குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 5
2. நடப்பதற்கு இரு கால்கள் போதாவா?
(தோரா தி.மு. 1,00,00,000)
இதோ ஒர் அடர்ந்த காடு. நில நடுக்கோட்டுக் காடுகள்
என்று கேள்விப்பட்டிருக்கிறோமே அதே போன்று அன்றாடம் மழை பொழியும் இடம். ஒரே சேறும்
சகதியும். மரங்கள் பகலவன் கதிர்கள் நிலத்தை அடைய விடாமல் செறிந்து இலைகளாலான கடல்
போன்று மேற்பரப்புடைய காடு. உள்ளே பல்வேறு உயிரிகள், புழுவிலிருந்து யானைகள் வரை
உலவுகின்றன.
அதோ அங்கே இரண்டு விலங்குகள் வருகின்றனவே. நான்கு கால்களாலும் நடந்து வரும் அவை
பார்ப்பதற்கு குரங்குகள் போன்று தோற்றமளிக்கின்றன. கருமையான உடலுடன் கருத்தடர்ந்த
மயிர்கள் உடல் முழுவதையும் மறைக்க அவை நம்மைவிட அளவில் சற்றுப் பெரிதாகவே
தோன்றுகின்றன. இரண்டில் ஒன்று ஆணும் ஒன்று பெண்ணும் போல் காணப்படுகின்றன. பெண்
விலங்கின் வயிறு பெருத்துக் காணப்படுகிறது. கரு முற்றிவிட்டது போலும். ஒரு
மரத்தினடியில் விழுந்து கிடக்கும் பழங்களை தின்கின்றன. பழங்கள் மாம்பழத்தினளவில்
கண்ணைப் பறிக்கும் வண்ணத்துடனிருக்கின்றன. அடிக்கடி மிரட்சியுடன் அங்குமிங்கும்
பார்த்துக் கொண்டேயிருப்பதிலிருந்து அவை கொல் விலங்குகளின் அச்சத்துக்கு எப்போதும்
ஆட்பட்டவை என்று தெரிகிறது.
கீழே பழங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. பசி இன்னும் தணியவில்லை.
பெண் மரத்தினடியில் சோர்வாகக் குந்தியிருந்தவாறு மேலே தொங்கும் கனிகளைப் பார்த்து
நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டிருக்கிறது. ஆண் சருகுகளுக்கிடையில் பழங்கள்
கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறது.
திடீரென்று சற்றுத் தொலைவில் சருகுகளுக்கிடையில் ஒரு
சலசலப்பு. ஆண் சருகுகளைக் குடைவதை நிறுத்தவும் பெண் எழுந்து நிற்கவும் அவை
இரண்டும் ஓட அணியமானவை போல் மிரட்சியுடன் ஓசை வந்த திசையை நோக்குகின்றன. பக்கத்து
மரத்தடியில் ஓர் அணில் ஓடி வருகிறது. அதைத்
துரத்திய படி ஒரு கரிய பெரிய நாகம் விரைந்து ஊர்ந்து செல்கிறது.
அணில் மரத்தில் தாவி ஏறிவிட்டது. நாகம் தலையைத் தூக்குகிறது. தலையை
மேலும் மேலும் ஏறக்குறைய மூன்றடி உயரத்துக்குத் தூக்கி தாழ்ந்திருந்த ஒரு மரக்கிளையில்
ஏறிக் கிளைகிளையாகத் தாவி அங்கிருந்த அணிலைப் பிடிக்கத் தாவுகிறது. அணில் கத்திக்
கொண்டே கிளைக்குக் கிளை தாவிப் பிறிதொரு மரத்துக்குத் தாவ அதனைப் பாம்பு துரத்திக்
கொண்டே சென்று மறைகிறது. சற்று நேரத்தில் மீண்டும் அந்த இடத்தில் அமைதி
நிலவுகிறது.
விலங்குகள் இரண்டும் அசைவற்று அங்கேயே நின்றிருக்கின்றன.
பெண் விலங்கு மீண்டும் மரத்திலிருந்த கனிகளைப் பார்க்கிறது. சிறிது நகர்ந்து கனிகளிருந்த கிளைப்
பக்கம் செல்கிறது. முன் கால்களிலொன்றைத் தூக்கி மெதுவாகத் தாழ்ந்திருந்த ஒரு சிறு
கிளையைப் பற்றுகிறது, அதை இறுகப் பிடித்துக் கொண்டு மற்றொரு முன்னங்காலையும்
தூக்குகிறது. இப்போது ஒரளவு நிமிர்ந்த நிலையை அடைந்து விடுகிறது. மீண்டும் முன்னங்
கால்களிலொன்றைக் கொண்டு இன்னும் உயர்ந்த ஒரு கிளையைப் பற்றிக் கொண்டு மறுகாலையும்
உயர்த்தி அக் கிளையைப் பற்றிக் கொள்கிறது. அதன் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. ஒரு
காலால் கிளையை இறுகப் பற்றிக் கொண்டு மறுகாலைப் பழத்தை நோக்கி நீட்டுகிறது. இதோ
கனி எட்டிவிட்டது. பறித்தாகிவிட்டது. ஒரே மகிழ்ச்சி இரண்டுக்கும். மகிழ்ச்சிக்
கூச்சல் இடுகின்றன. கனியை ஆணிடம் கொடுக்கிறது. அது கடித்து
விட்டு பெண்ணிடம் கொடுக்கிறது. அதுவும் தின்கிறது.
புதிதாக எய்திய வெற்றிக் களிப்பில் கூச்சலிட்டு மரக்கிளையைப் பற்றியவாறு ஆடுகின்றன.
கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து இவற்றைப் போன்ற பல விலங்குகள்
கூடுகின்றன. இவை கிளையைப் பற்றி நிமிர்ந்து நிற்பதைப் பார்த்துப் பிற விலங்குகள்
வியப்படைந்து அவற்றின் அருகே செல்லுகின்றன. இவ் விரண்டு விலங்குகளும் தாங்கள்
செய்ததை மீண்டும் செய்து காட்டுகின்றன. தாம் பாம்பைக் கண்டு அறிந்து கொண்டதைச்
சாடையாய் அவற்றிற்கு அறிவிக்கின்றன. மற்ற விலங்குகளும்
அவற்றைப் போலவே மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சிக் கூச்சலிடுகின்றன. காடே
கீச்சுக் கீச்சென்ற அவற்றின் கூச்சலால் அதிர்கிறது.
இவற்றைப் பார்க்கும் போது உங்களுக்கு யூதர்கள் மறையில் வரும்
ஏதன் தோட்டத்தில் நடந்த கதை நினைவுக்கு வருகிறதா? ஏதன் தோட்டத்தில் நடந்ததென்ன?
யூதர் மறையில் கூறப்படுவதைச் சுருக்கமாக இங்குக் கூறுவோம். ஆதன் இறைவனால் படைக்கப்பட்டு அவனுடன்
ஏவாளும் படைக்கப்படுகிறாள். இருவரையும் இறைவன் ஏதன் தோட்டத்திற்குள் விட்டு “இங்குள்ள அனைத்துக் கனிகளும், விலங்குகளும், புள்ளினங்களும் உங்கள்
உணவுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. ஆயின் இதோ இந்த ஒரு மரத்துக் கனியை மட்டும்
உண்ணாதீர்கள்” என்று கூறி ஒரு மரத்தைக் காட்டிச் சென்று
விடுகிறார். ஆனால் பாம்பு வடிவத்தில் பேயன் தோன்றி “இறைவன்
உங்களை ஏமாற்றி விட்டார். இம் மரத்துக் கனி உங்களுக்கு அறிவைக் கொடுக்கும்” என்று கூறி மறைகிறான். பேயன் கூறியதால் அக் கனி மீது ஆவலுற்ற ஏவாள் அக்
கனியைப் பறித்துத் தானும் உண்டு ஆதமுக்கும் தர, இருவரும் உண்டவுடன் நன்மை
தீமைகளைப் பற்றிய அறிவு பெறுகிறார்கள்.... கதை இவ்வாறு செல்கிறது.
இதில் ஆதம், ஏவாளை மயக்கித் தன் சொற்படி நடத்த வந்த பேயன்,
விருப்பூட்டும் அழகிய எந்த வடிவையும் கொள்ளாது அருவெறுப்பும் அச்சமும் ஊட்டுகின்ற
பாம்பின் வடிவைத்தானா எடுத்து வந்திருக்க வேண்டும்? எனவே இக் கதையில் வேறு சேதி
எதுவோ அடங்கி இருக்க வேண்டும். தம் முன்னோரின் அறிவு வளர்ச்சியில் பாம்புக்கு ஒரு
பங்கிருக்கிறதென்பதை யூதர் வரலாற்றை எழுதியோர் மரபு வழி அறிந்திருந்தனர் என்றும்
தம் கதையில் இறைவனைப் புகுத்தி இவ்வாறு எழுதி வைத்தனர் என்றும் கொள்ளலாம். மாந்தக்
கையின் வினை நுணுக்கமே அவனுடைய மூளை வளர்ச்சிக்கு அடி கோலியது என்னும் அறிவியலார்
முடிவுக்கும் ஆதன் பறித்த ‘அறிவுக் கனிக்கும்’ எத்தனை பொருத்தம்!
சரி, நீ கூறுவது பொருத்தமான ஒன்றே என வைத்துக் கொண்டாலும், இதற்கும் தமிழர்
நாகரிகத்துக்கு முள்ள தொடர்பென்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா?
தொடர்பிருக்கிறது.
தமிழ் நாட்டுக் குடிகளில் மிகப் பழமை வாய்ந்தவர்கள்
நாகர்கள். இவர்கள் நாகத்தையே வழிபடுபவர். தம் தலைகளில் படமெடுத்தாடும் நாக
வடிவுகளை இவர்கள் அணிந்திருந்தனர்.[1]
நாகர் என்ற சொல்லிலிருந்தே நாகரிகம் என்ற சொல் வந்ததென்று கொண்டு தமிழர்களுக்கு
நாகரிகம் தந்தவர்கள் நாகர்களே எனக் கூறுவர். இன்றைய தமிழ்நாட்டின் கீழக்
கடற்கரையோரத்தில் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர் என்ற ஊர்ப் பெயர்கள்
இருப்பதைக் கொண்டும் நாகத்தீவு என்ற பெயர் ஈழத்திற்கு இருப்பதைக் கொண்டும் இவர்கள்
கடற்கோளுக்கு முன்னர் வங்காளக் குடாக் கடற்பகுதியில் பரந்திருந்தனர் என்று
கூறுவர். கடற்கரையில் வாழும் பரதவர் நாகர் வகுப்பினரே என்பது அறிஞர் முடிவு.
இவர்கள் இந்தியாவெங்கும் ஏறக்குறைய 800 ஆண்டுகள் முன் வரைக்கும் பரவி ஆங்காங்கு
ஆண்டு வந்துள்ளனர். ஒரு காலத்தில் இவர்கள், துவரைக் கண்ணனாலும் மருதனாலும்[2],
பின்னர் பாண்டவர் வழியினனான செனமேசெயனாலும், பெருமளவில் கொல்லப்பட்டனர். எஞ்சியோர்
மலை முகடுகளிலும் பெருங்காடுகளிலும் மலையாள நாட்டிலும் ஒளிந்து வாழ்ந்தனர்.
இவர்கள் தலையில் பாம்பு அணி வைத்திருந்தமைக்கு நினைவாக இவர்களின் பூசாரிகள்
பின்னர் முன்குடுமி அணிந்துகொண்டனர்.
இந்தக் குடுமியே அரசர்களின் கிரீடம் எனும் மணி‘முடி’ ஆயிற்று. மயிராகிய முடியே
மணிமுடியின் வேர். பின்னர் குடுமியின் பொருளறியாத பிற வகுப்புப்
பூசாரிகள் தாங்களும் குடுமியை வைத்துக் கொள்ளும் மரபைக் கைக்கொண்டாலும், தோது
கருதிக் குடுமியைப் பின்புறம் வைத்துக் கொண்டனர். தமிழ்நாட்டுப் பெண்கள் அண்மைக்
காலம்வரை பெருமளவிலும் இன்று அருகலாகவும் ‘பாம்புப் படம்’(பாம்படம்) என்னும் காதணியை அணிந்து வருவதும் இதனோடு தொடர்புடையதுதானோ என்னவோ?
இப்போதே மரபு எனப்படும் சடங்கு பற்றி ஓரிரு எடுத்துக்
காட்டுகளைக் கூறிவிடுவது பிறகு நமக்குப் பயன்படும். ஏனென்றால் நாம் காண
இருப்பவற்றிற்கு மரபுகளிலிருந்தே பெரும்பாலும் துணை தேட வேண்டியிருக்கும்.
‘இந்து’க்களில் ஏறத்தாழ எல்லோரும் மற்றையோரில் சிலரும் அரைஞாண் கட்டும் வழக்கம்
இன்று இருந்து வருகிறது. அவர்களில் ஒரளவு அகவை முதிர்ந்தோர் அதன் பயனை உணர்ந்து
அணிகிறார்கள். ஆனால் இளையோர் பயனை அறியாமலோ அறிந்தும் தேவையில்லாமல் வெறும்
பழக்கத்தாலோ அணிகிறார்கள். நீர்ச்சீலைப்( தாழ்ச்சீலை, கோவணம்)
பழக்கம் மறைந்து கால் சட்டை, உள்ளுடையின் பழக்கம் ஏற்பட்ட பின்னரும் அரைஞாணை அணிவது மரபு அல்லது சடங்குக்கு ஓர்
எடுத்துக்காட்டு. அரைஞாணை விடாமல் தொடர்ந்து அணிவதற்குக் குழந்தைகள் பிறந்தவுடன்
பாட்டனிடமிருந்து தங்கம் அல்லது வெள்ளியாலான ஓர் அரைஞாண் கிடைக்குமென்பதுதான் காரணம்
என்றும் சிலர் கூறக்கூடும்.
அடுத்ததாகக் குடுமியையே எடுத்துக்கொள்வோம். குடுமி வைத்திருக்கும் சிறுவர்களுக்கும்
முன் நெற்றயில் சிறிது மழித்து விடுவதுண்டு. குடுமியை முன்புறம் கட்டினாலும்
பின்புறம் கட்டினாலும் இளைமையில் எல்லாப் புறத்து மயிரும் குடுமிக் கட்டினுள்
அடங்கும் அளவுக்கு நீளமுடைதாயிருக்கும். அகவை ஏற ஏற மயிரின் நீளம் குறைந்து
குடுமியிலிருந்து விலகியிருக்கும் மயிர்கள் தனித்து நிற்கும். இவை சிலிர்த்துக்
கொண்டு நிற்பதைத் தவிர்க்கவே சுற்றிலும் சிறிது சிறிதாக மழித்து வந்து இறுதியில்
குடுமி ஒரு சிறு பரப்பிலுள்ள மயிர்களை மட்டும் கொண்டதாயிருக்கும். இன்னும்
சிலருக்குக் குடுமி கட்டாக இல்லாமல் சில மயிர்கள் தனித்து விடப்படும். இவ்வாறு
தேவையை முன்னிட்டு மழிக்கப்பட்டது நாளடைவில் மரபாகிச் சிறுவர்களுக்கும் நெற்றியில சிறிதளவு மழித்துவிடப்படுகிறது.
இது போன்றே நாக வடிவைக் குறிக்க வைக்கப்பட்ட குடுமியைப்
பார்த்துப் பிற இனப் பூசாரிகளும் அதன் பொருள் தெரியாமல் குடுமியைப் பின்புறத்தில்
வைத்துக்கொண்டனர்.
இவை போன்று நம் நாட்டில் மட்டுமல்ல; உலகின் எல்லா
மக்களிடத்திலும் எண்ணற்ற ‘மரபுகள்’ இருந்து வருகின்றன. மரபுகளை வைத்தே நாம் பல முடிவுகளை அடைய
வேண்டியிருப்பதால் அதுப்பற்றி நம் நாளில் தேவையடிப்படை மரபடிப்படையாக மாறும் ஓர்
எடுத்துக்காட்டு (அரைஞாண்) கூறினேன்.
நாகர்களைப் பற்றி தொடர்ந்து கூறுவோம். நாக வழிபாட்டுக்குச்
சான்றாக நாகர்கோவிலில் நாகரம்மன் கோவில் (இன்று நாகவரசன் என்று பால் மாறிவிட்டது
இத் தெய்வம்) இருக்கிறது. மலையாளத்திலுள்ள நாயர்கள் எனப்படுவோர் நாகர்களே. நாகர் என்பதே
நாயர் எனத் திரிந்துள்ளது என கூறுவர் அறிஞர் சிலர். வட இந்தியாவில் நாகர்கள் என்ற
பழங்குடி மக்களும் மற்றும் நாகரிக மடைந்த நாகர்களும் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா முழுவதும் உலகத்தின்
பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலங்களில் வழிபடப்பட்டு வந்துள்ள தெய்வமாகிய
சிவனின் முடி மீது ஒரு பாம்பு குடியிருக்கிறது. இன்றும் இந்தியாவிலுள்ள அனைத்து
மக்களும் நாக வழிபாடு செய்வது உங்களுக்குத் தெரியும்.
பாம்பு வடிவத்தில் வந்த பேயனின் அறிவுரையால் அறிவுக் கனியை உண்ட
ஆதனோடு இணைத்துக் கூறப்பட்டு நாற்கால் மனிதனிடமிருந்து நிமிர்ந்து நிற்பதற்கு
மாந்த இனம் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டது. ஆயின் முதல் மாந்தனோடு தொடர்பு கொண்டோர் மட்டும் நடந்த சேதியறிந்தவர்களாதலால்
நாகங்களைக் கண்டவிடங்களில் வணங்கி வந்தனர். இவர்கள் நாகரிகத்தில் பல படிகள்
உயர்ந்த பின்னரும் பல்வேறிடங்களுக்குப் பரந்த பின்னரும் இவ் வணக்கத்தைக்
கைவிடவில்லை. நாளடைவில் பூசாரிகள் தோன்றி நாக வடிவுகளை உருவாக்கி வழிபட்டதோடு தம்
தலைகளிலும் நாக வடிவுகளை அணிந்துகொண்டனர். மக்களும் இதனைப் பின்பற்றினர்.
இதில் இன்னொரு சுவைமிக்க ஒற்றுமை உள்ளது. ஆதம் என்ற எபிரேயச்
சொல்லுக்கு மாந்தன் என்பது ஒரு பொருள். ஆதன் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆன்மா என்பது
பொருள். அதே போன்று ஏவாள் என்னும் தமிழ் வடிவம் பெற்றுள்ள ஈவ் என்ற ஆங்கிலச்
சொல்லுக்கு அல்லது அவ்வா (Hawwa) என்னும் எபிரேயச் சொல்லுக்குத் தாய்
என்று பொருள். தமிழில் அவ்வை என்றால் தாய், தமக்கை என்று
பொருட்கள்; எவ்வை என்பதற்குத் தங்கை, தமக்கை என்பன பொருட்கள். அத்துடன் எவ்வுதல்
என்றால் துள்ளிக் குதித்தல் என்ற பொருள் உண்டு. இது, ஏதன் தோட்டக் கதையில்
தமிழர்கள் தொடர்பிருக்கிறதென்பதற்கு வலு கூட்டுகிறது. ஏவாள் எவ்விக்
குதித்தாளல்லவா?
அடுத்து, ‘யூதர் மறை கூறும் ஆதனும் அவ்வையும் அவர்கள் முன்னோர்கள்தானே! பின் எவ்வாறு
அவர்கள் தமிழர்களின் முன்னோர்களானார்களென்று கூறலாம்’ என்று
நீங்கள் கேட்கலாம். ஆதன் அவ்வைக்குப் பல மக்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவனுக்குப்
பிறந்தவனின் சரவடியில் ஒரு கொடி தனித்துத் தனித்து இறுதியில் யாக்கோபு அல்லது
இசுரவேல் என்பவனின் பின்னோர்கள் மட்டுமே யூதர்கள் ஆனார்கள். மற்றையோரெல்லாம் உலகின்
பிற மாந்த இனங்கள் என்றே மறை கூறுகிறதென்பதுதான் அதற்கு விடை.
ஏதன் தோட்டம் என்பது ஈழத்துக்கருகிலேயே இருந்தது என்பது
ஒருசார் ஆராய்ச்சியாளர் கருத்து. அப்படியாயின் கிழக்குக் கடற்கரையோரமாக நாகர்கோவில், நாகூர்,
நாகப்பட்டினம் என்று நாகரோடு தொடர்புடைய ஊர்களிருப்பதும், ஈழத்துக்கு நாகத்தீவு
என்ற பெயர் இருப்பதும் நான் மேலே கூறிய கருத்துகளுக்கு அரண் செய்யும்.[3]
விலங்கிலிருந்து நிமிர்ந்து நின்ற மாந்தனின் நாகரிகத்தின் முதல்
கட்டத்தையே ஆதன் - அவ்வை கதை
உருவகமாகக் கூறுகிறதென்று கூறிவிட்டு, அடுத்த கட்டத்துக்குச் செல்வோம்.
பிற்சேர்க்கை: பேரா.கோ.கேசவன்
அவர்களைச் சந்திக்கக் கிடைத்த ஒரே வாய்ப்பில் (தோழர் குணாவின் எழுத்துகள் குறித்து
ஈரோடையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் போது) இந்த அதிகாரம்
அறிவியலுக்குப் பொருந்தவில்லை என்று கூறினார். அதன் பொருள் எனக்குச் சரியாக
விளங்கவில்லை.
ஆனால்
மாந்தநூல் ஆய்வுகளின் படி நாக வழிபாடும் உலகத் தொன்மங்களில் நாகங்கள் பற்றிய
செய்திகளும் மிகப் பல. கடவுளின் முகமூடிகள் என்ற
தலைப்பில் அடங்கிய நான்கு மடலங்களில் முதல் மடலமாகிய முந்தியல் தொன்மங்கள்[4]
என்ற நூலில் அதன் ஆசிரியர் நாகங்கள் குறித்த தொன்மக் கதைகள்
சிலவற்றை எடுத்துக் கூறுகிறார். கிரேக்கத் தொன்மத்தில் ஒரு நாகம் பெண்ணொருத்தியைத்
தூக்கிச் சென்று பாதலத்தில்(பாதாளத்தில்) வைத்திருந்தது
என்பது ஒன்று. நாகம் ஒன்றைத் தங்கள் நாட்டுப் பெண் மணந்து
அவளுக்குப் பிறந்த மக்களின் வழியினரே தாங்கள் என்கின்றனர் இன்னொரு நாட்டு மக்கள்.
மூவாரிகளின்
புதிர்கள்[5] என்ற நூலில்
கூறப்பட்ட கவிழ்ந்த கப்பலில் இருந்து தப்பிய மாலுமியின் கதையில்
தாடி வைத்த நாகம் ஆண்ட ஒரு தீவைப் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.
கடவுளர்களின் தேர்கள்?[6] என்ற நூலில்
அதன் ஆசிரியர் தென்னமெரிக்க மக்கள் இறகுகள் உடைய பாம்பாகிய குக்குல்கன்
என்ற தெய்வத்தை வழிபட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று வரை அறியப்பட்டவற்றுள் உலகின்
மிகப் பழமையான காப்பியம் என்று கூறப்படும் கில்காமேசு காப்பியத்தின்
தலைவனான கில்காமேசு பெற்றுவரும் சாவா மருந்தை ஒரு பாம்பு கவர்ந்து
செல்வதாக அக்கதை
கூறுகிறது[7].
யூத மறை நூலிலும் கடவுளால் தடுக்கப்பட்ட
கனியை உண்ண வைத்து ஆதாமும் ஏவாளும் சாவாமையை இழக்க வைத்தது ஒரு
பாம்புதான்.
மகாபாரதத்தில் வரும் கலுழன்(கருடன்) கதையில் அவன் நாகங்களுக்காக
இந்திரனிடமிருந்து அமுத்தைக் கவர்ந்து தந்ததாகக் கூறப்படுகிறது.[8]
இந்தக் கதைகள் குமரிக் கண்டத்தில் நாகர்கள் வலிமையுடன் விளங்கிய
காலத்தில் உலகில் இங்கிருந்து ஏற்கனவே குடியேறி நாகரிகத்தில் தாழ்ந்த மட்டத்திலிருந்த
மக்கள் மீது செல்வாக்குச் செலுத்திய காலத்திலும் பின்னர் குமரிக் கண்ட நில ப்பரப்பு
படிப்படியாகக் கடலினுள் அமிழ்ந்த காலத்தில் அந்தந்த நாட்டு மக்கள் நாகர்களின் மேலாளுமையை
வெற்றி கொண்டதையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மகாபாரதத்தில் கண்ணன் – அருச்சுனன்
ஆகியோர் உருவாக்கிய நெருப்பிலும் செனமேசெயன் வேள்வியிலும் அழிக்கப்பட்டவர்களுமாகக்
கூறப்படும் நாகர்கள், தாழ்ந்த நாகரிக மட்டத்தில் காடுகளுக்குள் வாழ்ந்து குமரிக் கண்டத்திலிருந்து
புதிதாக வந்தேறியவர்களோடு மோதித் தோற்றவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியத் தெய்வங்களில் நாகத் தொடர்பில்லாதவை
இலலை என்றே கூறலாம். சிவனின் தலை, கழுத்து, மேற்கையிலும் பாம்பு உள்ளது. சிவனுக்கு
முந்தியவளும் அவனது பெண் வடிவமாகக் கருதப்படுவளுமான கொற்றவைக்கு தலை, கழுத்து, மேற்கைகள்
தவிர முலைக் கச்சும் கூட பாம்பு என்பது சிலப்பதிகாரத்திலிருந்து தெரிகிறது.
துளை எயிற்(று) உரகக் கச்சுடை முலைச்சி
- சிலம்பு, வேட்டுவ வரி,59.
திருமாலின் படுக்கை நாகம், முருகனின் ஊர்தியாகிய
மயிலின் காலில் நாகம் இவ்வாறு நாகம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது.
சீனத்திலும் அதனைத் தொட்டுக் கிடக்கும் கிழக்காசிய
நாடுகளிலும் சப்பானிலும் முகாமையான இடம் பெற்றிருப்பது பாம்பின் ஒரு திரிந்த வடிவமான
“டிராகன்”. இந்த விலங்கு கக்கிய நுரைதான் சீன மண் வளத்துக்கு அடித்தளம் என்பது அவர்களது
நம்பிக்கை என்று பெர்ள் எசு. பக்கு என்ற பெண்மணி எழுதிய நல்ல நிலம் (Good Earth by Pearl S. Buck) என்ற புதினம்
கூறுகிறது.
இவ்வாறு தனித்தும் பிற தெய்வங்களுடன் இணைந்தும்
காணப்படுவதால் அதற்கு மனித வரலாற்றில் மிக முகாமையான பங்கு இருந்திருக்க வேண்டும்.
கொடுநஞ்சுடைய பாம்பின் மேலுள்ள அச்சத்தால் அதனை மனிதன் வணங்கத் தொடங்கியருந்தால், அதனை
விடக் கொடுமையான எத்தனையோ விலங்குகளுக்கில்லாத ஒரு சிறப்பிடம் அதற்குக் கிடைத்திருக்க
முடியாது என்பதுடன் உலகத் தொன்மங்களில் அதற்கு இத்தகைய சிறப்பும் இருக்க முடியாது.
நாகத்தின் மூலமாக மனிதன் அடைத்த ஒரு நன்மையே அதற்கு இத்தகைய ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுத்
தந்திருக்க வேண்டும்.
ஆதாம் ஏவாள் கதை மனிதன் முன்னங்கால்களைக்
கைகளாக மாற்றிய நிகழ்ச்சியை நாடக வடிவில் காட்டுவதாக இருக்காலமோ என்ற எண்ணம் திடீரெனத்
தோன்றிய பின்னர்தான் அதன் தொடர்ச்சியாகப் பாம்பின் பங்கும் ஆய்வுக்குள்ளானது.
பாம்பின் உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு
பங்கு உடற்பகுதியும் ஒரு பங்கு வால் பகுதியும் ஆகும். வால் பகுதி தொடங்கும் இடத்தில்தான்
அதன் கருவாயும் எருவாயும் உள்ளன. வால் பகுதியை மட்டும் தரையில் கிடத்தி உடற்பகுதி முழுவதையும்
நிமிர்த்தி அதனால் எழுந்து நிற்க முடியும். பாம்புகள் புணரும் போது தங்கள் பிறப்புறுப்புகள்
ஒன்றோடொன்று பொருந்தும் நிலை வரும் வரை இவ்வாறு எழுந்து விழுந்து மகிழ்கின்றன. இதனைத்தான்
இளங்கோவடிகள், கோவலனும் கண்ணகியும்,
தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து நாமஞ்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று
என்று
மனையறம்படுத்த காதை இறுதி வெண்பாவில் கூறுகிறார்
கருநாகம் 15 அடி நீளம் வரை வளரும் என்றும்
அதில் 5 அடிகள் கொண்ட வாலைத் தரையில் கிடத்தி 10 அடிகள் உயரம் வரை எழுந்து நிற்க அதனால்
மூடியும் என்றும் படித்திருக்கிறேன். அத்தகைய ஒரு நாகம் திடீரென்று எழுந்து நம்முன்
நின்றால்.... அப்பப்பா, நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.
மனிதனுக்கு முந்திய குரங்கு போன்ற ஓர்
உயிரி இப்படி எழுந்து நிற்கும் பாம்பைக் கவனித்திருக்கிறது. கால் என்ற ஒர் உறுப்பில்லாத
பாம்பால் இவ்வாறு எழுந்து நிற்க முடிந்தால் நாம் ஏன் கால்களின் மீது நிமிர்ந்து நிற்க
முடியாது என்று எண்ணி அதனைச் செயலில் காட்டியிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
காரல் மார்க்சுக்குக் கூட யூத மறைநூலின்
பாம்புக் கதை, மனிதன் இயற்கையில் தனக்கு இல்லாதிருந்த கையென்ற உறுப்பை காலிலிருந்து
படைத்துக்கொண்டதைக் குறிப்பதாகத் தோன்றியிருக்கிறது என்பதைப் பின்னால் படித்து அறிந்தேன்.[9]
விலங்கிலிருந்து மனிதத் திரிவாக்கத்தில்
குரங்கின் இடம் முகாமையானது. பிறர் செய்பவற்றைப் போலச் செய்வது அதன் சிறப்பு. அது தனக்குப்
புறத்தே நிகழ்பவற்றைத் தானும் செய்து காட்டும் ஒரு தன்மையாகும். இது நினைவாற்றலை வளர்த்து
செயலாற்றலாக மாற்றி மேம்படுத்தும் ஒரு திரிவாக்க வளர்ச்சி நிலையாகும். அதனால்தான் பாம்பைப்
பார்த்து அது எழுந்து நின்றது. இந்தத் திரிவாக்க நிலையை மனிதக் குழந்தைகளிடமும் காணலாம்.
மலேசியாவில் செம்பனைகளில் இருந்து அதன்
பழக்குலைகளை அறுவாள் இணைத்த நீண்ட கழிகளால் பறிக்கும் பணியாற்றி விட்டு ஊர் திரும்பியிருந்த
என் மாமன் மகன் அங்கு ஏராளமாகக் கருநாகங்கள் திரிவதாகவும் ஆனால் நம் நாட்டில் போல்
அவை மனிதனைத் தீண்டுவது அரிதென்றும் அவ்வாறு தீண்டினாலும் நஞ்சும் கடுமையானதல்ல என்றும்
கூறினான். இது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை .
ஆனால் கரிய உயிரிகளாகிய யானை, எருமை, பன்றி,
காகம் போன்றவை அடர்ந்த காடுகளில் இருப்பதை விட வெட்ட வெளியில் வாழும் போது மென்மையான
இயல்பு அடைவது போன்று இதுவும் இருக்கலாம்.
என் மாமன் மகன் இரங்கூன் இராதா
திரைப்படத்தில் கலைவாணர் “எங்களூரில் பெண்களின் கருக்காலம் 20 மாதங்கள்” என்று அளந்தது
போல் மச்சானாகிய என்னிடம் கரடிவிட்டானா? யாராவது கூறுங்களேன்!
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஒரு மருத்துவ
மனை அமைந்திருக்கும் புத்தேரி எனும் ஊரின் பெயர் புதிய என்ற பொருள் தரும்
புத்து என்ற முன்னொட்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.
ஆனால் என்னிடம் தட்டச்சராகப் பணியாற்றிய அவ் வூரைச் சேர்ந்த திருமதி பிந்துமதி நாகராசன்
கூறிய சேய்தி புற்று என்ற சொல்லின் அடிப்படையில்தான் அவ் வூர்ப் பெயர்
அமைந்துள்ளது என்பதைக் காட்டியது. அவ் வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஊர்க் கோயில் திருவிழாவில்
சரக்குந்தில் வந்து இறங்கும் செம்மண்ணில் கையளவு எடுத்து அங்கிருக்கும் மண் மேடு ஒன்றில்
பூசி வழிபடுவார்களாம். இம் மண் மேடு புற்றைக் குறிப்பது என்பதில் ஐயமில்லை. (செய்தி
தந்தவரின் கணவர் பெயர் நாகராசன் என்பது தற்செயலான பொருத்தமா?) குமரி மாவட்ட கலவரப்
புகழ் மண்டைக்காட்டு அம்மன் கோயிலிலும் இவ்வாறு புற்று மீது மண் பூசும் வழிபாடு நடைபெறுகிறது.
[1] ஏகுபதி அரச மரபினர் தம் தலையில்
படமெடுத்தாடும் பாம்பின் வடிவை அணிந்திருந்தமையும், அவர்கள் தமிழர்களாக
இருக்கலாமென்ற கருத்தும் கருதற்பாலது. ஏகுபதியரிடம் அடிமைகளாயிருந்த தம் மக்களை விடுவித்துக்
கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க அவர்களின் கடவுள்களில் ஒன்றாகிய பாம்பைப் பேயன்
என்றனரோ?
[2] அருச்சுனன்
[3]
ஈழம் என்பது,
ஏடன் என்று அல்லது ஈடன் என்பது ஈழம் என்று திரியுமா என்பதைச் சொற்பிறப்பியல்
வல்லார் ஆய்ந்து கூறலாம்.
இன்று
இராமர் பாலம் என்று “இந்து” முனைப்பியர்கள் கற்பித்துள்ள தமிழக – இலங்கை இடைநிலத்தை
ஆதம் பாலம் என்று ஐரோப்பியர் குறிப்பிடுவதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
[6] Chariots
of Gods - Unsolved Mysteries of the Past, Erich Von
Danikan, Translated by Michael Heron, Corgi Books, 1976 Edition p. 120.
தென்னமெரிக்க மக்களுக்கு நாகரிகங்களைக் கற்றுக் கொடுத்து விட்டு
மீண்டும் வருவதாக உறுதியளித்துவிட்டுச் சென்றவர்களாக அம்மக்கள் கூறிய "கடவுளர்கள்"
மீண்டும் வரவேயில்லை என்றும் அவர்களை எதிர்பார்த்து அம்மக்கள் காத்திருப்பதாகவும் இந்
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடவுளர்கள் வெளி உலகங்களிலிருந்து இங்கு வந்தவர்களென்று
அவர் கருதுகிறார். தென்னமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் வழங்கப்படும்
இத்தகைய செய்திகளின் விளக்கம் குமரிக் கண்டக் கோட்பாட்டில்தான் கிடைக்கும்.
[7] வில் தூரான் என்பவர் எழுதிய நாகரிகத்தின் கதை(முதல் மடலம்)
கீழை நாடுகள் நமக்களித்த கொடை என்ற நூலில் கில்காமேசு காப்பியம்
சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. (Story of Civilisation Vol.I, Our Oriental Heritage,
Will Durant, Simon and SCHUSTER, New York, 1954 பார்க்க.) இக் காப்பியத்தை தமிழ்
இலக்கியத் திறனாய்வாளர் திரு கா.ந.சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
[8] வினதை, கத்துரு எனும் காசிபரின் இரு மனைவியரில் இளையவளாகிய கத்துருவின்
சூழ்ச்சியால் வினதை அவளுக்கு அடிமையாக, அவளது மகனாகிய கருடன்
கத்துருவின் மக்களாகிய நாகங்களுக்காக அமுதத்தைக் கொண்டு தந்து விடுதலை பெற்றனர் என்கிறது இக்கதை. குமரி மாவட்டக் கோயில்களில்
பாடப்படும் வில்லுப் பாட்டுகளில் "அக்காளும் தங்கையுமா" என்று தொடங்கும்
கதையும் இதுதான்.
உலகம் முழுவதும் நாகத்தைத்
தோற்றக் குறியாகக் கொண்டவர்களும் பருந்தைத் தோற்றக் குறியாகக் கொண்ட மக்களும் வாழ்ந்ததற்குப்
பல்வேறு சான்றுகள் உள்ளன. தென்னமெரிக்க மக்களில் ஒரு சாரார் தம்மைத்
தங்கச் சிறகுகள் கொண்ட பருந்து பெற்றுவிட்டு மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றது
என்று கூறுவதை எரிக் வான் டெனிக்கானின் நூல் கூறுகிறது. சைபீரிய
மக்களிடையில் வழங்கும் தேவதைக் கதைகளின் தொகுப்பு ஒன்றில் (Northern Lights - Fairy Tales of the Peoples
of the North, Progress Publishers,
Moscow, 1976) பொன்ம(உலோக)ச்
சிறகுகளைக் கொண்ட, மக்களுக்கு நன்மை செய்யும் பருந்துகள் காட்டப்படுகின்றன.
இவ்விரு வகை மக்களும் உலகெங்கும் பரவி அங்கெல்லாம்
போரிட்டுப் பேரழிவை ஏற்படுத்தினர் என்பது
டெனிக்கள் நூலிலிருந்து விளங்குகிறது. அதன் ஒரு பதிவாக பாரதப் போரைக் குறிப்பிட முடியும். வேத கால மக்கள் யார் என்ற
ஆசிரியரின் கட்டுரையைக் காண்க.
[9] Thus Nature
becomes one of the organs of his(man's) activity, one that he annexes to his
own bodily organs, adding stature to himself in spite of the Bible. Capital
Vol.I, Progress Publishers Moscow,
p. 175. இதன் தமிழாக்கம்: இவ்வாறு இயற்கை அவனது (மனிதனது) செயற்பாட்டுக் கருவிகளில்
ஒன்றாக, மறைநூல் விதித்த தடையையும் மீறி, அவனுடைய நிலையை உயர்த்தும்
வகையில் தன்னுடைய உடலுறுப்புகளுடன் அவன் இணைத்துக் கொண்ட ஒன்றாக ஆகியது(அழுத்தம் எமது).
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக