27.11.15

இராமர் பாலப் பூச்சாண்டி - 4

இராவணனாரும் இராமபிரானும் ஒரே காலத்தவரா?


            இராமாயணப் போர் என்றொரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை என்பதற்கு வலிமையான சான்று ஒன்று உள்ளது. அது, இராவணனாரும் இராமபிரானும் சமகாலத்தவரல்லர் என்பது. அவர்களுக்குள் எட்டிலிருந்து 29 வரை தலைமுறை இடைவெளி உள்ளது.

            தொன்மச் செய்திகளிலிருந்து கார்த்தவீரியார்ச்சுனனும் வாலியும் இராவணனும் பரசிராமனும் சமகாலத்தவர் என்று தெரிகிறது. பரசிராமனின் தந்தை சமதக்கினி. அவனது ஆசிரமத்துக்கு கார்த்தவீரியார்ச்சுனன் வேட்டையாடிய களைப்புடன் வந்தான். சமதக்கினி காமதேனு எனும் தேவருலக ஆமாட்டின் உதவியால் சிறப்பான விருந்தொன்றை அவனுக்கும் அவனுடன் வந்த படையினருக்கும் வைத்தான். விருந்து முடிந்த பின் அந்தக் காமதேனுவைத் தனக்குத் தந்துவிடும்படிக் கேட்டான் கார்த்தவீரியன். சமதக்கினி மறுத்தான். கார்த்தவீரீயன் வல்லந்தமாக அதனைக் கவர்ந்து சென்றான். இதைத் தந்தை மூலமாக அறிந்த பரசிராமன் கார்த்தவீரீயனைக் கொன்றான். அதற்குப் பழிவாங்க கார்த்தவிரீயனின் மகன்கள் சமதக்கினியைக் கொன்றார்கள். அதனால் ஆத்திரமடைந்த பரசிராமன் 21 தலைமுறை அரசர்களைக் கொல்வதாகச் சூளுரைத்துக் கிளம்புகிறான். அவ்வாறு அவன் புறப்பட்ட பின் கதிரவன் மரபைச் சேர்ந்த மூலகன் என்பவன் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தித் தன்னைக் காத்துக் கொண்டான் என்று தொன்மம் கூறுகிறது. அதனால் அவனுக்கு நாரீகவசன் என்றும் ஒரு பெயர் உள்ளது. கதிரவ மரபை பரசிராமனின் தாக்குதலிலிருந்து மீட்டவன் என்ற பொருளில்தான் மூலகன் என்ற பெயரும் உள்ளது.

            மூலகனுடைய மகன் பெயர் தசரதன். ஆனால் இவன் இராமபிரானின் தந்தை அல்லன். இவனது வழியில் விருத்தசருமன் விசுவசகன் கட்டுவாங்கன் தீர்க்கபாகு இரகு அசன் என்ற வரிசையில் அசனின் மகன்தான் இராமனின் தந்தை தசரதன்.

            மேலேயுள்ள வரிசையில் முதல் தசரதனுக்கும் இரண்டாம் தசரதனுக்கும் இடைப்பட்ட காலத்தை இராமாயண ஆசிரியர் விழுங்கிவிட்டார். அது மட்டுமல்ல, பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்திய மூலகனை மறைத்து அந்தப் பெருமையையும் அசன் மகன் தசரதனுக்கு அளித்துள்ளார். நீண்ட நாட்கள் இடைவெளியை, தசரதன் 60,000 ஆண்டுகள் வாழ்ந்தான் என்று பொய்யுரைத்துச் சரிக்கட்ட முயன்றுள்ளனர்.

            அப்பொழுது கூட ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. பரசிராமன் எப்படி 21 தலைமுறை வாழ்ந்தான்? இதற்கு விடை எளிது. இன்று திருவாடுதுறை போன்ற ஆதினங்கள், சங்கர மடம் போன்ற மடங்கள் போல் பரசிராமன் போன்றவர்களை அணுகினால் இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். தொன்மங்களில் வரும் அகத்தியர்களைத் தொகுத்து மொத்தம் 34 பேரை இனங்கண்டு அகத்தியர் என்ற நூலில் தந்துள்ளார் துடிசைக்கிழார் சிதம்பரனார்.

            அரசர்களை பல தலைமுறைகள் முனிவர்கள் கொல்வது அல்லது அழிப்பது நம் நாட்டில் மட்டுமல்ல, பொதுவாக மனித வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்த ஒன்றாகவே வருகிறது. அதுமட்டுமல்ல, நம் மரபிலுள்ள இந்திரன் ஏழு முனிவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவனே என்பது மகாபாரதத்தில் நகுசன் என்ற குருமரபு அரசன் பற்றிய கதையிலிருந்து தெரிகிறது. தவமியற்றி இந்திர பதவி அடைந்த அவனை ஏழு முனிவர்களும் பல்லக்கில் தூக்கிக்கொண்டு இந்திராணியின் இருப்பிடம் சென்றனர். அப்போது விரைவாகச் செல்லுமாறு பணித்தான் என்பதற்காக அவனைப் பாம்பாகுமாறு பல்லக்குத் தூக்கி வந்த முனிவர்களில் ஒருவரான அகத்தியர் சபித்தார். அது மட்டுமல்ல இந்திரன் அவையில் முனிவர்களுக்குள்ள மேலாளுமையைக் காட்டும் நிகழ்வுகள் தொன்மக் கதைகளில் விரவிக் கிடப்பதைக் காணலாம். பண்டை எகிப்தில் பூசாரிகள் ஒன்றுசேர்ந்து ஒருவனை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தேர்ந்தெடுப்பதும் அக் காலம் முடிந்ததும் அவனை அகற்றிவிட்டு புதிய ஒருவனை அமர்த்துவதும் வழக்கமாயிருந்தது என்று கடவுளரின் முகமூடிகள்[1] என்ற நூல் கூறுகிறது.

            “எனவே கடவுள்களுக்குக் கிடைத்தது வன்முறையால் தாக்கப்பட்ட, முன்பிருந்த வேள்வியின் சிதறிய துண்டுகளே; அசுவினிகளின் மருத்துவக் கலை அவர்களுக்குப் பயன்பட்டது”.[2]

            பிரசாபதி வேள்வியைப் படைத்தான், வேள்வியைப் படைத்த பின் தெய்வீக அதிகாரமும் (பிராமணன்) அரச அதிகாரமும் (சத்திரியர்) படைக்கப்பட்டன; தெய்வீக அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் தொடர்ந்து அவிப்பாகத்தை உண்பவர் என்றும் அவிப்பாகத்தை உண்ணாதவர் என்றும் இருவகைப் பிறங்கடையினர், தெய்வீக அதிகாரத்திலிருந்து அவிப்பாகத்தை உண்பவர்களும் அரச அதிகாத்திலிருந்து அவிப்பாகத்தை உண்ணாதவர்களும் படைக்கப்பட்டனர். பிராமணர் அவிப்பாகத்தை உண்ணும் பிறங்கடையினர், அரச, வைசிய, சூத்திரர்கள் அவிப்பாகத்தை உண்ணாத பிறங்கடையினர்[3]. அப்போதிலிருந்தே வேள்வி அகன்றது; அதனைத் தெய்வீக அதிகாரமும் அரச அதிகாரமும் பின்தொடர்ந்தன. தெய்வீக அதிகாரம் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் பின் தொடர்ந்தது. தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்கள் வேள்விக்கான ஆயுதங்கள்; அரச அதிகாரத்தின் ஆயுதங்கள் குதிரையும் தேரும் கவசமும் வில்லும் அம்பும். அரச அதிகாரம் அதை அடைய முடியாமல் திரும்பியது; தன் ஆயுதங்களைப் போட்டுவிட்டு நடுங்கிக்கொண்டு நின்றது. தெய்வீக அதிகாரம் அதைப் பெற்றது; அதைப் பெற்ற பின் அதை மேலிருந்து மறித்துக் கொண்டு நின்றது; பெறப்பட்டு மேலிருந்து மறித்து நிறுத்தப்பட்டு நின்ற அது தன் சொந்த ஆயுதங்களை இனங்கண்டு தெய்வீக அதிகாரத்திடம் சென்றது. எனவே இப்போதும் கூட வேள்வி தெய்வீக அதிகாரத்திடமும் பிராமணனிடமும் ஆதரவைக் காண்கிறது. அப்போது அரச அதிகாரம் அதனைத் தொடர்ந்தது; ′இந்த வேள்விக்கு என்னை அழைப்பாயாக′ என்றது. ′அப்படியே ஆகட்டும், உன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக, தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில் தெய்வீக அதிகாரமாக மாறி வேள்விக்கு வருவாயாக′ என்று அது மறுமொழி கூறியது. ′அப்படியே ஆகட்டும்′ என்றது அது. இவ்வாறு அரச அதிகாரமும் ... தன்னுடைய சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் வேள்விக்குச் சென்றது. எனவே இன்றும் கூடச் சத்திரியன் தன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களோடு தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில் தெய்வீக அதிகாரமாக மாறி வேள்வியின் தலைவனாக வேள்விக்குச் செல்கிறான்.[4]

            ஏழு குக்குலங்களாக இருந்த தமிழ் மக்கள் ஒவ்வொரு நிலப் பகுதியிலும் தனித்தனிக் குழுக்களாக கோட்டைகள் எனும் குமுக ஒன்றிகளாக வாழ்ந்த ஒரு கட்டத்தில் அண்டை நிலப் பகுதியான நெய்தல் நிலத்தாரின் மேலாளுமையை எதிர்கொள்வதற்காக அக் கோட்டைகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்காக இந்திரன் என்ற பதவியை மருத நிலக் குக்குலப் பூசாரிகள் உருவாக்கினர். அவனுடைய முகாமையான பணி இந்த “கோட்டைகளை” அழித்து தன் ஆளுகையின் கீழ் கொண்டுவருவதாகும். இந்த நிகழ்முறையின் பின்விளைவாகத்தான் முதலில் வருணன், இந்திரன், மாயோன், சேயோன், கொற்றவை என்ற தலைமைகளின் கீழ் ஐந்து நிலங்களாகப் பிரிந்து அடுத்த நிலையில் ஐந்நிலங்களும் இணைந்த நாடுகள் உருவாயின. இந்த நிகழ்முறையில் புதிதாக உருவான அரசர்களுக்கும் பழைய பூசாரிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் பரசிராமன் கதை.

            மன்னர்களுக்கும் பூசாரியருக்கும் வந்த மோதல்கள் காமதேனு எனும், கேட்டதை எல்லாம் கொடுக்கும் தெய்வீக ஆமாட்டைக் குறித்து எழுந்ததாகவே தொன்மங்களில் கூறப்பட்டுள்ளது. சமதக்கினி தவிர, கார்த்தவீரியனைப் போன்றே வேட்டையாடிய களைப்பில் வசிட்டரிடம் வந்த கெளசிகன் என்ற அரசனும் கார்த்தவீரியார்ச்சுனனைப் போல் ஆமாட்டைக் கவர முயன்றான். வசிட்டரின் தவ வலிமையால் அவன் மகன்கள் மடிந்தனர். தவ வலிமையை உணர்ந்து கெளசிகன் தவமியற்றி விசுவாமித்திரன் ஆனான் என்கிறது ஒரு கதை[5]. இங்கு ஆமாடு பூசகர்களின் செல்வமாக இருக்க வேண்டும். மக்களிடம் வரி அல்லது காணிக்கை வடிவில் பூசாரிகள் பெற்று அரசர்களுக்குத் தந்த வருமானத்தைத் தாங்களே நேரடியாகப் பெற அரசர்கள் முயன்றதால் இந்த முரண்பாடு தோன்றியிருக்க வேண்டும். இன்று மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க நடுவரசு முயல்வது போன்றதே இது.

            மனித வரலாற்றில் பூசர்களின் மேலாளுமை இன்றும் தொடர்கிறது. இந்தியா போன்று அடித்தள மக்களைத் திட்டமிட்ட வறுமையில் அழுத்தி வைத்திருக்கும் நாடுகளில் பூசகர்களும் சாமியார்களும் பெரும் செல்வாக்குச் செலுத்துவதைக் காண்கிறோம். அப்படியாயின் வரலாற்றின் தொடக்க காலத்தில் அவர்களின் செல்வாக்கு எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும் என்பது தெளிவு. இந்தச் செல்வாக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் பூசகர்களுடன் அரசர்கள் உடன்பாடு கொண்டதையே பரசிராமன் கதை கூறுகிறது. அவனைப் பூசகர்களின் மேலாளுமையை நிலைநிறுத்திய, பூசகர் ஆற்றலின் ஓர் அடையாளமாகவே பார்க்க வேண்டும். இந்த வகையில் பரசிராமனைப் புரிந்துகொண்டால் தொன்மத்தில் கார்த்தவீரியன் காலம் தொட்டு 21 தலைமுறைகள், பின்னர் மூலகன் முதல் 8 தலைமுறைகள் இடைவெளியின் தன்மையையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த வகையில் இராவணனாரும் இராமபிரானும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களில்லை என்பது புலப்படும். எனவே இராவணனார் சீதையைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படும் நிகழ்ச்சி முழுக் கற்பனை. எனவே இராமாயணப் போரும் கற்பனை. ஆகவே இராமர் பாலம் என்ற ஒன்று கட்டப்பட்டிருப்பதற்குத் தேவையோ வாய்ப்போ இல்லை.

            இராமர் பாலம் இருந்ததாக வாதிடுவோர் தொன்மத்தையும் இதிகாசம் எனப்படும் மறவனப்பையும் காட்டுவதால் நாமும் அதே தொன்மத்தை அடிப்படையாக வைத்தும் அதைச் சார்ந்த குமுக அறிவியலின் துணையுடனும் நம் பக்கத்தை எடுத்து வைத்துள்ளோம்.


[1] Masks of Gods – Vol.I Primetive Mythology by Joseph Campbell
[2] (Keith A.B., Rig-Veda Brahmanas, P.121,Cambridge 1925, as quoted in Lokayatha, Debiprasad Chattobadhyaya,P.611)
[3] அவிப்பாகம் எனப்படுவது வேள்வித் தீயிலிட்டு அவிந்த பொருள், இங்கு மாடு. வேள்வித் தீயில் வெந்த மாடுகளைப் பார்ப்பனர்கள் மட்டுமே உண்டனர் என்பதை இது குறிக்கிறது.
[4] அயித்திரேயப் பிராமணம் (Lokayatha, தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாயா. பக். 611-12)
[5] மகாபாரதம்

0 மறுமொழிகள்: