21.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 33


 29. குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 2

 த.:  தமிழ், தனித்தமிழ் இயக்கங்களைப் பற்றி எதுவும் கூறாமல் விட்டுவிட்டீர்களே!
     
..  இப்போது அதைப் பற்றிக் கூறத்தான் உள்ளேன்.

    வந்தேறிகளான மூவேந்தர்களும் அவர்களுக்கு முன்னோடிகளான சேரர்களின் கிளைஞர்களான குறுநில மன்னர்களும் மக்களிடமிருந்து முற்றிலும் அயற்பட்டு நின்றனர். அதிலும் குறிப்பாக இறுதி நாட்களில் குறுநில மன்னர்களை முற்றாக ஒழித்ததால் குறிஞ்சி, முல்லை நில மக்களின் முழுமையான வெறுப்புக்கும் ஆளாகியிருந்தனர் மூவேந்தர்கள். இச் சூழலைப் பயன்படுத்தி மகதப் பேரரசனான சந்திரகுப்த மோரியன் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு அம்மணம் தழுவி துறவிகள் என்ற பெயரில் ஒற்றர்களின் ஒரு படையுடன் தென்னாட்டுக்கு வந்ததும் கலிங்க மன்னன் காரவேலன் தன் பங்குக்கு அம்மண ஒற்றர்களை முல்லை, குறிஞ்சி நிலங்களுக்கு விடுத்து அங்கே முழைஞ்சுகளில்(குகைகளில்) தங்கி சமயப் பணி என்ற பெயரில் அரசர்களுக்கு எதிராக மக்களைத் திருப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே நேரத்தில் சிலப்பதிகாரம், காடுகாண் காதை சுட்டுவது போல் மேற்குத் தொடர்ச்சி மலை, பெரும்பாலும் குடகுமலைப் பகுதி மங்களூர் வட்டாரத்தைச் சேர்ந்தவனென்று கருதத்தக்க “மாங்காட்டு” மறையோன் மூலம் இளங்கோவடிகள் காட்டுவது போல் மாலியப் பார்ப்பனர்கள் தங்கள் வழிபாட்டிடங்களை இணைத்து ஒரு சமயமாக உருவாக்குவதற்கான ஆயத்தப்பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அதே வேளை வடக்கே புத்த – அம்மண நெருக்கல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வடக்கிலிருந்து பார்ப்பனர்கள் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இந்தச் சூழலை எதிர்கொள்ள தமிழக அரசர்கள் அன்று தேர்ந்தெடுத்த தவறான வரலாற்றுத் தடம்தான் இன்றுவரை தமிழகத்தையும் தமிழக மக்களையும் சீரழித்துக்கொண்டிருக்கிறது.

      அம்மண ஒற்றர்களுக்கு இடமளித்துக்கொண்டிருந்த முல்லை, குறிஞ்சி மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையாவது உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இன்றி அவ் வொற்றர்களின் சமய எதிரிகளான வடக்கத்திப் பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கி மக்களின் வெறுப்பை மிகுத்தனர். அதாவது உள்நாட்டு மக்களுக்கு மதிப்பளிப்பதைவிட அயலவர் கால்களில் விழுவதை நம் அரசர்களும் தலைவர்களும் உயர்வாகக் கருதி வந்துள்ளனர். அதனால் திருமாலைத் தெய்வமாகக் கொண்டிருந்தோரும் பின்னர் பின்னர் அம்மணத்தை அணைத்துக்கொண்டவர்களுமான முல்லை, குறிஞ்சி நிலங்களைச் சார்ந்த கள்ளரும் பிறருமான களப்பிரர்கள் மூவேந்தர்களையும் அகற்றி அரசுகளைக் கைப்பற்றினர்.

.:  களப்பிரர்கள் சமற்கிருதத்தை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தவர்கள் அல்லவா, அவர்களைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களென்று நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்கள்?

.:  நல்ல கேள்வி. ஆனால் மூன்றாம் கழகத் தொகுப்பில் வரும் பாணாற்றுப்படைப் பாடல்களைக் கூட பார்ப்பனர்கள் பாடும் அளவுக்கு இறுதிக் காலத்தில் பார்ப்பனச் சார்பும் சிலப்பதிகாரம், கால்கோட் காதை காட்டுவது போல்(வரி 58) அரண்மனை சார்ந்த கோவில்களில் சமற்கிருத நுழைவும் வேரூன்றிவிட்டன. அதன் அடுத்த கட்டம்தான் களப்பிரர்களின் சமற்கிருதச் சார்பு. அம்மணமும் மாலியமும் தமிழை முன்னிலைப் படுத்துவன அல்லவே! தமிழர்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் நம்மில் யாருக்கும் தமிழகத்துக்குள் மட்டும் கோயில்களைக் கொண்ட ஒரு மண் சார்ந்த சமயத்தை உருவாக்கும் எண்ணம் கூட இன்று வரை வரவில்லையே! அயல் மண்ணில் அமைந்துள்ள கோயில்களுக்குச் சென்று தம் செல்வத்தைக் கொட்டுவதைப் பெருமையாகக் கருதும் பேதைகளாகத்தானே நாம் இருக்கிறோம்.

செ.:உள்நாட்டில் கோயில்களைக் கொண்டிருக்கும் சமயங்களுக்கு வெளிநாட்டினர் தம் நாடுகளுக்குள் கோயில் கட்டுவதைத் தடுக்க முடியுமா? அல்லது உள்நாட்டில் உருவான புத்த சமயம் போல் அயல் நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து நம்மைத் தாக்கவோ சுரண்டவோ முடியாதா?

.:  சரியான, பொருத்தமான கேள்விதான். மக்களிடையில், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்காத உண்மையான மக்களியப் பண்பாடும் நாட்டின் பொருளியல், அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியில் பிற நாடுகளுக்கு எச் சூழலிலும் ஈடுகொடுப்பதாக நம் நாடு விளங்க வேண்டும் என்பதில் எக் கணமும் விழிப்புணர்ச்சியும் இருந்தால் எந்த வெளிச் சமயமும் நம் நாட்டினுள் நுழைய முடியாது.

      வேதங்கள் அல்லது பிராமணங்கள் காலத்திலிருந்தே, பெருவாரி மக்கள் தங்கள் அதிகாரத்துக்கு எதிராக விடுக்கும் எதிர்ப்புகளை எதிர்கொள்வதற்காக அரசர்கள் பார்ப்பனர்களுக்குத் தங்களை அடிப்படுத்திக்கொண்டனர். அரச அதிகாரத்தை எதிர்க்கத் தேவையான பொருளியல் வாய்ப்பைப் பெற்றோரான வாணிகர்களை, அதிலும் சிறப்பாக கடல் வாணிகர்களை ஒடுக்குவதில் அவர்கள் குறியாக இருந்தனர். கடலோடுவோரைத் தீண்டத்தகாதவர்களாக ஓதுக்கினர். வட இந்தியாவில் எப்போதோ தொடங்கிவிட்ட இந்த நிகழ்முறை சிலப்பதிகாரமணிமேகலைக் காலத்துக்குப் பின்தான் தொடங்கியது என்று கொள்ளலாம்.

      இந்தப் பின்னணியில் மக்களின் கொந்தளிப்புகளைப் பயன்படுத்தி ஆட்சியாளர்களை ஆட்டிவைக்க பார்ப்பனர்கள் மக்களின் தாய்மொழியான தமிழுக்கும் ஆட்சி – பூசக மொழியான சமற்கிருதத்துக்கும் இடையிலான முரணபாட்டைப் பயன்படுத்திக்கொண்டனர்.

செ.:ஆட்சி மொழியும் பூசக மொழியும் மக்களின் தாய்மொழியாக இருப்பதை பார்ப்பனர்களும் அரசர்களும் ஏன் விரும்பவில்லை?

.:  மக்களின் மொழி ஆட்சி மொழியானால் ஆட்சியாளர்களின் உண்மையான நடத்தைகளையும் திட்டங்களையும் மக்களிடமிருந்து மறைக்க முடியாது. பூசகர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய சமய நடவடிக்கைகளின் சராசரித் தன்மை வெளிப்பட்டுவிடும். அவர்களுக்குப் போட்டியாளர்கள் களத்தில் இறங்கிவிடுவார்கள். அதனால்தான் சராசரிக் குடிமக்கள் சமற்கிருதம் படிக்கக் கூடாது என்ற கட்டத்தைத் தாண்டி படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் தண்டனை கூட பரிந்துரைக்கப்பட்டது.

      தமிழகத்தைப் பொறுத்தவரை சிற்றரசர்கள், பெருநிலக் கிழார்களின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவே பெரும் கோயில்களைக் கட்டி அதற்கு நிலங்களை வழங்குவதைப் பெரும் அறச்செயலாக்கிக் காட்டினர்  பேரரசுச் சோழர்கள். அதைப் போல் பல சிவனிய மடங்களும் மாபெரும் நிலவுடைமைப் பின்னணியில் சிற்றரசுகள் போல் செயல்பட்டன. கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஆட்சியாளர்களின் இடைவிடாப் போர்களுக்கும் ஆகும் செலவுகளுக்கு எண்ணற்ற வரிகளின் வடிவில் கசக்கிப் பிழியப்பட்ட குடிமக்கள் தங்களை ஆட்சியாளர்கள் பிரித்து வைத்திருந்த வலங்கை – இடங்கை சாதிப் பிரிவினைகளைத் தகர்த்து ஒன்றிணைந்து மாபெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அரசனைக் கொன்றனர், கோயில்களை இடித்தனர், பார்ப்பனப் பூசகர்களைக் கொன்றனர். ஆனால் இதில் இரங்கத்தக்க நிலை என்னவென்றால் இதை மறைந்து நின்று ஒருங்கிணைத்தவன் இராசராசன், அவன் மகன் இராசேந்திரன் ஆகியோரின் மகள்களின் வழி வந்தவனும் அதனால் சோழர் அரண்மனையில் பிறந்து வளர வாய்ப்பைப் பெற்றவனுமான சாளுக்கிய மன்னன் நரசிம்மன் ஆவான். அவனுக்கு சோழ அரண்மனையினுள்ளும் கூட்டாளிகள் இருக்க வாய்ப்புண்டு. இடங்கைச் சாதியராக ஒதுக்கப்பட்டு, ஆனால் இடைவிடாத கோயில் கட்டுமானப் பணிகளாலும் போர்க் கருவிகள் படைப்பாலும் பொருளியலில் உயர்ந்து இடங்கை ஒதுக்கல், ஒடுக்கல்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்ற ஐந்தொழில் கொல்லர்களின் துணையும் அவனுக்கு இருந்தது. ஆக, இம் முறையும் தமிழக மக்களுக்கு தம் நாட்டு மக்களிடையிலிருந்து உருவான ஒரு தலைமை கிடைக்கவில்லை.

இது நடைபெற்ற 12ஆம் நூற்றாண்டில் தான் இங்கிலாந்தில் ஒரு மன்னன் தான் விதித்த புதிய வரிகளுக்கு எதிராக மக்கள் நடுவில் உருவான எதிர்ப்பை எதிர்கொள்ள மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களைப் பேராளர்களாகத் தலைநகருக்கு வரவழைத்து அவர்களுக்கு நிலைமைகளை விளக்கி தத்தம் பகுதி மக்களுக்கு எடுத்துரைக்குமாறு அறிவுறுத்தி இன்றைய பாராளுமன்ற மக்களாட்சிக்கு வழிவகுத்தான்.

மக்களைத் தூண்டிவிட்டு அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய சாளுக்கிய அரசன் குலோத்துங்கன் என்ற பெயரில் ஆட்சியைத் தொடங்கி இடங்கை – வலங்கைப் பிரிவைக் கையாண்டு மக்களைத் தங்களிடையில் மோதவிட்டு இடைவிடாத கொலைவெறிச் சாதிக் கலவரங்களின் களமாகத் தமிழகத்தை 8 நூற்றாண்டுளாகச் சீரழியவைத்தான். நம் நாட்டைக் கைப்பற்றி ஆண்ட ஆங்கிலர்தாம் இழிவுகூர் இக் கலவரங்களை முடிவுக்குகுக் கொண்டுவந்தனர்.

குலோத்துங்கன் அரியணையேறியதும் இராசராசனின் ஆண் வழியினரின் சார்பினருக்கும் குலோத்துங்கனின் சார்பினரான, வந்தேறிகளுக்கு நாட்டைக் காட்டிக்கொடுத்த உள்நாட்டு இரண்டகர்களுக்கும் முனைப்பான மோதல்களும் போராட்டங்களும் நடந்திருப்பதற்கு சாதி வரலாறுகளுக்குள் தடயங்கள் மறைந்து கிடக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் வந்தேறி குலோத்துங்கனுக்கும் அவனது உள்நாட்டுக் கைக்கூலிகளுக்கும் வெற்றி கிட்டியது. தோற்ற பக்கத்தினரான நாட்டுப்பற்றாளர்கள் கைக்கூலிகளின் ஒடுக்குமுறைகளுக்கும் ஒதுக்குமுறைகளுக்கும் ஆளாயினர்.                

இந்தப் போராட்டத்தில் சிவனிய மடங்கள் குலோத்துங்கனுக்கு எதிராகச் செயற்பட்டன. அதனால் மடங்களின் சொத்துகளைக் கைப்பற்ற அவன் நடவடிக்கை எடுத்தான். அவர்கள் இதை எதிர்த்துக் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டனர். குலோத்துங்கள் அவர்களுடன் இணக்கம் கண்டு அந் நடவடிக்கைகளைக் கைவிட்டான். இது பற்றி குகைப் போராட்டங்கள் என்ற நூலில் காணலாம். எட்டாம் என்ரி என்ற இங்கிலாந்து அரசனுக்கும் போப்பரசருக்கும் ஏற்பட்ட மோதலில் கத்தோலிக்க மடங்கள் அனைத்தையும் கலைத்து அவற்றின் சொத்துகள் அனைத்தையும் தன் நண்பர்களுடன் பங்கிட்டுக்கொண்டதிலிருந்துதான் அங்கு முதலாளியம் முகிழ்வதற்கான அடிப்படை மூலதனம் உருவானது என்பது வரலாறு. நம் ஆட்சியாளர்களும் தலைவர்களும் காலங்காலமாக தங்கள் மான உணர்வை விலையாகக் கொடுத்து போராட்டம் எதுவுமின்றி எளிதாகப் பதவிகளையும் பணத்தையும் பெறுவோராகவே வாய்த்துவிட்டது மாபெரும் அவலம்.

தொடர்ந்த ஆட்சிகளும் மக்களைக் கசக்கிப் பிழிந்ததுடன் அடித்தள மக்களை ஆட்சியாளரின் சார்புடைய சாதிக் குழுக்கள் வரம்பற்ற ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கினர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இராமானுசர் என்ற மாலியத் தலைவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருக்குலத்தார் என்ற பெயரிட்டு அவர்களுக்கு பூணூல் அணிவித்து கோயில் பூசகராகவும் ஆக்கினார். ஆழ்வார் பாசுரங்களை கோயில் கருவறைக்குள் ஓதுவதற்கும் வழியமைத்தார். தாய்மொழிக்கு ஏற்றம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதிப்பு என்ற இவ்விரு கூறுகளும் மாலியத்தின் செல்வாக்கை உயர்த்தின. என்ன விந்தை பாருங்கள்! இதே தாழ்த்தப்பட்ட மக்களை முகம்மதியர்கள் கடவுளின் குழந்தைகள் எனப் பொருள்படும் லெப்பைகள் என்றும் மோகன்தாசு கரம்சந்து காந்தி திருமாலின் மக்கள் என்று பொருள்படும் அரிசனங்கள் என்றும் பெயர் சூட்டியுள்ளது வியப்பாயில்லையா! அம்மணத்தைப் பற்றிக்கொண்டு தமிழக வாணிகத்தைக் கைப்பற்றிச் சுரண்டிய வடக்கத்தி வாணிகர்களுக்கு எதிராக வாணிகக் குலப் பெண்ணான காரைக்காலம்மையாரால் தொடங்கப்பட்டு வாணிகர்களின் பின்னணியில் செல்வாக்குப் பெற்ற சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் உருவாக்கிய, தமிழைத் தூக்கிப் பிடித்த, சிவனிய இயக்கம் அமைத்துத் தந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட சோழப் பேரரசு தான் கட்டிய கோயில்களின் கருவறைகளுக்குள் தமிழ்த் தேவாரங்களை நுழைய விடாமல் தடுத்திருந்த சூழலில் இராமானுசரின் இயக்கம் சோழப் பேரரசுக்குப் பெரும் அறைகூவலாக இருந்தது. அதனால் அவரை மூன்றாம் குலோத்துங்கன் நாடுகடத்த அவர் குடகிலிருந்து தொடங்கி காவிரிக் கரை நெடுக மாலியச் செல்வாக்கை வலுப்படுத்தி அடுத்துப் படையெடுத்த, மாலியம் சார்ந்த கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் ஒரு இடைகழி(corridor)யை அமைத்துத் தந்தார். காரைக்காலம்மையார் காலத்தில் அவர் பின்னணியிலிருந்த வாணிகர்கள் இச் சூழலில் இல்லாமல் போய்விட்டார்கள்.

இவ்வாறு காலங்காலமாக மக்களின் தாய்மொழியைக் காட்டியும் ஒடுக்கப்படபட மக்கள் பொருளியலில் ஓரளவு வளர்ந்து போர்க்குணம் எய்தி களத்தில் இறங்க ஆயத்தமான காலகட்டங்களில் மதமாற்றம் என்ற மாயமானைக் காட்டியும் அவர்களைப் பயன்படுத்தி தங்கள் அடித்தளத்தை வலுப்படுத்திக்கொண்ட ஆட்சியாளர்களும் மேல்மட்டத்திலுள்ள இரு சாதியினரும் தங்கள் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்ததும் மக்களையும் அவர்களது மொழியையும் காலடியில் போட்டு மிதிப்பதே வரலாறாக இருக்கிறது. இதில் பார்ப்பனரும் அவர்களது போட்டியாளரான சிவனிய வெள்ளாளரும் ஒருவர் மாற்றி ஒருவர் தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். பள்ளு இலக்கியக் காலம் என்பதும் அத்தகைய ஒன்றே. கோயில் சொத்துகளிலிருந்து கிடைத்த வாரத்தை முறைப்படி கோயில்களுக்கு வழங்காமல் பங்குபோட்டுக்கொண்ட உழவர்களான பள்ளர்களும் அவர்களுக்கும் கோயில்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட மன்னாடிகளான பள்ளர்களின் தலைமக்களுக்கும் மோதலை உருவாக்கும் பணியைச் செய்ததுடன் வழக்கமாக மண்ணாங்கட்டி, பேயன், இருளன், பறட்டை, பேச்சி போன்ற பெயர்கள் தவிர மேல் சாதியினர் சூட்டும் பெயர்களைச் சூட்டுவதில் தடைக்கு ஆளாகியிருந்த பள்ளர் குல ஆண்களுக்கும் பெண்களுக்கும் அந்தந்த ஊர் பெருந்தெய்வங்களின் பெயர்களைச் சூட்டி எழுதப்பட்ட பள்ளுகளின் மூலம் கோயில் சொத்துகளை எளிதில் மீட்டு வழக்கம் போல் அம் மக்களின் உழைப்பை கோயில் பெருச்சாளிகளால் தொடர்ந்து சுரண்ட முடிந்தது. பண்டை வாணிகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் அல்லது தலைமையேற்கத் தயங்கி அல்லது அஞ்சி வரலாறு தந்த வாய்ப்புகளைப் பறிகொடுத்துள்ளனர். அதனாலேயே மீண்டும் மீண்டும் இந்த ஏமாற்று வரலாறு நெடுகிலும் தொடர்ந்துள்ளது.

20ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பார்ப்பனர்கள் தொடங்கிய தமிழியக்கம் மறைமலையடிகளால் திட்டவட்ட வடிவம் பெற்றது. ஆனால் சராசரி தமிழ் மக்களின் பக்கம் இருப்பதைவிட மேல் சாதியரான பார்ப்பனர் பக்கம் இருப்பதே தம் சாதி நலனுக்கு உகந்ததென்று வையாபுரிப் பிள்ளை, சிவராச பிள்ளை போன்றோர் தமிழைத் தாழ்த்துவதற்காக சமற்கிருதத்தை உயர்த்தியும் சமற்கிருதத்தை உயர்த்துவதற்காகத் தமிழைத் தாழ்த்தியும் செயற்பட்டனர்.

நயன்மைக் கட்சி காலத்தில் சாதிவாரி ஒதுக்கீட்டு அடிப்படையில் கிடைத்த வேலைவாய்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு கல்வி வாய்ப்பு இல்லாததால் பார்ப்பனரல்லாதாரிடையில் ஒதுக்கீட்டினால் போட்டி எதுவும் இல்லை. ஆனால் கல்வி வசதிகள் பெருகிவந்த சூழலில் முற்பட்ட வகுப்பினர்  பட்டியலில் பார்ப்பனரோடு  அடைக்கப்பட்ட தாங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரோடு போட்டியிட வேண்டும் என்பதை முன்னுணர்ந்து தங்களைப் பார்ப்பனரோடு சிவனிய வெள்ளாளர்கள் இணைத்துக்கொண்டனர். அதன் விளைவுதான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழின் முன்மை, முதன்மைகள் பற்றிக் குரலெழுப்பிய மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்ற அங்கிருந்த சிவனிய வெள்ளாளர்கள் முழுமூச்சாகப் பாடுபட்ட நிகழ்வு.

தூய தமிழ் இயக்கத்தில் மறைமலையடிகளுக்கும் பாவாணருக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. தூய தமிழ்ச் சொற்களுக்கு அடிகள் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டார். பாவாணர் தான் வளர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஊர்ப்புறத்து மக்களிடையில் புழங்கிய தூய தமிழ் வழக்குகளைத் தாராளமாகப் பயன்படுத்தினார். அத்துடன் அவர் மொழிப்புலமை வாய்ந்த மறைமலையடிகளிலிருந்து சொற்பிறப்பு ஆய்வாளர் என்ற சிறப்பிலும் வேறுபடுகிறார்.

பாவாணரின் பணிகள் உலகத்தின் கண்களுக்கு வெளிப்பட்ட காலம் திராவிட இயக்கத்தின், போலியானாலும் அன்றைய சூழலில் தேவைப்பட்டதாகிய, தமிழ் மீட்பியக்கத்தின் உச்ச கட்டமாகும். தமிழ் மொழி பற்றிய கல்வி, ஒருவர் அல்லது இருவரை ஆசிரியராகக் கொண்டு தனிப்பட்ட முறையில் அவரவர் சூழ்நிலைக்கேற்பக் கற்கும் நிலையிலிருந்து ஒன்றிரண்டு கல்வி நிறுவனங்களில் புலவர் பட்டம் பெறுவது என்ற கட்டத்தைத் தாண்டி பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு என்ற கட்டத்தில் நின்றது. எண்ணற்ற பட்டந்தாங்கிகள் தங்கள் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகளைத் தேடி  நின்றனர்
. 
















அஞ்சல் துறையில் பணியாற்றிய துரைமாணிக்கம் அவர்கள் அத் துறையில் இந்தி படித்தோருக்கு பல்வேறு முன்னுரிமைகள் வழங்குவது கண்டு மனம் கொதித்திருந்த சூழலில் 1965ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால் பணியிலிருந்து விலக நேர்ந்த பின் கடலூரில் தென்மொழி இதழைத் தொடங்கி நடத்திவந்தார். தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் தமிழ்ப் பட்டந்தாங்கிகளும் அவரைத் தேடி வந்தனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகள் தென்மொழியில் வந்ததால் அவர் தமிழ், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நடுவில் பெரும் ஈர்ப்பைப் பெற்றார்.

ஆங்கிலர் ஆட்சிக் காலத்திலிருந்தே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழாசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களை விடக் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது. அவர்கள் தலைமையாசிரியர்களாகவோ கல்லூரி முதல்வர்களாகவோ முடியாது. தமிழ் கற்றோரின் இந்தப் பின்னணியில் பாவாணரும் பெருஞ்சித்திரனாரும் தமிழ் இயக்கத்தின் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இந்தச் சூழலில் பேரவைக் கட்சியே இந்தக் கட்டுப்பாடுகளை உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் தமிழ்த் தேசிய நாடகம் நடத்திய திராவிடக் கட்சியின் ஆட்சி தமிழ் ஆசிரியரின் சம்பளம், பிற சலுகைகளைப் பிற ஆசிரியர்களுக்கு இணையாக்க வேண்டியதாயிற்று. தலைமையாசிரியர்களாகவும் கல்லூரி முதல்வராகவும் வர முடிந்தது.

தமிழ்ப் பட்டந்தாங்கிகள் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாகவும் வந்தனர். அப்படி முதன்முதலில் வந்தவர் பண்டிதர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். பேரவைக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட மதுரைப் பல்கலைக் கழகத்தில் அக் கட்சி சார்பாளரான அவர் பதவி பெற்றது இயல்பே. அடுத்து வந்தவர் பண்டிதர் மு.வரதராசனார். இவர் தமிழ் மொழி பற்றிய சிறந்த ஆக்கங்களைப் படைத்து திராவிட இயக்கத்தினரின், குறிப்பாக படித்த இளையோர் நடுவில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கி மேன்மேலும் படித்து பண்டிதர் பட்டம் வரை பெற்றவர். இவ்வாறு வேலையிலிருந்துகொண்டே மேற்படிப்பு படிக்க ஆசிரியர்களுக்கே வாய்ப்பு மிகுதியாக அன்று இருந்தது. இருப்பினும் அவர் துணை வேந்தர் பதவி பெற வேறொன்றும் செய்ய வேண்டி இருந்தது. அதாவது தமிழ் இலக்கிய வரலாறு ஒன்று எழுதினார். அதில் தமிழின் முன்மை, முதன்மைகளுக்கு மாறான கருத்துகள் இருந்ததாக பெருஞ்சித்திரனார் குறை கூறினார். ஆனால் அதுதான் இந்தியாவில் தமிழ் பட்டந்தாங்கி ஒருவர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஆவதற்கான தகுதி என்பது பலருக்குத் தெரியாது. திராவிட இயக்கத் தமிழ் அறிஞர்களில் ஒருவரான, தமிழ் நலனில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடந்தராதவரான சி.இலக்குவனாருக்கு அப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மு.வ. அந்த இடத்தைப் பிடித்தது தற்செயலானதல்ல. தி.மு.க.அரசில் கல்வி அமைச்சராக இருந்த “நாவலர்” க.நெடுஞ்செழியனது செயற்பாடுகள் தமிழ் நலனுக்கு எதிரானவை என்று, அதாவது “நாவலர் ஆங்கிலத்தின் காவலர்” என்று அவர் வெளிப்படபையாகக் குற்றம் சாட்டியது ஒரு சிலருக்கேனும் தெரிந்திருக்கலாம். அதுதான் அவர் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் தமிழர், தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் முன்மை, முதன்மை ஆகியவை குறித்த அவரது விட்டுக்கொடா நிலைப்பாடுதான் அவரை அப் பதவிக்குத் தகுதியற்றவராக்கின என்பதுதான் உண்மை. இந்தியாவிலுள்ள நாகரிகங்களெல்லாம் இங்கு “ஆரியர்” வந்தேறியதாகக் கூறப்படும் கி.மு.2500க்குப் பின் தோன்றியவையே என்றும் இன்று இந்தியாவெங்கும் நிலவும் பண்பாடுகள், அம்மண சமயத்தைத் தோற்றுவித்தவராகிய வர்த்தமான மகாவீரர் காலத்துக்குப் பின் உருவானவையே என்றும் நூலெழுதியோ, பிற வகையிலோ நிறுவ வேண்டும். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு நெல்லை சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணிபுரிந்த பண்டிதர் க.ப.அறவாணன். தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுத் தந்தவர்கள் அம்மணர்களே என்று நிறுவ நூல்களின் ஒரு தொடரையே அவர் எழுதியுள்ளார். இவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக்கொண்டவர். ஆனால் தூய தமிழ் இயக்கத்தினரிடையில் ஒன்றும் பிற அரங்குகளில் அவற்றுக்கேற்பவும் அரங்காடுவதில் வல்லவர். இவராவது தன் துய தமிழ் இயக்கப் பின்னணியை எங்காவது ஓரிடத்தில் காட்டுவார். அப்படிக் காட்டினால் தம் வளவாழ்வு பறிபோய்விடுமோ என்று “பாவாணரா? பெருஞ்சித்திரனாரா? யார் அவர்கள்?” என்று கேட்பவர்கள் பலர் ஆங்காங்கு மறைந்து கிடக்கின்றனர். ம.கோ.இரா. தன் ஆட்சிக் காலத்தில் பல்கலைக் கழகங்கள் பலவற்றை உருவாக்கிய சூழலில் அவற்றில் துணை வேந்தர், தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர், விரிவுரையாளர் பதவிகள் தாராளமாக வாய்த்ததால் இப்போது தமிழ்ப் பட்டந்தாங்கிகளுக்கு பாவாணர், பெருஞ்சித்திரனார், தூய தமிழ் இயக்கம் ஆகியவற்றின் பின்னணி தேவையில்லாமல் போயிற்று. எனவே இன்று இவை பற்றி அவர்கள் எதுவும் அறியார்.

தூய தமிழ் இயக்கத்தைப் பரவலான ஒரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் பாவாணரைத் தலைவராகவும் தன்னைப் பொதுச் செயலராகவும் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார் பெருஞ்சித்திரனார். சில நாட்களிலேயே அதில் அவர் ஊழல் புரிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி தமிழியக்கம் என்ற பெயரில் போட்டி இயக்கம் ஒன்று தமிழ்க்குடிமகன் தலைமையில் உருவானது. இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் கல்லூரித் தமிழ்ப் பேராசியர்களாவர். அதாவது பெருஞ்சித்திரனாரின் முனைப்பியம்(தீவிரவாதம்) தம் எதிர்காலப் பதவி நலன்களுக்கு எதிராகிவிடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது என்பதில் ஐயமில்லை. அத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் மொழி நலனுக்கு எதிரானது என்ற பெருஞ்சித்திரனாரின் குற்றச்சாட்டு கணிசமான இளைஞர்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிவான நிலையில் அதை உடைக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த கருணாநிதியின் உட்கை இதில் உண்டு என்பதிலும் ஐயமில்லை. அவ்வாறே தமிழ்க்குடிமகன் தி.மு.க.வில் இணைந்து சட்டமன்ற அவைத்தலைவர், அமைச்சர் பதவிகளைப் பெற்றார்.

தமிழர்கள் நல்வாழ்வு பெற வேண்டுமாயின் தமிழ் மொழி விடுதலை பெற வேண்டும்; தமிழ் மொழி விடுதலை பெற வேண்டுமாயின் தமிழகம் அரசியல் விடுதலை பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை எய்துவதற்காக மதுரையில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார் பெருஞ்சித்திரனார். அதற்கு பெரியார் தலைமை தாங்குவதாக அறிவித்தார். ஆனால் பெரியார் வர மறுத்துவிட்டதால் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கு உரிமையாளர்கள் அரங்கத்தைப் பூட்டிவிட்டனர். நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களைக் காவல்துறையினர் சிறையில் அடைக்க பெருஞ்சித்திரனார் கையெழுத்திட்டு வெளியே வந்துவிட்டார்.

பின்னர் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்றோர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார் பெருஞ்சித்திரனார். பேராசிரியர்கள் அ.மார்க்சு, ப.கல்யாணி போன்ற “தன்னார்வத் தொண்டர்கள்” எனப்படும் அரசு உளவாளிகள் ஏற்பாடு செய்ய, பா.ம.க. “மருத்துவர் ஐயா” கலந்துகொண்ட தமிழகம் பிரிந்து செல்லும் தன் தீர்மானிப்பு உரிமை மாநாட்டில் பெருஞ்சித்திரனார் கலந்துகொண்டார். உளவாளிகள் தப்பித்துக்கொண்டனர். “மருத்துவர் ஐயா” சம்பந்தி உறவுள்ள பேரவைத் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி வீட்டில் அடைக்கலமானார். பெருஞ்சித்தரனார் மட்டும் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார். சிறையில் அவர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களின் விளைவாகவே அவர் உடல் நலம் குன்றி உயிரிழந்தார் என்று கருதப்படுகிறது.

பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோர் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டனர், நான் அவர்கள் செய்யாது விட்ட பணியை முடிக்கிறேன், என்னைத் தொடர்ந்து வாருங்கள் என்று விடுத்த அழைப்பை நம்பி வந்தவர்கள், அவரது குழப்பமான “ஓரிறை”க் கொள்கையைக் கூடப் பொருட்படுத்தாது தமிழ்த் தேசிய உணர்வினால் அவரைப் பின் தொடர்ந்தவர்கள் ஆகியோருக்கு கருணாநிதி – ம.கோ.இரா. பூசலில் கருணாநிதி பக்கம் நின்று அவர் குரல் கொடுத்தது, தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலங்களில் தொடர்ந்து கருணாநிதியைக் குறைகூறி தென்மொழியில் எழுதுபவர் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வலியுறுத்துவது போன்ற செயல்கள் அவரது பற்றாளர்களிடையில் குழப்பத்தையும் கசப்பையும் ஏற்படுத்தின.
 
தேசிய விடுதலைப் போராட்டம் என்பது கடைத்தெருவுக்குச் சென்று வீட்டுக்குப் பண்டம் வாங்குவது போன்ற எளிய ஒரு நடைமுறை எனப் புரிந்துகொண்டவர் போல் செயற்பட்டார் பெருஞ்சித்திரனார். அத்துடன் தழிழ்த் தேசியம் என்பதற்கு ஒரு நில எல்லை உண்டு என்று நினைத்தாரா என்பதே ஐயத்துக்குரியது. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்று அவர் தன் அரசியல் இயக்கத்துக்கு வைத்த பெயர் நமக்கு இந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
தேசியம் பற்றிய வரையறையில் அவர் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள்  விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எவ்வித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.

இந் நிகழ்ச்சிக்குப் பின், தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்க்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.

இன்று மார்க்சிய - இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய, சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர்தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.

இவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக் கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக் கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய பெருஞ்சித்திரனாரின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தவையே
தொடரும்.....

0 மறுமொழிகள்: