28.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 4


க. புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப்பாடல்

         திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
         கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
         வங்கண் உலகளித்த லான்.
        
         ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
5.      காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
         மேரு வலந்திரித லான்.
        
         மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
         நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல்
        மேல்நின்று தான்சுரத்த லான்.

10.     பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
        வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு
        ஒங்கிப் பரந்தொழுக லான்.

        ஆங்கு,
        பொதியி லாயினும் இமய மாயினும்
15.    பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
        பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
            நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
            ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
            முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
20.     அதனால்,
            நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
        போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில்
        மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
        ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்;
25.     அவளுந்தான்,
        போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
        தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
        மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
        காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ;
30.     ஆங்கு,
        பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
         ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
            வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான்
            இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்;
35.    அவனுந்தான்,
            மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
         பண்தேய்த்த மொழியினா ராயத்துப் பாராட்டிக்
        கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்
        கொண்டேத்துங் கிழமையான் கோவலனென் பான்மன்னோ:
40.    அவரை,
            இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
            மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி
            யானை எருத்தத் தணியிழையார் மேலிரீஇ
            மாநகர்க் கீந்தார் மணம்.            
45.    அவ்வழி,                                                            
            முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
        அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி யெழுந்தது
        மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து      
          நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
50.     வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
         மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
         தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை
         விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
55.    உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
         சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
         ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
         விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
         முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
60.    போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடியன்னார்     
         காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
         தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடு தூவி
         அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
         மங்கல நல்லமளி யேற்றினார்: தங்கிய
65.    இப்பால் இமயத் திருத்திய வாள்வேங்கை
         உப்பாலைப் பொற்கோட் டுழையதா எப்பாலும்
        செருமிகு சினவேற் செம்பியன்
        ஒருதனி ஆழி உருட்டுவோ னெனவே.
           
பொழிப்புரை

நிலவைப் போற்றுவோம்! பூந்தாது பொழியும் மாலையை அணிந்த சோழனுடைய குளிர்ச்சி தரும் வெண்கொற்றக்குடையைப் போன்று இந்த அழகிய நிலத்தை உடைய உலகுக்குக் குளிர்ச்சியை அளிப்பதால் நாம் நிலவைப் போற்றுவோம்!

            கதிரவனைப் போற்றுவோம்! காவிரி நாட்டை உடைய சோழனது ஆணைச் சக்கரம் போல் பொன் போன்று பொலிகின்ற கொடுமுடியை உடைய மேருவை வலமாகச் சுற்றி வருதலால் நாம் கதிரவனைப் போற்றுவோம்!

            பெருமைமிகு மழையைப் போற்றுவோம்! அச்சத்தைத் தரும் கடலால் சூழப்பட்ட உலகுக்கு அவன் வழங்குவது போல் மேலே நின்று வளத்தைச் சுரப்பதால் நாம் பெருமைமிகு மழையைப் போற்றுவோம்!

            அழகிய புகார் நகரினைப் போற்றுவோம்! வீங்கி அமையும் கடல் சூழ்ந்த இந்த உலகில் அவனது குலத்தினரோடு தொன்று தொட்டு பொருந்தி உயர்ந்து பரந்து இயங்குதலால் நாம் அழகிய புகார் நகரினைப் போற்றுவோம்.

            அவ்வாறு பொதியமலையும் இமயமலையும் குடியிருப்பில் இருந்தும் பெயர்ந்து செல்வதையே அறியாத பழமை பொருந்திய குடிகள் வாழும், சராசரியானவை போன்றில்லாத சிறப்பை உடைய புகாரும் எந்தப் பதற்றமுமின்றி நிலைபெற்றவை என்று கூறுவதன்றி, அங்கு உயர்ந்த மக்கள் வாழ்வதால் அவற்றுக்கு முடிவு என்ற ஒன்று உண்டு என்று முற்றிய கேள்வியறிவால் அனைத்தையும் உணர்ந்தவர்கள் கூறமாட்டார்கள்.

அதனால் நெடிய நாக நகரோடும் நாக நாட்டுடனும் வைத்து எண்ணத்தக்க நீண்ட போகமும் புகழும் பொருந்திய புகார் நகர் எனும் நகரத்தில்

            வானிலிருந்து பொழியும் மழை போன்று வள்ளல் தன்மை உள்ள கைகளை உடைய மாநாய்கனின் குலத்தில் தோன்றிய கொம்பாகிய பொன்னால் ஆன கொடி போன்றவள் பன்னீரண்டு ஆண்டு அகவை அடைந்தவள்,

            அவள்தான் தாமரைப் பூவில் அமர்ந்த திருமகளின் வடிவு கொண்டவள் என்றும் குற்றமற்ற வடமீனாகிய அருந்ததியின் கற்பு இவள் கற்பை ஒக்கும் என்றும் பெண்கள் தொழுது போற்றுமாறு விளங்கிய பெருங்குணங்களை விரும்புகின்றவள்; அவளுடைய  பெருமைக்குரிய பெயர் கண்ணகி என்பதாகும்.

            அந்தப் புகாரில் விரிந்த நிலம் முழுவதையும் ஆளும் சோழ மன்னனைத் தலைமையாக வைத்து எண்ணுகின்ற ஒப்பற்ற குடிகளாகிய  தன் கிளைகளோடு கூடி மிக உயர்ந்த செல்வத்தை உடையவனும்  வந்த செல்வத்தைப் பிறர் தேவைகளை நிறைவு செய்ய வழங்கும் மாசாத்துவான் என்று அழைக்கப்படும், பெரும் செல்வனுக்கு பதினாறு ஆண்டு நிரம்பப்பெற்ற மகன்,

            அவன், புவி சிறிதாகும்படி பரந்த புகழை உடையவன், பண்ணினை வென்ற மொழியினை உடையவராகிய நிலவு போலும் முகத்தைக் கொண்ட பெண்கள் கூட்டம் பாராட்டிக் கண்டு போற்றும் செவ்வண்ணமாக முருகவேள் என்று புகழ்பெற்று காதலுணர்வு கொண்டு போற்றும் பேறுடைய கோவலன் என்ற பெயர் கொண்டான்.

            இவர்கள் இருவரையும் பெருமையுடைய இரு பெற்றோரும் ஒரு பெரு நாளில்  மணக்கோலம் காண விரும்பினர். விரும்பிய அளவில்,

            யானையின் பிடரின் மீது அழகிய அணிகலன்களை அணிந்த மகளிரை இருத்தி அம் மாநகர மக்களுக்கு மகிழ்ச்சி மிக்க மண நிகழ்ச்சியை அறிவித்தனர்.

            அதன்படி, முரசங்கள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முதலியவற்றின் முழக்கங்கள் முறைப்படி எழுந்தன. வெண்குடைகள் அரசன் உலாவின் போது போல எழுந்தன, ஊரில் மங்கல அணி வலம் சென்றது.

            மாலைகள் தொங்கும் உச்சியைக் கொண்ட வயிரமணித் தூண்களை உடைய மண்டபத்தில் நீல மேற்கட்டியின் கீழ் அமைந்த அழகிய முத்துப் பந்தலில்,

            வானில் நகர்ந்து செல்லும் நிலவு சகடு எனப்படும் உரோகணியைக் கூடும் நாளில் வானிலுள்ள தனிச் சிறப்புடைய அருந்ததி எனும் விண்மீன் போன்றவளை தலைமை சான்ற முதிய பார்ப்பான் மறைநெறியில் நெறிப்படுத்த கோவலன் மணம் புரிந்து மணமக்கள் தீயை வலம் வருவதைக் காண்போரது கண்கள் செய்த தவம்தான் என்னே!

            விளங்குகின்ற(பளிச்சென்ற) மேனியை உடைய மகளிர் விரையினராயும் மலரினராயும் உரையினராயும் பாட்டினராயும் அண்ணாந்துயர்ந்த(நிமிர்ந்து நிற்கும்) இளைய முலையினை உடைய மகளிர் சாந்தினராயும் புகையினராயும் விளங்குகின்ற மாலையினராயும் இடிக்கப்பெற்ற சுண்ணத்தினராயும் அரும்பிய புன்னகையை உடைய மகளிர் விளக்கினராயும் கலத்தினராயும் விரிந்த முளைப் பாலிகையினராயும் நிறை குடத்தினராயும் ஆகிய மொட்டுக்களோடு விரிகின்ற கூந்தலையுடைய மணமுள்ள பொற்கொடியைப் போன்ற பெண்கள் இவள் காதலனைப் பிரியாமலும் கணவனின் கையின் உள் வைக்கப்பட்ட கை நெகிழாமலும் இடையூறுகள் இன்றி வாழ்க்கை அமையட்டும் என்று வாழ்த்தி விடு பூக்களைத் தூவி அழகிய நிலமாகிய புவியில் வாழும் அருந்ததி போன்றவளை நிலைபெற்ற நல்ல மங்கல அமளி (கட்டில், பள்ளி) மீது ஏற்றினார், இங்கிருந்து சென்று இமயத்தில் இருக்கச் செய்த புலியானது அதற்கு மேலே உள்ள பொன் உச்சியில் நிற்பதாக, எப் பக்கத்திலும் தன் போர் எதிரியைவிட மேம்பட்ட சினம் மிக்க வேலை உடைய சோழன் நிகரில்லா தன் ஆணைச் சக்கரத்தை உருட்டுவானாக எனச் சொல்லி வாழ்த்தினர்

இக்காதையின் சிறப்புகள்

காதை என்ற சொல் காது என்ற சொல்லின் அடிப்படையில் உருவானது. ஒருவர் சொல்ல அதை இன்னொருவரோ பலரோ கேட்பது என்ற பொருளில் இச் சொல் உருவாகியிருக்கும். அதுவே திரிந்து பின்னர் கதை என்ற வடிவத்தைப் பெற்றிருக்கும். இவ்வாறு நெடில் குறிலாக அல்லது குறில் நெடிலாக மாறியிருக்கும் நிகழ்வுகளை இந் நூலைப் பொறுத்து இயன்ற வரை சுட்டிச் செல்வோம்.

திங்களையும் ஞாயிற்றையும் மழையையும் புகாரையும் போற்றுவதன் மூலம் சோழ மன்னனின் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் குணத்தையும் உலகின் மீதுள்ள ஆளுமையையும் வள்ளல் தன்மையையும் இடையீடில்லா ஆட்சிச் சிறப்பையும் போற்றுகிறார் ஆசிரியர்.

            இந்த நான்கு புகழ்க் கூற்றுகளையும் கோவலன் கண்ணகி திருமணச் செய்தியை நகர மக்களுக்கு அறிவித்த பெண்களின் அறிவிப்பின் பகுதி  எனக் கூறுவார் புலவர் த. சரவணத் தமிழன். ஆசிரியர் கூற்றாகவும் மகளிர் கூற்றாகவும் ஒரே நேரத்தில் பயன்படும் வகையில் இப் பாக்களை அடிகளார் வகுத்திருக்கிறார் என்றும் கூறலாம்.

            காவிரி நாடன் என்று சோழனைக் கூறுகிறார் அடிகள். சோழ நாட்டைத் தன்னுள் அடக்கியது இன்றைய தமிழகம். அச் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் கயவர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் காவிரியை இழந்த நாடாயிற்றே தமிழகம் என்ற ஏக்கத்தை அத் தொடர் நமக்கு இன்று அளிக்கிறது.

            பொதியமலையையும் இமயமலையையும் போன்று புகார் நகரம் அழிவில்லாதது என்ற கூற்று பொய்த்துப்போனதை உரைபெறு கட்டுரையில் குறிப்பாக உணர்த்திய அடிகளார் இதனை ஓர் அவலக் குறிப்பாகக் கூறுகிறார் என்றே கொள்ள வேண்டும்.

            நாகநீள் நகரம் என்பதற்குச் சுவர்க்கம் என்று பொருள் கூறுகிறார் வேங்கடசாமியார். நாகர்களுடைய நகரம்தான் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் புலனாகிறது. நாகர்களின் நகரம் மட்டுமல்ல, நாகநாடு முழுவதுமே இன்பம் துய்ப்பதில் சிறந்ததென்றும் அதற்குச் சமமான சிறப்புடையது புகார் நகரென்றும் விளக்கப்படுகிறது. ஆக இளங்கோவடிகள் காலத்தில் நாகர்கள், நாகர் நகரம், நாகநாடு ஆகியற்றின் நாகரிகச் சிறப்பு பற்றிய மரபு தமிழகத்தில் நிலவியது தெளிவாகிறது. நாகரிகம் என்ற சொல்லே நாகர்கள் என்ற சொல்லின் அடிப்படையாக உருவானது என்பதும் தெளிவாகிறது.

            கண்ணகியை வடமீன் என்ற விண்மீனோடு உவமித்துக் கூறியிருத்தல் அவளுடைய நிலைமாறா மனத் திண்மையைக் குறிக்கவே என்பதாகும். அருந்ததியைப் பெண்ணாக்கி அவளது கற்பின் திறத்தை விளக்கும் கதையையும் தொன்மப் பூசகர்கள் வகுத்துள்ளனர். ததி என்பதற்குக் கிரகம் என்று பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி. அரும் கோள் அல்லது அரிய விண்மீன் என்பதே அருந்ததி என்பதன் பொருள் என்று கொள்ளலாமா?

            கோவலனை முருகனுடன் உவமை காட்டுவது போல் செவ்வேள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் அவன் சிவந்த நிறம் உடையவனாக இருந்திருப்பான் என்று வேங்கடசாமியார் கருதுகிறார். பெண்களின்  கூட்டத்தில் இவனுக்கு கவர்ச்சி மிக்க ஓர் இடமிருந்தது என்று கூறுகிறார் அடிகள். அதே வேளையில் கண்ணகியைப் பெண்கள் அவளது நிலைமாறாத் தன்மைக்காகத் தொழுது போற்றினர் என்று கூறுகிறார். இதில் கூறப்படும் பெண்கள் முறையே களியாட்டுப் பெண்களும் குடும்பப் பெண்களும் ஆவர் என்று கொள்ளலாமா?

            திருமண அகவை பெண்ணுக்குப் பன்னிரண்டும் ஆணுக்குப் பதினாறும் என்று முற்காலத்தில் இருந்திருப்பது தெளிவாகிறது.

            பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம். பெரிய செல்வக் குடும்பத்தினர் இருவரும் தங்கள் பிள்ளைகளின் மணத்துக்கு ஏற்ற குடும்பம் என்ற நினைப்பில் இந்த மணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். கழக இலக்கியங்களில் கூறப்படுவது போல் மணமக்களுக்குக் களவு உறவு, அதாவது திருமணத்துக்கு முன்பான காதல் இருக்கவில்லை.

            ஊராருக்கு மணச் செய்தியை யானையின் மீது அமர்ந்த பெண்கள் அறிவிப்பது செல்வர்களின் திருமணத்தில் மட்டுமே நிகழத்தக்க நடைமுறை.

            ஒரு செல்வக் குடும்ப திருமண நிகழ்ச்சிகளை விரிவாகத் தருகிறார் அடிகள்.

            அவ்வழி
            முரசிலம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
            அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள் மங்கல அணியெழுந்தது
என்ற வரிகள் மங்கல அணியின் ஊர்வலத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும்.

            கோவலன் அல்லது அவனும் கண்ணகியும் அம்மண சமயத்தினர் என்பது கொலைக்களக் காதையில் மாதரி கூறியதாக வரும் சாவக நோன்பிகள் அடிகளாதலின் (வரி18) என்பதனால் புலப்படுகிறது. அப்படி இருக்க, பார்ப்பன முறைப்படி எவ்வாறு திருமணம் நிகழ்த்தினர் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. பார்ப்பன மேலாளுமை எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை அம்மணம் அன்று கைவிட்டு விட்டதா? மாசாத்துவான், மாநாய்கன் போன்ற செல்வச் செழிப்புள்ளவர்கள் சமணத்தை ஒரு கால வண்ண(Fashion)மாகக் கடைப்பிடித்தார்களா, குமுகத்தில் புதுமையானது, உயர்வானது என்று கருதப்படும் அனைத்தையும் அச் செல்வர்கள் தங்கள் வயமாக்கிக் கொண்டனரா என்பது ஒரு கேள்வி.

            எழுத்தாளர் இராசம் கிருட்டினன் தினமணி கதிரில் மண்ணில் பதிந்த அடிகள் என்ற தலைப்பில் மணியம்மை என்ற பார்ப்பனப் பெண்ணின் வரலாற்றை எழுதினார். அதில், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஓர் அரங்கத்தில் கூடியிருந்த மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண்கள் உடுத்தியிருந்த பட்டுச் சேலைகளில் சோவியத் உருசியாவின் கொடி சரிகையில் நெய்யப்பட்டிருந்தது என்ற சுவையான செய்தி பதியப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து மணியம்மை எரிச்சலுற்றதாகக் கூறப்பட்டிருந்தது. அதாவது மேட்டுக்குடியினரிடையில் பொதுமை அப்போது காலவண்ணமாக இருந்திருக்கிறது. இன்றும்தான்!
           
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட என்ற வரி மாமுது பார்ப்பானாகிய பிரமன் வகுத்த வழியை மாமுது பார்ப்பானாகிய புரோகிதன் காட்டிட என்று பொருள் கொள்வதே பொருத்தமானது. இந்தத் திருமண முறையை பிரசாபத்தியமென்று நச்சினார்ச்கினியர் கூறியுள்ளதைக் காட்டுகிறார் வேங்கடசாமியார்.

            பிரமனைப் பிரசாபதி என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர். பிரசாபதி என்றால் குடிமக்களின் தலைவன் என்பது பொருள். பிரசை + பதி   பிரசாபதி பிரசாபத்தியம்.

            பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காரணம் என்ப(தொல். பொருள்.143) என்பதில் வரும் ஐயர் மூத்தோர் ஆக வேண்டும். இவர் பெரும்பாலும் கூட்டுக் குடும்பத் தலைவரான அனைவருக்கும் மூத்தவராக இருந்திருக்க வேண்டும். பிரசாபதி என்பது கூட அத்தகைய கூட்டுக்குடும்பத் தலைவரைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம்.

            நச்சினார்க்கினியர் கூறியபடி பிரமன் என்பவனையும் பிரசாபதி என்பவனையும் ஒன்றாகக் கொள்ள முடியவில்லை. எண்வகை மணங்களுள் முதலில் வருவது பிரமம். அடுத்து வருவது பிரசாபத்தியம். எனவே அவை வெவ்வேறு மணமுறைகள்.

1.       பிரமம்: என்பதை பார்ப்பன மணமுறை என்று கொள்வதுதான் சரி. அதாவது பிற எந்த மக்கள் குழுவையும் விட ஆண் மேலாளுமையை முழுமையாகக் கடைப்பிடிக்கும் குழுவாக அவர்கள் வளர்ந்ததன் அடையாளமாக அல்லது அதை உயர்வான நடைமுறையாகக் காட்டி அதைக் கடைப்பிடிப்பது, அதாவது பிரம்மச்சாரிக்கு  அணிமணிகளுடன் பெண்ணைத்  தானமாகக் கொடுப்பது என்பதன் பொருள், பெண் கொண்டுவரும் அணிமணிகளாகிய அசையும் சொத்துகள் முற்றிலும் கணவனுக்கே உரியது என்பதாகும். ஆனால் அது இன்று வரை நடைமுறையில் இல்லை. பெண் ஏதாவது காரணமாக கணவனைப் பிரிந்து வெளியேறினால் அவளது அணிமணிகளையும் அவள் கொண்டுவந்த தளவாடங்களையும் அவளுக்குத் திருப்பித் தரும் பழக்கம் இன்றும் பார்ப்பனர்களிடையில் நிலவுகிது. எனவே பிரமம் எனும் இந்த மணமுறை வெறும் கற்பனை என்றே கொள்ளவேண்டியுள்ளது.

2   பிரசாபத்தியம்: என்பதற்கு விளக்கம், மணமகன் கோத்திரத்தார் வேண்டிட இரு முது குரவரும் இயைந்து கொடுப்பது. இதில் மணம் நடத்தி வைக்கும் பார்ப்பனனைப் பற்றிய குறிப்பு இல்லை. இதுதான் இடையில் புகுந்ததாக இருக்க வேண்டும், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும். இங்கே இரு முது குரவரும் நாம் மேலே குறிப்பிட்டுள்ளவாறு பிரசாபதிகளாக, குடும்பத் தலைவர்களாக, ஐயர்களாகச் செயற்படுவதைக் காணலாம். ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று தொல்காப்பியம் கூறும் திருமணம் ஆகிய கரணம் என்பதன் மூலவடிவம் இதுவென்றே கொள்ள வேண்டும்.
     
3      ஆரிடம்: ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொடுப்பது.  இந்த முறைதான் பின்னர் பரியம் என்ற பெயரில் பணமாகக் கொடுப்பதாகத் திரிந்துள்ளது. இது ஆயர்களிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும். மாடு செல்வம் என்ற பொருளில் பண்டமாற்று ஊடகமாக மாறிய போது அனைவரும் மாட்டை வாங்கிப் பரியமாக வழங்கியிருப்பர். 

4 தெய்வம்: வேள்வி ஆசிரியர்களில் ஒருவருக்கு வேள்வித் தீ முன்னர் கொடுப்பது. இங்கு வேள்வி ஆசிரியர் என்பவர் வேள்வி நடத்தும் பூசகர் என்ற வகையில் பெண்களை அவர்களுக்குக் கொடுப்பது. வேள்விகள் மிகச் செல்வாக்குடன் இருந்த காலத்தில் வழிபாடே தீ வழிபாடாகத்தான் இருந்திருக்கும். தீயில் மனிதர்களைப் பலியிடும் வழக்கத்தின் எச்சமாகத் தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் வணங்கப்படும் சுடலை மாடன்[1]வழிபாட்டில் தெய்வமாடி சுடலைக்குச் சென்று எரியும் பிணத்தை எடுத்து உண்பது திகழ்கிறது. தெய்வக் கதையைக் கூறும்போது பெண் உருத்தாங்கி ஆடும் கணியான்கள் என்ற ஆட்டக்காரர்கள் இந்தப் பெண் பூசாரியர்களின் எச்சமாக இருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பிற்காலத்தில் வேள்வியில் நரபலி நின்று பூசகம் ஆண்கள் கைகளுக்கு வந்த பின் நெருப்பு ஓம்புவதற்குப் பெண்களை விடுவதன் ஓர் எச்சமாக வேள்வி ஆசிரியனுக்குப் பெண்களைக் கொடுக்க அவர்கள் கோயில்களில் பெண் பூசகர்களாகவும் கணிகையராகவும் செயற்பட்டிருப்பர். இது பின்னாட்களில் கோயில்களுக்குப் பெண்களைப் பொட்டுக்கட்டி விடுவதாகத் திரிந்திருக்கலாம். பிற்காலத்தில் கோயில்களுக்குப் பெண்களைக் கொடுக்கும் வழக்கம், பல்வேறு வடிவங்களில் இந்தத் தெய்வ மணத்திலிருந்து திரிந்து வந்திருக்க வேண்டும். தெய்வம் என்ற சொல், தெய்வத்துக்குப் பகரமாகப் பூசாரியைச் சுட்டுகிறது.

5   காந்தருவம்: என்பது ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம். நீடித்த திருமண உறவாக இன்றி அப்போது மட்டும் கூடிப் பிரிதல். உண்மையில் இது குறிஞ்சித் திணைக்கு உரிய கூடலாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. குறிஞ்சித் திணையில் குக்குல வாழ்முறையின் ஒரு கட்டத்தில், ஒரு குக்குலத்தின் கிளைகள் தனித்தனியாக வாழ்கின்றன; கிளையின் உள்ளே மணவுறவு தடை செய்யப்பட்டுள்ளது. அந்தத் கிளைக்கு மண உறவுள்ள இன்னொரு கிளையின் அல்லது கிளைகளின் உறுப்பினர்களுடன்தான் உறவுகொள்ள முடியும். இத்தகைய புணர்முறையுள்ள இரண்டு கிளைகளின் ஆண் - பெண் உறுப்பினர்கள் தற்செயலாக சந்தித்துக் கூடிப் பிரிகின்றனர். குழந்தைகள் தாயின் கிளைக்கு உரியவை. அவர்கள் தற்செயலாக மீண்டும் சந்தித்தாலன்றி அவர்களின் உறவு தொடராது. நிலையான மண உறவு என்ற கருத்துருவே தோன்றாத நிலை இது.

  காந்தருவம் என்பதோ மிகக் கடுமையான ஆண் மேலாளுமைக் கட்டங்களை எல்லாம் தாண்டி, நிலையான மண உறவு என்பது இருவர் உரிமைகளுக்கும் தடங்கல் என்ற எண்ணம் வலுத்து சேர்ந்து வாழ்தல் என்பது கூட இன்றி நினைத்தால் கூடிப் பிரிவது என்ற நிலையாகும். காந்தருவர் என்போரை இயக்கர்கள் என்றும் யாழோர் என்றும் கூறுவர். இவர்கள் வானூர்திகளில் இயங்கியவர்கள் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக அவர்களது ஆயிரம் நரம்புகளை (சுரங்களை)க் கொண்ட பேரியாழ் குறப்பிடப்படுகிறது. இன்றைய வல்லரசு நாடுகளில் தொடங்கியுள்ள, தன் பாலரோடு திருமணம் என்பதன் அடுத்த கட்ட நிலை இது எனலாம். வரலாறு தன்னை மீட்கிறது என்பதற்கும் அந்த மீட்பு முழுமையானதல்ல என்பதற்கும் இது ஒரு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு. குறிஞ்சி நில மண முறை மீண்டுள்ளது. ஆனால் அதற்குரிய பருப்பொருட் சூழல்கள் நேர் எதிரானவை.

      இன்று வல்லரசு நாடுகளில் சிதைந்து போன குடும்பம் என்ற அமைப்பை மீளக் கட்டுவது குறித்து பேசத் தொடங்கியவுடன், ஆகா! பார்! பார்! மேலையர்கள் நம் பண்பாட்டுப் பெருமையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்; எனவே நம் சாதி வருணங்கள் என்ற அமைப்புகளை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்வதற்கு இது அறிகுறி என்று மயிர் சிலிர்க்கிறார்கள் சில படித்த மே(ல்)தாவிகள். அவர்களுக்கு ஒன்று, அங்கே புதிதாக உருவாகும் குடும்பம் மிஞ்சிப் போனால் கணவன் - மனைவி, இன்னும் சரியாகச் சொன்னால் மனைவி - கணவன் சமநிலை அல்லது மனைவியின் மேலாளுமை என்பதாகத்தான் இருக்கும். இன்றைய தன்பால் உறவுகள், ஓர் ஆணிடம் தன் உரிமைகளை குடும்பம் என்ற நிறுவனம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இழக்க அங்குள்ள பெண் ஆயத்தமாயில்லை - ஒரு பெண்ணுக்குச் சம உரிமை கொடுக்க ஓர் ஆண் அணியமாயில்லை என்ற நிலைமையின் விளைவுதான்.  இதில் தீர்வு நாம் மேலே கூறியதாகத்தான் இருக்க முடியும்.

      முன்பு பெண்களின் மேலாளுமையை அவர்கள் எதிர்த்து நடத்திய கமுக்கக் கழகங்கள் (Secrct Societies) என்ற போராட்ட உத்தியில் ஆண் தன் மேலாளுமையை நிறுவியதற்கு எதிர்த்திசையில் இது அமையும்.

                  இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
                  அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கின்
                  காமக் கூட்டம் காணுங் காலை
                  மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
                  துறையமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.
                                                                  தொல்: பொருள் 89.

 இதில் மறையோர் தேஎம் என்பதற்கு மறையோர் ஆகிய அந்தணரது நூல் என்று பொருள் கூறுகிறது இளம்பூரணம் (தொல்காப்பியம், பொருளதிகாரம் இளம்பூரணம், கழக வெளியீடு எண் 629, 1977 பக். 159). “துறையமை நல்யாழ்த் துணைமையோராவார் கந்திருவர்

அறன்நிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம அரும்பொருள் வினையே
இராக்கதம் பேய் நிலை என்றிக் கூறிய
மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன்
பொருண்மை என்மனார் புலமை யோரே
அதே நூல் மேற்கோள் பக். 160.

6 அசுரமாவது: வில்லேற்றினானாதல் திரிபன்றி எய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தார்க்குக் கொடுத்தல். அதாவது, இராமனைப் போன்று வில்லை வளைத்தல் அல்லது அருச்சுனன், சீவகன் போன்று சுழலும் பன்றி உருவை அம்பால் எய்தல், கண்ணனைப் போன்று ஏறுதழுவல் போன்ற வீரச் செயல்களைச் செய்து அல்லது பந்தயங்களில் வென்று மணம் செய்தல். இந்த இலக்கணப்படி இந்தியப் பெரும் காப்பியங்களிலும் பெரும் மறவனப்புகளிலும் தொன்மங்களிலும் இடம் பெறும் பெரும்பாலான கடவுள்கள் அல்லது பெருமக்களின் திருமணங்கள் அசுரம் என்ற வகைப்பாட்டினுள் வருபவையே. அதில் தமிழர்களும் விலக்கல்ல. ஏறு தழுவல், தமிழ்க் கண்ணனுக்கே உரியது என்பதும் சீவகன் தமிழ்க் காப்பியமாகிய சீவக சிந்தாமணியின் கதைத் தலைவன் என்பதும் நினைத்துப் பார்க்கத் தக்கவை.

கிரேக்கக் காப்பியமான ஒடிசியில் அதன் தலைவனான உலீசிசு என்பவன் திராய்ப் போரிலிருந்து திரும்பியவன் நெடுநாட்களாகத் தன் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அந் நிலையில்  அவன் மனைவியை மணந்துகொள்ள விரும்பிய பலர் அவளை நெருக்கினார்கள். அப்போது மேலே சூழலும் பன்றி வடிவத்தைக் கீழே கண்ணாடியில் பார்த்து எய்யும் பந்தயம் முன்னிடப்படுகிறது. மாற்று வடிவத்திலிருந்த உலீசிசு பந்தயத்தில் வென்று மனைவியை அடைகிறான். நளன் கதை, மகாபாரதம், சீவக சிந்தாமணி ஆகியவற்றுடன் இதற்குள்ள ஒற்றுமை வியப்பளிக்கிறது. நளாயினிக்கு மறுமணம் ஏற்பாடாகி இருந்தது குறித்து தமிழ்ப் பண்பாட்டு ஆர்வலர்கள் என்ன நினைக்கிறார்கள்?

7         இராக்கதமாவது தலைமகள் தன்னிலும் தமரிலும் பெறாது வலிதிற் கொள்வது.

8         பைசாசமாவது களித்தார் (கள்ளுண்டார்) மாட்டும் துயின்றார் மாட்டும் கூடுதல்.

எண்வகை மணங்களுக்கு நாம் மேலே கூறிய விளக்கங்கள் தொல். பொருள். நூற்பா 89க்கு இளம்பூரணர் தந்துள்ளதன் அடிப்படையில் ஆனது. ஆனால் அபிதான சிந்தாமணியும் தமிழ்மொழி அகராதியும் இதிலிருந்து வேறுபட்ட விளக்கங்களைத் தந்துள்ளன. குறிப்பாக, அபிதான சிந்தாமணி அசுர மணத்தை விளக்காமல் விட்டுவிடுகிறது (பார்க்க மணம்) பெண்ணுக்குப் பொன் பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன் வேண்டுவன கொடுத்துக் கொள்வது அசுர மணம் என்கிறது தமிழ் மொழி அகராதி (தொகையகராதி மணம் பார்க்க). கழகத்தமிழ் அகராதி சரியாகச் சொல்கிறது: அசுரம்  வீரச்செயல் புரிந்து பெண் கொள்ளல். நம் தெய்வங்களும் காவியத் தலைவர்களும் அசுர மணம் புரிந்துள்ளனர் என்பதைச் சொல்ல அபிதான சிந்தாமணியும் தமிழ்மொழி அகராதியும் கூசி மறைந்துள்ளன என்பது தெளிவு.
*                      *                       *
இதனைப் பிரசாபத்தியம் என்பர் அடியார்க்குநல்லார் எனச் சுட்டிக்காட்டியுள்ள வேங்கடசாமியார், இது தமிழில் ஒப்பு என்று கூறப்படும். ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மாறாது கொடுப்பது என்பர் என்கிறார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்பதும் இதுவும் ஒரே தன்மையை உடையவையே.  குறிஞ்சித் திணையில் கிளையை அறிய அணிமணிகள், ஒப்பனைகள் போன்றவை பயன்பட்டன. பிற்காலத்தில் இவை உசாவல் மூலம் அறியப்பட்டன. குக்குல வாழ்வில் பூ, இலை, அணிகள் போன்ற அடையாளங்களை வைத்துக் குறிஞ்சி நிலமக்கள் தாம் ஒருவருக்கொருவர் புணர்ச்சிக்கு ஒத்த குடிகள்தாம் என்று தெளிந்து கூடினார். இன்று கிளை, கூட்டம், இல்லம், பட்டறை போன்ற எண்ணற்ற பெயர்களில் திருமணங்களில் இந்த ஒப்பு பார்க்கப்படுகிறது.

இனி அடிகள் தரும் செய்தித் தொகுப்புகளைப் பார்ப்போம். விரையினர். விரை பஞ்ச விரைகள்: கோட்டம்,  துருக்கம், தகரம், அகில், சந்தனம்.
கோட்டம் =  குராமரம் (குரவம்): ஒரு மருந்து, அது பஞ்சவிரையிலொன்று
      குரா:             குரவு மரம், நறுமணம்.
      குரவு:            குராமரம், நறுமணம்.
      குரவம்:         ஒரு மரம், கோட்டம், நறுமணம், பேரீந்து
      துருக்கம்:       கத்தூரி, கத்தூரி மிருகம், குங்கும மரம், பஞ்ச விரையினொன்று.
      தகரம்:           தகர மரம், அது பஞ்சவிரையிலொன்று, மயிர்ச் சாந்து, வாசனைப் பண்டம்              
      தகர்:               பலாசு
      பலாசு:            பலாசம்
      பலாசம்:          புன் முருக்கு, முருக்கு
      முருக்கு:          எலுமிச்சை, கிஞ்சுக மரம்
      புன் முருக்கு:   (இல்லை),
      கிஞ்சுகம்:        பலாசு, முண்முருக்கு.

            இந்த மரங்களைப் பற்றி அகராதிகள் தரும் செய்திகள் தெளிவாக இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவக் கல்லூரிகள் முதலியவை இத் துறையில் ஆய்வுகள் செய்து அதன் அடிப்படையில் இலக்கிய உரைகளையும் அகராதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

            திருமணத்தில் பங்குபெறும் பெண்களது விளக்கத்தைத் தொகுத்தால் கிடைப்பது விளங்குமேனியர், சிந்த நோக்கினர், தயங்கு கோதையர், ஏந்திள முலையினர், முகிழ்த்த மூரலர், போதோடு விரி கூந்தல் பொலன் நறுங்கொடியன்னார் என்பது கிடைக்கிறது. மணம் வீசுகின்ற தங்கத்தால் ஆகிய கொடியைப் போன்றவர்கள் என்ற விரித்துரை மனதைச் சொக்கவைக்கிறது.

            இதில் போதொடு விரிகூந்தல் என்ற சொற்றொடரில் விரிந்த கூந்தல் பின்னர் நிகழ இருக்கும் அவலத்தின் குறிப்பை உள்ளுறையாகக் கொண்டது என்று பாவலர்மணி ஆ.பழநி சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு என்ற தன் ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இளங்கோவடிகள் தன் நூல் முழுவதும் கோலவன் இறப்பு பற்றிய அவலச் செய்தியால் நிறைத்து அதை ஓர் அவலக் காப்பியமாக வடித்துள்ளார் என்று காட்ட முயன்றிருக்கிறார் அவர். சிலப்பதிகாரத்தின் எண்சுவைச் சிறப்பை மறுக்கிறார். எடுத்துக்காட்டாக,

                        காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
                        தீதறு கெனஏத்தி 

என்பதனையும் காதலர் பிரிவதற்கும் கவவுக்கை நெகிழ்வதற்கும் முன்குறிப்பு என்கிறார். ஒருவர் நீடு வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவ்வாறு வாழ்த்தப்பட்டவன் விரைவில் இறந்து விடுவான் என்பதன் முன்குறிப்பு என்று கூறுவார் போலும்!

            அன்றைய தமிழகச் சூழலில் பரத்தையர் பிரிவு செல்வம் படைத்தவர்களிடையில் பரவலாக இருந்த நிலையில் இந்த வாழ்த்தைப் பொருத்திப் பார்த்தால் இதில் அவலச் சுவைக்கு இடமில்லை. யாரும் எதிர்பார்க்கத்தக்க பொதுவான ஒன்றாகவே கொள்ள வேண்டியுள்ளது.

            அது போலவே பெண்கள் அதிகாலையில் குளித்துக் கூந்தலை உலர்த்தி அது முழுமையாக உலராத நிலையில் சிறு பின்னல் இட்டு விரிந்த கூந்தலைப் பிணித்து அதில் மலர்களைச் சூடியிருப்பது கூந்தல் ஒப்பனைகளில் ஒன்று. ஐம்பால் எனும் கூந்தல் முடிப்பின் 5 வகைகளில் ஒன்றாக இதைக் கொள்ள வேண்டும். தலை விரி கோலம் என்பதும் இதுவும் வெவ்வேறானவை. பிற நான்கும் அவை வருமிடங்களில் சுட்டப்படும். மலர் மொக்குகளுக்கும் கூந்தல் ஒப்பனைக்கும் பொதுவான விரிந்த தன்மையை அதாவது விரிந்த கூந்தலிலே விரிந்த, விரிகின்ற அல்லது விரியும் மொக்குகள் என்று அடிகள் நயமாகப் பொருத்திக் கூறும் சொற்சுவைதான் இதில் தூக்கலாக இடம்பெற்றுள்ளது. குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத் தூத (அந்திமாலைச் சிறப்புச்செய் காதை வரி. 15-16) என்ற அதே உத்தி.

            சிலப்பதிகாரத்தின் முதல் காதையாகிய மங்கல வாழ்த்துப் பாடல், சோழ மன்னனைப் போற்றுதலில் தொடங்கி அவனை வாழ்த்தி முடிகின்றது. பலர் கூடி நின்று நிகழ்த்தும் ஒரு விழா ஆகையால் இறுதியில் அரசனை வாழ்த்தும் மரபு கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

            சாந்து என்ற சொல்லுக்கு சந்தனக் குழம்பு என்பதுடன் வாசனைப் பொடி என்று பொருள் அகராதிகளில் தரப்பட்டுள்ளது. பொடி பற்றி பின்னால் வருவதால் இது சந்தனத்தையே குறிக்கும்.

            இங்கு சுண்ணம் என்பது இன்று நாம் முகத்துக்குப் பூசும் முகப்பொடியாகிய டால்கம் பவுடரே (Talcum powder). 1972 ஆம் ஆண்டின் Chambers Twentieth Century Dictionary talc என்ற சொல்லுக்கு n.a very soft, pliable greasy silvery white foliated or compact mineral acid magnesium silicate commercially often muscovite mica என்றும் talcum - talc - schist schistose rock composed essentially of talc with necessary minerals என்று பொருள் தருகிறது. இது சுண்ணாம்புக்கல் போன்ற வெள்ளைக் கல்லை இடித்துப் பெறப்படுவதால் சுண்ணம் என்று நம் பண்டையர்கள் அழைத்துள்ளனர்.

            மணமக்களை வாழ்த்திய பெண்களைப் பற்றிய விளக்கம் அவர்கள் ஏந்தி வந்த பொருட்களோடும்  அவர்களது செயல்களோடும் கலந்து தந்திருக்கும் உத்தி ஒப்பற்ற  ஒன்றாகும்.

வெண்குடையும், முரசு மத்தள வகைகளும் அரசனுக்கு எழுவது போல் சங்கங்களும் எழுந்தன. ஊரினுள் அல்லது தெருவினுள் அல்லது மண்டபத்துள்  மங்கல அணி எழுந்தது. இது தாலியா என்ற குறிப்பு இல்லை. நீலநிற மேற்கட்டு அமைந்த முத்துப்பந்தலில் திங்கள் உரோகிணியைத் சேர்ந்த நேரத்தில் பார்ப்பன முறையில் தீவலம் செய்தனன்.

            நறுமணப் பொருட்களையும் மலர்களையும் சந்தனத்தையும், நறும்புகையையும், சுண்ணத்தையும் விளக்குகளையும் கலன்களையும் முளைப்பாலிகைகளையும் கொண்டு உரையாடியும் பாடியும் காதலரைப் பிரியாமல் பற்றிய கை நெகிழாமல் தீதறுக என்று சிறு மலர்களைத் தூவி மங்கல அமளி மீது ஏற்றி சோழனை வாழ்த்திச் சென்றனர். இங்கு கழக இலக்கியங்களில் காணப்படும் திருமண முறைகளுக்கு மாறாக, பார்ப்பனர் மறைவழியில் நடத்தும் மணவிழா காட்டப்படுகிறது. தாலி இருந்ததற்கான சான்று இல்லை.


[1] இந்தத் தெய்வ வழிபாடு வட மாவட்டங்களில் மறைந்து மாசானம் என்று மக்களுக்குப் பெயர் சூட்டுவது அதன் எச்சமாக இன்று நிலவுகிறது.

0 மறுமொழிகள்: