையில் உருவானதுதான் செயலின்மைக் கோட்பாட்டுடன் இணைந்த அடைக்கலக் கோட்பாடு.

இதே கோட்பாட்டில் சிவனின் இடத்தில் திருமாலை வைத்தால் அது மாலியம். சத்தி எனப்படும் உமையை வைத்தால் அது சாத்தம். இவ்வாறே கதிரவம். பிள்ளையாரியம், குமரம் ஆகியனவும்.

இந்த அறு மதங்களும் மேற்சாதியினர்க்குரியவை. எனவே கீழ்ச்சாதியினரை ஈர்க்கும் வகையில் பைசாசம் என்பதனைக் கொண்ட ஓர் ஆறு மதப்பட்டியலும் உள்ளது.

சிவனியம் ஆறு பிரிவுகளைக் கொண்டிருப்பது போல் மாலியமும் வடகலை, தென்கலை என்ற பிரிவுகளைக் கொண்டது. புத்தம் பெருவூர்தி, சிறுவூர்தி எனவும் சமணம் அம்மணம், வெள்ளுடை எனவும் பிரிவுகளைக் கொண்டவை.

இவை தவிர சங்கரரின் அத்துவைதம். இது அனைத்து ஆதன்களும் ஒரே ஆதனின் பிரிவுகளே. அதாவது பேராதனாகிய இறைவனும் உயிராதன்களும் ஒன்றே என்று கூறுகிறது. இது மனிதர்களுக்குள் வேறுபாடில்லை என்பதைப் பொருளாகக் கொண்டது.

மேலே குறிப்பிட்ட சமயங்களைப் பகுத்தாய்ந்தால் அவற்றில் ஊடாடும் இழையாகத் துலங்குவது மனிதர்களுக்கு இடையிலுள்ள உறவுகளேயாகும். தெளிவாகக் கூறுவதாயிருந்தால் வருண ஏற்றத்தாழ்வுகளையும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் தாங்கிப் பிடிப்பனவும் தாக்குவனவுமாகவே இச்சமயப் பிரிவுகள் சுருங்கிவிடுகின்றன. “இந்து” சமயம் எனப்படும் பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட சமய அமைப்புக்கு உள்ளிருந்தோ புறத்திலிருந்தோ அறைகூவல் வரும் வேளைகளில் மனிதநேயம் பேசி அனைவரும் சமம் என்று பசப்புவதும் அந்த அறைகூவல் எதிர்கொள்ளப்பட்டு அகன்றவுடன் பழைய வேறுபாடுகளை வலியுறுத்துவதுமான வரலாறே இந்து சமயத்தின் வரலாறாக இருந்துள்ளது.

புத்தம், சமணம் ஆகியவற்றின் அறைகூவல் வந்தபோது சிவனியமும் முகம்மதியத்தின் நுழைவுக்காலத்தில் சங்கரரின் அத்துவைதமும் பசவனின் எழுச்சியின் விளைவாக வீர சிவனியமும் இராமனுசரின் அரிய முயற்சியால் தென்கலை மாலியமும் தோன்றின. கிறித்துவம் நுழைந்தபோது தாயுமானவர், இராமலிங்கர் போன்ற தமிழகப் பெருமக்களைப் போன்று வடக்கில் கபீர்தாசர், இராமதாசர் போன்றோர் தோன்றினர். வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தீர்ந்ததும் அவை மீண்டும் பழைய நிலைக்கே திரும்பின.

சென்ற நூற்றாண்டில்[1] உள்நாட்டில் மேலைக் கல்வி பயின்றோரும் மேலைநாடுகள் சென்றோரும் “இந்து” சமயத்தின் பிற்போக்குத் தன்மையைக் கண்டு மனம் வெதும்பி பல்வேறு சீர்திருத்த அமைப்புகளை உருவாக்கினர். ஆனால் உள்ளே இருந்த பிற்போக்கு விசைகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டின. ஆனால் அவற்றை வெற்றி கொள்ளும் நிலை வந்த போதெல்லாம் மாக்சுமுல்லர், ஆல்காட், பிளாவட்கி, அன்னிபெசன்ட் போன்ற வெளிநாட்டினர் இப்பிற்போக்கு விசைகளுக்கு உளவியல் வலிமை கொடுத்து ஒருங்கிணைப்பும் ஏற்படுத்தி வலுப்படுத்தி விட்டனர். மறுபுறம் பிற சமயத்தவர் ஒவ்வொரு காலத்திலும் மதமாற்றத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராட்டமின்றி எளிதில் தீர்வு காணலாமென்ற மாயையை ஏற்படுத்தி ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்து சமயப் பார்ப்பனர் சிலரால் தோற்றுவிக்கப்பட்டதே ஆர்.ஏசு.ஏசு. எனப்படும் இராட்டிரிய சுயம் சேவக் சங்கம் (இரா.சே.ச,) இதன் அடிப்படைக் கோட்பாடு சரியாயிருப்பது போல் தோன்றும். நாமே நம் உயர்வுக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபட வேண்டும் என்ற பொருள் அவ்வியக்கத்தின் பெயரில் துலங்கும்.

இந்த அடிப்படையில் இளைஞர்களிடையில் ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சண்டைப் பயிற்சி ஆகியவற்றை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலேயரான அயலவரின் ஆட்சியில் இந்தியா இருந்த சூழ்நிலையில் இது போன்ற நடைமுறை பலரை ஈர்த்தது. அதே வேளையில் இந்த இயக்கம் வெள்ளையரை எதிர்ப்பதை விட பிற சமயத்தினரை, குறிப்பாக முகம்மதியர்களை எதிர்ப்பதையே முதன்மைப்படுத்தியது.

வட இந்தியாவில் மார்வாரிகள், பார்சிகள் போன்ற வாணிக வகுப்புகளுக்குக் கடும் போட்டியாளர்கள் முகம்மதியர்களே. அவர்களுக்குக் காலங்காலமாக இருந்து வந்த உலக வாணிகத் தொடர்பு இதற்கு முகாமையான காரணம். எனவே இரா.சே.ச. இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டினுள் மார்வாரிகளும் பார்சிகளும் வைத்துக் கொண்டனர். அதைப் போலவே முகம்மதிய வாணிக வகுப்பும் அச்சமயத்தினரைத் தங்கள் செல்வாக்கினுள் வைத்துக் கொண்டனர். இதன் விளைவாக வட இந்தியாவில் மதக்கலவரங்கள் நிகழ்ந்தன. மார்வாரி வகுப்பின் ஏவலனாக மாறிவிட்ட இரா.சே.ச. இக்கலவரங்களை முன்னின்று நடத்தியது.

முகம்மதிய வாணிக வகுப்பின் நலன்களை முன் வைத்து மூசுலீம் லீக் கட்சி உருவானது. இந்தியா விடுதலையடையும்போது மாநிலங்களுக்கு முழுமையான தன்னாட்சி வேண்டுமென்று அது கேட்டது. அன்று மார்வாரிகளின் கைப்பாவையாக இருந்த பேரவைக் கட்சியும் அதன் தலைவர்களும் அதை ஏற்கவில்லை. அதிக அதிகாரமுள்ள நடுவணரசு ஏற்பட்டால் அது மார்வாரிகளின் நலன்களுக்கே பாடுபடும் என்று முகம்மதியத் தலைவர்கள் சரியாகவே கணித்தார்கள். அவ்வாறு முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்கள் இல்லையெனில் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமென்று அவர்கள் கேட்டனர். தன்னாட்சியுடைய மாநிலங்களா அல்லது பாக்கித்தான் என்ற தனிநாடா என்ற கேள்வியை முசுலீம் லீக் முன் வைத்தபோது பேரவைத் தலைவர்கள் தனிப் பாக்கித்தான் என்று விடை கூறினர். இவ்வாறு இந்தியப் பிரிவினைக்குப் பேரவைக் கட்சியினரே காரணமாயிருந்தனர்.

இந்தியா இரண்டாகப் பிரியும் என்ற நிலை வந்தவுடன் இப்பிரிவினைக்கு முகம்மதியர்களே காரணம் என்று பேரவைத் தலைவர்களும் இரா.சே.ச.இயக்கமும் தங்கள் தொண்டர்களையும் பொதுமக்களையும் தூண்டி விட்டனர். வட இந்தியாவெங்கும் குருதியாறு ஓடியது. முகம்மதியர்களுக்கு உரிமைகளைக் கொடுக்க விரும்பாத, அதே வேளையில் இந்தியா பிரிவதையும் விரும்பாத காந்தி இக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடைச் செலவு தொடங்கினார்.

காந்தியார் முகம்மதியர் சார்பாகச் செயற்படுகிறார் என்று குற்றம் சாட்டிய இரா.சே.ச. திட்டமிட்டுத் தன் தொண்டர்களில் ஒருவனான கோட்சே என்பவனைக் கொண்டு அவரைக் கொன்றது.

காந்தியாரின் கொலையில் பேரவைக் கட்சித் தலைவர்களும் இந்தியாவின் ஆட்சியை வெள்ளையரிடமிருந்து புதிதாகப் பெற்றிருந்த ஆட்சித் தலைவர்களும் உடந்தை என்றொரு கருத்து அன்றிலிருந்தே நிலவி வருகிறது. காந்தியடிகளின் அரசியல் நெறிகள், பொருளியல் வளர்ச்சி பற்றிய கண்ணோட்டம், எளிமை பற்றிய கண்ணோட்டம், அரசியல் விடுதலைக்குப் பின் பேரவைக் கட்சியைக் கலைத்து விட வேண்டுமென்ற அவரது கருத்து போன்றவை அவரை இத்தலைவர்களுக்கு அகற்றப்பட வேண்டிய ஒரு தடைக்கல்லாக ஆக்கியிருந்தன போலும். எனவே இரா.சே.ச.வின் முயற்சிகளுக்கு அவர்கள் பார்வையாளர்களாக இருந்தனர்.

காந்தியாரின் கொலையைக் காரணம் காட்டி இரா.சே.ச. இயக்கம் தடை செய்யப்பட்டது. இருந்தாலும் தலைமறவாகப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். முகாம்களில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும் மக்களை ஈர்க்கும் ஓர் இயக்கமாக அது விரைந்து வளர்ச்சியுறவில்லை. அதற்குக் காரணம் உண்டு.

முதலாவது, காந்தியார் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை. இரண்டாவது காந்தியாரைக் கொன்றது. மூன்றாவதும் முகாமையானதுமான காரணம் பழைய வரணமுறையையும் சாதிய ஒடுக்குமுறையையும் மீண்டும் முழுமையாக நிலைநாட்ட வேண்டும் என்ற அவர்களது முயற்சி.

ஆங்கிலேயராட்சி நடைபெற்ற போது தோன்றிய இந்து சமய மீட்பியக்கங்களாகிய ஆரிய சமாசம், இறையியல் கழகம் போன்ற அனைத்தும் மறைகளையும் பண்டைச் சமற்கிருத நூல்களையும் தங்கள் வழிகாட்டிகளாகவும் தங்கள் கோட்பாடுகள், நடைமுறைகளை ஆகியவற்றின் தொடக்கப் புள்ளியாகவும் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கியங்களின் முடிவு என்னவென்றால் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களென்பதும், அவர்களே புவியில் வாழும் தெய்வங்களென்பதும் குமுகத் தலைமைக்கும் ஏன் அரசியல் தலைமைக்கும் கூட அவர்களே தகுந்தவர்களென்பதுமாகும். வரணங்கள் குமுக நிலைப்புக்கு இன்றியமையாத நிறுவனங்களாகும் என்பது அவர்கள் அனைவரதும் நிலைப்பாடு.

இந்திய மக்கள் எழுத்தறிவில்லாமலிருக்கலாம், அதன் விளைவாகப் பொது அறிவில் குறையுடையவர்களாயிருக்கலாம், போராடும் குணத்தை இழந்திருக்கலாம், வறுமையின் கொடும் பிடியில் சிக்கி சீரழியலாம், பழமையின் பிடியில் சிக்கித் தவிக்கலாம். ஆனால் பண்டை வருணப் பாகுபாட்டிலுள் நுழைய அவர்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். அவர்களது உய்வுக்குப் பெரும் போராட்டங்களை நிகழ்த்தும் தலைவர்கள் எவரும் தோன்றாத நிலையில் அவர்கள் காந்தியைச் சார்ந்து நின்றார்கள். எனவே தான் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக நடைபெற்ற இரா.சே.ச.வால் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்ட முடியவில்லை.

ஆனால் நிலமை மாறியது, அதற்குப் பல காரணங்கள்.

ஒவ்வொரு குமுகியல் இயக்கத்துக்கும் இணையாக ஒரு அரசியல் இயக்கம் உண்டு. அந்தக் குமுகியல் இயக்கத்தின் குறிக்கோள்களையும் கோட்பாடுகளையும் நடைமுறைப் படுத்துவது என்ற கண்ணோட்டத்தில் அது உருவாகும். அது ஆட்சியைப் பிடிக்கும். ஆட்சியைப் பிடிக்கும் அதன் முயற்சியின் போதே அதன் குறிக்கோள்களின் முனைப்பை இழக்கும். பெரும்பாலான நேர்வுகளில் அவற்றுக்கு எதிர்மறையான நிலையைக் கூட எடுப்பதுண்டு. இவ்வாறு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அந்த அரசியல் இயக்கத்தின் அதிகார வலிமையும் பண வலிமையும் அதன் மூலவிசையான குமுகியல் இயக்கத்தைத் தாக்கித் தன் கோட்பாட்டுச் சீரழிவிற்கு அதனையுள் உள்ளாக்கும். இந்த விளக்கத்துக்கு உருசியாவின் பொதுமைக் கட்சியும் தமிழகத்தின் திராவிட இயக்கமும் சிறந்த சான்றுகளாகும்.

இந்தப் பொதுவான நடைமுறைக்குப் பேரவைக் கட்சி ஒரு விதிவிலக்கு. அக்கட்சியின் தோற்றத்தின் பின்னணியில் சமய இயக்கம் எதுவும் இல்லை. அதைத் தோற்றுவித்த ஆங்கிலேயராகிய இயூம் ஆல்காட்-பிளாவட்கியின் இறையியல் கழகத்தோடு தொடர்பு கொண்டிருந்தவரேனும் பின்னர் அதனை அறுத்துக் கொண்டு விட்டார். இருப்பினும் அவருக்கு அக்கழகத்தின் ஆரிய இன மீட்சிக் கண்ணோட்டம் இருந்திருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டம் திலகர் காலம் வரை தொடர்ந்தது. திலகர் வெள்ளையரை வெளியேற்றவும் பார்ப்பன மேலாண்மையை மீட்கவும் வன்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

இதே கண்ணோட்டம் தமிழகத்திலும் இருந்தது. வாஞ்சிநாதன் இதற்கு ஆணித்தரமான சான்று. அவரோடு சேர்ந்திருந்த பல்வேறு மேல் சாதியினரும் வெள்ளையரால் தம் சாதிய மேலாண்மைக்கு ஏற்பட்ட அறைகூவலை எதிர்கொள்ளவே களத்திலிறங்கினர்.

ஆனால் வ.உ.சிதம்பரனாரைச் சுற்றி உருவான நண்பர் குழாம் வேறுபட்டது. வ.உ.சி, ஒரு தெளிவான முற்போக்கினர். சாதியொழிப்பு, பெண்ணுரிமை, ஒப்புரவு, தொழிலாளர் நலன் இவையனைத்துக்கும் மேலாகப் பொருளியல் தற்சார்பு எனப்படும் பொருளியல் விடுதலை ஆகிய அனைத்திலும் தெளிவானவர். அவரது நண்பரான பாரதியார் முற்போக்குக்கும் பழமைக்கும் நடுவில் ஊசலாடினார். சுப்பிரமணியசிவா போன்ற பிறரும் பிற்போக்கினர் இல்லை.

ஆனால் ஒட்டுமொத்தத்தில் இவர்கள் மிகமிகச் சிறுபான்மையினரே, பிற்போக்கினரே மிகுதி. இந்நிலையில் இந்த வன்முறைக் கண்ணோட்டத்தை முறியடிக்க ஆங்கிலேயரின் துணையுடன் காந்தியார் களத்திலிறங்கினார். அவரது தளர்விய அணுகலால் பல தரப்பினரும் பேரவைக் கட்சியினுள் நுழைந்தனர். பட்டேல், மொரார்சி தேசாய், ஆச்சாரியார், மூத்துராமலிங்கத் தேவர் போன்ற சாதி வெறியர்களும் அம்பேத்கார் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராளிகளும் மார்க்சியர்களும் அவரைச் சுற்றி அணி திரண்டனர். கனத்த கோட்பாட்டுச் சிந்தனைகளைப் புகுத்தாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் வெற்றுப் பரிவு, வன்முறை மறுப்பு என்ற பெயரில் ஒரு போலி அன்புடைமை, ஆங்கிலேயரின் பொருளியல் ஆதிக்கத்தை முறியடிக்க மரபுத் தொழில்களுக்குச் செல்வாக்கு ஏற்படுத்தல் என்ற பெயரில் மரபுத் தொழில் சார்ந்த சாதி அமைப்புக்கும் வரண முறைக்கும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அவர் இடங்கொடுத்தார். அத்துடன் இந்து-முகம்மதியர் ஒற்றுமை என்ற பெயரில் ஒரளவு முகம்மதியர்களையும் கவர்ந்தார்.

இரா.சே.ச.வின் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது சனசங்கம் என்ற கட்சி. அது 1976 வரை மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை போன்று எழுந்து நடமாட இயலாமலே இருந்தது. 1975இல் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தபோது இரா.சே.ச. மீதும் அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் அடக்குமுறையை ஏவினார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஓர் எதிர்ப்பணியை உருவாக்கியபோது சனசங்கத்திற்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது. புதிய அணியாக உருவாகிய சனதாக் கட்சியில் வெளியுறவு அமைச்சராகப் பதவி பெற்ற சனசங்கத் தலைவர் வாசுபாயி தங்கள் சமயக் கண்ணோட்டத்துக்கு மாறாகப் பாக்கித்தானையும் இந்தியாவையும் நெருங்க வைத்தார். ஆனால் இதைப் பதவியைப் பிடிப்பதற்கான கொள்கைத் தளர்வு என்று கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவர்கள் தேர்தலில் வைத்த பொது முழக்கமே இந்திராவின் முற்றதிகாரத்தை முறியடிப்பதென்பதே. அத்துடன் இப்பணி தேர்தலுக்குப் பின் மேற்கொள்ளப்பட்டதே. எனவே இதனை வாசுபாயி என்ற தனிமனிதரின் நற்கூறுகளில் ஒன்று என்றே கொள்ள வேண்டும்.

இருந்தாலும் ஆட்சியில் இரா.சே.ச. கட்சியினர் ஊடுருவ முயல்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் சனசங்கத்தினர் இரா.சே.ச. உறுப்பினர்களாக இருப்பதால் இந்த “இரட்டை உறுப்பினர்களை”க் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இராசநாராயணன் என்பவர் தலைமையிலான சிலர் முழக்கமிட்டனர்.

இந்திய விடுதலைக்குப் பின் 1960களில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைக் காரணமாகக் காட்டி உணவுப் பொருள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அகற்றல், சீனி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வெளிச் சந்தையிலும் தாராளமாக வழங்கிப் பங்கீட்டு முறையின் தேவையை மங்க வைத்தது, விலைவாசி எறாமல் பராமரித்தது போன்று பேரவைக்கட்சி ஆட்சி தொடங்கி வைத்த பல தீங்குகளுக்கு முடிவேற்படுத்தும் திசையில் இவ்வாட்சி சென்று கொண்டிருந்தது.

சோவியத் நாட்டைச் சார்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்த இந்திராவுக்கு மாறாக முழுமையாக அமெரிக்க சார்பான ஆட்சியாக அமையும் என்று இவ்வாட்சியை அமெரிக்கா எதிர்பர்த்தது. ஆனால் பாக்கித்தான், ஈரான் என்று இந்தியாவின் அண்டை நாடுகளில் தன் செல்வாக்கை என்றும் கைவிட அமெரிக்கா விரும்புவதில்லை. எனவே இந்தியாவும் சோவியத் அணியை முழுவதுமாக விட்டுவிட முடியாது. அவ்வாறு தலைமையமைச்சரான மொரார்சி தேசாய் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருந்தபோது இராசநாராயணன் பல பாராளுமன்ற உறுப்பினர்களைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தார். புதிக்தாக உருவான சனதாக் கட்சி உடைந்த போது முன்னாள் சனசங்கத்தினர் தங்கள் கட்சிக்குப் பாரதிய சனதாக் கட்சி என்ற புதுப்பெயரைப் புனைந்து கொண்டனர்.

நெடுநாள் தலைமையமைச்சர் கனவு கண்டு கொண்டிருந்தவரும் சனதாக் கட்சி ஆட்சியில் வேளாண்மையமைச்சரும் துணைத் தலைமையமைச்சருமான சரண்சிங் இந்திரா ஆதரவளிப்பதாகக் கூறிய உறுதிமொழியை நம்பி ஆட்சியமைத்தார். இந்திரா காலைவாரி விடவும் தேர்தல் நடந்து இந்திரா மீண்டும் ஆட்சியமைத்தார். நெருக்கடி காலத்தில் தன்னை நம்பியிருந்தவர்களெல்லாம் கைவிட்டுவிட்டனர் என்ற காரணம் காட்டித் தன் இளைய மகன் சஞ்சய் காந்தியை அரசியலுக்குக் கொண்டு வந்திருந்தார் இந்திரா. கெட்டுப்போன செல்லப் பிள்ளையான அவரே தாயை மிரட்டி ஆட்சியிலுள் தலையிட்டதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. ஒரு விண்ணூர்தி ஏதத்தின் போது அவர் இறக்கவும் விண்ணூர்தி ஓட்டியாக இருந்த மூத்த மகன் இராசீவ் காந்தி அரசியலினுள் நுழைந்தார். ஐயுறத்தக்க வகையில் தன் காவலர்களாலேயே தன் வீட்டு வளாகத்தினுள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா. பின் பதவிக்கு வந்த இராசீவ் காந்தி அந்தக் கொலை பற்றிய புலனாய்வு அறிக்கைகளை வெளியிடப் பிடிவாதமாக மறுத்ததையடுத்து அக்கொலை வெளியில் கூறப்பட்டதைப் போல் பஞ்சாபிக் போராளிகளின் செயலா அல்லது அரண்மனைக் கொலையா என்ற ஐயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. கொலைக்குக் காரணமாணவர்கள் என்று இரு பஞ்சாப் காவலர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

இராசீவ் காந்தியின் அமைச்சரவையில் பண மந்திரியாக இருந்தவர் வி.பி.சிங். இவர் இந்திரா காந்திக்கு நெடுநாள் நம்பிக்கைக்குரியவராக இருந்திருக்கிறார். ஓரளவு பொறுப்பு வாய்ந்த அரசியலாளராக வாழ்ந்து வந்தவர். நேரு குடும்பத்துக்கும் இராசீவ் காந்திக்கும் நெருங்கிய சிலர் மீது வருமானவரித்துறை மூலம் வி.பி.சிங் நடவடிக்கை எடுத்ததும் அவரைப் பாதுகாப்புத்துறைக்கு மாற்றினார் இராசீவ். புதுத்துறைக்குச் சென்ற வி.பி.சிங் அங்கு நடைபெற்றிருந்த ஓர் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில், “மார்க்சியர்கள்” வகுத்துக் கொடுத்துள்ள “நிகர்மைக்” கோட்பாடும் அமெரிக்கா வகுத்துக் கொடுத்துள்ள “மக்கள் நல அரசு”க் கோட்பாடும் ஆட்சியாளர்களின் கைகளில் எல்லையில்லா அதிகாரங்களைக் குவித்துள்ள நிலையில் அங்கிங்கெனாதபடி அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாதது. அதுவும் பழமைச் சுமையால் தளர்ந்து குமுகியல் ஒடுக்குமுறையால் மக்களின் குருதியை இரக்கமின்றிக் குடித்தே உரமேறிய காட்டேரிகளாகிய மேட்டுக்குடியினரிடமும் அவர்களது நடைமுறையையே ஆதாயமெனப் பின்பற்றும் புதிதாக நுழைந்தவர்களிடமும் இவ்வதிகாரங்கள் குவிந்த போது உலகிலேயே ஊழலில் முதலிடத்தை இந்நாடு கைப்பற்றியதில் வியப்பொன்றுமில்லை. எனவே பொறுப்பான பதவியிலிருக்கும் எவர் நினைத்தாலும் பல ஊழல்களை வெளிப்படுத்த முடியும்.

வி.பி.சிங் வெளிப்படுத்திய ஊழலுக்குப் பெயர் போபோர்சு பீரங்கி ஊழல். சுவீடனிலிருக்கும் போபோர்சு எனும் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்குவதற்காகப் பெறப்பட்ட தரகில் 64கோடி உரூபாய்களை இராசீவ் காந்தியும் மற்றும் சிலரும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதே குற்றச்சாட்டு. இதற்கான சான்றுகளை இந்தியன் விரைவு (இந்தியன் ஏக்சுபிரசு) செய்தித்தாள் வெளியிட்டது. அவ்விதழில் பணியாற்றிய அருண் சோரி, குருமூர்த்தி என்பவர்கள் இச்செய்திகளை வெளிப்படுத்தினர். இந்தக் குருமூர்த்தி இரா.சே.ச.வுடன் நெருங்கிய உறவுடையவர் என்று தெரிகிறது. இச்சங்கம் அமைத்துள்ள உள்நாட்டு அறிவியல் இயக்கம் (சுதேசி சாக்ரன் மஞ்ச்) என்ற துணை அமைப்பின் தலைவராக இன்று அவர் இருக்கிறார்.

வி.பி.சிங் இந்த ஊழல் செய்தியைக் கையிலெடுத்துக் கொண்டு கலகம் செய்தார். எனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இராசீவ் காந்தியிடம் கசப்புற்றிருந்த வேறு சிலரும் சேர்ந்து கொண்டனர். ‘மக்கள் விடுதலை முன்னணி’ என்ற பெயரில் ஓரமைப்பை உருவாக்கினார்.

நேரு குடும்பம் ஏறக்குறைய 40 ஆண்டுக் காலம் இந்தியாவை ஆண்டுள்ளது. நாற்பது கோடியிலிருந்து தொடங்கி என்பது கோடி மக்கள் தொகையை எய்திய ஒரு நாட்டின் மிகப் பெரும் மக்கள் திரளினரின் உழைப்பில் உருவாகிய செல்வமனைத்தையும் கையாண்டுள்ளது இக்குடும்பம். நேருவே பல ஊழல் பெருச்சாளிகளையும் ஏமாற்றுக்காரர்களையும் தன் நெருங்கிய நண்பர்களாகக் கொண்டிருந்தவர். தன் மகள் இந்திராவை அரசியல் களத்தினுள் நுழைத்ததன் மூலம் மரபுரிமையை அரசியலில் மட்டுமல்ல இந்திய வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் புகுத்தியவர். இப்படி வளர்ந்த குடும்பத்தின் கைகளில் சேர்ந்த செல்வம் வெளிநாட்டு வங்கிகளில் மட்டுமல்ல பெரும் தொழில் நிறுவனங்களில் முதலீடாகவும் போடப்பட்டிருப்பது இயல்புதான். இராசீவ் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செல்லும் போது பயணத் திட்டங்களில் இடம் பெறாத நிகழ்ச்சிகளாகப் பல தொழிற்சாலைகளுக்குச் சென்று வந்தது நமக்கு இந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. இத்தாலியப் பெண்ணான சோனியாவைப் பயன்படுத்தி இந்திரா காந்தி வாழ்ந்த காலத்திலேயே அங்கே முதலீடுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இதுவரை சோவியத்து அணி நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து பெரும்பாலான போர்த்தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையிலிருந்து மாறி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொள்முதல்கள் செய்யப்பட்டதும் இதே அடிப்படையில் தான் போலும். பிரான்சின் ஏர்பசு நிறுவனத்துடனுள்ள அவரது உறவும் இத்தகையது தான் என்று கூறப்பட்டது. எனவே இராசீவ் காந்திக்கெதிரான ஊழல் வெளிப்பாட்டில் அமெரிக்கா, சோவியத் ஆகிய இரு வல்லரசுகளின் ஒத்துழைப்பும் இருந்திருக்கக் கூடும்.

வி.பி.சிங் அமைத்த மக்கள் விடுதலை முன்னணியில் பல இனைஞர்கள் சேர்ந்தனர். ஆனால் வெளியிலுள்ளவர்கள் வாளாவிருக்கவில்லை. அவரைக் கூட்டணி சேர்க்கத் தூண்டினர். வழக்கம் போல் மார்க்சியப் பொதுமைக் கட்சியினர் அவரை அண்டினர். அவரும் அசைந்தார். ஆட்சிக்கு வரத் துடித்தார். தி.மு.க., ஆந்திரத்து ராமராவ் போன்றோரின் துணையுடன் தேசிய முன்னணியையும் அமைத்து சனதாதளம் என்ற கட்சியை உருக்கினார். பாரதிய சனதாக் கட்சியும் ஆதரவளித்தது.

இரா.சே.ச.வின் அரசியல் உறுப்பான பாரதிய சனதாவின் அடிப்படை அணுகுமுறை பார்ப்பன மேலாண்மையை நிறுவுதல், பொதுமை எதிர்ப்பு, இந்தி வெறி, மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்தல் என்பனவாகும். எவ்வளவு முயன்றும் ஆங்காங்கே சமய மோதல்களைத் தூண்டிவிட்டும் கூட அதனால் விரைந்து வளர முடியவில்லை. எனவே பாரதிய சனதாவின் தலைவராக இருந்த வாசுபாயி கட்சி மாநாடொன்றில் நிகர்மையை ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற்றினார். ஏற்கனவே நிகர்மையின் மொத்த வாணிகர்களாகப் பேரவைக் கட்சியும் அதன் தரகர்களாக “இடங்கைக்” கட்சிகளும் நடத்தும் நிகர்மை வாணிகத்தின் முன் இவரது முயற்சி வலுக்கவில்லை. எனவே புதிய தலைவராக வந்த அத்துவாணி இராமன் பிறந்தகம் கண்ணன் பிறந்தகம் ஆகியவற்றை மீட்பதென்ற முழக்கங்களை வைத்தார்.

முகம்மதியர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் “இந்து”க் கோயில்களினுள் தங்கள் சமயத்தைச் சார்ந்த ஒருவருடைய பிணத்தைப் புதைத்து அதை வந்து வழிபடும் பழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர். அவ்வாறு அயோத்தியிலுள்ள இராமன் கோயிலிலும் மதுரைக் கண்ணன் கோயிலிலும் முகம்மதியக் கல்லறைகளைக் கொண்ட வழிபாட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த இடங்களை இடித்துவிட்டு “இந்து”க் கோயில்களை விரிவு படுத்துவது என்பது அவர்கள் (பா.ச.க.) திட்டமாக முன் வைக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இந்து சமயத் “துறவிகள்” அமைப்புகளின் ஆதரவும் இருந்தது. இந்து முன்னணி இரா.சே.ச., பா.ச.க முதலியவை அயோத்தியில் உடற்பணிக்கு மக்களை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரட்டத் தொடங்கின. அத்துவானி இராமன் தேர் என்ற பெயரில் இயங்கியைச் சோடித்து அதில் உலா வந்தார். பல இடங்களில் மதக்கலவரங்கள் தலை தூக்கின. அரசும் இவ்வூர்வலத்துக்குத் தடை விதித்ததுடன் அத்துவானியைச் சிறையும் பிடித்தது. உடனே தாங்கள் வி.பி.சிங் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக பா.ச.க. அறிவித்தது. இந்த நேரம் பார்த்து முன்னர் குறுகிய காலம் ஆட்சி செய்த சரண்சிங்கால் நிறுவப்பட்ட மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதுவரை நடுவண் அரசில் இல்லாதிருந்த ஒதுக்கிட்டை அளிப்பதாக வி.பி.சிங் ஆணை பிறப்பித்தார்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாக மேற்சாதி மாணவர்களை பா.ச.க.வும் பேரவைக் கட்சியும் தூண்டிவிட்டன. பல மாணவர்கள் தீக்குளித்தனர். வலுக்கட்டாயமாகத் தீக்குளிக்க வைக்கப்பட்டனர் என்ற செய்திகளும் வெளியாயின. பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் சந்தரசேகர் இராசீவ் காந்தியின் ஆதரவுடன் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றார். ஒரு நிகர்மையாளர் என்ற வகையில் சந்திரசேகர் அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்புடையவர். அவர் அமைச்சரவையில் இடம் பெற்ற சுப்பிரமணியம் சுவாமி வெளிப்படையான அமெரிக்க ஒற்றர். இன்னோர் அமைச்சரான வி.சுக்லா கைதேர்ந்த தரகர். இவர்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அமெரிக்க - ஈராக் போரில் அமெரிக்கப் போர் வானூர்திகள் இந்திய எல்லையைப் பயன்படுத்தவும் இந்தியாவிலுள் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் இசைவளித்ததன் மூலமும் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று அமெரிக்காவுக்கு ஆதரவு தேடிக் கொடுத்ததன் மூலமும் பலகோடி தன்கள் இரும்புக் கணியைச் சீனாவுக்கு விற்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலமும் பலகோடி உரூபாய்களைப் பெற்றனர். பிற அமைச்சர்களும் தத்தம் பங்குக்குக் கொள்ளையடித்தனர். அதுவரை நடைபெற்ற இந்திய ஆட்சியில் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரும் ஊழல்களை நிகழ்த்திக் காட்டியவர்கள் இவர்களே.

சரண்சிங்கிடம் நடந்து கொண்டது போலவே பேரவைக்கட்சி சந்திரசேகரையும் நடுவில் காலை வாரிவிட்டது. தனக்கு ஏற்பட்ட மனக் கசப்பையும் சினத்தையும் குமுறலையும் தன் வானொலி உரையில் வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்தார் சந்திரசேகர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு மும்முரமான பரப்பல் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் திருப்பெரும்புதூர்க் கூட்டமொன்றில் 1991-ஆம் ஆண்டு மே மாதம் இராசீவ் காந்தி ஒரு மனிதக் குண்டு வெடிப்புக்குப் பலியானார். இந்தப் படுகொலை தொடர்பான விந்தை மிகு செய்திகள் பல உண்டு. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாகத் தமிழ்நாடு பேரவைக்கட்சிக் குழுத் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி முன்னுக்குப் பின் முரணான செய்திகளைத் தந்தார். இராசீவ் காந்தியோடு காவல் துறையினரும் கட்சித் தொண்டர்களுமாகப் பதினாறு பேர் உயிரிழந்தார்கள். ஆனால் சொல்லி வைத்தாற்போல் இந்த இந்தியத் தலைவர் பக்கத்தில் குறிப்பிடத்தக்க பேரவைக் கட்சிப் பெருமக்கள் எவருமில்லை. இந்த மனித வெடிகுண்டை வெடித்தவர்களாகச் சொல்லப்பட்ட ஈழத்தமிழர்கள் மரகதம் சந்திரசேகர் என்ற திருப்பெரும்புதூர் பேரவைக் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்பட்டது. தமிழகத்தில் 39 பாராளுமன்ற இடங்கள், புதுச்சேரியில் ஒன்று என்று 40 தொகுதிகளுக்குத் தலைக்கு ஒரு கோடியாக இராசீவ் கொண்டு வந்த 40கோடி உரூபாய்கள் மாயமாய் மறைந்து விட்டதாக ஒரு செய்தி கிளம்பியது. இராசீவ் காந்தி தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் அவருடன் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்த செயலலிதா இம்முறை உடன் செல்லாதது சுட்டிக்காட்டப்பட்டது. எப்பொழுதும் அவருடன் செல்லும் அவரது மனைவி இம்முறை அவருடன் செல்லாததும் குறிப்பிடத்தக்கது. வெடிப்பு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் மனிதவெடியென்று காட்டப்பட்ட பெண்ணுக்கும் பின்னர் அவளது தலை என்று காட்டப்பட்டதற்கும் வேறுபாடு இருந்தது என்று கூறப்பட்டது. அத்துடன் கொலைச் செய்தியுடன் கூடவே விடுதலைப் புலிகளே கொலையாளிகள் என்று அனைத்துத் தரப்பிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

புலனாய்வுக்கென்று ஒரு சிறப்புக் குழு அமைப்பட்டது. அவர்கள் நேரடி விளக்குநர்களைப் போல் குற்றவாளிகளின் பெயர்களைக் கூறிக்கொண்டே இங்கிருக்கிறார், அங்கிருக்கிறார் என்று கூறிக்கொண்டே சிலரைத் தளை செய்தனர். இருவர் பெயர் கூறிப் படமும் வெளியிட்டு பெங்களூரில் இரண்டு பிணங்களைக் காட்டினர்.

பூவிருந்தவல்லியில் பூட்டிய அறையினுள் வழக்குசாவல். செய்தியாளர்களுக்கு இடமில்லை. பாதுகாப்புக் காரணம் கூறப்பட்டது. தொலைக்காட்சி அமைப்பு மூலம் பாதுகாப்புக்குக் கேடு வரா நிலையில் செய்தியாளர்களுக்கு உசாவல் காட்சிகளைக் காட்டியிருக்க முடியும்.

இராசீவ் காந்தி கொலையின் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் உள்ளதா என உசாவவென்று செயின் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கு வேண்டிய மந்தணக் கோப்புகளை அளிக்க இந்திய அரசு மறுக்கிறது. அத்துடன் அண்மையில் இக்கொலைச் சூழ்ச்சியில் சந்திரசேகர், பின்னர் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ், சுப்பிரமணியம் சாமி, சந்திரசாமி போன்றோரின் பெயர்களும் அடிபட்டன. இந்தப் படுகொலை தொடர்பாக வந்துள்ள செய்திகளையும் நடப்புகளையும் வைத்து அலசும் போது இந்திய ஒற்று நிறுவனமான ‘ரா’வும் அமெரிக்க ஒற்று நிறுவனமான நடுவண் உளவு நிறுவனமும் இலங்கை அரசும் பேரவைக் கட்சியிலுள்ள சிலரும் அரசியல் காரணங்களினால் இராசீவ் மீது பழி தீர்த்துக்கொள்ள நினைத்த உள்நாட்டு அரசியலாளர் சிலரும் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய சிலரின் துணையுடன் அல்லது சில செய்திகளின் படி இரு வட இந்தியப் பெண்களின் துணையுடன் இப்படுகொலை நிகழ்த்தபட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படி இருக்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் பேரவையினரும் செயலலிதாவும் உருவாக்கிய பரிவலையில் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளையும் இவ்விரண்டு கட்சினரே கைப்பற்றினர். வடக்கில் பாரதிய சனதா நிறைய இடங்களைக் கைப்பற்றியது. எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. செயலலிதாக் கட்சியினரையும் வேறு சில உதிரிகளையும் பற்றிக் கொண்டே நரசிம்மராவ் ஆட்சி வண்டியை ஓட்டி வந்தார்.

நரசிம்மராவ் ஒரு முழுமையான பிற்போக்கர். பார்ப்பன வெறியர், ஊழலில் ஊறித்திளைப்பவர், தமிழர்களின் மீது பகைமை கொண்டவர். அமெரிக்காவின் கைப்பாவை. இந்து வெறியர். யாருடைய குறைகூறலையும் பொருட்படுத்தாத முரட்டுத் தோலர்.

இவர் ஆட்சிக்கு வந்த போது நடைபெற்ற மாநிலங்கள் தேர்தலில் வட இந்தியாவில் நான்கு மாநிலங்களில் பாரதிய சனதா வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அவற்றில் ஒன்று உத்திரப்பிரதேசம். அயோத்தி இந்த மாநிலத்திலுள்ளது. இங்கிருக்கும் இராமன் கோயில் வளாகத்தினுள் பாபரின் அடக்கவிடம் அமைந்துள்ளது. இங்கு “இந்து”க்கள், முகம்மதியர்களுக்கிடையில் நடைபெற்ற பூசலினால் கோயிலும் மசூதியும் வழக்குமன்ற ஆணையால் அடைத்துக் கிடந்தன. இங்கு இராமர் கோயில் கட்டுவதென்று வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் ஒரு மேடையமைக்கத் தொடங்கி அது சச்சரவுக்கு ஆளாகி நின்றது. அதில் கோயில் கட்டப் போவதாக அறிவித்து இரா.சே.ச.வும் பிற இந்து அமைப்புகளும் நாடு முழுவதிலுமிருந்து தொண்டர்களைத் திரட்டினர். இது குறித்து இருக்கின்ற அமைப்புகளுக்கு ஊறு ஏதும் ஏற்படக் கூடாது என்ற ஆணையை உயர் வழக்கு மன்றம் உ.பி.அரசுக்குப் பிறப்பித்தது. நரசிம்மராவ் அரசும் தான் கண்காணிப்பதாக வழக்கு மன்றத்தில் உறுதி கூறியது. ஆனால் முன்திட்டமிட்டபடியே பா.ச.க., இந்து முன்னணி, இரா.சே.ச., மற்றும் பல துறவிகள் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் முன்னிலையில் பாபர் பள்ளிவாசல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதன் இடிபாடுகளுக்கு மேல் ஒரு தற்காலிக இராமன் வழிபாட்டிடமும் நிறுவப்பட்டது.

இந்தியாவெங்குமிருந்து நரசிம்மராவுக்கு எதிராகக் கண்டனக் கணைகள் புறப்பட்டன. இதைப் பயன்படுத்தி நான்கு மாநில பா.ச.க. அரசுகளை அவர் கலைத்தார். இருப்பினும் இந்த இடிப்பில் நரசிம்மராவின் மறைமுக ஒப்புதல் இருந்தது என்பதே பலரது கருத்து.

பல தரப்புகளிலுமிருந்து வந்த எதிர்ப்புகளினால் பா.ச.க. தலைமைக்குத் தன் மதவெறி பரப்பலின் மீதிருந்த நம்பிக்கை சிறிது தளர்ந்தது. மறு தேர்தலில் இந்த மாநிலங்களில் இரண்டை அது இழந்தது.

சிறுபான்மை அரசாகிய நரசிம்மராவின் அரசு கவிழும் என்று பா.ச.க.வினர் எதிர்பார்த்தனர். மாறாக அதிகாரத்தைத் தன் கைகளில் வைத்திருக்கும் நரசிம்மராவ் பல வகைகளிலும் பணம் சேர்த்து எதிர்க் கட்சிகளை உடைத்துத் தன் பெரும்பான்மையைப் பெருக்கிக் கொண்டார்.

மராட்டியத்தில் மும்பையில் செல்வாக்கை வளர்த்துக் கொண்ட ஓர் இயக்கம் சிவசேனை. மராட்டியத்துக்குள்ளிருக்கும் மும்பையில் அலுவலகப் பணிகளில் தென்னகப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் பொதுவாக மதராசிகள் என்று அழைக்கப்பட்டனர். எனவே தென்னக மக்கள் மீது மராட்டியப் பார்ப்பனர்கள் வெறுப்பை வளர்த்துவிட்டனர். பழைய இந்தித் திரைப்படங்களில் ஐ.எசு.சோகர் எனும் நகைச்சுவை நடிகர் மதராசி என்ற பெயரில் கையில் விசிறியும் தருப்பையும் கெண்டியும் குடையும் கொண்ட ஒரு பார்ப்பனரைக் காட்டி நையாண்டி செய்வார். இவ்வாறு வளர்க்கப்பட்ட வெறியிலிருந்து உருவானதே சிவசேனை இயக்கம். இது தமிழர்களைத் தாக்குவதாக உருவெடுத்தது. நாளடைவில் முகம்மதியர்களின் வாணிகப் போட்டியை எதிர்கொண்ட மார்வாரிகளின் நலன்களைக் காக்கும் இயக்கமாக மாறி “இந்து”வெறியைப் பரப்பியது. இதன் தலைவர் பால் தாக்கரே.

பா.ச.க.வும் சிவசேனையும் இணைந்து மராட்டியத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றின. முந்திய பேரவைக் கட்சி ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த என்ரான் என்ற நிறுவனத்துடன் ஒர் மின்னாக்கித் திட்டத்துக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டித் தேர்தல் பரப்பல் செய்தவர்கள் தாங்கள் கூறியபடியே அவ்வொப்பந்தத்தை நீக்கவும் செய்தனர். ஆனால் இதன் மூலம் இந்தியாவின் பொருளியலில் வெளியாரின் நுழைவு தடைபடும் என்ற காரணத்தைக் காட்டி மறு ஆய்வு செய்வதாகக் கூறினர். முன்பிருந்த குறைபாடுகளைச் சரிசெய்து விட்டதாகக் கூறி ஒப்பந்தத்தை உயிர்ப்பித்ததுடன் முந்தைய அரசு ஊழல் எதுவும் செய்யவில்லை என்று அறிவித்துத் தங்களை அவர்களின் தாக்குதலிலிருந்து காத்துக் கொண்டனர்.

இரா.சே.ச. உள்நாட்டுப் பொருளியலையும் தொழில்நுட்பத்தையும் காத்து வளர்க்கப் போவதாக அறிவித்துக் கொள்கிறது. அதற்காக அறிவியல் அமைப்பொன்றையும் வைத்துள்ளது. இந்தியன் விரைவு இதழின் முன்னாள் ஆசிரியரான குருமூர்த்தி இதன் தலைவர். அவர் இந்த என்ரான் ஒப்பந்த மீட்பை மென்மையாகக் குறைகூறி அதைத் தாம் எதிர்ப்பதாக மட்டும் கூறி அடங்கி விட்டார்.

பா.ச.வும் அதன் குமுகியல் ஆசானான இரா.சே.ச.வும் அமெரிக்காவின் கள்ளப் பிள்ளைகள். அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகிய இறையியல் கழகத்தின் கோட்பாடாகிய பார்ப்பனிய மீட்சியைப் பற்றி வளர்ந்தவர்கள். எனவே அவர்கள் என்றும் அமெரிக்க நலன்களை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இங்குள்ள நாட்டுப்பற்றும் தன்மான உணர்வும் உள்ள இளைஞர்களைக் கவர்வதற்காக உள்நாட்டுத் தொழில்நுட்பம், “சுதேசி” இயக்கம் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் “இன்றியமையாத்” தேவைகளுக்காக வெளிநாட்டுக் கடன்கள் வாங்கலாம், இறக்குமதிகள் செய்யலாம், வெளித்தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தலாம் என்று தங்கள் அமெரிக்கப் பணிவிடைக்காக முன்னொதுக்கம் செய்துகொள்ள இவர்கள் தவறுவதில்லை.

சென்ற நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலும் “இந்து” சமயச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவிலும் தமிழகத்திலும் செயற்பட்டன. நாம் முன்போரிடத்தில் குறிப்பிட்டுள்ள இராசகோபால பாரதி போன்றோர் கோட்பாட்டடிப்படையில் அரிய பணியாற்றியுள்ளனர். ‘சர்வ வருண சமரச விளக்கம், விதவா விவாக விளக்கம் என்பன போன்ற நூல்களின் மூலம் சாதிய ஒற்றுமை, புலால் மறுப்பின் போலிமை வருணப் பாகுபாட்டின் குறைகள், பெண் விடுதலை என்ற பன்முகப்புகளில் நல்ல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இறையியல் கழகத்தினுள் நுழைந்த அன்னிபெசன்ட் அம்மையார் “இந்து”ப் பண்பாட்டைத் தூக்கிப்பிடித்ததும் பெரியாரின் “பகுத்தறிவு”ப் பரப்பலும் இந்த இயக்கம் தடைபட்டுப் போகக் காரணங்களாயிருந்திருக்க வேண்டும். “இந்து” சமயத்துக்கு ஒரு புதிய வடிவம் கொடுப்பதற்குப் போராட மக்களைத் திரட்டுவதற்குப் பகரம் வெறும் பார்ப்பன எதிர்ப்பாக ஒரு பெரும் மக்களியக்கத்தைத் திசைதிருப்பி மக்களை அயற்படுத்தி இன்று அந்த இயக்கமும் மக்களும் திசை தெரியாமல் தடுமாற வைத்துவிட்டார் பெரியார்.


பிற சமயங்களின் வடிவில் வெளியார் ஊடுருவி இந்நாட்டின் செல்வத்தைச் சுரண்டிச் செல்வதை மறைத்துத் தங்கள் தெய்வங்களுக்கும் சமயத்துக்கும் அறைகூவல் வந்திருப்பதாக மக்களின் கவனத்தைத் திருப்பி அதே வேளையில் அச்சுரண்டல் விசைகளுடன் நல்லுறவை வெளிப்படையாகவு[ம் மறைமுகமாகவும் பேணுவதில் மக்களுக்குச் சமய வெறியூட்டும் நம் மேல்மக்கள் வல்லவர்கள். உண்மையான எதிரியை மறைத்து மதமாற்றத்துக்குள்ளான உள்நாட்டு மக்களுக்கும் அவ்வாறு மதம் மாறாத மக்களுக்கும் பூசலை மூட்டிவிட்டு அயல் விசைகளுக்கு ஆதாயம் தேடிக்கொடுத்துத் தங்கள் பொருளியல் நலன்களையும் குமுகியல் மேல்நிலையையும் காத்துக் கொள்கிறவர்கள்.

சென்ற நூற்றாண்டில் வங்காளத்தில் தோன்றி ஓர் உருவெளித் தோற்றத்தால் தன்னிலை மறந்து இல்லறத் துறவியாக வாழ்ந்தவர் இராமகிருட்டினர். அவரது அறிவாற்றல் மிக்க மாணவர் விவேகானந்தர். அவர் வினைமறுப்பு மனப்பான்மையைச் சாடினார். இருப்பினும் ஒருவன் தன் வாழ்நாளில் செய்யும் செயல்களுக்கும் (நல்வினை தீவினை என்ற வரையறைப்படி) அவனுக்கு அமையும் வாழ்க்கைக்கும் (பொதுவான கண்ணோட்டத்தின்படி) காணப்படும் முரண்பாடுகளை வைத்து இவை முன்பிறவி வினைகளின் விளைவாக இருக்க வேண்டும் அல்லது வரும் பிறவிகளில் இப்பிறவியின் வினைப் பயன்களை நுகர வேண்டியிருக்கும் என்று பழைய வினைமறுப்புக் கோட்பாட்டை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார். அவரால் தொடங்கப்பட்ட இராமகிருட்டின மடங்களின் ஆதரவில் விவேகானந்தர் கல்வி நிலையங்களும் இராமகிருட்டினரின் துணைவியாராகிய சாரதாவின் பெயரில் சாரதாப் பெண்கள் கல்வி நிலையங்களும் இன்று நடைபெறுகின்றன.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது இங்கு தங்களால் மதமாற்றம் செய்யப்பட்டுத் தங்கள் ஆட்சிக்கு உளவியலில் ஆதரவு நல்கிக் கொண்டிருந்த கிறித்துவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சிறுபான்மையினர் உரிமைகள் என்ற பெயரில் சமயச் சிறுபான்மையினருக்கென்று சில சிறப்புரிமைகளைக், குறிப்பாகக் கல்வித் துறையில் வழங்கிச் சென்றனர். இச்சலுகைகளை சிறுபான்மைச் சமயத்தினரில் பலர் மதமாற்ற நோக்கங்களுக்காகவும் வாணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

சிறுபான்மையினர் பெயரில் தொடங்கப்படும் பெரும்பாலான பொதுக்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட செயல்முறை மூலம் ஒப்புதலும் அரசு உதவியும் கிடைத்துவிடுகின்றன. ஆனால் “இந்து” சமயம் அல்லது சமயம் சாராத பொதுக்கல்வி நிறுவனங்களுக்கு அத்தகைய ஒப்புதல் கூட (உதவி கேட்காவிட்டாலும் கூட) கிடைப்பது மிக மிகக் கடினம். இது இந்த இந்து சமய நிறுவனங்கள் பிறசமயத்தவருக்கு எதிராக நடத்தும் பரப்பல்களுக்கு வலுவான அடிப்படையாகும். இதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சலுகை நீக்கப்பட வேண்டுமென்று ‘இந்து’ சமய நிறுவனங்கள் போராடி வருகின்றன. இராமகிருட்டின மடமும் மேற்சாதி இந்துக்களின் நலனைக் காக்கும் அமைப்பாகவே பிற “இந்து” சமய அமைப்புகளுடன் இதே அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆனால் தன் கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மையருக்குள்ள சலுகைகள் வேண்டுமென்று போராடி வழக்கு மன்றத்தின் மூலமாக வெற்றி பெற்று தனக்குத் தானே முரண்பட்டு நிற்கிறது.

விவேகானந்தர் கல்வி நிறுவனங்களும் சாரதா கல்வி நிறுவனங்களும் இந்து சமயக் கோட்பாடுகளை மாணவர்களுக்கு எடுத்து வைக்கின்றன. வருணப் பாகுபாட்டை உயர்த்திப் பேசுகின்றன. ஆனால் பிறப்படிப்படையிலமைந்த வருணப் பாகுபாடு என்ற உண்மையை மறைக்கின்றன. புதிய தலைமுறை ஆடவர், பெண்டிர் மனங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் சரியானவையே என்ற கருத்தை வருண ஏற்றத்தாழ்வுகளுக்குப் பரிந்து பேசுவதன் மூலம் புகுத்துகின்றன.

கல்வியில் ஒதுக்கீட்டின் மூலம் மேற்சாதியினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற உணர்விலேயே இக்கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. எனவே இங்கு ஆள்வினையாளர்களும் (நிர்வாகிகளும்) ஆசிரியர்களும் பெரும்பான்மை மாணவர்களும் மேற்சாதியினரே. இந்நிறுவனங்கள் நடத்தும் சமற்கிருதக் கல்வி நிலையங்களிலும் வேத பாடசாலைகளிலும் பார்ப்பனர்களுக்கு மட்;டுமே இடம் அளிக்கப்படுகிறது.

விவேகானந்தர் “இந்து” சமயத்தில் மண்டிக்கிடந்த வினை மறுப்பைக் கண்டித்தும் சாதியப் பிளவுகளைச் சாடியும் பணியாற்றிய ஒரு ஆற்றல் மிகுந்த போராளி. அவரது கருத்துகளால் தமிழகத்திலுள்ள பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தோரில் கூடப் பலர் ஈர்க்கப்பட்டனர். அப்படிப்பட்டவரால் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம் வழக்கம் போல் பார்ப்பனர்களுக்கு முதலிடமும் பிற மேற்சாதியினருக்கு அடுத்த இடமும் பிறருக்குக் கடைசி இடமுமென்று வழக்கமான இந்துயியத்துக்கே பாடுபடுவதாய்ச் சுருங்கி விட்டது.

இறுதியாக வந்த “பெரியாரியம்” பார்பபனர்களை எதிர்ப்பது என்ற பெயரில் மனித வரலாற்றிலேயே ஒட்டுண்ணித் தனத்தின் உச்சத்தில் நெடுநாள் நிலைத்திருந்து ஒட்டுண்ணித் தனத்தின் மனித வடிவமாக மாறிவிட்ட பார்ப்பனரின் ஒட்;ண்ணி வாழ்க்கை அனைவருக்கும் வேண்டும் என்ற போராட்டத்தை முன் வைத்து அவ்வொட்டுண்ணி வாழ்க்கை மீதான ஆர்வத்தை அடிமட்டம் வரையுள்ள மக்களுக்கும் கொண்டு சேர்த்துவிட்டது. இதுவரை ஒட்டுண்ணி வாழ்க்கை என்பது பிறவியிலமைந்த சாதிகளின் வரிசையில் பார்ப்பனர்களுக்கும் அவர்களது தோன்றாத் துணையாகத் தமிழகத்தில் இருக்கும் வெள்ளாளர்களுக்குமே உரியது என்ற மனுவிய மயக்கத்தில் இருந்த மக்களிடையில் இந்த “மனுவிய் மயக்கத்தை அகற்றியதனால் ஒட்டுண்ணி வாழ்க்கை அனைவருக்கும் வேண்டும், கல்வி,வேலைவாய்ப்பு என்று மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளுமே இந்த ஒட்டுண்ணி வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கொண்டவையாகவே அமைய வேண்டும் என்ற கண்ணோட்டம் என்றுமில்லாத படி அனைவரையும் பற்றிக் கொண்டது.

இந்தக் கோட்பாட்டுப் பின்னணியுடன் வல்லரசியத்தின் பிடியினுள் சிக்கிய மார்க்சியமும் இணைந்து கொண்டது. அதன் விளைவாக நம் நாடு வேளாண்மையையும் செய்தொழிலையும் சிறுகச் சிறுக இழந்து பாலைவனமாகி வருவதுடன் பொருளியலில் நேரடியாகவும் அரசியலில் மறைமுகமாவும் அடிமைப்பட்டு வருகிறது. “இந்து” சமயத்தின் பெயரில் அரசியல் நடத்தி வரும் இயக்கங்களும் இவ்வடிமைத்தனத்னுக்குத் துணை நின்று ஆதாயம் தேடிக் கொள்கின்றன. நாட்டை இவ்வாறு அடிமைப்படுத்துவதில் வெளிப்படையாக இந்த “இந்து” நிறுவனங்கள் எதிர்க்கும் அயற்சமயங்களும் அவற்றுடன் மறைமுகமாக இணைந்து நிற்கின்றன.

“இந்து” மதத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்.

“இந்து” சமயம் வருண அடிப்படையைக் கொண்டது. பெரிய கோயில்கள் எனப்படுபவை இந்த வருண அடிப்படையிலேயே அமைக்கப்பட்டவை. கருவறை பார்ப்பனருக்கும் உள்மண்டபம் அரசர், அதிகாரிகள் போன்ற ஆட்சியாளருக்கும், திருச்சுற்று வாணிக வேளாண் சாதிகளுக்கும் உரிய இடங்களாக அமைந்துள்ளன. நான்காம் வருணத்தாரான சூத்திரரும் வருணமைற்றோரான பஞ்சமரும் கோயிலுக்கு வெளியே நின்று தெய்வத் திருவுருவைப் பலிபீடமும் கொடிமரமும் மறைக்கும் நிலையில் கோபுரத்தை மட்டும் பார்த்து வணங்கத்தக்கவாறு “ஆகம் முறைப்படி அமைக்கப்பட்டவை. இந்த நூற்றாண்டில் பலவகைப் போராட்டங்களுக்குப் பின் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் கோபுர வாசலைத் தாண்டி உள்ளே செல்லும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இருந்தும் கருவறையிலுள் பார்ப்பனரின் ஆதிக்கமே நிலவுகிறது. அனைத்துச் சாதியினரும் போற்றிகளாக (அர்ச்சர்களாக) வேண்டும் என்ற பொதுவான கோரிக்கை இன்றும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நாட்டுப்புறக் கோயில்கள் சாதி அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலும் வேளார் (குயவர்), கோனார் போன்ற அல்லது அவ்வப் பகுதிக் கேற்றவாறு வெவ்வேறு பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த பூசாரிகளால் பூசை நடத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோருடன் மேற்சாதியினரும் மண்டபத்தில் நின்று வழிபட தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்கு வெளியில் நின்று தாரை; தப்பட்டை போன்ற இசைக்கருவிகளை இயக்கும் வகையில் வழிபாடு அமைந்துள்ளது.

இந்த நிலையை உடைத்துத் தாழ்த்தப்பட்டோரும் இச்சிறுதெய்வக் கோயில்களினுள் நுழைய வேண்டுமென்ற கோரிக்கை சில ஆண்டுகளுக்கு முன் கிளம்பியது. அது இராமநாதபுரம் மாவட்டம் ஊஞ்சளை போன்ற ஊர்களில் சாதிக் கலவரங்களில்; முடிந்தது.

ஆனால் இச்சிக்கலுக்குச் சரியான தீர்வு ஏற்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சாதியினர் தாழ்த்தப்பட்டோருக்கு இவ்வுரிமையை வழங்க ஒப்பவில்லை. எனவே தாழ்த்தப்பட்டோர் தங்களுக்கென்று தனிக் கோயில்களை அமைத்துக் கொண்டனர். அவற்றில் மிகுந்த செலவிலும் ஆடம்பரத்துடனும் கொடைவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். இதற்குப் போட்டியாகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தம் கோயில் கொடைவிழாக்களை முடுக்கிவிட்டுள்ளவர். இவ்வாறு சிறுதெய்வ வழிபாடே சாதியப் பிளவுகளை இறுக்குவதற்கும் பகைமையை வளர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது.

கடவுள் என்ற கருத்து என்று தோன்றியதோ அன்றே கடவுள் என்ற ஒன்று இல்லை என்ற கருத்தும் தோன்றிவிட்டது. மனித இனத்தின் பட்டறிவின்படி சமயவாணர்களின் வரையறைக்குட்பட்டதான கடவுள் என்று எனவும் இருப்பதற்கான சான்றுகள் இல்லை. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத விரிவும் வலிமையும் கொண்ட இயற்கையும் அதன் ஆற்றலுமே கடவுள் என்ற வரையறையை ஏற்றுக் கொண்டால் அந்த இயற்கை எவரின் கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் வேண்டுதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாது, மசியாது. அதே வேளையில் மனிதன் தன் நுண்ணறிவின் மூலம் அதனைப் படிப்படியாக வெற்றி கொள்ளலாம். பணிய வைக்கலாம், பணிபுரிய வைக்கலாம், இணக்கம் கொள்ள வைக்கலாம்.

இருந்தாலும் இல்லாத இந்தக் கடவுளின் பெயரால் கோயில்கள், வழிபாட்டு முறைகள், அவற்றில் முரண்பாடுகள், அவற்றிலிருந்து கோட்பாடுகள், கோட்பாடுகளிலிருந்து புதிய குமுக அமைப்புகள் உருவாகி, புதிய வழிபாட்டு முறைகள் தோன்றி அவை பழைய கோட்பாடுகளோடும் குமுக அமைப்புகளோடும் வழிபாட்டுமுறைகளோடும் மோதி மாபெரும் போர்களுக்கும் காரணமாகி மனித வரலாற்றில் குருதியாறுகள் ஓடியிருக்கின்றன.

மனிதனின் கட்டுகளை மீறிய இயற்கை விதிகளும் இயற்கை ஆற்றல்களும் ஒருபுறமும் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் பொருளியல் குமுகியல் ஆற்றல்கள் மற்றொரு புறமும் தாக்கும் போது மனிதன் குழம்பித் தன்னிலையிழந்த போது தோன்றிய மக்கட் தலைவர்கள் முன்வைத்த கோட்பாடுகளும் அத்தலைவர்களைப் பற்றிப் பின்வந்தோர் உருவாக்கிய ஆட்பண்புப் படிமங்களும் இணைந்து உருவானவையே சமயங்கள். யூதர்களின் சமயத் திரிவாக்கத்தைப் பற்றி வரலாற்றறிஞர் வில்தூரன் குறிப்பிடும் போது முதலில் மோசேயின் மூலம் அச்சுறுத்தும் கடவுளாகத் தோன்றிப் பின்னர் அறிவுரை கூறும் கடவுளாக மாறி பின்னர் ஏசுவின் மூலம் அரவணைக்கும் தந்தையாக உருவெடுத்தது போன்றே வரலாற்றியல் சூழல்களைப் பொறுத்தும் கடவுள்கள் திரிவாக்கம் பெறுகிறார்கள்.

இவ்வாறு மனிதனிடமிருந்து உருவாகும் கடவுள்களின் பெயரால் அந்த மனிதக் குழுக்களுக்கிடையில் நடைபெறும் போர்களுக்கும் கடவுள்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை, அக்கடவுள்கள் ஒவ்வொரு குழுவுக்கும் அடையாளங்களாகத் திகழ்கிறார்கள் என்பதைத் தவிர.

அனைத்து உலகையும் படைத்துக் காப்பவன் ஒரே கடவுளே என்று அனைத்து மதவாணர்களும் ஒரே குரலில் முழக்கமிட்டுக் கொண்டே தங்கள் கடவுள்களின் பெயரால் போரிடுவதே கடவுள் பணி என்பது ஒவ்வொரு குழுவினரின் அடையாளத்தைப் பேணும் ஒரு குறியீடு தானேயொழிய உண்மையல்ல வென்பது புலப்படும்.

ஆனால் கற்பனையானாலும் கடவுளின் பெயரைக் கூறி உருவான ஒவ்வொரு சமயமும் அவ்வம்மக்களுக்கு அல்லது வேறு ஒரு மக்களுக்கு ஆக்கமுறையிலான பணியை ஆற்றியிருக்கிறது.

எகிப்தியரிடம் அடிமைகளாயிருந்த பல்வேறு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து நீண்ட மரபு கொண்ட ஒரினமாக உருவாவதில் மோசேயின் யூத மதம் பயன்பட்டுள்ளது. உரோமப் பேரரசிடம் அடிமைப்பட்டிருந்த இசுசேலின் யூதர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியவர் இயேசுநாதர். அதனால் அம்மக்களால் வெறுத்துத் துரத்தப்பட்ட அவரது மாணாக்கர் ஒருவரால் அதே உரோமில் பரப்பப்பட்டு அப்பேரரசின் அடிமைக் குமுக அமைப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து அடுத்த கட்டமாகிய நிலக்கிழமையினுள் நுழையத் துணை புரிந்தது கிறித்துவம். பல்வேறு குக்குலங்களாகப் பிளவுண்டு அத்தனை எண்ணிக்கையுள்ள தெய்வங்களுடன் தங்களுக்குள் பூசல் கொண்டிருந்த அரேபியர்களை வாள்கொண்டு வென்று ஒற்றுமைப்படுத்தி ஒரு உலகப் பேராற்றலாக வளர்ப்பதில் முகம்மது நபியின் சமயம் வெற்றிபெற்றது.

முகம்மதியர்களின் செல்வாக்கினால் தங்கள் வாணிக நலன்களையும் கிறித்துவத்தின் கெடுபிடியால் பொருளியல் குமுகியல் உரிமைகளையும் இழந்திருந்த ஐரோப்பியர்களுக்கு உணர்வூட்டித் தட்டியெழுப்பியது மார்ட்டின் லூதரின் சீர்திருத்தக் கிறித்துவம்.

நிலக்கிழமைத் தேக்கத்தின் பிடியிலிருந்து சப்பானை விடுவித்து அதன் இடத்தில் வல்லரசிய வெறி கொண்ட முதலாளியத்தை வளர்க்க உதவியது நிலக்கிழமையின் அடையாளமாக இருந்த புத்தத்தை அகற்றிவிட்டு அரச மதத்தின் இடத்தைப் பிடித்த வீரவழிபாட்டுச் சமயமாகிய சிண்டோயியம்.

இவ்வாறு சமயமென்ற மாயை மனித வரலாற்றில் பல அருஞ்செயல்களை நிறைவேற்ற உதவியுள்ளது. கடவுள், சமயம் என்ற மாயைகள் மட்குமல்ல, அன்றாட வாழ்வில் கூட மாயைகள் மனிதனுக்குப் பேரு”தனிகள் செய்கின்றன. ஒரு செயலில் ஈடுபட ஒருவன் துணியும் போது அவனுக்கு ஊக்கமளித்து உறுதுணை புரிவதாக சிலர் வாக்களிப்பர். அவன் ஆயத்த வேலைகளை முடித்துச் செயலில் இறங்கும் போது வாக்களித்தவர் பல நேர்வுகளில் பின் வாங்குவதுண்டு. ஆனாலும் செயலைத் தொடங்கியவன் தன் ஆற்றல்களை மேலும் பெருக்கிக் கொண்டு தொட்ட செயலைத் தொடர்ந்து வளர்க்கிறான். சில வேளைகளில் இத்தகைய வாக்குறுதிகளில் முழுநம்பிக்கை ஏற்படாமலும் கூட அத்தனிமனிதனுக்கு அச்செயலின் மீதுள்ள பேரார்வம் அவ்வாக்குறுதி எனும் மாயையைப் பற்றுக்கோடாகக் கொண்டு அவனை முன்னோக்கி நகர்த்துகிறது.

கடவுள், சமயம் என்ற இந்த மாயைகள் வெற்றிடத்திலிருந்து தோன்றுபவையல்ல. குமுக மெய்ம்மைகளின் தேவைகளிலிருந்தே தோன்றுகின்றன. எகிப்தியரிடம் அடிமைகளாக வாழ்ந்த மக்களை விடுவித்து அவர்களை வேளாண்மை, மேய்ச்சல் சார்ந்த ஒரு மக்களாக உயர்த்துவதற்குரிய கடவுள் விளக்கத்தையும் சமய அமைப்பையும் மோசே தந்தார். வல்லரசிய அதிகாரச் செருக்கில் மதர்த்துக் கிடந்த உரோமப் பேரரசில் ஒடுங்கிக் கிடந்த பல பகுதி மக்களும் வேளாண்மை சார்ந்த தற்சார்பைப் பெறுவதற்குக் கிறித்துவம் உதவியது. குக்குலச் சச்சரவுகளாலும் பூசாரிகளின் ஆதிக்க ஆட்டங்களிலும் சிக்கிக்கிடந்த அரேபியர்களை வாணிகம் சார்ந்த குமுகமாக மாற்றியமைக்க முகம்மது நபியின் கடவுள், சமயக் கோட்பாடுகள் உதவின. அதே போல் மடங்களின் சமயப் பிடியினுள் சிக்கி நிலக்கிழமை இருளுக்குள் திணறிக் கொண்டிருந்த ஐரோப்பாவையும் சப்பானையும் முறையே சீர்திருத்தக் கிறித்தவம் மற்றும் சிண்டோயியம் வல்லரசு முதலாளியத்தினுள் அழைத்துச் சென்றது. இந்த நேர்வுகள் அனைத்திலும் பழமை ஆதிக்க வகுப்புகளின் கோட்பாட்டு அடிப்படையைப் புதிய கோட்பாடுகள் தகர்த்தெறிந்து விட்டு அவ்விடத்தைப் பிடித்துக்கொண்டன.

ஆனால் இந்தியாவில் இது போன்ற மாற்றம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக இல்லை. புத்தத்தின் பெயரில் மார்க்சிய இயங்கியலுக்கு இணையான ஓர் உயர்ந்த மெய்யியல் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் செயல்திட்டம் உலக மறுப்பாகவும் இரந்துண்ணலைப் பரிந்துரைப்பதாகவும் இருந்தது. குமுகம் முழுமைக்குமான கோட்பாடு தனிமனிதனுக்குக் கையாளப்பட்டபோது ஆதனிய மறுப்புக் கோட்பாடு பலபிறவிக் கோட்பாடாகச் சிதைந்தது.

இந்தச் சிதைந்த கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு உருவான கபிலனின் சாங்கியம் கடவுளை முதன்மைப்படுத்தாத வினைமறுப்புக் கோட்பாட்டை உருவாக்கியது. அடுத்த கட்டமாக ஆறுசமயத் கோட்பாடுகள் ஒவ்வொரு கடவுளையும் முதன்மையாகக் கொண்ட வினைமறுப்புக் கோட்பாடுகளை உருவாக்கின. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக உருவான கோட்பாடுகள் அனைத்துமே இந்த வினைமறுப்புக் கோட்பாட்டின் புதிய உருவங்களாகவே அமைந்தன. உழைப்பை வெறுக்கும், இழித்துப் பழிக்கும், ஏழை எளிய உழைக்கும் மக்களின் உழைப்பை உறிஞ்சம் இந்த ஒட்டுண்ணிகளின் செல்வாக்கு உடையாதது மட்டுமல்ல இப்புதிய கோட்பாடுகளினால் மேலும் மேலும் பாறையாகி இறுகியது.

நாம் மேலே சுட்டிக் காட்டிய யூதம், கிறித்துவம், முகம்மதியம், சிண்டோயியம் ஆகியவை அவற்றைப் பின்பற்றிய மக்களை ஒவ்வொரு கட்டத்தில் ஒற்றுமைப்படுத்தின. அவற்றுள் உட்பிரிவுகள் இருந்தபோதிலும் அவ்வுட்பிரிவு ஒவ்வென்றினுள்ளும் அடங்கும் மக்களையாவது அவை ஒருங்கிளைத்தன. ஆனால் “இந்து” மதத்தின் அடிப்படைப் பண்பே மக்களைப் பிரித்துக் கூறபோடுவதாக இருக்கிறது. அறுமதங்கள், அவற்றுக்குப் புறம்பாக எண்ணற்ற சிறு தெய்வங்கள், குலதெய்வங்கள் குடும்பத் தெய்வங்கள், ஊர்க் கோயில்கள், சாதிக் கோயில்கள் என்றும் வழிபடுவதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் என்;றும் எண்ணற்ற வழிகளில் மக்களைக் கூறபோடுகிறது. முன்பு உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றிருந்த வேறுபாடு பின்னுக்குச் செல்ல பகைமை உணர்வு கொண்ட மக்கள் பிரிவுகளாகச் சாதிகள் “இந்து” மதத்தைக் கவ்விப் பிடித்துள்ளன. இப்பிளவு மக்களைப் பொதுவில் உறுத்தினாலும் அதைக் கைவிட்டு வெளிவரும் வகை தெரியாமல் திணறுகிறார்கள். தங்கள் சாதிப் பிரிவுகள் தரும் பாதுகாப்புணர்வைக் கைவிடத் துணிவில்லாமல் அப்பிளவைப் பேணிக் காப்பதற்குச் சாக்குப் போக்குகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தமிழ்க் குமுகம் என்றும் காணாத ஒரு நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு சமய மாயையும் உதவ முடியும். அதாவது “இந்து” சமயத்தை ஒற்றுமைப்படுத்தும் ஒரு சமயமாக, ஒரு மக்கள் சமயமாக மாற்ற வேண்டும்.

அதற்கு முதற்கட்டமாகத் தேவைப்படுவது ஓர் ஒற்றைத் தெய்வம். இன்று இந்து சமயத் தெய்வங்களாகக் காணப்படுவற்றில் மிகப்பெரும்பான்மை வாழ்ந்து மடிந்த மனிதர்களே. குறிப்பிட்ட பீடங்களின் தலைமையை உருவகப்படுத்துபவை (சிவன், அகத்தியன்). மனிதக் கண்டுபிடிப்புகளை நிகரளிப்போர் (சிவன்டூநெருப்பு, உடுக்கு, நச்சு முறிவு, நடனம், முருகன்டூவேல், இராமன்டூபெரிய வில், பலதேவன்டூகலப்பை, பரசுராமன்டூகோடரி, கண்ணன்டூஆனைந்து) அருஞ்செயல் செய்தோர் (கண்ணகி) வன்கொலையாக மாண்டோர் (மதுரை வீரன், சுடலைமாடன், சின்னத்தம்பி, பலவேசஞ் சேர்வை) மனித உருவமைந்த விலங்குகள் (பிள்ளையார், மாடன்) என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தத் தெய்வங்களின் தோற்றமே வெவ்வேறு மக்கட் பிரிவுகளின் தோற்றத்தோடு, ஒரு தொழிலோடு ஒரு வரலாற்று நிகழ்ச்சியோடு அல்லது ஒரு நிலப்பரப்போடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே முதலில் இப்பல தெய்வங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவற்றின் இடத்தில் ஒரேயொரு தெய்வம் வைக்கப்பட வேண்டும்.

எதனைத் தெய்வமாக்கலாம்?

கதிரவனைத் தெய்வமாக்குவது பொருத்தமாக இருக்கும், ஏனென்றால் அறிவியல் அடிப்படையில் இன்றைய மனித குலத்துக்குக் கதிரவனே மூலம். கதிரவனிடமிருந்து பெறப்பட்டதே கதிரவக் குடும்பத்தில் ஒரு கோளான புவி, இப்புவியில் உயிர்கள் தோன்றியதே கதிரவனுடன் அதன் இடைவினைப்பாட்டால் உருவான நீருடன் புற ஊதாக்கதிர்கள் வினை புரிந்ததன் விளைவே. அவ்வுயிர்களை இன்று காப்பதும் வெப்ப வடிவில் கிடைக்கும் கதிரவனின் ஆற்றலே. இந்த அடிப்படையில் கதிரவனை நம் ஒரே தெய்வமாகக் கொள்ளலாம்.[2]

பண்டை எகிப்தில் பூசாரிகள் மிகுந்த செல்வாக்குப் பெற்று நாட்டின் செல்வங்களனைத்தையும் தம் கட்டுப்பாட்டினுள் வைத்துச் சீரழித்துக் கொண்டிருந்தது பொறுக்காமல் 4ஆம் அமென்ஒட்டெப் எனும் அரசன் கோயில்களை மூடினான். கதிரவனின் பெயராகிய ஆட்டனின் பெயரைத் தன் பெயரோடு சேர்த்து இக்நேட்டான் என்று பெயர் சூட்டிக் கொண்டான். இவ்விறைவனுக்கு உருவமில்லை என்பதால் கோயில்களில் சிலைகள் வைப்பதைத் தடை செய்தான். எனவே அதுவரை சிற்பம் உள்ளிட்ட கலைகளுக்கு இருந்த ஆகமக் கட்டுகள் தளர்ந்து கலைகளில் பாய்ச்சல் நிலை தோன்றியது.

இவ்வரசன் போர்களை வெறுத்தவன். எனவே பேரரசின் பகுதிகளை வெளியார் தாக்கிய போது இவன் அம்மக்களுக்கு உதவவில்லை. எனவே பூசாரிகளும் கோயில்களை அண்டி வாழ்ந்த பல்துறை மக்களும் போர்ப்படையினரும் அவனை வெறுத்தனர். எனவே அவன் ஒரு தோல்வியாளனாக மாண்டான்.

இக்நேட்டன் ஒர் அரசனாயினும் தனிமனிதன். அத்துடன் சமய அடிப்படையில் அமைந்த ஒரு குமுகியல்டூபொருளியல் அமைப்பை நேரடியாக மாற்றுவது இயலாது. அது மட்டுமல்ல பேரரசைப் பேணுவதில் அவனுக்கு நாட்டமில்லாதிருந்ததும் மக்களிடமிருந்து அவனை அயற்படுத்தியது. ஆனால் நாம் இங்கு பரிந்துரைப்பது ஒரு திட்டவட்டான அரசியல்டூபொருளியல்டூகுமுகியல் அடிப்படையிலமைந்த கோட்பாட்டின் மீது உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தின் துணையுடன் நடத்தப்படவிருக்கும் ஒரு மக்களியக்கம் இப்பணியைக் கையிலெடுக்க வேண்டுமென்பது. அப்படி நிகழ்ந்தால் வெற்றி உறுதி.

மாற்றம் தெய்வத்துடன் நின்றுவிடப் பேவதில்லை. கோயிலின் வடிவமும் மாற வேண்டும். கிறித்துவம் போல் ஒரு பெரும் மண்டபத்தில் ஆணும் பெண்ணும் (முகம்மதியத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வழிபட முடியாது) சேர்ந்து வேறுபாடின்றி அமர்ந்து வழிபடும் வகையில் கோயில்களின் அமைப்பு மாற வேண்டும். இதில் கோயிலைத் துப்புரவு செய்யவும் திறந்து மூடவும் மட்டும் தேவையான ஊழியர்கள் அமர்த்தப்பட வேண்டும். சில பயிற்சிகளைப் பெற்ற எவர் வேண்டுமானாலும் வழிபாட்டை நடத்தும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

கோயில்களின் வடிவத்துக்கும் குமுக அமைப்புக்கும் ஓர் ஒத்திசைவு உண்டு. முகம்மதியக் கோயில்களில் பெண்கள் ஆண்களுடன் வழிபட மறுக்கப்படுவது அக்குமுகத்தின் பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு. அதே போல் “இந்து”க் கோயில்கள் மக்களைப் பல்வேறு ஏற்றத்தாழ்வுள்ள பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளது குமுகத்தில் நிலவும் வருண, சாதி, ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடு. இக்குமுக அமைப்பை மாற்றாமல் கோயில் வடிவத்தை மாற்ற மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியின் தோல்வி குமுக அமைப்புக்கும் கோயிலின் வடிவத்துக்கும் உள்ள உயிர் உறவைப் புலப்படுத்தும்.

சென்ற நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்துக்கும் இன்றைய குமரி மாவட்டத் (அன்றைய திருவிதாங்கூர் நாடு) துக்கும் எல்;லையில் நெல்லை மாவட்டத்திலிருக்கும் வடக்கன்குளம் என்ற ஊரிலிருந்த சிவனிய வேளாளர்களும் நாடார்களும் கிறித்துவத்துக்கு மதம் மாறினர். அவர்கள் வழிபடுவதற்கென்று ஒரு கிறித்தவக் கோயில் கொள்ளைச் சமய ஊழியர்களால் கட்டப்பட்டது. அதில் நாடார்களோடு ஒரே மண்டபத்தில் சேர்ந்திருந்து வழிபட வேளாளர்கள் மறுத்துவிட்டனர். வெள்ளை மதகுருக்களின் ஒற்றுமை முயற்சியொன்றும் பயனளிக்கவில்லை. எனவே கோயில் மண்டபத்தின் நடுவில் ஒரு தடுப்புச் சுவரெழுப்பப்பட்டு அச்சுவருக்கு இரு புறத்தினும் இரு சாதியினரும் தமக்குள் தொடர்பின்றி இருக்கும் நிலையில் கோயிலின் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இரு சாதியினரும் வெவ்வேறு கோயில்கள் கட்டிக் கொண்டனர்.

இன்றும் கிறித்துவத்தில் சாதி வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் அவை சென்ற நூற்றாண்டில் வடக்கன்குளத்தில் கடைப்பிடிக்கப் பட்டது போல் குமுகியல் ஒடுக்குமுறையாக இல்லை. சாதி வேறுபாடுகள் அடிப்படையிலமைந்த பொருளியல் நலன்களே சாதிவேறுபாடுகளில் வெளிப்படுகின்றன. சாதி மாறித் திருமணம் செய்து கொள்வது “இந்து” சமயத்தைப் போல் பொறுக்க முடியாத குற்றமாகப் பார்க்கப்படவில்லை. ஓரளவு இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கிறித்துவத்தில் சாதிய ஒடுக்குமுறை இன்னும் நிலவுகிறது என்று ஒரு குரல் கேட்கத் தொடங்கியுள்ளது. இதற்கும் பொருளியல் நலனே காரணம். “இந்து” சமயத்திலிருக்கும் தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்பு சலுகைகளுக்காகத் தாழ்த்தப்பட்ட கிறித்துவர்கள் “இந்து” சமயத்துக்குத் திரும்பும் நிகழ்முறை மிகப் பரவலாகிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்தி கிறித்துவத்தின் எண்ணிக்கை வலுவைப் பேணுவதே இக்குரலின் நோக்கம், எனென்றால் இக்குரலை எழுப்புவதில் தலைமையில் நிற்போர் இந்த ஒடுக்குமுறையை நிகழ்த்துவதாக அவர்களாலேயே குற்றம் சாட்டப்படும் மேற்சாதியைச் சேர்ந்தோரே. அத்துடன் இலங்கைடூஇந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கைகளினால் ஈழத்தமிழர் அழிவுறுவதை எதிர்த்துத் தமிழகக் கிறித்துவர்கள் எழுப்பிய குரலை ஓடுக்கவும் இந்திய ஆட்சியாளர்கள் இவர்களைத் தூண்டி விட்டனர்.

இனி கதிரவ வழிபாடு பற்றிய மேலும் சில செய்திகளைச் சொல்வோம். வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் முருகன் அடியாராகத் தொடங்கி சிவனடியாராக மாறி ஒளி வழிபாட்டினராக வளர்ந்தார். இறுதியில இறைமறுப்பாளராக மாறியதாகவும் அதனால் தான் அவர் தீர்த்துக்கட்டப்பட்டு ஒளியில் ஒளியாய் மறைந்தார் என்று கதை கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது இறுதி எழுத்தாக்கங்களும் அவரோடு அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தாயுமானவர் சாவும் இவ்வாறு ஐயத்துக்குரியதாகயே நிகழ்ந்துள்ளது. இவர்களைப் போன்ற சமயத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறாகக் கூறப்படுபவற்றையும் அவர்களது எழுத்தாக்கங்களையும் நுணுக்கமாக ஆய வேண்டும். எடுத்துக்காட்டாக திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தார் (பட்டினத்தார் வேறு பட்டினத்துப் பிள்ளையார் வேறு) வாழ்க்கை வரலாறாகக் கூறப்படுவதற்கும் அவரது பாடல்களுக்கும் பெருத்த முரண்பாடு உள்ளது. குடும்பத்துக்காக அயராது பாடுபட்டு மனைவியின் இரண்டகத்தால் வாழ்வைத் துறந்தவரென்றே அவரது பாடல்கள் அடையாளங்காட்டுகின்றன.

தமிழகத்தில் சமயத்துறை மூலம் மக்கட்பணியாற்றிய பெரியோரைப் பற்றிய ஆய்வுகள் ஒன்று கூட நடத்தப்படவில்லை. ஒன்றேல் அவர்களை வழிபாட்டுப் பொருளாக்கி அன்றேல் “பகுத்தறிவை”க் காரணம் காட்டி அவர்கள் வாழ்க்கைச் செய்திகளைத் தீண்டாமல் விட்டுவிடுகிறார்கள். தமிழக வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இப்பெரியோர் வாழ்க்கையை நுண்மையாக ஆய்வு செய்தல் இன்றியமையாதது.

கடவுளென்பது கற்பனை என்பதே உண்மை. ஆனால் இன்றைய உலகில் மனிதன் என்ற உயிரிக்குக் கடவுள் என்ற அந்தக் கற்பனையும் சமயம் என்ற மாயையும் தேவைப்படுகின்றன. குமுக அமைப்பும் அதற்கேற்றபடி மனிதனின் சிந்தனைப் போக்கும் முழுமையான மாற்றம் பெறும் வரை இந்தக் கற்பனையையும் மாயையையும் அவனிடமிருந்து அகற்றும் முயற்சிகள் வெற்றி பெறா. ஆனால் அவனை பல்துறையிலும் மேன்மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த மாயைகளை நாம் வடிவமைக்கலாம். அந்த அடிப்படையில் தான் இந்தக் கதிரவன் வழிபாட்டைப் பரிந்துரைக்கிறோம்.

இராமலிங்கரின் ஒளி வழிபாடு என்பது அண்டத்தின் மூல ஒளியைக் குறிப்பதாக இருக்கலாம். அண்டம் இருளாக இருக்கிறதா, ஒளியாக இருக்கிறதா என்பதே முடியாத கேள்வி. ஆனால் ஒளியும் இருளும் இயங்கியல் எதிரிணைகள், ஒளியும் இருளும் ஒன்று மற்றொன்றாக மாறுகின்றன ஒன்றையொன்று ஊடுருவுகின்றன என்ற இயங்கியவைப் புரிந்து கொண்டவர்களுக்கு அண்டத்தை ஒளிவடிவாகக் காணபதில் முரண்பாடொன்றும் தோன்றாது.

ஆனால், அண்டம் என்பது கற்பனைக் கெட்டாத விரிவும் சிக்கலும் நிறைந்த ஒன்றாகும். எனவே எளிய, மனிதன் வாழ்வோடு இணைந்த கதிரவன் வழிபாடு பொருத்தமாகும்.

வழிபாட்டைப் பற்றிக் கூறும் போது திரு.வி.க.இறைவன் கற்பனைக் கெட்டாதவன்; எனவே அவனை அடைய இடைநிலையாக மக்கள் சிவன், திருமால், முருகன், ஏசுநாதர், முகம்மது நபி போன்றோரைக் குருக்களாக, ஆசான்களாகக் கொண்டுள்ளனர் என்று கூறுவார். கற்பனையான இறைவனையடைய உண்மையாக வாழ்ந்த மனிதர்களின் மாயமாகப் பெருக்கப்பட்ட படிமங்கள் பயன்படுவது போல் உண்மையில் எல்லையற்ற ஒளிவடிவமான அண்டத்தை இறைவனாகக் கற்பித்து அதன் நேரடி நிகரளிப்பான, மனிதனின் வாழ்வில் நேரடிப் பங்கு கொள்ளும் கதிரவனை வணங்குவது பொருத்தமே.

இன்றைய நிலையில் இருபதாம் நூற்றாண்டு முடிந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கும் நிலையில், இருக்கின்ற ஒரு சமயத்தை அழித்து விட்டு ஒரு புதிய சமயத்தை உருவாக்குவதா இது பகுத்தறிவுக்கு ஓக்குமா நடைபெறக் கூடியது தானா என்ற கேள்வி பலரிடமும் ஏற்படலாம்.

ஏன் முடியாது? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மோசே நிகழ்த்தியதில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் சப்பானியர் நிகழ்த்திக் காட்டியது வரை இது இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆலய நுழைவு என்றும் இன்னும் பலவகைகளிலும் அளவு மாற்றமாக “இந்து” சமயத்திலும் நிகழ்ந்து வருவது இது. அதை ஒரு இயல்பு மாற்றமாக ஆக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். மார்க்சியக் கோட்பாட்டின் படி விளைப்பு விசைகளில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தினால் பன்பாட்டின் கூறுகளில் ஒன்றான சமயத்திலும் அத்தகைய தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்துவதில் கடினமெதுவுமில்லை. முற்போக்கான பொருளியல் நலன்களும் குமுகியல் நலன்களும் இணைந்து செயல்படும் ஒரு செயல்திட்டத்தின் துணையும் அதை ஏற்று நடத்தும் நேர்மையான தலைமையைக் கொண்ட எழுச்சி மிக்க மக்களியக்கமும் உருவானால் ஒரு குமுகத்தால் இயலாதது எதுவுமில்லை.

எனவே இந்து சமயத்தில் சாதியொழிப்பு முழுமை பெற்று ஒன்று பட்ட மக்களைக் கொண்டு இந்நாடு உருப்பெற வேண்டுமாயின் இன்றிருக்கும் அனைத்துக் கோயில்களும், சமய வேறுபாடின்றி அழிக்கப்பட வேண்டும். அவ்வப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து வழிபடுவதற்கேற்ற வகையில் மக்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலான ஒரே தெய்வத்தை வணங்கும் வகையில் வெறும் மண்டபங்களாக அமைந்த கோயில்கள் தேவைப்படும் இடங்களில் எழுப்பப்பட வேண்டும்.

அடிக்குறிப்புகள்:

[1] 19ஆம் நூற்றாண்டில்

[2] இக்கருத்துக்குத் தூண்டுதலாக இருந்தது சில ஆண்டுகளுக்கு முன் தினமணிகதிர் இல் வெளிவந்த திரு.கத்தூரிரங்களின் ஒரு தொடர் (இன்றே. இங்கே. இப்பொழுதே என்று நினைவு
)

3 மறுமொழிகள்:

சொன்னது…

ஐயா,

ஒரே இடுகையில் இவ்வளவு நீளமாகப் பதிக்காமல் பிரித்து பிரித்து வெளியிட்டால் படிக்க எளிதாக இருக்கும். பலரையும் போய்ச் சேரும்.

align:justify என்ற தேர்வை நீக்கி விட்டு பதித்தால்தான் ஃபயர்ஃபாக்சில் சரியாகத் தெரியும். இப்போது எழுத்துக்கள் உடைந்து தெரிகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்

சொன்னது…

ஐயா நலமா?
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. மா.சி சொன்னட்துபோல வலைப்பதிவுகள் சுருக்கமாக எழுதப்பட்டால் படிக்க எளிதாயிருக்கும். புத்தக வடிவத்துக்கு தற்போதைய நீளம் சரியாயிருக்கும்.

சொன்னது…

மா. சிவகுமார்,

தங்கள் வருகைக்கு நன்றி.

புத்தகமாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் என்பதால் நீளமாக இருப்பதை தவிர்க்க இயலவில்லை.

"வடிவமை : சீரமை" தேர்வை நீக்கிவிட்டேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி.


சிறில் அலெக்ஸ்,

வருகைக்கு நன்றி.

தொடர்ந்து ஆதரவு தருக.

அன்புடன்,

குமரிமைந்தன்