30.10.15

சதிரும் பரதமும்


சதிரும் பரதமும்:
20 -10 – 2015 தினமணி மகளிர் மணியில் சொர்ணமால்யா என்பவரை நேர்கண்டு நடனமும் தெரியும் நடிப்பும் தெரியும்! என்ற தலைப்பில் சாருகேசி என்பவர் எழுதியுள்ளதில் சில ஐயப்பாடுகள். நானறிந்தவரை கழக(சங்க) கால முடிவில் களப்பிரர்கள்(கள்ளர் பிறர்) எனப்படும் முல்லை, குறிஞ்சி நில மக்களை பதவி துறந்து தென்னகத்துக்கு வந்த சந்திரகுப்தனுடன் வந்த 3500 அம்மண சமய ஒற்றர்களும் கலிங்கத்து அம்மண சமய அரசனான காரவேலனின் ஒற்றர்களும் மலைக்குகைகளில் பதுங்கியிருந்து அம் மக்களை மூவேந்தர்களுக்கு எதிராக ஒன்றிணைத்து அவர்கள் அரியணையில் அமர, தமிழகத்தின் அனைத்துப் பண்டை பருப்பொருள் பண்பாட்டு(material culture)த் தடயங்களான கட்டடங்கள், அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள் என்று அனைத்தையும் இன்றைய இசுலாமிய தேச முனைப்பியர்கள் செய்து வருவது போல் தடமின்றி அழித்ததுடன் பாணர் – கூத்தர்கள் வழி பேணப்பட்ட நிகழ்த்துகலைகளையும் அழித்தனர். நாட்டை விட்டு வெளியேறியவர்கள் போக எஞ்சியவர்கள் வெவ்வேறு தொழில்களைப் பற்றி வாழ்ந்தனர். எடுத்துக்காட்டுக்கு பாணர்கள் தையற்காரர்களாக மாறினர். இந் நிலையில் களப்பிரர்களின் சமயம் முல்லை நில மாலியமாக(வைணவமாக) இருந்தது அம்மணமாக மாறியது. பின்னர் சிறுகச் சிறுக அரச ஆடம்பரங்கள் தோன்ற குகைப் படுக்கைகளாக இருந்தவை குகைக்கோயில்களாகி சமவெளிகளில் அம்மணக் கோயில்களாக வளர்ச்சி பெற்றன. தொடர்ந்த பல்லவர் ஆட்சியில் மாலிய, சிவனிய தொடக்கநிலை ஆகமக் கோயில்கள் உருவாகி பேரரசுச் சோழர் காலத்தில், குறிப்பாக இராசராசன் காலத்தில் பெரும் கற்றளிகள் உருவாயின. அவற்றில் ஆடவும் பாடவும் அரக்கப்பரக்க ஆந்திரத்திலிருந்து தேவதாசிப் பெண்களை வரவழைத்ததிலிருந்து மீண்டும் தமிழ்நாட்டில் பாட்டும் கூத்தும் மறுபிறப்பெடுத்தது. காலஞ்செல்லச் செல்ல கோயில்களின் எண்ணிக்கை மட்டின்றிப் பெருகி கோயில் தாசிகள் பூசகரின் கட்டிலிருந்தாலும் அவ்வப் பகுதி சிற்றரசர்கள், பெருநிலக் கிழார்கள், மடத்தடிகள், சமீன்தார்கள் எனப்படும் இடைக்கிழார்களின் வைப்பாட்டிகளாகவே இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சி நிலைபெற்றதும் அவர்களிடம் செல்வாக்கு பெற பூசகர்கள் இந்த தேவதாசிகளைப் பயன்படுத்தி பெரும் அரசுப் பதவிகள் அனைத்தையும் கைப்பற்றினர். இந்தச் சூழலில் நடைமுறைக்கு வந்த ஒரு நிகழ்முறையை Castes and Tribes of South India நூலின் ஆசிரியர் எட்கார் தர்சுடன் தேவதாசிகள் என்ற தலைப்பில் தந்துள்ள செய்தி சுவையும் பயனுமுள்ளது. பார்ப்பனராகிய அரசு உயரதிகாரிகள் ஓர் ஊருக்கு அரசு அலுவலாக வரும் போது அவ்வூர் கோயில் தேவதாசி ஊர் எல்லையில் சதிராடி வரவேற்று அவர் தங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அவர் அங்கு இருக்கும் காலம் வரை “அனைத்து”ப் பணிவிடைகளையும் அவருக்குச் செய்து அவர் திரும்பும் போது அந்த ஊர் எல்லை வரை சதிராடிச் சென்று வழியனுப்ப வேண்டும் என்பது அந்தச் செய்தி. அது மட்டுமல்ல இந்த அதிகாரிகளின் இந்த நடத்தைக்கு விளக்கமாக அவர் கூறுவது அன்றைய பார்ப்பனப் பெண்கள் எழுத்தறிவற்றவர்களாய் தூய்மையின்றியும் அழகாக உடை உடுக்கத் தெரியாமலும், அதாவது “நடை உடை பாவனைகளில்” மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தனர் என்பதாகும். மாறாக தேவதாசிப் பெண்கள் 64 அருங்கலைகள் எனப்படும் எண், எழுத்து, இலக்கணம், இலக்கியம், ஆடல், பாடல், உரையாடல், ஒப்பனை, மருத்துவம் ஆகியவற்றில் சிலவற்றிலாவது திறன் பெற்றிருந்தனர் என்பது அவரது கூற்று. சிலப்பதிகாரம் காட்டும் மாதவி போன்ற கணிகைகளை எண்ணெண் கலையினர் என்றே பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. எண்ணெண் கலைகளின் முழுமையான பட்டியலை கலைஞானம் என்ற தலைப்பில் அபிதான சிந்தாமணியிலும் கதிரைவேற் பிள்ளையின் தமிழ் மொழியகராதியின் தொகையகராதியிலும் காணலாம். வானிற் பறத்தலும் வானுள் புகுதலும் (ககனப் பிரவேசம்) என்பவையும் கூட அவற்றுள் அடக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உடலுறவின் 64 “கரணங்களு”டன் இந்த 64 கலைகளைப் பலர் குழப்பிக்கொள்கின்றனர்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தீன் தோற்றத்தில், ஆங்கில அரசிடம் தொழில்கள் தொடங்குவது பொன்ற தங்கள் தேவைகளுக்காக அணுகும் போது அலுவலகங்களில் இருந்த பார்ப்பன அதிகாரிகள் காட்டிய ஆணவம் ஒரு புறம் என்றால் ஊர்ப் புறங்களில் தேவதாசிகள் மீது நிலக்கிழார்களுக்கும் இடைக்கிழார்களுக்கும் இருந்த “உரிமை”யில் இந்தப் பார்ப்பன அதிகாரிகள் தலையிட்டதற்கும் சம பங்கு உண்டு. பார்ப்பனர்களுக்கும் தேவதாசிகளுக்கும் ஒரு பூசல் இருந்ததை தேவதாசிகளை இழிவாகக் காட்டிய டம்பாச்சாரி போன்ற நாடகங்களும் திகம்பர சாமியார்  போன்ற திரைப்படங்களையும் பார்ப்பனப் பெண்களை அதே போன்ற வகையில் காட்டிய அண்ணாத்துரையின் சந்திரோதயம் என்ற நாடகத்திலும் காணலாம். (அதே பெயரில் ம.கோ.இரா. நடித்த படத்தின் கதைக்கும் இதற்கும் உறவேதுமில்லை.) இந்த முரண்பாட்டின் தொடர் நிகழ்வாக பார்ப்பனர்களிடையில் பெண் கல்விக்கும் ஆடல் பாடல் பயிற்சிக்கும் அழுத்தம் உருவானது. இசை கற்பது என்ற பெயரில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்த எம்.கே.தியாகராச பாகவதரிடம் சென்னை பார்ப்பனப் பெண்கள் மொய்த்ததைப் பற்றிய வம்புப் பேச்சுகள் தமிழகம் முழுவதும் நான் சிறுவனாக இருந்த போது உலவின. அதே போல் தேவதாசி குலத்தில் மதுரை சண்முக வடிவு எனும் வீணை இசைக்கலை வல்ல பெண்மணியின் மகளானப் பிறந்த எம்.எசு.சுப்புலட்சுமி கல்கி இதழின் உடைமையாளரான பார்ப்பனர் சதாசிவத்தை மணந்தது போல் திரைத்துறை மூலமும் நேரடியாகவும் பார்ப்பனர்களால் உட்செரிக்கப்பட்டனர் எண்ணற்றோர். தேவதாசியினரின் ஒரு பிரிவான இசைவேள்ளாளரான கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறனின் பார்ப்பன மனைவிக்குப் பிறந்த தயாநிதி மாறனுக்கு இந்து இதழ் உரிமையாளர் கத்தூரிரங்கய்யங்காரின் பேர்த்தியை முறைப்படி பேசி மணமுடித்தது வரை அவர்கள் இரண்டறக் கலந்துவிட்டனர்.

இன்னொரு புறம் சராசரி தேவதாசிப் பெண்களின் பிறங்கடையினர்(வாரிசுகள்) மிகப் பெரும்பாலும் தங்கள் சாதிக்குள் மணம் புரிந்துகொண்டு தங்கள் மரபிலிருந்து முறித்துக்கொண்டுவிட்டார்கள். காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது ஒரு தேவதாசிக்குச் சொந்தமான வீட்டுமாடியில் ஒன்றிரண்டு மாதங்கள் வாடகைக்குக் குடியிருந்தேன். கீழ்த் தளத்தில் குடியிருந்த பெண்ணின் பொறுப்பில்தான் வீடு இருந்தது. நடுப் பருவத்தைத் தாண்டிய அந்தப் பெண்ணை வாணிகர் ஒருவர் வைத்திருந்ததாகக் கூறினர். ஒரு முறை அந்த வீட்டுடைமையாளரின் மகளும் அவள் கணவனும் அங்கு வந்திருந்தனர். இருவரும் பள்ளியாசிரியர்களாக இருப்பதாகக் கூறினர். நெடுநேரம் மனம்விட்டுப் பேசினோம்.

மேலே குறிப்பிட்ட இந்த இடைமாற்றக் காலத்தில் கோயில்களின் மண்டபத்தில் கருவறையின் முன்பும் மாடத்தெருக்களில் இறை உருவங்கள் வலம் வரும் போதும் நிகழ்த்தப்பட்ட சதிராட்டம் “சபா”க்களில் திறனாய்வாளர்களின் முன்னால் நிகழத் தொடங்கிய போது அதில் ஏற்பட்ட மாற்றங்களோடு, இந்தியாவின் தென் கோடியில் மட்டும் நிகழ்ந்த இந்த நாட்டிய வகையை காசுமீரத்தைச் சேர்ந்த பரதன் என்ற “முனி” எழுதிய “சாத்திரப்படி” நிகழ்வதாகக் கூறி பார்ப்பனர்கள் வழக்கமான தம் “மேன்மை”யை நிலைநாட்ட முற்பட்டதன் ஒரு தடயம்தான் சொர்ணமால்யாவின் நேர்காணல். ஒரு வேளை அவருக்கு இந்த வரலாற்று உண்மைகள் தெரியாமலே இருக்கலாம். சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் இளங்கோவடிகளும் உரையாசிரியர்களும் தந்திருக்கும் ஆடல் வகைகளை இன்றைய திரைப்பட குத்தாட்டம் குலுக்காட்டங்கள் கூடத் தாண்டவில்லை என்ற உண்மையிலிருந்து “பரத முனிவரின்” படங்காட்டுதல்கள் வெளிச்சத்துக்கு வருவது உறுதி.

பூசாரியராட்சியிலிருந்து அரசரின் ஆட்சியைத் தங்கள் கண்காணிப்பின் கீழ் உருவாக்கிய எழு குக்குலங்களின்(மூலக்குடிகளின்) தலைவர்களாகிய ஏழு முனிவர்களின் தேர்வாகிய இந்திரனின் ஒற்றர்களாகவும் உளவாளிகளாகவும்(இந்திரன் பதவியைக் குறிவைத்துத் தவம் இயற்றுவோரின் தவத்தைக் குலைத்தல் முதலியன அவர்களின் பணிகள்) நம் தொன்மங்கள் காட்டும் அரம்பையர் எனப்படும் ஆடல் பெண்களும் யாழை எப்போதும் தாங்கித் திரியும் நாரதர் ஆகியோரின் தொடர்ச்சிதான் பாணர்களும் கூத்தர்களும் என்று நான் கருதுகிறேன். அதனால்தான் இளங்கோவடிகள் அழற்படு காதையில்,
               ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக்
                        கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
                        தலைவ னென்போன் …..     
என்று இப்போது நடப்பிலிருக்கும் நால்வருண வரிசைக்கு முந்தியதாகிய வருண வரிசையில் நான்காவதாக பாணர் கூத்தரை வைத்துள்ள வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

0 மறுமொழிகள்: