குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 23
20. தானே ஒலிப்பது தமிழ்!
(தோரா.
தி.மு. 11,500)
இன்று நாம் கதவபுரத்துக்குச் செல்கிறோம். மதுரைக்கும் இந்த நகரத்துக்கும் எவ்வளவு
வேறுபாடு பார்த்தீர்களா? நகரைச் சுற்றி கனத்த, உயர்ந்த பெரும் சுவர் ஒன்று
இரட்டை மலைகளுக்கு இரு புறங்களிலும் வந்து சேர்கிறது. சுவருக்கு வெளியே ஒரு பெரும்
துறைமுகம் இருக்கிறது. கடலில் சேரும் ஆற்றின் கழிமுகத்திலிருந்து நிலப்புறம்
நோக்கி ஆற்றின் உள்ளே அகன்ற ஓரிடத்தில் இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. கடலில்
அன்றாடம் ஏறி இறங்கும் ஓத அலைகள், புயல், சூறாவளிகள், ஓங்கலை(சுனாமி)கள்
போன்றவற்றின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த சிறந்த ஏற்பாட்டைச்
செய்துள்ளார்கள்.
மலைகளுக்கிடையில்
அமைந்துள்ள இதோ இந்த மாபெரும் கதவத்தால்தான் நகருக்கு இப் பெயர் வந்தது போலும்.
கதவைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் காவலர்கள் நுணுக்கமான ஆய்வுக்குப் பின்தான்
உள்ளே விடுகின்றனர். நாம் கவலைப்பட வேண்டியதில்லை, நம்மைத்தான் இங்குள்ளவர்கள்
பார்க்க முடியாதே!
இந் நகரம் மதுரையை
விட மிக விரிவாகவும் சிறப்பாகவும் உள்ளது. மிக ஒழுங்காக அமைக்கப்பட்ட அகன்ற
வீதிகளும் அழகழகாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் காணப்பபடுகின்றன. வீதிகளுக்கு
இடையிலும் கட்டடங்களுக்கு இடையிலும் இனங்காணும் வகையில் திட்டமிட்ட வேறுபாடுகளைக்
காண முடிகிறது. குடியிருப்புகள், ஆள்வினை நடுவங்கள், தொழில் கூடங்களின்
தொகுப்புகள், அரசன், ஆள்வினையாளர்கள் வளமனைகள் என்று நம்மை வியக்கவைக்கும் வகையில்
அவை அமைந்துள்ளன. மக்கள் வகை வகையான வண்ண வண்ண உடைகளில் நடமாடுகிறார்கள். இன்று
நாம் அணிவது போன்று மேல்சட்டை, கால்சட்டைகளையும் அணிந்துள்ளனர். சாலைகளும் வீதிகளும்
மறுகுகளும் தூய்மையாக அழகாக சிறந்த ஒரு நகரமைப்புக்கு இலக்கணமாக அமைந்துள்ளன.
நகரில் ஏதோ சிறப்புப் போலும். மக்கள் அணியணியாக அரசன் கோவிலை நோக்கிச்
சென்றுகொண்டிருக்கின்றனர். கப்பல்களிலிருந்தும் ஆட்கள் அரண்மனையை நோக்கிச்
சென்றுகொண்டிருக்கின்றனர். நாமும் சென்று பார்ப்போம். இதோ கோவிலின் கோபுரம் வந்துவிட்டது.
உள்ளே பலவகையான கட்டடங்கள். அவற்றில் பல மூன்று மாடிக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில்
ஒரே மாடியுள்ள, மிக அகன்றும் நீண்டுமுள்ள ஒரு
மண்டபத்தினுள்தான் அனைவரும் சென்றுகொண்டிருக்கின்றனர். உள்ளே நுழையலாமா? அப்பப்பா!
எவ்வளவு பெரிய மண்டபம். வரிசையான தூண்களால் தாங்கப்பட்ட உயர்ந்த கும்மட்டக்
கூரையின் விதானத்தில் அழகிய வண்ணப் படங்கள். சாளரங்களிலிருந்து வரும் வெளிச்சம்
அந்த அகன்ற மன்றத்தின் உட்பகுதிக்கு எட்டவில்லை. எனவே சுவரிலும் தூண்களிலும்
பந்தங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன.
மன்றத்தின் வாயிலின் எதிர்க் கோடியில் படிகளால்
உயர்த்தப்பட்ட ஒரு மேடையிருக்கிறது. அதன் மீது ஒரு நீண்ட இருக்கை மான் தோல்
போர்த்தப்பட்ட மெத்தையுடன் இருக்கிறது. இருக்கையின் சாய்வும் கைப்பிடிகளும்
தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன. மேடையின் முன்புறம் இரு புறங்களிலும் வரிசையாக அழகிய
இருக்கைகள் உள்ளன. அவற்றில் ஆடவர் பலர் அமர்ந்திருக்கின்றனர். மேடையை அடுத்து
இருபுறமும் இருக்கும் இரு இருக்கைகளில் மட்டும் யாருமில்லை. திடீரென்று மேடைக்குப்
பின்னாலிருந்து “குமரித்தாய்
மரபின் வீர மகன், மீனக் கொடி கொண்ட கோமகன், முழு உலகும் எழு கடலும் ஆளும்
கொற்றவன், உலகனைத்தும் உணவூட்டிப் புரக்கும் புரவலன், மன்பதை காக்கும் இறைவன்,
மண்ணிலும் நீரிலும் அமைதி காக்கும் காவலன், பேரரசர் பாண்டியன் வெண்டேர்ச்
செழியன் தடங்கண்ணியம்மையாருடன் எழுந்தருளுகிறார்!” என்ற குரல் கேட்டகிறது. உடனே இருக்கைகளிலிருந்தவரெல்லாம் எழுந்து
நிற்கின்றனர். “மன்னர் வெண்டேர்ச் செழியன் வாழ்க! அன்னை தடங்கண்ணியார் வாழ்க!” என்ற
முழக்கங்களால் மண்டபமே அதிர்கிறது. மன்னர் மேடையேறி நின்று கைகளை உயர்த்தவும் ஒலி
அடங்குகிறது. மாமன்னர் புன்னகை புரிந்து அமர்ந்ததும் மேடையின் கீழேயிருந்த
இருக்கைகளிலிருந்து எழுந்து நின்றிருந்தவர்களும்
அமர்கிறார்கள். அமர்ந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து தான் இன்ன கோட்டத்துத் தலைவன்
என்று அறிமுகம் செய்து அமர்கிறார்கள். மேடையை அடுத்த இருக்கைகளில் அரசனுடன் வந்த
அமைச்சரும் படைத் தலைவரும் அமர்கின்றனர்.
மன்னர் எழுகிறார். “அருமைக் குடிகளே! நாம் இன்று கொற்றத்தின் இயல்பு நடவடிக்கைகளை இறுதியில்
வைத்துக்கொள்ள இருக்கிறோம். ஏனென்றால் இன்று ஒரு சிறப்பான, நாம் அனைவரும்
மகிழத்தக்க, பெருமைப்படத்தக்க நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
“கடல்கொண்ட
பழந்தமிழகத்தின் தலைநகரான பழமதுரையில் நம் பேரரசர்களில் பெருமை மிகுந்தவரான
மாமன்னர் காய்சினவழுதி அவர்களால் நிறுவப்பட்டு முதல் மொழிக் கழகத்தின் தலைவராக
அமர்ந்து வழிகாட்டிய மாமுனிவர் வகுத்த அகத்தியம் என்ற இலக்கணத்தின்
அடிப்படையில் ஆய்ந்தேற்றுத் தொகுக்கப்பட்ட எண்ணற்ற நூல்களின் கடலான விலை மதிக்க
முடியாத செல்வத்தை பாழும் கடல் மதுரை மாநகருடனும் 49 நாடுகளுடனும்
விழுங்கிவிட்டது. தப்பிப் பிழைத்தோரின் அருமுயற்சியால் சிறந்த பாதுகாப்பு
அமைப்புகளுடன் கதவபுரம் என்ற இத் தலைநகரம் உருவாக்கப்பட்டு பண்டை பாண்டிய மரபின்
ஆட்சியும் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் நம் பாண்டியப் பேரரசர் தொடங்கிவைத்து 4440
ஆண்டுகள் நீடித்திருந்து கடற்கோளால் அழிந்துபோன மொழிக் கழகம் இல்லாத குறையைத்
தீர்ப்பதற்காக இரண்டாம் கழகத்தை இந்தக் கதவபுரத்தில் தொடங்குவதற்காகத்தான் இன்று
இந்தச் சிறப்பு அவை கூட்டப்பட்டுள்ளது. மாறியுள்ள இன்றைய சூழ்நிலைக்கேற்ப
இலக்கணத்தில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இவ் வரும் பணியை முன்னம்
நமக்குப் படைத்தலைவராயிருந்து நம்முடன் பல போர்களில் ஈடுபட்டவரும், தனித்துப் பல
போர்களை நடத்தியவரும் இன்று அமைச்சராக இருப்பவரும், மக்களின்
மொழிவழக்குகளை ஊன்றிக் கவனித்து ஆய்வு நடத்தும் இயற்கையியல்பு காரணமாகவும்
பண்டை மரபுகளைக் காப்பதில் அவருடைய பங்களிப்பு காரணமாகவும் தொல்காப்பியனார் என்று நாம் இட்ட சிறப்புப் பெயரால்
அழைக்கப்படுபவருமான என் உயிர் நண்பர் எரிதிரையனார்
முடித்திருக்கிறார். அவர் வரையறை செய்துள்ள இலக்கணத்தை நாம்
கேட்கப் போகிறோம். இவ் வரையறைகளைக் கடைப்பிடித்து நமக்கெட்டிய தொலைவெல்லாம் ஒரே
வரையறைக்குட்பட்ட மொழி வழங்குமாறு செய்வது அனைத்துக் குடிகளுடையவும், அதனைக்
கண்காணித்து வருவது கோட்டத் தலைவர்களுடையவும் கடமையாகும்”
என்று கூறி அமர்கிறார்.
அமைச்சர்
தொல்காப்பியர் எழுகிறார். மன்னரை நோக்கிக் கைகூப்புகிறார். மன்றத்தை
நோக்கிக் கூறுகிறார்: “அன்பு குடிமக்களே! உங்கள் அனைவரையும் இன்று
இங்குக் குழும வைத்திருப்பது நம் எல்லோருக்கும் ஒரு புதிய எதிர்காலத்தைத்
தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். நான் இளமை முதல் நம் அருமை மன்னரின் படையில்
பணியாற்றிக் கடலிலும் நிலத்திலும் போராடிய போதும் பின்னர் அமைச்சராக மக்களுடன்
கலந்து உறவாடியபோதும், ஒவ்வொரு பகுதியிலும் வழங்கும் மொழி
வேற்றுமைகளை உன்னித்து வந்துள்ளேன். ஒரு பகுதியிலும் அதிலிருந்து விலகியிருக்கும்
இன்னொரு பகுதியிலும் வழங்கும் மொழியில் பெருமளவு வேறுபாட்டைக் கண்டிருக்கிறேன்.
எனவே மன்னரின் கட்டளைகளையும் அறிக்கைகளையும் புரிந்துகொள்ள இடர்ப்பாடு இருப்பதுடன்
கோவில் பணியாளருக்கும் பல்வேறிடங்களிலிருந்து வருவோரிடம் உரையாடவும் இடர்ப்பாடுகள்
உள்ளன. அத்துடன் சேதிகளை எழுதிவைக்கவும் ஒருப்பாடான வடிவம் இல்லை. அதுவும் மாறுபாடுகளை
உடையதாயிருக்கிறது. நான் இயற்கையிலேயே இவ் வேறுபாடுகளையும் மொழியின் இயல்புகளையும்
துருவிப் பார்க்கும் இயல்புடையவனாயிருப்பதைக் கண்டு மாமன்னர் இப் பணியை எனக்குத்
தந்தார். என்னால் இயன்றவரை முயன்று மொழிக்கு ஒரு வடிவைக் கொடுத்துள்ளேன். அதில்
நடைமுறையில் காணும் குறைபாடுகளைக் கண்டு இவ் விலக்கணத்தை நிறைவு செய்வது அறிஞர்
கடமை.
“நமக்கெட்டிய
உலகில் பேசப்படும் மொழிகளில் பலவகையான ஒலிகள் உள்ளன. அவை மூளையின் ஆணையைத்
தொடர்ந்து அதைச் செயற்படுத்தும் ஆற்றலை வழங்குவதறகான குருதி ஓட்டத்தை
நெஞ்சாங்குலையிலிருந்து வெளியிட, மூச்சகத்தலிருந்து
வெளிப்படும் காற்று தொண்டை வழியாக வாய், மூக்கு, நா, அண்ணம் உதடு ஆகியவற்றின் இயக்கத்தால் வெவ்வேறு
ஒலிவடிவங்களைப் பெறுகின்றன. மனிதர்கள் இயல்பாகப் பேசும் போது அதிக முயற்சியின்றித்
தொண்டையிலிருந்து உதடுவரையுள்ள முயற்சியாலேயே பேசுகின்றனர். ஆனால் கடும்பணியாளர்கள்,
நிரை ஓட்டும் போது இடையர்கள், உழும்போது உழவர்கள், துழாவும் போது கப்பற்பணியாளர்,
உரத்து மந்திரம் சொல்லும்போது பூசாரியர் முதலியோர் தம் வேலையின் போது எழுப்பும்
ஒலிகள் நெஞ்சகத்திலிருந்து கிளம்பும் கடும் ஒலிகளாக அதிக முயற்சியுடன் எழுகின்றன.
இந்த
ஒலிகளையும் சொற்களையும் தொகுத்தும் வகுத்தும் எழுத்துக்கும் சொல்லுக்கும்
மட்டுமன்றி மக்களின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் வகுத்தும் தொகுத்தும்
பொருளிலக்கணம் என்ற தலைப்பில் குடும்ப வாழ்வை இலக்கியத்தில் பதிய வழிகாட்டியாக அகத்திணையியல்
என்றும் குகுக வாழ்வைப் பதிய புறத்திணையியல் என்றும் பிரிவுகளுடன்
ஐந்நிலங்களுக்கும் ஐந்திணைகளைக் கொண்ட பொருளிலக்கணத்தையும்
வகுத்து ஒரு சிறந்த இலக்கணத்தை குடமுனியாகிய அகத்திய மாமுனிவர் அகத்தியம்
என்ற ஓர் ஒப்பற்ற நூலை இயற்றினார். அதுதான் பாண்டியப் பேரரசின் கடற்கோளின்
முன்பிருந்த தலைநகரான மதுரையில் அமைந்திருந்த மொழிக்
கழகத்தின் இலக்கணமாக 4440 ஆண்டுகளாக சிறப்புற விளங்கி வந்தது.
இந்த
இடைக்காலத்தில் பாண்டிய நாட்டிலும் அண்டை நாடுகளிலும் ஏற்பட்ட பொருளியல் - தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகள் மொழி குறித்த
புதிய அணுகலுக்கு வழிவகுத்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தொழில்நுட்பர்கள்
வடித்துள்ள குறியீடுகளையும் அவற்றுக்கான இலக்கணத்தையும் பொதுமக்களுக்கான
இலக்கணத்தினுள் கொண்டு வர வேண்டியதில்லை என்ற, இந்திரனின் பெயரில் வழங்கும் ஐந்திரம்
என்ற மொழியியல் கோட்பாட்டின்படி பொதுமக்களுக்கான இலக்கணம் இந்த இரண்டாம் கழகத்தின்
வழிகாட்டியாக அமைய வேண்டுமென்ற மாமன்னரின் எண்ணத்தின் அடிப்படையில் இது
முன்வைக்கப்படுகிறது.
“மேலும் குழந்தைகள் இயல்பாகப் பேசத்
தொடங்கும் போது அம்மம்மவென்றும் அப்பப்பவென்றும் அய்யய்ய வென்றும் அத்தத்தவென்றும்
அக்கக்கவென்றும் ங்க, ம்ப, ந்த என்றும் குரல்களை எழுப்பிப் பேசத் தொடங்குகின்றன.
இப்படியான பல்வேறு ஒலிகளையும் ஆய்ந்து, ஒலிகள் உயிர் ஒலிகள் என்றும் மெய்யொலிகள்
என்றும் உயிர்மெய்யொலிகள் என்றும் வகுக்கப்பட்டுள்ளன. எல்லா ஒலிகளிலும் உயிராக
நின்று இயக்குபவை உயிரொலிகள், அவற்றைப் பலவாகப் பயன்படுத்த உதவும் சுமப்புக்
கருவிகள் போன்றவை மெய்யொலிகள், இவை ஒன்றோடொன்று பொருந்தத் தோன்றுபவை
உயிர்மெய்யொலிகள். இவை மனித முயற்சியால் எழுவதால் எழுத்துகள் என அழைக்கப்படும்.
இவைபோன்ற எழுத்துகள் ஒன்றோ பலவோ இணைந்து ஒரு பொருள் தருமாறு வரின்
அதற்குச் சொல் என்று பெயர்.
“ஒரு
சொல் ஒரே ஒரு பொருளைக் குறிக்கும்போது ஒருமையென்றும் பல
பொருட்களைக் குறிக்கும்போது பன்மையென்றும் பெயர் பெறும். ஆற்றிவுடைய உயிராகிய
மாந்தனை உயர்தினையென்றும், உயிருள்ள பிறவற்றையும் உயிர் அல்லாதவற்றையும்
அஃறிணையென்றும் பிரித்திருக்கிறோம். உயர்திணையில் மட்டும் ஆண்பால் பெண்பால்
வேற்றுமை கொண்டு, ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால், எனப்
பால்பகுப்பு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும்
முக்காலங்களும், அண்மை, சேய்மை, இடைமை என முச்சுட்டுகளும் பகுக்கப்பட்டுள்ளன.
பகுதி, விகுதிகள் சேர்ந்து மொழி செயற்படும் உண்மை விளக்கப்பட்டுள்ளது.
“இவ்வாறு
வகுக்கப்பட்ட இலக்கணத்தை மக்களிடையே பரப்புவதற்காக மன்னர் ஆணை
பிறப்பித்திருக்கிறார். அதன்படி ஒவ்வொரு கோட்டத் தலைவரும் தம் கோட்ட
எல்லையிலிருந்து ஈரிரண்டு அறிஞர்களை மதுரைக்கு அடுத்த மாதம் முதல்நாள் சேருமாறு
அனுப்பவேண்டும். அவர்கள் இங்கு தங்கி இரண்டு மாதங்களில் பயிற்சி பெற்றுத் திரும்புவர். அவர்களைக் கொண்டு படிப்படியாகத்
தத்தம் கோட்டத்திலுள்ள மக்களனைவருக்கும் மொழிப் பயிற்சியளிக்க வேண்டும். இனி
அரசருக்கு விடுவிக்கப்படும் செய்திகளனைத்தும் நாம் வகுத்திருக்கும் எழுத்து
முறைப்படியும் இலக்கணப்படியும் அமைய வேண்டும். அதே போன்று அரச கட்டளைகளும்
அறிக்கைகளும் அவ்வாறே அமையும். நாம் வகுத்திருக்கும் மொழி வரையறையைப் பேணி நம்
நாட்டின் கட்டுக்கோப்பைப் பேணிக்காக்க இம் மன்றத்தின் மூலம்
கேட்டுக்கொள்கிறேன்.
“மக்கள்
மிடற்றில் இயல்பாக எழும் ஒலிகளைக் கொண்டு வகுக்கப்பட்டதால் நாம் வகுத்திருக்கும்
இம் மொழிக்கு தம் + இமிழ் (தம்மிமிழ்) → தமிழ் என்று பெயர் சூட்டுகிறேன். அது போல் சிறப்புச் செயற்பாடுகளின் போது இயல்பு மீறி
ஒலிக்கும் சொற்களையும் பொதுமக்களுக்குத் தேவையற்ற, தொழில்நுட்பர்களுக்கு மட்டும்
பயன்படும் சொற்களையும் கொண்ட மொழிக்கு மறைமொழி என்ற பெயரைச்
சூட்டியுள்ளேன். மறைமொழிக்கான இலக்கணம் இங்கு முன்வைக்கப்படவில்லை என்பதையும்
தேரிவித்துக்கொள்கிறேன். தமிழின் பிறப்பை நிகழ்வித்த மாமன்னர்
பாண்டியர் வெண்டேர்ச் செழியன் வாழ்க! தமிழ் வாழ்க!” என்று கூறி அமர்கிறார். மக்கள் “மாமன்னர் வாழ்க!
தமிழ் வாழ்க” என்று முழக்கமிடுகிறார்கள்.
மன்னர் எழுந்து, “இனி எமக்கு விடுவிக்கப்படும் செய்திகளனைத்தும் நம்
பெருமைக்குரிய அமைச்சர் எரிதிரையனார் வகுத்திருக்கும்
எழுத்து முறைப்படியும் இலக்கணப்படியும் அமைய வேண்டும். அதே போன்று அரச கட்டளைகளும்
அறிக்கைகளும் அவ்வாறே அமையும். முன்னர்
யான் கூறியது போல் மக்களுக்கும் ஆட்சி அலுவலர்களுக்கும் இவ் விலக்கணத்தைப்
பயிற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நாம் ஆணையிடுகிறோம்.
“கோட்டத் தலைவர்களே! நாம் நாட்டு நடப்பைப் பற்றிய வழக்கமான அலுவல்களைப்
பார்க்கலாமே!” என்கிறார்.
ஒரு கோட்டத் தலைவர் எழுந்து “பேரரசே! எம் கோட்டத்தின் பகுதிகளில்
கடல், நாட்டின்மீது பரவியிருக்கிறது. மக்கள் இருக்க இடமின்றியும் அச்சத்தாலும்
வடக்கு நோக்கி வருகிறார்கள். மக்களின் அச்சத்தைத் தடுக்கவோ அழிவை நிறுத்தவோ ஒரு
வழியுமில்லை” என்று கூறி அமர்கிறார்.
அமைச்சர் எழுந்து, “நாட்டின் பிற பகுதிகளிலும் கடல் மட்டம் உயர்ந்து நாட்டிற்குள் முன்னேறும்
அறிகுறிகள் தோன்றியுள்ளதாக நமக்குச் சேதிகள் கிடைத்துள்ளன. அரசே! நம் கதவபுரம்
துறைமுகத்தில் கூட ஓரிரண்டு
விரற்கடை நீர் உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு அலுவலர்கள் அறிவித்துள்ளனர்”
என்கிறார்.
“கடலைத்
தடுத்து நிறுத்த என்ன செய்ய முடியும்? தெற்கிலிருந்து வரும் மக்களுக்கு நம்
நாட்டின் அனைத்து மக்களும் முதலிடம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும்
குடியிலும் மக்களிடமிருந்து தென்புலத்தாருக்கென்று கொடையாகப் பொருள்கள் பெற்று
அவர்களுக்கு உணவு வழங்கவும் உறைய விரும்புவோருக்குக் குடில்
அமைத்துக் கொடுக்கவும் வேண்டும். அனைத்துக் கோட்டத் தலைவரும் இதற்கு உடனடி
நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் கடற்கரையில் குடியிருப்போரைக் கடற்கரையிலிருந்து
காப்பான தொலைவுக்குக் கொண்டுசென்று குடியமர்த்த வேண்டும். புதிதாக எவரும் தடை
செய்யப்பட்ட அப் பகுதியில் குடியேறாமல் கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும்” என்று ஆணையிடுகிறார் மன்னர்.
சிந்தாற்றுக்
கோட்டத் தலைவர் எழுந்து, “சிந்தாற்றின்
கரைக் குடியிருப்பில் அடிக்கடி வெள்ளம் வந்து அழிவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
மக்கள் உயிருக்கு அஞ்சியே வாழ வேண்டியுள்ளது. பாதுகாப்புப் பணிக்கு உதவ வேண்டும்.”
“வேண்டிய
உதவி வழங்கப்படும். எத்தகைய உதவிகள் வேண்டுமோ அவற்றை அமைச்சருடன் கலந்து நடவடிக்கை
எடுத்துக் கொள்ளுங்கள்.”
குணநாட்டுக்
கோட்டத் தலைவர் எழுந்து “எமது கடற்கரையில் அடிக்கடி திடீரென்று எந்த அறிகுறியும்
இன்றி பனையளவு ஓங்கலைகள் எழுந்து ஓடங்களையும் தோணிகளையும் கப்பல்களையும் கூட
வீசியெறிந்து வீடுகளைத் தாக்கி மக்களைக் கொன்று அழித்துக் கொண்டிருக்கின்றன.
அடுப்பில் பானையில் இருக்கும் பால் திடீரென பொங்கி வழிவது போன்று அது
செயல்படுவதால் கீழைக் கடலைப் பால்க் கடல் என்றே மக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த அழிவிலிருந்து எம் மக்களைக் காக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள்
எதிர்பார்க்கின்றனர்” என்றார்.
அப்போது அமைச்சர்
எரிதிரையனார் எழுந்து “இது குறித்த செய்திகள் வந்துகொண்டிருந்த சூழலில் மாமன்னர்
ஆணைப்படி தகுந்த வல்லுநர்களைக் கீழைக் கடற்பகுதிக்கு விடுத்தோம். அவர்கள் நம்
கடற்கரை முழுவதையும் ஆய்வு செய்து சில முடிவுகளுக்கு வந்துள்ளனர்.
“1.தேரிகள் எனும்
மணற்குன்று உள்ள இடங்களில் அதன் மேலேயோ அதைத் தாண்டி நிலத்தை நோக்கிய இடத்திலோ
அமைந்த இடங்களில் பாதிப்பு கிட்டத்தட்ட இல்லை எனுமளவுக்கு மிகக் குறைவு. கடல்
பக்கமாகக் கட்டிய குடியிருப்புகள் பெரும் அழிவைக் கண்டுள்ளன.
“2.ஆற்றுக் கழிமுகங்களை அடுத்துள்ள காயல்
எனப்படும் கானல்களுக்குள்ளும் ஆற்றின் மேல் எட்டங்களுக்குள்ளும் நீர் புகுந்ததால்
அங்கெல்லாம் நிலத்தின் மீதான தாக்குல் குறைவாக இருந்துள்ளது. கழிமுகத்தை அடுத்து
ஆற்றினுள் நீர் புக முடியாதபடி அடர்த்தியான மரங்கள் வளர்ந்துள்ள இடங்களில்
ஓங்கலையின் தாக்குதல் அண்டையில் இருக்கும் குடியிருப்புகளின் மீது
திரும்பியுள்ளது. ஆற்று வெள்ளங்களும் போதிய பாய்ச்சல் பரப்பின்றி அண்டை நிலங்களை
மூழ்கடித்துள்ளன.
“3.நிலத்தை
அடுத்துள்ள கடலடித் தரை ஆழமாக இருக்குமிடங்களில் ஓங்கலை கடல் விளிம்பிலிருந்து
மேலெழுந்து கடும் ஆற்றல் குறையாத நிலையில் நிலத்தில் பேரழிவுகளை நிகழ்த்தியுள்ளது.
கரையிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் ஆழம் இருந்து கடல் ஓரம் ஆழம் குறைவாக
இருந்தால் ஓங்கலை ஆழ் பகுதி முடியும் இடத்திலேயே மேலெழுந்து கரையை எட்டும் போது ஆற்றலை
இழந்துவிடுகிறது.
“ஓங்கலையின் இந்தப்
பண்புகளை நோட்டமிட்டு அதன் தாக்குதலிலிருந்து பாதுகாப்பளிப்பதற்குக் கீழ்வரும்
மூன்றடுக்குப் பாதுகாப்புத் திட்டத்தையும் முன்வைத்துள்ளனர்.
“1.கடற்கரை
நெடுகிலும் இருக்கும் தேரிகளை கவனமாகப் பராமரித்தல். இரு சரிவுகளிலும் உச்சியிலும்
தடிக்கும் விறகுக்கும் உதவாத மரங்களை நட்டு வளர்த்தல்.
“2.தேரிகளிலிருந்து கணிசமாக இடம் விட்டு
உள்நாட்டுப் பகுதியில் இரு படகுகள் தாராளமாகச் செல்லும் அளவுக்கு ஒரு கால்வாய்
அமைத்து கடலினுள் விழும் ஆறுகளைக் கழிமுகத்தின் மேலே இணைத்தல்.
“3. கரையின் முழு நீளத்துக்கும் இரண்டு
கப்பல்கள் செல்லும் அகலத்துக்கு கரையிலிருந்து கணிசமான தொலைவில் கடலினுள் ஆழம்
குறைவான இடங்களில் ஒரு கப்பலோடை அகழ்தல்.
“4.உள்நாட்டுக்
கால்வாய்க்கும் தேரிக்கும் இடையிலுள்ள சமதளத்தில் தடி மரங்களை வளர்த்தல்.
“5.தேவைப்படும்
இடங்களில் உள்நாட்டு வாய்க்காலை வேண்டிய அளவு அகலப்படுத்தி அங்குதான் துறைமுகங்கள்
அமைக்க வேண்டும். மீன்பிடி படகுகளும் தோணிகளும் கட்டுமரங்களும் கூட வாய்க்கால்
கரையிலிருந்துதான் புறப்பட வேண்டும்.
“6.குடியிருப்புகள்
வாய்க்காலிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவு உள்நாட்டினுள் விலகி ஏற்றவற்றம்
எனப்படும் ஓதம் ஆகிய வீங்கலை, பருவ காலங்களில் வரும் சூறாவளியில் எழும்பும்
அலைகள், ஓங்கலைகளின் விளைவான அலைகள் ஆகியவற்றின் அறியப்பட்ட மட்டத்தை விட உயர்ந்த
இடத்தில்தான் அமைக்கப்பட வேண்டும்.
ஓங்கலை குறித்து
இந்த மூன்றடுக்குப் பாதுகாப்பின் ஒட்டுமொத்த விளைவு கடும் விரைவுடன் கடலடித்தரை
வழி கண்ணுக்குத் தெரியாமல் பாய்ந்து திடீரென்று மேலெழும்பித் தாக்கும் நீரைத்
தடுத்து கடற்கரைக்கு இணையான திசைக்குத் திருப்புதல் ஆகும்.
“உள்நாட்டு
வாய்க்காலும் கப்பல் பாதையும் மக்களுக்கும் பண்டங்களின் போக்குவரத்துக்கும் மிக
வசதியாக இருக்கும். நெய்தல் நில மக்களின் வாழ்நிலையையும் உயர்த்தும். கப்பல் பாதை
நம் கடற்படை கடலோரம் நெடுகிலும் விரும்பிய இடங்களுக்குச் சென்று பாதுகாப்பதற்கு
மிக உதவியாக இருக்கும். நெருக்கடியான காலங்களில் இவ் விரண்டு நீர்வழிகளும் இணைந்து
செயல்படுவது மிகப் பயன் தரும்.
“இந்தப் பணிகளை மேற்கொள்தற்கான
தொழில்நுட்பங்களையும் உரியோரைக் கொண்டு வகுத்து ஆயத்தப்படுத்திவிட்டோம். கோட்டத்
தலைமை உரிய ஒத்துழைப்பு நல்கி உடனிருந்து பணியை முடிக்க உதவ வேண்டும்” என்று கூறி
அமர்கிறார்.
கோட்டத் தலைவர்
எழுந்து, “மாமன்னருக்கு நன்றி, அமைச்சருக்கு நன்றி. உடனடியாக தொழில்நுட்பக்
குழுத்தலைவரைக் கண்டு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்று கூறி அமர்கிறார்.
முல்லைக் கோட்டத் தலைவர் எழுந்து, “அரசே! என் கோட்டத்தினுள்
ஆயர்களே அதிகமாக இருக்கின்றனர். அவர்களிடையில் அன்னை குமரிக்கு எதிரான கருத்துகளை அவர் குடிப் பூசாரியார் பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு
மக்கள் மீதிருந்த செல்வாக்குக்கு எதிராக அரசு
வந்துவிட்டதென்று கருதிக் கண்ணனே அவர்கள் தெய்வமென்றும், அவன் அடியார்களாகிய
பூசாரிகளின் கட்டளையைப் புறக்கணித்தால் மக்கள் கண்ணனின் சினத்துக்கு ஆட்படுவரென்றும் கொள்ளை நோய்களைக் காட்டி
அச்சுறுத்துகின்றனர். எனவே மக்களைக் கட்டுப்படுத்துவது
இப்போதே கடினமாயிருக்கிறது. அத்துடன் புது மொழியைப் புகுத்தும் போது அவர்கள் ஆநிரை
மேய்க்கும் போது பயன்படுத்துகின்ற கடும் ஒலிகளை ஒழித்துவிட்டதைக் காட்டிப்
பூசாரிகள் தங்களின் மந்திர ஒலிகளும் புறக்கணிக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கத்துடன்
நம் செல்வாக்கை உடைப்பதற்காகக் கலகம் விளைவிப்பார்களென்ற அச்சம் உள்ளது. இதற்கு
ஏதாவது வழி செய்ய வேண்டும் ஐயனே!” என்கிறார். பல கோட்டத்
தலைவர்களும் அது போன்றே ஒவ்வொரு புலப் பூசாரிகளும் அவ்வந் நிலத் தெய்வத்தைக்
காட்டி அரசுக் கெதிரான கருத்துகளைப் பரப்பிவருவதாகக் கூறுகிறார்கள்.
அரசர் கூறுகிறார்: “நன்று! இயற்கையில் ஏற்படும் கொள்ளை நோய்களையும்
இயற்கைச் சீற்றங்களையும் நம்மால் உடனடியாக நிறுத்த முடியாது.
எனவே இக் கொடிய நோய்களை எதிர்கொள்வதற்கான மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளவும்
மருத்துவ வசதிகளை ஆங்காங்கே ஏற்படுத்தவும் தலைநகரிலும் கோட்டங்கள் மட்டத்திலும்
உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இந்தப் புது இலக்கணத்தை மக்களிடையில்
பரப்புவதற்கு நம் கழகத்தின் மூலம் புதிய இலக்கணப்படி
படைக்கப்படும் ஆக்கங்களுக்கு கோட்டங்கள் மட்டத்திலும் உயர்ந்த படைப்புகளுக்கு
தலைநகரிலும் பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கி ஊக்கப்படுத்துவோம். இம் முறையில் புது மொழிக்கும் நம் அரசுக்கும் பூசாரியர் காட்டுகின்ற எதிர்ப்பை
மட்டுப்படுத்தலாம்.”
அமைச்சர் எழுந்து, “மாமன்னரின் ஈடிணைற்ற பெருமையை என்னென்பது? பூசாரியரின்
சூழ்ச்சிகளும் கீழறுப்புகளும் என்ன செய்யும்?
இரண்டாம் தமிழ்க் கழகம் நிறுவிய மாமன்னர் வெண்டேர்ச் செழியன்
நீடு வாழ்க! அன்னை குமரி வாழ்க! மீனக் கொடி உலகெங்கும் பறக்க!” என்று முழங்க மக்கள் எதிரொலிக்க அரசன் எழுந்து அரசியுடன் கோவிலின்
உட்புறம் செல்ல மக்களும் கலைகிறார்கள். நாமும் வெளியே செல்வோம்.
நண்பகல்
தாண்டிவிட்டது. கடற்காற்று எவ்வளவு இன்பமாய் இருக்கிறது! அதோ அந்தச் சாவடியில் சற்று ஓய்வு
கொள்வோமா? ஆ! இது என்ன கூக்குரல்? நல்ல தூக்கத்தைக் கலைத்துவிட்டதே! அதோ ஒரு
பெண்ணை ஓர் ஆடவன் துரத்தி வந்து அவள் கூந்தலைப் பிடித்து உலுக்குகிறான். அடி
அடியென்று முகம் கை கால் என்று பாராமல் கையால் அடித்துக் காலால் உதைக்கிறான். பெண்
கீழே விழுந்துவிடுகிறாள். அவள் கூந்தலை விடாமலே மேலும் அடிக்கவும் உதைக்கவும்
செய்கிறான். “ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள்” என்ற அப் பெண்ணின் கூக்குரலைக் கேட்டுப் பக்கத்து இல்லங்களிலிருந்து
ஆண்களும் பெண்களும் ஓடி வருகிறார்கள். ஒருவன் அடித்துக் கொண்டிருக்கும் ஆடவனைப் பிடித்துக்கொண்டு
பெண்ணின் கூந்தலை விடுவிக்கிறான். ஒரு பெண் அடிபட்ட பெண்ணைத் தூக்கி நிறுத்தித்
தாங்கிக்கொள்கிறாள். ஆடவன் சினம் கொதிக்கும் உரத்த குரலில் கத்துகிறான்.
“நான்
அல்லும் பகலும் கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டும் கடலில் கொள்ளைக்காரரோடு
போராடிக் கொண்டும் பணமும் பொருளும் ஈட்டி வந்து இவளுக்குப் பொன்னும் மணியும்
இழைத்தும் அரண்மனை போன்று வீடு கட்டித் தந்தும் குற்றேவலுக்கு ஆட்கள்
கொடுத்துமிருக்கிறேன். ஆனால் இவள் ஊரில் வேலையற்றுத் திரியும் கீழ்மகன்களோடு காமக்
களியாட்டம் நடத்துகிறாள். இவளுக்கு நான் ஏன் உணவும் உடையும் உறையுளும் அளிக்க
வேண்டும்? அந்த விடலைப் பயல்களே இவளைப் பேணுவார்கள். அவர்களுடனேயே போகட்டும். இவள்
யாருக்கோ பெற்றெடுத்த பிள்ளைகளையும் அழைத்துச் செல்லட்டும்.
யாருக்கோ பிறந்தவை என் தேட்டை நுகர விடமாட்டேன். இவள் போன்ற கீழ்மகளால் நான்
உழைத்த உழைபெல்லாம் வீண் போயிற்றே! என்ன மாந்தப் பிறவி! மனைவி, மக்கள், செல்வம்
எல்லாமே வெறும் மாயை!”
“என்னை
எப்படி வெளியேற்றலாம்? மணம் புரிந்த சின்னாட்களுக்கெல்லாம் என்னைத் தன்னந்தனியே
தனிமைத் துயரில் வாடவிட்டு ஆண்டு முழுவதும் வாணிகத்துக்குச் செல்கிறேன் என்று
சென்றவிடமெல்லாம் பெண்களோடு காமக் களியாட்டம் நடத்தும் போது நான் மட்டும் என்ன மரமா?”
“நான்
பிற பெண்களோடு களியாட்டம் நடத்தியதை நீ கண்டாயா?”
“காண
வேண்டுமாக்கும்; எனக்குத் தெரியாதா?”
“பெண்ணே!
இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திப் பயனில்லை. நடந்ததை மறந்துவிட்டு
இனிமேலும் இத்தகைய சச்சரவுகளுக்கு இடம் தராமல் பொருந்தி வாழுங்கள்”, ஒரு முதியவர் கூறுகிறார்.
கணவன் “அது முடியாதையா! இது போல் ஊரார் சேர்த்து வைத்த பெண்களில் நூற்றுக்கு
ஒருத்தி கூட ஒழுங்காய் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் ஆட்டங்களைத்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் இவளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறான்.
இன்னொருவர், “அதெப்படியப்பா? நீ அவளைத் துரத்திவிட்டால் அவளும் பிள்ளைகளும் என்ன
செய்வர்?”
கணவன், “என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். அவள் காமத் துணைவர்கள்
காப்பாற்றுவார்கள்.”
ஒரு பெண், “நாம் இங்கு நின்று வழக்குப் போடுவதை விட நம் குடும்பின் தலைவரிடம்
முறையிடுவோமே. அவர் தீர்ப்புச் சொல்லட்டும்”. கணவன் வர
மறுக்கிறான். அவனை இழுத்துப் போவது போல்
கொண்டு செல்கிறார்கள். ஒரு முதியவர் தன் வீட்டின் முன்புள்ள அரச மரத்தடியிலுள்ள
கல்மேடையில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று நடந்தவற்றைக் கூறி
முறையிடுகிறார்கள்.
முதியவர் அமைதியான குரலில் பேசுகிறார். “இது போன்ற வழக்குகள் இப்போதெல்லாம்
பெருகி வருகின்றன. நாம் மீண்டும் இணைத்துவிட்ட பின்னர் பெண்கள் மீண்டும் பழைய
போக்குகளையே மேற்கொள்ளுகின்றனர். இதனால் பல இடங்களில்
கணவர்கள் மனைவியைக் கொலை செய்யவும் குழந்தைகளையும் கொலை செய்யவும் தற்கொலை செய்து
கொள்ளவும் அல்லது ஊரை விட்டே ஓடிவிடவும் செய்கிறார்கள். இன்று கூட ஒருவன்
மனைவியைக் கொலை செய்துவிட்டதாக என்னிடம் கொண்டுவரப்பட்டான்.
அவன் நிலைமைக்கு இரங்கி முதன் முதலாக அவனை விடுதலை செய்துவிட்டோம். இனி மேலும் அதே
நடைமுறையை மேற்கொள்ளப் போகிறோம். இனி இது போன்ற வழக்குகளில் மனைவியை விலக்கி
வைக்கின்ற உரிமையைக் கணவர்களுக்கு அளிக்கிறேன்.” கூறி
முடிக்கிறார். பெண் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். அவளுடன் வந்த பெண் அவளை
அணைத்துக் கூட்டிச் செல்கிறாள். நாம் திரும்பலாமா?
நாம் இன்று கண்டவற்றில் தமிழின் தோற்றம் பற்றியது மீ முகாமையானது.
உலகில் முதன்முதலில் தோன்றிய மொழியாகிய தமிழ் எவ்வாறு தோன்றியது, அதன் காரணம் என்ன,
அதன் பொருள் என்ன என்ற கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் இருப்பதாகத் தோன்றவில்லை. இதற்கு விடை காண வேண்டுமானால் நம் நாட்டினுள்
இருக்கும் பிற பெரும் மொழிகளின் பெயர்களின் பொருள்களை ஆய வேண்டும்.
பிராகிருதம், சமற்கிருதம் என்ற மொழிப் பெயர்களுக்குப் பொருள் முறையே
‘முந்திச் செய்தது’ ‘திருந்தச் செய்தது’ எனக் கூறப்படுகிறது.
அப்படியாயின், மொழியின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மொழியின் பெயர்கள்
குறிக்கப்படுகின்றன என்று சொல்லலாம். பின்னால் தோன்றிய மொழிகளாகிய இவற்றிற்குப்
பெயர்கள் வழங்கும் போது அதற்கு முன் தோன்றிய தமிழ்ப் பெயர் வழங்கிய முறையையே
பின்பற்றியிருப்பர். எனவே இதைத் தலைகீழாக நோக்கினால் தமிழுக்கும் அதன் தோற்றம் பற்றியே
பெயர் கொடுத்திருக்க வேண்டும். தமிழிலுள்ள ஒலிகள் இயல்பான சூழ்நிலைகளில் மாந்த
வாயிலிருந்து தோன்றுகின்ற ஒலிகளை மட்டும் கொண்டு, பெரும்
முயற்சியுடன் சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டும் எழுகின்ற ஒலிகளை விலக்கியிருப்பதால்
அதற்கு ‘தாமே ஒலிப்பது’ (தம் + இமிழ்)
என்ற பொருளில் ‘தமிழ்’ என்ற பெயரை
வழங்கியிருக்க வேண்டும். தமிழர்கள் கடும் ஒலிகளை அறியாதிருந்தனர் என்று சொல்ல
இடமில்லை. இன்றும் கால்நடைகளை ஓட்டிச் செல்வோரும் கூட்டமாகப் பணிபுரிவோரும் உரத்த
அல்லது அடக்கிய குரலில் தமிழில் மந்திரம் சொல்லி ஊர்ப்புறங்களில் மந்திரிப்போரும் கடும் ஒலிகளைத் தோற்றுவிப்பதைக் காணலாம். இவ்
வொலிகள் சிறப்புச் சூழ்நிலைகளில் எழுவதால் இவற்றிற்குத் தனி இடம்
ஒதுக்கவேண்டியதில்லை என இவை விலக்கப்பட்டிருக்கலாம்.
எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவ ணுவலாது எழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே
என்ற தொல்காப்பிய வரிகள்
அளவிற் கோடும் ஒலிகளையும் தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்று பகர்கின்றன.
இங்கு அளவிற் கோடல், எழுந்து
புறத்திசைக்கும் எனும் சொல்லாட்சிகளை நோக்குக. செந்தமிழ் நிலத்தின்
செய்யுளும் வழக்கும் கூற வந்தவர் அயன்மொழியைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று
எவ்வாறு பொருள் கொள்வது? மேலும் குறளிலும், தொல்காப்பியத்தில்
பிறவிடங்களிலும் அந்தணர் என்ற சொல் வரும்போதெல்லாம் “அந்தணர்
என்போர் அறவோர்” என்ற பொருள் வரையறையைக் கொள்ளும் தமிழ்ப்
புலவரெல்லாம் இந்த “அந்தணரை” மட்டும்
ஆரியராகக் கொள்வதேன்? உரையாசிரியர் காலத்தில் சமற்கிருத
மொழிச் செல்வாக்கு மிகுந்திருந்ததாலும் அந்தணர் எனும்
சொல்லுக்கு அப்போது பார்ப்பனர் என்று ஒரு முகமாகப் பொருள் கொள்ளும் நிலைமை இருந்ததாலும் அவர்கள் தவறு புரிந்தனர். இன்று மேலையர் நம் நாட்டையும் மொழியையும்
அரைகுறையாக அறிந்து வெளியிட்ட கருத்துகளை முறையாக ஆராயாததாலும் முந்தியல் மாந்த இன
நாகரிக வளர்ச்சியோடு மொழியின் வளர்ச்சியையும் பருப்பொருளியல்
கண்ணோட்டத்தில் இணைத்து அணுகத் தவறியதாலும் இன்றைய அறிஞர்களாலும்
பழைய சிந்தனைகளிலிருந்து பிழையின்றி விலகிச் செல்ல முடியவில்லை. விலக்கப்பட்ட
ஒலிகள் அவை தோன்றிய சூழ்நிலைகள் அழிந்துபோனாலன்றி அழிந்து
போகா. அவை ஏதோவொரு வடிவில் இருந்தே தீரும். அவ்வாறு இருந்த ஒலிகளின் வளர்ச்சியே
பிராகிருதமும் சமற்கிருதமும். அவற்றிற்கு வேர் தமிழ்
நாட்டில் உண்டு. இலக்கண அடிப்படையும் தமிழ்தான். தமிழைப்
பின்பற்றியும் அதற்குத் தலைகீழாகவும் இரு முறையிலும் அம் மொழிகளின் இலக்கணம்
வகுக்கப்பட்டிருக்கும்.
உலகின் இறுதிப் பனிக்கட்டிப் படலப் பின்வாங்கல்
பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன் முடிவுற்றது என்பது நிலவியலார் முடிவு. அதாவது,
உருகத் தொடங்கிய பனிக் கட்டிப் படலம் 11,000 ஆண்டுகளுக்குப் பின் உருகவில்லை.
அதுவரை கடல்மட்டம் உலகெங்கும் உயர்ந்து வந்தது. உலகின் பல பகுதிகள் நீரினால்
மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட நிலவியல் சமன மாற்றத்தினால் திடீரென்று நிலங்கள்
கடலினுள் மூழ்கின. அவ்வாறே தமிழ்நாட்டின் இரு கடற்கோள்களும் நிகழ்ந்திருக்க
வேண்டும். எனவே இரு கடற்கோள்களுக்கும் முற்பட்ட காலங்களில் நீர் சிறுகச் சிறுக
நிலத்தை நோக்கி முன்னேறியதும் நடைபெற்றிருக்கும். முக் கழகக் கால நீட்சிகளையும்
கூட்டினால் 9,990 ஆண்டுகள் ஆகும். முதற் கடற்கோளுக்கும் இரண்டாம் கழகத்
தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் 1000 ஆண்டுகள் என்றும் இரண்டாம் கடற்கோளுக்கும்
மூன்றாம் கழகத் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் 500 ஆண்டுகள் எனவும் கொண்டால்
முதற்கழகம் தோன்றிய காலம் தோராயமாக 11,500 ஆண்டுகளாகும்.
எனவே, முதற் கழகத் தொடக்கக் காலத்திலிருந்தே குமரிக்
கண்டத்தின் கடற்கரை மக்கள் வடக்கு நோக்கி நிலத்தினூடும் பிற திசைகளில் கடல்வழியாகவும் சென்றிருக்க வேண்டும். 4,50.000
ஆண்டுகளுக்கு முன் முடிவுற்ற முதல் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சியிலிருந்து
பின்னர் உள்ள இரு இடைப் பகுதிகளிலும் நடைபெற்ற மக்களின் முன்னோரின்
வெளியேற்றத்துடன் சேர்த்துத் தமிழரின் கடைசி இடப் பெயர்ச்சியின் தொடக்கம் இது.
இவ்வாறு தெற்கிலிருந்து வடக்கு வரும் மக்களை ஓம்புவதற்கு மக்களுக்கு விதிக்கப்பட்ட
கடமையையே
தென்புலத்தார் தெய்வம்
விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா ரோம்பல் தலை
என்று திருக்குறளில் வரும் தென்புலத்தார் ஓம்பல் குறிக்கும். தெய்வம் எனப்படுவது இறைவன்
எனப்படும் அரசனுக்குரிய கடமையைக் குறிக்க வேண்டும். இக் குறள்
இல்லறத்தான் ஈட்டம் எவ்வாறெல்லாம் பங்காகும் என்பதைக் குறிக்கிறது.
இக் குறள் ஒரு காலத்தில் தென்புலத்திலிருந்து
கடலுக்கஞ்சி வந்துகொண்டிருந்த மக்களைக் குறித்துப் பின்னர் அது மறந்துபோன காலத்தில்
தென்புலத்தார் என்ற பெயரில் இறந்து தெற்கே சென்றிருப்பதாக அல்லது கடற்கோளில் இறந்த
தென்புலத்தாருடையதாகக் கருதப்பட்ட முன்னோர் ஆவிகளுக்குப் படையல் என்றிருந்த
எண்ணத்தை எடுத்துக்காட்டுவதாயிருக்க வேண்டும். அல்லது தென்புலத்தார் வடக்கு
நோக்கிப் பெயர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே இக் குறள் தோன்றியிருக்க
வேண்டும். படையல் என்பது யார் நினைவாகப்
படைக்கப்படுகிறதோ அவர்களால் அன்றி வாழ்ந்துகொண்டிருப்போராலேயே உட்கொள்ளப்படுகிறது.
எனவே அதை ஒரு பங்கீடாகக் கொள்ள முடியாது. எனவே இந்தக் குறள் தமிழகத்தில் கடற்கோள்
அச்சம் குறிப்பிடத்தக்க அளவு இருந்த காலத்திலேயே எழுந்திருக்க வேண்டும்[1].
அடுத்து குடும்ப வாழ்வுக்கு வருவோம். இயற்கை
வளங்களிலிருந்து அவ்வப்போது, அதாவது அன்றாடமோ பருவங்கள் தோறுமோ தமக்கு
வேண்டியவற்றைத் திரட்டி அவற்றை நேரிடையாகத் துய்த்தும் வேண்டிய பிற பொருட்களைப்
பண்டமாற்றியும் வாழ்ந்த ஊர்ப்புற மக்களிடத்தில் குடும்பத்தில் பகுப்புகளோ
பெண்களின் மீது ஆண்களின் சிறப்பான உரிமையோ ஏற்பட்டிருக்க முடியாது. ஆனால் வாணிகர்களும் பிற சார் தொழிலாளர்களும்
செறிந்த, ஊர்ப்புற மக்களைவிட அதிகப் பொருள் ஈட்டி அடுத்த தலைமுறைக்கும்
சேர்த்துவைக்க வழியிருந்த இடங்களில் அவ் வீட்டத்தைச் செய்த
ஆடவர் பெண்டிர் மீது மிகையான அதிகாரத்தைக் காட்டுவது இயல்பு. எனவே பெண்கள்
ஆண்களின் அடிமைகளாய், செல்வர்களின் அதாவது வாணிகர்களின்
வகுப்பில்தான் முதன்முதல் மாறியிருப்பர். இன்றும் தமிழ்நாட்டிலேயே மிகப்
பெரும்பான்மையராக அமையும் உழைப்பாளி மக்களான தாழ்த்தப்பட்டோர், முக்குலத்தோர்,
வன்னியர் முதலியோர் நடுவில் பெண்களுக்கு மணவிலக்கு உரிமையும் மறுமண
உரிமையும் கைம்பெண் மண உரிமையும் இருக்கின்றன. மணவிலக்கில்
ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகச் சலுகை இருக்கிறது. ஆண் மணவிலக்குக் கோரினால் பெண்ணுக்கு
ஈட்டுத் தொகை கொடுக்க வேண்டும். ஆனால், பெண்கள் மணவிலக்குக் கோரினால் எதுவும்
கொடுக்கவேண்டியதில்லை. தாலியைக் கழற்றிக் கூரையில் எறிந்துவிட்டுப்
போய்விடலாம். இன்னும் இப் பெண்கள் தம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லலாம்.[2]
ஆனால், இவ் வகுப்பாரிடையிலும் செல்வர்கள், படித்து நல்லூதியம் பெறுவோர் ஆகிய, தம் பிறங்கடைகளுக்குச் செல்வம் திரட்டி வைத்துச்
செல்ல இயல்வோரிடம் மணவிலக்கைக் காண்பது அரிது. மணவிலக்கு பெற்ற பெண்ணை இன்னொரு
செல்வம் படைத்தோன் மறுமணம் செய்துகொள்ள முன்வருவது அரிதாவதும் தானும் தன் மக்களும்
ஏழ்மையில் வாட நேருமென்பதாலும் மணவிலக்குப் பெற இப் பெண்கள் பொதுவாக விரும்பமாட்டார்கள் என்பதும் காரணங்கள். அதே வேளையில்
அன்றாடங்காய்ச்சிகளிடையில் பெண் உழைத்துச் சம்பாதிக்கிறாள்,
வீட்டைப் பார்த்து கணவனுக்குச் சமைத்துப்போட்டு, இன்பம் கொடுத்து, குழந்தைகளை
வளர்த்து, ஆளாக்கி அவர்களது வருமானமும் குடும்பத்துக்குச்
கிடைக்கச் செய்கிறாள். குழந்தைகள் வளர வளரச் செலவு பெருகும் செல்வர்களின
சூழ்நிலைக்கு மாறாக வரவு மிகும். எனவேதான் மணவிலக்கு இன்றும் அவர்களிடையில் நிலவி
வருகின்றது. இத்தகைய மணவிலக்கு வழக்கம் உள்ளவர்கள் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில்
எழுபது நூற்று மேனியருக்கு மேல் இருப்பர் என்று சொல்லலாம். மணவிலக்கு உரிமை
பெண்களுக்கு இருக்கும் வகுப்பாரிடம் அதாவது பெண் அதிகாரம் உள்ள வகுப்பாரிடம் -
பெண்களாலும், அது இல்லாத வகுப்பாரிடம் -ஆண்களாலும் முன்பு குறிப்பிட்ட அனந்தரம்
என்ற சடங்கு நிகழ்த்தப்படுகிறது.
நம்
பண்டை இலக்கியங்களில் கூறப்படும் நளன் – தமயந்தி கதையில் கணவன் கைவிட்ட தன் மகள்
தமயந்திக்கு அவள் தந்தையான குண்டினபுரத்தரசன் இரண்டாம் தன்வரிப்பு (சுயம்வரம்)
ஏற்பாடு செய்யவில்லையா?
இவ்வாறு நடப்பில் பல முறை மணம் செய்து கொள்ளும் உரிமையுடைய
பெண்டிரைக் கொண்ட வகுப்பினர் பெரும்பான்மையராக இருக்க, ‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையைக்
கொண்டவர்கள் தமிழர்கள்’ என்று தமிழறிஞர்கள் கூறித்
திரிகின்றனர். கண் முன்னால் கண்டும் மறைக்கிறார்களா? அல்லது நூல்களில் படித்த
கருத்துகள் மூளையின் முன்புறத்திலிருந்து கண்ணால் கண்டவற்றை உள்ளே செல்லவிடாமல்
தடுக்கின்றனவா? நூல்களில் இக் கருத்து எவ்வாறு இடம்பெற்றது என்பதை நாம் பின்னர்
காணலாம்.
பின்குறிப்பு: கடற்கோள்கள்ப் பற்றிய கருதுகோள்கள் பனிப்படர்ச்சி
முன்னேறுதல், பின் வாங்குதல் என்பதில் இருந்து கண்டப் பெயர்ச்சி எனும் கோட்பாட்டாரளர்
கைகளில் இன்று நிற்கிறது. ஆனால் ஆண்டுக்கு மிஞ்சிப்போனால் 15செ.மீ., அதாவது ½ அடி
நகரும் கண்டத் தட்டுகளால் என்ன திடீர் அழிவுகள் ஏற்பட்டுவிட முடியும்? கண்டத் தட்டுகள்
நகர்வதால் உருவாகும் சமநிலைப் பிறழ்வுகளால் நிலப் பகுதிகள் சில அமிழவும் சில மேலேழவும்
வாய்ப்புண்டு என்று கூறினாலும் கண்டப் பெயர்ச்சிக் கோட்பாளர்கள் இருக்கும்
கண்டங்களின் விளிம்புகளை இணைத்து பொருத்திக் காட்டுகிறார்களே அதற்கென்ன சொல்வது?
இவர்கள்
இன்றைய நிலப் பரப்புகளைப் பொருத்திக்காட்டியுள்ள படத்தில் ஆங்காங்கே ஒரு சில
இடைவெளிகள் உள்ளன. அவை நாளாவட்டத்தில் மண்ணரிப்பால் காணாமல் போனவை என்று அவர்கள்
விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இவ் விடைவெளிகளில் மிகவும் பெரியது
ஆத்திரேலியாவுக்கு வடகிழக்கில் உள்ளது. அத்துடன் போர்னியோ, சாவகம், கிழக்கிந்தியத்
தீவுகள், பிலிப்பைன்சுத் தீவு ஆகியவை அமைந்துள்ள இம் மண்டலத்தில் தென் சீனக்
கடலுக்குக் கிழக்கில் ஏறக்குறைய 11,000 மீற்றர்கள்(இமயமலையின் உயரத்தின் ஏறக்குறைய
இரு மடங்கு) ஆழமுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளங்கள் கடலில் உள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
கொதிக்கும்
குழம்பாயிருந்த புவிக் கோளம் குளிரத் தொடங்கிய போது கனம் குறைந்த தனிமங்களைக்
கொண்ட ஒரு கலவை திடப்பொருளாகி மிதந்தது, அப் பொருள் புவியின் சுழற்சியால் ஒரே
பரப்பாகத் திரண்டது. அடர்த்தி மிகுந்த எஞ்சிய பொருள்கள் அதற்கு அடியில் குளிர்ந்து
இறுகி கடலடித் தரையானது, அடர்த்தி குறைவால் மிதந்த அடுக்கு அதே புவிச் சுழற்சியால்
மீண்டும் உடைந்து நகர்ந்தது என்பது அவர்கள் தரும் விளக்கம். ஆனால் ஒரு முகாமையான
கேள்வி, மிதந்த பொருள் நகர்ந்து ஒன்றிணைந்த போது இருந்த புவியின் வெப்ப நிலையை விட
அது உடைந்து விலகிய போது மிகவும் குளிர்ந்திருக்கும். எனவே அதே புவிச் சுழற்சி
ஆற்றல் அதை நகர்த்தப் போதியதல்ல. அத்துடன் துணுக்குகளை நகர்த்தி இணைப்பது வேறு,
ஒன்றிணைந்த ஒன்றை உடைத்து நகர்த்துவது என்பது வேறு. சுழன்றுகொண்டிருக்கும் புவிக்
கோளத்தின் ஒரு பகுதியாக நிலைத்துவிட்ட நிலப் பகுதி அதே புவிச் சுழற்சியால் உடைந்து
நகர்ந்தது என்பது அடிப்படை இயக்க விதிகளுக்குப் புறம்பானது. Quantum mechanics
எனப்படும் பருண்மை பொறியாண்மையியல் அடிப்படையில் புவியின் இயல்பைப்
பொறுத்தும் இது இயலாத ஒன்று. நியூட்டனின் முதல் விதியைப் பொறுத்து
நிலைத்திருக்கும் ஒரு பொருளை நகர வைப்பதற்கும் நகர்ந்துகொண்டிருக்கும் ஒன்றை
நிலைவிப்பதற்கும் ஒரு வெளி விசை வேண்டும். புவிக் கோளத்தின் பிரிக்க முடியாத ஒரு
மொத்தையாக அமைந்துவிட்ட நிலப்பரப்பை உடைக்கவும் நகர்த்தவும் தேவையான ஆற்றலை
வழங்கிய அவ் வெளி விசை எதுவாக இருக்கும்?
இதற்கு
இரண்டு வாய்ப்புகள்தாம் உள்ளன. ஓன்று, விண்வெளியில் இருந்து மிகக் கனத்த விண்கல்
புவியைத் தாக்கியிருக்கும். மற்றொன்று, விண்வெளியிலிருந்து கோள், வால்வெள்ளி போன்று
புவியின் மீது கணிசமான ஈர்ப்பு விசையைக் கொள்ளுமளவுக்கு பருமையும் விரைவும் கொண்ட
ஒன்று புவியிலிருந்து ஒரு நிலப் பகுதியை ஈர்த்து எடுத்திருக்க வேண்டும். இவ் வாய்ப்புகள்
குறித்து இப் பொருள் பற்றி ஏற்கனவே ஆய்ந்தோர் கூறியுள்ளனர். இவற்றில் முதலில்
குறிப்பிட்ட நிகழ்வின் வாய்ப்பே மிகுதி, ஏனென்றால் இரண்டாம் வாய்ப்பில், இழந்த
பகுதியை ஈடுசெய்ய அண்டை நிலப்பரப்புகள் அப் புள்ளியை ஈர்ப்பு நடுவாகக் கொண்டு அதை
நோக்கி நகர்ந்து நில மொத்தையின் வெளி விளிம்பை நோக்கிய வெடிப்புகள்
ஏற்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நிலப்பரப்பு காணாமல் போயிருக்கும் பகுதி விரிந்து
விலகல் விசையின் நடு அதற்கு எதிர்த் திசையில் இருந்து நில மொத்தையை
விரித்திருக்கிறது.
இதற்கு
கண் காணத்தக்க சான்று உலகப் படத்திலேயே உள்ளது. அதில் நாம் குறிப்பிட்ட நிலப்
பகுதி உடைந்து சிதறியுள்ளதைத் தெளிவாகக் காண முடியும்.
உடைந்த
நிலப் பகுதிகள் ஏதோ மிதவைகள் போன்று அமைதியாக நகர்ந்தன என்ற கருத்தையே இப் பொருள்
பற்றிய ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். நிலப் பரப்பு magma எனப்படும் களிக் குழம்பின்
மீது மிதந்துகொண்டிருப்பதே உண்மை நிலையாகும். எனவே நிலப் பரப்பை அமிழ்த்திச்
சிதறடிக்கும் அளவுக்கு வலிமையான ஒரு வெளிப் பொருள் தாக்கினால் அக் குழம்பில்
அலைகள் உருவாவது தவிர்க்க முடியாதது. எனவே நகரும் நிலத் தட்டுகள் அந்த அலைகளினால்
உயர்ந்தும் தாழ்ந்தும்தாம் செல்கின்றன. இந்த அலைப்பினால் நிலப் பகுதிகள் கடலடித்
தரைகளாகவும் கடலடித் தளங்கள் நிலப் பகுதிகளாகவும் மாறவும் நிலப் பகுதிகள்
ஒன்றோடொன்று மோதவும் அதனால் உடையவும் இணையவும் களிக் குழம்பினுள் அமிழவும்
வாய்ப்புகள் உண்டு.
இந்து
மாக்கடல் எனப்படும் குமரிக் கடலின் தளம் மட்டும் உலகிலுள்ள
கடல்களில் நிலப் பகுதிகளுக்குரிய quartzite என்றும் sial (silicon + aluminium)
என்றும் அழைக்கப்படும் அடர்த்தி குறைந்த பாறையைக் கொண்டுள்ளதும் உலகின் நிலப் பரப்பில்
தென் மேட்டுநிலம் (தச்சிணா பீடபூமி) மட்டும் கடலடித் தளத்துக்குரிய basalt என்றும்
sima (silicon + magnesium) என்றும் அழைக்கப்படும் அடர்த்தி மிகுந்த பாறையைக்
கொண்டுள்ளதும் இதற்கு அசைக்க முடியாத சான்றுகளாகும்.
மேலே[3]
குறிப்பிடப்பட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் நூலில் தரப்பட்டுள்ள
படத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி “நகர்ந்த” பரத கண்டம் புவியியங்கியல்
அளவீடுகளின் கணக்கில் “தலைதெறிக்கும் விரைவில்” பாய்ந்துள்ளது. அதனால்தான் ஆசியக்
கண்டத் தட்டுடன் மோதி 900 திரும்பியுள்ளது. அதற்கு வாக்கினரின்[4]
புவிச் சுழற்சி தரும் விசை போதுமா? அது மட்டுமல்ல அலையின் அந்த விசை இன்றும்
தணியவில்லை. ஆசியத் தட்டுடன் மோதியதால் தொடங்கிய இமய மலை வளரச்சி இன்றும்
தொடர்கிறது. அலையின் விசை தணிந்து அது எதிர்த் திசையில் திரும்பும் போது வேறு
வகையான விளைவுகள் புவியில் ஏற்படும்.
பாரதத்தின்
தொண்ணூறு பாகைகள் கடிகார எதிர்ச் சுற்று பற்றிய ஒரு பதிவு நம் பண்டை நூல்களில்
காணக்கிடப்பது வியப்பாகும்.மத்தியதேசம் என்ற சொல்லுக்கு தமிழ்
மொழியகராதி – விபாசைக்குக் கிழக்கேயும் பிரயாகைக்கு மேற்கேயும்
இமயத்துக்குத் தெற்கேயும் விந்தியத்துக்கு வடக்கேயுமுள்ள தேசம். இங்கே வசிப்போர்
மாத்யமிகரெனப்படுவர்.குருக்கேத்திரத்திற்கும் தெற்கும் அளக பாதத்திற்கு வடக்கும்
இமயத்திதற்கு மேற்கும் விந்தியத்திற்குக் கிழக்குமாக வுள்ள பூமி என்றுங் கூறலாம்
என்று பொருள் கூறியுள்ளது. சப்த தீவுகள் என்ற சொல்லுக்கு, ஏழுவித
தீவுகள்,அவை சம்பு, பிலச்ச, குச, கிரௌஞ்ச, சாக, சான்மல, புட்கர மென்பன…………….இத் தீவுகள்
ஏழும் காலாந்தரத்திலே பூர்வ ரூபம் திரிந்தன என்று பொருள் கூறியுள்ளது.
இவற்றில் சம்புத் தீவு என்பதுதான் பாரத கண்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இமயமும்
விந்தியமும் தென்வடலாக நடுநாடு என்பதன் கிழக்கிலும் மேற்கிலும் முறையே கிடந்தன
என்பது இதன் பொருள்.
இமயமும்
மேரு எனப்படும் அதன் உச்சியும் நிலநடுக்கோட்டில் ஒரு கட்டத்தில் இருந்தன என்பதை
இன்னும் விரிவாக உரிய சான்றுகளுடன் நண்பர் வெள்உவனுடன் நானும் இணைந்து எழுதியுள்ள தென்னிலங்கை
என்ற கட்டுரையில் காணலாம்[5].
கடலலை
தாக்குதலிலிருந்து நாட்டைக் காப்பதற்காக நம் முன்னோர் அமைத்திருந்த மூன்றடுக்குப்
பாதுகாப்பு குறித்து நமக்குக் கிடைத்துள்ள தடயங்களைப் பேசுவோம்.
தமிழகக்
கடற்கரை நெடுகிலும் மணற்குன்றுகள் என்று அறியப்படும் தேரிகளை[6]
அமைத்துப் பராமரித்து அதன் நிலம் நோக்கிய பக்கத்தில் ஒரு கால்வாயையும்
தோண்டியுள்ளனர். கடலினுள் ஒரு கப்பலோடையையும் அகழ்ந்துள்ளனர். தொடர்ந்து வந்த
காலங்களில் இந்த மூன்றடுக்குக் காப்பரண் நிலத்தையும் நிலத்தில் வாழ்ந்த மக்களையும்
காத்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு கூட இந்த மணல் தேரியின்
உச்சியிலன்றி அதிலிருந்து கடல் நோக்கிய திசையில் எந்த ஒரு மீனவர் குடியிருப்பும்
இருந்ததில்லை. கடந்த ஐம்பதாண்டுகளாகத்தான் தேரியை நிரத்தி(சமப்படுத்தி)க்
குடியிருப்புகளை அமைத்துள்ளனர். வாக்கு வங்கி உருவாக்கம் என்ற நோக்கில் அரசியல்வாணர்கள் இதனை ஊக்கியுள்ளனர்.
சவுக்கு மரம் நடுவதற்கென்று கான் துறையினர் அதாவது ஆட்சியாளர்கள் தம் பங்குக்கு
நிரத்தியுள்ளனர். விறகுக்கு என்று இவ்வாறு மரம்
வளர்ப்பவர்கள் அதை வெட்டி அழிக்கும் போது கடற்கரை மணல் தன் கான் போர்வையை
இழக்கிறது. கரையிலிருந்து கடல் நோக்கியும் கடலிலிருந்து கரை நோக்கியும் வீசும்
பருவக் காற்றுகள் தக்க பிடிமானம் இல்லாத மணலைக் கடல் நோக்கியும் உள்நிலம் நோக்கியும்
மாறி மாறிக் கொண்டுசெல்கின்றன. தமிழகக்
கடற்கரை நெடுகிலும் பல கல் தொலைவுக்கு மணல் மேடுகளைக் காணலாம். தஞ்சை மாவட்டத்தில்
வேளாண்மைக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக இம் மணலைக் குவித்துப் பெரும் மேடுகளாக்கியுள்ளனர். குமரி மாவட்டத்தில் அகத்தீசுவரம் வட்டத்தில்
கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 3 கல் தொலைவிலுள்ள தெங்கம்புதூர்
எனுமிடத்திலுள்ள தேரியிலிருந்துதான் அவ் வட்டாரத் தென்னை வேளாண்மை
தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டுக் கடற்கரை நெடுகிலும் தேரியை அடுத்து ஓர்
உள்நாட்டு நாவிக வாய்க்கால் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. அதில் பக்கிங்காம்
வாய்க்கால் எனப்படும் ப.வாய்க்காலும் (B- Canal) மேற்குக் கடற்கரையில் அனந்தன் விக்டோரியா
மார்த்தண்டவர்மா (A.V.M.) வாய்க்கால் எனப்படும் அ.வி.மா.வாய்க்காலும் அடங்கும். ப.வாய்க்கால் விசாகப்பட்டினம் அல்லது
மசூலிப்பட்டினத்திலிருந்து நாகப்பட்டினம் வரையிலும் அ.வி.மா.வாய்க்கால்
கன்னியாகுமரியிலிருந்து கொல்லம் வரையிலும் செல்வதாகத் தெரிகிறது. பொதுப்பணித் துறை
செயற்பொறியாளர் ஒருவர் ப.வாய்க்கால் பரங்கிப்பேட்டை வரைதான் உண்டு என்றார். ஆனால்
சீர்காளியிலுள்ள
பொதுப்பணித்துறை நீர்வள மேலாண்மைச் சிறுகோட்டத்தினர் தங்கள்
சிறுகோட்ட எல்லைக்குள் ப.வாய்க்கால் தங்கள்
பொறுப்பிலிருப்பதாகவும் ஆனால் அதைப் பற்றிய ஆவணங்கள் எதுவுமில்லை எனவும்
கூறுகின்றனர். பழையாறு என்று இப்போது அழைக்கப்படும் இடம்
தமிழ்நாட்டுப் பெரிய ஆறுகளில் ஒன்றும் காவிரி ஆற்றுபரப்பின் வடிகாலுமான கொள்ளிடத்தின்
கழிமுகத்தில் உள்ளது. ஆசிரியர் கல்கியின் பொன்னியின் செல்வன்
வரலாற்றுப் புதினத்தில், சோழப் பேரரசன் இராசராசன் பிறந்து வளர்ந்த அன்றைய சோழர்
தலைநகராகிய பழையாறை ஆகும் இது.[7]
இங்கு கொள்ளிடம் ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிந்து ஒன்று நேராகவும் மற்றொன்று ஏறக்குறைய
8 அ.மா.வடக்கு நோக்கிச் சென்றும் கடலில் சேர்கின்றன. அந்தக் கிளையும் அடர்ந்த
சுரபுன்னை மரங்களின் ஊடாக ப.வாய்க்காலும் இணைந்து உருவான காயல் வடக்கில்
பிச்சாவரம் காயலாகி முடிகிறது. ப.வாய்க்கால் வடக்கில் தொடர்கிறது. இங்கே
வெள்ளாறும் வந்து கடலில் கலக்கிறது. இந்த காயலுக்கும் கடற்கரைக்கும் நடுவிலிருந்த
தேரிகளில் கடந்த 35 ஆண்டுகளாக, அரசியல்வாணர்களால் வாக்குவங்கிகளாகக்
குடியமர்தப்பட்டவர்களே அவ் வட்டாரத்தில் 2004 ஓங்கலையால் அடித்துச்செல்லப்பட்ட
மக்கள். பழையாற்றில் மணல் மேட்டிலிருந்து கடல் நோக்கிய தாழ்நிலத்தில் அண்மைக்
காலத்தில் வீடுகட்டி வாழ்ந்தவர்கள் அழிந்தனர். மேட்டிலிருந்தவர்கள் தப்பினர்.
ப.வாய்க்கால் ஓங்கலையின் நீரை ஓரளவு உள்வாங்கி அவர்களைக்
காத்தது. அதே நேரத்தில் குமரி மாவட்டத்தில் கொட்டில்பாடு
என்னுமிடத்தில் மணவாளக்குறிச்சி அருமணல் தொழிற்சாலையால் மணல் அகற்றப்பட்ட
தாழ்விடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மக்களோடு அடித்த்ச் செல்லப்பட்டு அடுத்து
ஓடும் அ.வி.மா.வாய்க்காலினுள் நிரம்பின. இங்கு வாய்க்கல் சவக்குழியானது.
காரைக்கால் பகுதியில் ப.வாய்க்காலின் சுவடுகள் தெளிவாகவே
உள்ளன. செங்கல்லாலான பெரும் பெரும் கட்டுமானங்களின் இடிபாடுகள் தூர்ந்து கிடக்கும்
வாய்க்காலினுள்ளிருந்து நம்மை மறுக்கமாக எட்டிப்பார்க்கின்றன.
ப.வாய்க்காலில் சென்னை வட்டாரத்தில் அண்மைக் காலம் வரை
படகுப் போக்குவரத்து இருந்தது.1968-இல் மாமல்லபுரத்துக்கு வடக்கே கடலை அடுத்துச்
செல்லும் சாலைக்கு மேற்கில் பாய்மரம் விரித்துச் செல்லும் படகுகலைப்
பார்த்திருக்கிறேன். வடக்கே ஆந்திரத்திலிருந்து பல்வேறு பண்டங்களை ஏற்றிவரும்
படகுகள், வாய்க்காலின் படுக்கை உயர்மட்டத்திலிருந்து தாழ்மட்டத்துக்கு இறங்கும்
இடத்தில் உள்ள வீழ்த்தம்(Drop) எனப்படும் அமைப்புகளைத் தாண்டுவதற்க்காக பூட்டி(Lock)என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்[8].
அவற்றை இயக்குவதற்கென்று பூட்டி கண்காணிப்பாளர் தலைமையில் அமைந்த
ஓர் ஊழியர் குழு பூட்டிக் களங்களிலுள்ள குடியிருப்புகளில் இருந்தார்கள். இந்தப்
பணிகளின் பொறுப்பில் ஒரு பொதுப்பணித்துறைக் கோட்டமும் செயற்பட்டது. மேலிருந்து வரும் படகுகளை
கீழிறக்கவும் கீழிருந்து வருவனவற்றை மேலேற்றவும் பூட்டிகளை இயக்கும்
பணியாளர்களுக்கு படகுகளை இயக்குவோர் ‘அன்பளிப்பாக’க் கரைநோக்கி வீசும் பொருட்களில் தீப்பெட்டியும் உப்பும் தவிர்த்த
அனைத்தும் அடங்கும் என்னுமளவுக்கு பொருள் போக்குவரத்து இந்த வாய்க்காலில்
இருந்தது.
இன்று அந்த அமைப்பு இயங்கவில்லை. பொதுப்பயன்களுக்காக
ஒதுக்கப்பட்ட நிலங்கள், அவை, குளங்களாக இருந்தாலும், வாய்க்கால்கள், கால்வாய்கள்,
ஆறுகள், சாலைகள், காடுகள் என்று எதுவாக இருந்தாலும் அதில் ஏதாவதொரு கட்டடத்தைக்
கட்டி அல்லது “ தொண்டர்”களுக்கு வழங்கி அரசியல் – பொருளியல் ஆதாயம் காணும்
மரபை ஊக்கி வளர்த்து வைத்திருக்கும் கருணாநிதி தன் “தோழர்கள்” வாழும் மலேசியாவிலிருந்து “வந்த” மூலதனத்தைக் கொண்டு செயல்படுத்திய ‘பறக்கும்
தொடர்வண்டித் திட்டத்′தைச் சென்னை மாநகர எல்லைக்குள் ஓடும் ப.வாய்க்காலின் மீது
அமைத்துத் திருப்பணி புரிந்துள்ளார். ஆட்சியாளர்கள் விரும்பினால் எந்த நிலத்தையும்
கையகப்படுத்தவும் எந்தக் கட்டடத்தையும் இடிக்கவும் அதிகாரம் உள்ளது. இந் நிலையில்
பல்லாயிரம் ஆண்டுகளாக நம் மூதாதையர் உருவாக்கி வைத்துள்ள குமுகத்தின்
உயிர்நாடியும் மதிப்பிட முடியா அருஞ்செல்வமுமான இது போன்ற உள்கட்டமைப்புகளை
அழித்த, அழிக்கும் அரசியல் கயவாளிகளைத் தண்டித்தே ஆக வேண்டும்.
ப.வாய்க்காலைப் பற்றி பொதுப்பணித்துறையினரிடம் சரியான
செய்திகள் இல்லை; கிடைக்கும் செய்தி அது நாகப்பட்டினம் வரை செல்கிறது என்றும் அதற்கு
அப்பால் வேதாரண்ணியம் வாய்க்கால்(வே.வாய்க்கால் – V.canal) கோடியக்கரை வரை
செல்வதாகவும் பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர். பழையாற்று மக்களோ அது குமரி வரை
செல்கிறது என்கின்றனர். இது அங்கு நிலவும் பழமரபின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
பொன்னியின் செல்வன் புதினத்தில்
கதைத் தலைவன் அருள்மொழிவர்மன்(பின்னர் இராசராசன்) கடலில் புயலில் சிக்கி
காய்ச்சலில் விழுந்த போது அவனது தோழன் வந்தியத்தேவன் கோடிக்கரையிலிருந்து அவனை
இந்த வாய்க்கால் வழியாக நாகப்பட்டினம் புத்த விகாரைக்கு யாருமறியாமல் கொண்டு
சேர்ததாக ஆசிரியர் கல்கி எழுதியுள்ளார். இந்த வாய்க்கால் பற்றி உள்ளூர் உசாவல் மற்றும்
ஆவணங்களை ஆய்ந்துதான் இதனை அவர் எழுதியிருப்பார் என்பது உறுதி.
ஆங்கிலர் தம் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டில் ஆறுகளிலிருந்து வாய்க்கால்
தோண்டி ஏற்கனவே இருந்த கடற்கரையைத் தழுவி ஓடிய பழைய வாய்க்காலில் இணைத்துள்ளனர்
என்பதே உண்மை. தூர்ந்து கிடந்த பழைய வாய்க்காலை பிச்சாவரம் வரையோ
பொ.ப.து.செயற்பொறியாளர் குறிப்பிட்டது போல் பறங்கிப்பேட்டை அல்லது
வேதாரண்ணியம் எனும் திருமரைக்காடு[9](வேதாரணியம்) வரையோ தூரகற்றி வாய்க்காலைப் படகுப் போக்குவரத்துக்கு மீட்டிருக்கலாம்.
அது போலவே திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்டவர்மனும் அ.வி.மா. வாய்க்காலைச் சீர்செய்திருக்கலாம். அவன்
பதவி ஏற்ற பின்னர் எதிரிகளின் அச்சமின்றி கன்னியகுமரி சென்று திரும்புவதற்கு இவ் வாய்க்காலைப்
பயன்படுத்தியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு பண்டைத் தமிழகத்தின்
இரு கடற்கரைகளிலும் மணல் தேரித் தொடரையும் வாய்க்கால்களையும் உருவாக்கியதில்
கடற்கோள்களிலிருந்து தமிழகத்தில் கரையேறிய சேர, சோழ, பாண்டியர்களின் ஒருங்கிணைந்த
செயற்பாடு இருந்திருக்கும். இதைக் கள ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும்.
2004ஆம்
ஆண்டு ஓங்கலைப் பணிக்காக கடலூர் மாவட்டத்தில் ஒரு முறை பேருந்தில் சென்ற போது
அப்போது அம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி அவர்களின் முன்முயற்சியால்
மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தைக் கொண்டு தூர்ந்து போயிருந்த வாய்க்காலை நில
அளவை ஆவணங்களிலிருந்து தடம்பிடித்து குறிப்பிடத்தக்க நீளத்துக்குத்
தோண்டியிருந்தனர். பின்னர் அப் பணி திடீரென நிறுத்தப்பட்டது. அந் நிறுவனத்துக்கும்
ஆட்சியருக்கும் கருத்து வேற்றுமை என்று விளக்கம் கூறப்பட்டது. எனக்கு அதில்
நம்பிக்கை இல்லை. கடல் வழி – நில வழி நாவிகத்தை வளர்ப்பது எப்போதும் இந்திய ஆளும்
கணங்களுக்கு ஒவ்வாத ஒன்று. அதுவும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் தமிழ்நாடு
என்றால் கேட்கவா வேண்டும்?
மேற்படி
பணிக்காக தமிழ்நாடு அளவை மற்றும் நில ஆவணங்கள் துறையிலிருந்து நாகப்பட்டணம் மாவட்ட
வருவாய் ஊர்களுக்கான நில அளவை வரைபடங்களை வாங்கிச் சேர்த்தேன். 19ஆம் நூற்றாண்டு
இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் உருவாக்கப்பட்டிருந்த அப் படங்களில்
கடலோர வாய்க்காலின் பெயர் உப்பனாறு ஓடை என்று இருந்ததேயன்றி
பக்கிங்காம் வாய்க்கால் என்றோ வேதாரணியம் வாய்க்கால் என்றோ இல்லை. இவ் வாய்க்கால்
கடற்கரை நெடுகிலும் இருந்ததற்கான வலிமையான தடயங்கள் இருப்பதால் இது திட்டமிட்டுத்
தோண்டப்பட்ட ஒன்று என்பதில் ஐயமில்லை.
அது போலவே
கடலினுள் ஒரு கப்பல் பாதையும் இருந்ததற்கான சுவடும் உள்ளது. குமரி முனைக்குத்
தெற்கே ஏறக்குறைய10 அ.மா. தொலைவில் கப்பலோடை என்ற ஒன்று இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
முன் நாட்களில் அங்கு கப்பல்கள் நின்று நங்கூரம் பாய்ச்சி படகுகள் மூலம் பண்டங்களை
ஏற்றியும் இறக்கியும் சென்றதாகவும் கூறுகின்றனர். குமரிக் கடற்கரையில் பாறைகள்
செறிந்துள்ளதால் இந்த ஏற்பாடு என்று தோன்றுகிறது. தொல்பழங்கால்ந்தொட்டு பெரும்
கடலோடிகளாக இருந்த தமிழர்கள் தங்கள் புதிதாகக் குடியேறிய இன்றைய தமிழகத்தின்
கடற்கரை நெடுகிலும் கப்பல் ஓடுவதற்கான பாதை ஒன்றை வகுத்திருப்பார்கள் என்று
உறுதியாக நம்பலாம். இது பற்றிய ஒரு கண்ணோட்டம் இருந்திருந்தால் சேதுக் கால்வாய்த்
திட்டப் புலனாய்வுகளின் போது அதை ஆய்ந்திருக்க
முடியும்.[10]
வங்காள
விரிகுடாவில் பாக் நீரிணைக்கு வடக்கில் இருக்கும் கடல் பாதை பண்டைத் தமிழர்கள்
அகழ்ந்து உருவாக்கியது என்பதற்கு ஆணித்தரமான சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது.
தமிழகத்தின் எல்லைகளைக் குறிக்கும் போது கிழக்கில் தோண்டப்பட்ட கடல் என்று பொருள்படும்
தொடுகடல் என்று புறநானூறு 6ஆம் பாடல் குறிப்பிடுகிறது:
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்…..
சகரர் என்போர்
கடலைத் தோண்டியதாகக் கூறும் தொன்மக் கதையை வைத்து தொடுகடல் என்பதற்கு
உரையாசிரியர் பொருள் கூறியுள்ளார். இந்த நோக்கில் வங்காளக் கடல் முழுவதுமே
தோண்டப்பட்ட கடல் என்ற கருத்தையும் தமிழறிஞர்கள் கொண்டுள்ளனர். ஆனால் கப்பலோடை
என்ற கருத்துருவை மனங்கொண்டால் இதன் உண்மையான பொருள் புரியும்.
நிலவழி
நாவிக வாய்க்காலும் கப்பலோடையும் சிதைந்து போனதற்கு இன்றைய இலங்கையைத்
தமிழகத்திலிருந்து பிரித்த இரண்டாம் கடற்கோள் காரணமாக இருக்க வேண்டும். இன்றைய
இலங்கைத் தீவுக்குச் சற்று மேற்கே இருந்திருக்கத்தக்க கபாடபுரம் எனப்படும்
கதவபுரத்தைச் சுற்றி இவ் விரண்டும் சென்றிருக்க வேண்டும். அந்தக் கப்பலோடையில்தான்
இன்று கப்பல்கள் மேலைக் கடற்கரையிலிருந்து கொழும்புக்கு ஒய்யாரமாகச் சென்று
திரும்புகின்றன.
கடல் நீரால்
தமிழகத்திலிருந்து இலங்கை இடைமுறிந்து போன புவியியங்கியல் நிகழ்வால் தமிழக
முன்னோர்கள் உருவாக்கி வைத்திருந்த கப்பலோடை பற்றியோ அது இடைக் காலத்தில்
தொடர்ச்சியை இழந்தது பற்றியோ அறியாமலே ஆங்கிலேயர்கள் கடல் நீரால் பிரிக்கப்பட்ட
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் கடலிலிருக்கும் மேட்டுநிலத்தை ஆழப்படுத்தி
தமிழகக் கடற்கரை நெடுகிலும் கப்பல் போக்குவரத்துக்கு வழிவகுக்கவென்று வகுத்த இத் திட்டத்தை
நம்மூர் அரசியல் பரத்தையர் காசாக்கிவிட்டனர் என்பதே உண்மை.
குமரி மாவட்ட
குளச்சல் துறைமுகத்தை ஆழ்துறைமுகமாக விரிவுபடுத்துவதற்கு அனைத்து ஆயத்தங்களும்
முடிவுற்ற நிலையில் அத் திட்டம் கைவிடப்பட்டு கேரளத்தின் விழிஞம் துறைமுகத்துக்கு
அவ் விரிவாக்கம் திருப்பப்பபட்டது. சேது சமுத்திரத் திட்டம் எனப்படும் தமிழன்
கால்வாய்த் திட்டத்தை நட்ட நடுவில் கைவிட்டதும் இத்துடன் இணைந்த
நடவடிக்கையே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். திட்டங்களைத் தமிழக
மக்களுக்குக் காட்டி பின்னர் அதை விற்றுக் காசு பார்க்கும் திராவிடர், திராவிட
எனும் அடைமொழி கொண்ட கழகத்தினரும் கட்சியினரும் கடைவிரித்த காலம் தொட்டு தமிழக
மக்களுக்கு இதுவே தலைவிதியாகிப் போனது.
இந்த மூவரண் பாதுகாப்பை நாம் மீட்டாக வேண்டும். தினமலர்
கூட்டத்துக்கு வேண்டுமானால் நீர்வழிகள் தேவையில்லாமலிருக்கலாம். நம் மக்களுக்குக் கட்டாயம் வேண்டும். கடலில் செல்பவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று
ஒதுக்கிவைத்து நம் கடற்பரப்பை நிலையாக
அயலவர் ஆதிக்கத்தினுள் வைத்திருக்க மனுச்சட்டம் வகுத்தவர்களின் வழி வந்து
அது காலங்கடந்த ஒன்றாகிவிடாமல் காக்க வந்தவர்களல்லவா அவர்கள்?
அதை விட, காசும் அவர்களுக்குக் கசக்கவா செய்யும்?
2009 – 10 ஆண்டுகளில்
ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணி குமரி மாவட்டத்துக்கு வந்து குமரிக் கண்ட
ஆர்வலர்களைக் கண்டு பேசி வந்தார். அவரிடம் புவிக்கோளக் குழம்பில்
உருவாகியிருக்கத்தக்க அலைகளைப் பற்றியும் துறைமுகங்கள் கடற்கரையில் அன்றி
ஆற்றினுள் அல்லது காயல்கள் எனப்படும் கானல்களினுள்தான் இருந்திருக்க முடியும்
என்றும் கருத்துரைத்திருந்தேன். அந்த அடிப்படையில், குமரியை அடுத்த மணக்குடியில் கடலில் கலக்கும் பழையாறு
என்று இன்று அழைக்கப்படும் கோட்டாற்றின் கரையில் இன்று நாகர்கோயில்
– குமரிச் சாலையில் இருக்கும் குமரி மாவட்டத்தின் பெரிய கூலக்கடைத் தெரு
அமைந்திருக்கும் கோட்டாறு எனும் நகரில் இருந்த கோட்டையில்தான்
துறைமுகம் இருந்தது என்று தன் கள ஆய்வுகளில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
கோட்டாறு ஊரின் கிழக்கு எல்லையில் ஓடும் ஆழமான பறக்கைங்கால் ஓடையைத்
தொடர்ந்து அதன் பாய்ச்சலைப் பெறும் சிமிந்தக் குளமும்[11]
அதைத் தொட்டுத் தொடர்ந்து கிடக்கும் பறக்கைக் குளமும்தான்
கோட்டாறாகிய பழையாற்றின் பழைய தடம் என்றார். இன்றும் நாகர்கோயில் தொடர்வண்டி
நிலையத்தின் மேற்கில் அந்த ஒடையைப் பார்க்கலாம்.
ஓங்கலைப்
பணியின் போது நாகை மாவட்ட பழையாற்றிலுள்ள கொள்ளிடத்தின் கழிமுகத்தில் ஒரு மீன்பிடி
துறைமுகம் அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை வகுத்து பணியைத் தொடங்க ஆயத்தமானது
பற்றியும் தமிழகப் பொதுப்பணித் துறையினரின் எதிர்ப்பால் அது தடைபட்டதாகவும்
கூறினர். இதில் விந்தை என்னவென்றால் ஆற்றின் கயவாய் கடலினுள் கழிக்கும் இடத்தில்
வலது கரையில் துறைமுகத்தை அமைப்பதற்காக கயவாய் வழியாக அலைகள் நேரடியாகத் துறையைத்
தாக்குவதிலிருந்து காக்க கயவாயின் மருங்குகளில் பாறாங்கல்களைக் கொட்டி
உருவாக்கப்படும் தூண்டில் வளைவு எனும் தடைச் சுவர்களை உருவாக்குவது தேவையாகும்.
இந்த அமைப்பு வெள்ளக் காலங்களில் ஆற்றிலிருந்து கடலினுள் பாய்வதற்குப் பெரும்
தடங்கலை ஏற்படுத்தி ஆற்றின் மேல் எட்டங்கள் நெடுகிலும் உடைப்புகளை விளைவிப்பதுடன்
ஆற்றைத் திசைதிருப்பியும் விடும். ஏற்கெனவே இலவயம் என்றும் “விலையில்லா” எனும்
அடைமொழியுடனும் மக்கள் அப் போதைக்குத் திட்டமிடாத பண்டங்களை அவர்களின் வரிப் பணத்தில்
வாங்கி மக்களின் தலையில் கட்டித் தரகு பார்க்கும் ஆட்சியாளர்கள் ஆறுகள், குளங்கள்,
கால்வாய்களைப் பராமரிக்க பணமே ஒதுக்குவதில்லை. அத்துடன் வெள்ளக் காலங்களில்
கடலினுள் குத்திப் பாயும் நீரும் சீறிப்பாயும் கடலலைகளும் மோதுவதால் கரையிலிருந்து
ஏறக்குறைய 2 கல் தொலைவில் கடலில் ஆற்றுப் பாய்ச்சலுக்குக் குறுக்காக உருவாகும்
மண்குதிர்களின் தடையால் ஆற்றின் கரைகளில் உடைப்புகள் ஏற்படுவது பற்றி
பொதுப்பணித்துறையினர் எந்த ஓர்மையும் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஞாயமாக ஒவ்வொரு
வெள்ளத்துக்கும் பின்னர் கடலில் உருவாகும் இந்த மண்குதிர்களை அகற்றுவதற்கான
கருவிகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் பற்றி எவருக்கும் கவலை
இல்லை.
இதில்
ஒரு பெரும் வருத்தம் தரும் வியப்பு என்னவென்றால் அதே பழையாற்றில் மீன்பிடி படகுகளைப்
பராமரிக்கவும் பழுது நீக்கவும் படகுகள் கட்டவும் கூட கயவாய்க்கு ஏறக்குறைய ஒரு கல்
மேலே வலது பக்கம் ஆழமான நீர்வழி ஒன்றை அவ் வட்டார மீனவர்கள் உருவாக்கியுள்ளனர்
என்பதை எவரும் கணக்கிலெடுக்கவில்லை என்பதுதான்.
உலகை
முதன்முதலில் கடலில் சுற்றி வந்தவர்கள் என்று பல வரலாற்றாய்வாளர்கள் கருதும்
பண்டைத் தமிழர்களின் பெயரைக் கூறிக்கொள்ளும் நமக்கு ஒரு மீன்பிடி துறைமுகத்தை
அமைப்பதற்கான அடிப்படைகள் கூடத் தெரியவில்லை என்பதை விடப் பெரும் அவலம் ஏதுமில்லை.
மேலே நாம் குறிப்பிட்ட ஒரிசா பாலு ஐரோப்பாவில் கடலோரங்களில் கட்டலான்
(Catalan) என அழைக்கப்படும் மக்கள் வாழ்வதாகவும் அவர்களின் மொழி தமிழுக்கு ஒத்ததாக
இருப்பதாகவும் தன் தேடல்களில் அறிந்ததாகவும் கூறினார். கடல் என்ற சொல்லின்
அடியிலாகவே அவர்களின் பெயர் அமைந்திருக்கலாம்.
இந்திய தரகு முதலாளிகளான பனியாக்களின்
அரசைக் கெஞ்சாமல், தமிழகக் கடற்கரையை விற்றுக் காசு பார்க்கும் தமிழக அரசியல்
பரத்தைகளை நம்பாமல் எப்பாடு பட்டாகிலும் நம் முன்னோர் அரிதில் முயன்று நிறைவேற்றி
காலத்தாலும் வெள்ளத்தாலும் இடைமுறிந்து போன இந்த மூன்றடுக்கு கடற்கரைப் பாதுகாப்பை
மீட்பது வரலாறு ஒவ்வொரு தமிழகக் குடிமகன் மீதும் விதித்துள்ள கடமையாகும்.
நாம் மேலே அதிகாரம் 2இல் குறிப்பிட்ட கில்காமேசு
காப்பியத்தின் தலைவன் கில்காமேசு என்பவன் பாதி மனிதனும் பாதி தெய்வமுமானவன். ஊருக்
எனும் நகர நாட்டுக்கு அரசன். அவனது உயிர் நண்பனான எங்கிடு என்பவன் இறந்துபோக
கடற்கோளால் உலகு அழிய இருந்த நிலையில் உலகின் உயிர் வகைகளில் ஒன்றை ஏற்றிக்கொண்டு
கப்பலில் தப்பிய உட்நாப்பிற்றிம் என்பவன் இருக்கும் இடத்துக்குப் புறப்படுகிறான்.
தெற்கு நோக்கி ஒரு கிழமை கப்பலில் சென்றால் இரு மலலைகளால் காக்கப்படும் ஒரு பெரும்
வாயிலைக் கடந்து சென்றால் அவனைக் காணலாம் என்று அறிந்து அங்கு சென்று
அவனிடமிருந்து சாவாமருந்தை வாங்கி வரும் போதுதான் பாம்பு அதைக் கவர்ந்து சென்றது
என்று கூறினோம். இதிலும் கதவின் உட்புறம் அமைந்த நகரம் பற்றிய செய்தி
வருகிறதல்லவா?
மச்ச புராணத்தில் வைவசுவத மனு மேலே
குறிப்பிட்டது போலவே அனைத்துவகை உயிரினங்களோடும் கப்பலில் சென்று கரை ஏறினான் என்ற
செய்தி கூறப்பட்டுள்ளது.
[1].திருக்குறள் ஒருவரால் ஒரே காலத்தில் இயற்றியிருக்க
முடியாது என்றும் பலரது கருத்துகளைத் தொகுத்து ஒருவர் இயற்றியதாகக் கூட அது
இருக்கலாம் என்று பலவகைக் கருத்துகள் ஆய்வாளர்களிடையில் நிலவுகின்றன. அந்த
அடிப்படையில் இக்கருத்து முன்வைக்கப்படுகிறது.
[2]
தன் தேட்டு, பிறர் குழந்தைகளுக்குக் கிடைக்கக்கூடாது
என்பதுதான் ஆடவர்களின் நோக்கம் என்பதற்கு இசுலாமியரிடம் நிலவும் வழக்கம் ஓர்
உறுதியான சான்று. பெண்களுக்குச் சமவுரிமை கொடுப்பதாகப் பறைசாற்றும் இவர்களிடையில்
உள்ள மறுமணமுறை உண்மையில் பெண்ணடிமை முறையில் மிகக் கொடியதாகும்.
கணவன் இறந்துபோய் நாற்பது நாட்களுக்குக் கைக்குழந்தையானால் கூட ஆண்கள் கணவனை இழந்த
பெண் இருக்கின்ற அறைக்குள் நுழையக் கூடாது. கணவன் இறந்த நாற்பது
நாட்களுக்குப் பின்னர் அப்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம். இந்த நாற்பது நாள்
இடைவெளி அவள் பெறவிருக்கின்ற அடு்த்த குழந்தை யாருடையது என்பதைக்
கண்டுபிடிக்கத்தான். அத்தோடு இறந்த கணவனின் குழந்தைகளைப் புதுக் கணவன்
பொதுவாக ஏற்றுக்கொள்வதில்லை அக் குழந்தைகள் ஏதிலிகளாக (அனாதைகளாக) மாமன் வீட்டிலோ
தந்தையின் அண்ணன் தம்பிகளிடமோதான் வளர்கின்றன. இத்தகைய ஏதிலிக் குழந்தைகளை நாம்
அடிக்கடிக் காணலாம். இவை யெல்லாம் தம் தேட்டு,
பிறன் குழந்தைகளுக்குச் சென்றுவிடக்
கூடாது என்ற ′உயர்ந்த′
நோக்கத்தினால்தான்!
[3] பக்.12
[4]
கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டுக்கு இறுதி வடிவம்
கொடுத்த செருமானிய ஆய்வாளர் Wegener
[5]இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், குமரிமைந்தன், வேங்கை பதிப்பகம், மதுரை, 625001, 2004.
[6]
தேரி
எனப்படும் இந்தச் சொல் குமரி மாவட்டத்துக்கு வெளியே வழக்கிலில்லை. அங்கு கூட
இந்தத் தலைமுறையினருக்கு இச் சொல் தெரியவில்லை. முன் தலைமுறையினரில் பலரும் கூட
மறந்து விட்டது போல் தெரிகிறது. நெல்லை மாவட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில்
அகழ்ந்தெடுக்கப்பட்ட நாகரிகச் சுவடுகளைத் தேரி நாகரிகம் என்று
வரலாற்றாய்வாளர்கள் குறிப்பதைக் காண்க. சென்ற நூற்றாண்டில் வழக்கில் இருந்த இந்தச்
சொல் இன்று முற்றிலும் மறைந்துள்ளது.
[7] இன்று பழையாறு என்ற பெயரிலேயே இவ்வூர்
அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு பழைய நகரமோ ஊரோ இருந்ததற்கான தடயம் எதுவும் இல்லை.
இப்போது அங்கு குடியிருக்கும் மீனவர்கள் ஓர் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால்தான்
தாம் அங்கு குடியேறியதாகக் கூறுகிறார்கள். அங்கு பழங்காலக் குடியிருப்புகளின்
தடயம் எதுவும் இல்லை. ஆனால் தஞ்சைப் பெரியகோயிலில் காணப்படும் இராசராசனின்
கல்வெட்டில் பழையாற்றிலிருந்து வடதளி, தென்தளி, பழையாற்று முள்ளூர் நக்கன் தளி,
அரையெருமான் தளி ஆயிரத்தளி ஆகிய கோயில்களிலிருந்தும் அவனிநாராயணபுரம், சங்கீசுவரம்
ஆகிய பகுதிகளிலிருந்தும் பெரியகோயிலில் பணிசெய்வதற்காகக்
குடியேற்றிய தளிச்சேரிப் பெண்களுக்கு வழங்கப்படவேண்டிய நிவந்தங்கள் பற்றிய செய்தி
தரப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த இவ்வளவு
பெரிய ஓர் ஊர் அல்லது நகரம் கடலில் முழுகியே இருக்க வேண்டும். பார்க்க கருணாமிர்தசாகாம்,
முதற்பாகம், மு. ஆபிரகாம் பண்டிதர், தஞ்சாவூர், 1917, பக். 157 - 168. இவ்வூர்
முழுகியது பற்றிய செய்தி எங்கும் பதிவாகியிருக்கவில்லை. (இவ்வூர் பழையாறு
என்ற பெயரில் கடற்கரையிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவு உள்நாட்டிலிருக்கும் பழையாறை
என்ற ஊரே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இராசராசன் பிறந்து வளர்ந்த காலத்தில்
சோழர் தலைநகராயிருந்தது பழையாறை என்றே பொன்னியின் செல்வன் புதினத்தில்
ஆசிரியர் கல்கி குறிப்பிடுகிரார். ஆனால் ஆபிரகாம் பண்டிதர் தந்துள்ள பட்டியலில்
அனைத்து இடங்களிலும் பழையா(ற்)று என்றே வருகிறது.
[8] வாய்க்கால் மேட்டு நிலத்திலிருந்து
தாழ்நிலம் நோக்கிப் பாய்ந்தால்தான் அதாவது உள்நாட்டில் ஆறுகளிலிருந்து கடற்கரை
நோக்கி ஓடும் வாய்க்கால்களில்தான் இந்த அமைப்புகள் தேவைப்படும். உள்நாட்டுச்
சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக ஏற்கனவே கடற்கரையில் ஓடிய வாய்க்காலுடன்
ஆறுகளில் உள்நாட்டிலிருந்து வாய்க்கால் தோண்டியதுதான் ஆங்கிலர் செய்த பணியாக
இருக்கக்கூடும். 1890களில் தொடங்கிய பெரியாற்று
அணைக் களத்துக்குத் தேக்கடியிலிருந்துள்ள 12 அ.மா. தொலைவைக் கடக்க இது போன்ற
வீழ்ச்சிகளையும் பூட்டிகளையும் அமைத்திருந்தனர் பொ-ர்.பென்னிக்குயிக்கு
தலைமையில் இயங்கிய குழுவினர். இன்று கேரள சுற்றுலாத்துறையினரின் கெடுபிடிகளாலும்
தமிழகப் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான படகை இயக்கும் தேக்கடியிலுள்ள தமிழ்நாட்டுப்
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பாராமுகத்தாலும் அணையின் மேம்பாட்டுப் பணிகளுக்காக
அணைக்களத்திலிருந்த பணியாளர்கள் பெரும் இடர்படவேண்டியிருந்தது 1980 களின் நிலை.
[9] கடற்கரை நெடுகிலும் ஆற்றுக் கழிமுகங்களை அடுத்து
காணப்படும் சதுப்பு நிலங்களில் வாழும் மரை எனப்படும் சதுப்புநில மான் (marsh deer)
கள் நிறைந்த காடு எனப் பொருள்படும் திருமரைக்காட்டை, மரைக்கும் மறைக்கும்
வேறுபாடறியாத அரைகுறை அறிவுடையோரான சமற்கிருதவாணர்கள் அதனை வேதாரண்யம் என்று
சிங்காரமாக மொழிபெயர்த்தது மட்டுமன்றி வேதங்கள் மரங்களாக மாறி நின்றதால் அப்பெயர்
பெற்றதாக கதையும் கட்ட அதை அப்படியே தமிழ்ப்படுத்தியதால் அது இன்று
திருமறைக்காடாகி இரு தரப்பாரையும் பார்த்து அப்பெயர்கள் சிரிக்கின்றன.
[10] இந்தியா
போன்ற பரந்து விரிந்த, முப்புறம் கடலால் சூழப்பட்ட, நூறுகோடிக்கு மேல் மக்கள் தொகை
கொண்ட, வல்லரசாக வளரக் கனவு காணுமாறு ‘மிகப்பெரிய’ ‘அறிவியல் மேதை’யால்
ஏமாற்றுப் பரப்பல் செய்யப்படுகின்ற இந்தியாவின் கடற்கரை நெடுகிலும்
சுற்றிவருவதற்கு ஒரு கடற்பாதை இல்லை. ஒரு மாநிலத்தின்(தமிழகத்தின்) இரு கோடிகளையும் இணைக்கும் விளைவைக் கொண்ட சேதுக்
கால்வாய்த் திட்டத்தைக் கூட எதிர்க்கிறார்கள் தினமலர் வகையறாக்கள்.
அவர்களின் பின்னணியில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுநலன்கள் செயற்படுகின்றன. இதற்கான
மூலதனம் மலேசியாவிலிருந்து வருவதால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்த எதிர்ப்பில்
ஆர்வம் கொண்டுள்ளன. அமெரிக்க மூலதனமாயிருந்தால் நம் பொதுமைக் கட்சியினர்
கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்திருப்பர். உருசிய மூலதனத்தில் உருவாவதுடன்
அதன் படைத்துறை நலன்களுக்குப் பயன்படும் என்பதாலும் வாளாவிருப்பது போல் இங்கும்
வாளாவிருக்கின்றனர். கொழும்புத் துறைமுகத்தின் வருவாய் பாதிக்கும் என்பதால் இலங்கை
அரசுக்கும் இந்த எதிர்ப்பில் பங்குண்டு. இது கருணாநிதியின் குடும்ப நலன்களுக்கு
உகந்தது என்பதுடன் அவரது ஆட்சியின் அரும்பணிகளுள் ஒன்றாக மதிக்கப்பட்டுவிடும்
என்பதால் செயலலிதா இந்த எதிர்ப்பில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் சாதி – மத – வட்டார -
உணர்வுகளைத் தூண்டி வாக்குவங்கி உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட
பாராளுமன்ற “மக்கள் ஆட்சி”யில் “இந்து” வெறியைத் தூண்ட, இல்லாத இராமர் பாலத்தைக்
கையிலெடுத்துக்கொண்ட பா.ச.க.வை எதிர்கொள்ள அவர்களை விட தான் முனைப்பாக இருப்பதாகக்
காட்டிக்கொள்ள நயமன்றத்தையே அணுகியுள்ளார்
அவர் . இந்திய அரசை அமெரிக்காவோடு இணந்து வழிநடத்தும் பனியா – பார்சி
கும்பலுக்கு உள்நாட்டு நாவிக வளர்ச்சி இனிக்கவா செய்யும்?
இன்று தமிழ்நாட்டில் வளர்க்கப்படும்
கால்நடைகளும்
பழையாறு போன்று தொலைவிலுள்ள தமிழகக் கீழைக் கடற்கரையில்
பிடிக்கப்படும் மீனும் மற்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ
பொருட்களும் இங்கு உரிய கடல்வழி
இல்லாததால் கேரளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு பதப்படுத்தப்பட்டு
அங்குள்ள துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் அங்கு நேரடியாகவும்
மறைமுகமாகவும் மிகப் பெரும் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே கேரளத்திலுள்ள
பொருளியல் நலங்களின் பின்புலமும் தினமலருக்கு உண்டு.
அதனால் அது இங்கு சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரது போதும், புதிய கடல்வழியெல்லாம் தேவையில்லை என்று புதிய வேதம் படிக்கிறது.
கடற்கரையை ஒட்டிய மக்கள் வளம் பெற்றால் தங்கள் ஆதிக்கத்துக்கு அறைகூவல் என்ற
அச்சத்தால் கடற்கரை வாழ் மக்களை ஒடுக்கி கடற்கரையைப் புறக்கணித்ததால்தான் கடந்த
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம் மாபெரும் நாடு சின்னஞ்சிறு நாடுகளுக்கும் பாபர்
போன்று ஆயுதம் தாங்கிய ஒரு குண்டர் கூட்டத்தைத் திரட்ட முடிந்த தனியாட்களுக்கும்
கூட அடிமைப்பட நேர்ந்தது. அப்படி
அடிமைப்பட்டாலும் கேடில்லை உள்நாட்டு மக்கள் மீதுள்ள தங்கள் மேலாளுமை நிலைத்தால்
போதும் என்ற நம் நாட்டு ஆட்சியாளர்கள், அவர்களின்
கூட்டாளிகளான ஒட்டுண்ணிகளின் நாட்பட்ட சிந்தனையில் எந்த மாற்றமும் நிகழவில்லை
என்பதைத்தான் தினமலரின் பின்னணியிலுள்ள உள்நாட்டுக் கும்பல்களின் செயல்கள்
பறைசாற்றுகின்றன.
[11] சுசிந்திரம் குளம் என்பதன் மரூஉ
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக