30.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 4


2. மனையறம்படுத்த காதை

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழங்குகடல் ஞால முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்த தாகி
5.     அரும்பொருள் தரூஉம் விருதிற் றேஎம்
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவ முடித்தோர்
10.    உத்தர குருவி னொப்பத் தோன்றிய
        கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கா லமளிமிசை
நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிக்
கழுநீ ராம்பல் முழுநெறிக் குவளை
15.    அரும்புபொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை
        வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
        மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
        கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
        தாதுதேர்ந் துண்டு மாதர்வாண் முகத்துப்
20.   புரிகுழ லளகத்துப் புகலேக் கற்றுத்
        திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
        மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
        கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
        வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
25.   கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து
        விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத் தரமிய மேறிச்
சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி
30.    முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும்
        கதிரொருங் கிருந்த காட்சி போல
        வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
        வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
        கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
35.    தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலின் திருமுக நோக்கிக்
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவ ரேத்த
அழகொடு முடித்த அருமைத் தாயினும்
40.    உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையிற்
பெரியோன் தருக திருநுத லாகென
அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதோர் பண்புண் டாகலின்
  உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
45.    இருகரும் புருவ மாக வீக்க
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவற்
படைநினக் களிக்கவத னிடைநினக் கிடையென
அறுமுக ஒருவனோர் பெறுமுறை யின்றியும்
50.    இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா வீத்தது
       மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற் கிடைந்து தண்கான் அடையவும்
55.    அன்ன நன்னுதல் மென்னடைக் கழிந்து 
       நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்
      அளிய தாமே சிறுபசுங் கிளியே
       குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தநின்
       மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
60.    மடநடை மாதுநின் மலர்க்கையி னீங்காது
      உடனுறைவு மரீஇ ஒருவா வாயின
      நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
      மறுவின் மங்கல வணியே யன்றியும்
      பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல்
65.   பல்லிருங் கூந்தற் சின்மல ரன்றியும்
      எல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல்
நானம் நல்லகில் நறும்புகை யன்றியும்
      மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொல்
      திருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியும்
70.    ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல்
      திங்கண்முத் தரும்பவுஞ் சிறுகிடை வருந்தவும்
      இங்கிவை யணிந்தன ரென்னுற் றனர்கொல்
      மாசறு பொன்னே வலம்புரி முத்தே
      காசறு விரையே கரும்பே தேனே
75.    அரும் பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே
      பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
      மலையிடைப் பிறவா மணியே யென்கோ
      அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ
      யாழிடைப் பிறவா இசையே யென்கோ
80.    தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று
      உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
      தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
      வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
      வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
85.    மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும்
      விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
      வேறுபடு திருவின் வீறுபெறக் காண
      உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
      யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
90.   காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்.

வெண்பா
         தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
         காமர் மனைவியெனக் கைகலந்து - நாமந்
         தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
         நிலையாமை கண்டவர்போல் நின்று.

பொழிப்புரை

அரசர்களே விழைகின்ற செல்வம் படைத்த வாணிகர் நிறைந்த மாநகரில் கடல்சூழ் உலகு முழுவதும் வந்தாலும் வழங்கித் தீராத அரும்பொருட்களைத் தருகின்ற தேயங்கள் ஒன்றாகத் திரண்டது போன்ற பெரும் பண்டத் திரட்சியை கப்பல்களிலும் நிலம் வழியாகவும் தருவோர்களிடம் இருந்து பெற்ற,  குலத்தில் குறைவில்லாத உயர்குடிச் செல்வர்களில் நல்ல தவம் முடித்தோர் எய்தும் போக பூமியுள் ஒன்றாகிய உத்தர குருவில் தோன்றியவர் போல் அழகிலும் அன்பிலும் ஒப்பத் தோன்றிய கண்ணகியும் கோவலனும் நெடுநிலை மாடத்தின் இடைநிலத்தில், மயன் விதித்தபடி அமைந்த மணிக்கால் அமளி மீது இருந்தனர். அப்போது கழுநீர், ஆம்பல், குவளை, தாமரை போன்ற வயல்பூக்களின் வாசத்தை அளைந்து தாழை, கோதை, மாதவி, செண்பகம் ஆகிய அயல்பூக்களிலும் தேனைத் தேர்ந்து உண்டு பெண்களின் ஒளிவீசும் முகத்தில் சுருண்ட குழலிலுள்ள மலர்களின் வாசனையை நுகர விரும்பி ஏங்கித் திரியும் வண்டுடன் மணிக் கோவை வரிசையால் அழகுறப் புனையப்பட்ட சாரளத்தின் குறுகிய கண்களினூடாக நேரம் பார்த்து புகுந்த மணம் நிறைந்த தென்றலைக் கண்டு மகிழ்ந்து காதல் மிகுந்து மணமிகுந்த மலர்களை அம்புகளாகக் கொண்ட காமன் வீற்றிருக்கும் நிலா முற்றத்தை அடைந்தனர்.

            வண்டுகள் தேன் உண்ணுமாறு நறும் பூக்கள் விரிக்கப்பட்ட படுக்கையின் மீது அமர்ந்து கரும்பையும் படர்க்கொடியையும் பெரிய தோளிலே எழுதி உலகுக்கு ஒளிசெய்யும் ஞாயிறும் நிலவும் ஒன்று சேர்ந்திருந்தது போல், வண்டுகள் நெகிழ்விக்க நிலாப் போல் விரிந்த வெள்ளிய இதழ் கொண்ட மலர்ந்த மல்லிகை மாலையுடன் கழுநீர் மாலையும் முறிந்தும் ஒடிந்தும் முழுமை இழக்க கோவலனின் தாரும் கண்ணகியின் மாலையும் ஒன்றோடொன்று கலந்து மயங்க, கையறு நிலை எய்தி தீராக் காதலோடு கண்ணகியின் திருமுகத்தைக் கோவலன் நோக்கி அவன் எண்ணிப் பார்க்காத, அவனை அறியாமலே வெளிவந்த சொற்களைக் கூறுகிறான்.


  • குழவித் திங்கள் இமையவரேத்த சிவபெருமான் அழகோடு  முடித்த அருமையுடையது எனினும் திருமகளாகிய உன்னோடு பாற்கடலில் பிறந்ததனால் அதை உனக்குச் சிவபெருமான் திருநுதலாகத் தந்தருளினர்.

·         எதிரிகளோடு போர் செய்யும் போது தன் பக்கம் நின்று போரிடுவோர்க்கு படைக்கலன் வழங்குவது போல்(என்னை வெல்வதற்கு) காமன் தன் கரும்பு வில்லை உனது இரு புருவங்களாக வழங்கியுள்ளான்.

·         நீ மூவா மருந்தாகிய அமுதத்துக்கும் முந்திப் பிறந்ததனால் இந்திரன் அமுதம் கிடைத்த பின் தேவையில்லை என்று தேவர்களைக் காக்கும் வச்சிரப்படையை உனக்களிக்க அது உன் இடையாகியுள்ளது.

·         நான் துன்புறுவதைக் காண வேண்டியே அறுமுகக் கடவுள் தன் நெடுவேலை உனக்கு எந்த உரிமை இல்லாதிருந்தும் இரண்டு கண்களாகத் தந்துள்ளான்.

இவை புலனுக்குத் தெரியும் சிறப்புகள்.

·         கரிய பெரிய பீலியையும் நீல மணியின் நிறத்தையும் உடைய மயில்கள் நின் சாயலுக்குத் தோற்று தண்ணென்ற காட்டினுள்ளே புகவும்

·         அன்னமானது நல்ல நெற்றியை உடையவளாகிய உன் மெல்லிய நடைக்குத் தோற்று நல்ல நீரையுடைய வயல்களிடையில் உள்ள மலர்களில் மறையவும்

·         பசுங்கிளிகள் குழலையும் யாழையும் அமிழ்தையும் குழைத்த நின் மழலைச் சொல்லைக் கேட்டு வருந்தினவாய் உன்னிடமிருந்து அதனைப் பயில்வதற்காக உன் கைகளின்றும் நீங்காது உறைகின்றன (அவற்றுக்கு இரங்கி அவற்றுக்கு அதை பயிற்றுவாய்).

·         நறிய மலர்மாலை போன்றவளே (நறிய மலர்மாலை யணிந்த பெண்ணே)  உன் நலனைக் காப்போர் குறையற்ற இந்த மங்கல அணியன்றி வேறு அணிகளைப் பூட்டியதனால் என்ன பயனைப் பெற்றனர்?

·         பல வகையாகப் புனையப்படும் கரிய கூந்தலில் சில மலர் தவிர ஒளியுடைய கனத்த  மாலைகளை அணிந்தவர்களுக்கு அறிவு என்னவாயிற்று? (மாலையோடு அவர்களுக்கு என்ன உறவு?)

·         கூந்தலுக்கு வாசனை நெய்யும் நல்ல அகிலின் புகையுமன்றியும் கத்தூரியைத் தடவியது ஏன்?

·         திருமுலைத் தடத்தில் தொய்யில் எழுதியது தவிர ஒரு முத்துவடத்தைப் பூட்டியது ஏன்?

·         திங்கள் ஆகிய முகத்தில் முத்துக்களாகிய வியர்வை அரும்பவும் குறுகிய இடை வருந்தவும் இவற்றை அணிந்தவர்களின் அறிவுக்கு என்ன நேர்ந்தது?

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெநற் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்பேனோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்பேனோ
யாழிடைப் பிறவா இசையே என்பேனோ
நீண்ட கரிய கூந்தலையுடைய பெண்ணே
என்று பலவாறு பாராட்டி கண்ணகியுடன் இன்பத்தில் மிகுந்து வாழ்கின்ற நாளில் கண்ணகியின் தாய் மறத்தற்கரிய சுற்றங்களையும் அறநெறியாளரையும் ஓம்புதலுடன் விருந்தினரையும் பேணும் பெருமையுடைய இல்வாழ்க்கையையும் நானாவிதமான செல்வத்தோடு நடத்தி வந்து பெருமைமையடைவதையும் காணவும் பணியாளர்களோடு தனிக்குடித்தனம் வைத்த பின்னர் சில ஆண்டுகள் கழிந்தன.
வெண்பா
            புவியின்கண் வாழ்வின் நிலையாமையைக் கண்டு உள்ள பொழுதே அனைத்து இன்பத்தையும் துய்த்தற்கு விரைதல் போல் நின்று காமனும் மனைவியும் போல ஒருவர் ஒருவரில் கலந்து சினத்தையுடைய பாம்புகள் ஒன்றுபட்டுத் தழுவினாற் போல விட்டு நீங்காராய் அழகு கெடாத இன்பத்தை எல்லாம் துய்த்தனர்.
க் காதையின் சிறப்புகள்

  1. இந்தக் காதையில் கழுநீர், ஆம்பல், குவளை, தாமரை, போன்றவை வயற்பூக்கள் என்றும் தாழை, கோதை, மாதவி, செண்பகம் போன்றவை யற்பூக்கள் என்றும் வகைப்பாடு காணப்படுகிறது.

  1. கலவியை இடக்கரடக்கலாக தாரும் மாலையும் மயங்கிக் கையற்று என்று கூறியுள்ளார்.

  1. கண்ணகியை நோக்கிக் கோவலன் கூறிய குறியாக்  கட்டுரை உலக இலக்கியம் எதிலும் கூறப்பட்டவற்றிலும் தனிச் சிறப்பு வாய்ந்தது. கோவலனின் சொல்லாட்சிச் சிறப்பை விளக்குவதன் வழி அடிகளாரின் சொல்லாண்மை சிறப்புற வெளிப்படுகிறது.

  1. இங்கு கண்ணகியின் நலம் கூறும்போது முதலில் கண்ணில் தெரியும் அவளது தோற்றப் பொலிவையும் அடுத்து அவை நீங்கிய பிற சிறப்புகளையும் கூறுவதாக உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்.

  1. இங்கும் மங்கல அணி என்று கூறுகிறாரேயன்றி தாலி என்றோ வேறு வகையிலோ குறிப்பிட்டுக் கூறவில்லை இளங்கோவடிகள்.

மயன் விதித்தன்ன என்பதற்கு மயன் மனதால் செய்வித்தது போன்று என்று வலிந்து பொருள் கொண்டிருக்கின்றனர். மயன் என்ற பொறியாளன் ஒவ்வொரு கட்டுமானத்துக்கும் அதனதன் பயன்பாட்டு அடிப்படையில் உருவாக்கிய விரிவான தரப்பாடுகளே மயன் விதிப்பு என்று ஆங்காங்கே கூறப்பட்டுள்ளது. மயன் என்பது கூட தொடர்ச்சியான ஒரு நிறுவனக் கட்டமைப்பாக இருந்திருக்கலாம்.

உத்தரகுரு என்பது இன்றைய திபேத் அல்லது பாமீர் மேட்டுநிலத்தை(பீடபூமி)ச் சேர்ந்த ஓர் இடமாகும். ஆசியக் கண்டத் தட்டும் நாவலந்தீவுத் தட்டும் சந்திக்கும் கங்கையாற்றுக்கு வடக்கில் உள்ள நிலப்பகுதி உத்தரம் என்று வழங்கப பட்டது என்பது ஓங்குநீர் வேலி உத்தரமரீஇ (கால்கோட்காதை 179) என்ற வரியால் புலனாகிறது.

                  ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம்
                  ஏமத வஞ்சம் இரண வஞ்சம்
                  தேவ குருவம் உத்தர குருவமெனப்
                  யோக பூமி யறுவகைப் படுமே
என்ற செய்யுளை மேற்கோள் காட்டுகிறார் வேங்கடசாமியார்.

      உத்தரகுரு - போக பூமியிலொன்று இது இமயம், ஏம கூடம், நிடதம், மேரு முதலியவற்றிற்கு அப்பாலிருப்பது. சஞ்சீவியைக் காண அனுமான் சஞ்சீவி பொருட்டுச் சென்ற போது இதனைக் கண்டு பொழுது விடிந்ததென்று திடுக்கிட்டு இது வேறு கண்டமெனத் தேறினான் (சிலப்பதிகாரம்) என்ற செய்தியை அபிதான சிந்தாமணி தருகிறது. பிற ஐந்து பற்றிய செய்திகள் இல்லை.

போக பூமியைப் பற்றி

                  பதினா றாட்டைக் குமரனுஞ் சிறந்த
                  பன்னீராட்டைக் குமரியுமாகி
                  ஒத்த மரபினு மொத்த வன்பினும்
                  கற்பக நன்மரம் நற்பய னுதவ
                  ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப்
                  போகம் நுகர்வது போக பூமி

என்ற செய்யுளையும் உரையாசிரியர் தந்துள்ளார். இவற்றிலிருந்து செல்வம் படைத்தோர் தொல்பழங்காலத்தில், இன்று தேன் நிலவுக்குச் செல்வது போல் சென்று வந்த இடங்கள்தாம் இப் போகபூமிகள் என்று தோன்றுகிறது. விரைந்த கடல்வழி - வான்வழிப் போக்குவரத்தின் மூலம்தான் இது இயலும். நம் மரபில் நினைவுக்கெட்டாக் காலத்தில் இருந்த இவற்றைப் பற்றிய செவிவழி - நூல்வழி மரபை இளங்கோவடிகள் பதிந்து வைத்துள்ளார் என்று கொள்ள வேண்டும்.

            மேரு என்பது குமரிக் கண்ட காலத்தில் நிலநடுக்கோட்டில் இன்றைய உச்சையினி வழியாக ஓடிய நிரைவரை(Longitude)யில் இருந்த ஒரு மலை உச்சியாகும். இதன் நினைவாகத்தான் சுமேரியர்கள் தாங்கள் இடம்பெயர்ந்த நிலத்திற்குப் பெயரிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது மேரு சுமேரு(நல்ல அல்லது உண்மையான மேரு). இன்றைய தமிழ் ஐந்திறங்களில்(பஞ்சங்கங்கள்) குறிப்பிடப்படும் மேரு என்பது உலக நடுவில் உள்ள ஓர் மலை உச்சியாகத்தான் குறிப்பிடப்படுகிறது. இமயம், ஏமகூடம் முதலியவை அதற்குத் தெற்கே இருந்திருக்க வேண்டும்.

            கடலில் முழுகிப் போன இத்தகைய நிலங்களைப் பற்றிய ஒரு நினைவுப் பதிவாக இதைக் கொள்ள வேண்டும்.

            திபேத் மேட்டுநிலம் கடகத் திருப்பத்து(கடகரேகை)க்கு வடக்கே அக்கக் கோடுகள் 30க்கும் 40க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பரப்பு மிக வறண்ட கடுங்குளிர்ப் பகுதியாகும். இன்பமாக நேரத்தைக் கழிக்க இந்த இடம் பொருத்தமானதல்ல. ஆனால் நிலநடுக்கோட்டிலிருந்ததாகக் கருதத் தக்க மேரு ஈரம் மிகுந்த அதே வேளையில் பனிபடர்ந்த ஒரு சேணுயர் மலை உச்சியாக இருந்திருக்கும். இத்தகைய தட்பவெப்ப நிலை இன்றைய அறைக் குளிரூட்டிகளில் எய்த முடியாத ஒன்றாகும்.  குளிரூட்டிகளால் குளிரூட்டும் நிகழ்முறையில் அறையிலுள்ள ஈரத்தை அகற்றுவது ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் திருப்பங்களாகிய கடகக் கோட்டிலும் சுறவ(மகர)க் கோட்டிலும் இருப்பதைவிட நிலநடுக்கோட்டில் குறைந்த உயரத்தில் பனிப்படிவு உள்ளது எனபதைக் கீழே உள்ள மேற்பு (வரைபடம் அல்லது திணைப்படம்) காட்டும். உலகிலுள்ள பெரும் பாலை நிலங்கள் எல்லாம் இரு திருப்பங்களை ஒட்டித்தான் அமைந்துள்ளன என்பதை கீழேயுள்ள இன்னொரு மேற்பு காட்டும்[1]. 

கயமலர் என்பதற்கு நீர்ப்பூ என்ற பொருள் கூறப்படுகிறது. கயமலர் என்ற பொருளிலேயே தாமரைக்கு பைங்கயம் (கயத்தைப் பசுமை பெறச் செய்வது) என்றிருந்தது பங்கயம் ஆகி பங்கசம் என்று திரிந்து(பைங்கயம் பங்கயம் பங்கசம்) சமற்கிருதத்தில் சென்றுள்ளது. பின்னர் சமற்கிருத மூலச் சொல் என்ற தோற்றத்துடன் பங்கசம் பங்கயம் என்று ஏதோ சமற்கிருதத்திலிருந்து தமிழ் திருடிய சொல் போன்ற தோற்றத்தைத் தந்துகொண்டிருககிறது. கயமலர்க் கண்ணி என்பதற்கு தாமரைக் கண்ணி 
- தாமரை மலர் போன்ற கண்ணை உடையவள் என்றே பொருள் கொள்ள வேண்டும். கயம் என்றால் நீர் அறாத மடு என்ற பொருளைத் தருகிறது கழகத் தமிழ் அகராதி.

பூக்களின் தேனையும் மகரந்தத் தூளாகிய தாதுவையும் உண்டு பெண்களின் கூந்தலில் உள்ள  மணத்தை நுகர ஏங்கி அறையினுள் செல்ல நல்ல நேரம் பார்த்திருக்கும் வண்டோடு தென்றலும் சென்றது என்பது  காற்று நுழைய இடம் கிடைத்தால் போதும் அங்கு வண்டும் நுழைந்துவிடும் என்று நயம்பட உரைப்பதாகும்.

நெடுநிலை என்பதற்கு ஏழு நிலைகள் என்றும் இடை நிலை என்பதற்கு நடுவிலுள்ளதாகிய நான்காம் நிலை என்றும் பொருள் கூறப்பட்டதற்கு எந்த அடிப்படையும் இருப்பதாகத் தோன்றவில்லை. இரண்டு தளங்களுக்கு இடையில் அமையும் mezzanine floor எனப்படும் இடைத்தட்டாக இருக்கலாம். வளமனைகளில் அமைந்திருக்கும் உப்பரிகை(Balcony) ஆகவும் இருக்கலாம்.

பெண்களின் நெற்றி எட்டாம் பிறையின் வடிவினதென்று குறுந்தொகை 129ஆம் பாடலைச் சான்று காட்டியுள்ளார் அடியார்க்குநல்லார். சிவன் சூடியுள்ள நிலவு 2ஆம் பிறையாகும் என்றும் கூறியுள்ளார்.
[தருக வென்றது சூடின பிறை இரண்டு கலையாதலின், அதனை எண்ணாட்டிங்களாக்கி(எட்டாம் நாள் - அட்டமிப் பிறையாக்கி)த் தருகவென்பது கருத்து. என்னை? மாக்கட(ல்) நடுவண் எண்ணாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறு நுதல்.] எட்டாம் பிறை தீயது என்பது பின்னர் தோன்றிய ஒரு கருத்தாகும். கடலோடிகளை, குறிப்பாகக் கடல் வாணிகர்களை இழிவுபடுத்துவதற்கென்றே எட்டாம் பிறையையும் 8 என்ற எண்ணையும் தீயவை என்று ஒதுக்கியுள்ளனர். இசையில் 8 நரம்புகள் இருக்கவும் அதை ஏழாக்கியுள்ளனர். மெய்ப்பாடுகள் எட்டாக இருந்ததை ஒன்பதாக்கியுள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தில் ஒரு தேடல் பல புதிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்.

            நிலவின் கலைகளில் உவா நாட்களாகிய நிறைமதியும் காருவாவும் ஏற்றவற்றம் எனப்படும் ஓதம் மிகக் கொந்தளிப்பு மிகுந்து காணப்படும் நாட்கள். அட்டமி எனப்படும் எட்டாம் கலை நாட்கள் இரண்டும் கடல் மிகக் குறைந்த கொந்தளிப்புடன் அமைதி மிகுந்து கடலோடிகளுக்குப் பாதுகாப்பான நாட்கள். இந்த உண்மையை மறைத்து உண்மையைத் தலைகீழாகப் புரட்டி நிலவின் கலைகளில் எட்டாம் நாளையும் 8 என்ற எண்ணையுமே இழிவுபடுத்தியுள்ளனர் ஆட்சியாளர் - பார்ப்பனர் என்ற ஒட்டுண்ணிக் கூட்டணியினர்.

            மங்கல அணி அன்றி பிற அணிகள் அணிந்தது ஏன் என்ற கோவலனின் கேள்வியை நாளை அவளுக்கு வரப்போகும் கோலத்தைக் கணவனின் பிரிவால் மங்கல அணியில் பிறிதணி மகிழாள் (அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - 50) என்று வரப்போவதைக் கோவலன் வாயால் சொல்ல வைத்திருக்கிறார் என்று கருதுகிறார்  புலவர்மணி ஆ. பழனி. கூடன் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர் (கொலைக்களக் காதை 9 -11) என்பதையும் அவ்வாறே கருதுகிறார். அத்தகைய ஓர் இயைபு காணலாமாயினும் கண்ணகி இயற்கை அழகு மிக்கவள், என்பதனையே மனையறம் படுத்த காதையும் கொலைக்களக் காதையும் வலியுறுத்துகின்றன. குறிப்பாக மாதவியுடன் ஒப்பிட்டவையாக அவை இருக்கலாம்.

            கண்ணகியைப் பார்த்து அம்மணனான கோவலன் தேனே என்று கூறிவிட்டானாம். இதனைக் கோவலன் கூற்றாகக் கூற முடியாதாம்! இளங்கோவடிகள் அம்மணர் அல்லர் என்பதற்கு இது ஓர் அடையாளமாம் சொல்கிறார், புலவர்மணி ஆ.பழனி அவர்கள்! பார்ப்பனரை வைத்து மணம் புரிவது அம்மண வழியா? பரத்தையோடு குடும்பம் நடத்திப் பிள்ளை பெறுவது அம்மண வழியா? வம்பப் பரத்தரொடு வறுமொழியாளரொடு திரிதருதல்” அம்மண வழியா? துறவியாகிய கவுந்தியடிகளின் கூற்றை வைத்துக்கொண்டு கோவலனின் சொற்களை எவ்வாறு அளக்க முடியும்? சமயத்துக்கும் மனிதனுடைய நடத்தைக்கும் உள்ள முரண்பாடுகளைப் புலவர்மணி அறியாதது நமக்கு வியப்பாயில்லை. சமயங்களில் தெய்வ வழிகாட்டலோ நன்னெறிக் குறிக்கோளோ இருப்பதாக நம்புவதில்தான் பிழையே இருக்கிறது. சமயம் என்பது எப்போதுமே அரசியல் தன்மையுடனேயே இருந்துள்ளது. தேனை உண்பவன்தான் தேனைப் பற்றிப் பேச வேண்டுமென்பதுவுமில்லை. இனிப்புச் சுவையின் ஒரு குறியீடாகவும் அது பயன்படும். இது மொழியியல்பு.

            மதத்துக்கும் சமயத்துக்குமான வேறுபாட்டை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மதம் என்பது கோட்பாடு அல்லது மெய்யியலைக் குறிக்கும். எடுத்துக்காட்டு நன்னூல் கூறும் ஏழு மதங்கள் கோட்பாடுகள் குறித்தவையே. உலகியலில் மதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலச்சூழலில் தனி மனிதன், குமுகம், இயற்கை ஆகியவை பற்றி உருவாகும் ஒரு மதிப்பீடேயன்றி வேறில்லை. அந்தப் புதிய கோட்பாடு கடவுள் அல்லது தெய்வம் பற்றிய ஒரு விளக்கத்தைத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் கடவுளுக்கும் மதத்துக்கும் தொடர்பு இருப்பது போன்ற ஒரு பொய்த்தோற்றம் உருவாகிறது. பெரும்பாலான மதங்கள் ஒரே கடவுள் என்று கூறி தங்கள் மதத்தை அக் கடவுள்தான் உருவாக்கினார் என்று கூறும் போது அந்த ஒரே கடவுள் ஏன் இத்தனை மதங்களை வகுத்து மனிதக் குமுகத்தை ஓயா குருதி வெள்ளத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற கேள்வி விடையின்றி நிற்கிறதில்லையா? சமயம் என்பது கோட்பாட்டைக் காட்டி உருவாக்கப்படும் ஒரு குமுக நிறுவனக் கட்டமைப்பே என்பதையும் கடவுளுக்கும் சமயத்துக்கும் எந்த உறவும் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அத்துடன் இவ்வாறு கட்டமைக்கப்படும் சமயங்கள் தங்கள் மதங்களின் கோட்பாடுகளுக்கு மறுப்பாகவே செயல்படுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியை நாடியதற்கு பல்வேறு அறிஞர் பெருமக்கள் பல்வேறு விந்தையான காரணங்களைச் சொல்லியுள்ளனர். ஒருவர் கண்ணகி கவர்ச்சி அற்றவள் என்றும் சிலர் அவள் பெண்மையையே எய்தாத பெண்பேடு என்றெல்லாம் கூடக் கூறுகின்றனர். நூலைச் சிறிதும் படிக்காத இவர்கள் கூற்றுகள் எவ்வளவு பொய்யானவை என்பது இந்தக் காதையிலிருந்து தெளிவாகிறது.

            காதையின் இறுதியில் வரும் வெண்பா இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

            தீராக் காதலின் திருமுக நோக்கிக்  
            கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை(வரி 36-37) என்பதையும் 
தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி (வரி 82) என்பதையும் மீண்டும் காட்டி புலவர் ஆ.பழனி அவர்கள் கோவலன் மீண்டும் கூடினான் என்று கூறி மிஞ்சிய காம உணர்வு அவனுடையது என்று நிறுவ முயல்கிறார். பெரும்பாலும் முதல் இரவில் இது போல் நடப்பது இயல்பு. இதை வைத்து இவ்விதம் முடிவு கட்டுவது எந்த அளவுக்குச் சரி என்று சொல்வதற்கில்லை. கூடல் முடிந்தபின் இணையர் அன்பான சொற்களைக் கூறுவதும் புதுமையல்ல. தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி என்ற வரியைத் தொடர்ந்து வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் என்பது அன்றைய நிகழ்ச்சியைத்தான் அவ் வரி குறிப்பிடுகிறது என்று கூறுவதற்கும் இல்லை. தீராக் காதல் என்பதற்கு காமம் என்றுதான் பொருள் என்பதற்கும் இடமில்லை. கூடலுக்குப் பின் இரு சாரருக்கும் உண்டாகும் நன்றி அல்லது நிறைவு உணர்ச்சியின் மிகுதியையும் அது குறிக்கும். கண்ணகியின் உறவில் அவன் மனநிறைவு பெற்றிருந்தான் என்பதையே இந்தப் பகுதி குறிப்பிடுகிறது என்றுதான் கொள்ள வேண்டும். மண உறவில் இணையருக்கிடையில் பிரிவு ஏற்படுவதற்குரிய சராசரிக் காரணிகள் எதுவுமே செயற்படவில்லை என்பதைப் படிப்படியாக உணர்த்துவதே அடிகளின் நோக்கம் என்பதை ஆங்காங்கே சுட்டுவோம்.
           
            உடலுறவைப் பொறுத்தவரை அது முடிந்த பின் ஒருவர் சோர்வாக உணராதவரை அவர் தன் உடல்நிலைக்கு உகந்த எல்லையை மீறவில்லை என்பது உடலுறவு குறித்த மருத்துவக் கருத்து. அதை மீறும் போதுதான் உடலுறவைத் தொடர்ந்த நேரத்தில் அவருக்குத் தன் இணையுடன் அன்பான சொற்களைப் பேசுவது கடினமாக இருக்கும்.
           
            கோவலன் கண்ணகியின் அழகுச் சிறப்பை மிக உயர்த்திச் சொல்வதை இன்னொரு வகையில் விளக்கலாம். கோவலன் பெண்கள் நடுவில் பெரும் ஈர்ப்பை விளைவித்தவன் என்பதை அவனை அறிமுகம் செய்யும் போதே

            .................................மதிமுக மடவார்தம்
            பண்தேய்த்த மொழியினா ராயத்துப் பாராட்டிக்
            கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்
            கொண்டேத்துங் கிழமையான் என்று அடிகள் காட்டிவிடுகிறார். எனவே இது போன்ற புகழ்மொழிகள் அவனுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்க வேண்டும். அத்தகைய ஒருவன் தன்னை ஈர்க்கும் அழகுள்ள பெண்களையே மீண்டும் கூட விரும்பி அவர்கள் மகிழத்தக்க சொற்களைக் கூறுவான். அந்த வகையில் கோவலனின் சொல்வன்மையை அடிகள் காட்டியுள்ளார், அவ்வளவுதான். அத்துடன் அன்றைய கூடலில் அவன் மகிழ்ந்து அது வரும் நாட்களிலும் தொடர விரும்பினான் என்பதற்கு அடையாளமாகவும் இவ் வரிகளைக் காட்டலாம். 

            புலவர்மணி ஆ. பழனி அவர்கள் ஓர் அரிய செய்தியைத் தன் நூலில் தருகிறார். நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தங்கள் ஆண் மக்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் தம்மோடு வைத்திருந்து அதன் பிறகு தனிக்குடித்தனம் வைப்பார்கள் என்று கூறுகிறார். எனவே  கோவலனும் கண்ணகியும் அந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னரும் சில ஆண்டுகள் என்று குறிப்பிடுவதால் குறைந்தது 8 ஆண்டுகளாவது சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். இது ஏற்கத்தக்கதாகவே தோன்றுகிறது.

            அவர் தந்துள்ள இந்த செய்தியுடன் ஒப்பிடும் போது பிற குழு மக்களிடையில் நடைபெறும் இது போன்ற நடைமுறையை நாம் பார்க்க வேண்டும்.

            குமரி மாவட்ட நாடார்களிடையில் மணமகள் வீட்டில் திருமணம் முடிந்து மணமக்கள் மணமகன் வீடு சென்ற பின் அன்று பிற்பகலில் பெண் வீட்டார் சீர் வரிசைகளுடன் மணமகனின் வீட்டுக்கு வருவார்கள். தங்கள் செலவிலேயே மணமகன் வீட்டாருக்கும் சுற்றத்தாருக்கும் விருந்து வைத்து வேறு சில நடைமுறைகளையும் முடிப்பார்கள். இதற்கு வீடு காணுதல்என்று பெயர். பின்னர் ஒன்று அல்லது இரண்டு கிழமைகள் சென்ற பின் மறு வீடு காணுதல் என்று தங்கள் உறவினர்களுடன் வந்து மணமகள் உறவினர்க்கு விருந்து வைத்துத் திரும்புவர். முதல் வீடு காண்பதற்கும் மறுவீடு காண்பதற்கும் இடையில் முன்பு மூன்றாண்டுகள் இடைவெளி இருந்தது இப்போது இங்கே சுருங்கி வெறும் சடங்காகிவிட்டது தெளிவாகிறது.

            பிற குழு மக்களில் பெரும்பாலோர் மருவீடு என்ற பெயரில் இப்போது ஒரேயோரு சடங்கைச் செய்கின்றனர். அதற்கு முதலிரவு, சாந்தி முகூர்த்தம் என்று விளக்கம் தருகின்றனர். ஆக, இங்கு பெயரும் மருவி நடைமுறையும் மாறிப்போய்விட்டது தெரிகிறது.

            ன்(நூலாசிரியரின்) தந்தையின் திருமணத்தின் போது அவரது பெற்றோர் உயிருடன் இல்லை. தாயின் பெற்றோர் சொத்து வழக்குகளில் அனைத்தையும் இழந்து கொடும் வறுமைப் பிடியில் இருந்தனர். எனவே உடனடியாக மறு வீடு காண முடியவில்லை. எனக்கு 9 அகவை ஆன போது தந்தையார் கட்டிய புது வீட்டுப் பால்காய்ப்பின் போது பாட்டனார் - பாட்டியார் (இந்த வீடு காணும் சடங்கு மணமகனின் மாமியாரின் பெயரில்தான் நடைபெறும் - வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி என்பதை நோக்குக.) மறுவீடு காணும் சீர்வரிசைகளுடன் வந்தனர். அதுவரை என்  பாட்டியார் எங்களைப் பார்க்க வந்தால் இங்கு உணவோ நீரோ கூட அருந்தாமல் திரும்பிவிடுவார். அதைத்தான் வேறுபடு திருவின் வீறுபெறக் காண என்று அடிகள் தந்திருக்கிறார்.

            இதில் இன்னுமொரு செய்தி, தனிக் குடித்தனத்துக்குத் தேவையான தளவாடங்கள், தட்டு முட்டுகளை மணமகளின் தாயாரே கொடுப்பது வழக்கம். இதற்கான விளக்கம் ஒரு குடும்பத்திலுள்ள ஆண்மக்கள் அனைவருக்கும் மனைவியாய் இருந்த[2] தன் மகளைப் பிரித்துத் தனிக்குடித்தனம் வைப்பதற்காக மணமகன் வீட்டுச் சொத்தைப் பிரிக்க முடியாமல் அது தாய்வழிச் சொத்தாக இருந்த நிலையில் பெண்ணின் தாயார் தன் மகளுக்குரிய தன் சொத்தின் பங்கைப் பண்டங்களாகவும் பணமாகவும் தருவதாக இதைக் கொள்ள வேண்டும்.

            இன்று இந்தப் பண்டங்களும் பணமும் தந்தாலும் தனிக்குடித்தனம் வைப்பதற்குப் பல்வேறு இடையூறுகள் உள்ளன. ஒரு வீட்டில் நான்கு ஆண் மக்கள் இருந்தாலும் அவர்களது மனைவிகள் கொண்டுவரும் பாத்திரம் பண்டங்களை ஆங்காங்கே அடுக்கி வைத்திருப்பார்கள். கூட்டுக் குடித்தனம் - தனிக் குடித்தனம் என்பது மூத்தோருக்கும் இளைய தலைமுறையினருக்கும் - மாமியாருக்கும் மருமகள்களுக்கும் இடையிலும் மருமகள்களுக்கிடையிலும் நாத்தனார்களுக்கிடையிலும் என்று பல்வேறு இழுபறி நிலைகளில் பல குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றன. இது பற்றி விரிவாக நூலாசிரியர் எழுதியுள்ள பெண் வழிச் சேறல் என்ற கட்டுரையில் காணலாம்.

மனையறம் படுத்த காதையில் வரும் ஒரு தனிப் புணர்த்தல் என்ற செய்தி, நம் குமுகம் குடும்ப உறவுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளில் முன்னோக்கிச் செல்லவில்லை என்பதுடன் பின்னோக்கிச் சென்றுள்ளது புலப்படுகிறது. 

இறுதியில் வரும் வெண்பா ஒரு சிறப்பான செய்தியைத் தருகிறது. உயிர்வகைகளில் கலவியில் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதில் பாம்பு சிறப்பிடம் பெறுகிறது. நாம் வழக்கமாக எதிர்கொள்ளும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு முதலியவை இரண்டு மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றன.

            பாம்பின் மொத்த நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதி உடல் என்றும் ஒரு பகுதி வால் என்றும் கூறுவர். மதிள் சுவர் போன்றவை அதன்  உடல் பகுதியை விட உயரம் குறைவாக இருந்தால் பாம்பு தன் வால்பகுதியைத் தரையில் ஊன்றிச் சுவரைத் தாண்டி விடும். நாகம் எனப்படும் கருநாகம் உடல் பகுதி முழுவதையும் தூக்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் கலவியின் போது சாரைப்பாம்பு போன்றவையும் தம் உடல் பகுதி முழுவதையும் உயர்த்தி எழும்பியும் வீழ்ந்தும் மீண்டும் எழும்பியும் ஒன்றையொன்று பிணைத்து கயிறு போல் முறுக்கிக் கொண்டும் மீண்டும் வீழ்ந்தும் இது தொடரும். பழந்தமிழ்ப் புலவர்களில் பாம்புகளின் புணர்ச்சியைச் சொல்லோவியமாக்கியுள்ளவர் இளங்கோவடிகள் மட்டுமே என்று தோன்றுகிறது.

            பேரா. செ. சுந்தரலிங்கம் அவர்கள் ஒரு கருத்தைக் கூறினார்கள். தலைமக்களான கோவலனும் கண்ணகியும் கூடுவதை அருவருப்பும் அச்சமும் தரும் கீழ்மையான பாம்பின் புணர்ச்சியுடன்தான் ஒப்பிட வேண்டுமா என்பது அக் கருத்து. இளங்கோவடிகள் இந்த ஒப்புமையைச் சொல்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களையும் பின்னணிகளையும் காட்ட முடியும். அப்போதுதான் இளங்கோவடிகளின் மேதைமையையும் வெளிப்படுத்தவும் முடியும். சிலப்பதிகாரப் புதையல் என்ற இந்நூலின் தலைப்பும் அப்போதுதான் நிறைவு பெறும். அதற்காகப் பேரா. செ. சுந்தரலிங்கம் அவர்களுக்கு நன்றி.

  1. கோவலன் - கண்ணகி இணையர் காம வேட்கையில் ஒருவருக்கொருவர் இளைத்தவரில்லை.
  2. சில ஆண்டுகள், நாம் மேலே புலவர் மணி ஆ.பழனி அவர்கள் கூற்றை மேற்கொண்டது போல் ஏறக்குறைய எட்டு ஆண்டுகள், இத்தகைய இன்பத்தைக் குறைவின்றித் துய்த்துள்ளர்.
  3. கோவலனுக்கு அவனது வேட்கைக்கு ஈடுகொடுப்பவளாகக் கண்ணகியும் விளங்கியுள்ளாள், ஏனென்றால் பிற உயிரிகளைப் போல் பெட்டையைத் துரத்திக் கொண்டு ஆண் பாம்பு வருவதில்லை. இரண்டும் ஒன்றை நோக்கி ஒன்று எதிர்த்து வந்து புணர்பவையாகும்.

இனி, நாகம் என்பதன் வரலாற்றுக் குறிதகவைப் பார்ப்போம். இளங்கோவடிகளே முதல் காதையாகிய மங்கல வாழ்த்துப் பாடலில்,
            நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
            போகநீள் புகழ் மன்னும் புகார்நாக ரதுதன்னில்
என்ற வரிகளில், நாகர்கள் எனும் மக்கள் குழுவினர் வாழும் நாட்டுடனும் நகரத்துடனும் ஒப்புமை காட்டிப் புகாரின் சிறப்பை விளக்க வேண்டிய அளவுக்குச் சிறப்பு வாய்ந்தவர்கள் அவர்கள் என்பது தெளிவு. அவர்களின் அடையாளம் படமெடுத்து நிற்கும் பாம்பு. அரசனுக்கு ஐந்தும் அரசிக்கும் இளவரசர்களுக்கும் மூன்றும் குடிமக்களுக்கு ஒன்றும் தலையுள்ள நாகங்களைக் கொண்ட தலையணி நாகர்களின் அடையாளம் என்பார் வி.கனகசபையார் அவர்கள் தன் ஆயிரத்தொண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலில்.

நம் மரபுகளின் படி ஏழு மாதர்கள், ஏழு தாயர்கள், ஏழு கன்னியர்கள் எனும் ஏழு பெண்களின் வழி வந்தவர்கள் மனிதர்களின் அனைத்துக் குழுவினரும். பல சாதிகளின் வரலாறுகள் இந்தக் கருத்துக்கு அரண் சேர்க்கின்றன. இந்த ஏழு பெண்களின் வழி வந்தவர்களில் இறுதியாக அனைவர் மீதும் மேலாளுமை செலுத்தியோர் நாகர்களாவர். அதனையே சிலப்பதிகாரம், வழக்குரை காதையில், வாயிலில் நிற்கும் கண்ணகியைப் பற்றி அரசனுக்கு அறிவிக்கும் வாயிலோன்,

                        டர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
                        பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 
                        வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்ள்
                        அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
                        ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
                        கானகம் உகந்த காளி தாருகன்
                        பேருரம் கிழித்த பெண்ணு மல்லள்

என்பதில் அறுவர்க்கிளைய நங்கை என்பதற்கு வேங்கடசாமியார் கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரி என்று பொருள் கூறியுள்ளார். பிடாரன் பிடாரி என்ற வகையில் இவள் நாக கன்னிகை ஆகிறாள்.

            இவர்கள் கன்னியர் என்றே அழைக்கப்படுகின்றனர், ஏனென்றால் முதன்முதல் மனிதக் குழுக்களில் கணவன் அல்லது தந்தை என்று அடையாளம் காட்டும் ஆண்மகன் எவரும் இல்லை. பெண்ணே பிள்ளைப்பேற்றுக்கான ஒரே காரணம் என்று கருதப்பட்ட நிலை. ஏழு கன்னியருடைய உண்மையான பெயர்ப் பட்டியல் நமக்கு இன்று கிட்டவில்லை.

            நம் தொன்மங்களில் வரும் பெரும்பாலான தெய்வங்கள் நாகர்களே. பலராமன் எனப்படும் பலதேவனை ஒரு நாகன் என்றே அபிதான சிந்தாமணி கூறுகிறது. காத்ரு என்ற காசிபரின் மனைவிக்குப் பிறந்த நாகங்கள் எனப்படும் நாகர்களில் ஒருவன் நகுசன். அவன் மகாபாரதத்தில் பாண்டவர் – கவுரவர்களின் மூதாதையர்களில் ஒருவன். அவன் வழிவந்த யயாதியின் மன்களில் ஒருவனான யதுவின் வழிவந்த யாதவர்களின் மரபில் தோன்றியவனே கண்ணன். அதாவது குக்குலங்களாக இருந்த மக்களில் இறுதியாக மேலாளுமை செலுத்திய நாகர்களின் உள்ளிருந்தே தோன்றிய தலைவர்கள் போராடி உருவாக்கிய நிலம் சார்ந்த தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டே ஐந்நில நாகரிகங்கள் உருவாயின என்பதற்கு நம் தொன்மங்களில் வலிமையான சான்றுகள் உள்ளன. குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் பிரெடரிக் ஏங்கல்சு சுட்டுகிற நிலம் சார்ந்த அரசின் தோற்றம் பற்றிய கருத்துக்கு நம் தொன்மங்கள், பண்பாடு, இலக்கியம் போன்றவற்றுக்கு ஈடான சான்று உலகில் வேறெங்கும் இல்லை.

            இந்தப் பாம்பு மேலாளுமை உடைபட்டதற்கான சான்று யூதர்களின் மறைநூலில் சாத்தன் என்ற பாம்பாகவும் (சாத்தான் என்பது சாத்தன் என்ற தமிழக் கடவுள் என்பது கவனிக்கத்தக்கது), கில்காமேசு காப்பியத்தில் கில்காமேசு கொண்டு வந்த சாவா மருந்தைத் திருடிய பாம்பாகவும் (யூதமறை நூலிலும் சாவாமைக்கு எதிரானதாகவே பாம்பு காட்டப்பட்டுள்ளது. சாவா மருந்தாகிய அமுதத்துக்காகத் தேவர்களும் நாகர்களும் போரிட்டதும் அதன் தொடர்ச்சியும்தான் மகாபாரதக் கதையே). கிரேக்கத் தொன்மங்கள், மய நாகரிகம், பண்டை எகிப்திய மரபுகள், சீனத்தின் டிராகன் எனும் பாம்பு போன்ற விலங்கு என்று எங்கு பார்த்தாலும் நாகத்தின் தொன்மையும் பெருமையும் காணப்படுகின்றன. இந்தியத் தெய்வங்களில் சிவனின் தலை, கை, கால் எங்கு பார்த்தாலும் பாம்பு. திருமாலின் படுக்கையே பாம்பு. பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றிப் பாம்பு. அரச மரத்தடிகளில் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பாம்புகளின் கல்லுருவங்கள். ஏன்? உலகின் மருந்துத் துறையின் அடையாளமே ஒன்றையொன்று முறுக்கிக் கொண்டு புணர்ச்சியிலீடுபட்டிருக்கும் பாம்புகள்தாமே. இவை அருவருப்பும் கொடுமையும் உள்ளவையாக இல்லாமல், வணங்கத்தக்கனவாகவும் இருக்கும் போது கோவலன் – கண்ணகியின் குறைவற்ற காம நுகர்ச்சியைக் காட்ட இளங்கோவடிகள் காட்டியுள்ள உவமை போற்றத்தக்கதுதான் என்பதில் ஐயமில்லை.

            அடுத்து, உயிரிகளின் உலகில் (Biological world) கலவி எனப்படும் மெய்யுறு புணர்ச்சியைப் பற்றிச் சில இங்கு கூற வேண்டும்.

            உயிரியக்கம் என்பது பல இயங்கியல் எதிரிணைகளின் செயல்பாடாகும். பிறப்பு – இறப்பு, வளர்ச்சி – சிதைவு, உட்கொள்ளல் – கழித்தல், மரபு – தகவமைப்பு, தற்காப்பு -  இனப்பெருக்கம் என்று இவ்வாறு அவை விரிகின்றன. இவற்றில் எது ஒன்று நின்றாலும் அவ் வுயிரி இல்லாமல் ஆகிவிடும். உட்கொள்ளாவிடிலும் கழிக்காவிடிலும் சாவுதான். மரபுகளைச் சூழலுக்கேற்பத் தகவமைக்காவிடினும் அழிவுதான். அந்த வகையில் தற்காப்பு - இனப்பெருக்கம் என்ற இயங்கியல் எதிரிணை உயிரிகளின் நிலைப்புக்கு நடுப்புள்ளி ஆகும். ஒவ்வொரு உயிரியும் பிற உயிரிகளிடமிருந்தும் இயற்கைச் சூழல்களிலிருந்தும் தன் உயிரைக் காப்பதைத் தன் செயற்பாட்டில் முகாமையான நடவடிக்கையாகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான இடைவிடா விழிப்பு நிலையிலிருந்து அது விடுபடுவது புணர்ச்சி நிலையில் மட்டும்தான். அந்த வேளையில் அதனை எந்த எதிரியும் எளிதில் கொன்றுவிட முடியும். அதனால்தான் நம் முன்னோர் புணர்ச்சி நிலையிலிருக்கும் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்று வரையறுத்துள்ளனர். மான் வடிவம் கொண்டு கலவியில் ஈடுபட்டிருந்த முனிவன் மீது அம்பெய்த பாண்டுவை நோக்கி “கலவியில் ஈடுபட்டிருக்கும் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்று அறநூல்கள் கூறுவதை அறியாயோ நீ?” என்று அம் முனிவன் கேட்டு அவனைச் சபிப்பது, உயிரியல் சமநிலை பேணுதல் குறித்த நம் மரபைத் தெளிவாகக் காட்டும்.

            மனிதர்களாகிய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது தம்மை அதிலிருந்து சிறிது அயற்படுத்திக்கொண்டு தம் செயற்பாட்டைக் கவனித்துப் பார்ப்பார்களாயின் தம் படிப்பு, சிந்தனை, தன்மதிப்பு போன்ற அனைத்திலிருந்தும் விடுபட்டு இரண்டு புணர்வுறுப்புகள் என்பவையாகத் தாம் ஒடுங்கியிருப்பதை அறிவார்கள். இந்த நிகழ்முறையின் ஒரு குறியீடாகத்தான் புணர்ச்சியிலீடுபட்டிருக்கும் பாம்புகளைக் காட்டும் நம் அரச மரத்தடிக் கற்சிலைகளையும் மருத்துவத்துறையின் அடையாளமாகிய, பின்னிப் பிணைந்து காணப்படும் பாம்புகளையும் பார்க்க வேண்டும்.

            இந்த இணைவை மனிதனுக்கு மட்டுமாகக் குறுக்கியதன் வெளிப்பாடே குறி வணக்கமாகிய இலிங்க வழிபாடாகும். ஆண் குறியும் பெண்குறியும் இணைந்த இந்த வடிவத்தை மேல் நோக்கி நிற்கும் தண்டையும் கீழே இருக்கும் ஆவுடையாளையும் தனித்தனியே செய்து இணைக்கிறார்கள். அதன் இன்றைய வடிவத்தை உருவாக்கியவன் வாணன் எனப்படும் பாணாசுரன் என்கிறது அபிதான சிந்தாமணி. இவன் பழைய இலிங்க வடிவில் செய்த மாற்றங்களை கடலாடு காதை விளக்கவுரையில் காணலாம்.

இயற்கையில் உள்ள அனைத்து உயிரிகளின் சாரமாக இந்த குறியை நாம் கொள்ள வேண்டும். நாடுகள், இனங்கள், மொழிகள், மதங்கள், சாதிகள் என்ற எல்லையைத் தாண்டிய ஓர் அடையாளமாகவும் வழிபாடாகவும் கொள்ளத்தக்க இந்த குறி வழிபாட்டைச் சிவன் என்ற ஒரு தனித்த தெய்வத்தோடு பொருத்தி அதன் பெருமையை அழித்துவிட்டார்கள் நம் சமய வெறியர்கள். அது மட்டுமல்ல, பிறப்பின், பிறவியின் பெருமையைச் சுட்டும் அந்தக் குறி வழிபாட்டை, அறிவியல் அறிஞர்களான பண்டைச் சித்தர்களின் பெயர்களில் பாடல்களை எழுதிவைத்த பித்தர்கள், பிறவியில்லா வாழ்க்கைக்கு வழிகாட்டும் அடையாளமாக்கி, உழைக்காது வளவாழ்வு வாழும், குண்டியின் மீது அமர்ந்து “குண்டிலினி”யை எழுப்பி உலக மறையங்களனைத்தையும் அறிந்து உலகையே தம் கட்டுக்குள் கொண்டுவந்து கடவுளாக மாறிவிட முடியும் என்று கூறி தமிழகத்தையும் இந்தியாவையும் கெடுத்துத் திரியும் கொள்ளைக் கூட்டத்தின் அடையாளமாகவும் ஆக்கிவிட்டார்கள். இந்தக் கொடியவர்களிடமிருந்து குறி வழிபாட்டை மீட்பது நலமென்று தோன்றுகிறது.


[1].இம் மேற்புகளில் முதலது எம்மிடம் இருந்த Physical Geology என்ற நூலிலும் இரண்டாவது Commercial Geography என்ற நூலிலும் ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கும் மேற்புகளில் பாளையங்கோட்டை அரசூழியர் குடியிருப்பில் செயற்பட்ட ஒரு கணினி நிறுவனத்தில் அமர்ந்து அரும்பாடுபட்டு தமிழுக்கு மாற்றித் தந்தவர் திரு.வெள்வன் ஆவார்.
[2]வீடுகாணுதல்” என்ற முதல் நிகழ்ச்சியில் பெண்ணின் தாய், மணமகனின் உடன்பிறந்தார் முறையுள்ள தாயாதிக் குடும்ப ஆடவர் அனைவருக்கும், தன் உடன்பிறந்த ஆண்களின் மகன்களுக்கும் தன் கணவனின் உடன்பிறந்த பெண்களின் மகன்களுக்கும் அதாவது மணப் பெண்ணின் தாய் மாமன், அத்தை ஆகியோரின் மகன்களாகிய முறை மாப்பிள்ளைகளுக்கும் சுருள் என்று பணம் கொடுப்பார்கள். இந்தச் சடங்கு வெவ்வேறு குழு மக்களிடையில் வெவ்வேறு வடிவங்களில் இடம் பெறுகிறது. இவ்வாறு மணப்பெண் மீது இவர்களுக்கு இருந்த கலவி உரிமை கழிக்கப்பட்டதன் எச்சமாக இது விளங்குகிறது. முறை மாப்பிள்ளை உரிமையை ஒவ்வொரு நேர்விலும் பகரம் பேசிப் பணம் கொடுத்து முடித்த பின்னரே வெளியே மாப்பிள்ளை பார்க்கும் நடைமுறை இன்றும் கூடச் சில மக்கள் குழுக்களிடையில் தொடர்கிறது. பெண்ணின் தாய் – தந்தையர் வழி முறை மாப்பிள்ளை ஆனவர்க்கு சுருள் கொடுப்பது சரி, மணமகனின் உடன்பிறப்பு உறவுடையவர்களுக்கு ஏன் கொடுக்கிறார்கள்? அவர்களுக்கும் புதுமணப்பெண் மீதிருக்கும் புணர்ச்சி உரிமையைக் கழிக்கத்தானே! 

0 மறுமொழிகள்: