22.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 38


 29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 7

.:  கண்டிப்பாகக் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் ஐரோப்பாவின் செல்லப்பிள்ளை நேருவின் காலத்திலேயே உள்நாட்டில் உருவாகும் தொழில்நுட்பங்களை அழிக்கும் பணி தொடங்கிவிட்டது. தமிழகத்தில் எடுத்துக்காட்டு கோ.து.நாயுடு. மாபெரும் தொழில்நுட்ப மேதையான அவரை நெஞ்சுடைந்து சாகவிட்டது நேருவின் தரகு உள்ளம். சில ஆண்டுகளுக்கு முன் இராமர் என்ற தமிழக இளைஞர் தன் புதுப்புனைவான நிலைத்திணை எரிநீரை முறைப்படி செய்துகாட்டக் கூட முடியாமல் அவரைப் பூட்டிய அரங்குக்குள் வைத்து இழிவுபடுத்திய மேற்குடியினரான இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர்களின் பொறாமை நாம் கண்ணால் கண்டது. ஆனால் இந்திய(மார்கசிய)பொதுமைக் கட்சியின் தமிழகத் தோழர்களிடம் வெடித்தொழுந்த எதிர்ப்பு வெறியின் தோற்றுவாயையும் காரணத்தையும் என்னதான் முயன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. யாரோ கணிசமாகப் பணத்தை அள்ளிக்கொடுத்து இவர்களைத் தூண்டியிருப்பார்கள் என்பது தவிர வேறு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

சேலம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் ஈருருளிகளின்(இரு சக்கர வாகனங்களின்) எரிதல் கட்டமைப்பில் தான் கண்டுபிடித்துள்ள ஒரு சிறு உறுப்பைப் பொருத்தினால் எரிபொருளில் 25% மிச்சமாகும் என்று ஊரூராகச் சென்று விளக்கினார். எவரும் கண்டுகொள்ளவில்லை. தென்காசியைச் சார்ந்த ஒருவர் நூலைப் பயன்படுத்தாமல் தான் கண்டுபிடித்துள்ள ஒரு பசையைக் கொண்டு உடைப் பகுதிகளை ஒட்டலாம் என்று அலறிப்பார்த்தார். அதற்கு காப்புரிமம் கிடைக்காத நிலையில் அத் தொழில்நுட்பம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகியுள்ளதாக பின்னாளில் செய்தி வந்தது. ஒன்றேல் “நம்” காப்புரிமை நிறுவனம் கண்டுபிடிப்பாளர் தனக்குத் தந்த தொழில்நுட்ப விளத்தங்களை அயல்நாட்டினருக்கு விற்றிருக்க வேண்டும், அன்றேல் கண்டுபிடிப்பாளரையே வெளிநாட்டினர் அணுகி விலை கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். எது நடந்திருந்தாலும் நம் மக்களுக்குரிய அயல்செலாவணி இழப்புதான் விளைவு. 

குடிமக்கள் கண்டுபிடிப்புகளின் நிலை இதுவென்றால் போர்த்தளவாடங்களைப் படைப்பதற்கென்றே செயற்படும் பாதுகாப்புத் துறை ஆய்வு - மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றும், பணியாற்றி ஓய்வு பெறும் உயர் அலுவலர்கள் தாங்கள் வடிவமைத்துச் செயற்படுத்திக் காட்டிய படைப்புகளைப் பெருமளவில் உருவாக்கிப் படைப்பிரிவுக்கு வழங்குவதைவிட அவற்றிலும் தரம் குறைந்த அயல்நாட்டுத் தளவாடங்களை வாங்கிக் குவிப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருந்ததாகப் புலம்பும் செய்திகள் அவ்வப்போது கசிவதுண்டு. ஆனால் அனைவருக்கும் தெரிந்து, ஆனால் எவரும் கண்டுகொள்ளாத ஒன்று, “தெற்கின் அறிவியல் கதிரவன்” என்று ஊடகங்கள் அனைத்தும் புகழ்ந்து தள்ளும் திருவாளர் அப்துல் கலாம் அவர்கள் கண்டுபிடித்தருளிய அக்கினி ஏவுகணையின் தரத்தை ஆய்ந்து ஏற்றுக்கொண்ட பின் நடைபெற்ற கார்கில் போருக்காக போபோர்சு ஏவுகணைகளை அப்போதைய வாசுபாய் அரசு மனம்போல் வாங்கி வெடித்தது. இந்த ஏவுகணைகள் தரமற்றவை என்று பெரும் கூச்சல் போட்டு வி.பி.சிங் தலைமையில் கூட்டணி அமைத்து இராசீவ் காந்தியைத் தோற்கடித்தவர்கள் பா.ச.க.வினர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் கொள்முதலுக்காகவே இந்திய – பாக்கித்தான எல்லையில் ஓரிடத்தில், வழக்கமாக நடைபெறுவது போன்ற சிறு மோதலைப் பெரும் போராக்கினர் அன்றைய ஆட்சியாளர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. தான் கண்டுபிடித்த ஏவுகணையைப் புறக்கணித்தார்கள் என்று திருவாளர் அப்துல் கலாம் முணுமுணுத்து விடக்கூடாதே என்பதற்காகவே அவரைக் குடியரசுத் தலைவர் இருக்கையில் அமர்த்தினார்கள் என்பது எமது கணிப்பு. அதைப் போலவே என்ரான் என்ற அயல் நிறுவனம் மகாராட்டியத்தில் செயல்படுத்த இருந்த மின்னாக்கத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அத்திட்டத்தைச் செயற்படாமலாக்கிவிட்டு தங்கள் கூட்டணி ஆட்சியின் போது அதே திட்டத்தை முன்பை விட கூடுதல் மின் கட்டண விகிதத்தில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். அதாவது ஊழல் அல்லது தரகு என்பதும் அதற்காக உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைக் கருவறுப்பது என்பதும் எந்த ஒரு கட்சிக்கும் உள்ள தனிப் பண்பல்ல, ஆளும் கட்சிகள் மாறினாலும் பதவியில் நிலைத்திருக்கும் வாய்ப்புள்ளோரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாணர்களுக்கு இல்லாத உண்மையான அதிகாரங்களைக் கைகளில் வைத்திருப்போரும், அரசூழியர் தேர்வு வாரியங்களால் அமர்த்தப்படுவோருமான அதிகாரிகளுடனான கூட்டுநடவடிக்கையே இது.

செ.:ஆனால் விண்வெளி ஆய்வில் நாம் மாபெரும் அருஞ்செயல்கள் ஆற்றியிருக்கிறோமே! செவ்வாய்க் கோளை ஆய்வுசெய்ய ஏவப்பட்டிருக்கும் மங்கள்யான் திட்டத்தைப் பற்றி உலகமே வியக்கிறதே!

.:  உண்மைதான்! ஆனால் நம் விண்வெளி ஆய்வகங்களில் முற்றிலும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் ஏவுகணைகள் உருவாக்கப்படுவதாகச் சொல்வது உண்மையல்ல, வெளியிலிருந்து வரும் பல உறுப்புகளைப் பொருத்தும் பணியே நடக்கிறது என்று அங்கு பணிபுரியும் சிலரே கூறுவதைப் புறக்கணித்துவிட்டுப் பார்த்தாலும் செவ்வாய் நோக்கிப் பறக்கத் திட்டமிடும் நம்மால் சென்னையில் ஓட விடப்பட்ட பறக்கும் தொடர்வண்டியை மெக்சிக்கோவிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் தானே இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. மங்கள்யான் திட்டம் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மிகவும் உயர்த்தியிருக்கிறது என்று மயிர் சிலிர்க்கிறார் விண்வெளி ஆய்வு இயக்குநர் இராதாகிருட்டினன். வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப்போன தகர தொடர்வண்டி துருப்பிடித்த நிலையில்தான் இன்றும் சராசரி குடிமகனுக்குக் கிடைக்கிறது. ஆனால் நம் ஆட்சியாளர்கள் ஊர்மெய்க்க(ஊருமெச்ச) 450 கோடியில் பட்டாசு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளைக்காரன் போட்டது போன்ற தரமான தண்டவாளங்களைக் கூட இவர்கள் நடத்தும் உருக்காலைகளில் உருவாக்க முடியவில்லை. அடிக்கடி பொதுமக்கள் கண்டு எச்சரிப்பதாலேயே பல தொடர்வண்டி ஏதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தண்டவாளங்களைக் கண்காணிக்க அயலவர் ஆட்சியில் தடம் நெடுக எப்போதும் அலைந்துகொண்டிருந்த ஊழியர்களைக் கூட இந் நாள்களில் காண முடியவில்லையே!

செ.:ஆனால் இது போன்ற பெருஞ்செயல்களைப் பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது!

.:  நம் போல் வாழ்க்கையை நடத்துவது பெரும்பாடாக இல்லாதவர்களுக்கு, குறிப்பிட்டுக் கூறுவதென்றால் உடலுழைப்பில்லாமல் வள வாழ்வு வாழ இயலுகின்ற ஒட்டுண்ணிகளுக்குப் பெருமையாகத்தான் இருக்கும், அன்றாட வாழ்க்கைக்கே வழியற்றவர்கள் அது தங்கள் விதி என்ற நம்பிக்கையில் உறைந்து போயுள்ளதால் அவர்களுக்கும் இதைப் பார்க்கச் சற்று போதை ஏறத்தான் செய்யும், ஏனென்றால் ஆட்சியாளர்கள் சொல்லும் அனைத்தையும் நாம் அனைவரும் உண்மை என நம்புகிறோம். நம் இந்த வலுக்குறைவைப் பயன்படுத்தித்தான் ஆட்சியாளர்கள் இன்று வரை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இப்போது “வல்லரசியத் தொழில்நுட்பத்”தில் “அயல் நேரடி முதலீட்”டில் போர்த்தளவாடங்களை உள்நாட்டிலேயே விளைப்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றோ நாளையோ அதையும் செய்யத்தான் போகிறார்கள். சீனத்தின், அதன் மூலம் மறைமுகமாக அமெரிக்காவின் ஊதுகுழலான இந்திய (மார்க்சிய)ப் போதுமைக் கட்சியினர் பெயருக்குக் கூச்சலிட்டு “எதிர்ப்பை”த் தெரிவித்துவிட்டு அடங்கிவிடுவார்கள். எப்போதும் போல் இந்திய படைக்கலத்தின் தரம் வல்லரசியம் விரும்பும் மட்டத்திலிருந்து உயர முடியாது.

செ.:அப்படியானால் இன்றைய இக்கட்டிலிருந்து விடுபட நீங்கள் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?

.:  இது பற்றி நாம் விரிவாகப் பேச வேண்டும், ஏனென்றால் அதைப் பற்றிப் பேசுவதுதானே இங்கு நாம் கூடியிருப்பதன் நோக்கம்?

செ.:அதை எதிர்பார்த்துத்தானே நானும் வந்துள்ளேன்!

.:  இப்போதுதான் நாம் நம் உரையாடலின் முதன்மைக் கட்டத்துக்கு வந்துள்ளோம். இது வரை நாம் பேசிக்கொண்டது வெறும் அறிமுக உரை அல்லது பின்னணி விளக்கம்தானே!

.:  நம் அடிப்படை நோக்கம் பொருளியலில் தற்சார்புடைய ஒரு குமுகத்தைக் கட்டியமைப்பது. எந்தப் பொருளியல் தற்சார்புக்கும் அடிப்படையானது உணவில் தற்சார்பு. உணவில் தற்சார்புடைய மக்களை எவராலும் எளிதில் வெல்ல முடியாது. அது போல் உணவு வழங்கலை இழந்தவர்களால் வாழவே முடியாது. எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்து உருசியாவினுள் செருமானியப் படைகள் வெள்ளமெனப் பாய்ந்த போது உருசிய மக்கள் பின்வாங்கினர். அப்போது தாம் விட்டுச்சென்ற நிலப்பரப்புகளில் நின்ற பயிர்கள் அனைத்தையும் தீவைத்து அழித்துக்கொண்டே சென்றனர். இதுவே செருமானியப் படைகளின் வீழ்ச்சிக்கு முகாமையான காரணங்களில் ஒன்றாக இருந்தது.

அதே சோவியத்திலிருந்து இன்னொரு எடுத்துக்காட்டை இங்கு பார்ப்போம்.1919இல் லெனின் தலைமையில் புரட்சி வெற்றி பெற்ற போது அங்கிருந்த மிகப் பெரும்பான்மையான பெருந்தொழிலகங்களின் உரிமையாளர்களான ஐரோப்பிய முதலாளியர் அவற்றை அப்படி அப்படியே விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். அவை மீள இயங்கினால்தான் அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உணவுக்குத் தேவையான ஊதியம் கிடைக்கும். ஆனால் புதிய அரசிடம் அதற்குத் தேவையான பணம் இல்லை. அதனால் லெனின் ஓர் உத்தியை வகுத்தார். உழவர் பெருமக்களை அழைத்துப் பேசினார். தாங்கள் விளைக்கும் தவசங்களில் ஒரு பகுதியை அரசு நிறுவும் விலைக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதைத் தாங்கள் விரும்பும் விலைகளில் விற்றுக்கொள்ளலாம். அவர்கள் அரசுக்குக் கொடுக்கும் தவசங்களைத் தொழிலாளர்களுக்கு வழங்கி ஆலைகளில் உருவாகும் வேளாண் கருவிகளை உழவர்களுக்கு வழங்க முடியும் என்றார். இந்த அடிப்படையில்தான் ஒரு புத்தம்புதிய பொருளியல் கட்டமைப்பு நாம் அறிய உலக வரலாற்றில் நடைபெற்றது.

செ.:ஆனால் அங்கிருந்தது போல் தமிழகத்தில் பெருந்தொழில்கள் இல்லையே. அத்துடன் உழவர்களே தொழிலை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் சூழலில் இது எப்படி நடைமுறைக்குப் பொருந்தும்?

தொடரும்.......

0 மறுமொழிகள்: