22.11.15

சிலப்பதிகாரப் புதையல் - 9


7. கானல்வரி
கட்டுரை

1.         சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப்
பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று
இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப்
பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண்வகையால் இசையெழீ இப்
பண்வகையாற் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருட னுருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியினோர்த்து
ஏவலன்பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்.

                                  வேறு

2.         திங்கள் மாலை வெண்குடையான்
                        சென்னி செங்கோ லதுவோச்சிக்
            கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
                        புலவாய் வாழி காவேரி
            கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
                        புலவா தொழிதல் கயற்கண்ணாய்
            மங்கை மாதர் பெருங்கற்பென்
                        றறிந்தேன் வாழி காவேரி.

3.          மன்னு மாலை வெண்குடையான்
                        வளையாச் செங்கோ லதுவோச்சிக்
            கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
                        புலவாய் வாழி காவேரி
            கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
                        புலவா தொழிதல் கயற்கண்ணாய்
            மன்னு மாதர் பெருங்கற்பென்
                        றறிந்தேன் வாழி காவேரி.

4.         உழவ ரோதை மதகோதை
                        உடைநீ ரோதை தண்பதங்கொள்
            விழவ ரோதை சிறந்தார்ப்ப
                        நடந்தாய் வாழி காவேரி
            விழவ ரோதை சிறந்தார்ப்ப
                        நடந்த வெல்லாம் வாய்காவா
            மழவ ரோதை வளவன்றன்
                        வளனே வாழி காவேரி.

                                 வேறு

5.         கரியமலர் நெடுங்கட் காரிகைமுன்
                        கடற்றெய்வங் காட்டிக் காட்டி
            அரியசூள் பொய்த்தார் அறனிலரென்
                        றேழையம்யாங் கறிகோ மைய
            விரிகதிர் வெண்மதியு மீன்கணமு
                        மாமென்றே விளங்கும் வெள்ளைப்
            புரிவளையு முத்துங்கண் டாம்பல்
                        பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர்.

6.         காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
            ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
            மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
            போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

7.         மோது முதுதிரையான் மொத்துண்டு
                        போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம்
            மாதர் வரிமணல்மேல் வண்டல்
                        உழுதழிப்ப மாழ்கி யைய
            கோதை பரிந்தசைய மெல்விரலாற்
                        கொண்டோச்சும் குவளை மாலைப்
            போது சிறங்கணிப்பப் போவார்கண்
                        போகாப் புகாரே எம்மூர்.
                           
                                  வேறு

8.         துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
                        தோற்ற மாய்வான்
            பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
                        போர்க்குங் கானல்
            நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
            உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
                        தீர்க்கும் போலும்.

9.         நிணங்கொள் புலால்உணங்கல் நின்றுபுள்
                        ளோப்புதல் தலைக்கீ டாகக்
            கணங்கொள் வண்டார்த்து உலாங்கன்னி
                        நறுஞாழல் கையி லேந்தி
            மணங்கமழ் பூங்கானல் மன்னிமற் றாண்டோர்
            அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல்
                        அடையேன் மன்னோ.
           
10.        வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றின்
                        மலர்கை யேந்தி
            விலைமீன் உணங்கற் பொருட்டாக
                        வேண்டுருவங் கொண்டு வேறோர்
            கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
            அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
                        அடையேன் மன்னோ.

                                  வேறு

11.        கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர்
            திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
            அங்கண்ஏர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே.

12.        எறிவளைக ளார்ப்ப இருமருங்கு மோடுங்
            கறைகெழுகயற் கண்ணோ கடுங்கூற்றங் காணீர்
            கடுங்கூற்றங் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
            மடங்கெழு மென்சாயல் மகளா யதுவே.                                                      

13.        புலவுமீன் வெள்உணங்கற் புள்ளோப்பிக் கண்டார்க்கு
            அலவநோய் செய்யும் அணங்கிதுவோ காணீர்
            அணங்கிதுவோ காணீர் அடும்பமர்தண் கானற்
            பிணங்குநேர் ஐம்பாலோர் பெண்கொண் டதுவே. 

                                  வேறு

14.        பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
            பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே
            முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
            எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

15.        திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
            விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
            மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
            இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே.

16.        வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
            தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே
            முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
            இளையவள் இணைமுலையே எனையிடர் செய்தவையே.

                                  வேறு

17.        கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
            உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்
            மிடல்புக் கடங்காத வெம்முலையோ  பாரம்
            இடர்புக் கிடுகும் இடைஇழவல் கண்டாய்.

18.        கொடுங்கண் வலையால் உயிர்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும்
வடங்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்பிழவல் கண்டாய்.

19.        ஓடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்ஐயர்
கோடும் புருவத் துயிர்கொல்வை மன்நீயும்
பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து
வாடுஞ் சிறுமென் மருங்கிழவல் கண்டாய்.

                                  வேறு

20.        பவள உலக்கை கையாற் பற்றித்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
குவளை யல்ல கொடிய கொடிய.

21.        புன்னை நீழற் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய கூற்றங் கூற்றம்.

22.        கள்வாய் நீலங் கையி னேந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.

                                  வேறு

23.        சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடவன்னம் சேரல் நடையொவ்வாய்.

                                  கட்டுரை

24.        ஆங்குக், கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும்
மன்னுமோர் குறிப்புண்டிவன் றன்னிலை மயங்கினானெனக்
கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ்வாங்கித்
தானுமோர் குறிப்பினள்போற் கானல்வரிப் பாடற்பாணி
நிலத்தெய்வம் வியப்பெய்த நீள்நிலத்தோர் மனமகிழக்
கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்குமன்.

                                  வேறு

25.        மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

26.         பூவர்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி
காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி.

27.        வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி.

                                  வேறு

28.               தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல்
ஒவ்வா வேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல்
வருதிர் ஐய
வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம்
விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும்
புகாரே எம்மூர்.

29.               மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து
மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்
கறிகோ மைய
நிறைமதியு மீனும் என அன்னம் நீள்புன்னை
அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்ப லூதும்
புகாரே எம்மூர்.

30.               உண்டாரை வெல்நறா வூணொளியாப் பாக்கத்துள்
உறையொன் றின்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதியாங்
கறிகோம் ஐய
வண்டால் திரையழிப்பக் கையான் மணல்முகத்து
மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்தூர்க்கும்
புகாரே எம்மூர்.

                                  வேறு

31.        புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி
            இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.

32.        தம்முடைய தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்.

33.        புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ யெய்துங் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ.

34.        புள்ளியன்மான் தேர்ஆழி போன வழியெல்லாந்
தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்தாய்மற் றென்செய்கோ
தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்தாய்மற் றெம்மோடீங்கு
உள்ளாரோ டுள்ளாய் உணராய்மற் றென்செய்கோ.

35.        நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற வோதமே
பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே.

36.        நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர்
ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய்வாழி கடலோதம்
ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய்மற் றெம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடலோதம்.

                                  வேறு

36.               நன்னித் திலத்தின் பூண்அணிந்து நலஞ்சார் பவளக்
                                                      கலையுடுத்துச்
செந்நெற் பழனக் கழனிதொறுந் திரையு லாவு
                                    கடற்சேர்ப்ப
புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த
            புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறைத்தால் அன்னை காணின்
                                    என்செய்கோ.

37.               வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள
                                                      வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரையு லாவு
                                    கடற்சேர்ப்ப
மாரிப் பீரத் தலர்வண்ண மடவாள்கொள்ளக்
                                    கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தாரென் றன்னை அறியின்
                                                என்செய்கோ.

38.               புலவுற் றிரங்கி அதுநீங்கப் பொழிற்றண் டலையிற்
                                                      புகுந்துதிர்ந்த
கலவைச் செம்மல் மணங்கமழத் திரையு லாவு
                                    கடற்சேர்ப்ப
பலவுற் றொருநோய் துணியாத படர்நோய் மடவாள்
                                    தனியுழப்ப
அலவுற் றிரங்கி அறியாநோய் அன்னை அறியின்
                                    என்செய்கோ.

                                      வேறு

40.        இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே
களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட் டுளதாங்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தவிம் மருண்மாலை.

41.        கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே
எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீ ருகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட் டுளதாங்கொல்
மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை.

42.        பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கணீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட் டுளதாங்கொல்
             மறவையாய் என்னுயிர்மேல் வந்தஇம் மருள்மாலை.

                                       வேறு

43.        கைதை வேலிக் கழிவாய் வந்தெம்
பொய்தல் அழித்துப் போனா ரொருவர்
பொய்தல் அழித்துப் போனா ரவர்நம்
மையல் மனம்விட் டகல்வா ரல்லர்.

44.        கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல் கென்றே நின்றா ரொருவர்
நீநல் கென்றே நின்றா ரவர்நம்
மானேர் நோக்க மறப்பா ரல்லர்.

45.        அன்னந் துணையோ டாடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றா ரொருவர்
நென்னல் நோக்கி நின்றா ரவர்நம்
பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்.

                                       வேறு

46.        அடையல் குருகே அடையலெங் கானல்
அடையல் குருகே அடையலெங் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய்
அடையல் குருகே அடையலெங் கானல்.

                                       வேறு

47.        ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரற் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினிற் பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள்.

                                       வேறு

48.        நுளையர் விளரி நொடிதருந்தீம் பாலை
இளிகிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையிற் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்னாவி கொள்வாழி மாலை.

49.        பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளின் நீழல்
இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்றா வேந்தன்
எயிற்புறத்து வேந்தனோ டென்னாதி மாலை.

50.        பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ யாயின் மணந்தார் அவராயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.

                                       வேறு

51.        தீத்துழைஇ வந்தஇச் செல்லன் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால்
பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்.

52.        எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தானொன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாளென
யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந் துருத்ததாகலின்
உவவுற்றதிங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதும்என் றுடனெழாது
            ஏவலாள ருடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர்த்
தாதவிழ் மலர்ச்சோலை ஓதையாயத்து ஒலியவித்துக்
காதலனுட னன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத் தரசு தலைவணக்குஞ்
சூழி யானைச் சுடர்வாட் செம்பியன்
            மாலை வெண்குடை கவிப்ப                         
            ஆழி மால்வரை அகவையா வெனவே.     

பொழிப்புரை

1.   சித்திரத் தொழிலமைந்த ஆடையுள் புகுந்து அழகிய கோட்டிலே மலர் சூடி மை தீற்றிய பெரிய கண்களையுடைய மணமகளின் ஒப்பனைக் கோலம் போல அழகினைப் பொருந்தி பத்தர், கோடு, ஆணி, நரம்பு என்ற இவ்வகை உறுப்புகளின் குற்றம் ஒழிந்த யாழினைத் தொழுது கையில் வாங்கி பண்ணல், பரிவட்டணை, ஆய்தல், தடவுதல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்று நிலைநிறுத்தப்பட்ட எட்டு வகைக் கலைத் தொழிலாலும் இசையை எழுப்பி பண் வகையில் குற்றம் நீங்கி மரகத மணி மோதிரங்கள் செறிந்த அழகிய காந்தள் இதழ் போலும் மெல்லிய விரல்கள் பாடுகின்ற வண்டின் இனம் போலப் பலவாகிய நரம்பின் மீதே செல்ல வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், (சீருடன்)உருட்டல், தெருட்டல், அள்ளல், (ஏருடைப்)பட்டடை என இசை நூலாரால் வகுக்கப்பட்ட எட்டு வகை இசைக் கரணத்தாலும் உண்டாகிய இசையின் கூறுபாட்டைத் தன் செவியாலே சீர்தூக்கி அறிந்து ஏவினபடி செய்தற்கு உரியேன் மேல் நமது பாணியாதெனக் கேட்டுச் செய்து கோவலன் கையிலே அவ்வியாழை நீட்ட, அவன் காவிரியைக் கருதினவும் கடற்கானலைக் கருதினவும் ஆகிய வரிப்பாட்டுகளை மாதவியின் மனம் மகிழும்படி வாசிக்கத் தொடங்கினான்.

2.   மாலை அணிந்த நிறை மதி போன்ற வெண்குடையை உடையவனாகிய சோழன் செங்கோலைச் செலுத்திக் கங்கையைக் கூடினாலும் காவிரியாகிய நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக. அங்ஙனம் வெறுக்காதொழிந்தது, கயலாகிய கண்ணை உடையவளே காதலையுடைய மங்கையின் பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன், வாழ்வாயாக.

3.   மாலையணிந்த பெருமை பொருந்திய வெண்குடையை உடையவனான சோழன் என்றும் வளையாத செங்கோலைச் செலுத்திக் குமரியைக் கூடினாலும் காவிரியே நீ வெறுத்தல் செய்யாய், ஆதலின் நீ வாழ்வாயாக. அங்ஙனம் வெறுக்காதொழிந்தது, கயலாகிய கண்களை உடையவளே மாதரது நிலைபெற்ற பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன், வாழ்வாயாக.

4.   புதுப்புனல் வந்தமை கண்டு மகிழ்ந்து வயலில் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் உழவர்கள் எழுப்பும் ஓசையும் நீர் மதகிலே தேங்கிப் பாய்வதால் உண்டாகும் ஓசையும் கரைகளையும் வரப்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும் புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர், மகளிரின் பல்வகை ஓசையும் மிக்கு ஒலிக்கச் சென்றாய், ஆதலால் காவிரி நீ வாழ்வாயாக; அங்ஙனம் நீ நடந்த செயலெல்லாம் அரணிடத்தைக் காக்கும் வீரரின் ஓசையையுடைய சோழனது வளமே காரணம் ஆகும், காவிரியே நீ வாழ்வாயாக.

5.   கருங்குவளை மலர் போலும் நீண்ட கண்களையுடைய தலைவியின் முன் கடலின் தெய்வமாகிய வருணனைப் பலமுறை சுட்டிக் கூறிய கைவிடுதற்கரிய உறுதிமொழிகளைக் கைவிட்டவர் அறங்களைப் புறக்கணிப்பவர் என்று ஐயனே ஏழையராகிய யாம் எங்ஙனம் அறிவோம்? விரிந்த கதிர்களையுடைய வெண்மதியும் விண்மீன் கூட்டமும் என்று மயங்கி விளங்குகின்ற வெண்ணிறமுடைய சுரிந்த சங்கையும் முத்தையும் கண்டு ஆம்பல் மலர் இதழ் விரிக்கும் காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்.

6.   காதலை உடையவராய் கடற்கரைச் சோலையிலே அன்று கையுறை(பரிசுப்பொருள்) கொண்டு எமது பின்னே வந்தவர் இன்று தாம் அயலவராகி யாம் இரக்கும் வண்ணம் நிற்கின்றார். அவ்வாறு நிற்பார் என்பதை ஏழையரான யாம் எங்ஙனம் அறிவோம் ஐயனே? மகளிருடைய முகத்திலிருக்கும் கண்ணும் நீரிலே தோன்றும் நிலவினது நிழலில் இணையாக மலர்ந்த நீல மலரையும் பிரித்தறிய மாட்டாது வண்டுகள் தடுமாறும் காவிரிப்பூம்பட்டினமே எம் ஊராகும்.

7.   மோதுகின்ற பெரிய அலையாலே தாக்குண்டு அசைந்து செல்கின்ற ஒலிக்கும் வாயையுடைய சங்கு சிறுமியர் மணலின் மீது இயற்றிய சிற்றில் முதலியவற்றை உழுது அழித்தலால், ஐயனே அவர்கள் மனம் வெதும்பி தாம் அணிந்திருந்த மாலையை அறுத்து அசைந்து செல்லும்படி மெல்லிய விரல்களால் வீசி எறிந்ததனால் சிதறிய நீல மலர்கள் மாலைப் பொழுதில் கடைக்கணித்தால் போல் கிடக்க அவ் வழியே செல்வோர் அவற்றைக் கண்களென ஐயுற்று அதைப் பார்த்த தம் பார்வை அப்பால் செல்ல முடியாத காவிரிப்பூம்பட்டினமே எம் ஊராகும்.

8.   கடலின் துறையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள் மணலிலே தோய்ந்து உழுத வடுக்கள் மறையும்படி அழகிய புன்னை மரத்தின் நிறைந்த பாரமாகிய பூக்கள் உதிர்ந்து அவற்றின் நுண்ணிய பூந்துகள் மறைக்கும் கானலிடத்தே இவளது நிறைமதி போலும் ஒளி பொருந்திய முகத்திலுள்ள கயலை ஒத்த கண்கள் செய்த, மருந்தால் போக்க முடியாத நோயினை சுணங்கு பரந்த மெல்லிய முலைகளே போக்கும் போலும்.

9.   கொழுப்பு பொருந்திய புலால் வற்றல் உலர்வதற்காக பறவைகளை ஓட்டுவதற்காக நிற்பது போல் நின்று கூட்டமாகிய வண்டுகள் ஒலித்துத் திரியும் நறிய புலிநகக் கொன்றையின் இளம் பூங்கொத்தைக் கையில் ஏந்தி மணம் நாறுகின்ற பூக்களையுடைய கானலிடத்துப் பொருந்தி ஒரு கொலைத் தெய்வம் அங்குள்ளதென்று அறியேன்;  அறிவேனாயின் அங்கு சென்றிருக்க மாட்டேன்.

10.  வலை வளத்தால் வாழ்பவருடைய சேரியில் வலை உலரும் முற்றத்திலே பூங்கொத்தைக் கையில் ஏந்தி, விற்பதற்கான மீன் வற்றல் உலர்தலைக் காப்பதைக் காரணமாக வைத்து தான் வேண்டிய உருவம் கொண்டு கொலைத் தொழிலுக்குரிய வேல் போலும் நீ்ண்ட கண்களையுடைய வேறொரு கூற்றம் அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானலிடத்தே வாழ்வதனை அறியேன். அறிந்திருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டேன்.

11.  கண்ணெனக் கயலையும் புருவமென வில்லையும் கூந்தலெனக் கரிய மேகத்தையும் எழுதி அவற்றுடன் காமத்தை விளைவித்துப் பிறரை வருத்தும் முழுமை பெற்ற முகம் நிலவோ காணீர்! அழகிய இருப்பிடத்தை உடைய வானில் இருப்பின் பாம்பு விழுங்கும் என்று அஞ்சி தோணியை வைத்து வாழ்கின்றவர்களுடைய சிற்றூரிடத்தில் வந்து வாழும் நிலவோ காணீர்!

12.  கரையிலே அலைகள் எறியும் சங்குகள் முழங்க அதற்கு அஞ்சி அங்கும் இங்கும் ஓடு்ம் குருதிக் கறை பொருந்திய கயல் போன்ற கண்ணை உடையவள் கூற்றமோ காணீர், கடல் வளத்தால் வாழ்கின்றவர்களது சிறிய ஊரில் மடப்பம் பொருந்திய மிக்க மென்மையையுடைய பெண்ணாகியது கூற்றம்தானா பாருங்கள்!

13.  புலால் நாறும் மீனின் வற்றலைக் கவரும் பறவையை ஓட்டி, பார்ப்பவர்க்கு மனத்தடுமாற்றமாகிய துன்பத்தை தரும் கொலைத் தெய்வமோ இது காணீர்! அடம்ப மலர்கள் பொருந்திய குளிர்ந்த கானலிலே செறிந்த மெல்லிய கூந்தலையுடைய ஒரு பெண் வடிவு கொண்டதாகிய கொலைத் தெய்வமோ இது காணீர்!

14.  பொழில் தரும் மணக்கும் மலர்களும் அம் மலர்களின் புதிய மணம் பரந்த மணலும் அங்கு நின்றவளுடைய குற்றமற்ற இனிய மொழியும் பருத்த இளமை பொருந்திய அழகிய முலையும் நிறைமதி போலும் முகமும் வளைந்த புருவமாகிய இரண்டு வில்லும் வரைவதற்கு அரியதாகிய மின்னல் போன்ற இடையும் என்னைத் துன்புறுத்தின.

15.  அலைகள் பரந்த நீர்த்துறையும் அழகிய மணல் பரந்த இடமும் மணம் பரப்பும் நறிய மலரும் மரம், செடி, கொடிகள் நெருங்கிய சோலையிடமும் மணம் பரந்த சுருண்ட கூந்தலும் மதியை ஒக்கும் அழகிய முகமும் இரண்டு கயல்கள் போன்ற விழி இணையும் என்னைத் துன்புறுத்தின.

16.  சங்குகள் வளரும் துறையும் மணம் பரந்த சோலையும் முறுக்கு விரிந்த மணமுள்ள  மலரும் அவள் தனியே உலவிய இடமும் முளை போல் வளர்ந்த இளம் பற்களும் (சிரிப்பும்) முழுமதியை ஒக்கும் முகமும் இளமைப் பருவத்தை உடைய அவளது இரு முலைகளும் என்னைத் துன்புறுத்தின.

17.  உன் மூத்தோர் கடலினுள் புகுந்து உயிர்களைக் கொன்று வாழ்கின்றனர்; நீயோ உடலினுள் புகுந்து உயிர்களைக் கொன்று வாழ்கின்றாய். வலிமையாகப் புகுந்து வெளிப்படும் வெம்மையான முலைகளோ சுமை மிகுந்தவை, அவற்றால் இடர்ப்பட்டு இடை ஒடிந்து அதை இழந்து விடாதே! (நான் அவற்றைத் தாங்கிக் கொள்கிறேன்).

18.  உன் தந்தையோ வளைந்த கண்களை உடைய வலையால் உயிர்களைக் கொல்வான். நீயோ உன் நெடிய கண்ணாகிய வலையால் உயிர்களைக் கொல்கிறாய். முத்து வடத்தைத் தாங்கியுள்ள முலைகளின் பாரத்தால் மேகத்தின் மின்னலைப் போல் அசைந்து தளரும் மெல்லிய இடையை இழந்து விடாதே!

19.  உன்னுடைய மூத்தோர் கடலில் ஓடும் படகினைக் கொண்டு உயிர்களைக் கொல்வர்; நீயோ உன் வளைந்த புருவத்தால் உயிர்களைக் கொல்வாய். உனது பெருமையினையும் பிறர் படும் துன்பத்தையும் நீ எண்ணிப் பார்ப்பதில்லை. முலைகளைச் சுமப்பதால் வாடுகின்ற உன் சிறிய மென்மையான இடையைப் இழந்துவிடாதே!

20.  பவளத்தால் செய்த உலக்கையைக் கையால் பற்றி வெண்மையான முத்துகளைக் குற்றுபவளுடைய சிவந்த கண்கள், குவளை போல அழகாக தோன்றினாலும் அவை கொடுமையானவை.

21.  புன்னை மரத்தின் நிழலில் புலால் நாறும் அலைவாயின் மீது அன்னப் பறவை நடப்பது போல் நடப்பவளாகிய இவளுடைய சிவந்த கண்கள் மிகவும் கொடியவை, அவை கூற்றமேயன்றி வேறில்லை.

22.  தேனை வாயில் ஏந்தி நிற்கும் நீலப் பூவைக் கையில் ஏந்திக் கொண்டு, உணங்கலை (கருவாட்டை)க் கொள்ள வரும் பறவைகளை ட்டுபவளது சிவந்த கண்கள் ஒளிசிந்தும் வேல்களல்ல, அவற்றினும் கொடியவை.

23.  மடப்பத்தையுடைய அன்னமே அவளோடு சேராதே, ஏனென்றால் அவளது நடைக்கு உனது நடை ஈடாகாது; எனவே ஊர்ந்து வரும் அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளோரை வருத்தித் திரிபவளாகிய இவளோடு சேராதே!

24.  இவ்வாறு கோவலன் யாழில் வாசித்த கானல்வரிப் பாட்டுகளைக் கேட்ட மான் போன்ற நெடிய கண்களையுடைய மாதவியும் இவன் உள்ளத்தே நிலைபெற்ற வேறொரு குறிப்பு உள்ளது. இவன் தன் நிலையிலிருந்தும் தடுமாறி நிற்கிறான் என மன வேற்றுமை கொண்டு அவ்வருத்தத்தை மனதில் வைத்துக்கொண்டே, அன்புணர்ச்சியால் மகிழ்ந்தவள் போன்ற தோற்றத்தைக் காட்டி யாழைக் கையில் வாங்கி, தானும் வேறோர் குறிப்புடன் இருப்பது போல அவனுக்குத் தோன்ற கானல்வரிப் பாடல் உருப்படிகளை அந்நிலத்துக்கு உரிய தெய்வம்(வருணன்) வியப்படையவும் நெடிய புவிலுள்ளோர் மனம் மகிழவும் யாழின் இசையோடு கலந்து ஒன்றுபட்ட வாய்ப்பாட்டால் பாடத் தொடங்கினாள்.

25.  இரு பக்கங்களிலும் வண்டுகள் மிகுந்து ஒலிக்க, அழகிய பூவால் ஆன ஆடையைப் போர்த்து கரிய கயல்கள் ஆகிய கண்களை விழித்து அசைந்து நடந்த காவிரியாகிய நீ வாழ்வாயாக! அங்ஙனம் நீ நடந்த செயல் எல்லாம் நின் கணவனாகிய சோழனது செங்கோல் வளையாமையாலேயே என்பதனை அறிந்தேன். நீ வாழ்வாயாக!

26.  பூக்கள் நிறைந்த சோலையிலே மயில்கள் ஆடவும் குயில்கள் விரும்பி இசை பாடவும் பேரழகு பொருந்திய மாலைகள் அருகில் அசையவும் நடந்த காவிரியே நீ வாழ்வாயாக! அங்ஙனம் நீ நடந்த செயலெல்லாம் நின் கணவனான சோழனது அச்சத்தை தரும் வேலின் ஆற்றலைக் கண்டே என்பதை அறிந்தேன், நீ வாழ்வாயாக!

27.  உன் கணவனான சோழனது வளநாடு மகவாக அதனை வளர்க்கும் தாயாகி ஊழி தோறும் நடத்தும் பேருதவியைக் கைவிட மாட்டாய். அவ்வாறு ஊழிதோறும் நடத்தும் பேருதவியைக் கைவிடாது தொடர்தல் உயிர்களைப் பாதுகாக்கும் சக்கரவழுதி(சக்கரவர்த்தி)யான நடுவுநிலையை உடையவனது அருளே ஆகும். காவிரியே நீ வாழ்வாயாக!

28.  இனிய கதிர்களையுடைய நிலவு போலும் ஒளிவீசும் முகத்தினை உடையவளது சிவந்த வாயின் அழகிய பற்களை இவை ஒத்து இல்லையாயினும் நீ்ங்கள் இந்த முத்துகளை வாங்குங்கள் என்று கூறி நாள்தோறும் உன்மத்தம் பிடித்து காமன் போல் வருகிறீர் ஐயா! ஒளிர்ந்து விளங்கும் வெண்மையான முத்துக்களைத் தந்து வாணிகர்கள் போல் மணம் சூழ்ந்த கானல் இடத்தில் பூமாலைகளைப் பெற்றுச் செல்லும் வீங்கலையாகிய ஓதம் வந்து செல்லும் புகாரே எம்மூராகும்.

29.  வலிமை பொருந்திய பரதர்களின் பாக்கமாகிய ஊரில் களவில் பெண்களைக் கூடியவரை அம் மகளிரது கைகளிலுள்ள தளர்ந்த வளையங்கள் காட்டித் தூற்றுவதை ஐயனே ஏழைகள் ஆகிய யாம் எங்ஙனம் அறியாமலிருப்போம்? அன்னமானது நீண்ட புன்னையினது அரும்பிப் பூத்த பூக்களின் பாரம் மிக்க கொம்பிலே ஏறி இருப்ப அவற்றை முழுமதியும் விண்மீன்களும் என்று கருதி மாலைப் பொழுது வந்ததாக கருதி வண்டு ஆம்பல் மலரைச் சுற்றி ஒலிக்கும் புகார்  நகரே எம் ஊர்!

30.  தன்னை உண்டவரை, அவ்வாறு உண்டிருக்கிறார் என்ற உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்தி வெல்லும் கள்ளை உண்போர் வாழும் கடற்கரை ஊராகிய பாக்கத்தில் மருந்து எதற்கும் அடங்காத காம நோயைப் பெண்களுக்குத் தருகின்றாய் என்பதனை ஐயனே நாங்கள் எவ்வாறு அறிவோம்? வண்டலால் ஆகிய தம்முடைய சிற்றில் முதலியவற்றைக் கடல் அலைகள் வந்து அழித்துவிட கையினால் மணலை வாரி இறைத்து மதிபோலும் முகத்தில் பகைவர் புண்ணில் தோய்ந்த வேல் போலும் நீண்ட கண்களில் நீர் பெருக சிறுமியர் கடலைத் தூர்க்கும் புகாரே எம் ர்!

31.  புணர்கின்ற துணையோடு சேர்ந்து விளையாடும் புள்ளிகளைக் கொண்ட நண்டினை நோக்கி பூங்கொத்துகள் செறிந்த சோலையில் என்னையும் நோக்கி எனது உணர்வு ஒழியப் போன நெய்தல் நிலத் தலைவனது இயல்பினை வளைந்த சுருள்களுள்ள கூந்தலையுடையவளே, என்னால் அறியக் கூடவில்லை.

32.  தம்முடைய அருள்நோக்கையும் தம்முடைய நற்பெயரையும் தன்னுடைய தேரையும் கைவிட்டு எம்மை நினைப்பதையும் கைவிட்டாரோ, கைவிட்டால் விட்டுவி்ட்டுப் போகட்டும். அழகிய மென்மையான பூங்கொத்துகளை உடைய அடும்புகளே, அன்னங்களே, அவர் நம்மை மறந்தாலும் நாம் அவரை மறக்கப்போவதில்லை.

33.  துன்பத்தைப் பெருக்கும் மாலைப் பொழுதில் தனிமையால் வருந்தும் என் கண்களைப் போல் துன்பத்தில் தவிக்காமல் இனிதாகத் தூங்கப் போகும் இனிய கள் திளைக்கும் வாயை உடைய நெய்தல் மலரே, நீ காணும் கனவில் கொடியவராகிய எம் தலைவர் இக் கானலுக்கு வரக்கண்டு எனக்குக் கூறுவாயா?

34.  பறவை போல் பறக்கும் குதிரை பூட்டிய தேரின் பைதா சென்ற வழி முழுவதையும் தெளிந்த நீரையுடைய வீங்கலையே நீ சிதைத்தாய்! வீங்கலையே நீ வேறென்ன செய்வாய்? இங்கு எம்மோடு இருந்து பழிதூற்றும் அண்டையாரோடு சேர்ந்துதானே நீயும் இருக்கிறாய்! என் துன்பத்தை நீ அறிய  மாட்டாய், நான் என்ன செய்வேன்?

35.  உறுதி கூறிய நம் காதலரது உருளையுடைய நெடிய திண்ணிய தேர் சென்ற வழி மறையும்படி ஊர்ந்து வரும் வீங்கலையே! குளிர் பொருந்திய பூக்களை உடைய சோலையே! துணையுடன் கூடி விளையாடும் அன்னமே! ஈரமான குளிர்ந்த நீர்த்துறையே!  இது தகாது என்று எம் தலைவர்க்கு நீங்கள் கூறாமலிருக்கிறீர்களே!

36.  உறுதி கூறிப் பிரிந்த நம் காதலரது உருளையை உடைய நெடிய திண்ணிய தேர் சென்றவழி மறையும்படி ஊர்ந்து வந்த வீங்கலையே! அவ்வாறு ஊர்ந்து வந்த நீ அவர் எம் மோடுள்ள உறவை முறித்துக் கொண்டது போல் கடலோடு உள்ள உறவை முறித்துக் கொள்ளவில்லை, ஆதலால் நீ வாழ்க!

37.  நல்ல முத்தாகிய அணிகலனை அணிந்து நலம் பொருந்திய பவளமாகிய மேகலையை உடுத்து செந்நெல் பயிர்களையுடைய மருத நிலத்துக் கழனி தோறும் அலைகள் உலாவுகின்ற கடற்கரையின் தலைவனே, புன்னை மரம் அடர்ந்த சோலையில் வலிய மகரக் கொடியையுடைய காமனது அம்புகள் தைத்த புதிய புண்கள் என் உடம்பைக் காண முடியாத வகையில் மறைக்க, அதை அன்னை கண்டால் நான் என்ன செய்வேன்?

38.  கடல் முத்தாகிய சிரிப்பைக் காட்டி அழகிய சிவந்த பவளமாகிய வாயைத் திறந்து பரதர் சேரியில் வலை உலரும் முற்றத்தில் அலைகள் உலவும் கடற்கரையின் தலைவனே, மாரிக் காலத்தில் பீர்க்கங் கொடியில் மலர்ந்த பூக்களின் நிறத்தைத் தலைவியானவள் கொள்வாளாயின், தெய்வத்தை வழிபட்டு இக் கொடுமையைச் செய்தவர் யார் என்று அன்னை ஆராய்ந்து அறிந்தால் யான் என்ன செய்வேன்?

39.  புலால் நாற்றம் பெற்றிருப்பதற்கு வருந்தி அந் நாற்றம் நீங்க பொழிலாகிய சோலையில் புகுந்து அங்கு உதிர்ந்த பலகலப்பான பழம் பூக்களின் மணம் கமழ அலை உலாவுகின்ற கடற்கரையை உடையவனே, பல வகையாய்த் துன்புறுத்தலால் இன்ன நோய் என்று கூற முடியாத படர் நோய்க்குத் தலைவியானவள் ஆளாகித்னித்துத் துன்புற்று வருந்த மெலிதலும் கலங்கலுமாய் எவராலும் அறியப்படாத அந் நோயை அன்னை அறியின் என்ன செய்வேன்?

40.  இளைய இருள் பரந்ததே! ஒளிசெய்யும் பகலவனும் மறைந்தானே! விலக்க முடியாத தனிமை தரும் துன்பத்தின் விளைவாகிய கண்ணீரைக் கண்கள் சொரிகின்றனவே! இதழின் முறுக்கு விரிந்த மலர்களை அணிந்த கூந்தலை உடையவளே, நம்மைப் பிரிந்த தலைவரது நாட்டிலும் நம்முடைய கைவளைகள் கழன்று விழுமாறு நெருப்பினைச் சிந்தி வந்த இந்த மருள வைக்கும் மாலைப்பொழுது இருக்குமல்லவா?

41.  கதிரவன் மறைந்தானே, கரிய இருள் பரந்ததுவே! இரட்டை மலர்கள் போன்ற கண்கள் துன்பத்தினால் நீரைச் சொரிந்தனவே! நிறைமதியை ஒத்த முகத்தினை உடையவளே, நம்மை விட்டுப் போன தலைவரது நாட்டிலும் திங்களை உமிழ்ந்து கதிரவனை விழுங்கிய இந்த மயங்கல் பொழுது உண்டல்லவா?

42.  பறவைகளின் பாட்டு ஒலிகள் அடங்கினவே; கதிரவன் மறைந்துவிட்டானே! நோய் மிகுந்து நிறுத்த முயன்றும் நில்லாத நீரை நீண்ட கண்கள் சொரிகின்றனவே! முறுக்கவிழ்ந்த மலர்களை நெருக்கமாக அணிந்த கூந்தலை உடையவளே, நம்மைப் பிரிந்த தலைவரது நாட்டிலும் என் உயிர் மீது இரக்கமற்றுத் தாக்கும் இந்த மயங்கல் வேளை உண்டல்லவா?

43.  தாழையை வேலியாகக் கொண்ட இந்த கழிவாய்க்கு வந்து நம் விளையாட்டை மறக்க வைத்துப் போனார் ஒருவர். அவ்வாறு விளையாட்டை மறக்க வைத்துப் போன அவர் நம் காதல் மனத்தை விட்டுப்போக மறுக்கிறார்.

44.  சோலை சூழ்ந்த கழிமுகத்துக்கு வந்து நீ அருள்வாய் என்று சொல்லி நின்றார் ஒருவர். அவ்வாறு நின்ற அவர், மான் போன்ற என் பார்வையை  மறக்கமாட்டார்.

45.  அன்னப்பறவை தன் துணையுடன் விளையாடக் கண்டு, நேற்று அதனையே நோக்கி ஒருவர் நின்றார். அவ்வாறு நோக்கி நின்றவர் பொன்னை ஒத்த நமது அழகிய சுணங்கு போல் நம்மை விட்டு  நீங்கமாட்டார்.

46.  நாரையே எம் சோலையில் வந்து அடையாதே! உடைகின்ற அலையை உடைய கடற்கரைத் தலைவனுக்கு எமக்கு  உற்ற  நோயை எடுத்து நீ கூறாததால் நாரையே நீ எம் சோலையில் வந்து அடையாதே!

47.  அங்ஙனம் கோவலன் பாடியவாறு பாடிய மாதவி காந்தள் மலர் போலும் மெல்லிய விரலால் கைக்கிளை குரலாகிய இன்னிசையுடைய செவ்வழிப் பாலை என்னும் இசையை அதனை முறையாகப் பாடி பின் வேறொரு பண்ணினைப் பாடத் தொடங்கினாள்.

48.  நுளையரது விளரிப் பாலையாகிய பண்ணினைப் பாடுங்கால், இளி என்னும் நரம்பு கைக்கிளை என்னும் நரம்பில் சென்று மயங்க வைத்து வந்து சேர்ந்தாய் மாலைப் பொழுதே!  அவ்வாறு மயங்க வைத்து வந்துசேர்ந்த கொள்ளையடிக்க வல்ல மாலைப் பொழுதே நீ என் உயிரைக் கொள்வாயாக!

49.  பிரிந்து சென்ற தலைவர் அன்புற்று உரைத்த பெரிய அருளின் நிழலில் தனித்திருந்து ஏங்கி வாழ்பவளுடைய உயிரை நீ சூழ்ந்துள்ளாய் என்றால், உள்ளே இருக்கும் வலிமை குறைந்த வேந்தனது மதிலின் புறத்தே முற்றுகையிடும் மன்னனுக்கும் உனக்கும் உள்ள உறவு யாது?

50.  துன்பமாகிய நோய் அதிகரிக்க கதிரவன் மேலைக் கடலில் சென்று வீழ உலகிலுள்ள மக்களோ கண்ணை மூடித் துயில, மருள வைக்கும் மாலைபொழுதே வந்தாய். மாலைப் பொழுது நீ ஆனால், முன்பு மணந்தவர் பிரிந்து சென்ற அவரே ஆயின் உலகமே வறுமையுற்றுப் போகும். நீ வாழ்க!

51.  தீயைப் பரப்பி வந்து வருத்தத்தைச் செய்யும் மருள வைக்கும் மாலைப் பொழுது நம்மை வருத்துமென்று கருதாது நாம் துணியும்படி இந்த நல்ல சொற்களோடே, பூ மணக்கும் சோலையில் கூறிய பொய்யாகிய உறுதி மொழியைப் பொறுப்பாயாக என்று பெரிய கடலாகிய தெய்வமே, உனது மலர் போன்ற அடியை வணங்குகிறேன்.

52.  என்று மாதவி பாடக் கேட்டு, நான் கானல் வரியினைப் பாட, அவள் அப்படிப் பாடாமல் என்னைத் தவிர வேறொன்றின் மேல் மனம் வைத்து வஞ்சகத்துடன் கூடிய பொய்கள் பலவற்றைக் கூறும் மாயத்தாளாகிப் பாடினாள் என்று கோவலன் எண்ணி யாழிசையின் மேல் தனது ஊழ்வினை வந்து தொடுத்தது ஆதலால், நிறைமதி நாளில் பொருந்திய நிலவு போன்ற முகத்தினையுடைய மாதவியை, அகத்திட்ட கை நெகிழ்ந்தவனாய், பொழுது கழிந்தது ஆதலால் இங்கிருந்தும் எழுவோம் என்று, அவளோடு இணைந்து எழாமல், ஏவலாளர் தன்னைச் சூழ்ந்து உடன் வரக் கோவலன் சென்றான். அவ்வாறு போன பின்பு, தாது விரிந்த பூக்களை உடைய சோலையில் ஆரவாரத்தை உடைய குழுக்களின் ஒலி அடங்க, செயலற்ற மனத்தினளாய் வண்டியினுள் அமர்ந்து, காதலனுடன் செல்லாது, அகன்ற பெரிய உலகிலுள்ள அரசர்களைத் தலைவணங்கச் செய்யும் முகப்படாம் அணிந்த யானையையும் ஒளி பொருந்திய வாளையும் உடைய சோழனது மாலை அணிந்த வெண்குடையானது பெரிய சக்கரவாள மலை உட்படும்படி நிற்க என்று வாழ்த்தியவாறு மாதவி தனியே தன் வீட்டை அடைந்தாள்.

இக் காதையில் உள்ள சிறப்புகள்
1.   வரி, குரவை என்பவை முறையே தனியாள்களும் குழுவினராகவும் நிகழ்த்தும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கான பெயர்களாகும். ஆங்கிலத்தில் solo, chorus, choir என்பவற்றுக்கு இணாயானவை.

2.   யாழை ஒரு மணப் பெண்ணா உவமை கூறுதல்.
3.   யாழின் அமைப்பு, அவற்றின் உறுப்புகள் நான்கு, அவை குற்றமற்றிருப்பது, இசை எழும் வகைகள் எட்டு, இசைச் செயற்பாடு எட்டு முதலியவை கூறப்படுகின்றன. அரங்கேற்றுக் காதையில் யாழாசிரியர் அமைதி கூறும் போது இவை கூறப்படவில்லை. வேங்கடசாமியார் உரையில் இந்த  நான்கு, எட்டு பற்றிய விரிவான செய்திகளும் மேற்கோள் செய்யுள்களும் உள்ளன.
1.உறுப்புகள் 4.
1.பத்தர்,            3.ஆணி,
2.கோடு,           4.நரம்பு.
2.   இசை எழுப்பும் வகைகள் 8
1.பண்ணல்,            5. செலவு,
2.பரிவட்டணை,     6. விளையாட்டு,
3.ஆராய்தல்,           7. கையூழ்,
4.தைவால்,             8. குறும்போக்கு.
3.   இசைக் கரணங்கள் 8
1.வார்தல்,         5. உருட்டல்,
2.வடித்தல்,         6. தெருட்டல்,
3.உந்தல்,            7. அள்ளல்,
4.உறழ்தல்,         8. பட்டடை.

இவற்றிற்கான விளக்கங்கள்

பத்தர், கோடு ஆகியவை மரத்தால் செய்யப்படுகின்றன. மரத்தின் குற்றங்கள் வெய்யிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதியுள்ள இடத்தில் வளர்தல்.
1.பத்தருக்குப் பொருத்தமானவை குமிழ மரம், முருக்க மரம், தணக்க மரம் என்பவை,
2.கோட்டுக்கு: கொன்றையும் கருங்காலியும்,
3.ஆணி – முறுக்காணி,
4.நரம்பு:
நரம்பின் குற்றங்கள்: கொடும்புரி, மயிர், தும்பு, முறுக்கு.

இசை எழும்பும் வகைகள்
1.பண்ணல்          : பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை நட்பான                                         நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல்,
2.பரிவட்டனை      : அவ் வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும்
                                             ணஞ்செய்து தடவிப் பார்த்தல்,
3. ஆராய்தல்         : ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது,
4. தைவல்           : அநுசுருதி யேற்றுதல்,
5. செலவு              :த்தியிலே நிரம்பப் பாடுதல்,
6. விளையாட்டு     : பாட நினைத்த வண்ணத்திலே சந்தத்தை விடுதல்,
7. கையூழ்             : வண்ணத்தில் செய்த பாடல் எல்லாம் இன்பமாகப் பாடுதல்,   
8. குறும்போக்கு    : குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல்.

அரும்பதவுரை யாசிரியர் காட்டிய சூத்திரங்கள்:

1.     வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்
        விலக்கின் றிளிவழி கேட்டும்...
        இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது
        விளைப்பரு மரபிற் பண்ண லாகும்,

2.     பரிவட் டணையி னிலக்கணந் தானே
        மூவகை நடையின் முடிவிற் றாகி
        வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ
        இடக்கை விரலி னியைவ தாகத்
        தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியும்
        நடையொடு தோன்றும் நயத்த தாகும்,

3.      ஆராய்த லென்ப தமைவரக் கிளப்பிற்
        குரன்முத லாக விணைவழி கேட்டும்
        இணையி லாவழிப் பயனொடு கேட்டும்
        தாரமு முழையுந் தம்மிற் கேட்டும்
        குரலு மிளியுந் தம்மிற் கேட்டும்
        துத்தமும் விளரியுந் துன்னுறக் கேட்டும்
        விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டும்
        தளரா தாகிய தன்மைத் தாகும்,

4.     தைவர லென்பது சாற்றுங் காலை
        மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித்
        தொடையொடு பட்டும் படாஅ தாகியும்
        நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி
        ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச்
        சீரேற் றியன்று மியலா தாகியும்
        நீர வாகு நிறைய தென்ப,


5.     செலவெனப் படுவதன் செய்கை தானே
        பாலை பண்ணே திறமே கூடமென
        நால்வகை யிடத்து நயத்த தாகி
        இயக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப்
        பதினோ ராடலும் பாணியு மியல்பும்
        விதிநான்கு தொடர்ந்து விளங்கிச் செல்வதுமே,

6.     விளையாட் டென்பது விரிக்குங் காலைக்
        கிளவிய வகையி னெழுவகை யெழாலும்
        அளவிய தகைய தாகு மென்ப,


7.     கையூ ழென்பது கருதுங் காலை
        எவ்விடத்து தானு மின்பமுஞ் சுவையும்
        செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி
        நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி
        நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும்
        பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்,

8.     துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும்
         தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி
       கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்.

இசைக் கரணங்கள் 8
   1.வார்தல்    - சுட்டுவிரல் செய்தொழில்,
   2.வடித்தல்   -  சுட்டுவிரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்,
   3.உந்தல்     -  நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழி பட்டதும் என்று அறிதல்,
   4.உறழ்தல்   - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்,
   5.உருட்டல் - இடக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும் வலக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும் சுட்டொடு பெருவிரல் கூட்டி யுருட்டலும் இரு பெருவிரலும் இயைந்துட னுருட்டலும்   என வரும்,
6.தெருட்டல் - தெருட்ட லென்பது செப்புங் காலை
உருட்டி வருவ தொன்றே மற்றவ்
ஒன்றன் பாட்டுமடை யொன்ற நோக்கின்
வல்லோ ராய்ந்த நூலே யாயினும்
வல்லோர் பயிற்றுங் கட்டுரையாயினும்
பாட்டொழிந்த துலகினி லொழிந்த செய்கையும்
வேட்டது கொண்டு விதியுற நாடி …..      என வரும்,
7.அள்ளல்,     
8.பட்டடை.
           
4.   ஓர் ஆண்மகன் தன் மனைவியிருக்க எத்தனை பெண்களோடு சேர்ந்தாலும் மனைவியானவள் ஊடாமல் இருப்பது பெண்களின் கற்புக்கு அடையாளம் என்ற ஆண் முதன்மைக் கருத்துடன் கோவலன் காவிரியின் சிறப்பைப் பாடித் தன் ஆற்றுவரிப் பாடலை பாடியதாக இளங்கோவடிகள் தருகிறார். அத்துடன் அதன் மூலம் சோழனின் கங்கையையும் குமரியாகிய தென் முனையையும் வெற்றி கொண்ட பெருமையையும் கூறுகிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது கோவலன், கண்ணகி எனும் மனைவி இருக்க மாதவி என்ற கணிகையுடன் வாழ்க்கை நடத்துவதைக் கண்டு கண்ணகி கணவனுடன் ஊடக் கூடாது என்று இப் பாடல் மூலம் கோவலன் அறிவுறுத்துவது போலத் தோன்றுகிறது. ஆனால் இந்திர விழவெடுத்த காதையில் நாம் விளக்கியவாறு கோவலனின் பரத்தை ஒழுக்கம் கண்டு ஊடியவள் மாதவி என்பதைப் பெறலாம். ஆக, இது மாதவிக்குக் கோவலன் மறைமுகமாக  விடுத்த அறிவுரை. மாதவியை மனைவி என்ற இடத்தில் வைத்து அவளுக்கு அறிவுரை கூறுகிறான் என்பதை விட, கற்புள்ள குடும்பப் பெண்களே இவ்வாறு விட்டுக்கொடுக்கும் போது வெறும் கணிகையான மாதவி கோவலனின் பரத்தையர் நாட்டத்தைப் பெரிதுபடுத்துவது தேவையற்றது என்று வலியுறித்துவதாகவும் கொள்ளலாம். கற்புள்ள குடும்பப் பெண்ணாக இருந்திருந்தால் கணவனின் இன்பமே பெரிதென்று கண்ணகியைப் போன்று விட்டுக்கொடுத்திருப்பாள் என்று குறிப்பால் உணர்த்துவதாகவும் கொள்ளலாம். 

5.   காவிரி பல்வகை ஓசைகளும் சிறந்து ஆர்ப்ப நடந்தது, காவல் தேவைப்படாத அரணையுடைய சோழனுடைய படைவீரரின் வலிமையும் வளமையுமே காரணம் என்றும் நான்காம் பாடலுக்கு உரை கூறுகிறார் வேங்கடசாமியார். நாவைக் கட்டுப்படுத்தாமல் வஞ்சினங்கூறும் போர்வீரர்களின் ஒலி என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார். அதை அரண்செய்ய அவர் இரண்டு புறநானூற்றுப் பாடல்களிருந்து இரண்டிரண்டு வரிகளை மேற்கோளாகவும் தருகிறார்.
வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள......புறம். 22

புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப.....புறம். 87

வாய் என்பதற்கு வாயில் என்று பொருள்கொண்டு விழிப்பாக வாயிலைக் காக்கும் வீரர்கள் எழுப்பும் ஒலி என்று பொருள்கொள்வதே பொருத்தமாக இருக்கும். சோழ நாடு ஆற்றுப் பாய்ச்சலை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை சார்ந்த நாடு. தொல்காப்பிய வரையறையின்படி கோட்டைப் போர் இங்கு முகாமையானது. எனவே கோட்டைக் காவலர்களின் கண்காணிப்பு இயல்பாகவே முனைப்பாக இருக்கும். அடிகளும் இப் பொருள் தோன்றவே கூறியிருப்பார் எனலாம். அந்தக் காவிரி வரண்டு புலம்பியும் கரைகளை உடைத்துக் கொண்டு கன்னட நாட்டின் மறுகாலாக ஓலமிட்டும் சீரழிந்தது இன்று நம்மை ஆளவந்தவர்களின் சீரழிந்த பேடித்தனத்தையும் வெட்கமற்ற கயமையையும், பணம் சேர்ப்பதற்கு எதையும் விற்கத் துணிந்த பரத்தைமையையும் நமக்குக் காட்டுகிறது.

நாடு வளமுடன் இருந்தால் கோட்டை வாயிலுக்குக் காவல் தேவைதான். ஆனால் நம் இந்திய ஆட்சியாளர்கள் மக்களில் பெரும்பாலரை வறுமையில் அமிழ்த்தி அயல்நாடுகளிலிருந்து சமயம் சார்பாகவும் மக்கட்பணி என்ற பெயரிலும் எந்தக் காவலும் கட்டுத்திட்டமும் இன்றி வந்திறங்கும் கணக்கில்லாத பணத்துக்கு மக்கள் விலையாக விட்டு எதிரிகளின் ஒற்றர்களாக மக்களை மாற்றிவிட்டிருக்கும் அவலத்தை ஓர் அரசியல் கோட்பாடாக்கி வைத்திருப்பதை எதிர்மறையால் வெளிப்படுத்துவதாக இவ் வரி அமைந்துள்ளது. இங்கு காவல் என்பது மக்களைக் காப்பதற்குப் பகரம் மக்களை கொள்ளையடிப்பதாகவே அமைந்துள்ளது.

6.   ஐந்து முதல் ஏழு வரை எண்களுள்ள பாடல்களில் தலைவனின் ஏமாற்றை எதிர்பார்க்காத கள்ளங் கபடற்ற மக்கள் தாங்கள் என்பதை, ஆம்பல், வண்டு, மணல் மேல் விளையாடும் சிறுமிகள் பற்றிய கூற்றினால் புலப்படுத்துகிறார். அத்துடன் புகார் நகரத்தின் கானல் பரப்பின் செழுமையையும் எடுத்துரைக்கிறார். சங்கையும் பரந்து கிடக்கும் முத்துகளையும் கண்டு அவற்றை முறையே நிலவும் விண்மீன்களும் என்று நினைத்து மாலை வந்துவிட்டதாக மயங்கி ஆம்பல் விரிந்ததாகவும் நீரில் தோன்றும் நிலவின் நிழலில் ஓர் இணை நீல மலர்கள் மலர்ந்திருக்கும் தற்செயலான காட்சியைக் கண்ட வண்டு அவை மலர்கள்தாமா அல்லது பெண் முகத்தில் கண்களா என்று தடுமாறுவதாகவும் தங்கள் விளையாட்டைக் கலைத்து அழித்த அலை மீது சினங்கொண்டு கழுத்திலிருந்த குவளை மலர் மாலைகளை அறுத்து சிறுமியர் வீசி எறிய அதில் சிதறிக் கிடந்த பூக்களைப் பெண்களின் கண்களோ என்று அவ் வழிச் செல்வோர் பார்த்து மயங்கியதாகவும் கூறுபவை நினைத்து இன்புறத்தக்கவை.

7.   பெண்ணை அணங்கு - அழகு காட்டி மயக்கிக் கொல்லும் தெய்வம் - என்றும் கூற்றுவன் என்றும் கூறுவது நயமான உவமை

8.   வானத்துப் பாம்பு (இராகு - கேது)க்கு அஞ்சி பரதவர் சேரிக்கு நிலவு வந்தது என்பதும் நயமான கற்பனை.

9.   முலையோ பாரம் இடை இழவல் கண்டாய் என்று கூறி தலைவன் மறைமுகமாக, முலைகளைத் தான் தாங்கிக்கொள்வதாகக் கூறுவதைக் காட்டுவது வளமான கற்பனை.

10.  மீனவர் கடலில் உயிர்களைக் கொல்வது போல் கண்ணால் தலைவி உயிர் கொள்வாள் என்பதுவும் அவ்வாறே.

11.  பவள உலக்கையால் முத்துகளைக் குத்துவதாகக் கூறுவது செல்வச் செழிப்பைக் காட்டுகிறதா அல்லது முத்துச் சிப்பிலிருந்து முத்தைப் பிரித்தெடுக்கும் செய்முறையில் முத்துகளை மாசு நீக்கும் உத்தியா என்பது ஒரு கேள்வி.

12.  அன்னமே இவளோடு சேர்ந்து நடக்காதே, அவளது நடையின் முன் உன்னால் ஈடு கொடுக்க முடியாமல் பெருமை இழப்பாய் என்று கூறுவதும் நயமான ஒரு வெளிப்பாடு.

13.  கங்கையையும் குமரியையும் புணர்ந்தாலும் காவிரி அவனை வெறுப்பதில்லை ஆதலால் வாழ்க வென்று பாடிய கோவலனுக்கு மறுப்பாக சோழனது வளையாத செங்கோலே காவிரியின் வளமை குன்றா நடைக்குக் காரணம் என்று சோழ மன்னன் காவிரியின் உரிமையை காப்பதில் கருத்தாக இருந்தான் என்பதைத் தெளிவாகக் கூறுகிறார் இளங்கோவடிகள். இன்று நம்மை ஆளவந்தோர் காவிரியை அயலவருக்கு விற்றுவிட்டு சோழ நாட்டின் வளமையையும் தமிழகத்தின் உணவு விளைச்சலையும் பறித்துவிட்டதை நினைத்து மனம் மறுக வைத்துள்ளது இப் பாடல்கள்.

காவிரியானவள் சோழ நாட்டு மக்களை, தாய் தன் மக்களைக் காப்பது போல் காத்து வருகிறாள் அதற்குக் காரணம் மழையைப் பொழிவிக்கும் கதிரவனும் அதன் வழிவந்த சோழ மன்னனும்தாம் என்பதைப் படிக்கும் போது இன்றைய நம் நிலையை எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

இங்கு கோவலனின் கூற்றுக்கு மறுப்புக் கூறுவதுபோல் கங்கையைக் கொள்வதும் குமரியைக் கொள்வதும் தாயாக நின்று சோழநாட்டைக் காக்கும் காவிரியின் பெருமைக்குக் காரணமல்ல, அரசனின் செங்கோன்மை, போர் வலிமை, மக்களைக் காக்கும் திறன் ஆகியவையே என்று கூறி கோவலனின் புறம் போகும் நடத்தையைக் மறைமுகமாகக் கண்டிக்கிறாள்.

14.  நாளொன்றுக்கு இருமுறை உயர்ந்து தாழ்வதாகிய ஓதம் எனும் வீங்கலை(Tidal waves) முத்துகளைக் கரையில் ஒதுக்கி பூக்களை எடுத்துச் செல்வது வாணிகர்களின் பண்டமாற்றுப் போல் இருப்பதாகக் கூறுவது சிறப்பான உவமை. அதைப் போல் முத்தை விற்க வந்த தலைவன் தன் மனதை எடுத்து மீள்கிறாள் என்பதை உள்ளுறையாகக் கூறுகிறாள். பூத்த புன்னையில் ஏறும் அன்னப் பறவையைப் பார்த்து நிறைமதியும் விண்மீன்களும் என ஏமாந்த வண்டு மாலை வந்துவிட்டது என மயங்கி அல்லி மலரைச் சுற்றி ஓசை எழுப்புவது, தலைவனை நம்பி தலைவி ஏமாந்ததையும் புகாரின் செழுமையையும் ஒருங்கே விளக்குவதாகும்.

15.  சிற்றில்களை திரை அழிக்க கண்ணீர் வடிய கடல் மீது மண்ணை வீசும் அறிவு முதிர்ச்சி பெறாத சிறார் பருவத்துப் பெண்களில் ஒருத்தியாகிய தலைவியை ஏமாற்றியவன் தலைவன் என்பது நயம்பட கூறப்பட்டுள்ளது.

16.  தொடர்ந்து வரும் பாடல்கள் பிரிவால் வாடும் தலைவியின் துன்பத்தை அழகுற வெளிப்படுத்துவதில் ஒப்பற்றவை. உலக இலக்கியங்களில் இவற்றுக்கு இணையானவற்றைக் காண்பது அரிது. எத்தனை எத்தனை வகையான உவமைகள், உருவகங்கள் மூலம் பிரிவுத் துன்பம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை எண்ணித் தமிழ் மக்கள் பெருமைப்படலாம்.

கோவலன் பாடியது வேறொரு பெண்ணை மனதில் வைத்து என்று மாதவி கருதினாள் என்றால் மாதவியின் பாடலில் வரும் மெய்ப்பாடு கோவலனது பாடலில் வெளிப்பட்டதை விட மிக வலிமையானது. கோவலன் பாட்டில் வெளிப்படுவது பொதுவாகப் பெண்கள் மீது ஆண்கள் பாடும், ற்காலத்தில் கானாப் பாடல்கள் எனப்படும் வகையைச் சேர்ந்தவையே. எனவே அவள் வேறொருவன் மீது மனம் வைத்துப் பாடுகிறாள் என்று கோவலன் நினைத்ததில் வியப்பில்லை. ஏற்கனவே இந்திரவிழா போன்ற பொது நிகழ்ச்சியில் பலர் முன் அவள் ஆடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் கடலாடு காதையில் அவள் ஆடி முடித்ததும் கோவலன் ஊடி இருந்ததாக அடிகளார்  கூறுகிறார். அவளது அழகும் ஆடல், பாடல் திறன்களும் தான் ஒருவனுக்கு மட்டுமே உரியவாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். ஆனால் அவளோ தனது குமுகக் கடமையும் தன் பொது வாழ்வின் ஒரே வெளிப்பாடுமான பொது நிகழ்ச்சிகளில் ஆடும் பணியைக் கைவிட விரும்பவில்லை. அதனால்தான் கோவலனின் ஊடலின் காரணத்தைப் புரிந்துகொண்டு நறுமணப் பொருட்களாலும் அணிகளாலும் தனது கவர்ச்சியை மேம்படுத்தி அவனது ஊடலைப் போக்கினாள்.

      கோவலன் அவளுடைய அழகும் திறமையும் தனக்கு மட்டுமே உரிமையாக வேண்டும் என்று விரும்பியதைப் போல கோவலனின் மனம் தனக்கு மட்டுமே உரிமையாக வேண்டுமென்று மாதவி விரும்பினாள். கோவலன் ஒழுக்கங்கெட்ட இளைஞர்களோடு ஊர் சுற்றும், நாளொரு பரத்தையை நாடிச் செல்லும் ஒரு பணக்கார இளைஞன். எனவே அவன் மீது அவள் எப்போதும் கண்காணிப்பாகவே இருந்தாள். அதனால்தான் அவன் வேறொரு பெண் மீது நாட்டம் கொண்டதாக ஐயுற்ற உடனேயே தன்னை மறந்து அதற்கு எதிர்ப்பாட்டு பாட முற்பட்டாள். ஆசிரியர் கூறியுள்ளது போல், ஊழ்வினை, அதாவது தற்செயல்தான் யாழின் மேல் அமர்ந்து கொண்டு விளையாடிவிட்டது. உண்மையில் அவள் நினைத்துக் கொண்டு பாடிய ஆடவன் வேறெவருமில்லை, காதலில் நாணயம் அற்றவனான கோவலன்தான்.

      இந்த இடத்தில் இந்தப் பாடல்களைப் பாடியவர்களாகக் கூறப்படும் கோவலன், மாதவி இருவரில் கோவலன் பாடல்களை விட உணர்ச்சியும் மெய்ப்பாடும் மிக உயர்ந்த நிலையில் மாதவியின் பாடல்களை அமைத்த இளங்கோவடிகளின் இலக்கியத் திறனைப் போற்ற தகுந்த சொற்களை எம்மால் காண முடியவில்லை.

      இங்கு கலை - இலக்கியங்களில் வெளிப்படும் மெய்ப்பாடுகளுக்கும் அவற்றின் படைப்பாளிகளுக்கும் இடையிலுள்ள உறவை விளக்குவது நன்று.

      ஒரு கலை - இலக்கிய் படைப்பாளி தன் சொந்த உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தன் படைப்புகளை உருவாக்குவதில்லை. தான் வெளிப்படுத்த முயலும் சூழலில் பங்குபெறும் கதைமாந்தர்களின் மனநிலையைத் தனக்குள் வருவித்துக் கொண்டு, அதாவது அக் கதை மாந்தர்களாவே தன்னை மறுபிறவி எடுக்கவைத்து கதை மாந்தர்களது உணர்ச்சி வெளிப்பாடுகளை நுகர்வோரிடையில் ஏற்படுத்துவதில், அதாவது கதைமாந்தர்களின் இயல்புகளைத் தனக்குள் வரவழைப்பதில் அவன் எவ்வளவு வெற்றியடைகிறானோ அதுதான் அவனது படைப்பாற்றலின் அளவுகோல். இந்த வகையில் இளங்கோவடிகளின் படைப்பாற்றல் ஈடிணையற்றது என்பதை இக்காதை விளக்குகிறது.

17.  இன்று பொது நிகழ்ச்சிகள் தொடங்கும் போது முதலில் இறை வணக்கமும் இறுதியில் நாட்டுப் பாடலும் பாடும் மரபு போல் இந்தப் பாடல் நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் இயற்கையையும் அரசனையும் ஏத்தியும் இறுதியில் அரசனை வாழ்த்தியும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

      மங்கல வாழ்த்துப் பாடலிலும் இதே முறை கையாளப்பட்டுள்ளது.
     
18.  இந்த இடத்தில் புலவர்மணி ஆ.பழநி அவர்கள், தன் சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பில் கூறியுள்ள ஒரு கருத்தைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அதில் அவர் கூறுவது, கோவலனுக்கும் மாதவியின் தோழியாகிய வசந்தமாலைக்கும் காதல் தொடர்பு இருந்தது; அந்த உணர்வு வெளிப்பாடுதான் கோவலனது கானல்வரிப் பாடல்; அவர்களது தொடர்பு பற்றி மாதவி அறிந்திருந்தாள்; அதிலிருந்து உருவாகிய அவளது துயர வடியல்தான் அவளது கானல்வரி என்று அவர் கூறுகிறார். தன் கருத்துக்கு அரண் செய்ய, கடலாடுகாதை இறுதியில்
                                    வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
                                    திருந்துகோல் ல்லியாழ் செவ்வனம் வாங்கி......(வரி 171-72)
     
என்பதை, கோவலனும் மாதவியும் சேர்ந்திருப்பதைக் கண்டு மனம் வருந்தி இருந்தாள் என்றும், காடுகாண் காதையில் வனதேவதை வசந்தமாலையின் வடிவத்தில் தோன்றி தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின் கோவலன் செய்தான் கொடுமை (வரி -177-78) என்று மாதவி கூறித் தன்னைத் துரத்திவிட்டாள் என்று கூறியது, கோவலனுக்கும் வசந்தமாலைக்கும் இருந்த கள்ள உறவை மாதவி அறிந்திருந்தாள் என்பதைக் காட்டும் ஒரு தடயம் என்றும் அவர் கூறி இந்தக் கோணத்தில் கானல் வரிப் பாடல்களுக்கு விளக்கம் கூறியிருக்கிறார். வேண்டுமானால் இப்படியும் பொருள் கொள்ளலாம்தான். இருப்பினும் ஒரு சில கேள்விகள் உள்ளன.

      நம் பண்டை இலக்கியங்களில் பெண்களுக்கு ஒரு செவிலியும் அவள் மகளான தோழியும் இருப்பதைக் காண்கிறோம். இது தொல்காப்பியம் கூறும் அனைத்துத் தலைமகள்களுக்கும் பொருந்தாது. குறிஞ்சியில் தோழிக்கு வேலையே கிடையாது. அது தலைமகனும் தலைமகளும் நேரில் கண்டு புணர்வது. முல்லைத் தினையில் தோழி என்பவள் தலைமகளைப் போன்ற உரிமைகள் உள்ள இன்னொரு பெண். மருதம், நெய்தல்களில்தான் செவிலி, தோழி ஆகியோர் தலைமகன், தலைமகள்களின் குடும்ப உறுப்பினர்களாக வருகின்றனர். தலைமக்களின் நற்றாயின் தோழி அவளுடைய பிள்ளைகளுக்குச் செவிலியாகிறாள். செவிலியின் மகள் தலைமகளுக்குத் தோழி ஆகிறாள். ஆண்மக்களுக்குச் செவிலியின் மகன் பாங்கன் ஆகிறானா என்ற தெளிவான குறிப்பு இல்லை. இவ்வாறு இந்த தோழி செவிலி → தோழி என்ற தொடர் உறவில் இந்தப் பணியை ஆற்றும் பெண்களுக்குத் தனியாகக் குடும்பம் என்று ஒன்று இருந்தாகக் குறிப்பும் இல்லை, வாய்ப்பும் இல்லை. அப்படியானால் செவிலிக்குக் குழந்தை எப்படிப் பிறக்கிறது? பெரும்பாலும் தாம் எந்தக் குடும்பத்தில ஓர் உறுப்பினராகச் செயற்படுகிறார்களோ அந்தக் குடும்பத்து ஆடவர்களால்தான் அவள் தாய்மை எய்த முடியும். அவளுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இருக்குமானால் அவளது முழுக் கவனத்தையும் தன் ஆண்டைகளின் குடும்பத்துக்குச் செலுத்த முடியாது. இந்த நிலையில் ஒரு தலைமகளின் தோழியைத் தலைமகன் அடைவதென்பது பெரும் சிக்கலாகவும் இருக்காது, அதற்காகத் தலைமகள் இருவர் மீதும் சினமோ அழுக்காறோ கொள்ள வாய்ப்பும் இருக்காது.

      ஆடவர்களுக்கு ஒரு மனைவி போதாது, மனைவி கருவுற்றிருக்கும் காலங்களில் உடலுறவு கொள்ள இன்னொரு பெண் இருப்பது தேவை என்று மறைமலையடிகள் போன்றோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த வகையிலும் நம் பண்டைத் தமிழகத்தில் மரபு இருந்திருக்கலாம்.
     
கல்லிவரின் செல்கைகள்(Gullivers Travels) என்ற ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியராகிய சொனாதன் சுவிப்டின் வரலாறு இது: இவர் ஒரு ஆங்கில உயர்குடி அரண்மனையில் பொறுப்பான பணியில் இருந்தார். அதே அரண்மனையில் பணிபுரிந்த ஒரு பெண்ணும் அவரும் காதலித்தனர். ஒரு நாள் அவர் ஓர் உண்மையை அறிந்தார், அதாவது தான் அந்த உயர்குடித் தலைவரின் தந்தைக்கும் அரண்மனைப் பணிப்பெண்ணுக்கும் சட்டத்துக்குப் புறம்பாகப் பிறந்த பிள்ளை என்பதும் தான் காதலிக்கும் பெண் இப்போதைய தலைவருக்கு அதே போல் பிறந்த பெண் என்பதும். அதாவது தான் அந்தப் பெண்ணுக்குச் சிற்றப்பன் முறை. அத்துடன் அவர் அப் பெண்ணைக் காதலியாகக் கருதுவதை விட்டுவிட்டார். ஆனால் அவளுடன் பழகிக் கொண்டுதான் இருந்தார். பின்னர் வேறொருத்தியைக் காதலித்தார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அவருக்கும் முதல் பெண்ணுக்கும் உள்ள உறவைப் பற்றித் தவறாகப் பேசிச் சண்டையிட்டாள். அவளுக்கு இது குறித்து காட்டமாக ஒரு மடல் எழுதினார் அவர். அதைப் படித்த அவள் தற்கொலை செய்து கொண்டாள். பின்னரும் அவர் தொடர்ந்து தன் உறவுப் பெண்ணோடு அவளுக்குக் காவலாக வாழ்ந்தார். ஆனால் அவளுடன் காதலி என்ற வகையில் எந்த உறவையும் வைத்துக்கொள்ளவில்லை. இந்த மனநிலையில் அவர் எழுதியதுதான் கல்லிவரின் செல்கைகள். ஒரு மனிதன் தான் வாழும் குமுகத்தைப் பற்றி, அரசைப் பற்றி எவ்வளவு இழிவாக எழுத முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டானது இப் புதினம். நம்மில் மிகப் பெரும்பாலோர் அதன் ஒரு பகுதியின் சுருக்கத்தை மட்டும் படித்திருப்போம். மூல நூலை அதன் முழுமையாகப் படித்தவர்களுக்கு அதன் காரம் மனதில் உறைக்கும்.


19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்த ஒன்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் குமுக ஏற்புடன் நடந்திருக்கிறது என்பதுதான் செவிலி →  தோழி → செவிலி உறவு. எனவே வசந்தமாலையை நினைத்து ஏங்கிக் கோவலன் பாட வேண்டியதுமில்லை, அதற்காக மாதவி அழுது பாட வேண்டுமென்பதுவுமில்லை. அவன் நாளுக்கு ஒருத்தியை நாடித் தன்னைத் தவிக்க விடுவதை நினைத்துப் பாடுவதாகப் பார்த்தால் உண்மை புரியும்.

      கண்ணகியைப் பொறுத்தவரையில் கோவலன் மாதவியைக் காமக் கிழத்தியாக வைத்திருப்பதில் பிணக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அன்றைய குமுகத்தில் செல்வர்கள் காமக் கிழத்திகளை வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஊர்விட்டு ஊர் வந்து வட்டித் தொழில் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடையில், ஒருவரின் வைப்பாட்டிகளின் எண்ணிக்கை அவரது மனைவியின் குமுகத் தரத்துக்கு அளவுகோல் என்ற நிலை இருந்ததை 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூட காண முடிந்தது. இன்றைய நிலை என்னவோ? கோவலன் தன்னை விட்டு நிலையாகப் பிரிந்து சென்றதுதான் மிகுந்த துயரையும் சினத்தையும் கண்ணகிக்குத் தந்திருக்கும். இது குறித்து உரிய இடத்தில் விளக்குவோம்.

19.  இனி இக் காதையினுள் தரப்பட்டிருக்கும் வரிப்பாடல்களின் இலக்கணம் பற்றி வேங்கடசாமியார் தந்திருப்பவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.

      வரிப்பாடல்கள்:
            1. தெய்வம் சுட்டுவன,
            2. மக்களைச் சுட்டுவன:
                  1. முகமுடை வரி,
                        2. முகமில்வரி,
                        3. புடைப்புவரி.
      இக் காதைப் பாடல்கள் மக்களைக் சுட்டுவன என்னும் வகைப்பாட்டினுள் வரும்.
      பாடல்கள் 2 முதல் 4 வரை பாடல்கள் முகமுடைவரி என்று கூறப்படும்.
      5 முதல் 7 வரை பாடல்களைச் சார்த்துவரி என்ற வகைப்பாட்டினுள் தருகிறார்.
      சார்த்துவரி:
            1.முகச் சார்த்து,
            2.முரிச் சார்த்து,
            3.கொச்சகச் சார்த்து.
      மேலுள்ள பாடல்கள் மூன்றும் முகச் சார்த்து வகைப்பாட்டில் வரும்.

      8 முதல் 10 வரை பாடல்களைக் கானல்வரி என்ற வகைப்பாட்டில் தருகிறார்.
      11முதல் 13 வரை பாடல்கள் நிலைவரி என்கிறார்,
            முகமு முரியுந் தன்னொடு முடியும் நிலையை உடையது நிலையெனப் படுமே.
      14முதல் 16 வரை பாடல்கள் முரிவரி,
            எடுத்த வியலு இசையும் தம்மின் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே.
      பாடல்கள் 17 முதல் 23 வரை 7பாடல்கள் திணை நிலைவரி,
      பாடல்கள் 25 முதல் 27 வரை 3 பாடல்கள் ஆற்றுவரி,
      பாடல்கள் 28 முதல் 30 வரை சார்த்துவரி.
      பாடல்கள் 32 முதல் 36 வரையுள்ள பாடல்கள் திணை நிலைவரி,
      பாடல்கள் 37 முதல் 42 வரை மயங்கு திணைநிலைவரி,
      பாடல்கள் 43 முதல் 45 வரை சாயல் வரி,
      பாடல்கள் 46, 48 முதல் 51 வரை முகமில் வரி.

தொடக்கத்தில் வேங்கடசாமியார் கூறியிருப்பவை தவிர பலவற்றை இப்பாடல்களைத் தொடர்ந்த பாடல்களில் சுட்டிக் காட்டியுள்ளார். அவை:
1.சார்த்துவரி,
            2.முகச் சார்த்து,
            3.முரிச் சார்த்து,
            4.கொச்சகச் சார்த்து,
            5.நிலைவரி,
6.முகவரி,
7.திணைநிலைவரி,
8.ஆற்றுவரி,
9.சாயல்வரி.
      மொத்தமாகத் தொகுக்க முயன்றால் கிடைப்பது
      1.தெய்வம் சுட்டுவன,
      2. மக்களைச் சுட்டுவன:
            1. முகமுடைவரி
            2. முகமில் வரி
            3. புடைப்புவரி
            4. சார்த்துவரி
                  1. முகச் சார்த்து
                  2. முரிச் சார்த்து
                  3. கொச்சகச்சார்த்து
            5. கானல்வரி.
            6. நிலைவரி
                        1. திணைநிலைவரி.
            7. முரிவரி
            8. ஆற்றுவரி
            9. சாயல்வரி
      இந்தத் தொகுப்பு இலக்கண நூற்களின்படி சரியானதா முழுமையானதா என்பது எமக்குத்  தெரியவில்லை. அறிந்தோர் இட்டு நிரப்புக.

      இக் காதையில் உள்ள பல்வேறு வரிப் பாடல்களில் கானல்வரி ஒன்றேயாயினும் அனைத்தும் கானலிடத்தே யாதலின் கானல்வரி எனப்பட்டது என அமைதி கூறுகிறார் வேங்கடசாமியார்.

      ஆங்காங்கே வரிப்பாடல் வகைகளை எடுத்துக் கூறும் வேங்கடசாமியார் பல்வேறு பாடல்களுக்கும் அகத்துறைகளையும் சுட்டிச் செல்கிறார்.

20. மங்கல வாழ்த்துப் பாடலில் காவிரி நாடன் என்று கூறும் அடிகள் கானல்வரியில் காவேரி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதற்கு மணிமேகலையில் வரும் தொன்மக் கதையின் படி, காவேரன் மகள் என்ற விளக்கத்தை வேங்கடசாமியார் அவர்கள் தருகிறார்கள். அதை இப்படியும் காணலாம். இக் காதையில் இடம் பெறும் இசைப்பாடல்கள் மக்கள் பாடும் மக்கள்(உலக) வழக்கு(Folklore)ப் பாடல்கள். உலக வழக்கு, செய்யுள் வழக்கு எனும் இரண்டினுள் இலக்கணம் அறிந்து அதற்கேற்ப புனைபவை செய்யுள்கள். இலக்கணம் அறிந்தவரோ அறியாதவரோ அந்த இலக்கணத்தின் ஓர்மையின்றி தன்னெழுச்சியாகத் தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகத் தக்க ஒரு பண்ணில் பாடுவதை உலக வழக்கு என்று சொல்லலாம். இந்த உலக வழக்குகளிலிருந்துதான் அது இசைப் பாடலாயிருந்தாலும் கைத்தொழிலாயிருந்தாலும் இலக்கணங்களும் அறிவியல் - தொழில் நுட்பங்களும் வார்த்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறு வளர்த்தெடுக்கப்படுபவைதாம் செய்யுள்கள் எனப்படுகின்றன.
     
      அதே நேரம் இலக்கணம் அதாவது காரணம் சார்ந்த சொற்கள் மக்கள் வழக்கில் திரிவதுண்டு. அவ்வாறுதான் கங்கை போன்று (கங்கு) கரைகளுள் அடங்காமல் காட்டிலே(காவிலே) விரிந்து பாயும் காவிரியின் பெயரை காவிரி என்று தன் கூற்றாகவும் காவேரி என்ற மக்கள் கூற்றாகவும் தந்திருக்கிறார் அடிகள்.
                    
21.  வரிப்பாடல்களின் பட்டியலில் கொச்சகம் என்றொரு சொல் வருகிறது. அதன் முழு வடிவம் கொய்சகம் ஆகும். பெண்கள் சேலை கட்டும் போது ஒரு முனையை எதிரெதிர் திசைகளில் நான்கு விரல்களைச் சேர்த்து மடிக்கும் கொசுவத்தின் திருந்திய வடிவம்தான் கொய்சகம். அது திரிந்து கொச்சகமாக இலக்கணத்தினுள் திரிகிறது. பாடல் வரிகள் மடங்கி வருவதைக் கொச்சகம் என்பதை நோக்க.

22.  மங்கலவாழ்த்துப் பாடலில், காதலர்ப் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறு கென வாழ்த்தியதை வரப்போகும் பிரிவை உணர்த்தும் அவலக் குறிப்பு என்று புலவர் மணி ஆ.பழனி அவர்கள் கூறுவதைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி (இந்திரவிழவூரெடுத்த காதை வரி 189 - 90) என்று மறைமுகமாக கண்ணகியை விட நெருக்கமாக மனைவிக்கு இணையாக இருந்ததைக் குறிப்பிட்டதோடு இக் கானல் வரியில் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய் என்று அங்கு கண்ணகிக்குக் கூறிய சொல்லை மாதவிக்கும் ஏற்றிச்சொல்கிறார். இந்த வகையில் கண்ணகியை விட மாதவிக்கு மிகுதியாக இல்லாவிட்டாலும் குறையாத உரிமை கோவலன் மீது இருந்ததை இளங்கோவடிகள் உணர்த்தியுள்ளார். அத்துடன் மங்கலவாழ்த்துப் பாடலில் வரும் வரி கணவன் - மனைவியரிடையில் அன்று மட்டுமல்ல இன்றும் கூட இயல்பாக இடம்பெறும் பிரிவுகள் குறிப்பிட்ட இணையரிடையில் ஏற்படாதிருக்க என்று வாழ்த்தும் வழக்கமான ஒன்றுதான். புலவர் மணி அவர்கள் காண்பது போல் சிலப்பதிகாரம் அவலச்சுவை மட்டும் கொண்ட ஓர் இலக்கியம் என்பதைக் காட்டும் சான்றுகளில் ஒன்றல்ல.

      கண்ணகியுடன் வாழ்ந்த காலத்தில் நாளொரு பரத்தையுடன் கணவன் சென்று வந்ததைப் பொறுக்காமல் ஒவ்வொரு நாளும் அவர்களது இல்லறம் ஒரு போர்க்களமாகவே இருந்திருக்கும்.

      இந்த நரகத்திலிருந்து விடுபட ஒரு வாய்ப்பு என்பது அவன் மாதவியை நாடியதன் முதன்மைக் காரணமாக இருக்க வேண்டும். அவள் ஒரு கணிகை, தான் நாளொரு பரத்தையை நாடுவதைப் பொருட்படுத்தமாட்டாள் என்று அவன் கணித்திருக்க வேண்டும். ஆனால் அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக, வாழ்நாள் முழுவதும் ஒரே ஆண்மகனோடு வாழும் ஓர் இல்லற வாழ்க்கையை அவள் விரும்பினாள். இருப்பினும் அங்கும் அவன் நாளொரு பரத்தையை நாடுவதை மாதவி கடுமையாக எதிர்த்ததற்கான தடயத்தை இந்திரவிழவூரெடுத்த காதையில் சுட்டிக் காட்டியுள்ளோம். இத்தகைய ஒரு பின்னணியில்தான் கானல்வரிப் பாடல்கள் இருவருக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தின. ஆனால் இத்தகைய பிரிவுகள் அவர்களுக்குள்  அடிக்கடி நடந்துகொண்டுதான் இருந்தன. அவற்றை மாதவி எவ்வாறு எதிர்கொண்டாள் என்பதை அடுத்த வேனிற் காதையில்  காண்போம்.

                                                                          

0 மறுமொழிகள்: