21.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 2

பதிகம்

குணவாயிற் கோட்டத் தரசு துறந்திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்

5.ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு
அமரர்க் கரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
காண விட்புலம் போயது
இறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென

10.அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்
யானறி குவன் அது பட்டதென் றுரைப்போன்
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர்

15.நாடக மேத்தும் நாடகக் கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்

20.மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் றன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப்

25.பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக்
கண்டனன் பிறனோர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்

30.கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி

35.நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய
பலர்புகழ் பத்தினி யாகும் இவளென
வினைவிளை கால மென்றீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

40.கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆரஞ1 ருற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்

45.முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின்
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபங் கட்டிய தாகலின்

50.வாரொலி கூந்தல்நின் மணமகன் றன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்ட லில்லென2க்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென

55.அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்

60.நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்
மங்கல வாழ்த்துப் பாடலும் குரவர்
மனையறம் படுத்த காதையும் நடம்நவில்

65.மங்கை மாதவி அரங்கேற்று காதையும்
அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்
இந்திர விழவூ ரெடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுந்தென

70.மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
கனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை

75.ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை
அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு

80.வழக்குரை காதையும் வஞ்சின மாலையும்
அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

85.வாழ்த்து வரந்தரு காதையொடு
இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்

90.இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.

பொழிப்புரை:

அரசியல் வாழ்வைத் துறந்து திருக்குணவாயில் என்னும் கோட்டத்தில் தங்கியிருந்த, மேற்குத் திசை அரசனாகிய செங்குட்டுவன் எனும் சேர அரசனுக்கு இளங்கோவாகிய, அதாவது தம்பியாகிய அடிகளுக்கு மலையில் வாழும் குறவரெல்லாரும் திரண்டு சென்று பொன்போலும் பூவினை உடைய வேங்கை மரத்தின் நன்மை தரும் அடர்த்தியான நிழலில் ஒரு முலையை இழந்தவளாய் வந்து நின்ற ஓர் அழகிய பெருமை மிக்க பத்தினிக்காக தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது சுற்றத்தார் நெருங்கி வந்து அவளுடைய காதலுக்குரிய கணவனை அவளுக்குக் காட்டி அவளோடு அவர்கள் எமது கண் காண விண்னை நோக்கிச் சென்றது ஓர் இறும்பூதாக இருந்தது என்பதனை நீ அறிந்தருள்க என்றனர்.

அப்போது அவன் பக்கத்தில் இருந்த இனிய தமிழ்ப் புலவனாகிய சாத்தனார் இது குறித்த செய்திகளை நான் அறிவேன் என்று கூறத் தொடங்கினான். ஆத்தி மாலையை உடைய சோழனது பழைய நகரங்களுள் நீங்காத சிறப்பை உடைய புகார் என்னும் நகரத்தில் கோவலன் என்னும் பெயருடைய ஒரு வாணிகன் அவ் வூரிலுள்ள நாடகத்தைப் போற்றிக் கொண்டாடும் நாடகப் பொதுமகளோடு கூடி ஆட்டம் போட்டதன் விளைவாக அரிய செல்வம் எல்லாம் அழிந்துபோக கண்ணகி என்ற பெயர் கொண்ட அவனது மனைவியின் இனிய ஓசையமைந்த சிலம்பை விற்க விரும்பி பாடல் பெற்ற சிறப்பை உடைய பாண்டியனது பெரும்புகழ் பெற்ற மாட மதுரையினுள் நுழைந்தான்.

சிலம்பை எடுத்துக்கொண்டு பெருமை மிக்க வாணிகர் தெருவில் சென்றவன் பொற்கொல்லன் ஒருவனைக் கண்டு அவனிடம் அதைக் காட்டினான்.

கோப்பெருந்தேவியாகிய பட்டத்து அரசிக்கு அன்றி இந்தச் சிலம்பு வேறெவருக்கும் பொருத்தமாக இருக்காது, எனவே இங்கே இரு என்று சொல்லித் தான் போய் தான் முன்பு திருடிக் கொண்ட ஒலிக்கின்ற பரல்களை உடைய சிலம்பை வேறொரு கள்வன் கையில் கண்டேன் என்று கூறினான்.

பழைய வினையின் பயன் விளையும் காலம் ஆதலால் எதனையும், மொட்டு விரிந்த வேப்ப மாலையை அணிந்த பாண்டியன் ஆராயாமல் செயலாற்றல் உள்ள காவலர்களைக் கூவி அழைத்து அந்தத் திருடனைக் கொன்று அந்தச் சிலம்பை இங்கே கொண்டு வாருங்கள் என்று கூறினான்.

அவ்வாறு கொலைப்பட்ட கோவலன் மனைவி இருப்புக் கொள்ள முடியாதவளாய் நெடிய கண்கள் நீரைச் சொரிந்து பத்தினி ஆதலால் பாண்டியன் அழிந்து போகுமாறு செய்து முத்தாரம் அணியும் மார்பில் இருக்கும் முலையின் முகத்தைத் திருகி அதில் தோன்றிய நின்று எரியும் தீயில் நிலைபெற்ற மதுரையை எரித்த பலரும் புகழும் பத்தினியாகும் இவள் என்று சாத்தனார் கூறினார்.

பழைய வினையின் பயன் விளையும் காலம் என்று கூறினீர், அவர்களுக்கு வினையின் பயன் யாது என்று இளங்கோ அடிகள் கேட்டார்.

பெருமை மிக்கவரே கேளுங்கள்! தளராத சிறப்பை உடைய பழம் பதியாகிய மதுரையில் உள்ள கொன்றை மாலை அணிந்த சடைமுடியை உடைய கடவுளாகிய சிவன் உறையும் வெள்ளி அம்பலத்தில் உள்ள பொது இடமாகிய மண்டபத்தில் நடு இரவின் இருட்டில் படுத்திருந்தேன். தாங்குவதற்கு அரிய துன்பத்தை அடைந்த வீர பத்தினியின் முன் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி கொதிக்கின்ற நெருப்பாகிய சீற்றத்தை முலையால் விளைவித்தவளே, உங்களது முற்றிய வினை இங்கு வந்து சேர்ந்தது ஆகையால் பசும் பொன்னாலான தொடிகளை அணிபவளே உன் கணவனோடு உனக்கு, குலையாத நல்ல புகழையுடைய சிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்னும் வாணிகனின் மனைவி இட்ட சாபம் இப்போது வந்து மூண்டது ஆகையால், நீண்டு தழைத்த கூந்தலை உடையவளே உன் கணவனை, இன்றைக்குப் பதினான்காம் நாள் பகல் வேளை சென்ற பின் வானோர் வடிவில் அன்றி இவ் வுலகத்தார் வடிவில் காண்பது இல்லை என்ற மாற்றமில்லாத பொருளுரையை நான் கேட்டேன் என்று சாத்தனார் கூறினார்.

அரசு முறை செய்வதில் தவறிழைத்தோர்க்கு அறமே கூற்றுவனாக ஆவதும் புகழ்ச் சிறப்புடைய கற்புடைய பெண்ணை உயர்வான மக்களும் போற்றுதல் இயல்பு என்பதும் முன் வினை உருவம் பெற்று துரத்தி வந்து பயனை விளைக்கும் என்பதும் நுண்ணிய தொழில் அமைந்த சிலம்பு காரணமாக வெளிப்பட்டமையால் சிலப்பதிகாரம் என்னும் பெயரில் பாட்டை உடைய ஒரு செய்யுள் மூலம் நிலை நாட்டுவோம் என்று இளங்கோ அடிகள் சொன்னார்.

இது முடியுடை மூவந்தர்களுக்கும் உரியது, ஆகையால் அடிகள் நீங்களே இதனை அருளிச் செய்ய வேண்டும் (செய்வது சிறப்பாக இருக்கும்) என்றார் சாத்தனார்.

அதற்கு அவர் மண வாழ்த்துப் பாடலும் பெற்றோர் அவர்களை இல்லறத்தில் தனித்து இருத்திய காதையும நடனம் கற்ற நங்கை மாதவி அரங்கேறிய காதையும் அந்திப் பொழுதாகிய மாலையின் சிறப்பை உரைக்கும் காதையும் இந்திர விழாவை புகார் எடுத்த காதையும் விழா முடிவில் கடலாடிய காதையும் கடலாடிய பின் பூக்கள் இதழ் விரித்த கழிக் கானலில் பாடிய கானல் வரியும் இளவேனில் வந்து பொருந்தியதாகப் பிரிந்த மாதவி வருந்திய காதையும் கண்ணகி தான் கண்ட தீங்கை உடைய கனாவின் திறத்தைத் தேவந்திக்கு உரைத்த காதையும் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வினாவிய செய்திகளை உடைய சோழ நாட்டின் வளத்தை அவர்கள் கண்ட காதையும் அங்ஙனம் நாட்டினைக் கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும் வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவையாகத் தெய்வமேறி ஆடிப் பாடிய வரியும், இதழ் விரிந்த மாலையை உடைய கண்ணகியோடு மதுரைப் புறஞ்சேரி சென்று தங்கிய காதையும் முழங்கும் முரசொலியை உடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும் புகழ் மிக்க கண்ணகியாகிய நங்கையை மாதரியிடம் கவுந்தி அடிகள் அடைக்கலம் கொடுத்த காதையும் கோவலன் கொலைக்களப்பட்ட காதையும் மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறைமையும் கோவலன் கொலையுண்ட தீய செய்தி கேட்டு கண்ணகி அரற்றிய துன்ப மாலையும் நண்பகல் பொழுதில் எல்லாரும் கண்டு நடுங்குமாறு கண்ணகி ஊரைச் சூழ வந்த ஊர் சூழ் வரியும் புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும் வழக்கில தோற்ற பாண்டியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங் கூறிய வகையும் கண்ணகியின் முலையிலிருந்து எழுந்த தீ தாவி எரித்த காதையும் மதுரைமா தெய்வம் தோன்றி பழம்பிறப்பை எடுத்து விளங்க உரைத்த கட்டுரை காதையும் மது ஒழுக மலர்ந்த மாலையை உடைய குறத்தியர் அவளைத் தெய்வமாக்கி வழிபட்டு ஆடிய குன்றக் குரவையும் என்ற இந்த இருபத்துநான்குடன் காட்சிக் காதையும் கல்லைக் கொண்ட கால்கோள் காதையும் அந்தக் கல்லில் கடவுளை எழுதி கங்கையாற்றில் நீர்ப்படுத்திய காதையும் பத்தினிப் படிமத்தைக் கடவுள் மங்கலம் செய்த காதையும் அவ்வாறு வாழ்த்திய கடவுள் செங்குட்டுவனும் அங்கு வந்திருந்த அரசர்களும் கேட்ட வரங்களை அருளிய காதையும் எனும் இம் முப்பதுமாகிய உரையும் பாட்டும் இடையிடையிட்ட காப்பியமாகிய செய்யுளை புகழமைந்த இளங்கோ அடிகள் அருளிச் செய்ய மதுரையில் உள்ள கூல வாணிகனான சாத்தன் என்னும் புலவர் கேட்டார் என்பது இச்செய்யுளின் பாகுபாடாகிய வகையினைத் தெரிந்து கொள்வதற்கு உதவும் பதிகத்தின் அடக்கம் என்க.

பதிகத்தில் உள்ள சிறப்புச் செய்திகள்:

1. நூலைப் பற்றிய அறிமுகம் பதிகம்
2. நூலில் சொல்ல இயலாத செய்திகளைக் கூறுவது பதிகம்.
3. நூலின் தன்மைகளைத் தருவது பதிகம்.
4. நூலின் பயன் பற்றிக் கூறுவது பதிகம்.
5. நூலின் அமைப்பு பற்றிக் கூறுவது பதிகம்.
6. நூலின் வரலாறு பற்றிக் கூறுவது பதிகம்.
7. நூலின் உள்ளடக்கம் பற்றிக் கூறுவது பதிகம்.

சிலப்பதிகாரம் தோன்றிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலாயினும் சிலர் வேண்டுமென்று உள்நோக்கத்துடனும் பலர் அறியாமையாலும் திறனாளர்கள் சிலர் பிழைப்பதற்காகவும் கூறுவதுபோல் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் என்று வைத்துக்கொண்டாலும் சிலப்பதிகாரப் பதிகத்துக்கு இணையான ஒன்றை அன்றைய உலகின் எந்த இலக்கியத்திலும் காண முடியாது.

ஆனால் வையாபுரியாரின் கூற்றை வலியுறுத்தும் பல்கலைக் கழக நல்கைக் குழுவிடம் பணமும் இசைவுகளும் பெற்று இயங்கும் தமிழகப் பல்கலைக் கழகங்களில் பாட நூல்கள் எழுதுவோரும் பட்டங்கள் பெறுவதற்காக ஆய்வேடுகள் வரைவோரும் சிலப்பதிகாரம் எட்டாம் நாற்றாண்டில் தோன்றியது; அதன் பதிகத்தையும் வஞ்சிக் காண்டத்தையும் வேறு எவரோ எழுதிச் சேர்த்துவிட்டனர் என்று கூறுகின்றனர். தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு என்ற அனைத்துத் துறைகளிலும் வையாபுரியாரின் கூற்றுகள் மீது, தங்கள் பேராசான் என்று அறிவித்துக் கொள்ளும் காரல் மார்க்சின் மீது வைத்திருப்பதை விட மிகுதியான நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து வகை பொதுமையினரும் இந்தக் கண்ணோட்டத்தைத் தங்கள் அடிப்படை அணுகலாகக் கொண்டிருப்பதால் அதைப் பின்பற்றினால்தான் முற்போக்குச் சிந்தனை கொண்டிருப்பதாகத் தம்மை பிறர் மதிப்பார்கள் என்பதாலும் வையாபுரியாரின் கருத்துக்குப் பலரிடத்தில் உடன்பாடு உள்ளது.

மதுரை யாதவர் கல்லூரியில் பணியாற்றிய ப-ர்.இராமசாமி என்ற தமிழ்த்துறை விரிவுரையாளரை 1981-82 இல் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் பண்டிதர் பட்டத்துக்கான ஆய்பொருள் பதிகம் என்பதுதானாம். அவர் கூறினார், சிலப்பதிகாரப் பதிகத்தில் நூலில் இல்லாத செய்திகள் இருப்பதால் அதை இளங்கோவடிகள் எழுதவில்லை என்று வாதிட்டார். நூலில் சொல்ல முடியாத செய்திகளைச் சொல்வதுதான் பதிகத்தின் நோக்கமே என்று நான் எடுத்துக்கூறியும் அந்த விரிவுரையாளரின் கருத்து மாறவில்லை. ஒருவேளை ஆய்வேடுகளின் தொடக்கத்தில், ஆய்வின் ஒட்டு மொத்தக் கருத்தை தொகுத்துக் கூறும் தொகுப்புரையை (Synopsis) பதிகம் என்று தவறாகக் கொண்டுவிட்டார் போலும். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்களையும் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வழிநடத்தப்போகும் எதிர்காலத் தமிழகத்தையும் நினைக்கும் போது ஒரு புறம் மறுக்கமாகவும் இன்னொரு புறம் துயரமாகவும் நடுக்கமாகவும் உள்ளது.

நன்னூல் முதல் நூற்பா, முகவுரை, பதிகம், அணிந்துரை, நுன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்று பதிகத்ததுக்குரிய வெவ்வேறு பெயர்களைத் தந்துள்ளது.
முன்னுரை, அறிமுகம் போன்ற பெயர்கள் பின்னாளில் சேர்ந்துள்ளன.

சிலப்பதிகாரப் பதிகத்தைப் பொறுத்தவரை ஒரு கருத்து உள்ளது. சிலப்பதிகாரத்துக்குப் புலவர் சாத்தனாரும் மணிமேகலைக்கு இளங்கோவடிகளும் பதிகம் எழுதினர் என்பது. மேலோட்டமாக நோக்கினால் அது பொருத்தமாகவே தெரிகிறது. ஆனால் இவ் விரு நூல்களின் பதிகங்களைப் படிக்கும் போது அவற்றின் நடை அந்த அந்த ஆசிரியர்கள் நூல்களின் பொது நடையையே ஒத்து இருப்பது தெரிகிறது. எனவே தம் தம் நூலுக்கு அந்தந்த ஆசிரியர்களே பதிகம் எழுதினர் என்று கொள்வது பொருத்தமாகும். இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு செய்தி சிலப்பதிகாரம் பதிகத்தில் கூறப்படுகிறது. அது, மதுரை நிகழ்ச்சிகளைக் கூறிய போது சாத்தனார் கோவலனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருமாறு காவலர்களுக்குப் பாண்டியன் ஆணையிட்டதைச் சொல்லுகையில், வினை விளை காலமாதலின் சினையலர் வேம்பன் தேரான் ஆகி என்று அவர் கூறியதைச் சுட்டிக் காட்டி வினை விளை காலமென்றீர் யாதவர் வினையென்று இளங்கோவடிகள் கேட்டதும் அதற்குச் சாத்தனார் விடை கூறியதும் அவர்கள் இருவரும் மட்டுமே அறிந்தவை. உடனிருந்தவர் யாராவது கேட்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் அப்படி அவர்கள் எழுதிச் சேர்த்திருந்தாலும் இளங்கோ அடிகள் காலத்தில் பெரும்பாலும் அவரது ஆணையால் அல்லது இசைவுடன்தான் செய்திருக்க வேண்டும்.

இங்கு இன்னொன்றையும் நாம் பார்க்கவேண்டும். மதுரையில் நடந்தவை ஒரு மக்கள் எழுச்சியாக இருந்து அதை அடக்க சேரன் செங்குட்டுவன் சென்றுகொண்டிருந்த வழியில் சாத்தனார் குறுக்கிட்டு அது ஒரு பெண்ணின் கற்புத்தீயால் நிகழ்ந்தது, மக்கள் எழுச்சி இல்லை என்று கூறி அவனைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். உண்மையில் அங்கு நடந்தவை என்று இளங்கோ அடிகள் அறிந்தவற்றுக்கு மாறாகச் சாத்தனார் கூற்று இருந்ததால் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டு விடையையும் பதிகத்தில் குறித்து கதையின் இந்தப் பகுதிக்குச் சாத்தனார்தான் பொறுப்பு என்று மறைமுகமாகக் கூறுவதாகக் கொள்ள இடமிருக்கிறது.

இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். மணிமேகலை காட்டுகிறவாறு புத்த சமய வெறியரான சாத்தனார் சிவன் கோயிலான வெள்ளியம்பலத்துக்கு ஏன் போனார், அதுவும் ‘நள்ளிருளில் கிடந்து’ என்ன செய்தார் என்ற கேள்விகளுக்கு நிறைவான விடை எதையும் நம்மால் காண முடியவில்லை.

மதுரையில் நடந்தது மக்களின் எழுச்சிதான் என்பதைச் சுட்டும் குறிப்புகளையும் நூலி்ல் இளங்கோ அடிகள் குறிக்காமல் விடவில்லை.

நாம் அவற்றை அந்தந்த இடங்களில் பார்க்கலாம்.

இலக்கியத்துக்கு குமுகப் பயன் உண்டா என்பது 20, 21, ஆம் நூற்றாண்டுகளில் தமிழக இலக்கியவாணர்கள் நடுவில் எழுந்திருக்கும் கேள்வியாகும். 20 ஆம் நூற்றாண்டின் முன்பாதியில் “கலை கலைக்கா, கலை வாழ்க்கைக்கா?” என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு விடை சொல்ல வந்த சாமி. சிதம்பரனார், தன் சிலப்பதிகாரத் தமிழகம் என்ற நூலில் (சுடர் பிரசுரம், திருவல்லிக்கேணி சென்னை- 5, இலக்கிய வரிசை 6, 1958) “இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்று சொல்லுவோர் பிறபோக்குவாதிகள். நாட்டில் தோன்றும் புதிய சமுதாய - அரசியல் கருத்துகளைக் கண்டு அஞ்சுகின்றவர்கள். இன்றுள்ள சமுதாய அமைப்பு மாறினால், அரசியல் அமைப்பு மாறினால் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சுகின்றனர். இவர்கள் தங்களுக்குப பிடிக்காத கொள்கைகள் இலக்கியங்களில் இடம்பெறுவதைக் கண்டு நடுங்குகின்றனர். இவர்கள் எழுப்பும் கூச்சல்தான் இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்பது” என்கிறார்.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதே சிக்கல் வேறொரு வடிவத்தில் முன்வைக்கப்பட்டது. இலக்கியத்துக்கு தூய இலக்கியம் என்றும் பரப்பல் இலக்கியம் என்றும் ஒரு வகைப்பாடு முன்வைக்கப்பட்டது. தூய இலக்கியம் என்பது எந்த விதக் குமுகக் குறிக்கோள்களையும் முன்வைக்காது மெய்ப்பாட்டுச் சிறப்பு ஒன்றையே தடம் பிடித்துச் செல்லும்; அந்த மெய்ப்பாட்டுச் சிறப்பே அந்த இலக்கியத்தைக் காலங்களை வென்று நிலைத்து நிற்க வைக்கும். அதே வேளையில் பரப்பல் இலக்கியத்தில் மெய்ப்பாட்டுச் சுவையே இருக்காது; வெறும் கொள்கைப் பரப்பலே இருக்கும்; எனவே அதனால் காலத்தை வென்று நிற்க முடியாது என்பது அவர்களது கூற்று.

இதற்கு மறுப்பு கூறுவோர் , “தூய” இலக்கியத்தைத் தூக்கிப் பிடிப்போர், நிலவுகின்ற அரசியல் - குமுகியல் நிலைமைகளை மறைமுகமாகப் போற்றி மாற்றங்களை எதிர்ப்பதைத் தம் படைப்புகளில் ஐயமின்றிச் செய்கின்றனர். எனவே அவையும் பரப்பல் செய்கின்றன என்பதாகும். எம் நிலைப்பாடோ, இவர்கள் கூறும் சுவை மிகுந்த “காலத்தை வென்று நிற்கும்” இலக்கியங்களை வெறும் திண்பன்டங்கள் என்றால் பரப்பல் இலக்கியங்கள் மருந்து போன்றவை, அவற்றின் நோக்கம் காலத்தை வென்று நிலைத்து நிற்பதல்ல, அது படைக்கப்படும் காலத்தில் குமுகத்துக்குத் தேவைப்படும் என்று படைப்போன் கருதும் கருத்துகளை முன்வைப்பதேயாகும் என்பதாகும்.

அதே வேளையில் வாழ்வுக்கான இலக்கியங்கள் என்று அழைத்தாலும் சரி பரப்பல் இலக்கியங்கள் என்று சொன்னாலும் சரி தமிழில் காலத்தை வென்று நிற்கும் இந்த வகைப்பாட்டினுள் வரும் இலக்கியப் படைப்புகள் குறைந்து இரண்டாவது உண்டு. ஒன்று திருக்குறள். இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும் மனித வாழ்வுக்காக அறங்கள் பலவற்றைத் தன்னுள்ளே கொண்டிருப்பதுடன்3 ஈடில்லாத மெய்ப்பாட்டுச் சிறப்பும் உடையது. ஓர் அறநூலை இத்தனை இலக்கியச் சிறப்புடன் படைக்க முடியும் என்பதே உலக மக்கள் யாவரினும் தமிழ் மக்களுக்குத் தனிப்பெரும் பெருமையைத் தருவதாகும்.

இன்னொரு இலக்கியம் சிலப்பதிகாரக் காப்பியம் ஆகும். அதன் பதிகத்திலேயே இளங்கோ அடிகள் நூலின் நோக்கத்தை ஐயத்திற்கிடமின்றிக் கூறி விட்டார் இவ்வாறு:

அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்...
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்...

அத்துடன் பதிகத்தில் குறிப்பிடாத ஒன்றை நூலின் பயனாக நூற்கட்டுரையில், தமிழகத்தின் பருப்பொருட் பண்பாட்டை ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம் காட்டுவார் போல் காட்டிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்.

இப்படி இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல இலக்கணமும் கூட இலக்கியங்களின் நோக்கம் மனிதனை மேம்படுத்துவதுதான் என்று வரையறுத்துள்ளதையும் காணலாம்.
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கி பொல்லா - மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு.
மரத்தை வாள் கொண்டு அறுக்கும் முன் கழிவாகத்தக்க புறவெட்டு என்பதனை முடிந்த அளவு சுருக்கி நல்மரப் பகுதியை மிகுப்பதற்கு முதலில் ஒரு நூலைக் கரி கரைந்த நீரில் நனைத்து அறுக்க வேண்டிய மரத்தில் பிடித்து அடித்து அடையாளமிட்டுக் கொள்வர். அதைத்தான் மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும் நூல் என்று கூறுகிறது மேலேயுள்ள நன்னூல் நூற்பா எண் 25.

அகத்தியர் என்ற ஆசிரியர் பெயர் அகத்தியம் என்ற இலக்கணத்தை வகுத்தவரின் பெயர் என்றும் கூறலாம். அகப்பொருள் அகத்தியல் → அகத்தியம் → அகத்தியர் என்று திரிந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் தொல் பழங்காலத்திலேயே இலக்கியத்தின் நோக்கம் மனிதனை மேம்படுத்தவதுதான் என்ற கருத்து தமிழ் மரபில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது புலனாகிறது. இதற்காக நாம் சிறப்பாகப் பெருமைப்படத் தேவையில்லை. இதில் கூறப்பட்ட பொருள் இறையனார் அகப்பொருளில் உள்ளதாகும் என்று கூறுகிறது வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் பதித்துள்ள நன்னூல் விருத்தியுரை, (பாரி நிலையம், சென்னை-1 1971, பக். 65). மனிதனின் முயற்சிகளும் செயல்களும் மனித குலத்தை மேம்படுத்துவதற்காகவே அமைய வேண்டுமென்பதுதானே பகுத்தறிவு உடைய எந்த ஒருவருடையவும் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி அல்ல என்றொரு குரல் எழுவது அதுவும், உலக அளவில் என்பதுதான் மறுக்கம்.

சில சிறந்த எழுத்தாளர்கள் இலக்கியம் பற்றிய இந்த எதிர்நிலைக் போக்கைப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அவர்களுடைய படைப்புகளில் அவர்களது கருத்து என்று நாம் அறிவதற்கு மாறான, அதாவது குமுகம் பற்றிய பரிவுடனும் கவலையுடனும் குமுகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் கருத்துகள் அடித்தளமாக அமைந்திருப்பதை அடிக்கடி பாக்கிறோம். இது அவர்களது அடிப்படை மன இயல்பின் நனவிலி வெளிப்பாடாகும். வெளிப்படையான அவர்களது சிந்தனைக்கு மாறான உள்ளுணர்வின் வெடிப்பாகும்.

இனி பதிகத்தின் உள்ளத்தினுள் செல்வோம்.

குணவாயில் கோட்டத்தில் அரசு துறந்திருந்த என்ற வரியில் அரசு துறத்தல் என்பது இல்லறம் துறத்தல் ஆகுமா என்பது தெரியவில்லை. பெண்களைப் பற்றியும் காமம் பற்றியும் மக்கள், நிலம், கடல், இயற்கை, கலைகள் பற்றியும் அவருடைய விரிந்த அறிவு துறவு பூணுவதற்கு முந்திய வாழ்க்கையின் பட்டறிவுகளிலிருந்து மட்டும் கிடைத்திருக்க முடியுமா என்றொரு கேள்வியை நம் முன் வைக்கிறது.

குணவாயில் என்பது வஞ்சியின் கீழ்த்திசையிலுள்ள திருக்குணவாயில் என்னும் ஊர் என்கிறார். அடியார்க்கு நல்லார். “குணவாயில் கோட்டத்து” அரசு துறந்திருந்த என்பது, அவர் முன்பு குணவாயில் கோட்டம் எனும் சேர நாட்டின் ஒரு பகுதியின் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கலாம். அரசர்கள் தங்கள் ஆண் மக்கள் பட்டம் ஏறுவதற்கு முன் அவர்களை நாட்டின் ஒரு பகுதிக்குப் பொறுப்பாளராக வைத்திருப்பது வழக்கம். அதன் மூலம் அவர்கள் நட்டின் ஆள்வினை குறித்த பட்டறிவுகளைப் பெற முடியும். போர்களிலும அவர்கள் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது. நாட்டின் ஒரு பிரிவின் ஆள்வினைத் தலைவர் என்ற வகையில்தான் இமயவரம்பன் அவையில் தமையன் செங்குட்டுவனோடு இருந்த போது நிமித்திகன் தன் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும்.

அரசு துறந்த என்ற கூற்றை இந்தப் பொருளில் எடுத்துக்கொண்டால் குணவாயில் கோட்டத்தில் அரசுப் பொறுப்பைத் துறந்து அங்கேயே வாழ்ந்து வந்தார் இளங்கோவடிகள் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது.

சிலப்பதிகாரத்தின் ஒரு சிறப்பு இந்தக் காப்பியத்தில் நிகழ்ச்சிகள் நேர்கோட்டில் சொல்லப்படுவதில்லை என்பதாகும். இங்கு அரசு துறந்திருந்த என்று மொட்டையாகச் சொல்லியுள்ள அடிகள் தான் ஏன் “அரசு” துறந்தார் என்பதை நூலின் இறுதியில் வாழ்த்துக் காதையில் விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய உத்தியை நூல் முழுவதும் பார்க்க முடியும். அவற்றை அங்கங்கே சுட்டிக் காட்டுவோம்.

குன்றக் குறவர் என்பதில் வரும் குன்றம் செங்குன்றம் என்னும் மலை என்று அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். அது கண்ணகி மதுரையிலிருந்து சென்ற வையைக் கரை வழியே அதன் ஒரு கிளை தோன்றும் முனையாகும். அந்த முனையின் எதிர்ப்புறத்தில்தான் பெரியாற்றின் ஒரு கிளையின் முனை உள்ளது. அந்த மலைப் பகுதியை வண்ணாத்திப் பாறை என்று அந்த வட்டாரத்து மக்கள் அழைப்பதாக 20-04-2008 அன்று சித்திரை வெள்ளுவாவன்று கண்ணகிக் கோட்டத்துக்குச் சென்றிருந்த போது அறிய முடிந்தது. இப்பொழுது கண்ணகிக் கோட்டம் என்று காட்டப்படும் இடம் இளங்கோவடிகள் கூறும் இடமல்ல என்ற எமது இந்தக் கருத்து பற்றிய விரிவுக்கு சேணுயர் சிலம்பில்…. என்ற தலைப்பில் தமிழினி 2008 மே இதழ் கட்டுரை பார்க்க.

காவிரிப்பூம்பட்டினம் என்பது காவிரி புகும் பட்டினம் என்பதிலிருந்து திரிபடைந்திருக்கலாம். புகார் என்பது புகு + ஆறு என்பதன் மரூஉவாய் இருக்க வேண்டும். பூம்புகார் என்பது பொலிவுடைய ஆறு புகும் பட்டினம், அதாவது ஆறு புகும் பொலிவுடைய பட்டினம் என்றும் பொருள்படலாம்.

கோவலன் என்ற பெயருக்கு ஆயன் என்பது பொருள். கோவலன் என்பதை விரித்தால் மாட்டை மேலாண்மை செய்ய வல்லவன் என்று பொருள் தரும். சமற்கிருதச் சொல் என்று பொதுவாகக் கருதப்படும் கோபாலன் என்ற சொல்லின் ஒரு வடிவமே கோவலன். இன்றும் மாட்டிலிருந்து பால் கறப்பதற்கு மிகப் பெரும்பாலோர் ஆயர்களையே சார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரத்திலும்

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத... (அந்திமாலை சிறப்புச் செய்காதை 15-16)
என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஆக, வாணிக வகுப்பைச் சார்ந்த ஒருவனுக்கு ஆயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குரிய பெயரைச் சுட்டியிருப்பது மக்கள் தொழில்களில் மாறிமாறி ஈடுபட்டிருந்ததைக் காட்டும் தடயமாகக் கொள்ள முடியுமா அல்லது வெவ்வேறு தொழில் சார்ந்தவர்களிடையில் தொழில் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு அன்று கடைப்பிடிக்கப்படவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. அல்லது நிலம் வழி வாணிகம் பொதிமாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியதால் ஆயர்களே நிலவழி வாணிகர்களாக மலர்ந்ததன் ஓர் எச்சமாகக் கோவலனின் பெயரைக் கொள்ளலாமா?

கண்ணகி என்ற பெயர் ஓர் அரிய பெயராகத் தோன்றுகிறது. கண்ணகி என்பதை கண் + நகை, அதாவது நகைக்கும் கண்களை உடைய இனிய பெண் என்று பொருள் படுமா என்பது கருதத்தக்கது. நான் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் கதைத் தலைவியின் இதே பெயருக்கு கதைத் தலைவன் இத்தகைய விளக்கம் கொடுப்பதாக ஓர் உரையாடல் வருகிறது. கண்களை நகையாகக் கொண்டவள் என்றும் விளக்கலாம்.

கணிகையொடு ஆடிய (வரி 15-16க்கு) என்பதற்கு தன் பொறுப்புகளை மறந்து களியாட்டம் நடத்திய என்று பொருள்.

சில்லரிச் சிலம்பு (வரி 25) சில அரிகளை - பரல்களை உடைய சிலம்பு என்று வேங்கடசாமியார் உரை கூறுகிறார். “சில்” என்ற சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி தரும் பொருட்களில் ஆரவாரம், ஒலிக்குறிப்பு, நுண்மையான என்பவை உள்ளன. “சில்லரி” என்ற சொல்லுக்கு சிலம்பின் பருக்கைக் கல் என்று பொருள் உள்ளது. எனவே சில்லரிச் சிலம்பு என்பதற்கு ஒலிக்கின்ற நுண்ணிய பரல்களைக் கொண்டது அல்லது ஓலிக்கின்ற பரல்களைக் கொண்டது என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

கன்றிய காவலர் (வரி29) என்பதில் வரும் “கன்றிய” என்ற சொல்லுக்கு தழும்பேறிய, மிகுந்த, முதிர்ந்த என்ற பொருட்களும் “கன்றுதல்” என்ற சொல்லுக்குரிய பொருள்களில் கன்றல், இரங்கல், கோபித்தல், விசனப்படல், அடிப்படுதல், சினக் குறிப்பு கொள்ளுதல், மனமுருகுதல், நோதல், வாடுதல், முற்றுதல் என்ற பொருட்களும் கன்றல் என்ற சொல்லுக்குள்ள பொருள்களில் சினத்தல், கடுப்பு என்பவையும் உள்ளன.

வேங்கடசாமியார் அடிப்படுதல் என்ற பொருளைக் கொண்டுள்ளார். அடிமட்டத்திலுள்ள கீழ்நிலைக் காவலர் அல்லது கீழ்த்தரமான காவலர் என்று கொண்டுள்ளார். அடியார்க்குநல்லார் “கன்றிய காவலர் என்றார், அவரும் முன்னர்த் தீது செய்யார் என்பது தோன்ற” என்று கூறியிருக்கிறார். பாண்டியன் ஊழ்வினைப் பயனால் தன் நல்லியல்பை மறந்து செயற்பட்டான் என்ற கருத்தில் அவர் கூறியுள்ளார். ஆனால் பாண்டியனின் நடவடிக்கைகள் அத்தகைய ஓர் இயல்பை அவனுக்குக் காட்டவில்லை. எனவே பட்டறிவு மிகுந்த முதிர்ந்த கொடுமையான காவலர்கள் என்றுதான் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும். அரசர்களுக்கு அண்மையில் அப்படிப்பட்டவர்கள்தாம் அமர்த்தப்படுவார்கள்.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது (வரி 91) என்ற வரியில் சிலப்பதிகாரம் தமிழகம் முழுவதையும் நிலைக்கானாகக் கொண்ட காப்பியம் என்பதைப் பதிகமும் உறுதிசெய்கிறது. அதற்கேற்றாற் போல்தான் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் பெரும் பிரிவும் உறுதி செய்கின்றன. எனவே பதிகமும் வஞ்சிக் காண்டமும் பின்னர்ச் சேர்த்தது என்பதற்கான அறிகுறி நூலில் எங்குமே இல்லை. இக் காண்டங்களுக்கிடையிலான இசைவு பற்றிய தெளிவான சான்றை அது வருமிடத்தில் சுட்டுவோம்.

காதைகளின் தலைப்புகள் ஏறக்குறைய அனைத்தும் பல்வேறு மகளிரின் செயற்பாடுகளையே குறிப்பதைக் காணலாம். இந்த வகையிலும் சிலப்பதிகாரம் ஒரு பெண்ணியக் காப்பியம் என்பதைப் பறைசாற்றி நிற்கிறது.

காதை என்ற சொல்லுக்கு, “கதையை உடையது காதையாம் ஆதலாலும்” என்ற அடியார்க்குநல்லாரின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் வேங்கடசாமியார் அவர்கள். ஆனால் காது என்ற சொல் அடிப்படையில் காதை என்ற சொல் உருவாகி இருக்க வேண்டும். அது பின்னர் கதை என்று திரிந்திருக்க வேண்டும். முதலில் இலக்கியங்கள் ஒருவர் சொல்ல பிறர் கேட்க நிகழ்ந்து பின்னர் எழுத்து உருவான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பேசுதல் என்பதைக் “கதைத்தல்” எனும் ஈழத்துச் சொல் வழக்கை நோக்க.

அடிக்குறிப்புகள்:

1. சிலப்பதிகாரம், 22, 18,

2. சிலப்பதிகாரம், 23, 173-4,

3. காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளும் திருக்குறளில் உள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.


0 மறுமொழிகள்: