17.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 8

5. மாவும் புள்ளும் நம் தோழர்கள்.
(தோரா. தி.மு. 10,00,000)
            மாந்தனின் நாகரிக வளர்ச்சி இப்போது விரைவாக நடைபெறுகிறது. இப்பொழுது மாந்தனுக்கு ஒரு சட்டம், ஒழுங்கு, வரைமுறை ஏற்படுத்தும் பழக்கமும் அவற்றைப் பேணும் பயிற்சியும் ஏற்பட்டுவிட்டன. எனவே மாந்தக் கூட்டம் விரைந்து பெருகிவருகிறது. முன் போல் குகைகளை அண்டி வாழாமல் வெளியே வாழத் தொடங்குகிறான். தன்னிருப்பிடத்தைச் சுற்றிக் குறிப்பிடத்தக்க தொலைவுக்குப் புதார்கள் மண்டாமல் பார்த்துக் கொண்டான். இதனால் விலங்குகளின் அண்மை குறைந்தது. மேலும் நெருப்பைக் கொண்டு அச்சுறுத்தப்பட்டதால் விலங்குகளும் மாந்தனையும் சிறப்பாக மாந்தக் குடியிருப்புகளையும் கண்டு விலகிச் சென்றன. இச் சூழ்நிலையில் ஏற்பட்ட ஒரு முகாமையான முன்னேற்றத்தைக் குறித்து மேற்கொண்டு காண்போமா?

            நாம் காணும் இடத்தில் இப்போது குகை இல்லை. பல ஓங்கி வளர்ந்த மரங்கள். அவற்றைச் சுற்றிப் புதர்கள் இன்றித் துப்புரவாக இருக்கிறது. அதில் முன்பு நாம் பார்த்தது போன்று ஒரு மாந்தக் கூட்டம் இருக்கிறது. முதியோர் சிலரும் குழந்தைகளும் சிறார்களும் இருக்கிறார்கள். ஒரு மருங்கில் ஒரு மரத்தினடியில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கிறது. நெருப்பு ஒரு சிறு பள்ளத்தில் சிறிய அளவிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு முதியவள் அதனருகில் அமர்ந்திருக்கிறாள். அவள் இடையில் ஒரு மரப்பட்டையிலான ஆடையை அணிந்திருக்கிறாள். மற்றையோர் இலைகளைத் தம் இடைகளைச் சுற்றி அணிந்திருக்கின்றனர். மரங்களின் பட்டைகளில் பாம்பு, ஆண்குறி ஆகியவை தீட்டப்பட்டுள்ளன. முன்பு நாம் பார்த்ததைவிட அதிகத் தொலைவுக்குப் புதர்கள் அழிக்கப்பட்டுள்ளன.

            பகலவன் கிழக்கே அரைவானத்துக்கும் சிறிது மேலே ஏறியுள்ளது. திடீரென்று காட்டினுள் ஓர் ஓரத்தில் ஒரு சலசலப்பு. தொடர்ந்து ஓர் ஆடு இரைக்க இரைக்க வந்து நிற்கிறது. காட்டினுள் ஒரு புலியின் உறுமல் கேட்கிறது. அனைவரும் சிறிது அச்சத்துடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் புலியின் அரவம் கேட்கவில்லை. அது திரும்பிப் போய்விட்டது போலும்.

            உள்ளே வந்த ஆடு மிரட்சியுடன் அங்கிருந்தவர்களைப் பார்த்தபடி நிற்கிறது. அது நன்கு முற்றிய சினையாடு. சிறிது நேரத்தில் மே என்று கத்திக்கொண்டு படுக்கிறது. கொஞ்ச நேரம் அவ்வாறு வேதனையுடன் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது. சற்று நேரத்தில் ஒன்றன் பின்ன்றாக இரண்டு குட்டிகளை ஈனுகிறது. குட்டிகளைத் தாய் நக்கிக் கொடுத்துத் துப்புரவாக்குகிறது. சிறிது நேரத்தில் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் தள்ளாடியபடி எழுந்து நிற்கின்றன. ஆடும் எழுந்து நிற்கிறது.

            இவ்வளவு நேரமும் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறார்கள் ஆட்டுக்குட்டிகளை நெருங்குகிறார்கள். கிழவி ஒரு குரல் கொடுக்கிறாள். அவற்றைத் தொடாதீர்கள்! சிறார்கள் விலகிச் சென்று அவற்றை வேடிக்கை பார்க்கிறார்கள். ஆடு மெல்ல நடந்து வெட்ட வெளியின் ஓரத்திலிருக்கும் செடிகொடிகளை மேய்கிறது. குட்டிகளும் பின்னால் செல்கின்றன. தாயின் மடியில் பால் குடிக்கின்றன.
            ஆடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் முதியவர்கள், சிறார்களின் கவனத்தை ஆட்களின் குழப்பமான பல ஒலிகள் கலைக்கின்றன.
                 
            ஒரு புறத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாகப் பலர் கூட்டமாக வருகிறார்கள். அவர்கள் ஓர் இளைஞனையும் இளைஞியையும் பிடித்துத் தள்ளிக்கொண்டு வருகிறார்கள். வந்தவர்களில் இவ் விருவரையும் தவிர்த்த அனைவரும் அரைகளில் இலைகளை ஆடையாக்கி அணிந்துள்ளார்கள். உள்ளே நுழைந்தவர்கள் நேரே மரப்பட்டை அணிந்திருந்த கிழவி முன் இருவரையும் கொண்டு நிறுத்துகிறார்கள். கூட்டத்திலுள்ள ஓர் ஆள் கிழவியை நோக்கிப் பேசுகிறான். இதோ இவர்கள் இருவரும் மறைவில் புணர்ந்து கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம். அரத்த உறவில்லாத இவர்கள் இருவரும் புணர்ந்தது சட்டத்துக்குப் புறம்பானது. இவர்கள் இருவரையும் விதிப்படிக் கொலை செய்ய வேண்டும். என்னோடுள்ள இவர்கள் அனைவரும் இதற்குச் சாட்சி என்கிறான்.
                 
            கிழவி இளைஞனை நோக்குகிறாள். இளைஞன் நிமிர்ந்து அச்சந்தோய்ந்த குரலில் கூறுகிறான். அம்மா, என் தாய் இறந்துவிட்டதை நீங்களறிவீர்கள். அவளுடன் பிறந்த பெண்கள் யாரையும் நானறியேன். என் பாட்டியும் உயிருடன் இல்லை. என்னுடன் பிறந்த பெண்ணும் யாருமில்லை. எனவே நம் சட்டப்படி நான் புணர யாரும் இல்லை. வேறு வழியில்லாத்தாதல் நான் இதைச் செய்ய நேர்ந்தது என்று கூறுகிறான்.

            அவன் முடிக்கும் முன்பே பெண்ணும் பேசத் தொடங்குகிறாள்: என் தாயுடன் பிறந்தவரோ என்னுடன் பிறந்தவரோ என்னுடன் பிறந்தவரோ ஆடவர் எவரும் இன்று உயிருடன் இல்லை. நானும் என் தாயும் என் சித்தியும் என் தங்கையும் என் சித்தியின் பெண்கள் இருவருமாக மொத்தம் ஆறுபேர் பெண்களாகவே உள்ளோம். எங்களுக்குக் கூட முறைப்படி ஆண்கள் இல்லை. எனவேதான் இம் முறையை நாட நேர்ந்தது.

            கிழவி சிறிது நேரம் தலையைக் குனிந்தபடிச் சிந்தனையிலாழ்ந்திருக்கிறாள். தான் நடுப்பருவத்தை எய்தியபோது தன் தாயுடன் பிறந்த முதியவனைத் தவிர குடும்பதாருடன் காட்டுக்குச் சென்றதும் காட்டில் தங்களை ஓர் ஓநாய்க் கூட்டம் சூழ்ந்துகொண்டதும் அவற்றுடன் போராடியதில் தான் மட்டுமே தப்ப முடிந்ததும் நினைவுக்கு வருகின்றன. தான் இன்பம் துய்க்க ஆண்கள் இன்றி வருந்தியபோது இதோ இப்போது இப் பெண்ணருகில் வந்து நிற்கிறானே அவனின் தாய்மாமன் அவனைச் சேர்ந்த பெண்கள் யாவரும் விலங்குகளாலும் நோயாலும் இறந்துவிட்டதால் அவனும் பெண் துணையின்றி இருந்தான். அவனும் தானும் மறைந்து உறவுகொண்டு வருவது அவள் நினைவுக்கு வருகிறது. நல்ல வேளை யார் கண்ணிலும் படவில்லை. எனக்கு இந்த உறவால் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. இன்று நானும் உயிருடன் உள்ளேன். கூட்டத்தில் மூத்தவளின் மூத்த மகள் என்பதால் தலைவியாகவும் உள்ளேன் கிழவி பெருமூச்செறிந்தாள். இளம்பெண்ணுடன் நின்றிருந்த தன் இணையை ஓரக் கண்ணால் பார்த்துக் கொள்கிறாள். பேசத் தொடங்குகிறாள்.

            இவர்களுடைய நிலை நாம் எண்ணிப் பார்க்கத்தக்கது. இவர்களுக்கு அதுவும் குறிப்பாக இப் பெண்களுக்கு ஒரு வகை செய்யாவிட்டால் அவர்களுக்குத் துணை யார்? இப் பெண்களுக்கு ஆண் துணை கிடைக்காவிட்டால் இவர்கள் மூலம் நம் கூட்டத்திற்குக் கிடைக்கும் குழந்தைகள் குறையும். அவ்வப்போது விலங்குகளாலும் நோய்களாலும் அயலாருடன் நேரிடும் சண்டைகளிலும் கொல்லப்படும் நம் கூட்டத்தார் அருகாமலிருக்கவும் பெருகி வாழவும் எல்லாப் பெண்களுக்கும் குழந்தை பெறும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனவே இப் பெண்ணின் பாட்டியின் குடும்பத்தோடு இவ் விளைஞன் குடும்பத்தை இணைத்துவிடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று வினவுகிறாள்.
                                                 
            கூட்டத்தினர் ஓரளவு பொந்திகையடைந்தவர்களாகக் கலைகின்றனர். இளையோரிருவரும் தனியே விடப்படுகின்றனர். தலைவி முன் விழுந்து வணங்குகின்றனர். இளைஞி தன் காதலனைக் கையைப் பற்றி அழைத்துச் சென்று தன் பாட்டியைச் சுற்றி அமர்ந்திருந்த தாய், சித்தி தங்கைகளுடன் அமர்கிறாள். முன்பு இளையோர் இருவரையும் பிடித்த இடத்தில் போட்டுவிட்டு வந்த வேட்டையாடிய விலங்குகளையும் விறகுகளையும் வேட்டைக் கருவிகளையும் எடுத்துவரச் செல்கின்றனர் சிலர். இதுவரை வராதவர்களும் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கின்றனர். வந்தவர் இப்போது ஆட்டையும் குட்டிகளையும் வியப்போடு பார்க்கின்றனர். ஆடு இப்போது மிரட்சி குறைந்து காணப்படுகிறது. குட்டிகள் தாயின் மடியில் பால் குடிப்பதும் தாயைச் சுற்றித் துள்ளி ஓடுவதுமாகத் திரிகின்றன.

            ஆடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தி, கிழவியை நெருங்குகிறாள். இவள் கிழவிக்கு அடுத்தபடியாகத் தலைமைப் பொறுப்பேற்க இருப்பவள். இப்போதுள்ளவர்களில் மூத்த பெண்ணின் மூத்த மகள். அவள் கிழவியிடம் ஆட்டைக் காட்டி இவை எப்படி வந்தன? என்று கேட்கிறாள். கிழவி நிகழ்ந்தவற்றை விளக்கிவிட்டுக் கொடு விலங்குகளால் துரத்தப்பட்டு வரும் இது போன்ற விலங்குகளை நாம் இன்றுவரை உடனே அடித்துத் தின்று வந்திருக்கிறோம். ஆனால் இது போன்று குட்டி போட்டு அவற்றை வளர்த்து வந்தால் நமக்கு வேண்டிய உணவுகள் கிடைக்காத வேளைகளில் அவற்றை உண்ணலாம். எனவே இந்த ஆட்டையும் குட்டியையும் யாரும் எதுவும் செய்யாதிருக்க அனைவருக்கும் கூறிவிடு! என்கிறாள்.
 
            இவ்வாறுதான் மாந்தனுடன் அவனது வீட்டு விலங்குகள் சேர்ந்திருக்கும். இவ்வாறு இரை விலங்குகளைக் கண்டவுடன் கொல்லாமல் அவற்றை வளர்த்து உண்ணும் வழக்கம் தோன்றியது. இவ் வழக்கம் தோன்றியதைக் காட்டும் சான்றுதான் சிந்துப் பள்ளத்தாக்கு அகழ்வில் காணப்பட்டிருக்கும் விலங்குகள் சுற்றி நிற்க ஊழ்த்தத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதனின் முத்திரை. விலங்குத் தலைவன் எனப் பொருள் படும் பசுபதியின் முந்தைய உரு எனக் கருதப்படும் இம் முத்திரையில் உயர்வு நவிற்சியாகக் கொல்விலங்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மாந்தன் கண்ட வீட்டு விலங்குகளில் மாடே எல்லா வகையானும் உயர்ந்ததாகையால் பிற விலங்குகளைவிட்டு ஒரு காளையை சிவனுக்கு ஊர்தியாக்கி யிருக்கவேண்டும்.

பின்குறிப்பு: அகமணப் பிரிவுகள், புறமணப் பிரிவுகள் பற்றி முன் அதிகாரத்தில் சில செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. பண்டை தாய்வழிக் குக்குலங்களின் உள்ளடக்கத்துடன் ஆனால் புதிய வடிவத்தில் ஏறக்குறைய எல்லா சாதியினரிடையிலும் அக, புற மணப்பிரிவுகள் இன்றும் நிலவுகின்றன. பார்ப்பனர்களிடையில் கோத்திரங்கள் என்று, தொன்மங்களில் கூறப்படும் முனிவர்களின் பெயரில் அவை நிலவுகின்றன. முக்குலத்தினரில் ஒரு பிரிவினராகிய தேவர்கள் என்று அழைக்கப்படும் மறவர்களிடையில் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டோரிடையில்  மல்லிக் கொத்து, கீரைக் கொத்து என்பன போன்ற கொத்துக்கள் அகமணப் பிரிவுகளாகவும் அவற்றினுள் அடங்கிய உட்பிரிவுகளைப் புறமணப் பிரிவுகளாகவும் உள்ளன். பிறரிடையில் வெட்டுவான் கிளை போன்றவை உள்ளன.

            தங்கள் குழுவுக்கு வெளியே மணவுறவு கொள்ள முடியாத ஒன்றிகள் அகமணப் பிரிவு எனப்படும். அந்த வகையில் ஒவ்வொரு சாதியும் ஓர் அகமண மக்கள் குழுவாகும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கொத்துகளுக்கு வெளியே அதே சாதியைச் சேர்ந்த இன்னொரு கொத்தோடு கூட மணவுறவு கொள்ள முடியாது என்பதால் கொத்துகள் கூட அகமணப் பிரிவுகளாகும். கிளைகள்தாம் புறமணப் பிரிவுகள் ஆகும். அவற்றுள்ளும் தமக்குள் மணவுறவு கொள்ள முடியாத “உடன்பிறப்பு”க் கிளைகளும் கொள்ளத்தக்க “மைத்துன”க் கிளைகளும் உண்டு. மறவர்களிடையில் கொண்டையங்கோட்டையர் தாய்வழியினர் என்று தெரிகிறது.

            நாடார்கள் எனப்படும் சாணார்கள் எனும் சாதியாகிய அகமண மக்கள் குழுவினரில் 5 அகமணப் பிரிவுகள் உண்டு. இவர்களில் ஒரே குல தெய்வத்தை வணங்குவோர் அல்லது பெயர்களில் நான்கும் அதற்கும் மேலும் முன்னெழுத்துகளைக் கொண்டோரில் அவற்றில் முதல் எழுத்து ஒன்றேயாக இருப்பவர்கள் ஒரே ஊரிலிருந்து இடம் பெயர்ந்தவர்களாக இருப்பர் என்ற அடிப்படையில் உடன்பிறப்பு உறவினர் ஆகையால்   மணத்துக்கு உரிமை இல்லாதவராகின்றனர். வெளியிலிருந்து நாடார்கள் என்று கூறி குடியேறியவர்களின் உண்மையான சாதி ஐயத்துக்கு உரியது என்ற அடிப்படையில் “வந்தட்டி வரத்தட்டி” என்று கூறி அவர்களைத் தவிர்ப்பதும் உண்டு. அவர்களின் பொருளியல் வலிமை இந்த ஒதுக்குதலை ஒதுக்கிவிடுவதும் உண்டு.

குமரி மாவட்ட நாடார்கள் உட்பிரிவுகள் பற்றி அறியவே மாட்டார்கள். ஐந்து தலைமுறைகள் இடைவெளி இருந்தால் உடன்பிறப்பு உறவு உள்ளவர்களும் மணமுடிக்கலாம் என்பது அவர்ளுக்கு இடையிலுள்ள கருத்து. இந்த அடிப்படையில் கலப்பு மணங்களுக்கு மிகக் குறைந்த எதிர்ப்புணர்வுடைய மக்கள் குழுவினராக குமரி மாவட்ட நாடார்களைக் கொள்ளலாம்.       

நாடார்களில் நட்டாத்திகள் எனப்படுவோர் தாய்வழியினராகும்.

பதத்துக்கு இரு சாதிகளை மட்டும் தொட்டுவிட்டு விரிவஞ்சி நிறுத்திக்கொள்கிறோம்.

சாதி வரைமுறைகளை மீறி மணவுறவு கொள்வோரை பிழுக்கை என்ற முன்னொட்டு கொடுத்து ஒதுக்கி வைப்பது வழக்கம். ஆனால் இந்தப் பிரிவினர் அந்தச் சாதியை விட அடுத்த “தாழ்ந்த” சாதியினரை விட “உயர்ந்தவர்கள்” என்பது நடைமுறை. தமிழர்களின் இந்தத் “துல்லியத்துக்காக” நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். 

0 மறுமொழிகள்: