13.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 1

மனந்திறந்து……….

தமிழகத்து நிகழ்ச்சிகளைக் கூறும் காப்பியம் என்பதால் சிலப்பதிகாரத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பதிப்பித்த சிலப்பதிகாரம் கழக வெளியீட்டை 1970இல் வாங்கிப் படித்தேன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நான் முழுமையாகப் படித்தது சிலப்பதிகாரம் மட்டும்தான் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

1980களின் தொடக்கத்தில் மதுரையில் ஓர் அறையில் நான் தங்கியிருந்த போது இன்னோரறையில் தங்கியிருந்த அக் கட்டடத்துக்குப் பொறுப்பாளரான ஏசுதாசு என்பவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். மதுரை தீக்கிரையாகி மன்னனும் அரசியும் மாண்டு 14 நாட்களுக்குப் பின்னரே கண்ணகி தேவருலகம் செல்கிறாள். அதன் பின்னரே சேரன் செங்குட்டுவன் மலைவளங்காண வருகிறான். அப்போதுதான் ஒரு பெண் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து தேவருலகம் சென்றதைக் குன்றக் குறவர்கள் சொல்ல, அப்போது அரசனுடன் இருந்த சாத்தனார் கோவலன் – கண்ணகி குறித்த செய்திகளைச் சொல்கிறார். அப்படியானால் அண்டை நாட்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை சேரன் அறியாமல் இருந்தான் என்பது நம்பும்படி இல்லை. எனவே சிலப்பதிகாரக் கதை வெற்றுக் கற்பனை என்று அவர் கூறினார்.

அவர் கேட்ட கேள்வி ஞாயமானதே, அதுவும் சேரன் செங்குட்டுவன் வடநாடு செல்வது குறித்து அங்குள்ள அரசர் அனைவருக்கும் ஓலை விடச் சொன்ன போது நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா(காட்சிக் காதை வரி. 173 – 4), எனவே தலைநகரில் பறையறைந்தால் போதும் அனைத்து அரசர்களுக்கும் செய்தியை அந்நந்நாட்டு ஒற்றர்கள் தெரிவித்து விடுவார்கள் என்று அமைச்சன் அழும்பில் வேள் கூறும் ஓர் அரசிடை உறவு நிலை உருவாகிவிட்ட சூழலில் என்பதில் எனக்கு எந்த ஐயமும் எழவில்லை.

ஆனால் சிலப்பதிகார நிகழ்ச்சி கற்பனையல்ல என்று கூறுவதற்கு தமிழகத்திலும் வெளியேயும் குறிப்பாக கேரளத்திலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அப்படியானால் நண்பர் கேட்ட கேள்விக்கு விடையை மனம் தேடியது.

அப்போது மார்க்சியம் எனக்கு வழிகாட்டியது. தனி மனிதர்களுக்கும் குமுகத்துக்கும் உள்ள உறவைப் பற்றிய மார்க்சியப் புரிதலே அது. குமுகம் தன் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் அங்கு தோன்றும் ஒரு தனி மனிதனின் செயற்பாடுகளைப் பற்றிக்கொண்டு மக்கள் அம் மனிதனின் பின் திரண்டு தங்கள் நெடுநாள் கொதிப்பை ஆற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் அது. கண்ணகியின் நேர்வில் இது போன்ற பின்னணி இருந்ததா என்ற கேள்வி என்னுள் எழுந்த போது ஆம் என்று விடை தந்தது கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்ட என்ற ஊர் சூழ்வரியின் 29ஆம் வரி, அதாவது தன் கணவன் கொலைப்பட்டுக் கிடக்கும் இடத்தைத் தேடிப்போன கண்ணகியின் பின்னே ஆர்ப்பரிக்கும் மக்களின் கூட்டம் ஒன்று தொடர்ந்து சென்றது என்ற செய்தி மேலும் என் தேடுதலை ஊக்கியது. அதன் பயனாக உருவானதே மதுரையை எரித்தது யார்? என்ற என் கட்டுரை .

சேரன் செங்குட்டுவன் படையோடு வந்து அமரத்தக்க, மலை மீதிருக்கும் பெரியாற்றின் கரை பெரும்பாலும் வண்டிப்பெரியாறாகத்தான் இருக்கும். அதாவது வஞ்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட ஓரிடம் இது. மதுரையில் மக்கள் கலகம் மூண்டு அரசனும் அரசியும் கொலைப்பட்டுவிட்டனர் என்பதறிந்து அதை அடக்கவென்று புறப்பட்டவனுக்கு வழியில் குறவர் சொன்ன சேதியும் சாத்தனார் மதுரையில் மக்கள் கலகத்தில் கண்ணகியின் பங்கு பற்றி கூறியதும் மதுரையில் நெடுஞ்செழியனின் தம்பி வெற்றிவேற்செழியன் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதும் அவனது வேலையை எளிதாக்கிவிட்டது. மதுரையில் நடந்தது மக்கள் கலவரமல்ல, ஓரு பத்தினிப் பெண்ணின் சினத்தீயின் விளைவே என்று மக்களைத் திசைதிருப்ப கண்ணகிக்குக் கோயில் எடுப்பதென்றும் அதற்குச் சிலை செய்ய இமயம் செல்வதென்றும் அந்தச் செல்கையின் போதே தமிழ் மன்னர்களை இழிவாகப் பேசிய “ஆரிய” மன்னர்களைத் தண்டிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மக்களைத் திசைதிருப்ப கோயில் கட்டுவதும் சிலை நிறுவுவதும் மணிமண்டபம் அமைப்பதும் ஆகிய நடைமுறையை நம் ஆட்சியாளர்கள் அன்றே தொடங்கிவிட்டதையும் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

அதாவது மதுரைக் கலகத்தில் கண்ணகியின் பங்கு பற்றித்தான் சேரன் செங்குட்டுவன் பெரியாற்றங்கரையில் அறிந்தான் என்பதுதான் நண்பர் சேசுதாசு எழுப்பிய கேள்விக்கு விடையாக எனக்குக் கிடைத்தது.

இந்தத் தேடலில் எனக்குத் தெரிய வந்தது வெளிப்படையாகக் கூறப்படும் கதைக்கு மாறான இன்னொரு கதை நூலினுள் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அரசர்களின் கொடுங்கோன்மைகள், இயலாமைகள், மக்களிருந்து அயற்பட்டுவிட்ட சமயத் தலைமைகள் என்ற நுட்பமான செய்திகள் ஒருபுறம் என்றால் மக்களிடமிருந்து அரசர்கள் முற்றிலும் அயற்பட்டு நின்ற சூழலில் அம்மண அநாகரிகர்கள் இங்குள்ள மலைவாழ் மக்களையும் முல்லை நில மக்களையும் அரசர்களுக்கு எதிராகத் திரட்டி தமிழர்களின் பண்பாட்டுச் செல்வங்கள் அனைத்தையும் தடந்தெரியாமல் அழித்துவிடுவார்கள் என்பதை முன்னறிந்து எழுத்தில் புதைக்கத்தக்கவை அனைத்தையும் புதைப்பதற்காக இளங்கோவடிகள் இக் கதையைப் பயன்படுத்தியிருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. அப் பண்பாட்டுக் கூறுகளை, குறிப்பாக இசை – நாடகங்களைப் பொறுத்தவரை தன் நூல் ஒரு பாடநூலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காதைகளில் பகுதி பகுதியாகப் பிரித்துவைத்துள்ளார். அவ்வாறு அன்று பெரியாற்றங்கரையில் தீர்மானிக்கப்பட்டதற்கு மாறாக உண்மைகளை வெளிப்படையாக அடிகள் எடுத்துவைத்திருந்தால் இன்று இந் நூல் நமக்குக் கிடைக்காதபடி அழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய இலக்கிய உத்திக்கு எடுத்துக்காட்டாக உருசிய நாடகமான INSPECTOR GENERALஐக் கூறலாம். சார் மன்னனின் ஆட்சிக் குறைபாடுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி அவனைக் குலுங்கக் குலுங்க நகைக்கவைத்த ஆசிரியரின் உத்தியை இலக்கிய உலகம் போற்றுகிறது. ஆனால் இளங்கோவடிகள் எடுத்துக்கொண்ட பணி இதனோடு ஒப்பிட மிக மிகக் கடினமான ஒன்று. அதை அவர் மிக மிகச் சிறப்பாக முடித்துள்ளது அவரது மிகுந்த திறமையையும் கடின உழைப்பையும் மட்டுமல்ல தமிழ் மண் மீதும் மக்கள் மீதும் அவருக்கு இருந்த கலப்பில்லாத ஈடுபாட்டையும் காட்டுகிறது.

அவர் அஞ்சியது போலவே அம்மணர்களால் அழிக்கப்பட்ட நாகரிகத்தைச் சார்ந்து வாழ்ந்த மக்களும் தத்தம் துறைகளைக் கைவிட்டுவிட அல்லது நாட்டை விட்டே வெளியேறிவிட, பின்னர் அம்மணத்திலிருந்து விடுபட்ட பல்லவர்களும் பிறரும் கோயில்களைக் கட்ட முற்பட்ட போது புதிதாக உருவான கலைஞர்கள், குறிப்பாக சிற்பக் கலைஞர்கள் பழையவர்களின் தரத்திற்கு உயரவில்லை என்பது வட இந்தியாவிலும் தமிழர்க்குரியனவாகக் கூறப்படும் கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளில் அண்மை ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோயில்களோடு இப்போது தமிழகத்தில் இருக்கும் கோயில்களை ஒப்பிடும் போது தெரிகிறது. நிகழ்த்து கலைகளைப் பொறுத்தவரை ஆடலுக்கு ஆந்திரத்தின் கணிகையர் இறக்குமதியாயினர். பாடலுக்கு மூவர் எனப்படும் தெலுங்கு இசை முன்னவர்களை அகற்றி தமிழிசை மூவரை நிலைநிறுத்தும் முயற்சி இன்றும் வெற்றி பெறவில்லை.

நாடகம் என்ற கலையைப் பற்றி இளங்கோவடிகள் தந்துள்ள வரையறைகளைத் திரைத்துறையினர் உன்னிப்பாகப் பயின்று பின்பற்றுவார்களாயின் அவர்களின் படைப்புத் திறன் மேம்பட வாய்ப்புண்டு.

ஆனால் அடிகள் கடைப்பிடித்த ஒன்றை மட்டும் இன்று தவறாமல் கையாள்கிறார்கள். அதாவது ஒவ்வொரு படத்திலும் ஐந்து பாடல் காட்சிகள், அதற்குக் குறையாத எண்ணிக்கையில் ஆடல் காட்சிகள், காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்ற கலவை வாய்பாட்டைத்தான் குறிப்பிடுகிறேன்.

இவ்வாறு கண்டவற்றை ஒரு நூலாக்க வேண்டும் என்று விரும்பிய நான் என் வாழ்க்கைச் சூழலில் இவ்வளவு பெரும் பணியை நிறைவேற்ற முடியுமா என்ற மலைப்பில் இருந்தேன்.

குடும்பப் பொறுப்புகளில் பெரும்பாலானவை முடிந்துவிட்ட நிலையில் எஞ்சியிருந்த மகளின் திருமணத்திற்காக குமரி மாவட்டத்தில் சொந்த ஊரிலுள்ள சொத்துகளை விற்க திருநெல்வேலியிலிருந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சொந்த ஊர் சென்றேன். அங்கு ஈத்தாமொழி தியாகராசன் என்ற நண்பர் தன் அமைப்பாகிய இலக்கியச் சோலையின் சார்பில் சனிக்கிழமை தோறும் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். அந் நிகழ்ச்சியில் விசுவதிலகம் என்ற ஓய்வுபெற்ற பள்ளியாசிரியர் கம்பராமாயண வகுப்பு நடத்தினார். அதைப் பார்த்த நான் சிலப்பதிகார வகுப்பு நடத்தும் என் விருப்பத்தை நண்பர் தியாகராசனிடம் வெளியிட்டேன். அதை உடனே ஏற்றுக்கொண்ட நண்பர் வியாழக் கிழமை தோறும் தமிழ்க் கேணி என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந் நிகழ்ச்சிகள் வல்லன்குமாரன்விளை வழக்கறிஞர் இராசகோபால் அவர்களுக்குச் சொந்தமாக கோட்டாற்றில் இருந்த வளாகத்தில் அமைந்திருந்த அவரது அலுவலகத்தில் நடைபெற்றன.

வகுப்பில் பேசுவதைப் பதிவு செய்து பின்னர் அதை எடுத்தெழுதுவது என்பது எனது திட்டமாக இருந்தது. அதற்காக மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றும் நண்பர் தங்கராசு ஒரு நாடாப் பதிவியையும் நாடாச் சுருள்களையும் வாங்கித் தந்தார். ஆனால் பதிந்தவற்றை எடுத்தெழுத ஆள் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. எனவே பதிவுசெய்து கொண்டோம். அந்தப் பணியை நிகழ்ச்சிக்கு தவறாது வந்துகொண்டிருந்த பள்ளியாசிரியர் திரு.எட்வின் பிரகாசு ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 100 வகுப்புகள் நடந்து நிகழ்ச்சி இனிதாக நிறைவேறியது.

சிறிது காலத்துக்குப் பின் நாகர்கோயிலில் நான் ஓர் அலுவலகம் அமைக்க வேண்டி வந்தது. அங்கு மீண்டும் ஒரு முறை வகுப்பு நடத்தினேன். இப்போது பேச்சை நேரடியாக கணினியில் பதிந்தோம். அந்தப் பொறுப்பையும் நண்பர் எட்வின்தான் ஏற்றுக்கொண்டார். வகுப்புகளை மீண்டும் ஒருமுறை நடத்தும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்ட போது அடுத்த நாள் பேச இருப்பவற்றுக்கு முதலில் குறிப்புகள் எடுத்தேன். இந்தக் குறிப்புகளை தட்டச்சர் கொண்டு தட்டச்சு செய்து அதை மேம்படுத்தி கணினியில் பதிந்துகொண்டோம். இதற்கிடையில் நான் முடித்து வைத்திருந்த COLLEGE OF ENGINEERING MANUAL - IRRIGATION by Col.W.M.ELLIS என்ற தமிழக அரசு வெளியீட்டின் தமிழாக்கத்தைத் தங்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் சங்க(பொ.ப.து.) பொறுப்பாளர்கள் கூறி அதனை முடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டதால் அதற்கான வரைபடங்களைக் கணினியில் வரைவதற்கும் புத்தக வடிவமைப்புக்கும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நானும் நண்பர் எட்வினும் செலவு செய்ய வேண்டியிருந்தது. எனக்கும் என் துணைவிக்கும் உடல்நலக் குறைவினால் இன்னும் மூன்றாண்டுகள் ஓடிவிட்ட நிலையில் அவற்றிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு இந்தப் பணியை முடித்துள்ளேன்.

இதை எழுதுவதற்காக நான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நூல்களில் எவற்றையும் பார்க்கவில்லை. மேலே குறிப்பிட்ட வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையில் தரப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலேயே என் கருத்துகளை முன்வைத்துள்ளேன். கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்ததற்கான காரணங்களாக என் இளமையில் நான் படித்த சிலரது கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் யார் யார் என்பது இப்போது நினைவிலில்லை. வகுப்புகளில் கலந்துகொண்டோர் தாங்கள் எழுப்பிய கேள்விகள் மூலம் என் தேடலை ஊக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, கோவலன் – கண்ணகியின் புணர்ச்சியை பாம்புகளின் புணரச்சியோடு ஒப்பிட்டு அடிகளார் கூறியிருப்பது அருவருப்பான உவமை என்று நாகர்கோயிலைச் சார்ந்த பேரா.சுந்தரலிங்கம் குறிப்பிட்டதைக் கூறலாம். வகுப்புகளில் தவறாது கலந்துகொண்டு அன்றன்றைய நிகழ்ச்சி முடிவில் கருத்துரைகள் வழங்கிய பேராசிரியர் சிவமுருகன் அவர்களின் வழிகாட்டல் பெரிதும் பயன்பட்டது. பள்ளியாசிரியர் ஆபிரகாம் லிங்கன், புலவர் கா.சு.பிள்ளை, தங்க துமிலன், சின்னத்தம்பி, தங்கசாமி, புலவர் வே.செல்லம் முதலியோரும் கருத்துகளை வழங்கியுள்ளனர்.

இந்த நூலை எழுதும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதை அறிந்ததும் நண்பர் தமிழினி வசந்தகுமார் அதைத் தான் வெளியிட விரும்புவதாகக் கூறி புலவர் ஆ.பழனி அவர்கள் எழுதி தான் வெளியிட்ட சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு என்ற நூலை அதிலுள்ள கருத்துகள் எனக்குப் பயன்படும் என்று தந்து உதவினார். அதில் சில அரிய செய்திகள் எனக்குக் கிடைத்தன.

சாதிப் பின்புலம், அரசியல் பின்புலம், உயர் பதவிகளில் ஏற்கனவே இடம் பிடித்துவிட்ட குடும்பப் பின்புலம் முதலியவற்றுடன் கண்டிப்பாகப் பணப் பின்புலமும் உள்ளவர்களுக்கு, சராசரிக் குடிமகன் எண்ணிப் பார்க்க முடியாத உயர் சம்பளத்துடன் பலவகைப் படிகளுடன் கணிசமான சட்டத்துக்குட்பட்ட பக்க வருமானங்களுடன் ஓய்வூதியமும் சட்டத்துக்குப் புறம்பான வரும்படிகளும் ஈட்ட வாய்ப்புள்ள பதவிகளைத் தரும் நிறுவனங்களாக இன்றைய பல்கலைக் கழகங்கள் ஒடுங்கிக் கிடக்கின்றன.

இந்தப் பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக் கழக நல்கைக் குழு மூலமும் வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு திட்டங்களின் பெயரில் பெருந்தொகைகள் வருகின்றன. அவற்றில் ஒரு தம்பிடியைக் கூட பல்கலைக் கழகச் சம்பளப் பட்டியலில் கையைழுத்திட்டுச் சம்பளம் வாங்குவோர் தவிர வேறெவருக்கும் எந்தத் திட்டத்துக்காகவும் வழங்குவதில்லை என்பதை நடைமுறையாக வைத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அசாம் மாநிலத்தில் பேராய்வு(Survey)த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, செங்கம் கு.வெங்கடாசலம் என்ற பெரியவர் சிந்து சமவெளி அகழ்வில் கிடைத்த எடைக் கற்களை ஆய்ந்து அவற்றின் எடைகள் தமிழர்களிடம் இருந்த காணி வாய்பாட்டில் இருப்பதைக் கண்டறிந்தார் தமிழகத்திலுள்ள இந்த வாய்பாடு நீட்டல், முகத்தல், நிறுத்தல் ஆகிய அனைத்துக்கும் பொதுவாக இருப்பதை வெளிப்படுத்தினார். மாட்டு வண்டி செய்யும் கொல்லுத்தொழில் வல்லோரிடமிருந்துதான் அவர் வண்டிப் பைதா(சக்கரம்)வின் ஆரை, சுற்றளவு ஆகியவற்றை அறிந்து பிரிட்டீசு நீட்டலளவையில் தொடரி(சஙஙகிலி), படைசால்(பர்லாங்கு) ஆகியவற்றுக்கும் அவற்றுக்குமுள்ள உறவை வெளிப்படுத்தினார். பண்டைத் தமிழ்க் கணித நூலான கணக்கதிகாரம் பற்றிய ஆய்வை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்துவதற்கு இசைவு கேட்டு அப்போது துணை வேந்தராக இருந்த, தமிழ்ப் பேராசிரியர்களில் ஒரு சாரரால் மிகவும் போற்றப்படும் ப-ர்.திரு.வ.அய்.சுப்பிரமணியம் அவர்களை அவர் அணுகியுள்ளார். ஆனால் அவரோ “எங்கள் பேராசியர்களே அதைச் செய்வர்” என்று திருப்பிவிட்டார் அவரை. அவர் பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காகச் செயற்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்து தன் செயற்பாடுகளைத் திருப்பிக்கொண்டார்

இந் நிகழ்ச்சியை இங்கு சுட்டிக்காட்ட காரணம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் சென்ற நூற்றண்டின் தொடக்கத்திலும் சிங்காரவேலு முதலியார், நா.கதிரைவேற்பிள்ளை போன்றவர்கள் தமிழ் இலக்கிய – இலக்கணங்கள், நிகண்டுகள், மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த நூற்கள், சமற்கிருத நூற்கள், தொன்மங்கள், இற்றை அறிவியல் ஆகியவற்றிலிருந்து கடுமையான உழைப்பில் முறையே அபிதான சிந்தாமணி, தமிழ்மொழி அகராதி என்ற கலைக் களஞ்சியங்களைத் தொகுத்து வெளியிட்டனர். மு.ஆபிரகாம் பண்டிதர் தானே இசை மாநாடுகள் நடத்தி கர்நாடக இசைக்கு மூலம் பழந்தமிழ் இசைதான் என்பதை இந்நிய அளவில் நிலைநாட்டியதுடன் கருணமிர்த சாகரம் என்ற அரிய ஆய்வுநூலையும் வெளியிட்டார். தொடக்க முயற்சிகளாகிய முதல் இரண்டு கலைக்களஞ்சியங்களையும் எத்தனையோ வகைகளில் மேம்படுத்த வேண்டியுள்ளது. பல்லாயிரங்கள் என்று சொல்லும் வகையில் பண்டிதர்(முனைவர்)களை நம் பலைகலைக் கழகங்கள் படைத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களில் எவரும் இத் திசையில் சிந்திக்கவில்லை. மலையாளத்தில் அத்தகைய சான்றுகளைக் காட்டும் கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துவிட்டதென்று நண்பர் செயமோகன் கூறினார்.

இந்த நூலை நான் எழுதிய போது வாசனைப் பொருள்களைப் பொறுத்தவரை பெயர் முரண்பாடுகள் பல வெளிப்பட்டன. இதில் முடிவு எடுக்க முடியாததால் மேற்படி கலைக்களஞ்சியங்களும் கழகத் தமிழ் அகராதியும் தந்துள்ள பொருள்களை பட்டியலிட மட்டும்தான் என்னால் முடிந்தது. இது பற்றி தமிழ் மருத்துவக் குடும்பத்தில் தோன்றி இன்றும் மருத்துவம் பார்க்கும் பள்ளி ஆசிரியர் நண்பர் திரு.ஆபிரகாம் லிங்கன் அவர்களிடம் கூறிய போது அவர் கொடுத்த பட்டியலை இணைத்துள்ளேன். உண்மையில் தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவக் கல்லூரிகள் போன்றவை இந்தத் திசையில் செயற்பட வேண்டும். ஆனால் பிற “தொழிற்” படிப்புகளுக்கு இடம் கிடைக்காமல் வேண்டா வெறுப்பாகச் சேர்ந்து பட்டம் பெற்றுவிட்ட இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உயர் சம்பளத்தில் வேலையும் வெளியே தனித் தொழிலும் செய்ய வாய்த்த பின் மேற்கொண்டு உடம்பையோ மனதையோ ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

எவரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வது என் நோக்கமல்ல. மழலைப் பருவத்திலிருந்தே குழந்தைகளின் இயற்கையான ஆர்வங்கள், திறைமைகளை இனங்கண்டு படிப்பு – செயலறிவு என்று மாற்றி மாற்றி கல்வியைப் புகட்டி ஒவ்வொரிடமிருந்து பெறத்தக்க மீப் பெரிய ஆற்றலை வெளிப்படுத்தி நாட்டுக்குக் கிடைக்கத்தக்க மீப் பெரிய மனித வளத்தை உருவாக்குவதற்கு மாறாக குழந்தைப் பருவத்திலிருந்தே சிந்திக்கும் திறனை அழிக்கும் ஒரு கல்வித் திட்டத்தை வகுத்து வல்லரசியத்துக்குத் தேவைப்படும் சிந்திக்கத் தெரியாத மனித இயந்திரங்களை உருவாக்கும் இன்றைய கல்வி முறையின் பால் நம் கவனத்தை ஈர்க்கவே இதை இங்கு கூறுகிறேன்.

நூல்களை அதிகாரம் அதிகாரமாகப் படித்து செய்தியை உள்வாங்கித் தேர்வில் விடை எழுதுவதற்குப் பகரம் வரி வரியாகப் பிரித்து மாணவனின் புரிதல் திறனைக் கருவறுக்கும் கேள்வி வங்கி முறை என்றும் நான்கு விடைகளைக் கொடுத்து ஒற்றையா இரட்டையா என்று எழுதவைக்கும் புறவகை (Objective type) வினாக்கள் முறையும் பள்ளிக் கல்வியின் போதே மாணவர்களின் சிந்தனைத் திறனை முடக்கிவிடுகின்றனர். இரண்டாண்டு மூன்றாண்டுகளுக்குரிய பாடங்களை மனதில் வைத்து இறுதித் தேர்வில் எழுதுவதை நிறுத்தி பருவமுறை என்று கல்லூரிக் கல்வியைப் பயனற்றதாக்கினர். ஆய்வேடுகளில் மாணவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் முன்னவர் ஒருவரை மேற்கோள் காட்டுவது இன்றியமையாதது, அதாவது மாணவர் தன் சொந்தக் கருத்து அல்லது முடிவு என்று எதையும் கூறிவிடக்கூடாது என்பது கண்டிப்பான நடைமுறை. எனவே ஆய்வேடுகள் என்பவை வெறும் செய்தித் தொகுப்புகளாகவே இருக்கின்றன. இந்தப் பின்னணியில் ஆய்வேடு எழுதிக் கொடுத்து பணம் ஈட்டும் ஒரு கூட்டமே பல்கலைக் கழகங்களின் தாழ்வாரங்களில் ஆட்சி செலுத்துகிறது. இந்த உத்திகள் அனைத்தும் அமெரிக்காவின் வழிகாட்டுதலில் புகுத்தப்பட்ட நடைமுறைகள். இவ்வாறு திரட்டப்பட்ட புலனங்களை(தகவல்களை) வரிசைப்படுத்துவதற்கு என்றே கணினிப் பணியாளர்கள் அமெரிக்காவுக்கு தொடக்க காலங்களில் தேவைப்பட்டார்கள். அதற்கேற்பவே நம் ஆட்சியாளர்களை கல்வித் துறைக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை என்றும் இங்கிருந்து ஊழியர் படை செல்வதற்கு மனிதவள ஏற்றுமதி என்றும் இழிவான பெயர் சூட்ட வைத்தனர் அமெரிக்க ஆண்டைகள். ஆனால் அமெரிக்கக் கல்வி முறை மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதாகத்தான் இன்றும் இருக்கிறது. ஆங்கிலர் நம்மை ஆண்ட போது அங்கே வழக்கிலிருந்த கல்வி முறையைத்தான் இங்கும் கடைப்பிடித்தார்கள். ஆனால் அங்கிருந்த வளர்ச்சி நிலைக்கும் இங்கிருந்த நிலைக்கும் இருந்த எட்டிப்பிடிக்க முடியாத ஏற்றத்தாழ்வால் அக் கல்வியும் நமக்குப் பயனளிக்கவில்லை.

கடலாடு காதையில் அடிகளார் தரும் இன்னொரு பட்டியல் மாதவி சூடிய அணிகலன்கள் பற்றியது. இது பற்றி தெரிந்துகொள்ளப் பொருத்தமானவர் திரு.செந்தீ நடராசன் என்று அவரை நண்பர் ஆபிரகாம் லிங்கனுடன் சென்று பார்த்தோம். அவர் சில அணிகலன்களின் படத்தை வரைந்து விளக்கங்களுடன் தந்தார். கடலாடு காதையில் மட்டுமல்ல சிலப்பதிகாரம் முழுவதிலும் கூறப்படும் பலவேறு அணிகலன்களை அவற்றை அணிந்து காணப்படும் சிலைகளின் புகைப்படங்களுடன் விளக்கும் ஒரு தனி நூல் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

இந் நூல் இன்றைய வடிவம் பெறுவதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற மேலே கூறப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனக்கு மாணவர் போலவும் பல சூழல்களில் வழிகாட்டியாகவும் விளங்கும் நண்பர் ம. எட்வின் பிரகாசு அவர்களுக்கு நன்றி கூறுவது எனக்கு நானே நன்றி கூறுவதாக அமையும் என்றாலும் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர் தமிழினி வசந்தகுமார் அவர்கள் என் மீது அளவற்ற நம்பிக்கையுடன் இந் நூல் முடிவடையும் முன்பே வெளியிட முன்வந்ததற்கு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அவருக்கு அறிமுகம் செய்ததன் மூலம் தமிழினி இதழில் படைப்புகள் வெளிவரக் காரணமான நண்பர் செயமோகன் அவர்களுக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடன் பெரிது.

இறுதிக் கட்ட வகுப்புகளின் போது அவ்வப்போது நான் எழுதி வந்த குறிப்புகளையும் அவற்றில் அவ்வப்போது செய்யும் மாற்றங்களையும் பொறுமையுடன் தட்டச்சு செய்து உதவிய திருமதி பிந்துமதி நாகரானுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நூல் ஒரு கருத்துப் போரை உருவாக்கும் என்று நம்புகிறேன். நின்று நிலைத்துவிட்ட கருத்துகளையும் கொள்கைகளையும் மறுபார்வைக்கு உட்படுத்துவது குமுகம் முன்னேறி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு ஓர் அடிப்படைத் தேவை என்பதில் உறுதியாக இருக்கும் நான் அறிஞர் பெருமக்களிடமிருந்து வளமான எதிர்வினையை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
குமரிமைந்தன்.
திருமங்கலம் (மதுரை மாவ.)
26 - 07 - 2014.

0 மறுமொழிகள்: