19.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 19


16. வேழமே! ஐயனே! ஓடி வருவாய்!
(தோரா.தி.மு. 50,000 - 11,500)
            இப்போது நாம் ஒரு மலைமீது ஏறிக்கொண்டிருக்கிறோம். பார்ப்பதற்குத் தணிகைமலை போல் தோன்றுகிறதல்லவா? ஆம்! அங்குதான் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். இதோ இங்கு காட்டுப் பரப்பு முடிவடைந்து ஒரு சமநிலம் தென்படுகிறது. சுற்றிலும் காடுகள் நிறைந்திருக்க நடுவில் தோன்றும் இச் சமநிலத்தில் தினைகள் போன்ற பயிர்கள் வளர்ந்து கதிர்கள் காற்றிலாட எவ்வளவு அழகிய காட்சி! கிளிகள், பலவகைச் சிட்டுகள், இன்னும் என்னென்னவோ பறவைகளின் கூட்டம் இன்னொலி எழுப்பிக்கொண்டு புனத்தின் மேல் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ ஓர் இனிய பெண் குரல் கேட்கிறதே! அதோ! இனிமையாகப் பாடிக்கொண்டு கையில் கவணுடன் பரண் மேல் நின்று பறவைகளை விரட்டிக் கொண்டிருக்கும் அப் பெண்ணின் குரல்தான் அது. அவள் அருகில் செல்லலாமா?

            என்ன இது? நாம் அருகில் செல்கையில் பெண் பாடுவதை நிறுத்திவிட்டாள். கவணையும் வீசக் காணோம். கீழே நோக்கி யாருடனோ உரையாடுவது போலல்லவா தோன்றுகிறது. அருகில் சென்றால் தெரியும். இதோ அவள் பேசுவது கேட்கிறதல்லவா? உன் தொல்லை வரவரப் பெருகிவிட்டது. நாம் வெவ்வேறு கூட்டத்தார். அதிலும் பகைக் கூட்டத்தினர். நான் உன்னை ஏற்றுக் கொள்ள முடியாது. விரைவில் இங்கிருந்து போய்விடு. என் தோழிகள் வந்துவிடுவார்கள்.

            உன் தோழிகள் இப்போது வரமாட்டார்கள். அவர்கள் விரித்த வலைகளில் பறவைகள் எதுவும் விழவில்லை. எனவே அனைவரும் சுனையிலிறங்கி நீராடுகிறார்கள். அவர்கள் இப்போது வருவதாய்த் தோன்றவில்லை. அதைக் கண்டுதான் துணிந்து இங்கு வந்தேன்.

            அப்படியா சேதி? இருக்கட்டும். நான் உன்னை இறுதியாக எச்சரிக்கிறேன். நீ இப்போது செல்லவில்லையானால் நான் என் கூட்டத்தார்க்குக் கூறுவேன். என்ன நடக்குமென்றுதான் உனக்குத் தெரியுமே.

            அப்படியானால் நீ என்னை ஏற்க முடியாதென்று முடிவாகக் கூறுகிறாய் அல்லவா?

            ஆம்

            அப்படியா இதோ பார்! இளைஞன் முகத்தில் புன்னகையுடன் ஓங்கிக் கூக்குரலிடுகிறான். ஆனை அண்ணா! இங்கே வா!

            காட்டின் ஓர் ஓரத்திலிருந்து ஒரு யானையின் பிளிறல் கேட்கிறது. பெண் திகைப்புடன் ஒலி வந்த திசையைப் பார்க்கிறாள். ஒரு பெரும் யானை மெதுவே நடந்து வருகிறது. யானை அருகில் வரவரப் பெண்ணின் முகத்தில் அச்சக்குறி தோன்றுகிறது. யானை பாதி வழி வந்ததும் பெண் பரணிலிருந்து குதித்துத் தினைகளை மிதித்துக் கொண்டு ஓடுகிறாள். ஆனை, அவளை ஓடிப்பிடி! என்று இளைஞன் ஆணையிடுகிறான். தானும் பெண் சென்ற திசையில் ஓடுகிறான். யானை இப்போது ஓடித் துரத்துகிறது. பெண்ணை அணுகுகிறது. அவள் திரும்பி இளைஞனை நோக்கி ஓடிவந்து அவன் பின்னால் பதுங்கிக் கொண்டு முருகா, யானையைத் திருப்பியனுப்பு! என்று கெஞ்சுகிறாள். இளைஞன் யானையை நோக்கி ஆனை போ! என்கிறான். யானை திரும்பி அருகிலுள்ள காட்டோரத்திற்குள் சென்று மறைகிறது. அதுவரை அவன் பின்னால் நின்ற அப் பெண் நீயும் உன் யானையும்! நான் உன்னிடம் ஏமாற மாட்டேன் என்று கூறிவிட்டு ஓடத் தொடங்குகிறாள். இப்போது மீண்டும் யானையை அழைக்கிறான். அவன் அவளைத் தொடர்ந்து ஓடுகிறான். யானை பெண்ணைத் துரத்துகிறது. அவள் காட்டினுள் நுழைந்துவிட்டாள். யானையும் விடாது துரத்துகிறது. அவளை அது நெருங்க நெருங்க, ஐயோ, ஐயோ! என்று கூக்குரலிட்டுக் கொண்டு முருகனை நோக்கி ஓடி வருகிறாள். யானையும் விடாமல் அவளை மேலும் நெருங்குகிறது. அவள் முருகனின் கையெட்டும் தொலைவில் வரும்போது யானையின் தும்பிக்கை அவள் முதுகில் தொடும் உணர்வு ஏற்படுகிறது. என்று அலறிக்கொண்டே முருகன் மேல் பாய்ந்து அவன் கழுத்தை இறுகக் கட்டிக்கொள்கிறாள். அவனும் அவளை விடாமல் இறுக அணைத்துக் கொண்டு புன்னகையுடன், ஆனை அண்ணா! நீ சற்று அப்பால் செல்; எங்களுக்கு வேறு வேலையிருக்கிறது என்று கூறுகிறான். யானை அசைந்தபடி மறுபுறம் நகர்கிறது. இளைஞன் தன் அணைப்பிலிருந்த பெண்ணைப் பார்த்து, கண்ணே வள்ளி! உன் பெயர்ப் பொருத்தம்தான் என்னே! கொடிபோல் என்னைத் தழுவி நிற்கிறாயே என்று கூறிக்கொண்டே அவள் முகத்தில் முத்தங்களைப் பொழிகிறான். அவள் பிடி இன்னும் இறுகுவதுபோல் தோன்றுகிறதல்லவா? அவளை மெல்ல அழைத்தவாறே பருத்த ஓர் ஆல மரத்தின் மறுபுறம் செல்கிறான். என்ன? நீங்களும் செல்கிறீர்களா? வேண்டாம்! இங்கேயே இருங்கள்.

            என்ன இவ்வளவு நேரமாகியும் அவர்களைக் காணோமே! ஆ! இதோ வந்துவிட்டார்கள். இருவரும் சற்றுக் களைத்தவர்களாகக் காணப்பட்டாலும் இருவர் முகங்களிலும் மகிழ்ச்சியும் நிறைவும் தோன்றுகின்றன. ஆனே! முருகன் குரல் கொடுக்கிறான். யானை சிறிது நேரத்தில் வருகிறது. படு! எனப் படுக்கிறது. வள்ளியை அதன் முதுகில் தூக்கி விட்டு அவனும் ஏறியதும் வேழம் எழுந்து நடக்கிறது. வள்ளியின் குடியை நோக்கிச் செல்கிறது.

முருகா! இவ் வேழத்தை நீ எவ்வாறு வசக்கினாய்?
       
            அதுவா? சொல்கிறேன். ஒரு நாள் காட்டில் வேட்டையாடிவிட்டு வரும் வழியில் இந்த யானை சாய்ந்து படுத்துக் கொண்டு ஒரு காலை நீட்டியவாறு ஏதோ ஒரு வகையான குரல் எழுப்பிக் கொண்டு கிடந்தது. அதன் அவலக் குரலைக் கேட்க எனக்கு இரக்கமாக இருந்ததால் சற்று அச்சதுடனேயே அதன் அருகில் சென்று பார்த்தேன். நீண்டிருந்த காலின் அடியில் ஒரு மூங்கில் முள் குத்தியிருந்தது தெரிந்தது. முள் குத்திய இடம் பழுத்துச் சீழ் வடிந்துகொண்டிருந்தது. அச்சத்தாலும் இரக்கத்தாலும் தயங்கி நின்ற நான் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நெருங்கினேன். முள் இருந்த இடத்தில் கை வைத்தேன். வேழம் ஒரு வகையில் அசைந்து வேதனைக் குரல் எழுப்பியது. துணிவுடன் ஒரு முடிவு செய்தேன். முழு வலுவையும் பயன்படுத்தி முள்ளை இழுத்தேன். முள் வந்துவிட்டது. வேழம் பெருங்கூச்சலுடன் தும்பிக்கையால் தரையில் ஓங்கி அறைந்தது. எனக்கு உயிர் ஒடுங்கியது போன்றிருந்தது. ஆனால் பின்னர் வேழம் அமைதியாயிருந்தது. நான் சென்று கொஞ்சம் பச்சிலைகள் பறித்து வந்தேன். முடிந்த வரையில் சீழைப் பிதுக்கிவிட்டுப் பச்சிலையைப் புண்ணில் அப்பி வைத்தேன். பின்னர்ச் சென்று தழைகளும் புற்களும் கொண்டு வந்து கொடுத்தேன். இரண்டு மூன்று நாட்களிலேயே வேழம் எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டது. அதிலிருந்து நாங்கள் தோழர்களாகி விட்டோம். நான் அதன் முதுகின் மீதமர்ந்து பயணம் செய்வது அன்றாட நிகழ்ச்சி. இரண்டொரு நாட்களுக்கு முன் கீழேயுள்ளோர் வெட்டும்போது மழையினால் இடையில் நிறுத்திவிட்டுப் போன மரத்தை இவ் வேழத்தைக் கொண்டு தள்ளிப் பார்த்தேன். மரத்தை ஒரே தள்ளலில் சாய்த்துவிட்டது. இப்போது கீழேயுள்ளவர்களுக்குத் தேனும் பழங்களும் கோழிகளும் மயில்களும் கொடுத்து நமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். இனி யானைகளையும் பழக்கி மரம் வீழ்த்துவதிலும் கடத்துவதிலும் உதவி ஊதியம் பெறலாம். என்ன சொல்கிறாய்? என்கிறான்.

            இதோ எங்கள் குடி வந்துவிட்டது”. குடில்களின் நடுவில் தலைவன் போன்ற தோற்றத்துடன் அருகில் சில இளம் பெண்களுடன் முகத்தில் கவலை தோன்ற நின்றுகொண்டிருந்த ஒருவன் தன் அருகில் யானையொன்று வந்து நிற்பதைக் கண்டதும் அப் பெண்களைப் போன்றே திடுக்கிட்டுப் பின் வாங்குகிறான். யானை படுக்க அதன் முதுகிலிருந்து தன் மகள் ஒரு புது இளைஞனுடன் இறங்குவதைக் கண்டதும் திகைப்பும் வியப்புமடைகிறான். வள்ளி ஓடிப் போய்த் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொள்கிறாள். அப்பா! இந்த யானையிடமிருந்து இவன்தானப்பா என்னைக் காப்பாற்றினான். இவன் சொன்னபடியெல்லாம் இவ் வேழம் கேட்கிறதப்பா! என்று கூறுகிறாள்.

            தலைவன் கேட்கிறான்: இளைஞனே நீ எங்கிருந்து வருகிறாய்?

            நான் அடுத்த குன்றத்துக் குடியில் பிறந்தவன் ஐயா!

            பகைவர் குடியைக் சேர்ந்தவனா? உன்னால் நம் பகைமை மறையட்டும். குடிலினுள் வந்து பசியாறலாம். வள்ளி, உன்னைக் காணவில்லையென்று உன் தோழிகள் வருந்திக்கொண்டிருந்தார்கள். நானும் கவலையடைந்து விட்டேன் என்று கூறியவாறு அனைவரும் அவனது குடிலினுள் நுழைகின்றனர்.

மனிதன் பயன்படுத்தும் விலங்குகளில் யானையோடு கோழி போன்ற ஒன்றிரண்டைத் விர்த்து பிறவற்றுக்கெல்லாம் காட்டுவகை பெரும்பாலும் இல்லை எனலாம். அவை ஆணும் பெடையுமாக மனிதனுடனேயே பல்குகின்றன. யானை மட்டும் அவ்வப்போது பிடிக்கப்பட்டு வசக்கப்படுகிறது. இவ் விலங்கை எப்போதாவதொருவன் முதன்முதலாக வசக்கிக் காட்டியிருக்க வேண்டும். அந் நிகழ்ச்சியைக் குறிப்பதே முருகன் வள்ளி தொடர்பான கதையாயிருக்க வேண்டும். மற்றபடி யானைத் தலையுள்ள பிள்ளையார் யானையாக வந்ததாகக் கூறுவது தொன்மக் கற்பனையே. வாதாபியிலிருந்து பரஞ்சோதியால் மாமல்லன் காலத்தில் ஆனைமுகன் உருவம் பெயர்த்துத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்படும் வரை பிள்ளையார் என்றால் அது முருகனையே குறித்தது. பின்னர் ஆனைமுகனை மூத்த பிள்ளையார் என்று குறிப்பிடத் தொடங்கிப் பிள்ளையார் என்றே அழைத்தனர். முருகனைப் பிள்ளையார் என்று அழைக்கும் முறை மறைந்துவிட்டது இன்று.


            தமிழ்நாட்டில் முதன்முதலாக யானை வசக்கப்பட்டதால் அதைத் தொடக்கி வைத்தவனை அதனால் அதிகப் பயன் பெற்ற குறிஞ்சி நிலத்தார் தம் தெய்வமாக வழிபட்டனர். இவர்களிடமிருந்து யானையை வசக்குவதைக் கற்றுக்கொண்ட கன்னட நாட்டார் யானை பொருள் கடத்துவதற்கும் போருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியபோது அதற்கே நேரடியாகத் தெய்வ வடிவம் கொடுத்து வணங்கத்தலைப்பட்டனர். தமிழ்நாட்டுக் குறிஞ்சி நிலத்தார் தம் நிலத்தின் செல்வங்களாகிய கோழியையும் மயிலையும் தம் தெய்வத்துக்குக் கொடியாகவும் ஊர்தியாகவும் கொண்டனர். யானையும் அவனுக்கு ஊர்தியே. ஆயின் மயிலே முகாமையான ஊர்தியாக வழங்கிவந்தது. ஆனைமுகனை அவனுக்கு மூத்தோனாகத் தொன்மக் கதைகள் பரப்பிவிட்டன. எனவே யானைக்கும் முருகனுக்கும் உள்ள உறவு வெளிப்படையாகத் தோன்றவில்லை. பிணிமுகம் எனப்படும் முருகனின் ஊர்திக்குக் கழக நூற்களின் காலத்தால் முந்திய உரையாசிரியர்கள் யானை யென்றும் பிற்பட்டோர் மயிலென்னும் பொருள் கூறுகின்றனர். முருகனுக்குத் தமையன் உறவுடன் ஆனைமுகன் கதை தமிழர்களிடையில் பரவிய பின்னரே யானை மயிலாகியிருக்க வேண்டும். வள்ளி கதையே இப்போது உண்மையை அறியத் துணைபுரிகிறது. இதுவரை கூறியவாறுதான் தமிழ்நாட்டு ஐந்திணைத் தெய்வங்களுக்கும் கடவுளர் தோன்றியிருக்க வேண்டுமேயன்றி இயற்கைப் பொருட்கள், கடல், மழை, நெருப்பு போன்றவற்றைக் கொண்டு தம் கற்பனையில் மனிதனால் படைக்கப்பட்ட மனித உருக்களல்ல அவை. மாறாக, இவ் வியற்கை ஆற்றல்களை மனித இனத்தின் பயனுக்குக் கொண்டு வந்த அறிஞர் பெருமக்களின் வழிபாட்டுத் தொடர்ச்சியே இக் கடவுளரின் தோற்றம்.

பிற்சேர்க்கை: பகைவர் கோட்டைக் கதவை உடைக்கும் பணியில் கொம்பு உடைந்த யானையைப் போற்றி வணங்குவது பண்டைத் தமிழர்களிடம் இருந்தது கழக இலக்கியங்களிலிருந்து தெரிகிறது. அந்த வழிபாடுதான் ஆனைமுகன் வழிபாடாக வளர்ந்திருப்பதாகவும் கொள்ள இடமிருக்கிறது. தமிழகத்திலுள்ள பிள்ளையார்ப் பட்டி பிள்ளையார் கோயில் வாதாபியிலிருந்து நரசிம்ம பல்லவன் படைத்தலைவரான பரஞ்சோதியார் ஆனைமுகன் சிலையைப் பெயர்த்தெடுத்து வரும் முன்பே இருப்பதால் அவ்வழிபாடு தமிழர்க்குரியதே என்பது அண்மைக் கருத்தாகும். வழக்கம் போல் நம் தொன்மப் புலிகள் பார்வதி தன் உடலிலிருந்து தேய்த்தெடுத்த அழுக்குருண்டையிலிருந்து உருவாக்கிக் காவலுக்கு நிறுத்தியிருந்த பிள்ளை காம வெறியோடு இருந்த சிவனுக்கு இடையூறாக இருந்ததால் தலை கொய்யப்பட்டு பின்னர் யானைத் தலை ஒட்டி உருவானவனே ஆனைமுகன் என்றும் வியாசர் சொல்ல மேருவை ஏடாகக் கொண்டு எழுதத் தொடங்கிய போது எழுத்தாணி கிடைக்காததால்(!?) கொம்பை ஒடித்ததாகவும் வாந்தியெடுத்துள்ளனர்.

            குறிஞ்சி நிலமான மலைப் பகுதியிலிருந்து சமநிலம் நோக்கிப் படையெடுத்த கள்ளர் – பிறராகிய களப்பிரர்களோடு முருகனும் மருத நிலத்துக்கு, குறிப்பாக, சோழ நாட்டுக்குச் சென்றான். அங்கு வாழ்ந்த மருத நில மக்களோடு கள்ளர்களும் கலந்ததற்கு அறிகுறியாக உருவானதுதான் இந்திரன் மகளான தெய்வயானையை முருகன் மணந்த கதை. முதல் மனைவியான குறிஞ்சி நிலக் குறத்தியான வள்ளி இப்போது இரண்டாம் மனைவியாகத் தரம் தாழ்த்தப்பட்டாள். சிலப்பதிகாரத்தில் தெய்வயானை பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனின் முன்னாள் ஊர்தியான மேலே நாம் குறிப்பிட்ட பிணிமுகம் எனும் யானையைத்தான் தெய்வயானையைக் கொண்டு ஈடுசெய்துள்ளனரோ?


0 மறுமொழிகள்: