21.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 34


29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 3

செ.:ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் அந்த மக்களின் மீ உயர்ந்த ஒற்றுமை அடிப்படையானது. ஆனால் தமிழகத்தில் மக்களிடையில் சாதிகள், உட்சாதிகள், சமயங்கள், சமயப் பிரிவுகள், மொழிகள், இனங்கள் என்று நாளுக்கு நாள் புதிய புதிய பிளவுகள் விரிந்துகொண்டே செல்கின்றனவே, இவற்றை முடிவுக்குக் கொண்டுவந்தால்தானே தேசிய இயக்கம் மக்களிடையில் வேர்கொள்ள முடியும்? அதற்கு என்ன வழி?

ம.: முன்பு குறிப்பிட்டது போல் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைக்கும் கல்வி வாய்ப்புக்கு ஏற்ப இங்குள்ள வேலைவாய்ப்புகளின் விகிதம் நாளுக்கு நாள் சுருங்கிச் செல்வதால் உண்டாகும் போட்டி மக்களிடையில் எல்லையற்ற பகைமை உணர்வை உருவாக்கியுள்ளது. தங்களுக்கு எப்படியாவது நல்ல வருவாய் தரும் வேலே கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக குழுக்களாக மக்கள் ஒருங்கிணைந்து குமுகத்தில் பிளவுகளை உருவாக்குகின்றனர். அப் பிரிவுகளிலும் நகர் சார்ந்தவர், செல்வம் படைத்தவர்கள், உயர் மட்டங்களில் ஏற்கனவே அமர்ந்துவிட்டவர்களுக்கு நல்வாய்ப்புகள் இருப்பதால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்களைத் தனிக்குழுவாக இணைப்பதற்கான ஓர் அடிப்படையைக் கண்டுபிடித்து உட்குழுக்களை உருவாக்குகிறார்கள். குமுகத்தின் இன்றைய பிளவுப் போக்குக்கு இந்த ஒதுக்கீட்டு முறை அடிப்படைக் காரணமாகும்.

செ.:அப்படியானால் ஒதுக்கீட்டுமுறையே தவறு என்கிறீர்களா?

.:  நான் கூறியதன் பொருள் அதுவல்ல. ஒதுக்கீட்டு முறை ஒரு குறிப்பிட்ட குமுகச் சூழலில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெருக்கடி மருத்துவம் போன்றது. அந்த உத்தி வகுக்கப்பட்ட போதே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற திசையில் திட்டம் வகுத்திருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கீட்டு முறை வகுக்கப்பட்ட போது நிலவிய குமுகியல், பொருளியல், அரசியல் சூழல்கள் அத்தகைய தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான சிந்தனையை உருவாக்குவதாகவோ செயல்திட்டத்தை வகுக்கக்கூடியதாகவோ அமையவில்லை. ஆனால் கல்வித் தகுதி பெற்றோருக்கும் வேலே வாய்ப்புகளுக்கும் இடைவெளி விரிவடைந்து கல்லூரி மணவர்களிடையில் சாதி அடிப்படையில் குழுக்கள் உருவாகி முற்றி கொலைகள் வரை சென்ற போது தமிழ்த் தேசியர்கள் என அறியப்பட்ட எந்த மட்டத்தினரும் இது குறித்து கவலைப்படவில்லை. எம் போன்றோர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் எவரும் செவிசாய்க்கவில்லை. மாறாக தமிழ்த் தேசியம் என்ற பெயரில் உலவும் அரசியல் புள்ளிகள் பற்றி எரியும் இத் தீமையைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்தனர், காய்கின்றனர்.

செ.:எதைப்பற்றிக் கூறுகிறீர்கள்?

.:  பெரியார் தன் இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கம் அல்லவென்றும் அது ஒரு குமுகியல் இயக்கம் என்றும் கூறி தேர்தலில் ஈடுபடுவதைத் தவிர்த்தார். ஆனால் முதலில் பொதுமைக் கட்சிக்கும் பின்னாட்களில் பேரவைக் கட்சிக்கும் தேர்தல் பணியாற்றினார். ஆனால் அவரது இயக்கத்திலிருந்து கிளைத்த திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றேல் நேரடியாகத் தேர்தலில் ஈடுபட்டனர் அன்றேல் அவற்றில் ஒன்றுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாகப் பணியாற்றினர்.

      தேர்தல் அரசியல் என்பது வாக்குவங்கி அரசியல். எனவே மக்களை வாக்குவங்கிகளாக்குவதற்கு சாதிகள், சமயங்கள், மொழிகள், இனங்கள் போன்றவை ஒதுக்கீட்டுத் தேவைகளுக்காக ஏற்கனவே ஆயத்தப் பண்டங்களாக களத்தில் இருந்தன. எனவே ஒதுக்கீட்டினால் முழுப் பயனையும் பெற வாய்ப்புள்ள மேலடுக்கினரும் தமக்குள் குமுக ஏற்றத்தாழ்வுகளை ஒருபுறம் ஒழிக்கவும் மறுபுறம் அடித்தட்டு மக்களிடையில் நிலைப்படுத்தவும் அனைத்து அடுக்கினரும் முனைந்து நிற்கின்றனர்.

செ.:சற்று விளக்கமாகக் கூறுங்களேன்.

.:  முதலில், வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதற்கு வேறு தகுதிகள் இருந்தாலும் கணிசமாகக் கைக்கூலி(லஞ்சம்) கொடுக்க வேண்டும். ஏழைகளில் ஒரு சிலர் அவ்வப்போது இடம்பிடிக்கிறார்கள் என்றால் பெரும்பாலும் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கே. உங்களைச் சுற்றிப் பார்த்தால் பெரும்பாலான நேரடி உயர் பதவி வாய்ப்புகள் அரசியல்வாணர் அல்லது அதிகார வகுப்பினர் பிள்ளைகளுக்கே கிடைப்பது தெரியும். அத்துடன் பெற்றோரிடமிருந்து பதவிகள் பிள்ளைகள் கைகளுக்குச் செல்லும் மரபு வழி முறை அரசியல் துறையைப் போலவே உயர் அரசுப் பதவிகளுக்கும் வேரூன்றிவிட்டது. இதற்கெல்லாம் மக்களின் குழு உணர்வு அவர்களுக்குப் பயன்படுகிறது. இவ்வாறு இடைவிடாமல் உருவாகிக் கொண்டிருக்கும் உட்குழுத் தலைவர்களுக்கு வாக்குவங்கி அரசியல் மூலம் பல்வேறு ஆதாயங்களும் கிடைக்கின்றன.

      அனைத்துச் சாதியினருக்கும் இரண்டு தன்மைகள் பொதுவாக உள்ளன. மேல் சாதிகளுக்குச் சமமாக உயர்வது ஒன்று என்றால் கீழேயுள்ள சாதிகள் தமக்குச் சமமான இடத்துக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது இன்னொன்று.

      பெரும்பாலான சாதிகளில் பிழுக்கை என்றொரு பிரிவு உண்டு. தம்மை விட தாழ்ந்த சாதியில் திருமணம் செய்து அல்லது உறவு வைத்துப் பிறப்பவர்கள், திருமணமாகாத பெண் அல்லது கைம்பெண்ணுக்குப் பிறந்தவர்கள் என்று சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் சாதியடுக்கில் அந்தக் குறிப்பிட்ட சாதிக்கு அடுத்த  தாழ்ந்த சாதியினரை விட உயர்ந்தவர்கள். நம் மக்கள் சாதி அமைப்பை எவ்வளவு நுட்பத்துடன் பேணிவருகிறார்கள் பார்த்தீர்களா! ஆனால் இப்படி ஒதுக்கப்பட்டவர்களிடையில் ஒருவரிடம் கணிசமான செல்வம் சேர்ந்துவிட்டால் அவரை முதன்மைச் சாதியினுள் இழுத்துக்கொள்வதும் நடைபெறுகிறது. பெரும்பாலும் முதன்மைச் சாதியிலுள்ள வாழ்ந்து கெட்ட குடும்பத்தினர் இதற்குப் பயன்படுகின்றனர்.

      பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதியினரை எதிர்த்து முக்குலத்தோரும் தாழ்ப்பட்டோரும் பெரியாரின் இயக்கத்தில் ஒன்றி நின்ற நிலையில் தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக உயர்ந்து தம்மை நெருங்கி வருவதைப் பொறுக்காத முக்குலத்தோரின் பல்வேறு வகை தாக்குதல்களின் விளைவாக அதுவரை பெரியாரைத் தம் விடுதலைக்கான தலைவராக ஏற்றுக்கொண்ட அவர்கள் அதுவரை தமிழகம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அம்பேத்காரைத் தங்களுக்கான விடிவெள்ளியாக ஏற்க வேண்டியதாயிற்று.

      முக்குலத்தோர் என்பதில் அடங்கிய மூன்று பிரிவினரான கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோர் ஒதுக்கீட்டுக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் அறைகூவலை எதிர்கொள்ளவும் ஒரு குழுவாகத் தம்மை ஒருங்கிணைத்துக்கொண்டனர். இவர்களில் அகமுடையார் அவர்களது வரலாற்றுப் பின்னணியால் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் முன்னணியில் நிற்கின்றனர். அந்தப் போட்டியில் பின்தங்கிப்போன மறவர்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அண்மையில் முற்றி வருகின்றன.

      ஒதுக்கீட்டுக்காக தாழ்த்தப்பட்டோர் பட்டியல் ஒன்று இருக்கிறது. தன் சாதிப் பெயர் நாடார் என்று ஒருவர் சொன்னால் அவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவார். சாணார் அல்லது சான்றோர் என்று சொன்னால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவார். பட்டியல் சாதியினர் எனப்படுவோரில் பள்ளர், பறையர், சக்கிலியர் என்போர் மிகப் பெரும்பான்மையராக இருந்தாலும் பிறவற்றின் பட்டியல் நீளமானது. இவற்றில் நாம் குறிப்பிட்ட மூன்று சாதிகளில் பறையர்களுக்கு வெள்ளையரோடு ஏற்பட்ட தொடர்பால் கல்வி, வேலை வாய்ப்புககளைப் பெறுவதில் வாய்ப்புகள் மிகுதி. இதனால் ஏற்பட்ட பொறாமை, கசப்புணர்வுகளால் ‘ செத்த மாட்டிறைச்சியை உண்போராகிய பறையர்களோடு எங்களை ஒரே பட்டியலில் வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம், எங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று தங்கராசு என்ற பேராசிரியர் புத்தகங்கள் எழுதினார். குருசாமி சித்தர் என்ற பொறியியல் பண்டிதர் மள்ளர் மலர் என்ற இதழுடன் எண்ணற்ற கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் நடத்தினார்.

இவ்வாறு ஒவ்வொரு சாதியும் கீழ்ச் சாதியினர் தம்மை நோக்கி நெருங்கி வரும் போதெல்லாம் தம்மை ஒடுக்கும் மேற்சாதியினரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தாம் மேற்சாதியினரின் மேன்மையை ஏற்றுக்கொள்வது போல் கீழ்ச் சாதியினரும் தங்கள் மேன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன் நடந்து காட்டுவதுடன் மேற்சாதியினருடனான தங்கள் முரண்பாட்டை முடித்து அவர்களின் துணையையும் பெறுகிறார்கள். பார்ப்பனர்களைப் பொறுத்த வரை வெளியிலிருந்து வரும் அயல் மதத்தினருக்கும் ஆட்சியாளருக்கும் பணிந்து தங்களுக்குப் பிறர் பணிந்து செல்ல வேண்டும் என்று செய்து காட்டுகிறார்கள். இவ்வாறு நம் ஒட்டுமொத்த குமுகமே அவ் வப்போது தத்தம் சாதி மேலாண்மைக்காக பிறர் தம் மீது நிகழ்த்தும் ஒடுக்கலை ஏற்றுக்கொள்ளும் தன்மானமற்ற ஒரு மக்கள் கூட்டமாக இழிந்து விட்டது.

தன் வாழ்க்கைத் தேவைகளுக்கு மேலாக மனிதன் பெரும் செல்வம் சேர்ப்பது பிறர் தன்னை மதிக்க வேண்டும், தனக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற மேலாளுமை வெறியாலேயே. அத்தகைய ஒரு மேலாளுமை செல்வத் திரட்சி இன்றியே கிடைப்பது சாதி அமைப்பில்தான். அதனால்தான் அடித்தட்டு மக்கள் பணக்காரர்களை விட சாதி வெறி பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் ஒதுக்கீட்டு நலன்களை நாடும் பணக்காரர்களும் படித்த கூட்டமும் அரசியல் பிழைப்பாளர்களும் சாதி வேறியை அடித்தட்டு மக்களிடையில் உருவாக்கி ஆதாயம் காண முடிகிறது. இந்த இரண்டு நலன்களையும் ஒரே கல்லில் வீழ்த்தத் திட்டமிட்டுச் செயற்பட்டு வருபவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் “ஐயா” அவர்கள்தான். பாட்டாளி மக்கள் கட்சி என்று அவர் தன் கட்சிக்குத் தேர்ந்தெடுத்த பெயர் எத்தனை பொருத்தமானது பார்த்தீர்களா!
இவ்வாறு மக்களை ஏமாற்றும் வாய்ப்பியர்(சந்தர்ப்பவாதி)களுக்கு அப்பால், சாதி ஒழிப்புக் குறிக்கோளை உள்ளத்துள் சுமந்து, உரிய வாய்ப்புகளை உருவாக்க முயன்றும் வாய்ப்புகளை எதிர்நோக்கியும் வாழும் நிலைமா றாத உயர்ந்த உள்ளங்கள் எப்போதும் உண்டு. காந்தி, பெரியார் போன்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிய வஞ்சகர்கள் காட்டிய தோற்றத்தையே வழிகாட்டியாகக் கொண்டு முறையே இந்தியாவிலும் தமிழகத்திலும் அரும் பெரும் பணிகளைச் செய்து அப் போலித் தலைவர்களின் பணிகளாக உலகத்தை மயங்கவைத்த பரவலாக அறியப்படாத எண்ணற்ற ஏகலைவன்கள்தான் அவர்கள். 

செ.:அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்கிறீர்கள், அவ்வாறு அனைவருக்கும் அரசு வேலே வாய்ப்பு என்பது இயலுகின்ற ஒன்றா?

.: அரசு வேலைதான் வேலை என்பது நம் குமுகத்தின் பண்பாட்டின் அடிப்படைக் கண்ணோட்டம். அரசு வேலை என்பது ஆள்வினை(நிர்வாக)ப் பணியாகும். அதாவது பொதுமக்கள் மீது அதிகாரம் செலுத்துவதாகும். உண்மையில் பார்ப்பனர்களின் மேலாளுமைக்கு அடிப்படையாயிருந்தது ஆள்வினைப் பணிகள் அவர்களின் கைகளில் இருந்ததுதான். பார்ப்பனர்களிடையில் அரசுப் பணிகளில் இருப்போர் முதல் தரமாகவும் பிற நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருப்போர் அவர்களுக்கு அடுத்த அடுக்காகவும் பூசகர்கள் மூன்றாமிடத்திலும் புரோகிதம் செய்வோர் இறுதியிலும் வைத்து மதிக்கப்படுகின்றனர். பரத்தமை செய்து பிழைப்பதை விட உடலுழைத்துப் பிழைப்பதை இழிவாகக் கருதுவது பார்ப்பனியம். இத்தகைய பார்ப்பனரைப் பார்த்து அவர்களது இடத்தில் பிறரையும் கொண்டு வைப்பதுதான் இந்த ஒதுக்கீட்டின் குறியாகிப் போனது. பார்ப்பனியத்தைக் தாக்கிப் பேசிக்கொண்டே பார்ப்பனியத்தை அனைத்து மட்டத்திலும் கொண்டுசெல்வதாக வடிவெடுத்தது அது. இது போன்று போராடி அவ் வப்போது கீழ் மட்டங்களிலிருந்து அரசு அதிகாரப் பதவிகளைப் பெற்றவர்களால் பார்ப்பனர் சாதி அவ் வப்போது புதிப்பிக்கப்பட்டு வந்துள்ளது. பரத்தமையை நோக்கிச் செல்லவில்லையாயினும் மனப்பாடம் செய்வது என்ற எல்லைக்கு வெளியே முறையான வருவாய் ஈட்டத்தக்க எந்தத் திறனையும் வளர்க்காத இன்றைய கல்விமுறையில் சொத்துகளை விற்றுப் பட்டங்கள் பெற்ற இளைஞர்கள் உடலுழைப்பில் ஈடுபட வெட்கியும் திறனின்றியும் திருட்டு, கொள்ளை, கூலிக்கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், அல்லது அரசியல் அல்லது சாதி, சமய அமைப்புகளில் அடியாட்களாகின்றனர்.

செ.:அரசு வேலையை விட்டால் இன்றைய வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ளும் சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் வேறு எங்குள்ளன?

.: அயல் நேரடி முதலீடு என்ற பெயரில் உள்நாட்டு ஆட்சியாளர்களின் கள்ளக் கூட்டுடன்  அயல்நாட்டு நிறுவனங்ககளின் பெயரில்  நடைபெறும் தொழிற்சாலைகளிலும், டாட்டா, பிர்லா போன்ற பனியா – பார்சி, பார்ப்பனர், தவிர சில உள்நாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற சம்பளம் கிடைக்கிறது. 

செ.:ஆனால் இவற்றால் மட்டும் உரிய கூலி கிடைக்கும் வேலையில்லாமல் திணறிக்கொண்டிருக்கும் இந்தப் பெரும் படையின் தேவைகளை நிறைவேற்ற எப்படி முடியும்?

.:  அதற்குத்தான் தொழில் வளர்ச்சி வேண்டுமென்று சொல்கிறேன்.

செ.:அதற்கும் அரசு வழி செய்கிறதே! தன் தொழில்(சுய தொழில்) பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றுடன் கடனுக்கும் ஏற்பாடுகள் உள்ளனவே!

.:  அரசின் இத்தகைய திட்டங்கள் அனைத்தும் பொய்மான்கள், திட்டமிட்ட ஏமாற்றுகள். இத்தகைய பயிற்சிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட வருமானத்துக்குக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான கட்டுறவு(நிபந்தனை). ஆனால் பயிற்சி பெற்றவர்கள் செலவுசெய்து திட்ட அறிக்கை உருவாக்கி இப் பயிற்சி நடுவங்களின் மூலம் கடனுக்காக வங்கிகளை நாடினால் அங்கு வேண்டுகையாளரின் உறுதிமொழியுடன் பிணையும், துணைப் பிணையும் கேட்பார்கள். பயிலுவோரின் தகுதியே ஏழ்மை என்று ஒரு முனையில் நிறுவிவிட்டு இன்னொரு முனையில் பிணையும் துணைப் பிணையும் கேட்பது ஏமாற்று அல்லாமல் வேறென்ன?

      “தன்”தொழில் பயிற்சியை எடுத்துக்கொண்டால் பண்டத்தைப் படைப்பவர்களுக்கு அதை விற்பதற்கான சந்தைத் தொடர்பு வேண்டும். அதற்கு இப் பயிற்சி அளிப்பவர்கள் காட்டும் வழிகள் தொழில் முனைவோர் பயிற்சியில் காட்டப்படுவது போன்றவையே.

செ.:அப்படியானால் நீங்கள் சொல்லும் தொழில் வளர்ச்சி என்பதுதான் என்ன?

.:  இன்றைய நிலையில் மிக உயர்வான அற்றைக் கூலி தரும் தொழிலான கட்டுமானத் தொழிலாளர்களால் எட்ட முடியாத உயரத்தில் உள்ளது நிலையான அரசுப் பணிகளில் மீக் குறைந்த சம்பளம். அது மட்டுமல்ல, விடுமுறைகள், மிகக் கணிசமான விடுப்பு வகைகள், விழா முன்பணம், விழாக் கொடைகள், பணிக்கொடைகள், மருத்துவச் சலுகைகள், குடும்ப நலத்திட்டங்கள், பிராவிடண்டு பண்டு எனப்படும் எய்ப்பில் வைப்பு, அவை அனைத்துக்கும் மேலாக தானும் தன் வாழ்க்கைத் துணையும் வாழும் காலம் வரை ஓய்வூதியம் என்று வாயைப் பிளக்க வைக்கும் ஏற்றத்தாழ்வு. இந்த அரசூழியர் கூட்டம் தமக்குத்தாமே ஆணையங்களை அமைத்து அவ் வப்போது தம் சம்பளத்தையும் படிகளையும் உயர்த்திக்கொள்ளும். அதற்குள் கருணாநிதி போன்ற ஊழல் வல்லுநர் கூட்டம் புகுந்து முரண்பாடுகளைப் புகுத்தி சங்கங்களைப் பயன்படுத்தி தண்டல் வேட்டை நடத்திவிடுவர். எல்லாம் மக்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் வரி என்றும் மின்சாரக் கட்டணம் என்றும் பேருந்துக் கட்டணம் என்றும் கொள்ளையடித்த பணம்தானே!

இந்தப் பணக் கொள்ளைக்கு மட்டுமல்ல அரசுப் பணிகளை எட்டாத உயரத்துக்கு உயர்த்தி அதற்காகப் போட்டி போடுவதற்காக மக்கள் தங்களைத் தாங்களே நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகும் பகைக் குழுக்களாகப் பிளவுபடுத்திக்கொள்ளவும் ஆட்சியாளர்களுக்கு இது பேருதவி புரிகிறது.

செ.:நம் நாட்டு அலுவலகப் பொதுமைக் கட்சிகள் எனப்படும் இந்தியப் பொதுமைக் கட்சியும் இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சியும் அரசு, ஆசிரியர்கள் உட்பட்ட அரசுசார் நிறுவன மீ உயர் சம்பளக் குழுக்களுக்காவே மிகுதியான போராட்டங்களை நடத்துகின்றனவே அது ஏன்?

.:  அவர்கள் கட்சி நடத்துவதற்கான பொருளியல் பின்புலத்தில் கணிசமான பகுதி இவ் வகுப்பினரிடமிருந்தே இருக்கலாம். இவர்களைப் பற்றி நாம் பின்னால் பேசுவோம்.

      நாம் பேசிக்கொண்டிருந்தது அரசு வேலைகளுக்குக் கிடைக்கும் உயர் சம்பளம் பற்றி. அதற்கு அருகிலாவது போக வேண்டுமென்றால் நம் நாட்டில் இருக்கும் எண்ணற்ற சிறு பட்டறைகளால் முடியவே முடியாது. ஒரு குறிப்பிட்ட கூலியைத் தன் ஊழியர்களுக்கு ஒரு நிறுவனம் வழங்க வேண்டுமென்றால் அந் நிறுவனத்தின் ஆக்கத்திறன் அதற்கேற்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நிறுவனங்களை உருவாக்க பனியா – பார்சி – வல்லரசியர்கள், ஏற்கனவே நிலைத்துவிட்ட தி.வி.சீ.(டி.வி.எசு.) போன்ற சில பார்ப்பனர் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தவிர பிறருக்கு நம் ஆட்சியாளர்கள் உரிமம் வழங்கமாட்டார்கள்.        

செ.:அப்படி என்னதான் செய்வார்கள்?

.:  முதலில் உரிமம் வழங்கும் அதிகாரம் பெரும்பாலும் தில்லி அரசிடம் உள்ளது. ஓர் அரிசி ஆலை தொடங்க வேண்டுமென்றால் கூட தில்லியிலிருப்போரின் இசைவைப் பெற வேண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

      அடுத்து வருவது மூலதனம். சொந்த மூலதனம் இருந்து அதைப் பயன்படுத்த முற்பட்டால் வருமான வரிக் கயவர்கள் வாயிலைத் தட்டுவார்கள்.

செ.:அதிலென்ற பிழை? அவர்கள் கேட்கும் கணக்கைக் காட்டி உரிய வரியைச் செலுத்த வேண்டியதுதானே?

.:  அது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் காட்டும் கணக்கை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எடுத்துக்காட்டாக ஒரு சிறு தொழில் அல்லது வாணிக நிறுவனத்துக்குள் நுழைகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு மேசை மீது கிடக்கும் மேற்கோள்(கொட்டேசன்) குறிப்பேட்டைக் கையிலெடுப்பார்கள். அதில் காணப்படும் இனங்கள் அனைத்தையும் அந் நிறுவனம் நடத்திய இடைபாடு(transaction)களாக எடுத்துக்கொள்வார்கள். நிறுவனத்தார் கூறும் மறுப்புரை எதையும் காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள்.

      அது போல் வருமானம் கூடக் கூட வரி விகிதமும் கூடும். அதனால் வருமான வரியைத் தவிர்ப்பதற்காக தம்மிடம் இருக்கும் நிறுவனங்களை சிறியவையாக உடைத்து ஒரு பெரும் நிறுவனமாக வளர வாய்ப்புள்ளவர்கள் அதைத் தாமாகவே தவிர்க்க ஆட்சியாளர்கள் வருமான வரிக் கொடுமைகள் மூலம் தூண்டுகிறார்கள்.

செ.:நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் பெரிய நிறுவனங்களும்தாம் நிறைய வரி செலுத்த வேண்டியிருக்குமே?

.:  சிந்தித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரி போலத் தோன்றும். ஆனால் உண்மையில், கணக்கில் வருமான வரியை வரவு வைத்துவிட்டு பல்வேறு பெயர்களில் மானியங்கள், சலுகைகள் என்று அரசுதான் அந் நிறுவனங்களுக்குப் பணம் கொடுக்கிறது.

செ.:ஆங்காங்கே பல ஆண்டுகளுக்கு முன் பின்தங்கிய பகுதிகள் என்ற பெயரில் முன்னுரிமைச் சலுகைகள் பெற்றுத் தொடங்கப்பட்ட தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றனவே!

.: ஆட்சியாளர்கள் கூறும் இந்த முன்னுரிமைகள் ஏட்டளவில்தான். எதற்கும் மசியாத, எந்தக் குற்றத்துக்கும் தண்டனை அச்சமில்லாத ஒரு அதிகார வகுப்பை வழிக்குக் கொண்டுவர இங்கு எந்தக் கடிவாளமும் இல்லை. கட்டடங்கள் கட்டி முடித்து ஆட்சியாளர்களுக்குத் தரகு கிடைக்கும் வகையில் அவர்கள் சுட்டிக்காட்டும் நிறுவனங்கள் வழங்கும் கருவிகளை வாங்கிப் பொருத்தி இறுதியில் மின் வாரியத்திடம் மின்னிணைப்புக் கேட்டால் நிறைவேற்ற முடியாத கட்டுறவுகளை விதித்துக் காலத்தைக் கடத்துவார்கள், அத்துடன் பெருந்தொகை கைக்கூலியும் கேட்பார்கள். பொருத்தப்பட்ட கருவிகள் துருப்பிடிக்கும். வாங்கிய கடனுக்கு அசலைச் செலுத்தாவிட்டாலும் வட்டி வளர்ந்துகொண்டே போகும். இறுதியில் நிலமும் கட்டடமும் கருவிகளும் ஏலத்துக்கு வரும். அதை வாங்குவதற்கென்றே மார்வாரிகள் ஆயத்தமாக இருப்பார்கள். இத்தனையும் பார்த்த பிறகு “ஒரு பய” அந்தப் பக்கம் காலெடுத்து வைப்பானா? அத்துடன் இத்தகை குறுந்தொழில்களால் நாம் மேலே கூறிய அளவு கூலியை பணியாளர்களுக்கு வழங்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.       

      இதில் ஓர் அவலம் என்னவென்றால் இத்தகைய சிறு நிறுவனங்களைத் தொடங்குவோர் பெரும்பாலும் தம்மிடம் அதற்கு வேண்டிய மூலதனம் இருந்தாலும் அதற்கு வருமான வரித் துறையினர் கணக்குக் கேட்பாளர்களே என்பதற்காகவே கடன் வலையில் வலியப் போய்ச் சிக்கிக்கொள்கிறார்கள்.

செ.:அப்படியானால் இதற்கு நீங்கள் கூறும் தீர்வுதான் என்ன?

.:  (இடைமறித்து) உங்களுக்குப் பசிக்கவில்லையா? ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் பேசலாமே! எனக்குப் பசிக்கிறது. இருங்கள் பக்கத்திலிருக்கும் உணவகத்திலிருந்து ஏதாவது வாங்கி வருகிறேன்.(விரைந்து சென்று அவர் உணவு வாங்கி வர மூவரும் உண்டு முடித்த பின் உரையாடல் தொடர்கிறது.)

.:  தீர்வு என்னவென்று கேட்டீர்களல்லவா? வருமான வரியை ஒரேயடியாக ஒழித்துவிடுவதுதான் இதற்குரிய தீர்வு.

செ.:வருமான வரியால் அப்படி ஏற்படும் தீங்குகள்தாம் என்னென்ன?  

.: மக்கள் மீது இடப்பட்டிருக்கும் பொருளியல் தளைகளில் முதன்மையானதும் கொடுமையானதும் வருமான வரிதான். பொருளியலைத் தாராளமாக்குவது பற்றிய பேச்சு வந்ததும் வருமான வரியின் கெடுபிடி தளரும், வருமான வரிக்கான கீழ்வரம்பு உயரும் என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் வி.பி.சிங் காலத்தில் ரூ. 22,000/-ஆக இருந்த வரம்பு ரூ.28000/- ஆவதற்கு மக்கள் மிகவும் கெஞ்ச வேண்டியிருந்தது. இவ்வளவுக்கும் இவ் வருமான வரி பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களையும் தொழிலாளர்களையும் காப்பதற்காக விதிக்கப்படுவதாகவே பெரும்பாலோர் நம்புகிறார்கள். இந் நிலையில் 1993-94ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் வெளியிடப்படும் முன்பே தொழிலாளர்கள் சார்பில் கீழ் வரம்பை ரூ.50,000/-ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை எழுப்பியவர் இந்தியாவின் ஆற்றல் மிக்க பேரவைக் கட்சி சார் தொழிற்சங்கத் தலைவரான இராமானுசம் ஆவார். இதிலிருந்து வருமான வரி வாய்க்கும் கைக்கும் என வாழ்வோர் அல்லது கீழ் நடுத்தர வகுப்பு மக்களையும் எட்டிவிட்டது புலனாகும். அடுத்த ஆண்டும் இக் கோரிக்கை தொடர்ந்தது. ஆனால் நம் பண அமைச்சர் வருமான வரி வரம்பில்  மாற்றமேதும் செய்யவேயில்லை. ஆனால் மேலே கூறப்பட்ட தொழிற்சங்கத் தலைவரை ஒரு மாநில ஆளுநர் பதவியைக் கொடுத்து களத்திலிருந்து அகற்றினர் என்ற உண்மை வருமான வரி என்பதனை இந்திய ஆளும் கூட்டம் தம் நிலைப்புக்கு எவ்வளவு இன்றியமையாததாகக் கருதுகிறது என்பதற்கான ஐயந்திரிபற்ற சான்று. 

0 மறுமொழிகள்: