20.11.15

தென்னிலங்கை


தமிழியக்கம்
தென்னிலங்கை
வெள்ளுவன் - குமரிமைந்தன்
      ′பஞ்சாங்கம்′ என்பதை  நம்மில் பெரும்பாலோர் ஆன்மீகம் மற்றும் சடங்குகள் பற்றிய மூடநம்பிக்கைக் குறிப்புகள் அடங்கியது என்றே கருதி வருகிறோம். அதனுள் புதைந்து கிடப்பது குமரிக் கண்டத் தமிழனின் உயர்ந்த வானியல் அறிவின் பதிவுகள் என்பதை நாம் உணரவில்லை. இடைச் செருக்கப்பட்ட சடங்குகள், நோன்புகள், மற்றும் கோவிற் திருவிழாக் குறிப்புகளுக்குள் அவை புதையுண்டு கிடக்கின்றன. அவ்வாறு மறைந்து கிடக்கின்றவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

      ′லங்கோஜ்யையினி மத்திய ரேகையிலிருந்து தேசாந்திரம் 34 வினாடிக்கு யோசனை 46 கிழக்கில் தஞ்சாவூர் அமைந்திருக்கிறது'. இந்தக் குறிப்பு ′மனோன்மணி விலாச  சுத்தவாக்கிய′ பஞ்சாங்கத்தில் காணப்படுகிறது.

     இந்தக் குறிப்பின்படி இலங்கையும் உச்சயினியும் ஒரே நிரைவரை(longtitude)யில் இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள உச்சயினி நகரம், கிரீன்வீச் நிரைவரை கிழக்கு 75°41′ யிலும், வடக்கு நேர்வரை(latitute) 23°11'யிலுமாக அமைந்துள்ளது. அது போல் இன்றைய சிறிலங்கா(Ceylon)வின் தலைநகரமும் மேற்குக் கரை நகரமுமான கொழும்பு, கிரீன்வீச் நிரைவரை கிழக்கு 79°.56' யிலும், வடக்கு நேர்வரை 6°.57'யிலுமாக அமைந்துள்ளது. அதாவது  'லங்கோச்சயினி மைவரை'(meridian) யிலிருந்து கிட்டத்தட்ட 5°கிழக்கில்தான் சிறிலங்கா அமைந்துள்ளது. ஆகவே ′லங்கோச்சயினி  மத்தியரேகை′ என்றக் குறிப்பில் காணப்படும் ′லங்கா′  இன்றைய சிறிலங்கா அல்ல என்பது தெளிவு.

       மேலும் உச்சயினி நகரம் நிலநடுக்கோட்டிற்கு வடக்கில் 23°.11'யில், ஏறத்தாழ கடகத் திருப்பத்தில் (Tropic of Cancer) இருப்பதைப் புரிந்துகொண்டால் மற்றொரு நகரமான ′லங்கா′ மகரத் திருப்பத்தில்(Tropic of Capricom)தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நம்மால் எளிதில் வர இயலும். ஆனால் உச்சயினி நகரம் அமைந்துள்ள 75°.41′ கிரீன்வீச் நிரைவரையில்(longtitude) மகரத் திருப்பத்திற்கருகில் நிலப்பரப்பு ஏதுமில்லை. இந்து மாக்கடல்தான் பரந்து விரிந்து காணப்படுகிறது.

         எனினும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரும் நிலப்பரப்பு இந்து மாக்கடல் பகுதியில் இருந்தது என்பதற்காக குறிப்புகள் பல பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த கடற்கோள்களில் அந் நிலம் சிறிது சிறிதாக கடலுள் மூழ்கிப் போன குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் எழுதியுள்ள நூல்களிலும் காணக்கிடைக்கின்றன.

    அலெக்சாண்டர் கோந்தரதோவ்(Alexander Kontrotov) என்ற உருசிய ஆய்வாளர் தன்னுடைய ′மூவாரிகளின் புதிர்கள்′ (The Riddles of Three Oceans) என்ற நூலில் இலங்கையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

        பண்டை கிரேக்கர்களும், உரோமர்களும் அறிந்திருந்த ′தாமிரபரணி'(Taprobane)யை, நிலப்பரப்புகள்  பற்றிய புதிய கண்டுபிடிப்புகளைக் குறித்து எழுதும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள், இன்றைய இலங்கை என்று நம்புகின்றனர். ஆனால் ′தாமிரபரணி′ பற்றிய விளக்கங்களில் பல இன்றைய இலங்கையோடு பொருந்தவில்லை. மேலும் தாமிரபரணியைப் பற்றிய தொன்மையான குறிப்புகள் ஏராளமாக உள்ளன. கிப்பர்க்கசு (Hipparchus) குறிப்பின்படி, தாமிரபரணியை எவரும் இதுவரை கடல்வழியாக சுற்றி வந்ததாக தெரிவில்லையாதலால், அதை ஒருத் தீவாகக் கருத முடியாததோடு  அது வேறொரு உலகத்தின் தொடக்கமாகவும், புவிக்கோளத்தின் எதிர்பக்கம் வாழ்பவர்களுடைய நிலத்தின் வடக்கு விளிம்பாகவும் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

(...Most historions of geographical  discoveries believe Ceylon to be the place that was known to the Greeks and Romans as Taprobane. But there are many features in the description of Taprobane that do not correspond to what we know about Ceylon. Taprobane is mentioned in very old sources. Hipparchus noted that no one had yet circumnavigated Taprobane, so that it might very well have not been an island but the beginning of another world the northern edge of the lands of those living opposite...)

       ... தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறான் என்று பிளினி (Pliny) கூறுகிறார். இத் தீவு தென் கோளரையிலிருந்ததையே இது புரிய வைக்கிறது. ஆனால் இன்றைய இலங்கையோ ஏறத்தாழ வடக்கு நேர்வரை 5°க்கும்  9°க்கும் இடையே அமைந்துள்ளது.

          (...Pliny said that on Taprobane the shadows fell to the south instead of north, and the sun rose on the left and set on the right. This means the island was in the southerm Hemisphere. Yet Ceylon is situated roughly between 5°and 9°North ...)
                                                                (The Riddles of Three Oceans. P. 169-170)

         ′லங்கா′ என்ற சொல்லை மேலை நாட்டார் Ceylon என்றே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனாலேயே இன்றைய இலங்கை பண்டை உரோம, கிரேக்கர்களின் குறிப்புகளோடு பொருந்தவில்லை. அவர்களின் குறிப்புகளிலிருந்து இலங்கையை (லங்காவை) Taprobane(தாமிரபரணி) என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. லங்கா மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டது என்பதும், அது நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே நெடுந்தொலைவு பரந்து விரிந்து கிடந்தது என்பதும், அங்கே நிழல் தெற்கு நோக்கி விழுவதால் அது தென்கோளரை (Sousthern Hemisphere)ப் பகுதியில் மகரத் திருப்பத்திற்கு தெற்கே இருந்தது என்பதும் உரோம, கிரேக்கர்களின் பழங்குறிப்புகளிலிருந்து உறுதிப்படுகின்றன.

    பஞ்சாங்கத்தின் மற்றொரு குறிப்பில் நிரட்சலங்கை என்ற இடம் 0°யில் (நிலநடுக்கோடு) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரட்சம் என்ற சொல்லிற்கு ′பூகோளசமரேகை′ என்று தமிழ்மொழி அகராதி பொருள் கூறுகிறது. அதே தமிழ்மொழி அகராதியில் லங்கை என்ற சொல்லும் விளக்கப்படுகிறது.

லங்காபுரி
லங்கை: இராவணன் நாடு. இது தென்கடலில் திரிகூடமலை சிகரத்திலே விசுவகர்மாவினால் உண்டாக்கப்பட்ட பட்டணமும் அதைச் சேர்ந்த நாடுமாம். இது முதலிலே மாலியவந்தனுக்கு நாடாகி அதன்பிறகு குபேரனுக்கு நாடாகி அதன் பிறகு இராவணனாலே கைப்பற்றப்பட்டது. இந்தப் பட்டணத்துக்கு ஏழு மதில்களுண்டு. இதைச் சேர்ந்த நாட்டைச் சேர்த்து எழுநூறு காதம் பரப்புடையது. இது சூரிய சித்தாந்தத்திலே சொல்லப்ப்டட மேகலா நகரங்கள் நான்கினுள் ஒன்று. இப்போதுள்ள லங்கை மேகலா ரேகைக்கு வடக்கே  அதி தூரத்திலிருப்பதாலும், ஆதி லங்காபுரி மேகலா ரேகையிலிருந்தமையாலும் கடலாற் கொள்ளப்பட்ட இலங்கையின் ஒரு கூறே தற்காலத்துளதாதல் வேண்டும்.
                                                  (தமிழ்மொழி அகராதி கதிரைவேற்பிள்ளை 1911)

இலங்கை:  இது தென்கடலில் திரிகூட சிகரத்தின் உச்சியில் 700 யோசனை பரப்பளவுள்ள தீவு. இதன் கோட்டையரண் விச்வகர்மனால்  இலட்சம்  யோசனை சூழ்ந்ததாக உண்டாக்கப்பட்டது. இதனை முதலில் மால்யவந்தனும் இரண்டாவது குபேரனும் மூன்றாவது இராவணனும் ஆண்டு இறுதியாக வீபீடனுக்கு விட்டனர். இது ஒருமுறை அநுமனாலும், இரண்டாவது முறை வாநரராலும் தீயிடப்பட்டது.
                                                                                  (அபிதான சிந்தாமணி- 1910)

            லங்கா மற்றும் லங்காபுரி இரண்டையும் ஒன்றென மயங்கி தமிழ்மொழி அகராதி  விளக்கம்  கூறியுள்ளது. ஆனால் ′இலங்கை′ க்கான அபிதான சிந்தாமணியின் விளக்கத்திற்கும் தமிழ்மொழி அகராதியின் ஒரு பகுதி விளக்கத்திற்கும் ஓற்றுமையைக் காண முடிகிறது.

            மேலும் தமிழ்மொழி அகராதி ′லங்காபுரி′யை மேகலா நகரங்கள் நான்கினுள் ஒன்று என்று கூறிகிறது. லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்ற நான்குமே மேகலா நகரங்களாகும்.

           
ரோமகபுரி
இது பழங்காலத்தில் மேகலா ரேகையிலே இலங்கைக்கு மேற்கே தொன்னூறு பாகை தூரத்திலே இருந்த பட்டினம்
சித்தபுரி
இது மேகலா ரேகையிலே இலங்காபுரிக்கு மேற்கே அதே பாகத்தில் ரோமகபுரிக்கு மேற்கே தொன்னூறு பாகையிலே உள்ளது.அமெரிக்கதேசம் என்று இப்போது  வழங்கும் தேசத்திலிருந்ததாதல் வேண்டும்.    __(தமிழ் மொழி அகராதி- 1911)
பத்திராசுவ வருசம்:
மேரு மலைக்கு கீழ்புறத்திலே பத்திராசுவனால் ஆளப்பட்ட பூமி.
__(பிதான சிந்தாமணி 1910)

    மயனுடைய சூரியசிந்தாந்தம் என்ற நூலில் இந்நான்கு நகரங்களைப் பற்றிய மிகவிரிவான குறிப்புகள் காணப்படுகின்றன என டாக்டர். ஆர், ஆர், கார்னிக் தன்னுடைய Mayan and Surya Siddhantha, Mayans on the high seas என்றக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

       ″புவிக்கோளத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒரே வீதத்தில் கதிரவன் ஒளிர்வதில்லை. எனவேதான் இடத்திற்கு இடம் காலவேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதை விளக்க, மயன் 90 பாகை இடைவெளிகளில் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தான். இந்நான்கு இடங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  அவை கிழக்கிலிருந்து துவங்கி பத்ராசுவ கண்டத்தில் ஏமகூடம், பரத கண்டத்தில் லங்காபுரி, கேதுமால கண்டத்தில் ரோமகபுரி குரு கண்டத்தில் சித்தபுரிஎன நான்காகும்.

        (To demonstrate further the sun does not  shine on all the earth at the same time and that there is a delay in the local time all over the world, Mayasura selects four places are separated by 90 degress. It is to be noted that all these four places are sea ports. The places starting from the east the Yamakoti in land called Bhadrasva, then Lanka in land called Bharata, then Romaka  in land called Ketumala, and than Siddhapuri in land called Kuru)
                                                                         (சூரிய சித்தாந்தம் 2001- 38-39-40)
            ′பத்ராசுவ கண்டத்தில் கதிரவன் உச்சியில் இருக்கும் போது, பரதகண்டத்தில் எழுகிறது. கேதுமால கண்டத்தில் நள்ளிரவும், குருகண்டத்தில் கதிரவன் மறைவும் நிகழ்கிறது. நண்பகல், கதிரவன் எழுச்சி, நள்ளிரவு மற்றும் கதிரவன் மறைவு என்றிந்த சுழற்சி பரதகண்டத்தை மையமாகக் கொண்டு உலக முழுவதும் கணக்கிடப்படுகிறது என்று சூரிய சித்தாந்தம் 2001-70-71 விளக்குகிறது.

(In xxii-70-71 it states that when sun is over head in Bhadrasva it is just rising in Bharata, it is midnight in Ketumala and sun set in Kuru. The cycle of Midday, sun rise, mid night, and sun set rotates from Bharata and roatates (round the world)[1]
புரி என்ற சொல் பட்டினம் (கடற்கரை நகரம்) என்று பொருள் கொள்ளும். மேகலா நகரங்கள் என குறிப்பிடப்படுகின்ற நான்கு நகரங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பதை சூரிய சித்தாந்தக் குறிப்புகளிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றைய கிரீன்வீச் மைவரை கணக்குபடி கிழக்கு 75-76 பாகைகளுக்கிடையில், இந்து மாக்கடலில் லங்காபுரியும், மேற்கு 14-15 பாகைகளுக்கிடையில் தென் அட்லாண்டிக் கடலில் ரோமகபுரியும், மேற்கு 104-105 பாகைகளுகிடையில் தென் பசிபிக் கடலில் சித்தபுரியும், கிழக்கு 165-166 பாகைகளுக்கிடையில் கிரிபதி தீவுக் கூட்டங்களுக்கருகில் பத்திராசுவமும் இருந்திருக்க வேண்டும் என்பதை சூரிய சித்தாந்தம் உணர்த்துகிறது. இந் நான்கு மேகலா நகரங்களும் இப்போது கடலுள் மூழ்கி விட்டன. (படம் பார்க்க)

       லங்கோச்சயினி மத்திய ரேகை என்ற சொல்லிலிருக்கிற உச்சயினி நகரம் கடகத் திருப்பத்தில் (Tropic of Cancer) இருக்கிறது. மேலும் இந்த உச்சயினி நகரம் இந்திய வானியலில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது என்பது தெரிந்ததே. அந்த சொல்லில் வரும் இன்னொரு நகரமான ′லங்கா′ மகரத் திருப்பத்தில் (Tropic of Capricorn) இருந்திருக்கிறது என்பதை அந்தச் சொல்லமைப்பின் அடிப்படையிலேயே நாம் உய்த்துணர முடியும். மகரத் திருப்பத்தின் லங்காவையும், கடகத் திருப்பத்தின் உச்சயினியையும் இணைக்கின்ற மைவரை (Meridian)யையே லங்கோச்சயினி மத்திய ரேகை என்று குமரிக் கண்டத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  ′ஞாலத்தின் நடுவரையுடன் (Equator) ஒரு குறிப்பிட்ட மைவரை (meridian) சேர்கின்ற இடத்தை வைத்தே, ஞாயிறு எழும் வேளையைத் தமிழர்கள் கணக்கிட்டு வந்தனர்′ என்று இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு[2] என்ற தன் நூலில் கில்பர்ட் சிலேட்டர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது. லங்கோச்சயினி மைவரை நிலநடுக்கோட்டை (Equator) வெட்டுமிடத்தில் அமைந்திருந்த நகரமே, பஞ்சாங்கக் குறிப்புகளில் ′நிரட்சைலங்கை′ என்று குறிப்பிடப்படுவதும் மேகலா நகரங்களில் ஒன்றுமாகிய லங்காபுரி. நிரட்சம் என்றால் அட்சம்(நேர்வரை அதாவது longitude) இல்லாதது அதாவது 0°.

    உலகமெங்குமுள்ள நிலப்புரப்புகளின் நேரங்களைக் கணிக்கவென்று ஒரு மைவரையை முதன்முதலில் அமைத்தவர்கள் குமரிக் கண்ட மக்களே. அவர்கள் அமைத்த அந்த மைவரையைப் பார்த்துதான், ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகர் இலண்டன் அருகில் உள்ள, கிரீன்வீச் வழியாகச் செல்லும் நிரைவரையை, மைவரையாக்கி அதனடிப்படையில் உலக நாடுகளின் நேரங்களை  வரையறுத்துள்ளனர்.

     உலகத் திணைப் படத்தில் (Atlas) குமரி  முனைக்குத் தெற்கே 75° கிரீன்வீச் கிழக்கு நிரைவரை (longtitude)யை ஒட்டித் தென்முனை (Soluth pole)வரை நீண்டு பரந்த கடல் பகுதியின் ஆழம் 600 அடிக்குட்பட்டதாகவே குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இப்பகுதிகள் குமரிக் கண்டம் சிறுகச் சிறுக கடலுள் மூழ்கிய போது இறுதியில் மூழ்கிய பகுதி என்பது புலனாகிறது.

     மகரத் திருப்ப லங்காவையும் அதைச் சார்ந்த பெரும் நிலப்பரப்பையும் தான் உரோம, கிரேக்கர்கள் தங்கள் பழங்குறிப்புகளில் Taprobane (தாமிரபரணி)என்று குறிப்பிட்டு வந்துள்ளனர் என்பதை நாம் தெளிவாய் புரிந்து கொள்ளலாம். மேலும் இதைத்தான் தமிழிலக்கியங்களும் ′தென்னிலங்கை′ எனச் சொல்லிச் சிறப்பிக்கின்றன. எனவே இந்த பகுதியே இராவணன் ஆண்ட ′தென்னிலங்கை′ யாக இருத்தல் வேண்டும் என்பது தெளிவு. ′தமிழ் மொழி அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள லங்கை தென்னிலங்கையும் லங்காபுரி நிரட்சலங்கையுமாகும்.

   பள்ளிப் பிள்ளைகளுக்கான பிரிஜ்பாசி திணைப்படப் புத்தகத்தில். இந்தியா இயற்பு(Physical) பக்கத்தில் குமரி முனையின் மேற்கில் தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு கடலடி மலைத் தொடரை 600 அடி ஆழத்துக்குள் பார்க்கலாம். அதிலிருந்து மேற்கு நோக்கி இரண்டு கிளைகள் ஒன்று மகரக் கோட்டிலும் இன்னொன்று நிலநடுக் கோட்டிலும் பிரிந்து செல்வதைக் காண முடியும். அதைத்தான் தமிழிமொழி அகராதி திரிகூட மலைச் சிகரம் என்று குறிப்பிடுகிறது.

     மேகலா நகரம் என்ற இந்தப் பெயர் தமிழ் இலக்கியப் பின்னணியில் நம்மை நெடுந்தொலைவுக்கு இழுத்துச் செல்கிறது. கடலில் செல்லும் கலன்கள் கவிழ்ந்தால் அங்கு தத்தளிப்பவர்களைக் காக்க மணிமேகலை என்றொரு தெய்வம் இருந்ததாக சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்கள் குறிப்பிடுவதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது, பார்க்கத் தூண்டுகிறது. இந்த நான்கு நகரங்களும் துறைமுக நகரங்கள் என்ற செய்தியுடன் மேகலை என்பது அரையில் அதாவது நடுவில் அணியப்படும் ஓர் அணியுமாகும். இவற்றை இணைத்துப் பார்க்கும் போது இந் நான்கு துறைமுக நகர்களும் ஏதோவொரு பொறியமைப்பு மூலம் கடலில் செல்லும் கலன்களைக் கண்காணித்து, தேவையானால் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இன்றுள்ளது போன்ற ஓர் உயர்ந்த தொழில்நுட்பம் இருந்தால்தான் இது இயலும். என்ன நம்பக் கடினமாக இருக்கிறதா? ஆனால் என்ன செய்ய, தடயங்கள் காட்டும் தடத்தைப் பின்பற்றுவதுதானே உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் சரியான வழியாக இருக்கும்?

          இது குறித்து இன்னும் இரண்டு குறிப்புகள்:

     1.புத்த சாதகக் கதைகளில் ஒன்றில் புத்தர் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு வாணிகனாகப் பிறந்தார். ஒருமுறை அவர் செல்லும் கப்பல் கவிழ்ந்துவிட ஏழு நாட்கள் ஊக்கம் இழக்காமல் நீந்திக்கொண்டிருந்தார். ஏழாவது நாள் மணிமேகலா தெய்வம் அவரைக் காப்பாற்றி அவர் அறியாத ஒரு நகரில் கொண்டு சேர்த்தது. புதிய அரசனைத் தேர்ந்தெடுப்பதற்காக வந்துகொண்டிருந்த யானை அவர் கழுத்தில் மாலையைப் போட்டு அவரை மன்னராக்கியது.

     2.சில ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு நாளன்று மேலே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியை, முதன்மை விளையாட்டு அரங்கத்தையே களமாகக்கொண்டு நாடகமாக நடித்துக் காட்டினர். மேற்படிக் கதையில் பூம்புகார் வாணிகன் அரசனான நாடு தாய்லாந்துதானாம். நம் வரலாற்றுத் துணுக்குகள் எங்கெங்கெல்லாம் சிதறிக் கிடக்கின்றன பாருங்கள்!

         இந்தக் கதையின் ஒரு பகுதியைத்தான் மாதவியின் மகளுக்குப் பெயர் சூட்டியது பற்றிக் குறிப்பிடும் இடத்தில் இளங்கோவடிகள் மிகத் திறமையாகக் காட்டிவிடுகிறார்.
   
          தென்னிலங்கை பற்றிய தேடலுக்கு அடிப்படையாய் அமைந்ததே பஞ்சாங்கத்தில் வரும் லங்கோச்சயினி, நிரச்சலங்கை என்ற செற்கள்தாம். இவை குமரிக் கண்டத் தமிழர்களின் வானியல் எய்தல் குறித்த மிகச் சிறப்பான பதிவுகள் என்பதில் ஐயமில்லை. இவை மட்டுமல்ல பஞ்சாங்கங்களின் முதன்மைப் பகுதியாக இருப்பவை முற்றிலும் வானியல் செய்திகளே. அச் செய்திகளுக்கும், கணியத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பண்டைத் தமிழர்களின் வானியல் நுட்படங்களைத் தெரிந்து கொள்வதற்குப் பஞ்சாங்கங்களிலிருந்து, வானியலுக்கு பொருந்தாத குப்பை கூளங்களை அகற்றி அவற்றை ஆய்வு செய்தல் இன்றியமையாதது. தமிழர் வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளில் நாட்டமுள்ளோர் இதில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும்.
                                                    
                                                                                                                                    


[1]   Paper persented by Dr. R.R. Karnik at the International Seminar on Mayanic Science and Technology  at Indra Ghandhi Auditorium, Tharamani, Madras. 28th- 31st  Jan 1993 P-11-12.
[2] கில்பர்ட் சிலேட்டர், இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு; தமிழாக்கம்; பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, திருநெல்வேலி தென்னிந்நிய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், சென்னை 1976 பக் 58

0 மறுமொழிகள்: