29.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 19. மதமாற்றமும் சாதியொழிப்பும்

முகம்மதிய, கிறித்துவ மதங்களுக்கு மாறியது ஒரு புரட்சிகரமான, முற்போக்கான நடவடிக்கை என குணா போன்ற மார்க்சியர்கள் கருதுகிறார்கள். இந்தக் கருத்து சரிதானா என்று பார்ப்போம்.

மதமாற்றம் என்று சொல்லும்போது வெளியிலிருந்து உள்ளே புகுந்த சமயங்களுக்கு மாறுவதை மட்டுமின்றி உள்நாட்டில் தோன்றிப் பரவிய மதங்களையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும்.

நம் சிந்தனைக்கு எட்டியவரை புத்த, சமண சமயங்கள் தாம் முதலில் வெளியிலிருந்து உள்ளே நுழைந்த மதங்கள். அவை முதலில் வாணிக வகுப்பினரிடையில் செல்வாக்குப் பெற்றன. வாணிகர்கள் சாதி, வகுப்பு(வரண) வேறுபாடுகளை முதலில் எதிர்த்தனர். பின்னர் வரண வரிசையில் தமக்கு ஏற்ற இடம் கிடைத்ததாக நினைத்த நிலையில் மீண்டும் வரண முறையை ஏற்றுக் கொண்டனர். அது மட்டுமல்ல சமணம் தமிழக வாணிகத்தை வட இந்திய வாணிகர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது.

சமணர்களும் புத்தர்களும் சேர, சோழ பாண்டிய அரசுகளின் அழிவுக்குக் காரணமாக அமைந்தனர். மதுரையில் கண்ணகி மூலமாக நடைபெற்ற கலகத்துக்குச் சமண புத்தர்களின் கூட்டு பின்னணியில் இருந்தது. பூம்புகாரை அழித்த மணிமேகலையின் செயலில் இலங்கை மன்னன் கயவாகுவின் துணை இருந்தது. இந்த நம் முடிவுக்கு வலிமையான சான்றுகள் உள்ளன. இவ்வாறு வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தமிழகத்தில் எதிரிகள் தாக்குவதற்குத் தோதாகத் தமிழகத்தின் தற்காப்புணர்வை மங்கச் செய்வதில் இவ்விரண்டு வெளிச் சமயங்களும் உதவின.

சாதிகளை எதிர்ப்பன போல் தோன்றிய இச்சமயங்களினால் தமிழகத்தில் புதிய சாதிகளும் தோன்றின. சமணர்கள் வட தமிழகத்தில் நயினார்கள் என்று தனிச் சாதியினராக வாழ்கின்றனர். தென் தமிழகத்தில் நாடார்களில் ஒரு பிரிவினருக்கு முக்கந்தர் என்ற பட்டம் இருக்கிறது. இது புத்த சமயத்திலுள்ள தலைவன் பட்டம் என்று நா.பாலரசு என்ற ஓர் அறிஞர் கூறுகிறார். இதுபோல் எங்கெங்கு இவ்விரு சமயங்களினால் தோன்றிய சாதிப் பிரிவுகள் நிலவுகின்றன என்பதைக் கண்டறிவது நன்று.

அடுத்துத் தோன்றியது சிவனியம். இதுவும் சாதி வேறுபாடற்ற வழிபாட்டு முறையைப் புகுத்தியே தோன்றியது. ஆனால் அதன் நிழலில் தோன்றிய சோழப் பேரரசு நிலைபெற்றதும் பழைய சாதி முறையை இறுக்கியதோடல்லாமல் மனுச் சட்டத்தைப் புகுத்தவும் முயன்றது. இச்சமயத்தின் மூலம் பல சாதிகளில் சிவனிய உட்பிரிவுகள் தோன்றின. சோழப் பேரரசின் காலத்தில் ஏற்பட்ட பன்முகப் பொருளியல் நடைமுறைகளில் குறிப்பாக கோயில்களில் உண்டான புதிய தொழிற் சாதிகளுக்கு மனுச் சட்ட அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அத்துடன் அதிலிருந்து சிவனிய வேளாளர்கள் என்ற வலிமை வாய்ந்த சாதியினர் உருவாயினர். இவர்களே வெள்ளாளக்கட்டு என்று நாம் விரித்துரைக்கும் பண்பாட்டுக் கூறுகளில் பெரும்பாலானவற்றைச் சமணர்களிடமிருந்து கடன் பெற்றுக் கொண்டதுடன் பார்ப்பனர்களுடன் சேர்ந்து ஆகம வழிபாட்டு முறையையும் வகுத்து வெள்ளாளக்கட்டை முழுமைப்படுத்தினர். இவ்வெள்ளாளர்கள் சமணத்துக்கு மாறி அதன் மூலம் ஆதாயம் அடைந்து பின்னர் அம்மதத்துக்கு மக்களிடையில் எதிர்ப்பு தோன்றிய சூழ்நிலையில் திருநாவுக்கரசரைப் பின்பற்றிச் சிவனியத்துக்கு மாறி அதன் மூலம் அவ்வாதாயத்தை நிலைநிறுத்திக் கொண்டவர்கள்.

அடுத்துத் தமிழ்நாட்டினுள் நுழைந்தது திருமாலியம். திருமாலியம் கழகக் காலத்திலேயே தமிழகத்தில் முழு வளர்ச்சி பெற்றிருந்தது சிலப்பதிகாரத்திலிருந்தே தெரிகிறது. இருப்பினும் அது வடக்கிலுள்ள மாலியத்திலிருந்து சில மாற்றங்களுடன் காணப்படுகிறது. நப்பின்னை எனும் கண்ணனின் காதலி, கண்ணன் ஏறு தழுவி ஆயர் குலப் பெண்களை மணந்து கொண்டது முதலியன வடக்கில் இல்லாதவை. இவை நாம் பிறிதோரிடத்தில் கூறியுள்ளதுபோல் குமரிக் கண்டத்தில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோன் செயல்களிலிருந்து பெறப்பட்டவையாய் இருக்கும்.[1]

புத்த சமணத்தை எதிர்த்துச் சிவனியம் எழுச்சியுற்ற அதே காலகட்டமான பல்லவர் காலத்தில் மாலியமும் எழுச்சியுற்றது. ஆழ்வார்களும் ஆண்டாளும் இக்காலத்திலேயே வாழ்ந்து சமயப் பணி புரிந்தனர். சாதி வேறுபாடுகளை மீறிய ஒற்றுமையுடன் அக்காலச் சிவனியர்கள் போலவே வாழ்ந்தனர்.

சோழப் பேரரசு காலத்தில் சிவனியத்துக்கு அரசின் ஆதரவு கிடைத்தது. சிவனியருக்கும் மாலியருக்கும் திருமண உறவுகள் இக்காலத்தில் பல சாதியினரிடையில் போல் நடைபெற்றாலும் இரு சமயத்தினரும் மற்றச் சமயத்தைச் சேர்ந்த மருமகளை அவளது சமய நம்பிக்கைக்காகக் கொடுமைப்படுத்திய நிகழ்ச்சிகளுக்குச் சான்றுகள் உள்ளன.

சோழப் பேரரசின் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை வலிமை பெற்றுவிட்டது. மக்களிடையில் பெரும் பிளவுகளும், பிணக்குகளும் தோன்றி வளர்ந்தன. மனுச் சட்டத்தைச் செயற்படுத்த முயன்றதால் சாதியமைப்பின் மீதும் சோழப் பேரரசு மீதும் மக்களுக்கு வெறுப்பேற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் இராமானுசர் என்ற மாலியப் பெரியார் கீழ்ச்சாதியினருக்கு எல்லாம் பூணூல் அணிவித்துப் பார்ப்பனராகச் சாதி மாற்றம் செய்து கொண்டிருந்தார். இராமானுசருக்கு ஏதேனும் அரசியற் பின்னணி இருந்திருக்க வேண்டும். சோழர்களின் குலப் பகைவர்களும் மாலியர்களுமான போசாளர்களின் பின்னணி அவருக்கு இருந்திருக்க வேண்டும். இதனால் தானோ என்னவோ சோழ மன்னன்[2] இராமானுசரை நாடு கடத்தினான்.

இப்படி இராமானுசரால் மதமாற்றம் சாதிமாற்றம் பெற்றவர்களை பழைய மாலியப் பார்ப்பனர்கள் ஏற்கவில்லை. பின்னர் வந்த வேதாந்த தேசிகர் எனும் மாலியப் பார்ப்பனத் தலைவர் திருமாலை வழிபட்டு வீடு பெற வேண்டுமாயின் பார்ப்பனப் பிறவி எடுக்க வேண்டும் என்று கோட்பாட்டு வடிவில் தடை யேற்படுத்தினார். இந்தச் சாதி மாற்றத்தால் மாலியப் பார்ப்பனரில் ஒரு புதிய பிரிவு ஏற்பட்டதுடன் மதம் மாறிய பிற சாதியினரிடையிலும் மாலியப் பிரிவுகள் தோன்றின.

மத மாற்றத்தின் விளைவுகள் இத்துடன் நிற்கவில்லை. போசாளர்கள், நாயக்கர்கள் என்று மாலியம் தழுவிய வெளிநாட்டினர் படையெடுத்தபோது உள் நாட்டிலுள்ள மாலியர்கள் அவர்களுக்கு உதவி செய்து பல நலன்களைப் பெற்றனர். கோனார்கள் எனப்படும் ஆயர்கள் இவ்வாறு பயன் பெற்ற சாதியினரில் முதன்மை யானவர்களாவர்.

வீர சிவனியம் எனும் பசவன் சமயத்தைத் தழுவியோர் கன்னடியப் படையெடுப்பின்போது அதேபோல் கன்னடியர்களுக்கு உதவி நலன்களைப் பெற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை.

அடுத்து வருவது முகம்மதியம். கி.பி. 1311இல் மாலிக் காபூர் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலைநகரான உறையூருக்கருகிலிருந்த பீர்தூலைத் தாக்கினான். போரின் நடுவில் பாண்டியனின் படையிலிருந்து 20,000 முகம்மதியர்கள் திடீரென்று எதிரி மாலிக் காபூர் பக்கம் சேர்ந்து கொண்டனர். இந்த முகம்மதியர்கள் துருக்கியிலிருந்து வந்தவர்களென்று வரலாற்றாசியரியர்கள் கருதுகின்றனர்.[3] அக்கால கட்டத்தில் மதமாற்றம் நிகழ்ந்திருக்குமென்று அவர்களால் நம்ப முடியவில்லை.

ஆனால் மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இம்மதமாற்றம் கடற்கரையின் மூலம் நடைபெற்றிருக்கிறது. ஐரோப்பியர்கள் கடல் வழிகளைக் கைப்பற்றுவது வரை உலகக் கடல் வாணிகம் அராபியர்களிடமே இருந்தது. அவ்வாறு ஏற்பட்ட தொடர்பால் தமிழக கடற்கரை வாணிகர்கள் மதம் மாறி மரக்கலராயர்கள் (மரக்காயர்கள்) ஆனார்கள்.

இந்தியாவுக்கு, ஏன் உலகம் முழுவதற்கும் போர்க் குதிரைகளை வழங்கியோர் அராபியரே. உலகப் பொருளியலைக் குறைந்தது பத்து நூற்றாண்டுக் காலம் கையில் வைத்திருந்த அராபியர் செய்த விளைப்புத் துறை இரண்டே டூஒன்று குதிரைகளை வளர்ப்பது மற்றொன்று ஆண்களை நலம் பிடித்து (காயடித்து) அடிமைகளாக விற்பது. அந்த வகையில் குதிரைகளைப் பழக்கவும் பேணவும் உள் நாட்டுக் குதிரைப் படை வீரர்களின் தொடர்பு அராபியர்களுக்கு ஏற்பட்டது. குதிரை வீரர்களை இராவுத்தர் என அழைப்பது தமிழ் வழக்கு. குதிரையைப் பேணுவதில் தலையாய பணி அதன் உடலைத் தேய்த்துவிடுவதே. தேய்த்தலுக்கு இராவுதல் என்பது ஒரு சொல். எனவே தான் குதிரை வீரர்களுக்கு இராவுத்தர் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். அராபியக் குதிரை வாணிகர்களால் மத மாற்றம் பெற்ற குதிரை வீரர்களே இன்றைய இராவுத்தர்கள்.

காலங் காலமாக தமிழகத்தின் புகழ் பெற்ற ஏற்றுமதிப் பொருள் சவளி[4] (துணி) யாகும். எனவே கடல் வாணிகர்களாகிய அரேபியர்களுக்கு நெசவாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. நெசவாளர்களில் பெரும்பான்மையினரான சாலியப் பள்ளர் எனும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மதம் மாற்றப்பட்டு லெப்பைகள் ஆனார்கள். லெப்பைகள் என்பதற்குக் கடவுளின் மக்கள் எனப் பொருளாம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கடவுளின் மக்கள் எனப் பொருள்படும் அரிசனங்கள் என்ற பெயரை வைத்த காந்தியாரின் செயலோடு இதை ஒப்பு நோக்கத் தோன்றுகிறது.

இந்தப் பின்னணியில்தான் மாலிக் காபூரின் பக்கம் திரும்பிய பாண்டியப் படையிலிருந்த முகமம்தியர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். பீரங்கிகளை இயக்குவதற்கென்று அயல்நாட்டினர் அமர்த்தப்பட்டிருந்தாலும் அது இத்தனை எண்ணிக்கையிலிருந்திருக்காது.

முகம்மதிய மத மாற்றம் ஒரு புரட்சிகரமான நிகழ்வு என்று குணா போன்ற மார்க்சியர்களால் கருதப்படுகிறது என்று இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறினோம். வாணிகர்களும் செய்தொழில் வகுப்பினரும் வலங்கையினரால் இழிவுபடுத்தப் பட்டமையை நாம் முன்பே கூறியுள்ளோம். அதன் எதிரொலியாக இந்தத் தொடக்க கால மத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். இதன் மூலம் உள்நாட்டுப் பிற சாதியினருக்குச் சிக்கல் எதுவும் தோன்ற வழியில்லை. ஏனென்றால் வாணிகமும். செய்தொழிலும் மேற்சாதியினரின் கைகளிலில்லை. வேளாண்மையே அவர்களது துறை. அதில் பணிபுரியும் கீழ்ச்சாதியினரை மதம் மாற்றிச் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்தால் தான் சிக்கல் எழும்.

ஆனால் மத மாற்றத்தினால் பின்னாளில் கூடப் பெரிய சிக்கல் எதுவும் ஏற்பட்டுவிடல்லை.

முகம்மதியப் படையெடுப்புகளின் போது உள்நாட்டு அரசர்களிடமிருந்த மேற்சாதியினர் வழக்கம் போல் வெற்றி பெற்ற முகம்மதியரிடம் மதம் மாறி ஊழியம் மேற்கொண்டனர். விசயநகரப் பேரரசை நிறுவிய அரிகரன் - புக்கன் போன்று பெருமளவில் மேற்சாதி “இந்து”க்கள் முகம்மதிய அரசர்களிடம் மதம் மாறிப் பணியாற்றினர். பாமினிப் பேரரசில் பணியாற்றிய ஆப்கானிய அதிகாரிகளுக்கும் உள் நாட்டு மத மாறிய அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பிணக்கு அப்பேரரசின் அழிவுக்கு முகாமையான காரணங்களில் ஒன்றாகும். இவ்வாறு பாமினிப் பேரரசனிடம் பணியாற்றிய இரு மதமாறிப் பார்ப்பனர்கள் தாம் பின்னாளில் பேரார் நாட்டுக்கும் அகமது நகர் நாட்டுக்கும் அரசர்கள் (சுல்தான்கள்) ஆனார்கள்.

மதம் மாறிய எண்ணற்ற பார்ப்பனர்களை வைத்தே முகம்மதிய அரசர்கள் ஆட்சி செய்தனர் என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவாகவே கூறுகின்றனர். அத்தகைய ஆட்சியின்போதுதான் முகம்மதிய வீரர்களால் பல்லாயிரக்கணக்கான பார்ப்பனப் பூசாரிகள் படுகொலை செய்யப்ட்டனர். அதற்கு முகம்மதிய அரசர்களிடம் இருந்த மதம் மாறிப் பார்ப்பனர்களும் உடந்தையாக இருந்தனர். கோயில்களை இடித்ததும் பூசாரிகளைக் கொன்றதும் கோயில்களிலிருந்த அளவற்ற செல்வத்தைக் கொள்ளை அடிப்பதற்காகத்தான். சமயம் அதற்கொரு மூடுதிரையாகவே பயன்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றம் பற்றிய ஓர் உரையாடலின்போது நண்பரான ஒரு முகம்மதிய அறிஞர் கூறிய செய்தி எண்ணிப் பார்க்கத்தக்கது. நாகூரிலிருக்கும் பள்ளிவாசலில் (தர்கா) பணிபுரியும் முகம்மதியப் பூசாரிகள் முன்பு மதமாறிய பார்ப்பனர்களாம். அவர்கள் தங்கள் “இந்து” உறவினர்களுடன் இன்றும் தொடர்பு வைத்துள்ளனராம். அத்துடன் அவர்கள் வீடுகளில் நடைபெறும் குடும்ப விழாக்களுக்குச் சென்றும் வருகின்றனராம்.

தொழில் முறையில் அறிமுகமான ஒரு முகம்மதிய நண்பரிடம் பேசியபோது அவர் இன்னின்ன ஊர்களிலிருக்கும் முகம்மதியர்கள் சிவனிய வேளாளர்களாயிருந்து மதம் மாறியவர்களென்பதையும் இன்னின்ன ஊர்களிலுள்ளவர்கள் தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து மதம் மாறியவர்களென்பதையும் கூறினார். இப்படிப் பிரித்து வைத்திருப்பதிலிருந்தே அவர்கள் திருமண உறவுகளிலும் இச்சாதி வரலாற்றைப் பேணுவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.[5] சாதி வேறுபாடுகளை மிஞ்சும் அளவுக்குப் பணம்படைந்திருந்தால் அது பார்க்கப்படமாட்டாது. அவ்வளவுதான்.

மேற்சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் தம் முன்னால் நிலவுடமைகளைத் தக்க வைத்துக் கொண்டனர். சிலர் அவ்வாறு மதம் மாறாமலே வேறு வகைகளில் புதிய மதங்கள் மூலம் ஆட்சியமைத்தவர்களுக்கு நாணயமாக நடந்து கொள்வதுபோல் பணிந்து போய் அவற்றைத் தக்க வைத்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் வலைப்பின்னலாகப் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றி முகம்மதியர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அரசும் முகம்மதிய அரசாக இருந்ததால் அவர்களுக்குப் பாதுகாப்பும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் உரிமையும் கிடைத்துவிட்டன. அந்த உரிமைகளின் நினைவால் ஏற்பட்ட ஆணவம் இன்றும் உள்ளுணர்வாக அவர்களிடம் உள்ளது. அதனால்தான் காதுக்கெட்டிய தொலைவுக்குள் நாலாபுறமுமிருந்து தொழுகை அழைப்பு(பாங்கொலி)ஒலி அனைத்துச் சமய மக்களுக்கும் கேட்கிறது. ஆனால் முகம்மதியர்களோ தம் பள்ளிவாசல்களில் இருபுறமும் இவ்வளவு தூரத்திலும் தொழுகை இல்லா நேரங்களிலும் பிற சமயத்தாரின் சமய நிகழ்ச்சிகளின் இருபுறமும் பிற சமத்தாரின் சமய நிகழ்ச்சிகளில் மேளம் கொட்டக் கூடாதெனக் கேட்கின்றனர்.

முகம்மதியர்களுக்கு நாட்டுணர்வு குறைவு என்பதுதான் உண்மை.. அவர்களது நாடும் பண்பாடும் மெக்கா எனும் ஊரைச் சார்ந்தே எண்ணப்படுகின்றன. தாம் வாழும் மண்ணில் தம்முடன் வாழும் பிற மக்களின் பண்பாட்டிலிருந்து தாம் வேறுபட்டவர், மேம்பட்டவர் என்ற ஆணவம் அவர்களுக்கிருக்கிறது. இதுவும் முகம்மதிய மன்னர்கள் இந்நாட்டை ஆண்ட காலத்தில் ஏற்பட்ட எண்ணத்திலேயே அவர்கள் இன்றும் திளைத்துள்ளதின் விளைவே.

அது மட்டுமல்ல, முகம்மதிய அரசர்கள் இந்தியாவில் ஆட்சி புரிந்த காலத்தில் முகம்மதிய உலகில் எந்த வல்லரசு வலிமை வாய்ந்ததோ அதன் பேரரசருக்குப் பெருஞ்செல்வத்தைக் காணிக்கையாகச் செலுத்தித் தம் ஆட்சியை அவர்கள் ஒப்பேற்க வேண்டுமென்று இறைஞ்சி நின்றனர் இந்திய மன்னர்கள். அரேபியாவின் கலீபாக்கள், துருக்கிய மன்னர்கள், ஆப்கானிய, பாரசீகப் பேரரசர்கள் என்று வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பேரரசர்களை நாடி இந்திய முகம்மதிய அரசர்களின் தூதுவர்கள் காணிக்கைகளைச் சுமந்து சென்றுள்ளனர்.

இந்தியாவை ஆண்ட முகம்மதிய அரசர்களில் நாட்டுணர்வைக் காட்டிய பேரரசன் அக்பராகும். மெக்கா மீது இந்திய முகம்மதியர்களுக்கிருந்த பற்றை எதிர்த்தார். மெக்கா செல்வதைத் தடை செய்தார். இந்தியர்களுக்கென்று ஒரு சமயத்தை உருவாக்கினார். அதற்குத் தீன் இலாகி என்று பெயர். ஆனால் அது பரவவில்லை.

இந்தியாவில் இவ்வாறு நாட்டுணர்வைக் காட்டிய மற்றொரு முகம்மதிய மன்னன் செர்சா சூரி.

இந்தியாவில் இருவரும் காட்டிய நாட்டுணர்வுக்கு இணையாக நாட்டுணர்வைக் கொண்ட இந்திய அரசர் எவரும் அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ தோன்றவில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

துருக்கியின் தந்தையான கமால் அதேபோல் சமயத்தில் அரபு மொழியின் ஆதிக்கத்தை, அதன் மூலம் அரேபியாவின் மேலாதிக்கத்தைத் தன் நாட்டில் ஒழித்தவர்.

ஆனால் இன்று ஏழை நாடுகளெங்கும் நடைபெறும் தேசிய விடுதலைப் போராட்டங்களில் எல்லாம் முகம்மதியர்கள் தாம் வாழும் மண்ணில் தம்மோடு வாழும் மக்களோடு ஒன்றி நிற்காமல் தமக்குத் தனிப் பண்பாடு உண்டு, எனவே தாம் தனித் தேசியத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு தனிமைப்பட்டு நிற்கிறார்கள். ஈழம், செர்பியா போன்ற நாடுகளில் விடுதலைப் போராளிகளால் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். இது முகம்மதிய மதத்தில் என்ன எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் காலந்தான் கூற வேண்டும்.

முகமம்தியத்தைத் தோற்றுவித்த மக்களாகிய அராபியர்கள் வரலாற்றுக்கு முந்திய நாட்களிலிருந்தே உலக வாணிகத்தில் தன்னிகரற்று விளங்கினர். பொதுவாக வாணிகத்தில் அவர்கள் நாணயமே காட்டுவதில்லை. கடல் வாணிகத்துடன் கடற் கொள்ளைகளையும் அவர்கள் நடத்தினர். கீழை நாடுகளிலிருந்து பல்வேறு பண்டங்களை மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்ததுடன் அவற்றின் கீழை நாட்டுப் பெயர்களையும் வழங்கினர். அதனால் பல பொருட்களுடன் சொற்களும் அரேபியர்களிடமிருந்து தோன்றியனவாக ஐரோப்பியர்கள் குறித்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஆங்கிலத்தில் புதைந்துவிட்ட பல தமிழ்ச் சொற்களைக் கூட அராபியச் சொற்களிலிருந்து வந்தனவாக ஆங்கில அகரமுதலிகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு உலகமெலாம் தொடர்பு கொண்ட அராபியர்களிடையில் முகம்மதியம் தோன்றிய பின்னர் வாணிகத் தொடர்புள்ள பல்வேறு நாட்டு மக்களும் விரைவில் முகம்மதியத்தைத் தழுவினர். இந்தியாவைப்போல் ஆட்சியாளர்கள், பூசகர்களின் கொடுமைகளுக்கு வாணிகர்களும் தொழில்வல்லாரும் உள்ளான நாடுகளில் அம்மக்களில் பெரும்பகுதியினர் முகம்மதியத்தைத் தழுவினர். அதனால் இன்று உலக வாணிகத்தோடு பிணைக்கப்பட்டவர்களாகவே உலகிலுள்ள அனைத்து நாட்டு முகம்மதியப் பெருங்குடி மக்களும் வாழ்கின்றனர். இம்மேட்டுக் குடியினரின் நலன்களுக்காக முகம்மதியம் என்பது ஒரு தனித் தேசியப் பண்பாடு என்ற மயக்கத்தை அவர்களின் செல்வாக்கினுள் இருக்கும் அம்மதத்தைச் சேர்ந்த ஏழைகள் நடுவிலும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றனர்.

இன்று மேலை நாடுகளின் பொருளியல் வலைக்குள் முகம்மதிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தம் நாட்டு மக்களைச் சிக்க வைத்துள்ளனர். இந்த வல்லரசு-ஏழை நாட்டுத் தலைவர்கள் கூட்டணிக்கு மக்களின் தன்னுணர்வற்ற எதிர்ப்புணர்வே மதப் பழமையியமாக அங்கெல்லாம் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது. இந்த மதவெறியைத் தணித்து கிறித்தவத்தைப் போன்று அச்சமயமும் ஒரு மக்களாட்சித் தன்மை பெறவேண்டுமாயின் உண்மையான வெளிப்படையான பொருளியல் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்ட மக்கள் இயக்கங்கள் அங்கெல்லாம் உருவாக வேண்டும். அவ்வாறு தோன்றும்போது வல்லரசுக்கு எதிராகத் தோன்றிய மதவெறி இயக்கங்களே அம்மத அடிப்படையியத்துக்கு எதிராகச் செயற்பட்டு முகமதியத்தை ஒரு மக்களாட்சி சார்ந்த, பெண்ணை ஆணுக்குச் சமமாக நடத்துகிற ஒரு சமயமாக மாற்றும்.

தாம் வாழும் நாடுகளில் முகம்மதியர்கள் என்ற வகையில் தமக்கு எண்ணிக்கை வலிமை வேண்டும் என்று மதமாற்ற முயற்சிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். அதே நோக்கத்துக்காக அரபு நாடுகளிலிருந்து அளவற்ற பணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் கன்னெய்யப்[6] பொருள்களின் விற்பனை மூலதனத்தைக் கொண்டு தம் பொருளியல் மற்றும் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்த மதமாற்றம் உதவுமென்று கருதுகிறார்கள். அதன்மூலம் கன்னெய்யத்துக்கு மாற்று மூலப் பொருட்களை ஏழை நாடுகள் வளர்த்தெடுத்து விடாமல் தடுத்துவிட வேண்டுமெனவும் திட்டமிடுகின்றனர். அத்துடன் காலமெல்லாம் போர்க்களத்திலே கழித்த முகம்மது நபி வேண்டிய அளவில் போர்வீரர்கள் வேண்டுமென்பதற்காகப் பெண்கள் தங்களால் இயலும்வரை பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையில் விதிகளை அமைத்தார். அந்த விதிகள் இன்று கருத்தடைக்கு எதிராகக் கையாளப்பட்டு முகம்மதியர்களின் எண்ணிக்கையை விரைந்து பெருக்குவதற்கு உதவுகின்றன. இது ஒட்டுமொத்த நோக்கில் உலக மக்களின் நலனுக்கு எதிரான ஒரு செயலாகும்.

இவ்வாறாக முகம்மதியத்துக்கு மக்களில் ஒரு பகுதியினர் மாறியதனால் சாதியமைப்பில் அடிப்படை மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. பெரும்பான்மை மக்கள் அம்மதத்துக்கு மாறினால் நம் குமுகத்திலிருக்கும் அனைத்துச் சாதியும் அங்கேயும் ஊடுருவிவிடும் என்பதே கடந்தகால மத மாற்றங்கள் நமக்குத் தரும் பாடம். அதே நேரத்தில் இந்த மத மாற்றம் நாம் வாழும் நாட்டின் இறைமைக்கு எப்போதும் ஓர் அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பது திறந்த மனதுடன் சிந்திப்போருக்கு விளங்கும்.

அரேபியர்கள் வெள்ளையர்களால் அடிமைப்படுத்தப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், இந்நூற்றாண்டின் முன் அறுபதுகள் வரை நம்மூர் முகம்மதியர்கள் உள்நாட்டு மக்களிடம் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். ஆனால் கன்னெய்யக் காசு அரேபியாவிலிருந்து பாயத் தொடங்கியதும் முன்பு முகம்மதிய ஆட்சிக் காலத்தில் நடந்து கொண்டதுபோல உள்நாட்டு மக்களைவிடத் தாம் மேம்பட்டவர் என்ற ஆவண மனப்பான்மையுடன் அவர்கள் செயல்படத் தொடங்கிவிட்டனர். உடலுழைப்பை வெறுப்பதும் பழிப்பதும் ஆகிய வெள்ளாளக்கட்டிலுள் நுழைந்து கொண்டனர். ‘உருது பேசுபவனே உண்மை முசுலீம்’ என்ற ஒரு முழக்கத்தையும் உருவாக்கித் தம் தாய் மொழியையே அழிக்கவும் பழிக்கவும் தொடங்கி விட்டனர்.

முகம்மதியம் மிகக் கட்டுப்பாடான ஒரு சமயம். இங்கு சமயமும் அரசியலும் ஒருங்கிணைந்து நிற்கின்றன. கடவுள், ஆதனியம் (ஆன்மீகம்) என்ற எல்லைகளைத் தாண்டி உரிமையியல், குற்றவியல் வழக்குகளுக்குரிய சட்டங்களையும் அடக்கியதாக இம்மதம் உள்ளது. கி.பி.ஆறாம் நூற்றாண்டில் காட்டுவிலங்காண்டி நிலையிலிருந்த பாலைநிலமாகிய அரேபியாவில் அதன் அண்டையில் நிலவிய யூதப் பண்பாட்டினடிப்படையில் தான் பிறந்த அரபுக் குமுகத்தைத் திருத்தியமைக்க முற்பட்ட முகம்மது பெருமானாரின் கருத்துகளின் அடிப்படையில் உருவான ஆதனிய, உலகியல் விதிகளைக் கொண்டுள்ள சமயமே அது. அதே சட்டங்களை பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அரேபியாவில், ஏன் இன்றைய அரேபியாவை விடக் கூட பல படிகள் முன்னேறிய குமுகங்களிலும் கட்டிக்காக்கப் போராடும் வீண் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற மதம் அது.


முகம்மதிய மதத்தவர் இறை வழிபாட்டையும் அது வகுத்துள்ள ஐந்து இறை நெறிகளையும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் தாங்க முடியாத கொடுமையான குமுக ஒடுக்கலுக்கு ஆளாவர். இப்படிப்பட்ட ஒரு சமயத்தை இறைமறுப்பாளர்கள் என்று தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிடர் கழகத்தார் எப்படிப் பரிந்துரைக்கின்றனர் என்பது நமக்குப் புரியாத புதிர்.

நானறிந்த முகம்மதிய நண்பர் ஒருவர் திராவிடர் கழகத்தின் தூண்டுதலால் முகம்மதியத்துக்கு மதமாற்றம் மேற்கொண்டவர் அரசுப்பணியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இப்போது வாத நோயுற்றுத் துன்புறுகிறார். அவரைச் சமயக் குழுவினர் (சமா அத்தினர்) தொழுகைக்கு வருமாறு நெருக்குகின்றனர். இல்லையென்றால் அவரது குடும்ப நிகழ்ச்சிகளை ஊரார் புறக்கணிப்பார்கள் என்று மிரட்டுகின்றனர். இந்நிகழ்ச்சியைக் கூறி அவர் கண்ணிர் விட்டு வருந்தினார்.

பெண்களைப் பொறுத்தும் மிகவும் பிற்போக்கான நிலையையே முகம்மதியம் கொண்டுள்ளது. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியதையும் மணவிலக்கு, கைம்பெண் மறுமணம் ஆகிய உரிமைகளை வழங்கியதையும் மட்டுமே காட்டிப் பெண்களுக்கு உரிமைகள் வழங்கிய மதம் தங்களது மதம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

நம் நாட்டிலும் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு. அது தாய்வழிச் சொத்துக்குத்தான். தந்தை வழியில் வரும் சொத்துரிமை சீதன வடிவில் பெறப்படுகிறது. குமுகம் தனிக் குடும்பங்களாகப் பிரியாமல் கூட்டுழைப்பில் வாழ்ந்த நிலையில் மக்கள் நிலத்தை அண்டியே வாழ்ந்தனர். எனவே பெண்கள் திருமணமாகிக் கணவன் வீடு செல்லத் தேவையில்லை. கூட்டுழைப்பிலிருந்து விடுபட்டு ஆண்கள் வாணிகம், போர், பண்ட விளைப்பு ஆகியவற்றிலிருந்து பிழைப்பை நடத்த வழியேற்பட்ட பின்னரே பெண்கள் கணவன் வீட்டில் சென்று வாழும் நிலையேற்பட்டது. அவ்வாறு பெண் அசையும் பொருளாக மாறிய பின் அவளுடைய சொத்துரிமை அசையாப் பொருளாகிய நிலத்திலிருந்து அசையும் பொருட்களாகிய சீதனப் பொருட்களாக மாறியது. பொங்கலில் பெண்ணுக்குத் தந்தை வீட்டிலிருந்து வரும் “படி” அல்லது “சீர்” அவளுக்குத் தன் பெற்றோரின் நிலச் சொத்துகளின் மீதிருந்த உரிமையின் சடங்கு வடிவமே.

மணவிலக்கு, கைம்பெண் மறுமணம் என்பவை நாம் முன்போரிடத்தில் குறிப்பிட்டிருந்தவாறு நம் குமுகத்தில் கீழ்ச்சாதிப் பெண்களுக்கு இன்றும் உள்ள உரிமைகளாகும். வெள்ளாளக்கட்டு அந்த உரிமையைப் பல வழிகளிலும் ஒழிக்க முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் முகம்மதிய பெண்களுக்கோ மேற்படி “உரிமைகள்” அவள் கால்களில் பூட்டப்பட்ட கூடுதல் விலங்குகளாகும். முகம்மது பெருமானாரின் காலத்தில் நடைபெற்ற இடைவிடாத போர்களினாலும் தம் கோட்பாடுகளைப் பரப்ப எதிர் காலத்திலும் இடைவிடாத போர்கள் நடத்த வேண்டும் என்று அவர் கருதியதினாலும் பிள்ளை பெறுவது குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் வகுத்த உத்திதான் முகம்மதியப் பெண்கள் பெற்ற இந்த உரிமை. ஆனால் இன்று நடைமுறையில் உண்மையிலேயே பெண் மணவிலக்குக் கேட்டாலும் அதை அவள் வாயால் சொல்ல விடாமல் கணவன் வாயலேயே சொல்லச் சொல்லி ஆடவனின் மானத்தை (மேலாண்மையை)க் காத்துக் கொள்கின்றனர். அத்துடன் அழகிய பெண்களின் இளமை நலத்தை வஞ்சகர்களும் பணக்காரர்களுமான ஆடவர்கள் சுவைத்து விட்டு தாங்கள் நினைத்தபோது அவர்களை “முத்தலாக்கு” ச் சொல்லி நடுத்தெருவில் வீசியெறிந்துவிடும் கொடுமைக்குக் தான் இந்த “மணவிலக்குரிமை” பயன்படுகிறது.

மறுமணம் என்ற “உரிமை” இன்னும் கொடியது. மறுமணம் புரியும் பெண் முன் திருமணத்தில் தனக்குப் பிறந்த குழந்தைகளைப் புதிய கணவன் வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாது. தன் முந்திய கணவன் உயிருடன் இருந்தால் அவனிடம் அல்லது அவன் குடும்பத்தாரிடம் அல்லது தன் குடும்பத்தாரிடம் தான் அந்தக் குழந்தையை ஒப்படைத்து வளர்க்கவேண்டும். இயலவில்லையென்றால் அவர்கள் ஏதிலிகள்(அனாதைகள்) தான். இதைவிட ஒரு பெண்ணுக்கு வேறென்ன கொடுமை வேண்டும்?

ஆனால் தாய் மதத்துக் கீழ்ச்சாதிப் பெண்ணுக்கு அவளாகவே முன்வந்து மணவிலக்கை அறிவிப்பதற்கும் மறுமணத்தின் போது தன் குழந்தைகளைப் புதுக் கணவன் வீட்டில் வைத்து வளர்ப்பதற்கும் உரிமையுண்டு.

தாய் மதத்துப் பெண்களுக்குப் பொருளியல் வாய்ப்பிருந்தால் எழுத்தறிவு பெற எந்தத் தடையும் இல்லை. இந்நாளில் எழுத்தறிவு பெறுவதில் இருந்த மனத்தடை பெருமளவில் நீங்கிவிட்டது. ஆனால் படிப்பும் பணமும் கொண்ட முகம்மதியப் பெற்றோரில் கூட மிகப் பெரும்பான்மையினர் தங்கள் பெண்களைப் பூப்பெய்திய பின்னர் பள்ளிக்கு அனுப்புவதில்லை.

அத்துடன் பெண்கள் முக்காடு போட்டுக் கொள்ளும் அருவருப்பான பழக்கத்தை இன்னும் அவர்கள் விட்டபாடில்லை. கேரளம் போன்று முகம்மதியப் பெண்கள் விழிப்புற்ற நிலையில் கூட அவர்களும் பொருளற்ற இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். துருக்கியின் தந்தை கமால் அல்லது ஈராக்கின் சதாம் உசேன் ஆகியோரின் சீர்திருத்தங்கள் தங்கள் சமயத்தினருக்கு எட்டாமல் பாதுகாத்துக் கொள்வதில் இம்மதத் தலைவர்கள் மிக விழிப்பாயிருக்கிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற சாபானு வழக்கைப் பற்றி நாம் அறிவோம். மணவிலக்குப் பெற்ற ஒரு முகம்மதியப் பெண்ணுக்கு பொது உரிமைச் சட்டப்படி வாழ்க்கைப் பணம் வழங்குமாறு கூறப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முகம்மதியர்கள் நின்றது அந்த மதத்தின் பெண்ணுரிமை நடிப்பை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

எண்பதுகளின் தொடக்கத்தில் நெல்லை மாவட்ட மீனாட்சிபுரத்தைத் தொடர்ந்து பல பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் முகம்மதியத்துக்கு மாறினர். ஆனால் சில இடங்களில் அம்மதத்தில் பெண்கள் மீது சுமத்தப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து அம்மக்கள் தாய் மதத்துக்கு திரும்பிய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் தாளிகைகளில் வந்தன. உணவின் சுவைக்கு உண்போரின் ஆர்வமே சான்று.

இத்தகைய பிற்போக்குப் பெண்ணடிமைக் கூறுகள் நிரம்பிய ஒரு சமயத்தை இறை மறுப்புப் பேசும் திராவிடர் கழகம் பரிந்துரைக்கிறது. ஓர் இறைமறுப்பியக்கம் மத மாற்றத்தை ஒரு பொருளுள்ள நிகழ்வு எனக் கருதுவதே ஒரு விந்தை. அத்துடன் ஆதனியத்துறையில் கொடுஞ் சட்டம் கொண்ட ஒரு சமயத்துக்கு அத்துறையில் தளர்வான போக்கைக் கொண்ட ஒரு சமயத்திலிருந்து மாறப் பரிந்துரைப்பது அதனிலும் விந்தை. பெண்ணுரிமை “பேசுவதில்” மிக உயர்ந்த மட்டத்தில் தன்னை வைத்துக் கொண்டிருக்கும் இந்த இயக்கம் பெண்ணுரிமையைக் கொச்சைப்படுத்தும் ஒரு சமயத்துக்கு மாறச் சொல்வது யாரும் புரிந்து கொள்ள முடியாத விந்தையாகத் தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தினரின் செயற்பாடு எனும் புதிரை விடுவிக்கும் முன்னர் நாம் இன்னொரு மத மாற்றமான கிறித்துவ மதமாற்றத்தைப் பற்றி ஆய்வோம்.

நாம் முன்னர் கூறியது போல் போர்த்துக்கீசியர்தான் முதன்முதலில் இந்தியாவில் பெருமளவில் கிறித்தவ சமயத்துக்கு மதமாற்றம் செய்தனர். ஆனால் அதற்கு முன்பே 16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களின் ஆதரவுடன் ஏசு ஊழியர் குழுவினர் மேற்சாதியினரை மதம் மாற்றினர். அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட ராபர்ட் டி நொபிலி என்பார் பார்ப்பனத் துறவி வேடமிட்டு அவர்களோடு நெருங்கி அதுவரை பார்ப்பனர் தவிர வேறெவர் கைகளுக்கும் எட்டாமலிருந்த வேதங்களைப் பெற்று முதன்முதல் ஐரோப்பியாவுக்கு எடுத்துச் சென்றார் என்று மாக்சுமுல்லர் கூறுகிறார்.

போர்த்துக்கீசியர் திட்டமிட்டதுபோல் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியவில்லை. எனவே அவர்களால் மதமாற்றம் பெற்ற பழஞ்சவைக் கிறித்துவர்கள் எந்தப் பயனும் பெற்றனரா என்பது தெரியவில்லை. பின்னர் பிரஞ்சியர்கள் காலத்தில் கும்பினியிலும் ஆட்சியிலும் பதவிகள் பெறுவதற்காகப் பார்ப்பனருள்ளிட்ட மேற்சாதியினர் பலர் பழஞ்சவைக்கு மாறினர். அவ்வாறு மாறியவர்களில் சிவனிய வெள்ளாளர்களே மிகுதி போலும். அதனால் தான் தமிழகத்திலுள்ள பழஞ்சவைக் கல்வி நிறுவனங்களில் இன்றும் கூட சிவனிய வேளாளர்களின் ஆதிக்கம் பற்றிய கசப்புணர்வு பிற சாதிகளைச் சேர்ந்தோரிடம் நிலவுகிறது.

இறுதியாக ஆங்கிலேயரால் மதமாற்றம் பெற்ற சீர்திருத்தச் சபையினரின் நிலைமை வேறுபட்டது. ஆங்கிலேயர் 150 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்தியாவை ஆண்டனர். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் முகம்மதிய அரசர்களைப் போல் மதம் மாறிய மக்களைக் கொண்டு படைப்பிரிவுகள் அமைத்து அவர்கள் கையில் நிலங்களை அளிக்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்தின் சமயம் அரசுக்கு அடிப்பட்ட நிலுவனமாகும்.

ஆனால் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்குச் சமயத்தை வேறு வகையில் பயன்படுத்தினர். கிறித்துவத் திருப்புத்தகத்தைப் படிப்பதற்காக மதம் மாறிய மக்களுக்குத் தாய்மொழி எழுத்தறிவு புகட்டப்பட்டது என முன்பே கூறினோம். இதற்காக ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன. அப்பள்ளிகளில் ஆசிரியத் தொழில் செய்வதற்கு மதமாற்றம் பெற்ற மக்களே அமர்த்தப்பட்டனர். புதிதாகக் கிறித்துவக் கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் ஊழியர் என்ற வகையிலும் மதமாற்றம் பெற்ற மக்கள் தங்களுக்குத் தங்கள் குமுகம் விதித்திருந்த எல்லைகளை மீறி ஒட்டுண்ணி வெள்ளை வேட்டி வேலைகளைப் பெற்றனர். தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் கூடக் கல்வித் துறையில் மிகப்பெரும்பான்மை இன்றும் கிறித்துவர்கள் கையிலேயே இருக்கிறது.

கிறித்துவத்துக்கு மாறிய மக்களுக்குத் தாய் மதத்திலிருந்த மேற்சாதியினரிடமிருந்து ஆளும் வெள்ளையர் மூலம் பாதுகாப்பு இருந்தது உண்மைதான். ஆனால் மதம் மாறிய மேற்சாதியினர் தம்மை போல் மதம் மாறிய கீழ்ச்சாதியினரைச் சமமாக நடத்தத் துணியவில்லை. இதனால் பெரும் போராட்டங்களும் நிகழ்ந்தன. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சியாகும். இங்கு மதம் மாறிய நாடார்கள் தம்மோடு ஒரே கோயிலில் வந்து வழிபடுவதை மதம் மாறிய வெள்ளாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெள்ளைக்கார மத ஊழியர்களால் கூட அவர்களுக்குள் இணக்கம் செய்து வைக்க இயலவில்லை. கோயிலினுள்ளேயே இவ்விரு சாதியினரும் இருந்து வழிபாடு செல்வதற்காகத் தனித்தனிப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இடையில் சுவர் கூட எழுப்பப்பட்டது. பின்னர் தனித்தனிக் கோயில்கள் கட்டப்பட்டன. ஒரு கட்டத்தில் ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன் ஆறுமுக நாவலர் என்பாரின் முயற்சியால் (யாழ்ப்பானத்து ஆறுமுக நாவலர் அல்ல இவர்) ஒரு பகுதி கிறித்தவ நாடார்கள் தாய் மதத்துக்குத் திரும்பினர். இம்மதமாற்றத்தை முன்னின்று நடத்திய ஆறுமுக நாவலரும் ஒரு வெள்ளாளராயிருந்ததனால் ‘தாய்’ மதத்துக்கு மாறியவர்கள் வெள்ளாளர்கட்டைக் கடைபிடித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இவர்கள் கிறித்துவத்தைத் தழுவியிருந்த நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டு பொருளியலில் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தனர். இந்த பொருளியல் முன்னேற்றம்தான் கிறித்துவ வெள்ளாளர்களை எதிர்த்து ஆறுமுகநாவலரின் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவர்களுக்குத்தந்தது.

தாய் மதம் என்ற எல்லையிலிருந்து முகம்மதியத்துக்குச் சென்றவர்கள் மூன்று பிரிவுகளாகச் சுருங்கித் தமிழ்நாட்டில் சாதிகளின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளனர் என்று கூறினோம். அவர்கள் மரக்காயர்கள், ராவுத்தர்கள், லெப்பைகள் ஆவர். அவர்களுடன் வெளியிலிருந்து படையெடுப்புகளின் போது வந்து குடியமர்ந்த பட்டாணிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் கிறித்துவத்துக்கு மாறியதால் தமிழ்நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை மும்மடங்காகப் பெருகியது. எப்படியென்றால் பழஞ்சவைக் கிறித்துவத்துக்கு மாறியவர்கள் தாய் மதத்திலிருக்கும் தங்கள் சாதியினரைத் தம்மிலும் தாழ்ந்தவராகக் கருதுகின்றனர். அதேபோல் சீர்திருத்த சபைக் கிறித்துவர்கள் தம் சாதியைச் சார்ந்த பழஞ்சவைக் கிறித்தவர்களையும் தாய் மதத்தவரையும் தம்மிலும் இழிந்தவராகக் கருதுகின்றனர்.

இருந்தாலும் தாய் மதத்துக்கும் கிறித்துவத்துக்கும் வேறுபாடு இல்லாமலில்லை. ஒரு கிறித்துவர் விரும்பினால் எந்தச் சாதியையும் சேர்ந்த இன்னொரு கிறித்துவருடன் மணவுறவு கொள்ளலாம். பழஞ்சவைக் கிறித்துவர்களும் சீர்திருத்தச் சவைக் கிறித்துவர்களும் சாதி சமய வேறுபாடின்றித் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒருவர் இன்னொருவரின் சமயத்துக்கு மாறியாக வேண்டும். ஆனால் ஒரு கிறித்துவர் தாய் மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் தாய் மதத்தைச் சேர்ந்தவர்தான் கிறித்துவத்துக்கு மாற வேண்டும். அப்படி மாறாமல் திருமணம் நடைபெற்றால் கிறித்துவரின் குடும்பம் சமய ஒதுக்கலுக்கு உட்படும். இன்னோரிடத்தில் ஒரு சிற்றூண்டிச் சாலை உரிமையாளரின் பிணத்திற்கு ஏற்பட்ட நிலை அந்தக் குடும்ப உறுப்பினருக்கு நேரிடும்.

ஆக, கிறித்துத்துக்கு மாறியதால் தமிழகத்துச் சாதிகளின் எண்ணிக்கை குறைந்தது முன்று மடங்காவது உயர்ந்துள்ளது. அது நீங்கலாக கிறித்துவத்தில் சிறு பிரிவுகள், மீட்சிப்படை(இரட்சண்ய சேனை), ஐம்பது நாட்பிரிவு(பெந்தகோத்தே) மற்றும், ஏழாம் நாள் வருகையாளர்கள் போன்ற சிறு சிறு பிரிவினரையும் சேர்த்தால் எண்ணிக்கை பெருகும்.

இந்தக் கிறித்துவர்களுடைய சிறப்புத்தன்மை என்னவென்றால் பிறசாதியினரிடமிருந்து அறைகூவல்கள் வந்தால் தாய் மதத்தைச் சேர்ந்த தம் சாதியினரை நாடிப் போய் நாம் அனைவரும் ஒரே சாதி என்று சாதியைப் பிடித்துக் கொண்டு நிற்பர். சமயத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் என்று வரும்போது கிறித்துவர்கள் என்று கூறி முகத்தை திருப்பிக் கொள்வர்.

இருந்தாலும் கிறித்துவர்கள் இருபெரும் பிரிவுகளுக்கு இடையில் உள்ள ஆழ்ந்த வெறுப்பால் தாய் மதத்தினருக்கும் சில பயன்கள் கிடைக்கின்றன. இவ்விரு பிரிவினரும் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தம் பிரிவு கிறித்துவர்களுக்கு முதலுரிமை, தாய் மதத்தினருக்கு இரண்டாம் உரிமை இன்னொரு பிரிவுக் கிறித்துவர்களுக்குக் கடைசி உரிமை என்ற வரிசை முறை வழங்கி வருவதால் தாய்மதத்தினருக்கு ஒரு சராசரியான வாய்ப்பு கிடைத்து வருகிறது.

வெள்ளையர்களால் தொடங்கி வைக்கப்பெற்று தொடர்ந்து வந்திருக்கும் கிறித்துவர்களின் முன்னுரிமைத் துறை கல்வியாகும். ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியை இந்தியர்கள் கையில் ஒப்படைத்தபோது சிறுபான்மையினரின் நலன்களைக் காத்தல் என்ற பெயரில் தங்கள் மீது சமய அடிப்படையில் பரிவு கொண்டிருக்கும் கிறித்துவர்களுக்கு சிறப்புரிமைகள் தொடர்ந்து கிடைக்க வழிசெய்து சென்றனர். ஆட்சியைக் கைப்பற்றிய இங்குள்ளோர் மிக எளிதில், யாருக்கும் தீங்கில்லாத வகையில் அந்த முன்னூரிமை நிலையை மாற்றியிருக்க முடியும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற கொள்கை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் கல்விக் கூடங்கள் திறக்க வகை செய்யப்பட்டிருக்குமானால் இப்படி ஒரு சாராரின் கையில் மட்டும் கல்வித் துறை சிக்கியிருக்காது.

கிறித்துவர்களின் முன்னுரிமையின் பயன் கல்வித் துறையுடன் நின்று விடவில்லை. சமயத்தின் பெயரில் “தொண்டு நிறுவனங்களை” நிறுவுவதற்காக வெளியிலுள்ள பணக்கார நாடுகள் கணக்கற்ற பணத்தை இங்குள்ள சிவருக்கு அள்ளிக் கொடுக்கின்றன. மற்றும் அனைத்துக் கிறித்துவப் பிரிவுகளின் மூலமாகவும் பணம் இங்கு பாய்கிறது. இங்கு “தொண்டு” செய்வதற்கென்று பெரும் எண்ணிக்கையிலான கிறித்துவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மீறித் தாய் மதத்தினர் யாருக்காவது கிடைத்தால் அவர் சிறுகச் சிறுகக் கிறித்துவத்துக்கு மாறும் சூழ்நிலை உருவாகும். வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் பழைய கிறித்துவர்களை விடப் புதிதாக மதம் மாறியவர்களுக்கு அல்லது மதமாற்றத்துக்கு முன்வருகிறவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

இத்தொண்டு நிறுவனங்களின் பணிகள் வெறும் மத மாற்றத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டவையல்ல. இந்நிறுவனங்களுக்குப் பண உதவியளிக்கும் வல்லரசுகள் இத்தொண்டு நிறுவனங்களைத் தமக்கு இங்கு ஒற்றறிவதற்காகப் பயன்படுத்துகின்றன. இப்படி ஒற்று வேலை செய்வது நம் நாட்டில் இத்தொண்டு நிறுவனங்களை நடத்துவோருக்குத் தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். இது பற்றித் தனியொரு அதிகாரத்தில் நாம் விரிவாக ஆய்வோம்.

அத்துடன் மதமாற்றத்தின் மூலம் தமக்குப் பரிவுணர்வுள்ள மக்களின் எண்ணிக்கையும் விகிதமும் அதிகரிக்கும் என்பது வல்லரசுகளின் எண்ணம். அதே வேளையில் உள்நாட்டில் தொண்டு நிறுவனங்களை நடத்துவோருக்கும் இரு குறிக்கோள்கள். ஒன்று தொண்டு நிறுவனம் நடத்துவதற்காகப் பெறும் பணத்தில் கணிசமாகத் தாங்கள் சுருட்டிக் கொள்வது. இன்னொன்று, தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி நடைபெறும் மத மாற்றங்களின் மூலம் உள்நாட்டில் தம் சமயத்தவரின் விகிதத்தைப் பெருக்குவதன் மூலம் தம் அரசியல் வெல்வாக்கைப் பெருக்கிக் கொள்வது.

மேலே கூறியவாறு இத்தகைய மதமாற்றமே சாதிய ஒடுக்குமுறைக்கு மருந்து என்று திராவிடர் கழகத்தினர் கருதுகின்றனர். அவர்கள் தங்களையே புரிந்து கொள்ள முயல வேண்டும். உண்மையில் தாங்கள் இறை மறுப்பாளர்களா? சாதி சமய வேறுபாடுகளைக் களைந்தே தீருவது என்ற குறிக்கோளை எய்துவதற்காக மனத் தூய்மையுடன் போராடுபவர்களா? இவர்களது இறை மறுப்பியக்கத்துக்கும் சாதியொழிப்புப் போராட்டத்துக்கும் பார்ப்பன எதிர்ப்புக்கும் உள்ள உறவு யாது? நாம் மீண்டும் மீண்டும் சிந்திக்கும் போது முதலில் குழப்பமும் பிறகு நாமே நம்ப முடியாத முடிவுகளும் தாம் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி நாம் இன்னொரு தனி தலைப்பில் பேசுவோம்.
இவ்வாறு சாதி ஒழிப்புக்கு மத மாற்றம் ஒரு வழியென்று கருதுவது உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மறுப்பதன் விளைவேயாகும். சாதிய ஒழிப்பு உள்ளிருந்தே வரவேண்டுமேயல்லது அப்பணியை வெளியாரிடம் ஒப்படைப்பது நமக்குக் கேடாய் முடியும். அவ்வாறே முடிந்ததை வரலாறு காட்டுகிறது. மதமாற்றம் சாதியை ஒழிப்பதற்கு மாறாக அதை நிலை நிறுத்துவதில் வேறொரு வகையிலும் செயற்பட்டிருக்கிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக எப்போதுமே நம் நாட்டில் போராட்டங்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. அத்தகைய போராட்டங்கள் முற்றிய வேளைகளில் உள்நாட்டு அரசுகள் அதன் விளைவாகவே வலுவிழந்து நின்றன. இச்சூழ்நிலைகளில் வெளியாரின் ஒற்றர்கள் போன்றே புதுச் சமயங்கள் உள்ளே புகுந்து அப்போராட்டத் தலைவர்களை மதம் மாற்றி அவர்களுக்கு உயர்வளித்துத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டன. அவர்களைத் தலைவர்களாகக் கொண்டோரில் மதம் மாறியோர் ஒன்றிரண்டு தலைமுறைகளில் புதிய மதத்தில் தம் பழைய நிலைக்கு இழிந்தனர். மாறாதவர்கள் தலைவர்களை இழந்தனர். இருவரும் நாளடைவில் பழைய நிலைக்கு வந்துவிட்டனர். இவ்வாறு மதமாற்றம் நாம் மீண்டும் மீண்டும் அயலவரிடம் அரசியலில் அடிமைப்பட மட்டுமே உதவியுள்ளது.

நம் நாட்டில் நிகழ்ந்த மதமாற்றம் ஒவ்வொன்றும் நம் தேசிய நலன் என்ற உடலில் ஏற்பட்ட ஆறாக் காயங்களாகும். சாதியத்தின் பெயராகிய பார்ப்பனியத்தால் வலுவிழந்து நின்ற அந்த உடலில் பட்ட இக்காயங்களை அகற்றும் வலிமையை இழந்து தன் குருதியையும் நாள்தோறும் இழந்து மேலும் வலுக் குறைந்து போகிறது. சாதியமென்னும் இக்கொடுமையை ஒழித்துத் தாய் மதத்திற்கு முற்றிலும் ஒரு புது வடிவம் கொடுத்து இந்தக் காயங்களை ஆற்றும் ஆற்றலை இவ்வுடலுக்கு நாம் வழங்க வேண்டும். இன்னுமோர் முறை இத்தகைய காயங்கள் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலே நாம் கூறியது போல் போர்ச்சுகீசியரால் மத மாற்றம் செய்யப்பட்ட சப்பானியர் அவர்களோடு சேர்ந்து கொண்டு கலகம் செய்ய முற்பட்ட போது அக்குமுகம் உடனே அவர்களை அழித்தொழித்தது.

சப்பானிலும் நம் நாட்டைப் போல் நான்கு வரணங்கள் இருந்தன. அந்த வரண அமைப்புக்குப் பெரும் எதிர்ப்பில்லாமல் இயங்கியும் வந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரே ஒரு அமெரிக்கக் கப்பல் சில பீரங்கி வெடிகளை வெடித்தவுடன் அக்குமுகம் துடித்தெழுந்து தம் மக்களுக்கிடையில் ஒற்றுமைக்கு இடையூறாக இருந்த கூறுகளை ஒழித்துவிட்டு இருபதே ஆண்டுகளில் (1869-89) ஐரோப்பியர்களின் ஆற்றலை எதிர்கொள்ள ஆயத்தமாகி விட்டது.

அதேபோல் முகம்மதியர்களால் தாக்குண்ட ஐரோப்பா தம் பிற்போக்குக்குக் காரணமாயிருந்த பழஞ்சவைக் கிறித்துவத்தை உதறித் தள்ளிவிட்டுப் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்து மூன்று நூற்றாண்டுகளில் உலகையே தன் ஆளுகையின் கீழே கொண்டு வந்து விட்டது. ஆனால் இன்னும் நமது தலைவர்களும் அறிவர்களும் நம் நாட்டுச் சாதிச் சிக்கலாயிருந்தாலும் பொருளியல் சிக்கலாயிருந்தாலும் வெளியார் உதவியை நாடி அதையே பரிந்துரைப்பது மிகக் கவலை தருவதும் வெறுக்கத்தக்கதுமாகும்.

காலங்காலமாக வெளியிலிருந்து வருவோருக்கு நடைபாவாடை விரித்துச் சாமரம் வீசி அவர்கள் வீசிய எச்சில்களை உண்பதாலேயே தன் உடன்பிறப்புகளாகிய தம் நாட்டவரைவிடத் தாம் உயர்ந்தவர் என்று கருதிய பேதைமை இன்னும் நீங்கவில்லை.

ஒரு நாகரிகத்த்தின் சிதைவுக்கு வரலாற்றாசிரியர் வில் டூராண்டு கூறிய பல காரணங்களில் பேடித்தனமான சிந்தனையாளர்களை ஒன்றாகக் குறிப்பிடுகிறார். நம் நாட்டின் சிதைவுக்கு இப்பேடிகளே முதற்காரணமாவர்.

அடிக்குறிப்புகள்:

[1] மூன்று தமிழ்க் கழகங்கள் பற்றிய செய்தியில் சங்கத் தலைவர்களாயிருந்த அரசர்களில் துவரைக் கோமான் என்றொரு பெயர் வருகிறது. முக்கழகக் கோட்பாட்டாளர்கள் இதன் பொருளை ஆழ்ந்து சிந்திப்பதில்லை. எதிர்ப்போரோ இதுவே கழகம் பற்றிய செய்திகள் கட்டுக்கதைகள் என்ற கூறுவதற்குச் சான்று என்று வாதிடுவர். ஆனால் உண்மை என்ன? துவரை என்பதன் வடமொழி வடிவம் துவாரகை. துவாரம் என்று நாம் தமிழில் சொல்வது துவார் என்று வடமொழியில் வடிவம் பெறும். துவாரம் என்றால் வாயில் அல்லது கதவு. கோயில்களிலுள்ள வாயிற்காவலர் சிலைகளைத் துவார பாலகர் எனக் குறிப்பிடுவதைக் காண்க. இரண்டாம் கழகம் இருந்ததாகக் கூறப்படும் கபாடபுரம் என்ற பெயரால் உள்ள கபாடம் என்ற சொல்லின் பொருளும் கதவுதான். எனவே துவரை என்னும் நகரம் கபாடபுரமே. வடக்கே அரபிக்கடல் கரையில் இருந்து முழுகியதாகக் கூறப்படும் வடநாட்டுக் கண்ணின் தலைநகரின் பெயர் தெற்கிலிருந்து கடலில் மூழ்கிய துவரை நகரின் நினைவாக அங்கிருந்து இடம் பெயர்ந்தோரால் இடப்பட்டதாகவே இருக்க வேண்டும்.
நாம் முன்பு குறிப்பிட்ட முத்துக்குட்டி அடிகளாரைப் பாடும் அகிலத் திரட்டு அம்மானை என்ற நூல் தெற்கே கடலினுள் முழுகிய “துவரையம்பதி துலக்கும்” என்று கூறுகிறது. எனவே கபாடபுரம் முழுகிய செய்தியை 19ஆம் நூற்றாண்டு வரை துவரையம்பதி என்ற பெயரால் தென்னக மக்கள் நினைவில் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

[2] இவன் அதிராசேந்திரனா அல்லது முதல் குலோத்துங்கனா என்பதில் வரலாற்றாசிரியர்களிடையில் ஐயப்பாடு உள்ளது.

[3] கே.கே.பிள்ளை. தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும். 1981

[4] சவள்வதால் துணி சவளி எனப்பட்டது. இங்குள்ள ஒரு திரிபுற்ற ஒலிப்பு முறையினால் சகரம் ஜகரமாகிவிட்டது.

[5] அவ்வாறு பேணவும் செய்கின்றனர். கடையநல்லூர் போன்ற இடங்களின் பணக்காரர்களாகிய இராவுத்தர்கள் லெப்பைகளை தங்களையொத்த முகம்மதியர்களாகக் கருதுவதில்லை.

[6] கன்னெய் (கல்+நெய்)= பெட்ரோல்; கன்னெய்யம் = பெட்ரோலியம்.

0 மறுமொழிகள்: