25.11.15

திராவிட மாயை - 4


                       பேரவைக் கட்சியின் திரிவாக்கமும் திரிவிறக்கமும்
            ஆங்கிலரான இயூம் தொடங்கிய பேரவைக் கட்சியினர் ஒரு கட்டத்தில் பண்பாட்டு நிலையில் நின்று, ஆங்கிலர் நம் சாதியப் பண்பாட்டை அழிக்கின்றனர் என்ற நோக்கில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழகத்தில் அறிவறிந்து வாஞ்சிநாதனும் பஞ்சாபில் அதன் அடுத்த கட்டத்தில் பகத்சிங்கும் குறிப்பிடத்தக்கவர்கள். (மரண தண்டனை பெற்றுச் சிறையிலிருந்த போதுதான் பகத்சிங் பொதுமை இலக்கியங்களைப் பயின்றார் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. முன்பே படித்திருந்தால் அவரது ஆயுதம் ஓர் இந்தியக் குடிமகனையே குறிவைத்திருக்கும்). இந்தப் போக்குக்குத் தலைமை தாங்கியவர் பார்ப்பனராகிய திலகர். ஆனால் இந்தக் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் இச் சிக்கலைப் பார்த்தவர் தமிழரான வ.உ.சிதம்பரனார். வெள்ளையர் இந்தியாவைக் கைப்பற்றி ஆள்வது பொருளியல் சுரண்டலுக்கே என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு உள்நாட்டு மூலதனத்தில் இந்திய மக்களின் முன்முயற்சியால் இயங்கும் ஒரு கப்பல் நிறுவனத்தை உருவாக்கிக் கப்பல்களை இயக்கினார். மக்களின் தேசிய உணர்வுகள் வெளித்தோன்றத் தொடங்கிய அந்தச் சூழலில் குழுமம் நன்றாகவே செயற்பட்டது. ஆங்கிலக் கப்பல் நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைத்தன. தேசியக் குழுமமும் குறைத்தது. செல்கையருக்கு(பயணிகள்) பரிசுகள் வழங்கினர். அவரும் வழங்கினார் (இதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட திலகர் போன்றோர் பணம் திரட்டிக் கொடுத்தனர் என்பது செய்தி). இறுதியில் தேசிய முயற்சிக்கு எதிர்நிற்க முடியாமல் வ.உ.சி. மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திச் சிறையில் அடைத்தது ஆங்கில அரசு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எந்தப் போராளிக்கும் இல்லாத வகையில் சிறைச்சாலையில் செக்கை நிறுவி அதை இழுக்க வைத்த கொடுமை உலகில் எங்கும் நடவாதது. இதிலிருந்தே, தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமே பொருளியல் சுரண்டல்தான் என்பது தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும் நமக்கு. நாம்தான் எதையுமே புரிந்துகொள்வதற்குத் திறனற்றவர்கள் ஆவதற்காகத்தான் போட்டிபோட்டுக்கொண்டு பல்கலைக் கழகங்களுக்குள் நுழைய முண்டியடித்துக்கொண்டிருக்கிறோமே.

            பின்னர் நடந்ததென்ன? தேசியப் போராட்டம் தேசியச் சுரண்டலின் உயிர்நிலையில் கைவைத்துவிட்டது என்பதைக் கண்ட ஆங்கிலர் தங்களுக்குப் பொருத்தமான ஆளாக மோகன்தாசு கரம்சந்து காந்தியைத் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வந்து இறக்குமதி செய்தனர். அவரைப் பேச்சுகளுக்கு அழைத்து தலைவராக இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு செய்தனர். அவரது அறிவுரையால் அதுவரை கொல்லத் தயங்கிக்கொண்டிருந்த பகத்சிங்கைக் கொன்றனர். திலகரை நாடுகடத்திக் கொன்றனர். அரவிந்தர் போன்றோர் பிரிட்டனின் பிடியிலிருந்த இந்தியப் பகுதியிலிருந்து வெளியேறினர். அவர் துறவு பூண்டார். பாரதி யானை முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

            காந்தியும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் கையிலிருந்த இறையியல் கழகத்தில் புகுந்த ஆங்கிலரான அன்னிபெசன்றும் சேர்ந்து ஆடிய நாடகத்தில் திலகர் அணியில் இருந்த போராளிகள் களத்திலிருந்து அகன்றனர். சிறையிலிருந்து வெளியில் வந்த வ.உ.சி.யை வரவேற்கக் கூட ஓர் ஈ, காக்கை இல்லை.

            காந்தியோ, பனியா - பார்சிகள் மட்டும் ஆங்கிலர்களின் தரகர்களாக இற்றை(நவீன)த் தொழில்களில் ஈடுபடுவர், பிறர் இராட்டை சுற்றியும் வரட்டி தட்டியும் மரபுத் தொழில் செய்வர் என்றும் அதனால் ஆங்கிலர் சுரண்டலுக்கு எந்தக் கேடும் வராது என்றும் உறுதி கூறி, அதை மக்களை ஏற்க வைத்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விடுத்து மிகப் பெரும் தொழில் முதலாளியான பிர்லா எனும் பனியாவின் வளமனையில் தங்கியிருந்து கைராட்டை சுற்றும் யாகமும் செய்து காட்டினார். அந்த யாகப் பெருமையை இன்றளவும் ஏத்திப் போற்றாத நாவுண்டோ?

            ஆக, தேசியப் பொருளியல் சுரண்டல் என்பது ஒடுக்கப்படும் தேசியத்தின் எல்லைக்குள்ளிருந்து அத் தேசிய மக்களுக்குச் சொந்தமான செல்வங்களை அயலவர்கள் அல்லது அயலவர்களுக்காக அத் தேசிய எல்லைக்குள் வாழ்பவர்கள் வெளியேற்றுவது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

            மேல்தட்டினர் பொருளியல் சுரண்டலை முன்வைக்காததற்குக் காரணம் ஒன்று, ஒட்டுண்ணி வகுப்புகளுக்கு அமையும் வளமான வாழ்வு பொருளியல் படைப்பு - பங்கீடு ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒட்டுண்ணி வாழ்க்கையிலிருந்து பெறுவது. அத்தகைய வளமான வாழ்வைப் பெறுவதற்கு தேசிய விடுதலைக்குப் பின் மக்கள் தங்களுக்கும் பொருளியல் நலன்களில் பங்கு கேட்பார்கள். ஆனால் காந்தியின் அணுகல் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, புரட்சிகரமானது. மரபுத் தொழில் என்று மரபுப் பெருமையில் மக்களைத் திக்குமுக்காட வைத்துவிடுகிறார்களே, இன்றைய "இயற்கை உழவர்கள்" அவர்களைப் போல். தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையை வெளிப்பட முன்வைக்காமல் மரபுப் பெருமையை முன்வைத்து தேசிய முதலாளியர் தேசிய உரிமைப் போராட்டத்தில் பங்கேற்றால் அவர்களுக்கும் பின்னால் ஒட்டுண்ணிகளுக்குப் போல் ஆதாயம்தானே! ஆனால் பெரியார் போன்றவர்கள் உள் நுழைந்து அவர்களின் நலன்களுக்கு உலைவைத்துவிடும் வாய்ப்பு உண்டு, தமிழகத்தில் நடந்தது போல்.

1 மறுமொழிகள்:

Jeeva சொன்னது…

ஆங்கிலர் நம் சாதியப் பண்பாட்டை அழிக்கின்றனர் என்ற நோக்கில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொண்டனர். பஞ்சாபில் அதன் அடுத்த கட்டத்தில் பகத்சிங்கும் குறிப்பிடத்தக்கவர்கள். (மரண தண்டனை பெற்றுச் சிறையிலிருந்த போதுதான் பகத்சிங் பொதுமை இலக்கியங்களைப் பயின்றார் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. முன்பே படித்திருந்தால் அவரது ஆயுதம் ஓர் இந்தியக் குடிமகனையே குறிவைத்திருக்கும்). wrong statment. - Jeeva.