குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 30
27. இந் நாட்டுக் கணிகையரும் கற்பைப் பேணுவர்!
(தி.பி.
ஏழாம் நூற்றாண்டு)
“என்ன மணவாளா! என்ன
படித்துக் கொண்டிருக்கிறாய்?”
“வா
பொன்னம்பலம்! தொல்காப்பியம் படித்தேன். அதென்ன கையில், சிலம்பா?
படித்து முடித்துவிட்டாயா?”
பொ.: ஆம் மணவாளா. எவ்வளவு உயர்ந்த காப்பியம்!
மண.: இல்லையா பின்னே! மாற்றானொருவனால் சிறையெடுத்துச் செல்லப்பட்டுப் பத்து
மாதங்கள் கழித்து மீட்கப்பட்ட பின்னர்த் தூக்கிச் சென்றவனின் வடிவைத் தீட்டியவளும்
கருவுற்றிருக்கும் போது காட்டிற்குச் சென்றவள் திரும்பிய போது இன்னொரு பிள்ளையுடன்
வந்தவளுமான சீதையையும் ஐவரை மணந்தும் ஆறாமவன் மீது மையல்
கொண்டவளான பாஞ்சாலியையும் கணவனுக்கும் அவன் அண்ணனுக்கும் பெண்டாயிருந்த தாரையையும்
மாற்றானாகிய இந்திரனைப் புணர்ந்து மகிழ்ந்த அகலிகையையும் வேண்டும் வரம் கேளென்று
கூறிய கணவனிடம் அடுத்த பிறவியில் ஐந்து கணவர்கள் வேண்டுமென்று கேட்டவளும் வரம்
தரத் தோன்றிய சிவனையும் பார்த்து மையல் கொண்டவளுமான நளாயினியையும் தவிரப்
பத்தினிப் பெண்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்ட தொன்மக் கதைகளுக்கு அறைகூவலாகக்
கணவனின் பழி தீர்க்க அரசனும் அரசியும் சாவக் காரணமாகி ஊரையும் எரித்த கண்ணகியையும்
தமிழ் நிலத்துக் கணிகையரும் கற்பிற் சிறந்தவரே என்று கூறி மாதவியையும் மற்றும் ஏழு
பத்தினிப் பெண்டிரையுமநம்முன் நிறுத்துகிறார்.
பொ.: ஆமாம்! ஆனால் இவ் வரிய கதைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல ஆளில்லையே!
தொன்மிகர் போன்று இக் கதையைக் கூறவும் ஒரு கூட்டத்தைத் தோற்றுவித்தால்
நலமாயிருக்கும்.
மண.: அது மட்டுமா! தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்
கூறப்பட்ட துறைகளுக்கெல்லாம் இலக்கியமாக ஒரு சேர அமைக்கப்பட்ட மிக் சிறந்த
காப்பியம் இந் நூல்.
பொ.: ஆமாம். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்று துறைகளுக்கும் பொருந்த
திங்களுக்கும் ஞாயிற்றுக்கும் மாமழைக்கும் சோழனை உவமை காட்டி வாழ்த்தி நூலைத்
தொடங்குவதிலிருந்து காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் என
முடிப்பது வரை தொல்காப்பியத்துக்கு இலக்கியமாக நூல் அமைந்திருக்கிறது.
மண.. அது மட்டுமா? கணவனைத் திரும்ப அழைப்பதற்குச் சுனையாடி தெய்வத்தை வழிபடக்
கூறிய தோழியிடம் ‘பீடன்று’ எனக்
கூறிவிடும் கண்ணகியோடு தன்னோடு பிணங்கிச் செல்லும் போதெல்லாம் பல உத்திகளாலும்
திரும்ப அவனைத் தன்னிடம் அழைத்தும் அவன் உறவினரிடம் முறையிட்டும் அவனை மீண்டும்
கொள்ளும் மாதவியை எப்படி ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார்!
பொ.: ஆமாம். உலகிலெல்லாம் கடவுளரையும் அரசரையும் வீரர்களையும் பற்றிய கதைகளே காப்பியங்களாக இருக்க, இவர் ஒரு வாணிகக் குலத்து
இளைஞனையும் அவன் மனைவியையும் ஒரு கணிகையையும் சுற்றிப் படரும் நிகழ்ச்சிகளைக்
கொண்டு பண்டைத் தமிழ் மரபுகளையும் பல்வேறு கலைகளையும் பாடல்களையும் கூத்துகளையும்
நுண்ணிய மன நுட்பங்களையும் விரித்துக் கூறிவிட்டிருக்கிறார். கதை சொல்லும்
உத்திகள்தாம் எத்தனை, எத்தனை!
மண.: அது மட்டுமா? புறத்திணைப் போர் வீரர்களுக்கு மட்டுமே என்பது
போன்றிருக்கும் கருத்தை முறித்து ஒரு பெண்ணுக்குக் காட்சி, கால்கோள், நீர்ப்படை,
நடுகல் என்று பாடி அகம் புறம் என்பதற்கு உண்மைப் பொருளைத் தெளிவித்திருக்கிறார்.
பொ.: நம் விழிப்பு நிலைகளையும் மீறி பார்ப்பனர்கள் எவ்வாறு அரசர்களை வேள்வி
புரிய வைக்கின்றனர் என்பதையும் செல்வர்கள் எவ்வாறு பார்ப்பனரை வைத்து மணவினை
முடிக்கின்றனர் என்பதையும் அரசர் முதல் கணிகையர் வரை அவரவர்க்கு வேண்டியவற்றைச்
செய்து எப்படி அவர்கள் குமுகத்தில் ஊடுருவுகிறார்கள் என்பதையும் சென்றவிடமெல்லாம்
மக்களை மகிழ்விக்க அரசர் புகழ் பாடி அத்துடன் தொன்மக் கதைகளைப்
பரப்புகிறார்களென்பதையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.
மண.: இத்தகைய ஒரு நனிசிறந்த இலக்கியம் நம்மிடம் இருப்பதை ஏன் நம் புலவர்கள்
உலகெல்லாம் பறையறைந்து தெரிவிக்கவில்லை?
பொ.: எப்படியப்பா மணவாளா இயலும்? நாட்டில் தமிழர் ஆட்சியா நடக்கிறது? வெளி
நாட்டாருக்குத் தண்டல்காரர்கள்தானே நாட்டை ஆள்கிறார்கள். அவர்கள் வடமொழிக்கு
ஆட்சியிலும் வழிபாட்டிலும் முதலிடம் கொடுத்துவிட்டார்கள். அரசைச் சுற்றியிருக்கும்
தமிழர்களும் நத்திப் பிழைப்பவர்தாமே? மொழி உணர்ச்சி உள்ளவர்கள் அண்ட முடியுமா?
உயிரையும் விட மொழி மீது பற்றுள்ள சிலர் மட்டும்தான் தமிழ்க் காப்போராக வாழவும்
முடியாமல் சாகவும் முடியாமல் நலிந்துகொண்டிருக்கிறார்கள். அதிருக்கட்டும் மணவாளா,
இதென்ன உன் நெற்றியில் சாம்பல் குறியிட்டிருக்கிறாய்?
மண.: உனக்குத் தெரியாதா? நாட்டில் அம்மணர்களுக்கும்
சிவனியர்களுக்கும் கலவரம் நடைபெறுவதுபற்றி! சிவனியர் கை ஓங்கியிருக்கிறது. இக்
குறியை இட்டுச் சென்றால் தப்பலாம். பாண்டிய நாட்டில் சாம்பல் குறி இடவில்லையானால்
உயிர்தப்புவது அரிது.
பொ.: ஆம்! நானும் கேள்விப்பட்டேன். பாண்டிய நாட்டில் எட்டாயிரம் அம்மணர்களைக்
கழுவிலேற்றிவிட்டார்களாமே?
மண.: உண்மைதான். நான் மதுரைக்கு என் தமக்கை வீட்டுக்குப் போய்விட்டு
நேற்றுத்தான் வந்தேன். அங்கு எல்லாச் செய்தியும் தெரிந்துகொண்டேன். பாண்டியன் மாறவர்மனின்
மனைவி மங்கையர்க்கரசி நம் நாட்டவளல்லவா? பாண்டியன் அம்மணன். அரசியும் அமைச்சன்
குலச்சிறையும் சிவனியர்கள். மன்னனைச் சிவனியத்துக்குத்
திருப்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு வாதநோய் வந்த போது அம்மண
மருத்துவர் மருந்து கொடுக்கக் கொடுக்க இவர்கள் எதிர் மருந்து கொடுத்து நோய்
தீராமல் செய்தனர். பின்னர் சம்பந்தனால் நோய் தீர்ந்தாற் போல் காட்டினர். மன்னன்
சிவனியத்தைத் தழுவினான். சம்பந்தன் அம்மணர்களை அனல், புனல்
வாதங்களுக்கு அழைத்தான். அரசன், அரசி, அமைச்சன் துணையுடன் மக்கள் துணையும்
இருந்ததால் ஏமாற்றால் ஏடு நெருப்பில் எரியாதது போலவும் நீரை எதிர்த்துச் சென்றது
போலவும் காட்டி வெற்றி பெற்று அவர்களைக் கழுவில் ஏற்றியிருக்கிறார்கள்.
பொ.: மக்கள் எப்படி இந்தத் தீச்செயலைப் பொறுத்துக் கொண்டார்கள்?
மண.: மக்கள் ஏற்கனவே அம்மணர் மீது வெறுப்புற்றிருந்தனர். தமிழ் மொழியை
அழிக்கத் திட்டமிட்டவர் போல் அம்மணர்கள் நடந்துகொண்டார்கள். புது இலக்கண நூல்களை
இயற்றி வடமொழி வழக்குகளை நிலைநாட்ட முயன்றனர். மணிப்பவள நடையைத் தோற்றுவித்துத்
தமிழுக்குப் பெரும் கேடு விளைவித்து வந்தனர். இவையெல்லாம் சேர்ந்து மக்களுக்கு
அவர்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பே அவர்களது அழிவில் முடிந்தது.
பொ.: இருந்தாலும் அன்பே சிவம் என்போர் இச் செயலில் ஈடுபட்டதை என்னால்
பொறுக்கமுடியவில்லை. எட்டாயிரம் பேரைக் கேட்பார் கேள்வியின்றிக்
கழுவிலேற்றியிருப்பது போன்ற காட்டுவிலங்காண்டிச் செயல் உலகில் வேறெங்கும்
நடந்திருக்குமோ என வியப்பாக இருக்கிறது.
மண.: நான் அறிந்த வரையில் மதம் என்ற சொல் குறிப்பிடும் மெய்யியல்
எனப்பப்படும் கோட்பாடுகளுக்கும் அவற்றின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றுவதற்கென்ற
பெயரில் கட்டமைக்கப்படும் சமயம் என்ற நிறுவனங்களுக்கும் எப்போது முரண்பாடு இருந்தே
வந்துள்ளது. கடவுளின் பெயரில் கோட்பாடு, நிறுவனம் ஆகிய இவை உருவாக்கப்பட்டாலும்
உண்மையில் கடவுளுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவை. ஒருவனே தேவன் என்று சிலர் கூறும்
விளக்கத்துக்கு முற்றிலும் புறம்பானவை. முழுமையான அரசியல் அடிப்படையையும்
குறிக்கோளையும் கொண்டவை. தாய்மொழி குறித்த இவர்களின் நிலைப்பாடுகளும் சூழ்நிலைக்கு
எற்ப மாறக்கூடியவை. அவ்வாறுதான் தமிழ் மொழிக்குப் பகைவர்களாக இருந்த
பார்ப்பனர்களே மீண்டும் தமிழைக் காப்போர் போல் இன்று நுழைகின்றனர்.
தமிழர்க்கு உண்மையில் மீட்பளிக்கும் வீரன் ஒருவன் தோன்றுவானோ? சிலம்பை
வைத்தும் இன்றைய சூழ்நிலையை வைத்தும் நோக்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. களப்பிரர்
படையெடுப்பு என்பது பற்றிய புதிர் விடுபடும் போல் தோன்றுகிறது.
பொ.: என்ன அது?
மண.: சிலம்பில் மாநாய்க்கன், மாசாத்துவன் போன்ற செல்வர்களுக்குப் புரோகிதர்களாகவும் கோவலன் போன்ற
செல்வர் மைந்தர்களுடன் கணிகையர்த் தூதுவராகவும் செங்குட்டுவன் போன்ற அரசர்களுடன்
வேள்வியாசிரியராகவும் பார்ப்பனர் இருப்பது ஒரு புறம், பிழைப்புத் தேடிச் செல்லும்
கோவலன் கண்ணகிக்குத் துணையாகச் செல்லும் சமணக் கவுந்தியடிகள் எயினர்களிடமும்
ஆயர்களிடமும் பெற்றிருக்கும் செல்வாக்கையும் மதுரையை எரித்த கண்ணகியை வேடர்கள்
வணங்குவதையும் கொண்டு எளியவர்களுடன் அம்மணர்கள் மறுபுறம் திரண்டிருப்பதும்
காணக்கிடக்கிறது. பின்னர் நாடு முழுவதும் அம்மணர் சார்பான ஆட்சி நடப்பதையும்
காணும் போது, இடையில் மக்கள் திரண்டு அன்றைய ஆட்சியாளர்க்கு எதிராகப் போரிட்டு அவர்களை ஒழித்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. புதிதாக
ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் நெடுநாள் முழு நாட்டையும் கட்டுப்படுத்த முடியாமல்
சோழ, பாண்டிய மரபுகளை மீண்டும் நிறுவ வேண்டிய சூழ்நிலை நேர்ந்திருக்கும். ஆனால் அம்மணமே
ஆட்சி செய்திருக்கிறது. இப்பொழுது அம்மணம் அழியத் தொடங்கி மீண்டும் பார்ப்பனர்
ஆதிக்கம் தலை தூக்குகிறது.
பொ.: நீ சொல்வது சரியாயிருக்கலாம். நான்
சென்று வரட்டுமா?
மண.: சரி, பொன்னம்பலம். நம் நாட்டினுள்ளும் அம்மண -
சிவனியர் கலவரம் தோன்றும்போல் இருக்கிறது. நீயும் நெற்றியில் நீறு இட்டுக் கொள்வது
நல்லது.
பொ.: சரி!
மண.: ஆனால் எல்லாச் சாம்பலையும் தடவாதே!
ஏனெனில் நெற்றி புண்ணாகிப் போகும். மாட்டுச் சாணத்தைச் சுட்ட சாம்பலைப் பூசினால்
அவ்வாறு நேராது.
பொ.: ஓகோ, அதுவும்
அப்படியா?
மண.: ஆமாம்! எங்கள் வீட்டில் எல்லோரும் பூசுகிறோம். உன் வீட்டாரையும் அணியச்
சொல்!
பொ.: சரி வருகிறேன்!
பின்குறிப்பு: சிலப்பதிகார – மணிமேகலைக் காலம், சரியாக
மதிப்பிடப்படாத, தமிழக வரலாற்று வீழ்ச்சியைச் சுட்டி நிற்கும் காலமாகும். வாணிக
வகுப்பு பொருளியலில் உயர்ந்து அரசர்களை எதிர்த்துப் புரட்சி செய்ய ஆயத்தமாக நின்ற
ஒரு காலம் ஆகும். அது மட்டுமல்ல, தமிழகத்தின் வடதிசைக் காவலர்களாகச் செயற்பட்டு
வந்த குறுநில மன்னர்களைக் களத்திலிருந்து அகற்றிய மூவேந்தர்களும் ஒரு புறம்
தமிழகத்தின் எதிர்காலத்தை ஏதத்துக்குள்ளாக்கினர். இதில் வாணிகர்களின், குறிப்பாக
கடல் வாணிகர்களின் பங்கும் இருக்கும் வாய்ப்பு உள்ளது. குறுநில மன்னர்கள் குறிஞ்சி
நில மக்களுக்குக் கள்ளை வழங்கி யானை மருப்பு, மிளகு, ஏலம் போன்ற நறுமணப்
பொருள்களைப் பெற்று “யவனத்”துக்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து சீமைச் சாராயம்,
கண்ணாடிப் பொருட்கள் போன்ற உயர்தர நுகர்பொருள்களை இறக்குமதி செய்துள்ளது கழக
இலக்கியங்களிலிருந்து தெரிகிறது. விரிவுக்கு ஆய்வறிஞர் சீனி.வேங்கடசாமி அவர்களின் சங்க
கால வாணிகம் என்ற நூலைப் பார்க்க. இந்த வாணிகத்தைக் குறுநில
மன்னர்களிடமிருந்து பறிப்பதற்காக மூவேந்தர்களுடன் தமிழக வாணிகர்களும்
இணைந்திருப்பார்களோ என்றும் ஐயம் எழுகிறது. இதில் அம்மணத்தைத் தாங்கி வந்த
வடக்கின் ஒற்றர்களும் புத்தத்தைச் சுமந்த கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் போன்றோரும்
இன்று சிங்களர்களுடன் இணைந்து செயல்படும் ப.சிதம்பரத்தைப் போல் வாணிகர்களுக்கு ஓர்
உள்நாட்டுத் தலைமை உருவாகாமல் பார்த்துக்கொண்டார்கள். குறுநில மன்னர்களுக்கு
மணிமுடி தவிர்த்த அரசனின் அணிகள் அனைத்தும் உண்டு. அவற்றை வாணிகப் பூதத்துக்கு
ஏற்றிக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
மன்னிய சிறப்பின் மறவேல்
மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்……அழற்படு காதை,
63 -64
அதன்
விளைவு மூவேந்தர் அரசுகளும் வீழ்ந்தன. வடக்கின் வாணிகர்களால் வழிநடத்தப்பட்ட
களப்பிர, பல்லவ அரசர்களாலும் தமிழக வாணிகர்கள் வேரறுக்கப்பட்டனர். இறுதியில் சோழப்
பேரரசர்களான இராசராசன் தமிழக வாணிகர்கள் தமிழகத்தினுள் தலைதூக்க முடியாமல்
ஒடுக்கினான். அவன் மகன் இராசேந்திரன் தமிழகத்துக்கு வெளியில் தொழில் செய்த தமிழக வாணிகர்களை அழிக்க கங்கை நோக்கிய தன்
படையெடுப்பைப் பயன்படுதிக்கொண்டான். கடல் கடந்து கடாரம் சென்றதும் அங்கு குடியேறி
வாணிகம் செய்த தமிழக வாணிகர்களை அழிக்கத்தான். இறுதியில் குலோத்துங்கன் வலங்கை -
இடங்கைப் பூசலை ஊதிப் பெருக்கி வாணிகர்களை தீண்டத்தகாதவர் நிலைக்குத் தாழ்த்தி
ஒடுக்கினான். ஆங்கிலர் ஆட்சி அளித்த வாய்ப்பாக அதன் கீழிருந்த தெற்காசிய
நாடுகளுக்குக் கப்பலேறிய தமிழகத்தாரால்தான் வாணிகத்தில் ஓரளவு வளர முடிந்தது.
இளங்கோவடிகள் கோவலனைப் பொறுத்தவரை மாதவியை ஒரு
கணிகையாகக் காட்டவில்லை. மங்கலவாழ்த்துப் பாடலில் காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
என்று கண்ணகி குறித்துக் கூறியதை கானல்வரியில் உவவுற்றதிங்கள்
முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய் என்று மாதவி குறித்துக்
கூறுகிறார். அது மட்டுமல்ல கோவலனின் அடிப்படைக் குறைபாடு மாதவியுடனான உறவல்ல, நாள்தோறும்
விலைமகளிரை நாடுவதுதான் என்பதை மிகத் திறமையாக மறைமுகமாக வெளிப்படுத்துகிறார் அடிகளார்.
நகையா டாயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன்…… என்று வரிகள் 199 -201இலும்
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
. இகலம ராட்டி யெதிர்நின்று விலக்கியவர்
எழுதுவரி கோலம்
முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க
பெருந்தோட் கணவரொடு
உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து
மணித்தோட்டுக் குவளைப்
போது
புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின்
தீர்ந்தில தாயின் யாவதும்
மருந்தும் தருங்கொல்இம் மாநில வரைப்பெனக்
கையற்று நடுங்கும்……..என்று வரிகள் 224 – 234இலும் இந்திரவிழவூரெடுத்த
காதையில் கூறுவதன் பொருள் மாதவிக்கும் கோவலனுக்கும் அவனது விலைமகளிர் நாட்டம்
பற்றி ஏற்கனவே முரண்பாடு இருந்தது என்பதாகும்.
கணிகையர் எனப்படுவோர் உலகம் முழுவதும்
மனித வரலாற்றில் காணக்கிடைக்கும் ஒரு இயற்பாடாகும். குக்குலத் தலைவியாக இருந்த மூத்த
பெண்கள் நெருப்போம்பல் போன்ற பணிகளைச் செய்யும் குக்குலப் பூசகராகவும் இருந்தனர். பின்னர்
நாகரிக வளர்ச்சியால் அரசுகளும் பெரிய கோயில்களும் உருவான நிகழ்முறையின் ஊடே பெண் தலைமை
ஆணுக்கு மாறி ஆடவரே பூசகரான போது கோயில் நடைமுறைச் செலவுகளை ஈடுகட்ட இப் பெண் பூசகர்கள்
பரத்தையராகவும் செயல்பட்டமை குறித்து எரோடட்டசு போன்ற பண்டை வரலாற்றாசிரியர்கள் பதிந்துள்ளனர்.
இவர்கள் பூசகர்களாக இருந்த போதே இவ் வழக்கம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதனால்தான்
மாந்தநூலார் இவர்களைக் கோயில் பூசகிகளென்றும் கோயில் பரத்தையரென்றும்(temple
priestesses and temple prostitutes) ஒரே நேரத்தில் குறிப்பிடுகின்றனர்.
நம் மரபில் உலக வரலாற்றாசிரியர்கள்
தடம்பிடிக்காத ஒரு நடைமுறை இருந்திருக்கிறது. குக்குலப் பூசகத் தலைமைகளின் கண்காணிப்பில்
உருவான இந்திரன் தலைமையிலான அரசுக்கு ஒற்றர்களாகவும் உளவாளிகளாகவும் பாணர்களும் கூத்தாடும்
கூத்திகளுயும் பயன்பட்டனர். இந்திரனுக்கு எதிரான முயற்சியில் ஈடுபடுவோரைத் திசைதிருப்புபவனாக
நாரதரையும் இந்திர பதவியைப் பிடிக்க தவம் முதலிய ஆயத்தங்களில் ஈடுபடுவோரைக் கவிழ்ப்போராக
இந்திரன் அவையில் ஆடும் பெண்களையும் நம் தொன்மங்கள் காட்டுகின்றன. இவர்களுக்கு குமுகத்தின்
நால் வருணப் பாகுபாட்டில் நான்காம் இடம் இருந்ததென்பது சிலப்பதிகாரம், அழற்படு
காதையில் வரும் நான்காம் வருண விளக்கம் காட்டுகிறது
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக்
கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றி…..(வரி. 99 -102)
என்ற
விளக்கம் எப்போதும் யாழைத் தூக்கிக்கொண்டு அலையும் நாரதனையும் இந்திரன் அவையின் ஆடற்பெண்களான
அரம்பையரையும் குறிக்கிறது என்பது தெளிவு. ஒற்றர்களான இப் பெண்களுக்கு காதல் தடை செய்யப்பட்டிருந்தது.
அதை மீறி இந்திரன் மகனைக் காதலித்ததால் இந்திரன் அவையிலிருந்து அவனது செல்வாக்குக்கு
உட்பட்ட சோழநாட்டுக்குக் நாடுகடத்தப்பட்ட உருப்பசியின் வழிவந்தவள்தான் கோவலன் காதலி
மாதவி. அவளும் தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி கோவலனுக்கு மட்டும் காதலியாகவும்
மனைவியாகவும் இருந்தாள். ஆனால் அவள் வாழ்ந்த காலத்துச் சூழலில் இந்த அரச கணிகை முறை தமிழகத்தில் முற்றுப்பெற்றுவிட்டது.
ஆனால் தமிழகத்துக்கு வடக்கே, குறிப்பாக
ஆந்திரத்தில் கோயில் கணிகையர் மட்டுமின்றி கோயிலில் பொட்டுக்கட்டி வெளியே பரத்தைமையைத்
தொழிலாகக் கொண்ட பெண்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர்என்றும் இவர்கள்
என்றுமே கைம்மை எய்தாத “நித்திய சுமங்கலிகள்” என்று போற்றப்பட்டனர் என்றும் திருமணங்களின்
போது அவர்கள் கைகளால் தாலியை எடுத்துத் தந்தால் மமணமக்களின் வாழ்வு சிறக்குமென்று ஆந்திர
மக்கள் நம்பினர் என்றும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் Castes and Tribes of
Southern India என்ற நூலில் எட்கார் தர்சுட்டன் குறிப்பிட்டுள்ளார். இன்றும் இம்
முறையை ஒழிக்க அரசும் அம் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு வெற்றி பெற முடியவில்லை.
வடக்கிலிருந்து தமிழகத்தினுள் நுழைந்த
பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தேவரடியார் எனும் கோயில் கணிகையர்
முறை புகுத்தப்பட்டது என்று தோன்றுகிறது. தான் ஆட்சியைப் பிடிக்கத் துணையாக இருந்த
சிற்றரசர்கள் தன் ஆட்சியில் தலையிடுவதைத் தவிர்க்கவே[1] கோயில்களைக்
கட்டி அவற்றின் கீழ் பெருமளவு நிலங்களைக் கொண்டுவந்து கோயில்களை உள்ளூர் ஆட்சி உறுப்புகளாக
கட்டியமைக்கும் செயல்முறையைத் தொடங்கியவன் இராசராச சோழன். பேரரசாகிவிட்டதாக அரசியல்வாணர்கள்
முழங்கும் இன்றைய இந்தியாவைப் போலவே பெரிதாகப் பேசப்படும் சோழப் பேரரசின் தண்டல் கொடுமைகள்
தாங்காமல் வறுமை எய்திய பெண்கள் தாயும் மகள்களுமாகக் கோயில்களுக்குத் தங்களை விற்றுக்கொண்டனர்.
தளியிலாப் பெண்டிர் எனப்படும் இவர்கள் தவிர கோயில் நிலங்களை மானியமாகக்
கொடுத்து பாணர், உடுக்கு உட்பட்ட பல்வேறு இசைக் கருவிகள் இசைப்போர், கோயில் பராமரிப்புப்
பணிகளில் ஈடுபடுவோர் என்று ஒரு பெரிய கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கோயிலும்
வைத்திருந்தது. கோயில் பூசகர் உட்பட்ட கோயில் ஆள்வினையாளர்களால் ஆட்டுவிக்கப்படும்
இக் குடும்பத்துப் பெண்கள் இவர்கள் விருப்பங்களுக்கு இசைவாக நடந்துகொள்ள வேண்டும்.
வெளியூர்களிலிருந்து கோயில்களுக்கு திருவிழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்தோடு
வருவோருக்கு உணவளித்து ஊதியம் பெற்று வாழ்க்கையை நடத்துவோர் பெரிய கோயில்களை அடுத்துள்ள
வீதிகளில் அண்மைக் காலம் வரை இருந்தனர். தனியாக வரும் ஆண் “இறையன்பர்”களுக்குப் பாலியல்
பணிவிடை செய்வதும் இவர்களது தொழிலாக இருந்தது. ஆக, நம் நாட்டுப் பெருங்கோயில்கள் எனப்படுபவை
பாலியல் தொழில் நடுவங்களாகவே இருந்தன. இந்தப் பின்னணியில் கோயில் பூசகர்கள் அரசர்களையும்
உள்ளுர்த் தலைவர்களையும் பெருந்தனக்காரர்களையும் வளைத்துப் போடுவதற்குத் தங்கள் கட்டுப்பாட்டில்
இருந்த பெண்களைப் பயன்படுத்துவது நெடுநாள் நடைமுறையாக இருந்தது.
இதனால் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் அதிகாரப் போட்டிகள்
அவ் வவப்போது முனைப்படைந்தன. முகம்மதிய மற்றும் கிறித்துவ சமயத் துறவிகள் என்ற பெயரில்
அயல் ஒற்றர்கள் நுழைந்த போது அவர்களுக்கு அளவுக்கு மீறிய மதிப்பும் சலுகைகளும் பிற்காலத்
தமிழக அரசர்களான நாயக்கர்கள் கொடுத்தது பார்ப்பனர்களோடுள்ள முரண்பாட்டை எதிர்கொள்ளத்தான்.
எடுத்துக்காட்டாக நெல்லைச் சீமையில் மீனவர்களை அடக்கவென்று வந்த நாயக்கர் படைத்தலைவன்
அப்போது அங்கு இருந்த கிறித்துவ மதகுரு சவேரியார் எனப்படும் சேவியர் கையில் சிலுவையைத்
தூக்கிக் காட்டிய படி தனிமையில் படையை நோக்கிவர படைத் தலைவன் குதிரையை விட்டு இறங்கி
வந்து சவேரியாருக்கு வணக்கம் செலுத்தித் திரும்பிச் சென்றதைக் குறிப்பிட்டுச் சொல்ல்லாம்.
சேர அரசரான சேரமான் பெருமாள் எனப்படுபவர் முகம்மதியத்துக்கு மாறி மெக்காவுக்குச் சென்றுவிட்டதாகக்
கூறப்படுவது நம்பூதிரிகளின் அட்டூழியங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான்.
பார்ப்பனர்களைப் பொறுத்த வரை அவர்களுக்குள் திட்டவட்டமான தர வரிசைகள்
உள்ளன. அரசு ஆள்வினை(நிர்வாக)ப் பதவிகளில் இருப்போர்க்கே அங்கு முதல் வரிசை. அடுத்து
வருவோர் கோயில் பூசகர்கள். அருச்சனைத் தட்டுகளில் விழும் காசை வைத்தே பிழைக்க வேண்டியவர்கள்
அவர்கள். மூன்றாவதும் கடைசியாகவும் வருவோர் திருமணம், சாவு போன்ற பல்வேறு இயற்கை நிகழ்வு
சார்ந்த சடங்குகளை நடத்தும் புரோகிதர்களாவர். இவர்களைச் சவண்டிப் பார்ப்பார் என்று அழைப்பர். சவம் தின்(னும்)
பார்ப்பார் என்பதன் மரூஉவாகும் இது. முந்தியல் தொல்பழங்காலத்தில் இறந்தோர் உடலைத் தாம்
அல்லும் பகலும் காத்திருக்கும் நெருப்புக்குப் பலியாக இட்டு “ஆகுதி”யை உண்ட குக்குலத்
தலைவிகளாகிய பூசகிகளைத் தொடர்ந்த பூசகர்களைக் குறிப்பதாகும் இது. இவர்களின் இன்றைய
எச்சமாக காசியில் இருக்கும் அகோரிகள் விளங்குகின்றனர்.
தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலில்
அச்சம் பற்றிய நூற்பாவில் (8) அணங்கு என்ற சொல்லுக்கு, ″... அணங்குதல் தொழிலராகிய சவந்தின்
பெண்டிர் முதலாயினாரும் ....″ என்று பேராசிரியர் உரை கூறுகிறார்.
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர்…….என்ற சிலப்பதிகார வரிகளில்
(கட்டுரை காதை 68 -70) வரும் முத்தீ என்பதற்கு ஆகவனீயம், காருகபத்தியம்,
தக்கிணாக்கினி என்று விளக்கம் தருகிறார் ந.மு.வேங்கடசாமியார். இவற்றில் ஆகவனீயம் என்பது
ஒன்றுதான் பார்ப்பனர் பெருமையாகப் பேசும் வேள்வித்தீ. காருகபத்தியம் என்பது என்பது
கொல்லர்கள் போன்ற நுண்வினையாளர் வளர்க்கும் தீயாகும். மூன்றாவதாகிய தக்கினாக்கினி என்பது
தென்புலமாகிய சாவூருக்குச் சென்றோரை எரிக்கும் சுடுகாட்டுத்தீயாகும். ஐம்பெரு வேள்விகளில்
இறுதியானதாகிய தென்புலத்தார் வேள்வித் தீயும் இந்த தக்கினாக்கினியையே, அதாவது சுடுகாட்டுத்
தீயையே குறிக்கிறது[2].
அம்மணர்களைப் பொறுத்த
வரை கவுந்தி அடிகளைப் போன்ற அடிமட்ட சமய ஊழியர்களுக்கும் தலைமை மதவாணர்களுக்கும் இருந்த
முரண்பாட்டை அடிகள் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். கோவலன், கண்ணகியை கவுந்தியடிகள்
உடனழைத்துச் செல்வதை அவர்கள் கண்டிக்கின்றனர்.
நிவந்தாங்
கொருமுழம் நீணிலம் நீங்கிப்
பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப்
படர்வோர் ……..நாடுகாண் காதை 210 – 212
என்ற
வரிகளில் இதைக் காட்டுகிறார் அடிகள். விரிவுக்கு நிவந்தாங்கொருமுழம்
நீணிலம் நீங்கி….என்ற எம் கட்டுரை பார்க்க.
இவை
அனைத்தையும் விட இளங்கோவடிகளின் மிகப் பெரிய கொடை அன்றைய குமுகச் சூழலில் அம்மண ஒற்றர்களின்
இயல்பை அறிந்து அவர்கள் தமிழக நாகரிகம், பண்பாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக வருவார்கள்
என்ற முன்னெச்சரிக்கையுடன் ஏட்டில் பதிக்கத்தக்க அனைத்துச் செய்திகளையும் பதிந்துவைத்திருப்பதே.
இன்னும் தெளிவாகக் கூறுவதாயின் சிலப்பதிகாரம் தமிழகத்தின் கலைகள், பண்பாட்டுச்
செய்திகளைக் கூறும் ஒரு பாடநூல் போலவே அமைந்துள்ளது. அத்தகைய ஓர் ஆக்கத்தில் வரும்
சலிப்புணர்வைத் தவிர்ப்பதற்காக கண்ணகியின் கதையை ஒரு பின் களமாகப் பயன்படுத்தியிருக்கிறார்
என்று சொல்ல்லாம். இது அவரது தமிழ், தமிழகப் பற்றையும் மேதைமேயையும் ஒரே நேரத்தில்
வெளிப்படுத்துகிறது.
[1]
இது இன்றைய அரசியலிலும் தொடரும் நிகழ்வு. தான்
ஆட்சியில் அமர முழுமூச்சில் பாடுபட்ட காமராசரைக் கைகழுவிய இந்திரா காந்தியும் அதே
போல் தனக்கு உதவிய ம.கோ.இரா.வைக் கைகழுவ முயன்று தோற்ற கருணாநிதியும் சென்ற
நூற்றாண்டுச் சான்றுகள்.
[2]
இது குறித்து இன்னும் விரிவான செய்திகளை வெளிவர
இருக்கும் சிலப்பதிகாரப் புதையல் நூலிலும் சுடலைமாடன் – ஒரு தெய்வத்தின்
தோற்றமும் வளர்ச்சியும் என்ற கட்டிரையிலும் காணலாம்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக