குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 22
19. துறவியானால்தான் தொண்டா?
(தோரா.
தி.மு. 6000)
நாம் இப்போது பொதிகை மலையடிவாரத்தில்
சென்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன்னும் பின்னும் ஆடவரும் பெண்டிருமாக மக்கள்
வரிசையாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டம் மலையடிவாரத்திலிருந்து
மலையின் காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டிருக்கிறது. இதோ நாமும்
காட்டின் எல்லையை நெருங்கிவிட்டோம். திடீரென்று பின்புறமிருந்து கடகடவென்று ஒலி
விரைவாக நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாரும் நின்று திரும்பிப்
பார்க்கிறார்கள். நாமும் பார்ப்போம். இதோ நம் அருகில் வந்து நிற்கிறது அழகிய ஒரு
வெள்ளித் தேர். தேரின் முன்புறம் வாயிலிருந்து நுரை தள்ளியவாறு நான்கு அழகிய வெண்
புரவிகள் நிற்கின்றன. தேரின் மேலே வெண்பட்டாலான மீனக் கொடி பறந்துகொண்டிருக்கிறது.
நின்ற தேரிலிருந்து மிடுக்காக ஓர் ஆடவன் இறங்குகிறான்.
தேருக்குப் பின்னால் ஏறக்குறைய நூறு புரவிகளிலிருந்து வீரர்களும் அமைச்சர்,
படைத்தலைவர்களும் தத்தமக்குரிய சிறப்பு ஆடையணிகளுடன் இறங்குகின்றனர். கையில் மீனக்
கொடியைத் தூக்கிப் பிடித்திருந்த ஒரு வீரன் விரைந்து முன்புறம் வந்து தேரிலிருந்து
இறங்கிய மன்னனின் முன் போய் நிற்கிறான். “பாண்டிய மன்னர் காய்சின வழுதி வாழ்க” என உரத்துக் கூவுகிறான். மக்கள் அனைவருடன் குதிரைகளிலிருந்து இறங்கி
நின்றோரும் பின்னால் வேல்களைத் தாங்கியவாறு ஓடி வந்துகொண்டிருக்கும்
காலாட்படையினரும் எழுப்பிய “வாழ்க!”
என்ற முழக்கத்தில் வானே அதிர்கிறது. முன்செல்லும் வீரன் “மதுரை
மைந்தன் வாழ்க!” “குமரி மைந்தன் வாழ்க!” “தென்னவன் வாழ்க!” எனப்
பலவாறு முழங்கிக் கொண்டு முன்னே செல்ல, அரசனும் மற்றையோரும் பின்னால் காட்டிற்குள்
நுழைகிறார்கள்.
சிறிது தொலைவு மலைமேல் சென்றதும் ஒரு சமவெளி தென்படுகிறது.
பல வகை மரங்களும் பந்தற்கால்கள் போல் நிற்க, இலைகளாலான பந்தல்போல் அந்த வெளி
தோற்றமளிக்கிறது. அதன் ஊடே கதிரவனின் ஒளி புள்ளிகளாக மல்லிகை மலர்கள் போல் வீழ்ந்திருக்கிறது.
காட்டு மலர்கள் மலர்ந்து இனிய நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
சருகுகளின்றிப் பெருக்கித் துப்புரவுச் செய்யப்பட்டிருக்கின்றது சமவெளி.
சமவெளியின் ஒரு கோடியில் பல குடில்கள் காணப்படுகின்றன.
அவற்றில் சற்றுப் பெரிதான ஒரு குடிலின் பக்கத்திலிருந்த ஓர் அரச மரத்தின் அடியில்
ஒரு மேடை மீது ஓர் இருக்கையும் அதன் இரு புறங்களிலும் வரிசையாகப் பல இருக்கைகளும்
இடம்பெற்றிருக்கின்றன. அதன் அருகில் உள்ள இன்னொரு மரத்தினடியில் ஒரு சிறு புரை
அமைக்கப்பட்டு அதன் வாயிலில் ஒரு திரை தொங்குகிறது, மக்களின் வாழ்த்தொலிகள் தொடர
அரசன் வரும் ஒலி கேட்டுப் பெரிய குடிலின் உள்ளிருந்து ஒருவர் வெளியே வருகிறார்.
அவருடன் ஒரு பெண்ணும் வருகிறாள். வந்தவர் மன்னனின் கைகளைப் பிடித்து “வரவேண்டும் மன்னர் மன்னா! தங்கள் வரவால்
இம் மலையே புகழ் பெறுகிறது” என்று கூற பெண் மன்னரை நோக்கி
வணங்குகிறாள்.
மன்னர் “வணக்கம் ஆசான் குட முனியாரே!
உங்களாலேதான் இம் மலை புகழ்டையப் போகிறது” என்று கூறி
அவர்களையும் இதற்குள் பிற குடில்களிலிருந்து வெளியே வந்து நின்று அரசனை வணங்கிய
ஆடவர் பெண்டிர் அனைவரையும் நோக்கி வணங்குகிறான்.
குட முனிவர் மன்னனைத் தன் குடிலினுள் அழைத்துச் செல்கின்றார்.
மற்றும் சிலர் மன்னனுடன் வந்த அமைச்சர், வீரர் முதலானோரை வெவ்வேறு குடில்களினுள் அழைத்துச் செல்கின்றனர். மற்றும் சிலர் மக்களையும் காலாட்
படையினரையும் சமவெளிகளிலேயே அமர்த்துகின்றனர். அனைவருக்கும் கனிகள், தேன், தினைச் சோறு,
அரிசிச் சோறு, இறைச்சி முதலியவற்றை வழங்குகிறார்கள். அனைவரும் உண்டு முடிந்த
பின்னர் மீண்டும் கட்டியங் கூறுவோன் “பாண்டிய மன்னர் காய்சின
வழுதி வாழ்க!” எனக் குரலெழுப்ப,
மக்களெல்லாரும் எழுந்து நிற்கின்றனர். கட்டியம் கூறுவோனைப்
பின்தொடர்ந்து மன்னன் அரச மரத்தடியிலுள்ள இருக்கையில் அமர, அமைச்சர் முதலானோரும்
பல புலவர்களும் இரு வரிசை இருக்கைகளிலும் அமர்கின்றனர்.
மன்னனை வரவேற்ற குட
முனிவர் அரசன் பக்கத்தில் நின்று அரசனின் வீரம், கொடை, முறை பற்றிப்
புகழ் பாடல்களைப் பாடி அரசனை வாழ்த்துகிறார். தொடர்ந்து பேசத் தொடங்குகிறார். “பெருமை மிகு பாண்டிய வேந்தே! தங்களை என் எளிய குடிலுக்கு வரவேற்பதில்
பெருமையடைகிறேன். நான் அரசரின் பணியில் ஈடுபட்டிருந்த போது நம் மன்னர்
பெருந்தகையின் நட்பைப் பெறுகின்ற பேறு பெற்றேன். துறவு என்ற பெயரில் நாட்டு
மக்களைச் சிலர் கெடுத்து வருகின்றனர். நல்லது செய்யினும் தீயது செய்யினும் அவ் வவற்றின்
விளைவுகளைத் துய்ப்பதற்கு ஒருவர் தொடர்ந்து பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்ற
கட்டுக்கதையைப் பரப்பி வருகின்றனர். அப் பிறவித் தொடரைத் தவிர்க்க வேண்டுமாயின்
ஒருவர் செயலற்றிருக்க வேண்டுமென்று சொல்லி மக்களின் ஊக்கத்தை அழித்துவருகின்றனர்.
இவற்றைப் பற்றி அறிந்தால் அரசர் மனம் வருந்துவார். அதனால் நான் நாட்டின்
நிலைமைகளையும் நம் நாட்டில் வழங்கும் பாடல்களையும் நன்கு ஆராய்ந்து அரசரோடு கலந்தேன்.
இன்றுவரை குமரி அன்னையின் இணையற்ற தலைமையில் மலை முகடு முதல் கடற்கரை வரையுள்ள
பரந்துபட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களிடையில் வழங்கும் பேச்சு வழக்குகளையும்
பாடல்களையும் ஆய்ந்து பல அறிஞர்கள் எண்ணற்ற நூல்களை இயற்றியுள்ளனர். அது போல் அம் மக்களிடையில்
நிலவும் பண்பாட்டுக் கூறுகளையும் தொகுத்துத் தந்துள்ளனர். இந்தப் பெரும்
நிலப்பரப்பில் இதுவரை உருவாகியுள்ள படைப்புகளைத் திறனாயவும் தொகுக்கவும் இனி
உருவாகும் படைப்புகளை நெறிப்படுத்தவும் ஒரு கழகத்தைத் நம் தலைநகரான மதுரையில்
உருவாக்க அரசரின் விருப்பத்தின் பேரில் திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடக்க
விழாவைப் பொதிய மலையில்தான் நடத்த வேண்டுமென்று மாமன்னர் விரும்பியதாலேயே நாம் இங்கு
கூடியிருக்கிறோம். மண்ணுள்ளளவும் நின்று நிலவும் புகழைப்
பொதியினுக்குக் கொடுத்த மன்னர் விழாவினைத் தொடக்கிவைக்க அன்புடன்
வேண்டுகிறேன், மன்னர் காய்சின வழுதி நீடூழி வாழ்க!”.
“மன்னர்
வாழ்க!” என மக்கள் எதிரொலிக்க அரசர் எழுந்து நிற்கிறார். “அருமை மக்களே! புலவர் பெருமக்களே! உலகில் மொழிக்கென்று
முதன்முதலாகத் தொடக்கப்பட இருக்கும் கழகத்தின் நெறியாய்
இலங்கவிருக்கும் முழுமையான மொழி இலக்கணத்தை மட்டுமின்றி
மற்றுமொரு கொடையாக இம் மொழியாய்வுக் கழகத்தையும்
பல்லாயிரம் ஆண்டுகளாக இந் நிலவுலகை நெறிப்படுத்தும் இருக்கையாக விளங்கும்
பொதிகையின் இப்போதைய தலைவரும் என் அருமை நண்பரும் பேரறிஞருமான குட
முனிவர் வழங்க இருக்கிறார். அதற்கு முன்பு
இங்குக் குழுமியிருக்கும் புலவர் பெருமக்கள் தங்கள் ஆக்கங்களை அரங்கேற்றுவர்.
“இக்
கழகத்தைத் தொடக்குவதற்குப் பொதியிலை நோக்கி அரசவை வந்திருப்பது இப் பாண்டிய நாடு
தமிழுக்கு என்றும் கட்டுப்பட்டது என்பதைக் காட்டவே. புலவர் பெருமக்களை மீறிப்
பாண்டிய நாடு என்றும் செல்லாது என்பதைக் காட்டவே. புலவர் அனைவரும் அரசுக்கு
உகந்தவர். இப் பாண்டிய நாட்டையும் அதன் மக்களையும்
குலைக்கவும் கீழறுக்கவும் முனைவோரை எதிர்த்தொடுக்கும் பொறுப்பைத் புலவர்களாகய
அறிஞர்களின் தலைகளின் மேல் சுமத்துகிறோம் நாம். புலவர் பெருமக்கள்
என்றும் மக்களையும் நாட்டையும் காப்பார்களாக என்று வேண்டி இம் மொழிக்
கழகத்தைத் தொடங்கி வைக்கிறேன்!” மன்னர்
அமர்கிறார். புலவர் ஒவ்வொருவராகத் தத்தம் படைப்புகளை அரங்கேற்றுகிறார்கள்.
இறுதியில் அரசர் அழைக்க குட முனிவர் எழுந்து வந்து கையில்
சுவடியுடன் பேசத் தொடங்குகிறார்.
“மாமன்னர்
காய்சின வழுதியவர்களே! புலவர் பெருமக்களே, எம் அனைவரையும் தாங்கி வளர்க்கும்
பாண்டிய நாட்டுக் குடிமக்களே! உங்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்கி உங்கள் நாவில்
நடமிடும் மொழி வழக்குகளிலிருந்தும் உங்களால் பேணப்படும் பண்பாட்டுக்
கூறுகளிலிருந்தும் இறுத்தெடுத்த ஓர் இலக்கணத்தை உங்கள் முன் வைத்து உங்கள் ஏற்பைப்
பெறும் நோக்கத்துடன் உங்கள் முன் நிற்கிறேன். அதைக் கேட்டு ஏற்பு வழங்க
வேண்டுகிறேன்.
“இந்த
பரந்த மிகப் பெரிய நிலப் பரப்பில் இடம் பெற்றுள்ள மொழி வழக்குகளையும்
நடைமுறையிலிருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும் பல்வேறு அறிஞர்கள் திரட்டி
நூல்களாகத் தந்துள்ளனர். அவற்றை அலசி, ஆய்த்து வகுத்தும் தொகுத்தும் நாம் ஓர்
இலக்கணக் கோட்பாட்டை வகுத்துள்ளோம். அது இது வரை எழுதப்பட்ட இலக்கணக்
கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டது. மொழியின் முதற்பொருளான ஒலி எழுந்து இசைக்கும்
தன்மையைக் கூறுவதை எழுத்ததிகரம் என்றும் அவ் வொலிகள் இணைந்து பொருள்
தரும் ஒன்றிகளான சொற்களாகும் இயல்பைக் கூறும் பகுதியை சொல்லதிகாரம்
என்றும் வகுத்துள்ளோம். மூன்றாவது பகுதி முகாமையானது. அதுதான், முதற்பொருளான
எழுத்துகளைக் கொண்டு உருவான சொற்களால் நூல்கள் வழியாக நாம் கூறும் பொருள் பற்றியது.
அதை யாம் பொருளதிகாரம் என்ற தலைப்பில் எடுத்துவைக்கிறோம். அது பற்றி
இங்கு விரிவாக விளக்க வேண்டியுள்ளது.
“மலை
உச்சியிலிருந்து கடற்கரை வரை விரிந்து கிடக்கும் இந் நிலப்பரப்பில் கடலால்
இணைக்கப்பட்ட ஆறுகள் வழியாக ஆட்சி செலுத்தும் வழியைக் காட்டியதால் தெய்வமாக
வணங்கப்படும் வருணனின் வழியில் வந்த மீனவர் குலப் பெருமாட்டி அன்னை
குமரியால் இப் பாண்டிய அரசு தோற்றம் கொண்டது. பின்னர் ஆற்றுப் படுகைகளில்
வேளாண்மையை வளர்த்துத் தெய்வப் படிமம் பெற்ற இந்திரன் நெய்தல் நிலம்
தவிர்த்த பிற பகுதிகளின் தலைவனானான். ஆக்களிலிருந்து பால்படு பொருட்கள் பெறவும்
காளைகளை வசக்கி அனைத்து நில மக்களுக்கும் வழங்கியும் வளம்பெற வழிகாட்டியதால்
தெய்வமாக வழிபடப்பட்ட கண்ணனான மாயோனால் முல்லை நிலத்தில் இந்திரனின்
செல்வாக்கு முடிவுக்கு வந்தது. இறுதியில் காட்டு யானைகளை வசக்கி காட்டிலிருந்து
மரங்களை வெட்டிக் கொண்டுவந்து விற்றதனால் குறிஞ்சி நிலம் வலிமை பெற்று அதற்கு வழி
அமைத்துத் தந்த முருகனான சேயோனைத் தெய்வமாக வழிபடுகிறது.
“இந்
நிகழ்முறையில் மேலே குறிஞ்சி, முல்லை நிலங்களையும் கீழே மருதம், நெய்தல்
நிலங்களையும் கொண்டு நடுவில் அமைந்திருக்கும் பாலையைத் தாண்டி இரு திசைகளிலும்
இடைவிடாத வாணிகப் போக்குவரத்து நெடுங்காலமாக நடந்துவந்தது. அண்டையிலுள்ள முல்லை,
மருத நிலங்களின் வளங்குறைந்த பகுதியில் வாழும் மக்களுடன் பிற நிலங்களிலிருந்து
பல்வேறு காரணங்களால் பிரிந்து வந்தோரும் கலந்து ஒரு வழிப்பறிப் பொருளியலைப்
பாலைநிலத்தில் வளர்த்து நம் மண்ணின் ஒட்டுமொத்தப் பண்பாட்டின் ஓர் உறுப்பாக
அமைந்துள்ளனர். மேலே கூறிய நான்கு நிலத் தெய்வங்களுக்கு முந்திய தெய்வமான தாய்த்
தெய்வம் கொற்றவை அவர்களின் தெய்வமாக விளங்குகிறாள்.
“இந்
நிலங்களின் மக்கள் ஒருவரோடொருவர் பண்டமாற்று, வாணிகம் என்று நெருக்கமான
தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் அவர்களின் பொருளியல், குமுகியல் வளர்ச்சி மட்டங்கள்
தெளிவான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நிலத்தின் பொருளியல் அடிப்படையிலைன
பண்பாட்டுத் தொகுதியை யாம் திணை என்ற சொல்லால் குறிக்கின்றோம். அதை
ஆண் – பெண் உறவு அடிப்படையிலான குடும்பம், அதாவது அகம் தொடர்பானதாக அகத்திணை
என்றும் குடும்பத்துக்கு வெளியே பிறருடனும் ஒட்டுமொத்த குமுகத்துக்காகவும் மக்கள்
மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, அதிலும் குறிப்பாக அண்டை மக்களுடன் உருவாகும் போர்
நடவடிக்கைகளை, புறத்திணை என்றும் வகுத்துள்ளோம். இவ்விரு திணைகளை
விரித்துரைப்பதுதான் பொருளதிகாரம் .
“இந்த
இலக்கணத்தின் அடிப்படையில் படைக்கப்படும் ஆக்கங்களை ஆய்ந்து ஏற்றுக்கொள்ளும்
பணியுடன் அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் பணியையும் இக் கழகம் செய்யும்.
“நானிலத் தெய்வங்கள்
உருவாகி மண்ணின் மைந்தர்கள் பிரிவுறுவதற்கு முன்பிருந்த ஏழு குக்குலத் தலைவர்களான
முனிவர்களுக்குத் தலைமை தாங்கி மக்கள் எதிர்கொண்ட எத்தனையோ இன்னல்களை விலக்கி
வழிகாட்டிய எம் குட முனிவர் மரபு தொடர்ந்தும் அக் கடமையைத் தவறாது கைக்கொள்ளும்
என்று உறுதி கூறி முடிக்கிறேன்”.
இப்போது
மன்னர் எழுகிறார். “நமது நிலத்தின் மேற்கெல்லையில் இருப்பிடத்தைக் கொண்டதால்
குடமுனி என்று இன்றுவரை அழைக்கப்படும் நம் மாமுனிவர் இனி தனிச் சிறப்பு வாய்ந்த அகத்தியல்
என்ற இல்வாழ்க்கை நெறியை இலக்கணமாக வகுத்துத் தந்ததால் அகத்திய மாமுனி
என்று அழைக்கப்படுவார்” என்று கூற கையொலியுடன் “மா முனிவர் அகத்தியர் வாழ்க!”, “மா
மன்னர் காய்சின வழுதி வாழ்க!” என்ற முழக்கங்களுடன் பொதிய மலையே அதிர்கிறது.
அகத்தியர் மன்னரை வணங்கி, மக்களை நோக்கித் தலைதாழ்த்தி “இந்த மண் மீதும் மக்கள் மீதும் உள்ள
ஈடற்ற அன்பின் பெருக்காலும் அரசரிட்ட ஆணையாலும் ஊட்டிய ஊக்கத்தாலும் எளியேனாகிய என்னால் இப் பெரும்பணி முடிவடைந்தது. இது மட்டுமன்று;
இங்கு இவ் விழாவில் மேலும் ஒரு சிறப்பு உளது. நாட்டில் ஒரு கூட்டத்தார் உள்ளனர்.
அவர்கள் மக்களோடு கூடி எந்த உழைப்பிலும் பங்குகொள்ளாது தாமே இறைவனின்
அடியார்களென்றும் தம்முடன் இறைவன் பேசுவதாகக் கூறிக்கொண்டும் கடவுள் பேசுகின்ற
மொழி தம் பூசை மொழியே என்று கூறிக்கொண்டும்,
எழுதாக்கிளவியாகிய நமக்கு மறைக்கப்பட்ட மந்திரங்களை ஓதிக் கொண்டும் திரிகிறார்கள்.
நம் மக்களிற் பலரும் அவரிடம் மயங்கித் தம்மை அவர் முன் தாழ்த்திக்கொள்கிறார்கள்.
நம் மொழியே இயற்கை மொழி என்பதை உணர்ந்து நாம் நம் மொழியையே போற்ற வேண்டும்.
இன்னொரு கூட்டத்தார் மணம் புரிவது இழி செயலென்று கூறிக் கொண்டு துறவென்று போலி
உருத்தாங்கிப் பிறன்மனை நாடி வஞ்சகம் புரிந்து வாழ்கிறார்கள். ஆனால் இறைவனின்
தோற்றங்களாகக் காணப்படும் உயிர்களெல்லாம், மரஞ்செடி, கொடிகள் உட்பட, ஆண் - பெண்களாகவே தோற்றம் அளிக்கின்றன. எனவே கண்ணுக்குப் புலப்படாததும்
உருவமற்றதும், நிறமற்றதும், குணமற்றதும், பெயரற்றதும் ஆகிய எல்லாம் வல்ல
கடவுளுக்கு ஓர் உருவம் கற்பிப்பதென்றால் அஃது ஆண் - பெண்
கூறுகளின் இணைப்பைத் தவிர பிறிதொன்றாக இருக்க முடியாது. இந்தக் கோட்பாட்டில்
இறைவனைக் குறிப்பதற்காக நாம் ஒரு குறி இயற்றியிருக்கிறோம். அதனை வழிபட நம் மொழி
தவிர வேறு வாயிலில்லை. இவ் விறை வணக்கத்தைப் பெருமன்னரின் முன்னிலையில் தொடக்கி
வைக்கிறோம். மன்னரின் இசைவு பெற்று பாண்டிய மன்னரின் ஆணை
எட்டுமிடங்களிலும் அப்பாலும் இக் குறி வணக்கத்தைப் பரப்பச் செலவு மேற்கொள்ள
இருக்கிறேன். அனைவரும் இறைவனை ஆண், பெண்ணுருவமாக வழிபட வேண்டுகிறேன்!”
இவ்வாறு கூறிய அகத்தியனார் முன் செல்ல அவரைத் தொடர்ந்து
சென்ற மன்னர் பக்கத்து மரத்தடியில் இருக்கும் புரை முன் தொங்கும் திரையை விலக்க
ஒரு கல்லுருவம் தோன்றுகிறது. இலிங்க உருவமே அது. ஆனால் பொதுவாக நாம் காணும் குறி போல் வழுவழுப்பாக இன்றி நடுத்தண்டு
அப்படியே ஆண்குறிபோல் உள்ளது. அடிப்பகுதியான ஆவுடையாரும் இப்போதுள்ள
வடிவத்திலிருந்து மாறுபட்டு பெண்குறியைப் போன்று காணப்படுகிறது. அதனை
அகத்தியனார் மக்களுக்கு விளக்குகிறார்: “இதோ தண்டு போல்
நீண்டு காணப்படும் பகுதி ஆணையும், வட்டமான கீழ்ப்பகுதி பெண்ணையும் நிகரளிக்கும்.
இதுவே நாம் இறைவனைக் குறிப்பதற்குக் கையாளத்தக்க மிகச்
சிறந்த உரு. மற்றவை எல்லாம் மன்பதைக்கு அருஞ்செயலாற்றி
இறவாப் புகழ் பெற்ற நம் முந்தையரான சிறுதெய்வங்களே!” என்று
கூறிக் குறிவுருவின் முன்னிருக்கும் பூக்களை எடுத்துச் சொரிந்து பண்ணுடன் பாடல்கள்
பாடி ஏத்துகிறார். மக்களும் உடன் சேர்ந்து வாழ்த்துகின்றனர். பூசை முடிந்ததும்
அரசனை மக்களும் அகத்தியரும் வாழ்த்த அவன் சுற்றத்தாருடன் புறப்படுகிறான். நாமும்
திரும்புவோம்.
அகத்தியர் என்ற பெயர் தமிழ் இலக்கணத்தோடு தொடர்புடையது.
ஆனால் வடநாட்டுத் தொடர்பும் அப் பெயருக்குண்டு. வட நாட்டிலிருந்து தென்னாடு போந்த
அகத்தியரென்ற ஒருவர் தமிழ் மொழி கற்று இலக்கணம் யாத்தார் என்பது ஒரு
மரபு. இதனை ஆராயாமலே பலரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். அதே
வேளையில் அகத்தியர் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்ற
கருத்தும் நிலவுகிறது. துடிசைக்கிழார் அ. சிதம்பரனார் அகத்தியர் வரலாறு(கழக
வெளியீடு) என்னும் தன்னுடைய நூலில் குறைந்தது 37 அகத்தியர்களைப் பட்டியல் போட்டுத்
தருகிறார். அகத்தியர் என்ற பெயர் இந்தியாவிற்கு வெளியிலும் வழங்கப்படுகிறது. அகத்தின், ஆத்தின், அகத்தியசு (Augustin,
Austin, Augustus) என்ற பெயர்கள் அகத்தியர் என்ற சொல்லின் மருவே.
அகத்தியம் என்ற சொல்லுக்கு இன்றியமையாமை என்ற பொருளிருக்கிறது. அதே வேளையில் Augustus என்ற சொல்லுக்கு உயர்புடையவன் என்ற பொருளுண்டு.
அகத்தியர் இயற்றிய நூலுக்கு அகத்தியம் என்ற பெயர்
வந்தது என்பது இன்றைய கருத்து. ஆனால் அஃது உண்மையாக இருக்க முடியாது. அகத்தியர்
தமிழிலக்கணம் வகுத்தார் என்ற
உண்மையையும் தமிழ் இலக்கணத்தில் அகத்தியல் என்றொரு இன்றியமையாக்
கூறு இருக்கின்றமையையும் கொண்டு அத்தகைய ஓர் இயலை முதன்முதல் யாத்தவருக்கு அகத்தியர் என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம் என்று கருதுவதே பொருத்தமாகும்.
பின்னர் அகத்தியர் இயற்றியதால் அகத்தியல் அகத்தியமென்று தலைகீழாகி அதன் பின்னர்
அதனுடன் சேர்ந்த மொழி, மற்றும் புறப்பொருள் இலக்கணங்களுடன் சேர்ந்து பொதுப் பெயராயிற்று.
நூல் பெயரால் புலவர் அழைக்கப்படுவது புதுமையன்று. காக்கைப்பாடினியார், தேய்புரி பழங்கயிற்றினார்,
செம்புலப் பெயனீரார் போன்ற பல பெயர்களும் அவ்வழியில் தோன்றியவையே.
அகத்தியல் என்றால் என்ன? பொருளிலக்கணம் தமிழுக்கே சிறப்பான
ஒன்று. அஃது அகப்பொருள்,
புறப்பொருள் என வகுக்கப்படும். அது தொடக்கத்தில் அகத்தியல், புறத்தியல் என
வழங்கப்பட்டிருக்க வேண்டும். அகம், புறம் என்ற சொற்களுக்குத்
தன் உணர்ச்சியை இவ்வாறிருந்தது என்று வெளியிட முடியாததாய் அகத்துள்ளே வைத்துச்
சுவைக்கத்தக்கது அகம் என்றும் வெளியிடத் தக்கதாக உள்ளது புறமென்றும்
கூறப்படுகிறது. முன்னது காமமென்றும் பின்னது போரென்றும்
கூறப்படுகிறது. ஆனால் இவ் வரையறை சரிதானா?
அகம் என்ற சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ‘உள்ளம்’ என்பதும்
ஒன்று. ‘இல்லம்’ என்ற பொருளும் உண்டு.
இல்லறம் என்பதற்கு இல்லத்தில் நடத்தப்பெறும் அறம் என்பது பொருள். ‘இல்’ என்ற ஐந்தாம் வேற்றுமை உருபின் மூலப்
பொருளிலேயே இல்லம் என்பதன் ‘இல்’லும்
பயன்படுகிறது. ஆங்கிலத்தில் உள்ளே என்று பொருள்படும் in என்ற சொல்லும், விடுதி எனப் பொருள் தருகின்ற inn என்ற சொல்லும் ‘இல்’ என்ற
சொல்லின் திரிபுகளே. அது போன்றதே இல்லத்தைக் குறிக்கும் ‘வீடு’ என்ற சொல்லும், ‘விடுபடுதல்’
என்ற பொருள் தருகின்ற ‘வீடு’ என்ற
சொல்லின் பொருளும் ‘இல்லம்’ என்ற
சொல்லின் பொருளும் எதிர்மாறானவை. அப்படியாயின் ‘வீடு’ என்ற சொல்லின் மூல வடிவம் இன்று
ஊர்ப்புறங்களில் வழங்கும் ‘ஊடு’ என்ற
சொல்லாகவே இருக்க வேண்டும். எனவே அகத்தும் புறத்தும், வீட்டிலும் வெளியிலும்,
உள்ளும் புறமும் என்ற சொல்லாட்சிகளிலிருந்து அகம், புறம்
என்பவற்றின் உண்மைப் பொருளை அறியலாம். அகம் என்பதற்கு ‘இல்லம்’ என்ற பொருளே பொருந்தும். எனவே மாந்தரின் அறவொழுக்கத்தை, கடமைகளை
இல்லத்தினுள்ளும் புறத்திலும் (அதாவது குமுகத்தினுள்ளும்) எனப் பகுப்பதே
சரியான அகப்புறப் பகுப்பாகும்.[1]
இவ்வாறு மனிதனின் கடமைகளை நாட்டிலிருந்து பிரித்து அகத்திற்கும் வரையறுத்து
அகத்தியலை யாத்த அறிஞனை மக்கள் அவ் வியலின் பெயராலேயே அகத்தியர் என்று
அழைத்திருந்தால் வியப்பில்லையே!
இதற்கு அரண் செய்ய இன்னுமொரு சேதியையும் கூறலாம்.
இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும், கிழக்காசிய நாடுகளிலும் பல சிவக்
குறிகளை நிறுவியவர் அகத்தியர்
என்பது கிழக்காசிய நாடுகளில் வழங்கப்படும் மரபுச் செய்தியாகும். சிவக் குறி ஆண் -
பெண் சேர்க்கையையும் ஒன்றிப்பையும் காட்டுவதாகும். இத்தகைய ஒரு குறி வணக்கத்தை
நிறுவியவனே அகத்தியலையும் யாத்தவனாக இருக்க வேண்டும். கிழக்காசிய நாடுகளில் இக் கோவிற்
பூசாரிகள் தமிழென்று அறியாமலேயே தமிழில் வழிபாடு நிகழ்த்துகிறார்கள் என்பதும்
நினைத்துப் பார்க்க வேண்டிய சேதியாகும். அங்கெல்லாம் அகத்தியரையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒரு குறியைத் தோற்ற வேண்டிய தேவை என்ன?
இடையில் மக்களிடையில் பரப்பப்பட்ட மணத் துறவுக் கருத்தை முறியடிக்கவே இக் குறி
வணக்கம் தோன்றியிருக்க வேண்டும். காரணமும் தேவையும் இன்றி மனித வரலாற்றில் எந்த
முயற்சியும் நிகழ்ந்ததில்லை என்பது நிறுவப்பட்ட உண்மை. இவ்வாறு தமிழ் நாட்டில்
புகழ் பெற்றுவிட்ட அகத்தியரின் பெயர் தமிழ்நாட்டைக் கடந்து
உலகமெல்லாம் பரவிவிட்டதெனின் அப் பெரியோன் பெருமைக்கு வேறு சான்று வேண்டுமா?
இன்னொரு கோணத்தில் பார்ப்பதாயின் அகத்தியர் நிறுவிய குறிகள் இருக்கும் இடங்கள்
அனைத்தும் கடற்கோளுக்கு முந்திய தமிழகம் என்பதாகக் கொள்ள முடியுமல்லவா?
பின்குறிப்பு: இங்கு பொதிகை என்று குறிப்பிடப்பட்டிருப்பது இன்று
நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் மேற்கு மலைத் தொடர்ச்சியின் பகுதியான மலையை
அல்ல. தமிழ் இலக்கியங்கள் கூறும் கடற்கோளின் போது முழுகிய மலைப் பகுதியையாகும்.
இன்று தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள பல ஊர்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள்
குமரிக் கண்டத்தின் பகுதிகள் முழுக முழுக அங்கிருந்து வெளியேறிய மக்கள் தங்கள்
பழைய நிலப்பரப்பில் இருந்து முழுகியவற்றின் நினைவாகச் சூட்டியவையாகும்.
எடுத்துக்காட்டு: மதுரை → மாத்ரா, கபாட புரம்
= கதவபுரம் → துவாரகை, துவார் = கதவு. தாமரபரணி, பொருனை என்ற ஆற்றுப்
பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் தமிழகத்திலும் கேரளத்திலும் குறைந்தது மூன்றுக்குக்
குறையாமல் உள்ளன. புரூனை என்ற நாட்டுப் பெயரும் பொருனையின் திரிபே என்ற கருத்தும்
உள்ளது. சுமதுரை (சுமத்ரா) என்பதற்கு மூல மதுரை என்று பொருள் கொள்ளலாம். அது போல்
சுமேரியா என்பதற்கு நன் மேரு அல்லது மூல மேரு என்று பொருள் கொள்ளலாம்.
குறிஞ்சியில் தலைமக்கள் இருவரும் தத்தம் புணர்முறைக்
குழுவின் அடையாளங்களை இனங்கண்டு தாமே கூடிப் பிரிவதும் தற்செயலாக மீண்டும்
சந்தித்தாலன்றி அவர்கள் மீண்டும் கூடாமல் தத்தம் புணர்முறையுடைய வெவ்வேறு எதிர்ப்
பாலருடன் கூடினர் என்பதும் முல்லை நிலத்தில் தலைவியைப் போன்ற குமுகத் தரமுள்ள தோழி
துணை நிற்பதும் மருத, நெய்தல் நிலங்களில் வீட்டடிமைகளான செவிலித்தாயும் அவளது
மகளான தோழியும் தொல்காப்பியத்தில் வருகிறார்கள். அகத்தியத்தின்
வழிநூலான தொல்காப்பியத்தில் காணக்கிடக்கும் களவொழுக்கத்தின்
திரிவாக்கத்தை இறையனார் அகப்பொருளில் காணவில்லை. அத்துடன் அந் நூலுக்கு நக்கீரர்
எழுதியுள்ள உரையைப் பற்றிக் கூறாத குமரிக் கண்டக் கோட்பாட்டு ஆதரவாளர்கள் எவரும்
இல்லை. அந் நூலில் தரப்பட்டிருக்கும் பாக்களையோ அவற்றுக்கு நக்கீரர் அரும்பாடு
பட்டுத் தந்துள்ள மிக மிக விரிவான விளக்கங்களையோ அவர்கள் படித்திருக்கிறார்களோ
இல்லையோ, அவை பற்றி எவரும் இதுவரை மூச்சுவிட்டதில்லை.
அகத்தியரை
குடமுனி, கும்பமுனி என்றெல்லாம் குறிப்பிடுவர். குடம் என்பதற்கு மேற்கு என்பது ஒரு
பொருள். குடம் எனும் கலன் என அதற்குப் பொருள் கொண்டு கும்பத்திலிருந்து
தோன்றியதால் கும்ப முனி என்ற பெயர் பெற்றார் என்று நம் தொன்மப் புளுகர்கள்
கதையளந்துள்ளனர். அது போல் அகத்தியக் கோட்பாட்டுக்கு மாறுபட்டு தொல்காப்பியர் சில
கருத்துகள் வெளியிட்டு அது ஒரு பெரும் கருத்துப் போரை உருவாக்கிய காலத்தில் அகத்தியரை
இழிவு படுத்த அவர் தென்னாட்டை அமிழ்த்துவதற்காக சிவனால் விடுக்கப்பட்டவர் என்றும்
அவருடைய மனைவி உலோபமித்திரையை அழைத்து வருவதற்காகத் தான் விதித்த கட்டுப்பாடுகளைத்
தன் மாணவர் தொல்காப்பியர் கடைப்பிடிக்காததால் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டு ஒருவரையொருவர்
சாவம் இட்டதாகவும் கதை கட்டியுள்ளனர்.
அகத்தியரைப்
பற்றிய ஒரு சரியான புரிதல் எய்த வேண்டுமாயின், ஏழு தாயரின் வழி வந்த ஏழு குக்குலப்
பூசகத் தலைவர்களில் பிறர் அனைவரும் மன்னர்களுடனான முரண்களால் அயற்பட்டுப் போக
அகத்திய வழியினர் மட்டும் மன்னர்களுடனும் மக்களுடனும் இணைந்து இறுதி வரை
அவர்களுக்காகப் பாடுபட்டுள்ளனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டுக்கு ஒரு தொன்மக் கதையை எடுத்துக் கொள்ளலாம்.
“தேவர்களை
வருத்திய விருத்திராசுரன் இந்திரனது வச்சிராயுதத்துக்குப் பயந்து கடலில் ஒளிக்க
தேவர் வேண்டுகோளால் சமுத்திர சலத்தை ஆபோசனஞ் செய்து அவனை இந்திரன் கொலை புரிய
மீண்டும் சலத்தை விடுவித்தவர்(திருவிளை.)”. – அபிதான சிந்தாமணி
– அகத்திய முனிவர் – 8.
நம்
தொன்மங்களில் அடிக்கடி இடம்பெறும் நிகழ்ச்சி அசுரர்கள் அல்லது அரக்கர்கள் கடலுள்
மூழ்கி பாதாலத்திற்குச் சென்று மறைந்துகொண்டனர் என்பதாகும். இது உண்மையில்
கப்பல்களில் கடல் வழி தப்பிச் செல்வதைக் குறிப்பதாகும். புவியின் உருண்டை வடிவத்தை
அறியாத நிலையில் தொலைவில் சென்று மறையும் கப்பல்களை ஏதோ ஆழத்திலிருக்கும் ஓர்
இடத்தினுள் சென்று மறைந்துவிட்டதாக அக் காலத்தில் நம்பியிருக்க வேண்டும். அவ்வாறு கடக்க
முடியாததால் கடல் என்ற பெயர் பெற்ற கடலைக் கடக்கும் வழியைக் காட்டியவர்
அகத்தியர் என்பதுதான் மேலேயுள்ள தொன்மம் தரும் செய்தியாக இருக்க வேண்டும். ஏற்கனவே
வருணன் கடலோடும் தொழிலுக்கு வழிகாட்டியிருந்தாலும் அது பெரும்பாலும் கரை மறையும் தொலைவுக்கு
உட்பட்டே இருந்திருக்கும். புவியின் தென் அரைக்கோளத்தில் மட்டும் இருந்த நிலம்
பிளவுண்டு பிரிந்த காலத்தில் தம்மை அடுத்திருந்த ஒரு நிலப்பரப்பு கொஞ்சங்கொஞ்சமாக
விலகிய நிகழ்முறையில் அப் பகுதி மக்கள் மறு பகுதிக்குச் சென்றுவந்துகொண்டிருக்கையில்
சிறுகச் சிறுக ஒரு பகுதி அடுத்ததிலிருந்து பார்க்க முடியாத தொலைவுக்கு நகர்ந்த
போது நடுக் கடலில் கப்பல் ஓட்டும் நுட்பத்தை வடித்திருக்கும் வாய்ப்புண்டு.
அவ்வாறு பாண்டியர் ஆட்சியில் தொல்லை கொடுத்த பகைவர்களைக் கடலில் துரத்திச் சென்று
வெல்லும் வகையில் ஒரு கப்பல் படை உருவாக அகத்திய மரபினர் வழிகாட்டியதை இக் கதை
காட்டுகிறது என்று கொள்ள இடமிருக்கிறது.
தமிழர்கள்
நடுக்கடலில் கப்பல் விட்டவர்கள் இல்லை, பார்வையிலிருந்து கரை மறையும் தொலைவுக்கு
விலகாமல், அதாவது ‘கரையை அணைத்தபடி’ கடலோடியவர்களே அவர்கள், பருவக் காற்றுகளை
இனங்கண்டு நடுக்கடலில் கப்பல் விடும் உத்தியை உலகில் முதன்முதல் வகுத்தவன்
கிரேக்கனான இப்போலாசு என்பவனே என்ற கருத்து வரலாற்றாளர்கள் நடுவில்
உள்ளது. ஆனால் தென்னிந்தியக் கடற்கரையிலிருந்து மத்தியதரைக் கடற்கரை எனப்படும்
நண்ணிலக் கடற்கரையிலிருந்த சின்ன ஆசிய(ஆசியா மைனர்)ப் பகுதியில் கி.மு.1600க்கு
முன்பே குடியேறிய பினீசியர்கள் எனப்படும் உலகின் அறியப்பட்ட மிகப் பெரும்
கடலோடிகள் வாசுக்கோடகாமாவுக்கு முன்பே பண்டை ஏகுபதிய அரசன் ஒருவனின் விருப்பத்தின்
பேரில் நன்னம்பிக்கை முனையைக் கடந்து கப்பலோட்டியுள்ளனர்[2].
ஆனால் நம் கழக நூல்
தொகுப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் இங்கு வந்ததற்குத்தான் சான்றுகள் உள்ளனவே அன்றி
தமிழகக் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய செய்தி எதுவும் இல்லை. அகத்துறையில் பிரிவு
எனும் பாலைத்திணையில்தான் மிக அதிகமான பாடல்கள் இருப்பதாகக் கூறும் பண்டிதர்
வ.சுப.மாணிக்கம் அவர்கள் கடல் மேல் பிரிவு பற்றி ஒரேயொரு பாடல்தான் இருப்பதாக தமிழர்
காதல் என்ற தன் பண்டிதர் ஆய்வேட்டில் குறிப்பிடுகிறார். ஆனால் காப்பியங்களான சிலப்பதிகாரம்,
மணிமேகலை ஆகிய இரண்டுடன் புத்த சாதகக் கதைகளும் கடலோடிய புகார் நகர வாணிகர்களைப் பற்றித்
தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
வாணிகர்களின்
வளர்ச்சி தங்கள் கட்டற்ற மேலாளுமைக்கு அறைகூவலாக வளர்ந்துவிட்டது கண்டு வாணிகர்களை
ஒடுக்க அரசர் – பூசகர் கூட்டணி எடுத்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதிதான் அவர்களைப்
பற்றிப் பேசிய பாக்களைக் கழக நூல் தொகுப்பிலிருந்து அகற்றியது. இன்னொன்று கடல்
மேல் செல்வோரை இழிந்தோராக ஒதுக்கிவைத்தது. இந்த ஒடுக்கல் இந்தியா முழுமையும்
இருந்தது. 20ஆம் நூற்றாண்டில் காந்தியை
குமரி முனையிலிருக்கும் குமரியம்மன் கோயிலுக்குள் நுழையவிடாமல் இதுதான்
தடுத்தது.
இந்த ஒடுக்கல்தான்
சின்னஞ்சிறு நாடுகள் கூட நம் கடற்கரையைப் பற்றி நாட்டையும் கைப்பற்றும் அளவுக்கு
நம்மைக் கையாலாகாதவர்களாக ஆக்கியது, இன்றும் ஆக்கிக்கொண்டிருக்கிறது.
நம் நாட்டில்
வழிப்பறிக் கொள்ளையர்க்கு குமுகத்தில் ஒரு ஏற்பு இருந்தது போல் சீனத்தில் 20ஆம்
நூற்றாண்டில் இருந்ததாக Peony என்ற தன் புதினத்தில் பேர்ல் எசு பக் காட்டியுள்ளார்.
யூதர்களான கதைத் கதைத் தலைவனின் குடும்பத்தினர் பேரரசரைச் சந்திக்க தலைநகருக்கு
வரும் வழியில் அவர்களுக்கு இடையூறு எதுவும் நேர்ந்துவிடாது பார்த்துக்கொள்ளுமாறு
கொள்ளையர் தலைவர்களுக்கு பேரரசர் ஆணை விடுக்கிறார். நாம் மேலே[3]
குறிப்பிட்ட முத்துப்பட்டன் கதையில் அப்போதைய ஆட்சியாளர்கள்
வழிப்பறியை ஏலம் விட்டிருந்தனர் என்று பேரா.வானமாமலை பதிப்புரையில்
குறிப்பிட்டிருக்கிறார்.
[1]
இது இவ்வாறிருந்தது எனக் கூற முடியாது,
அகத்தாற் சுவைத்து இன்புறுவதுதான் அகம் என்பதன் வரையறையென்றால் இத்தனை அகத்துறைப்
பாடல்கள் எவ்வாறு தோன்றியிருக்க முடியும்?
[2] இவர்களைப் பற்றி
அறிய எசு.வி.எசு.இராகவன் என்பார் எழுதியுள்ள எராடட்டசு என்ற நூலையும்
சியார்சு தாமசு என்பார் எழுதியுள்ள Athens
and Aeschylus என்ற நூலையும் பார்க்க.
[3] பக்.41
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக