27.11.15

இராமர் பாலப் பூச்சாண்டி - 5

இராமாயண அரசியல்


            இராமாயணப் போரில் ஈடுபட்ட இருவரில் ஒருவராகிய இராவணனாரின் அடையாளம் பற்றிய ஐயப்பாடு எதுவும் இல்லை. அவரது நாடு இலங்காபுரி என்பது ஐயத்திற்கிடமில்லாத செய்தியாகும். ஆனால் இராமபிரான் தோன்றிய இடம் எது என்பதில் முரண்பட்ட செய்திகள் உள்ளன. இராமாயணம் இராமபிரான் தோன்றிய இடமாக அயோத்தியைக் கூறுகிறது. ஆனால் புத்த சாதகக் கதைகளில் வரும் தசரத சாதகமோ அவரது இருப்பிடத்தைக் காசி(வாரணாசி) என்கிறது. ஓர் ஆய்வாளர் சில ஆண்டுகளுக்கு முன் மேற்காசியாவில் உள்ள ஓர் இடமே இராமபிரான் வாழ்ந்த இடம் என்றார்.

            இராவணனார் வாழ்ந்த நாடு சுறவக் கோட்டில் அல்லது அதற்கும் தெற்கே இருந்ததாகச் சான்றுகள் காட்டுகின்றன. அந்த இடத்தில் உருவான நாகரிகம் மிக முந்திய நாகரிகம் என்று கூறலாம். உலகின் மிகப் பழமையான நாகரிகம் இங்குதான் தோன்றியிருக்க வேண்டும். இன்றைய புவியியங்கியல் ஆய்வுகளின்படி அந் நாகரிகம் 8½ கோடி ஆண்டுகளுக்கும் சில கோடி ஆண்டுகள் முந்தியே முழுமை பெற்றிருக்க வேண்டும். நில இயங்கியல் வல்லுநராக அறியப்படும் திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதி நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகம் கி.பி.2002 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள குமரி நில நீட்சி என்ற நூலில் பக். 64 இல் பிற கலாச்சாரங்களில் கடற்கோள், பிரளயம் பற்றிய மரபுகள் என்ற துணைத் தலைப்பில் திபெத் என்ற உள் தலைப்பில், ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் மூழ்கும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு வங்காளம் வழியாக நீரை ஓடவிட்டு வெள்ளத்தை வற்றச்செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும் அறிவுப் பாதையில் இட்டுச் செல்லுமுகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் இங்கு அனுப்பியதாக கூறுகிறது இக் கதைஎன்று கூறியுள்ளார் (பக். 64 -65). இத்துடன் இதையும் இணைத்துப் பாருங்கள்.

            “கோண்டுவானாக் கண்டம் உடைந்து நகர ஆரம்பித்தது 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது இந்துமாக் கடலின் வட பகுதியில் இருந்தது ஒரு நிலநீட்சியல்ல, ′டெதிசு′ எனும் ஆதிப் பெருங்கடல். கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரேசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப் பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்புமலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம்: இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது” (பக். 59. அழுத்தம் எமது).

            இந்த இரண்டு தரவுகளிலிருந்தும் நமக்கு விளங்குவது (ஆனால் திரு.சு.கி. செயகரனுக்கு விளங்காதது) திபெத் மக்கள், “வெள்ளத்தால் உலகம் மூழ்கும் நிலையிலிருந்தது” என்றது இந்தியா லாரேசியாவை நெருங்க நெருங்க இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையில் அகப்பட்ட டெதிசு கடலின் பரப்பு சுருங்கி நீர் மட்டம் உயர்ந்ததையும், “கடவுள்... வங்காளம் வழியாக நீரை ஓடவிட்டு வெள்ளத்தை வற்றச் செய்தார்” என்றது லாரேசியாவை நெருங்கிய இந்தியாவின் கிழக்கு முனையில் உடைப்பு ஏற்பட்டு டெதிசுக் கடல்நீர் வெளியேறியதையும் குறிப்பிடுகின்றன என்பதாகும். அவ்வாறு வங்காளத்தில் உடைப்பு ஏற்பட்டு டெதிசுக் கடல் நீர் வெளியேறிய பாதையிலேயே பின்னர் கங்கையாற்றுப் பள்ளத்தாக்கு உருவாகியிருப்பது தெளிவாகிறது.

            மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளின்போது திபெத்தில் “குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில்” மக்கள் வாழ்ந்தனர் என்பதும் இந்தியாவில் நாகரிகத்தில் மேம்பட்ட சான்றோர்கள் இருந்தனர் என்பதும் புலனாகிறது.

            அப்படியானால் திரு.சு.கி. செயகரன் நூலிலுள்ள தரவுகளின்படி 135 மில்லியன், அதாவது 13½ கோடி ஆண்டுகளுக்கு முன் உலகில் நாகரிமடைந்த மனிதர்கள் வாழ்ந்தனர் என்பது ஐயமறத் தெளிவாகிறது. இந்த அடிப்படையில்தான் காட் எலியட் லெமூரிய இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளில் வாழ்ந்தனர் என்று கூறியிருக்கிறார் போலும் (அதே நூல் பக்.52).

            இவையெல்லாம் 1¼ நூற்றாண்டுப் பழமையான (எக்கேல் 1876, அதே நூல் பக். 42) தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துகள். ஐரோப்பியர்களின் புவியியங்கியல் இன்னும் மழலைப் பருவத்திலேயே உள்ளது. அதனடிப்படையில் அமைந்த வரலாற்றுவரைவும் அவ்வாறே. அதனால்தான் அவர்களால் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எய்த முடியவில்லை. புவியியங்கியல் நிகழ்வுகளின் காலக்கணிப்புகளும் தொல்மனித எச்சங்களின் புதிய கண்டுபிடிப்புகளும் மரபணுவியல் ஆய்வு வளர்ச்சியும் நாள்தோறும் கால வரிசைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன. சென்ற(2005 - 06) ஆண்டுக்கான தமிழ்நாட்டரசு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இந்தியா கோண்டுவானாவிலிருந்து லாரேசியா நோக்கி நகர்ந்துவரும் பல்வேறு கட்டங்களைப் படம் போட்டு விளக்கி இந்தியா, ஆசியக் கண்டத்தோடு இணைந்த நிகழ்வு நடைபெற்றது 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன் என்று கூறப்பட்டுள்ளது. இப்போதைக்கு நாம் இந்தக் காலக் கணிப்பை வைத்துக் கொண்டு மனிதன் தோன்றியது 8½ முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் என்று கொள்ளலாம்.

            இந்த முடிவு நம்மையே திகைக்க வைக்கிறது. அறிவியல் அடிப்படை என்ற பெயரில் எங்கெங்கோ எலும்புத் துண்டைக் கண்டோம், பாறைகளின் காலத்தைக் கணித்தோம் என்று கூறிக்கொண்டு தொல்வரலாற்றாய்வாளர்கள் தடுமாறிக்கொண்டு 50 ஆயிரம் முதல் 2½ கோடி ஆண்டுகள் வரையில் மனிதனின் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் போது திரு.சு.கி. செயகரன் தந்துள்ள தரவுகளின் அடிப்படையில் இன்றைய கணிப்புகளை ஒப்பு நோக்கி இந்தக் காலக்கணிப்பைத் தந்துள்ளோம். இவை அவர் காட்டியுள்ள தரவுகளின் அடிப்படையில் காட் எலியட் நிறுவிய காலக் கணிப்பை விட 10½ (22½ - 12) கோடி ஆண்டுகள் பின்னோக்கியதே என்ற வகையில் திரு. சு.கி. செயகரன் மகிழலாம்.

            திகைப்பாக இருந்தாலும் அறிவியல் ஆய்வாளர்கள் தரும் நம்பத்தக்க தரவுகளைப் புறக்கணிக்க முடியாத சூழலில் நாம் மனிதன் தோன்றிய காலத்தை 8½ முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் என்று முடிவு செய்துள்ளோம். இதைக் கீழ்க் கண்டவாறு நிறுவவும் முடியும்.

            சுறவக்கோட்டிலிருந்து இன்றைய இந்தியாவின் தென்முனை ஏறக்குறைய 31½ பாகைகள் அக்கக் கோடு தொலைவு உள்ளது. அது 31½ × 111=தோராயமாக 3500கி.மீ. கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டின்படி நிலங்கள் நகரும் விரைவு ஆண்டுக்கு 3 முதல் 15 செ.மீ., சராசரி 9 செ.மீ. அப்படியானால் இன்றைய நிலைக்கு இந்தியா வர குறைந்தது 3500×1000×100÷9 = 3.89 கோடி. எனவே சுறவக்கோட்டிலிருந்து இந்தியா நகரத் தொடங்கியது 8.5+3.89 = 12.39. எனவே நாம் 12.00 கோடி ஆண்டுகள் என்றது சரியாகவே இருக்கிறது.

            மனிதன் தோன்றி இந்தியா ஆசியாக் கண்டத்துடன் இணைந்த இந்தக் கால இடைவெளியில் சுறவக் கோட்டை ஒட்டித் தொடங்கி புவியின் தென்முனை வரை இருந்த நிலப்பரப்பில் தெக்கன்(தக்கன்) என்ற மாமனிதன் வாழ்ந்தான். அவன் நிலத்தில் நிழல் வடக்கே விழாமல் தெற்கே மட்டும் சாயும் இடத்தின் எல்லையைக் கண்டு கதிரவனின் தென்வடல் செலவினையும் அதிலிருந்து 365 நாட்களைக் கொண்ட ஆண்டுமுறையையும் வகுத்து நமக்குத் தந்தான். அது மட்டுமல்ல, கதிரவனின் கரும்புள்ளி புவியை நோக்கி வரும் 27 நாட்கள் காலத்தை அறிந்து அதன் அடிப்படையில் 27 பகுதிகளாக வான்பரப்பை வகுத்து விண்மீன் தொகுதிகளை வைத்து நாண்மீன்களை நிறுவினான். அந்த நாண்மீன்களை நிலவின் இயக்கத்தோடு இணைத்து ஐந்திரத்தின்(பஞ்சாங்கத்தின்) அடிப்படையை உருவாக்கினான். இந்த அருஞ்செயலை, நாள்மீன்களாகிய தன் 27 மகள்களையும் நிலவுக்கு அவன் மணமுடித்து வைத்தான் எனத் தொன்ம வடிவில் நம் முன்னோர் பதிந்துவைத்துக்கனர். அதனாலேயே அவன் தென்திசைக் கடவுள் என்றும் தெற்கிணாமூர்த்தி எனவும் காலத்தைக் கணித்தறியும் வழி கண்டதால் காலன் என்றும் அழைக்கப்பட்டான்.

            தெக்கன் என்பதும் காலன் என்பதும் காரணப் பெயர்களாயிருப்பதால் அவை ஒரு மரபு சார்ந்த பெயர்களாகவே இருக்க வேண்டும்.

            இவர்களுக்கும் மேம்பட்டவர்களாக உருவானவர்கள் இயக்கர்களாவர். இவர்கள் வான் பொறிகளை இயக்கும் கந்தருவர்கள். இந்த இயக்கர் மரபைச் சேர்ந்தவர்களே இராவணன் முதலியோர். இவர்கள் காலத்தில் இந்தியா இந்துமாக் கடலின் ஓரிடத்தில் லாரேசியா நோக்கிய செலவில் நகர்ந்து கொண்டிருந்திருக்கும்.

            இனி இராமனுக்கு வருவோம்.

            இராமன் சிபி எனும் அரசன் வழிவந்தவன் என்று கம்பர் கூறுகிறார். புறாவுக்காகத் தன்னையே அளித்தவனாகக் கூறப்படும் இவன்தான் சோழர்களின் முன்னோனான செம்பியன். புள்ளுறு புன்கண் தீர்த்தோன் (வழக்குரை காதை), புறவுநிறை புக்கோன் (கட்டுரை காதை), புறவு நிறை புக்கு (வாழ்த்துக் காதை) என்று அவனைச் சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது.

            சிபியைப் பற்றிய அபிதான சிந்தாமணியின் விளக்கம். உசிநரன் குமரன் எனவும் சாச்சுத மனுவுக்கு நட்வலையிடம் உதித்தவன் என்றும் கூறுவர். இரண்டு முறையாய்ப் பிறப்பு கூறியிருத்தலால் இவன் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று துணியக் கூடவில்லை. என்பது.

            இவனுடைய முன்னோர்களை, அபிதான சிந்தாமணி, தமிழ் மொழியகராதி ஆகிய இரண்டிலுமிருந்து தடம்பிடித்தால் கிடைப்பது,
பிரமன்மரீசி(அரிசி→காசிபர் என்றும் ஒரு வரிசை உள்ளது)காசிபர்(+திதி)இரணியகசிபு பிரகலாதன்விரோசனன்பலிபாணாசுரன்மகாகாலன்மகாமனுஉசிநரன்சிபி கேகயன்.

            இவர்கள் பிரமனிலிருந்து வந்தவர்கள் என்றாலும் இரணியகசிபிலிருந்து அரக்கர்கள் என்று அறியப்படுகின்றனர். ஆனால் பிரகலாதன், பலி முதலியோர் சேர மரபினர். சிபி சோழ மரபினனாவான். இது இன்னோர் இடத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. துசியந்தன் பேரன் ஆச்சிரிதன் என்பவனுக்கு சேர, சோழ, பாண்டியர் மூவரும் மக்கள் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது. ஆக, சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று மரபினரும் ஒரே மூலத்திலிருந்து வந்திருக்கின்றனர் என்பது தொன்மங்களின் கூற்று. அதற்கேற்ப பாண்டியர் நிலா மரபினர், சோழர் கதிரவன் மரபினர், சேரர் நெருப்பு மரபென்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதே போல் இராமன் கதிரவன் மரபென்பதும் பாண்டவர் நிலா மரபென்பதும் தொன்மங்கள் தரும் செய்தி. குமரிக் கண்டம் முழுக முழுக அங்கிருந்து வெளியேறிய மக்கள் உலகெலாம் பரந்தபோது வட இந்தியக் கடற்கரையில் ஏறியவர்கள் இத் தமிழரசர் மரபுகளை அங்கும் தொடர்ந்தனர். சோழர்களின் ஒரு கிளையில் தோன்றிய இராமன் வழியினரும் அங்கெல்லாம் குடியேறி இருக்கவேண்டும். எனவே இராமர் தமிழ் மூவேந்தர்களின் சோழர் கிளையைச் சேர்ந்தவரென்பது உறுதி.

            பண்டை எகிப்திய மன்னர்கள் சிலர் தங்கள் பெயருக்குப் பின்னர் ராம்சே என்ற பின்னொட்டைச் சேர்த்தனர். இவர்கள் இராமன் வழி வந்தவர்கள் என்பதற்கு சான்று இது என்று காஞ்சி சங்கரமடம் காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரசுவதி அவர்கள் கூறுவார். இதற்கு இன்னொரு சான்றாக, தசரத சாதகத்தில் இராமனும் சீதையும் அண்ணன் - தங்கையர் என்ற உறவுமுறைக்கேற்பவே எகிப்திய அரச மரபில் உடன்பிறந்தார்களுக்கிடையிலும் மக்களிடையில் அக்காள் தம்பி இடையிலும் திருமணங்கள் நடைபெற்றன என்ற வரலாற்றாசியர்களின் கூற்று அமைந்துள்ளது.

            நாம் மேலே சுட்டிய மரபு வரிசையில் இரணிய கசிபு என்ற அரக்கன் வழிவந்த சிபியின் மரபில் தோன்றியவரே இராமபிரான் என்ற தொன்மச் செய்தி அரக்கர் தேவர் முரண்பாடு என்பது அரசியல் சார்ந்த ஒன்றே என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அப்படி இல்லையாயின் சேர, சோழ, பாண்டியர்களும் இராமபிரானும் அரக்கர் வழியினர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

            புத்த சாதகக் கதைகள் பண்டை வரலாற்றுத் துணுக்குகள் மற்றும் மக்களிடையில் நிலவிய பல்வேறு அறவழிக் கதைகளின் ஒரு தொகுப்பே என்பது அறிஞர் கருத்து. அந்த வகையில் இராமபிரானை ஒரு வரலாற்று மனிதராகவே, அதுவும் புகழ் மிக்க ஒருவராகவே கொள்ள வேண்டும். அதனால்தான் அவரது பெயர் பல பகுதிகளிலும் பரவி இருக்கிறது. அவர் வாழ்ந்த நிலம் கோண்டுவானாவிலிருந்து லாரேசியா நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருந்த ஓர் இடை நிலையில் அமைந்திருக்கலாம்.

            இவ்வாறு இரு காலகட்டங்களில் வாழ்ந்தவரும் தமிழர்களுமான இராமபிரான், இராவணனார் ஆகியவர்களைப் பகைவர்களாக்கி இதிகாசம் தோன்றிய வரலாற்றுப் பின்னணி பற்றி நாம் பார்ப்போம்.

            கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசு உருவானது. அதன் கீழ் 23 ஆம் மாநிலமாக சிந்து சமவெளி அடிமைப்பட்டது. அதே நூற்றாண்டில் பாரசீகம் கிரேக்கத்தின் மீது படையெடுத்தது. அப்போது நண்ணிலக் கடலில் வீசிய சூறாவளியில் சிக்கி பாரசீகப் போர்க் கப்பல்கள் அழிந்ததால் தோற்றது. அன்றிலிருந்து சிந்து சமவெளியில் கிரேக்கர்களின் பிடி இறுகத் தொடங்கி கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அலக்சாண்டர் படையெடுப்பின் போது முழுமை பெற்றது.

            இந்தக் காலகட்டத்தில் புத்தம், அம்மணம் ஆகிய சமயங்களின் தாக்குதலால் வேத சமயம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதனால் கலக்கமுற்றிருந்த பூசகர்களாகிய பார்ப்பனர்களைப் பற்றிக்கொண்டு கிரேக்க ஆளுநர்களாக இருந்தவர்கள் வைணவ சமயமாக வேத மதத்தை வளர்த்தெடுத்தனர். அதற்கு ஒரு காப்பியமாக, தசரத சாதகக் கதையில் கிரேக்கக் காப்பியமாகிய இலியதின் நிகழ்ச்சியை ஒட்டுப்போட்டு இராமாயணத்தை யாத்தனர். தசரத சாதகத்தில் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது போல் சீதையை எவரும் தூக்கிச் செல்லவுமில்லை; போரெதுவும் நடக்கவுமில்லை.  அன்று தென்னிந்தியக் கடல் வாணிகர்களின் போட்டியை எதிர்கொள்ள கிரேக்கர்கள் வட இந்தியப் பார்ப்பனர்களோடு இணைந்து உருவாக்கியதே வட இந்தியத் தேசியம். நாளடைவில் பார்ப்பனர்கள், கிரேக்கர் - உரோமர்களின் நலனுக்காக இந்திய மக்களில் கடற்பயணம் செய்வோரைத் தீண்டத்தகாதவராக்கி இந்தியக் கடல் வாணிகத்தையும் ஆதிக்கத்தையும் அழித்தனர்.

            மேலையருக்கும் வடவருக்குமான இந்த உறவு இன்றும் தொடர்கிறது. வர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாணர்கள் தமிழக வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்தது போல் காட்டிக்கொடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
           
இராமாயணத்தில் இராமபிரானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு அவர் எவராலும் கையாள முடியாத ஒரு வில்லை வளைத்தார் என்பதாகும். அது ஐந்தடிக்கு மேல் நீளமுள்ள ஒரு வில். அதைக் கையில் தூக்கிப்பிடித்துப் போர் செய்வது கடினம். எனவே அதைத் தரையில் ஊன்றித்தான் அம்பெய் முடியும். இத்தகைய ஒரு வில்லின் கண்டுபிடிப்பு யானை ஒரு போர்க்கருவியான பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். தொலைவிலிருந்தே வீசி யானையை வீழ்த்தும் ஒரு போர்க்கருவியாகிய வேலைக் கண்டுபிடித்து அல்லது கையாண்டு புகழ் பெற்று தமிழகத்தில் வணங்கப்படும் முருகனைப் போல் பெரிய இந்த வில்லைக் கண்டுபிடித்து அல்லது கையாண்ட நிகழ்ச்சியை இராமபிரானோடு இணைத்து இராமாயணத்தை யாத்துள்ளனர்.

இதில் ஒரு வரலாற்று விந்தை என்னவென்றால் அலக்சாந்தருடன் இந்திய மன்னர்கள் போரிட்ட போது அவர்கள் தோல்விக்குக் காரணமாக இருந்தது இந்த வில்தான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கனம் மிகுந்த இந்த வில்களைத் தூக்கிக்கொண்டு ஓட இந்திய வீரர்களால் முடியவில்லையாம். கனம் குறைந்த சிறிய வில்களுடன் விரைந்து ஓடிவந்த கிரேக்க வீரர்கள் மிக எளிதாக இந்திய வீரர்களை வீழ்த்திவிட்டனர்.

            கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரசுகள் உலகின் பல நாடுகளில் வந்தேறிய (காலனிய) அரசுகளை அமைத்திருந்தன. ஆனால் சீனத்தில் இன்றைய சிறப்புப் பொருளியல் மண்டலங்களைப் போன்ற “செல்வாக்கு மண்டலங்”களை மட்டுமே அமைத்திருந்தனர். நாட்டின் ஆட்சி சீனர்களிடம் இருந்தாலும் இந்தச் செல்வாக்கு மண்டலங்களுக்குள் அதன் ஆளுமை செல்லாது. (பாக்சர் கலகம் தொடங்கி மா சே துங் வரை ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டு காலம் போராடி பல நூறாயிரம் சீன மக்கள் குருதி சிந்தி அகற்றிய அதே செல்வாக்கு மண்டலங்களைச் “சிறப்புப் பொருளியல் மண்டலங்கள்” என்ற பெயரில் சீன அரசு அமைத்துள்ளதை வானளாவப் புகழ்நது சீனத்தில் நிகழும் பொருளியல் புரட்சியைப் பாரீர் என்று நம் நாட்டிலுள்ள, பல்லாயிரம் பிரிவுகளாகப் பிளவுண்டு கிடக்கும் “பொதுமைப் புரட்சியாளர்கள்” முழங்குகின்றனர். இன்று இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அதே அச்சில் வார்க்கப்பட்டவையே!) வல்லரசியத்தினுள் காலங்கடந்து நுழைய முயன்ற அமெரிக்கா, செல்வாக்கு மண்டலங்களுக்கு மாற்றாக, எல்லாருக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் ஒரு “திறந்த வாயில் கோட்பாட்டை” (Open door policy) வலியுறுத்திப் பெற்று உள்ளே நுழைந்தது. ஆனால் இந்தியாவில் ஆட்சி ஆங்கிலர் கையில் இருந்ததால் இந்த உத்தி உதவாது. அதற்காக அது குறுக்கு வழியில் இறங்கியது. ஆரிய “இன”க் கோட்பாட்டை நம்பிய அமெரிக்கரான கர்னல் ஆல்காட் என்பவரும் உருசியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பிளாவட்கி அம்மையார் என்பவரும் இணைந்து இறையியல் கழகம்(பிரம்ம ஞான சபை) என்று ஓர் அமைப்பைத் தொடங்கினர். வேதங்கள்தாம் மனித அறிவுகளின் மிக உயர்ந்த தொகுப்பு என்ற கோட்பாட்டைக் கொண்ட இவர்கள் தங்கள் அமைப்பின் தலைமையகத்தை இந்தியாவில் வைத்துக்கொள்ள மும்பையில் வந்து இறங்கினர். எவரும் சீண்டவில்லை. இந்து சீர்திருத்த இயக்கங்களால் மனம் வெறுத்துப் போயிருந்த பார்ப்பனர்களும் சாதிவெறியர்களும் நிறைந்த சென்னையைக் குறிவைத்து இடம் பெயர்ந்தனர். இங்கு நல்ல வரவேற்பு. சென்னை அடையாற்றில் அலுவலகம் அமைத்து பார்ப்பனியத்துக்கு உரம் சேர்த்துவந்தனர்.

            இங்கு வந்து சேர்ந்தார் ஆங்கில அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான இயூம் என்பவர். ஆங்கில அரசு இந்தியர்களின் உயர்ந்த மரபான வேத வாழ்க்கையைச் சிதைத்துவிட்டது என்று பரப்பிக்கொண்டிருந்த கழகத்தவரின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு வெளியேறி அப்போது கழகத்தின் தலைவராயிருந்த பிளாவட்கி அம்மையாரை ஓர் ஏமாற்றுக்காரர் என்று குற்றம் சாட்டினார். இவர்களிடமிருந்து இங்கிலாந்தின் நலன்களைக் காக்க இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியைத் தொடங்கினார். இன்றுவரை ஆங்கிலர் உட்பட அயலவர்களின் நலன்களை தொடர்ந்து இன்று இத்தாலியரான சோனியாவின் தலைமை வரையில் நன்றாகவே பேணிக் காக்கிறது அக் கட்சி.

            அடுத்த நடவடிக்கையாக ஆங்கில அரசு ஒரு பெண்மணியை ஆயத்தம் செய்து இந்தியாவுக்கு விடுத்தது. அவர் பெயர் அன்னி பெசன்று. அவர் பிறப்பில் கிறித்துவர், மாணவராயிருந்த போது இறைமறுப்பாளர், பின்னர் “இந்து” இலக்கியங்களைக் கற்ற ஆணித்தரமான “இந்து”. அவர் பிளாவட்கி அம்மையாரின் பின்னர் கழகத்தின் தலைமையேற்றார். காந்திக்குப் போட்டியானவர் போன்று இந்தியாவுக்குப் பொறுப்பாட்சி வேண்டுமென்ற வேண்டுகையை முன்வைத்து அமெரிக்காவின் பிடியிலிருந்து கழகத்தை மீட்டார்.

            இதற்கிடையில் உலக சமய மாநாட்டுக்கு விவேகானந்தர் சென்று வந்தது, இந்து மகாசபை, இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) ஆகிய இந்துவெறி அமைப்புகளின் தோற்றம் ஆகியவை அமெரிக்க ஒத்துழைப்புடன் நிகழ்ந்தன. 120 ஆண்டுகள் அரும்பாடுபட்டும் வளர முடியாத அமெரிக்காவின் கள்ள உறவில் பிறந்த சனசங்கம் 1977இல் மொரார்சி தேசாய், 1989 இல் வி.பி. சிங் ஆகியோரின் பதவி வெறியை நிறைவேற்றும் சாக்கில் வலுப்பெற்று திராவிடத் தரகுக் கும்பல்களின் வேட்டைக்காக வளர்க்கப்பட்டு இன்று அமெரிக்க - மார்வாரி நலன்களுக்காக, இந்தியக் கடல் மேலாளுமையில் இந்தியா வளர்ந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் இல்லாத இராமர் பாலத்தைக் காட்டி சேதுக் கால்வாய் எனப்படும் தமிழன் கால்வாயைத் தடுத்து நிறுத்த முயன்று தற்காலிக வெற்றியையும் பெற்றுள்ளது. அதன் முன்பதிப்பான பேரவைக் கட்சியும் கிடைத்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளது.

            ஏறக்குறைய 6000 கி.மீ. நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்தியா அதனை வெறும் மீன்பிடிக்கும் குட்டையாகவே பயன்படுத்துகிறது. பொருள் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா, விளையாட்டு, பொழுது போக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு என்று எத்தனையோ வகையில் கடற்கரையைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்று கடற்கரை மக்களிடையில் அமெரிக்க ஒற்றர்கள் புகுந்து அவர்களை கடல்சார் பழங்குடியினர் என்று பெயர் சூட்டி உள்நாட்டு மக்களிடமிருந்து பிரித்து கடற்கரையின் முழுப் பயன்பாட்டை நம் நாடு அடைந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.

            கடற்கரை வாழ் மக்களின் பலமுனை வளர்ச்சிக்கு கடற்கரையின் பன்முறைப் பயன்பாடுதான் ஒரேவழி என்பதனை அவர்களுக்கு எடுத்துரைத்து தடுத்து வைத்திருக்கும் சூழ்ச்சிக்காரர்களை அம்பலப்படுத்தி தமிழன் கால்வாயை வெற்றிகரமாக முடித்து இந்தியக் கடற்ரையை அதன் முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியில் முதலடியை எடுத்து வைப்போம்!

0 மறுமொழிகள்: