சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 23. இந்தியத் தேசியம்
இந்தியா ஒரு தேசமா? இந்தியத் தேசியம் என்று ஒன்று உண்டா? இந்தக் கேள்விகளுக்கு ஒரே சொல்லில் "ஆம்" அல்லது "இல்லை" என்று கூறிவிட முடியாது. தேசிய உணர்வென்பது இயற்கையானது என்று முன்பு[1] கூறிவோம். ஆனால் பல வேளைகளில் அது வெளிப்படுவதில்லை. எதிரிகளால் தொடர்ச்சியான கொடுமைகளுக்கு ஆட்படும் போதும் சரியான தலைமை அமையும் போதும் தான் அது வெளிப்படுகிறது. வேறு வகைச் சூழ்நிலைகளில் தேசிய உணர்வு மங்கிப் போனதையும் வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.
ஆங்கிலேயர் தம் வரலாறு முழுவதும் தங்கள் கடற்கரைக்கு எதிர்ப்புறமுள்ள ஐரோப்பியக் கடற்கரை மீது கண் வைத்திருந்தனர். எப்போதெல்லாம் அந்த எதிர்க்கரை முழுவதும் ஓரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததோ அப்போதே அவ்வரசைத் தாக்க அவர்கள் அணியமாகி (ஆயத்தமாகி) விடுவர். அப்படிப்பட்டவர்களுக்கே காட்டுலாந்து மக்கள் எப்போதும் எதிரிகளாயிருந்தனர். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பிரஞ்சியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயரைத் தாக்கி வந்தனர். பின்னர் தொழிற்புரட்சி தொடங்கி காட்டுலாந்து நிலப்பரப்பில் கனிமங்களும் நிலக்கரியும் கண்டு பிடிக்கப்பட்டு அப்பகுதி தொழில்வளம் பெற்று பிரிட்டனின் பொருளியலில் உரிய பங்கேற்கத் தொடங்கியதும் அவர்களின் தேசிய உணர்வு மங்கிவிட்டது. ஆனால் உண்மையில் இன்னும் அது மறையவில்லை. என்றாவது ஒரு நாள் அது மீளக்கூடும்.
உரோமின் பழஞ்சவைக் கிறித்துவத் தலைமையை ஏற்றுக்கொண்டிருந்த இங்கிலாந்து எட்டாம் என்ரி காலத்தில் தன் திருமணம் தொடர்பாக உரோமுடன் ஏற்பட்டட மோதலிலிருந்து பீரிட்டெழுந்த தேசிய உணர்வே அது ஒர் உலகப் பேரரசாக மலர்வதற்கு வித்திட்டது என்பது வரலாற்று உண்மை. பறிமுதல் செய்யப்பட்ட கோயில் சொத்துக்களை அந்த அரசனோடு பங்கிட்டுக் கொண்ட அவனது நண்பர்களே இங்கிலாந்தின் முதலாளிய வகுப்பின் அடித்தளமாக அமைந்தனர்.
வில் தூரன் என்பவர் எழுதியுள்ள நாகரிகத்தின் கதை என்ற நூலின் முதல் மடலம் நாம் கிழக்கிலிருந்து பெற்ற மரபுரிமை[2] என்ற தலைப்பையுடையது. அதில் முதலில் மேற்காசிய நாடுகளின் வரலாறு கூறப்படுகிறது. யூதர்களைப் பற்றியும் அவர் கூறுகிறார். அவை அனைத்தையும் படிக்கும் போது யூதத் தேசியத்தைப் பற்றிய ஓர் உண்மை பளிச்சிடுகிறது. மேற்காசியாவின் வரலாற்றில் எகிப்து பல நாடுகளின் மீது படையெடுத்து எண்ணற்ற மக்களை அடிமையாக வைத்திருந்தது. அவ்வாறு அடிமையாக்கப்பட்ட மக்களைக் கசக்கிப் பிழிந்து அரசர்களுக்கான நினைவுச் சின்னங்களான கூம்புக் கோயில்களைக் கட்டியது. இந்நிலையில் அரச குடும்பத்தில் ஏற்பட்ட மரபுரிமைச் சண்டையில் வெளியேறிய மோசே அந்த அடிமைகளை அழைத்துச் சென்று ஓரிடத்தில் குடியமர்த்தி அவர்களுகென்று ஒரு வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொடுத்து ஒரு புதிய தேசியத்தையும் உருவாக்கியது தெரிகிறது. ஆனால் இந்தச் சேர்க்கைத் தேசியம் தான் உலகத்தின் நீண்ட வாழ்வைக் கொண்ட தேசியமாக நிலைத்து நிற்கிறது.
இந்தத் தேசியத்தில் இயேசுநாதரின் பங்கு வேறுபட்டது. அவரது காலத்தில் இசுரேல் எனப்படும் யூதநாடு உரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டிருந்தது. அவரது தொடக்ககால நடவடிக்கைகள் இந்த அடிமைத்தனத்துக்கு எதிரான தேசிய உணர்வைக் காட்டி நிற்கின்றன. ஆனால் ஏதோவொரு சூழ்நிலையில் அவரது சினம் யூத மேல்தட்டினார் மீது திரும்புகிறது. எனவே முரண்பாடு உரோமர்கள் பக்கமிருந்து திசைதிரும்புகிறது. இதனால் சினமுற்ற யூதா இயேசுவைக் காட்டிக்கொடுத்தான் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் தான் உரோம ஆளுனன் இயேசுவைக் காப்பாற்ற முன்வந்தான் என்றும் கூறப்படுகிறது. பிறந்த போது யூத குமரனாக அறிவிக்கப்பட்ட அவர் இறுதியில் "தேவ குமரனாக" மாறிவிட்டார்.
இவ்வாறு உரோமப் பேரரசை எதிர்த்துத் தன் வாழ்வைத் தொடங்கிய இயேசுநாதரின் நடவடிக்கை இறுதியில் யூதர்களுக்கு எதிராக முடிந்தது. இத்துடன் அது நிற்கவில்லை. அவரது மாணவர்களால் உரோமிலுள்ள அடிமைகளிடையில் பரவிய அவரது கோட்பாடு அரசின் ஒடுக்குமுறைகளையும் மீறி வளர்ந்து அரசுகட்டிலேறியது. அரசுகட்டிலேறியதும் இயேசுவைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் யூதர்கள் மேல் உரோமப் பேரரசு ஒரு பெரும் தாக்குதலை நடத்த வைத்தது. அவர்களை 1600 ஆண்டுககள் உலகமெல்லாம் சிதறி ஓட வைத்தது.
மோசேயை முன்னோடியாகக் கொண்டே அரேபியர்களின் தேசிய உணர்வை முகம்மது பெருமான் உருவாக்கி அவர்கள் ஓர் ஐந்து நூற்றாண்டுகள் உலகை ஆள வைத்தார். ஆனால் அது இன்று ஒரு தேசியமில்லா, வேரில்லா ஒட்டுண்ணிப் பண்பாடாகத் திசைமாறி நிற்கிறது.
உலகை வெல்லப் புறப்பட்ட பிரிட்டன் அமெரிக்காவில் தன் நாட்டின் சிறைகளிலிருந்த குற்றவாளிகளை அங்கு குடியேற்றியது. அவர்கள் மண்ணைப் பண்படுத்திப் பயிரிட்டு அந்நாட்டை வளம்பெறச் செய்தனர். அதே நேரத்தில் அயர்லாந்தில் தேசியப் போர் உச்சகட்டத்திலிருந்தது. இங்கிலாந்து அதை வன்மையாக ஒடுக்கிது. பெரும் எண்ணிக்கையில் அயர்லாந்தினர் அமெரிக்காவில் குடியேறினர். அவர்கள் தான் அமெரிக்க விடுதலைப் போரின் பின்னணியிலிருந்தவர்கள். மொழியிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் கூடப் பலவகைகளில் இங்கிலாந்துக்குத் தலைகீழ் உத்திகளைக் கையாண்டு அவர்கள் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி வருகின்றனர்.
வட அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர் முதலில் அங்கிருந்த சிவப்பிந்தியர் எனப்படும் மங்கோலிய இன மக்களை அடிமைப்படுத்த முயன்றனர். அவர்கள் படியவில்லை. எதிர்த்து நின்றனர். எனவே கூட்டம் கூட்டமாக அவர்களைக் கொன்றொழித்தனர். தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களைக் குடியேற்றினர். அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமை செய்தனர். சாதியக் கொடுமை பற்றி நாம் இவ்வளவு வருந்துகிறோம். ஆனால் வெள்ளையர்கள் நம் முன்னோர்கள் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத கொடுமைகளை அவர்கள் மீது நிகழ்த்தினார்கள். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தொழில் முதலாளிகளுக்கும் அமெரிக்காவிலிருந்து விளைபொருட்களைப் பெற்று வந்த வாணிகர்களுக்கும் நடைபெற்ற போட்டிகளிலிருந்தே தொழிலாளர்களுக்குச் சலுகைகள் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஒரு தரப்பினர் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துவதைக் குறித்தும் இன்னொரு தரப்பினர் கறுப்பின அடிமைகளைக் கொடுமைப்படுத்துவதைக் குறித்தும் ஒருவர் மீதொருவர் குற்றம் சாட்டினர்.
இன்றும் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக் கறுப்பர்களைத் தங்களைப் போல் சமமாக நடத்தவில்லை. கறுப்பர்களுடன் கலப்பில் பிறந்தவர்களைக் கூட எத்தனை தலைமுறையானாலும் ஒதுக்கியே வைத்துள்ளனர். வெள்ளையரல்லாத (நிறமுடையோர் எனப்படும்) பிற மக்களைப் பொறுத்தவரையில் கூட அமெரிக்க வெள்ளையர் இதே போக்கையே கடைப் பிடிக்கின்றனர். மனித உரிமைகள் பற்றி உலகமெலாம் வாய்கிழியக் கூக்குரலிடும் அமெரிக்காவின் முதுகிலுள்ள சீழ்வடியும் புண் இது. இனக் கலவரங்கள் அவ்வப்போது அமெரிக்காவில் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் ஐரோப்பாவிலுள்ள ஏறக்குறைய அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இருப்பினும் ஆங்கிலேயரே மிகுதி. எனேவ ஒரே ஆட்சி மொழியாக ஆங்கிலம் திகழ்கிறது. அளப்பரிய வளத்தில் புரள்வதால் அங்கு இன்று வரை மாநிலச் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் செழிப்பில் திளைத்து முதுமையடைந்து கொண்டிருக்கிறது அமெரிக்கர்களின் பண்பாடு. ஏழை நாடுகளிலிருந்து சென்று அங்கு குடியேறியிருக்கும் மக்களின் உழைப்பும் அறிவும் தான் இன்று அமெரிக்காவைத் தாங்கி நிற்கின்றன. இதுவே அமெரிக்கர்கள் இம்மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கும் அதன் தொடர்ச்சியாக அங்கு தேசியக் கிளர்ச்சிகள் உருவாகவும் வழிகோலும்.
கனடாவில் ஆங்கிலேயரும் பிரஞ்சியரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் தேசியப் பிணக்குகள் தோன்றியுள்ளன. அவற்றைத் தீர்க்கும் முயற்சிகள் இன்று வரை வெற்றி பெறவில்லை.
தென் அமெரிக்காவில் பெருமளவில் குடியேறியவர்கள் பெயின் நாட்டினர். அங்கே கறுப்பர்கள் இல்லை. ஆனால் மங்கோலிய இன மூலக்குடிகள் உள்ளனர். ஒரு காலத்தில் இந்தப் பெயின் நாட்டினரை பினீசியர்கள் தங்கள் கப்பல்களில் கால்நடைகள் போல் ஏற்றிச் சென்று விற்றனராம். வரலாற்று விந்தையாக வெள்ளையர்கள் உலகைக் கைப்பற்றியதிலும் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து விற்றதிலும் இவர்களே முன்னோடிகளாகச் செயற்பட்டனர்.
தென்னமெரிக்காவில் பிறப்படிப்படையிலான குமுக வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவதில்லை. பண்பாட்டு அடிப்படையிலேயே வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. பெயின் மரபும் உள்நாட்டு மரபும் கலந்த ஒரு கலவைப் பண்பாடு உயர்வானதாகவும் உள்நாட்டு மரபுப் பண்பாடு தாழ்வானதாகவும் கருதப்படுகிறது. தென்னமெரிக்க நாடுகளில் நடைபெறும் வன்முறைப் போராட்டங்களில் இந்தப் பண்பாட்டு வேறுபாடுகளுக்கும் பங்குண்டு. மூலக் குடிமக்களுக்குத் தங்கள் ஆதித் தாய்நாட்டை மீட்கும் வேட்கை நாள்தோறும் மிகுந்து வருகிறது.
ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் தாழ்மேனியாவிலும் வாழ்ந்த பழங்குடி மக்களையும் வெள்ளையர்கள் அழித்தனர். சில குலங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டன. எஞ்சியுள்ளோர் இன்று தங்கள் தாயகத்தின் மீதுள்ள தங்கள் உரிமையைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
தென்கிழக்காசியாவில் இருக்கும் நாடுகளில் பண்டைக் குமரிக் கண்டத்தின் ஒரு கரையை அடுத்த நிலப்பரப்புகள் உள்ளன. இந்தோனேசியா எனும் தீவுக்கட்டங்களில் சிலவற்றின் பெயர்களை வைத்துப் பார்த்தால் அவை குமரிக் கண்டத்தின் எஞ்சிய பகுதிகளா அல்லது அவற்றின் நினைவாகப் பெயர் பெற்றவையா என்ற ஐயம் எமும். சுமத்ரா என்பது சு + மதுரை. சுமதுரை என்பதற்கு உண்மையான மதுரை அல்லது மூலமதுரை என்ற பொருள் உண்டு.
போர்னியா, புரூனெய் என்ற பெயர்கள் பொருனை என்ற பெயரை ஒத்துள்ளன. இலாமுரிதேசம் என்று ஒரு பகுதிக்குப் பெயர் இருந்ததை சோழப் பேரரசு காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய தொடர்புகளால் இங்குள்ள மக்களின் பண்பாடு தென்னிந்தியப் பண்பாடாகவே நெடுங்காலம் விளங்கி வந்தது. முகம்மதியத்தின் பரவலுக்குப் பின் அந்த நிலை மாறினாலும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. இந்நாடுகள் நெடுநாட்கள் சீனர்களின் ஆதிக்கத்தின் கீழும் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் சப்பானின் நெருக்குதல்களுக்கு உட்பட்டும் இருந்தாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் முழு விடுதலை பெற்றுப் பொருளியல் மேம்பாடும் கண்டு வருகின்றன.
சீனம் வரலாற்றில் ஒரு பேரரசாகத் திகழ்ந்தாலும் அது எண்ணற்ற சிற்றரசுகளைக் கொண்டிருந்தது. மாறிமாறித் தனியுரிமையுடைய சிற்றரசுகளாகவும் ஒரு பேரரசுக்கடங்கிய சிற்றரசுகளாகவும் விளங்கி வந்தன. 1949இல் சப்பானியப் படையெடுப்பையும் அமெரிக்காவின் தலையீட்டையும் முறியடித்த பின் தான் இவை முறையான ஒரு நடுவணரசின் கீழ் உறுப்புகளான மாகாணஙங்களாக அமைந்தன.
இங்கு சீனமொழி ஒன்றே போலத் தோன்றினாலும் மொழி வேறுபாடுகள் உண்டு. ஆனால் சீன மொழியின் ஒப்பற்ற ஒரு தன்மையினால் மொழி வேறுபாடுகள் முனைப்படையவில்லை. சீனமொழி எழுத்துக்கள் ஒருவகைக் குறியீடுகளாகும். நேரடியாக அவை பொருட்களைக் குறிக்கின்றன. அதனைப் படிக்கும் ஒவ்வொரு கிளைமொழி மக்களும் தங்கள் தங்கள் மொழிச் சொற்களைச் சொல்லிப் படிப்பார்கள். ஓர் உலக மொழி உருவாக்குவதற்கும் சீன மொழியின் இந்த உத்தியைக் கையாளும் முயற்சி கூட நடக்கிறது. இவ்வாறு மொழிச் சிக்கல் பெரும் பொருட்டாகவில்லை. எனினும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஒரு நாள் அங்கு அது வெடிக்கும் வாய்ப்பு உண்டு.
சப்பான் எண்ணற்ற தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு. அங்கு சோகன்கள் என்ற சிற்றரசர்களின் தலைமையில் ஒரு பேரரசர் ஆண்டு வந்தார். பேரரசரின் அதிகாரங்களை அச்சிற்றரசர்களில் ஒருவர் கையில் வைத்துக் கொள்ள பெயருக்குப் பேரரசர் வாழ்ந்து வந்தார். 16ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்கள், குறிப்பாகப் போர்ச்சுக்கீசியரின் வரவாலும் மதமாற்றங்களாலும் சலசலத்துக் கொண்டிருந்த சப்பான் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்கக் கப்பல் ஒன்று வீசிய குண்டுகளினால் விழித்தெழுந்து நடுவப்படுத்திய ஓர் அரசை உருவாக்கி அனைத்துத் துறையிலும் சீர்த்திருத்தங்கள் செய்து வரலாற்றில் ஓர் ஒப்பற்ற எழுச்சியைக் காட்டி வளர்ந்து நிற்கிறது. அவ்வளர்ச்சியில் பின்னடைவுகள் நேரும் வரை அதன் ஒருமைப்பாட்டுக்குக் கேடு எதுவும் வர வாய்ப்பில்லை.
ஆப்பிரிக்காவின் வடக்கில் லிபியாவும் எகிப்தும் நீங்கலாகத் தெற்கேயுள்ள பகுதிகளில் எண்ணற்ற குக்குலங்கள் தனித்தனியே ஆட்சி நடத்தி வந்தன. குக்குல மக்களாட்சி எனப்படும் எனப்படும் ஆட்சிமுறை அது. வெள்ளையர் வரவால் அவை அழிந்தன. வெள்ளையரின் ஆட்சிமுறைகள் வேர் கொண்டன. பின்னர் அவை பல்வேறு நாடுகளாக விடுதலை அடைந்த பின் ஒவ்வொன்றினுள்ளுமிருக்கும் பல்வேறு குக்குல மக்களுக்குள் மோதல்கள் உருவாகி நிற்கின்றன. அவையனைத்தும் தத்தமக்கு ஒரு தேசியத்தை அமைத்துக்கொள்ளும் போராட்டத்தின் வெளிப்பாடுகளே.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரால் ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களிடையிலும் குக்குல வேறுபாட்டு மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அவர்களுக்கும் ஒரு தேசியத் தீர்வு கிடைக்க வேண்டியுள்ளது.
இனி ஐரோப்பாவுக்குள் வருவோம். வரலாற்றில் கறுப்பின மக்கள் தொடங்கி கெல்த்துகள், யவனர்கள், உரோமர்கள்கள், தியூத்தானியர்கள், கோத்துகள், அவுணர்கள், சிலாவியர்கள் எனும் எண்ணற்ற மக்கள் ஐரோப்பாவனுள் நுழைந்திருக்கின்றனர். அவர்களின் வெவ்வேறு கலப்பினங்கள் வெவ்வேறு பகுதிகளில் ஆட்சியமமைத்து வாழ்ந்தனர். ஆனால் சிலாவியர்களுக்கென்று சொந்த அரசுகள் அமையவில்லை. அவர்கள் அடிமைகளாகவே வாழந்;தனர். அடிமை எனும் சொல்லைக் குறிக்க முதலிலிருந்த செர்வோ என்ற இலத்தீன் சொல் மறைந்து சிலேவ் எனும் சொல் இடம் பெறுமளவுக்கு அம்மக்கள் வீறு குன்றியவர்களாக இருந்தனர்.
இந்தச் சிலாவியர்கள் போலந்து, அங்கேரி, உருசியா, செக், சுலோவக், செர்பியா, சுலோவேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளின் மக்களாகும். அவற்றில் உருசியாவில் உள்ளவர்கள் வேதிய(Orthodox)க் கிறித்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தாத்தாரியர்கள் படையெடுத்ததால் அவர்களுக்கு மேற்குடன் தொடர்பு இன்றிப் போய்விட்டது. 13 முதல் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மங்கோலியக் கான்களுக்குத் திறை செலுத்தினர். 15ஆம் நூற்றாண்டிலிருந்த மூன்றாம் இவான் காலத்தில் இறைமை மீண்டது. மா பீட்டர் காலத்தில் 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் புத்தமைப்புப் பேரரசு உருவானது. 3ஆம் பீட்டரின் மனைவி 2ஆம் காதரின் காலத்தில் விரிவாக்கம் பெற்றது. அந்தப் பேரரசு தான் 1917ஆம் ஆண்டுப் புரட்சியில் உதித்த சோவியத் ஒன்றியத்தின் தாய். அப்புரட்சி பாட்டாளியக் கோட்பாட்டின் பெயரால் நடைபெற்றாலும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்தீர்மானிப்புரிமை என்ற வாக்குறுதியின் அடிப்படையில் உருசியாவிலிருந்த பல்வேறு தேசியங்களைச் சார்ந்த மக்களின் ஒத்துழைப்பில் தான் அப்புரட்சி வெற்றி பெற்றது. நடு ஆசியப் புல்வெளிகளிலுள்ள பல தேசங்கள் மாருசியப் பெருங்குடியினரின் சொத்துக்களாய் இருந்தன. அவற்றை அவர்களிடமிருந்து விடுவித்து அவ்வத்தேசிய மக்களின் உரிமையை நிலைநிறுத்துவதென்ற வாக்குறுதி தான் அது.
ஆனால் இந்த வாக்குறுதிக்கு நாணயமாக இருந்த தலைவர் லெனின் ஒருவர் தான். பிறர் அவரது தன்தீர்மானிப்புரிமைக் கோட்பாட்டின் சாரத்தைப் புரிந்து கொள்ளவோ மனமுவந்து ஏற்றுக்கொள்ளவோ இல்லை. நோய்வாய்ப்பட்டிருந்த லெனின் இறுதிக் காலத்தில் உருசிய அரசு சில குடியரசுகளில் கிளம்பிய தேசியக் கோரிக்கைகளை விலங்குத்தனமாக அடக்கியது. லெனின் அந்த அடக்குமுறையைக் கண்டித்தார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆசியப் புல்வெளிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாகத் திரிந்தனர். அவர்களது மொழிகளுக்கு வரிவடிவம் கிடையாது. புரட்சியின் பின்னர் அம்மக்கள் நிலத்தில் நிலையான குடியிருப்புகளில் அமர்த்தப்பட்டு அவர்களக்குத் தொழில்களும் வேளாண்மையும் உருவாக்கப்பட்டன. அத்துடன் அவர்களது மொழிகளுக்கு உருசிய வரிவடிவங்கள் புகுத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் சோவியத்திலுள்ள அனைத்து மொழிகளுக்கும் உருசிய மொழியில் வரிவடிவங்கள் வழங்கும் முறை புகுத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தோன்றியது. விலங்குத் தனமாக ஒடுக்கப்பட்டது. இட்லரின் ஒற்றர்களின் ஊடுருவல் என்ற பெயரில் பொதுமைக் கட்சியினர் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது இந்தச் சூழ்நிலையைக் குறித்துத் தான் இருக்க வேண்டும். இந்தச் சிக்கல் எப்படித் தீர்க்கப்பட்டது என்பதைப் பற்றிய சரியான செய்திகள் நமக்கில்லை.
உருசியத் தேசியங்கள் குடியரசுகளாகவும் அவற்றுக்குட்பட்ட தன்னாட்சியுடைய தேசியங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் குடியரசுகளுக்கோ அல்லது தன்னாட்சிப் பகுதிகளுக்கோ உண்மையான தன்னாட்சி வழங்கப்படவில்லை. மாஉருசியத் தேசியமே அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இருந்தாலும் தொழில் பெருக்கமும் கல்வியும் உண்மையான தேசிய உணர்வை ஊட்டின; முழுமை பெறாத தேசியங்களை முழுமை பெறச் செய்தன. இரண்டாம் உலகப் போரில் இட்லரின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காக ஐரோப்பிய உருசியா எனப்படும் மேற்குப் பகுதியில் குவிந்திருந்த பெருந்தொழில்கள் அப்படி அப்படியே பெயர்த்தெடுக்கப்பட்டு புகைவண்டிகளில் கிழக்கே கொண்டு சென்று நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியால் ஆசியப் பகுதியும் தொழில்வளம் பெற்றது. இத்தொழில்வளமே தேசியத் தன்னாட்சி உணர்வுக்கு உரம் ஏற்றியது. இவையனைத்தும் சேர்ந்தே கோர்ப்பசேவின் திறந்த அரசியல் கோட்பாட்டினால் உருசியா தனித்தனிக் குடியரசுகளாகச் சிதைந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒரு குமுகமாக ஒன்றிணைந்து நிற்கின்றன. இருந்தபோதிலும் குடியரசுகளினுள் அடைபட்டிருக்கும் தன்னாட்சிப் பகுதிக்குள் சிறைப்பட்டிருக்கும் தேசியங்களின் ஆயுதப் போராட்டம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உருசியா வலுவிழந்ததும் தன் ஆதிக்கத்தினுள்ளிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மீதிருந்த தன் பிடியை அது விலக்கிக் கொண்டது. அவ்வாறு விடுபட்ட தேசியங்கள் தத்தம் தற்சார்பான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன.
உருசியத் தலைவர் தாலின் காலத்திலேயே அவரை எதிர்த்து நின்று தன் நாட்டை உருசியாவின் கட்டிலிருந்து விடுவித்துக் கொண்டவர் யூக்கோசுலேவியத் தலைவர் டிட்டோ. அப்படிப்பட்ட யூக்கோசுலேவியா இன்று துண்டு துண்டாகச் சிதறி செர்பியர்களால் அங்குள்ள முகம்மதியர்கள் துரத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. நான் இன்னோரிட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஈழத்துத் தமிழ் முகம்மதியர்கள் போலவே சமயம் சார்ந்த தேசியம் அங்கு செயற்படுகிறது.
இந்தியத் தேசியத்தைப் பார்ப்போம். இந்தியத் தேசியம் என்று ஒன்று உருவானது இராமாயண காப்பியத்தின் மூலம் வெளிப்படுகிறது. நாம் முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அத்தேசியம் வெளியிலிருந்து வந்த கிரேக்கர்களுடன் இந்தியப் பார்ப்பனர் கலந்ததிலிருந்து உருவானதாகத் தோன்றுகிறது. ஆனால் அது கங்கைக் கரையைச் சார்ந்த வட இந்தியத் தேசியம் தான். இந்த தடையம் தவிர வேறு தேசிய வெளிப்பாடுகள் எதையும் இந்தியாவில் காண முடியவில்லை, செர்சா சூரியால் தொடங்கி வைக்கப்பட்டு அக்பரால் முழுமை பெற்ற ஒன்றைத் தவிர.
அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்த போது அவரை வீரமாக எதிர்த்து நின்ற கலிங்கர்களின் தேசியம் குக்குலத் தேசியம். அது முற்றிலும் மண் மீது வேர் கொண்டது. சோழர்களின் படையெடுப்புகளினால் உசுப்பிவிடப்பட்ட போசாளர்களின் தேசியமும் மண் மீது வேர் கொண்டது தான். கழகக் காலத்தில் புலிகடிமால் (புலியாகிய சோழர்களைத் துரத்தியவர்கள்) எனப்படுபவர்கள் இவர்கள் தான்.
கேரளத்தில் மலையாள மொழியின் தோற்றமும் ஒரு தேசிய வெளிப்பாடு தான். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் உருவான பத்தி இயக்கங்களும் மேல்தட்டு தரகுத் தன்மையை எதிர்த்த அடித்தட்டு மக்களின் மண் சார்ந்த தேசிய இயக்கங்களே.
ஆனால் இந்தத் தேசிய இயக்கங்களில் படையெடுப்புகளை எதிர்த்து உருவான எதுவும் தேசியத்தைப் பற்றிய தெளிவான தன்னுணர்வுடன் வெளிப்படவில்லை. வேறு வடிவங்களிலேயே வெளிப்பட்டன. அவற்றை நாம் உய்த்துணரவே வேண்டியுள்ளது.
தேசியத்தைப் பற்றிய ஒரு தெளிவான வரையறை ஐரோப்பாவில் தான் உருவானது. அதுவும் குறிப்பாக மார்க்சியமே தேசியத்துக்கு ஒரு வரையறை வழங்க முயன்றது. அதை ஒரு வழிகாட்டியாகக் கொண்டே இன்றைய தேசியக் கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன என்றால் மிகையாகாது. இது பற்றிப் பின்னால் நாம் விரிவாக ஆய்வோம்.
இந்தியாவில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் உள்நாட்டு அரசுகள் ஒன்றோடொன்று நடத்திய போர்களாலும் தேசியங்கள் சிதைந்து உருக்குலைந்தன. கொள்ளையையே நோக்கமாகக் கொண்ட இப்போர்கள் மக்களை மரத்துப் போகச் செய்தன. அதிலும் முகம்மதியர்கள் படையெடுப்புக்குப் பின் நிகழ்ந்த இரத்தக் களரியில் மக்கள் வெறும் விலங்கு நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாங்கள் மனிதர்கள் என்ற உணர்வே அவர்களுக்கு அற்றுப் போய்விட்டது. மாறி மாறி வரும் ஆட்சிகள், அவற்றுக்குட்பட்ட சிற்றரசுகள், இவர்கள் அனைவருக்கும் படைப் பணி புரியச் செல்லும் படைவீரர்கள். அரசின் அதிகாரிகள், தீவட்டிக் கொள்ளையர் ஆகியோரின் கொடுமைகளைத் தாங்கித் தாங்கி நடுநடுங்கிப் போய் வாழ்ந்து வந்தனர் மக்கள். இதற்கிடையில் வெளிச் சமய, உட்சமயப் பூசல்கள், சாதிச் சண்டைகள், வலங்கை-இடங்கைக் கலவரங்கள் என்று எப்போது எங்கிருந்து எத்தகைய பேரழிவுகள் காத்திருக்கின்றனவோ என்று ஒவ்வொரு கணமும் செத்துக் கொண்டிருந்தனர் மக்கள். இந்தச் சூழ்நிலையில் தான் வெள்ளையர் இந்தியாவினுள் நுழைந்தனர்.உள்நாட்டு ஆட்சியாளர்களின் சண்டைகளுக்குப் பணம் கடன்கொடுத்து அவர்களின் தன்னுரிமையை முடக்கினர். அவர்களின் மூலமாக மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். மன்னர்களை முற்றிலும் முடக்கிய நிலையில் அவர்களின் பெயரில் மக்களிடமிருந்து வரி தண்டும் உரிமையைப் பெற்றனர். இந்த வரி தண்டும் நிகழ்ச்சியில் தான் தமிழகத்தில் பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலக் குழுமத்துக்கும் முரண்பாடுகள் வலுப்பெற்றன. வெள்ளையர்களை எதிர்த்து நின்ற பாளையக்காரர்கள் மக்களையும் தங்களுடன் அரவணைத்துக் கொண்டனர். இத்தகைய பாளையக்காரர்களில் தலையாயவன் வீரபாண்டிய கட்டபொம்மனாவான். அவன் ஆங்கிலேயரை வெறுத்தான். டச்சு வாணிகர்களோடு சவளி விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டிருந்ததால் ஆங்கிலேயர்களுக்குத் தன் பாளையத்தினுள் சவளி கொள்முதலில் இடையூறு விளைவித்தான். அத்துடன் அவர்கள் ஆர்க்காட்டு நவாபிடமிருந்து பெற்ற வரி தண்டும் உரிமையையும் மதிக்கவில்லை.
பாஞ்சாலங்குறிச்சியான தன் தலைநகரமும் கோட்டையும் சமவெளியிலிருப்பதால் போர் நோக்கங்களுக்குத் தோதாக இருக்காது என்று சிவகிரியைத் தன் முயற்சிகளின் தலைமையகமாக வைத்துக் கொள்ள முடிவு செய்தான். அதற்காக வெள்ளையரின் இணக்கத்துக்குரிய சிவகிரி பாளையங்காரரை எதிர்த்து நின்ற அவரது மகனைப் பதவியிலமர்த்தினான். வெள்ளையருக்குக் கட்டபொம்மனின் திட்டம் புரிந்து விட்டது. ஏற்கனவே அவர்கள் கட்டபொம்மனின் அண்டைப் பாளையமான எட்டையபுரத்தானுக்கு கட்டபொம்மனுடன் எல்லைச் சச்சரவை ஏற்படுத்தியிருந்தனர். இப்போது கட்டபொம்மனைச் சண்டைக்கிழுக்க நேரம் பார்த்திருந்தனர். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான் கட்டபொம்மனின் தானாவதியாக இருந்த சிவனிய வேளாளன் சுப்பிரமணியபிள்ளை. தன் சொந்த ஆதாயத்துக்காக திருவைகுண்டத்திலிருந்த ஆங்கிலேயரின் நெல்கிடங்கைக் கொள்ளையடித்து காவலாளியையும் கொலை செய்தான்.[3] தானாவதிப்பிள்ளையைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு ஆங்கிலேயர் கேட்டனர். கட்டபொம்மன் மறுத்துவிட்டான். இதைக் காரணம் காட்டி ஆங்கிலேயர் பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கிப் பின் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டது நமக்குத் தெரியும். ஆனால் அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் மக்களுக்கு முறையாகத் தரப்படவில்லை.
கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையையும் மற்றையோரையும் ஆங்கிலேயர் பாளையங்கோட்டையில் அடைத்திருந்தனர். வெளியிலிருந்த அவர்களது ஆட்கள் சூழ்ச்சியாக அவர்களை விடுவித்து விட்டனர். தப்பிச் சென்ற வீரர்கள் தரைமட்டமாக்கப்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மக்களின் உதவியுடன் ஆறே நாட்களில் கட்டி முடித்தனர். வெள்ளையரை மலைக்க வைத்த நிகழ்ச்சி இது. நம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய பெருமை தரும் செயல் இது. மீண்டும் வெள்ளையருடன் நடந்த கடுமையான போரில் கோட்டை இடிபட்டது. ஊமைத்துரை தப்பியோடி திண்டுக்கல், சிவகங்கை ஆகிய பாளையங்களில் சேர்ந்து நின்று அடுத்தகட்டப் போருக்கு ஆயத்தமானான். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி என்ன வென்றால் கட்டபொம்மனின் நெருங்கிய உறவினனும் அவனுடனும் பின்னர் ஊமைத்துரையுடனும் தோளோடு தோள் நின்று போரிட்டவனும் சிறந்த அறிவாளியுமாகிய செவத்தையா என்பவன் எட்டப்பனுக்கும் தஞ்சை சரபோசிக்கும் எழுதிய மடல்களாகும். அம்மன்னர்களின் தேசியக் கடமைகளை சுட்டிக்காட்டி வெள்ளையருக்குத் துணை போகாமலிருக்கும்படியும் தங்களை ஆதரிக்கும் படியும் நெஞ்சை உருக்கும் வகையில் அந்தக் கடிதங்கள் அமைந்திருந்தன. ஆனால் அந்தப் பேடிகள் சிறிதும் செவிசாய்க்கவில்லை.
கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்க்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் குமரியிலிருந்து பம்பாய் வரையுள்ள நாட்டுப்பற்றுள்ள தலைவர்களை இணைத்து ஒரு கூட்டணி உருவாக்கும் முயற்சியில் சிவகங்கைச் சின்ன மருது ஈடுபட்டிருந்தான். கூட்டணி உருவாகி ஒரு தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு ஓராண்டு கழிந்த நிலையில் செயற்பட இருந்த இந்தத் தாக்குதல் பற்றி உளவறிந்த ஆங்கிலேயர் தங்கள் தாக்குதலை முந்தித் தொடங்கிவிட்டனர். 1806 வரை ஏறக்குறைய 5 ஆண்டுகளாக இப்போர் நடந்து புரட்சியாளர்கள் ஒடுக்கப்பட்டனர். இப்புரட்சியின் சிறப்பு என்னவென்றால் சின்ன மருது எழுதி சீரங்கத்துக் கோயில் வாசலிலே ஒட்டி வைத்திருந்த அறிக்கை தான். இதைச் சீரங்கத்து அறிக்கை என்று கூறுவர். இந்திய நாட்டின் உரிமையைக் காத்திட மக்களனைவரையும் கூவியழைப்பதாகவும் காட்டிக் கொடுப்போரை கடுமையும் இழிவும் மிக்க சொற்களால் பழிப்பதாகவும் அது அமைந்திருந்தது. இத்தகைய ஓர் அறிக்கை இந்திய வரலாற்றிலேயே முதன்முதல் நிகழ்ச்சியாகும்.[4]
இந்த நிகழ்ச்சியின் வரலாற்றுக் குறிதகவு பற்றி நாம் ஆய்வோம். இருண்ட காலத்தில் வாழ்ந்த இந்தியா விரைந்து காட்டுவிலங்காண்டி நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்தியாவை ஆண்ட மன்னர்களும் சிற்றரசர்களும் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு இடைவிடாமல் போர்களை நடத்தினர். போர் வீரர்களுக்குச் சம்பளத்துக்குப் பகரம் கொள்ளையடிப்பதே வருமானமாகியது. எனவே மக்களைக் காப்பதற்கென்று எந்த அமைப்பும் இல்லாதிருந்தது. தீவட்டிக் கொள்ளையர்கள் ஓயாத்தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். மக்களே காவலுக்கு ஆளமர்த்தி வைத்திருந்தனர். நாட்டில் பெரும்பான்மை நிலத்திலும் கோயில்களுக்கு ஏதோவொரு வகை உரிமையிருந்தது. அதை வைத்து அவை கொழுத்திருந்தன. அவற்றின் பின்னணியில் இயங்கிய மேற்சாதியினர் ஒரு புறம் மக்களைப் பிழிந்தெடுக்கவும் இழிவுபடுத்தவும் செய்தனர். மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இத்தனை கொடுமைகளையும் எதிர்க்கும் வழியறியாமல் இடங்கை-வலங்கைப் பிரிவினர்களாகப் பிரிந்து நின்று பகை கொண்டு அவ்வப்போது கொலைவெறியுடன் தமக்குள் மோதி வந்தனர். இவ்வாறு மக்களை வைத்துப் பூட்டியிருந்த கூண்டை உடைத்து அவர்களாக வெளியேறேவோ பிறர் வெளியேற்றவோ எந்தச் சூழ்நிலையும் இல்லை. அந்நிலையில் அந்தக் கூண்டை உடைப்பவர்களாக வெள்ளையர் வந்தனர். வெளியிலிருந்து வந்த அந்தத் தாக்குதலுக்கு எதிராக உள்ளுக்குள் விசைகள் கிளம்புவது இயற்கை. அதுபோல் உலக வரலாறெங்கணும் நிகழ்ந்துள்ளது. நம் நாட்டிலும் அது நடந்தது. ஆனால் அது காலங்கடந்த ஒன்று. அதற்குக் காரணம் பல்லாயிரம் ஆண்டுக் காலமாக நம்மிடம் இல்லாதிருந்த தேசிய உணர்வு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒட்டுண்ணிக் கோட்பாட்டை உயரிய மாந்தநேயக் கோட்பாடாக நாம் தவறாகப் புரிந்து கொண்டது ஒரு புறமும் இன்னொரு புறம் வெளியாருக்கு அடிமைப்பட்டேனும் உள்நாட்டிலுள்ள தம் உடன்பிறப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நம் நாட்டுப் பார்ப்பன-வெள்ளாள உயர்சாதிக் கோட்பாடு ஆகியவையும் தாம். வெளி விசைகள் நம் இறைமையைப் பறிக்க முயலும் போது எதிர்த்து நின்றிருக்க வேண்டிய இவர்கள் அவற்றுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றனர். தலைமை தாங்கிய இவர்களின் காட்டிக்கொடுப்பின் விளைவாக வெளிவிசைகள் அடிமட்டம் வரை ஊடுருவிய போது, மண்ணுக்கு உரியவர்களான கீழ்ச்சாதி மக்களிடையிலிருந்த தலைவர்கள் எழுந்துநிற்கும் முன் காலங்கடந்து விட்டது. எனவே உள்ளிருந்து நிகழ வேண்டிய மாற்றம் நிகழவில்லை. ஆனால் உள்ளிருந்து மாற்றம் நிகழ முடியும் என்பது ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாகக் கட்டப்பொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட போது மக்கள் சாதி வேறுபாடின்றி ஓரணியில் திரண்டு நின்றனர். ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்த வரலாற்றச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி எந்தத் தனிமனிதனின் அருஞ்செயலுமல்ல. மண்ணினைக் காக்க உறுதிபூண்டு துடித்தெழுந்துவிட்ட ஒரு மக்கள் திரளாகிய பெரும் பூதத்தின் செயல் வெறியே அது. மண்ணில் வேர் கொண்ட எந்த மக்களும் வெளிப்படுத்தும் பேராற்றலே அது. அந்தப் பேராற்றல் இந்த மண்ணின் மக்களுக்கு உண்டு என்பதை அவர்கள் ஒரேயொரு முறை உலகத்துக்குக் காட்ட வாய்ப்பளித்தவர்கள் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் மருதுபாண்டியர்களுமாவர்.
இவ்வாறு உள்ளிருந்த மக்கள் உடைக்காமல் வெளியிலிருந்தே அவர்களைச் சிறைப்படுத்தியிருந்த கூண்டு உடைக்கப்பட்டது. ஆனால் உடைத்த ஆங்கிலேயர் முழுமையாக அதனை உடைக்கவில்லை. தங்கள் நலனுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குத் தான் உடைந்தனர்.
மீண்டும் தொடருமுன் 1857இல் தில்லியைச் சுற்றி நடைபெற்ற படைவீரர் கலகத்தைத் தமிழகத்தில் நடைபெற்ற புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். தமிழகத்தில் போல் மண்ணைக் காக்கும் போராட்டமாக அது இல்லை. மாறாக சமய நம்பிக்கைகளுக்குக் கேடு வந்துவிட்டதாகப் படைவீரர்கள் கருதியதே அடிப்டைக் காரணம். தேசிய உணர்வென்பது தமிழகத்திற் போல் வெளிப்படவில்லை. அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. எந்தவொரு சிற்றுயிரும் கூடத் தன் சாவை எதிர்த்துப் போராடும். அதே போல் ஏற்கனவே இருந்த ஆதிக்க அமைப்பு காட்டிய எதிர்ப்பும் அதில் இணைந்திருந்தது. தமிழகத்தில் போல் திட்டமிட்ட ஆயத்த நடவடிக்கைகளோ ஆற்றலைத் திரட்டுவதோ நடைபெறவில்லை. திடீரென்று பீறிட்டெழுந்த உணர்ச்சி வெள்ளத்தால் ஏற்பட்ட விளைவே 1857இன் நிகழ்ச்சி. திட்டமிடுதல் ஏதுமின்றி அவ்வாறு திடீரென்று ஏற்பட்டதால் அதை வெள்ளையர்கள் கண்டுபிடிக்கும் கேள்வியே எழவில்லை. அதனால் தான் தமிழகத்தில் ஏற்பட்டதை விட பெரும் எண்ணிக்கையில் வெள்ளையர்கள் பலியாக வேண்டி வந்தது.
இவ்வாறு வெளி விசைகளால் உடைபட்ட ஆதிக்க விசைகள் முற்றிலும் அழிக்கப்படவில்லை. அவை வெள்ளையர் நலனுக்குப் பயன்படும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டன. வெள்ளையர்களால் ஒரு சீரான காவல்துறையும் நயன்மைத் துறையும் அமைக்கப்பட்டன. நிலவரியில் கூட ஒரு சீர்மை எய்தப்படவில்லை. கிறித்துவத்துக்கு மாறியவர்களுக்குத் தாய் மதத்தாரிடமிருந்து பாதுகாப்புக் கிடைத்தது.
வெள்ளையர்கள் தங்கள் சமயத்தைப் பரப்பவும் உள்ளூர் ஊழியர்களைப் பெறவும் வழங்கப்பட்ட எழுத்தறிவால் புத்தறிவு பெற்ற மக்கள் இங்கு மக்கள் மேலிருந்த கூண்டைத் தகர்க்க முயன்றனர். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ஆல்காட், பிளாவட்கி ஆகியோரின் நுழைவால் அம்முயற்சி தோற்றது. விடுதலைப் போராட்டம் வன்முறையில் திரும்பினால் இங்குள்ள குமுகியல் கட்டுகள் நொறுங்கிப் போகும் என்று அஞ்சிய காந்தியார் ‘வன்முறையின்மை’யை வலியுறுத்தி வெள்ளையருடன் இணக்கம் கண்டு அவர்களை அப்புறப்படுத்தினார். அதனால் இன்றும் பழைய கட்டுகள் தொடருகின்றன.
இவ்வாறு ஒரே வீச்சில் நொறுங்கிப் போயிருக்க வேண்டிய இப்பழஞ்சிறைக்கூடம் சிறுகச் சிறுகத் தான் நொறுங்கி வருகிறது. இதனூடாகத் தேசிய உணர்வும் சிறுகச் சிறுகவே துளிர்க்கிறது. தேசியத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத மக்கள் கூட இன்று தேசியத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் தேசியம் என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்ற ஒரு பொருளே புரிந்து கொள்ளப்பட்டது. 1962இல் தி.மு.க. விலிருந்து பிரிந்து சென்ற சம்பத் தன் கட்சிக்குத் தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். உடனே கருணாநிதி தேசியம் என்ற சொல்லைச் சுட்டிக்காட்டி சம்பத் இந்தியத் தேசியத்துடன் இணைந்து விட்டார் என்று கூறி சம்பத்தின் செல்வாக்கை வீழ்த்துவதில் வெற்றியும் கண்டுவிட்டார். இன்றும் தமிழகத்தில் மக்களின் புரிதல் மட்டம் மாறவில்லை. ஒரு சில அரசியல் குழுக்களிடமிருந்த தேசியம் என்கிற சொல்லாட்சி இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பரந்திருக்கிறது. ஐந்தாறு ஆண்டுக் காலம் ஈழவிடுதலை இயக்கங்கள் தேசியம் எனும் கருத்துருவைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசியும் அது இன்னும் பொது மக்கள் நடுவில் சென்று சேராத வகையில் இங்குள்ள கட்சிகள் தடுப்பதில் வெற்றி கண்டுவிட்டன.
இருந்தாலும் முழு இந்தியாவையும், இன்றைய இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், பர்மா உட்பட ஒரே ஆட்சியில் கொண்டு வந்த வெள்ளையர்களால் ஒரு பரந்த இந்தியத் தேசியம் புதிதாக உருவானது. பர்மாவும், வங்காளதேசம் உட்பட்ட பாக்கித்தானும் இன்றைய இந்தியாவுமாகப் பிரிந்த போது புதிய நிலைமைக் கேற்ப அந்தத் தேசியம் மாறியது. இன்று இம்மூன்று நாடுகளிலும் உள்ள வெவ்வேறு பகுதிகளில் தேசிய உணர்வு வெவ்வேறு மட்டங்களில் வளர்ச்சி நிலை கண்டுள்ளது. அவற்றில் சிலவே மண்ணை அடிப்படையாக் கொண்டுள்ளன. பஞ்சாபில் சமய அடிப்படையில் வெளிப்பட்டாலும் மண்ணை அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் வளர்ந்து வருகிறது. பாக்கித்தானின் சிந்து, பலுச்சித்தானம் வங்காள தேசத்தின் மலைவாழ் மக்கள், இந்திய மலைவாழ் மக்களான சார்க்கண்டு மக்கள், ஈழத்து மக்கள் என்று எங்கும் தேசிய இயக்கங்கள் வளாந்து வருகின்றன. ஆந்திரத்திலுள்ள தெலிங்கானா மக்களின் போராட்டத்தை ஒரு “மார்க்சிய" இயக்கம் பாட்டாளி மக்களின் புரட்சி என்று தவறான அடையாளம் காட்டி வருகிறது.
இவ்வாறான இன்றைய தெற்காசியச் சூழ்நிலை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த ஐரோப்பாவை ஒத்திருக்கிறது. அன்று அங்கிருந்த அரசுகளுக்குள் சிறைப்பட்டிருந்த தேசியங்கள் தங்கள் விடுதலைக்காக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. ஒரு நாட்டினுள் நடைபெறும் தேசியப் போராட்டத்துக்கு அண்டை நாடு ஆதரவளிக்கும். இவ்வாறு மாறிமாறி நடைபெற்றது. இதை முறியடிக்க ஆத்திரிய நாட்டுத் தலைமையமைச்சரான மெட்டார்னிக் என்பார் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி 7 உறுப்பு நாடுகள் கொண்ட ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. அதில் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டைச் சேர்ந்த தேசிய இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பது முகாமையான கட்டுப்பாடாகும். ஆனால் அக்கூட்டணி வெற்றி பெறவில்லை. பின்னர் மெட்டர்னிக் நாட்டை விட்டோடும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் உலகப் போர்கள் வந்தன. விடுதலைக்குப் போராடிய தேசியங்கள் விடுதலையடைந்தன. இன்று இத்தேசியங்கள் மீண்டும் ஒரு கூட்டமைப்பின் கீழ் வருவதற்காகக் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
நூறாண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் மெட்டர்னிக் மேற்கொண்ட அதே முயற்சியை இந்த நூற்றாண்டிறுதியில்[5] இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் காலஞ்சென்ற ராசீவ் மேற்கொண்டார். அதன் விளைவே தெற்காசிய ஒத்துழைப்பு (சார்க்) அமைப்பு. அதன் முகாமையான குறிக்கோள் ஒரு நாட்டினுள் நடைபெறும் தேசியப் போராட்டத்துக்கு அண்டை நாடுகள் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என்பதே. ஆனால் காசுமீரச் சிக்கல் மற்றும் சமயப் பூசல்கள் காரணமாக இருதரப்புப் பேச்சுகளை இந்த ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டங்களில் பேசக் கூடாது என்ற நிலையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு மெட்டர்னிக் திட்டத்துக்கு ஏற்பட்ட அதே விதியே இதற்கும் ஏற்பட்டுவிட்டது.
சரி, இவ்வாறு தேசியங்களின் எல்லைகள் விரிவதும் சுருங்குவதுமாக இருப்பது ஏன்? இந்த மாற்றங்களின் பின்னணியில் இயக்கும் விதி ஏதாவது உண்டா?
இக்கேள்விகளுக்கு நாம் விடையளிக்க முடியும். குமுகம் வகுப்புகளாகப் பிளவுண்டது. குமுகத்தின் செல்வத்தை உருவாக்குவதிலும் அதை நுகர்வதிலும் வெவ்வேறு பங்குகளை ஏற்கும் மக்கள் குழுக்கள் வகுப்புகள் எனப்படும். முற்றிலும் ஒட்டுண்ணி வகுப்புகளின் (அரசு, சமயம் போன்றவை) ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் போது மண் சார்ந்த தேசியம் தோன்றுவதில்லை; தேசிய உணர்வென்பதே மங்கிக் காணப்படும். இது பழஞ்சவைக் கிறித்துவத்துக்கு உட்பட்ட ஐரோப்பாவுக்கும் வெள்ளையருக்கு முந்திய இந்தியாவுக்கும் பொருந்தும்.
ஐரோப்பாவை முகம்மதியர் தாக்கினர். ஐரோப்பாவினுள் தேசியம் விழித்தது. ஐரோப்பிய வாணிகம் அராபியர் கைகளுக்கு மாறியது. ஐரோப்பிய வாணிக வளர்ச்சிக்குப் பழஞ்சவைக் கிறித்துவம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டையாக இருந்தன. குறிப்பாக வட்டிக்குக் கடன் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் இருந்த தடை தான் மிகப்பெரிய முட்டுக்கட்டை. யூதர்களுக்கு அந்தத் தடை இல்லாதிருந்ததால் அவர்கள் கையில் செல்வம் குவிந்தது. இந்நிலையில் உரோமுக்கு எதிராக மார்ட்டின் லூதர் உயர்த்திய போர்க் கொடி இத்தடையைத் தகர்த்தெறிய உதவியது. சமயத்தில் புரட்சியும் தொடர்ந்த இரத்தக்களரியும் புதிய ஐரோப்பாவைப் படைக்க உதவின. மார்ட்டின் லூதர் கிறித்துவ உலகின் பொருளியல் மேன்மையைப் பற்றிக் கவலை கொண்டிருந்தார் என்பதை மார்க்சு எழுதிய A Contribution to the Critique of Political Economy என்ற நூலில் அவர் தரும் மேற்கொள்களிலிருந்து அறியலாம்.
ஆனால் இந்தியாவில் முகம்மதியர்களும் ஐரோப்பியரும் வந்த நேரங்களில் கூட இங்கு உள்ளே ஒரு புரட்சி தோன்ற முடியவில்லை. சங்கராச்சாரியின் முயற்சி மடங்களை உருவாக்குவதிலும் கொஞ்ச நஞ்சமிருந்த புத்த மடங்களை அழிப்பதிலும் பார்ப்பனர்களுக்குப் புத்துயிரூட்டுவதிலும் முடிந்தது. பசவனின் முயற்சி விசயநகரப் பேரரசால் முறியடிக்கப்பட்டது. வெள்ளையர்கள் வரவால் உள்ளே நிகழ்ந்த மாற்றத்துக்கான முயற்சி காந்தியாரின் பின்னின்ற பிற்போக்குக் கும்பலால் முடியடிக்கப்பட்டது.
தற்கால இந்தியாவில் உருவான முதலாளியம் வெள்ளை முதலாளியத்தின் நிழலில் உருவானது. எனவே அதற்குத் தற்சார்பான சிந்தனை கிடையாது. அவ்வாறு தற்சார்பான சிந்தனையுடன் வெளிப்பட்ட முதலாளிய முயற்சிகளை இந்தத் தரகு முதலாளியம் உலக முதலாளியத்துடன் சேர்ந்து நசுக்கிவிட்டது. அத்துடன் அரசுப் பொறுப்பில் இருந்த ஒட்டுண்ணிகள் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு நாட்டைக் கடனாளியாக்குமளவுக்கு உலகச் சுரண்டல் விசைகளுடன் சேர்ந்து சுரண்டிக் கொழுத்து நிற்கின்றனர். இந்தக் கும்பலுக்கு “இடங்கை"க் கட்சிகளும் இயக்கங்களும் இன்றியமையாக் கோட்பாடு மற்றும் போராட்டப் பின்னணி அமைத்துக் கொடுக்கின்றன. இவ்வாறு எல்லை மீறிப் போய்விட்ட நிலைமையிலிருந்து தான் இந்தியாவினுள் இருக்கும் தேசியங்கள் விழிப்படைய வேண்டிருக்கிறது.
கூடி வாழ்வதன் மூலம் இழப்புகள் இல்லையென்றால் உலகக் குமுகமே ஒன்றுபட்டு நிற்க என்றும் தயங்குவதில்லை. தன் பண்பாட்டு, மொழித் தனித்தன்மைகளில் கெடுபிடியாயிருப்பதில்லை. தங்கள் வாழ்வே கேள்விக் குறியாகும் நேரத்தில் தங்களைக் காத்துகொள்ள ஒன்றுபடுவதற்கு ஓர் அடையாளத்தைத் தேடுகிறது. அந்த அடையாளம் சமயம், மொழி போன்றவையாய் தொடங்கினாலும் இறுதியில் நிலத்திலேயே போய் நிற்கிறது.
இவ்வாறு இந்தியத் தேசியம் இந்தியாவின் வரலாற்றுத் தொடர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒரு கட்டமாகும். இந்த இந்தியத் தேசியத்திற்குள்ளேயே அதனுள்ளிருக்கும் தனித் தேசியங்கள் வளர்ச்சி பெற்று முதிர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. அவ்வாறு முதிர்ச்சி பெற்று உரிமைகளைப் பெற்றுத் தற்சார்பு அடைந்த பின் அது மீண்டும் ஒரே தேசியமாக முயலும். ஒற்றுமை என்பது தங்கள் நலன்களையும் அடுத்தவர் நலன்களையும் ஒன்றாகப் புரிந்து கொண்டவர் நடுவில் உருவாகும் உண்மையான உறவாகும். அத்தனைய ஓர் ஒற்றுமை உருவாக இந்தியாவினுள் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்துத் தேசியங்களும் தன்னுரிமை பெற்றுத் தற்சார்புற்றுத் தன்னையும் பிறரையும் உணர்ந்து பின்னர் ஒன்றுபட வேண்டும். இது தான் ஐரோப்பா நமக்குத் தரும் பாடமாகும்.
அடிக்குறிப்புகள்:
[1] அதிகாரம் 21
[2] Story of Civilization - Our Oriental Heritage. இந்தத் தொகுதிகளில் அவர் ஐரோப்பியர்களை விளித்து அவர்களது வரலாற்றைக் கூறுகிறார்.
[3] சுப்பிரமணிய பிள்ளையின் முன்னோன் செகவீரபாண்டியன் எனும் பாஞ்சாலங்குறிச்சி சிற்றரசனிடம் பணியாற்றிய போது தான் கட்டபொம்மனின் முன்னோன் அவனைக் கொன்று பாஞ்சாலங்குறிச்சியைப் பிடித்தான். சுப்பிரமணியபிள்ளையின் முன்னோனை அவன் கொல்ல முயன்ற போது தன்னை உயிரோடு வைத்திருந்தால் பாளையத்தை ஆள்வதற்குரிய உளவுகளைக் கூறுவதாக வாக்களித்துத் தன்னுயிரையும் பதவியையும் தக்க வைத்துக் கொண்டான் என்று வரலாறு கூறுகிறது.
தானாவதி சுப்பிரமணிய பிள்ளையின் மகளைக் கட்டபொம்மன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டதாகவும் இதனால் கலக்கமுற்ற தானாபதி இவ்விடரிலிருந்து தப்ப கட்டபொம்மனை ஒழிப்பதே வழி என்று கருதி அவனை ஆங்கிலேயரிடம் மோதவிடுவதற்காகத்தான் திருவைகுண்டம் கொள்ளையை நடததினானென்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவனிய வெள்ளாளர்களின் அடுத்துக் கெடுக்கும் தன்மைக்கு இதை ஒரு சான்றாக நெல்லைச் சீமையில் கூறுகின்றனர். இது போல் அரசர்களைக் காட்டிக் கொடுப்பதில் பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் ஒரே வகையாகத்தான் நடத்திருக்கிறார்கள்.
[4] இந்தப் புரட்சி பற்றி கு. இராசய்யன் எனும் மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் தென்னிந்தியப் புரட்சி (South Indian Rebellion) என்ற நூலில் தெளிவான சான்றுகளுடன் எழுதியுள்ளார். 1857இல் நடந்த படைவீரர் கலகத்தையே முதல் விடுதலைப் போர் என்று அரசினர் கூறுவதற்கு மாறாக இது இருக்கிறது. அத்துடன் அந்நூலை இந்திய விடுதலைப் போரிலும் குமுகியலில் ஒடுக்கப்பட்டவர்களுக்கெதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற பேராட்டங்களிலும் உயிர் நீத்தவர்களுக்குக் காணிக்கையாக்கியிருந்தார். அத்துடன் நூலின் இறுதியில் வெள்ளையரை வெளியேற்ற ஆயுதந்தாங்கிப் போரிடாமல் “வன்முறையில்லாப் புரட்சி” நடத்திய காந்தியாரின் அணுகல் தான் 1947இல் நடைபெற்ற மதக் கலவரங்களுக்குக் காரணம் என்றும் அதில் சிந்தப்பட்ட குருதி நாட்டு விடுதலைப் போரில் சிந்தப்பட்டிருந்தால் உணர்ச்சி ஒன்றிய ஒருமைப்பாடு உருவாகியிருக்கும் என்றும் வரலாற்றுத் தெளிவுள்ள பேராசிரியர் எழுதியிருந்தார். இது பொறுக்குமா நம் ஆதிக்கங்களுக்கு? நா.சுப்பிரமணியன் என்ற பார்ப்பன வரலாற்றுத் துறை பேராசிரியர் தலைமையில் பேரா.இராசய்யனின் ஒழுக்கம், நேர்மை, தகுதி இவை அனைத்தின் மீதும் சேற்றை வீசி அவரைப் புண்படுத்திப் பல்கலைக் கழகத்திலிருந்தே வெளியேற்றினர். சாதி அடிப்படையில் புலித்தேவனை உயர்த்துவதற்காகக் கட்டபொம்மனை இழிவுபடுத்த முயலும் முக்குலத்தோரைச் சேர்ந்த சில “வரலாற்றாய்வாளர்” கண்களுக்குக் கூட அக்குலத்தைச் சேர்ந்த மருதுபாண்டியர்களின் வீர வரலாறு இன்னும் எட்டவில்லை.
[5] 20 ஆம் நூற்றாண்டு