20.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 28

25. காசிக்குப் போறேன் ஆளைவிடு!
(தோரா. தி.மு. முதல் நூற்றாண்டு)
            நாம் இப்போது காவிரியாற்றை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதோ பாருங்கள், மறுகரையில் மேற்கே பெரும் திருவிழாக் கூட்டம் போல் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்! அருகில் சென்று பார்ப்போம். ஆம்! ஆற்றின் ஒரு கரையில் ஏதோ ஓர் அணை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெரும் பெரும் கற்களைக் கொத்திக்கொண்டிருக்கிறார்கள் கற்றச்சர்கள். அடேயப்பா! எத்தனை உளிகள் சலீர் சலீர் என ஒலி எழுப்பிக் கொண்டிருக்கின்றன! இருவர் இருவராக இப் பெரும் கற்களை இரும்புத் தொடரிகளில் பிணைத்து அத் தொடரிகளில் சொருகிய தடியைத் தோளில் தாங்கித் தூக்கிக் கொண்டு அணைக் கட்டுக் களத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

            பல வண்டிகளில் கற்கள் கொண்டுவரப்பட்டுக் கற்றச்சர்கள் வேலை செய்யுமிடத்தில் இறக்கப்படுகின்றன. ஒரு புறம் கரும்புக் கட்டுகள் வண்டிகளிலிருந்து இறக்கப்படுகின்றன. அவை கரும்பு ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரைக்கப்பட்டுச் சாறு குடங்களில் திரட்டப்பட்டு எடுத்து வரப்படுகின்றன. கரும்புச் சாற்றை நல்ல களிமண்ணில் இட்டுக் குழைத்து அச் சாந்தைக் குவியல்களாக அடைகிறார்கள். ஏற்கனவே இது போன்று அடைந்த குவியல்களின் உச்சியை அகலப்படுத்தி அணை பிடித்து நீரூற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குறிப்பிட்ட நாள்கள் நீரூற்றிப் புளிக்கவைத்த குவியல்களை வெட்டி இழுத்து நீரூற்றிக் குழைத்து அள்ளிக் கொண்டுவருகின்றனர் வேறு பலர். அதோ கல் கொண்டு வட்டமாகக் கட்டப்பட்ட தாரையினுள் உருளும் கல் ஒரு முனையிலும் மறுமுனை வட்டத்தின் நடுவில் வலுவாக நிறுப்பட்ட குற்றியிலும் பொருத்தப்பட்ட நீண்ட தடி உள்ளது. தடியின் வெளி முனையில் பொருத்தப்பட்ட நுகத்தில் இரு காளைகள் பூட்டப்பட்டுள்ள செக்கு வடிவ அரைவைகள் பல உள்ளன. அவற்றினுள் இந்தக் கலவையைக் கொட்டுகின்றனர். அரைத்து முடித்த கலவையை ஆங்காங்கே சோமாறி வைக்கிறார்கள். அங்கிருந்து அதனைச் சுமந்து அணை கட்டும் இடத்தில் கற்றச்சர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள் பெண்கள்.

            அணைக்களத்துக்கு வடக்கிலிருக்கும் சோலையில் ஓர் அழகிய பெரிய கூடாரம் காணப்படுகிறது. அதன் அருகில் சில சிறிய கூடாரங்களும் காணப்படுகின்றன. பெரிய கூடாரத்தின் பக்கத்தில் ஒரு பெரிய களிற்றியானை தொடரியால் பிணைக்கப்பட்டு நிற்கிறது. கூடாரத்தின் முன்புறம் ஒரு வீரன் ஒரு பெரிய குடையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். கூடாரத்தினுள்ளிருந்து விலை உயர்ந்த பட்டாடைகளை இடையிலும் தோளின் மீதும் அணிந்த ஒரு பெரிய மனிதன் வருகிறான். அவனுடைய கைகள் தோள்கள், கணைக்கால்கள், கழுத்து ஆகியவற்றில் விலையுயர்ந்த அணிகள் மின்னுகின்றன. வீரன் குடையைப் பிடித்துச் செல்ல, மன்னவன் மிடுக்குடன் குடைநிழலில் நடக்க வீரர்கள் பின்தொடர்கிறார்கள்.
          நண்பகல் உணவு முடிந்து பணி தொடங்கியிருக்கும் நேரம். அணைக் களத்தை நோக்கிச் செல்லும் அரசன் கற்றச்சர் வேலை செய்யும் இடத்தருகே வருகிறான். அப்போது சற்றுத் தொலைவில் வாயில் நுரை தள்ள வந்து நின்ற அழகிய இரு புரவிகளிலிருந்து இறங்கிய இரு வீரர்கள் அரசர் முன் வந்து தலை தாழ்த்தி வணங்கி மாமன்னர் கரிகால் வளவர் நீடுழி வாழ்க! என்று வாழ்த்துகிறார்கள். வா! பெருந்திரையா! என்ன சேதி கொண்டு வந்தாய்? என்று புன்னகையுடன் கேட்டவாறு அரசன் நடக்கிறான்,

            விடை கூறியவாறே இரு வீரர்களும் அரசனுடன் நடக்கிறார்கள் மன்னர் மன்னவா! படைத் தலைவர் இளஞ்செழியர் சேதி அனுப்பியிருக்கிறார். தொண்டை மண்டலத்தில் குறும்பர்களையும் அருவாளர்களையும் அடக்கி வேளிர்களின் பண்ணைகளில் பணிபுரிய வைத்து விட்டாராம். ஆனால் அங்கும் சாணார்கள் மட்டும் இணங்கவில்லையாம். தப்பியோடி மலைகளின் மீது ஒளிந்து கொண்டனராம். அவர்களைக் கைப்பற்ற முடியவில்லையாம். இன்னும் ஒரு கிழமைக்குள் திரும்பி வருவதாகச் செய்தி அனுப்பியிருக்கிறார். உறையூரிலிருந்த ஆவணங்களையும் அரண்மனைத் தளவடங்களையும் படைக்கலங்களையும் புகாருக்குக் கொண்டு செல்லும் பணி நேற்று மாலையிலிருந்து தொடங்கியிருக்கிறது. மாமன்னரின் கட்டளைகளைப் பெற்றுவருமாறு அமைச்சர் பணித்துள்ளார்.

            வேலா! நீ சென்று சாணாரை ஒதுக்கப்பட்டவராகவும் அவர்களைப் பறையரோடு உறைய வைக்கவும் ஆணை எழுதிக் கொண்டுவா. பெருந்திரையா! நீ சென்று ஓய்வெடுத்துவிட்டுத் திரும்புவதற்கு ஆயத்தமாக வா! நான் இளஞ்செழியனை வரவேற்பதற்கு உறையூர் வருவேன் என்று அமைச்சருக்குச் சொல்!

            பெருந்திரையனும் வேலனும் செல்கிறார்கள். நாமும் கொள்ளிடத்தைக் கடந்து நம் வழியே செல்வோம். நம் முன்னே ஓர் இளைஞன் வந்துகொண்டிருக்கிறான். அவன் உச்சிக் குடுமி வைத்திருக்கிறான். மீசை மழிக்கப்பட்டிருக்கிறது. பூணூல் அணிந்திருக்கிறான். காவி உடுத்தியிருக்கிறான். தாலங்குடை பிடித்திருக்கிறான் ஒரு கையில். மறுகையில் ஒரு செம்பு இருக்கிறது. அவனுக்குப் பின்னால் இரு ஆடவர்கள் அரை ஓட்டமாக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடு அகவையைத் தாண்டியவர்கள். அவர்களும் உச்சிக் குடுமி வைத்துப் பூணூல் அணிந்திருக்கிறார்கள். வேட்டியைத் தாழ்ப்பாய்ச்சிக் கட்டியிருக்கிறார்கள். இருவரும் இளைஞனை அடைந்துவிட்டார்கள். அவன் முன்னே வந்து நிற்கிறார்கள். இளைஞன் திகைப்படைந்தவனாக அவர்களை நோக்குகிறான். அடேய் சந்திரசேகரா! சொல்லாமல் கொள்ளாமல் எங்கேடா கிளம்பி விட்டாய்? இளைஞன் மறுமொழி கூறவில்லை.

            அப்பா கேட்டதற்கு மறுமொழி சொல்லேண்டா தம்பி! இளைஞன் இருவரையும் மாறிமாறிப் பார்க்கிறான்.

            நான் காசி செல்கிறேன்.

            ஏண்டா இந்த இளமையிலா? இங்கு உனக்கு என்னடா குறை?

            என்ன குறையா? இளைஞனின் குரலில் சூடு ஏறுகிறது. என்ன இருக்கிறது இங்கே? எனக்கு இங்கு எதுவுமே இல்லை. என்னுடன் வளர்ந்தவர்கள் ஏதோவொரு தொழில் செய்கிறார்கள். சிலர் உழவுத் தொழில் செய்கிறார்கள். சிலர் போர் வீரர்களாகிவிட்டார்கள். எனக்கு என்ன இருக்கிறது? கோவிலில் உண்டைச் சோறு உண்பதும் வேதம் ஓதுவதும் அகரத்துப் பெண்களுடன் ஆட்டம் போடுவதும் வெட்டிப் பொழுது போக்குவதும் தவிர. நண்பர்கள் தண்டச் சோற்று இராமா என்று கிண்டல் செய்கிறார்கள். ஊர்ச் சிறுவர்கள் கூட பார்ப்பான் என்று ஏளனம் செய்கிறார்கள். யாரும் மதிக்க மாட்டேன் என்கிறார்கள். பார்ப்பான் பார்ப்பான் என்று ஒதுக்குகிறார்கள்.

            காசியில் என்னடா கிடைக்கும் என்று போகிறாய்?

            இளைஞன் முகத்தில் கடுமை மறைந்து இன்னகை அரும்புகிறது. வட நாட்டில் பார்ப்பனர்களுக்குப் பொன்னும் பொருளும் ஆவும் பெண்ணும் நிலமும் புலமும் கொடையாக வழங்குகிறார்களாம்! கொலை செய்தால் கூடத் தண்டனை கிடையாதாம். உழைக்காமலே வளமாக வாழ அங்குப் பார்ப்பனர்களுக்கு எல்லா ஏந்துகளும் உள்ளனவாம். அப்படியிருக்க இக் கேடுகெட்ட நாட்டில் வாழ நான் விரும்ப வில்லை.

            எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கையைப் பிடித்திழுக்கலாம். ஒன்றும் செய்யமாட்டார்கள். ஏண்டா அதைச் சொல்ல மறந்து விட்டாய்? அக் காலம் எல்லாம் மலையேறிவிட்டதா சந்திரசேகரா! அம்மணர்களும் புத்தர்களும் வடநாட்டில் பரவி நம்மவரின் செல்வாக்கை அழித்து வருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? காசிப் பார்ப்பனர்கள்தான் இப்போது தென்னாடு ஓடிவந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்!

            சென்ற மாதம் காசியிலிருந்து திரும்பிய குமாரபட்டர் கூறியதெல்லாம் பொய்யா?

            திருடனைத் தேள் கொட்டினால் வெளியே சொல்வானா? அவன் உயிரோடு திரும்பியது அவன் செய்த புண்ணியம்.

            அப்பா சொல்வதைக் கேளடா தம்பி! என் மகள், உன் முறைப்பெண், மாலதியும் நீ புறப்பட்டதை அறிந்ததிலிருந்து கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கிறாள். இங்கிருந்து சென்று அந்த இறைமறுப்பாளர்கள் கைகளில் சிக்கி மாள்வதை விட இந்தத் தமிழகமே நமக்குச் சிறந்த பாதுகாப்பான இடம். உனக்கு வேண்டிய செல்வமும் பொருளும் வீடும் தட்டுமுட்டுகளும் கொடுத்து நான் மாலதியைத் திருமணம் செய்து வைக்கிறேன். வாடா தம்பி!

            ஆமாம். அம்மான் சொல்வதுபோல் அடுத்த முகூர்த்தத்திலேயே மணம் முடித்துவிடலாம் வாடா போகலாம்! இளைஞன் தயங்கி நிற்கிறான். தந்தை தொடர்கிறார். ஏண்டா, உன் தம்பிகளையும் தங்கைகளையும் பராமரிக்கும் சுமை தலையில் விழுமென்று பார்க்கிறாயா? நீ கவலைப் படாதே, நானே அதையெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்! திருமணம் முடிந்ததும் உங்களைத் தனிக்குடித்தனம் வைக்க ஏற்பாடு செய்கிறேனடா

            இப்போது அம்மான், மருமான் கையைப் பிடித்து இழுக்க இளைஞன் தயக்கத்துடன் பின் தொடர்கிறான். நாம் நம் வழியே செல்லலாம், அவர்கள் மெல்ல வரட்டும்.

            வரலாற்றுக் காலத்துத் தமிழ் நாட்டு மன்னர்களில் மீ வுயர்வுடைய அரசன் கரிகாலனே. ஆயின் அவன் பெயர் இராசராசன் போன்று விளம்பரம் பெறவில்லை. காரணம் அவன் ஆற்றிய அருஞ்செயல்கள் கோபுரமாக நிலத்தின் மேல் நின்று நிழல் தரையில் விழாதென்ற உலகின் மிகப் பெரிய பொய்யையும் அதை நம்பி ஏற்றுக்கொள்கின்ற தமிழ் மக்களின் மிகப் பெரிய ஏமாளித்தனத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கவில்லை. மாறாக அவன் செயல்கள் நிலத்தினுள்ளும் குமுகத்தினுள்ளும் ஆழ வேரூன்றிக் கண்ணுக்கு நேரே புலப்படாமல் நிலைத்த பயனளித்துக் கொண்டிருப்பவையாகும். அவ்வாறு கரிகாலன் செய்த அருஞ்செயல்கள்தான் யாவை?
            
            கரிகாலன் ஒருவனா அல்லது கரிகாலன் என்ற பெயரில் பலர் இருந்தனரா? கரிகாலனைப் பற்றிய முகாமையான சேதிகள் பின் வருவன: இளமையிலேயே தந்தையை இழந்துவிட்டவன். பகைவர்களால் துரத்தப்பட்டு உறைவிடத்தில் தீ வைக்கப்பட்டு அவன் கால் கரிந்தது, பின் பகைவரை மீதுற்று அரியணை ஏறினான், சேர வேந்தன் ஆதனைப் போரில் வென்று முதுகில் புண்பட்டதால் அச் சேரன் வடக்கிருந்து உயிர்விட்டான், ஒன்பது எதிரிகள் சேர்ந்து எதிர்த்த போது இளைஞனான கரிகாலன் அவர்களைப் புறங்கண்டான், ஆதிமந்தி என்ற மகளைச் சேர அரசனான ஆட்டனத்திக்கு மணமுடித்துக் கொடுத்தான், ஆண்டுதோறும் காவிரியில் புதுப்புனல் ஆடினான், இமயம் வரை சென்று நட்பரசர்களால் பரிசளிக்கப்பட்டும் எதிர்த்தோரை வென்றும் திரும்பினான், காவிரியில் கல்லணை கட்டினான், காவிரிக்கும் கிளை ஆறுகளுக்கும் கரைகள் அமைத்தான், இப் பணிகளில் இலங்கையிலிருந்து போரில் பிடிக்கப்பட்ட வீரர்களை ஈடுபடுத்தினான், தன்னைப் பாடிய பாவலர்களுக்கு வரையாது வழங்கினான், நாட்டில் அரசர்க்கடங்காது வாழ்ந்துவந்த மக்கள் கூட்டத்தினரையும் நாடோடிகளையும் அடக்கி வேளிர்களின் கீழே பணிபுரிய வைத்தான், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய நெடுஞ்செழியனுடன் நட்பு பாராட்டினான், எட்டிய திசையெல்லாம் வெற்றி ஈட்டினான், சோழநாட்டின் தலைநகரை உறையூரிலிருந்து புகாருக்கு மாற்றினான்.

 இவை தவிர ஏறக்குறைய 90 கிலோமீற்றர்கள் நீளமுள்ள பழைய கட்டளைக் கால்வாய், மாவள வாய்க்கால் ஆகிய இரு பாசனக் கால்வாய்களையும் இன்றைய திருச்சி மாவட்டத்தில் வெட்டியுள்ளான். மாவள வாய்க்கால் என்பதில் மாவளத்தான் என்ற கரிகாலனின் பட்டப்பெயர் இருப்பதைக் காணலாம்.

            இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவனுக்குரியவையாகத் தோன்றவில்லை. ஆதிமந்தி வாழ்ந்தது சிலப்பதிகார நிகழ்ச்சிக்கு முன்பாகும். முதுகில் புண் பெற்ற சேரலாதன் என்பவன் சேரன் செங்குட்டுவனின் முன்னோன். வெள்ளியம்பலத்துத் துஞ்சிய நெடுஞ்செழியன் சிலப்பதிகாரக் காலத்து ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிற்பட்டவன். இம் மூன்று நிகழ்ச்சிகளோடும் தொடர்புடைய கரிகாலன் ஒருவனானால் சிலப்பதிகாரக் காலத்திலும் அவனே இருந்திருக்க வேண்டும். ஆயின் சிலப்பதிகாரம் கரிகாலனை இறந்த காலத்தவனாகவே கூறுகிறது. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கரிகாலனின் புகழை வாயாரப் பாடி, பாண்டிய, சேர அரசர்களையும் பெயர் சொல்லிப் பாடுகின்ற இளங்கோவடிகள், தலைக்கோலை வழங்கிய சோழனைப் பற்றி மட்டும் ஒன்றும் கூறாது விட்டுவிடுகிறார். இது ஒரு வேளை சோழ அரசுக்கு இரு வேந்தர்கள் உறவு கொண்டாடி ஒருவன் புகாரிலும் மற்றொருவன் உறையூரிலும் ஆட்சி கொண்ட காலமாயிருக்கலாம். அப்படியாயின் சிலப்பதிகாரக் காலத்துக்குப் பின்னர் ஒரு கரிகாலன் இருந்தானென்று ஆகிறது.

            சிலம்புக்கு முந்தியவர் ஒருவரா இருவரா? ஆதனை வென்றவன் சேரன் ஆட்டனத்திக்கு மகளை மணமுடித்தான் எனக் கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. எனவே ஆதிமந்தியின் தந்தை ஒருவனும் சேரலாதனைப் போரில் வென்றவன் வேறொருவனுமாக இருவர் இருந்திருக்க வேண்டும். யானை மாலை போட அரசெய்தினானென்றும் வெண்ணியில் ஒன்பது அரசர்களை வென்று அரசமைத்தான் என்றும் கரிகாலனைப் பற்றிய செய்திகள் கூறுகின்றன. இவை இரண்டும் இருவருக்குரியவையாயிருக்கலாம். நமக்கு வேண்டியது குறும்பர், ஒளிநாகர், அருவாளர் முதலியோரை அடக்கி நாட்டின் கூற்றங்களை வேளிர்களின் பொறுப்பில் ஒப்படைத்தவன், கல்லணை கட்டியவன், காவிரிக்குக் கரைபோட்டவன் ஒருவனா இருவரா மூவரா என்பதல்ல. இச் செயல்களின் உண்மைச் சிறப்பை வெளிக்கொணருவதே.

            உலகமெல்லாம் கப்பலோட்டிக் கடல் வாணிகத்தாலும் உள்நாட்டு வாணிகத்தாலும் வளர்ச்சிபெற்ற, குமரி அமைத்த பாண்டிய நாடு முதற் கடற்கோளால் சிதைவுற்றாலும் மீண்டும் வளர்ச்சிபெற்று வடிவேலெறிந்து கடல் மீதுள்ள ஆட்சியை மீட்டது. ஆனால் இரண்டாம் கடற்கோளுக்குப் பின்னர் கடல் வாணிகம் கிரேக்கர், அராபியர், ஏகுபதியர் ஆகியோருக்கு மாறிவிட, உள்நாட்டு வாணிகமும் வேளாண்மையும் குன்றியது. இதைக் கண்டு உள்நாட்டு வேளாண்மையைப் பெருக்க நினைத்து அரசின் ஆட்சியின் கீழ் அனைத்து மக்களையும் கொண்டுவரக் கருதி, முரடர்களான குறும்பர்கள், ஒளிநாகர்கள், அருவாளவர்கள் ஆகிய இனத்தாரை அடக்கி அவர்களைக் கூற்றங்களின் தலைவர்களான வேளிர்களின் ஆதிக்கத்தில் கொண்டு வந்தவன் கரிகாலனே. இவ்வாறு தமிழ்நாட்டில் நிலக்கிழார் ஆட்சியை (feudal state) நிறுவிய பெருமை அவனுக்குண்டு. இவ்வாறு பல்வேறு வகுப்பினரை அடக்கியதற்குத் தென்பாண்டி நாட்டிலுள்ள குமரி மாவட்டத்தில் ஒரு மரபுச் செய்தி நிலவுகிறது.

            இம் மாவட்டத்தில் செறிந்து வாழும் நாடார்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட முத்துக்குட்டி அடிகள் பற்றிக் கூறும் அகிலத் திரட்டு அம்மானை எனும் நூல் சோழன் வையையாற்றுக்குக் கரை அமைக்க இவர்களை அழைத்ததாகக் கூறுகிறது. அப்போது பனை ஓலைக் கூடைகள்(கடகங்கள்) தவிர பிற கூடைகளில் மண் சுமக்க இவர்கள் மறுத்தனராம். எனவே இவர்களின் தலைவர்கள் எழுவரின் தலைகளை யானை கொண்டு இடற ஆணையிட்டதாகவும் இடறப்பட்ட இரு தலைகள் சூளுரைத்ததாகவும் எனவே எஞ்சிய ஐவரையும் விடுவித்ததாகவம் அந் நூல் கூறுகிறது. அண்மைக் காலம் வரை குமரி மாவட்டத்தில் உள்ள நாடார் வகுப்பார் பெரும்பாலும் பனை ஓலைக் கூடை தவிர பிற கூடைகளைப் பயன்படுத்தியதில்லை.

            குமரி, நெல்லை, மதுரை, முகவை மாவட்டங்களில் இவ் வகுப்பார் சென்ற நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தீண்டாமைத் தளையை உடைத்தெறிந்துள்ளனர். பிற மாவட்டங்களில் அவர்கள் இன்றும் தீண்டாதவராகவே வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் சாணார்கள் என வழங்கப்படுகின்றனர். அண்மைக் காலங்களில் நாடார் என்று இவர்கள் பொதுப்பட குறிப்பிடப்படுகின்றனர். சில மாவட்டங்களில் சாணார்கள்தான் நாடார்கள் என்பது பலருக்கு இன்றுகூட தெரிந்திருக்கவில்லை.

            வடார்க்காடு மாவட்டத்தில் அமிர்தி எனுமிடத்தில் மலையடிவாரத்திலிருந்து 14 கற்கள் மேலே நாடானூர், சாணான்குடி, என்ற ஊர்கள் உள்ளன. இங்கு நாடார்கள் வாழ்வதாகத் தெரியவில்லை. பின் எப்படி இப் பெயர்கள் வந்திருக்கும்? கரிகாலன் காலத்தில் அவன் படைகளுக்கு அஞ்சி இவர்கள் அவ்விடங்களில் ஒளிந்திருந்ததால் அப் பெயர்கள் வந்திருக்கலாம். இவ்வாறு வீணாகவும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு இடையூறாகவும் வாழ்ந்த கூட்டத்தாரின் உழைப்பை வேளாண்மைக்காக ஒன்றுதிரட்டி வேளாண்மை சார்ந்த அரசை உருவாக்கி, மீண்டும் தமிழகம் வாணிகத்திலும் நிமிர்ந்து நிற்க வழிகோலிய பெருமை படைத்தவன் கரிகாலன்.

            அடுத்துக் கல்லணையைப் பற்றிப் பார்ப்போம். காவிரியிலிருந்து கொள்ளிடம் திருவரங்கத்துக்கு மேற்கில் பிரிகிறது. இன்றைய கல்லணைக்கு அருகில் இரு ஆறுகளும் மீண்டும் நெருங்கி வருகின்றன. இந்த இடத்தில் இரண்டையும் உள்ளாறு என்னும் ஏறக்குறைய அரைக் கல் நீளமுடைய ஒரு நீர்வழி இணைக்கிறது. காவிரி முன்பு பிரிந்த இடத்தில் கொள்ளிடத்தின் படுக்கை காவிரியை விட மேடாகவும் உள்ளாற்றிடத்தில் கொள்ளிடம் தாழ்ந்தும் இருந்ததால், பெரும் பகுதி நீர் உள்ளாறு வழியே கொள்ளிடத்தினுள் சென்றுவிட்டது. எனவே தஞ்சைத் தரணிக்குப் பாசன நீர் போதவில்லை. இதனால் உள்ளாற்றின் தோற்றுவாய் ஆகிய காவிரியின் இடக்கரையில் ஓர் அணை கட்டப்பட்டது. 50 அடிகள் அகலத்தில் பெரும் கற்களைக்கொண்டு கரும்புச் சாற்றில் குழைக்கப்பட்ட களிமண்ணில் கட்டப்பட்டது இது. ஆமை முதுகு போன்று குவிந்த மேல் மட்டத்தை உடையது இவ்வணை. பாம்பு போன்று நெளிந்தவாறு அமைந்துள்ளது. இஃது ஏறக்குறைய 1100 அடி நீளமுள்ளது. பின்னர் இதனை உடைத்து நேராகக் கட்ட வெள்ளையர் முனைந்துபோது இதை உடைப்பது கடினமாக இருந்ததனால் அப்படியே பாலங்களைக் கட்டிச் சீப்புகளைக் கடைகூட்டிவிட்டனர்.

            இவ்வாறு உள்ளாற்றினுள் செல்லாமல் நீரெல்லாம் காவிரியினுள் சென்றுவிடவே காவிரி கரைமீறிப் புனல் நாட்டில் அழிவுகளை ஏற்படுதியது. அதைத் தவிர்க்கவே காவிரிக்கரை எடுக்கப்பட்டது. இதற்காகப் பயன்பட்ட இலங்கைப் போர்வீரர் (12,000 பேர்) சிலப்பதிகாரக் கயவாகு மன்னனின் தந்தை காலத்துப் போரில் கைப்பற்றப்பட்டவர்கள். இவ்வாறு காவிரிக்குக் கரையெடுக்கப் பணிக்கப்பட்டவரே முன்பு நான் குறிப்பிட்ட நாடார் வகுப்பினராயிருக்க வேண்டும். காவிரியையே வையை என்று அகிலத் திரட்டு குறிப்பிடுகிறது போலும். தி.மு.1700இல் நிகழ்ந்த கடற்கோளுக்கு முன்பு ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இலங்கைக்கும் இன்றைய தமிழகத்துக்கும் இடையில் கடல் புகுந்ததால் அவர்களில் வடக்கே(தமிழகத்தில்) ஒதுங்கியோர் வடக்கு நோக்கி நகர்ந்து பனைத் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம். அதனால் இடம் பெயர்ந்து வந்தவர்களும் போரில் பிடிபட்டவர்களும் இனம் பிரித்தறிய முடியாதவராகவே உள்ளனர்.

            பயிர்ச் செய்கைக் காலத்தின் தொடக்கத்தை அறிவிக்கத்தான் பதினெட்டாம் பெருக்கு எனப்படும் புனல்விழா கரிகாலனால் கொண்டாடப்பட்டிருக்கும். இவ் விழா தமிழ்நாடு முழுவதும் இன்றும் கொண்டாடப்படுகிறது[1].

   அடுத்து, காசி யாத்திரைக்கு வருவோம். நாகரிகத்தின் அடிமட்டத்திலிருந்து பட்டறிவின் துணைகொண்டு வளர்ந்து வரும் ஒரு நாகரிகத்தில் தொழிற்பாகுப்பாட்டின் (division of labour) அடிப்படையில் சாதிகளும் அவற்றின் தொகுப்பாக வண்ணங்களும் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் அரசர், அந்தணர், வாணிக வேளாளர், பாணர் - கூத்தர் என்ற நால்வண்ணங்களும் அமைந்தது தமிழகத்தின் சிறப்பு. இவை வெறும் தொழில் வகுப்புகளாக, அவற்றின் படிநிகராளியர் அரசனுக்கு வழிகாட்டும் குழுவின் உறுப்பனர்களாக உயர்வு தாழ்வின்றி இருக்க, வடநாட்டில் இவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து உழைப்போர் அனைவரையும் தீண்டத்தகாதவராக மாற்றி அம் முறை தமிழகத்தில் சமற்கிருத மொழி வாயிலாகத் தொன்மங்களாகவும் நெறிகளாகவும் புகுத்தப்பட்ட போது தமிழர்கள் எதிர்த்தனர். உண்மையான பழந்தமிழ் மொழி மரபும் வாழ்க்கை மரபும் எவையென ஆராய்ந்து தொல்காப்பியம் இயற்றப்பட்டது. தொல்காப்பியம் என்பதற்கு தொல் + காப்பியம் எனப் பிரித்து பழமையைக் காக்கும் நூல் என்று பொருள்கொள்ள வேண்டும். நூற்பெயர் கொண்டே ஆசிரியர் தொல்காப்பியர் என வழங்கப்பட்டிருப்பார். பின்னர்த் திருக்குறள் தோன்றி இப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நிகழ்த்தியது. சிலம்பு நேரடியாக இப் போராட்டத்தை வெளிக் கொணர்ந்தது. ஆனால் பார்ப்பனர்களின் முயற்சி நின்றுவிடவில்லை. தொல்காப்பியத்திலும் சிலம்பிலும் புகுந்துள்ளனர். சிலம்பில் அழற்படுகாதையில் நாற்பூதம் பற்றிக் கூறும் போது ஆதிப்பூதம், ஆரசப் பூதம், இளம்பிறை சூடிய இறைவன் வடிவினோர் விளங்கொளிப்பூதம்(நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – கலப்பையையும் துலாக்கோலையும் கருவிகளாகக் கொண்ட உழவர்களும் வாணிகர்களும்), பலிபெறுபூதம் (ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிய பாணர் – கூத்தர்) என நான்கு பூதங்கள் பற்றிச் சொல்லும்போது, ஆசிரியர் நாஞ்சிலும் துலாமும் ஏந்திய மூன்றாம் பூதத்தையும் ஆடலுக்கும் பாடலுக்கும் அமைந்த கருவிகளோடு நான்காவது பூதத்தையும் கூறியிருக்க நான்காவது பூதத்திற்குக் கலப்பையைச் செருகியிருக்கிறார்கள் இடைச் செருகல்காரர்கள். இவ்விடைச் செருகலைக் கழித்து நோக்கினால் ஆதிப்பூதம், அரசப்பூதம், வேளாண்பூதம், கூத்தப் பூதம் என்றே கொள்ளலாம். கூத்தர்களின் மரபு அருகிய போது வேளாண் வண்ணம், வாணிகர் வேளாளர் எனப் பகுக்கப்பட்டிருக்கலாம். தொல்காப்பிய நெறியை அடியொற்றியே சிலம்பு பாடப்பட்டிருப்பதாகத் தோன்றுவதால் தொல்காப்பியத்தை நோக்குங்கால் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

            நூலே கரகம் என்று தொடங்கும் 615ஆம் நூற்பாவிலிருந்து இழிந்தோர்க்கில்லை என முடியும் 629 ஆம் நூற்பா வரை இடைச் செருகப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. இது சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்டிருப்பதுடன், அஃறிணை உயிர்களின் பெயர்கள் கூறிவருகையில் இடையில் பொருத்தமின்றித் தனித்து நிற்கிறது. இதில் கூறப்பட்ட பொருளுக்குப் பொருத்தமான இடம் செய்யுளியலில் 501 ஆம் நூற்பாவின் பின்னர் எனலாம். எப்படியாயினும் தொல்காப்பியத்திற் காணப்படும் இந் நூற்பாக்களைத் தொல்காப்பியர் இயற்றியவற்றின் மூல வடிவமாகக் கொள்ள இயலாது. ஒன்றேல் இடைச் செருகலாகவோ அன்றேல் திரிப்பாகவோ இருக்க வேண்டும். உண்மையாகத் தொல்காப்பியர் ஏற்றுக்கொண்டவை வேத்தியல், பொதுவியல் என்ற இரண்டாகத்தான் இருக்க வேண்டும். சிலம்பின் காலத்தில் அந்தணர், அரசர், வேளாளர், கூத்தர் என்ற புகுபாடு இருந்திருக்கலாம். அல்லது மேலே[2] நாம் குறிப்பிட்டது போல் தொல் பழங்காலத்தில் இருந்து மாற்றப்பட்ட வருணப் பாகுபாட்டைப் புதையலாகத் தோண்டி அடிகளார் வெளிப்பபடுத்திய இன்னோர் நிகழ்வாகத்தான் இதைக் கொள்ள வேண்டும். இதற்கு மாறுபட்டவை எல்லாம் பார்ப்பனர்களின் உட்செருகல்களே.

            இது போன்ற சூழ்நிலையில் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் வளவாழ்வு வாழ முடியவில்லை. எனவே வடநாடு நோக்கிச் செல்லத் தலைப்பட்டனர். பாணினி, சாணக்கியன், மனு, சாங்கியத்தை நிறுவிய கபிலன் ஆகியோர் தென்னாட்டவரென்றே கருதப்படுகின்றனர். இவர்களுடன் சங்கராச்சாரியும் தங்கள் ஆக்கங்களைத் தென்னாட்டில் விலையாக்க முடியாமலேயே வடக்கு நோக்கிச் சென்றனர். இந் நிலையில்தான் போலும் பார்ப்பனர்கள் தம் குலத்து இளைஞர்கள் இங்கிருந்து செல்வதைத் தடுக்க சில முறைகளைக் கையாண்டனர். வடக்கே செல்லத் துணிந்த இளைஞர்களுக்குப் பொருள் கொடுத்துப் பெண்களை மணம் புரிந்து வைத்தனர். சீதனம் (பெண்ணின் சொத்து) என்று பிறர் கூறுவதைப் பார்ப்பனர் வரதட்சணை (மாப்பிள்ளைக் காணிக்கை) என்று கூறுவது இதனால்தான் போலும். மேலும் இளைஞர்கள் துறவு பூணுவதைத் தடுக்கத்தான் போலும் சிறார் மணங்களை நடத்தியிருக்கின்றனர். இல்லெனின் அவர்கள் கூறும் மாணவம், இல்லறம், கானுறைவு, துறவு(பிரம்மச்சாரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்) என்பவற்றில் மாணவம் தொடங்கு முன்பே மணம் செய்வானேன்? இதைக் கேரளத்தில் இன்னும் கடுமையாகக் காண்கிறோம். பருவமடைந்தும் மணமாகாமல் இறந்த பெண்ணின் பிணத்தைக் கூலிக்கு ஆள் வைத்துப் புணர்ந்து எரிக்கும் பழக்கம் பெண்கள் பருவமடையும் முன்பே அதாவது சிறுமியராயிருக்கும் போதே, மணமுடிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தவே ஏற்பட்டிருக்கும். இன்று சிறார் மணம் மறைந்துவிட்டாலும் மணமக்களை அவரவர் தந்தை அல்லது தாய்மாமனின் மடியில் இருத்தியும், தோளில் சுமந்தவாறும் தாலி கட்டுவது இதன் நிழலே. அதே போன்று பார்ப்பன இளைஞர்கள் வடநாடு செல்வதைத் தவிர்க்கப் பெண்களை வலியக் கொடுத்ததையே இன்றைய பார்ப்பன மணங்களில் நிகழும் காசி யாத்திரை சடங்கு காட்டும்.[3]

            இன்றும் நாட்டுணர்வென்ற ஒன்றின்றி வளம் கொழிக்கும் நாடெல்லாம் ஓடுவதில் முன்னணியில் நிற்போர் பார்ப்பனரே. பாலைவனங்களுக்கெல்லாம் பிறர் சென்று திரும்பிவிட, அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் சென்று அங்கேயே நிலையாகத் தங்குவோரில் இவரே பெரும்பான்மையினர். அதே போன்று தம் வளவாழ்வை நிலை நிறுத்திக்கொள்ள எதிரிகளுக்கு வரவேற்புக் கொடுப்பதிலும் இவர்களே முன்னணியில் நின்றிருக்கிறார்களென்பது வரலாறு காட்டும் உண்மை. இவ்வாறு இவர்கள் உடன் பிறந்தே கொல்லும் நோயாக இந்தியருக்கு அமைந்திருக்கின்றனர்.

            இவ்வாறு காசிக்கு ஓடியவர்களுக்கு அங்கும் முன்போல் போக முடியவில்லை. இடையில் அம்மணர்களும் புத்தர்களும் இவர்களின் செல்வாக்கை ஒடுக்கிவிட்டனர். அதுவும் இங்கிருந்து வடக்கே செல்லும் இவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன் வடக்கைவிடத் தமிழ்நாடு அதிகப் பாதுகாப்பானதாகவும் காணப்பட்டதால், வடநாட்டுப் பார்ப்பனர்கள் தென்னாடு நோக்கி வருகின்ற போக்கும் ஏற்பட்டது. இவ்வாறுதான் வடக்கிலிருந்து பார்ப்பனர்கள் தமிழகத்திற்கு வந்தனர். வந்தவர்கள் வெப்பம் குறைந்த பகுதியிலிருந்து வந்ததனால் சற்று வெளிறிய தோற்றமுடையவர்களாக இருந்தனர். மேலும், வடவர்கள் உயர்ந்தவர் என்ற கருத்தை நிலை நிறுத்தும் குறிக்கோளை உடையவர்களாகையால் தம்மை உயர்ந்தவராக வைத்துக்கொண்டனர்.

            மாலியப் பார்ப்பனர்கள் வடகலை என்றும் தென்கலை என்றும் குடுமி பிடித்துக் கொள்வதும் சிவனியப் பார்ப்பனர்களில் வடக்கன் என்றொரு பிரிவு உள்ளதும் இதனாலேயாகும். ஆரியப் பார்ப்பனர் எனப்படுவோர் இவ்வாறு வடக்கே(ஆரிய நாட்டிலிருந்து) இருந்து வந்தவர்களே, ஆரிய இனத்தவரல்லர்.

பின்குறிப்பு:கரிகாலன் என்ற பெயருக்குக் காரணமாகக் கூறப்படும் கதை இட்டுக்கட்டப்பட்டதாகத் தோன்றுகிறது. அரசர்களின் படை வலிமை யானைப் படையைச் சார்ந்திருந்த ஒரு காலகட்டத்தில் எதிரியின் யானைப் படையை அழிப்பதைப் போர் உத்தியாகக் கொண்டு வெற்றியுடன் செயற்படுத்தித் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இன்றி நிலைப்படுத்திக்கொண்டவன் என்ற நிலையில் எதிரியின் படைகளிலுள்ள ஆண் யானைகளான கரிகளுக்கு காலனாக, எமனாக இருந்தவன் எனப் பொருள் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

பிற்கால இராசராச சோழனின் அண்ணனும் அவன் குழந்தையாக இருந்த காலத்தில் இன்னதென்று இன்றும் வரலாற்றாசிரியர்களால் இனங்காண முடியாத ஒரு அரசியல் – அரண்மனைச் சூழ்ச்சியால் இளவரசனாக இருந்த போதே கொலைப்பட்ட ஆதித்த கரிகானையும் கரிகாலன்கள் பட்டியலில் சேர்ப்பர்.

நீரோடைகளிலிருந்து மதகுகள் வழியாகப் பாசன நீரை வாய்க்கால்களுக்குத் திருப்புவதற்காகக் கட்டப்படும் தடுப்பணைகள்(அணைக்கட்டுகள்) வளைந்திருக்க வேண்டுமென்ற ஒரு மரபின் அடிப்படையிலேயே கல்லணை வளைவுநெளிவாகக் கட்டப்பட்டுள்ளது. கல்லணை பற்றிப் பொதுப்பணித் துறையிலுள்ள விளக்க வரைவு (மோனோகிராப்) இவ் வளைவைப் பாம்பு வளைவு(செர்ப்பன்றைன்) என்றே கூறுகிறது.

வெள்ளக் காலத்தில் கற்களைக் கொட்டி அணை கட்ட முயன்றதால்தான் அணை வளைவுநெளிவாக அமைந்துவிட்டதென்று இதற்கு அமைதி கூறுகிறார்கள் சிலர். ஆனால் சரியான திட்டமிடல் இன்றி ஒரு வெள்ளக் காலத்தில் மட்டும் இப் பெரும் பணி முடிவடைந்திருக்காது. பொறியியல் கண்ணோட்டத்தில் இவ்வாறு மணல் ஆற்றுப் படுக்கையில் இடப்படும் கற்கள் கற்களைச் சுற்றியும் அடியிலும் இருக்கும் மணலை வெள்ளக் காலங்களில் நீர் அரித்துச் சென்றுவிட கல் கீழ் நோக்கிச் சென்று நாளாவட்டத்தில் உறுதியான தளத்தில் உறுதியான நிலையை எய்தும். இந்தப் பின்னணியில் இந்த வளைவு தற்செயலாக உருவாகியிருக்கும் வாய்ப்பு இல்லை. திட்டமிட்ட ஒன்றே.

            வண்டலை, அதாவது பெரும்பாலும் மணலைச் சுமந்து வரும் ஆறுகளிலிருந்து பாசனத்துக்கு வாய்க்கால்கள் மூலம் நீரொழுக்கும் போது எடுப்பு வாய்க்காலினுள் புகுந்து விடாமல் வண்டலைத் தடுப்பது இன்றைய பாசனப் பொறியாளர்களுக்குப் பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது. இதற்காக எத்தனையோ உத்திகளைக் கையாண்டும் அவை முழுப் பயனளிக்கவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் சோவியத் நாட்டில் ஓர் ஆய்வின் மூலம் குதிரை காற்பரளை(லாடம்) வடிவிலமைந்த தடுப்பணைகளால் இச்சிக்கலுக்குத் தீர்வு காண முடியும் எனக் கண்டறிந்துள்ளனர். படம்1 இல் காட்டப்பட்டுள்ளவாறு அணைக்கட்டு

                                                                                                           படம் 1  

                                                                      ஆறு

                                                              மதகு        
                                                                                         அணை
                                                                                                                                                           
                                                


                                                                                                          படம் 2

                                                                                                       
                                                                   
                                                                                             
            
                                                         மதகு                     ஆறு
                                                                                                    அணை

              
                                                                          
                                                                                   


நேர்கோட்டில் இருந்தால் அணையின் மேல்மட்டத்தை விட மதகின் அடிமட்டம் தாழ்வாக இருக்கும் நிலையில் மணலின் கணிசமான பகுதி மதகின் வழியாக வாய்க்காலினுள் நுழைந்துவிடும். மதகினுள் நீர் செல்லும் போது அதன் முன்புறம் சிறு சுழல்கள் ஏற்பட்டு மணலைக் கிளப்பி மதகினுள் செலுத்திவிடும். அதே நேரம் அணைக்கட்டு படம் 2 இல் காட்டியுள்ளவாறு நீரோட்டத்துக்கு எதிர்த்திசை நோக்கி வளைந்திருந்தால் ஆற்று நீர் மதகை எட்டு முன்னரே மிகப் பெரும்பகுதி நீர் அணையின் மேல் நோக்கி வளைந்த பகுதியின் மேல் வழிந்து விடும். அதனுடன் ஆற்று நீரில் வரும் வண்டலும் சென்று விடும். எனவே மதகினுள் வரும் நீரில் வண்டலின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்.

                                                         
                                                                                                 படம் 3
ஆறு
                                                                    மதகு
 அணை
















                     



இவ்வாறு அணைகளை வளைவாகக் கட்டுவதின் தொழில்நுட்ப அடிப்படை மறக்கப்பட்டு அது வெறும் மரபாக, சடங்காக, அணைகளை நேர் கோட்டில் கட்டக் கூடாத அளவுக்குச் சுருங்கிப் போன ஒரு காலகட்டத்தில் கல்லணை கட்டப்பட்டதால் இந்த வளைந்து நெளிந்த பாம்பு வடிவம் வாய்த்திருக்கும் என்று தோன்றுகிறது.

இன்றும் சிற்றோடைகளின் குறுக்கேயுள்ள பழைய அணைகள் வளைந்தோ படம் 3 இல் உள்ளபடி மேல் நோக்கிய கோணமாகவோ அமைந்திருப்பதைக் காணலாம். சில இடங்களில் பாறையாகவுள்ள ஆற்றுப் படுக்கையில் துண்டுதுண்டாக இவ்வாறு “கோணல்” அணைகள் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இதன் தொழில்நுட்ப அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் சிறப்புப் பழுதுகள் மேற்கொள்ளப்படும் காலங்களில் அவ்வணைகளை இடித்துவிட்டு நேராகக் கட்டிவிடுகின்றனர். புதிய அணைகளையும் நேராகவே கட்டுகின்றனர். இதுவே அவ்வணைக்கட்டுகளிலிருந்து நீர் பெறும் குளங்களில் மிகுதியான வண்டல் படியக் காரணமாகி விடுகிறது. எனவே நம் மூதாதையர் வழியில் “கோணல்” அணைகளைக் கட்டும் உத்தியை நாம் மீண்டும் கடைப் பிடிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, நம் முன்னோர் ஆற்றோட்டத்தின் அகலம் மிகுதியாக இருக்கும் இடங்களிலேயே அணைகளைக் கட்டியுள்ளனர். இதனால் அணையின் உயரம் குறைவதுடன் அணையால் மேலே வெள்ள மட்டம் அளவுமீறாமல் ஆற்றின் கரைகளுக்கு ஏதமும் குறைகிறது. இதனால் குறைந்த உயரமுள்ள அணையின் கட்டுமானச் செலவும் கரைகளை அமைப்பது, அணையையும் கரைகளையும் பராமரிப்பது, கண்காணிப்பது ஆகிய செலவுகளும் குறைகின்றன.

அண்மையில் தினமணியில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் பற்றி சிந்தித்த போது உருவான கருத்து என்னவென்றால் இன்றைய கொள்ளிடம்தான் பழைய காவிரியாக இருந்திருக்கும் என்பதாகும். காவிரிப் படுக்கை மட்டத்தை விட கொள்ளிடத்தின் மட்டம் தாழ்ந்துள்ளது. வாய்த்தலை என்னுமிடத்தில் இரண்டாகப் பிரியும் காவிரி மீண்டும் இன்று கல்லணையின் வழியாகப் பாயும் உள்ளாறு எனும் தடம் வழியாக மீண்டும் கொள்ளிடத்தில் சேர்கிறது. இவ்வாறு சேர்வதற்காகத் திரும்புமிடத்தில் வலது கரையில் உண்டான ஓர் உடைப்பு வளமற்ற நிலங்களில் பாய் அதைப் பயன்படுத்தி உள்ளாற்றின் குறுக்கே அணைகட்டி இன்றைய காவிரி, வெண்ணாறு ஆகியவற்றையும் அவற்றின் பல்வேறு கிளையாறுகளையும் அவன் உருவாக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.  


இதைப் பற்றிய தெளிவுக்காக காவிரியாற்றை வாய்த்தலையிலிருந்து கல்லணை வரையுள்ள மேற்பை வலைதளத்தில் பார்த்த போது ஓர் அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்தது. கரிகாலன் கட்டிய கல்லணை காவிரியாற்றின் இடதுகரையிலிருக்க, ஆங்கிலர் கட்டிய காவிரி – வெண்ணாறு முறைப்படுத்திகளைக் கல்லணை என்று கூகுள் வலைதளத்தில் காட்டியுள்ளனர். தவறான இந்தக் கண்ணோட்டத்துடனேயே புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருப்பதாலும் ஆறுமாதங்கள் அந்த அணைக்களத்தில் குடியிருந்த என்னாலேயே உண்மையான கல்லணையைக் காட்டும் புகைப்படம் எதுவென்று என்னால் இனம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றப்படி மேற்பைப் பார்த்ததில் காவிரியின் மூல ஓட்டம்தான் இன்றைய கொள்ளிடம் என்ற என் முடிவு உறுதிப்பட்டது.
இனி பனையேறிகளாகிய சாணார்களுக்கும் கரிகாலன் அல்லது சோழ அரசர்களுடன் இருந்த உறவுகளைப் பார்ப்போம். மேலே[4] பலதேவனைப் பற்றிக் கூறியதற்குத் தலைகீழாக பனைத் தொழில் இருந்திருக்க வேண்டும். கருப்புக்கட்டி எனப்படும் கருப்பட்டித் தொழில்நுட்பம் இக் காலகட்டத்தில் பனையேறிகளிடையில் பரவியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் தமிழ் மருத்துவர்களிடையில் மறையாகக் காக்கப்பட்ட கருப்பட்டியின் விரிவான பயன்பாடு பதநீருக்கு ஒரு பண மதிப்பைத் தந்திருக்கும். எனவே கரிகாலன் நன்செய் வேளாண்மை விரிவாக்கத்துக்கு பனங்காடுகளை அழிக்க முற்பட்ட போது உருவான பூசல்தான் மேலே[5] குறிப்பிடப்பட்ட பனையோலைக் கடகச் சச்சரவு என்பது சில குமுக ஆய்வாளர்களின் கருத்து. இதில் அவர்களுக்குள் ஓர் இணக்கத் தீர்வு ஏற்பட்டு அவர்களைப் படையில் சேர்த்து வலங்கையினர் என்ற சிறப்பும் செய்திருப்பான் என்று கொள்ள இடமுள்ளது. இது பற்றிய விரிவை சாதி வரலாறுகளின் பதம் – நாடார்களின் வரலாறு என்ற என் இடுகையில் காணலாம்.  

வருணங்களின் தோற்றம் பற்றி சமற்கிருத நூல்களில் தரப்பட்டுள்ள கீழே தரப்பட்டுள்ள செய்திகள் கருதிப்பார்க்கத்தக்கன.

யாகம் நான் இனி உங்களுக்கு உணவாக மாட்டேன் என்று கூறிக் கடவுள்களை விட்டகன்றது. ‘கூடாது, நீ எங்கள் உணவாக இருக்க வேண்டும் என்றனர் கடவுள்கள். கடவுள்கள் அதனைத் தகர்த்தார்கள்; அவ்வாறு பிய்த்தெடுக்கப்பட்டதால் யாகம் அவர்களுக்குப் போதியதாயிருக்கவிலலை. ‘பிய்த்தெடுக்கப்பட்ட யாகம் நமக்குப் போதியதல்ல எனவே வாருங்கள், யாகத்தை மீண்டும் ஒன்றாக்குவோம் என்றனர் கடவுள்கள். மற்றவர்கள் அப்படியே ஆகட்டும் என்றனர். அவர்கள் அதை ஒன்று சேர்த்தனர். ஒன்று சேர்த்த பின் அசுவினிகளைப் பார்த்து இதைக் குணப்படுத்துங்கள் என்றனர்; அசுவினிகள் கடவுள்களின் மருத்துவர்களாவர், எனவே அவர்கள் இருவரும் கடாரத்தில்(கொப்பரையில்) அவற்றைத் திரட்டினர், பிரமனே நாங்கள் பிரவர்கியா பலியிடத் தொடங்குகிறோம் ........’ என்றனர்.[6]

            மேலே தரப்பட்டுள்ளது, குமுக நடைமுறையாக இருந்த மாட்டு வேள்வி மக்களால் அழிக்கப்பட்டு அரசர்கள் அரண்மனைகளுக்குள் தங்கள் படைக் கருவிகளில் ஒன்றாகிய குதிரைகளை நெருப்பிலிட்டு வேள்விகளை நடத்தத் தொடங்கியதைக் குறிப்பதாகும்.

எனவே கடவுள்களுக்குக் கிடைத்தது வன்முறையால் தாக்கப்பட்ட முன்பிருந்த வேள்வியில் சிதறிய துண்டுகளே; அசுவினிகளின் மருத்துவக் கலை அவர்களுக்குத் தேவைப்பட்டது[7].

            பிராமணங்களின் காலத்தில் மீளக் கட்டப்பட்ட வேள்விகளில் தெள்ளத் தெளிவான பார்ப்பனச் சார்பு தெரிந்தது”.[8] 

            பிரசாபதி வேள்வியைப் படைத்தான், வேள்வியைப் படைத்த பின் தெய்வீக அதிகாரமும்(பிராமணன்) அரச அதிகாரமும்(சத்திரியன்) படைக்கப்பட்டன. தெய்வீக அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் தொடர்ந்து அவிப்பாகத்தை[9] உண்பவர் என்றும் அவிப்பாகத்தை உண்ணாதவரென்றும் இருவகைப் பிறங்கடையினர் தெய்வீக அதிகாரத்திலிருந்து அவிப்பாகத்தை உண்பவர்களும் அரச அதிகாரத்திலிருந்து அவிப்பாகத்தை உண்ணாதவர்களும் படைக்கப்பட்டனர். பிராமணர் அவிப்பாகத்தை உண்ணும் பிறங்கடையினர்.[10]  அரச, வைசிய, சூத்திரர்கள் அவிப்பாகத்தை உண்ணாத பிறங்கடையினர். அப்போதிலிருந்து வேள்வி அகன்றது; அதனைத் தெய்வீக அதிகாரமும் அரசு அதிகாரமும் பின்தொடர்ந்தன. தெய்வீக அதிகாரம் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் பின்தொடர்ந்தது. அரச அதிகாரம் அரச அதிகாரத்தின் ஆயுதங்களுடன் பின்தொடர்ந்தது. தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்கள் வேள்விக்கான ஆயுதங்கள்; அரச அதிகாரத்தின் ஆயுதங்கள் குதிரையும் தேரும் கவசமும் வில்லும் அம்பும். அரச அதிகாரம் அதை அடைய முடியாமல் திரும்பியது; தன் ஆயுதங்களைப் போட்டுவிட்டு நடுங்கிக்கொண்டு நின்றது. தெய்வீக அதிகாரம் அதைப் பெற்றது; அதைப் பெற்ற பின் அதை மேலிருந்து மறித்துக் கொண்டு நின்றது; பெறப்பட்டு மேலிருந்து மறித்து நிறுத்தப்பட்டு நின்ற அது தன் சொந்த ஆயுதங்களை இங்கண்டு தெய்வீக அதிகாரத்திடம் சென்றது. எனவே இப்போதும் கூட வேள்வி தெய்வீக அதிகாரத்திடமும் பிராமணனிடமும் ஆதரவைக் காண்கிறது. அப்போது அரச அதிகாரம் அதனைத் தொடர்ந்தது; ‘இந்த வேள்விக்கு என்னை அழைப்பாயாக’, என்றது. ‘அப்படியே ஆகட்டும், உன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக, தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன், தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில் தெய்வீக அதிகாரமாக மாறி வேள்விக்கு வருவாயாக என்று அது மறுமொழி கூறியது. ‘அப்படியே ஆகட்டும்என்றது அது. இவ்வாறு அரச அதிகாரமும் தன்னுடைய சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் வேள்விக்குச் சென்றது. எனவே இன்றும் கூடச் சத்திரியன் தன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களோடு தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில், தெய்வீக அதிகாரமாக மாறி வேள்வியின் தலைவனாக வேள்விக்குச் செல்கிறான் ......                                             - அயித்திரேயப் பிராமம்[11].


[1].தமிழர்கள் மகரக் கோடு எனும் சுறவக் கோட்டில் வாழ்ந்த காலத்திலேயே சுறவ மாதத்தைத் தொடக்கமாகக் கொண்ட 365 சொச்சம் நாட்களைக் கொண்ட ஆண்டுமுறையை வகுத்துவிட்டனர். அதனால் கிறித்துவ ஊழி தவிர்த்து உலகிலுள்ள பிற அனைத்து ஆண்டு முறைகளைப் போலன்றி அதே 365 சொச்சம் நாட்களில் ஒவ்வொரு மாதப் பிறப்பும் வருகிறது(விரிவுக்கு பொங்கல் திருநாளும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும் என்ற எம் கட்டுரையைப் பார்க்க). ஆனால் பூசகர்கள் இந்த ஆண்டுமுறைக்கு முந்தியதாகிய நிலவாண்டு முறையைப் பயன்படுத்தி நாள்மீன்கள்(நட்சத்திரங்கள்), பக்கங்கள்(திதிகள்) ஆகியவற்றை வைத்து அனைத்து விழாக்களையும் நிறுவியிருக்கிறார்கள். அதற்கு மாறாக தூய கதிரவன் ஆண்டைக் கடைப்பிடித்து ஆடி மாதம் 18ஆம் நாளில் ஆடிப்பெருக்கு நிறுவியுள்ள கரிகாலனை நாம் மனம் நிறைந்து பாராரட்ட வேண்டும்.
[2]  பக்.137
[3] வடக்கே கூட்டுக் குடும்பம் (அவிபக்த இந்துக் குடும்பம்) என்பது பார்ப்பனரின் இயல்பாயிருக்க, தமிழர்ளுக்குள் தனிக் குடித்தனம் என்ற சொல் வழக்குப் பார்ப்பனரிடம் மட்டும் வழங்குவது ஒரு குறிப்பிடத்தக்கக் கூறு. பார்ப்பனருடைய நிலவுடைமை அடிக்கடி பறிக்கப்பட்டதும், பெருகும் குடும்பங்களை வைத்துப் பாதுகாக்கத் தேவையான வளத்தை அவர்கள் இழந்துவிட்டதையுமே இது குறிக்கிறது.
[4] பக்.71
[5] பக்.159
[6] Keith A.B., Rig-Veda Brahmanas, P.121, Cambridge 1925, as quoted in Lokayatha, Debiprasad Chattobadhyaya, P. 611.
[7]அசுவினி தேவர்கள் எனப்படுவோர் எப்போதும் இணைந்தே செயற்படுவோராகக் கூறப்படும் குதிரை வடிவ தேவ மருத்துவர்கள். இறந்து போனதாகக் கூறப்பட்ட வேள்வியை இவர்கள் மீட்டதாகக் கூறப்படுவதன் பொருள் அரசர்களின் தேர்களில் பூட்டப்படும் இரட்டைக் குதிரைகளைக் காவு கொடுத்து அரண்மனைகளுக்குள் வேள்வியை மீட்டதைத்தான். பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்திரையைப் புணர்ந்து நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டைப் பிள்ளைகளை இந்த ‘இரட்டையர்கள்’ உருவாக்கியதாக வியாசன் கதை எழுதும் அளவுக்கு கற்பனைக்குள் உண்மையைப் புதைப்போர் எழுதியுள்ள தொன்மங்களிலிருந்துதான் உண்மைகளைத் தேட வேண்டிய இக்கட்டான நிலைமையில் நாம் உள்ளோம்.
[8] Lokayatha - தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா. பக்.611
[9]   அவிப்பாகம் -  வேள்வியில் வெந்த (அவிந்த) பலிப்பொருள்.
[10]             பிறங்கடையினர் - சந்ததிகள்
[11]மேற்படி தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாயா நூல் பக். 611-12. இன்றிருக்கும் நிலைமைக்குத் தலைகீழாக முன்பு பார்ப்பனர் மட்டும் மாட்டிறைச்சி உண்ணுவோராகவும் பிறர் அனைவரும் மாட்டிறைச்சி உண்ணாதோராகவும் திகழ்ந்த உண்மையும்  இம் மேற்கோளிலிருந்து புலனாகிறது

0 மறுமொழிகள்: