சிலப்பதிகாரப் புதையல் 3 உரைபெறு கட்டுரை
உரைபெறு கட்டுரை
- அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது.
- அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட கத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று.
- அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித் திங்கள கவையி னாங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.
- அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.
பொழிப்புரை
பாண்டியனது நாடானது
அன்றிலிருந்து மழை பொய்த்து அதனால் வறுமை எய்தி வெப்பு நோயும் அம்மை முதலிய
குருநோய்களும் தொடர்ந்ததனால் கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் நங்கையாகிய
கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு களவேள்வியுடன் விழாக் கொண்டாடி சாந்தி
செய்ய அவன் நாட்டில் மிகச் செழிப்பாக மழை பெய்து நோய்களும் துன்பங்களும் நீங்கின.
அதனைக்
கேள்விப்பட்டுப் புதிய சிற்றரசர்களாகிய கோசர்கள் தங்கள் நாட்டினுள் நங்கைக்கு
விழாவும் சாந்தியும் செய்ததால் மழைபெய்தல் தவறாமல் நடைபெற்றது.
அதைக்
கேள்விப்பட்டு கடல் சூழ்ந்த நாடாகிய இலங்கையின் அரசனாகிய கயவாகு என்பவன்
நங்கையாகிய கண்ணகிக்கு நாள்தோறும் பலிகொடுக்கும் பலிபீடத்தை முன்புறம் நிறுவிய
கோட்டத்தை அமைத்துத் துன்பங்களைக் களைந்து நமக்கு வேண்டும் வரங்களை அவள்
தருவாளென்று நினைத்து ஆடி மாதத்தில் அங்கு ஒரு நகரத்தில் ஆண்டுதோறும் பல ஆண்டுகள்
எடுக்க பல வளங்களும் பொருகி பொய்யாத விளைவையுடைய நாடாயிற்று அவனது நாடு.
அதைக்
கேள்விப்பட்டு பெருங்கிள்ளி என்னும் சோழ மன்னன் உறையூரில் இவள் ஒரு பத்தினித்
தெய்வம் ஆகையால் எவ்வகையிலும் வரம் தருவாள் என்று நினைத்து கண்ணகிக்குப் பத்தினிக்
கோட்டம் கட்டி நித்தமும் அணி செய்து விழாவும் எடுத்தான்.
உரைபெறு கட்டுரையிலுள்ள
சிறப்புகள்
வெப்பும்
குருவும் என்று குறிக்கப்படும் நோய்கள் யாவை என்பது பற்றி அகராதிகளில் பார்த்தால்:
தமிழ் மொழியகராதி, வெப்பு: ஒரு நோய், மனத்துள் வெம்மை என்றும்
கழகத்
தமிழ் அகராதி, வெப்பு: ஒரு நோய், மனத்துன்பம், வெம்மை, கொடுமை என்றும்
பொருள்கள் காணப்படுகின்றன.
உரையாசிரியர்களில் அடியார்க்கு
நல்லார் உரையில் தொழு நோய் என்றும் வேங்கடசாமியார் உரையில் வெப்பு நோய் என்றும் பொருள்
கூறப்பட்டுள்ளது.
வெப்பு
நோய் என்பது கி.பி. 2006 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பலரைத் தாக்கி நெடுநாள்
நலிவுறவுச் செய்ததுடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சாகடித்ததும் அப்படி ஒரு நோயே,
ஆளும் கட்சியாகிய தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக இருந்த
பேரவைக் கட்சியைச் சார்ந்த பாலசுப்பிரமணியம் என்ற தலைவரைத் தவிர வேறெவரையும் தாக்கவில்லை
என்று அறிவிக்கப்பட்டதுமாகிய சிக்குன் குனியா எனப்படும் மொழி
முறித்தான் நோய் என்கிறார் திரு.வெள்உவன்
அவர்கள்.
இந்த
நோய் பரவலாகத் தாக்கிய 2006ஆம் ஆண்டுக்கு முந்திய ஆண்டு இறுதியிலிருந்து வேப்ப மரங்களின்
இலைகள் கொத்துக் கொத்தாகக் கருகிவிட்டன. இது வழக்கத்துக்கு மாறாகும். வேப்ப மரமே
வைரசு எனும் நுண்ணுயிரியை எதிர்த்து அழிக்கும் தன்மை உடையது ஆகும். இந் நுண்ணுயிரியால்
உருவாகும் அம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி எனப்படும் அம்மன்கட்டு
ஆகிய நோய்களுக்கு மருந்தே வேப்ப மரத்து இலையும் வேப்பெண்ணெய்யும் ஆகும். அப்படிப்பட்ட மரத்தையே தாக்கும் ஒருவகை நுண்ணுயிரியின்
தோற்றம்தான் இந் நோய்த்தாக்கின் காரணம் என்றும் இது போல் வேப்ப மரத்தில் கருகல்
காணப்படும் போது இது போன்ற நோய்த்தாக்கு இடம் பெறும் என்றும் ஊர்ப்புறத்து மூத்தவர்கள் கூறியதாக அவர் கூறினார். இது ஆயப்பட வேண்டிய
ஒரு பொருளாகும். மக்கள் நோவு தாங்க முடியாமல் கைகால்களை இயக்க முடியாமல் மாதக் கணக்கில்
துன்புற்ற போதும் பலர் மாண்ட போதும் நோயே இல்லை என்று ஓங்கி அடித்துவிட்ட
ஆட்சியாளர்கள் இது போன்ற ஆய்வை மேற்கொள்வர் என்று எதிர்ப்பார்ப்பது கொட்டும் கடந்தை(குளவி)க் கூட்டில் தேனெடுக்கச் செல்லும் கதைதான்.
குருநோய்
என்ற சொல்லுக்குத் தமிழ் மொழி அகராதியும் கழகத் தமிழ் அகராதியும்
வைசூரி என்ற பொருளைத் தருகின்றன. வேங்கடசாமியார் கொப்புளம் என்று பொருள்
கூறுகிறார். அம்மை நோய் என்பதுதான் சரி. மழைக் காலம், பனிக் காலம், கோடைக் காலம்
ஆகிய இம் மூன்றும் உடலில் உருவாகும் வெப்ப ஆற்றலை மிகக் கூடிய அளவில் எடுத்துக்கொள்கின்றன.
அதற்காக உடலில் உள்ள பல்வேறு சத்துகளும் செலவழிந்து உடலின் கட்டமைப்பு மெலிவுற்று
நோய் எதிர்ப்புத் திறன் குன்றுகிறது. அந்தச் சூழலில் தேவையான சத்தைக் கொண்ட உணவு
இல்லை எனில் கொள்ளை நோய்கள் பரவுகின்றன. அவ்வாறுதான் பாண்டிய நாடு மழை இன்மையாலும்
அரசன் இறந்து தலைநகர் அழிந்ததால் ஏற்பட்ட குழப்பத்தாலும் மக்களிடையில் பசியும் அதன்
விளைவாகப் பிணிகளும் பரவியிருக்க வேண்டும்.
ஆயிரம்
பொற்கொல்லர்களைப் பலிகொடுத்து கண்ணகிக்கு வெற்றிவேல் செழியன் சாந்தி விழா
எடுத்தான் என்பதனை வேங்கடசாமியார் மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருவங்களைச் செய்து
பலியிட்டான் போலும் என்கிறார்.
ஆனால்
மதுரையில் நடைபெறும் ஒரு விழாவில் ஒரு பொற்கொல்லரின் தலைமயிரை வெட்டி, பழைய
நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று பேரா.பர்.தே.லூர்து அவர்கள்
கூறுவார்கள்.
பாண்டியர்
மீனைக் கொடியாகக் கொண்டு மீனவர் என்று அழைக்கப்படுபவர்கள். எனவே அவர்களுடைய
பண்டைத் தலைநகரங்களாகிய தென் மதுரையும் கபாடபுரமும் கடல் துறைமுகங்களாகவே
இருந்திருக்க வேண்டும். மூன்று தமிழ்க் கழகங்களின் வரலாறு கூறும் இறையனார்
அகப்பொருள் உரை போன்றவற்றில் கூறப்படாத ஒரு தலைநகரம், இரண்டாம் கடற்கோளுக்குத்
தப்பி கபாடபுரத்திலிருந்து வந்த பாண்டியர்கள் குறுகிய காலம் தங்கிய மணலூர் ஆகும்.
இந்த ஊரை எங்கெங்கெல்லாமோ தேடுகின்றனர். ஆனால் தூத்துக்குடி மாவட்டக் கடற்கரையில்
கொற்கை மணலூர் என்றொரு ஊரும் அப் பெயரில் தென்னிந்தியத் திருச்சபை சேகரமும்
இருப்பது இதுதான் அந்த மணலூர் என்பதை விளக்கும். இந்த நகரைப் பற்றி மகாபாரதத்தில்
கூறப்பட்டிருப்பதாக திரு.வி.கனகசபையார் எழுதிய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு
முற்பட்ட தமிழகம் என்ற நூலில் குறித்துள்ளார். தொடர்ந்த கடற்கோள்களின்
பட்டறிவால் பின்னர் தலைநகரை உள்நாட்டிலிருக்கும் இன்றைய மதுரைக்கு மாற்றிய பாண்டிய
மன்னர்கள் கொற்கையைத் தங்கள் துணைத் தலைநகராகவும் துறைமுகமாகவும்
வைத்திருக்கின்றனர்.
கொற்கை
என்ற பெயர் ′கொல்′ என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது என்று கருதுகின்றனர்.
கொல்லுத் தொழில் சிறப்பாக நடைபெற்ற ஒரு நகரம் என்று அதற்கு விளக்கம் கூறுகின்றனர்.
பாண்டியர் அரசுக்காக நாணயம் வடித்தல், போர்க் கருவிகள் செய்தல் ஆகியவை இங்குதான்
நடைபெற்றன. இந்தப் பணிகளைக் கண்காணிக்கவும் மேலாளுமை செய்யவும் பட்டத்து
இளவரசன்தான் பொருத்தமானவன். இந்தப் பணிகளை செயல்படுத்தும் போது தொழிலாளர்களுக்கும்
பட்டத்து இளவரசனுக்கும் பூசல்கள், மோதல்கள்
நிகழ்ந்திருக்கலாம். அதை வன்மமாக வைத்திருந்து கோவலன் கொலையில் ஒரு
பொற்கொல்லனுக்கு முகாமையான பங்கு இருந்ததால் அதனைக் காரணமாக வைத்து அவர்களைக்
கொண்டுவந்து அவர்களோடு மதுரையில் இருந்த பொற்கொல்லர்களையும் பிடித்து “பலி” கொடுத்திருக்கலாம். ஆயிரம் என்ற
எண்ணிக்கை மிகையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
கோவலன்
கொலைப்படக் காரணமான பொற்கொல்லன் கைவினைக்
கம்மியர் நூற்றுவர் பின்வர நடந்தான் என்று
கூறப்படுவதால் பொன் தொழில் அன்றைய பாண்டிய நாட்டில் செழிப்பாக நடைபெற்றிருக்கலாம்.
கைவினைஞர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வந்த ஒரு சூழலில் மதுரை நிகழ்ச்சி
நடத்திருக்கலாம். நகரில் புரட்சி நடத்தியதில் இந்தக் கம்மியர்களுக்கும் பங்கு
இருக்கலாம். அதற்காக, கண்ணகிக்குச் சாந்தி செய்வித்தல் என்ற பெயரில் அவர்களை
தீர்த்துக் கட்டியிருக்கலாம். எப்படியும் இந்தச் செயலுக்குப் பின்னணியில் வலிமையான
அரசியல் காரணிகள் இருக்க வேண்டும்.
சேரன்
செங்குட்டுவன் கண்ணகிக் கோயில் கடவுள் மங்கலம் எடுத்ததில் பங்குகொண்டு, தன் நாட்டில் கண்ணகிக்குக் கோயில்
எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவனாக உரைபெறு கட்டுரையில்
கூறப்படுபவன் இலங்கையின் மன்னன் கயவாகு.
இவனைப்
பற்றிய செய்தி ஒன்றைக் கனகசபையார் தன் நூலில் தருகிறார். அவனது தந்தை காலத்தில்
கரிகாலன் இலங்கை மீது படையெடுத்து 12ஆயிரம் வீரர்களைச் சிறைப்படுத்திக்
கொண்டுவந்து காவிரிக்குக் கரை அமைத்தான் என்றும் அதற்குப்
பழிவாங்குவற்காகப் பூம்புகாரைத் தான் அழித்துவிட்டதாகவும் அவன் கூறியிருப்பதாக
இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.
மணிமேகலை
இச் செய்தியை உறுதிப்படுத்துகிறது. தாயைப் போல் கணிகையாக விரும்பாத மணிமேகலை
மீது இளவரசன் நாட்டம் கொண்ட சூழலில் புத்தத் துறவிகள் வடிவில் இருந்த இலங்கை
ஒற்றர்கள் அவளை இலங்கையைச் சேர்ந்த இரத்தினத் தீவு எனப் பொருள்படும் மணிபல்லவத்
தீவுக்கு அழைத்துச் சென்று இளவரசனின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவதற்கு புத்தத்
துறவிகள் மூலமாக உதவவும் பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு உணவளிக்கவும் தான் ஏற்பாடு
செய்வதாக கயவாகு வாக்களித்திருக்க வேண்டும். சோறுடைத்த சோழ நாட்டில் பஞ்சம் வந்தது
எப்படி?
மைத்துன
வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த
பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு
பொறாஅர் ஏவல் கேளார்
வளநாட
ழிக்கும் மாண்பின ராதாலின்
ஒன்பது
குடையும் ஒருபக லொழித்தவன் (நீர்ப்படை காதை 118-122)
என்று வருவதில் புகார் நகரத்துச் சோழனுக்கு அடங்கிய
ஒன்பது குறுநில மன்னர்கள் அவனுக்கு எதிராகக் கிளம்பி அவனது நாட்டில் அழிம்பு
நடவடிக்கைகளில்,குறிப்பாக நெற்பயிர்களை அழிப்பதில்
ஈடுபட்டிருக்கின்றனர். (அதனால் ஏற்பட்ட பஞஞ்த்தைப் பயன்படுத்தித்தான்
கயவாகு அளித்த நெல்லாகிய “அமுதசுரபி”யைக் கொண்டு சோழ மக்களை அரசனுக்கு எதிராக
மணிமேகலை துண்டிவிட்டிருக்கிறாள்.) சோழன் கிள்ளி வளவனின்
மைத்துனன் சேரன் செங்குட்டுவன் அந்த ஒன்பது பேரையும் போரில் கொன்றதாக நீர்ப்படை
காதை கூறுகிறது. இந்த ஒன்பது சிற்றரசர்களையும் கயவாகுவே தூண்டிவிட்டிருக்க
வேண்டும். அவர்களைக் கொன்ற பின்னரும் நாட்டில் கலகங்களைத் தூண்டி விட்டிருக்கவும்
செய்வான்.
உதயகுமாரன்
கொலைப்பட்டது பற்றி கந்திற்பாவை கூறியதாக மணிமேகலையில்
கொல்லப்பட்டிருப்பது, கணிகையரைப் பயன்படுத்தி இளவரசர்களைக் கொல்ல வேண்டும் என்ற கவுடில்லியனின்
அர்த்தசாத்திரத்துக்கு இசைந்த ஒரு சூழ்ச்சியே. அவ்வாறே மணிபல்லவத்திலிருந்து
கலத்திலேற்றி விடப்பட்ட, நாகநாட்டு இளவரசி பீலிவளைக்குப்
பிறந்த சோழ இளவரசன் சென்ற கலம் கவிழ்ந்ததில் அவன் செத்து கப்பலுக்கு உரியவனான
கம்பளச் கெட்டி உயிர்பிழைத்ததும் சூழ்ச்சியாகவே இருக்க வேண்டும். பூம்புகார்
அழிவுண்டது கடற்கோளால் அல்ல, இலங்கை அரசு புத்தத் துறவிகளாகிய ஒற்றர்களைப் பயன்படுத்தி
மணிமேகலையை வசப்படுத்தி நடைபெற்ற ஒரு பெரும் கீழறுப்பு வேலையே. கிள்ளிவளவன் எங்கோ
சென்றுவிட்டான் என்பது அவன் வஞ்சகமாகக் கொலைப்பட்டதைக் குறிப்பால் உணர்த்துவதாகக்
கொள்ள வேண்டும்.
சிலப்பதிகாரம்
நடுநற் காதையில் போரில் தோற்று ஓடிய கனகனையும் விசயனையும் தளைப்படுத்தி
வந்தது பெருமைக்கு உரிய செயலன்று என்று கூறியவனாகக் காட்டப்பெறும் கிள்ளிவளவன் உரைபெறுகட்டுரையில்
காணாமல் போனது இடையில் நிகழ்ந்தவற்றை நமக்குச் சொல்லாமல்
சொல்லுகிறது. நூலில் வேறு எங்குமே குறிக்கப்படா உறையூர்ச்
சோழன் பெருங்கிள்ளி கண்ணகிக்கு கோயில் எடுத்ததாக உரைபெறு கட்டுரையில் காட்டி இருப்பதும்
கவனிக்கத்தக்கது. கண்ணகிக் கோட்டத்துக் கடவுள் மங்கலத்தின் போது கயவாகுவுடன்
சேரனும் உறையூர்ச் சோழனும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கரிகாலன் மக்களாகிய
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகியவர்கள் இடையிலான பகைமை புறநானூற்றில் (புறம்
31) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயிரம் பொற்கொல்லர்களைக்
காவுகொடுத்து கண்ணகிக்குச் “சாந்தி” செய்த பாண்டியனும் இவர்களுடன் இல்லை.
மொத்தத்தில் கூட்டிக் கழித்தால் பூம்புகாரை அழித்ததில் இவர்கள் அனைவருக்கும்
பங்குள்ளது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதைப் போல் மதுரைக்
கலகத்தின் தலைமைப் புள்ளியாக சாத்தனார் செயற்பட்டிருக்கலாம் என்றும் அண்டை
நாட்டில் நடைபெற்றது போன்ற கலகங்கள் தன் நாட்டிலும் உருவாகாமல் அதை முளையிலேயே
கிள்ளத்தான் செங்குட்டுவன் மதுரை நோக்கிவர அவனைத் தடுத்து நிறுத்தத்தான் சாத்தனார்
அவனை இடைவழியில்(வண்டிப்பெரியாற்றில்) சந்தித்து கலகத்தில் கண்ணகியின் பங்கை
மிகைப்படுத்திக் கூற, அந்த அடிப்படையில் மதுரையில் நடந்தது மக்கள் எழுச்சி அல்ல
ஒரு பத்தினிப் பெண்ணின் சீற்றத்தின் விளைவே என்ற பரப்பலைச் செய்வது என்ற முடிவு
அங்கு எடுக்கப்பட்டிருக்கலாம். அக் கலகத்தை
புத்தம், அம்மணம் வடிவில் இங்கு ஊடுருவிய ஒற்றர்களுடன் தமிழக அரசர்களிடையில் இருந்த
பகைமையும் சேர்ந்து கழகக் காலத் தமிழகத்தின் அழிவுக்கு வித்திட்டதற்கான ஒரு தடயமாக
சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை அமைந்திருக்கிறது என்று
கொள்வதில் தவறில்லை.
சாத்தனாரைப்
பொறுத்தவரை அவர் இலங்கை ஆட்சியாளரின் கையாளாக மட்டும் செயற்படவில்லை, அம்மணர்களுக்கு
எதிரான அரசியலையும் திறம்படவே செய்துள்ளார். முறைப்படி ஆய்ந்தறிந்து முறை செய்யாத
ஓர் அரசனுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பெரும் புரட்சியை நடத்திய வீரஞ்செறிந்த
கண்ணகிப் பிராட்டியின் சிலை சீற்றம் கொண்டு செழுநகர்
சிதைத்தேன்…….அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது என்று
மணிமேகலையிடம் கூறி வருந்தியதாக சாத்தனார் மணிமேகலையில் கூறுகிறார். அம்மணப்
பெண்ணான கண்ணகியின் தரத்தைத் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசின் புத்தத்தை
தமிழகத்தினுள் உயர்த்தி தமிழக மக்களிடையில் இலங்கை ஒற்றர்களை உருவாக்குவதே அவரது
நோக்கம். கயவாகுவின் ஒற்றர்களால் உதயகுமாரன் கொல்லப்பட, காயசண்டிகையின் கணவன்
பொறாமையால் கொன்றதாக கந்திற்பாவையைப் பேசவைத்த சாத்தனாரின் இன்னொரு செப்பிடு வித்தைதான்
இதுவும். மணிமேகலைக் காப்பியத்தில் சாத்தனார் தரும் புத்தம் இலங்கையில்
மட்டும் பின்பற்றப்படும் தேரவாதப் புத்தமே என்று ஆய்வாளர் வானமாமலை தன் மணிமேகளையில்
பவுத்தம் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். இளங்கோவடிகளுக்கு எதிராக
சாத்தனார் தொடுத்திருக்கும் இந்தப் போர் ஓர் அழுத்தமான நாட்டுப்பற்றாளன் மீது
தாய்நாட்டு எதிரிகளுக்கு விலைபோய்விட்ட ஒரு கீழறுப்பாளனின் தாக்குதல் என்றே கொள்ள
வேண்டும். குற்றத்தை உணர்ந்து பாண்டியன் உயிரை விட்ட பின்னரும் “ஏதுமறியா” மக்களை
ஏன் அழிக்க வேண்டும் கண்ணகி என்பது இங்கு அவள் மீது வைக்கப்பட்டிருக்கும்
“திறனாய்வு”. ஆனால் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று கண்ணகி நெருப்புக்கு ஆணையிட்டதாக அடிகளார்
மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பது மட்டுமின்றி அழிவோரும் அழிபவையும்
ஆட்சியாளரின் படையினரும் பணியாளர் படையும் ஆட்சிக் கட்டமைப்பும்தான் என்பதைக்
காட்டியிருப்பதையும் மறைத்து முன்வைக்கும் குற்றச்சாட்டு இது. இன்றைய இந்து
இராமுக்கு இலங்கையில் இருக்கும் மாபெரும் தேயிலைத் தோட்டங்கள் போன்று அன்றைய
சாத்தனாருக்கு இலங்கையில் என்னென்ன நலன்கள் இருந்தனவோ நாமறியோம்.
சோழ
நாட்டுப் பஞ்சத்தைப் போக்கும் அளவுக்கு ஈழத்தில் வளமிருந்தது என்பதைக் குறிப்பாக மழை
வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று என்ற வரி
விளக்குகிறது. மற்றும் பூம்புகாரில் வந்திறங்கும் பண்டங்களைப் பற்றிய பட்டினப்பாலை
வரி ஈழத்துணவும் காழகத் தாக்கமும் என்பது ஈழத்தின் உணவுத்
தவசப் பெருக்கத்துக்குச் சான்று கூறுகிறது.
பாண்டியன் தவிர்த்த
பிற மன்னர்களும் கண்ணகிக்கு ‘சாந்தி’ செய்தனர் என்பதற்கு அவர்களும்
பொற்கொல்லர்களைக் காவு கொடுத்தனரா, அந்த நாடுகளிலும் பொற்கொல்லர்களின் எழுச்சியால்
சிக்கல்கள் உருவாகி இருந்தனவா என்ற கேள்வி இங்கு பொருத்தமின்றி இருக்காது,
ஏனென்றால் தென்னிந்திய வரலாற்றை நுண்மையாகப் பார்த்தால் இங்கு இடங்கைப்
பிரிவினரின் தோற்றம், இயக்கம் ஆகியவற்றில் ஐந்தொழில் கொல்லர்களுக்கு நடுப்பங்கு
இருப்பதை அறிய முடியும்.
மங்கல
மடந்தையின் கோயிலுக்கு கடவுள் மங்கலம் செய்யும் நிகழ்ச்சியோடு முடியும் சிலப்பதிகாரக்
காப்பியத்தின் பின்னுரையாக, அதன்பின் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பால்
உணர்த்துவதாக அமைந்துள்ளது உரைபெறு கட்டுரை. எனவே இதனையும் இளங்கோ
அடிகளே எழுதினார் எனக் கொள்ள வேண்டும்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக