சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 13. மொழி
மேற்சாதியினர், கீழ்ச்சாதியினர் ஆகிய இரு தரப்பாரும் பேசும் மொழி தமிழேயாயினும் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடுண்டு. மேற்சாதியினரின் மொழியில் சங்கத(சமற்கிருத)க் கலப்பு உண்டு. சங்கதம் கலந்து பேசுவதை இவர்கள் பெருமையாகக் கருதுகிறார்கள். இதுவரை எழுந்த தனித்தமிழ் இயக்கங்களெல்லாம் இந்த மேற்சாதியினரின் கலப்பு மொழியை எதிர்த்தே நடத்தப்பட்டன. இதற்கு மாறாகக் கீழ்ச்சாதி மக்களின் மொழி இயல்பாகவே தூய்மையானது. சிவனிய மலர்ச்சிக் காலத்திலும் பள்ளு, குறவஞ்சி போன்ற பிற்காலத் தேசிய எழுச்சி முயற்சிகளின் போதும் கீழ்ச்சாதி மக்களின் தூய வழக்கு தமிழுக்கு அவ்வப்போது உயிர் கொடுத்து வந்துள்ளது. சங்கதத்தின் துணையின்றித் தமிழ் தனித்தியங்க முடியும் என்று கால்டுவெலார் கூறியதற்கு அடிப்படையானதும் பாவாணரின் தனித்தமிழ் ஆக்கங்களுக்கும் சொல்லியல் ஆய்வுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக நின்றதும் கீழ்ச்சாதி மக்களின் தூய தமிழேயாகும்.[1]
ஒருவேளை, மொழித் தொடர்பான பூசல் மிக நீண்ட காலம் நடைபெற்று வரும் நாடு உலகிலே தமிழ்நாடாகத்தான் இருக்கும். மொழிப் பூசல் தடயங்கள் தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றன. பின்னர் சிவனியக் குரவர்கள் காலத்தில் இப்பூசல் ஒரு வன்முறைப் பூசலுடன் கலந்து எழுந்தது. முதலில் வேதியர்களால் கோயில்களில் புகுத்தப்பட்ட சங்கதம் பின்னர் புத்த, சமண சமயத்தவரால் மக்களிடையிலும் புகுத்தப்பட்டது. அதை எதிர்த்துக் கிளம்பிய எழுச்சிக்கு இரையானவர்கள் சமணர்களே என்பது வரலாறு காட்டும் உண்மை. முசுலீம்கள் மற்றும் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்திலும் மொழியைத் துணைகொண்டு ஓர் எழுச்சி தோன்றியிருக்கிறது. பள்ளு, குறவஞ்சி என்ற பெயர்களில் தோன்றிய கீழ்ச்சாதி மக்களோடு தொடர்புடைய இலக்கிய வகைகள் இவ்வெழுச்சியோடு தொடர்புடையவை. பின்னர் வெள்ளையர் வருகையால் அம்முயற்சி வெற்றி பெற முடியாவிட்டாலும் சமயப் பணிக்காக உள்நாட்டு மக்களின் மொழியைக் கற்க வேண்டும் என்ற தேவையால் வெள்ளையரால் தமிழ்க் கல்வி ஆக்கம் பெற்றது. அதன் விளைவாகக் கால்டுவெலாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் உருவானது. மனோன்மணியம் சுந்தரனார், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் என்று அந்த மரபு வளம் பெற்று இன்று எதிர் நிற்க முடியா ஆற்றலாக வளர்ந்துள்ளது.
சங்கதம் புகுத்தப்பட்ட அடிநாளிலிருந்து ஊர்ப் பெயர்களை எல்லாம் மொழிபெயர்க்கும் வேலை இடைவிடாமல் நடைபெற்றுள்ளது. அடிபணியாத ஊர் அல்லது அடைக்கலம் தரும் ஊர் எனப் பொருள் தரும் தஞ்சாவூரை (தஞ்சாமை + ஊர்; தஞ்சுதல் - அடிபணிதல் அடைக்கலம் தருதல்)த் தன் சாவு ஊர் எனப் பிரித்துச் சுயமரணபுரி என்று மாற்றிச் சுயமரணபுரியைத் தமிழர்கள் தஞ்சாவூர் என மொழிபெயர்த்துக் கொண்டனர் என்று கூசாமல் கூறுகின்றனர். இப்படித் தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் பெயர் மாற்றம் நடைபெற்றிருக்கிறது. தம்மைத் தமிழ்த் தொண்டர்கள் எனக்காட்டிக் கொள்ள இங்கு ஆட்சி புரிந்த, ஆட்சி புரியும் திராவிட மரபுக்கட்சிகள் சில ஊர்ப் பெயர்களை மாற்றியிருக்கின்றன. மாயூரம் என்ற ஊர்ப்பெயர் மயிலாடுதுறை என அண்மையில் மாற்றம் பெற்றுள்ளது. மாயூரம் என்பதும் மயில் என்பதும் தமிழ்ச் சொற்களே. மயில், குயில் என்பவை முறையே மை+இல், கூ+இல் எனப் பிரிந்து பொருள் தரும். மையில் என்றால் கருமை இருக்குமிடம், கூயில் என்றால் கூவுதல் இருக்குமிடம் அல்லது உருவாகுமிடம். அது போல் மை + ஊர் = மையூர் என்றாலும் கருமையின் உறைவிடம் என்றே பொருள் தரும். ஈற்று ஒற்றெழுத்தை உயிர் மெய்யாக்கி மயூர என்றால் அது சங்கதச் சொல் போன்ற தோற்றம் தருகிறது.
ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு; அது நாளடைவில் மக்கள் நாவில் அம்பட்டன் வாராவதியாகி அதிலிருந்து Barber’s Bridge என்று ஆங்கிலச் சொல் உருப்பெற்றது என்ற கதை எல்லோருக்கும் தெரியும். அதைவிடவும் வேடிக்கையாகச் சங்கதக்காரர்களின் முயற்சிகள் இருந்துள்ளன என்பதற்கு தஞ்சாவூர் ஒரு சான்று. இன்னொரு சான்று வேதாரண்யம் எனப்படும் திருமரைக்காடு. மரை என்றால் சதுப்பு நிலங்களில் வாழும் ஒருவகை மான். Marshdeer என்று இது ஆங்கிலத்தில் வழங்கப்படும். காவிரியின் கயவாயை அடுத்திருக்கும் இக்காடுகளில் இம்மான்கள் மிகுந்திருந்ததால் அதனை மரைக்காடு என்றனர் நம் முன்னோர். ரகரத்துக்கும் றகரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் மரை என்பதை மறை என்று கருதி திருமறைக் காடாக்கி அதனை வேதாரண்யம் என மொழி பெயர்த்தனர் சங்கதக்காரர்கள். வேதங்கள் மரங்களாக நின்றதால் அப்பெயர் வந்தது என்ற கதையையும் கட்டிவிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாமியாடுவோரைக் கோமரத்தாடி எனச் சிலர் வழங்குகின்றனர். இதன் பொருள் புரியாமல் கோமரம் என்றால் என்ன மரம் எனக் குழம்புகின்றனர் தமிழாசிரியர்கள். சங்கதக்காரர்களின் உத்திகளைப் புரிந்து கொண்டால் இது எளிதில் விளங்கும். தெய்வமேறியாடுவதை வேலனாட்டம், முருகாட்டம், முருகேறுதல் என்றெல்லாம் வழங்குவது மரபு. முருகன் g குமரன். எனவே முருகாட்டத்தை குமராட்டம் எனலாம். குமரம் சங்கதத்தில் கௌமாரம் என்ற வடிவம் பெறும். எனவே முருகாட்டத்தைக் கௌமாரத்தாட்டம் என்றும் அவ்வாறு ஆடுபவனைக் கௌமாரத்தாடி என்றும் மொழி பெயர்ந்துள்ளனர். இன்று கோமரத்தாடியாகி எந்த மரம் எந்தத் தாடி என்று தமிழாசிரியர்களைக் குழப்புகிறது. இப்படிச் சங்கதக்காரர்கள் நடத்தியுள்ள விந்தைகள், வேடிக்கைகள், கோமாளித்தனங்கள், குரங்குத் தனங்கள், குழறுபடிகள் தாம் எத்தனை, எத்தனை, சொல்லிமாளாது... அவற்றைப் பார்க்கும் போது நமக்குச் சிரிப்பும் வரும், சினமும் வரும், ஏளனமும் வரும், தாங்கொணாத ஆத்திரமும் வரும்.
அறியா வகையில் நாட்டுப்புற மக்களிடையே புகுந்துள்ள ஒரு சில சொற்கள் தவிர அவர்கள் தூய்மையான தமிழைச் சிறிது திரிந்த நிலையில் பேசுகின்றனர். ஆனால் அவர்களது அந்தத் தூய சொற்களைக் கேட்டால் மேற்சாதியினருக்கும் பார்ப்பனியரெனும் வெள்ளாளக்கட்டினருக்கும் கசக்கும். ஏளனம் பிறக்கும். சாதம் என்னாமல் சோறு என்றாலும் சிறுநீரை மூத்திரம் என்னாமல் மோள் என்றாலும் முகம் மழிப்பதைச் சவரம் என்னாம சிரைப்பு என்று கூறினாலும் அவர்களுக்குப் பிடிக்காது. இவ்வாறு மேற்சாதியினருக்கு மட்டும் இவ்வளவு உவப்பைத் தரும் இந்தச் சங்கத மொழி எங்கிருந்து வந்தது? இங்கு ஒரு பெரும் உலக வரலாற்று முடிச்சு விழுந்து அவிழ்க்க முடியாதபடி சிக்கிக் கொண்டுள்ளது.
ஐரோப்பியர்கள் முதன் முதலாக இந்தியா வந்து இங்குள்ள நாகரிகத்தை ஆய்வு செய்ய முற்பட்ட போது முதலில் அவர்களுக்கு சங்கத இலக்கியங்கள் தாம் கிடைத்தன. அம்மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளுக்குமுள்ள சில ஒற்றுமைகள் அவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்தன. அவற்றை அணுகி ஆராய்ந்தவர்கள் செருமானியரே. அதிலும் மாக்சுமுல்லர் என்ற மொழியறிஞர்தான் இம்மொழி ஒற்றுமையிலிருந்து ஒரு புனைகோளை (Hypothesis) உருவாக்கினார். அதுதான் ஆரிய இனக் கோட்பாடு. எங்கோ நடு ஆசியாவிலிருந்து கி.மு.2000 அளவில் ஒரு மனித இனம் திடீரென்று நாலாபுறமும் புரவியதாகவும் அது ஐரோப்பா, ஆசியா முதலிய கண்டங்களில் தங்கி அங்கு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியதாகவும் இந்தியப் பார்ப்பனர்கள் அவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களேயென்றும் அவர் உண்மையென்று கருதிய சில மொழியியற் சான்றுகளைக் கொண்டு நிலைநிறுத்த முயன்றார். அவரது இந்தப் புனைகோளுக்கு உலகின் நாலாபுறங்களிலுமுள்ள அறிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அவர் தன் கருத்தைக் கைவிட்டுவிட்டார். ஆனால் அன்று செருமானியிலிருந்த அரசியல் சூழலில் அவரது புனைகோள் ஆழமாக வேர் கொண்டுவிட்டது. உலகை வெற்றி கொள்ளக் கிளம்பிய ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்டக்கூடியதாகவும் தம் முதல் எதிரிகளான அரேபியர்களுக்கும் முகம்மதியர்களுக்கும் எதிராகவும் இப்புனைகோள் பயன்பட்டதால் முதலில் முழு ஐரோப்பாவும் இப்புனைகோளை ஏற்றுக்கொண்டது. பின்னர் இது யூதர்களுக்கெதிராகவும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கெதிராகவும் செருமானியரே தூய ஆரியர் என்ற வடிவில் ஒரு வலிமையான கருத்தியல் ஆயுதமாகச் செருமானியருக்குப் பயன்பட்டது.[2] இதை எதிர்கொள்ள பிற ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஒரு மாற்று தேடினர். அதற்குக் கால்டுவெலாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கைகொடுத்தது. ஐரோப்பாவில் எவ்வாறு அரசியல் நோக்கங்களுக்காக இப்புனைகோள்கள் பயன்பட்டனவோ அதேபோல் இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவை பயன்பட்டன. ஐரோப்பிய மேலாதிக்கத்தை முறியடிக்க விரும்பிய வட இந்தியத் தேசிய அறிஞர்களில் சிலர் ஐரோப்பியர்களின் மூதாதையரோடு தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட இந்திய ஆரிய நாகரிகத்திலும் சிறந்தது இந்தியா முழுவதும் பரவியிருந்த. திராவிட நாகரிகமே என வாதிட்டனர். பார்ப்பனர்களுக்கும் அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கும் இப்புனைகோள்கள் பயன்பட்டமையால் இங்கும் அவை வலிமையாக வேர் ஊன்றின.
ஆனால் இவை வரலாற்று உண்மைகளைச் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாகும். கி.மு ஆறாம் நுற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி, குறிப்பாக அதன் வடமேற்கும் நடுவடக்கும் ஒருவர் பின்னொருவராக பாரசீகர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள், சீனர்கள் ஆகியோரின் ஆதிக்கத்தினுள் இருந்துள்ளன.[3] இவ்வாறு எட்டு நூறாண்டுக்கால அரசியல் தொடர்பினால் ஏற்பட்ட மொழி ஒற்றுமைகளை எந்த வரலாற்றாசிரியரும் கணக்கிலெடுக்கவில்லை. இரு நூறாண்டுக் கால ஆங்கிலேயராட்சி தமிழ் போன்ற நெடுங்கால இலக்கிய இலக்கணங்களுள்ள மொழியில் நிகழ்த்தியிருக்கும் மாறுதல்களோடு ஒப்பிட்டால் அவ்வாறு எதுவுமே உருவாகாத நிலையிருந்த வட இந்திய மொழிகள் இந்த எண்ணூறாண்டுக் காலத்தில் எவ்வளவு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் என்பதனை வரலாற்றாய்வாளர்கள் கருதிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இனத் தொடர்பால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மொழித் தொடர்பு வெறும் அரசியல் தொடர்பால் ஏற்பட்டதாகி விடுகிறது.
அத்துடன் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். சங்கதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இருப்பனவாகக் கூறப்படுபவற்றை விட அடிப்படைச் சொற்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழுக்கும், சங்கதத்துக்கும் தமிழுக்கும் அதிக நெருக்கம் உண்டு. இதை எந்த இனக் கோட்பாட்டால் விளக்குவது? தென்னையையும் பனையையும் ஐரோப்பாவிலும் மேற்காசியாவிலும் அறிமுகப்படுத்தியவரும் சிவந்த நிறமுள்ள செம்படகுகளில் கடல் வாணிகம் செய்தவரும் கிரேக்கருக்குப் பதினாறு எழுத்துகளை (அவ்வெழுத்துகள் அ-வில் தொடங்கி ன-வில் முடிந்தன)க் கற்பித்தவரும் மாழையியலை[4] அவர்களுக்கு அறிமுகம் செய்தவரும் கார்த்தீசினியரென்றும் அசிரியர்களென்றும் அழைக்கப்பட்டவர்களுமான பினீசியர்களால் ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழுக்கும் இந்தத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். கண்ணாடியையும் வெடிமருந்தையும் முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் அவர்களே என்றும் கூறப்படுகிறது.[5] சியார்சுத் தாம்சன் கூறுகின்ற செய்திகளின் ஐரோப்பிய நாகரிகத்தின் அடித்தளத்தை இட்டவர்களே இந்தப் பினீசியர்கள்தாம்.[6] இவ்வாறு மொழித் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆரிய இனக் கோட்பாடு ஆவியாகி விடுகிறது. அதுமட்டுமல்ல இன்றுவரை உலகில் ஆரிய நாகரிகத்துக்குரியதென்று கூறத்தக்க அகழ்வாய்வுக் களம் ஒன்று கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை.[7]
அப்படியாயின் சங்கதத்தின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? உலகில் தோன்றிய செயற்கை மொழிகளில் நெடுநாள் நிலைத்திருப்பது சங்கதம், அதாவது அது ஒரு செயற்கை மொழி என்பது அறிஞர்கள் முடிவு.[8] இந்தியாவில் வழக்கிலிருந்த மொழிகளிலும் வெளியிலிருந்து வந்த தொடர்பு மொழிகளிலும் உள்ள சொற்களையும் இலக்கண அமைப்புகளையும் கொண்டு எளிய மக்கள் எளிதில் கற்க முடியா வகையில் செய்யப்பட்ட மொழியாகும் சங்கதம். மனைவி எனப் பொருள் தரும் வெவ்வேறு சொற்களுக்கு ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்று இயற்கைக்கு ஒவ்வாத பால் இலக்கணம் உடைய விந்தையான மொழி. ஆளும் வகுப்பினர்க்கென்றே உருவாக்கப்பட்டது; “இருவினையுமற்ற”, இம்மொழியைக் கற்பதும் ஓதுவதும் தவிர வேறு வேலை இல்லாத ஒட்டுண்ணிப் பார்ப்பனர்களால் பேணிகாக்கப்படுவது. சங்கதத்திலும் அதற்கு முந்திய வேத மொழியிலும் உள்ள சில சொற்களைப் பார்போம்.
வேதத்தில் இரு மதுவகைகள் கூறப்பட்டுள்ளன. சோமபானம், சுரபானம் என்பவை அவை. சோமபானம் என்பதற்குச் சோம என்ற ஒரு வகைப் பூண்டின் வேரிலிருந்து எடுக்கப்படும் மது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பூண்டு எதுவென்று இன்றுவரை யாராலும் கண்டுடிக்க முடியவில்லை.
சோம்புதல், சோமை என்பவை செயலற்று, செயலிழந்திருக்கும் நிலையைக் குறிக்கும். மயக்கத்தைக் தருவது நிலா எனப்படும் மதி. ஆங்கிலத்தில் பித்தர்களை Lunatics என்று அழைப்பது வழக்கம். நிலவைக் குறிக்கும் Luna என்பதிலிருந்து இச்சொல் பிறந்தது. அதுபோல் மதி என்பதிலிருந்து மது வந்தது. மயக்கத்தைத் தருவதால் மதியைச் சோமன் (சோம்பலை, சோமையைத் தருபவன்) என்ற அழைத்தனர். எனவே சோமன் என்ற அடியிலிருந்து சோம பானம் பிறந்தது. சோம பானம் என்பதன் நேர்ப்பொருள் மது என்பதே. அதாவது இன்று சிறுதெய்வக் கோயிற்கொடைகளின் போது அரிசி மாவிலிருந்து செய்து படைக்கப்படும் அதே மதுதான்.
அதேபோல் சுரபானம் என்றால் என்னவென்று யாரும் இன்றுவரை கூறவில்லை. சுரக்கின்ற பானம் சுரபானம். பனம்பாளையிலிருந்து சுரக்கும் பனங்கள்ளே சுரபானமாகும். சுரபானம் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதாகவும் சோமபானம் மனிதர்களால் பருகப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன.[9]
சங்கதத்தில் சு என்ற எழுத்து பல சொற்களுக்கு முன்னொட்டாக வருகிறது. சொந்த, நல்ல என்ற பொருளில் இச்சொல் வருகிறது. தமிழில் சொந்தம், சொம்மு, சொத்து, சொக்காரன் போன்ற சொற்கள் சொம் என்ற வேரடியாகப் பிறந்தவை. இவ்வேர்ச்சொல் சுயம் என்று திரிக்கப்பட்டு சங்கதத்தில் இடம்பெற்றுள்ளது. சு என்ற வடிவில் சுதந்தரம், சுதேசி, சுசாதி, முதலியன இவ்வகையின. அதேபோல் எள் + நெய் = எண்ணெய். எண்ணெய் பொதுப் பெயராகியபோது பிற நெய்களிலிருந்து எள்ளின் நெய்யைப் பிரிக்க நல்ல என்ற அடைமொழியை அது ஏற்றது. செவிலித்தாயிலிருந்து பிரித்தறிய பெற்றதாய் நற்றாய் எனப்படுகிறாள். குமரி மாவட்டத்தில் மிளகு நல்ல மிளகென்றும் மிளகாய் கொல்லமிளகென்றும் அழைக்கப்படுகின்றன. மா மரம் நல்லமா என்றும் முந்திரி மரம் கொல்லமா என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே மூலமானது அல்லது சொந்தமானது என்ற பொருளில் நல்ல என்ற சொல் பயன்படுகிறது. எனவே சொந்தத்தைக் குறிப்பதற்காகக் கையாளப்பட்ட சு நல்ல என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. சுகந்தம், சுகுணம், சுநீதி போன்றவை சான்றுகளாகும்.
சொம் g சொந்தம்
சொம் g சுயம் g சு
நல்ல g சொந்த
நல்ல g சு
மை என்றால் கருமை என்பது பொருள். கரு என்றால் உடல் என்று பொருள். எனவே பிணத்தை மையம் என்பர். இடுகாடு மையவனமாகி மயானமாகி சுமசானம் என்றாகியது. இது சங்கதம்.
மை என்றால் கரு. கரு என்றால் நடு. எனவே நடுவுக்கு மையம்.
மை என்றால் கருமை. இருமை என்றால் கருமை. எனவே மை g இருமை.
மை என்றால் தன்மை. (எ-டு) “ பெருமை, அணிமை.
எனவே மை g இரண்டு g த்வம்(சங்கதம்) = தன்மை (எ-டு) முதலாளித்வம், பிரபுத்வம்.
மை = இருமை, இருமை g எருமை = கரிய விலங்கு g மையிடம் (கருமையின் இருப்பிடம்) எ-டு. குயில், மயில். மையிடம் g மகிசம் (சங்கதம்) = எருமை.
இச்சொற்கள் பல்பொருள் ஒரு சொல் (Homophones) என்ற உத்தியைப் பின்பற்றி உருவானவை. இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சங்கதச் சொற்கள் மிகப் பல.
சங்கதத்தை வட இந்திய மொழி என்றும் திராவிடத்தைத் தென்னிந்திய மொழி என்றும் கூறுவர். ஆனால் இந்தியா முழுவதுமுள்ள மொழிகளை எடுத்து ஆய்வு செய்தால் மேற்சாதியினரிடையில் சங்கதச் செல்வாக்கு மிகுதியாகவும் கீழ்ச்சாதிகளிடையில் அதற்குப் புறம்பான ஒரு மொழியின் செல்வாக்கு மிகுதியாகவும் இருப்பதைக் காணலாம். இதற்கு ஆரிய-திராவிட இன வேறுபாட்டைக் காரணமாகக் காட்டுவர். உண்மையில் ஒட்டுண்ணிகள் தங்கள் நலனுக்காக உருவாக்கிய சங்கதத்தின் செல்வாக்கினுள் மேற்சாதிகள் விழுந்தமையால் ஏற்பட்டதே இவ்வேறுபாடு.
சங்கதம் கூட நேரடியாகப் பார்ப்பனர்களால் ஏற்பட்டதல்ல. வாணிகர்கள் தங்கள் குழூஉக் குறியாகப் பயன்படுத்திய ஒரு மொழியிலிருந்தே உருவாக்கப்பட்டது. அதனால்தான் சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றி இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அவை வாணிகர்களின் குழூஉக்குறி என்றும் அதில் ஒரு சொல் பல்பொருள் உத்தி பயன்பட்டிருக்கிறதென்றும் தமிழிலிருந்து அல்லது திராவிட மொழியிலிருந்து அவை உருவாயின என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.[10] இன்னொரு சாரார் சிந்து சமவெளி எழுத்திலிருந்துதான் வேத மொழியும் சங்கதமும் (வேத மொழிக்கும் சங்கதத்துக்கும் வேறுபாடுகள் உண்டு) தொன்மங்களும் தோன்றின என்றும் கூறுகின்றனர்.[11] இவ்விரு சாரரும் கருதுவது போல் இதில் தீர்க்க முடியாத முரண்பாடு எதுவும் இல்லை. மக்கள் மொழியிலிருந்து உருவான வாணிகக் குழூஉக் குறி பின்னர் சங்கதத்தின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது என்பதற்கு இக்கருத்துகள் ஆக்கம் தருகின்றன.
எனவே மக்களிலிருந்து முதன் முதலில் அயற்பட்ட வாணிகர்களோடு மக்கள் மொழியிலிருந்து அயற்பட்ட குழூஉக்குறி தோன்றியது. அவர்களையும் அடிப்படுத்திய ஒட்டுண்ணிகளாகிய அரசர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பயன்படுவதற்காகச் சங்கதம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இயல்பாகவே ஒட்டுண்ணிகளின் மொழியாகவும் குமுக உயர்வைக் குறிப்பதாகவும் சங்கதம் விளங்கியது.
வல்லின எழுத்துகளாகிய க, ச, ட, த, ப ஆகியவற்றுக்கு நான்கு வகை ஒலிகள் இந்திய மொழிகளில் மட்டுமே உள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததெனத் தவறாக (இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்ற கருத்தமைப்பே தவறானது)க் குறிப்பிடப்படும் சங்கதத்திலும் இந்த எழுத்துமுறை உண்டு. இது எந்த ஐரோப்பிய மொழியிலும் இல்லாத ஒன்று. எனவே இந்த எழுத்துமுறை சங்கதத்திலிருந்து பிற மொழிகளுக்குச் சென்றது என்பதைவிட இந்திய மொழிகளிலிருந்து சங்கதம் உருவாக்கப்பட்டு எழுத்து வடிவம் பெற்றபோது சேர்க்கப்பட்டது என்பதே பொருத்தம். வேதங்கள் நெடுங்காலம் எழுதாக் கிளவியாக எழுதப்படாமலே இருந்தன என்ற உண்மையாலும் இது உறுதிப்படுகிறது. இந்த எழுத்துக்கள் இல்லாமல் ஒரே விதிவிலக்காக இருப்பது தமிழே. ஆனால் வரிவடிவம் எனப்படும் வரியன்களில் ஒவ்வொன்றாக இருக்கும் இவ்வல்லெழுத்துகளுக்குக் குறைந்தது நான்கு ஒலியன்களாவது உண்டு. எடுத்துக்காட்டாகக் காகம் என்பதிலுள்ள முதல் எழுத்துக்கு க ஒலியும் இரண்டாவது எழுத்துக்கு H ஒலியும் உண்டு. காக்கை என்பதில் கைக்கு க2 ஒலியும் தங்கை என்பதிலுள்ள கைக்கு க3 ஒலியும் ஆக நான்கு ஒலியன்கள் உண்டு. இதுபோன்றே பிற வல்லின எழுத்துகளும். பிற மொழிகளில் உள்ள நான்காவது ஒலி தமிழில் இல்லை. ஆனால் ற கரத்துக்கு இரண்டு ஒலியன்கள் குற்றம், குறம் என்ற சொற்களில் வருவது போல் உள்ளன. இது பிற மொழிகளில் இல்லை. நடபடி, குடபுலம் போன்ற சொற்களில் பகரத்திற்கிருக்கும் ஒலி பிற மொழிகளில் இல்லை.
நான்காவது ஒலியன் அந்தணர் மறைகளில் உள்ளதாகவும் அதைத்தான் தவிர்ப்பதாகவும் தொல்காப்பியர் கூறுகிறார்.
எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளர்ந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா(து) எழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை யளபுநுவன் றிசினே
(தொல்., எழுத்து, 102)
இந்த நிகழ்முறையின் போது தமிழின் எழுத்துகளின் எண்ணிக்கை சுருக்கப்பட்டு 30 முதலெழுத்துகளும் 3 சார்பெழுத்துகளும். (முதலெழுத்துகள் அ முதல் ஒள வரை 12 உயிரெழுத்துகளும் க முதல் ன வரை 18 மெய்யெழுத்துகளும் சார்பெழுத்துகள் குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம்) சேர்ந்து 33க்குள் அடக்கப்பட்டன. இம்முயற்சியில் நிகழ்ந்த ஒரு பிழை நகரத்தில் தோன்றுகிறது. தகரத்துக்கு முந்திய ஒற்றெழுத்தாக வரும் ஒலிப்பு மட்டுமே உடைய நகரம் (தந்தை, பந்து) மொழிக்கு முதல் எழுத்தாகவும் பயன்படுத்தப்பட்டு ஒரு முரண்பாடாக நிற்கிறது. ஒரே எழுத்தே நகரம் னகரம் இரண்டின் பணியையும் ஆற்ற முடியும். அதேபோல் றகரம், ரகரம் ஆகிய எழுத்துகளும் ஒன்றுக்குப் போலியாய் இன்னொன்று செயற்படுவதையும் ளகரமும் ழகரமும் கூடச் சில வேளைகளில் இடம்மாறி வருவதும் கண்கூடு.
ஒரு வேளை அதன் பிறகே அதுவரை இருந்த மொழி நடையிலிருந்து தமிழ் மாறியிருக்க வேண்டும். இந்த மாற்றம் ஒரு வேளை முந்திய இலக்கியங்கள் தொகுக்கப்படாமைக்கு அல்லது அழிக்கப்பட்டமைக்குக் காரணமாகவும் இருக்கலாம். இது எத்தகைய குமுக முரண்பாடுகளிலிருந்து தோன்றியிருக்கும் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் மொழி நடையிலிருந்து மாறுபட்ட, அதாவது வெவ்வேறு உழைப்புச் செயல்முறைகளின் போது எழுப்பபப்படும் வெவ்வேறு சிறப்பு ஒலிகளையும் சிறப்புச் சொற்களையும் தவிர்த்துப் “பொதுவாக” ஒரு மொழியை இறுத்தெடுக்கும் ஆளும் வகுப்புகளின் முயற்சியாகவும் இது இருக்கலாம். ஆனால் வரலாற்று விந்தையாக இது பார்ப்பனர்களின் மேலாண்மையையும் அவர்களது கருவியாகிய சங்கதத்தையும் எதிர்க்கும் ஒரே கருவியாக, இந்தியாவிலுள்ள ஒரே கருவியாக இன்றளவும் பயன்பட்டு வருகிறது.
அண்மைக் காலங்களில் கணிப்பொறி வல்லுநரும் தமிழ் எழுத்தாளருமான திரு. சுசாதா தமிழ் எழுத்து முறையின் மேன்மை பற்றி தனக்குள் எழுந்த வியப்பைப் பல அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். கணிப்பொறி ஆணைகளைப் பதிவதற்கு உலகிலுள்ள பிற மொழிகளைவிடத் தமிழ் எழுத்துமுறை மிகச் சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருக்கிறதென்ற உண்மையே அவரை அவ்வாறு வியப்படைய வைத்துள்ளது.
விண்வெளியில் சென்று ஆங்காங்குள்ள கோளங்கள், விண்மீன்களை நேரடியாகக் கண்டு வந்தவர்கள் போல் செய்திகளைச் சொல்வாருமுளர் என்றொரு புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. தமிழர்கள் அவ்வாறு விண்வெளிப் பயணங்கள் மேற்கொண்டிருக்கலாம் என்பதைக் காட்டும் தடயங்கள் எத்தனையோ உள்ளன. அப்படியானால் இன்றுபோல் கணிப்பொறியை ஒத்த ஒரு கருவியின் தேவைகளுக்காகத் தமிழ் எழுத்துகள் மாற்றப்பட்டுமிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
கழகக் காலத்திலேயே மதுரையில் மறை ஓசையும் வேள்விப் புகையும் நிரம்பியிருந்தன என்று மதுரைக் காஞ்சி போன்ற நூல்கள் கூறுகின்றன. சேரனின் வஞ்சியில் சிவன் கோயிலுள்ளிருந்து பார்ப்பனப் பூசாரி தலைநீட்டுவதைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. இது கோயிலுக்குள் சங்கதம் அப்போதே நுழைந்து விட்டதை ஐயத்திற்கிடமின்றிக் காட்டும் சான்றாகும். ஆட்சியிலும் நுழைந்திருந்ததா என்பது மட்டும் ஆய்வுக்குரியது.
தமிழகத்தில் புதியதாகத் தோன்றிய பல்லவ அரசுதான் முதன் முதலில் சங்கதத்தை ஆட்சி மொழியாக்கிற்று என்று தோன்றுகிறது. சங்கதப்படுத்தல் அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டு பற்றிய தெளிவில்லாத வரலாற்று ஆசிரியர்கள் பல்லவர்களைத் தமிழகத்தின் வெளியே, ஆந்திரத்திலிருந்தும் இன்னும் சிலர் அவர்களைப் பாரசீகத்திலிருந்தும் வரவழைக்கிறார்கள். சங்கதத்தை ஆட்சிமொழியாக அவர்கள் கையாண்டதாலேயே இவ்வித மயக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையில் சோழரோடு உறவுள்ள திரையர் எனப்படும் ஒரு மரபே தம் பெயரைப் பல்லவர் என மொழிபெயர்த்துக் கொண்டு தோன்றியுள்ளது. கழகக் காலத்திலேயே மூவேந்தரும் பார்ப்பனர் மேலாண்மையையும் அவர்களது வேள்வியையும் சங்கதத்தையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இறையிலியாக (முற்றூட்டாக) ஊர்களையும் நாடுகளையும் அளித்துச் சங்கதப்படுத்தலுக்கான விதைகளை ஊன்றினர். அதன் எதிர்விளைவே களப்பிரர் எழுச்சிக்கு உறுதுணையாக இருந்தது. சங்கதப்படுத்தல் அவர்களையும் தாக்கியது. அவர்கள் தமிழகத்துக்கு வெளியிலிருந்து பார்ப்பனர்களை இறக்குமதி செய்து உள்நாட்டுப் பார்ப்பனர்களிடமிருந்து முற்றூட்டுகளைப் பிடுங்கி அவர்களுக்கு அளித்தனர். எனவே அவர்கள் காலத்தில் மீண்டும் தலைதூக்கிய திரையர்கள் தம் பெயரைப் பல்லவர் (பல்லவம்-திரை-கடல் அலை, கடல்) என மொழி பெயர்த்துக் கொண்டனர். பல்லவம் என்ற சொல்லும் தமிழ் வேரிலிருந்து தோன்றியதே. பல் அலை போல் மேடுபள்ளங்களை உடையது. அலைப்பாங்கான அமைப்பை ஆங்கிலத்திலும் Indentations என்பர். (Dentis = பல்)
அன்றிலிருந்து புதிதாக மேனிலைக்கு வரும் ஒவ்வொரு குழுவும் சங்கதப்படுத்தலுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டது. முன்பு அதிகாரத்திலிருந்த குழுவினரின் ஏற்பைப் பெறுவதன் மூலம் மக்களின் ஏற்பைப் பெறுவதைத் தன் முதல் நோக்கமாகக் கொண்டது. பழைய குழுவினரிடம் மணவுறவு கொள்வதற்காகப் பெண் கேட்டது. மறுத்தபோது அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. அவர்கள் நாட்டை விட்டு அல்லது இருப்பிடத்தை விட்டுப் பெயரவேண்டியதாயிற்று. இந்நிகழ்முறைத் தொல்காப்பியத்தில் மகட்பாற் காஞ்சி எனப்பட்டது.
இப்படிப் புதிய மன்னர்கள் (விருந்தின் மன்னர்) பெண் கேட்பதும் அதற்கு உடன்படாது பழைய ஆட்சி மரபினர் இடம்பெயர்வதும் நம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதற்குச் சாதி வரலாறுகளில் நிறையச் சான்றுகள் உள்ளன. பூம்புகார்ச் சோழன் பெண் கேட்டான் என்பதற்காக அந்நகரையே தீக்கிரையாக்கி விட்டுத் தாம் வெளியேறி விட்டதாகச் செட்டியார்களின் வரலாறு கூறுகிறது.[12] கள்ளர்கள் பெண் கேட்டதால் தாங்கள் வெளியேறி விட்டதாக மதுரையிலுள்ள மூப்பனார்கள் எனும் சாதியினர் கூறிக்கொள்கின்றனர்.
ஆந்திர நாட்டில் முகம்மதியர்கள் படையெடுத்தபோது அங்குள்ள மக்களிடம் பெண்கள் கேட்டதாகவும் அதனால் தாங்கள் தமிழ் நாட்டுக்கு ஓடி வந்ததாகவும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கு பேசும் பல குழுக்களிடையில் கதைகள் வழங்குகின்றன. தமிழ் பேசும் மக்களிடையிலும் முகம்மதியர்களைப் பற்றிய இதுபோன்ற பல கதைகள் உள்ளன. இந்த நிகழ்முறையை, அதாவது முகம்மதியர்கள் பெண் கேட்டதை மட்டும் தனிமைப்படுத்தி, நம் குமுகத்திலுள்ள ஒரு நிகழ்முறையின் தொடர்ச்சியே இது என்பதைச் சுட்டாமல் சிலர் இந்நிகழ்ச்சிகளைப் பெரிதுபடுத்தி இரா.சே.ச.வின் (R.S.S.) மதவெறி பரப்பலுக்குத் துணை நிற்கிறார்கள். இந்துக்களின் காப்பாளர் எனப் புகழப்படும் விசயநகரத்தாரின் வழித்தோன்றல்களான நாயக்கர்களில் பலர் பெண் கேட்டுத் தமிழகத்திலுள்ள மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். திருமலை நாயக்கன் பேரில் இத்தகைய கதைகள் பல வழங்குகின்றன.[13] தம் பெண்களைக் கொள்ளுமாறு பழைய மரபினரைக் கட்டாயப்படுத்தவும் செய்துள்ளனர். இங்குள்ள சாதிகளில் பார்ப்பனர் தவிர்த்தோர் பிறசாதிப் பெண்ணை ஏற்றுக் கொள்வர். ஆனால் பார்ப்பனர் மட்டும் பெண் கொடுத்தாலும் எடுக்க மாட்டார். அதேபோல் கன்னட அரசர்களில் ஒருவன் ஒரு பாண்டியச் சிற்றரசனைப் பெண் எடுக்குமாறு வற்புத்தியதால் ஏற்பட்ட போரைக் குறிப்பிடுகிறது ஐவர் ராசாக்கள் கதை. இக்கதையைப் பற்றிக் கருத்துக் கூறிய பேரா.நா. வானமாமலை ஓர் இந்திய இயக்கமாக வளர்ந்த விசயநகரப் பேரரசின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுத்ததின் மூலம் பாண்டியச் சிற்றரசன் இந்தியத் தேசிய வளர்ச்சிக்கு இடையூறாக நின்றான் என்று கூறுகிறார். அவர் கூறும் “இந்தியத் தேசிய உணர்ச்சி” விசயநகரப் பேரரசர்களுக்கும் அல்லது அவர்களின் பேராளர்களாய்த் தமிழகம் வந்தவர்களுக்கும் கொஞ்சம் கூட இருந்ததாக வரலாறு காட்டவில்லை. மாறாக வல்லரசியர்களுக்கு வழக்கமான கொடுமையையும் பேராசையையுமே அவர்களது வரலாறு காட்டுகிறது. இக்கருத்துக் கூறலின் மூலம் வானமாலையாரின் தில்லித் தரகு மனப்பான்மையும் வெளிப்படுகிறது. இந்தியப் பொதுமையினரின் பிறவிக் குணங்களில் இதுவும் ஒன்று.
மகட்கொடை மறுப்பது என்பது புதிய அதிகாரத்துக்கு அடிபணிய மறுப்பதற்கு அடையாளமாக மக்கள் கைக்கொண்ட ஒரு குமுகியல் நடைமுறையாகும். காட்டிக் கொடுக்கும் கூட்டத்தார் தம் பெண்களைக் கட்டிக் கொடுப்பதன் மூலம் புதிய கூட்டங்களுக்கு ஒத்துப்போய்த் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். மறுத்தவர்கள் அரசியல், பொருளியல் மற்றும் குமுகியல் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாயினர். மேலிருந்த சாதியினர் தாழ்வடைவதற்கும் கீழிருந்தோர் உயர்நிலை அடைவதற்கம் இந்த அரசியல் நிகழ்வுகள் பெரும் பங்காற்றியுள்ளன. குமுக வரலாறு எழுதுவோர் இத்தகைய அரசியல் நிகழ்வுகளைச் சாதிகளின் வரலாற்றின் துணைகொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு மேல்நிலையாக்கம் என்று நம் மேற்சாதி அறிஞர்கள் கூறும் சங்கதப்படுத்தலின் விளைவாகத் தமிழில் பெருமளவு சங்கதக் கலப்பு ஏற்பட்டது. தரகுத் தன்மை கொண்டிருந்த அரசோடும் அதன் சமயமாக விருந்த சமணத்தோடும் முரண்பட்ட தமிழகத்து உடைமை வகுப்புகள் மக்களின் துணையைப் பெறுவதற்காகவும் தேசிய உணர்வுகளைத் தட்டியெழுப்பவும் தனித்தமிழ் இயக்கத்தைச் சிவனிய இயக்கத்தோடு இணைத்தன. முன்பு சுட்டிக்காட்டியது போல் வெள்ளையர் வரும் நேரத்திலும் இத்தகைய முயற்சியொன்று நடைபெற்றது. பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இறுதியாக அவ்வியக்கம் உயிர்பெற்றது. அதைத் தொடங்கி வைத்தவர்கள் பார்ப்பனரும் பிற மேற்சாதியினரும், குறிப்பாக வெள்ளாளர்களும் ஆவர். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஆதிக்கம் பெற்று உள்நாட்டுத் தமிழ் பேசும் பார்ப்பனர்களை இழிவாக மதித்த பிறமொழிப் பார்ப்பனர்களை எதிர்த்துச் சில தன்மானமுள்ள தமிழ்ப் பார்ப்பனர்கள் நடத்திய ஆய்வு முயற்சிகள் மறைமலையடிகள் போன்றோருக்குப் பெரும் தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் இருந்தன.
மறைமலையடிகளின் வரலாற்றியல் மற்றும் மெய்யியல் நோக்குகள் சில வகைகளில் பிற்போக்குடையவையே. பலதார மணம் ஆண்களுக்கு இன்றியமையாதது என்றது, வெள்ளாளரே உண்மையான தமிழர் என்றது, ஆவியுலகம் பற்றிய அவரது கருத்துகள் முதலியவை அவற்றில் சில. ஆனால் அவரிடம் காணப்பட்ட ஒரு முற்போக்குக் கூறு மேற்சாதியினரான பார்ப்பனரை எதிர்ப்பதற்காகக் கீழ்ச்சாதியினரோடு (தமிழர்கள், திராவிடர்கள் என்ற பெயரில்) தன்னை ஒன்று சேர்த்துக் கூறக் கூச்சப்படாமையே. நம் நாட்டுச் சாதியமைப்பில் பார்ப்பனருட்பட அனைவரிடமும் உள்ள ஓர் இயல்பு ஓர் இரட்டைத் தன்மையாகும். தமக்குக் கீழிருக்கும் சாதியினருடன் தோழமை கொள்வதை விடத் தமக்கு மேலிருக்கும் சாதியினருக்குக் குனிந்து கொடுப்பது மேல் என்பது ஒன்று, தமக்குக் கீழிருப்போரை அணைத்துச் சென்றாவது மேலிருப்போரை எதிர்ப்பது என்பது இன்னொன்று. இதில் முதல் வகையினரைப் பிற்போக்கர் என்றும் பின்னவரை முற்போக்காளர் என்றும் நாம் கொள்கிறோம். அந்த வகையில் தான் மறைமலையடிகளின் தனித்தமிழ் முயற்சியையும் பார்ப்பன எதிர்ப்பினையும் நாம் வரவேற்கிறோம். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தைக் குறை கூறுவோர், குறிப்பாக, ஈழத்துக் கைலாசபதியும் சிவத்தம்பியும் அவர் மீது சுமத்தும் குற்றச்சாட்டு அவர் உயர்சாதியான வெள்ளாளர் என்பதாகும். ஆனால் அவர்கள் இருவருமே தமிழகத்து வெள்ளாளரைவிடப் பல்மடங்கு சாதி வெறியும் சாதித் திமிரும் கொண்ட ஈழத்து (யாழ்ப்பாணத்து) வெள்ளாளர்களே. தான் சார்ந்திருந்த இயக்கமாகிய பொதுமைக் கட்சியைச் சேர்ந்த கீழ்ச்சாதித் தலைவர்களைக் கூடத் தன் வீட்டிலுள் நுழையவிடாதவரென்று பெயரெடுத்தவர் “தோழர்” கைலாசபதி. இவர்கள் மறைலையடிகளை எதிர்த்ததே வெள்ளாளக்கட்டு எனும் நிகழ்முறையின் ஒரு கூறான சங்கதம் போற்றுதல் என்பதைக் கைவிட்டு அதைத் தூற்றிப் பொதுமக்கள், அதாவது கீழ்ச்சாதியினர் மொழியான தமிழைப் போற்றுகிறாரே என்பதுதான். பெரும்பான்மை வெள்ளாளர் மற்றும் சிறுபான்மைப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்த இந்தியப் பொதுமைக் கட்சியின் தமிழகக் கிளை பெரியாரை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்தது ஏன்? கீழ்ச்சாதியினருக்குத் தேவை குமுகியல் உரிமையா வயிற்றுக்குக் கஞ்சியா என்று கேட்டு வயிற்றுப் போராட்டமான பொருளியல் போராட்டத்தைக் குமுகியல் போராட்டத்திலிருந்து பொதுமைக் கட்சியினர் பிரித்தது ஏன்? வெளிப்படையாக இல்லையாயினும் உள்ளுணர்விலாயினும் அவர்களுக்கிருந்த உயர்சாதி மனப்பான்மையே இதற்குக் காரணம்.
இவ்விரு வெள்ளான அறிஞர்களின் உள்ளக்கிடக்கையும் அவர்கள் தனித்தமிழ் இயக்கம் பற்றி எழுதியுள்ள ஆய்வுரைகளிலிருந்து தெளிவாய்ப் புலப்படுகிறது. எப்படி யென்றால் இருவரும் தம் “ஆய்வுரைகளை” மறைமலையடிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் இவ்வாய்வுரைகளை எழுதியபோது வலுப் பெற்றுவிட்ட தேநேயப் பாவாணர் கீழ்ச்சாதியினர். அவர் பள்ளச்சாதித் தாய்க்கும் மறச்சாதித் தந்தைக்கும் பிறந்தவர். பாவாணர் தான் பள்ளச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அவரது தந்தையின் உறவினர் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் நெல்லை மாவட்டத்து நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். நாட்டுப்புற மக்களின் பேச்சு மொழியிலிருந்தே அவர் தன் மொழி நடையை வகுத்துக் கொண்டார். இப்படித் தனித் தமிழ் இயக்கம் புதுப்பாதையில் நடைபோட்டபின் ஒன்று நன்றாக விளங்குகிறது. இலக்கியத் தமிழ் எனப்படுவதும் நாட்டுப்புறத் தமிழ் என்பதும் ஒன்றே என்ற உண்மைதான் அது. அத்துடன் நம் நாட்டில் தொகுக்கப்பட்ட கழக இலக்கியங்களிலும் அகராதிகளிலும் இல்லாத எத்தனையோ தனித்தமிழ்ச் சொற்கள் இன்றும் நாட்டுப்புறங்களில் உயிருடன் வாழ்ந்து வருகின்றன என்ற உண்மையும் இன்று புலப்பட்டு வருகிறது. நாட்டுப் புறங்களில் நிலவும் அனைத்துச் சொல் வழக்குகளையும் திரட்டினால் தமிழில் தோன்றியுள்ள எந்த அகராதிகளையும் போல் பன்மடங்கு பெரிய அகராதி ஒன்றை உருவாக்க முடியும் என்பதும் இன்று பலருக்கு விளங்கத் தொடங்கியுள்ளது.
கைலாசபதியும் சிவத்தம்பியும் தேவநேயப் பாவாணரைத் திறனாய்வு செய்யாமல் விட்டுவிட்டது இதனாலேயே. மறைமலை அடிகளின் செயற்பாடு பார்ப்பனர்களுக்கெதிராகவும் மேற்சாதியினருக்கெதிராகவும் கீழ்ச்சாதியினரைத் திரட்ட முயன்றதை அவர்களது மேற்சாதி உணர்வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாவாணரின் முயற்சிகள் அவரது சாதிப் பின்னணிக்குப் பொருத்தமானது என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்.
வெள்ளாளக்கட்டு மேற்கொள்வோர் செய்யும் செயல்களிலொன்று தம் சாதி மொழி வழக்குகளையும் நாட்டுப்புற மொழி வழக்குகளையும் இழிந்தவையாகக் கருதி அவற்றைக் கைவிட்டு மேற்சாதி மொழி வழக்கான கலப்புத் தமிழைக் கைக்கொள்வதாகும். மறைலை அடிகள் மேற்சாதியினராதலால் கீழ்ச்சாதி மக்களின் மொழி வழக்குகளை அறியாதவரானார். பாவாணர் சாதித்தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டவராயிருந்ததால் கீழ்ச்சாதி மக்களின் மொழியே தனித்தமிழ் என்பதை வெளிப்படையாக வலியுறுத்திக் கூறாமல் விட்டார். அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் அவரது ஆக்கமான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி முதல் மடல முன்னுரையில் கால்டுவெலார் அன்றே கண்டு சொன்ன இந்த உண்மையை மேற்கொள்ளுவதோடு விட்டுவிட்டார். எனவே முன்னவர் மேற்சாதியினரை நோக்கித் தன் இயக்கத்தை நடத்தினார்; பின்னவர் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரை நோக்கிச் செலுத்தினார். தனித்தமிழ் இயக்கத்தின் வகுப்பு நோக்கு (Class orientation) அறிந்து கொள்ளக் கடமைப்பட்டவர்கள் மார்க்சியர்களே. அவ்வடைமொழி தாங்கியோரோ இன்றுவரை பார்ப்னர்களுக்கு நாணயமாகப் பணியாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம் என்பது போன்ற குறிக்கோளை வகுத்துக்கொண்ட மேற்சாதியினரும் வெள்ளாளக்கட்டின் மீது மீளாக் காதல் கொண்ட கீழ்ச் சாதியினருமே.
உண்மையான பண்பாட்டுப்பணி மேற்கொள்ளவேண்டுமென்று கருதும் மார்க்சியர்கள் தனித்தமிழ் இயக்கத்தை ஆதரிப்பது மட்டுமல்ல, கீழ்ச்சாதி மக்களிடையிலிருக்கும் தனித்தமிழ்ச் சொற்களை இனம்கண்டு தாம் கற்றுக் கொள்வதுடன் அவற்றின் சிறப்புகளை அம்மக்களுக்கு விளக்கி அவற்றைத் திருத்தமுறப் பயன்படுத்தும் பயிற்சியையும் ஊட்டுவதேயாகும்.
தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றிக் கூறும்போது “சிவனியத்தையும் தமிழையும்” சேர்த்து வளர்ப்பவையாகக் கூறப்படும் சிவனிய மடங்களின் செயற்பாட்டை நாம் பகுத்தாய வேண்டும். இராசராசன் காலந்தொட்டு சிவனியம் முழுத் தரகுத்தன்மை பெற்றிருந்தது. கழுவேற்றலினாலும் கலகத்தாலும் துடைத்தெறிய முடியாத சமணத்தை எதிர்கொள்ள ஆயிரம் பார்ப்பனரைக் காசியிலிருந்து இறக்குமதி செய்து காவிரியின் மிக வளமுள்ள படுகை நிலங்களை அவர்களுக்கு முற்றூட்டாக வழங்கினான் இராசேந்திரன். பிற்காலச் சோழர் ஆட்சி தன் தொடக்கத்திலேயே சங்கதத்தை ஓட்டியே தோன்றியது. தமிழுணர்வைப் பயன்படுத்தி வளர்ந்த சோழப் போரரசு இவ்வாறு தமிழர்களைக் காட்டிக் கொடுத்தது. மக்களைக் கவரவும் சமணத்தை எதிர்கொள்ளவும்தான் இராசராசன் தேவாரத் திருமறைகளைத் தில்லைப் பார்ப்பனர்களிடமிருந்து மீட்க வேண்டிவந்தது. இவ்வாறு சிவனியம் தொடக்கத்திலிருந்தே இரட்டை உருத்தாங்கியே வந்தது.
சிவனிய மடங்கள் ஆற்றியுள்ள “தமிழ்ப் பணிக்”குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு உ.வே.சாமிநாதையர் வாழ்க்கையாகும். தன் வாழ்க்கை வரலாற்றில் தம் ஆசிரியர்களான மீனாட்சி சுந்தரனாரும் திருவாவடுதுறை ஆதினத் தலைவர் சுப்பிரமணியத் தேசிகரும் தாம் அறிந்திருந்தும் அவருக்குக் கழக இலக்கியங்களையும் ஐம்பெருங் காப்பியங்களையும் கற்பிக்கவில்லை. அவர்கள் அவற்றைப் படித்திருக்கவில்லை என்றே சாமிநாதர் கருதினார். சேலம் இராமசாமி முதலியார் என்பவர் கொடுத்த சிந்தாமணிப் படியே அவர் முதன்முதல் படித்த பழந்தமிழ் நூல். இந்நூலைப் பற்றித் தேசிகரிடம் சாமிநாதர் கூறிய போது மீனாட்சி சுந்தரனார் எழுதி வைத்திருந்த சீவகசிந்தாமணிப் படியை எடுத்து அவர் சாமிநாதரிடம் கொடுத்தார். மீனாட்சி சுந்தரனாரும் தேசிகரும் ஏன் அதனை முதலிலேயே கொடுக்கவில்லை? சமண இலக்கியமான சீவகசிந்தாமணிமையையும் சிவனியத்துக்குப் புறம்பானவையாகக் கருதப்பட்ட கழக இலக்கியங்களையும் பயில்வதும் பயிற்றுவிப்பதும் சிவனியத்துக்கு எதிரான செயல்களாகக் கொள்ளப்பட்டன. சீவக சிந்தாமணி பதிப்பிக்கப்பட்ட பிறகு அதற்குச் சிவனியர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு பெரிது. இவற்றுக்கு அஞ்சியே மீனாட்சி சுந்தரனாரும் சுப்பிரமணியத் தேசிகரும் தாம் அந்நூலைப் படித்ததையோ தம்மிடம் அந்நூற் சுவடி இருந்ததையோ மறைந்து வைத்திருந்தனர்.[14] சாமிநாதர் என்ற ஒருவர் தற்செயலாகப் பதிப்புத் துறையில் இறங்கியிராவிட்டால் இந்நூற்கள் என்று பதிப்பிக்கப்பட்டிருக்குமோ அறியோம்.
வைணவம் எனப்படும் மாலியம் தமிழோடு ஒன்றி நின்ற காலம் சிறிதேயாம். வடக்கில் உருவான பதின்தோற்றரவு (தசாவதார)த் திருமாலை விடத் தமிழ் நாட்டில் பிறந்த ஆழ்வார்களை அதிகமாகப் போற்றும் ஒரு குழலில் தான் மாலியத்தால் தமிழ் சிறிது ஆக்கம் பெற்றது. பின்னர் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அது தமிழையும் தமிழக மக்களையும் ஒடுக்கும், முற்றிலும் தரகுத்தன்மை பெற்ற, சமயமாகிவிட்டது. அதே சமயத்தில் சிவனியத்தைக் கைக்கொண்ட மேற்சாதியினரின் கொடுமையால் துயருற்ற கீழ்ச்சாதி மக்களிடையிலும் அதன் செல்வாக்குப் பரவியதற்கான தடயங்கள் சில காணப்படுகின்றன. நம் நாட்டிலுள்ள குமுக விந்தைகளில் இதுவொன்று. வடக்கிலுள்ள மார்வாரிகளால் புரக்கப்பட்டு இங்குள்ள பார்ப்பனர்களால் பேணப்படும் இந்து மத மீட்பியக்கம் இன்று மேற்சாதிப் பிற்போக்காளர்களாலும் ஒடுக்கப்படும் கீழ்ச்சாதியினராலும் ஒருங்கே தழுவப்படுவதைப் போன்றதொரு பிற்போக்குச் சூழல் அது.
சமயங்களுக்கும் தமிழ் மொழிக்குமுள்ள உறவு காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது. பெரும்பாலும் புதிய சமயங்கள் மேல்வகுப்பாரையே முதலில் ஈர்க்கின்றன. வள வாழ்வுக்கு மதமாற்றம் உதவும் என்பதற்காக அவர்களே முதலில் மதம் மாறுகின்றனர். தமக்கு எளிய, பெரும்பான்மை மக்களின் பின்னணி வேண்டும் என்ற சூழ்நிலையில் தான் அவர்கள் கீழ்ச்சாதி மக்களின் மொழியை மதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். ஆட்சி தம் கைகளுக்கு வந்நதும் மீண்டும் அயல் மொழியைப் பற்றிக் கொண்டு மக்களிலிருந்து அயற்படுகின்றனர். சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவர்கள் சமணர்கள்(“சாவக நோன்பிகள் அடிகளாதலின்......”- அடைக்கலக் காதை). சமணம் வெளிச் சமயம் என்பதைச் சுட்டிக்காட்டும் சான்றுகளை இளங்கோ அடிகளே காட்டுகிறார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எளிய மக்களின் இலக்கிய வடிவங்களைக் கையாண்டு தமிழ்த் தேசிய உணர்வுகளைக் காட்டுகிறார். பின்னர் எழுந்த சமண இலக்கியங்கள் அயல் அரசர்களின் கதைகளைக் கூறுவனவாகவே இருந்தன. புத்த சமய இலக்கியமான மணிமேகலை உள்நாட்டுக் கதையைக் கூறினாலும் ஆள்பெயர்கள், இடப்பெயர்களை மொழிபெயர்ப்பதில் பெரும்பங்காற்றியுள்ளது. கிறித்துவம் முதலில் தமிழை வளர்ப்பதில் பெருந் தொண்டாற்றினாலும் இன்று கிறித்தவர்கள் எனப்படும் வேதக்காரர்கள் அதிலும் குறிப்பாக, ஆங்கிலேயருடைய சமயமான சீர்திருத்த சபை வேதக்காரர்கள் தமிழையும் தமிழ் கற்றோரையும் இழிவாகக் கருதுவதில் பார்ப்பனரையும் மிஞ்சி நிற்கின்றனர். முகம்மதியர்கள் மதப் பரவலுக்காகச் சில தமிழ் நூல்களை எழுதி இருந்தாலும் “உருது பேசுபவனே உண்மை முசுலீம்” என்று இன்று முழங்குகின்றனர். 1967க்குப் பின், அரபு நாடுகளில் உருவான கல்லெண்ணெய்க் காசு நடமாட்டத்தின் பின் உருவானதே இந்நிலை. அத்துடன் சமய நிகழ்ச்சிகளில் அரபு மொழியே முழு ஆதிக்கம் செலுத்துகிறது.
பார்ப்பனர்களோடு தமக்கு ஏற்பட்ட பிணக்கில் வெற்றிபெறத் தமிழைத் தூக்கிப் பிடித்த சிவனியர்களான வெள்ளாளர்கள் இன்று அப்போட்டியில் பார்ப்பனர்களுடன் ஓர் உடன்பாடு ஏற்பட்டதும் மீண்டும் தமிழ் அழிப்புப் பணியில் இறங்கிவிட்டனர். இன்று இருவரும் சேர்ந்து எளிய மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களுடன் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டு விட்ட கீழ்ச்சாதியினரும் சேர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழ்மொழியின் இலக்கண இலக்கியச் சிறப்புகள் பற்றியோ சங்கதத்தின் சிறப்பின்மை பற்றியோ இங்கு ஆயப்படவில்லை. மக்கள் பேசும் அனைத்து மொழிகளும் சமமானவை; அவற்றை ஒன்றோடொன்று ஒப்புமை காட்டிப் பேசுவது இயலாது, சரியாகாது என்பது மொழிநூலாரின் முடிவு. மொழிகள் அவற்றைப் பேசும் மக்களின் பருப்பொருட் சூழல் அதாவது நிலச்சார்வு அதன் அடிப்படையாக உருவாகும் பொருளியல் வாழ்வு, பண்பாடு ஆகியவற்றிற்கேற்ப அமைகின்றன. அவ்வாழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் திறனுடையன என்பது அவர்கள் கொள்கை. ஆனால் தமிழையும் சங்கதத்தையும் பொறுத்தவரையில் ஓர் அடிப்படை வேறுபாடுள்ளது. தமிழ் மக்கள் பேசும் மொழி, சங்கதமோ மக்கள் பேசாத, மக்கள் பேசக் கூடாது என்ற நோக்கத்துடன் குமுகத்தை உறிஞ்சி வாழும் ஒர் சிறு ஒட்டுண்ணிக் கூட்டத்தின் மொழி. அதனாலேயே அக்கூட்டம் அதே வேலையாய் அக்குமுகத்தில் அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களையும் புதுமைகளையும் உட்செரித்துக் கொண்டு அம்மொழியை மக்கள் மொழிகளின்றும் உயர்ந்த தெய்வமொழி என்றும் தமிழையும் பிற மக்கள் மொழிகளையும் கீழ் (நீச) மொழிகளென்றும் சொல்லிச் வந்திருக்கின்றது. இதன் எதிரொலியாகத் தமிழ் மக்கள் தம் மொழியைச் சங்கதத்தினின்றும் உயர்ந்ததென்று வாதிட்டு வந்திருக்கின்றனர். அதன் வரலாறு சுவையுடையதாகும்.
தமிழைப் பழித்த குயக்கோடன் என்பானை நக்கீரர்,
“ஆரிய நன்று தமிழ்த் தெனவுரைத்த
காரியத்தாற் காலக் கோட் பட்டானைச் - சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா நாணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா”
என்று சாகப் பாடினார் என்று ஒரு வரலாறு. - 2ஆம் நூற்றாண்டு.
“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா என்னவும் படுமோ”
“தொண்டர் நாதனைத் தூ திடை விடுத்ததும் முதலை
யுண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”
இவை திருவிளையாடற் புராணத்திலுள்ள பாடல்கள். - 16ஆம் நூற்றாண்டு.
“மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
யிறையவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே
யறை கடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு[15] தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்”
இது சீகளாத்திப் புராணத் தமிழ் வாழ்த்து - 17 ஆம் நூற்றாண்டு.
“வடமொழியைப் பாணிணிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்
கடல்வரைப்பி லிதன்பெருமை யாவரே கணித்தறிவார்
“இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் மூனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரை தழிஇயினார் என்றாலிவ்
விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ”
என்று இணக்கம் கூறியவர் சிவஞான முனிவர் - 18ஆம் நூற்றாண்டு.
இவை யாவற்றிலும் தமிழின் தெய்வத்தன்மை கூறப்பட்டிருப்பது சங்கதம் தேவ மொழி என்பதன் மறுப்பாகவே.
19ஆம் நூற்றாண்டில் மனோன்மணியம் சுந்தரனார்,
“ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”
“சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே”
“பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே”
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”
“மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ”
என்று உணர்ச்சி வயப்பட்டுக் கூறியிருக்கிறார். [16]
மேலே சுட்டியவற்றுள் சுந்தரனாரைத் தவிர பிறரனைவரிலும் ஒருவர் இலக்கணச் சீர்மை பற்றிக் குறிப்பிடுவது தவிர (திருவிளையாடற் புராணம்)த் தமிழின் தெய்வத் தன்மையையே குறிப்பிடுகின்றனர். சுந்தரனார் மட்டும் மொழியின் பிற கூறுகள் பற்றியும் கூறியிருக்கிறார். ஆனால் எவரும் தமிழ் மொழி பொதுமக்களின் மொழி என்ற சிறப்பைக் கூறவில்லை. சுந்தரனார் சங்கதம் ஆரியர் என்ற கற்பனையான மக்கள் இனத்தின் மொழியாக இருந்ததென்ற தவறான அடிப்படையில் அதனை வழக்கொழிந்த மொழி எனக் குறிப்பிடுகிறார். இன்றும் தனித்தமிழ் பற்றிக் குறிப்பிடுவோர். குறிப்பாகச் சிவனியராகிய வெள்ளாளர்கள் தமிழின் தெய்வத் தன்மையை மட்டுமே குறிப்பிட்டுத் தமிழின் மக்கள் தழுவிய தன்மையை மறைக்கின்றனர்.
சங்கதம் மக்கள் மொழியாக இல்லாமையாலும் மக்களை மடைமையிலும் வரண மயக்கத்திலும் ஆழ்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நிலையான பிற்போக்குக் கூட்டத்திற்காக உருவாக்கப்பட்டு அவர்களால் பேணி வளர்க்கப்பட்ட ஒரு மொழியாகவும் இருப்பதால் அதிலுள்ள படைப்புகள் பொதுவாகத் தரத்தில் குறைந்தவையாகவே உள்ளன. அதில் உள்ள அறிவியல் நூல்கள் எனப்படுபவை அதனைப் பேச்சு மொழியாகக் கொண்ட மக்களின்மையால் வேறு மொழி பேசும் மக்களின் உழைப்பினால் உருவான அறிவியலிலிருந்து தோன்றியவையாக அல்லது அம்மக்கள் பேசும் மொழிகளிலுள்ள படைப்புகளின் மொழிபெயர்ப்பாகத் தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக ஆகம நூல் என்ற பெயரில் சங்கத்தில் இருக்கும் நூல்களில் கையாளப்பட்டிருக்கும் தொழில்நுட்பச் சொற்களனைத்தும் தமிழ்ச் சொற்கள் என்றும் அவை சங்கத மொழியில் இல்லாதவை என்றும் காட்டியிருக்கிறார் சுரேசுப் பிள்ளை எனும் ஆய்வாளர். அதேபோல் விந்தியத்துக்கு வடக்கே இல்லாத பரத நாட்டியத்தை விளக்கும் பரத நூலைக் காசுமீரத்திலிருந்த பரத முனிவர் என்பவர் இயற்றினார் என்பதும் பொருந்தப் பொய் கூற வேண்டும் என்ற கவலை கூட இல்லாத கூட்டத்தின் செல்வாக்கிலுள் பொதுத் தொடர்புக் கருவிகளெல்லாம் சிக்கிக் கிடப்பதன் விளைவே.
மொழி மக்கள் கருத்தறியும் ஒரு கருவியே என்ற ஒரு கருத்து அடிக்கடி கூறப்படுகிறது. இதை மார்க்சியர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்வோர் கூறுவது தான் கொடுமை. மொழி என்பது வெறும் கருத்தறியும் கருவி மட்டுமல்ல, இன்றைய நம் நாட்டில் உயர் பதவியும் வளமனையும் மகிழுந்தும் வைப்பாட்டியும் கூடத் தரும் வல்லமையுடையது. அத்தகைய பதவிகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டு மென்பதற்காகத்தான் பெற்றோர் எவ்வளவு செலவானாலும் கவலைப்படாமல் ஆங்கிலப் பள்ளிகளில் அவர்களைப் படிக்க வைக்கின்றனர். ஆங்கிலக் கல்வி பெரும் தொழிலாகிக் கல்விக் கூடங்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கும் தொழிற் கூடங்களாக மாறுவதற்குக் இதுதான் காரணம். இந்தியை ஆட்சி மொழியாக்கிவிட்டோம் என்று மார்தட்டும் இந்தி மாநிலங்களிலும் கூட இந்த ஆங்கிலப் “பித்தை” அகற்ற முடியாததற்குக் காரணம் மொழி வெறும் கருத்தறிகருவி என்பதை விட மேலும் பல பணிகளையும் செய்கிறது என்பதுதான். இந்தியாவை விட அதிக ஊதியம் பெறுவதற்காக வெளிநாடுகளில் வேலை தேட உதவும் என்ற எண்ணமே இந்த “ஆங்கிலப் பித்தின்” காரணம். அடிப்படுத்தப்பட்ட நாட்டை அடக்கியாளவும் ஒரு நாட்டு மக்களைத் தன்னுணர்வு, நாட்டுணர்வுகளை மங்க வைக்கவும் மொழி பயன்படுத்தப்படுகிறது. முன்னோரிடத்தில் பகுத்தறிவாளர்களின் மூடநம்பிக்கை பற்றிக் குறிப்பிடப்பட்டது. அவர்களிடத்திலுள்ள இன்னொரு மூடநம்பிக்கை மொழி கருத்தறிவிக்கும் ஒரு கருவியே என்பது. அதனாலேயே அவர்கள் மொழிக்கலப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மொழி ஒரு கருத்தறிவிக்கும் கருவி என்பது ஓர் அறிவியல் உண்மை எனப்படுகிறது. ஆனால் எந்த அறிவியல் உண்மையும் உறவியலானதே (Relative) என்பது மார்க்சிய நிலைப்பாடு. அத்துடன் மொழியின் மக்கள் சார்பு பற்றிய தெளிவும் மார்க்சியத்துக்கு உண்டு. பகுத்தறிவாளர்கள் உறவியல் உண்மைக்கும் அப்பட்ட உண்மைக்கும் (Absolute truth) வேறுபாடு தெரியாதவர்களாயிருந்தால் நம்மால் அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால் மார்க்சியர்கள் அப்படி இருப்பதேன்? அவர்களது உயர்சாதி மனப்பான்மை அல்லது வெள்ளாளக்கட்டு தானே காரணம்?
தமிழ் நாட்டு மக்களின் பேச்சு மொழி என்பதாலும் அம்மக்களின் தேசிய உணர்வுகளைக் கட்டிக்காத்து அவர்களது விடுதலைக்கு ஒரு கருவியாகும் தகுதி உடையது என்பதாலும் ஓர் ஒட்டுண்ணிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்களை ஏமாற்றவும் அடிமைப்படுத்தவும் இழிவுபடுத்தவும் கருவியாகப் பயன்பட்டு வந்திருப்பதும் எந்த மக்களாலும் என்றும் தாய்மொழியாகப் பேசப்படாததுமான சங்கதத்தை விடத் தமிழ் மேலானது என்பதே சரி. ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு மக்கள் கூட்டத்தினால் பேசப்படும் வேறெந்த மொழிக்குமில்லாத சிறப்புரிமை தமிழுக்குக் வேண்டாம்; சம உரிமையே போதும். ஆனால் சம உரிமை கட்டாயம் வேண்டும்.
மொழிகளில் உயர்ந்தவை தாழ்ந்தவை இல்லை என்பது அப்பட்டமான உண்மை அல்ல. அவ்வம்மொழி பேசும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கேற்பத் தம் பங்கை ஒவ்வொரு மொழியும் சிறப்பாக நிறைவேற்றுகின்றன என்பதே அதன் பொருள். ஆனால் அவ்வம்மொழி பேசும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கேற்ப மொழிகள் தம்முள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாகச் சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய உலகின் மூன்று பெருமொழிகளையும் எடுத்துக் கொள்வோம். சீனம் அசை நிலை (Isolating) மொழி என வகைப்படுத்தப்படும். ஒவ்வொரு கருத்தையும் தெரிவிப்பதற்கென்று தனித்தனி அசைகளாக எழுத்துகள் உள்ளன. அவற்றைத் தனித்தனியே அடுக்கி சொற்றொடர்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் சொல்லுக்கும் எழுத்துக்கும் வேறுபாடு கிடையாது. படவெழுத்து எனப்படும் வகை எழுத்தாகும் இது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு எழுத்தாக அவை மிகப்பெரும் எண்ணிக்கையுடையவை. அசைச் சொற்களிலிருந்து தனி எழுத்துகளாக இறுபடுமுன் (Abstraction) அம்மொழிக்கு எழுத்து வடிவம் அமைந்துவிட்டதே இதற்குக் காரணம் என்பர். மிகப்பழங்காலத்திலிருந்தே எழுத்து வடிவில் மாற்றமில்லாமல் இருந்து வந்திருக்கிறது இம்மொழி. இன்றைய தேவைகளுக்காக இவ்வெழுத்து வடிவங்களில் மாற்றம் எதுவும் செய்வது தம் பண்பாட்டுப் பெருமைக்கு இழுக்காகும் என்று கருதி அங்குள்ள பொதுமைக் கட்சி அரசு அவ்வெழுத்து முறையை அப்படியே பாதுகாக்கிறது. அவ்வரசின் அளவுக்கு மிஞ்சிய தேசிய உணர்வை சரியாகச் சொன்னால் அதன் தேசிய வெறியைக் காட்டுகிறது இது.
இதை மீறிச் சீனமொழியின் சிறப்பு என்னவென்பதும் கருதத்தக்கது. சீனம் மிகப்பரந்து விரிந்த நாடு. உலகில் மிகப் பெரிய மக்கள் தொகையுள்ள நாடு. இப்பெரும் நிலப்பரப்பிலும் மக்கள் குவிவிலும் பல திசைமொழி வழக்குகள் உண்டு. ஆனால் சீன எழுத்துகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளை உணர்த்துவதால் ஒரே எழுத்து வெவ்வேறு திசைமொழி பேசும் மக்களால் அவ்வெழுத்து குறிப்பிடும் சொல்லுக்குரிய ஒலியால் படிக்கப்படுகிறது. எனவே மொழிச் சிக்கல் என்பது எழுத்து வடிவில் உருவாக வாய்ப்பில்லை. ஒலி வடிவில் தான் சிக்கல் வர வாய்ப்புள்ளது. ஓர் உலக மொழியை அமைக்க சீன மொழியின் எழுத்துமுறை ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.
அடுத்து தமிழை எடுத்துக் கொள்வோம். சொல்லமைப்பு வகையில் தமிழைக் கொளுவுநிலை மொழி (Agglutinative) என்பர். இதில் சொற்களிலுள்ள அசைகள் ஒன்றோடொன்று கொளுவிக் கொண்டு பிரித்தறிய முடியாமல் இருக்கும். எழுத்துகள் அசைகளாக இல்லாமல் அசைகளிலிருந்து இறுத்தெடுக்கப்பட்ட ஒலி வடிவங்களைக் கொண்டிருப்பது தமிழ். இவ்வாறு இறுத்தெடுக்கப்பட்ட ஒலியன்கள் (ஒலி வடிவங்கள்) உயிர் எழுத்துகளெனவும் மெய்யெழுத்துகளெனவும் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர், மெய் வேறுபாடு இந்திய மொழிகள் அனைத்திலும் இருந்தாலும் தமிழில் போல் பிற மொழிகளில் அவ்வளவு முழுமையாய் இல்லை. “ரு” போன்ற உயிரல்லா எழுத்துகளும் பிற மொழிகளில் உயிரெழுத்து வரிசையில் இடம் பெற்றுள்ளன. உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் சேர்ந்த தொகுதியைக் குறுங்கணக்கு (Alphabet) என்பர். அத்துடன் உயிர்மெய் எழுத்துகளும் சேர்ந்தால் அதனை நெடுங்கணக்கு என்பர். தமிழ் நெடுங்கணக்கு மொழி. உயிர் மெய் எழுத்துகள் தவிர கூட்டெழுத்துகள் என்று ஒரு வகையும் உண்டு. தமிழில் அவை அண்மைக் காலத்தில் தான் வழக்கொழிந்தன. இதன் மூலம் தமிழின் நெடுங்கணக்கு எளிமையானது. மலையாளத்தில் கூட்டெழுத்துகளின் எண்ணிக்கைச் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டது.
கிரேக்கம், இலத்தீன், பிற ஐரோப்பிய மொழிகள் சொல்லமைப்பில் கொளுவு நிலை மொழிகளாகும். எழுத்தமைப்பில் உயிர்மெய் எழுத்துகள் இல்லாத குறுங்கணக்கு மொழிகளாகும். எழுத்துகளின் எண்ணிக்கை இதன் மூலம் குறைகிறது.
தமிழை ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுக் குறை சொல்வது இன்று கற்றோரிடையில் பரவலாகக் காணப்படும் ஒரு போக்காகும். தமிழில் மாற்றமே கூடாது என்று அதனை மறுப்பாரும் உள்ளனர். ஆனால் தமிழ் என்றும் மாறாமல் நிலையாக அல்லது முடங்கிக் கிடக்கவில்லை. அம்மொழி வாழ்ந்து வந்திருக்கும் பொருளியல், குமுகவியல், அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப அது மாற்றங்களை ஏற்று வந்துள்ளது. அதே வேளையில் வெளியாட்களால் வலிந்து புகுத்தப்பட்ட மாற்றங்களை அது தொடர்ந்து உதறி எறிந்து கொண்டே வந்திருக்கிறது. அவ்வாறு அது இன்றும் உள்ளே ஏற்றுக் கொள்ள மறுப்பது ஸ, ஹ, ஷ, ஜ எனும் கிரந்த எழுத்துகளையே. இவ்வெழுத்துகள் மூலம் பல தமிழ்ச் சொற்கள் வெளியேற்றப்பட்டுப் பிறமொழிச் சொற்கள் புகுத்தப்பட இடமேற்பட்டது; பல தமிழ்ச் சொற்கள் சங்கதச் சொற்கள் போல் திரிக்கப்பட்டன. எ-டு வேட்டி g வேஷ்டி; சோடி g ஜோடி. இத்தகைய மாற்றங்களை எதிர்த்து நிற்பது தேவையாகும். ஏனென்றால் தமிழகத்தின் தனிப்பட்ட சூழ்நிலைகள், அதாவது மேற்சாதியினர் எனும் தரகு வகுப்பினர் இம்மக்களின் தனித்தன்மையை அழித்து வெளி ஆற்றல்களுக்கு அடிமையாக்குவதன் மூலம் தொடர்ந்தும் அம்மக்களைத் தங்கள் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதேபோல் இம்மக்களை அடிமைப்படுத்த அல்லது அவ்வடிமை நிலையைத் தொடர விரும்பும் வெளியாற்றல்களுக்கும் ஆதாயம் உண்டு. உண்மையிலேயே மொழியில் அத்தகைய மாற்றங்கள் தேவைப்பட்டால் தமிழக மக்கள் அரசியல், பொருளியல், குமுகியல் நிலைகளில் சார்பு நிலை இன்றி முழு விடுதலை பெற்ற ஒரு நிலைமையில் தான் அதைச் செய்ய வேண்டும்.
குறிப்பாக தமிழில் சில குறிப்பிட்ட ஒலிகள் இன்னும் குறிப்பாக சங்கதம், ஆங்கிலம் போன்ற மொழிச் சொற்களையும் பெயர்களையும் ஒலிபெயர்த்தெழுத (Transliterate)ப் பொருத்தமான எழுத்துகள் இல்லை என்பது தமிழ் மீது கூறப்படும் ஒரு குறைபாடு. உலகிலுள்ள எந்த மொழியும் எல்லா ஒலிகளையும் கொண்டிருக்கவில்லை. பிறமொழிச் சொற்களையும் பெயர்களையும் ஒலிபெயர்ப்புச் செய்யும் போது ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளும் அம்மொழி பேசும் மக்களின் நாப்பழக்கத்துக்கிசைய மாற்றவே செய்கின்றன. தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களை ஆங்கிலேயர் எவ்வாறு அடையாளம் தெரியாமல் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். மதுரையை Majura என்றும் தஞ்சாவூரைத் தாஞ்சூர் என்றும் யாழ்ப்பாணத்தை Jafna என்றும் மட்டக்கிளப்பை Baticola என்றும் சிதைத்து வைத்துள்ளனர். தமிழும் பிறமொழிச் சொற்களையும் பெயர்களையும் அவ்வாறு இம்மக்களின் நாப்பழக்கத்திற்கும் மொழிமரபுக்கும் ஏற்ப மாற்றியே வழங்கி வந்துள்ளனர். இலட்சுமணன் என்பதை இலக்குவன் என்றும் அயோவனர் என்பதை யவனர் என்றும் John என்பதை யோவான் என்றும் இவ்வாறு நம் மொழிக்கும் ஒரு மரபு உண்டு.[17] பிற மொழியை அறியாத நாட்டுப்புற மக்களின் நாவில் தான் அச்சொற்கள் அத்தகைய இயல்பான மாற்றத்தைப் பெறுகின்றன. ஆங்கிலேயரின் கீழ் ஏற்பட்ட அடிமைத் தனத்தின் விளைவாக அடிமைப்பணி செய்யவென்று தொடங்கி இன்று அனைத்து அடிமைத் தனங்களுக்கும் அடையாளமாக விளங்கும் ஆங்கிலங்கற்ற அடிமைகள் அவ்வாறு கல்லாத நாட்டுப்புற மக்கள் மற்றும் உழைக்கும் மக்களை இழிந்தவராகக் கருதித் தம்மையும் தம் பிறமொழியறிவையும் உயர்வாகக் கருதிக் கொள்வதாலும் அடிமைக்கே இயல்பாகத் தன் மீது ஏற்படும் தாழ்வுணர்ச்சியாலும் தம் தாய்மொழிக்கு மட்டும் பிறமொழிகளுக்கில்லாத குறைபாடுகள் இருப்பதாகக் கருதி அதைச் “சீர்செய்ய” முற்படுகிறார்கள்.
ஆங்கிலத்தில் ஒலிக் குறைபாடுகள் மட்டுமல்ல ஒலிப்புக் குறைபாடுகளும் நிறைய உண்டு. ஆங்கிலம் கற்போருக்குப் பெரும் இடையூறாயிருப்பது இதுவே. இந்தக் குறையை ஆங்கில அறிஞர்களில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அறிஞர் பெர்னாட்சா இந்த ஒலிப்புக் குறைபாடுகள் இல்லாத ஒரு மொழியை உருவாக்குவதற்கென்று ஓர் அறக்கட்டளையையே நிறுவியுள்ளார். இவ்வளவு இருந்தும் ஆங்கிலம் இன்று கொடிகட்டிப் பறப்பதேன்? இரண்டு காரணங்கள். ஒன்று அம்மொழி பேசும் மக்களால் அல்லது அதன் இயல்புடைய மொழிகள் பேசும் மக்களால் உருவாக்கப்பட்ட இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறியீடுகள். இன்னொன்று அம்மொழி பேசும் மக்களிடம் உலகத்தின் பெரும்பகுதி அரசியலில் அடிமைப்பட்டுக் கிடந்ததும் இன்று வரை பொருளியலில் அடிமைப்பட்டுக் கிடப்பதும்.
பொருளியலிலும் அரசியலிலும் முழு விடுதலை பெற்று நிற்கும் நாடுகள் இன்று ஆங்கிலத்தின் சார்பின்றியே தம் பொருளியல், அரசியல், அறிவியல் தேவைகளுக்கேற்பத் தம் மொழிகளை வளர்த்துள்ளன. எ-டு சப்பான், சோவியத்து முதலியன. எனவே மொழியில் உண்மையான வளர்ச்சியும் அடிமைப்படுத்தாத மாற்றமும் செய்ய வேண்டுமானால் முதலில் அம்மொழி பேசும் மக்கள் அரசியலிலும் பொருளியலிலும் அறிவியலிலும் தன்னுரிமையுடையோராக, தற்சார்புடையோராக மாற வேண்டும். தமிழை மேம்படுத்த மனமார விழைவோர் அத்தகைய தன்னுரிமை, தற்சார்புடைமைக்குரிய முயற்சிகளில் இறங்குவது தான் முறை. தமிழில் நாம் விரும்பும் மாற்றங்கள் அல்லது வளர்ச்சிகள் ஏற்படாமைக்கு காரணம் அதிலுள்ள “குறைபாடுகள்” அல்ல, தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளியல் அடிமைத்தனங்களே.
அடிக்குறிப்புகள்:
[1] தனித்தமிழ் பற்றிய நம் நாட்டு “மார்க்சியரின் கண்ணோட்டம் அவர்களது மக்கட்பகைப் போக்கைத் தெள்ளென விளக்கும். அவர்களது நிலைப்பாடு “தூய பார்ப்பனிய மேற்சாதிச் சார்பானது. மறைமலையடிகள் பார்ப்பன மேலாண்மையை எதிர்த்த ஒரு மேற்சாதி அறிஞர் என்ற உண்மையைக் காரணமாகக் காட்டிக் கீழ்ச்சாதி மக்களின் மொழியை நோக்கிய அவரது முயற்சியைக் கொச்சைப்படுத்தினர். தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி என்ற சிறுநூலில் பேரா.கா. சிவத்தம்பி தனித்தமிழ் இயக்கத்தை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்தியுள்ளார். பாவாணரின் முயற்சிகளைக் காட்டினால் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று தெரிந்தே நூல் எழுதிய காலத்தில் பெரும் வலிமை பெற்றுவிட்ட அவரது வினைப்பாடுகளைக் காட்டாமல் மறைமலை அடிகளோடு தன் நூலை முடித்துக்கொண்டார். இது குறித்து இந்நூல் ஆசிரியர் 1982ஆம் ஆண்டில் பொதுமை இதழில் “கா. சிவத்தம்பியின் அரசியல் பின்னணி” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையைப் பார்க்க.
[2] வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், Orgin and spread of Tamils, P.17
[3] D.N. Jha, Ancient India – An Introductory Note.
[4] மாழையியல் - உலோகவியல்
[5] வி.எசு.வி. இராகவன், ஏரோடோட்டசு.
[6] சியார்சுத் தாம்சன், Athens and Aeschille
[7] Joseph Camphell, Masks of Gods-Primitive Mythology
[8] அ. கோந்திரத்தோவ், Soonds and Signs
[9] மேலே சுட்டப்பட்ட தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாயவின் நூல்.
[10] Scandinarian Institute of Asian Studies.
[11] S.R.Rao.
[12] எட்கார் தர்சுட்டன். Castes and Tribes of Southern India. இந்நிகழ்ச்சி மணிமேகலையின் கதையை ஒத்திருக்கிறது. கோவலனாகிய வாணிகனின் மகளான மணிமேகலையின் கதையை கூலவாணிகனான சாத்தனார் கூறியிருப்பது இக்கருத்துக்கு அரண் செய்கிறது.
[13] இராசபாளையம் பகுதியில் வாழும் சாலியர் எனப்படும் தாழ்த்தப்பட்டோரிடையில் இத்தகைய கதையொன்று வழங்குகிறது.
[14] இ.மு. சுப்பிரமணிய பிள்ளை. வள்ளுவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் - ஐந்தாம் பகுதி
[15] உறழ்தரு - மாறுபடுகின்ற
[16] இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் செய்யுட்கள் வடமொழி வரலாறு எனும் நூலில் பாவாணர் மேற்கொண்டவை.
[17] John என்ற சொல் யூதமொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அம்மொழியில் (ஈபுரூ மொழி என்று இதனை அழைப்பர்) யோச்சனான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் இவ்வடிவம் பெற்றுள்ளது. உருசிய மொழியில் இச்சொல் இவான் என்ற வடிவம் பெற்றுள்ளது. ஈபுரூ உருசியன் ஆகிய மொழிகளில் J ஒலி கிடையாது.

0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக