குரங்கிலிருந்து பிறந்தவதன் தமிழன் - 32
29. குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 1
(தி.பி.2045)
இப்போது
நாம் மதுரை தொடர்வண்டி நிலையத்தின் வெளியே நின்றுகொண்டிருக்கிறோம். அங்கே
நுழைவாயில் அருகில் நிற்கும் ஒரு மரத்தடியில் மூவர் வந்து அமர்கின்றனர். ஏதோ
உரையாடலுக்கு ஆயத்தமாகிறார்கள் போல் தோன்றுகிறது. என்னதான் பேசுகிறார்கள் என்று
பார்ப்போமா?
முதலாமவர்: வாருங்கள் செம்பியன். உங்கள்
மருத்துவத் தொழில் எப்படி இருக்கிறது?
செம்பியன்:
ஏதோ நடக்கிறது. பொழுதும் போகிறது. ஆனால் உங்களுக்கு பொழுது போதவில்லை என்று
தெரிகிறதே! தங்கபாண்டியன் வழி தனிவழி என்று எல்லோரும் கூறுகிறார்களே!
தங்கபாண்டியன்(முதலாமவர்):
ஆமாம். பல்லாண்டுகளாகச் சுமந்திருக்கும் குறிக்கோள்களை மனதிலிருந்து அகற்ற
முடியவில்லை. துணையாக நின்றவர்கள் ஒவொருவராக விலகிச் சென்றுவிட்டனர் அல்லது
மறைந்துவிட்டனர். அடிப்படைக் கோட்பாடுகள் எங்கு சென்று ஒளிந்துகொண்டன என்றே
தெரியவில்லை. இருக்கும் அரைகுறைப் புரிதலோடும் சிந்தனைகளோடும் இயன்றதைச் செய்து
எஞ்சியிருக்கும் நேரத்தை இதுவரை கிடைத்த தொழில் பட்டறிவைக் கொண்டு ஓட்ட
வேண்டியிருக்கிறது. (மூன்றாமவரைச் சுட்டி) இவர்தான் நண்பர் மண்மைந்தன்.
செ.:வணக்கம்.
ம.: வணக்கம்.
செ.:தமிழ்த்
தேசியச் சிக்கல் பற்றிப் பேச வேண்டுமென்று நண்பர் தங்கபாண்டியன் கூறிய போது
எனக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. தமிழ்த் தேசியச் சிக்கல் இன்று எங்கு எந்த
வடிவில் இருக்கிறது என்ற கேள்விக்கே என்னால் விடை காண முடியவில்லை.
ம.: தமிழ்த் தேசிய இயக்கத்தின் திரிவாக்கத்தைத் தடம்
பிடித்தால் இன்று அது எந்த நிலையிலிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று
நினைக்கிறேன்.
இன்றைய வரலாற்றுக் காலத்தில்
தமிழ்த் தேசியத்துக்கு விதை ஊன்றியவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்துப்
பார்ப்பனர்களாவர். நமக்குத் தெளிவாகத் தெரிந்த முதல் பெயர் தன் பெயரைத் தூய
தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்ட சூரியநாராயண சாத்திரியாவார்.
இதற்கான வரலாற்றுப் பின்னணியும் எளிது. பல நூற்றாண்டுகளாக கன்னட, தெலுங்கு
மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்ட அரசர்களின் பிடியில் தமிழகம் இருந்தது. இறுதியில்
மராட்டியர்களும் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் முன்பே சோழர்
காலத்தில் உருவாக்கப்பட்ட சிவனிய கோயில்களில் கருவறை மொழியாக சமற்கிருதம்
இருந்துவந்துள்ளது. சோழப் பேரரசுக்கு அடித்தளமிட்ட மூவர் தேவாரம் கருவறைக்கு
வெளியில் நிறுத்தப்பட்டது. இதைப் பயன்படுத்தி அரசியல் செய்த மாலியர் இராமானுசரை
நாடுகடத்தினான் குலோத்துங்கன். அவரோ தலைக்காவிரியிலிருந்து மாலியப் பரப்பல் செய்து
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை திருக்குலத்தார் என்ற பெயர் சூட்டி பூணூலும்
அணிவித்து தான் நிறுவிய மாலியக் கோயில்களில் பூசகர்களாகவும் அமர்த்தினார். பூனை
குட்டியைக் காப்பது போல் தன் அன்பர்களைத் தானே தேடிச்சென்று அணைத்துக்கொள்வான் இறைவன்,
அவனுக்குச் சாதி பாகுபாடு கிடையாது என்றார். அவரது தடத்தைப் பிடித்து மாலியர்களான
கன்னடர்களும் தெலுங்கரும் தமிழகத்தைக் கைப்பற்றினர். இப்போது மாலியத்தின் இடம்
உறுதியாகிவிட்ட நிலையில் பொறுமை காத்த மாலியப் பார்ப்பனர்களின் சார்பில் வேதாந்த
தேசிகர், முன் பிறவிகளில், பார்ப்பனர்களுக்குத் தொண்டாற்றி பார்ப்பனராகப்
பிறந்தவரைத்தான், குரங்குக் குட்டி தன் தாயை இறுகப் பற்றிக் கொள்வது போல் பற்றிக்
கொண்டால்தான், இறையன்பைப் பெற முடியும் என்று இராமானுசர் தொடங்கிய மாலிய மீட்சிப்
பணியை முடித்துவைத்தார். மாலியர்கள், எனவே பழையவர்கள் வடகலையினர் என்றும்
இராமானுசரைப் பின்பற்றுவோர் தென்கலையினரென்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த
தென்கலைப் பார்ப்பனர்களே இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு அடித்தளமிட்டனர்.
ஐரோப்பியர்
வாணிகர்களாக இங்கு நுழைந்த போது இங்கு அவர்களிடம் பண்டங்கள் வாங்கி உள்நாட்டில்
வாணிகம் செய்தும் உள்நாட்டுப் பண்டங்களைக் கொள்முதல் செய்து அவர்களுக்கு
வழங்கியும் வந்தோரும் படித்தோருமாகிய பார்ப்பனரல்லா மேல் சாதியினர் அவர்களுக்கு
துபாசி(இருமொழியாளர்) எனப்படும் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றினர். நாளடைவில் உள்நாட்டு
அரசர்களுக்கிடையிலுள்ள பிணக்குகளைப் பயன்படுத்தி நாடு பிடிப்பதில் தொடங்கி இந் நாட்டின்
பிடி அவர்கள் கைகளில் சிக்கிய நிலையில் உள்நாட்டு மக்களை உளவியலில் அணுக நினைத்த
ஆங்கில அதிகாரிகளைக் கோயில்களுக்கு இழுத்து அங்கிருந்த கோயில் கணிகையரான தேவதாசிப்
பெண்களைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் பதவிகளில் அமர்ந்தனர். பின்னர் இந்தப்
பார்ப்பன அதிகாரிகள் அரசிடம் தங்களுக்கு ஆக வேண்டிய வேலைகளுக்காக ஆங்கில ஆட்சிக்கு
உட்பட்ட நிலைக்குத் தாழ்ந்துவிட்ட சிற்றரசர்களும்
காணியாட்சியாளர்களும்(சமீன்தார்களும்) பெருந்தனக்காரர்களும் பெரு வாணிகர்களும்
தங்களை அணுகும் போது தங்கள் அதிகாரத் திமிரை வெளிப்படுத்தினர். அத்துடன் இவ் வதிகாரிகள்
அலுவல் நிமித்தமாக ஊர்களுக்கு வரும் போது ஊர் எல்லையில் அவ் வூர்க் கோயில் தாசிகள்
சதிராடித் தம்மை வரவேற்கவும் தங்கும் காலம் முழுவதும் தமக்கு அனைத்துப்
பணிவிடையும் செய்து ஊரை விட்டுக் கிளம்பும் போது ஊர் எல்லையில் சதிராடி
வழியனுப்பவும் வேண்டும் என்று நடைமுறை வகுத்துக்கொண்டனர். இதைப் பற்றி எட்கார்
தர்சுடன் தன் Castes and Tribes of Southern Indiaவில் பதிந்துள்ளார்.
அத்துடன் மும்பையை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்து நின்ற மார்வாரிகள், குசராத்திகள்
ஆகிய பனியாக்கள்(தமிழில் வணிகர், வாணிகர் என்ற சொற்களின் வடபுலத் திரிபு) தங்கள்
முதலீட்டு விழுதுகளைத் தென்னகத்தில் இறங்கி இங்குள்ள செல்வங்களை உறிஞ்சுவதில் பெருமளவு
முன்னேறி நின்றனர். முகம்மதிய ஆட்சிக் காலத்தில் வடக்கத்தி முகம்மதியரோடு
போட்டியிட்டு முகம்மதிய ஆட்சியாளர்களுக்கும் பிற அரசர்களுக்கும் போர்ச்
செலவுகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்துப் பெரும் பணத்திரளை இவர்கள் கைகளில்
வைத்திருந்தனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் தென்
மாநிலங்களின் சிற்றரசர்களும் காணியாட்சியாளர்களும் வாணிகர்களும் பார்ப்பனரல்லா
மேற்சாதிகளைச் சேர்ந்த செல்வம் படைத்த படித்தவர்களும் இணைந்து உருவாக்கியதுதான் தென்னிந்திய
நலவுரிமைச் சங்கம்.
இந்த அமைப்பை
உருவாக்கியவர்கள் பார்ப்பனர்களை எதிர்ப்பது என்ற தங்கள் குறிக்கோளை குறுகிய
எல்லைக்குள் அடைக்காமல் பார்ப்பனியம் என்று அவர்கள் பெயர் சூட்டிய சாதியத்தை
ஒழிப்பது என்ற பரந்த குறிக்கோளை முன்வைத்தனர். அதற்கு உடனடிப் பலன் கிடைத்தது.
அன்றைய நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு குழுவினராக, அவர்களில் மேல்நிலையில்
வைக்கப்பட்டிருந்த நாடார்கள் பொருளியலில் தம் வளர்ச்சிக்குப் பொருந்திய ஒரு
குமுகப் படிநிலை வேண்டுமென்று போராடி வந்தனர். தங்களை ஒடுக்குவதில்
தங்களுக்காகவும் மேல் சாதியினருக்காகவும் முனைந்து நின்ற பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள
சாதியினரோடு பல களங்களில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டு முன்னேறி நின்ற
நிலையில் அரசியலில் பின்னர் நயன்மைக் கட்சி என்ற பெயரில் அறியப்பட்ட
தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் இணைந்து சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரண்டு
உறுப்பினர்களையும் பெற்றனர். இவ்வாறு குமுகப் படிநிலையில் அடிமட்டத்தில் இருந்த
ஒரு மக்கள் குழுவைத் தங்கள் அரசியல் – பொருளியல் நலன்களுக்கு மேல்மட்டத்தினர்
பயன்படுத்திக் கொள்வதற்கு வரலாற்றில் நயன்மைக் கட்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டை
விட்டுச்சென்றுள்ளது.
1920 முதல் 1937 வரை நயன்மைக்
கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் கல்வியிலும் அரசு
வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டுமுறை வகுக்கப்பட்டது, தேவதாசிமுறை
ஒழிக்கப்பட்டது, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அறநிலையத்துறை அமைக்கப்பட்டது.
அனைத்தைவிடவும் நயன்மைக் கட்சியின் அருஞ்செயலாகப் போற்றத்தக்கது உள்ளூர் மக்களின்
தொழில் முனைவுகளுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் ஊக்கமூட்டி அவர்கள் பல்வேறு
தொழில்களைத் தொடங்க வழியமைத்துக் கொடுத்ததாகும்.
அடித்தட்டு மக்களோடு தொடர்பு
குறைந்த நயன்மைக் கட்சியால் மக்கள் தொடர்புடைய பேரவைக் கட்சிக்கு ஈடு கொடுக்க
முடியாததால் அது தொடர்ந்து வந்த தேர்தல்களில் தோல்வியடைந்தது. ஆட்சி அதிகாரத்தின்
உடன்விளைவான ஊழலும் குழுச் சண்டைகளும் கூட அதன் வீழ்ச்சிக்குரிய காரணங்கள்.
ஈரோடையைச் சேர்ந்த,
பின்னாளில் தந்தை பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வே.இராமசாமி நாயக்கரும் சேலத்தில்
பிறந்த சி.இராசகோபாலாச்சாரியும் பேரவைக் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு முறையே
ஈரோடை, சேலம் நகராட்சிகளில் தலைவர்களாகப் பணியாற்றினர். கள்ளுக்கடை எதிர்ப்புப்
போராட்டத்தில் தன் தோப்புகளில் நின்ற ஆயிரக்கணக்கான தென்னைகளை வெட்டிச் சாய்த்தது
போன்ற முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கட்சியில் பார்ப்பனரான
இராசகோபாலாச்சாரிக்கு இருந்த செல்வாக்கு இராமசாமியாருக்குக் கிடைக்கவில்லை. அதனால்
பேரவைக் கட்சிக்குள் ஓங்கி நின்ற பார்ப்பனர் மேலாளுமைக்கு முடிவுகட்டும் ஓர்
உத்தியாக இட ஒதுக்கீட்டுக்காகவும் தீண்டாமையை எதிர்த்தும் கட்சிக்குள் போராடினார்.
அதற்குக் கட்சிக்குள் ஆதரவு இல்லாததால் 1926இல் பேரவைக் கட்சியை விட்டு
வெளியேறினார்.
இதே ஆண்டில் குடியரசு
என்ற இதழைத் தொடங்கினார். முதல் இதழ் கடவுள் அருளை வேண்டியும் வருணமுறையை ஏற்றும்
கருத்துகள் கொண்ட கட்டுரைகளைத் தாங்கி வந்தது. ஆனால் அடுத்த இதழிலிருந்து கடவுள்
மறுப்பு வருணமுறை மறுப்புக் கருத்துகளைத் தாங்கி வந்தது. இந்தத் திடீர் மாற்றம்
எப்படி நிகழ்ந்தது என்பது பலருக்குப் புரியவில்லை. பெரும்பாலும் அயோத்திதாசர்
போன்ற முன்னோடிகளின் கருத்துகளைப் பெயர் சுட்டாமல் பெரியார் பயன்படுத்திக்
கொண்டார் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அது போல் இந்து மதச் சீர்திருத்தச்
சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த இராசகோபால பாரதி என்பவர் எழுதிய சர்வ வருண சமரச
விளக்கம் என்ற நூலை குடியரசு இதழுக்கு விடுத்து அது வரப்பெற்றது பற்றி குடியரசில்
குறிப்பு வந்துள்ளதும் நூலில் காணப்படுகிறது. அந்த நூலில் வருணங்கள் பற்றி
வேதங்களிலிருந்தும் சமற்கிருத நூல்களிலிருந்தும் தந்துள்ள மேற்கோள்களையும்
சாதிகள், வருணங்களுக்கு எதிராகத் தரப்பட்டிருக்கும் கருத்துகளையும் தாண்டி
பெரியார் உள்பட எந்த “பகுத்தறிவாளரு”ம் செல்லவில்லை என்பதை இங்கு பதிவு செய்ய
வேண்டும்.
1933இல் உருசியா சென்று திரும்பிய கையோடு பொதுமைக் குமுகத்தை
உருவாக்குவதற்கென்று ஈரோட்டுத் திட்டத்தை வெளியிட்டார்.
ஆங்கில அரசு அவரைச் சிறையிலிட்டு கட்சியின் மீது ஒடுக்குமுறையைக்
கையாண்டதும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர் இன்னொரு முறை அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.
சாதியத்தை எதிர்த்துக்
கருத்துப் பரப்பல் செய்து வந்த வேளையில் விபூதி வீரமுத்து போன்றவர்களின் பின்னணியுடன் முத்துராமலிங்கத் தேவர் மூலமாக நம் நாட்டுப் பிற்போக்கு விசைகளின் நேரடியான அறைகூவல் வந்தது. அதை அவர்களது வழியிலேயே எதிர்கொள்ளும் ஆற்றல் அன்று திராவிடர்
கழகத்துக்கு இருந்தது. ஆனால் பெரியார் அதை
எதிர்கொள்ளவில்லை. எதிர்கொண்டிருந்தால் இன்று நம்மால் எதிர்கொண்டு
தீர்வு காண முடியாமலிருக்கும் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர்
பிளவு இன்று இருந்திருக்காது. தமிழகக் குமுக அமைப்பே புரட்சிகரமாக மாறியிருக்கும்,
ஏனென்றால் அன்று சாதி வரம்புகளைக் கடந்த புரட்சிகர மக்கள் படையொன்று பெரியாரின் பின்னால்
அணிதிரண்டு அவர் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யக் காத்துக்கிடந்தது. எண்ணிக்கையில் குறைந்த, அடிதடிகளில் இறங்காத பார்ப்பனர்களையும்
அவர்கள் பெண்களையும் வரைமுறையின்றி வசைபாடிய பெரியாரின் “வீரம்”
பிற்போக்கர்களின் இந்த அறைகூவல் முன் பிடரியில் கால்பட பின்வாங்கி ஓடியது.
பார்ப்பன – பனியாக்களை எதிர்த்துப் போராடுவதைப் பற்றி பெரியார் எப்போதும் பேசுவார். ஆனால் ஒரேயொரு முறை கூட பனியாக்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு ஒருமுறை முயன்ற போது முதல்வராக இருந்த பெரியாரின் செல்லப்பிள்ளை காமராசர் அவரையும் கட்சியினரையும் சிறையிலிட்டதும் அந்த முயற்சிகளையும் கைவிட்டார்.
பார்ப்பன – பனியாக்களை எதிர்த்துப் போராடுவதைப் பற்றி பெரியார் எப்போதும் பேசுவார். ஆனால் ஒரேயொரு முறை கூட பனியாக்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு ஒருமுறை முயன்ற போது முதல்வராக இருந்த பெரியாரின் செல்லப்பிள்ளை காமராசர் அவரையும் கட்சியினரையும் சிறையிலிட்டதும் அந்த முயற்சிகளையும் கைவிட்டார்.
இன்னும் சொல்வதானால் இது
போன்ற சிக்கல்களிலிருந்து கட்சியினர் மற்றும் தமிழக மக்களின் கவனத்தைத் திசை
திருப்பத்தான் அம்பீசு கபே என்ற பார்ப்பன உணவகத்தின் பெயர்ப்
பலகையில் பிராமணாள் என்ற சொல்லை அழிக்கும் போராட்டத்தை
ஆண்டுக்கணக்கில் நடத்தினார், தெருவோரப் பிள்ளையார் சிலைகளை உடைக்கும்
போராட்டத்தையும் நடத்தினார்.
பர்மா, மலேயா, சிங்கப்பூர்
போன்ற நாடுகளில், பெரும்பாலும் வட்டித் தொழில் செய்து பொருளீட்டிய, நகரத்தார்
எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சென்னையில் தொழில்கள் தொடங்கலாம் என்று
வந்தால் இங்கு ஆந்திரத்தைச் சேர்ந்த தெலுங்கர்களின் கையில் பெருவாணிகம் அனைத்தும்
இருந்தது. அதன் எதரொலிதான் தெலுங்குமொழிப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கர்னாடக
இசை மன்றங்களுக்கு எதிராக அண்ணமலைச் செட்டியார் உருவாக்கிய தமிழிசைச் சங்கம்.
இந்த இயக்கத்திலும் வ.ரா., கல்கி கிருட்டினமூர்த்தி போன்ற பார்ப்பன அறிவாளிகளின்
திடமான கருத்துத் துணை உண்டு. அதன்
தொடக்கவிழாவில் பெரியாரும் கலந்துகொண்டார். அது கூட அந்த வெளி மாநில முதலாளிகளை
மிரட்டும் நோக்கத்தில்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் செட்டியார்கள் சென்னையில்
பெருமளவில் தொழில் – வாணிகத்தில் விரிவாக்கம் பெறவில்லை.
ஆங்காங்கு நடைபெற்ற இயக்கக் கூட்டங்களில்
உரையாற்ற அண்ணாத்துரை போன்ற கழகப் பேச்சாளர்கள் செல்லும் போது நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் வழங்கும் பணத்தில் போக்குவரத்து, வழியில் சாப்பாட்டுச் செலவு
ஆகியவை போக மிச்சத்தைப் பெரியார் கறந்துவிடுவார்.
“சாப்பாடு, ஒரு ரூபாய் சம்பளம்” என்று தன்னிடம் வாங்கிய அண்ணாத்துரை
தி.மு.க. தொடங்கிய பின் வசதியாக வாழ்வதாக பெரியார் பின்னாளில் கூறியுள்ளது
குறிப்பிடத்தக்கது. ஆக, கழகத்தை ஒரு
தொழிலகமாகவே பெரியார் நடத்தினார். இந்தப் பின்னணியில் தமிழக மக்களிடையில் நன்கு
அறிமுகமான ஓர் இளைஞர் படை தன்னிடம் இருந்த துணிச்சலில் அண்ணாத்துரை பெரியாரின்
இயக்கத்தை உடைத்து வெளியே வந்து தி.மு.க.வை உருவாக்கி வளர்க்க முடிந்தது.
தன்மான (சுயமரியாதை) இயக்கம் என்ற பெயரை திராவிடர் கழகம்
என்று மாற்றுவதற்காக அண்ணாத்துரை பெயரில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,
அதற்கு முதல்நாள் இயக்கத்தின் தன்னையொத்த மூத்த தலைவர்களோடு சேர்ந்து தேர்வு செய்த
தமிழர் கழகம் என்பதைக் கைவிட்டு அவர்களை முட்டாள்களாக்கி ஏமாற்றிய
ஒரு நிகழ்வே.
பார்ப்பனர்களை அணைத்து
வளர்ப்பது மாலியமே என்ற கருத்தை வலியுறுத்திய சிவனிய வெள்ளாளர்களின்
நிலைப்பாட்டில் நின்ற பெரியார் சிவனியமும் பார்ப்பனியத்தை வளர்த்தது என்ற
நிலைப்பாட்டைத் திடீரென எடுத்தார். உடனே சிவனியர் சிலிர்த்தெழுந்தனர். தன்
இயக்கத்துக்கு வெளியை பெரியாருக்கு நெருக்கமாக இருந்த மறைமலையடிகளின் தலைமையில்
ஒரு மாநாட்டைக் கூட்டி சாதி – வருணப் பாகுபாட்டை வலியுறுத்திய, குறிப்பாக ஒடுக்கப்பட்ட
சாதியினர் கோயில்களுள் நுழையக் கூடாது என்று கூறிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.
பெரியாரின் இயக்கத்தில் இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம் போன்ற சிவனிய
வெள்ளாளர்கள் அந்த மாநாட்டைப் புறக்கணித்தனர். பெரியாருக்கும் சிவனிய
வேளாளருக்கும் இடையில் ஒரு முனைப்பான கருத்துப் போர் நடைபெற்றது. இந் நிலையில்
மறைமலையடிகளைக் குறைகூறி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை
வைத்து பெரியார் மறைமலையடிகளுடன் நெருங்கிவந்தார். கி.ஆ.பெ.விசுவநாதம் முதலியோர்
முட்டாள்களாக்கப்பட்ட இன்னொரு நிகழ்வு இது.
இந்தியை இந்திய
ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேரவைக் கட்சி தீர்மானம் நிறைவேற்றிய உடனே சிவனிய
வெள்ளாளர்களின் சைவ சித்தாந்த சபை மாநாடு நடத்தி எதிர்ப்புத் தீர்மானம்
நிறைவேற்றியது. ஆனால் இராசகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவியேற்று இந்தியைப்
பள்ளிகளில் கட்டாய பாடமாக்கிய பின்னர்தான் பெரியார் போராட்டம் அறிவித்தார். கட்சி
வேறுபாடின்றி தமிழுணர்வாளர்கள் முனைப்பான பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சூழலைப்
பயன்படுத்தி பெரியார் சிவனிய மடாபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். தங்கள்
ஆட்களைத் தன் இயக்கத்துக்கு விடுக்கும் படியும் பணம் தந்து உதவும் படியும் அந்த
வேண்டுகோள் அமைந்தது. கோயில்களை இடிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வீறுகொண்டு
முழக்கித் திரிந்த ஓர் இயக்கத்தின் தலைவர் பணமும் ஆளும் கேட்டு மடத் தலைவர்களுக்கு
வேண்டுகோள் விடுத்தால் என்ன நிகழும், அதுவும் தமிழகத்தின் மொத்த நிலவுடைமைகளில்
25%ஐத் தம் பிடிக்குள் மடங்களும் கோயில்களும் வைத்திருக்கும் நிலையில்? கேட்டால்
போதாதோ, கொட்டோ கொட்டென்று கொட்டாதோ! ஏற்கனவே தன்னுடன் இருந்து இயக்கத்தின்
வளர்ச்சியில் தம் உழைப்பு செல்வம் ஆகியவற்றை நல்கி குமுக உறவுகளை இழந்து கொள்கைகளே
வாழ்க்கை என்று வாழ்ந்தவர்களைக் கைகழுவி விடுவதும் பணம் குவிப்பதும் தவிர இதன்
பொருள் வேறென்னவாக இருக்க முடியும்? குறிப்பாக, சிவனிய வெள்ளாளர்களான மேலே
குறிப்பிட்ட கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம், இயக்கத்தின் தொடக்க நாள்களில்
சாதி வேறியர்களின் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பை உறுதி செய்து
பட்டி தொட்டிகளிலெல்லாம் இயக்கம் வளர உதவிய பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்திரபாண்டியன்
போன்றோரின் செல்வாக்கை உடைத்து வெளியேற்றுவதுடன் தான் உயிரினும் மேலாக மதிக்கும்
பணத்தைத் திரட்டுவதும்தான் தந்தை பெரியரின் குறிக்கோளாக இருந்தது. நிகழ்ச்சிகளின்
விரிவை ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள திராவிட
இயக்கமும் வெள்ளாளரும், பேரா.பு.இராசதுரை எழுதியுள்ள சுயமரியாதை
இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு ஆகிய
நூல்களில் பார்க்கலாம்.
படித்துப்
படித்து புதிய புதிய சிந்தனைகளை உள்வாங்கி அவற்றைப் பேசிப் பேசியும் தான்
உருவாக்கியுள்ள பல இதழ்களில் எழுதியும் நூல்களை வெளியிட்டும் மக்களை ஒரு புறம்
மயக்கி மறுபுறம் எவருக்கு எதிராக இவற்றை எல்லாம் செய்கிறாரோ அவர்களுக்கே அக் கொள்கைகளை
விற்றுப் பணம் பார்த்த பணவெறியராகவே “தமிழர் தலைவர், தந்தை பெரியார்”
ஈ.வே.இராமசாமியின் படிமம் எஞ்சுகிறது. கன்னட, ஆந்திர, மலையாள வந்தேறிகளின் நலம்
நாடியாக அவருடைய படிமம் இப் படிமத்தின் முன் துரும்பாகச் சிறுத்துப் போகிறது
என்பதே உண்மை. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிய பெரியாரை
ஏதோ ஓர் அடையாளம் கொண்ட மக்கள் குழுக்களுக்கு உழைத்தார் என்று கூறுவது அவருக்குத்
தகுதியே இல்லாத ஒரு பெருமையை வழங்குவதாகும்.
அண்ணாத்துரையின் குறிக்கோள்
எப்படியாவது தமிழகத்தின் முதலமைச்சராக வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான்.
அதற்காகவே பெரியாரின் பணவெறியால் கசந்து போயிருந்த கழகத்தின் புது வரவுகளைத் தன்
பக்கம் ஈர்த்து பெரியாரின் திருமணத்தைச் சாக்காக வைத்து ஒரு பிளவை உருவாக்கினார்
அவர். தான் கொள்கைகளை கைவிடப்போவதில்லை என்று காட்டுவதற்காக “தி.க.வும்
தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி” என்றார். பின்னர், தேர்தலில்
நிற்பதற்குத் தொண்டர்களின் இசைவைப் பெற்றுவிட்டதாக திருச்சி மாநில மாநாட்டில்
தீர்மானம் நிறைவேற்றிய பின் இறைமறுப்புக் கொள்கையைக் கைவிட்டு “ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும்” என்று கூறி திருமூலர் வடிவம் எடுத்தார். கழகத்தின் அறிவிக்கப்பட்ட
கொள்கைகளில் இந்த இறைமறுப்பை மட்டும் ஓர் உறுத்தலாக உணர்ந்தவர்களுக்கு
அண்ணாத்துரையின் இந்தப் புதிய “ஞானம்” ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே பட்டது.
1962இல்
சீனத்துடன் நடைபெற்ற போரைப் பயன்படுத்தி அப்போதைய உள்துறையமைச்சர் லால்பகதூர்
சாத்திரி பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவந்தார். உடனே அண்ணன் பிரிவினைக்
கொள்கையைக் கைவிடுவதாகத் தீர்மானம் நிறைவேற்றி அது ஒரு பெரும் அரசதந்திர நடவடிக்கை என்று சுவரொட்டி விளம்பரம்
செய்து தொண்டர்களை ஏமாற்றினார்.
1952இல் தேர்தலில் நேரடியாக
ஈடுபடாமல் மாணிக்கவேலு நாயக்கருக்குத் தேர்தல் பணி செய்து தங்கள் வலிமையை
மதிப்பிட்டார் அண்ணாத்துரை. இவர்களால் தேர்வானவர் பதவிக்காக இராசகோபாலாச்சாரியர்
பின்னால் ஓடிவிட 1957இலும் 1962இலும் படிப்படியாக வளர்ச்சியடைந்து 1967இல்
இந்தியாவில் முதன்முதலில் கொள்கையில்லாக் கூட்டணியை அமைத்து இந்தியாவுக்கு
வழிகாட்டி ஆட்சியில் அமர்ந்தார் அண்ணன். தேர்தலுக்கு முன் அன்றாடங்காய்ச்சிகளாக
இருந்த பல ச.ம.உ.க்கள் ஆறு மாதங்களில் மகிழுந்து வாங்கியதைக் கண்ட உடனே “ச.ம.உ.க்களுக்கு
தொகுதி மக்கள் மகிழுந்து வழங்கும் விழா” என்ற பெயரில் ஊழலுக்கு விழா எடுத்து
அண்ணன் தான் ஒரு “பேரறிஞர்” என்பதை உலகுக்குப் பறைசாற்றினார். இதுதான் கருணாநிதி
பின்னாளில் வகுத்த “அண்ணா வழியில் அயராதுழைப்போம்” என்ற “கொள்கை” முழக்கத்தின்,
பின்னாளில் ம.கோ.இரா. இறுத்தெடுத்த “அண்ணாயியம்”
என்ற “கோட்பாட்டின்” அடித்தளம்.
பெரியாரிடம்
இருந்த போது, தமிழகப் பொருளியல் மீது பனியாக்கள், பார்சிகள் கொண்டுள்ள கொடும் பிடி
பற்றி பணத்தோட்டம் நூல் எழுதினார் அண்ணன். பிரிந்து வந்த பின்னர் வடக்கு
வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை மூல முழக்கமாக வைத்த அண்ணன் பனியா –
பார்சிகளை விட்டுவிட்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் சென்னை மாநிலத்துக்கான ஒதுக்கீடு
என்று யாரும் உணராத வகையில் தடத்தை மாற்றினார். ஆனால் நடத்திய போராட்டங்களோ
டால்மியாபுரம் என்ற தொடர்வண்டி நிலையப் பெயரை கல்லக்குடி என்று மாற்றுதல்,
இராசகோபாலாச்சாரியை அறிவற்றவர்(நான்சென்சு) என்று நேரு கூறினார் என்று கூறி அவரைக
கண்டிப்பதன் மூலம் தென்னகத்தின் “மானத்தைக் காத்தல்” போன்றவைதாம்.
திராவிட
நாட்டுப் “பிரிவினை” கூச்சல் உச்சத்தைத் தொட்டது. தொண்டர்கள் விடுதலைப் போர்
எப்போது வெடிக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அண்ணனோ ஒரு கோடி உரூபாய்
இருந்தால் திராவிடத்தை அடைந்துவிடலாம், திரை நடிகராகி கழகத்தில் நுழைந்த “தம்பி”
ம.கோ.இரா. ஒரு முறை தன் முகத்தை மக்கள் முன் நேரடியாகக் காண்பித்தால் போதும்
திராவிட நாட்டைப் பெற்றுவிடலாம் என்று கூறிக்கொண்டிருந்தார். பெரியாரை விட்டு வந்த
போது அண்ணாத்துரையையும் சேர்த்து ஐம்பெரும் தலைவர்களாக அறிவிக்கப்பட்டவர்களாகிய
நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன், சம்பத்து ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டு
கருணாநிதியும் ம.கோ.இரா.வும் முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டு அந்தத்
தலைவர்களிடையில் உருவாகியிருந்த கசப்பு சம்பத்து சோவியத்துக்குச் சென்று திரும்பிய
அன்று அவரை வரவேற்க ஆளற்றுப் போக அனைவரும் ம.கோ.இரா.வின் நாடோடி மன்னன்
திரைப்படத்தின் 100ஆம் நாள் விழாவுக்குச் சென்றுவிட்ட நிகழ்வைத் தொடர்ந்து
வெடித்தது. கழகம் சென்றுகொண்டிருந்த வகை குறித்து பெரும்பாலான தொண்டர்கள் மனதில்
உருவாகியிருந்த உறுத்தல் சம்பத்துக்குத் துணை நிற்க அவர்களைத் தூண்டியது. ஆனால் எந்த
ஆயத்தப்பாடும் இன்றி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதும் தோல்வியைச்
சந்திக்க முடியாமல் சம்பத்து பேரவைக் கட்சியில் கலந்துவிட்டதும் தொண்டர்களை
மீண்டும் அண்ணாத்துரை பக்கம் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது. ஆனால் சம்பத்து சில
உண்மைகளை வெளிப்படுத்தினார். தலைவர்கள் யாருக்கும் திராவிட நாடு பிரிவினையில்
நம்பிக்கை இல்லையென்றும் அவர்கள் வெறும் வாய்ப்பந்தல் போடுகிறார்கள் என்பவைதான்
அவற்றின் அடக்கம். ஆனால் ஒன்றில் மட்டும் அண்ணன் உறுதியுடனும் ஊக்கத்துடனும
இருந்தார். “திராவிட நாட்டை”ப் பெறுவது என்பது அவரைப் பொறுத்த வரை சென்னை
மாகாணத்தின் முதலமைச்சர் பதவியைப் பெறுவதுதான். அதற்கு முன்னோட்டமாக வாய்த்தது
1958இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தல். அதில் நகரத் தந்தையைத் தேர்ந்தெடுக்க
தி.மு.க.வுக்கு 2 உறுப்பினர்கள் பற்றாக்குறை. ஆனால் நகரத் தந்தை தேர்தலில்
தி.மு.க. வென்றது. கட்சி மாறி வாக்களித்தது யாரென்று யாருக்கும் தெரியாது. இது
குறித்து அண்ணன் உதிர்த்த புகழ் பெற்ற வரலாற்றுப் பொன்மொழிதான் “கொடுக்க
வேண்டியதைக் கொடுத்து பெற வேண்டியதைப் பெற்றோம்” என்பது. அதைத் தொடர்ந்து அண்ணன்
உதிர்த்த அடுத்த முத்துதான் ஒரு கோடி உரூபா இருந்தால் “திராவிட நாட்டை” அதாவது
முதலமைச்சர் பதவியைப் பெற்று விடுவோம் என்பது. இவ்வாறு தமிழகத்தில், அதன் மூலம்
இந்தியாவில் பாராளுமன்ற முறை என்ற போலி மக்களாட்சியின் முகமூடியை எவ்வளவு முடியுமோ
அவ்வளவு விரைவில் கிழிய உதவியர் என்ற வகையில் அண்ணாத்துரைக்கு இந்திய மக்கள்
மட்டுமல்ல உலக மக்களே கடன்பட்டிருக்கிறார்கள். இவ்வாறுதான் அண்ணன் அவரது வாழ்நாள்
கனவை, தமிழக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற குறிக்கோளை எய்திய பின்னர்தான் அவர்
உயிர் விட்டார். அந்த வகையில் அவர் ஒரு வாழ்நாள் அருஞ்செயலாளர்(வாழ்நாள்
சாதனையாளர்). “வாழ்க அண்ணா நாமம்”!
இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தை விளையாட்டுப் போல் அறிவித்துவிட்டு தானே எதிர்பார்க்காத
அளவுக்கு மக்களின் நேரடிப் போராட்டம் எனும் பூதமாக அது கிளம்பியதும் ஓடி ஒளிந்த
அண்ணன் இரண்டே ஆண்டில் அதையே மூலதனமாக்கி முதலமைச்சராகியது “பேரறிஞர்”தான் அவர் என்பதை
மெய்ப்பித்த இன்னோரு நிகழ்வு.
ஆட்சிக்கு
வந்த பின்னும் அண்ணனின் அருஞ்செயல்கள், சென்னை மாநிலம் என்றிருந்த பெயரைத்
தமிழ்நாடு என்று மாற்றியது, உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்தியது, கல்வியில்
இருமொழிக் கொள்கை என்ற பெயரில் “கட்டாய” இந்தியை அகற்றியது, போன்றவைதாம். ஆனால்
அவரது “தம்பி” கருணாதியின் மருமகன் முரசொலி மாறன் தன் மகன்களை “கட்டாயமில்லா”
இந்தி படிக்க வைத்தது போல் பிற “தம்பி”களின் குடும்பப் பிள்ளைகளும் “கட்டாயமில்லா”
இந்தி படித்து இந்திய அளவில் தங்கள் “தகுதி”யை வளர்த்துக்கொண்டனர். அவ் வப்போது
“பிரிவினையை நாங்கள் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் இருக்கின்றன” என்று
தில்லியை மிரட்டும் பாங்கில் பேசுவது அண்ணனின் வழக்கம். ஆனால், அண்ணன் இன்னும் தன்
குறிக்கோளை, தமிழக விடுதலையை, மனதில் தாங்கிக்கொண்டுதான் வாழ்கிறார் என்று தமிழக
மக்கள் மனம் குளிர்ந்து போக அண்ணனோ,”முட்டாள்களே தமிழக விடுதலைக்கான காரணங்களில்
ஒன்று கூட மறையாமல் அப்படியே தொடர உங்களை ஏமாற்றி முதலமைச்சர் ஆகிவிட்டதுமன்றி
அந்த இரண்டகத்தை அவ் வப்போது நினைவுபடுத்தி, தில்லி ஆட்சியாளர்களையும்
மிரட்டுகிறேன் பாருங்கள்” என்று கூறி மனதுக்குள் சிரித்துக்கொண்டார். அவருடைய
“தம்பி”யாக அவரைத் தொடர்ந்து முதல்வராக வந்த கருணாநிதியும் இந்த மிரட்டலை
தில்லிக்கு அவ் வப்போது விட்டுவந்தார். 1975ஆம் ஆண்டு “நெருக்கடி கால” ஆட்சியின்
போது படையணிகளைத் தமிழகத்துக்கு விடுத்து கருணாநிதியின் ஆட்சியை இந்திரா காந்தி
கலைத்த்தைக் கண்டு மிரண்டதோடு அந்த மிரட்டலை “தம்பி” கைவிட்டார்.
தன்
கட்சியின் மூத்தோரோடு ஏற்பட்ட முரண்பாட்டில் கையற்று நின்ற இந்திராவுடன்
1971இல் பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்தும்
இந்திராவுக்கு சட்ட மன்றத் தொகுதிகள் அனைத்தும் கருணாநிதிக்கு என்ற அடிப்படையில்
கூட்டணி வைத்து(திராவிட இயக்கத்தின் திரிவாக்கத்தை – படிமுறை “வளர்ச்சி”யைப்
பார்த்தீர்களா!) தேர்தலில் 234 சட்ட மன்ற இடங்களில் 183 இடங்கள் என்ற அளவில் 78%
என்ற அரும்பெரும் வெற்றியைப் பெற்ற கருணாநிதி அந்தத் துணிச்சலில் அரும்பெரும்
ஊழல்களை நிகழ்த்திக் காட்டினார். தமிழகத்தில் விளைந்த நெல்லையும் அரிசியையும்
சாலைகள் வழியாகவும் கடல் வழியாகவும் பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் கூட
கடத்தியது தொடங்கி, ம.கோ.இரா. சொந்தக் காசில் நர கையூர்தி( கை ரிக்சா)
ஓட்டிகளுக்கு மிதியூர்தி வழங்கியதைப் போல் அரசுப் பணத்தில் நரவூர்தி ஓட்டிகளுக்கு
வாங்கிக் கொடுத்து அதில் தரகு பார்த்தது வரை வகை வகையாக ஊழல் அருஞ்செயல் செய்து
காட்டினார். இந்த ஊழல்களைக் காட்டி இந்திரா காந்தி எந்த எதிர்ப்புமின்றி கச்சதீவை
இலங்கையின் சிங்களர்களுக்குக் கொடுக்க முடிந்தது, காவிரி ஒப்பந்தம் தொடர்பாக
வேளாண் சங்கத்தினர் தொடுத்த வழக்கைத்
தொடர்ந்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கைப் பின்வாங்கவைத்ததுடன் கருணாநிதியை
நெருக்கி வேளாண் சங்கத்தினரின் வழக்கையும் பின்வாங்கவைக்க முடிந்தது.
தனக்குப்
பின்னரும் தி.மு.க.வும் ஆட்சியும் தன் மக்களுக்கே வர வேண்டும் என்ற “தூய” “மக்கள்”
ஆட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில், அதற்கு அறைகூவலாக வரத்தக்க வாய்ப்புடனிருந்த
ம.கோ.இரா.வின் திரைத்துறைச் செல்வாக்குக்குப் போட்டியாக தன் மகன் மு.க.முத்துவைத்
திரைப்பட நடிகராக்கி ம.கோ.இரா.வின் அடித்தளக் கட்டமைப்புகளாக இருந்த ம.கோ.இரா.
சுவைஞர் மன்றங்களை முத்து மன்றங்களாக மாற்ற முயன்ற போது தலைமறைவு காய்மறைவாக
இருந்த பூசல் வெளிப்படையாக வெடித்தது. மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டில்
திராவிட நாடு விடுதலை பற்றி வீரார்ப்பாகப் பேசிய ம.கோ.இரா. பேசி முடித்ததும்
மாநாட்டை விட்டு வெளியேறினார். கட்சியின் வரவு – செலவுக் கணக்குகளைக் கேட்டு
நேரடியாகக் களத்திலிறங்கி அறைகூவல் விடுத்தார். கட்சியிலிருந்து நீக்கல், புதுக்
கட்சி தொடங்கல் என்று அ.தி.மு.க. உருவானது.
அண்ணாத்துரை
புதுக் கட்சி தொடங்கிய போது அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி மாமனிதர்கள்
பலரின் ஈகத்தால் தமிழகத்துக்குப் பெரும் பணிகளாற்றியும் திறமைகளுக்கு வாய்ப்புக்
கொடுத்தும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் புகழ் ஈட்டிக்கொடுத்த ஒரு மாபெரும்
இயக்கத்தின் கட்டமைப்புகள் என்ற பின்னணி இருந்தது. அப்படித் தனித்தன்மை ஏதுமில்லாத
சம்பத்து புதைந்து போன புதுக் கட்சி முயற்சியில் ம.கோ.இரா.வெற்றி பெற்றது திட்டமிட்டு
திரைப்படங்கள் மூலம் அவர் உருவாக்கிய உயர்ந்த மனிதப் படிமமும் பலருக்கும் உதவும்
பண்புள்ளவர் என்ற பின்னணியில் இயங்கிய வலிமையான சுவைஞர் சங்கங்களின் ஒரு கட்டமைப்பும்தாம்.
ஆக, தமிழ்த் தேசியம் என்பது தமிழக மக்களை மயக்கி பணம் ஈட்டுவதிலும்
ஆட்சியைப் பிடிப்பதிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டவர்கள் கைவிட்ட ஒரு குறிக்கோள்
என்றே பொருள்படும்.
தொடரும்.....
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக