17.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 3

இறந்த காலம் காண வாரீர்!
(முதற் பதிப்பின் முன்னுரை)
                                      
            இந்திய மக்களையும் தமிழ், சமற்கிருதம் ஆகிய அவர்களின் முகாமையான மொழிகளையும் பற்றி வரலாற்று, மொழி ஆராய்ச்சியாளர்களிடையில் குழப்பம் நிலவுகிறது. ஏற்கனவே நிலவிவரும் ஆரியர், திராவிடர் பற்றிய புனைகோள் (hypothesis) எவரையும் முழுமையாகப் பொந்திகைப் படுத்தவில்லை. இவ் விரு கூறுகளுக்கும் இடையில் கூறப்படும் முரண்பாடுகளுக்கு மாறாக ஒரு பிணைப்பு இருப்பதை யாராலும் உணராமல் இருக்க முடியவில்லை. இந்தப் பிணைப்பை வெளிப்படையாக, தெள்ளத் தெளிவாக உணர்ந்து வெளியிட்டோருள் தமிழ் நாட்டின் முன்னாள் ஆளுநர் திரு. கே.கே.சா குறிப்பிடத்தக்கவராவார். அவர் இச் சிக்கலை விடுவப்பதற்கென்று ஒரு கழகத்தை உருவாக்கினார். ஆனால் அஃது இன்று செயற்படுவதாகத் தெரியவில்லை.

            இப் பொருள் குறித்து நானும் சென்ற முப்பதாண்டுக் காலமாக மனத்திற்குள் அலசி வந்திருக்கிறேன். அதன் விளைவாக நான் கண்ட காட்சிகளை உங்களுக்கும் காட்டத் துணிந்துள்ளேன். நீண்ட இறந்த காலம் என்ற தொலைவு ஒரு தடை. தொன்மம் எனும் பனிப் படலத்தால் செய்திகள் மறைக்கப்பட்டிருப்பது வேறொரு தடை. இலக்கியம், மொழி மரபு என்னும் தெளிவு குறைந்த கண்ணாடிகளால் அவை காட்டப்படுவது ஒரு குறை. எனவே இக் காட்சிகளை மங்கலாகவே என்னால் உங்களுக்குக் காட்ட முடியும். என்னிலும் வல்லோர் இன்னும் தெளிவாக இக் காட்சிகளை உங்கள் கண் முன் காட்டுவர்.

            இச் சிறு நூலை நான் முடித்த வேளையில் வெளியான செய்தி ஒன்று இந் நூலின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது. திரு. இரத்தன் இலாகிரி என்ற இளம் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் வெளியிட்ட கருத்துகளைக் குறித்த சேதியே அது. ஆரியர் எனப்படுவோர் உணவு தேடிக் குடி பெயர்ந்தவர்களே அன்றிப் படையெடுத்து வந்தவரல்லர்; அவர்கள் வருமுன்னரே சமற்கிருதம் இந்தியாவில் இருந்தது. கி.மு.30,000 ஆண்டுகட்கு முன்பே இந்திய நாகரிகம் முழு வளர்ச்சியடைந்துவிட்டது. தாமோதர் பள்ளத்தாக்குக்கும் குசராத்தின் பஞ்சகமகாலுக்குமிடையில் இஃது உருவானது. அஃது அங்கிருந்து வடக்கும் தெற்கும் படர்ந்தாலும் விந்திய மலையின் தடையால் தெற்கே செல்ல முடியவில்லை. வேதங்கள் தொன்மங்களெல்லாம், ஆரியர் - ஆரியரல்லாதார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் மாயைகளெல்லாம் காலத்தால் உடைத்தெறியப்படும் என்பவைதான் அவர் கூறும் கருத்துகள். கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கும் சமற்கிருதத்திற்கும் ஒற்றுமைகள் இருந்தாலும் அவை ஒரே மொழிகளல்ல என்றும் அவர் கூறுகிறார்.

            ஆனால் அவர் தன் ஆராய்ச்சியில் தென்னாட்டின் நாகரிகத்தைக் கருத்திற் கொள்ளாமையினாலேயே இம் முடிவுகளுக்கு வர வேண்டியதாயிற்று. தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள், தமிழ் மக்களின் மரபுகள் ஆகியவற்றை அவர் ஆய்ந்திருப்பாரேல் அவர் குறிப்பிடும் இந்திய நாகரிகம் தென்னகத்துக்கு ரியதேயென்று அறிந்திருப்பார். விந்திய மலை அவர் மனத்திலேதான் தடையாக நிற்கிறதே தவிர என்றும் தமிழர்களைத் தடுத்ததில்லை என்று உணர்ந்திருப்பார். தமிழர்கள் முதலில் பரவியது கடல் மூலமேயே என்றும் அறிந்திருப்பார். இவ்வாறு அரைகுறை ஆய்வால் இந்திய வரலாற்றை மீண்டும் புதுக் குழப்பங்களுக்கு ஆளாக்காமல் இருப்பதற்கு இந் நூல் உதவும் என நம்புகிறோம்.

இந்நூலின் மூலம் நான் எய்த நினைக்கும் நோக்கங்கள் இரண்டு:
1.   குரங்கிலிருந்து தோன்றியவன் மாந்தன். தமிழனும் அப்படியே. எனவே இன்று நாம் நினைத்துப் பார்க்கும் போது - இன்றைய அளவையில் நாம் பெருமைப்பட முடியாத கட்டங்களையும் செயல்களையும் - மொழி பண்பாடுகளின் வாயிலாகவும் அவன் தாண்டியே வந்துள்ளான். இத்தகைய கட்டங்களை வரலாறு கட்டிக் காட்டும்போது அதை நாம் எதிர்க்கவோ மறுதலிக்கவோ முற்படுவோமாயின் நாம் உரிமை கொண்டாடுகின்ற நாகரிக முன்மையை எதிர்க்கவும் மறுதலிக்கவும் நாம் பிறருக்கு உரிமை கொடுத்தவராவோம். எனவே நாம் கடந்து வந்த உண்மை வரலாறாகிய பாதையை உணர்ந்து எதிர்காலத்தில் நாம் செல்ல விருக்கும் பாதையை முன்னறிய வேண்டும்.

2.   நம் குமுகத்தில் நிலவும் குறைபாடுகளுக்கு இன்று தமிழறிஞரில் பலரும் ஆரிய இனத்தாரின் படையெடுப்பை அல்லது ஊடுருவலைக் காரணமாகக் காட்டித் தமிழின், தமிழனின் மானத்தைக் காத்துக்கொள்கின்றனர். அதே வேளையில் ஆரியர்கள் என்று நாம் சுட்டிக்காட்டும் பார்ப்பனரோ தாம் தமிழரை ஒரு காலத்தில் படை வலிமையாலோ அல்லது மூளை வல்லமையாலோ வீழ்த்தி அடிமை கொண்டவர்கள் என்ற இறுமாப்பை வளர்த்து சிறுபான்மைக் குழுவினரின் பாதுகாப்பிய மனப்பான்மை கொண்டு குமுக மாற்றத்துக்கு எதிரிகளாக நிற்கின்றனர். இந்தப் போக்கால், இப் பிணக்கைப் பயன்படுத்திக் கொண்டு இங்குள்ள பச்சோந்திகள் தலைமுறை தலைமுறைகளாகக் குமுக அரத்தத்தை உறஞ்சும் அட்டைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு மாறாத தடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழக வரலாற்றை ஆரிய - திராவிட மாயையிலிருந்து விலக்கி முற்போக்குப் பாதையில் செலுத்துகிறது இந் நூல்.
                                    
நான் பின்பற்றியுள்ள உத்தி பற்றியும் சொல்ல வேண்டும். இராகுல சாங்கிருத்தியாயன் வால்கா முதல் கங்கை வரை என்ற தன் புகழ்பெற்ற நூலில் கையாண்டுள்ள உத்தியையே அடிப்படையாகக் கொண்டுள்ளேன். அதே வேளையில் அவரிடமிருந்து நான் சில வகைகளில் மாறுபடுகிறேன். முதலாவதாக அவர் ஏற்கனவே வரலாற்றறிஞர்களில் ஒரு சாரரேனும் ஏற்றுக்கொண்டிருந்த உலக வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருந்தார். எனவே அவர்கள் தந்த சான்றுகளையும் தொகுத்து நூலின் முதலில் வைத்திருந்தார். ஆனால் நான் சில முகாமையான சேதிகளில் துவரை நிலவி வரும் வரலாற்றுக் கருத்துகளுக்கு முரணான சேதிகளை வைத்துள்ளேன். எனவே அவரைப் போன்று நான் ஒரு முழுமையானதென்று சொல்லத் தக்க வரலாற்று முன்னுரையை வைக்கவில்லை, வரலாறு ஒவ்வோர் அதிகாரத்தின் இறுதியிலும் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளது. முடிவுரையில் முழு வரலாறும் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

            இரண்டாவதாக இராகுலர் மாக்சுமுல்லர் வடித்துத் தந்திருந்த ஆரிய இனக் கோட்பாட்டையும் ஏங்கல்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலுள்ள கருத்துகளையும் தன் மனத்தினுள் கலந்து அகவய வெளிப்பாடாகத் தன் நூலை வைத்திருந்தார். ஆனால், இந் நூலில் நான் நம் குமுகத்தில் நிலவும் மரபுகள், வரலாறுகள், தொன்மங்கள், மதங்கள், மொழியியல் - பண்பாட்டியல் சேதிகள், வழிபாடுகள் ஆகிய புறவய உண்மைகளைச் சான்றுகளாகக் காட்டியுள்ளேன்.

            அடுத்து, ஒவ்வொரு அதிகாரத்தின் முதற்பகுதியிலும் கூறப்படும் நிகழ்ச்சிகள் ஒரே காலத்தில் நிகழ்ந்தவையாக நான் கூறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தோராயமாக அண்மைக் காலங்களில் நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் செறிவாக அடக்கி வைக்கப்பட்டுள்ளன.

            சில வரலாற்றியல் கூறுகளில் தான் மரபு அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு நிற்கிறேன். அவற்றில் முகாமையானவை நூலில் இடம் பெற்றுள்ளவை வரிசைப்படி:

1.   நெருப்பைக் கையாள்வதை மனிதன் கற்றுக்கொண்டது கொல் விலங்குகளைப் பற்றிய இடைவிடா அச்சத்திலிருந்து அவனை விடுவித்து உலகைக் காணவும் சிந்திக்கவும் தேவையான ஓய்வை அவனுக்கு வழங்கியது. இவ்வாறு இரு கால்களில் எழுந்து நிற்பதன் மூலம் அவன் வாழ்வில் நிகழ்ந்த புரட்சிக்கு அடுத்த புரட்சியாக இதை நான் வைத்துள்ளேன். மாறாக உணவு சமைப்பதிலும் பண்ட விளைப்பிலும் நெருப்புப் பயன்பட்டதை மட்டும் இன்று நிலவும் கருத்து கணக்கிலெடுத்துக் கொள்கிறது. எனவேதான் நெருப்புக் குண்டங்கள் (வேள்விக் குண்டங்கள்) காணப்படும் அகழ்வாய்வுக் களங்களனைத்தையும் ஆரியர்க்குரியதாக இன்றைய ஆய்வாளர்களால் காட்ட முடிகிறது.
                 
2.   முதன்முதலில் குமுகத்திலிருந்து அயற்பட்டுக்கு முகத்தின் மேலே நிற்கும் ஓர் அரசு நெய்தல் நிலத்தில் நில வாணிகத்தை அடிப்படுத்திய கடல் வாணிகத்தினாலேயே ஏற்பட்டது என்ற கருத்து. இது வரலாற்றியல், குமுகவியல் அறிஞர்களிடையில் ஒரு கருத்துப் போரை உருவாக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் குமுகத்தில் பண்டம் (Commodity) என்ற ஒரு புதிய பொருள் நுழையும் போதுதான் (பின்னர் வாணிகர்களாக வளர்ச்சியடைந்த) பண்டமாற்றுவோர் என்ற ஒரு புதிய குமுகக் கூறு உருவாகி ஏற்கனவே இருந்த தொல் பொதுவுடைமைக் குமுகத்தை உடைத்துத் தனிவுடைமைக்கு வழிகோலியது என்று நான் கொண்டுள்ளேன். இது பற்றிய கருத்துகளை வரவேற்கிறேன்.

3.   தெய்வங்கள் என்று நாம் வழிபடுபவை இயற்கையின் ஆற்றல்களைக் கண்டு அஞ்சி அவற்றை வணங்குவதற்காக மனிதனால் மனித வடிவம் கொடுக்கப்பட்டவை என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. ஆனால் அவ் வியற்கை ஆற்றல்களை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மனிதர்களையும் அவன் வணங்கியுள்ளான் என்று நான் காட்டியுள்ளேன். (எ-டு) யானையை வசக்கிய மனிதனை முருகனாகவும் யானையைப் பிள்ளையாராகவும் இன்று வணங்குகின்றனர்.
4.   இன்று இந்துமதம் எனப்படுவதிலுள்ள தெய்வங்களில் பெரும்பாலானவை வட இந்தியாவில் உருவானவை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் புவியியல் தொடர்பு, குமுக வளர்ச்சிக் கட்டங்களோடு பொருந்துதல் முதலிய அடிப்படைகளில் அவை தமிழகத்துக்கே பொருந்துகின்றன என்று காட்டியுள்ளேன்.

5.   குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வோர் கூட தமிழகத்தின் குமுக வளர்ச்சி பற்றி ஆயும் போது குமரிக் கண்டம் கடலில் முழுகியதால் குமுகத்தில் ஏற்பட்ட புறநிலைத் தாக்கத்தைச் சிறிதும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் அகநிலைக் காரணிகளுக்குள் அடக்க முயன்று திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குறைபாட்டை ஈடு செய்யும் வகையில் இந் நூலில் குமரிக்கண்டத்தின் அழிவால் ஏற்பட்ட புறநிலை அகநிலை மாற்றங்கள் கணக்கிலெடுக்கப்பட்டுள்ளன.
                       
இந் நூலில் அடிக்குறிப்புகள், கருவி நூற்பட்டியல் கொடுக்கப்படவில்லை. இதற்குக் காரணத்தை நான் விளக்கியாக வேண்டும்.

            ஏறக்குறைய பத்தாம் அகவையிலிருந்தே நான் படித்து வந்த திராவிடநாடு போன்ற பகுத்தறிவிய இலக்கியங்கள், வரலாற்றியல், இலக்கிய, அறிவியல், குமுகியல் சேதிகள், துணுக்குகள், புதினங்கள் முதலியவை என் மனத்தில் பதிந்து வந்திருக்கின்றன. அவற்றோடு நம் குமுகத்தில் காணப்படும் இயற்காட்சிகள் பற்றிய அறிவு இடைவினைப்பட்டு மனத்தினுள் வரிசைப்பட்டு இந் நூலில் வெளிவந்துள்ளன. எனவே நான் முன்வைத்துள்ள கருத்துகளில் நானாக முடிவெடுத்தவை எவை, எவை பிறர் கூறியவை என்று என்னால் பல நேர்வுகளில் கூற முடியவில்லை. எடுத்துக்காட்டாக முருகனுக்கு யானை ஒரு காலத்தில் ஊர்தியாக இருந்திருக்க வேண்டும் என்று இந் நூலில் நான் எழுதிய போது (அதி. முதற்பதிப்பில் 15 இப்போது 16) அதற்கு இலக்கியச் சான்று இருப்பது எனக்குத் தெரியாது. ஆனால் சிலப்பதிகாரத்தை மீண்டும் படிக்கும் போதுதான் பிணிமுகம் பற்றிய சேதி படித்தேன். எனவே இதைப் போன்ற சூழ்நிலையில் அடிக்குறிப்பு போன்ற மரபியல் உத்திகளை நான் கடைப்பிடிக்கவில்லை.

            தொல் வரலாற்றுக் காலம் பற்றிய கருத்துகள் அன்றாடம் மாறிக் கொண்டிருக்கின்றன. எனவே இந் நூலில் தரப்பட்டுள்ள ஆண்டுகளின் துல்லியத்தின் மீது கருத்துச் செலுத்தாமல் நிகழ்ச்சிகளின் தொடர்முறைக்கே முதலிடம் தந்துள்ளளேன் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

            முதலில் நான் இந் நூலிற்கு இட்ட தலைப்பு குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் (பார்ப்பன மாயை) என்பது. பின்னர் நண்பர் ஒருவரின்[1] அறிவுரையின்படி பஃறுளி முதல் வையை வரை என்று மாற்றிக் கொண்டேன். எனக்கு முதல் தலைப்புதான் பிடித்தமானது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

            இந் நூல் 1979இல் முடிக்கப்பட்டது. அப்போது எனக்கிருந்த அறிவு நிலையில் சில செய்திகள் முழுமையின்றியும் தவறாகவும் இருக்கும். இன்று, குறைகள், தவறுகள் எவையெவை என்று என்னால் கண்டுபிடிக்க முடியுமாயினும் அவற்றைத் திருத்திக்கொள்ளவோ முழுமைப்படுத்தவோ வேண்டிய அளவு சேதிகள் என்னிடமில்லை. அதே நேரத்தில் நூலின் மூலக் கருவான கருத்தில், அதாவது ஆரியர் என்று ஓர் இனத்தார் இந்தியாவிலுள் படையெடுத்துத் தமிழகத்தினுள் ஊடுருவினர், அவர்களால்தான் நம் குழுகத்தின் சீர்கேடுகள் அனைத்தும் தோன்றின என்ற கருத்தை மறுப்பதில் எனக்கு இன்றும் எந்த மாறுபாடுமில்லை. இந்த நூலை எழுதும் போது நான் உணரவில்லையாயினும் இன்று இந் நூல் ஒரு தலையாய நோக்கத்தை நிறவேற்றும் என்று உறுதி பெறுகிறேன். அதாவது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் சிக்கலை ஒர் இனவெறி் சிக்கலாக - சியோனியமாகத் (Zionism) தீட்டிக் காட்டப் பார்க்கின்றனர் குமுக மாற்றத்தைத் தடுக்க அல்லது தள்ளிப் போட விரும்புவோர். இஃது உண்மையில் ஓர் இன வெறிச் சிக்கலல்ல; வகுப்புச் சிக்கலே என்று எடுத்துரைப்பதற்கு இந் நூல் உதவும்.

            மேலும் நம் தொன்மங்களை விரித்துரைப்பதற்கு ஒரு தோராயமான உத்தி இதில் தரப்பட்டுள்ளது. இவ் வுத்தியை இன்னும் விரிவு படுத்த முடியும் என்று இன்று காண்கிறேன்.

            நான் இங்குக் காட்டுவது ஒர் எலும்புக் கூடே. அதனைத் துல்லியமான சேதிகளைத் சதையாகவும் நரம்பாகவும் கொண்டு நிரப்பி முழு வரலாற்று உயிரைக் கொடுத்து அறிஞர்கள் உலவ விடுவார்களாக! வடக்கிலும் தெற்கிலும் நடக்கும் ஆராய்ச்சிகளை, முன்னால் ஆளுநர் உருவாக்கியது போன்ற ஒரு கழகம் இணைத்தால் நன்றாக இருக்கும்.

            நான் காட்டும் காட்சிகளை உள் நுழைந்து பார்த்து மகிழ்வீர்.
குமரிமைந்தன்



[1]புலவர் த.சரவணத் தமிழனார்.

0 மறுமொழிகள்: