17.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 4

1. மனித இனத்தின் நாகரிக வரலாற்றின் அறிவியல் அடிப்படை

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று நம்மில் பலர் அடிக்கடிக் கூறுகிறோம். தமிழர்களின் பிறப்பிடம் இன்றைய தமிழகமும் அதன் தெற்கே கடலினுள் மூழ்கிக் கிடக்கும் பெரும் நிலப்பரப்பும் என்று சொல்கிறோம். தமிழனின் நாகரிகம் அவனுக்குரிய தென்றும் அது வேறெவரிடத்திலிருந்தும் கற்றுக் கொள்ளப்பட்டதல்ல என்றும் கூறுகிறோம். இதன் பொருளென்ன?

தமிழன் இம் மண்ணில் ஒரு நாள் நாற்கால் உயிரியாக வாழ்ந்து வந்தான், மண்ணில் கிடக்கும் புழுவையும் பூச்சியையும் கூட உண்டு வந்தான். கொல் விலங்குகளுக்கு அஞ்சி, பெற்ற குழவியையும் போட்டு விட்டு ஓடினான், உடன் பிறந்தோர், பெற்றோர், பிள்ளைகள் என்ற வேறுபாடு இன்றிப் புணர்ந்தான் என்றெல்லாம் இதற்குப் பொருள். இதனை ஏற்கப் பலருக்குத் தயக்கமாக இருக்கும். சிலருக்குக்கு குமட்டல் கூட வரலாம். ஆனால் இப்படியெல்லாம் நாம் இருந்துதான் இன்றைய உயர் நாகரிக நிலைக்கு ந்துள்ளோம் என்பதுதான் உண்மை. இதை ஏற்றுக்கொள்ளாத வரை நாம் ஒரு நாகரிகத்தைப் படைத்தவர்கள் என்ற உரிமையைப் பெற இயலாது. எல்லோரும் குழவியாகப் பிறந்து புரண்டு எழுந்து தவழ்ந்துதான் பெரியவர்களாகிறோம். அறிஞர்கள் மாந்த இனத்தின் நாகரிக வளர்ச்சியைப் பற்றிக் கூறுவதென்ன? அதை இப்படிச் சுருக்கிக் கூறலாம்.

மாந்தன் விலங்கு நிலையிலிருந்த போது கையைப் பயன்படுத்தப் பழகிக் கொண்டான். கை நுண்மையாகப் பயன்படப்பட, அவன் மூளை வளர்ச்சியடைந்தது. பின்னர் நெருப்பைக் கையாளத் தொடங்கிய பின்னர் அவன் விரைந்து நாகரிக வளர்ச்சியடைந்தான், இந் நிலைமைகளின் போது மாந்தரிடையில் வரைமுறையற்ற புணர்ச்சி முறை இருந்தது.

            பின்னர் புணர்முறை வரையறுக்கப்பட்டுத் தாய், உடன் பிறந்தோர், அவர்கள் மக்கள் ஆகியோருக்கு மட்டும் உரிமையாகிப் பின்னர் அவர்கள் விலக்கப்பட்டனர். உடன் பிறந்தார் பெண்களை இன்னும் புணர்முறையாகக் கொள்கிறார்கள்.

            இயற்கையான விளைப்புகளை உண்பதிலிருந்து பண்ட மாற்று தொடங்கி வாணிகத்துக்காக கைவினைப் பொருட்களும் செய்யத் தொடங்கினர். வாணிகத்தின் வளர்ச்சி அரசைத் தோற்றுவித்தது. தொழிற்பாகுபாடும் (division of labour) உடன் தோன்றி வளர்ந்தது. சொத்துடைமை பொருளுடைமையும் தோன்றியதுடன் பெண் தலைமை மாறி ஆண் தலைமை தோன்றியது. தோன்றவே, பெண் ஒரே ஓர் ஆடவனுக்கே உரியவள் என்ற நடைமுறையும் ஆங்காங்கு தோன்றியது. இன்றும் உலகின் பல பகுதிகளிலும் தமிழ் நாட்டிலும் இவ் வளர்ச்சி நிலைகளில் பல்வேறு கட்டங்களில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

            மேற்கூறிய மாற்றங்களுக்கு இணையாக இயற்கையை அறிவதிலும் புதுப்புனைவுகளிலும் அறிவியல் முன்னேறியது. வாணிகக் கூட்டங்கள் மாறிமாறி வெற்றி பெற்ற போதெல்லாம் வெவ்வேறு மக்கட் கூட்டங்கள் உலகில் ஆதிக்கம் செலுத்தின. புவியியல் மாறுபாடுகளினாலும் மக்கட் தொகைப் பெருக்கத்தாலும் ஓரிடத்தில் தோன்றிய மக்கட் கூட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்றதால் அவர்கள் தோன்றிய இடத்தில் பேசிய ஒரே மொழி வெவ்வேறு வகையாகத் திரிந்து வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்தது.
                                                    
            இத்தகைய படிநிலை வளர்ச்சிகட்குத் தமிழ் இனமும் ஆட்பட்டிருக்க வேண்டும். அவற்றிற்குரிய சான்றுகள் ஏதோவொரு வகையில் நம்மிடம் இன்று இருந்தால் நாம் இத்தகைய படிநிலைகளில் இருந்ததை நிறுவி விடலாம்.

            நான் தமிழ் இனத்தின் வளர்ச்சியின் கட்டங்களை காண அவை நடந்த காலங்களுக்கும் இடங்களுக்கும் உங்களை அழைத்துச் சென்று காட்டுகிறேன்.

            கடந்த காலத்துக்குள் எப்படிச் செல்வது? ஐன்சுடீன் கோட்பாட்டின்படி ஒளியின் விரைவுக்கு நெருக்கமாகப் பயணம் செய்தால் காலத்தினுள்ளும் பயணம் செய்யலாம். ஆனால் எதிர்காலத்தினுள்தான் செல்ல முடியும். கடந்த காலத்தினுள் செல்ல முடியாது! ஏனென்றால் நம் முன்னோர்கள் காலத்தில் நாம் தோன்றியிருக்கவில்லை. அன்னையும் தந்தையும் மணம் செய்யுமுன் நாம் எப்படிப் பிறந்திருக்க முடியும் என்பதுதான் இதன் சுருக்கம். இது சரிதானா?

            நாம் இன்றிருக்கும் வடிவில் இல்லையென்றாலும் நம்மை ஆக்கியிருக்கும் மூலப்பொருட்கள் அன்றும் இருந்தன. எனவே நாம் அன்றும் இல்லாமலில்லை. இவ்வாறுதான் கடந்த காலத்தினுள் நுழைகிறோம். ஊர்தி? ஒளியை விரைவில் மிஞ்சுவதாகிய எண்ண அலைகள்தான்.

            ஆனால் நாம் செல்லுமிடங்களில் இருப்போர் நம்மைக் காண முடியாது. பேச்சைக் கேட்க முடியாது. நமக்குப் பசியெடுக்காது. மிகச் சலிப்படைந்தாலொழிய ஓய்வெடுக்கத் தோன்றாது. சரி போவோமோ?

0 மறுமொழிகள்: