4.7.15

தேசியப் பொருளியலைக் காப்பதில் விழிப்புடனும் உறுதியுடனும் இருப்போம்.

இந்திய பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டரசு அண்மையில் குறுந்தொழில்கள் - குடிசைத் தொழில்களுக்கு இருந்த சிறப்புச் சலுகைகளைக் விலக்கிக்கொண்டு பெருந்தொழில்களுடன் போட்டியிட்டு நிலைக்க முடியாத நெருக்கடியை அத் தொழில்கள் சார்ந்த முனைவோருக்கும் தொழிலாளர்களுக்கும் அவற்றோடு தொடர்புடைய பல்வேறு துறை சார்ந்தோருக்கும் உருவாக்கியுள்ளது. இத்தகைய 200 தொழில்களில் 180 தொழில்களுக்கு இச் சலுகைகளை ஏற்கனவே விலக்கி எஞ்சியிருந்த 20 தொழில்களில் இப்போது கைவைத்துள்ளது. தீப்பெட்டி, பட்டாசு போன்ற தென் தமிழ்நாட்டைச் சார்ந்த தொழில்கள் இப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் வளங்குன்றிய இப் பகுதி மக்களின் வாழ்வின் அடித்தளம் அழிந்துபோகும் என்ற அச்சம் அம் மக்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது பற்றிய சில செய்திகளை தமிழக மக்கள் முன் வைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.

தமிழக மக்களின் தொழில் முனைவுகளை அழிப்பது என்பது வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டத் தொடங்கியதுமே காந்தி – ஆங்கிலர் கூட்டுத் திட்டமாகிவிட்டது. “விடுதலை”க்கு முன் சென்னை மாகாணத்தில் அமைந்த பேரவைக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தமிழக மக்களின் தொழில் முனைவு ஒழிப்பு நடவடிக்கைகளை அண்ணாத்துரை தன் பணத்தோட்டம் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்(பின்னாளில் அவர் மக்களைத் திசை திருப்பியது வேறு கதை, அவர் நாணயமாகச் செயற்பட்டிருந்தாராயின் இன்று இத்தகைய ஆய்வுரை ஒன்றை நாம் எழுத வேண்டியிருந்திருக்காது).

இந்தப் பின்னணியில் 1980களின் தொடக்க ஆண்டுகளில் இராசத்தான், மத்தியப் பிரதேச அமைச்சர்கள் சிலர் தமிழக சிவகாசிப் பகுதிகளில் நடைபெறும் தொழில்களைப் “பார்வையிட” வந்தார்கள். வந்து திரும்பியவர்கள் சிவகாசியிலும் சுற்றிலும் குழந்தைகளைத் தொழிலகங்களில் கொடுமைப்படுத்துவதாகக் கூக்குரல் எழுப்பினர். இந்திய ஆட்சியாளர்களிடமும் வல்லரசிய நாடுகளிலிருந்தும் நன்கொடைகள் என்ற பெயரில் கூலி வாங்கி வளவாழ்வு நடத்தும் “தன்னார்வத் தொண்டு” நிறுவனங்கள் என்ற பொருந்தாப் பெயர் கொண்ட கூட்டம் இது பற்றிப் பெருங்கூச்சல் இட்டது. இவற்றைச் சாக்காக வைத்து இந்திய பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டரசு 1986இல் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தை இயற்றியது. இதன் அடிப்படையில் ஓர் உணவு விடுதி உரிமையாளருக்கு அவரிடம் வேலை பார்த்த “குழந்தை”த் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்விக்காகவும் மறுவாழ்வுக்காகவும் என்ற பெயரில் தலைக்கு 20,000 உரூவா தண்டம் விதித்தது தமிழக நய மன்றம் ஒன்று. ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பப்படி குழந்தை என்பதற்கான அகவை வரம்பை வரையறுப்பார்கள், அதற்கேற்ப அக் “குழந்தை”களின் செயல்திறன்களை முடக்கிப்போட்டு எதற்கும் உதவாத ஏட்டுக் கல்வி வழங்கத் தம்மால் இயலவில்லை என்றால் சும்மா ஊர் சுத்த விட்டுவிட வேண்டும், அப்படித்தானே. வேலைக்கும் போக முடியாத சட்டப் பின்னணியில் இவர்களுக்குச் சோறு போடுவது யார்? இக் குமுகத்தில் சிறுவர்களை வேலைக்கு விட்டுத்தான் உயிர் வாழ வேண்டியிருக்கிறதென்றால், அவ்வாறு சிறுவர்கள் வேலைக்குச் சென்று பிழைப்பது தவறு என்று ஆட்சியாளர்கள் கருதுவார்களென்றால் அதற்கு இந்த ஆட்சியாளர்கள்தாம் பொறுப்பே அன்றி பெற்றோரோ தம் வயிற்றுப்பாட்டுக்காக உழைக்கும் சிறுவர்களோ அவர்களுக்கு வேலை வழங்கிப் பாதுகாக்கும் உணவு விடுதி போன்ற சிறு நிறுவனங்களை நடத்துவோரோ அல்லர். அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்சா அபியான்) என்ற பெயரில் குடிமக்களின் வரிப்பணத்தில் பல பத்தாயிரம் கோடிகளை ஒதுக்கி அதனை ஆசிரியர்களுக்குப் பயிற்சி என்ற பெயரில் போக்குவரத்துக்கும் சாப்பாட்டுக்குமாகக் கரியாக்கியது போக எஞ்சியதை தேவையான இடங்கள் என்று பார்க்காமல் எங்கு இடம் இருக்கிறதோ அங்கு தேவையில்லாவிட்டாலும் புதிய கட்டடங்களைக் கட்டிக் காசு பார்த்தனர். “குழந்தை”த் தொழிலாளர்களுக்குக் கல்விக்கென்று பணம் ஒதுக்கியிருந்தாலும் அதைப் பயன்படுத்தவில்லை. அதைச் செய்திருப்பார்களென்றால் குழந்தைத் தொழிலாளர் தடை தேவை இருக்காது, ஏனென்றால் நம் நாட்டின் உடனடி தேவை உழைப்பு சார்ந்த கல்வி. அதற்கான கட்டமைப்பை உருவாக்க வக்கற்ற திமிர் பிடித்த, தோல் தடித்துப் போன நம் அதிகாரிகளும் கொள்ளையடிப்பது தவிர வேறெதுவும் மண்டையில் ஏறாத நம் அரசியல் புள்ளிகளும் இருக்கும் கட்டமைப்புகள் பயன்படுவதையாவது ஊக்குவதற்கு மாறாக அவை பயன்படுவதைத் தடுக்கவே செய்துள்ளனர். காலங்காலமாக அடித்தள மக்கள் கல்வி பெறுவதைத் தடுத்துவந்த கூட்டம் வேறு என்ன செய்யும்?

இந்தச் சட்டத்தின் பின்னர் குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கப்பட்ட அகவையைத் தாண்டாதவர்கள் என அதிகாரிகள் குறிப்பிடுவோரை வேலைக்கு வைத்திருப்போர் தண்டம் செலுத்த வேண்டி வந்தது. பெண்கள், அதாவது இவர்கள் மொழியில் பெண் குழந்தைகள் இவர்களுக்காகவே தங்கள் அகவைக்குப் பொருந்தா வகையில் தாவணி அணிய வேண்டியிருந்தது. கெடுபிடிகள் தாங்க முடியாத போது, தொழிலகங்களுக்கு வெளியே செய்ய முடியாத பணிகள், எடுத்துக்காட்டாக, பட்டாசுத் தொழிலில் மருந்துக் கலவைகள் இடித்துச் சேர்ப்பது போன்றவை தவிர்த்த பிற பணிகள் தொழிலாளர்களின் வீடுகளில் செய்யப்பட்டன. இதன் மூலம் விரிந்த பரப்பும் காற்றோட்டமும் உள்ள கொட்டகைகளுக்குள் வீடுகளில் கிடைக்காத கழிவறை போன்ற வசதிகளுடன் வேலை செய்த வாய்ப்பு அவ் விளம் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. பல்வேறு வசதிகளும் அவற்றுக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களும் கொண்ட தொழிற்சாலைகளாக அங்கிருந்த தொழிலகங்கள் வளர்ந்து உருவாகும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. அத் தொழில் கட்டமைப்பு உடைந்து சிதைந்து அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு வழியற்ற அன்றாடங்காய்ச்சிகளின் குடிசைகளுக்குள் பதுங்கி ஒடுங்க வேண்டியதாயிற்று. கள்ளச்சாராயம் காய்ச்சுவது போல் அரசுக்குத் தெரியாமல் தொழில் நடத்த வேண்டிய அவலம் உருவாகி விட்டது. உரிய கண்காணிப்பு இல்லாததால் அடிக்கடி ஏதங்கள்(விபத்துகள்) ஏற்பட்டு அப்பாவித் தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாகச் செத்துவிழும் கொடிய நிலை உருவாகியிருக்கிறது இன்று.

இத்தகைய ஒரு கொடுஞ்சட்டம் நிறைவேற்றப்பட்டு செயலுக்கு வந்த போது அதனால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஏன் அதை எதிர்க்கவில்லை என்ற ஞாயமான கேள்வி எழுவது இயற்கை. அங்குதான் வருகிறார்கள் நம் “தன்னார்வத் தொண்டர்கள்”. உள்நாட்டு அரசும் வல்லரசு நாடுகளின் தொழில்துறைப் பூதங்களும் ஒன்றிய நாடுகளவையின் பல்வேறு கிளை அமைப்புகளும் அள்ளி வீசும் கணிசமான எச்சில் காசில் உயர்தர உடைகளும் நுனிநாக்கு ஆங்கிலமுமாகத் திரியும் ஒரு கூட்டம் குமுக ஆர்வத்துக்கும் மனித நேயத்துக்கும் தாங்கள்தான் உடமையாளர்கள் என்பது போல் இங்கு பெரும் பரப்பல் கூச்சல் இடுவார்கள். ஓய்வு பெற்ற உயர் பதவியாளர்களும் இவர்களில் கணிசமானோர் உண்டு. இதற்குப் பக்க மேளம் கொட்டுவது தங்கள் மேதாவித்தனத்துக்கு அடையாளம் என்று படித்த ஒரு கூட்டம் கிடைத்த வாய்ப்பிலெல்லாம் மேடேயேறிக் கூக்குரல் இடும். இதைப் பார்த்து இந்தத் தொழில்களை நடத்தும் குறுந்தொழில், குடிசைத்தொழில் முனைவோரும் வயிற்றுப்பாட்டுக்கு முழுக் குடும்பமும் படாத பாடுபடும் அன்றாடங்காய்ச்சிக் கூட்டமும் கூனிக் குறுகி யார் என்ன கொடுமை செய்தாலும் மூச்சுவிடவும் அஞ்சி திருடனைத் தேள் கொட்டிய ஒரு மனநிலையில் ஒடுங்கிவிடுகிறார்கள். பாட்டாளிகளுக்காகவே பிறந்து அவர்களுக்காகவே உயிர்வாழ மூச்சு விட்டுக்கொண்டிருப்பதாகப் பசப்பித் திரியும் பொதுமைக் கட்சித் “தோழர்கள்” பட்டினிக்குள் வீழ்த்தப்படும் இரக்கத்துக்குரிய இந்த ஏழைகளுக்கு உதவியாக ஒரு சொல் கூடக் கூறியதில்லை.

இந்தக் கூலிப்படைக் கும்பலின் பணி அடிப்படை உண்மைகளை மறைத்து அரைகுறை உண்மைகளைக் கூறி அடி மட்டத்துத் தொழில்முனைவோரையும் அவர்களைச் சார்ந்திருக்கும் கணக்கற்ற அன்றாடங்காய்ச்சித் தொழிலாளர்களையும் குமுகத்தில் தங்கள் உண்மை நிலையையும் தம் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குற்ற உணர்வுக்கு ஆளாக்கி எதிர்த்துப் போராட வேண்டும், போராடுவதற்கான ஞாயமான காரணங்கள் உள்ளன என்ற சிந்தனையே தோன்றாமல் செய்வதாகும். எடுத்துக்காட்டாக தோல் பதனிடும் தொழிலை எடுத்துக்கொள்வோம். இங்கு பதனிடப்படும் தோலில் செய்யப்பட்ட செருப்பை நம்மில் எத்தனை பேர் அணிகிறோம்? தோலில் செய்யப்பட்ட பைகளையோ மேலாடைகளையோ நம்மில் யாராவது பயன்படுத்துகிறோமா? அனைத்தும் வெளிநாட்டு மேனா மினுக்கிகளுக்குத்தானே பயன்படுகின்றன? இவ்வாறு பதப்படுத்திய தோலையும் பிற பொருட்களையும் ஏற்றுமதி செய்து ஆதாயம் காணும் இடத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் வடக்கத்தி பனியாக்கள்தாமே! அவர்களுக்காகவே இந்திய பனியா அரசு ஏம(ரிசர்வு) வங்கி மூலம் உரூபாய் மதிப்பைத் தாழ்த்திப் பணி புரிகிறது. இது இங்கு செயல்படும் தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்களைக் கொழுக்க வைக்கும் புரவலர்களான இந்திய பனியா அரசு, வெளிநாட்டுப் பெருமுதலைகளின் நலன்களுக்காக உள்நாட்டு சிறு – குறுந்தொழில் முனைவர்களை அரக்கர்களாகக் காட்டிப் பெருங்கூச்சல் போடுவர். ஏற்றுமதியே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று உண்மைக்குப் புறம்பான ஒரு கோட்பாட்டை முன்வைத்து இந்த நாட்டின் நீர்வளத்தைச் சுரண்டி குற்றுச்சூழலை அழித்து நிலத்தைப் பாழாக்கி அளவிறந்த மின்சாரத்தை வழங்கி இந் நாட்டின் மிகப்பெரும்பான்மை மக்கள் வாழும் பரப்பை நரகமாக்கி வைத்துள்ளனர். நம் நாட்டில் வேளாண்மைக்குத் தேவைப்படும் நீரின் அளவுக்குக் குறையாமல் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்குச் செலவாகிறது. உள்நாட்டு மக்களுக்கும் அவர்கள் நுகர்வு சார்ந்த தொழில்களுக்கும் தேவைப்படுவதை விட மிகுதியாக மின்சாரம் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்குச் செலவாகிறது. இத் தொழிலகங்கள் வெளியிடும் நச்சுகள் பற்றிக் காட்டுக்கூச்சல் போடும் இவர்கள் ஏற்றுமதிக்காகவே நம் சூழலும் நீர், மின்சார வளங்களும் நிலக்கரி இரும்பு, கல், ஆற்று மணல், கடற்கரை மணல், செம்மண் என்று மீட்க முடியா கனிம வளங்களும் பறிபோகின்றன என்ற உண்மையை மறைக்கின்றனர். இதன் பின்னணியில் வல்லரசியத்தின் இன்னொரு நோக்கமும் செயல்படுகிறது. அவ்வப்போது அவர்கள் மாசு நீக்கவென்று உருவாக்கும் கருவிகளை இங்கு இறக்குமதி செய்யக் கட்டாயப் படுத்துவதாகும் அது.

நமக்குத் தேவைப்படும் அனைத்து மூலப்பொருள்களும் நம் நாட்டில் உள்ளன. எனவே ஏற்றுமதியோ இறக்குமதியோ தேவையில்லை. உள்நாட்டு, வெளிநாட்டுத் தரகர்கள் சிலருக்கே இதனால் பயனுண்டு. உள்நாட்டில் வேளாண்மை. போக்குவரத்து, கல்வி மற்றும் எண்ணற்ற கட்டமைப்புகளை உருவாக்கவும் பின்னர் அவற்றை எவ்விதத் தொய்வுமின்றிப் பராமரிக்கவும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் வற்றாத வேலைவாய்ப்புகள் உள்நாட்டில் உண்டு. எனவே ஏற்றுமதியும் இறக்குமதியும் இருந்தால்தான் நல்வாழ்வு என எண்ணாது உள்நாட்டுத் தொழில்கள் மீது இந்திய பனிய – பார்சி – வல்லச்சிய கூட்டரசு நிகழ்த்தும் தாக்குதல்களை மனத்தளர்ச்சியும் குற்றவுணர்வும் இன்றி எதிர்த்துப் போராடுவோம். இந்தக் கூலிப்படைகளின் செயற்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவோம்.

இவ்வாறு குழந்தைத் தொழிலாளர் பெயரில் இல்லாத சிக்கலைக் காட்டி வளர்ந்து வந்த தொழில்களைச் சிதைத்து அவற்றின் பொருளியல் மற்றும் கட்டமைப்பு, அதாவது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரே கூரையின் கீழ் செயல்படுவது கலைக்கப்பட்டதால் அவர்கள் ஒன்றிணைந்து போராடும் வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், இந்த இடைக்காலத்தில் அத் தொழில்துறைகளில் பெருந்தொழிற்கட்டமைப்புகளை இந்தியத் தேவைகளையும் ஏற்றுமதிக் கேட்புகளையும் நிறைவேற்றும் அளவுக்கு தாங்கள் உருவாக்கிவிட்டதால் 1986இல் நிகழ்த்தப்பட்ட முதல் தாக்குதலுக்கு அடுத்து இந்த இறுதித் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள் இந்திய பனியா – பார்சி – வல்லரசிய கூட்டரசினர். ஏற்கனவே சிறப்புரிமை பறிக்கப்பட்ட 180 தொழில்களிலும் பெரும்பாலானவை அயல் மாநிலஙங்ளைச் சார்ந்த உள்ளூர் தொழில்முனைவோருக்குரியவை என்பதும் விளங்குகிறது. இந்தச் சூழலில் இன்றும் நாம் தயங்கி, மயங்கி, கலங்கியிருந்தோமாயின் நமக்கு எதிர்காலமும் இல்லை, மீட்சிக்கு வழியும் இல்லை.

ஆட்சியாளர்களுக்கும் இந்தக் கூலிப்படைக்கும் ஏதோ முரண்பாடு இருப்பது போல் அவ்வப்போது பாய்ச்சல் காட்டுவார்கள். முன்பு இந்திரா ஆட்சிக் காலத்தில் நடந்தது போல் இப்போது மோடி ஆட்சியிலும் அத்தகைய நாடகம் நடக்கிறது, தேர்தலுக்கு முன் தன் நாட்டுக்கு வர மோடிக்கு அமெரிக்கா தடை விதித்து நடித்தது போல.

தமிழகத் தேசியப் பொருளியலுக்கு எதிராக நடக்கும் இந்தக் கருவறுப்பு இந்தியாவின் அனைத்துத் தேசிய மக்களிடையிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, மதம், எல்லை, நீர்வளப் பங்கீடு போன்ற சிக்கல்களை உருவாக்கி அத் தேசிய மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி வைத்துள்ளது ஆளும் கும்பல். எனவே சரியான திட்டமிடலுடன் அணுகினால் இந்திய மாநிலங்கள் அனைத்திலுமிருந்தும் நம் போராட்டங்களுக்குத் துணை திரட்டலாம். தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் முன்னணிப் படையாகச் செயற்படும்.

பின்குறிப்புகள்:

1. குழந்தைத் தொழிலாளர் பற்றி எமது இயக்க இதழான பொருளியல் உரிமையின் முதல் இதழில்(1997 சனவரி – பெப்ருவரி உரிமை 1 – முழக்கம் 1) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு – சில கேள்விகள் என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளோம். kumarimainthan.blogspot.com என்ற இணைய பக்கத்திலும் பார்க்கலாம்.

2. 14 அகவைக்கு எய்தியவர்கள் பெற்றோருக்கு உரிய மரபுத் தொழில்களில்(பள்ளி நேரத்துக்குப் பின்னர்) பணிபுரியலாம் என்ற ஒரு திருத்தத்தை குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தில் கொண்டு வர மோடி அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது 1950களில் ஆச்சாரியார் எனப்படும் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது கொண்டு வந்து, குலக் கல்வித் திட்டம் என்று அனைவராலும் தூற்றப்பட்டு அவரது பதவி விலகலுக்குக் காரணமான சட்டம் மறுபிறவி எடுத்து முழு இந்தியாவுக்கும் விரிவுபடுத்தப்படுவதே இது ஆகும். பள்ளிக்குப் போகும் பிள்ளைகளைப் பொறுத்தவரை இதுவென்றால் பள்ளிக்குப் போகாமல் உழைத்தால்தான் வாழ்வு என்ற நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் எமது கேள்வி.

கல்வி என்பது எழுத்தறிவு மட்டுமல்ல, பிறந்தது முதல் சாவு வரை நாம் அறிந்துகொள்ளும் அனைத்தும் கல்விதான். கல்வி நிலையங்கள் என்ற பெயரில் நம் நாட்டில் இயங்குபவை அனைத்தும் எழுத்தறிவை மட்டுமே புகட்டுகின்றன, கல்வியை அல்ல. அதனால்தான் இன்று புற்றீசல் போல் முளைத்து நிற்கும், கல்வி நிலையங்கள் எனப்படுபவற்றிலிருந்து வெளிவந்தோர் எதற்கும் தகுதியற்றோராகத் திகைத்து நிற்கின்றனர். உடலுழைப்பே இழிவு என்ற இந்தியக் குமுகியல் கோட்பாட்டிலிருந்தும் ஒட்டுண்ணி, குறிப்பாக ஆள்வினைப் பதவிகளில் இருந்து அனைவர் மீதும் அதிகாரம் செலுத்தி சாதிய ஒடுக்குமுறையாக அதை மாற்றிய பார்ப்பனரை அகற்றவென்று கல்வி முறையைப் பற்றிய எந்தக் கண்ணோட்டமும் இன்றி உருவாகி, விரிவாகி இன்று எங்கு போவதென்று தடுமாறி நிற்கிறது கல்விக் கட்டமைப்பு. எனவே அவரவர் அகவைக்கேற்றவாறு செய்தொழிலோடு இணைந்த கல்விக் கட்டமைப்பை உடனடியாக அரசு உருவாக்க வேண்டும். அதே வேளையில் சிறாரை வேலைக்கு வைத்திருக்கும் தொழிலகங்களோடு இணைந்த கல்விக் கூடங்களை உடனடியாக உருவாக்கி தரமான கல்வியை அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு அவர்களின் வேலை நேர நீட்சியையும் நேரத்தையும் வரையறுக்க வேண்டும். இரவும் பகலும் மாற்று ஆசிரியர்களை அமர்த்திக் கற்பிக்க வேண்டும். அவர்கள் பணி செய்யும் தொழில்களின் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர்களை உருவாக்கி அவர்களைக் கொண்டு தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

பொதுக் கல்வியைப் பொறுத்த வரை அகவைக்கேற்ற உடலுழைப்பு இணைந்த கல்வியை வரையறுத்து அத்தகைய உடலுழைப்பு உள்ள தொழில் கட்டமைப்புச் சூழலில் மட்டும் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும். சில நாடுகளில் கட்டாய படைப்பயிற்சி இருப்பது போல் உடலுழைப்பு சார்ந்த கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளியல் நிலை, சாதி, சமய, மொழி, இன, பால் வேறுபாடின்றி கட்டாயமாக்க வேண்டும். உடலுழைப்பை இழிவாக வகைப்படுத்திய நம் பண்டைப் பண்பாட்டுக் குற்றத்தைத் திருத்த இது ஒன்றே வழி. எல்லாப் பண்டங்களையும் போல் குடிமக்களையும் ஏற்றுமதிப் பொருளாக்கி விட்ட மனித வள ஏற்றுமதி என்ற இழிவான கோட்பாட்டுக்குத் துணையாக கல்வித்துறைக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை என்று பெயர் கொடுத்த கயமையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். பணமும் பதவியும் செல்வாக்கும் உள்ள சிலரின் பிள்ளைகளுடன் விரல் விட்டு எண்ணத்தக்க வேறு சிலரும் வெளிநாடு செல்ல, அல்லது உள்நாட்டிலிருந்து கொண்டு வெளிநாட்டினர்க்குப் பணிபுரியவும் அதை நம்பி ஏழை பாழைகளும் நிலபுலன்களை விற்றும் கடன்பட்டும் தரமற்ற கல்வி நிலையங்களில் தங்களுக்கு ஆர்வமில்லாத படிப்புகளை மேற்கொண்டு எதிர்காலத்தைப் பறிகொடுத்து நிற்பதை முடிவுக்குக் கொண்டு வருவோம். கல்வித் கூடங்கள் அனைத்தையும் அரசின் பொறுப்பிலும் அவற்றின் தரத்தையும் செயல்பாட்டையும் மக்களின் கண்காணிப்பிலும் வைப்போம்!

வருமான வரியை ஒழித்து முதலீட்டுக்கான முதல் தடையை அகற்றுவோம்!

தொழில் தொடங்க உரிமம் வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றிய அளவில் விரிவடையப் போராடுவோம்!

புதிய தொழிலகள் தொடங்கும் உரிமை உள்ளூர் முனைவோருக்கு மட்டுமே கிடைக்கப் போராடுவோம்!

ஏற்றுமதி – இறக்குமதி சார்ந்த போருளியல் கொள்கையை இந்திய அரசு கைவிடும் வரை இடைவிடாது போராடுவோம்!

குழந்தைத் தொழிலாளர் அகவை வரம்பை 12 ஆகக் குறைக்கப் போராடுவோம்!

சிறுதொழில்கள், குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்களுக்கு இப்போதுள்ள சலுகைகளும் சிறப்புரிமைகளும் தொடர விட்டுக்கொடுப்பில்லாமல் போராடுவோம்!

இந்திய நாணய மதிப்பை உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்புக்கு இணையாக படிப்படியாக உயர்த்த வேண்டிப் போராடுவோம்!


தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம், மதுரை.

தொடர்புக்கு: செல்பேசிகள் 9790652850, 9443962521, 9789304325

0 மறுமொழிகள்: