19.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் -21

18. வேலெறிந்து வீசிக்காட்டி வீரம் விளைத்த வேலவா!
(தோரா. தி.மு. 6500)
இதோ நாம் ஒரு வறண்ட பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். அதோ! தொலைவில் ஒரு மலை தெரிகிறது. மலையின் அடிவாரமெல்லாம் பட்ட மரங்களுடன் மலை உச்சியில் வளமான காடு தெரிகிறது. பெண்கள் கூட்டங்கூட்டமாகக் காட்டிலிருந்து தலையில் விறகுக் கட்டுகளைச் சுமந்துகொண்டு கொளுத்தும் வெயிலில் வந்து கொண்டிருக்கின்றனர். நமக்கு இந்தப் பக்கத்தில் ஒரு குடி தெரிகிறது. அதை நோக்கித்தான் அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள. நம் முன்னே ஒரு காட்டாறு வறண்டு கிடக்கிறது. அதன் நடுவில் ஒரு கிணறு தோண்டப்பட்டு இருக்கிறது. இக் கிணறுதான் இவர்களுக்குக் குடிநீர் வழங்குகிறது போலும். ஆ! என்ன இது ஏதோ ஒன்று பாய்ந்து செல்வது போன்று தோன்றுகிறது. ஆம்! ஒரு கூர்மையான கம்பு அதோ அந்த மரத்தில் போய்க் குத்தி நிற்கிறதே அது எங்கிருந்து வந்தது? போய்ப் பார்ப்போமா?

            இதோ ஒரு மனிதன் மரத்தில் குத்தியது போன்ற ஒரு கம்பை வைத்திருக்கிறான். அவன் பக்கத்தில் இன்னும் இது போன்று கம்புகள் சில கிடக்கின்றன. ஓர் இரும்பாலான அரிவாளும் கிடக்கிறது. அவன் கையில் இருக்கும் கம்பை எங்கேயோ குறி வைத்து வீச ஆயத்தமாகிறான். அப்போது ஒரு குரல் என்ன மலையா! என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறோம். கையில் கம்பு வைத்திருக்கும் மலையனின் அகவையுடைய ஒருவன் புன்னகையுடன் நிற்கிறான். அவன் இவனைவிடச் சற்று உயர்ந்த ஆடைகளுடனும் காலில் தண்டை போன்ற அணியுடனும் காதில் வைரக் கடுக்கனுடனும் காணப்படுகிறான்.

            மலையன், நீ எப்போது வந்தாய் முடியா? என்று முகமலர்ச்சியோடு கேட்கிறான். கையிலிருந்த கம்பைக் கீழே போட்டுவிட்டு ஓடிச்சென்று முடியனுடைய கைகள் இரண்டையும் பற்றிக் கொள்கிறான்.

            இப்போதுதான் வந்தேன். வந்ததும் உன்னைப்பற்றித்தான் கேட்டேன். இங்கு வந்தால் பார்க்கலாம் என்றார்கள்; வந்தேன். இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

            வேல் வீசிப் பழகிக் கொண்டிருக்கிறேன். இங்கு கழிந்த ஐந்தாண்டுகளாக ஒரு துளி மழைகூடப் பெய்யவில்லை. பனைகள் எல்லாம்கூடப் பட்டுவிட்டன. இந்த ஆற்றங்கரை மரங்கள்தான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றன. பனை ஏறி வயிற்றைக் கழுவவும் முடியாமல் பட்டினியால் சிலர் மாண்டனர். பலர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். நாங்கள் வழிப்பறி செய்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

            நீ கையில் வைத்திருப்பதுதான் வேலா? எங்கே வீசிக் காட்டுப் பார்க்கலாம்!

மலையன் கீழே கிடந்த ஒரு வேலை எடுத்து வீசுகிறான், விர்ரென்று அது பறந்து சென்று ஒரு மரத்தின் மூட்டில் குத்தி நிற்கிறது. முடியன் வாய் பிளந்து மலைத்து நிற்கிறான்.

            இதை எங்கிருந்து கற்றுக்கொண்டாய்?

            ஒரு முறை முயல் ஏதாவது கிடைக்குமா என்று அந்தி மயங்கும் வேளையில் மலையடிவாரம் சென்றேன். எதுவும் கிடைக்காமையால் ஏமாற்றத்துடன் வந்துகொண்டிருந்தேன். திடீரென்று என் எதிரில் ஒரு பெரும் பன்றி வந்தது. நானோ பன்றியோ திரும்பி ஓட முடியா இடுக்கான இடம். பன்றி என்மீது பாய ஆயத்தமானது. எனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. வந்தது வரட்டும் என்று கையில் இருந்த தடியை வீசி எறிந்தேன். தற்செயலாக முனையுள்ள பக்கம் பன்றியின் உடலில் தாக்க அஃது அதனைத் துளைத்துவிட்டது. பன்றியும் அதே இடத்தில் மாண்டுவிட்டது.ன்றிலிருந்து நான் கையில் கிடைக்கும் கம்பையெல்லாம் எடுத்து ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து வீசிப் பார்த்தேன். நினைத்த இடத்தில் முதலில் விழவில்லை. கொஞ்ச நாள் பயிற்சியில் நினைத்த இடத்தில் விழுந்தது. இப்பொழுது அதிகத் தொலைவு வீசிப் பழகிக் கொண்டிருக்கிறேன். சில வழிப்பறிகளில் கூட இந்த வேல் மிக உதவியாய் இருந்தது. அது சரி; நீ எப்படி இருக்கிறாய்? உன் படைப் பணி எல்லாம் சிறப்பாக இருக்கிறதா?

            அதை ஏன் கேட்கிறாய்? சில ஆண்டுகளுக்கு முன் தெற்கே பஃறுளி ஆறு, குமரி மலை அடங்கிய பெரும் நிலப்பரப்பைக் கடல் விழுங்கிவிட்டது. கடல் ஓரத்திலிருந்த மதுரை நகரும் பிற துறைமுகங்களும் கடலில் மூழ்கிப் போய்விட்டன. அரசரும் அவரைச் சேர்ந்தவர்களில் பெரும் பாலானோரும் மாண்டுவிட்டனர். மிஞ்சியவர்கள் சேர்ந்து புதிய துறைமுகங்களை அமைப்பதிலும் பழைய வாணிகத்தை மீட்பதிலும் முனைந்தனர். ஆனால், பழைய கடலோடிகளும் இல்லை. வாணிகத்துக்குப் பழைய செல்வமும் இல்லை. காவிரித் துறைமுகத்தை உள்நாட்டிலிருந்து உறையூர்த் தலைவன் கைப்பற்றிப் புதுப்பித்து வாணிகத்தை வளப்படுத்திக் கொண்டான். சாலித்தீவு இந்திரனுக்கும் அவனுக்கும் நல்ல நட்புறவு. இப்போது புதிதாகக் கடலில் திரிகின்ற அவுணர் என்ற கூட்டத்தார் எல்லா நாடுகளையும் தாக்குகிறார்கள். இந்திரன் நாட்டை அவர்கள் தாக்கிய போது உறையூர்ச் சோழன்தான் படைகள் அனுப்பி உதவினான். முன்பு இந்திரனுடைய ஆளுமையைத் தகர்த்த பாண்டிய மண்ணில் அவுணர்கள் புகுந்து கொள்ளையும் கொலையும் நடத்துவதைக் கேட்கத்தான் யாரும் இல்லை. பாண்டியன் படை மரபினர்கள் ஒன்று சேர்ந்து போரிட்ட முயற்சியில் நானும் சேர்ந்தேன். எங்களால் அவுணர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. அவுணர்கள் இப்போது உள்நாட்டிலும் நுழையத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. உறையூரான் உறையூரிலும் புகாரிலும் கோட்டைகள் என்று பெரும் மதிற்சுவர்களை நாற்புறமும் கட்டியுள்ளதால் அதனுள் நுழைந்து செல்ல அவுணர்களால் இயலவில்லை. பாண்டியனிடம் அத்தகைய கோட்டைகளும் இல்லை. ஏன் மலையா இந்த வேல் என்னும் கம்பைக் கையாளப் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் என்ன? இதைக் கொண்டு அவுணர்களைத் தொலைவிலிருந்தே அழிக்கலாமே! என்ன சொல்கிறாய்?

            நல்ல கருத்துதான். ஆனால் ஆட்கள் வேண்டுமே!

            பாண்டியன் படை மரபினர் பலர் உள்நாட்டில் உள்ளனர். மற்றும் அவுணர்களின் கொடுமைக்காளாகிய பகுதிகளிலிருந்து பல இளைஞர்களைத் திரட்டலாம். நாம் அவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து அவுணர்களை வென்றுவிட்டால் பழைய பாண்டிய மரபைத் தோற்றுவித்து விடலாம். வா போவோம்! இப்போதே செயலில் இறங்குவோம்!

            வா! குடிக்குப் போகலாம்.

            இருவரும் குடியை நோக்கிச் செல்கிறார்கள். நாமும் அவர்களுடன் செல்வோம். நாற்பது ஐம்பது குடில்களைப் கொண்டது இச் சிறுகுடி. குடில்கள் நான்கு வரிசைகளாக அமைந்துள்ளன. பல குடில்கள் சிதைந்து கிடக்கின்றன. ஏறக்குறைய இருபது குடில்கள் நல்ல நிலைமையில் உள்ளன. ஊரின் ஒரு கோடியில் ஓர் அம்மன் கோவில் இருக்கிறது. ஊருக்கு வெளியேயும் ஒரு கோவில் இருக்கிறது. இரு கோவில்களின் முன்பும் ஆல், அரசு, வேப்ப மரங்கள் நிற்கின்றன. தெருவின் நடுவில் மக்கள் கூட்டமாக எதையோ சூழ்ந்துகொண்டு நிற்கிறார்கள். மலையனும் முடியனும் கூட்டத்தை நெருங்கிச் சென்று என்ன? என்ன? என்று வினைவுகிறார்கள்.

            மலையா, வா! புலியன் வீட்டில் வந்திருந்தாரல்லவா ஒரு துறவி? அவர் புலியன் வீட்டிலில்லாத நேரத்தில் அவன் மனைவி குழலியிடம் வம்பு செய்திருக்கிறார். அவள் கூக்குரலிட்டிருக்கிறாள். குடியினுள்ளோர் எல்லோரும் சேர்ந்து அடித்துப் போட்டிருக்கிறார்கள். ஆள் போய் விட்டார். கயவர்கள் துறவி உருவந்தாங்கித் திரிகிறார்கள்.

            இது இப்பொழுது எங்கும் நடைபெறுவதுதான். இப்படிப் பல கயவர்கள் கிளம்பியிருக்கிறார்கள். பல இளைஞர்கள் சோம்பேறிகளாகச் சுற்றுவதற்காகத் துறவி உருவந் தாங்கிவிட்டார்கள். இந்திரன் அறிவுரைப்படி உறையூர்ச் சோழன் தடை செய்ததைத் தொடர்ந்து இவர்கள் மாடுகளை அடித்துண்பதை எதிர்த்தும் பேசத் தொடங்கி யிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமா? பூசாரிக் கூட்டத்தார் நெசவுத் தொழில் புரிவோர் அணியும் பூணூலை அணிந்துகொண்டு பாண்டிய அரசர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறார்கள். கடலில் நாடு முழுகியதற்குக் காரணம் தெய்வங்களைப் போற்றும் மந்திர மொழிகளைப போற்றாது தமிழைப் போற்றுவதுதான் என்று கூறி மக்களை மயக்கித் திரிகிறார்கள். நாடு பகைவர்கள் கைகளில் சிக்கி உரிமையிழந்து செல்வமிழந்து தத்தளிக்கும் இவ் வேளையில் இவர்கள் இவ்வாறு மக்களுக்குத் தொண்டு செய்கிறார்களாம். மீண்டும் பாண்டிய அரசை நிறுவிப் பழையபடி தமிழ்க் கழகத்தைத் தொடக்கினால்தான் இவர்களை ஒடுக்க முடியும்”, முடியன் கூறுகிறான்.

            வெப்பம் தாங்க முடியவில்லை; வாருங்கள் அந்த ஆல மரத்தடியில் சென்றமர்ந்து இளைப்பாறலாம். ஆறு தலைகளுடன் வழங்கப்படுகின்றதே முருகன் என்ற தெய்வம், அதற்கு எண்ணற்ற வகைகளில் விளக்கங்கள் தரப்படுகின்றன. கற்பனைத் திறன் மிகுந்த திருமுருக கிருபானந்தவாரியாரின் பல விளக்கங்களில் ஒன்று இதோ: முருகனின் ஆறுதலைகளும் தமிழ் நெடுங்கணக்கிலுள்ள மெய்யெழுத்துகளின் ஒவ்வொரு இனத்தினுள்ளும் அடங்கும் எழுத்துகளின் தொகை (மென்மை ஆறு, வன்மை ஆறு, இடைமை ஆறு). அவன் தலைகளிலுள்ள பதினெட்டுக் கண்களும்(நெற்றிக் கண்களையும் சேர்த்து) மெய்யெழுத்துகள்; 12 கைகளும் உயிரெழுத்துகள்; வேற்படை ஆய்த எழுத்து! கை, கண் போன்ற உறுப்புகளை ஆறால் பெருக்கியிருக்கும் போது காலை மட்டும் ஏன் பெருக்கவில்லை. இது கோவை அறிஞர் ஆ.கி. நாயுடு கேட்கும் கேள்வி (தொல்காப்பியர் கண்ட தமிழர் சமுதாயம்). தலைகளை ஒன்றின் பக்கம் ஒன்றாக வைக்காமல் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்திருக்கலாமே என்பதும் இன்னொரு கேள்வி. அஃது இருக்கட்டும்.

            ந்த ஆறு தலைகளும் ஆறு தனித்தனி மனிதர்களைக் குறிக்கின்றன என்று நாம் கொள்ளலாம். மேலே கூறியவாறு முருகன், குமரன், வேலன், என்ற மூவரைத் தவிர வேறு யாரையும் நம்மால் இனங்காண முடியவில்லை. ஒரு வேளை பிரமனுக்கு நான்கு தலைகள் ஏற்படுத்தியதைக் கண்டவர் சிவனுக்கு ஐந்து தலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மீப் பின்னைய தெய்வத்துக்கு ஒன்று கூடுதலாக ஆறு தலைகள் இருக்கட்டுமே என்று வைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.

            ஆறுமுகனைப் பற்றிய தொன்மம் இதுதான். அவுணர்களின் தொல்லை பொறுக்க முடியாத தேவர்கள் ஓகத்திலிருந்த சிவன் மீது மலர்க் கணைகளை ஏவி அவரது காமத்தைத் தூண்டுமாறு காமவேளாகிய மாரனை(மன்மதனை) ஏவ, காமத்தில் சிவனது விந்து வெளிப்பட்டு சரவணப் பொய்கையல் ஆறு துளிகளாய் விழுந்து ஆறு ஆண் குழந்தைகளாக மாற அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் எடுக்க அவை ஒன்றாக இணைந்ததுவே ஆறுமுகன் என்பது! அவன் வளர்ந்து சிவை கொடுத்த வேலின் துணையால் அவுணர்களை வென்று தேவர்களின் துயர் துடைத்தான் என்பதுமே அது. தொன்மம் கூட ஆறு வெவ்வேறு குழந்தைகள் என்றே குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவுணர்கள் எனப்படுவோர் ஊணர்கள் (Huns) எனப்படும் கரிய ஆசிய நாடோடி இனத்தார். இவர்கள் பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடக்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒரு காலத்தில் நம் நாட்டின் மீதும் படையெடுத்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் தமிழிலக்கியத்தில் விரவிக் கிடக்கின்றன. சோழ முன்னோன் ஒருவன் அவுணர்களை முறியடிப்பதற்காக இந்திரனுக்கு உதவி, புகாரிலிருக்கும் ஐம்பெரும் மன்றங்களையும் பரிசாகப் பெற்றான் என்பது சிலம்பு தரும் செய்தி. அதே போன்று இந்திரனைப் போரிட்டு வென்று அவன் தலையிலிருந்த முடியையும் உடைத்தான் பாண்டியன் என்பது சிலம்பின் கூற்று.
                        வச்சிரத் தடக்கை அமரர் கோமான்
                        உச்சிப் பொன்முடிளிவளை உடைத்தகை

இவ்வாறு தேவனென்று இன்று கூறப்படும் ஒருவன் ஒரு நிலத்து வேந்தனிடம் தோற்றதாகக் கூறப்படுவதிலிருந்து இந்திரன் என்பானும் ஒரு நிலத்து வேந்தனாகவே இருந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. இதை முன்பேயே கூறியிருக்கிறேன். தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இந்திரப் பதவியை அடைய முயல்வோரைத் தொன்மங்களில் அரம்பையர் எனப்படும் - வரலாற்றில் பூசாரிய ஆட்சியாளருக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட - பெண்களின் துணைகொண்டு முறியடித்திருக்க வேண்டும். மேலும் பாண்டவர் முன்னோனான நகுலன் இந்திரனானவுடன் பழைய இந்திரன் பதவி இழந்ததையும் முன்னவனின் மனைவி பின்னவனுக்கு மனைவியாக வேண்டியிருந்ததையும் குறிப்பிட வேண்டும். மேலும் இந்திரன் அவை ஆடல் மகளாகிய உருப்பசியே மாதவி இனத்தின் முன்னவள் எனும் சிலம்பின் கூற்று இரு நாடுகளுக்கும் உள்ள உறவை விளக்கும். தமிழ்நாட்டில் சோழ நாட்டிலேயே இன்றும் கோவிற் கணிகையர் மிகுந்திருப்பதும் இதற்குச் சான்று.

            தமிழ்நாட்டில் பெரும் கடற்கோள் நிகழ்ந்து நாடும் கடற்கரையும் அழிந்தபின் அந்த நாட்டின் அரசும் சிதைந்திருக்கும். வெவ்வேறு பகுதிகளில் அவ் வரசுக்குட்பட்டு இருந்தவர்களெல்லாரும் தனியாட்சி ஏற்படுத்த முனைந்திருப்பர். சில பேரரசாகவும் மாறியிருக்கும். அழிந்த அரசை மீண்டும் வேறு வகுப்பார் நிறுவியிருப்பர். வரலாற்றுக் காலத்திற்குள் மீனவர் பாண்டிய நாட்டை ஆண்டதாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள்தான் பாண்டிய அரசை நிறுவியவர்களென்று வரலாற்றாளர் கூறுவர். அப்படியானால் வரலாற்றுக் காலத்துப் பாண்டியர்கள் பேரழிவு நிகழ்த்திய முதற்கடற்கோளுக்குப் பின்னர் ஏற்பட்ட மரபினராகவே இருக்க வேண்டும்.

            வேல் எனப்படுவது எதிரியை நெருங்கிப் போரிடத் தேவையின்றித் தொலைவிலிருந்தே கொல்லத்தக்க ஒரு படையாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட போது போர் முறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும். இது வில்லைக் கண்டுபிடிப்பதற்கு முன் நிகழ்ந்திருக்கும். அதைக் கண்டுபிடித்தவன் அன்றைய போரில் தான் நினைத்தை நிகழ்த்தியிருக்கலாம்.

            வில்லுக்கும் வேலுக்கும் உள்ள உறவை அல்லது போட்டியைப் பற்றிச் சிறிது அலசுவோம். தொடக்கத்தில் வில் என்பது பறவைகளையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடவே பயன்பட்டிருக்கும். ஆனால் மாடு, பன்றி போன்ற கனத்த விலங்குகளைச் சிறிய வில்களைக் கொண்டு தாக்கினால் அது அம்பைத் தாங்கிக்கொண்டே விரைந்து ஓடிவிடும். அதனால் பண்டை மக்களின் பாறை ஓவியங்களில் காணப்படுவது போல் வேல் போன்ற ஆயுதங்களால்தான் பெரு விலங்குகளை வேட்டையாடினார்கள். அது போல் போரிலும் தொலைவிலிருக்கும் எதிரியைத் தாக்கி உடனடியாகக் கொல்வதற்கு வேல் போன்ற வலுவான கருவியும் அதைத் தொலைவிலுள்ள இலக்கை நோக்கிச் செலுத்தும் பயிற்சியும் வேண்டும். பின்னர் படையில் யானை முதன்மைப் பங்கேற்ற போது அதைத் தாக்க வேலை விட்டால் வேறு ஆயுதம் இல்லை என்ற நிலை வந்தது. இந் நிலையில் வட இந்தியாவில் வடிவமைக்கப்பட்டதே இராமாயணம் விதந்து கூறும் “சீதையுடன் கிடைத்த” பெரிய வில். ஆனால் இந்தப் புதிய ஆயுதத்திலுள்ள சிக்கல் என்னவென்றால் மிகக் கனமான இந்த வில்லைத் தூக்கிக்கொண்டு ஓட முடியாது. நிலத்தில் வில்லை ஊன்றித் தான் அம்பை எய்ய முடியும். அலக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பின் போது புருசோத்தமன் தோற்றதற்கான காரணங்களின் இந்தக் கனத்த வில்லும் ஒன்று என்று கூறுகின்றனர். அலக்சாந்தரின் படை வீரர்கள் தங்கள் சிறிய வில்களைத் தூக்கி ஓடிக்கொண்டே விரைவாகவும் பெரும் எண்ணிக்கையிலும் எய்த அம்புகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றனர்.

            தமிழகத்தில் யானைப் படையை எதிர்கொள்ள வேலே பயன்பட்டிருக்கிறது. வள்ளுவரும் வேல் மறவர்களின் வீரத்தைப் பற்றித்தான் பாடியுள்ளார்.   

            இரண்டாம் கழகப் பாண்டிய நாட்டின் தலைநகர் கடற்கோளுக்குப் பின் குமரி ஆற்றின் புதிய கயவாய் என்று கூறுவோரும் உளர். இவ் வூருக்குக் கதவபுரம்(கபாடபுரம்) என்பது பெயர். இதன் நினைவுதான் இன்றைய தண்பொருநையாற்றின் கயவாயின் அண்மையிலுள்ள செந்திலில் வேலனுக்கு நிறுவப்பட்டிருக்கும் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய கோவில் போலும். இன்றைய மதுரையின் அருகிலும் இன்னொரு படைவீடாகிய திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. பாண்டியன் குல முதல்வியாகிய மீனாட்சி எனப்படும் குமரிக்கு நகரின் நடுவிடத்தைக் கொடுத்து விட்டுப் பிற்காலத்தில் ஆறுமுகனுக்கும் மலைக்கும் கற்பிக்கப்பட்ட தொடர்பையும் கொண்டு மதுரையை அடுத்துள்ள குன்றில் கோவிலை அமைத்தனர் போலும். இவை மட்டுமல்ல, இரண்டாம் கழகக் காலத்தில் குமரவேளை ஒரு பாண்டிய அரசராகவும் கூறும் கூற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். முன்பிருந்தே அரசன், தலைவன் தெய்வமாக வணங்கப்பட்டதற்கு மறுக்க முடியாத சான்று ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. மலையாள நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உரோம நாட்டு அரசனான அகத்தியசின் கோவிலே அது. அந் நாட்டு மக்கள் இங்கு வாணிகத்துக்காகக் குடியேறியபோது தம் அரசனுக்கு ஏற்படுத்திய கோவில் இது. இந்திரனுக்குப் புகாரில் ஏற்படுத்தப்பட்ட கோவிலும் இவ்வாறே அமைந்தது. கோவில் என்றால் அரசனின் வீடு என்றே பொருள்.

            இன்று பார்ப்பனர்களென்று நம்மால் கூறப்படுகின்ற பூசாரியார் தமக்கு முதலிலிருந்த செல்வாக்கு மங்குவதை விரும்பாமல் முதலில் எதிர்க்கத் தொடங்கி, மக்களின் கருத்தை எதிர்க்க இயலாமல் புதிதாகத் தோன்றும் பெரு மக்கள் எல்லோரையும் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டு தம் நிலையைப் பாதுகாத்து வருவராயினர். (இன்றும் இவ் வுத்தி பின்பற்றப்பட்டு வருவதை நாம் அறிவோம்.) மாறாக நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களில் ஒரு கூட்டத்தினரான யூதர்கள் நெருப்பைக் கண்டு வணங்கத் தொடங்கியவுடன் பழைய பூசாரிகள் அதனை இறுதிவரை எதிர்த்தார்கள். அதில் ஏற்பட்ட சண்டையில் நாகப் பூசாரிகள் முற்றாக முறியடிக்கப்பட்டார்கள் அல்லது அழிக்கப்பட்டார்கள். அதன் நினைவுதான் ஆதன், அவ்வை கதையில் பாம்பு பேயானகப் பழிக்கப்படுவது. கொள்ளை நோய்கள், இயற்கையின் சீற்றங்கள் முதலியவை நேரும்போதெல்லாம் தம்மையும் தம் மந்திரங்களையும் புறக்கணிப்பதுதான் இத்தகைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று வலியுறுத்தி மக்களின் ஒரு பகுதியினரின் மனத்தில் இவர்கள் ஓர் ஈடுபாட்டை நிலைநிறுத்தி வந்தனர். எனவேதான் அரசர்களால் இவர்களை முறியடிக்க முடியவில்லை. எனவே தமிழை வளர்க்கும் ஒரு வழியாகத் தமிழ்ப் புலவோர்க்கு வரையாது வழங்கினர். இவ்வாறு மக்களின் மனத்திலும் தமிழின் மீது ஒரு பற்றுதல் வளர்ந்து அது புலவர்களால் அழியாது பேணப்பட்டு ஊறிப் போயிற்று. அன்று தொடங்கிய இந்தப் போராட்டம் இன்றுவரை நீடிக்கிறது.

            சோழர் என்பதற்குச் சரியான பொருள் விளக்கம் இதுவரை கூறப்பட்டதாகக் கூற முடியாது. சோ + ஆளர்; (சோ = மதில் அரண்) கோட்டை கட்டி ஆண்டவர்; ஆள்கின்றவர் என்று கூறலாம். இது தொடர்பாகப் பல பொருத்தமான சேதிகளைக் கூறலாம்.

            சிலம்பு கூறும் பதினோராடல்களுள் கண்ணன் கஞ்சனை வென்றது ஒன்றும் சேயோன் ஆடிய இரண்டும் நீங்கலாக மீதி எட்டும் கோட்டையை அழிப்பது தொடர்பானவை. முப்புரம் குறித்த இரண்டு தவிர்த்த ஆறும் வாணன் கோட்டையை அழிப்பது பற்றியது. இவ்வாறிலும் மாயோன், காமன், மாயவன், செய்யோள், அயிராணி ஆகியோர் ஆடல் நிகழ்த்துகின்றனர். (முப்புரம் எரித்தது குறித்த இரண்டு ஆடல்களிலும் சிவனும் காளியும் பிரமனும் பங்குகொண்டிருக்கின்றனர்.)

            கோட்டை குறித்த கதை இதுதான். வாணாசுரன் என்பான் மகள் உழையைக் காதலித்த காமன் மகன் அநிருத்தனைச் சிறை வைக்க அவனை மீட்பதற்கு மேலே சொன்னவர்கள் எல்லாரும் முயன்று வாணன் கோட்டையை அழித்து அவனை மீட்டனர் என்பதே அது. காமன் என்னும் தெய்வம் நம் தெய்வங்களுள் முற்றும் கற்பனையான ஒன்று. எனவே அவன் மைந்தனும் கற்பனையேயாகவேண்டும். அப்படியானால் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வாணன் கோட்டையை அழிக்க ஒரு முயற்சி நடைபெற்றிருக்கிறது.[1] வாணன் தலைநகருக்கு சோப்பட்டணம் என்பது பெயர்.

            சோ கொண்டு ஆண்டதால் சோ + ஆளர் - சோழர் ஆயினர். பதினோராடலும் சோழ நாட்டின் தலைநகரான புகாரில், இந்திர விழாவில் ஆடப்படுவதும், சோழர்களுக்கும் ஆடல் காட்டும் நிகழ்ச்சிகளுக்கும் இடையிலான உறவைப் புலப்படுத்தும். இன்றைய தஞ்சை மாவட்டம் கல் இல்லாததாயினும் பழம் சோழத் தலைநகரான உறையூரின் அருகில் கற்களை கிடைக்கின்றன. அதோடு தமிழ்நாட்டில் முதன்முதலில் கற்றழிகள் கட்டியவர் சோழர்களே எனத் தெரிகிறது. இவை எல்லாம் தவிர தஞ்சை மாவட்டத்திற்குக் கல்ங்குவதாகிய வல்லம், வாணர் என்னும் அரச மரபினரின் முன்னைநாள் தலை நகராகும். இவர்கள் ஏன் இந்த வாணாசுரனின் பின்னோராக இருக்கக் கூடாது? சோழநாடான மருத நிலத்தின் புறத்திணை கோட்டையை முற்ற(முற்றுகையிட)லும் முற்றலை உடைத்தலும் ஆகிய உழிஞைதானே!

பின்குறிப்பு: பாலைநிலம் என்பது பொதுவாக மனிதர்களோ விலங்குகளோ வாழத் தகுதியற்ற ஒன்றாகும். ஆனால் நம் பொருளிலக்கணம் காட்டும் ஐந் நிலங்களில் பாலைநிலத்துக்கு முகாமையான பங்குண்டு. தத்தம் நிலப்பரப்பில் தன்னிறைவோடு வாழ்ந்த மக்கள் தொடக்கத்தில் வாணிகத்துக்காக பாலைநிலத்தைத் தாண்டிச் செல்லத் தொடங்கிய போது அவர்களைக் கொள்ளையடிப்பதை வாழ்முறையாகக் கொண்ட ஒரு மக்கள் குழு உருவானது. இவர்களிலிருந்தே பின்னாளில் படைவீரர்களில் பெரும்பாலோர் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. இந்த பாலைப் பண்பாடு குமுகம் உடைவுண்டு வகுப்புகளாகப் பிரிந்ததன் விளைவாகவும் அப்பிரிவுக்கு விரைவூட்டிய காரணியாகவும இருந்தது. பாலைத்திணையின் உரிப்பொருள் பிரிவு என்பது என்பது காதலர் அல்லது கணவன் – மனைவி பிரிவு என்பதை விட குமுகத்திலிருந்து உறுப்பினர்கள் பிரிந்து செல்வது என்பதே சரியாக முடியும். இது குறித்த விரிவுக்கு பாலைத்திணை விடு(வி)க்கும் புதிர்கள்[2]என்ற எம் கட்டுரையைப் பார்க்க.    


[1].சிலம்பில் பதினோராடலைப் படிக்கும்போது கிரேக்க இலக்கியமான இலியத்தில் திரேயன் கோட்டையை அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே நினைவுக்கு வருகின்றன. சிலம்புக் காட்சிகளில் போரில் பெண்கள் வீரர்களாகவும் ஒற்றர்களாகவும் பாடாற்றிய சுவடு தெரிகிறது. தொல்கதை எழுதும்போது இப் போரில் பங்குகொண்ட வீர மாந்தரை ஏற்கனவே நிலவும் கடவுள்களாகக் காட்டிவிட்டார்கள். இது பற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.
37. இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், குமரிமைந்தன், வேங்கை பதிப்பகம், மதுரை, 625001,2004.

0 மறுமொழிகள்: