குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 9
6. மயிர் நீத்து உயிர் வாழும் மனிதன்!
(தோரா. தி.மு. 5,00,000)
இப்போது நாம் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு வெட்டவெளியான
ஒரு பெரும் மணற்பரப்பில் நின்றுகொண்டிருக்கிறோம். நேரமோ நடுப் பகல். மூச்சுக் கூட
விட முடியாத வெப்பக் காற்று. கதிரவனிடமிருந்து வெளிப்படும் வெப்பம் மணலை வறுத்துச்
சூடாக்கி அதைத் தொட்டுக்கிடக்கும் காற்றைக் கொதிக்க வைத்து அதன் ஓட்டம் ஓர் ஆறு
ஓடுவது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கானல் நீர் என்று
பொது வழக்கிலும் பொய்த்தேர் என்று நம் பண்டை இலக்கியங்களிலும்
கூறப்படும் இயற்காட்சியைக் காணும் வாய்ப்பில்லாதவர்கள் இதைப்
பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த
“நீரோட்டத்தின்” ஊடே நீல நிறத்தில் பெரும் ஏரி போன்ற பரந்த நீர்நிலை ஒன்று அதே தெரிகிறதே
பாருங்கள். போர்த்தப்படாமல் திறந்திருக்கும் நம் கைகள், முகம் ஆகியவற்றில் வரண்ட
வெப்பக் காற்று பட்டு தோல் வெம்பிக் கொப்புளம் தோன்றுவது போன்ற எரிச்சல்
உண்டாகிறது. வாருங்கள், விரைந்து செல்வோம்! ஆகா! ஒரு வழியாக அந்த நீர்நிலையை
நெருங்கிவிட்டோம். என்ன? இது கடல் போலல்லவா இருக்கிறது? ஆம்! கடல்தான். ஆனால்
தொலைவில் நமக்கு எதிரில் வான விளிம்பில் மலைகளின் முகடுகள் போல் தோன்றுகிறதே!
அப்படியானால் இதுதான் உள்நாட்டுக் கடல் எனப்படுவதா? இதோ கரையில் உள்ள இந்தச் சிறு
பள்ளத்தில் உப்பு படிந்திருக்கிறது. அங்கே நடுவில் தேங்கியுள்ள சிறிதளவு நீரில்
செத்துப்போன சில மீன்கள் கிடக்கின்றன. உப்புப் படிவங்களின் மீது செத்து உலர்ந்த
மீன்கள் கிடக்கின்றன.
வெய்யிலின் கொடுமை தாங்க முடியவில்லையே! எங்காவது குடிக்க நீர் கிடைக்குமா? நிலத்தில் அதோ சிறிது கடல் உள்வாங்கியிருக்கிறதே அங்கே சென்று பார்ப்போமா? ஐயோ! இதென்ன, பெரும் பெரும் யானைகள் செத்துக்கிடக்கின்றனவே! நாற்றம் தாங்க முடியவில்லையே! உப்புப் படிவத்தின் மீது மட்கியும் மட்காமலும் சதையுடன் கடித்துக் குதறப்பட்டுக் கிடக்கும் யானைத் தோல்கள். அரிமா, புலி, மான் போன்ற விலங்குகளின் கருவாடாகிப் போன உடல்கள். எங்கும் மனிதர்களையே காணவில்லை.
வெய்யிலின் கொடுமை தாங்க முடியவில்லையே! எங்காவது குடிக்க நீர் கிடைக்குமா? நிலத்தில் அதோ சிறிது கடல் உள்வாங்கியிருக்கிறதே அங்கே சென்று பார்ப்போமா? ஐயோ! இதென்ன, பெரும் பெரும் யானைகள் செத்துக்கிடக்கின்றனவே! நாற்றம் தாங்க முடியவில்லையே! உப்புப் படிவத்தின் மீது மட்கியும் மட்காமலும் சதையுடன் கடித்துக் குதறப்பட்டுக் கிடக்கும் யானைத் தோல்கள். அரிமா, புலி, மான் போன்ற விலங்குகளின் கருவாடாகிப் போன உடல்கள். எங்கும் மனிதர்களையே காணவில்லை.
கதிரவன்
மேற்கில் சாய்ந்துகொண்டிருக்கிறான். வெப்பம் சிறிது அடங்கியிருக்கிறது. கடல்
நிலத்தினுள் உள்வாங்கும் திசையில் ஓர் ஆறு ஓடிய தடம் தெரிகிறதே! பக்கத்தில்
போவோம். ஆம், மனிதர்கள்தாம். ஆனால் இதுவரை நாம் பார்த்தவர்களை விட உருவில்
சிறுத்திருக்கிறார்கள். ஆனால் உடலை, தலை தவிர முழங்கை, முழங்கால் வரை கரிய தோலால்
போர்த்தியிருக்கிறார்கள். தொளதொளவென்று அவை இருப்பதால் அவர்களது நடமாட்டத்துக்கு
அவை தடையாயில்லை. நெருங்கிப் பார்ப்போம். பெண்களும் ஆண்களுமாக இருக்கும் இக் கூட்டத்தின்
தலைவி போல் மூத்த ஒரு பெண்
காணப்படுகிறாள்.
என்ன செய்கிறார்கள் இவர்கள்? நொருங்கிப்
பார்ப்போம்.
அவர்கள்
உடலில் போர்த்தியிருப்பது யானைத் தோல் போல் தோன்றுகிறது. தடித்த மயிர்கள்
அடர்த்தியின்றி காணப்படுகின்றன. தோலும் தடிமனாக உள்ளது.
ஆற்றுப்
படுகையில் ஏதோவொரு விலங்கின் மண்டையோட்டால் குழி தோண்டுகிறார்கள். சிறிது
தோண்டியதும் நீர் ஊறுகிறது. அனைவரும் வாரி வாரிக் குடிக்கிறார்கள். பின்னர்,
சுருட்டி வைத்திருந்த தோல்களில் ஒன்றைப் பிரித்துப் போடுகின்றனர். ஏறக்குறைய ஆறடி
நீளமும் இரண்டடி அகலமும் உள்ள அந்த தோலின் ஒரு முனை ஏதோவொரு கொடியால்
கட்டப்பட்டிருக்கிறது. மறுமுனையை வாய் போல் திறக்கிறார்கள். அவர்கள்
கொண்டுவந்திருந்த ஒரு விலங்கின் மண்டை ஓட்டில் குழியிலிருந்து நீரை முகந்து அதனுள்
ஊற்றுகின்றனர். அது நிறையும் போது அது ஒரு யானையின் கால் பகுதியின் தோல் என்பது
புரிகிறது. வாயைத் தாங்கள் கொண்டுவந்திருந்த கொடியால் இறுகக் கட்டுகிறார்கள்.
அவர்கள் கொண்டுவந்திருந்த நான்கு “பை”களையும் நிரப்பிய பின் ஒவ்வொன்றின் அடியிலும்
தாங்கள் கொண்டுவந்திருந்த கழிகளில் இரண்டைச் சொருகி அவற்றின் நடுவில் பையின் இரு
பக்கங்களிலும் ஒவ்வொருவர் நின்று கழிகளை இரு தோள்களில் வைத்து அவ்வாறு பைகளைத்
தூக்கிக் கொண்டு பக்கத்திலுள்ள மலையை நோக்கிச் செல்கின்றனர். எஞ்சியோர் கடலை
நோக்கி விரைகின்றனர். நாமும் பின் தொடர்வோம்.
கடற்கரையில் நாம் முன்பு
வந்த இடத்துக்கே அவர்களும் வந்துள்ளனர். அவசரம் அவசரமாக இறந்து காய்ந்தும்
காயாமலும் உப்புப் படிவின் மீது கிடந்த மீன்களையும் சதை கழிந்து காய்ந்து கிடந்த
விலங்குத் தோல்களையும் பொறுக்கிச் சேர்த்து தாங்கள் கொண்டுவந்திருந்த தோல்
சுருளைப் பிரித்து அதனுள் வைத்துக் கட்டி எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர்.
நாமும் அவர்களுடன் செல்வோம்.
சிறிது
தொலைவு சென்றதும் தொலைவில் காட்டுப் பகுதியிலிருந்து ஒரு மான் கடலை நோக்கி மிகு
விரைவில் பாயந்து வருகிறது. அதை ஒரு புலி துரத்தி வருகிறது. கடலை நெருங்கியதும்
மான் சோர்ந்து தடுமாறுகிறது. புலி அதனைத் தின்னத் தொடங்குகிறது. பின்னர் கடலை
நோக்கி ஓடுகிறது. கடல் நீரில் வாயை வைத்துப் பார்த்துவிட்டு அசையாமல் நிற்கிறது.
நாலா பக்கமும் பார்த்துவிட்டு அப்படியே சோர்ந்து செத்து விழுகிறது.
புலியைப்
பார்த்து அசையாமல் நின்ற நாம் பின்தொடர்ந்த மனிதர்கள் இப்போது ஓட்டமும் நடையுமாகச்
சென்று மிச்சமிருந்த மானின் உடலையும் புலியின் உடலையும் தூக்கிக் காட்டுக்குள்
சென்று ஒரு திடலை அடைகிறார்கள். அங்கு ஏற்கனவே நாம் பார்த்தது போன்று நெருப்பும்
அதைச் சுற்றி முதியோர், குழந்தைகள் சூலிப் பெண்கள், குழந்தைகள், சிறார்கள் என்று
ஒரு கூட்டம் இவர்களுக்காக் காத்திருக்கிறது. அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்திருந்த
மீன், விலங்குகளின் உலர்ந்த கருவாட்டையும் மான், புலி ஆகியவற்றின் இறைச்சியையும்
பகிர்ந்து தாங்களும் உண்டு உறங்கச் செல்கின்றனர். சிலர் உறங்காமல் காவல்
காக்கின்றனர். நாமும் உறங்குவோம்.
ஆனால் என்ன இது? கதிரவன் மறையத்
தொடங்கும் முன்னரே வந்திறங்கிய குளிர் நேரம் செல்லச் செல்ல மிகுந்து இப்போது தாங்க
முடியாத அளவுக்கு உள்ளதே! ஆனால் இந்த மக்கள் தாங்கள் போர்த்தியிருக்கும் விலங்குத்
தோலின் பாதுகாப்பில் அயர்ந்து தூங்குகிறார்கள்.
ஒருவழியாக நேரம் விடிந்துவிட்டது. இதோ
இந்தப் பக்கம் கடலுக்கு எதிர்த் திசையில் பாருங்கள். கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு
காடு. ஆனால் பசுமையே இல்லைய! மரங்கள் பட்டுப் போய் நிற்கின்றனவே! அதையும் தாண்டி
நெடுந்தொலைவுக்கு அப்பால் தெரியும் உயர்ந்த மலைப் பகுதி வெண்பனியைப் போர்த்தி இருப்பதைப்
பாருங்கள்.
கதிரவன்
தோன்றிவிட்டது. அது மேலே ஏறும் முன் அந்தக் கடற்பகுதியைக் கடந்தாக வேண்டும்.
விரைந்து வாருங்கள்.
இப்போது நாம் கண்ட காட்சிகள் பனி முன் நகர்வுக் காலம் எனப்படும்
ஓர் ஊழிக்குரியது. புவியின் வெப்பம் குறைந்து நிலப்பரப்பிலிருந்து வெளியேறும்
நீராவியில் பெரும் பகுதி மலை முகடுகளிலும் வெப்பம் குறைந்த வட, தென் முனைகளிலும்
பனிக்கட்டியாகப் பொழிவதால் சிறிது சிறிதாக கடல் மட்டம் தாழ்ந்து அதனால் கடற்பரப்பு
சுருங்குவது இதன் விளைவு. கடலடித் தரை அப் பகுதிகளில் வெளிப்பட்டு மணற்பாங்கான
பாலைநிலங்கள் தோன்றும். இதனால் காடுகள் குறைந்துவிடும். காட்டில் வாழும்
விலங்குகள் அருகும். சூழலுக்குத் தக தம்மை அமைத்துக்கொள்ளத் தக்கவை அதற்கேற்ப
தங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளும்.
உலகில்
வாழும் நிலைத்திணைகளுக்கும் விலங்குகளுக்கும் இணையாக நிலைத்திணை அலைவான்கள்,
விலங்கு அலைவான்கள்(phytoplankton and zooplankton) எனும் நுண்மிகள் ஆழ்கடலில்
வாழ்கின்றன. அவற்றிலிருந்துதான் நிலத்தில் நிலைத்திணைகளும் விலங்குகளும்
உருவாகியிருக்க வேண்டும். விலங்குகள் பெருகி நிலைத்திணைகளை அழித்து அவற்றுக்குத்
தேவையான உணவில்லாத போது அவற்றில் சில ஊனுண்ணிகளாக மாறி பிறவற்றை அழிக்க அதனால்
நிலைத்திணைகள் செழித்தாலும் அவற்றை உண்டு வளர தழையுண்ணிகள் போதாமல் ஊனுண்ணிகளும்
அழிய மீண்டும் சிறிது சிறிதாக தழையுண்ணிகளும் ஊனுண்ணிகளும் பெருக இவ்வாறான
சுழற்சிக்கும் புவி வெப்பமடைதல், மழைச் சீர்மை தவறுதல், பனி உருகுதல், நிலப்பரப்பு
குறைதல், விலங்குகளுக்கு உணவின்றி காடுகள் சுருங்குதல், அதனால் விலங்குகள்
அருகுதல், அதனால் மீண்டும் காடுகள் துளிர்த்தல், விலங்குகள் மீள்தல், வெப்பம்
குறைதல், பனிப்பாறைகள் மீள்தல் என்ற சுழற்சிக்கும் தொடர்பு உண்டு[1].
இத்தகைய பனி முன் நகர்தல்
ஊழி ஒன்றில் உடலெங்கும் நீண்ட அடர்த்தியான மயிருடன் பெரும் பெரும் யானைகள்
மலைகளில் வாழ்ந்ததாகவும் பனி கரைந்து பெரும் மலைகளாக நகர்ந்து வந்த போது அவற்றுள்
சிக்கிப் புதைந்து போயிருந்தவற்றை ஆய்வாளர்கள் கண்டு உரைத்திருக்கின்றனர்.
இங்கு
நாம் கண்டவற்றுள் முகாமையானது வெப்பத்தின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள
விலங்குத் தோலால் உடலைப் போர்த்துக்கொள்வது. வெப்பத்தை எதிர்கொள்ள உடலைத்
திறந்துவைப்பதைத்தான் நாம் அறிவோம். ஆனால் உடலை முழுமையாக மூடிவைக்கும் மக்களும்
உலகில் வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டு: அரபு நாடுகள்.
உலகின்
வெப்ப மண்டலத்தை இரு வகையாகப் பிரித்திருக்கிறார்கள், ஈரமானது, வரண்டது என்று.
தென்னிந்தியா ஈரமான வெப்பப் பகுதியாகும். அரேபியா போன்ற நிலப்பரப்புகள் வரண்ட
வெப்பப் பகுதிகளாகும். ஈர வெப்பப் பகுதிகளில் உடம்பிலிருந்து வெளிப்படும் வியர்வை
உலராததே இங்கு சிக்கல், அதனால் வியர்வை ஈரத்தை உறிஞ்சும் வகையில் உடல் மீது காற்று
வீசுவது இன்பமாகும். அதற்காகவே நாம் காலங்காலமாக வகைவகையான விசிறிகளை
வைத்துள்ளோம். குறைந்த உடையுடன் திரிவதை விரும்புகிறவர்களாக இருந்தோம். அதைப்
பார்த்த மோகன்தாசு கரம்சந்து காந்தி, தமிழக மக்கள் திறந்த உடம்புடன் திரிவது
ஏழ்மையினால் என்றும் அதனால் அவர்களின் ஏழ்மையை மாற்றுவதாகச் சூளுரைக்காமல் தானும்
திறந்த உடம்புடன் திரிந்து நாடகமாடினார்.
தமிழகத்தின்
ஆடைப் பண்பாடு அவ்வளவு எளிமையாக விளக்கக்கூடியதல்ல. பண்ணையார்கள் குடையின் நிழலில்
மெல்லிய வேட்டியுடனும் மேல் துண்டுடனும் வலம் வர ஏழைகளும் “தாழ்ந்த” சாதியினரும்
அவர்களுக்கு இணையாகவோ கூடுதலாகவோ ஆடை அணியத் தடை இருந்ததுதான் தமிழக திறந்த உடைப்
பண்பாடு. அதற்கு இங்குள்ள தட்பவெப்ப நிலையும் ஒத்துழைத்தது.
ஆனால்
பண்டைத் தமிழர்கள் சட்டையாகிய மெய்ப்பையையோ சல்லடம் எனும் காற்சட்டையையோ
அறியாதிருக்கவில்லை.
படை விரர்களும்
அரசர்க்குச் சேதி கோண்டு செல்வோரும் மேல் சட்டை எனும் மெய்ப்பை அணிந்திருந்தனர். சிலப்பதிகாரம்
கால்கோட் காதை வரி 137 – 8இல்,
சஞ்சையன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர்…..
என்று வருவதற்கு “சஞ்சயனை முதலாகக் கொண்ட
மயிர்க்கட்டைப் பெற்ற சட்டையிட்ட தலைவர் “ என்று வேங்கடசாமியார் பொருள்
கூறியிருக்கிறார்.
கொலைக்களக்
காதையில் மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லனைக்
காட்டுகிறார்.
தென் மாவட்டங்களில்
வழிபடப்படும் சுடலைமாடன், கருப்பணசாமி போன்ற தெய்வப் படிமங்களில் சல்லடம் எனும்
குறுங்கால் சட்டைகளைக் காணலாம். அத் தெய்வங்கள் மேலேறி ஆடுவோரும் அவ் வுடை
அணிவதைக் காணலாம்.
பழைய
பண்ணையார்களின் பின்னடிகள் இன்றும் இல்லாமல் போகவில்லை. படித்து “மேல்நாட்டு”
உடைகளுடன் வலம் வந்துகொண்டே திறந்த உடம்புடன் திரிவதுதான் நம் தட்பவெப்பத்துக்கு
உகந்தது என்போர்தாம் அவர்கள். ஆனால் அவர்களை எவரும் “சட்டை” செய்வதில்லை என்பது
மகிழ்ச்சிக்குரியது. உடலைப் போர்த்துவது வெப்பத்தைத் தாங்குவதற்கு மட்டுமல்ல,
காற்று, தூசி, விண்ணிலிருந்து இறங்கும் இனந்தெரியாத கதிர்களின் விளைவுகளின்
தாக்குதலையும் தாங்கத்தான். வெற்றுடம்புடன் வெய்யிலில் பணி செய்வோரின் தோல் கருகி,
சுருக்கம் விழுந்து அகவைக்கு மிஞ்சிய முதுமையை உருவாக்கிவிடும். எனவே நம் நாட்டுப்
பஞ்சிலிருந்து உருவாகும் பருத்தித் துணிகளை ஏற்றுமதி செய்து தரகு பார்க்கும் நம்
ஆட்சியாளர்களைத் தடுத்து ஈரத்தை உறிஞ்சும் தன்மையுள்ள பருத்தி ஆடைகளால் நம் உடலை
தேவையான அளவு போர்த்திக்கொள்வது இன்றியமையாதது.
ஆனால்
வரண்ட வெப்பப் பகுதிகளில் காற்று நேரடியாக உடலில் பட்டால் அது உடலிலுள்ள ஈரத்தை
உறிஞ்சுவதால் உடல் வரண்டு சாவைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் உடலை காற்று
தீண்டாமலிருக்க ஆடை கொண்டு மூடி வைத்துள்ளனர். ஆடவர்க்கு தாடிப் பாதுகாப்பு
இருப்பதால் முகத்தை மூடுவதில்லை. அது மட்டுமல்ல குடியிருப்புகளை அமைப்பதிலும் ஈர
வெப்பப் பகுதிகளுக்கும் வரண்ட வெப்பப் பகுதிகளுக்கும் இரு வகை கிடப்புநிலைகளைப்
பரிந்துரைக்கின்றனர் நகரமைப்புத் துறையினர். ஈர வெப்பப் பகுதிகளில் நல்ல
காற்றோட்டம் கிடைக்கும் வகையில் வீடுகளுக்கிடையில் இடம் விட வேண்டும் என்று
வரையறுத்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பாக நகர்ப் புறங்களில் நாம் இதைக்
கடைப்பிடிப்பதில்லை. ஆனால் அங்கும் பழைய பண்ணையார்கள் நாற்புறங்களிலும் தாராளமாக
வெற்றிடம் விட்டு வளமனைகளைக் கட்டியிருந்தார்கள். இன்றும் பெரும் பணக்ககாரர்கள்
அதைக் கடைப்பிடிக்கிறார்கள்.
வரண்ட வெப்பச் சூழலில் வீடுகளை
இடைவெளியில்லாமல் கட்டுவதுடன் வீட்டுக்குள் காற்று நேரடியாக நுழையாத வகையில்
திறப்புகளை வைப்பதைப் பரிந்துரைக்கின்றனர். இப்போதைய புதிய பெரிய கட்டடங்களில்
வெய்யில ஏற ஏற திறப்புகளைச் சிறிது சிறிதாகச் சுருக்கும் தானியங்கி சாளரங்களை
வடிவமைத்துள்ளனர்.[2]
உலகில் பனிப்படர்வு
குறைந்திருப்பது கடகக் கோடு, சுறவ(மகர)க் கோடு எனும் இரு திருப்புகை(tropical)[3]ப்
பகுதிகளுமாகும். எனவே பனிப்படர்ச்சிக் காலத்தில் உணவு தேடிய மனிதன் சுறவக்
கோட்டுப் பகுதியை நோக்கிச் சென்றிருப்பான். அப்பொழுது வட அரைக்கோளத்தில் மனிதன்
குடியேறவில்லை அல்லது தென் அரைக்கோளத்தில் மட்டும் இருந்த அன்றைய உலகின் மொத்த நிலப்பரப்பு
புவிநடுக் கோட்டைத் தாண்டி பெருந்தொலைவு வடக்கே சென்றிருக்கவில்லை, அதாவது
நிலநடுக்கோட்டுக்கு வடக்கிருக்கும் கடக வரைப் பகுதியில் நிலப்பரப்புகள் இருக்கவோ
இருந்திருந்தாலும் மனிதர்கள் வாழ்ந்திருக்கவோ வாய்ப்புகள் இல்லை.
தெக்கன் எனப்
பொருள்படும் தக்கன்(தக்சன்), யாம திசை எனப்படும் தென்திசையைப்
பெயராகக் கொண்ட யமன்(இயமன், எமன்), காலன் என்று காலத்தோடு இணைத்துப்
பெயர் பெற்ற தெய்வம் ஆகிய நம் வானியல், காலக் கணிப்புடன் தொடர்புடைய பெரு மக்கள்
தெற்கே வாழ்ந்திருப்பதால் நம் தொடக்க கால நாகரிக வளர்ச்சியில் சுறவக் கோட்டுக்குத்
தெற்கிலிருந்த நிலப்பரப்புக்குக் குறிப்பிடத்தக்க பங்குண்டு. இராவணனைக் கூட “கதிரவனைத்
தன் நாட்டுக்குள் வரவிடாமல் தடுத்தவன்” என்று அபிதான சிந்தாமணி
கூறுவதிலிருந்து அவன் நாடாகிய தொல் இலங்கை சுறவக்கோட்டுக்குத் தெற்கில்
இருந்ததென்று கொள்ள வேண்டியுள்ளது.
சுறவக் கோட்டுப்
பகுதியில நிலவிய கடும் வெப்பத்தையும் குளிரையும் தாங்க முடியாத விலங்குகள் மடிய
அவற்றின் தோலை உடல் மறைப்பாகப் பயன்படுத்திய மனிதன் தன்னை நிலைப்படுத்திக்
கொண்டான். மனிதனின் திரிவாக்கத்தில் அவனது முந்தைய எல்லா நிலைகளிலும் அவனுடலில்
அடர்த்தியான மயிர்ப் போர்வை இருந்தது. அப் போர்வை அகல்வதற்கு நாம் இப்போது கண்ட
காட்சி சுட்டும் சூழ்நிலைதான் காரணமாக இருக்க வேண்டும்.
மக்கள்
கூட்டங்களுக்கிடையில் உடல் மயிர் அடர்த்தியில் அளவியல் வேறுபாடுகள் இருந்தாலும்
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் வேறுபாடு இனவகை சார்ந்ததாகும்.
மனிதன் உட்பட
பெரும்பாலான உயிரிகளுக்கு மயிர்க் கால்கள் வியர்வைச் சுரப்பிகளாகவும்
செயற்படுவதால் வரண்ட வெப்பப் பகுதிகளில் வாழ்ந்த விலங்குகள் அழிந்திருக்க வேண்டும்
அல்லது அங்கிருந்து வேறிடங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் பாலை
நிலங்களிலுள்ள நிலைத்திணைகள் பஞ்சு போன்ற தண்டுப்பகுதிகளுடன் காற்று வெளியேற
முடியாத தோல் அமைப்புடன் அமைந்துள்ளன. ஒட்டகம் எனும் பாலைநிலத்து விலங்கின் உடலில்
வியர்வைச் சுரப்பிகள் கிடையா[4].
கருநிற உடல் கொண்ட
யானை, எருமை, பன்றி, காகம் போன்றவை நம் நாட்டு வெப்பநிலையைத் தாங்க முடியாமல்
தண்ணீரில் நனைவதை மிகவும் விரும்புகின்றன. எருமையும் பன்றியும் சேற்றில் புரள்வதை
விரும்புகின்றன. யானை தன் மீது மண்ணை அள்ளி வீசி தன் உடலில் கருமையை கதிரவ
வெப்பத்திலிருந்து மறைத்துக்கொள்கிறது. அத்தகைய காட்டு யானைகளின் முதுகின் மீதுள்ள
மண்ணில் புல் கூட முளைத்திருக்கும் என்று கூறுகிறார்கள்.
காட்டில் குளிர்ந்த
சூழலில் வாழ்ந்த யானை, எருமை போன்ற விலங்குகள் வெட்டவெளியில் மனிதர்களிடையில்
வளரும் போது அதன் முரட்டுத் தன்மையை இழக்கின்றன என்கின்றனர். இந்தியாவிலிருந்து
ஆத்திரேலியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட எருமைகள் அங்குள்ள அடர்ந்த காடுகளுக்குள்
ஓடி நாளடைவில் முரட்டுத்தன்மை அடைந்துவிட்டன என்று முன்பொரு செய்தி வெளியானது.
யானைத்
தோலால் ஒரு காலத்தில் நம் மக்கள் உடலைப் போர்த்தியிருந்தனர் என்பதற்கு ஒரு சான்றை சிலப்பதிகாரத்தில்
காண முடிகிறது. வேட்டுவ வரி பாடல் 7இல்
ஆனைத்தோல் போர்த்துப் புலியின்
உரியுடுத்துக் கானத்தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
என்று கொற்றவையைப் போற்றுவதுதான் அது.
மங்கோலிய இனத்தைச்
சேர்ந்த மக்கள், குறிப்பாக செவ்விந்தியர்களுக்கு உடல் மயிர் மிகக் குறைவு.
முகத்தில் மயிர் என்பதே இருப்பதில்லை. அதே வேளையில் நீண்ட தலைமுடி உண்டு. அவர்களின்
முகத்தைப் பார்த்து ஆணா பெண்ணா என்பதை அறிவது கடினம். பிற மக்களிடையிலும் உடல்
மயிர் அடர்த்தியில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. பண்டை மக்கள் குழுவினர்
ஒரே தன்மையான சூழ்நிலையில் தங்கள் உடல் மயிரை இழக்கத் தொடங்கி வெவ்வேறு
தட்பவெப்பமுள்ள இடங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பெயர்ந்துகொண்டிருந்ததன்
விளைவுதான் இன்றைய இத்தனை உடற்கோலங்கள். இன்றும் அமேசான் அடர்காடுகளில் வாழும்
செவ்விந்தியர்கள் உடையின்றி வாழ்கின்றனர் என்பது அத்தகைய கோலங்களுள் ஒன்று.
மனிதர்களின் உடல் நிறத்துக்கு அவர்கள் வாழும்
நிலத்தின் வெப்ப நிலை மட்டுமின்றி சூழல் நிறமும் காரணமாகலாம். கருப்பின மக்களின்
நிறத்துக்கு வெப்பம் காரணமாக இருப்பதைவிட அவர்கள் வாழ்ந்த இருண்ட அடர் காடுகளும்,
வெள்ளையர்களுக்கு அவர்கள் வாழும் பனி படர்ந்த நிலமும் அரேபியர்களுக்கு அவர்களின்
பின்னணியிலுள்ள பாலை மணலும் காரணமாகலாம். பெரும்பான்மை இந்தியர்களின் மா(மை)நிறம்,
ஈரமான, அடர்த்தி குறைந்த காட்டுப் பகுதி காரணமாக இருக்கலாம். அது மட்டுமல்ல
உலக மக்களிடையில் காணப்படும் வகைவகையான
உடல் வண்ணங்களுக்கு அவர்களிடையில் காலங்காலமாக நிகழ்ந்து வரும் கலப்புக்கும்
முகாமையான பங்குண்டு.
நாம் இப்போது கண்ட
காட்சிகளில் முகாமையான இன்னொரு கூறு தோல் தொழிலின் தோற்றமும் வளர்ச்சியுமாகும்.
நம் தொன்மங்களில் சிறப்பாகப் பேசப்படும் முன்னோர்களில் ஒருவன்
இடபன், அதாவது ரிசபன். ரிசபம் என்றால் காளை, பொதுவாக மாடு. இவ்வாறு
ரிசபன் என்பவன் மாடன். அதாவது மாடன் என்று எளிய மக்கள் வழிபடும் தெய்வமே சமற்கிருதம்
அறிந்தவர்கள் போற்றிப் புகழும் ரிசபன்.
ரிசபன் கதையை அபிதான சிந்தாமணியிலிருந்து
தொகுத்தால் கிடைப்பது: யூத மறையில் வரும்
ஆதாம், ஏவாள் கதையைப் போன்ற ஒன்று. பிரமனின் வலது பாகத்திலிருந்து சுயாயம்பு
மனுவும் இடப் பாகத்திலிருந்து சதரூபை என்ற பெண்ணும் தோன்றுகின்றனர். இவர்களுக்கு
பிரியவிரதன், உத்தானபாதன் எனும் இரு மகன்களும் மூன்று மகள்களும் பிறக்கின்றனர்(சுவாயம்புமனு
பார்க்க). இவர்களில் பிரியவிரதன் என்பவன் பெரிகசுமதி என்பவளைச் சேர்ந்து அக்கினியித்திரன் முதல் பத்து மகன்களையும் மூன்று
மகள்களையும் பெற்றான்; பத்து மகன்களில் மூவர்
ஓகிகள், அதாவது துறவிகளாகி விட, எஞ்சிய ஏழு பேருக்கும் ஏழு தீவுகளாகிய
சம்புத்தீவு, சான்மலி, கிரவுஞ்சம், சாகம், புட்கரம், பலச்சம், குசத்தீவு என்ற
பெயர்கள் கொண்ட நிலங்களை உரிமையாக்கினான். அதில் அக்கினியித்திரன் சம்புத்தீவைப்
பெற்றான்(பிரியவிரதன் பார்க்க).
சம்புத்திவு என்பது தமிழில்
நாவலந்திவு எனப்படும். நாவலம் என்ற சொல்லுக்கு நாவன்மை, அதாவது சொல்வன்மை என்றொரு
பொருள் உண்டு. சிலப்பதிகாரம் கட்டுரை காதையில் கூறப்படும் பராசரன்
எனும் பார்ப்பனன் வாதில் வென்றதை நாவலங்கொண்டு நண்ணா ரோட்டி...
(வரி.71) என்பதற்கு “நாவானே தருக்கித்து வெற்றி கொண்டு” என்றும் நாவலம் என்பதற்கு “நாவான் வரும் வெற்றி” எனவும் பொருள் சொல்லப்பட்டுள்ளது (பார்க்க. க.மு. வேங்கடசாமி நாட்டார்
உரை, கழக வெளியீடு 1999 சூலை, பர்.476). முன்னாளில் பிறரை வாதுக்கழைப்போர் ஒரு
சிறு நாவல் மரக் கிளையை ஒடித்து நட்டுவைத்து “நாவலோ நாவல்” என்று முழக்கமிடுவாராம். நாவன்மை என்ற பொருளையும் நாவல் மரத்தையும்
குறிப்பிடும் ஒரே சொல்லாக இருந்ததால் நாவல் மரத்தை அதற்கு அடையாளமாக் கொண்டனர்
என்று சொல்லலாம். இதைத் தொன்மம் எழுதிய சமற்கிருதவாணர் புரிந்துகொள்ளாமல் நாவல்
மரத்துக்குரிய சம்பு என்ற பெயரை அத் தீவுக்கு இட்டதுடன் பிற தீவுகளுக்கும் மரங்கள்
அல்லது விலங்குகள், பறவைகளின் பெயரையே வைத்துவிட்டனர்.(தமிழ்ப் பெயர்களை
சமற்கிருதம் ஆக்குவதில் இவர்கள் செய்துள்ள குளறுபடிகளும் கோமாளித்தனங்களும்தாம்
எத்தனை யெத்தனை!)
நாவலந்தீவு என்பதற்கு மொழி பேசும்
மக்கள் வாழ்ந்த தீவு, அதாவது இன்றைய மொழியில் கூறுவதாயின், கண்டம், நாவலந்தீவு எனப்பட்டது. பிற கண்டங்களில்
மக்களே வாழவில்லையா அல்லது வாழ்ந்த மக்கள் மொழி பேசும் வல்லமையைப்
பெற்றிருக்கவில்லையா, அல்லது அவர்கள் பேசிய மொழி நாவலந்தீவு மக்களுக்குப்
புரியவில்லையா என்பது புரியவில்லை. தமிழ் அறிந்த மொழி வல்லுநர்களின் கருத்துப்படி
உலகிலுள்ள கண்டங்களில் தமிழ் மொழியை அடித்தளமாக அமைந்த மொழிகளே வழக்கிலிருக்கின்றன
என்ற உண்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது முதன்முதலில் மொழி பேசியவர்கள்
நாவலத் தீவு எனப்படும் பரத நாட்டு மக்களே என்பது தெளிவாகும்.
அக்கினியித்திரன் மகன் நாபி(நாபி
பார்க்க). அவன் மகன் ரிசபன் எனப்படும் இடபன்(இடபன் பார்க்க). இவ்வாறு
நாவலந்தீவு மாடனுக்கு(ரிசபனுக்கு)க் கிடைத்தது. இடபனைப் பற்றி
அபிதான சிந்தாமணி கூறுவது: …இவர் மகாசித்தராய் மலமுதலானவற்றால் பூசப்பட்டாலும்,
நல்ல மணமுடையவராய் ஆகாயகமனம் முதலியன செய்துகாட்டி, யோகியர்கள் சரீரத்தை விடுகை இவ்
வகையென்று விட்டுக் காட்டினர். பிறகு இவர் தேகம் மாத்திரம் யோகவாசனையால் சஞ்சரித்துக்கொண்டிருந்தது.
பின்னர் அத் தேகம் குடனசலமென்னும் காட்டருகு பித்தனைப்போல் மயிர்விரித்தலையக் காட்டுத்தீயாற்
றகிக்கப்பட்டது. இவரை ருசபதீர்த்தங்கரரென்று சைனர் கூறுவர்….
இவ்வாறு சூழல் கொடுமையிலிருந்து தோலாடைகளால்
காக்கப்பட்ட நம் முன்னோர் இயற்கையாக அமைந்த அதைவிட வன்மை குறைந்த அடர் மயிர்ப் போர்வை
தேவையற்றதாகிவிட அதனை இழந்தனர் என்று கூறலாம். ….இவர் தேகம் மாத்திரம் யோகவாசனையால்
சஞ்சரித்துக்கொண்டிருந்தது. பின்னர் அத்தேகம் குடனசலமென்னும் காட்டருகு பித்தனைப்போல்
மயிர்விரித்தலையக் காட்டுத்தீயாற் றகிக்கப்பட்டது என்று அபிதான சிந்தாமணி
தரும் செய்தி மயிர் உதிர்ந்ததைச் சுட்டும் ஒரு குறியீடா?
தோல் பதப்படுத்தும் நிகழ்முறையில் அது
தாங்க முடியாத தீநாற்றத்தை வெளிப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. தோலில் ஒட்டியிருக்கும்
சதைப் பகுதி அழுகி நெய்ச்சத்து உருகும் கட்டத்தில் அதில் வெளியேறும் நச்சு வளிகள்தாம்
இதற்குக் காரணம்.
அதனால்தான் இயற்கையில் நிகழ்ந்த தோல் பதப்படும் நிகழ்ச்சியைச்
செயற்கையில் செய்து பார்த்த மாடனைச் சுற்றி நிலவிய தீநாற்றம் மாடன் தன் உடலில் மலத்தைப்
பூசிக்கொண்டு திரிந்தார் என்ற தொன்மப் பதிவாகியுள்ளது.
இவ்வாறு ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழந்த நம்
முன்னோர்கள் நிகழ்த்திய இவ் விறும்பூது அவர்கள் உடலில் அடிப்படையான மாற்றத்தைச் செய்து
இன்றைய மென்மயிர் போர்வையைத் தந்தது. விலங்குகளிலிருந்து தோல் பெறுவது மாட்டைப் பொறுத்தவரை
எளிதான ஒன்று, ஏனென்றால் முந்து வரலாற்றுக் காலத்தில் நம் மூதாதையரின் முகாமையான உணவு
அவர்கள் வளர்த்த கால்நடைகளாகவே இருந்தது. எனவே மாட்டுத் தோலால் மனிதனுக்குப் போர்வையை
உருவாக்கிக் காட்டிய மாமனிதனை மாடன் என்ற பெயரால் அழைத்துத் தெய்வ நிலைக்கு உயர்த்தினர்.
இந்த மாடனை சங்கதப்படுத்தி(சமற்கிருதப்படுத்தி) ரிசபன் என்றனர். அதை இடபன் என்று மீண்டும்
“தமிழ்ப்படுத்தி”யுள்ளனர். இந்த மாடனைத் தமது முதல் ஆசானாகக் கொண்ட அம்மணர்கள்
“உடலில் மலத்தைப் பூசிக்கொண்டு அலைந்தாலும் மாடனின் உடம்பு நறுமணத்துடன் திகழ்ந்தது”
என்று அமைதி கூறிக்கொண்டிருக்கின்றனர். மாடனின் ஒரு வடிவம்தான் இன்றைய சிவன் என்பதற்கு
சிவனின் இடையில் காணப்படும் தோலாடை அசைக்க முடியாத சான்று. மாடனைப் பற்றிய மேலேயுள்ள
குறிப்பில் ….பித்தனைப்போல் மயிர்விரித்தலைய… என்பது சிவனுக்கும் பொருந்துவதைக்
காணலாம். சிவனுக்கு பித்தன் என்ற பெயர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தட்சன் என்ற சொல்லுக்கு இடபம்(காளை மாடு), சிவன், சேவல்,
தக்கன் என்ற
பொருள்கள் இருப்பதிலிருந்து தக்கன் வழிபாட்டிலிருந்தும் சிவனின் சில கூறுகள் பெறப்பட்டிருக்கின்றன
எனக் கொள்ள முடிகிறது. உண்மையில் தக்கிணாமூர்த்தி என்ற சிவனின் வடிவமே தக்கனது வடிவம்தான்
என்று தோன்றுகிறது. இடபன், அதாவது மாடன், சிவன் ஆகிய மனிதர்கள் அல்லது தெய்வங்கள் ஒன்றுக்குள்
ஒன்றாக அடங்கியிருப்பதும் தெளிவாகிறது.
காலங்காலமாக தோல் பதனிடும் தொழில் தமிழகத்திலும்
தென்னிந்தியாவிலும் செல்வாக்கு மிக்கதாக விளங்கி வருகிறது. அதனால் இத் தொழிலில் ஈடுபடுவோருக்கும்
பிறருக்குமான முரண்பாடுகள் பல்வேறு வடிவங்களில் பதிவாகியுள்ளன. Dravidian Gods in
Hinduism என்ற நூலில் எல்மோர் என்பவர் தரும் ஒரு செய்தி, ஒரு குறிப்பட்ட பண்டிகையில்
ஆந்திரத்தில் பார்ப்பனர்கள் பன்றிக் கறி சமைத்து தோல் தொழில் செய்வோரான சக்கிலியருக்கு
பந்தி வைத்துப் பரிமாறும் நிகழ்ச்சி பற்றிக் கூறுகிறார். அரிகர புக்கர்கள் விசயநகர
அரசை உருவாக்குவதற்கு முன் மடிகர்கள் எனப்படும் மக்கள் ஓர் அரசை அமைத்திருந்ததாக வரலாறு
கூறுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த மதுரை வீரனுடன்
மன்னன் திருமலைக்கு உருவான முரண்பாட்டில் சக்கிலியர்களை மலம் எடுப்பவர்களாகத் தாழ்த்தினான்
என்று கூறப்படுகிறது. சின்னத்தம்பி என்ற சக்கிலிய வீரன் திருடர்களிடமிருந்து மாடுகளை
நன்றாகக் காத்துவர அதைப் பொறுக்காத மேல் சாதியினர் அவனைத் திட்டமிட்டுக் கொன்றனர் என்று
சின்னத்தம்பி கதை என்ற கதைப்பாடல் குறிப்பிடுகிறது. முத்துப்பட்டன் என்ற பார்ப்பன
இளைஞன் உடன்பிறந்தவர்களான இரு சக்கிலியப் பெண்களை விரும்பி அவர்கள் தந்தை விதித்த கட்டுறவுக்காக
மாடு மேய்ப்பும் தோல் தொழிலும் கற்று மாட்டிறைச்சியையும் உண்டு அவர்களோடு வாழ்ந்து
திருடர்களிடமிருந்து மாடுகளைக் காத்துவந்தான். அவனது அண்ணன்மார் திருடர்களின் ஒத்துழைப்புடன்
அவனைக் கொன்றார்கள் என்று முத்துப்பட்டன் கதை என்ற கதைப்பாடல் கூறுகிறது. அதே
வேளையில் கட்டபொம்மனின் முன்னோர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகடைகள்[5] எனப்படும்
சக்கிலியச் சாதியினரை மன்னன் திருமலையின் ஆணைப்படி ஒடுக்குமுறைக்கு ஆளாக்காததால் ஆங்கிலர்களுடனான
கட்டபொம்மனின் போரில் அவர்கள் அவனுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினர்.
தோல் ஒரு முகாமையான வாணிகப் பொருள். செருப்பு தைப்பது
மட்டுமல்ல குளிர்ப் பகுதிகளில் ஆடையாகவும் பல காலகட்டங்களில் சாராயம் போன்ற நீர்மங்களுக்கான
கொள்கலன்கள் செய்யவும் அது பெருமளவில் பயன்பட்டுள்ளது. (ஆடுகளை மேய்த்துக்கொண்டு வெட்டவெய்யிலில்
அலையும் ஆடு மேய்க்கிகள் அண்மைக் காலம் வரை தலை, கால்கள் வெட்டப்பட்ட ஆட்டுத் தோல்களைத்
தைத்து அதனுள் குடிநீரை நிரப்பித் தோளில் கொண்டு செல்வதைக் காண முடிந்தது.) எனவே அத்
தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த செல்வமும் செல்வாக்கும் பெறும் வாய்ப்புண்டு. அத்தகைய
சூழல்களிலேயே இது போன்ற ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பபட்டன என்று கொள்ள வேண்டும்.
மாடனுக்கும் சிவனுக்கும் உள்ள உறவைக் காட்டும் ஓர் அரிய சான்று சிந்துவெளி அகழ்வுகளில் கிடைத்திருக்கும், அமர்ந்த நிலையில் அமைந்ததும் சிவனின் மூல வடிவம் என்று ஆய்வாளர்கள் விளக்குவதுமான முத்திரை. இதில் காணப்படும் இருக்கை(ஆசனம்) என்ன வகை என்று ஆய்வாளர்களால் இனம் காண முடியவில்லை. உள்ளங்கால்கள் இரண்டும் ஒன்றையொன்று நோக்கி இணைந்திருப்பது இதன் சிறப்பு. சென்ற தலைமுறையில் செம்மார்கள் எனும் தோல் தொழிலாளர்கள் அமர்ந்து இரு உள்ளங்கால்களின் இடையிலும் செருப்பை வைத்து அழுத்திப் பிடித்துத் தைத்த கோலம்தான் இது. சிவன், செம்மான் என்ற சொற்களில் செம்மை நிறம் பொதுக் காரணியாய் விளங்குவது கு றிப்பிடத்தக்கது.
மாடனுக்கும் சிவனுக்கும் உள்ள உறவைக் காட்டும் ஓர் அரிய சான்று சிந்துவெளி அகழ்வுகளில் கிடைத்திருக்கும், அமர்ந்த நிலையில் அமைந்ததும் சிவனின் மூல வடிவம் என்று ஆய்வாளர்கள் விளக்குவதுமான முத்திரை. இதில் காணப்படும் இருக்கை(ஆசனம்) என்ன வகை என்று ஆய்வாளர்களால் இனம் காண முடியவில்லை. உள்ளங்கால்கள் இரண்டும் ஒன்றையொன்று நோக்கி இணைந்திருப்பது இதன் சிறப்பு. சென்ற தலைமுறையில் செம்மார்கள் எனும் தோல் தொழிலாளர்கள் அமர்ந்து இரு உள்ளங்கால்களின் இடையிலும் செருப்பை வைத்து அழுத்திப் பிடித்துத் தைத்த கோலம்தான் இது. சிவன், செம்மான் என்ற சொற்களில் செம்மை நிறம் பொதுக் காரணியாய் விளங்குவது கு றிப்பிடத்தக்கது.
மேலே தரப்பட்டுள்ள
பெரும்பாலான நேர்வுகளில் மாடு, குறிப்பாக எருமை மாடுகளை வளர்ப்போரும் தோல் தொழில் செய்வோரும்
ஒரே சாதியினராக இருக்க, தமிழகத்தில் ஆமாடுகளை வளர்க்கும் இடையர்களுக்கும் கசாப்பு எனப்படும்
இறைச்சி, அதாவது ஆட்டிறைச்சித் தொழிலுடன் இணைந்த, தோலை உரித்து பதப்படுத்தத் தருவோருக்கும்
ஒரு சாதி உட்பிரிவு முரண்பாடு உள்ளது. இறைச்சித் தொழில் பிரிவினரைச் சீவு இடையர்கள்
என்று நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த இரு பிரிவினரும் தாங்கள்தாம் மற்ற
பிரிவினரை விட உயர்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். பாளையங்கோட்டை பழைய நகரமைப்புப்
படி பார்த்தால் மாடு வளர்ப்போருக்கு நகரின் உள் பகுதியில்(தெற்கில்) குடியிருப்பு உள்ளது.
அதை ஒட்டி அதற்கும் தெற்கில் மந்தைவெளி உள்ளது. அதே வேளை சீவு இடையர்களுக்கு நகர் எல்லைக்கு
வெளியே வடக்கில் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்பை ஒட்டி மேற்கில் செம்மார்களின்
குடியிருப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ஆடு, மாடு, எருமை வளர்ப்பதும்
அவற்றை அறுத்து இறைச்சியையும் தோலையும் எடுப்பதும் தோல் பொருட்கள் படைப்பதும் ஆகிய
தொழில்களைச் செய்வோர் சாதி வரம்புகளைக் கடந்தோராகக் காணப்படுகின்றனர். இவர்கள் காலவோட்டத்தில்
அரசியல் சூழல்களால் பிற அனைத்துச் சாதிகளிலும் நேர்ந்துள்ளதைப் போல் ஒரு சாதியிலிருந்து
இன்னொன்றுக்கு மாறியிருக்க நிறைய வாய்ப்புண்டு.
நம் நாட்டில் மாடு இறந்தால் அதன் தோலை உரித்து
இறைச்சியை உண்போர் பறையர்கள் என்போரைக் குலப் பூசகர்களாகக் கொண்டவர்களாகிய, முற்காலத்தில்
புலையர்கள் என்று அறியப்பட்டவர்களும் சக்கிலியர்களும் ஆவர். வரலாற்றுக் காலத்தில் மாடு
இறைச்சிக்காக கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பாலுக்காகவும் பொதிகள் சுமக்கவும்
உழவுக்கும் வண்டி இழுக்கவும் வளர்க்கும் மாடுகள் சாகும் போது அவற்றின் தோல்கள் உரிக்கப்பட்டுவிடுவதால்
மொத்த மாட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப தோல் கிடைப்பதில் எந்தக் குறைபாட்டுக்கும் வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள
காட்டில் மேய்ந்த மாடுகளின் மீது ஏதோ வேதிப்பொருளைத் தடவி உயிருடன் அவற்றின் தோலை உரித்து
உடலைத் துடிக்கத் துடிக்க சிலர் விட்டுச் சென்ற கொடுமை நடந்ததை நான் கண்டுள்ளேன்.
தோல் தொழிலில்
முதல் நிலையில் உப்பைத் தூவி பாதுகாத்து தொழில் நடுவங்களுக்கு விடுக்கின்றனர். தொடர்ந்து
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பாடம் செய்கின்றனர். இந் நிலையில் தொழிலகங்களிலிருந்து
வெளியேறும் கழிவுகள் ஆகிய நச்சுப்பொருள்கள் மிகுந்த பெரும் சூழல் கேட்டை உருவாக்குவது
இன்று தீர்க்கப்படாத ஒரு பெரும் சிக்கலாக உருவெடுத்து நிற்கிறது.
நமது மரபு வழியில் தோல் பாடம் செய்வதற்கு
நம் நாட்டில் வெட்ட வெளிகளில் தாராளமாக வளரும் ஆவாரம் செடியின் தோலைப் பயன்படுத்தியதாகவும்
அதில் வெளிப்படும் கழிவுகள் நச்சுத் தன்மை இன்றி வேளாண்மையில் பயன்படுத்தும் தரத்தோடு
இருந்ததாகவும் அத் தொழிலில் ஈடுபட்டிருந்த மரபுத் தொழில் அறிந்தவர்கள் மூலம் தெரியவந்ததாக
வைகைக் குமாரசாமி என்ற நண்பர் கூறினார். பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட நீர்மத்தின்
நிறத்தின் அடிப்படையில்தான் அத் தொழிலில் ஈடுபட்டோருக்கு செம்மார் என்ற பெயர் ஏற்பட்டிருக்கும்.
[1]
இன்று அத்தகைய ஒரு புவி வெப்பமாதல் கட்டத்தில் புவி
இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு சூழலை மாசுபடுத்தும் தொழில்களும் சூழலைப்
பேணும் முனைப்பில்லாத ஆட்சியாளர்களும்தாம் காரணங்கள். சூழல் கேடுதரும் தொழில்களை தங்களது
கையாள்களை ஆட்சியாளர்களாக்கி வல்லரசுகள் வைத்திருக்கும் ஏழை நாடுகளுக்குத்
திருப்பிவிட்டாலும் அதன் விளைவுகள் புயலும் வெள்ளமுமாக வல்லரசு நாடுகளை
அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டது கண்கூடு. உண்மையில் புவி வெப்பமடையவில்லை,
குளிர்ச்சிதான் அடைந்துருக்கிறது என்பது அறிவியலாளரில் ஒரு சாரரின் கூற்று. இந்தக்
கருத்துப் போர் பற்றி எல்லாம் விரிவாகப் பேச இங்கு இடம் போதாது.
[2]
விரிவுக்கு Town Planning in Hot Climates,
A.Rimsha, Mir Publishers,Moscow, 1976 பார்க்க.
[3] .Gr. tropos, a turning (CHAMBERS TWENTIETH CENTURY
DICTIONARY)
[4]
நாய்க்கும் உடலில் வியர்வைச் சுரப்பி கிடையாது.
அதனால்தான் அது களைப்படையும் வேளைகளில் நாக்கின் வழி நீரை வெளியேற்றி வெப்பத்தைத்
தணித்துக்கொள்கிறது. ஈரமான இடங்களைத் தேடிப் படுத்துக்கொள்கிறது. அதனால்தான் நாய்
எந்த தட்பவெப்ப நிலைக்கும் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் என்று உயிர்நூலார்
கூறுகின்றனர்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக