5.11.15

சிலப்பதிகாரப் புதையல் - 6


4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை
           
விரிகதிர் பரப்பி யுலகமுழு தாண்ட
ஒருதனித் திகிரி உரவோற் காணேன்
அங்கண் வானத் தணிநிலா விரிக்குந்
திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லெனத்
5.      திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பனித்துத்              
திரைநீ ராடை யிருநில மடந்தை
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைக்
கறைகெழுகுடிகள்கைதலைவைப்ப                                                                                             
10.    அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக்
15.    குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத
அறுகாற் குறும்பெறிந் தரும்புபொதி வாசஞ்
சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப
20.    மல்லல் மூதூர் மாலைவத் திறுத்தென
இளைய ராயினும் பகையரசு கடியுஞ்
செருமாண் தென்னர் குலமுத லாகலின்
அந்திவா னத்தின் வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பெறிந் தோட்டிப்
25.    பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி    
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து
இல்வளர் முல்லையொடு மல்லிகை யவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல்
30.    அந்துகின் மேகலை யசைந்தன வருந்
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியுங் காதலற் களித்தாங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக்
கோலங் கொண்ட மாதவி யன்றியும்
35.    குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கிற் காரகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தன மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
40.    காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
பைந்தளிர்ப் படலை பரூஉக்கா ழாரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்தாங்கு
45.    ஆவியங் கொழுந ரகலத் தொடுங்கிக்
காவியங் கண்ணார் களித்துயி லெய்த
அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்
50.     மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்ப
55.    தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி யன்றியும்
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ரொடுங்கி
60.    வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலையத்து ஆரமு மணிமுத் தாரமும்
அலர்முலை யாகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
65.    வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்
துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த
இணையணை மேம்படத் திருத்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோ டூடற் காலத்
திடைக்குமி ழெறிந்து கடைக்குழை யோட்டிக்
70.    கலங்கா வுள்ளங் கலங்கக் கடைசிவந்து
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப
அன்ன மென்னடை நன்னீ்ர்ப் பொய்கை
ஆம்பல் நாறுந் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்ணறற் கூந்தல்
75.    பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை யார்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்துயி லெடுப்பி
80.    ரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்
அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் லேந்தி
மகர வெல்கொடி மைந்தன் றிரிதர
நகரங் காவல் நனிசிறந் ததுவென்.
வெண்பா

கூடினார் பால்நிலவாய்க் கூடார்பால் வெய்யதாய்க்
காவலன்[1]வெண்குடைபோற் காட்டிற்றே – கூடிய
மாதவிக்குங் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து
போதவிழ்க்குங் கங்குற் பொழுது.
பொழிப்புரை

விரிந்த கதிர்களைப் பரப்பி முழு உலகினையும் ஆண்ட தலைவனாகிய ஒப்பற்ற தனி ஆட்சிச் சக்கரத்தை உடைய திண்மை உடையவனான கதிரவனைக் காணேன், அழகிய பரப்பை உடைய வானத்தில் அழகூட்டும் நிலவொளியை விரிக்கும் திங்களானவன் எங்குள்ளானோ என்று திசைகளாகிய தன் முகமெல்லாம்  பசப்புற்று செவ்வென்ற மலர் போன்ற கண்கள் முழுமையும் நீர்வார உடல் முழுவதும் பனிப்பு எய்திய கடலை ஆடையாக உடைய இப் பெரும் நிலமடந்தை தன் கணவனைத் தொலைத்து மனங்கலங்குகின்ற துன்ப வேளையில்,

இறை செலுத்தும் மக்கள் துயருற, அவ்வாறு இறை செலுத்தாது காட்டிக்கொடுக்கும் குடிகளை ஒருதலையாகப் பற்றி வெற்றி பொருந்திய மன்னர் இல்லாத நேரம் அறிந்து மக்களின் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்து சேர்ந்த குறுநில மன்னர் போல, மனதிலே தங்கிய கொழுநரைப்  பிரிந்திருக்கும் மகளிர் பெருந்துயரை எய்தவும் தம் காதலரைக் கூடியிருக்கும் பெண்கள் பெருமகிழ்வு எய்தவும் புல்லாங்குழலில் கோவலர் முல்லைப் பண்ணையும் வண்டானது கூந்தலாகிய குழலில் இருக்கும் முல்லை மலரிலும் வாய்வைத்து ஊத, ஆறு கால்களைக் கொண்ட குறும்பர்களாகிய வண்டுகளின் இடையீட்டை விலக்கி அரும்புகளில் உள்ளடங்கிய மணத்தினை இளம்தென்றலாகிய செல்வன் தெருவெல்லாம் தூற்றவும் ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த மகளிர் அழகிய விளக்கினை ஏற்றவும் வளம் பொருந்திய மூதூரின் கண்ணே மாலைப் பொழுது வந்துற்றது.

            மிக்க இளம் அகவையினர் ஆயினும் பகையரசரை ஓட்ட வல்ல போர் மாட்சி பொருந்திய பாண்டியர் குலத்துக்கு முதல்வனாகையால் வெள்ளிய பிறை அந்திப் பொழுதின் செவ்விய வானத்தில் தோன்றி துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதாகிய குறும்பைத் துரத்தி தன் இயல்பு மாறாமல் வெண்மையான வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு விண்மீன்கள் ஆட்சி செய்த வெள்ளிகளாகிய விளக்குகளின் வெளிச்சத்தில் வீட்டில் வளரும் முல்லையும் மல்லிகையும் மற்றும் பல வகைப் பூக்களும் முகை விரிந்து பரந்த படுக்கையின் மீது பொலிவு பெற்று வந்த பவளத்தினால் செய்த எண் கோவையுடைய மேகலையும் ஆடையும் அசைந்து பரந்து உயர்ந்த அல்குலை வருத்த நெடு நிலாமுற்றத்தில் நிலவின் ஒளியாகிய பயனைப் பெற்று காதலனுக்குக் கலவியையும் புலவியையும் மாறிமாறி அளித்து விருப்பம் மிக்க உள்ளத்தோடு கோவலனை எதிர்கொண்டு அவனோடு கலந்து கலைந்த ஒப்பனையை மீண்டும் சரிசெய்த(அல்லது கலைந்த கோலத்தோடு இருந்த) மாதவி அன்றியும்,

மேற்குத் திசையிலிருந்து வரும் வெண்மையான கண்டு சர்க்கரையோடு கீழ்த்திசையிலிருந்து கிடைக்கும் கரிய அகில் முதலியவற்றைப் புகைக்கும் புகையைத் துறந்து வட திசையிலுள்ள இமயத்தில் பெறப்படும் ஒளி பொருந்திய வட்டக் கல்லில் தென் திசையிலிருந்து கிடைக்கும் சந்தனம் அரைபட,

            தாமரையின் இளம் தளிரையும் மகரந்தம் பொருந்திய அதன் செழுமையான மலரையும் கண்டார்க்கு விருப்பமுண்டாக்கும் குவளை மலரையும் கழுநீரின் சிறந்த மலரையும் பச்சிலையுடன் கலந்து தொடுத்த படலை மாலையும் பெரிய முத்தின் கோவையையும் அழகிய சுண்ணத் துகளொடும் (பொடியோடும்) சிந்திக் கலந்து கிடந்த வளமான படுக்கையில் தென்றலால் மயக்குற்றுக் காதல் மிகுந்து உயிர் போலும் கொழுநர் மார்பிடத்துப் பொருந்தி நீல மலர் போலும் கண்ணினையுடைய மகளிர் இன்பக் களிப்புடன் துயில் செய்ய,

            அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியும் அழகிய சிலம்பினைத் துறக்கவும் மெல்லிய துகிலை உடுத்த அல்குல் மீதிருந்து மேகலை நீங்கவும் மதி போலும் ஒளி பொருந்திய முகத்தில் சிறுவியர்ப்பு இல்லாமல் போகவும் சிவந்த கயல் போலும் நெடிய கண் தீட்டும் மையினை மறக்கவும் பவளம் போல் சிவந்த ஒளி வீசும் நெற்றி திலகத்தை இழக்கவும் வெண்மையான ஒளி பொருந்திய முறுவலைக் கோவலன் இழக்கவும் மை போன்ற கருமையான நீண்ட கூந்தல் புனுகு நெய் அணிதலை மறக்கவும் கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாதவளாய் மங்கல அணி அன்றி வேறு எந்த அணியினையும் அணியாதவளாய் வளைந்த குண்டலத்தைத் துறந்து வடிந்து வீழும் காதுகளை உடையவளாய் செயலற்ற நெஞ்சத்தையுடைய கண்ணகி அன்றியும்,

            தம் காதலரைப் பிரிந்த மாதர்கள் கண்டார் வருந்தும்படி உலையின்கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்கைப் போல் வெப்பம் எழ மூச்செறிந்தவர்களாக ஒடுங்கி இந்த இளவேனில் காலத்திற்கு அமைந்த நிலா முற்றத்திலே செல்லாது கழிந்து கூதிர்க் காலத்திற்கு அமைந்த இடை நிலத்திலே தென்றலும் நிலவும் புகாமல் குறுகிய சாளரக் கண்களை அடைத்து பொதிய மலையில் பிறந்த சந்தனமும் அழகிய முத்தின் ஆரமும் பரந்த முலையினை உடைய மார்பில் அடையப் பெறாது அவை வருந்தவும் தாழியில் மலர்ந்த குவளையும் செங்கழுநீரும் முதலிய குளிர்ந்த மலர்கள் தாம் விரும்பிய பூம்படுக்கையில் மேவப் பெறாது வருந்தவும் தன் சேவலோடு புணர்ந்த அன்னப் பேடை அப் புணர்ச்சியால் உருகி உதிர்ந்த வயிற்றின் தூவியைத் திணித்த இணையான அணையின் மீது திருந்திய துயிலைப் பெறாது தம் கணவரோடு முன்பு ஊடிய காலத்து இடை நின்ற குமிழை எறிந்து கோடியில் நின்ற குழையை வீசி கலங்காத அவர்களது நெஞ்சம் கலங்கும்படி கடைக்கண் சிவந்து குறுக்கிட்டுப் பிறழும் நெடுங்கண் தனிமையாலே புலம்புகின்ற கண்ணீர்த் துளிகளைச் சிந்த,

            அன்னமாகிய மென்மையுடைய நடையினையும் ஆம்பலின் மணம் நாறும் தேன் மிக்க நறுமணத்தையுடைய தாமரையாகிய சிவந்த வாயினையும் தண்ணென்ற நீரலையாகிய கூந்தலையும் உடைய நன்னீர்ப் பொய்கையாகிய பெண்ணானவள் இசைத் திறமையைத் தம்மிடத்தேயுள்ள வண்டுகளாகிய பள்ளி உணர்த்துவார் புறநீர்மை என்னும் பண்ணால் பள்ளி எழுச்சி பாட அழகு பொருந்திய  குவளையாகிய கண்மலர் திறக்க,

            பறவைகளின் ஒலியாகிய முரசுடனே புள்ளிகள் பொருந்திய சிறகினையுடைய சேவல் கோழியும் கூர்மையான வாயையுடைய சங்கமும் முறை வைத்து ஒலிக்கவும் கடல் போலும் பரப்பினையும் ஒலியினையும் உடைய ஊரைத் துயிலெழுப்பி இருள் நீங்குதலுறும் வைகறையளவும் இருள் மிக்க நள்ளிரவிலும் ஒரு மாத்திரைப் பொழுதும் பகலிலும் துயிலானாய் மணம் பொருந்திய மலராகிய அம்பையும் கரும்பாகிய வில்லையும் ஏந்தி மகரமாகிய வெற்றிக் கொடியையுடைய காமதேவன் திரிந்து கொண்டிருத்தலால் நகரத்தின் காவல் மிகவும் சிறந்தது.


வெண்பா

            நட்பாய்ச் சேர்ந்தார் பால் நிழலாகியும் சேராதார் பால் பகையாய்ச் சுடுவதாகியும் உள்ள சோழ மன்னனது வெண்கொற்றக் கொடையைப் போல் பூக்கள் இதழ்களை விரிக்கும் இராப்பொழுதிலே வானிலே ஒளிவிரிந்து செல்லும் திங்கள் கோவலனைக் கூடிய மாதவிக்கும் அவனைப் பிரிந்த கண்ணகிக்கும் காட்டிற்று.

இக்காதையிலுள்ள சிறப்புகள்

1.   முதலில் நிலத்தைப் பெண்ணாக உவமித்தல்:
            திசைகள் - முகம்
            மலர்கள் : கண்கள்
            திரை (கடல்) நீர் - ஆடை                                                                        
2.   கதிரவன் மறைந்து இரவு தோன்றுவதை பெருமன்னன் இல்லாத காலத்தில் காட்டிக் கொடுக்கும் கயவர்களைப் பற்றிக்கொண்டு நாட்டைக் கைப்பற்றி மக்களை வருத்தி இறை தண்டும் புதிய மன்னர்களுக்கு உவமையாகக் கூறுதல்.
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளாடொருதிறம் பற்றி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னர்
என்பதை முறையே மனைவிக்கும் கணவனுக்கும் பரத்தையருக்கும் உவமையாகக் கொள்ளலாம்.

3.   அந்தி வானத்தில் மாலையில் தோன்றுவது இளம்பிறை. அதுவும் இருளை நீக்கி வெளிச்சம் தருவது போல் இளைஞராயினும் பாண்டியர் பகையரசைக் கடிந்தமையை உவமையாகக் காட்டுகிறார். இது சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் இடம் பெற்ற இரு அரசியல் நிகழ்வுகள். சோழ நாட்டில் தொண்டைமான் இளந்திரையனும் பாண்டிய நாட்டில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் மேற்கொண்ட நடவடிக்கைகள் இங்கு காட்டப்பட்டுள்ளன. கரிகாலன் இறந்து புதிய அரசன் பதவி ஏற்காத இடைவேளையில் நிகழ்ந்ததாக முதல் நிகழ்வு இருக்க வேண்டும்.
           
அந்திவானம் என்பது இங்கு மேற்கு வானத்தை. இளம்பிறை தோன்றுவதும் மேற்கு வானத்தில்தான். இளம்பிறை என்பதனால் அதன் ஒளி சிறிதாகவும் அந்த ஒளி கிடைக்கும் நேரம் குறுகியதாகவும்தான் இருக்கும். எனவே மீனரசாண்ட, வெள்ளி விளக்கத்து என்பவற்றுக்கு விண்மீன்கள் ஆட்சி புரிந்த வெள்ளிகளாகிய விண்மீன்களை விளக்குகளாகக் கொண்ட என்று பொருள் கொள்வது பொருந்தும். மீனரசாண்ட என்பது இரட்டுற மொழிவாக பாண்டியர் ஆட்சியையும் குறிக்கிறது.

4.   கோவலர்கள் எனப்படும் ஆயர்கள் முல்லைப் பண்ணை புல்லாங்குழலிலும் வண்டுகள் பெண்களில் கூந்தலில் இருக்கும் முல்லை மலரிலும் வாய்வைத்து ஊதுவதை இரட்டுற மொழிதல் உத்தியால் திறம்படக் கூறியுள்ளார்.

5.   வண்டுகள், பூச்சி இனங்களில் மக்களுக்குக் கேடெதுவும் விளைக்காமல் மலர்களில் தேன் உண்டு வாழும் வகை வண்டு இனத்தைக் குறிக்க அறுகாற் குறும்பு என்ற வகைப்பாட்டைக் கையாள்கிறார் போலும்.  புன்கண் மாலைக் குறும்பு என்பதிலுள்ள குறும்பு, குறும்பர் என்ற மக்கள் பண்டைத் தமிழ் அரசர்களுக்கு எவ்வளவு தொல்லையாக இருந்துள்ளனர் என்பதற்கு ஒரு சான்றாகும்.  வள்ளுவர்கூட பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு 734 என்கிறார். பல்குழுவும் என்பதற்குள் இன்றைய அரசியல் கட்சிகளையும் சேர்க்கலாம் என்பது பட்டறிவு. குருகுல வேந்தனான யயாதியின் வெளியேற்றப்பட்ட மகன்களில் யது என்பவன் வழியினர் யாதவர் ஆவர். அந்த மரபில் வந்த கண்ணனால் குருகுலம் முடிவுக்கு வந்தது. பின்னர் கடற்கோளால் இன்றைய குசராத்துக் கடற்கரையில் சென்று சேர்ந்த ஆடுமேய்க்கிகளான ஒரு பிரிவினர் வட இந்தியாவில் மதுரை(ரா)வை உருவாக்கி ஆண்டனர். நாகர்களின் தாக்குதலுக்கு எதிர்நிற்க முடியாமல் மதுரையைக் கைவிட்டு கடற்கரை நகரான துவாரகையை அமைத்து ஆண்டனர். (துவார் = கதவு, கபாடம் = கதவு. மதுரை கபாடபுரம்,  மதுரை துவாரகை ஒற்றுமையை நோக்குக. இது குறித்து துவரையம்பதி என்ற எம் கட்டுரை பார்க்க.) அதையும் கடல்கொண்டுவிட உள்நாட்டில் தெற்கு நோக்கிப் பரந்தனர். அந்த மரபில் வந்தவன்தான் இருங்கோவேள். அவர்களில் தமிழகத்தில் இருந்தோர், ஒருவேளை, கரிகாலனின் நடவடிக்கையால் போலும், ஆயர்களின் ஒரு பிரிவினராகக் கலந்துவிட்டனர். ஆனால் கேரளம், தமிழகத்தின் குமரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் கிருட்டின வகை எனப்படும் குறுப்புகளாக வாழ்ந்துவருகின்றனர். விசயநகரப் பேரரசை உருவாக்கியவர்கள் குறும்பர்களே என்றும் கூறப்படுகிறது.
      
6.   செந்துகிர்க் கோவை செம்பவளத்தால் ஆன கோவையையுடைய மேகலை, துகில் நீங்கியதும் அல்குலை வருந்திற்று என்பது இடக்கரடக்கல். துகிலும் மேகலையும் நீங்குவதற்கு வருந்தின என்றும் பொருள் கொள்ளலாம்.

7.   மேற்கின் கண்டு சருக்கரையும் கிழக்கின் அகிலும் வடக்கின் சாணைக்கல்லும் தெற்கின் சந்தனமும் என்பது நயம்பட்ட உரை மட்டுமல்ல வாணிகச் சிறப்பையும் உயர்த்திக் காட்டுவதாகும். கிழக்கின் காரகில் என்பதனால் அகில் என்பது தமிழகத்தில் மேற்கு மலைத் தொடரில் வளரும் மரமோ செடியோ அல்ல, கிழக்கே கப்பலிலிருந்து இறக்குமதியாகும் ஒரு வாசனைப் பண்டம் என்பது தெளிவாகிறது. குமுகத்தின் உயர்குடியினர் உலகின் வளங்களையெல்லாம் இன்று போல் அன்றும் தூய்த்தனர். இன்று நாம் குறைகூறும் உலகளாவுதல் அன்றே இருந்தது என்பதைத் தெளிவாக இவ்வரிகள் விளக்குகின்றன.

8.   கண்ணகியின் அணிகளை நீக்கிய கோலம், இன்று கருதப்படுவது போல் கணவன் தன்னோடு இல்லையென்றாலும் அவன் உயிரோடு இருந்தால் பொட்டு, மலர் சூடல், அணிகலன்கள் பூட்டுதல் போன்ற மங்கல அடையாளங்களைச் சூட்ட வேண்டுமென்ற மரபுக்கு மாறானது. கணவன் பிரிந்த (கைவிட்ட) பெண், கணவனை இழந்த பெண்ணுக்கு நேரிடும் துன்பத்துக்கு இணையாக, சிறந்தன எல்லாவற்றையும் கைவிட வேண்டிய  கொடுமையும் அன்று இருந்துள்ளது. 

நெய்தல் திணையின் உரிப்பொருள் இரங்கல். இது கணவனைப் பிரிந்த பெண்ணுக்கும் சாவால் இழந்த பெண்ணுக்கும் பொதுவானது என்பதற்கு இது இலக்கியச் சான்று.

9.   தவள வாணகை கோவலன் இழப்ப என்ற வரி காம விளையாட்டில் கண்ணகியின் உயர் மதிப்பை, அவளைப் புறக்கணித்ததன் மூலம் நாள்தோறும் அவனுக்கு ஏற்பட்ட இழப்பை, மறைமுகமாக அடிகளார் உணர்த்துகிறார் என்றே கொள்ள வேண்டும்.

10.  காதலனைக் கூடியவர் கூடாதவர் என்ற இரு திறத்தாரையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளமை சிறந்த சுவை பயப்பது

11.                                இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஒட்டி
                              கலங்கா உள்ளம்  கலங்கக் கடைசிவந்து
                              விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்பு முத்துறைப்ப
என்ற வரிகள், கணவன்  பிரிந்து தனியாக வாழ்ந்த பெண்களுக்குப் பொதுவாகக் கூறப்பட்டாலும் ஊடலிலும் கண்ணகி சிறந்து விளக்கினாள் என்பதை அடிகளார் மறைமுகமாகக் கூறுவதாகவே கொள்ள வேண்டும். முன்பு மனையறம்படுத்த  காதையில் தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனவொருவார் என்று கூறியதனோடு இதனையும் பொருத்திப் பார்க்கும் போது கண்ணகி காதல் கலையில் வல்லவள் என்பதை அடிகள் இடக்கரடக்கலாகக் கூறியுள்ளார் என்றே கொள்ள வேண்டும்.
     
சிலர் கூறுவது போல் கண்ணகி காதல் கலையில் கோவலனுக்கு ஈடுகொடுக்காததாலேயே அவன் மாதவியை நாடினான் என்பது தவறு என்று காட்டுவதற்கு இந்த வரிகள் குறிப்பாக,கலங்கா உள்ளம் கலங்கக் கடை சிவந்து என்ற வரி வரிந்துகட்டிக் கொண்டு நம்முன் நிற்கிறது.

கண்ணகியின் கூடலை, மாலையும் தாரும் மயங்கின என்றும் பாம்புகளை ஒப்புமை காட்டியும் ஊடலை, கணவனைப் பிரிந்து துயரெய்திய பெண்களின் நீர் பொழியும் கண்களைக் கூறும் பாங்கில் மறைமுகமாகவும் கூறுவது பத்தினித் தெய்வமாகிய அவளுக்கென்று ஆசிரியர் ஓர் எல்லை வரையறுத்திருப்பதைக் காட்டுகிறது.

கோவலனுக்குப் ஊடல் செய்யும் பெண்களைப் பிடிக்காது என்று ஒரு கருத்தை புலவர்மணி ஆ.பழனி முன்வைக்கிறார். மாதவி ஊடியதே அவன் அவளை வெறுக்கக் காரணம் என்பது அது. அப்படியானால் கண்ணகியும் ஊடியதாலேயே அவளைப் பிடிக்காமல் மாதவியை நாடினானா? அப்படியானால்  அவன் ஒரு திரிந்த மனநிலை உள்ள ஆண்மகனா?
இல்லை என்ற விடையைத் தருகிறார் அடிகள்
                           கலவியும் புலவியுங் காதலற் களித்தாங்கு
                           ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக்
                           கோலங் கொண்ட மாதவி
      என்ற வரிகளின் வாயிலாக. புலவி எனப்படும் ஊடல் மூலம் கோவலனை மாதவி மகிழ்வித்தாள், அதாவது மாதவியின் ஊடல் கோவலனை மகிழ்வித்தது என்பதுதானே இதன் பொருள்?

கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியை நாடியது ஏன் என்பதற்கான விடையைக்  கண்டுபிடிக்க முடியாமல் ஆய்வாளர்கள் திணறுகிறார்கள். நாமும் முயல்வோம், அடுத்த கட்டமாக, கானல்வரியில்.

12.  படுக்கையில் அன்னத்தூவியை நிரப்பிச் செய்யப்பட மெத்தைகளாகிய அணைகளைப் பற்றிய குறிப்பு அவற்றைப் பயன்படுத்தியோரின் அளவிறந்த செல்வச் செழிப்பைக் காட்டுகிறது. அதாவது கலவியின் போது உடல் நெகிழ்வுற்றுத் தானே உதிரும் அன்னப் பேடையின் வயிற்றுப் புறத்து மெல்லிய துவியைத் திரட்டி மெத்தையும் தலையணையும் செய்வதை எண்ணிப் பாருங்கள்!

13.  பொய்கையை அன்னமென்னடை, ஆம்பல் நாறும் தாமரைச் செவ்வாய், நீர் அலையாகிய கூந்தல், குவளையாகிய கண்கள் உடைய பெண் என்ற வரிகள் மிகச் சிறந்த உவமை.

14.  பறவைகளின் ஒலியாகிய முரசம் சேவலின் கூவல், சங்கின் ஓசை ஆகியவற்றை இணைத்து முறை வைத்து ஒலித்தன என்பது நயமிக்க விளக்கம்.

15.  காதலர்கள் தூக்கத்தை மறந்து இராப்பொழுது முழுவதும் கலவியில் இன்புற்றிருப்பது காமனின் துயிலில்லா நகரக் காவலின் விளைவு என்ற நயமும் எண்ணி மகிழத்தக்கது. பகலிலும் துஞ்சான் என்பது பகலிலும் பரத்தைமை நடைபெற்றது  என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

16.  நிலவானது காதலரோடு சேர்ந்த பெண்களுக்கும் காதலனோடு சேர்ந்த மாதவிக்கும் தண்ணென்றும் சேராத கண்ணகிக்கும் காதலரைச் சேராத பெண்களுக்கும் வெய்யதாகவும் இருந்ததை மன்னனோடு நட்பாய் இருப்பவர்களுக்கு அவனுடைய குடை நிழலாகவும் பகையாய் இருப்பவர்களுக்கு வெய்யதாகவும் இருப்பதுடன் ஒப்பிட்டுள்ளதும் சிறந்த உவமை மட்டுமல்ல சிறந்த அரசியல் கண்ணோட்டமும் திறனாய்வும் ஆய்வுரையுமாகும். இந்தத் தன்மை அயல் மன்னர்களைக் குறித்ததாக அமைந்தால் அது அந்த அரசனுக்குச் சிறப்பு. தன் குடிமக்களில் தன்னை அளவின்றிப் புகழ்வோர் மீது இனிமையாகவும் தன் குறைகளைச் சுட்டிக்காட்டுவோர் மீது கடுமையாகவும் நடந்துகொள்வதாகப் பொருள்படுமானால் அது கொடிய, முறைதவறிய  ஆட்சி ஆகும். இளங்கோ அடிகள் இந்த இரு பொருள்களும் வெளிப்படுமாறு இதைக் கூறியுள்ளார்.

17.  மொத்தத்தில் இந்தக் காதை முழுவதும் சுவை மிகுந்த இயற்கை, அரசியல், பொருளியல், வாழ்க்கை என அனைத்துத் துறை சார்ந்த உவமைகள் நிறைந்துள்ளன.

18.  கதையைப் பொறுத்த வரை மாதவி கோவலனுடன் சேர்ந்து களிப்புடன் வாழ்ந்தாள், கண்ணகி கணவன் பிரிந்ததால் கண்ணீரில் வாடினாள் என்ற எளிய செய்திதான் இக் காதையில் உள்ளது.


[1]வெய்யதாங்காவலன் என்பது பாடவேறுபாடு.

0 மறுமொழிகள்: