21.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 29

26. நூல்களைத் திரட்டி நெருப்பில் போடு! ஓலைச் சுவடிகளை ஓடையில் எறி!
(தோரா. தி.பி. 2ஆம் நூற்றாண்டு)
            நாம் இப்போது புது மதுரையினுள் நிற்கிறோம். பாண்டியன் கோட்டைக்குள் சென்றுகொண்டிருக்கிறோம். இதோ இதுதான் அரண்மனை. அதன் அருகே நிற்கும் மண்டபம்தான் மூன்றாம் கழக(சங்க) மண்டபம். அதனுள்ளே செல்லலாம் வாருங்கள்! மண்டபத்தின் ஒரு கோடியில் அகன்ற ஓர் அறை உள்ளது. அங்கே செல்வோம். நம் பின்னால் யாரோ பேசும் குரல் கேட்கிறதே! ஆம், ஒரு புலவர் தன் பின்னால் ஒருவன் தலையில் ஒரு துணிக்கட்டுடன் தொடர வாயிற் காப்போனிடம் ஏதோ கேட்கிறார். என்ன கேட்கிறார்?

            சிலம்பா! புலவர் உருத்திரசன்மர் உள்ளாரா?

            ஆம் புலவரே! ஏட்டறையினுள் உள்ளார். உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். புலவர் முன் செல்லத் துணி மூட்டை தூக்கியவன் தொடர்கிறான். நாம் செல்லவிருந்த அறைக்குள்ளேயே நுழைகிறார்கள் அவர்கள்.

            உள்ளே ஒரு முதியவர் ஒரு மணை மீதமர்ந்து ஏடுகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறார். அறை முழுவதும் எண்ணற்ற ஏட்டுச் சுவடிகள் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்த புலவரைக் கண்டதும் முதிய புலவர், வா கூடலூர்த் தம்பி! உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

            வணக்கம் ஐயா! ஏனப்பா, கட்டை இங்கே இறக்கி வைத்துவிட்டுப் போகலாம். மற்றவர்களெல்லாம் எங்கே ஐயா?

            உருத்திர சன்மர்: உணவுண்ணச் சென்றிருக்கிறார்கள். நீ உணவை முடித்துவிட்டாயா?

            கூடலூரார்: ஆம் ஐயா!

            உரு.: புதிய ஏடுகள் ஏதாவது கிடைத்ததா தம்பி?

            கூட.: ஆம் ஐயா! பல புதிய ஏடுகள் கிடைத்திருக்கின்றன (துணி மூட்டையைப் பிரித்து ஏடுகளை எடுத்து வைக்கிறார்)

            உரு.: புதிதாகக் கிடைத்துள்ள பாடல்களை ஒவ்வொன்றாகக் கூறு.

            கூட.: இது அகத்துறைப் பாடல். அதியமான் பாண்டியனைப் போரில் வென்று அவன் தலைநகர் மணலூரில் அவனது அரிமா இருக்கையில் அமர்ந்த நிகழ்ச்சியை உவமையாகக் காட்டி மாமூலர் பாடிய பாடல்.    

            உரு.: மூவேந்தர் எவரையும் குறுநில மன்னர் எவரும் வென்றதாகக் கூறும் படைப்பு எதையும் நம் தொகுப்பினுள் கொண்டுவருவது நம் திட்டத்தில் கிடையாது. குறுநில மன்னர் அனைவரையும் மூவேந்தர்கள்தாம் இணைந்து திட்டமிட்டு அழித்துவிட்டனரே.
            கூட.: அதன் பலனைத்தான் கண்டுவிட்டோமே! நம் வடதிசைக் காவல் இருந்த அவர்களை இழந்து திறந்த மடமாகத் தமிழகம் ஆகிவிட்டதே!

            உரு.: இது கவைக்குதவாத பேச்சு. இத்தோடு இதை நிறுத்திவிட்டு அடுத்த ஏட்டை எடு.

கூட.: அடுத்ததும் அகத்துறைதான், 13 அடிகளுக்கு மேலே உள்ளது.

            உரு.: கிளவி கூறு!

            கூட.: ஒருவன் ஒரு பெண்ணிடம் அவள் குழந்தை மூலமாகத் தன் காதலைத் தெரிவிக்கிறான்.

            உரு.: இது பெருந்திணை; பொருந்தாக் காமம்; கீழோர் மொழி. இதை விட்டுவிடு!

            கூட.: இது கைம்பெண் ஒருத்தி ஒருவன் மீது தன் காதலைத் தெரிவிக்கும் பாடல்.

            உரு.: வேண்டாம், இதுவும் அதுவே.

            கூட.: அடுத்தது இசை நுணுக்கங்கள் பற்றிய ஒரு சிறந்த நூல்.

            உரு.: அதையும் விட்டுவிடு!

            கூட.: குதிரை வளர்த்தலும் பயில்லும் பற்றிக் கூறும் நூல் அடுத்தது.

            உரு.: அதுவும் வேண்டாம்

            கூட.: (சிறிது எரிச்சலுடன்) என்ன ஐயா இது? நான் அருமுயற்சியில் கொண்டு வந்தவற்றை எல்லாம் இன்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களே!

            உரு.: தம்பி! இசை நுணுக்கமும் பரிபயிலலும் அகத் துறையினுள்ளோ புறத்துறையினுள்ளோ அடங்கவில்லையே.

            கூட.: பெருந்திணை அகத்துறைதானே?

            உரு.: உண்மைதான்! தொல்காப்பியர் காலத்தில் அவர் அவற்றுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் இன்று அத்தகைய பாடல்களை எல்லாம் ஒழுக்கக் கேடானவை என்று ஒதுக்கிவிடுவர்.

            கூட.: இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் மணவிலக்கும் மறுமணமும் செய்கிறார்கள் ஐயா!

            உரு.: உலகு என்பது உயர்ந்தோர் மேற்றே என்பதை மறந்துவிடாதே தம்பி! உயர்குலத் தொழுக்கத்தை மட்டுமே நாம் போற்ற வேண்டும். கீழோர் ஒழுக்கத்தைப் பரப்பினால் நம் பிறங்கடைகளின் ஒழுக்கம் குன்றிவிடும். மேலும், தொல்காப்பியர் கூட ஐந்தினை அளவுக்குக் கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் விரித்துக் கூறாததையும் எண்ணிப்பார்!

            கூட.: உயர்குடி என்று நம்மைக் கூறிக்கொண்டாலும், அவரவர் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்த ஒழுக்கம் இருக்கிறது. எனவே தமிழ்க் குடிகளாகிய அவர்கள் மரபும் நம் தொகுப்பில் இடம்பெற வேண்டாமா?

            உரு.: உயர்குடியராகிய நாமே அவர்களுக்கு வழிகாட்டி. எனவே அவர்களின் இழி ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

            கூட.: சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால் இசை நுணுக்கம், பரிபயிலல் முதலிய அறிவு நூற்களை ஏன் ஒதுக்குகிறீர்கள்? அவற்றை மக்கள் நலங் கருதியாகிலும் தொகுக்கலாமே.

            உரு.: தொல்காப்பியம் வகுத்த நெறியினின்றும் பிறழாமலே நம் தொகுப்பு நடைபெற வேண்டுமென்று நானும் அரசரும் கருதுகிறோம்.

            கூட.: அப்படியானால் பெருந்திணையை விலக்குவது பிழையில்லையா?

            உரு.: காரணம் முன்பே கூறிவிட்டேனே தம்பி. தொல்காப்பியத்தில் கூறப்பட்ட துறைகளில் ஒன்றுக்கான பாடல்களை விட்டுவிடுவது அதன் நெறிகளை மீறுவதாகாது. ஆனால் அதே வேளையில் அதில் கூறப்படாதவற்றைச் சேர்ப்பது அதை மீறுவதாகும்.

            கூட.: காலத்துக்குத் தக்கவாறு ஒன்றைக் குறைக்க முடியுமானால் அதே போன்று ஒன்றைக் கூட்டவும் அணியமாக இருக்க வேண்டும்.

            உரு.: நம் விருப்பம்போல் கூட்ட முடியாது தம்பி! கழகத்தை(சங்கத்தைக்)க் கூட்டி ஓர் இலக்கண நூலை அரங்கேற்ற வேண்டும். இன்றிருக்கும் சூழ்நிலையில் இது நடப்பது அரிது.

            கூட.: நான் செய்யட்டுமா ஐயா?

            உரு.: என்ன கூடலூர்த் தம்பி! நீ எனக்கே அறிவுரை கூறி அறைகூவல் விடத் துணிந்துவிட்டாயா?

            கூட.: இல்லை ஐயா! கணிதம், மருத்தவம், கணியம், விலங்கு நூல், உயிர் நூல், போர்க் கலை, நாவிகக் கலை, சிற்பக் கலை, இசைக் கலை, நாடகக் கலை என்று எண்ணற்ற துறைகளில் மக்களுக்கு உதவும் நூல்களைப் பாதுகாத்து வைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமே என்ற துடிப்பாலேயே நான் வாதிடுகிறேனய்யா!

            உரு.: இருந்தாலும் யாரிடம் உரையாடுகிறோம் என்பதும் நினைவிருக்கட்டும். தொழில்துறை நூற்களை அவ்வத் துறையினரே பேணிக் கொள்வர். அகப் புற நூல்களைத் தொகுப்பதே நம் வேலை.

            கூட.: அன்று காம நூற்சுவடி ஒன்று கொடுத்தேனே, பார்த்துச் சொல்கிறேன் என்றீர்களே!

            உரு.: படித்துப் பார்த்தேன். அதன் கருத்துகள் இளைஞர்களின் உள்ளங்களைக் கெடுத்துவிடும்.

            கூட.: (ஏதோ வாய்க்குள் முணுமுணுக்கிறார்).
            உரு.: என்ன முணுமுணுக்கிறாய்?

            கூட.: (முகத்தில் புன்னகையுடன் தயங்கியபடி) இல்லை ஐயா, நீங்கள் நூலை நன்றாகப் படித்துச் சுவைத்து விட்டீர்கள். அடுத்தவர் மட்டும் படிக்கக் கூடாதென்கிறீர்கள். பெருந்திணைப் பாடல்களை நாம் தொகுக்கா விட்டாலும் வேறெவராவது தொகுக்கலாமல்லவா? அப்படியானால் நம் எச்சரிக்கை பயனற்றுப் போகுமல்லவா?

            உரு.: நாம் தொகுத்த நூல்கள் தவிர்த்த பிற ஏடுகளை ஆறுகளிலும் நெருப்பிலும் எறிந்து விடுமாறு மக்களுக்குக் கூறுவோம். அவ்வாறு செய்வது புண்ணியம் என்றும் கூறுவோம்.

            கூட.: (ஆத்திரம் வெடிக்கும் குரலில்) ஐயா, இது கொடுமை. ஏதோ பொருளற்ற உங்கள் பிடிவாதத்தால் தமிழிலுள்ள உயர்தனிச் செல்வங்களை ல்லாம் நெருப்பிலும் ஆற்றிலும் வீசியெறிவதா? நாளை தமிழில் இந்த வெறும் காமச் சண்டைப் பாடல்களைத் தவிர வேறு நூலே இன்றிப் போய்விடுமே ஐயா! அகவை முதிர்ந்த உங்கள் எண்ணம் மழுங்கிப் போய்விட்டதா?

            உரு.: கூடலூரா, பார்த்துப் பேசு! நான் யாரென்று நினைக்கிறாய்? நான் உனக்குச் செய்த நன்றியை மறந்து விட்டாயா? சேர மன்னன் பெருஞ்சேரலிரும்பொறை சில நூல்களைத் தொகுக்க வேண்டும்; ஓர் ஆள் தாருங்கள் என்று சொல்லியனுப்பினான். நான் உன்னைப் பரிந்துரைக்க எண்ணினேன். அது எவ்வளவு தவறான எண்ணம் என்பது இப்போதுதான் தெரிகிறது.  எப்படியாவது தொலைந்து போ!

            கூட.: என்னவோ ஐயா, என் உணர்ச்சிகளைக் கொட்டி விட்டேன். இனி உங்கள் விருப்பம். இனி உங்கள் சொல்லுக்குப் பகரம் எதுவும் நான் கூறப் போவதில்லை.

            இருவரும் அமைதியாகின்றனர்.

நாம் போவோம். இப்போது நாம் கண்ட காட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நம்ப முடியவில்லையா? ஏடுகளை நெருப்பிலும் நீரிலும் எறியச் சொன்னவர்கள் பார்ப்பனர்களென்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தோம் என்கிறீர்களா? அவர்கள்தான் எறியச் சொல்ல வேண்டுமென்பதில்லை. நம்மவர்களுக்கும் அந்த எண்ணம் ஏற்பட வழியிருக்கிறது. எப்படி?

            முதலில் சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களும் அவர்களோடு வந்த மக்களும் இன்றைய தமிழகத்தைப் பொறுத்த வரை வந்தேறிகள்.

            ஏற்கனவே கடல் வடக்கு நோக்கி முன்னேற முன்னேற நிலப் பரப்புகள் கடலுக்குள் அமிழ அமிழ தமிழர்களின் குமரிக் கண்ட முன்னோர்கள் இன்றைய அரபுக் கடல் வழியாக அவந்தி எனும் இன்றைய மும்பை, குசராத்து, பஞ்சாபு கடற்கரைகள், அதையும் தாண்டி எரிதிரைக் கடல் எனப்படும் செங்கடல் வரையுள்ள கடற்கரைகள் வழியாக நிலத்தில் இறங்கி மேற்கு நோக்கி நகர்ந்து மேற்காசியாவினுள்ளும் மத்தியதரைக் கடல் எனப்படும் நண்ணிலக் கடலையும் தாண்டி ஐரோப்பாவினுள்ளும் நுழைந்தனர். வட ஆப்பிரிக்காவினுள் நீலாற்றின் கரையை அடைந்து பண்டை ஏகுபதியப் பண்பாட்டுக்கு வித்திட்டனர். பினீசியர்கள் எனப்படும் தென்னிந்தியக் கடலோடிகள் கடல் மூலம் தி.மு. பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பே நண்ணிலக் கடற்கரையில் குடியேறி பண்டை ஐரோப்பிய நாகரிகத்துக்கு அடித்தளம் இட்டனர்.

            தென்கடலில் காந்தாரத்தை ஆண்ட குமரிக் கண்டத்தில் உட்பட்ட நாக நாட்டின் காந்தாரத்திலிருந்து கடற்கோளுக்குத் தப்பி கட்சு வளைகுடாவில் அவந்தி நாட்டில் கரையேறிய மக்கள் (மணிமேகலை, பழம் பிறப்புணர்ந்த காதை பார்க்க) சிந்தாற்றின் மணல்வெளிகள் வழியாக முதலில் வடமேற்கு நோக்கியே சென்றனர். அங்கு வடமேற்கு இந்தியாவில் பண்டையில் இருந்ததாகக் கூறப்படும் சமற்கிருதப் பல்கலைக் கழகம் அமைந்திருந்த காந்தாரம்(இன்றைய கந்தகார்) நகரைத் தங்கள் பழைய தலைநகரின் நினைவாக நிறுவினர். பின்னர் இன்றைய தமிழகத்தின் மேலை மற்றும் கீழைக் கடற்கரைகளில் அலையலையாகக் குடியேறி, ஏற்கனவே நாம் காட்டியிருப்பது போல்[1] ஊடுருவி தங்களை விட குறைந்த வளர்ச்சி நிலையிலிருந்த மக்களைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இவ்வாறு சேரர்களும் சோழர்களும் இன்றைய தமிழகத்தில் குடியேறிவிட்ட நிலையில் இறுதியாக ஏறக்குறைய தி.மு.1700இல் நிகழ்ந்த இறுதிக் கடற்கோளில் கதவபுரத்திலிருந்து வெளியேறிய பாண்டியர்கள் சேர, சோழர்களை வடக்கு நோக்கி நகர்த்தி முதலில் கொற்கையை அடுத்து அமைந்திருக்கும் மணலூரில் தற்கால ஏற்பாடாக அமர்ந்து இறுதியில் கடற்கோள் அச்சத்துக்கு இடமில்லா புது மதுரையில் தலைநகரையும் மூன்றாம் தமிழ்க் கழகத்தையும் அமைத்தனர்[2]. மேலை, கீழைக் கடற்கரைகளில் முறையே கொல்லம், பூம்புகார் நகரங்கள் அழிந்ததற்கு சான்றுகள் நம் மரபிலேயே உள்ளன. புகார், மாமல்லபுரம் ஆகிய கடற்கரைகளிலிருந்து கணிசமான தொலைவு கடலுக்குள் காணப்படுபவையான நகரங்களும் மேலைக் கடற்கரையில் கட்சு வளைகுடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள துவரை நகரும் மேலே நாம் கூறியுள்ள கருத்துகளுக்கு வலுச் சேர்ப்பவை[3].

            இவ்வாறு மூவேந்தர்கள் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பாணர், துடியர், பறையர், கடம்பர் என்போரைக் குக்குலப் பூசராகக் கொண்ட நான்கு வகை மக்கள் தமிழத்தினுள் வாழ்ந்தனர். பறையரைப் பூசகராகக் கொண்டோர் புலையர் எனப்பட்டனர். அது போல கடம்பர் கடையரின் பூசகராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. துடியர் கோடாங்கிகளின் பூசகராக இருக்கலாம். இவர்களுக்கும் மூவேந்தர்களுக்குமான மோதல் ஒரு முடிவை எட்ட ஏறக்குறைய 13 நூற்றாண்டுகள் ஆகியிருக்கின்றன.

            தென்னமெரிக்காவில் புகுந்த ஐரோப்பியரான பானியரும் போர்ச்சுக்கீயரும் ஓர் உள்நாட்டினனைத் தங்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்வதற்கு வைக்கும் கட்டுறவு அவர்கள் வந்தேறிகளின் பண்பாடுகளை ஏற்றுக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே. அதேவேளை ஒரே ஒருமுறை “நிறமுள்ள” மக்களோடு கலப்பு ஏற்பட்டால் அதன் பின்னர் எத்தனை தலைமுறைகள் வெள்ளை இனத்தவரோடு கலப்பு இருந்தாலும் அவர்களை நிறமுள்ளவராக ஒதுக்கிவைக்கும் அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் எனப்படும் அமெரிக்காவின் நடைமுறைக்கு மாறானது இது[4]. அது போலவே தெற்கிலிருந்து வந்த “திராவிட”[5] வந்தேறிகள் மூலக் குடிமக்களைத் தங்கள் முழு ஆளுகைக்கு உட்படுத்தியதற்கு முந்தைய வரலாற்றுத் தடயங்களை அழிக்க முயன்றுள்ளனர். அவர்களை மீறி தொகுப்புகளில் இடம்பெற்றவை இன்று நமக்கு அரிய ஆவணங்களாகப் பயன்படுகின்றன. அத்தகைய ஒன்றுதான் புறம். 335, அடலருந்துப்பின்… எனத் தொடங்கும் பாடல். வந்தேறிகளின் பண்பாட்டுக்கு எதிராக மூலக் குடிகளின் பண்பாட்டை எடுத்துரைப்பது அதன் சிறப்பு.

            திருவள்ளுவர் வரலாறாக ஒரு கதை கூறப்படுவதை நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். பகவன் என்ற பார்ப்பனன் ஒருவன் ஆதி என்ற புலைப் பெண்ணை ஒரு கட்டுறவுடன் மணக்கிறான். தமக்குப் பிறக்கும் குழந்தைகளை அங்கங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட வேண்டுமென்பதுதான் அது. அவ்வாறு பிறந்த குழந்தைகள்தாம் கபிலர், அதியமான், வள்ளி, உறுவை, வள்ளுவர், அவ்வை, உப்பை ஆகிய எழுவர். இவர்களில் வள்ளியும் ரேணுகை என்றும் மாரியம்மை என்றும் அறியப்படும் உப்பையும் மூலக்குடிகளின் தெய்வங்கள். பிறருள் அரசனான அதியமானும் புலவர் நால்வரும் என அனைவரும் மூலக் குடிகளைச் சேர்ந்தவர்கள். வந்தேறிகளை பார்ப்பனனான பகவனும் மூலக்குடிகளை “ஆதி”யளாகிய புலத்தியும் குறியீடுகளாக நின்று வந்தேறிப் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட மூலக் குடிகள் இந்த எழுவரும் என்று விளக்குகிறார்கள்.

            வந்தேறிகளால் துரத்தப்பட்டு வடக்கே சென்ற மூலக்குடிகள் பின்னர் வடக்கிலிருந்து சமற்கிருதத்தைக் கையிலெடுத்து பல்லவர்களாக வந்தனர். அதனால்தான் தொடக்கத்தில் அவர்கள் தங்கள் அரச ஆசான்களாக(அரச குரு) வள்ளுவர்களை வைத்திருந்தனர். வடக்கத்தி அம்மண ஒற்றர்களால் ஒன்றிணைக்கப்பட்ட, முன்னாள் குறுநில மன்னர்களின் கைவிடப்பட்ட குடிமக்களான கள்ளரும் பிறருமான களப்பிரர் எனக் குறிப்பிடப்படுவோரால் துரத்தப்பட்ட சோழர்கள் பின்னர் தெலுங்குச் சோழர்களாகச் சமற்கிருதத்துடன் வந்தனர்.

சேர, சோழ, பாண்டியர்கள் வந்தேறிகள் என்பதையும் அவர்கள் நுழைந்த போது அதியமான் போன்ற மூலக்குடி அரசர்கள் வலிமையாக இருந்தனர் என்ற உண்மைகளையும் மறைக்கவே கழக நூல் தொகுப்புகளிலிருந்து தி.மு.4ஆம் நூற்றாண்டுக்கு முந்திய ஆக்கங்களை அழித்திருக்கிறார்கள். அத்துடன் தங்களது குமரிக் கண்ட வரலாற்றையும் வேத, சமற்கிருத ஆக்கங்களுக்குள் புதைத்து வைத்துள்ளனர். கழக இலக்கியத் தொகுப்பில் பங்கேற்ற உருத்திரசன்மன் என்பதன் மூல வடிவமான ருத்ர சர்மா இவன் ஒரு பார்ப்பான் என்பதைத் தெளிவாக்குகிறது. கழக இலக்கியத் தொகுப்பில் வரும் பாணாற்றுப்படை எதுவும் பாணர்களால் பாடப்படவில்லை. அவற்றைப் பாடியோர் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே தோன்றுகிறது.

மூலக்குடியினரில் பறையரைப் பூசகராகக் கொண்ட புலையர்கள் மிகுதியாக இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. மலையிலிருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரும் மலை நெல் இயற்கையாக வளர்ந்து அதிலிருந்தும் தொடக்க நிலையிலிருந்த முளைப்பாரி உத்தியிலும்[6] கிடைத்த சிறிதளவு நெல்லையும் தெய்வத்துக்கே படைத்தனர் என்பது
அடலருந்துப்பின் குரவே
                        தளவே குருந்தே முல்லை என்ற
                        இந்நான் கல்லது பூவும் இல்லை
                        கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
                        சிறுகொடிக் கொள்ளே அவரையொடு
                        இந்நான்கல்லது உணாவும் இல்லை
                        துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
                   இந்நான் கல்லது குடியுமில்லை
                        ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
                        ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
                        கல்லே பரவின் அல்லது
            நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே
என்ற மேற்படி பாடலிலிருந்து புலனாகிறது.

1960களின் தொடக்கத்தில் எட்டயபுரம் பகுதியில் பணியாற்றிய போது பொங்கல் போன்ற திருநாட்களில் மட்டும் அங்குள்ள மக்கள் “நெல்சோறு” உண்டதை நான் கண்டிருக்கிறேன். “பசுமைப் புரட்சி”க்குப் பின்தான் அனைவரும் அரிசிச் சோறு உண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது “நெல் சோறு” என்பது அரிதானது, அதனால் கடவுளுக்கென்று அது ஒதுக்கப்பட்டிருந்தது[7].

அதாவது மாட்டிறைச்சிக்கு எதிராக இயக்கம் தொடங்கும் அளவுக்கு இங்கு வேளாண்மை வளர்ச்சியடையவில்லை. மாடுகளை நெருப்பிலிட்டு அழிக்கும் வேள்விகளும் வளரவில்லை. மாறாக வளர்ச்சியடைந்த இரு கடற்கரைகள் வழியாகவும் தோல் ஏற்றுமதி வளர்ந்திருக்கும். அது அவர்களின் பொருளியலை மேம்படுத்தி தெற்கிலிருந்து வந்த “திராவிட” வந்தேறிகளை 13 நூற்றாண்டுகள் எதிர்த்து நிற்கும் வலிமையைக் கொடுத்திருக்கும். இறுதியில் அவர்களை அடக்குவதில் வெற்றி கண்ட வந்தேறிகள் கொடுமையான ஒடுக்கல், ஒதுக்கல்களுக்கு அவர்களை ஆளாக்கினர். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்கல் உத்திகள் குமரிக் கண்ட வந்தேறிகள் தலைமை மூலக்குடிகளான புலையர்களை ஒடுக்குவதற்கு வகுத்தவற்றிலிருந்தே கிளைத்திருக்கும். விருதுகள் என்ற பெயரில் சராசரியான 72 மனித உரிமைகளை வழங்குவதையும் மறுப்பதையும் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக்கொண்டு மக்களை வலங்கைச் சாதிகள் என்றும் இடங்கைச் சாதிகள் என்றும் பிளவுபடுத்தி இடைவிடாத கொலைவெறி மோதல்களை உருவாக்கி அவர்கள் மீது தங்களுக்குள்ள பிடியை வலுப்படுத்திக்கொண்டார்கள்.

இம் மக்களை ஒடுக்குவதே தலைமை நோக்கமாகக் கொண்டுவிட்ட ஒரு குழு நாட்டினுள் உருவாகிய பின் அந்த மேலாளுமை கைநழுவிவிடாதிருக்க அயல் படையெடுப்பாளருக்குக் காட்டிக்கொடுப்போராக அவ் “வுயர்” வகுப்பார் மாறிவிட்டனர். கி.பி.2014இன் அசைக்க முடியாத சான்றாக “மருத்துவர் அய்யா” விளங்குகிறார். இந்த மனநோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் நாடார்கள்[8] என்ற புதுச் சாதிப் பெயரில் வெளிப்பட்ட மக்களைப் போல் ஆட்சியாளரையோ அயலவரையோ நம்பாமலும் சாராமலும் தம் தம் சொந்த முயற்சியில் பொருளியலில் தம்மை வளர்த்துக்கொள்வதுதான் அந்த மருந்து.

தி.மு.1700இலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 3800 ஆண்டுகள், அறியப்பட்ட மனித வரலாற்றில் மிக நீண்ட கால ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட இம் மக்களின் விடாப்பிடியன போர்க்குணம் போற்றத்தக்கது. இந்த மிக நீண்ட காலப் போராட்டத்தில் கணிசமான விகிதத்திலானோர் தடம் பெயர்ந்து வெவ்வேறு சாதிகளுக்குள்ளும் சமயங்களுக்குள்ளும் கலந்திருப்பதற்கான தடயங்களைக் காண முடிகிறது. அதை மீறியும் இன்று தனிப்பட்ட சாதிகளில் பறையர் சாதியினரே தமிழகத்தில் மிகுதி என்று ஒரு கருத்தை இதழியல் நண்பர்கள் சிலர் முன்வைக்கின்றனர். புரட்சிகரமான திட்டத்துடன் அதற்கேற்ற தலைமையின் கீழ் பொருளியல் – குமுகியல் -  அரசியல் தளங்களில் செயல்படுவார்களாயின் அவர்களே எதிர்காலத் தமிழகத்தின் விடிவெள்ளிகளாக விளங்குவார்கள்.

பாலையைக் கடக்க இன்றியமையாததாக இருந்ததால் முகம்மதியம் ஒட்டக இறைச்சி உண்பதைத் தடைசெய்தது. இன்று போக்குவரத்துக்கு ஒட்டகம் தேவை இல்லாததால் அந்தத் தடை நடைமுறையில் அகன்றுவிட்டது. ஆனால் இன்று காளையின் தேவை முற்றிலும் அகன்றுவிட்ட நிலையிலும் மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான தடையை வைத்திருப்பதும் பள்ளர்கள் போன்ற சாதியினரின் தலைவர்களே அதைக் காரணமாகக் காட்டி பறையர்களைத் தங்களை விடவும் இழிந்தவரென்று காட்டுவதும் இதன் பின்னணியில் வல்லரசியத்துக்கு புரதம் நிறைந்த எளிய மலிவான மாட்டிறைச்சியை ஏற்றுமதி என்ற பெயரில் கடத்தும் இரு புறத்தாருக்கும் பங்குண்டு என்பதை முற்போக்குச் சிந்தனையாளர்களும் நமக்குப் பயன்படும் பண்டங்கள் அயலவருக்கு ஏற்றுமதி என்ற பெயரில் கடத்துவதை எதிர்க்க வேண்டும் என்று கருதும் நாட்டுப்பற்று மிக்கோரும் புரிந்துகொள்ள வேண்டும்.    

தொல்காப்பியத்தில் அகத்திணைகள் ஏழினுள்ளும் ஐந்திணைகளுக்கு விரிவாக இலக்கணம் கூறப்படும் அதே வேளையில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் மொத்தம் பதினொரு வரிகளைக் கொண்ட மூன்றே நூற்பாக்களில் அடங்கிவிடுகிறது. தொல்காப்பியர் இயற்றியதே இவ்வளவுதானா? இல்லையெனில் இடைச்செருகல் செய்தோர் தம் செய்யுட்களை இத் துறைச் செய்யுட்களுக்குப் பகரம் வைத்துவிட்டனரா? நமக்குப் புரியவில்லை.

            சரி, கைக்கிளை பெருந்திணை என்பவை என்ன? கைக்கிளை என்றால் ஒருதலைக் காமம் என்பது நமக்குத் தெரியும். பெருந்திணை? பொருந்தாக் காமம். அது என்ன? மடல் ஏறல், இளமை தீர் திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல். இதன் பொருள்? மடலேறுதல்: இது உங்களுக்குத் தெரியும். பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஆண்மகன் ஊர்ப்பொதுவில் அவள் பெயர் பொறித்த பனை ஓலை மீதமர்ந்து சிறுவர்களைக் கொண்டு இழுக்கச் செய்து அவளை இழிவுபடுத்தி மிரட்டுவதே மடலேறுதல்.
            இளமை தீர்திறம்: காதற்குரிய காலம் கழிந்தும் காமக் கூட்டம் நிகழ்த்தல். இஃது இளமை தீர்ந்த இருவர் மாட்டும் இளைய பெண் முதிய ஆடவன் மாட்டும், இளைய ஆடவன் முதிய பெண் மாட்டும் நிகழும்.

            தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்: யார் எவர் என்று தேராமல் முறைமீறிப் புணர்தல். இஃது இரு பாலர்க்கும் உரியது.

            மிக்க காமத்து மிடல்: நம்ப முடியாக் காமவலிமை, ஒரே நேரத்தில் பலரைப் புணரும் வலிமை இதுவாம். இஃதும் இரு பாலர்க்கும் பொருந்தும்.

            பின்னிரண்டுக்கும் உரையாசிரியர்கள் இத்தகைய பொருள் கூறவில்லை. ஆனால் அவர்கள் கூறும் பொருள் தெளிவற்றும் பொருத்தமற்றும் உள்ளன.

            இவற்றில் இரண்டாவதில் முதிய ஆடவனும் இளம் பெண்ணும் புணர்வதில் இன்றைய கணக்குப்படி முறைகேடு எதுவும் தோன்றாது. ஆனால் முதிய பெண்ணும் இளைஞனும் புணரும்போது (பெண் கன்னியாக முதிர்வது அன்று அரிதாகையால்) ஒன்றேல் அப் பெண் கைம்பெண்ணாய் இருக்க வேண்டும், அல்லது இன்னொருவன் மனைவியாய் இருக்க வேண்டும்.

            மூன்றாவதில், தேறுதல் ஒழிந்த என்பதற்குத் காமத்துக்கு உரியவரான கணவன் அல்லது மனைவியைத் தவிர பிறரோடு உறவுகொள்ளும் எல்லையையும் மீறி புணர்ச்சிக்கு விலக்கப்பட்ட உறவினர்களுடன் கொள்ளும், ஆங்கிலத்தில் incest எனக் கூறப்படும் புணர்ச்சியையே குறிக்கும்.

            இறுதியிலுள்ளதற்கு மேற்கொண்டு விளக்கம் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

            இவ் வரிகள் தொல்காப்பியத்தில் இருப்பதால் இவற்றைக் குறிக்கும் அகத்துறைப் பாடல்களும் இருந்தன என்று கூறிவிட முடியுமா? முடியும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் உரைப்பதல்லவா மரபு? அப்படியாயின் அவ் விலக்கியங்கள் என்னவாயின? நாம் முன்பு கூறியதுபோல் நீருக்கும் நெருப்புக்கும் ஆளாயின! ஏன்? தொல்காப்பியக் காலத்துக்கு முந்திய பழங்காலத்தில் மக்களின் தொழில்களுக்கேற்ற செல்வநிலைகளும் அவற்றிற்கேற்ற மண உறவு நிலைகளும் நிலைத்திருந்தனவேனும், அவற்றைக் கொண்டும் தொழில்களைக் கொண்டும் அவர்களுக்குள் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்படவில்லை. ஆயின் நிலக்கிழாரிய அரசு ஏற்பட்டுப் பண்ணையாட்கள் முறை ஏற்பட்ட பின்னர் தொழிலாளர்கள் இழிந்தவர்களாகவும் கிழார்கள் உயர்ந்தவராகவும் கருதப்பட்டனர். கழகத் தொகை நூற்களில் அனைத்துப் பரிவினரும் பாக்கள் இயற்றியிருப்பினும் பாணர் முதலியோர் வறுமை கூறி இரந்து திரிய, கிழார்கள் அரசர்க்கு அறிவுரை கூறுவோராகவும் பெற்றால் பெரும் பரிசில்களைப் பெறுவோராகவும் உயர்ந்தே காணப்படுகின்றனர். கூர்ந்து நோக்கினால் பாணாற்றுப்படை பாடியவர் எவரும் பாணர்கள் இல்லை. பார்ப்பனர்கள் என்றே அவர்களின் பெயர்கள் காட்டுகின்றன. பாணர்கள் பாடியவை அழிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. எனவே, இவர்கள் தத்தம் வகுப்பொழுக்கமே உயர்ந்தென்றும் அதற்குப் புறம்பானவை இழுக்கென்றும் கருதி அவற்றை ஒதுக்கியிருக்கலாம். வரம்பு மீறிய ஒழுக்கங்களைப் புறக்கணித்தல் நமக்கு ஏற்பேயாகும். ஆயின் மண விலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமணம் போன்றவை உழைக்கும் மக்களின்  வரையறைக்கு உட்பட்டவையே. வரம்புகள் ஏற்படுவதற்கு முன்பே தோன்றிய பாடல்கள் வரம்புகள் ஏற்பட்ட பின்னர் பெருந்திணையாயிருக்கலாம். இவ்வாறுதான் ஏடுகள் ஆற்றினுள்ளும் நெருப்பினுள்ளும் அடைக்கலம் புகுந்தன.

            நம்ப முடியவில்லையே! அது போன்ற பாடல்கள் இன்று யாதேனும் உள்ளனவா? உள்ளன! முதலில் திருவிளையாடற் புராணத்தின் மாபாதகம் தீர்த்த படலம். அடுத்து இரட்டைப் புலவர்களின் தனிப்பாடலொன்று. ஒரு தந்தை தன் மகளைக் கணவன் வீட்டில் விட்டு வருவதற்காக அழைத்துச் சென்றான். செல்லும் வழியில் காளை ஒன்று ஆவை மேவுவதைக் கண்டான். அதைக் கண்டதும் அவனுக்கு வெறியேறி மகளை அவள் கதறக் கதற அங்கேயே புணர்ந்துவிட்டான். இரட்டைப் புலவர் ஒருமுறை அவ்வழியே செல்லும் போது ஒருவர் மேற்படி நிகழ்ச்சயை முதலிரண்டடிகளில் பாட இரண்டாமவர்:
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்ப மற்றவர்
                        சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு
எனும் திருக்குறளைக் கூறி முடித்தாராம்.

            மூன்றாவது ஒரு நாட்டுப் பாடல். தன் உடன்பிறந்தான் மூலம் தான் பெற்ற பிள்ளையைத் தாய் தாலாட்டுவதாகக் கூறப்படும் மாமன் மகனே, மருமகனே! எனத் தொடங்கும் பாடல்.

            நமக்குத் தெரிந்தவை இவையே. தெரியாதவை எத்தனையோ, இதுபோன்ற முறையற்ற உறவுகள் இயற்றியோரின் கற்பனையில் உதித்தவையல்ல. உண்மை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பே. நாம் கண்டவையும் நம் காதில் விழுந்தவையுமான சில நிகழ்ச்சிகள் இங்கு நினைவுக்கு வரலாம்.

            ஓர் ஏழை வீட்டில் ஒரு பெண் குளித்த பின்னர் உலர்த்துவதற்காகத் தன் ஒரே சேலையின் ஒரு முனையைக் கயிற்றில் கட்டிவிட்டு மறுமுனையை உடலில் சுற்றிக் கொண்டு தன் அண்ணன் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தாள். எதிர்பாராமல் உடலைச் சுற்றியிருந்த சேலை நழுவிவிட்டது. அண்ணன் தன்னிலை தடுமாறித் தங்கையைக் கட்டிப்பிடிக்க அவள் போட்ட கூச்சலில் வீட்டை விட்டுப் போனவன் போனவனே.

            மதுரையில் தாய் வீட்டிலில்லாத போது குளித்துக்கொண்டிருந்த மகளைக் கண்டதால் அவளுடன் தந்தைக்கு உண்டான உறவு மனைவி அறியத் தொடர்ந்ததும் அவளுக்கு மூளை வளர்ச்சி குன்றிய ஒருவனைக் கட்டிவைத்து மகளைத் தன்னோடு வைத்துக்கொண்டதும் முன் தலைமுறை நிகழ்ச்சி. அவர்கள் வீட்டுக்கு அண்டையில் நான் சில நாட்கள் குடியிருந்துள்ளேன்.

            தொடர்ந்தால் அடுக்கிக்கொண்டே போகலாம். நான் சொல்ல வந்தது என்ன? மேலே குறிப்பிட்டவை போன்ற கருத்துகளைக் குறிக்கும் பாடல்கள் நம் நாட்டில் இருந்தன என்பதும் அவற்றைக் கீழோர் ஆக்கங்கள் என்று கருதித் தொகுப்புப் பணியை மேற்கொண்டோர் ஒதுக்கியதும். அவை வழக்கில் இருந்தால் ஒழுக்கக்கேடு வளருமென்று கருதி அவற்றை நீரிலும் நெருப்பிலும் எறிந்து அழிக்கும் நோக்கத்துடன் அப்படிச் செய்வது புண்ணியமென்ற கருத்தைப் பரப்பிவிட்டனர் என்றும் கொள்ளலாம். உட்கிடக்கையை அறியாத மக்கள் தொகுக்கப்படாத அறிவியல் நூல்களையும் அவ்வாறே எறிந்துவிட்டனர். அவர்களுடன் தமிழ்ப் பகைவர்களும் சேர்ந்துகொண்டனர். அம்மண, புத்த நூல்களை அழிக்கவும் பின்னர் இம் முறை கையாளப்பட்டது. இன்று வழக்கிழந்து போன நூற்களில் பல உரையாசிரியர் காலம் வரை வாழ்ந்திருக்கின்றன. எனவே கடற்கோள்களால் அழிந்தன என்று சொல்வதைவிட நம்மவர்களின் அறியாமையாலும் வகுப்பு வேறுபாட்டுணர்வுகளாலும் அழிந்தன என்றே சொல்ல வேண்டும்.

            இந்த அழிப்பு இன்றும் தொடர்கிறது என்பதுதான் உண்மை. ஆங்கிலராட்சிக் காலத்தில் ஐரோப்பிய ஆய்வாளர் ஒருவர் தொகுத்த நாட்டார் வழக்காற்றியல் பாடல்கள் தஞ்சை சரசுவதி மகாலில் இருந்தன. அவற்றைப் பதிப்பிக்கும் பணி சிறந்த தமிழ் ஆய்வாளர் என்று ஒரு தரப்பாரால் பாராட்டப்படும் கி.வ.சகன்னாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது மதிப்பீட்டின் படி சரியானது என்பவற்றை அச்சிட ஏற்பாடு செய்துவிட்டு பிறவற்றை அழித்துவிட்டார் என்பது செய்தி. தான் விரும்புபவற்றை அச்சிடுவது என்பது சரியாக இருக்கக் கூடும். ஆனால் இன்னொருவர் அரிதின் முயன்று தொகுத்தவற்றை அழிப்பதற்கு அவருக்கோ வேறெவருக்கோ உரிமை இல்லை என்பது எம் கருத்து.

            இத் தொடர்பில் நாலடியார் பற்றிய கதை எண்ணத் தக்கது. தன்னிடம் சொல்லாமல் அம்மண முனிவர்கள் சென்றுவிட்டனர் என்ற ஆற்றாமையால் ஏடுகளை எடுத்து வையையில் வீசுமாறு பாண்டியன் ஆணையிட்டதாகவும் நீரை எதிர்த்து நீந்தியவையாக நானூறு பாடல்களைத் தொகுத்ததாகவும் அது கூறுகிறது. ஒரு வேளை நூற்களை எறிவதைக் கண்டு மனம் பொறுக்காத யாரோ கிடைத்தவற்றைப் பொறுக்கியிருக்கலாம். சம்பந்தன் கதையும் ஏடுகளை ஆற்றிலும் நெருப்பிலும் எறிவதை ஓர் உத்தியாகக் காட்டுகிறது.

            அகத்தியர் வள்ளுவர் பெயர்களில் மெய்யறிவு, கணியம் மருத்துவம் பற்றிய பாடல்கள் ஞானக் கோவையிலும் பிற நூல்களிலும் காணக்கிடக்கின்றன. இவையும் தொகுப்போர் தொடாமையால் நக்கீரர் உரை போல் வாய்மொழியாய் அவ் வத் துறையினரால் பயிலப்பட்டு, பின்னர் நடைமாறித் தொகுத்தோர் கால நடையில் எழுதப்பட்டிருக்கலாம்.

            இக் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் மொழியுடன் வாழ்வியலையும் சேர்த்துத் தொல்காப்பியம் வரையறுத்ததனால் ஏற்பட்ட ஒரு தீமை இது என்று முடிவு கொள்ள இடமுண்டாகிறது. இன்னொரு கண்ணோட்டதில் பார்த்தோமானால் தொல்காப்பியம் என்ற பெயரையும் என்மனார் புலவர் மொழிப என்ப எனும் சொற்களையும் கொண்டு தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே அல்ல; அனைத்துத் துறைகளையும் தழுவிச் செய்யுளும் வழக்கும் எழுதிய நூல் என்று கூறுவதே சாலும். கடலில் முழுகிய நூல்களின் கருத்துகளை ஒரே நூலில் சொல்ல முயன்றிருக்கலாம் அதன் ஆசிரியர். தொல்காப்பியம் மொழியையும் அறிவுத் துறையின் முகாமையான கூறுகள் அனைத்தையும் சுருக்கமாகக் கூறுவதைத் தெளியலாம். ஆயின் அதை வெறும் இலக்கண நூல் என்று பிறழ உணர்ந்துவிட்டனர் பிற்காலத்தோர் என்றும் கொள்ளலாம். அவ்வாறு கொண்டதனால் அது கூறியதாக அவர்கள் கருதிய வரம்புக்குப் புறம்பானவற்றைத் தொகுக்காமலும் போற்றாதும் விட்டனர். இந் நிலை இன்றும் நீடிக்கிறது. சிறுகதை, பாவியம், புதினம், நாடகம் தவிர்த்த எந்த எழுத்தையும் இலக்கியமாகக் கொள்வதற்கு நம்மவர்கள் மறுக்கிறார்கள். இதுவே அறிவியல் துறை நூல்கள் ஏற்படுவதற்குப் பெரும் தடையாயிருக்கிறது என்று கொள்ளலாமா?

பிற்சேர்க்கை:  தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கு மேற்கோள் காட்டுவதற்கென்றே யாப்பருங்கலக் காரிகை, சிற்றெண்ணகம், திணைமாலை நூற்றைம்பது, புறப்பொருள் வெண்பாமாலை, ஏன் கலித்தொகை கூட இயற்ற நேர்ந்ததன் பின்னணி என்ன? உரையாசிரியர் காலத்துக்கு முன்பே எழுதப்பட்டுவிட்ட தேவாரம், ஆழ்வார்ப் பாசுரங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? இலக்கியங் கண்டதற் கிலக்கணம் கூறல் என்ற அடிப்படை எவ்வாறு தகர்ந்து போயிற்று?

          தொல்காப்பியம் பொருளதிகாரத் நுணுகி ஆயும் வாய்ப்பு ஒன்றின் விளைவாக அதில் அங்கிங்கெனாதபடி எங்கும் மறைப்புகளும் திரிப்புகளும் சொருகல்களும் நிறைந்திருப்பதைக் காண முடிந்தது. இது குறித்து தொல்காப்பியம் பொருளதிகாரம் – புதிய பார்வை என்ற நூல் ஒன்று எழுதும் திட்டம் உள்ளது.


[1]பக். 137, 144 - 145
[2] மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
     மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட
     புலியொடு வில்நீக்கி புகழபொறித்த கிளர்கெண்டை
    வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்…முல்லைக்கலி,104, 1 -4  
[3] ஆனால் அம்மண பனியாக்களின் இந்திய அரசோ நிலத்திலுள்ள ஆதித்த நல்லூர் உட்பட அனைத்தையும், அவற்றைக் கண்டு சொன்ன ஆய்வாளர்களின் முடிவுகளைப் பின்னுக்குத் தள்ளி அம்மண ஆசாரியன் மகாவீரர் காலத்துக்கும் பிற்பட்டவையாகவே அறிவித்துக்கொண்டிருக்கிறது.     
[4]இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவர்களுக்கு அடிமை செய்ய இறக்குமதி செய்யப்பட்டவர்களிடமும் வாணிகம், அடிமைப்பணி என்று குடியேறியவர்களிடமும் அனைத்தையும் பறிகொடுத்து தரகுத் தொழிலிலும் கேளிக்கையிலும் பொழுதைக் கழிக்கத் தொடங்கிவிட்டனர் வெள்ளைத் தோல் ஆண்டைகள். இவர்களின் நிலை பண்டை உரோமானியர்களை ஒத்திருக்கிறது.
[5] பக.153 பார்க்க
[6] பக். 71 பார்க்க
[7] பக். 55 பார்க்க
[8] சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு என்ற இவ்வாசிரியரின் நூல் இது பற்றி விரிவாகக் கூறுகிறது.

0 மறுமொழிகள்: