17.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 2


அரணுரை
(முதற் பதிப்பின் அணிந்துரை)
          உண்மையான உலக வரலாற்றைப் பெற்றெடுக்க இன்றைய இந்திய வரலாறு பெரிய இடுப்பு வலிக்கு ஆட்பட்டுத் துடிக்கின்றது. அந்த இந்திய வரலாற்றுக்குப் பேறுகால மருத்துவம் பார்க்கத் தமிழ் வரலாற்றால்தான் முடியும். இந்த உண்மையை ஐயம் திரிபற மெய்ப்பிக்கும் பெருமுயற்சியே குமரிமைந்தனின் இந்த நூல்.
              
            குமரிமைந்தன் தமிழ் மக்களின் வரலாற்றைக் கருவாக வைத்து இந்த நூலைக் கதை வடிவில் எழுதியுள்ளார். இதன் உட்பொருளை விரிவை - ஆழத்தைப் புரிந்துகொள்ளவும் திறனாயவும் மார்க்சிய வரலாற்றியல் அறிவிலும் தமிழ் மொழி அறிவிலும் நல்ல ஆழமும் பிடிப்பும் இருப்பது நன்கு உதவும். அவ் விரண்டும் விளங்காதோர் எந்த அளவுக்கு இந்த நூலைப் புரிந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை. மார்க்சியப் பூசாரிகளின் மலட்டுத்தனத்திற்கும் இந் நூல் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்யும். குறையோ நிறையோ அந்த முத்திரையிட்ட மலடிகளுக்கு இந்த நூல் காட்டுகின்ற திசை இன்றோ நாளையோ விளங்கத்தான் போகின்றது. மறுபுறம், ஆனைக்குக் கோவணம் கட்ட முழுமூச்சாக முனைந்துள்ள பார்ப்பனிய வரலாற்றாசிரியர்களின் நிலையைக் குமரிமைந்தனின் இந்த நூல் கேலிக்குரியதாக்குகின்றது.

            மார்க்சியத்தைத் தமிழ் மயமாக்குவதற்கு - இந்திய மயமாக்குவதற்குக் கூட - இந்த நூல் ஒரு தூண்டுநிலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனை நன்கு குறிப்பறிய முடிகின்றது.

            இந்த நூலில் விளக்கப்படுகின்ற வரலாற்று நிகழ்வுகளுக்குத் தோராயமாகக் குறிப்பிடப்படுகின்ற கால வரையறைகள் நம்பத்தகாதவை போன்றும் மீ மிகைக் கற்பனையாக இருப்பது தோன்றும் தோன்றலாம்.

            1981ஆம் ஆண்டில் இந்திய அகழ்வியல் அளவீட்டுக் துறையின் (Archaeological Survey of India) பெருந்தலைகளில் ஒருவரான கே.வி. சவுந்திரராசன், மாந்தவியல் - அகழ்வியல் வளர்ச்சியின் கட்டங்களைத் தொகுத்துப் பட்டியலிட்டுக் காட்டுகையில் (Recent Researches in Indian Archaeology and Art History) என்னும் கட்டுரைத் தொகுப்பு: எம்.எச். நாகராச ராவ்), வரலாற்றுக்கு முந்திய கட்டத்தை முதலில் அமைத்துள்ளார். அதில் செங்கை மாவட்டத்தில் இருக்கின்ற அத்திராம்பாக்கத்திலும் வட மதுரையிலும் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்காலக் கருவிகளே காலத்தால் மிக மிகத் தொன்மையானவையாகக் காட்டப்பட்டுள்ளன. அக் கற்காலக் குடியிருப்புகளின் காலத்தை இடைப் பிற்கால இனவிரிச் சிற்றூழிக் (Mid Late Pleistocene) காலத்தைச் சேர்ந்தவையாக வைத்து அவை 3 இலக்கம் ஆண்டுகட்கு முற்பட்டவையாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பெருங் கைக்கோடரி - முதற் கருவிப் பண்பாடு (The Great Hand - Axe and Core Culture) என்றும் அவர் வகைப்படுத்தி இருக்கின்றார். அதையடுத்துக் கூழாங்கல் பண்பாட்டை (Pebble Culture) ஏறத்தாழ, கி.மு. 18,000 என்றும் சில்லுவெட்டிப் பண்பாட்டை (Flake Plade Culture) அதற்கடுத்தது என்றும் அவர் அமைத்துள்ளார். கீழ்த் தெக்கண எலும்புப் பண்பாட்டை (Bone Culture) அதற்கடுத்தாகக் குறிப்பிட்டு, அதனுடைய காலம் கி.மு.10,000 முதல் கி.மு. 5000 ஆண்டுகள் வரையிலானது என்றும் சுட்டிக் காட்டி இருக்கின்றார்.

            இந்த அண்மைக்காலக் கணிப்பைத் தழுவிப் பார்க்கையில், குமரிமைந்தன் தமிழ்க் குமுக வளர்ச்சியைக் காட்டுவதற்காக அமைத்துக் கொள்கின்ற காலவரையறைகள் அறிவுக்கு ஒவ்வாதவை என்று தள்ளிவிட முடியாதவை. அவர் தோராயமாக அமைத்துக் கொள்கின்ற காலவரையறைகள் இன்னும் நுட்பமாக ஆராயப்பட்டு முடிவு செய்யப் பட வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது.

            இந் நூலில் நிறைய செய்திகள் நிரல்படத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொட்டகுறை விட்ட குறையாகத் தென்படுகின்ற சில கருத்துகளைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவும் முடியாது.
                 
         1.            பல்வேறு அலைகளாகி படையெடுப்புகளின் வாயிலாகவும் குடியேற்றங்களின் வாயிலாகவும் ஆரியர் என்னும் அநாகரிகர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் புகவில்லை என்னும் துணிபு இந்நூலில் உத்தியாகச் சொல்லப்படுவது கேள்விக்குரியது. அமைதியான குடிப் பெயர்ச்சிகளும் குடியேற்றங்களும் வரலாற்றில் மிக அரிது. தங்களுடைய நிலத்தில் வேறொரு மக்கள் அமைதியாகக் குடியமர்வதைப் பார்த்துச் சண்டைக்கு வரிந்து கட்டி நிற்காது அவர்களை வாழ்த்தி வரவேற்கின்ற உள்நாட்டு மக்கள் வரலாற்றில் புறனடையாகத்தான் இருக்க முடியுமேயன்றிப் பொது விதியாக இருக்க முடியாது. வரலாற்றை ஊக்குவிக்கின்ற வினையூக்கிகளில் (catalysts) முகாமையானது போர் ஆகும். அப் போர் ஆற்றியுள்ள பங்கைக் குறைத்து மதிப்பிட லாகாது. வகுப்புப் போராட்டத்தின் ஒரு வடிவமே போர். அகப்புற அரசியல் முரண்பாடுகள் எய்துகின்ற கூர்மையே நாடுகளுக்கும் அரசுகளுக்கும் இடையிலான போராக வெடிக்கின்றது. ஓரிடத்தில் அமர்ந்து தங்களுடைய பொருளியல் தேவைகளை உழைப்பால் பெருக்கிக் கொண்டு அமைதியாக வாழ்வதைவிட பிற குமுகங்களின் அல்லது நாடுகளின் மீது படையெடுத்து, அவற்றிலான பொருட்களைக் கொள்ளை கொண்டு செல்வதே அநாகரிக நிலையின் பொதுத்தன்மையாக இருந்தது. உலகப் பண்பாடுகளின் வரலாறு இதைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதனை மார்க்சும் ஏங்கெல்சும், கூடப் பல இடங்களில் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். செருமானிய மெய்யியல் (ஆங்கிலம்) என்னும் நூலில் அநாகரிக நிலையையும் போரையும் பற்றிக் குறிப்பிடுகையில்

வன்முறை, போர், கொள்ளை, கொலை, களவுபோன்ற யாவும் வரலாற்றை இயக்குகின்ற ஆற்றல்களாக இருப்பது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாமையான குறிப்புகளைச் சுட்டுவதோடு நிறுத்திக் கொண்டு, பழம் நாகரிகமொன்று அநாகரிக (barbarian) மக்களால் அழிக்கப்படுவதும் அதன் விளைவாக முற்றிலும் புதியதொரு குமுக அமைப்பு உருவாவதும் ஆகிய மிகவும் வெட்டவெளிச்சமான ஒரு சான்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். (உரோமும் அநாகரிகர்களும்; நிலக் கிழமையும் காளர்களும் - Gauls; பிசாண்டியப் பேரரசும் துருக்கியர்களும்) மேலே சொன்னதுபோல, வாகை சூடிய அநாகரிக மக்களின் வருகைக்குப் பிறகு மக்கட் தொகைப் பெருக்கத்துடன் அதற்கென வாய்த்த ஒரேயொரு மரபு தழுவிய கரடான (crude) படைப்பு முறை புதிய படைப்புத்துறைக்கான தேவைக்கு வழி வகுத்ததுடன் சேர்த்து அவற்றை நல்ல ஆர்வத்துடன் தமக்கெனப் பயனரித்துக் கொண்ட (exploited) ஒரு முறையான பண்பாட்டுப் புணர்ச்சியின் வடிவமாக இன்னும் இருப்பது போரேயாகும் (முற்போக்குப் பதிப்பகம், மாசுகோ, 1964, பக்கம் 33, 34)
என்று அவர்கள் சொல்வதை இங்கு பார்வைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

            புற அலைத் தாக்குதல்கள் தொல்படையெடுப்புகளின் வடிவில் இத் துணைக் கண்டத்தின் மீது நடத்தப்படவே இல்லை என்று சொல்வது வரலாற்றின் பொது ஊழ்பாட்டிற்குப் புறம்பானது. உள்நாட்டு அரசுகளுக்கு இடையில் மட்டுமே போர்கள் நிகழ்ந்தன என்று சொல்வது அக முரண்பாடுகளை மட்டுமே வலியுறுத்திப் புற அலைத் தாக்கங்களை மறுப்பதாகும். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒருகால் படர்ந்திருந்த தமிழ் நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அகக் காரணங்களை மட்டுமே சொல்லி அவற்றை முற்றுமைப்படுத்துவது இயங்கியல் விளக்கத்துக்கு உடன்படாதது. அகக் காரணங்களே மாற்றத்திற்கான அடிப்படை: புறக் காரணங்கள் அம் மாற்றத்திற்கான புறச் சூழல் (condition). இவ்வாறு பார்ப்பதே குமுக வளர்ச்சியிலான மாறுபாடுகளை ஆக்கமுற அறிய உதவும். புறப் பண்பாட்டு அலைகளுக்கு உட்படாத அக அலைகள் என்னும் கருத்து, பிற குமுகங்களோடு வினைப்படாது முற்றும் தனித்துக் கூடுகட்டிக்கொண்ட செத்த குமுகமாகவே ஒரு குமுகத்தைக் குறைத்துக் காட்டும்.

            தொல் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளும் கருத்துகளுமே பார்ப்பன மறைகளில் மிகுதியானவை என்னும் உண்மை ஒவ்வொரு நாளும் மேன்மேலும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது உண்மைதான். பண்டைக் காலத்தில் படையெடுத்து வந்த ஆரிய அநாகரிகர்கள் கல்வியும் கேள்வியும் எழுத்தும் வகுப்பு (சாதி)வேற்றுமையும் அரசும் ஆட்சியும் அற்ற தொல்குமுகத்தராக இருந்தனர் என்பதையே அஃது வேறுவகையில் உறுதிப் படுத்துகின்றது. அடிமை உழைப்பால் நகர்ப்புற நாகரிகங்களாக ஓங்கி வளர்ந்து அகப் பகையால் உடைச்சல் கண்டு செத்துக் கொண்டிருந்த பண்பாடுகள் யாவற்றிற்கும் புத்துயிர் ஊட்டியவை அநாகரிகர் படையெடுப்புகளே என்னும் உலகளாவிய வரலாற்று விதியைச் சுட்டிக் காட்டிய ஏங்கெல்சின் பார்வையில், அவ்வாறு படையெடுத்து வந்த அநாகரிகர்களிடமிருந்த மந்திர ஆற்றல் அவர்களுடைய வகுப்பு வேற்றுமையற்ற தொல்பொதுவுடைமைக் குலத்தலைமை (Chiefdom) அமைப்பேயாகும். தாம் வென்ற மக்களின் உயர் பண்பாட்டினால் அந்த ஆநாகரிகர்கள் வெல்லப் பட்ட நிலையில், தோற்றவர்களின் வகுப்புப் பண்பாடு அநாகரிகரின் குமுக ஒருமையைக் கெடுத்துத் துளிர் நிலையில் அவர்களிடமிருந்த வகுப்பு வேற்றுமைகளைப் பெரிது படுத்தியது. வென்ற அநாகரிகர்களிடம் வகுப்பு ஒழுக்கங்களையும் அமைப்புகளையும் தோற்றுவித்து ஒரு கலப்புப் பண்பாட்டுக்கு வழி செய்தது. அரசு என்னும் வன்முறை ஆட்சி இலக்கணங்களைக் கற்பித்து அந்த அநாகரிகர்களைப் புதிய ஆண்டைகளாக அமரச் செய்தது. அவ் வகையில் புதிய அநாகரிக ஆண்டைகளுக்குத் துணை நிற்க முன்வந்த வட தமிழ்ப் பார்ப்பனர்கள் தங்களின் முந்திய குழூஉக்குறி மொழியிலான மறைகளை ஆரியரின் எழுதாக்கிளவி நாடோடி இலக்கியங்களுடனும் கலந்து அப்போது உருவாக்கிய இலக்கியங்களே பார்ப்பன மறைகளாகும். குமரிமைந்தன் சொல்வது போன்று அவ் வழியில் இந்தியத் துணைக் கண்டத்தில்தான் சமற்கிருதமும் ஒரு செயற்கை மறைமொழியாகத் தோற்றுவிக்கப்பட்டது. அந்தச் செயற்கை மொழியைச் சாதிக் குறியாக்கிப் போற்றி வளர்த்தவர்களில் தென்னகத்துப் பார்ப்பனரும் அடங்குவர்.

            ஆரியர் படையெடுப்புகளைப் பற்றிய குறிப்புகள் பார்ப்பன மறைகளிலும் இலக்கியங்களிலும் இல்லை என்று சொல்வது ஏற்புடையதாகப்படவில்லை. இதையொட்டி முற்றான முடிவுக்கு வரமுடியாத நிலை இருக்குமாயின், உலக வரலாற்றில் வருகின்ற பிற பண்பாடுகளைப் பற்றிய ஒப்பியல் அறிவு இப்போதைக்கு உதவலாம். அக முரண்பாடுகளால் குலைவுண்டிருந்த உயர்ந்த நகர்ப்புற நாகரிகங்களைத் தாக்கிய நாடோடி அநாகரிகர்கள் வென்ற நாகரிகங்களைத் தாக்கிய நாடோடி அநாகரிகர்கள் வென்ற நாகரிகங்களாலேயே பண்பாட்டால் வெல்லப்பட்டதை மெய்ப்பிக்கப் பண்டைப் பலசூஃசிய (Pelasgian) நகர்ப்புற அரசுகளை வீழ்த்திய எல்லனிய கிரேக்க அநாகரிகர்கள், சீனத்தை வென்ற மங்கோலிய அநாகரிகர்கள் போன்ற பற்பல நிகழ்விகளை சான்று கூறுகின்றன. உலக வரலாற்றில் அநாகரிகர் படையெடுப்புகளில் அமைகின்ற பொது நிலையைக் கொண்டு இந்தியத் துணைக்கண்ட வரலாறு என்னும் தனிநிலையை ஒப்பியல் முறையில் கட்டமைப்பது இப்போதைக்கு நல்லது. புதிய வரலாற்றுக் குறிப்புகள் போதிய அளவுக்குக் கிடைத்த பின்னர் இவற்றை ஒட்டுமொத்தமான மறு ஆய்வுக்கு உட்படுத்தலாம். பொது நிலையைக் கொண்டு தனிநிலையை எட்ட முயல்கின்ற இன்றைய திசைக்கு மாறாக, தனிநிலையைக் கொண்டு பொதுநிலையை எய்துகின்ற வழி அதனால் பிறக்கும். இந் நிலையில் ஆரியர் என்னும் அநாகரிக மக்களே இருந்ததில்லை; அவர்கள் வடதமிழ் நாகரிகங்களின் மீது படையெடுக்கவுமில்லை என்று சொல்வதும் ஒருதலையான அகமைப் பார்வை என்பதனால் இஃது ஆய்வுக்குரியது.

            ஒட்டு மொத்தத்தில் குமுக வரலாற்றின் வினையூக்கியாகிய போரின் அகப்புற அலைகள் இருப்பதை உரிய அளவுக்கு உள்ளடக்கிக் கொண்டிருந்தால் இந்த நூலின் சிறப்பு இன்னும் கூடியிருக்கும்.

        2. பயிர்த் தொழிலைப் பெண்டிர் கண்டு பிடித்த உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அக் கண்டுபிடிப்பின் சிறப்பைப் பல்வகைக் குறியீடுகளும் சடங்குகளும் குமுக வரலாறு நெடுகிலும் போற்றி நிற்பது புறக்கணிக்கத்தக்கதன்று.
                                                         
உலக வரலாற்றின் பொது நிலையை முற்றுமைப்படுத்தி வறட்டுத்தனமான சில விளக்கங்களைப் பெற்றெடுத்து அவற்றைத் தமிழ் மக்களின் குமுக வரலாற்றின் மீது திணிப்பது என்னும் ஒருதலைப் போக்கைத் திருத்த முனைகையில், தமிழ் மக்களின் வரலாற்றின் தனிநிலையை முற்றாகத் தனிமைப்படுத்திக் குமுக வரலாற்றின் பொதுநிலையை மறப்பதோ மறுப்பதோ என்னும் மற்றோர் ஒருதலைப் போக்கு எழத்தான் செய்யும். இதனை ஒரு வரலாற்றுப் புதிர் என்று கருதுவதே நல்லது. அத்தகைய ஒருதலைப் பார்வைகளைப் பற்றிய கருத்துப் போரே தமிழ் மக்கள் வரலாற்றின் தனித்தன்மையும் பொதுத் தன்மையும் ஒன்று மற்றொன்றாகிற இயங்கியலைப் பார்க்க வல்ல அறிவியல் நிலையை உருவாக்கும்.

         3.            அரசர், அந்தணர், வாணிகர், வேளாளர் என்ற தொழிற் பிரிவிணைகளைத் தழுவி நால்வண்ணங்களை அமைத்தது தமிழர்களே என்று இந் நூல் குறிப்பிடுகின்றது. பின்னர், பிறப்பால் உயர்வு தாழ்வையும் தீண்டாமையையும் வடக்கிலிருந்து வந்த பார்ப்பனரே தமிழகத்தில் பரப்பி வைத்ததாகவும் சொல்கின்றது. இந்நிலை கேள்விக்குரியது. இத்தகைய ஏற்றத்தாழ்வு பற்றிய கருத்து. பார்ப்பனரால் பின்னர் தொல்காப்பியத்திலும் சிலப்பதிகாரத்திலும் புகுத்தப் பெற்றதாகக் குமரிமைந்தன் கருதுகின்றார். தென்னகத்தில் பூசாரி வகுப்பு ஆற்றிய பங்கைப் புறக்கணிக்கின்ற நிலை இதனால் எழுகின்றது. பூசாரி இல்லாத தொல் குலமும் இல்லை; அரசு ஆட்சியும் இல்லை.

மாறாக, சாதிமுறை என்பது வண்ணமுறையின் எதிர் மறையும் முந்திய நிலையும் ஆகும். நாகரிக வாழ்க்கையை விரிவுபடுத்திய தொல்லரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குக்குலங்கள் சிதையலாயின. வகுப்பற்ற வாழ்க்கைக் குரிய குலங்கள் வகுப்பு ஆட்சிக்கு உள்ளாகிக் கேடுற அவை சாதிகளாக மருவி இறுகிய குமுக ஒன்றிகளாயின. சிற்றரசுகள் பேரரசுகளான போது, குலைந்த குலங்களாகிய சாதிகள் விரிந்த ஆட்சி வரம்பிற்குள் அமைந்த ஒன்றிய படைப்பாற்றல்களின் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக இருந்திருக்ககூடும். உள்நாட்டு வாணிகமும் வெளிநாட்டு வாணிகமும் பின்னர் பெருத்தன. தனித்து நின்று தனித்து இயங்கிவந்த ஊர்க் குமுகங்களைப் பண்ட பரிமாற்றத்தாலும் விற்பனையாலும் இணைக்க முயன்றது பெருவாணிகம். பிறப்பு வழியில் இறுகிய சாதிகள் வாணிக உறவால் தோன்றிய புதிய படைப்பு உறவுகளுக்குத் தடையாக அப்போது இருந்திருக்கக்கூடும்.
                                           
            பிறப்பு வழியில் அமைந்த முற்றாகச் சிதையாத பழங்குடி நிலையை(incomplete detribalisation) சாதிகள் குறிக்கின்றன. மாறாக வண்ணமுறையோ விரிந்ததோர் ஆட்சிக்கும் நிலப் பரப்பிற்கும் உள்ளடங்கிய குடிமக்களைத் தொழிற் பிரிவினையின் அடிப்படையில் பேரளவில் மாற்றிச் சீரமைக்கத் தோற்றுவிக்கப்பட்ட கருத்தாகவும் கொள்ளையாகவும் இருந்திருக்கலாம்.

            குல எச்சங்களுடன் பிறப்பு அடிப்படையிலான உருப்படியான மெய்ம்மைகளே சாதிகளாகிய குமுக ஒன்றிகள். அச் சாதிகள் புறமை உண்மைகள். மாறாக, தொழிற் பிரிவினைகளைத் தழுவிய வண்ணமுறையோ ஒரு கற்பனையும் கருத்தாக்கமும் கொள்கையும் ஆகும். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற புத்த அம்மணச் சார்பு வாணிக இலக்கியங்களில் வண்ணமுறை மிகையாக வலியுறுத்திச் சொல்லப்படுகின்றது. சாதிமுறைக்கு எதிரான ஒரு கொள்கையாக வண்ணமுறையைப் பரப்பியது பெரு வாணிகவகுப்பே என்பதை அதனால் உணர முடிகின்றது. வண்ணமுறை என்னும் அகமைக் கருத்தாக்கத்தால் சாதிகளாகிய புறமை மெய்ம்மைகளை முறியடிக்க முடியாமல் போனது. பிரித்துப் பார்க்க முடியாதவாறு சாதிகளும் வண்ணங்களும் மயங்கிய நிலையைப் பிற்காலத்தில் பார்க்கின்றோம்.

            வடக்கிலிருந்து வந்த அம்மணமும் புத்தமும் இந்த வண்ணமுறைக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்திருக்கலாம் அல்லது பரப்பி இருக்கலாம். ஆனால் சாதிகள் தமிழர்களிடம் தொன்மையில் எழுந்தவைதான் என்ற முடிவு கூறத் துணிவதே பொருத்தமாகும். தெற்கே வரவரத்தான் சாதிக் கொடுமையும் கடுமையும் கூடுவதே இதற்கு ஒரு சான்று. பார்ப்பனர்கள் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தீவின் ஈழத்தமிழ் மண்ணில் அந்தச் சாதி முறையின் கடுமையும் இறுக்கமும் தமிழகத்தைப் பார்க்கிலும் மிகையாக இருப்பதை என்னென்று சொல்வது? வண்ணமுறை வெற்றி பெற்றிருந்தால் தமிழ்க் குமுகம் மேலைக் கீழை நாடுகளின் வரலாற்றைப் போல் வகுப்புக் குமுகமாக வளர்ந்திருக்கும். பிறப்பையும் கொள்வினை, கொடுப்பினையையும் தழுவி இறுகிய குமுக ஒன்றிகளாகிய சாதிகள் இங்கு முற்றிலும் ஒரு வகுப்புக் குமுகம் தோன்றுவதற்கான சூழ்நிலையைப் படைக்கவில்லை என்று சொல்வதே சரியெனலாம். சீனத்தில் மங்கோலியர் படையெடுப்பின் போதும் சப்பானிலும் பரப்பப்பட்ட வண்ணமுறைகள் புத்த சமயத்தின் வாயிலாகவே அங்கெல்லாம் சென்றிருக்கக் கூடும். பண்டை எகிப்தில் தொழில்களைத் தலைமுறை வழியில் அமைக்கப் புசிரிசு மன்னன் இட்ட ஆணைகளும் வண்ணமுறையை ஒத்தவையே அன்றிச் சாதி முறையில் பிறப்பையும் குல எச்சங்களையும் தழுவியவை அல்ல என்பதை இங்குக் குறிப்பிடலாம்.          
குணா

0 மறுமொழிகள்: