குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 10
7. ஆறென்றால் வழியாகும்
(தோரா.
தி.மு. 3,00,000 )
நாம் ஒரு கடற்கரையில் நிற்கிறோம். மாலை நேரம்.
கடற்கரையை ஒட்டி வெண்மணல் திட்டு.
அதற்கடுத்தாற் போல், தென்னை மரங்களும் ஈச்ச மரங்களும் வளர்ந்திருக்கின்றன.
கடற்கரையோரப் புற்கள் புதர்களாக மண்டிக் கிடக்கின்றன. கடற்கரையிலிருந்து
கடலுக்கும் கடலினுள்ளிருந்து கரைக்குமாக நண்டுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
சிறுவர்கள் அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
புதர்கள் அழிக்கப்பட்டுத் தென்னை மரங்களும் ஈச்ச மரங்களும் கூரைகள்
போன்று அமைந்திருக்கும் ஓரிடத்தில் மாந்தர்கள் கூடியிருக்கறார்கள். ஒரு புறம்
நெருப்புப் புகைந்துகொண்டிருக்கிறது. மரங்களில் பாம்பு, ஆண்குறி ஆகிய உருவங்கள்
தீட்டப்பட்டுள்ளன. அவர்கள் நடுவில் பல மீன்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
மீன்களில் உடலில் சிறு காயங்கள் காணப்படுகின்றன. சில பெண்கள் மீன்களை ஆப்புப்
போன்ற கூரான மரக் குச்சிகளால் கிழித்துத் துண்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சுற்றி நிற்கும் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சில துண்டுகளைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
திடீரென்று கடற்கரையிலிருந்து சில குரல்கள் கேட்கின்றன.
எல்லோரும் ஆவலுடன் திரும்பிப் பார்க்கிறார்கள். சில ஆடவர்களும் பெண்களும்
கடலிலிருந்து மரங்களைக் கொடிகளால் பிணைத்த ஒரு தெப்பத்தைக் கரைக்கு இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைக் கண்டதும் ஆண்களும் பெண்களும் சிறார்களும் கடற்கரையை நோக்கி
ஓடுகிறார்கள்.
தெப்பத்தில் ஒரு செத்த மாடும் இன்னும் ஒன்றிரண்டு ஆடுகளும்
பலவகைப் பழங்களும் காணப்படுகின்றன. அனைவரும் சேர்ந்து இவற்றை எடுத்துக்கொண்டு தம்
இருப்பிடம் செல்கின்றனர். மிதவையில் வந்தவர்கள் அதனை நன்றாக இழுத்துக் கரையில்
போட்டுவிட்டுச் சற்று நேரத்தில் வந்துசேர்கிறார்கள்.
இப்போது தெப்பத்தில் வந்தவர்களுக்கு நல்ல துண்டுகளாக மீன்
துண்டுகளைக் கொடுத்துவிட்டு மற்றவற்றைப் பங்கு போடுகிறார்கள். பழங்களைக்
குழந்தைகள் முதலில் சுவைக்கின்றன. பின்னர் மற்றவர்களும் உண்கிறார்கள். உண்டு
முடிந்தபின் இரண்டு மூன்று ஆடவர்கள் சேர்ந்து விலங்குகளை அறுக்கத்
தொடங்குகிறார்கள்.
அதோ ஒரு கோடியில் தனியாக முதியவள் ஒருத்தி
அமர்ந்திருக்கிறாள். அவள் கையில் சில பழங்களை வைத்துத் தின்றுகொண்டிருக்கிறாள்.
ஓர் இளம் பெண் தானும் கையில் சில பழங்களுடன் அணுகி அவளருகே அமர்ந்து கிழவியிடம்
பேச்சுக் கொடுக்கிறாள். நாமும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்போமே!
இளையவள், “சிப்பிப் பாட்டி! அதோ நம் தலைவர் வாரணன் இருக்கிறாரே அவர் மற்றவர்களைப்
போல் இல்லையே! நம்மைவிடச் சற்றுக் கருமையாகவும் மூக்கு சிறிது தட்டையாகவும்
தடித்துமிருக்கிறது. மயிர் அதிகக் கருமையாகவும் சுருண்டும் காணப்படுகிறதே!” என்று தெப்பத்தில் வந்த முதுமையை எட்டிக் கொண்டிருக்கும் ஒருவனைச்
சுட்டிக் கேட்கிறாள். ஆம்! அவன் மற்றவர்களை விடச் சற்று மாறுபட்டுத்தான் காணப்படுகிறான்.
மற்றவர்கள் கடலோரத்து ஈரக்காற்றை உட்கொண்ட பழக்கத்தால் இயற்கையாக நீண்ட
மூக்குடையவராகவும் கடலோர உப்புக் காற்றால் உடலும் மயிரும் சற்றுச் செம்மை நிறமடைந்தவராயும்
காணப்படுகிறார்கள்.
கிழவி விடை கூறுகிறாள்: “நன்றாய்க் கவனித்திருக்கிறாய் கயலி! அவன் நம் கூட்டத்தில்
பிறந்தவனில்லை. வேறிடத்திலிருந்து வந்தவன். அக் கதையைக் கூறுகிறேன் கேள்.
“ஒருநாள்
காலையில் நாங்களெல்லாரும் கடற்கரையில் ஒதுங்கும் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது கரையோரமாக நின்றிருந்த ஒரு சிறுவன் எங்களைக் கூப்பிட்டுக் கையைக்
காட்டினான். சிறிது தொலைவில் ஒரு பெரும் மரக்கிளை கடலில் மிதந்து அலைகளில்
புரண்டுகொண்டிருந்தது. அதன்மீது ஓர் ஆடவன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் கைகளைத்
தண்ணீரில் துழாவிக் கரையை நோக்கி மரக்கிளையைத் தள்ள முயன்று கொண்டிருந்தான்.
கிளையும் மெல்லமெல்லக் கரையை நோக்கி முன்னேறியது. கரையை நெருங்க நெருங்க அலைகளின்
முடுக்கம் அதிகமாயிருந்ததனால் அவனால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. கை
சோர்ந்தாற்போல் தோன்றியது. ஆனால் அவன் இப்போதிருந்த இடம் ஆழம் குறைந்த இடமாகையால்
எங்களில் சிலர் அங்கு நடந்தே சென்று அவனைக் காப்பாற்றிக்
கரைக்குக் கொண்டுவந்தோம்.
“வந்தவன்
நல்ல இளைஞன். களைப்பினால் மயக்கமடையும் நிலையிலிருந்தாதான்.
குடிக்கத் தண்ணீர் கேட்டான். தண்ணீரும் கொடுத்தோம். நிறையத் தண்ணீரும் கொஞ்சம் மீனும்
உண்டபின் படுத்து உறங்கிவிட்டான்.
“விழித்த
பின் அவனை அனைவரும் சூழ்ந்துகொண்டு அவன் எங்கிருந்து வருகிறான் என்று கேட்டோம்.
அவன் பேசத் தொடங்கினான். அவன் பேசிய சில சொற்கள் எங்களுக்குப் புரியாவிட்டாலும்
பொதுவாகப் புரிந்தது. அவன் கூறியதன் சுருக்கம் இதுதான்:
“தன்
கூட்டத்தார் சிலருடன் வேட்டையாடச் சென்ற போது ஓர் எருது இவனைத் துரத்தியது. இவன்
விரைந்து ஓடிப் பக்கத்திலிருந்த ஆற்றின் ஓரத்தில் நின்ற ஒரு மரத்தின் மீது ஏறினான்.
மரம் சிறியது. ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் மரத்தின் அடியிலிருந்த மண்
கரைந்திருந்தது. எனவே இவன் மேலே ஏறிச் சென்றதும் மரம் சாய்ந்தது. இவன் ஒரு
கூச்சலுடன் மரத்தைப் பிடித்துக்கொண்டு நீரில் விழுந்தான். இவனுடன் வந்தவர்கள்
தொலைவிலிருந்து இவன் கூச்சலைக் கேட்டுவிட்டு எருது கொன்றுவிட்டதாக நினைத்துத்
திரும்பிச் சென்றுவிட்டனர்.
“தண்ணீரில்
மரத்தைப் பிடித்துக் கொஞ்ச நேரம் தொங்கிக் கொண்டிருந்தான். எருது கரையில்
நின்றுகொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்துக் கை ஓய்ந்ததும் மரத்தின் மீது மெதுவாக
ஏறி உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் மரத்தின் வேர் பிய்ந்துவிட்டதால் மரம்
தண்ணீரில் இவனையும் சுமந்துகொண்டு மிதந்து சென்றது.
“நேரம்
இருண்டுவிட்டது. எனவே ஆறுதான் அவனுக்குக் காப்பான இடம். மரம் ஒரு குறுகலான
இடத்தில் இரு கரைகளிடையிலும சிக்கி நின்றுவிட்டது. இவனும் அமைதியாக
அமர்ந்திருந்தான். இருபுறமும் காடு அடர்ந்து மரங்களின் கிளைகள் ஆற்றின் மீது
கவிந்திருந்தன.
“ஏதோ
ஓர் உணர்வால் காட்டினுள் பார்த்தான். மரத்தின் முனைப் பாகம் இருந்த பக்கத்தில்
நெருப்புத் துண்டுகள்போல் ஏதோ இரண்டு பளபளப்பாகத் தெரிந்தன. புலியின் கண்கள்.
“அவனுக்கு அச்சமேற்பட்டது. படபடவென்று மறுபுறம் ஓடிக் கரையேறிவிட நினைத்தான்.
அங்கும் ஏதோ ஒரு சலசலப்புக் கேட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான்.
திடீரென்று ஓர் எண்ணம் உதிக்கவே மரத்தில் ஒரு காலை வைத்துவிட்டு மறுகாலை ஆற்றின்
கரையில் வைத்து வலுவாக உந்தினான். மரம் நகர்ந்தது. இன்னும் காலை நகர்த்தி வைத்து
உத்தினான். மரம் கரையிலிருந்து விடுபட்டது. மீண்டும் மரத்தின் மீது அமர்ந்து பயணம்
தொடர்ந்தது.
“கிழக்கு
வெளுக்கும் நேரம். எதிரே கண்ணுக்கெட்டிய தொலைவு ஒரே கரும் நீர்ப் பரப்பு. வான் முகட்டில்
பகலவன் தோற்றத்திற்கு அறிகுறியான ஒளிக்கீற்று. மரத்தின்
மீதிருந்த வாரணன் ஆற்று நீருடன் கடலில் போய்ச் சேர்ந்தான். மரம் மிதந்து மிதந்து
நம் குப்பத்துக்கு நேரே வரும் போது நன்றாக விடிந்துவிட்டது. வெளிச்சம் வந்ததும்
நம் குப்பத்தைப் பார்த்துக் கரை நோக்கி வருவதற்காகத் தண்ணீரைக் கையாலும் காலாலும்
உதைத்துக் கரையை நோக்கி நகரத் தொடங்கினான். அதற்கு மேல் நடந்ததைத்தான் நான் முன்பே
கூறினேனே!
“இக்
கதையைக் கேட்ட பின்னர் நாங்களெல்லாரும் கூடி முடிவெடுத்தோம். நம் கூட்டத்தில்
தும்பைக் கிழவியின் குடும்பத்தில் இரு தள்ளாத கிழவர்களையும் சிறுவர்களையும் தவிர
ஆடவர் யாரும் இல்லாததால் வாரணனை அவள் குடும்பத்தில் சேர்த்துவிட முடிவு செய்தோம்.
“அப்பொழுதெல்லாம்
நான் இளம் பெண்ணாயிருந்தேன். வேட்டைக்குச் செல்வோருடன் பெண்களும் அடிக்கடிச்
செல்வோம். எனக்கு இதில் ஆர்வம் அதிகம். ஒரு தடவை நாங்கள் காட்டில் பழங்கள்
பறித்துக் கொண்டிருந்த போது ஆடவரும் பெண்டிருமாக ஒரு கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டது.
அவர்களைக் கண்டதும் வாரணன் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது. ஒரு பெண்ணைப்
பார்த்துக் “குயிலி! என்னைத் தெரியவில்லையா?’ என்று கூவினான். அவளும் “வாரணா?” என்று கூவி வந்து அவனை அணைத்துக் கொண்டாள். மற்றவரும் மலர்ச்சியுடன் அவனை
அணைத்துக் கொண்டனர். அவர்கள் அவனுடைய பழைய கூட்டத்தினர். குயிலி அவன் தங்கை.
“இப்பொழுது
அவர்கள் எங்களைத் தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச்
சென்றார்கள். உணவுண்ட பின் தன் கதையையெல்லாம் அவர்களுக்குக்
கூறிமுடித்தான் வாரணன். தான் அடுத்த முறை வரும்போது நிறைய மீனும் ஈச்சம்பழமும்
கொண்டுவருவதாகக் கூறிவிட்டு அடுத்த நாள் நாங்கள் திரும்பினோம்.
“அதன்
பின் நாங்கள் இங்கிருந்து அவன் பழைய கூட்டத்தினருக்கு மீன் போன்ற கடலிலிருந்து
கிடைக்கும் பொருள்களைக் கொடுத்து அவர்களிடமிருந்து ஆடு, மாடு போன்றவற்றின்
இறைச்சியையும் அங்கு கிடைக்கும், இங்கு கிடைக்காத பண்டங்களையும் பெற்று வந்தோம்.
நாள் செல்லச் செல்ல நிலத்தினுள் வேறு சில பகுதிகளிலும் நமக்கு தோடர்புகள்
ஏற்பட்டன.
“நாளடைவில்
வாரணனை நம் தலைவனாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இதுதான் வாரணன் நம் கூட்டத்
தலைவனானா கதை.”
கிழவி நிறுத்துகிறாள். கயலி திரும்பித் தம் கூட்டத்தினரைப்
பார்க்கிறாள். கதையில் ஈடுபட்டிருந்ததால் நம்மைப் போல் அவளும் நேரம் சென்றதைக்
கவனிக்கவில்லை. அனைவரும் படுத்துவிட்டனர். கிழவியும் சாய்கிறாள். கயலி மெல்ல
நடந்து செல்கிறாள். பல ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் அணைத்தபடித் தூங்கிக்
கொண்டோ விழித்தோ படுத்திருக்கிறார்கள். வாரணன் பக்கத்தில் பெண் யாரும் இல்லை. கயலி
அவனை அணுகி அவனருகே அமருகிறாள். படுத்திருந்தவன் முகத்தில் வியப்பும்
மகிழ்ச்சியும் தோன்றுகின்றன. கிழவி சிப்பி கதை சொல்லும் போதும் வாரணனைப் பற்றிக்
கூறும் போதும் அவள் முதிய முகத்தில் தோன்றிய நாணச் செம்மை அவளுக்கு வாரணனுடனிருந்த
‘தொடர்பை’ப் பறைசாற்றியதைக் கண்டதால் இவள் மனத்திலும் காமம் வளர்ந்துவிட்டதை அவன்
அறிவானா? முன்போலன்றி இப்போது கூட்டத் தலைவனுக்குப் புணர்ச்சிச் சட்டத்திலிருந்து
சிறிது தளர்வு ஏற்பட்டுவிட்டது போல் தோன்றுகிறதில்லையா?
ஆ! இது என்ன சிறு உரையாடல். ஓகோ! நெருப்புக் காவல்
முறைக்காரர்களல்லவா? ஓர் ஆணும் பெண்ணும் ஒரு துண்டு இறைச்சியைப் பறித்து
விளையாடுகிறார்கள். இறைச்சி கைதவறி நெருப்பில் போய் விழுந்துவிடுகிறதே! இருவரும்
பதறிப்போய் நிற்கிறார்கள். பின்னர் ஆடவன் ஒரு குச்சியால் இறைச்சியை
நெருப்பிலிருந்து வெளியே தள்ளுகிறான். இறைச்சித் துண்டிலிருந்து ஆவி கிளம்பிக்
கொண்டிருக்கிறது. ஒரு விரலை அதன் மீது வைக்கிறான். ஆ! சுட்டுவிட்டது. விரலை வாயில்
வைக்கிறான். அப்படியே இருக்கிறான். முகத்தில் ஒரு வியப்புக் குறி. அவளும் விரலை இறைச்சித் துண்டின்மீது
வைத்து வாயில் வைத்துப் பார்க்கிறாள். அவள் முகத்திலும் வியப்பு. இறைச்சியை
இப்போது கையாலேயே பிய்க்க முடிகிறது. வெந்த இறைச்சியை இப்போது பங்குபோட்டுத்
தின்கிறார்கள்.
மீதமிருந்தவற்றில் ஒரு துண்டை எடுத்து நெருப்பில்
போடுகிறார்கள். ஓகோ! இறைச்சியை வேகவைக்கக் கற்றுக் கொண்டார்களோ?
உங்கள் கண்களைத் தூக்கம் சுழற்றுகிறதா? சரி வாருங்கள்.
தாமும் ஓரிடத்தில் தூங்குவோம். தூங்கும் முன் ஒரு சேதியை நினைத்துக் கொள்ளுங்கள். பழந் தமிழில் ஆறு என்பதற்குப்
பாதை என்பதும் ஒரு பொருள். அதே பொருள் தரும் வழி எனும் சொல்லும் நீரின் வழிதல்
என்ற சொல்வேரிலிருந்து தோன்றியுள்ளதிலிருந்து நீர் வழியிலேயே
தமிழன் முதன் முதலில் நெடும் பயணங்களை மேற்கொண்டான் என்பது உறுதியாகிறதல்லவா? ஆற்றின் வழிப் பயணம் செய்வதால் விலங்குகளின்
இடரின்றி அதிகத் தொலைவு பயணம் செய்யலாமென்பதுடன் நாட்டிலுள்ள பல பகுதிகளுக்கும்
கடல் வழியில் ஆறுகளினுள் புகுந்து செல்லலாம் என்பதால் உலகமெங்கும் முதன்முதலில்
நீர் வழிகளிலேயே மனிதன் நெடும் பயணங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.
மேலும் நெய்தல் நிலத் தெய்வமான வாரணன் கடல் எனப்
பொருள்படும் வாரணம் என்ற சொல்லோடு தொடர்புடையவன். கடக்க இயலாததெனக் கருதப்பட்ட
கடலில்(கட + அல் = கடல்?) பயணம் செய்யும் வழியைக் கற்றுக் கொடுத்ததாலேயே
அவன் நெய்தல் நிலத் தெய்வமாகியிருக்க வேண்டும். ஆ..வ் எனக்கும் தூக்கம் வருகிறது.
சிறிது நேரம் தூங்குவோம்.
பிற்சேர்க்கை: வருணன் வேதங்களில் தொடக்க காலத்தெய்வமாகக்
குறிக்கப்படுகிறான், இந்திரனோடு இணைத்தும் அடுத்து இந்திரனோடு முரண்பட்டும்,
தீயவனாகவும் காட்டப்படுகிறான். இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நெய்தல்
நிலத்தில் தொடங்கி நாகரிகம் குறிஞ்சி நிலம் நோக்கி நகர நகர உருவான உறவுகள்,
முரண்பாடுகளின் பதிவுகளாகும்.
வருணனின்
ஊர்தி மகரம் எனப்படும் முதலை என்றும் அவனது மனைவியின் பெயர் வாருணி என்றும்
கூறப்படுகிறது. இன்றும் வாருணி என்ற சொல் ஓரளவு பழிப்புச் சொல்லாக குமரி மாவட்ட
மீனவப் பெண்களால் பயன்ப்படுகிறது, “ஏ, வாருணி மொவனே!” என்பது போல்.
கதிரவனின் இயக்கம்
பற்றிய கோட்பாடுகளை வகுத்தவன் என்றும் ஒழுக்கம் பற்றிய வரையறைகளை உருவாக்கியவன்
என்றும் வருணன் கூறப்படுகிறான். இவன் நாகர்களுக்கு முந்திய இயக்கர் குக்குலத்தைச்
சேர்ந்தவனாக இருக்கலாமென்றும் தோன்றுகிறது. கதிரவனின் தேரோட்டியாக, கருடன்
எனப்படும் கலுழனின் மூத்தோனான அருணனும் வருணனது ஒரு திரிபடைந்த வடிவமாக இருக்கக்
கூடும். அது மட்டுமல்ல தெற்கின் கடவுள்களான தெக்கன், இயமன், காலன் ஆகியவர்களோடு வருணன்
வரலாறு மயங்கிக் காணப்படுகிறது.
ஆரியர்கள் வெறும் மாடு மேய்க்கிகள். அவர்கள் கடலையே அறிய மாட்டார்கள் என்பது ஆரியக் கோட்பாளர்களின் கூற்று. அப்படியானால் கடல் தெய்வமான இந்திரன் எப்படி அவர்களுடைய படைப்பு எனப்படும் வேதங்களின் இடம் பெற்றான், அவன் எந்தக் கடலில் எந்தக் கப்பல் மிதந்துகொண்டிருக்கிறது என்பதை எல்லாம் அறிந்தவன் என்பன போன்ற பாடல்கள் அவற்றில் இடம் பெற்றன என்ற கேள்விக்கு விடை என்பது எம் கேள்வி.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக