19.11.15

திராவிட மாயை - 3


1.தேசியப் போராட்டமும் வகுப்புப் போராட்டமும்

தோற்றுவாய்                   
தேசிய ஒடுக்குமுறை என்பது பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்டது என்ற எமது நிலைப்பாட்டுக்கு மறுப்பாக வகுப்பு(வர்க்க)ப் போராட்டச் சூழலைத் தேசியப் போராட்டத்தின் மேல் ஏற்றிக் கூறுவதாக ஒரு குற்றச்சாட்டு. இதைப் பார்க்கும் போது பொதுமைக் கோட்பாடுகள் இப்படியும் சிந்தனையைக் குழப்புமா என்று வியப்பாக இருக்கிறது.

            முதலாளியச் சுரண்டலுக்கு எதிரான வகுப்புப் போராட்டம் ஒரு குமுகத்துக்குள், இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு தேசியத்துக்கு உள்ளே, அதாவது ஒரு நில எல்லைக்குள்ளே, நடக்கும் அகமுரண்பாட்டின் விளைவு. தேசியப் போராட்டம் என்பது அந் நில எல்லைக்கு வெளியிலுள்ள விசைகளிடமிருந்து அத் தேசியத்தின், அதாவது அந் நில எல்லைக்கு உரிய மக்களின் நலன்களைக் காப்பது. அந் நலன்களில் முதன்மையானதும் தலைமையானதும் நடுவானதும் பொருளியல் நலன்கள். ஆனால் அப் பொருளியல் நலன்கள், பொதுவாக, தேசியப் போராட்ட விசைகளினால் முன்னெடுத்துவைக்கப்படுவதில்லை, ஏனென்றால் தேசியப் போராட்டங்களை முதன்முதலில் தொடங்கி வைப்பவர்கள் மிகப் பெரும்பாலும் ஒடுக்கலுக்குள்ளான தேசியத்தின் உயர் மட்டத்திலுள்ள ஒட்டுண்ணிகளே, அதாவது பண்ட விளைப்பு, உழைப்பு, பண்டங்களைப் பங்கிடுவதான வாணிகம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களே. அவர்கள்தாம் நேரடியாக தேசிய ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்கிறார்கள். இந்தியத் தேசிய விடுதலைப் போரட்டத்தைப் பொறுத்தவரை அதன் தொடக்கம் வியப்பூட்டும் தன்மை கொண்டது. இந்தியாவுக்கு விடுதலாகிப் போயிருக்கும் விடுதலையை வாங்கித் தந்ததாகப் பெருமை பேசிக்கொள்ளும் பேரவைக் கட்சியைத் தொடங்கி வைத்தவரே ஒடுக்கும் நாட்டைச் சேர்ந்த, ஒடுக்கும் அரசின் ஓர் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரே. இதற்கு என்ன விளக்கம் கிடைக்கிறது?

            இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஐரிசு விடுதலைப் போரால் வெளியேறிய போராளிகளை அடித்தளமாகக்கொண்ட ஓர் அடுக்கு. அடுத்துப் பெருமளவில் சென்றவர்கள் மரண தண்டனை, நீண்ட நாள் சிறைத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் அமெரிக்காவில் குடியேற இசைவு தெரிவித்ததால் விடுதலை பெற்று அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டவர்கள். அது போல் இந்தியாவில் ஆங்கிலப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்த இராபர்ட் கிளைவு யார்? இங்கிலாந்தில் தெருப்பொறுக்கித் திரிந்தவன். அவனது திறமை அந் நாட்டு ஆளும் மேற்குடிக் கூட்டத்துக்கு இங்கிலாந்தில் ஏற்பில்லை. எனவே அவன் இந்தியாவுக்குக் கப்பலேறினான். தன் திறமையால் ஐரோப்பியப் போட்டியாளர்களை ஒதுக்கித் தள்ளி ஆங்கில மேலாளுமையை நிறுவினான். இறுதியில் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் அவனுக்குக் கொடுத்த பரிசுதான் தெரியுமே, பலவிதமான ஏமாற்றுகளிலும் இரண்டகங்களிலும் ஊழலிலும் ஈடுபட்டான் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவனுக்கு வழங்கியிருந்த பட்டங்களையும் விருதுகளையும் பறித்து இழிவுபடுத்தினர்.

            அமெரிக்கர்களை அளவுக்கு மீறிச் சுரண்டியதால் அவர்கள் தங்களையும் தங்களுக்குக் குடியேற்றமாகக் கிடைத்த வளங்கள் கொழித்துக் கிடந்த மாபெரும் நிலப்பரப்பையும் தங்களுக்கே உடைமையாக்கிக் கொண்டார்கள்.

            இவற்றின் பின்னணி என்னவென்றால் இங்கிலாந்திலிருந்த ஆளும் கணங்கள் இவ்வாறு வெளிநாடுகளில் குடியேறிய மக்களையும் அவர்களைக் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் செல்லும் அதிகாரிகளையும் மதிக்காமல் இழிவுபடுத்தியதுதான். சில ஆண்டுகளுக்கு முன் தெருவில் காய்கறி விற்ற ஒரு பெண் ஒருவரைப் பார்த்துக் கூறினாள், பெரிய சென்ற்ரல் கவர்மென்று அதிகாரி என்ற நினைப்பு! இதுதான் மாநில அரசின் பதவி உயர்வால் வந்த ஒரு மாவட்ட ஆட்சியருக்கும் இ.ஆ.ப.வில் தேர்வாகி, அவருக்குக் கீழ் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் உதவி ஆட்சியாளருக்கும் உள்ள முரண்பாடு. இங்கு ஆட்சியர் உ. ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு ஒரு மடல் எழுத அதிகாரம் கிடையாது. (இந்த அடிப்படையான, சராசரிக் குடிமக்களே தெரிந்துவைத்திருக்கும் எளிய உண்மையைக் கூட மிகப் பெரும்பாலோரை அரசூழியர்களாகக்கொண்ட தமிழ்த் தேசியர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்படியிருக்க அவர்கள் இந்த உண்மைகளைக் கணக்கிலெடுக்கவோ பயன்படுத்தவோ எங்கே முயலப்போகிறார்கள்? அதுவும் தமக்கும் தம் மக்களுக்கும் நடுவரசுப் பணி வேண்டும் என்ற அடிப்படையில் ஒதுக்கீட்டைத் தமிழ்த் தேசியப் போராட்டக் குறிக்கோள்களில் முதன்மையான ஒன்றாக வைத்திருப்பவர்களல்லவா இவர்கள்?) இது போன்ற சூழலில் அமெரிக்காவில் மூலக் குடிகளை ஏறக்குறைய அனைவரையும் கொன்று ஒழித்துவிட்டதனால் தங்கள் கைப்பற்றில் இருந்த வட அமெரிக்கப் பகுதியை இங்கிலாந்திலிருந்து சென்றவர்கள் போரிட்டுத் தங்கள் உரிமையாக்கிக் கொண்டனர். இந்தியாவில் அந்த நிலை இல்லாததால் பேரவைக் கட்சியை உருவாக்கிய இயூம் உள்நாட்டு அதிகாரிகளின் நலன் காக்கும் அமைப்பு என்ற பெயரில் இந்தியர்களுக்கான ஓர் அமைப்பை உருவாக்கித் தந்தார்.

            இந்த நிகழ்முறை, அதாவது ஒடுக்கப்படுவோருக்கான போராட்டங்களை, ஒடுக்குவோர்களின் முரண்பாடுகளிலிருந்து தோன்றும் தலைவர் முன்னெடுத்துக் கொடுப்பது வரலாறு நெடுகிலும் காணக் கிடைப்பதாகும். உருசியாவில் சாருக்கு எதிராக மேற்குடியினர் தொடங்கிவைத்த உரிமைப் போராட்டம் அதில் ஈடுபட்டு உயிரிழந்த ஒருவரின் தம்பியாகிய லெனினைக் களத்துக்குக் கொண்டு வந்தது, எகிப்திய அரச குடும்பத்தில் பிறந்த உடன்பிறந்தோர்க்கு இடையிலான முரண்பாடுகளிலிருந்து வெளிப்பட்ட மோசே அடிமைகளுக்குத் தலைமை தாங்கியது போன்றவை கடந்த காலத்தில் என்றால், தெலுங்கர்களையும் மலையாளிகளையும் தமிழ் பேசும் மேல்சாதியினரையும் கொண்டமைந்த நயன்மைக் கட்சியின் தலைவர்கள் தமக்குப் போட்டியாளர்களாக விளங்கிய பார்ப்பனர் - பனியாக் கூட்டணியை எதிர்க்கவென்று உயர்சாதியினராகிய அவர்கள் தங்களால் ஒடுக்கப்படும் சாதியினர்க்குக் கல்வியும் சம உரிமையும் வேண்டுமென்ற திட்டத்தை முன் வைத்தது 20ஆம் நூற்றாண்டில் நடந்தது.

            இதற்கு எதிர்மறை எடுத்துக்காட்டு ஏசுநாதர். அயலவரான உரோமானியர்களை எதிர்த்து அவர் தொடங்கிய போராட்டம் வகுப்புப் போராட்டமாக, யூத மேட்டுக்குடியினர் - யூதக் குடிமக்களுக்கு இடையில் ஆனதாகத் திசைமாறிப் போனதால் அம் மக்கள் 16 நூற்றாண்டுகள் உலகமெல்லாம் பரந்து கெட வேண்டியதாயிற்று. தமிழகமும் அவ்வாறே பொருளியல் உரிமைக் குறிக்கோளையும் உடன்கொண்டு இயங்கிய நயன்மைக் கட்சி பெரியார் கைக்கு வந்ததும் பார்ப்பனர் எதிர்ப்பை மட்டும் கொண்டு சுருங்கிப்போனது. ஊடே பொதுமைக் கட்சியினரின் வகுப்புப் போராட்டமும் சேர்ந்து திசை  தெரியாமல் நடுத் தெருவில் நிற்கிறது தமிழ்த் தேசியம்.

0 மறுமொழிகள்: