குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 7
4. தாயும் நீயே மனைவியும் நீயே!
(தோரா.
தி.மு. 20,00, 000)
காலை வேளை.
இதோ ஒரு பெருமரம். படர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கிறது அம் மரம். அதன் கீழே செடி
கொடிகளின்றித் துப்புரவாக இருக்கிறது. அடி மரத்தில் நாகப் பாம்புகளின் உருவங்கள்
கொத்தப்பட்டிருக்கின்றன. ஓர் ஓரத்தில் இரவில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு சிறிது
தணிந்து புகையை விட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பக்கத்தில் ஒரு முதியவள் ஒரு சிறு மரத்தினடியில் சாய்ந்தவாறு
அமர்ந்திருக்கிறாள். பல அகவைகளிலும் சிறார்கள் தவழ்ந்தும் ஓடியும் இரைச்சலிட்டும்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பல பருவங்களிலும் உள்ள பெண்கள் இருக்கிறார்கள்.
அனைவரும் சேர்ந்து ஓர் ஐம்பது பேர் இருப்பார்கள். பெண்களைவிட ஆடவர்கள், அதிலும்
இளைஞர் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
அதோ மரத்தினடியில் ஓர் இளம் பெண் அமர்ந்திருக்கிறாள்.
இங்குக் காணப்படும் பெண்கள் அனைவரிலும் கண்ணைக் கவரும் பருவமும் இளமையும்
உடற்கட்டும் கொண்டவளாக இருக்கிறாள். அவளை நோக்கி ஓர் இளைஞன் சென்று அவளருகே
அமருகிறான். அவளோடு ஏதோ ஒரு மொழியில் சாடைகளின் துணைகொண்டு உரையாடிக்
கொண்டிருக்கிறான். இருவர் முகங்களும் மலர்ந்திருக்கின்றன. வேறு
பக்கங்களிலிருந்தும் சில ஆடவர்கள் இடையிடையே அப் பெண்ணைப் பார்த்தவாறு கற்களின் மீது
ஆப்பு வடிவத்திலிருந்த கற்களைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது இன்னோர் இளைஞன் புதர்களிலிருந்து வெளிப்படுகிறான். அவன்
அங்குள்ளோர் அனைவரிலும் பருத்த உடற்கட்டுடன் பார்க்க முரட்டுத்தனமாகத்
தோற்றமளிக்கிறான். அவனைக் கண்டவுடன் அனைவரின் பார்வைகளும் மரத்தடியிலிருந்த இணையை
நோக்கித் திரும்புகின்றன. அவ் விருவர் முகங்களிலுமிருந்த மலர்ச்சி மறைந்து சிறிது
அச்சக்குறி தோன்றுகிறது. புதிதாக வந்தவன் தான் கொண்டுவந்த விறகுக் கட்டைகளைப்
புகைந்துகொண்டிருக்கும் நெருப்பினருகே போட்டு விட்டு மரத்தினடியிலிருந்த இணையை
நோக்கி வருகிறான். அவன் அருகே வந்ததும் அந்த இளைஞன் எழுந்து மெதுவே
பின்வாங்குகிறான். அவள் எழுந்து நிற்கிறாள். புதிதாக வந்தவன் ஒரு புறமாகக் கிடந்த
ஆப்பு வடிவத்திலிருந்த ஒரு கல்லை எடுத்துக் கொண்டு எழுந்து நிற்கும் அப் பெண்ணைப்
பார்க்கிறான். அவள் பேசாமல் அவனைப் பின் தொடர இருவரும் காட்டினுள் நுழைகிறார்கள்.
அங்கிருந்த அனைவரும் அவர்கள்
காட்டினுள் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.
நெருப்பினருகில் சாய்ந்தபடி இருந்த கிழவி இவையனைத்தையும் பார்த்தபடி அமைதியாக
இருக்கிறாள்.
நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அகவை முதிர்ந்த சில ஆண், பெண்களையும் சிறார்களையும் நிறைசூலி போல் தோற்றமளித்த ஒரு பெண்ணையும்
தவிர அனைவரையும் காணவில்லை. ஆப்புகளின் வடிவில் கிடந்த கற்களில் ஒன்றிரண்டு தவிர
மற்றவற்றைக் காணவில்லை.
திடீரென்று ஒரு மனிதனின் பெரும் அலறல் சற்றுத் தொலைவில் கேட்கிறது.
தொடர்ந்து ஒரு பெண்ணின் அச்சக் கூச்சலும் தொடர்ந்து பல குரல்களின் இரைச்சலும்
கேட்கின்றன. எதையோ அறிந்து கொண்டவள் போல் நெருப்பின் அருகில் அமர்ந்திருந்த கிழவி
விரைந்து எழுந்து ஓசை கேட்ட திசை நோக்கிச் செல்கிறாள். நாமும் அவள் பின்னே
செல்வோம், ஐயோ! இது என்ன கொடும் காட்சி! ஒரு புதர் அருகே நாம் காலையில் பார்த்த
அழகிய பெண் மிரட்சியுடன் வருந்தந் தோய்ந்த முகத்துடன் நிற்கிறாள். ஒரு பக்கத்தில்
காலையில் நாம் மரத்தடியில் பார்த்த ஆடவர்களில் நான்கைந்து பேர் எதையோ சூழ்ந்து
கொண்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வோர் ஆப்பு வடிவக் கல் இருக்கிறது. சற்றுத் தள்ளி ஒரு கடமான் காயம்பட்டு இறந்து கிடக்கிறது. கிழவி
நின்றவர்களை நெருங்குகிறாள். அங்கே கண்ட காட்சியை எதிர்பார்த்தது போன்ற ஒரு
தோற்றத்தை அவள் முகம் தருகிறது. அங்கே காலையில் அப் பெண்ணை அழைத்துச் சென்ற காளை
அலங்கோலமாக இறந்து கிடக்கிறான். அவன் மண்டை உடைந்திருக்கிறது. உடலின் எண்ணற்ற
வெட்டுக் காயங்கள்.
கிழவி யாரிடமும் பேசவில்லை. அப் பெண்ணிடம் வந்து கையைக்
காட்டி அழைத்து விட்டு மரத்தடியை நோக்கி நடக்கிறாள். அவளும் கிழவியின் அருகில்
நடக்கிறாள். சிறிது நேரத்தில் ஒருவன் கட மானைத் தூக்கிக் கொள்ள மற்றவர்களும்
மரத்தடிக்குத் திரும்புகிறார்கள்.
கிழவி தன்னுடன் வந்த அழகியைப் பார்த்து என்ன வென்பவள் போல
ஒலி எழுப்புகிறாள். அவள் நடந்தவற்றை விளக்குகிறாள். அவள் சாடைகளாலும்
ஒலியெழுப்பியும் கூறுவது உங்களுக்குப் புரியவில்லையா? நானே விளக்குகிறேன்.
“நானும்
அவனும் சென்றபோது ஒரு கடமானைக் கண்டோம். அவன் என்னை விட்டுவிட்டு மானைத் துரத்திச்
சென்றான். சிறிது நேரம் கழித்து அக் கடமையைக் கொன்று தோள் மீது தூக்கி வந்தான்.
இருவரும் திரும்பி வரும் வழியில் அந்தப் புதர் பக்கத்தில் வந்ததும் அவன் கடமையைக்
கீழே போட்டுவிட்டு என்னைப் புதர் மறைவுக்குக் கூப்பிட்டான். நாங்கள் எங்களை மறந்த
நிலையிலிருந்த வேளையில் எனக்கு நேர் மேலே திடீரென ஒரு நிழலாடியது. நான் என்ன
வென்று உணர்வதற்குள்ளேயே என் மேலே படுத்திருந்தவன் அலறினான். ஆனால் விரைந்தெழுந்து
எதிரே நின்றவனைத் தாக்க முனைந்தான். ஆனால் அதற்குள் மற்றையோரும் சூழ்ந்து கொண்டு
அவனை ஆப்புக் கற்களால் தாக்கினர். அவன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு
மண்டையும் உடைந்து இறந்து வீழ்ந்தான்” என்று அப் பெண் கூறி
முடிக்கவும் இருவரும் மரத்தடியை வந்தடைந்தனர். பெண் ஒரு புறம் செல்ல, கிழவி
நெருப்பினருகில் மீண்டும் அமர்கிறாள். அவள் கண்களில் கொலை செய்தவர்கள் கடமையைக்
கொண்டுவந்து போட்டதோ அவர்களில் ஒருவன் அப் பெண்ணைப் பாதி வல்லந்தமாக
அழைத்துக்கொண்டு சென்றதோ படவில்லை. அவள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.
எண்ணங்களில் ஆழ்ந்திருந்தவளின் பக்கத்தில் முத்தமிடுவது போன்ற ஒலி கேட்கவே
தன்னிலையடைந்து ஒலிவந்த திசையில் பார்க்கிறாள்.
ஓர் இளம்பெண் தன் ஆண்மகவுக்குப் பால் கொடுத்துக்
கொண்டிருக்கிறாள். குழந்தை அவளின் ஒரு மார்பில் பால் குடித்துக் கொண்டு மறு
மார்பில் கையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. தாய் குழந்தையை ஒரு கையால் இறுக
அணைத்துக் கொண்டு மறு கையால் குழந்தையைத் தடவிக்கொடுத்துக் கொண்டு அதன் கன்னக்
கதுப்பில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். இருவரும் தம்மை மறந்து
ஒன்றிப்போயிருக்கிறார்கள். கிழவி இக் காட்சியை வைத்த விழி வாங்காமல் பார்க்கிறாள்.
பக்கத்தில் ஒரு சிறுமியின் கூச்சல் கேட்கிறது. கிழவியின்
கவனம் திரும்புகிறது. ஒரு சிறுவன் ஒரு சிறுமியின் தலைமயிரைப் பிடித்து இழுத்துக்
கீழே தள்ளிவிட்டான். இதைப் பார்த்ததும் சிறுமியின் அண்ணன் போல் தோற்றமளிக்கும் ஒரு
சிறுவன் ஓடிவந்து சிறுமியைத் துன்புறுத்திய சிறுவனை அடித்துத் துரத்திவிட்டுச்
சிறுமியைத் தூக்கி நிறுத்தி அணைத்துத் தடவிவிடுகிறான். இக் காட்சியையும் கிழவி
கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறக்கிறது.
தன்னைச் சுற்றி நோட்டம் விடுகிறாள். காலையில் நாம்
பார்த்தவர்களில் அந்தப் பெண்ணையும் அந்த ஆடவனைக் கொலை செய்தவர்களையும் தவிர
ஏனையோரெல்லாம் வந்துவிட்டார்கள். சிலர் கடமையை அறுத்துத் துண்டு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
சிலர் அவ் விறைச்சியைத் தின்றுகொண்டிருந்தார்கள். வேறு சில சிறு உயிரிகளையும்
சிலர் கொண்டுவந்திருக்கிறார்கள். சில பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டிக்
கொண்டிருக்கிறார்கள். அதோ அந்தக் கொலைகாரர்கள் ஒருவர் பின்னொருவராக வருகிறார்கள்.
இறுதியாக அந்தப் பெண் தள்ளாடியபடி வருகிறாள். அவள் நோய்வாய்ப்பட்டவள் போல்
தோற்றமளிக்கிறாள். உடலில் ஆங்காங்கே பலவிடங்களில் சிறு காயங்களும் சிராய்ப்புகளும்
காணப்படுகின்றன. வந்தவள் ஒரு பக்கமாக மரத்தடியில் சாய்ந்தவாறு கண்மூடிக்
கிடக்கிறாள். பிற பெண்கள் அவளை ஓரளவு அழுக்காறுடன பார்க்கிறார்கள். கிழவி
இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது வந்தவர்களும் தங்கள் பங்குக்கு உணவு
கொள்கிறார்கள். அன்று தேடிய இரை அவ்வளவும் தீர்ந்து போயிற்று. கிழவிக்கும் அவள் பங்கு
கிடைத்துவிட்டது. பகலவன் வான விளிம்பை நோக்கி விரைந்து இறங்கிக் கொண்டிருக்கிறான்.
கூட்டத்தார் அனைவரின் முகங்களிலும் ஓர் இருண்ட தோற்றம் தென்படுகிறது. இன்றைய கொலை
நிகழ்ச்சிதான் காரணமாயிருக்க வேண்டும். காலையில் காணப்பட்ட கலகலப்பும் ஆரவாரமும்
இல்லை.
திடீரெனக் கிழவி ஒரு குரல் எழுப்புகிறாள். அனைவரும் அவளை
நோக்கித் திரும்புகின்றனர். அவள் எழுந்து பெரும் மரத்தினடியில் சற்று உயரமாக மேடைபோல்
இருந்த ஒரு வேரின் மேல் அமர்ந்துகொள்கிறாள். ஒவ்வொருவராக அவரவர் இடத்திலிருந்து
எழுந்து அவளுக்கு முன் வந்து அமர்கிறார்கள். ஒன்றிரண்டு முதியவர்களும் அந்த இளம்
பெண்ணும் மட்டும் தாமிருந்த இடங்களிலிருந்தே கிழவியைப் பார்க்கிறார்கள். அனைவரும்
அமர்ந்ததும் கிழவி சாடைகளாலும் வாயாலும் அவர்கள் முன் பேசுகிறாள். அவள் பேசுவது
இதுதான்:
“எல்லோரும்
நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள்! முன்பு பலர் கொடும் விலங்குகளால்
கொல்லப்பட்டு வந்தோம். ஆனால் இந்த வல்லமை பொருந்திய நெருப்பின் துணையால் நம்மை
விலங்குகளிடமிருந்து பெருமளவு காத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அன்று நம்மிடையே
ஒருவரை ஒருவர் கொன்று கொள்வது மிக அரிதாகவே இருந்தது. ஆனால் இன்று? ... நான்
சிறுமியாயிருந்த நாளிலிருந்து வலிமைபெற்றவர்களையெல்லாம் பெண்களுக்கான போட்டியில்
பறிகொடுத்து வருகிறோம். வலிமையுள்ள ஆண்கள் அற்றுப் போய் நம் கூட்டமே நம்மோடு அழிய
வேண்டியதுதானா என்று நான் கலங்குகிறேன்.
“இன்று
பாருங்கள், இந்த ஐந்து கொலையாளிகளும் நம் கும்மனை, அதோ
அந்தப் பெண் தும்பைக்காகக் கொன்றுவிட்டனர். அன்று காட்டெருமை வந்தபோது கும்மன்
மட்டும் இல்லையென்றால் நம்மில் எத்தனைபேர் உயிரை வாங்கியிருக்குமோ? அன்று அஞ்சி
ஓடிய நீங்கள் இன்னும் அது போன்ற ஒரு விலங்கு வரும் போது நம்மைக் காக்க என்ன
செய்வீர்கள்?
“அது
மட்டுமா? இன்று கும்மனைக் கொல்ல ஒன்றுசேர்ந்த ஐவருள் ஒருவன் மற்றவரை வென்று
தும்பையைத் தான் மட்டும் வைத்திருக்கப் போகிறான். பின் அவனை மற்றவர்கள் எத்தனை
நாள் விட்டு வைத்திருப்பீர்கள். நம் கூட்டம் எத்தகைய பேரழிவை எதிர்
நோக்கியிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். இதற்கு என்ன மாற்று
வைத்திருக்கிறீர்கள்? ... உம் .. கூறுங்கள்.”
கிழவி
முடித்து விட்டு ஒவ்வொருவரையும் பார்க்கிறாள். அனைவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்கிறார்கள். கொலை செய்த ஐவரும் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எவரும் கிழவிக்கு மறுமொழி கூறவில்லை.
இவ்வாறு அமைதியாகச் சற்று நேரம் கழிகிறது. யாரிடமிருந்தும்
மறுமொழி வராமற் போகவே கிழவி தொண்டையைக் கனைக்கிறாள். அனைவரும் தலை நிமிர்ந்து அவளை
நோக்குகின்றனர்.
மீண்டும் கிழவி பேசத் தொடங்குகிறாள். இப்பொழுது அவள் குரல்
முன்னைவிட அதிகாரத்துடனும் கடுமையாகவும் ஒலிக்கிறது.
“இப்பொழுது
நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை விதிக்கிறேன். அதனை எல்லோரும்
மதித்து நடக்க வேண்டும். நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இன்று முதல் எந்தப்
பெண்ணும் தன் தாயுடன் பிறந்தவன், தன்னுடன் பிறந்தவன், தனக்குப் பிறந்தவன் தவிர
வேறெந்த ஆடவனுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. அதே போன்று எந்த ஆடவனும் தன் தாய்,
உடன்பிறந்தவள், உடன்பிறந்தவளுக்குப் பிறந்தவள் தவிர வேறெந்தப் பெண்ணையும் நாடக்
கூடாது. என்ன சொல்கிறீர்கள்?”
கிழவி நிறுத்துகிறாள். சிறிது நேரம் யாரும் பேசவில்லை.
பின்னர் ஓர் இளம் பெண் குரல் ஒலிக்கிறது. “இது நல்ல ஏற்பாடு”. தொடர்ந்து பல குரல்கள் அவள்
சொன்னதை வரவேற்கின்றன. கிழவி மீண்டும் அதே கடுமையான குரலில் கேட்கிறாள். “இதை மீறுவோரை என்ன செய்யலாம்?” மீண்டும் அமைதி.
திடீரென்று கிழவியது போன்று கடுமையான ஓர் ஆண்குரல் மரத்தின் மற்றொரு
புறத்திலிருந்து ஒலிக்கிறது. “கொலை செய்ய வேண்டும்”.
அனைவர் பார்வையும் குரல் வந்த திசையை நோக்கித்
திரும்புகின்றன. “கொலை செய்ய
வேண்டும்”. இதைச் சொன்னவன் ஒரு முதியவன். முகச் சாயலிலிருந்து
அவன் கும்மனின் மூத்தோன் போலத் தோன்றுகிறான். தன் உடன் பிறந்தான் கொலையுண்டதனால்
மனக் கொதிப்படைந்ததுடன் அவன் இப்பொழுது தலைமைப் பீடத்திலிருக்கும் கிழவியைப் போலவே
தம் கூட்டத்திலிருந்த ஆடவரனைவரும் ஒருவர் பின்னொருவராக வன்கொலையால் சாவதைக் கண்டு
வெதும்பிக் கொண்டிருப்பது அவன் குரலிலிருந்து தோன்றுகிறது. மீண்டும் கொஞ்ச நேரம்
அமைதி நிலவுகிறது. கிழவி “ஆம்.. கொலை செய்ய வேண்டும்!” என்று எதிரொலிக்கிறாள்.
கூட்டத்திலிருந்தவர்கள் மீண்டும் ஒருமுறை ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்கிறார்கள். கும்மனைக் கொலை செய்த ஐவரும் இன்னும் அதிகமாகக்
குன்றிப் போயிருக்கின்றனர். கூட்டத்திலிருந்த இன்னொரு முதியவன், “ஆம்! அப்படித் தான் செய்ய வேண்டும்” என்கிறான். மற்றையோரும் அதை ஒப்புக் கொள்பவர் போல் தலை அசைக்கிறார்கள்.
கிழவி வேரிலிருந்து கீழே இறங்குகிறாள். மற்றையோரும் எழுந்து கொள்கிறார்கள்.
அவர்கள் நான்கைந்து கும்பல்களாகத் தயங்கித் தயங்கி ஒன்றுகூடுகிறார்கள். இதோ
கதிரவன் சாய்ந்துவிட்டான். இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. நாமும் திரும்புவோம்.
அவர்கள் கிழவி விதித்தது போன்று தாயின் தலைமையில் குழுக்களாகப் பிரிகிறார்கள்
போலும். நெருப்பைக் காவல் புரிய இரவுக்கு முறையாட்கள் வருவார்கள். நாம்
போவோம்.
மாந்த நாகரிக வளர்ச்சியில் இக் கட்டம் மீமுகாமையானது. தனி மாந்தனின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் குமுக நெறியில் முதல் அடி. நெருப்பைக் கண்டுபிடித்து விலங்குகளின் அச்சத்திலிருந்து பெருமளவு விடுபட்டு ஓரிடத்தில் ஓரளவு நிலையாக உறைய முனைந்த மாந்தனுக்கு அச்சமின்றி ஓரளவு ஓய்வுடன் இருக்கமுடிந்தது. இவ் வோய்வு வேளை அவன் மிகை இன்பந் துய்க்கும் போக்கை ஏற்படுத்தியது. இதன் விளைவாக மனித இனத்தின் நிலைப்பே கேள்விக்குறியாகும் நிலை உருவானது. இச் சிக்கல் எப்படித் தீர்க்கப்பட்டது என்பதைத்தான் நாம் கண்ட காட்சி விளக்குகிறது.
மாந்த நாகரிக வளர்ச்சியில் இக் கட்டம் மீமுகாமையானது. தனி மாந்தனின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் குமுக நெறியில் முதல் அடி. நெருப்பைக் கண்டுபிடித்து விலங்குகளின் அச்சத்திலிருந்து பெருமளவு விடுபட்டு ஓரிடத்தில் ஓரளவு நிலையாக உறைய முனைந்த மாந்தனுக்கு அச்சமின்றி ஓரளவு ஓய்வுடன் இருக்கமுடிந்தது. இவ் வோய்வு வேளை அவன் மிகை இன்பந் துய்க்கும் போக்கை ஏற்படுத்தியது. இதன் விளைவாக மனித இனத்தின் நிலைப்பே கேள்விக்குறியாகும் நிலை உருவானது. இச் சிக்கல் எப்படித் தீர்க்கப்பட்டது என்பதைத்தான் நாம் கண்ட காட்சி விளக்குகிறது.
இவ்வாறுதான் மனித குலத்தில் முதன்முதல் சட்டம்
நிறைவேறியிருக்கும். இதுவரை
தனி மாந்தனின் நடத்தைக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. இன்று
முதன்முதலாகத் தாய் தலைமையிலான ‘குடும்பம்’ என்ற ஒரு மீச் சிறிய ஒன்றி(unit)யுடையதாக
ஒரு குமுகம் உருவாக்கப்பட்டுவிட்டது. அன்றே தனிமாந்தனின் நடத்தைக்கு ஒரு
கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு ஒரு சட்டமும் இயற்றப் பட்டு ஒரு தண்டனையும்
விதிக்கப்பட்டுவிட்டது.
குமுகத்தின் மீச் சிறிய ஒன்றியாகிய குடும்பம் ஆண் - பெண் உறவின் அடிப்படையாக உருவானதைக்
குறிக்கும் அடையாளம்தான் இன்றும் நம் நாட்டில் நடைபெற்று வரும் குறி(இலிங்கம்)
வணக்கம். சிலர் கூறுவது போல் இது கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் அதன்
குண்டத்தையும் குறிப்பதல்ல. இதை நாம் எளிதில் காணலாம். ‘ஆவுடையார்’ என்னும் நடுத் தண்டும் கீழேயுள்ள வட்டவடிவிலுள்ள ‘ஆவுடையாளும்’ தனித்தனியாகச் செய்யப்பட்டு மேலிருந்து ஆவுடையாளில்
இறக்கிக் குறி நிறுவப்படுகிறது. கோவில்களிலுள்ள குறிகளை உற்று நோக்கினால் இவை தனித்தனியானவை
என்பது விளங்கும். இன்னும் சில குறிகளில் ஆண்குறியிலுள்ள மொட்டின் அடியைக்
குறிப்பது போன்ற ஒரு சிறு கோடு செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதை மாந்த
வடிவிலும் நிகரளிப்பதற்காகச் சிவனையும் ஆண் - பெண் கலந்த
வடிவில் தீட்டியுள்ளனர்.
இருந்தாலும் இலிங்கக் குறி குறிவணக்கத்தின் திருந்திய
வடிவமே. முதல் வடிவம் வெறும் ஆண்குறி மட்டுமே. ஆண்குறி வணக்கம் பற்றிய விளக்கங்கள்
வேண்டுவோர் ‘பாலியல்
வாழ்க்கை’ (Sex life) அல்லது அதிலிருந்து
பெயர்த்து வெளியிட்ட ‘உண்மை’ இதழ்களின்
பழைய படிகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அமைந்த குடும்பம் இன்றைய
வடிவுக்கு எவ்வாறு வந்தது என்பதைச் சற்றுப் பின்னால் விளக்குவோம். அதற்குமுன் நாம்
காண வேண்டிய காட்சிகள் சில உள்ளன.
பின்குறிப்பு: மனித வரலாற்றில் ஆண் – பெண் உறவு என்பது இன்றைய பொதுவான
வடிவத்தை எய்தும் முன் எத்தனையோ நெருக்கடிகளைத் தாண்டியுள்ளது. தொடக்கத்தில்
குழந்தை பெறுவதற்கு பெண் ஆணுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென்பதை அறியாமலே மனிதர்கள்
இருந்தனர் என்று மாந்தநூலார் கருதுகின்றனர். எனவே மனிதர்களுக்கு தாய் என்ற ஒரே
பெற்றோர்தான் இனங்காணப்பட்டாள் என்கின்றனர். எனவே இயல்பாகவே தாயின் பின்னாலேயே
மனித இனம் நடை போட்டது.
ஓர் ஆடவன் பல
பெண்களுக்குக் கருவூட்ட முடியும். அத்துடன் கருத்தரித்தல், குழந்தைப் பராமரிப்பு
போன்ற பணிகளால் வேட்டை, கொல்விலங்குகளிடமிருந்தும் அயல் மக்கள் குழுவினரிடமிருந்து
பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவதில் பெண்களுக்கு உள்ள இயலாமைகளால் அப் பணிகளில்
ஈடுபடும் ஆண்களுக்கு ஏற்படும் உயிர் இழப்புகளால் ஆடவர்களின் எண்ணிக்கை குறைவாக
இருந்தாலும் இனப்பெருக்கம் என்ற திசையில் எந்தச் சிக்கலும் இல்லாததால் ஆணின் பங்கு
வெளிப்படாமலே இருந்தது. காட்டு விலங்குகள் வீட்டு விலங்குகளாக வசக்கப்பட்ட பின்னர்
வேட்டையின் தேவையும் வேட்டைக்காக அயலவர்களோடு போராடுவதும் குறைந்தது. அதனால்
ஆடவரின் இழப்பு குறைந்து அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் குமுகப் பொறுப்பு
எதுவும் இன்றி இருந்த ஆடவர்கள் பெண்ணின் தலைமைக்கு எதிராகச் செயற்பட முற்பட்டனர்.
தாங்கள் வாழும் இடத்திலிருந்து வெளியேறி காடுகளுக்குள் குழுக்களாக வாழ்ந்தனர்.
இத்தகைய குழுக்களை மந்தணக் குழுக்கள்(Secret Societies) என்று மாந்தநூலார்
குறிப்பிடுகின்றனர். தங்கள் தாய்க் குழுக்களில் உள்ள சிறுவர்கள் பருவமடைந்ததும்
அவர்களைக் கடத்தித் தம்மோடு வைத்துக்கொண்டனர். நாளடைவில் தங்கள் பாலியல் தேவைகளை
நிறைவேற்றுவது அவர்களுக்குப் பெரும் சிக்கலாக உருவெடுத்தது. அதற்காக தன்னினப்
புணர்ச்சி, தன்னின்பம் போன்ற உத்திகள் உருவாயின. ஆண்கள் அகன்ற தாய்க் குழுவின்
பெண்களுக்கும் இத்தகைய சிக்கல்களும் தீர்வுகளும் உருவாயின. இப்போதுதான் குழந்தை பெறுவதற்கு
ஆண் தேவை என்ற உண்மையும் இரு பாலருக்கும் புலனாயிற்று. இறுதியில் மந்தணக்
குழுவினர் தங்கள் தாய்க் குழுக்கள் அல்லாத அயல் குழுப் பெண்களைத் தூக்கி வந்து
தங்களோடு வைத்துக்கொண்டனர். இதிலிருந்துதான் புறமணப் பிரிவுகள் உருவாயின. இரு
புறமணப் பிரிவுகளில் ஒன்றிலுள்ள ஆடவர் ஒவ்வொருவரும் அதன் மணமுறை புறமணப் பிரிவின்
ஒவ்வொரு பெண்ணுடனும் உடலுறவு கொள்ளும் உரிமையுடையவர் ஆவார். அவ்வாறே ஒவ்வொரு
பெண்ணும்.
தமிழர்களிடையில்
ஏழு கன்னியர் அல்லது தாயர்களைத் தலைமையாகக் கொண்ட ஏழு குக்குலங்கள் இருந்தன என்பது
பல்வேறு சாதி வரலாறுகளிலிருந்து தெளிவாகிறது. இந்த ஏழு பெண்களின் பெயர்களாக
இப்போது கிடைப்பவை சரியானவை என்று தோன்றவில்லை. இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு
பட்டியலை நான் பார்த்துள்ளேன். அவற்றின் பெயர்கள் இப்போது நினைவில்லை. சிலப்பதிகாரம்
வழக்குரை காதையில் வாயிலோன் கண்ணகியைப் பற்றிக் கூறும் போது அறுவர்க்
கிளைய நங்கை என்பதற்கு ‘கன்னியர் எழுவருள் இளையவளாகிய பிடாரி’ என்று
ந.மு.வேங்கடசாமியார் அவர்கள் பொருள் கூறியுள்ளார்கள். அந்தப் பிடாரியின் பெயர்
இப்போதைய பட்டியலில் இல்லை. பிடாரன் → பிடாரி என்று இது நாகர்களைக் குறிப்பதாகும். இவர்கள்தாம் இறுதியில்
மேலாளுமை செய்தவர்கள் என்று கூறலாம். மேலே அதிகாரம் 2இல் கலுழனைப் பற்றிய கதையில்
அவன் தாய் அடிமையான செய்தி கூறப்படுவதை வைத்துப் பார்த்தால் நாகர்களுக்கு முன்
பருந்தைத் தோற்றக் குறியாகக் கொண்டவர்களின் மேலாளுமை இருந்தது என்று கொள்ளலாம்.
தொடக்கத்தில்
இந்த ஏழு குக்குல மக்களும் மலை முகட்டிலிருந்து கடற்கரை வரை பரந்து வாழ்ந்தனர்
என்று கொள்ள வேண்டும். அப்போது ஒவ்வொருவரும் தத்தம் குக்குலத்தின் பெயரிலேயே
அறியப்பட்டிருந்தார். நாளடைவில் கடற்கரையிலிருந்து மலை நோக்கி நாகரிக வளர்ச்சி
இறங்குவரிசையில் இருந்ததால் ஏற்பட்ட முரண்பாடுகளால் குக்குல அடையாளங்களை விட நில
அடிப்படையிலான அடையாளம் நிலைத்தது. அதுதான் ஐந்நிலப் பண்பாட்டு அடிப்படையிலான
மண்ணின் மைந்தர் கோட்பாடு. இவ்வாறு ஏழு குக்குலங்களும் ஒன்றுகலந்ததாலேயே சாதி
வரலாறுகள் தத்தம் சாதிகள் ஏழு தாயர்களின் வழி வந்ததாகக் கூறுகின்றன.
தனித்தனிக்
குக்குலங்களாக மக்கள் வாழ்ந்த காலத்தில்தான் ஒருவன் அல்லது ஒருத்தி தன்
இருப்பிடத்திலிருந்து எங்கு சென்றாலும் தான் செல்லுமிடத்திலுள்ள தன் குக்குலத்தார்
வீட்டில் தங்குவதுடன் அங்குள்ள எதிர்ப்பாலர் எவருடனும் உடலுறவு கொள்ளலாம் என்று
மாந்தநூலார் கூறுகின்றனர்.
குக்குலங்கள்
மண்ணின் மைந்தர் கோட்பாட்டில் புதைந்து போய்விட்டாலும் தாய்வழிக் குமுகம் அத்துடன்
முடிவுக்கு வந்துவிடவில்லை. இன்றும் முகாமையான பல சாதிகளில் தாய்வழிப் பிரிவுகள்
உள்ளன. தந்தைவழிக் குடும்பங்களில் ஆண் சித்தி உறவுடைய பெண்ணையும் பெண் தாய்மாமன்
உறவுடைய ஆணையும் மணம் புரியலாம் என்றால் தாய்வழிக் குடும்பங்களில் ஆண் அத்தை
உறவுடைய பெண்ணையும் பெண் சித்தப்பன் உறவுடைய ஆணையும் மணம் புரியலாம். அதாவது
தொடக்கநிலை தாய்வழிக் குக்குலங்கள் ஒன்றுகலந்துவிட்டாலும் புதிய சூழல்களால் அதன்
வடிவம் மீண்டிருக்கிறது அல்லது மங்கியிருந்து மீண்டிருக்கிறது என்பது புலனாகிறது.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக