18.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 14

11. வானம் பார்த்த வாழ்வு!
(தோரா. தி.மு. 1,00,000 - 50,000)
            ஓர் ஆற்றின் கரை. அதன் ஓரத்தில் படகுத்துறை, மரக் கட்டைகளை நட்டுக் கற்களை அடுக்கி ஓர் ஏற்றுதுறை அமைக்கப்பட்டுள்ளது. நீர் ஓரத்திலிருந்து ஆற்றின் கரைக்கு ஏறுவதற்கு அகலமான படிகள் செய்யப்பட்டுள்ளன. அங்குப் பல ஆடவர்கள், பெரும்பாலோர் இளைஞர்கள், அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பக்கத்தில் மரத்தாலும் எலும்பாலும் செய்யப்பட்ட பலவகைப் போர்க் கருவிகளை வைத்திருக்கின்றனர். ஒருபுறம் பல கொழுத்த காளை மாடுகள் நிற்கின்றன.
               
            நண்பகல் சாயும் வேளை, ஆற்றின் கீழேயிருந்து தண்ணீரில் ஏதோ அடிப்பது போன்று ஒலியுடன் அதன் தாளத்துக்கு இசைய பல குரல்களில் பாடலும் கேட்கின்றது. இடையே ரிரண்டு பெண் குரல்களும் கேட்கின்றன. இப்போது ஒரு படகு நம் கண்ணுக்குத் தென்படுகிறது. முன்பு நாம் பார்த்த படகுகளைவிடப் பெரிது. நடுவில் ஒரு கம்பம் நடப்பட்டு அதில் ஒரு விலங்குத்தோலின் ஒரு முனையை நார்களைக்கொண்டு கட்டி மறுமுனைகளைப் படகின் இருபுறங்களிலும் இழுத்துக் கட்டியிருக்கிறார்கள். நம்மை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் காற்று அத் தோலை உப்ப வைத்துப் படகைக் கைத் துடுப்புகளால் செலுத்திக் கொண்டிருக்கும் படகிலிருப்போருக்கு உதவுகிறது.

            படகு கண்ணுக்குத் தெரிந்ததும் துறையில் அமர்ந்திருப்போரெல்லாம் எழுகின்றனர். அதோ வந்துவிட்டது! என்று மகிழ்ச்சிக் குரலெழுப்புகிறார்கள். படகிலுள்ளோரும் மறுமொழியாக மகிழ்ச்சிக் குரலெழுப்புகிறார்கள். படகு துறையினருகில் நெருங்குகிறது. அதற்குள் படகிலிருந்தவர்கள் கம்பத்திலிருந்து தோலை (பாயை) பக்கங்களில் இழுத்துக்கட்டப்பட்டிருந்த நார்களை அவிழ்த்துவிடுவிக்கிறார்கள். படகு, துறையை அடைந்ததும் கரையில் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு நார்வடத்தின் மறுமுனை படகினுள் எறியப்பட்டது. படகிலிருந்து ஒருவன் வடத்தைப் படகின் ஒரு கட்டையில் கட்டுகிறான்.

            படகில் மீ்ன்கள், கருவாடு, ஓலைக் கீற்றுகள், பழங்கள், கிழங்குகள், சங்குகள், ஆடுகள், பொருட்கள் நிறைந்த தோல்பைகள், வெற்றுத் தோல்கள் முதலியவை இருக்கின்றன. பொருட்களைப் படகில் வந்தவர்கள் எடுத்துக்கொடுக்கக் கரையில் இருப்பவர்கள் வாங்கித் துறையில் வைக்கிறார்கள். எல்லாப் பொருட்களையும் இறக்கியாயிற்று. இப்போது இரு குழுவினரும் சேர்ந்து சுமந்து அவற்றைக் கரைமீது நின்ற காளைகளின் மீது ஏற்றுகிறார்கள்.

            அனைத்துப் பொருட்களையும் ஏற்றி முடிந்ததும் படகில் வந்தவர்களுள் தலைவன் போன்ற தோற்றமுடைய ஒருவன் கரையிலிருந்தவர்களின் தலைவனைப் பார்த்துச் சாத்தா உங்கள் பண்டங்கள் எங்கே? என்று கேட்கிறான். இன்று எங்கள் சேரியில் விழா எடுக்கிறோம். நீங்கள் அங்கு வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு தங்குங்கள். திரும்பும்போது உங்களுடன் பண்டங்களைத் துறைக்குக் கொண்டு சேர்க்கிறோம் என்கிறான் சாத்தன். உங்கள் சேரி இங்கிருந்து மிகத் தொலைவல்லவா? என்கிறான் படகுத் தலைவன்.
                                     
            இல்லை நாய்க்கா! அரை நாழிகைதானே! நீ தான் எங்கள் சேரிக்கு இதுவரை வந்ததில்லையே! புறப்படுவோமா? நாய்க்கன் தன் கூட்டத்தினரைக் கூட்டிக் கொள்ள பொதி மாடுகளுடன் கூட்டம் புறப்படுகிறது.

            படகில் வந்த இரு பெண்களும் இளம்பெண்கள். அவர்களைப் பார்த்தால் இன்னும் மகப்பேறடைந்தவர்களாகத் தோன்றவில்லை. ஏதோ ஒரு தோல் ஆடைகொண்டு மார்புகளை ஓரளவு மறைத்துக் கட்டியிருக்கின்றனர். கைகளில் சங்கை அறுத்து வளைகளாகப் போட்டிருக்கின்றனர். கழுத்தில் சில தழைகளையும் மலர்களையும் மாலைகளாகப் போட்டிருக்கின்றனர். தலையிலும் மலர்களைச் சூடியிருக்கின்றனர்.

            இருவரிலும் கவர்ச்சியுள்ளவளாகத் தோன்றிய பெண் தன்னுடன் படகில் வந்த ஓர் இளைஞனை ஒட்டியபடி வருகிறாள். அவள் கண்கள் சாத்தன் கூட்டத்தில் உள்ள ஓர் இளைஞனை அடிக்கடிப் பார்த்துத் திரும்புகிறது. அவ் விளைஞனும் இவள் பார்வையால் கவரப்பட்டுச் சிறிது சிறிதாக இவர்களை நெருங்குகிறான். இவன் கேட்கும் தொலைவில் வந்ததும் அப் பெண் தன்னுடன் வந்தவனை நோக்கி, அண்ணா! என்ன விழா நடக்கிறது? என்று கேட்கிறாள். அண்ணன் என்று அழைக்கப்பட்டவன் சாத்தைச் சேர்ந்தவனுக்கு ஏற்கனவே தெரிந்தவன் போலும். கருங்கையா! உங்கள் சேரியில் என்ன விழா?

            அது பெரும் கதை. நாங்கள் எவ்வாறு இவ்வளவு தவசங்களை உங்களுக்குக் கொடுக்க முடிகிறது என்ற மறையம் இதில்தான் அடங்கியிருக்கிறது.

சொல் கருங்கையா! நடை வருத்தமும் தெரியாமலிருக்கும்.

            கேள் சுருளா! என்று தொடங்குகிறான். கருங்கையன் சொல்வதில் அவ் விளம் பெண்ணுக்குச் சில சொற்கள் புதியனவாக இருக்கின்றன போலும். அவ்வப்போது சுருளனை ஐயங்கேட்டுத் தெரிந்துகொள்கிறாள். கருங்கையன் கதையைக் கூறுகிறாள்: நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் மாலை நேரம். எங்கள் சேரியில் அனைவரும் ஆவலோடு காத்திருந்தோம். சேரியின் பக்கத்திலிருந்த காட்டினுள்ளிருந்து எங்கள் சேரியைச் சேர்ந்த நாலைந்து பேர் ஆண்களும் பெண்களும் வந்தார்கள். அவர்கள் தலைகளில் விலங்குத் தோல் மூட்டைகளைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் இடைகளில் ஆடையெதுவுமில்லை. தலை மேலிருந்த மூட்டைகள் நனைந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. சற்று முன் அவர்கள் வந்த திசையிலிருந்து இடிமுழக்கத்துடன் மின்னல் ஒளியும் தெரிந்தது. மழை பொழிந்தது போலும். அவர்கள் அருகில் வந்ததும் நாங்களெல்லாரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு மூட்டைகளைக் கீழே இறக்கினோம். விலங்கு எதுவும் கிடைக்கவில்லை என்றான் ஒருவன்.

            “‘முன்பு சென்ற இடத்திலிருந்த தவசங்களை யெல்லாம் வேறு யாரோ கொண்டுசென்றுவிட்டார்கள். அலைந்து திரிந்து வேறு இடத்தில் கிடைத்தவற்றைத் திரட்டி வந்தோம். மீதியை விட்டால் யாராவது கொண்டுசென்றுவிடுவார்களென்று எங்கள் ஆடைகளை அவிழ்த்து நிறைய தவசங்களை நிரப்பி வந்துள்ளோம் என்றான் இன்னொருவன். நம் இன்றைய உணவை உண்டுவிட்டு மறுநாட்களில் விலங்குகள் கிடைக்காத போது மட்டும் இந்தத் தவசங்களை உண்போம். போதாத போது நாம் வளர்க்கும் விலங்குகளையும் உண்போம் என்றான் வேறொருவன். இதற்குள் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி ஆடைகளை உதறி உடுத்துக் கொண்டனர்.

            தவசங்களை வேகவைத்து உண்ணத் தொடங்கினோம். உண்டு முடித்ததும் தவசம் திரட்டி வந்தவர்களில் இந்திரன் என்பன், எல்லோரும் நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்என்றான். எல்லோரும் அவன் பக்கம் திரும்பினோம். இப்பொழுது இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து இடி மின்னலின்றி மழை பெய்யும். நான் கொஞ்ச நாட்களாக நோட்டமிட்டு வருகிறேன். இப்படி இடி மின்னலுடன் மழை பெய்த பின்னர் இடி யின்றி அடைமழை பெய்கிறது. பின்னர் இரண்டு மூன்று பிறைகளுக்குப் பின்னர் குளிருடன் பனி பெய்கிறது. பின்னர் கடும் வெயில், தொடர்ந்து மாதத்திற்கு ஓரிரு முறை இடி மின்னலுடன் மழை பெய்கிறது. பின்னர் அடிக்கடி இடி மின்னலுடன் மழையும் தொடர்ந்து அடைமழையும் இவ்வாறாகச் சுழன்று வருகிறது.

            “‘அதோ அந்தப் பனைமரத்தின் நிழலைக் கவனித்து வருகிறேன். அதன் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கில் நகர்ந்து ஓர் இடத்தில் வந்ததும் மீண்டும் தெற்கே நகரத் தொடங்குகிறது. இது பனி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் நிகழ்கிறது. தெற்கே நகரத் தொடங்கி ஓர் இடத்தை அடைந்ததும் மீண்டும் வடக்கே நகர்கிறது. இச் சுழற்சியைக் கவனித்து இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்யும் போது நாம் தவசங்களை விதைக்கத் தொடங்கினால் தொடர்ந்து பெய்யும் அடைமழையினால் பயிர் இப்போது போன்று வாடிப் போகாமல் விளையும். நாளை நாம் கொண்டுவந்திருக்கும் தவசத்தில் கொஞ்சத்தை விதைத்தாலென்ன? என்று கேட்டு நிறுத்தினான்.
 
             கூட்டத்தினருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தனர். ஒரு கிழவி மட்டும் ஆம்! நானும் கவனித்திருக்கிறேன். இந்திரன் கூறுவது உண்மைதான். இடி மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்வதைத் தொடர்ந்து அடைமழை பெய்வது உண்மையே. நாளையே விதைக்கலாம்என்றாள். மற்றவர்களுக்கு இப்போது ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. அவர்களும் ஒப்புக்கொண்டனர். நாங்களும் மறுநாள் தவசங்களைக் எடுத்துக்கொண்டு நிலத்தில் விதைத்தோம். அந்தத் தடவை நல்ல விளைச்சல் கிடைத்தது. அதிலிருந்து எங்களுக்குப் போக மீந்ததை உங்களுடன் பண்டமாற்றுச் செய்து வருகிறோம்.

            பின்னர் இந்திரன் தொடர்ந்து நிழல் வடக்கிலிருந்து தெற்கே நகரத் தொடங்கும் நாளைக் கணக்கிட்டு இவ்வாறு இரு தடவை நிகழ்வதற்கிடையிலுள்ள நாட்களையும் அதற்குள் பிறைநிலவு தோன்றும் தடவைகளையும் கணித்து, அதற்கு ஆண்டெனப் பெயரிட்டு ஆண்டைச் சமமான பன்னிரண்டு மாதங்களாகப் பிரித்தான். நிழல் வடக்கிலிருந்து தெற்கே நகரத் தொடங்கும் நாளை, அதாவது கதிரவன் தெற்கிலிருந்து வடக்கில் நகரத் தொடங்கும் நாளில், ஆண்டைத் தொடக்கி மாதங்களைக் கணிக்கத் தொடக்கினான்.

            ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் அந் நாளை நாங்கள் சென்ற ஆண்டிலிருந்து ஆட்டபாட்டத்துடன் கொண்டாடுகிறோம். இந்திரனே விழாத் தலைவன். நாங்கள் அவனைச் சுற்றிவந்து ஆடிப்பாடிப் புகழ்வோம். இன்று அத்தகைய ஒரு நாள். நம் ஏற்பாட்டின்படிப் படகு வரும் முறையாகிய பிறை தோன்றிய நான்காம் நாளாகையால் உங்களுக்கும் இன்று அதைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது, கருங்கையன் கதையை முடித்து விட்டான். அண்ணனுக்கு அப்பால் வந்துகொண்டிருந்த வெள்ளி இப்பொழுது இரு ஆடவர்க்கும் இடையில் வந்து கொண்டிருக்கிறாள். கருங்கையன் கதையை முடித்ததும் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள்.
                                                            
            சேரியை அடைந்தாயிற்று. களியாட்டம் தொடங்கியாயிற்று. ஒரு மூலையில் ஒருவன் ஒரு மரத்துண்டில் கட்டப்பட்டிருந்த தோலில் அடித்து ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறான். அதற்கிசைய ஆண்களும் பெண்களும் கைகளைப் பற்றியவாறு ஒரு மனிதனைச் சுற்றி ஆடிக்கொண்டிருக்கின்றனர். நம்முடன் வந்த கூட்டத்தார் மாடுகளின் மீதிருந்த சுமைகளை இறக்கிவிட்டு ஓரிடத்திலமர்ந்து பசியாறிய பின்னர் தாங்களும் ஆட்டத்தில் கலந்துகொள்கின்றனர். வெள்ளி கருங்கையனுடன் கைகோத்து ஆட, அவளுடன் வந்த இன்னொரு பெண் சாத்துத் தலைவனுடன் ஆடிக்கொண்டிருக்கிறாள். படகில் வந்த ஆடவர்கள் சேரியிலுள்ள இளம் பெண்களில் ஒவ்வொருவரைப் பற்றி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் நிற்கும் மனிதன் அறுத்தெடுத்த தவசக் கதிர்களைக் கையில் வைத்து ஆடிக் கொண்டிருக்கிறான். இவன்தான் இந்திரன் போலும்.

            ஆட்டம் முடிந்த பின்னர் அனைவரும் தம் மந்தைகளிலிருந்து மாடுகளைக் கொன்று வேகவைத்த இறைச்சியுடன் வேகவைத்த தவசங்களையும் கலந்து உண்கின்றனர். உண்டு முடித்ததும் ஒவ்வொருவராகத் தத்தம் குடில்களுக்குள் நுழைகிறார்கள். விருந்தினராக வந்த ஆடவர்களுக்கு ஒவ்வொரு பெண் துணையாகிறாள். கருங்கையனும் வெள்ளியும் நெருப்பருகில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். நெருப்போம்புவோர் நெருப்பைப் புகழ்ந்து இறைச்சித் துண்டுகளை நெருப்பில் எறிந்து கொண்டிருக்கிறார்கள்.

            திடீரென்று ஒரு பெண் கூக்குரலிட்டுக்கொண்டு ஒரு குடிலுக்கு உள்ளிருந்து வெளியே ஓடி வருகிறாள். அவளுக்குப் பின்னால் ஓர் இளைஞன் ஓடி வருகிறான். வந்து அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான். இருவர் மீதும் ஆடைகளில்லை. அப் பெண் மிகக் களைத்தவளாகக் காணப்படுகிறாள். இருந்தாலும் ஆடவனின் பிடியிலிருந்து விடுப்படுவதற்காகப் போராடிக் கொண்டே உதவி வேண்டுபவள் போன்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறாள். நெருப்பருகிலிருந்த கருங்கையனும் நெருப்போம்பும் கிழவர்களும் ஓடிச்சென்று ஆடவனைப் பிடித்துக்கொள்ள வெள்ளி பெண்ணைப் பற்றி ஓரிடத்தில் அமர்த்துகிறாள். இதற்குள் குரல் கேட்டுக் குடில்களிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வருகின்றனர். வந்தவர்கள் இவர்களை அணுகி என்ன நடந்தென்று வினவுகின்றனர்.

            என் தாய் செத்துப் போய்விட்டாள். உடன்பிறந்த பெண்டிருமில்லை. எனக்குப் பெண் மக்களுமில்லை. என் மாமன்மார், உடன்பிறந்தோம், பிள்ளைகள் அனைவருக்கும் என் குடும்பத்தில் நானொருத்திதான் உள்ளேன். இதுவரை நான் பொறுத்துவிட்டேன். இன்று என்னால் முடியவில்லை. எவ்வளவு மறுத்தாலும் என்னைவிட மறுக்கிறார்கள். இதற்குமேல் செத்துபோவேன் என்று அப்பெண் சோர்ந்த மெல்லிய குரலில் கூறுகிறாள். களைப்பு மேலீட்டால் கீழே சாய்ந்துவிட்டாள். அவளை நெருங்கிப் பார்த்தால் அவள் உடலில் பல காயங்கள் காணப்படுகின்றன. அவள் தொடைகளில் அரத்தத் துளிகள் காணப்படுகின்றன.
                
            இவர்கள் கவனத்தை வேறு ஒரு குடிலிலிருந்து எழுந்த ஓர் ஓலம் திருப்பியது. வெளியே நடைபெற்ற இவ்வளவு சந்தடியிலும் அக் குடியிலுள்ளவர் யாரும் வெளியே வரவில்லை. கூக்குரல் கேட்ட குடிலினுள் ஒருவன் சென்று பார்க்கிறான். இருட்டில் கூர்ந்து பார்க்கிறான். மற்றும் ஓரிருவரும் சென்று பார்க்கிறார்கள். அங்கே ஓர் ஆடவனை இரண்டு மூன்று பெண்கள் மல்லாக்கப் படுக்கவைத்து அழுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவன் மீது ஒரு பெண் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடவன் முனகிக் கொண்டிருக்கிறான். எவர் உடலிலும் ஆடை எதுவுமில்லை. உள்ளே சென்றவர்கள் மேலேயிருந்த பெண்ணைத் தூக்கி விலக்குகிறார்கள். மற்ற பெண்களையும் இழுத்தெடுக்கிறார்கள். ஆடவன் மிக மெதுவாக முனகிக் கொண்டு கிடக்கிறான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை.

            வெளியே வந்த ஒருவன் படகில் வந்த ஒருவனிடம் விளக்குகிறான்.இக் குடும்பத்தில் பல பெண்களுக்கு ஆடவன் இவன் ஒருவனே. நாம் வெளியே பார்த்தது போன்று தான் இங்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆட்டபாட்டங்களால் வெறியுற்ற பெண்கள் ஒரே நேரத்தில் இவனிடம் நெருங்கியிருக்கிறார்கள். செத்துப்போய்விட்டான்! என்று சொல்லிக்கொண்டே குடிலுக்குள்ளிருந்து வேறொருவன் வெளியே வருகிறான். இதற்குள் பெரிய குடிலினுள்ளிலிருந்து கூட்டத் தலைவனும் அவன் குடும்பத்தாரும் வெளியே வருகிறார்கள். நடந்தவற்றைக் கேட்டறிந்துவிட்டு இது போன்று அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்றான்.
                                         
            நாயக்கன் முன்னே வந்து எங்கள் குமுகத்தில் நாங்கள் இதற்கு ஒரு முடிவு கட்டிவிட்டோம். இப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று குடும்பங்களைத் தமக்குள் புணர்முறைக் குடும்பங்களாகிவிட்டோம். இக் குடும்பங்களுக்குள் ஆண் பெண்ணை உறவுகொள்ளலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது! அதனால் இச் சிக்கல் இப்போது எழுவதில்லை என்கிறான். அப்படியே நாமும் செய்துவிட்டால் என்ன? அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இதற்குள் வெள்ளி நாயக்கனிடம் வந்து அவளும் இறந்துவிட்டாள் என்கிறாள். தலைவன் குடும்பதாருடன் கலந்து புணர்முறைக் குடும்பங்களைப் பிரிக்கிறான். இறந்துபோன இருவரையும் நெருப்பின் அருகில் கொண்டு கிடத்துகிறார்கள். நெருப்புத் தெய்வத்தை நோக்கி வாழ்த்துப் பாடல்களைப் பூசாரிகள் (நெருப்போம்புவோர்) குரலெடுத்துப் பாடுகிறார்கள். ஒவ்வொருவராகத் தத்தம் குடிசைகளுக்குத் திரும்புகிறார்கள்.

            நாம் தூங்கலாமா? கண்ட காட்சிகளால் தூக்கம் கெட்டு விட்டதா? அப்படியானால் நான் சொல்வதைக் கேளுங்கள். நெய்தல், மருத நிலத் தெய்வங்களாகத் தொல்காப்பியம் குறிப்பிடுபவர்கள் முறையே வாரணனும் இந்திரனுமாவர். இந்திரனை வேந்தனென்றும் கூறுவர்[1]. வாரணனை வணங்கியதற்கான வேறு இலக்கியச் சான்றுகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் இலங்கையில் வரலாற்றுக் காலத்துக்குச் சற்று முன்பு வாரணனுக்குக் கோவில் இருந்ததாகவும் அங்கு ஆண்டுதோறும் பெரும் விழா நடைபெற்றதாகவும் தெரிகிறது. நானிலத் தெய்வங்களுள் வாரணனே முதலாமவனாகையால் நம் சங்க இலக்கியங்களின் கால எல்லைக்கு முன்பு அவன் வழிபாடு மங்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால் அவனை மழைக்குரிய தெய்வமாக இன்று மயங்கிக் குறிப்பிடுகிறார்கள்(வருண சபம், வருண அம்பு முதலியவை)[2].

                                            
      இந்திரனின் படைக்கலன்ன்களில் ஒன்றாகக் குறிப்பபிடுவது வச்சிராயுதம் என்பதாகும். இது சுறா மீனின் முதுகெலும்பு என்றும் விளக்கப்படுகிறது. இது கடல் சார்ந்த ஒரு பொருளாகும். பெரும்பாலும் வருணனின் படைக்கலனாக இருந்து பின்னர் இந்திரன் மீது ஏற்றப்பட்ட ஒன்றாக இருக்கலாம்.
     
 ஆனால் மழையைக் குறிக்கும் தெய்வம் உண்மையில் இந்திரனே. ஏனென்றால் இவன் படைகளாக மின்னலும் முகிலும் குறிக்கப்படுகின்றன. மின்னலுக்கும் முகிலுக்கும் மழைக்குமுள்ள உறவைத் தனியாக விளக்கத் தேவையில்லை. இந்திர வழிபாடு சிலப்பதிகாரத்தில் விளக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று அது இல்லை. இந்திரன் ஊர்தி எனக் கூறப்படும் வெள்ளை யானையை உடையதும் கரும்பு மிகுந்ததுமான சாலித் தீவே(சாவகம்) இந்திரனின் இருப்பிடம் என்றும் அவர்கள் கருதுவர். நெல்லையும் கரும்பையும் இந்திரனிடமிருந்தே பெற்றுத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்ததாகக் கழக இலக்கியம் கூறும்.

            சோழன் இந்திரனுக்கு உதவியாக அவன் தலைநகரைப் பகைவரிடமிருந்து காத்து ஐந்து மன்றங்களைப் பெற்றதாகவும், பாண்டியன் இந்திரனைப் போரில் வென்று அவனுடைய முடியை உடைத்தாகவும், அவன் மாலையைத் தான் அணிந்துகொண்டதாகவும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே இந்திரன் கடவுள் அல்ல என்பது தெரியவரும். இந்திரன் பெயரில் ஓர் ஆட்சி மரபு சாலித் தீவிலோ அதன் அண்டையிலோ இருந்திருக்க வேண்டும். கடற்கோளினால் இடைப்பட்ட நிலங்கள் கடலினுள் முழுகிய போது பிரிந்திருக்க வேண்டும். புராணங்களில் கூறப்படுவது போன்று பல பெண்கள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். தொல்பழங்காலத்தில் பூசாரிகள் ஆட்சித் தலைவர்களாக இருந்த நாடுகளில் கன்னிப் பெண்கள் அவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டதாகப் பல வரலாறுகள் கூறுகின்றன.

            தவம் இருந்து இந்திரப் பதவியை அடைவதாகத் தொன்மங்களில் கூறப்படுவது கொடிவழியாக அன்றி ஏதோ ஒரு தேர்தல் முறையால் இந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது. தொல்காப்பியத்தில் ஐந்நிலத் தெய்வங்களை ஏற்றுக்கொள்வோர் இந்திரனும் வாரணனும் வேதங்களில் வழுத்தப்படுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஆரியத் தெய்வங்கள் என்று கூறி மயங்குவதேன்? இம் முரண்பாட்டைக் களைவதும் தமிழர் தெய்வங்களான இந்திரனையும் வாரணனையும் ஏத்தும் பாடல்களைக் கொண்ட வேதங்களுக்குரியவர் அயலவரல்ல என்பதை நிறுவுவதுமே நம் முகாமை நோக்கம்.

            ஆண் பெண்ணுறவுக்கு வருவோம். தாய் - மகன் புணர்முறை இருந்ததற்குக் குறிப்பிடதக்கச் சான்றுகள் வேதங்களில் இருப்பதாகக் மேலே மேற்கொள்ளப்பட்ட தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயாவின் நூல் தரும் இன்னோர் மேறகோள் கூறுகிறது[3]. நம் நாட்டில் மதனகாமராசன் கதையில் தாய் அடையாளம் தெரியாமல் மகனை மணந்ததாக ஒரு கதை உண்டு (மங்கையர்க்கரசி திரைப்படக் கதை இதன் தழுவலே). திருவிளையாடற் புராணத்தில் மா பாதகம் தீர்த்த படலம் என்று ஒன்றுண்டு. இதன்படி ஒரு காமவெறி பிடித்த பார்ப்பனப் பெண் தன் மகனையே மயக்கி இருவரும் இன்பம் துய்த்துவருகின்றனர். இவர்கள் கள்ளக் களியாட்டத்தை ஒரு நாள் கணவன் பார்த்துவிட்டான். அவன் பார்த்துவிட்டதைத் தாயும் மகனும் அறிந்துகொண்டனர். எனவே தாயின் ஏவலில் மகன் தந்தையைக் கொன்றுவிடுகிறான். தந்தையைக் கொன்றதற்காக அல்ல ஒரு ‘பார்ப்பானைக் கொன்றதற்காக, பிரமகத்தி என்னும் கரிசு மகனைப் பற்றிக்கொள்ள அதனைத் தொலைப்பதற்கு மகன் சிவன் கோயிலை மும்முறை வலம் வந்தவுடன் கரிசு நீங்கிச் சிவனருள் கிட்டுகிறது. இந் நிகழ்ச்சிகளைத் தாய் - மகன் புணர்முறை இருந்தது என்பதற்குச் சான்றுகளாகக் கொள்ள முடியாது.

            கிரேக்க இலக்கியத்தில் டிப்பசு என்பவன் கதையொன்றிருக்கிறது. இவன் பிறந்த போது, இவன் தந்தையைக் கொன்று தாயை மணம்புரிவான் என்று தேவமொழி கூறவே அரசனான தந்தை தேரோட்டியிடம் குழந்தையைக் கொடுத்துக் கொன்றுவிட்டு வருமாறு கூறுகிறான். ஆனால் குழந்தை கொல்லப்படவில்லை. அண்டை நாட்டரசன் குழந்தையை எடுத்துச் செல்வதைத் தேரோட்டி காண்கிறான். குழந்தை வளர்ந்ததும் தான் தந்தையைக் கொன்று தாயை மணம்புரிவான் என்று தேவமொழி மூலம் அறியவே, வளர்த்தோரைப் பெற்றோர் எனக் கருதி நாட்டைவிட்டு வெளியேறுகிறான். வரும் வழியில் உண்மைத் தந்தை எதிரில் தேரில் வர, இருவருக்கும் சண்டை மூள, தந்தையைக் கொன்றுவிட்டுத் தலை நகரை அடைகிறான். வந்த நகரில் ஒரு பூதம் நுழைந்து ஒரு கேள்வியைக் கேட்டு விடை கூற இயலாதவர்களை நாள்தோறும் தின்று வருகிறது. இறுதியில் டிப்பசு கேள்விக்கு விடை கூறுகிறான். மக்கள் அவனை அரசனாக்குகின்றனர். முன்னால் அரசன் மனைவி - ஒடிப்பசின் உண்மைத் தாய் அவனுக்கு மனைவியாகிறாள். இரு குழந்தைகளும் பெறுகிறாள். நாட்டில் பிணியும் பஞ்சமும் தோன்றுகின்றன. தந்தையைக் கொன்று தாயை மணந்தவன் ஆள்வதால் வந்த விணை என்ற மக்களுக்குத் தெய்வமொழி கூறுகிறது. தேரோட்டி நடந்தவற்றைக் கூறுகிறான். அரசி நான்று கொண்டு சாக அவளுடைய வளையல்களால் கண்களைக் குத்திக்கொண்டு குருடனாகிறான் டிப்பசு. மருத்துவத் துறையில் தம்மைவிட அகவை முதிர்ந்த பெண்களை அதிகமாக விரும்பும் ஆடவர்களின் மனக்கோளாற்றை ஒடிப்பசு கோளாறு என்பர். இதுவும் தாய் - மகன் புணர்முறை இருந்தது என்பதற்குச் சான்றாக இல்லை. இந்த முறைகள் மிகக் குறுகிய காலமே இருந்துவிட்டு நடைமுறைச் சிக்கல்களால் மறைந்து போயிருக்க வேண்டும். ஆனால் உடன்பிறந்தார் மணம் புணர்ந்தற்குச் சான்றுகள் உள. ஏகுபதியில் உள்ள பரோவர்கள் தம்முடன் பிறந்த பெண்களையே மணந்தனர் என்பது வரலாறு. இத்துடன் நம் நாட்டு வரலாற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. காஞ்சி முதிய  சங்கராச்சாரியார் (சந்திர சேகரேந்திர சரசுவதி) இராமன் மரபுக்கும் ஏகுபதியார் மரபுக்கும் தொடர்புண்டு என்று வாதிடுவார். இதற்கு இராம்சீசு என்று முடியும் அவர்கள் பெயரைச் சான்று காட்டுவார். அதே போன்று இராமனும் தன் உடன்பிறந்தாளையே ஏகுபதி பரோவர்களைப் போல் மணந்தான் என்று கூறத்தக்கச் சான்று ஒன்று உளது.

            ஆம்! புத்த சாதகக் கதைகளில் கூறப்படும் ஓர் இராமன் கதையே இது. இதன்படி இராமனும் சீதையும் உடன்பிறந்தோராம். தந்தையின் ஆணைப்படி நாட்டைவிட்டுப் பதினான்கு ஆண்டுகள் காட்டில் உறைந்துவிட்டு மீண்டும் நாடு சென்று மணம் புரிந்து ஆண்டனராம். இராமாயணப் போரே இக் கதையில் இல்லையாம். இந்த அடிப்படையில் பார்த்தால் உடன்பிறந்தாரிடையில் புணர்முறை இருந்த காலத்தில் ஏகுபதியர்கள் நம் நாட்டைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதலாம். மேலும் அராபியர்கள் உடன்பிறந்தவர்களுக்குள் மணமுடிப்பதில்லையானாலும் ஒன்றுவிட்ட உடன்பிறப்புகளுக்குள் இன்றும் மணம் முடிக்கின்றனர்[4]. நம் நாட்டு இசுலாமியர்களும் இதைப் பின்பற்றுகின்றனர்.

            இனி ஆண்டும் மாதமும் குறித்துக் கூறுகிறேன். மாந்தன் வானமண்டலத்தில் கண்ணால் பார்க்க முடிந்ததும் தேய்வும் வளர்ச்சியுமாகத் தெளிவான மாற்றங்களைக் காட்டுவதுமாகிய நிலவைக் கொண்டே முதன்முதலில் இரவு - பகலை விடப் பெரிதாகிய காலவரையறையைச் செய்தான். இன்றும் யூதர், முகமதியர் ஆகியோர் பிறைநிலவைக் கொண்டு பிறைமாதங்களைக் கணக்கிடுகின்றனர். இன்று தமிழ்நாட்டில் கதிரவன் நகர்வைக் கொண்டு ஆண்டும், முழுநிலா கூடும் ஓரையின் முதல் நாண்மீனின் பெயரால் மாதமும் கணக்கிப்படுகின்றன. பங்குனி - உத்திரம், சித்திரை - சித்திரை, வைகாசி - விசாகம், ஆடி - பூராடம், புரட்டாசி - பூரட்டாதி, ஐப்பசி - அசுவினி, கார்த்திகை - கார்த்திகை போன்றவை சில சான்றுகள்,
                        
            இந் நாண்மீன்களின் எல்லைக்குள் வரும் வெள்ளுவா (நிறைமதி) நாட்களைக் குறிப்பிட்ட மாதத்துக்குள் டக்க வேண்டுமென்பதற்காகவே தமிழ் மாதங்களுக்கு 28 முதல் 32 நாட்கள்வரை, ஆங்கில மாதங்களைப்போல் நிறுவப்படாமல், கண்டபடி நாட்கள் மாறுபட்டு உள்ளன. மதி என்ற சொல்லிலிருந்து பிறந்த மாதம் என்ற சொல்லும் திங்கள் என்ற சொல்லும் நிலவுக்கும் மாதத்துக்குமுள்ள உறவை வலியுறுத்தும்.

            ஆங்கில மாதமும் தமிழ் மாதமும் ஏறத்தாழ 13 நாட்கள் வேறுபாடுகொண்டவை. 18ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவிலும் இந் நூற்றாண்டுத் தொடக்கம்வரை உருசியாவிலும் ஆண்டுப் பிறப்பு 13 நாட்கள் முன்னமேயே(அதாவது இப்போதைய திசம்பர்த் திங்கள் 19ஆம் பக்கலிலேயே) கணக்கிடப்பட்டது. அப்போது இவ் வேறுபாடு ஏறக்குறைய 5 நாட்கள். இவ் வேறுபாட்டைப் புறக்கணித்தால் கிறித்துவ ஆண்டும் கதிரவனின் பயணத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டிருக்கிறது என்று தெளியலாம். தமிழாண்டும் தை மாதத்திலிருந்தே கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இடையில் பகலவன் நிலநடுக்கோட்டுக்கு வரும் நாளிலிருந்து (சித்திரை) கணக்கிடத் தொடங்கியிருக்கின்றனர்.
                                                               
            நிலவின் ஓட்டத்திலிருந்து கணக்கிடப்படுவது போன்று இன்னொரு மாதமும் உண்டு. இதுதான் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சியைக் கொண்டு கணக்கிடப்படுவது. இது ஏறக்குறைய 28 நாட்களைக் கொண்டதாகும். குழந்தை கருவுற்றதிலிருந்து பிறப்பதற்குப் பத்து மாதங்கள் எனப்படுவது 28 நாட்களைக் கொண்டதாகும். குழந்தை கருவுற்றதிலிருந்து பிறப்பதற்குப் பத்து மாதங்கள் எனப் படுவது 28 நாட்களைக்கொண்ட இம் மாதங்களையே. முந்தித் தவமிருந்து முந்நூறு நாள்சுமந்து என்று பட்டினத்தார் பாடியிருப்பதும் இன்றைய திரைப் பாவலர்கள் பாடுவதும் இம் மாதங்களுக்கும் பொதுவழக்கிலிருக்கும் மாதங்களுக்குமிடையிலுள்ள வேறுபாட்டை அறியாமையினாலேயே ஆகும்.

பின்குறிப்பு: கடற்கரையில் வாழ்ந்த மக்களுக்கு பிற மக்களை விட வான் பொருட்களை, அதிலும் குறிப்பாக கதிரவனை அது கிழக்கில் தோன்றும் போது அல்லது மேற்கில் மறையும் போது நோட்டமிடும் வாய்ப்பு மிகுதி. அத்துடன் தாங்கள் வாழ்ந்திருக்கும் நிலப் பரப்பின் காரணமாக கடலில் செல்லும் தேவையும் வாய்ப்பும் மிகுதி. எனவே அவர்களால் எந்தத் தடங்கலுமின்றி வான் பரப்பை நோட்டமிட இயன்றது. இதனால் புவி, வான் பொருட்கள் ஆகியவற்றின் இடையிலுள்ள உறவுகளையும் ஒன்றன் மீது மற்றதற்குள்ள தாக்கத்தையும் பிறரை விட எளிதாகவும் மிகுதியாகவும் கண்டுணர முடிந்தது. இந்த அறிவு அவர்களின் வாழ்நிலையையும் பண்பாட்டையும் உயர்த்தி அண்டையில் வாழ்ந்த தத்தம் குக்குலத்தாரிடமிருந்து சிறிது சிறிதாக அயற்படுத்தியது.  அவர்களின் வானியல் அறிவின் ஒரு முகாமையான கட்டம் கதிரவன் தன்னைத் தானே ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலமாக புவியிலிருந்து பார்க்கத் தோன்றும் 27 சொச்சம் நாட்களும்[5] அந்த நாட்கள் ஒவொன்றிலும் கதிரவன் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்காக வானிலிருந்த பொருத்தமான விண்மீன் கூட்டங்களை இனம்கண்டதுமாகும்[6]. இதைக் கண்டவன் வருணன் எனப்படும் வாரணனே[7]. அதனாலேயே அவன் நெய்தல் நிலத் தெய்வமாகி பழைய 7 குக்குலத் தெய்வங்களை அகற்றி குக்குல அடிப்படைக்கு எதிரான, நிலம் சார்ந்த தெய்வ வழிபாடு தோன்றக் காரணமானான்.

            ஆண்டு என்ற கால அலகு முதலில் நிலவின் ஒரு சுழற்சி அதாவது புவியிலிருந்து பார்க்க ஏறக்குறைய 27½ நாட்களாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால்தான் யூத மறையில் ஆதாம் போன்ற தொட்டக்க கால மனிதர்களின் அகவை 900 வரை கூறப்படுகிறது. பின்னர் ஒவ்வொரு சுழற்சியின் போதும் இரவில் நிலவின் பின்னணியில் வானில் மாறி மாறி வரும் விண்மீன் கூட்டங்களை வைத்து 12 மாதங்களின் சுழற்சி கொண்ட ஓர் ஆண்டுமுறையை வகுத்திருக்கிறார்கள். அதில் மாதங்களின் தொடக்கமாக காருவாவுக்குப் பின் நிலவு கண்ணுக்குத் தெளிவாகத் தோன்றும் மூன்றாம் பிறையை நிறுவியிருக்கிறார்கள். இன்றும் முகம்மதியர்களும் யூதர்களும் அவ்வாறே கணக்கிடுகின்றனர். அதற்கேற்ப நாளின் தொடக்கத்தையும் கதிரவன் மறையும் நேரத்திலிருந்தே கணக்கிடுகிறார்கள். நம்மிடையிலே கூட மூன்றாம் பிறையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உண்டு.

            இந்த ஆண்டுமுறையும் மக்களின் தேவைகளுக்கு முழு நிறைவைத் தரவில்லை. அதாவது, வேளாண்மைக்கு அடிப்படையான பருவகால மாற்றங்களைத் தடம்பிடிக்க முடியவில்லை. இந் நிலையில்தான் கதிரவனின் தென் – வடல் செல்கைகளை நோட்டமிட்டு 365 சொச்சம் நாட்கள், 12 மாதங்கள் கொண்ட ஒரு ஆண்டுமுறையைத் தமிழர்கள் வகுத்தனர். இதுதான் ஏகுபதிக்குச் சென்று அங்கிருந்து சூலியர் சீசரால் உரோமைக்குக் கொண்டுசெல்லப்பட்டு கிறித்தவ ஊழியாக மாறியது. அப்போது நம் பொங்கல் திருநாளும் கிறித்தவர்களின் சனவரி மாதப் பிறப்பும் ஒரே நாளாக இருந்தது. சித்திரை ஒன்றாம் நாளில் நம் நாட்டு வாணிகர்கள் ஆண்டைய வரவு - செலவுக் கணக்குத் தொடங்கிய அதே நாளில்தான் ஐரோப்பியர்கள் ஏப்பிரல் முதல் நாள் தங்களின் ஆண்டைய வரவு – செலவுக் கணக்கைத் தொடங்கினர். இதை அறிந்த 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமன் கிறித்துவ தலைமைக் குருவாகிய போப்பரசர் கிரிகோரி என்பவர், Precession எனப்படும் விழு முன்னுறுதலின் விளைவு என்ற வானியல் இயற்பாட்டைக் காரணம் காட்டி ஆண்டுப் பிறப்பை 10 நாட்கள் முன் நகர்த்தினார். பின்னர் வெவ்வேறு காலங்களில் ஒவ்வொன்றாக 3 நாட்களை முன் நகர்த்தி நம் ஆண்டுமுறையிலிருந்து மொத்தம் 13 நாட்கள் முன் நகர்த்தி இன்றைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளனர். காண்டாண்டிநோபிளைத் தலைமையிடமாகக் கொண்டிருந்ததும் உருசியா உட்பட சிலாவிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதுமாகிய “வேதிய”(Orthodox) கிறித்துவம் உருசியப் புரட்சி வரை சூலியர் சீசரின் பெயரிலமைந்த சூலியன் காலக்கணிப்பையே கடைப்பிடித்தது. இன்று வழக்கிலிருக்கும் ஆண்டுமுறைக்கு கிரிகோரியன் ஆண்டுமுறை என்பது பெயர்.

            கதிரவன் தென் – வடலாகச் சென்று திரும்பும் நிகழ்வைத் துல்லியமாகக் கண்டறியும் வாய்ப்பு திருப்புகை முனைகளாகிய சுறவ(மகர), கடகக் கோடுகளில் உள்ள இடங்களில்தான் உண்டு, ஏனென்றால் முறையே இவற்றுக்கு தெற்கும் வடக்கும் கதிரவன் செல்வதில்லை, அதனால் முறையே அவற்றுக்கு வடக்கிலும் தெற்கிலும் நிழல் விழுவதுமில்லை. கடகத் திருப்பத்தில் நிலப் பரப்பே பிற்காலத்தில்தான் தெற்கிலிருந்து நகர்ந்து சென்றது என்ற புவியியங்கியல் உண்மையின்படி 23½ பாகை தெற்கு அக்கக் கோட்டில் ஓடும் சுறவக் கோட்டில் வாழ்ந்தவர்கள்தாம் இந்த ஆண்டுமுறையை வகுத்திருக்க வேண்டும், அதாவது வருணன் தென் திருப்பத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.

            புவியைக் கதிரவன் சுற்றுவதாகத் தோற்றம் தரும் வட்டப் பாதையில் வருணன் கண்டு நிறுவிய நாள்மீன்கள் என்ற விண்மீன் தொகுதிகள் 27ஐயும் நிலவின் இயக்கத்தோடு இணைத்தவன் தக்கன் எனப்படும் தெக்கனாகும். தன் மகள்களாகிய அந் நாள்மீன்கள் 27ஐயும் நிலவுக்கு மணம் முடித்து வைத்தான் என்ற தொன்மக் கதை இந்த உண்மையை நமக்குப் பறைசாற்றுகிறது.  அத்துடன் யாமம் எனும் சிறு பொழுதுகளைப் பகுத்தவன் என்று கருதத்தக்கவனான எமனும் தெற்கில் வாழ்ந்தவன்தான் என்பதற்கு தெற்குத் திசையை யாம திசை என்று குறிப்பிடுவது சான்றாகும். தென்திசைக் கடவுளான காலன் என்பது காலம் என்ற சொல்லின் அடியிலிருந்து தோன்றியிருப்பது நம் காலக்கணிப்பின் அடிப்படைகள் நம் மூன்னோர்கள் சுறவக் கோட்டில் வாழ்ந்த காலத்திலேயே உருவாகிவிட்டன என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

            அது மட்டுமல்ல தொடக்கத்தில் நமது ஆண்டுமுறை கதிரவன் சுறவ ஓரை(இராசி)யினுள் நுழையும் இன்றைய திசம்பர் 21ஆம் நாளிலிருந்தது. சங்கராந்தி என்று கூறப்பபடும் நாளுக்கு அடுத்ததாகிய பொங்கல் திருநாளும் அன்றுதான் கொண்டாடப்பட்டது. பின்னர் கடற்கோளால் நேர்ந்த இடப்பெயர்ச்சியால் நம் முன்னோர் செய்த ஒரு மாற்றத்தால் 24 நாட்கள் பின் தள்ளியதால் அதுவும் 24 நாட்கள் தள்ளி இன்று சனவரி 14க்குச் சென்றுள்ளது. போப்பரசர் கிரிகோரி செய்த மாற்றத்துக்கு முன்னால் அவர்களுடைய ஆண்டுப் பிறப்பும் அன்றுதான் இருந்தது. கதிரவன் தன் செல்கையின் தென் கோடியில் இருப்பதான எண்ணத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவன்று கதிரவன் செல்கையின் வட எல்லைக்கும் அப்பாலுள்ள நாடுகளில் ஆண்டுப் பிறப்பு இருந்தது இந்த ஆண்டுமுறை நம்மிடமிருந்து இரவல் பெற்றதற்கு சான்றாகும்.

            நம் ஆண்டுமுறை 24 நாட்கள் தள்ளிப் போட்டதால் அதுவரை கதிரவன் நுழையும் ஓரைகளின் பெயரில் இருந்த மாதங்களின் பெயர் அதன் பின்னர் குறிப்பிட்ட மாதத்தில் வெள்ளுவா அன்று நிலவு இருக்கும் ஓரையில் அடங்கிய முதல் நாள்மீனில் பெயரில் வழங்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சித்திரை மாதத்தில் கதிரவன் மேழ ஓரையில் இருக்கும். வெள்ளுவா அன்று புவியிலிருந்து பார்க்க கதிரவன் இருக்கும் திசைக்கு நேர் எதிர்த் திசையில் அதாவது துலை ஓரையில் நிலவு இருக்கும். துலை ஓரையின் முதல் நாள்மீனான சித்திரையின் பெயரை அம் மாதத்துக்கு வைத்துள்ளனர்.

            கதிரவ ஆண்டுமுறையை எய்துவதற்குள் நம் முன்னோர் வேறோர் ஆண்டையும் நிறுவிக் கைவிட்டுள்ளனர். 336 நாட்களைக் கொண்ட சாவன ஆண்டாகும் அது (அபிதான சிந்தாமணி, சம்வச்சரம் பார்க்க). 27 நாள்மீன்களுடன் அபிசித்து என்றொரு நாள்மீனையும் சேர்த்து மாதம் ஒன்றுக்கு 7 நாட்களைக் கொண்ட 4 கிழமைகளுடன் 12 மாதங்களுக்கு ஓர் ஆண்டாக அது இருந்தது (12 x 28 = 336).

            வானியல் சார்ந்த கால அலகுகள் ஒன்றுக்குள் ஒன்று துல்லியமான முழு எண்களாக இருப்பதில்லை. அதை அவ்வப்போது சரி செய்ய ஐரோப்பியர்கள் சில சரிக்கட்டல்களை வகுத்துள்ளனர். நம் முன்னோரும் அத்தகைய சரிக்கட்டல்களை உள்ளடக்கியவாக நம் ஐந்திறங்களை(பஞ்சாங்கங்களை) வடித்ததிருக்கிறார்கள். அதனால்தான் சிலப்பதிகாரம் கூறும் சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன (இந்திர விழவூரெடுத்த காதை) என்ற நிலை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சென்ற பின்னரும் அப்படியே பொருந்துகிறது. ஆனால் கிறித்தவ முறையில் போல் நம் ஆண்டுமுறையிலும் எளியோரும் நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையைச் சீரமைக்க வேண்டும்.  

            கரும்பையும் நெல்லையும் இந்திரனிடமிருந்து தமிழக மன்னர்கள் கொண்டுவந்தனர் என்ற கழகப் பாடல் சான்றுகளை வைத்துக்கொண்டு கரும்பும் நெல்லும் தமிழகத்தில் இருந்ததில்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். கரும்பைப் பொறுத்த வரை நாம் பொங்கல் விழாவில் பயன்படுத்தும் கருஞ்சிவப்புக் கரும்பு(கருப்பு கரும்பு?) நம் நாட்டுக்கு உரியது. பச்சை முதலிய கடுமையான பிறவகைக் கரும்புகள்தாம் வெளியிலிருந்து வந்தவை. இவற்றில் சாறு மிகுதி. எனவே வெல்லம் காய்ச்சத் தோதானவை.

            நெல்லைப் பொறுத்தவரை சம்பா எனப்படும் வகை நெல் வெள்ளை யானை இன்றும் வாழும் தாய்லாந்திலிருந்து வந்ததாக இருக்கக் கூடும். அங்கிருந்த நகரமான சம்பாபதி என்ற பெயரில் அங்கிருந்து வந்த நெல் வகை வழங்கப்பட்டிருக்கிறது. கடற்கோளுக்குத் தப்பிய சோழர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் கரையேறிய வங்கத்தில் நிறுவிய சம்பாபதி என்ற நகரின் பெயரில்தான் காவிரிப்பட்டினத்தின் தெய்வத்துக்கு சம்பாபதி என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் என்று சில ஆய்வர்கள் கருதுகிறார்கள்.
                
            பிரடெரிக் ஏங்கெல்சு அவர்கள் கூறியது போல் காட்டு நெல் வகை அழிந்து போகவில்லை.  தமிழகத்தில் இன்றும் அவை மலைப் பகுதிகளில் உள்ளன. வாழைகளில் கூட கல் வாழை என்ற காட்டுவகை வாழைகள் உள்ளன. கல் வாழை என்ற பெயரில் உள்ள அலங்காரச் செடியிலிருந்து மாறுபட்டது இது. இதன் பழங்களில் பருத்திக் கொட்டை அல்லது பப்பாளி விதை அளவில் கல் போல் கடினமான விதைகள் நிறைந்திருக்கும். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் மட்டி என்ற வகை வாழைப் பழத்திலும் இத்தகைய விதை அரிதாக இருப்பதுண்டு. கிட்டத்தட்ட அனைத்து வகை வாழைப் பழங்களிலும் விதைகள் இருந்ததற்கான தடயமாக நடுவில் நெடுகிலும் சிறிது கருப்பான பகுதி காணப்படும்.


[1] இந்திரன் என்பான் ஓர் அரசனே என்பது பாவாணர் உள்ளிட்ட பலர் கருத்து.
[2] Varuna is omniscient. He knows the flights of birds in the sky, the paths of ships in the ocean, the course of the far - traveling wind and beholds all the secret things that have been or shall be done., Vedic Mythology, Macdonell, 26( 25 – 7, 9&11) as quoted in Lokayatha – A Study in Ancient Indian Materialism, Debiprasad Chattobadhyaya, p.629.

    கடலையே அறியாதவர்கள் என்று கூறப்படும் “ஆரியர்”களுக்கு வேதங்கள் உரியவை என்றால் இந்த விளக்கத்துக்குரியவனான வருணன் அவற்றில் எவ்வாறு இடம் பெறுகிறான்? 
[3]Harischandra the son of a king wanted a son. Narada advises him to get a son(beasts mount mother or sister  - Narada calls it the broad and auspicious path – A.B.Keith – Rig Veda Bramins, p.300 -1), மேலது பக். 637 - 8            
[4]பண்டை ஏகுபதியில் தமக்கைகள்தான் தம்பிகளை மணந்தார்கள் என்றும் தம்பிகளை நோக்கிய தமக்கைகளின் காதல் பாடல்கள் எண்ணற்றவை இருப்பதாகவும் Story of Civilisation – Vol.I – Our Oriental Heritage என்ற நூலில் வில் தூரான் குறிப்பிட்டுள்ளார்.

   மிசிரத்தாநம் – துருக்கரால் மிசுரு என்று வழங்கப்படுகிற ஒரு தேசம், தற்காலத்தில் ஐரோப்பியரால் ஈசிப்ட் என்று வழங்கப்படுகிறது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற்சென்று அத் தேசத்தராகி அந்தத் தேசத்துச் சனங்களோடு கலந்தமையால் இது மிசிரத்தாநம் என்னும் பெயருடைத்தாயிற்று.

    மிசிரம்  – கலப்பு - தமிழ்மொழி அகராதி
   
இன்றும் நம் திருமணச் சடங்குகளைக் கூர்ந்துநோக்கினால் மணமகனின் உடன்பிறந்தானும் மணமகனின் உடன் பிறந்தாளும் ஏற்கும் பங்குகள் உடன்பிறந்தார்களிடையே இருந்த மண உறவைக் குறிப்பதைப் போல் தோன்றும்.
29.உண்மையில் கதிரவன் தன்னைத் தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்வது 25 சொச்சம் நாட்களே, இக்கால இடைவெளியில் அதனைச் சுற்றிவரும் புவி சிறிது நகர்ந்து விடுவதால் இங்கிருந்து பார்க்க அது கூடுதல் காலம் எடுத்துக்கொள்வதாக நமக்குத் தோன்றுகிறது. இந்தக் காலகட்டத்தில் கதிரவனின் நடுவில் அமைந்திருக்கும் ஒரு துளையின் இரு கோடிகளும் ஒவ்வொரு மூறை புவியை நோக்கி வருகின்றன. அந் நேரங்களில் புவியைச் சூழ்ந்திருக்கும் காந்தப் புலத்தில் மாற்றம் ஏற்படுவதால் காந்தத்தில் இயங்கும் திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தும் கடலோடிகள் இடர்ப்படுகிறார்கள். எனவே இந்த இடரின் காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்ததன் விளைவே விண்மீன்களை இனங்கண்டு வரையறுத்ததன் பின்னணி. வள்ளுவத்தின் வீழ.ச்சி என்ற நூலின் இறுதியில் “கார்த்தீக்களின் பட்டியலி”ல் திரு.குணா அவர்கள் கொடுத்திருக்கும் செய்திகள் இந்த வரையறையின் தொடர்ச்சியே.     
[6] குணா, அதே நூல், தமிழக ஆய்வரண், 2008, அடிக்குறிப்பு ṩ, பக்.162.
31. Varuna fixed the sun in the sky.- Debiprasad Chattobadyaya, மேலது,பக்.651

0 மறுமொழிகள்: