30.11.08

செயமோகனின் "மத்தகம்"

திருவிதாங்கூர் நாட்டின்(சமத்தானத்தின் அல்ல - வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன்பு) இறுதிக் காலத்தில் அரசர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்த சுற்றத்தார் என்று தமிழ் இலக்கியம் கூறும் ஆள்வினையாளர்களும் ஆடிய ஆட்டங்களை ஒரு யானையின் பிடரியைக் குறியீடாக்கி சொல்லோவியமாகத் தீட்டியிருக்கும் மத்தகம்(தமிழினி நவம்பர்-2008) நண்பர் செயமோகனின் படைப்பாற்றலுக்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக்காட்டு.

அரசன் விரும்பும் ஒரு யானை அதைப் புரிந்து கொண்டு நிகழ்த்தும் கொடுமைகளும் அதற்கு ஈடுகொடுக்காமல் போனால், அரசனின் வருத்தத்துக்கு ஆளானோர் எப்போதும் எதிர்பார்த்து அஞ்சியிருந்த கழுக்கோலுக்கு இரையாக வேண்டிய கொடுமையும், கழுவேறிச் சாவதை விட யானை மிதித்துச் செத்துப் போவது மேல் என்ற எண்ணமும் அன்றைய சராசரிக் குடிமகனின் அவல வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. யானை மிதித்து இறந்தால் நொடியில் சாவு விழுங்கிவிடும்; கழுவேற்றினால், நாள் கணக்கில் ஊணின்றி நீரின்றி அணு அணுவாகச் செத்து உயிர் இருக்கும் போதே காக்கையும் கழுகும் கொத்திக் கொத்தித் தின்ன, ஓ, ஓ என்று ஓலமிட அந்த வட்டாரத்தில் அறியாமல் நுழைந்துவிடும் மனிதர்களைக் கிலிபிடித்துச் சாக வைக்கும் கொடுமை அது. நாகர்கோயிலில் இன்று மத்தியாசு மருத்துவமனை இருக்கும் பகுதியை முன்பு கழுவன்தட்டு அல்லது கழுவன்திட்டை என்று கூறுவார்கள். கழுவேற்றுதல் நின்று இரண்டு நூற்றாண்டுகள் சென்ற பின்னரும் அந்த வட்டாரத்தில் நடமாடவே மக்கள் அஞ்சினர்.

யானைப் பார்ப்பார்(பாகன்)களின் மனைவிகளின் நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பதறுகிறது. கணவன் இறந்து ஓரிரண்டு நாளிலேயே தன்னையும் தன் பிள்ளைகளையும் காப்பாற்ற இன்னோர் ஆடவனுக்குத் தயங்காமல் தன்னை ஒப்படைக்க வேண்டிய வெட்கப்பட வேண்டிய அவர்களது நிலை தொல்காப்பிய காலத்திலிருந்து இன்றுவரை நம் நாட்டில் பெண்கள் பட்டுவந்துள்ள பாடுகளின் உச்சத்தை உள்ளம் ஒடுங்கும் வகையில் படம் பிடித்துக் காட்டியுள்ள பாங்கு வியக்கத்தக்கது.

தங்களை விடத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் எதிரில் வரும் போது முலைகளைத் திறந்து போட்டுக்கொண்டு நடக்க வேண்டும் என்ற கேரளத்தின் நடைமுறை பெண்கள் மீது நம் நாட்டில் பார்ப்பனியம் எனப்படும் சாதியத்தின் வடிவத்தில் நடைபெற்ற மிகக் கொடுமையான சுரண்டலாகும். அம்பிலி என்ற பெண்ணின் வடிவத்தில் அதனையும் கோயில்களினுள் நடைபெறும் முறைகேடுகளையும் மென்மையாகக் காட்டியுள்ளார். இன்னும் கொஞ்சம் காட்டத்துடன் இதைக் கையாண்டிருக்கலாம்.

தீண்டாமை, காணாமை, கேளாமை போன்ற கொடுமைகளுக்கு உட்பாடாத நால்வரண வரம்புக்கு உட்பட்ட மக்களுக்கே இந்த நிலை என்றால் அதற்கு வெளியே, அத்தகைய கொடுமைகளுக்கு ஆட்பட்ட மக்களின் வாழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே எம் மனத்துக்குத் துணிவில்லை.

தன்னை விரும்பும் அரசனையும் தெய்வப் படிமத்தையும் தவிர வேறெவரையும் தன் மத்தகத்தில் ஏறவிடாத யானை அந்த அரசனும் மாண்டு, அரண்மனைச் சூழலும் மாறிய உடன், குறிப்பாகத் தன்னை நோக்கிக் குறிபார்த்த துப்பாக்கியைக் கண்ட பின்னர் துணிச்சலுடனும் நேர்மையாகவும் தனக்குப் பணியாற்றிய பாகனுக்குப் பணிந்து அவனைத் தன் மத்தகத்தில் ஏந்திக் கொண்டது மனிதர்கள், குறிப்பாக அரசியல்வாணர்கள் தங்கள் சார்பை அவ்வப்போதைய ஆட்சிச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதை நினைவூட்டுகிறது.

புதிய அரசனுடன் வந்து சேர்ந்த வெள்ளையர்கள், நம் நாட்டில் பழைய அரசு முறை மாறி புதிய ஒன்று உள்ளே நுழைந்ததைக் குறியீடாகக் காட்டுகிறது. ஆனால் அந்தப் புதிய ஆட்சிமுறை நிலைத்து நிற்குமா? நாம் மீண்டும் பழைய நிலையை நோக்கிப் போவதைத் தடுக்க வழியுள்ளதா என்பது இந்தக் குறும் புதினத்துக்கு வெளியே நம்மை நோக்கி நிற்கும் கேள்வி. "வரலாற்று ஆய்வாளர்" பண்டிதர் உயர்திரு. எசு.பத்மநாபன் அவர்கள் திருவிதாங்கூர் முன்னாள் அரசர்களின் பிறங்கடை(வாரிசு)களைத் தேடிப்பிடித்து குமரி மாவட்டத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அழைத்து வந்து அவர்களது முன்னோர்கள் நடத்திய "தரும இராச்சியத்"தின் சிறப்புகளை விளம்பரம் செய்து அவர்களை மக்கள் முன் அறிமுகமும் செய்வதையே முழு நேர "ஆய்வு"ப் பணியாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நமக்கு இந்த ஐயங்களும் கேள்விகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. குமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்தோடு இணைக்க வேண்டும் என்ற வேட்கையைக் கொண்டிருப்பவர்களின் தீய நோக்கத்துக்கு மக்களிடையில் ஆதரவு திரட்டுவதாக இவரது "ஆய்வுகள்" அமைந்துள்ளதைக் கண்டும் காணாமல் இருக்கும் குமரி மாவட்ட, தமிழக அறிஞர் பெருமக்களை இப்போக்கைக் கைவிட்டு அவரது செயல்களை உரியவகையில் தடுத்துநிறுத்தும் வகையில் செயல்பட வேண்டுகிறேன்.

இலக்கியத் திறனாய்விலிருந்து அரசியல் திறனாய்வுக்குள் நுழைந்துவிட்டமைக்குப் பொறுத்தருள்க. எல்லோரது இலக்கியச் செயற்பாடுகளுக்கும் அவ்வவற்றுக்குரிய நேரடியான அல்லது மறைமுகமான அரசியல் உள்ளடக்கம் உண்டு. என்னைப் பொறுத்தவரை என் அரசியலை நான் மறைப்பதில்லை.

மீண்டும் "மத்தகத்தி"னுள் நுழைவோம். நிகழ்ச்சிகளைச் சொல்லும் போது நாம் உள்ளாகும் மெய்ப்பாடு ஈடு இணையற்றது. பெரும் பேய்மழையைப் பற்றிய விளக்கத்தைப் படிக்கும் போது நாமே அந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது போன்ற பதறல், யானை மனிதர்களைத் தாக்கும் போது நாமே யானையின் தும்பிக்கையில் அகப்பட்டது போலவும் அதன் காலுக்குள் நசுங்க இருப்பது போலவும் ஒரு கிலி.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மெய்ப்பாட்டிலும் உயர்வான ஒரு படைப்பை நண்பர் செயமோகன் வழங்கியுள்ளார். கருவுயிர்க்க நாளானாலும் ஈன்றுள்ளது ஒரு கொம்பனானைக் குட்டியை.

29.11.08

செங்கொடி அவர்களுக்கு மடல்

28-11-08

அன்பு நண்பர் செங்கொடி அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் பதிவுகளை ஓரிரு நாட்களுக்கு முன்தான் பார்க்க முடிந்தது. எனக்கு வரும் மின்னஞ்சல்களையும் எனது வலைப்பக்கப் பதிவுகளையும் கையாள்பவர் நண்பர் எட்வின் பிரகாசு. இந்திய அரசு தொலைத் தொடர்பு அமைப்புத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் செலவு அவருடைய பொருளியல் நிலைக்கு அப்பாற்பட்டதுடன் அதன் செயற்பாடும் சரியில்லை என்று ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி வழி முயன்றார். தொடக்கத்தில் ஓரளவு கிடைத்த தொடர்பு பின்னர் தொய்ந்து போய் விட்டது. பின்னர் கம்பியில்லாத தொலைபேசி (WLL) மூலம் அரசுத்துறையில் உரூ3000/- செலவில் எடுத்ததும் ஊர்ப்புறத்திலுள்ள அவர் வீட்டுக்கு ஓரளவு கிடைக்கிறதே அன்றி நகரத்திலிருக்கும் எம் அலுவலகத்துக்குக் கிடைக்கவில்லை. எனவே அவர் இரவில் வீட்டுக்குச் சென்றபின்தான் அதைப் பயன்படுத்த முடிகிறது. அத்துடன் நம் ஆட்சியாளர்களின் மின்சாரக் கெடுமதி வேறு. இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவரால் வலைதளத்தையோ மின்னஞ்சலையோ பயன்படுத்த முடியாத நிலை. இவ்வளவையும் மீதுற்று அவர் எடுத்து வந்த பிறகுதான் நான் படித்தேன். ஏறக்குறைய உரூ 10,000/- வரை அவர் இதற்காகச் செலவு செய்துள்ளார். அரசுடைமை என்பது மக்கள் நலன்களை பனியாக்கள், பார்சிகளுக்கு அயலவருக்கும் விற்பதாக மாறும் நிகழ்முறையின் தவிர்க்க முடியாத விளைவுதான் இது.

இனி உங்கள் பதிவுக்கு வருவோம். திரு. சு.கி.செயகரனின் நூல் ஒரு பொன்மாற்று(பம்மாத்து). புவி இயங்கியலாளர் என்று சொல்லிக் கொள்ளும் அவர் குமரிக் கண்டக் கோட்பாட்டுடன் தொடர்புடைய ஒரேயொரு புவியியங்கியல் செய்தியைக் கூடத் தன் நூலில் தரவில்லை. எடுத்துக் கொண்ட பொருளாகிய குமரிக்கண்டம் இருந்ததாகக் கருதத் தக்க குமரி(இந்து)மாக் கடலின் நடுப் பகுதிக்கு வரும்போது ‘விரிவஞ்சி விடுகிறோம்’ என்று நழுவிடுகிறார். அவர் கொடுத்ததெல்லாம் வரலாறு, இலக்கியம், தொல்பொருளாய்வு என்ற எந்தத் துறையையும் சாராத ஒரு சிலரது ஆய்வேடுகளை மேற்கோள் காட்டியதே. இது போன்ற “படைப்பு”கள் வெளிவரும் போது அவர்கள் கூறும் “அறிவியல்” செய்திகளை அலசிப்பார்க்க முயலாமல் அவர்கள் “அறிவியல் ஆய்வு” என்று சொன்னவுடன் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வது அல்லது நழுவி விடுவது என்பது நம் படிப்பாளிகளிடையில் உள்ள ஒரு இயல்பாகி விட்டது. அதனால்தான் அறிவுத்திறன் வாய்ந்த வையாபுரியார் போன்றவர்களும் வெறும் பட்டத்தையும் பதவியையும் காட்டி மிரட்டும் செயகரன் போன்றோரும் பகட்டால் படம் காட்டும் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் இங்கு புகழ்பெற முடிகிறது. செயகரனுடைய நூலுக்கு மறுப்பாக குமரிக்கண்ட அரசியல் - காலத்தின் சுவடுகள், குழப்பத்தின் முடிவுகள் என்ற தலைப்பில் எனது குமரிக்கண்ட அரசியல் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முடியவில்லை. முடிந்த பகுதி வரை என் வலைப்பக்கத்தில் உள்ளது. படித்துப் பார்த்து தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

நன்றி
குமரிமைந்தன்.

28.11.08

அரணமுறுவல் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

நாள்: 23-08-2008

அன்பு நண்பர் அரணமுறுவல் அவர்களுக்கு வணக்கம்.

ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டறிக்கை நேற்று கிடைத்தது. நன்றி. கன்னடம் செம்மொழி ஆனால் உங்களுக்கு என்ன? தமிழைச் செம்மொழி ஆக்கி அதற்கென்று தனி அடிப்படையை வகுத்த போதே அதை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டு அடுத்தவன் மொழியைப் பற்றிய கவலை எதற்கு? தமிழ் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று உரிய நேரத்தில் உரிய வகையில் போராடாமல் ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி வருகிறது என்றதும் வரிந்து கட்டி நின்ற நம் தமிழமைப்புகளை அப்படியே போலச்செய்கிறீர்கள். நமக்கு என்ன தேவை என்று முடிவு செய்யத் தெரியாதவர்களுக்கு இயக்கங்கள் எதற்கு?

சித்த மருத்துவர் சங்கங்கள், கழகங்கள் என்று வைத்துக்கொண்டு வெறும் பதிவு பெற்றுத் தரும் தரகு வேலை செய்பவர்கள் அம்மருத்துவ முறை மக்களை ஈர்க்கும் வகையான மேம்பாடுகளை அடைவதைத் திட்டமிட்டுத் தடுத்து அம்மருத்துவ முறை சிறிது சிறிதாக மக்களிடமிருந்து அயற்பட்டு அழியச் செய்துகொண்டிருப்போரின் செயல் போன்றதே தங்களுடையதும்.

தமிழ் சிறுகச் சிறுகத் தொடங்கி இன்று மிக விரைவாக மக்களின் நாவிலிருந்து அகன்றுகொண்டிருப்பதையும் பல கல்வி நிலையங்களும் நீங்கள் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடலைப் பாடியுள்ள சுந்தரனார் பெயரில் இயங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும் கூடத் தமிழில் மாணவர்கள் பேசுவதைத் தடை செய்திருப்பதையும் கண்டுகொள்ளாமல் யாரோ விரல்விட்டு எண்ணத்தக்க ″தமிழறிஞர்களு″க்கு மட்டும் பயன் தரக்கூடிய ″இருக்கை″ வசதிக்காக இப்படி இளைஞர்களையும் ″தலைவர்களை″யும் கூட்டி நடத்தும் இந்த நிகழ்ச்சியின் பொருள் என்ன? நோக்கம் என்ன?

தாங்கள் கூறியது போல் சமற்கிருதத்துக்கு ஒதுக்கப்படுவது போல் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா மொழிகளுக்கும் ஆய்வுக்காகப் பணம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகை வைப்பதிலிருந்து எது உங்களைத் தடை செய்கிறது என்பது தெரியவில்லை.

இந்திய ″விடுதலை″க்குப் பிறகு உள்நாட்டு அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல்கள் வளர்ந்து விடாமல் தடுத்து வெளிநாட்டு இறக்குமதித் தொழில்நுட்பத்தில் தொழில் நடத்தும் பனியாக்களுக்குப் போட்டியாக எவரும் வரவிடாமல் தடுத்து இந்திய ஆட்சி மொழியாகிய இந்தியையும் ஆங்கிலத்தையும் படித்தவர்களுக்கு மட்டும் வளவாழ்வு என்ற சூழ்நிலையைக் கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேவையை உருவாக்கியதால் தாய் மொழிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. பல்வேறு மொழி பேசும் மாநில மக்களைத் திரட்டி இந்தக் கொடுமைகளிலிருந்து மாநில மொழிகளைக் காப்பாற்ற பொருளியல் - அறிவியல் - தொழில்நுட்ப விடுதலைக்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் நிகழ்காலம், எதிர்காலங்களிலிருந்து மக்களின், மாணவர்களின், இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் செம்மொழிச் சிக்கல் அல்லது மொழியைத் தனிமைப்படுத்தி அதற்காக என்று போராடுவது உண்மையில் தமிழை முற்றாக அழிக்கும் பணியாக இருக்கும். அதை நீங்கள் அறியாமையால் செய்கிறீர்கள் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. உங்கள் இந்த திசைதிருப்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் நீருரிமைகளை தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் வடமேற்கிலும் உள்ளவர்கள் பறிக்கிறார்கள். நிலத்தை நேரடியாகவே பறிக்க முயல்கிறார்கள். கிழக்கில் கச்சத் தீவைச் சிங்களனுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்துத் தமிழர்களை இந்தியப் படையும் இலங்கைப் படையும் சுட்டு வீழ்த்துகிறார்கள். தமிழ் நாட்டை ஆள்வோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணற்ற வழிகளில் தமிழக நிலங்களை அயலவருக்குப் பிடுங்கிக் கொடுக்கிறார்கள். இந்த அனைத்துக் கொடுமைகளையும் எதிர்த்து உரிய கோட்பாட்டை உருவாக்கி மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் அதிலிருந்து இங்குள்ள உணர்வுள்ள, ஆர்வமுள்ள இளைஞர்களின் கவனத்தைத் திருப்புவதாகத் தங்கள் நடவடிக்கை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். தமிழக, அல்லது இந்திய மக்களின் பொருளியல் - அறிவியல் - தொழில்நுட்ப உரிமைகளுக்காகப் போராடத் தாங்கள் ஆயத்தமானால் நாம் இணைந்து செயல்படலாம் என்று மீண்டும் ஒருமுறை உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின், தமிழ் மக்களின் நலன்கள் அனைத்தையும் அயலவருக்கு விற்றுத் தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்த கும்பலையும் வளர்த்துவரும் கருணாநிதியைப் புகழவும் பாராட்டவும் எங்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுத் திரியும் தமிழமைப்புக் கூட்டமைப்பின் நோக்கும் போக்கும் மாறாத வரை தமிழகமும் தமிழக மக்களும் வாழமாட்டார்கள், விளங்க மாட்டார்கள். தமிழும் வாழாது, விளங்காது.

இலங்கைத் தமிழர்கள் மீது உங்கள் அளவுக்குக் குறையாமல் எனக்கும் கவலை உண்டு. அதற்கும் நாம் நம் உரிமைகளுக்காகப் போராட வீறு கொண்டு ஒருங்கிணைந்து நின்றால்தான் நம் நடவடிக்கைகளால் ஈழத் தமிழர்கள் உட்பட எந்த அயலகத் தமிழனுக்கும் பயனுண்டு. இல்லையென்றால் இதுவும் இளைஞர்களைத் திசை திருப்பும் செயலாகவே முடியும்.

அன்புடன்
குமரிமைந்தன்
பொறியாளர்
நிறுவனர்: தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
மேலாண்மை அறங்காவலர்: புதுமையர் அரங்கம் (அறக்கட்டளை)
தமிழ்க் குடில், தெற்குச் சூரங்குடி (அஞ்சல்), குமரி மாவட்டம் – 629 501.
☎ இல்லம்:04652-208194 செல்பேசி:9790652850

இணைப்பு: துண்டறிக்கை

கன்னடம் செம்மொழியா?

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 22.8.2008 வெள்ளி பிற்பகல் 2.00 மணி
இடம்: தொடர்வண்டி நிலையம் எதிரில், திருநெல்வேலிச் சந்திப்பு

தலைமை : தோழர் செம்மணி
தமிழக மக்கள் உரிமைக் கழகம்

கண்டன உரை : தோழர் ப. பொற்செழியன்
வளர்மதி மன்றம்

வழக்கறிஞர் இரா. சி. தங்கச்சாமி
உலகத் தமிழ்க் கழகம்

தோழர் லோக சங்கர்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

தோழர் செந்தில் மள்ளர்
மள்ளர் மீட்புக் களம்

தோழர் இளங்கோ பாண்டியன்
தென்மொழி அவையம்

தோழர் மை.பா. சேசுராசா
தமிழர் களம்

தோழர் செ. பசும்பொன்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் ம. சுதர்சன்
தமிழ்ச் சான்றோர் பேரவை

தோழர் தமிழீழன்
பாவேந்தர் மன்றம்

தோழர் சங்க. வள்ளிமணாளன்
தெய்வத் தமிழ் வழிபாட்டு மன்றம்

தோழர் பொருநை மைந்தன்
தமிழர் கழகம்

தோழர் வேல்முருகன்
சட்டக் கல்லூரி மாணவர்

தோழர் சத்தியா
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

நிறைவுரை முனைவர் ந. அரணமுறுவல்
இந்திய - இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு

தமிழ் உரிமை காக்க

அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, திருநெல்வேலி மாவட்டம்


கன்னடம் செம்மொழியா?

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த போதே செம்மொழிகளின் கால வரையறை குறைபாடுடையது என்று அறிஞர் மணவை முசுதபா போன்றவர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். தமிழ் அறிஞர்களின் எதிர்ப்பால் செம்மொழிக்கான காலவரையறை ஆயிரம் ஆண்டு என்பது ஆயிரத்து ஐநூறாக மாற்றியமைக்கப்பட்டது.

தமிழைச் சமசுகிருதத்திற்கு இணையான தொன்மை மொழிப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்ட தமிழர்களின் குரல் இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டுப் புதிய பட்டியலில் வைக்கப்பட்டது.

தமிழ் உலக முதன் மொழி; உயர்தனிச் செம்மொழி. இருந்தும் அதற்குரிய மதிப்பை நடுவண் அரசு தர மறுக்கிறது.

செம்மொழி என்று ஒரு மொழியை வரையறை செய்ய 10 வகையான வரையறைகளை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகத்திலேயே அந்தப் பத்து வகை இலக்கணங்களுக்கும் பொருத்தமான மொழி தமிழே ஆகும். தொன்மை, தாய்மை, தூய்மை, இளமை, வளமை உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கே உள்ளது. தமிழுக்குள்ள அனைத்துத் தகுதிகளும் சமசுகிருத்ததிற்கு இல்லை. இருந்தாலும் சமசுகிருதம் நடுவண் அரசின் செல்லப் பிள்ளையாய் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடி உரூபாக்களை விழுங்கி ஏப்பம் விட்டு வருகிறது.

இந்தக் சூழலில்தான் நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த கையோடு கன்னடத்தையும், தெலுங்கையும் செம்மொழிகள் என அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

கன்னடமும் தெலுங்கும் தேசிய மொழிகள் என்பதிலோ அவை தமிழுக்குச் சமமாக இந்திய அரசால் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலோ கருத்து வேறுபாடில்லை. இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் மக்கள் தொகைக் கணக்குக்கேற்ப நூற்றுக்கணக்கான கோடி உரூபாக்களை இந்திய அரசு ஒதுக்கி அவற்றை வளர்த்தால் அதை நாம் வரவேற்கலாம்.

உலக மொழியியல் அறிஞர்கள் இந்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்துள்ளார்கள்.

செம்மொழி இலக்கணத்துக்கு எந்தவகையிலும் பொருந்திவராத தெலுங்கையும் கன்னடத்தையும் இந்திய அரசு செம்மொழிகள் என்று அறிவிக்குமானால் அது வெட்கக் கேடான செயலாகும். வேதனை அளிக்கும் செயலாகும்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத் துயிர்த்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறன்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

என்ற மனோன்மணியம் சுந்தரனார் வரிகளை நீக்காமல் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டில் உலவ விட்டிருந்தால் தமிழ் மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு விளங்கியிருக்கும்.

தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டு அதன்சேய் மொழிகளையும் செம்மொழி என்று அறிவிக்க உள்ளது பொருத்தமில்லாததாகும். எனவே, இந்திய நடுவண் அரசு கன்னடத்தையும் தெலுங்கையும் செம்மொழிகள் என்று அறிவிக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்ப் பெருமக்களே!

உலகமே வியந்து போற்றும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகளை இனியேனும் உணர்ந்துகொள்வோம்! நம் உரிமையைக் காக்க அணி திரள்வோம்!!

21.11.08

மதமும் சமயமும்

"தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தாமசு" என்ற செயமோகனின் வரைவைப் படித்தேன். 80களிலேயே திரு.தெய்வநாயகம் அவர்கள் திராவிட சமயம் இதழுடன் என்னை வந்து சந்தித்தார். அவருடைய நோக்கம் மதமாற்றம்தான் என்பதைப் புரிந்துகொண்டு அவருடன் தொடர்பை நான் ஊக்கவில்லை.

அடுத்துச் சில ஆண்டுகளில் மதுரை இறையியல் கல்லூரியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. சங்க இலக்கியம் பற்றிய ஒரு கருத்தாடல் குறித்து என்று நினைவு. அதில் நிகழ்ச்சிக் குறிப்பில் தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருக்கக் கூடும் என்று ஓர் அடிக்குறிப்பு இருந்தது. நான் சென்றிருந்தேன். ″பரட்டை″ என்ற புனைபெயர் வைத்திருந்த கிறித்துவத் ″தந்தை″ தியாபலசு அப்பாவு அமர்வை நெறிப்படுத்தினார். எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் உள்ள சில சொற்கள் தொல்காப்பியத்தில் வருவதால் தொல்காப்பியம் அதற்குப் பின் தோன்றியிருக்கலாம் என்று ஒரு கருத்தை அவர் முன்வைத்தார். அதை மறுக்கவோ எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவோ இல்லை மற்றவர்கள். நான் அதே சொற்களை இன்றும் ஆவண எழுத்தர்கள் பயன்படுத்துகின்றனர் என்று சுட்டிக் காட்டி அவர்களது நோக்கத்தின் மீது ஐயம் கொண்டு கடுமையாகப் பேசினேன். அதுதான் அவர்கள் முதலும் முடிவுமாக என்னை அழைத்தது. அன்று என்னோடு கலந்து கொண்டவர்களில் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.அக்கினிபுத்திரன் - இப்போது கனல்மைந்தன், பேரா.க.ப.அறவாணன் - பின்னாள் துணைவேந்தர் ஆகியோரை நினைவிருக்கிறது. அனைவரும் இறையியல் கல்லூரியுடன் நீண்ட தொடர்புடையவர்களாகத் தோன்றினர். க.ப. அறவாணன் மிக உரிமையோடு வசதிகளைக் கேட்டுப் பெற்றார்.

அங்கிருக்கும் போது இளைஞரான ஒரு ″திருத்தந்தை″யுடன் பேசினேன். அவர்கள் அங்கு சீருடையில் இல்லை. ஏசு தன்னை சிலுவையில் அறைந்த பின் ″தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னித்தருளுங்கள்″ என்று கூறியதாக வரும் புதிய ஏற்பாட்டை எழுதியவர் அந்த நேரத்தில் ஏசுவுடன் இருந்தவரில்லை. அவரிடம் அப்போது இருந்தவர் இன்னொருவர். அவர் எழுதிய புதிய ஏற்பாட்டில் இந்தக் கூற்று இல்லை. இந்தக் கூற்று எப்படி உண்மையாக இருக்கும் என்று நான் கேட்ட போது புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள் என்று கூறி ஒப்பேற்றினர். நல்ல திறமையானவர்களைப் பொறுக்கி நன்றாகப் பயிற்றுவித்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

1996இல் நாகர்கோவிலில் அலெக்சந்திரா அச்சகச் சாலையில் இருந்து மனித நேய மன்றம் என்ற அமைப்பின் பெயரில் கொடிக்கால் சேக் அப்துல்லா என்பவர் தொலைபேசியில் பேசினார். அதன்படி ″தமிழகத்தில் ஆரியமும் வகுப்புவாதமும்″ என்ற பொருள் பற்றிப் பேச அழைத்தனர். றா.சோகன்னா என்பவர் மடல் எழுதினார். பேரா.வே.தி.செல்லம் தலைமை. 24-3-96 அன்று கிறித்துவக் கல்லூரிச் சாலையும் தொலை பேசி நிலையத்திலிருந்து நகரவை அலுவலகம் செல்லும் சந்தும் சந்திக்கும் இடத்தில் தெற்கே கிழக்குப் பக்கம் இருக்கும் ஒரு கட்டட மாடியில் நிகழ்ச்சி நடந்தது.

″வரலாற்றில் ஆரிய இனம் என்ற ஒன்று இடம் பெற்றிருப்பது தவறானது. வேதங்களும் தொன்மங்களும் தமிழர்களுக்குரியவை. சாதிகளை உருவாக்கியவர்களும் தமிழர்களே. கற்பனையான ஆரியர்கள் மீது பழியைப் போட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. சாதிச் சிக்கலுக்கு நாம்தான் தீர்வு காண வேண்டும்″ என்று நான் பேசினேன். எடுத்துக்கொண்ட தலைப்பில் நான் பேசவில்லை என்று கூச்சல் போட்டார்கள். ஆரியம் பற்றிப் பேசச் சொன்னீர்கள் பேசினேன், வகுப்புவாதம் பற்றிப் பேசச் சொன்னீர்கள் பேசினேன்; வகுப்புவாதம் என்பது மதம் குறித்ததாக இருக்கலாம், சாதி குறித்ததாக இருக்கலாம், அல்லது பொருளியல் வகுப்புகள் குறித்தாக இருக்கலாம்; நான் சாதிகளை எடுத்துக்கொண்டு பேசினேன்; நீங்கள் நினைப்பதையே பேசவேண்டுமென்ற கட்டாயம் எனக்கில்லை என்று நான் கூறினேன். கூச்சல் குழப்பத்துடன் நிகழ்ச்சி முடிந்தது. அழைத்தவர்கள் ஒரு தேநீர் கூட எனக்குக் கொடுக்கவில்லை. இவர்களின் நோக்கமும் மதமாற்றம்தான்.

தமிழார்வலர்கள், தமிழ்த் தேசியர்கள் எனப்படுவோரின் அழைப்புகளுக்குச் சென்று பேசும்போது என் கருத்துகளை கூறத் தொடங்கியவுடனேயே சீட்டு வரும். என்னைப் பேசவிடவில்லை என்பதைக் கூட்டத்தாருக்குப் புரிய வைத்துவிட்டு இறங்குவேன்.

ஆக, இறையியல் கல்லூரியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி ஒரு நீண்டகாலத் திட்டத்தின் முதல் அடி என்று தெரிகிறது.

நண்பர் செயமோகன் கட்டுரையில் என் பெயரும் இடம் பெற்றுள்ளதால் இச்செய்திகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

இனி கட்டுரை குறிப்பிடும் கிறித்துவத்தினுள் நுழைவோம்.

1970களில் ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரும்பாலான கன்னெய் வழங்கு நிலைகளும்(Petrol Bunks) அரேபியர்களின் கைகளில் இருந்தன. அங்கு வருவோருக்கு குரானின் மொழிபெயர்ப்புகளை வழங்கினர். அது 14கோடி எண்ணிக்கை என்று படித்த நினைவு. பொதுவாக குரானை மொழிபெயர்க்க வேதிய(வைதிக) முகம்மதியம் இசைவதில்லை. அகமதியா என்ற பிரிவினர் அதைச் செய்கின்றனர். அகமதியாப் பிரிவை வேதிய முகம்மதியர் ஏற்றுக்கொள்வதில்லை. அகமதியாப் பிரிவினர்களது விளக்கம் என்னவென்றால் இறைவன் முதலில் அருளிய திருச்செய்தி அவரே விடுத்த பெருவெள்ளத்தில் அழிந்துவிட்டது. அதை நினைவில் வைத்திருந்தவர்கள் கூறியதுதான் எழுதி வைக்கப்பட்டுள்ளது, அதுவும் கிரேக்க மொழியில். இறைவன் கூறிய மூலமொழியான அராமியத்தில் அதன் மூல வடிவில் அது இல்லை. எனவே ஆண்டவன் இன்னொரு முறை முகம்மது நபிக்கு திருவாக்கருளினார். எழுதப் படிக்கத் தெரியாத நபி அவர்கள் அதைச் சொல்ல பிறர் எழுதி வைத்தனர் என்ற விளக்கத்தை இந்த அகமதியா குழுவினர் கூறுகின்றனர். ஏற்கனவே ஒரு முறை கடவுள் திருவாக்கருளியதை மீண்டும் ஒருமுறை முகம்மது நபிக்கு திருவாக்கு அருளியது ஏன் என்பதற்கான விடை இது.

இதற்கு மறுமொழி என்ன? சாக்கடல் சுவடிகள் (Dead Sea Scrolls) என்ற நூல் இதற்கு விடை தருகிறது. சோர்தான் ஆற்றின் கரையில் குன்றுகள் நிறைந்த பகுதியில் ஒரு குன்றில் ஓர் ஆள் உள் நுழையும் அளவுக்கு ஓட்டை, நிலமட்டத்திலிருந்து ஓர் ஆளளவு உயரத்தில். உள்ளே நுழைந்தால் சிறிது சிறிதாக அகன்று உள்ளே பரந்து விரிந்த ஒரு குகை உள்ளது. ஆடுமேய்க்கும் சிறுவர்கள் அதனுள் நுழைந்து கொள்கலன்கள் முதலிய பயன்பாட்டுப் பொருட்களை எடுத்து வருவார்களாம். இதைக் கண்ட தொல்லாய்வாளர்கள் உள்ளே நுழைந்து பார்த்தபோது அது ஒரு புத்த மடம் என்று கண்டார்களாம். அங்கே ஏசுவின் உடலைச் சுற்றி வைத்திருந்த துணியைக் கண்டனராம். அதில் அவரது திருவுருவத் தோற்றம் பதிந்திருந்ததாம். இந்தத் துணியைப் பற்றி ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் தாளிகைகளில் செய்திகள் வந்தன. ஏசு இளமைக் காலத்தில் சில ஆண்டுகள் காணாமல் போயிருப்பார். அவர் இங்குதான் தங்கி இருந்தார் என்று தொல்லியலாளர்கள் முடிவு செய்தனர்.

அந்த மடத்துக்குள் துணிகளில் எழுதிய பழைய ஏற்பாட்டைக் கண்டெடுத்தனராம். அது அராமிய மொழியில் இருந்ததாம். அதில் இருந்தவற்றையும் இப்போதைய பழைய ஏற்பாட்டில் இருப்பவற்றையும் ஒப்புக்காட்டி நடப்பில் இருக்கும் பழைய ஏற்பாட்டில் பிழை ஏதுமில்லை என்று நிறுவ முயன்றுள்ளது அந்த நூல். ஆண்டவர் செய்ததாக முகம்மதியர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய ″பிழைதிருத்தம்″ இதுதான். அதாவது பழைய ஏற்பாட்டின்படி கடவுள் மரணமில்லாதவனாக மனிதனைப் படைத்தார். ஆனால் சாத்தன் அறிவுக் கனியைக் காட்டி மனிதனை உண்ணவைத்து அவனை மரணம் அடைபவனாக ஆக்கிவிட்டான். இந்த வகையில் கடவுள் பேயன் எனக் கிறித்துவத்தில் பொருள்படும் சாத்தனிடம் தோற்றுப்போனார் என்றாகிறதல்லவா? இதை மறுத்துத்தான் கடவுள் ″பிழை திருத்தி″ முகம்மது நபியிடம் திருவாக்கு அருளுகிறார், தான் மனிதனை மரணம் அடைபவனாகவே படைத்ததாக, அதாவது தான் பேயனிடம் தோற்கவில்லை என்று.

ஆக, எந்த புத்தம் தமிழர்களிடம் வளர்ச்சியுறாத, செயமோகன் குறிப்புப்படி பண்டிதர் தேவகலா கூறியுள்ள தமிழர்களின் ஆன்மவியலை அழித்த, கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாத, புத்தர்களிடம் இருந்துதான் தன் கொள்கைகளை ஏசு வடித்துக்கொண்டார் என்று சாக்கடல் சுவடிகள் கூறுகிறது.

மேற்கின் வரலாற்றிலும் புனைவு இலக்கியங்களிலும் கிழக்கின் ″ஆன்மவியல்″ ஆற்றியுள்ள பங்கு பற்றிய மேற்கத்திய பதிவுகள் முகாமையானவை. எகிப்திலிருந்து துரத்தப்பட்ட மோசே ″கிழக்கே″ சென்றுதான் தன் ″ஞானத்தை″ வளர்த்துத் தம் ″மக்களை″ மீட்க வந்தார் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. ஏசு கிழக்கில் உள்ள புத்த மடத்திலிருந்துதான் தன்னுடைய ஞானத்தைப் பெற்றார் என்று சாக்கடல் சுவடிகள் குறிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டில் மேரி கரொல்லி என்ற இத்தாலியப் பெண் எழுத்தாளர் எழுதி ஆங்கிலத்தில் Vendetta(பழிக்குப்பழி) என்ற பெயரில் பெயர்க்கப்பட்ட புதினத்தின் கதைத் தலைவன் தனக்கு இரண்டகம் செய்த மனைவியையும் நண்பனையும் பழி வாங்குவதற்காகக் ″கிழக்கி″ல் சென்று மந்திரம், தந்திரம், மருத்துவம் கற்று வந்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் அலெக்சாண்டர் டூமா என்ற புகழ் பெற்ற பிரெஞ்சு புதின ஆசிரியர் எழுதிய Count - de- mont cristo(மாண்டு கிரித்தோவின் மன்னன்) புதினத்தின் கதைத் தலைவனும் தனக்குத் தீங்கிழைத்தவர்களைப் பழிவாங்குவதற்காகக் ″கிழக்கே″தான் செல்கிறான் மந்திரம், தந்திரம், மருத்துவம் கற்க. ஆக, மோசேயும் ஏசுவும் இந்தியர்களிடமிருந்து கற்ற மந்திரம், தந்திரம் போன்றவற்றை வைத்து இறும்பூதுகள்(அற்புதங்கள்) செய்து காட்டித்தான் இன்று கடவுள் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இராமலிங்க அடிகளார் வெண்கலத்தைத் தங்கமாக்கிக் காட்டி அதனைக் கிணற்றில் வீசிவிட்டு, அது வெறும் மாயை என்றாராம். அதாவது அது வெறும் செப்பிடு வித்தை அதாவது குறளி வித்தை. தெருவில் செய்து காட்டி நாம் வீசும் காசை வைத்து வயிறு வளர்க்கிறானே அதேதான். வள்ளலார் செய்ததும் அதுதான், இரமண ″மகரிசி″ செய்ததும் அதுதான். புட்டபிருத்தி சாயிபாபா செய்வது அதுகூட இல்லை, வெறும் கண்கட்டி வித்தை, அதாவது ″கைவேலை″, அதாவது தந்திரம்.

நமக்குத் தெரிய மோசேயோ ஏசுவோ அரிட்டாட்டில் போன்று மெய்யியல்(தத்துவம்) எதையும் கூறியதாகத் தெரியவில்லை. மோசே இறைவனின் ஆணைகளைச் சொல்லி மிரட்டுவார், கேட்காதவர் ஐயத்துக்குரிய வகையில் மாண்டு போவார். மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் சட்ட வடிவில் வழங்கியுள்ளார். தொன்ம வடிவில் ஒரு வரலாற்றை எழுதியுள்ளனர். எகிப்து அரண்மனை நூலகத்தில் தான் படித்த நூல்களிலிருந்து அறிந்துகொண்டவற்றை வைத்து அவர் எழுதினார் என்று எரிக் வான் டெக்னிக்கன்(Eric Von Denicken) கூறுவார். ஏசு நிறைய கதை கூறியுள்ளார். அவற்றில் அவரது கோட்பாடுகள் மறைந்துள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்து வந்த தோமா, பெரும் கல்வியோ, மெய்யியல் சிந்தனையோ இல்லாத தோமா தன் வெற்று டப்பாவிலிருந்து நீர் ஊற்றித் தமிழர்களை ஆன்மவியலில் குளிப்பாட்டித் தூய்மை செய்தார் என்று சொல்வதற்கு நிறைய துணிவு வேண்டும், பாராட்டலாம். நெஞ்சழுத்தம், கொழுப்பு என்ற சொற்களை நாகரிகம் கருதித் தவிர்க்கிறோம்.

இடைச் சொருகலாக ஒரு செய்தி; என் தந்தை இளமையில் நண்பர்களோடு மருத்துவாழ் மலைக்குச் சென்றிருந்தாராம். அங்கும் நாம் மேலே கூறியது போல மலையில் ஓர் ஓட்டை இருந்ததாம். அவர் அதனுள் ஏறி நுழைந்தாராம். உள்ளே செல்லச் செல்ல ஓட்டை அகன்றதாம். அதற்குள் வெளியே இருந்த அவரது நண்பர்கள் அவரது காலைப் பிடித்து இழுத்து வெளியேற்றி விட்டனராம். நான் சிறுவனாக இருந்த போது அவர் எனக்குச் சொன்ன செய்தி இது. இப்போதும் மருத்துவாழ் மலையில் குகைகளுக்குள் சித்தர்கள் சாவில்லாத, பசி இல்லாத வாழ்வைத் தரும் பச்சிலைக்களை உண்டு வாழ்கின்றனர் என்று சிலருக்கு நம்பிக்கை உள்ளதே. இன்றிருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அத்தகைய ஓட்டைகளுக்குள் மின்விளக்கையும் புகைப்படக் கருவியையும் செலுத்தி உள்ளே என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் என்ன?

சமணத்தையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம். அம்மணமாக ஊர் நடுவே சுற்றித் திரிந்த அநாகரிகர்களும் தங்கள் மயிரைத் தாங்களே பிடுங்கிக்கொண்ட மனநோயாளிகளுமான சமணர்களும்தாம் தமிழர்களுக்கு நாகரிகம் சொல்லித் தந்தார்கள் என்று ஐராவதம் மகாதேவன்களும் க.ப.அறவாணன், தொ.பரமசிவம் உட்பட இந்தியப் பல்கலைக் கழகக் கட்டமைப்பு மட்டுமல்ல இந்தியப் பனியா அரசும் நிறுவியே தீர்வது என்று வரிந்துகட்டிக்கொண்டு களத்திலுள்ளனர். அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்து நிற்கின்றனர். அந்த ஒரே நோக்கத்துடன் இந்திய வரலாற்றை ஆரியர் நுழைவு என்ற புனைகதைக்கேற்ப, கி.மு.2500க்கு அப்பாலும் தமிழக வரலாற்றை மகாவீரர் காலத்துக்குப் பின்னால் வருமாறு கி.மு.400க்கு அப்பாலும் போகவிடாமல் தடுத்துப் பார்க்கின்றனர். வெளிநாட்டு, உள்நாட்டுக் கழுகுகளுக்கும் வல்லூறுகளுக்கும் ஓநாய்களுக்கும் இன்று தமிழகமே ஒரே இலக்கு. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு வீணான தப்பெண்ணங்களையும் கவைக்குதவாத கற்பனைகளையும் உண்மை எனும் எரியும் நெருப்பில் வீசிச் சுட்டெரித்துவிட்டு அந்தக் கழுகுகளையும் வல்லூறுகளையும் ஓநாய்களையும் அடித்துத் துரத்தித் தமிழகத்தை மீட்க உண்மை நாட்டமும் தமிழகத்தின் மீதும் தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அன்பும் கொண்ட தோழர்களை அறைகூவி அழைக்க வேண்டிய காலம் இது.

இப்பொழுது நாம் நண்பர் செயமோகனிடம் கொஞ்சம் பேச வேண்டும். இந்திய ஆன்மவியலையும் மெய்யியல்களையும் பற்றி அவர் மிக அழுத்தமாகப் பேசுகிறார். மெய்யியல்கள் எனப்படுபவை, அதை முன்வைத்தவர்கள் காலத்துக் குமுக நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அச்சூழலுக்கு ஏற்றவாறு இயற்கை, குமுகம், மனித சிந்தனை, கடவுள் ஆகியவை பற்றிய ஒரு விளக்கமாகும். எடுத்துக்காட்டாக பத்தி இயக்கக் காலத்தில் சிவன் தன்னை அங்கிருந்து அழைத்தான் இங்கிருந்து அழைத்தான் என்று கோயில்களை நிறுவி அங்கெல்லாம் எந்த சாதியினராக இருந்தாலும் பூசாரி ஆக்கி சிவப் பார்ப்பனர்களை உருவாக்கி மக்களையும் ஒருங்கிணைத்து புத்த, சமண சமயங்களால் பார்ப்பனியத்துக்கு வந்த அறைகூவலை எதிர்கொண்டாயிற்று. இறைவன் மெய்யியலுக்கு அடங்காதவன், அவனைத் தஞ்சமடைவதே அடியவனுக்கு உய்தி என்பது போல் அரசனது அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியாது அவனுக்கு அடிபணிவதே நல்வாழ்வுக்கு வழி என்று ஆட்சியாளர்களின் துணையையும் பெற்றாயிற்று. இப்போது இந்த எழுச்சியில் மங்கிக் கிடந்த பழைய பார்ப்பனர்களை மீட்பிக்க வேண்டுமே. வந்தார் சங்கரர். ஞானம்தான் உய்திக்கு வழி, வேள்விப் பார்ப்பனர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என்று சுமார்த்தப் பார்ப்பானை சிவப் பார்ப்பானுக்கும் மாலியப் பார்ப்பானுக்கும் மேலே தூக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்.

எல்லோரும் ஒரே வகையான உயிராதன்களால் ஆனவர்கள். ஆனால் மனிதர்களிடையில் உள்ள வேறுபாடுகள் வெறும் மாயை, உருவெளித்தோற்றம். அதனால் சாதி, வருண வேறுபாடுகளைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று சமத்துவமும் கூறி அதே சங்கரர் சாதியத்தையும் நிலைநிறுத்தியாயிற்று. இதுதானய்யா மெய்யியலில் உள்ள அரசியல். சங்கரரின் இந்த நுட்பத்தை அறியாமல் அல்லது அறிந்தும் அறியாதது போல் நடித்து சங்கரர் சாதிகளின் சமத்துவம் பேசினார் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள.

சான்றுக்கு இன்னொன்று:

கோயில் நிலங்களில் பயிரிட்டு வந்த உழுகுடிகளான பள்ளர்களும் பறையர்களும் வாரம் அளப்பதை நிறுத்தி நிலங்களைத் தங்கள் சொந்தமாக்கி இருந்தனர், 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தது போல். மண்ணங்கட்டி, பரட்டை, பிச்சை என்று பெயர் வைக்க உரிமையானவர்களைத் தலைவன் தலைவியாக்கி தலைவனுக்கு அவ்வூர் தெய்வத்தின் பெயரையும் தலைவிக்கு அம்மனின் பெயரையும் வைத்து பள்ளுப் பாடல்களைப் பாடி கோயிலுக்கு வாரம் அளக்கும் சிறப்பை அழகுறப் பாடியும் பார்த்தனர். காரியம் ஒன்றும் நடக்கவில்லை. அவர்களை வழிக்குக் கொண்டுவர இராமானுசர் அவர்களுக்குத் திருக்குலத்தார் என்று பெயர் வைத்தார்(காந்தி வைத்த அரிசனங்கள் என்பதும் மும்மதியத்தில் லெப்பை என்பதும் இதே பொருள் கொண்டவைதாம் என்பதைக் கவனிக்க). அவர்களுக்கு சமற்கிருதமும் வேதங்களும் கற்பித்தார். பூணூல் கட்டி கோயில் கருவறைக்குள் நுழைய வைத்துப் பூசகர்களாக்கினார். நிலங்கள் மீண்டும் கோயில்களின் கட்டுப்பாட்டில் வந்தன.

இராமானுசரின் கோட்பாட்டுக்குப் பூனைக் கோட்பாடு என்று பெயர். பூனை தன் குட்டியைத் தூக்கிச் சென்று பாதுகாப்பது போல் இறைவன் உண்மையான அடியவரை அணைத்துக் கொள்வான் என்பது. எவனொருவன் இறைவன் மீது அன்பு செலுத்துகிறானோ அவனை இறைவன் சாதி வேறுபாடின்றித் தன்னுடன் சேர்த்துக்கொள்வான் என்பது அவரது நெறி.

கோயில்களுக்கு வந்த சிக்கல் தீர்ந்தது. அடுத்து வேதாந்த தேசிகர் வந்தார். அவர் ஒரு குரங்குக் கோட்பாட்டை முன்வைத்தார். குரங்குக் குட்டி தாயை இறுகப் பற்றிக்கொள்வது போல் அடியவர் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். எந்த சாதியைச் சேர்ந்த அடியவரையும் பார்ப்பனனாகப் பிறப்பித்தே இறைவன் தன்னிடம் சேர்த்துக்கொள்வார் என்றார். இவர் வடித்த கோட்பாட்டின்படி பழைய பார்ப்பனர் வடகலை. புதிய பார்ப்பனர்கள் தென்கலை.

இன்னும் ஒன்று, இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது:

சிவன் கோயில் சொத்தை ஏமாற்றி உண்பவரது குலமே அழிந்துபோகும் என்று மாலியர்கள் ஒரு பரப்பல் நிகழ்த்தினர். அத்துடன் கடவுள் தன்மான இயக்கத்தின் மீதான தாக்குதல் வேறு. இதை எதிர்கொள்ள ஊரெல்லாம் சைவ சபைகளை வலுவாக்கினர் சிவனிய வேளாளர்கள். புலால் உண்ணாதவர் அனைவருமே சிவனியர்தாம் என்று எல்லாச் சாதியினரையும் இழுத்துப்போட்டுக் கொண்டனர். அப்புறம் தன்மான இயக்கம் தளர்வுற்றது. ஒதுக்கீடு போன்ற சூழ்நிலைகளால் பார்ப்பனர்களுடன் வேளாளர்களின் உறவு நெருக்கமானது. அதாவது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுறுத்திய நெருக்கடி விலகிப்போய்விட்டது. இப்போது திடீரென்று 1980களில் மரபுவழியில் புலால் உண்ணாதவரே உண்மையான சிவனியர் என்று அந்தத் தலைமுறையில் புலால் உண்ணாதவர்களாயிருந்து உறுப்பினர்களானவர்களை வெளியேற்றினர். வெளியேறியவர்கள் சைவ சித்தாந்த சபை என்று தொடங்கினர். ஆனால் அது நிலைக்கவில்லை. தேவை நிறைவேறிவிட்டதால் சைவ சபையும் முன்போல் ஊக்கமாகச் செயற்படவில்லை.

இனி தமிழர்கள் குமரிக் கண்டத்தில் வடித்த மெய்யியலைப் பார்ப்போம். அதுதான் மூல புத்தக் கோட்பாடு. புத்தம் என்றால் புதியது என்று பொருள்படும். அறிவு ஒவ்வொன்றும் புதியதுதானே. அதனால் அறிவு புத்தம் என்றும் புத்தி என்றும் கூறப்படும். புத்தனை அறிவன் என்கிறோம்.

மூலப் புத்த மெய்யியல் மார்க்சிய இயங்கியலை ஒத்தது.

இயற்கை, மனிதன் என்ற அனைத்தும் அழியத் தக்கது - மாயத்தக்கது அதனால் மாயை எனப்படும். அது பொய்த் தோற்றமல்ல, மாற்றம். மாற்றம் என்பது ஒன்று அழிந்து இன்னொன்று தோன்றுவது. இடைவிடாத மாற்றம் எப்போதும் நிகழ்கிறது.


ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. அதை வினைப்பயன் என்கிறோம். முன்பு செய்த செயல்களுக்கான விளைவுகளைப் பின்னால் நுகர வேண்டும். எனவே சரியான செயல்களை, அதாவது தீய விளைவுகளைத் தராத, நல்ல விளைவுகளையே தரும் செயல்களைச் செய்ய வேண்டும்.

நாம் விரும்பும் விளைவுகளை எய்த வேண்டுமென்றால் சரி எது, தவறு எது என்று புரிந்து கொண்டு அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளுவதற்கான கோட்பாடு அறிதல் கோட்பாடாகும். அறிதல் என்பது ஐம்பூதங்கள், ஐம்பொறிகள், ஐம்புலன்கள் வழியாக அறியப்பட்டு மனதில் பகுத்தாயப்பட்டு உய்ததறிவையும் பயன்படுத்தி உண்மைகளை அடைவது; உண்மைகளைப் பிழை இல்லாமல் அடைய விருப்பு, வெறுப்பு, ஐயம், திரிபு ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்பனவாகும்.

ஆன்மா என்ற ஒன்று கிடையாது.

புத்த மெய்யியல் குமரிக் கண்டத்தில்தான் தோன்றியிரக்கும் என்று மூவாரியின் புதிர்கள் Riddles of Three Oceans என்ற தன் நூலில் உருசிய ஆய்வாளர் அ.கோந்திரத்தோவும் கூறியுள்ளார்.
கெளதம புத்தருக்கும் இந்த மெய்யியலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆசையை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் திருவோட்டை எடுத்து சங்க உறுப்பினர்கள் கையில் கொடுத்து இரத்தலே ஒரு மதிப்பு மிக்க செயல்பாடு என்ற இழிந்த கருத்தியலை உருவாக்கியவர் கெளதம புத்தர் என்பது எம் கருத்து. பாரதியார் கூட அவ்வாறே கருதியதாகத் தெரிகிறது.

புத்தத்தின் வினை - விளைவுக் கோட்பாடு தனி மனிதர்களுக்கு எப்போதும் பொருந்தும் என்று கூற முடியாது. ஒருவர் செய்வதன் விளைவு இன்னொருவருக்கும் சென்று சேரக்கூடும். ஏற்றத்தாழ்வுள்ள ஒரு குமுகத்தில் கீழ் நிலையிலுள்ளோரது உழைப்பின் பயன் மேல்நிலையில் உள்ளோரை அடையும். மேல் நிலையில் உள்ளோரின் கொடுஞ்செயல்களின் விளைவுகள் கீழ் நிலையில் உள்ளோரை அடையும். அதே வேளையில் ஒட்டுமொத்தமான நற்செயல்கள் அல்லது தவறுகளுக்கான விளைவுகள் வரும் தலைமுறைகளைச் சென்றடையும், இன்றைய புவி வெப்பமாதல் போல். இங்கு ஆன்மா தேவையில்லை. வரும் தலைமுறைகள் இப்போதைய மனிதர்களின் மறுபிறவிதானே! அவர்கள் வானத்திலிருந்து குதித்துவிடவில்லையே! முன் தலைமுறையினரின் உயிரின், உடலின் தொடர்ச்சிதானே!

புத்தத்தைத் தொடர்ந்து வந்த கபிலனின் சாங்கிய மெய்யியல் ஒரு பேராதனையும்(பரமான்மா) எண்ணற்ற ஆதன்களையும் படைத்தது. ஆதன்கள் ஐம்பூதங்களால் கவரப்பட்டு உயிர்களாகின்றன. அவற்றின் வினைகளாகிய செயல்களால் ஆதன்கள் கறைப்படுகின்றன. அக்கறையைப் போக்கிக்கொள்ள அவை மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. நன்மை செய்தாலும் தீமைசெய்தாலும் மறுபிறவி தவிர்க்க முடியாது. தவிர்க்க வேண்டுமாயின் உணர்வு, உணர்ச்சியற்ற மனிதப் பிறவியாகப் பிறக்க வேண்டும். தப்பளையன், பித்துக்குளி என்றெல்லாம் கூறுகிறோமே அவர்கள்தாம் கறைகள் நீங்கிப் பேராதனை அடையத்தக்க மிக உயர்ந்த பிறவிகள். இந்த பித்தர் நிலையைப் பயிற்சியாலும் எய்த முடியும். அதற்கு யோகம் என்று பெயர். ஏதோவொன்றின் மீது, கடவுள் என்று வைத்துக் கொள்ளுங்களேன், கவனத்தை ஒருமுகப்படுத்தினால் செயலற்ற நிலையை நீங்கள் எய்த முடியும். அதன் மூலம் நீங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்துவிடலாம் என்று கூறுகிறது சாங்கிய மெய்யியல். ″இந்து″ சமயத்தின் சாபக்கேடான வருண அமைப்புக்கு வழிகோலியவன் இந்தக் கபிலனே. நான்கு நிறங்கள் உள்ளவர்களாக மக்களின் வாழ்நிலைக்கேற்ப அமைந்த உடல் நிறங்களைக் கொண்டு மனிதர்களை வகுத்தவன் அவனே.

அவனைத் தொடர்ந்தவன் பதஞ்சலி. யோக சூத்திரம் என்ற நூலை யாத்து பல்வேறு வகையான யோகப் பயிற்சிகளையும் தன்னிலை மறப்பு அல்லது மெய்ம்மறப்புகளையும் வகுத்தளித்தான். மெய்ம்மறப்புகளுக்கு எளிய வழி ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உங்கள் மூச்சை மட்டும் கவனமாக எண்ணுங்கள் போதும். உண்மையில் மெய்ம்மறப்புப் பயிற்சி கடினமானது. இதற்கு மூல ஆசிரியர்கள் கபிலனோ பதஞ்சலியோ அல்லர். உண்மையில் மூலக் குடிகளின் பூசாரிகளும் குழுத் தலைவர்களுமான சாமன்களே இவர்கள். இவர்கள் மெய்ம்மறப்பை எய்த கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர். நம் தொன்மங்களில் கூறப்படும் முனிவர்கள் தவம் இயற்றுவதற்கு மேற்கொண்டவையாகக் கூறப்படும் வழிமுறைகள் இந்தச் சாமன்கள் கடைப்பிடித்தவையே. உண்மையில் இந்தச் சாமன்கள்தாம் அந்த முனிவர்கள். உயிர் பிரிவது போன்ற கடும்பயிற்சிக்குப் பின் ஒரு சாமனுக்குரிய தகுதிகளைப் பெற்று மீள்வது மறுபிறப்பு போன்றது என்று மாந்தநூலார் கூறுகின்றனர். பார்ப்பனர்களை இருபிறப்பாளர் என்று கூறுவது இந்த சாமன்களின் எய்தல்களை அடையாமலே அவர்கள் செய்த ஓர் ஏமாற்றாகும்.

இந்தப் பயிற்சிகளின் விளைவாக அவர்கள் பிற மனிதர்களின் உள்மனதில் தங்கள் உள்மனதை ஊடுருவி அவர்களது சிந்தனைகளையும் செயல்களையும் தம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இப்னாட்டிசம் எனப்படும் மெய்ம்மறப்பியத்தைப் பயன்படுத்தி அவர்களது நோய்களைக் குணப்படுத்தவும் முடியும். நோய்களையோ வேறு தீங்குகளையோ உண்டாக்கவும் முடியும். உண்மையான மருத்துவமும் அவர்கள் கற்றிருந்தார்கள். நாம் கூறும் சித்தர்கள் போன்றவர்கள் இவர்கள் என்று கூறலாம். அவர்களைக் கண்டு மக்கள் அஞ்சி கட்டுப்பட்டு இருந்தார்கள். இவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டால் நம் தொன்மங்களில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற வரலாற்றுச் சுவடுகளைத் தோண்டி எடுக்க முடியும்.

கழக(சங்க)ப் பாடல் ஒன்றில் ″பாணர், துடியர், பறையர், கடம்பர் அன்றி வேறு குடிகள் இல்லை″ என்று வருகிறது. குமரிக்கண்ட மக்கள் இன்றைய தமிழகத்தில் குடியேறிய போது இங்கு இருந்த நான்கு வகை மக்களின் தலைவர்களாகிய சாமன் பூசாரிகளே இவர்கள். சாமன்களின் ஓர் அடையாளம் அவர்களிடம் ஓர் இசைக் கருவி இருப்பதுதான். தாங்கள் மெய்ம்மறக்கவும் எதிராளியை மெய்ம்மறக்கச் செய்யவும் இந்த இசைக்கருவிகள் பயன்படுகின்றன. இன்றும் குறி சொல்வோரும் குறளிவித்தை செய்வோரும் உடுக்கு, மேளம் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் காணலாம். இங்கு யாழ், துடி(உடுக்கை), பறை முதலியவற்றை இனம்காண முடிகிறது. கடம்பர்களின் இசைக் கருவி யாதென்று தெரியவில்லை.

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து மெய்ம்மறைப்புக் கலையைக் கற்றுக்கொண்ட மோசேயும் ஏசுவும் மேற்குலகில் கடவுள்களாகப் பிறப்பெடுத்துள்ளார்கள் என்பது உறுதி. சாமன்களைப் பற்றிய செய்திகளுக்கு Masks of Gods vol.I, Primitive mythology by Joseph Campbell என்ற நூலைப் படிக்கலாம்.

இவ்வாறு ஒரு முழுமையான ஒட்டுண்ணி மெய்யியலை உருவாக்கிய கபிலனைப் பின்பற்றி, மனம் ஒருநிலைப்படுவதற்கு,

சிவனை வைத்துக் கொண்டால் அது சிவனியம்
மாலை வைத்துக் கொண்டால் அது மாலியம்
சத்தியைக் வைத்துக் கொண்டால் அது சாத்தம்
குமரனை வைத்துக்கொண்டால் அது குமாரம்
பிள்ளையாரை வைத்துக்கொண்டால் அது கணபதியம்
பேய்களை வைத்துக் கொண்டால் அது பைசாசம்

தனி மனிதர்களைச் சார்ந்ததாக புத்தத்தை விளக்கிய போது ஆன்மாவும் மறுபிறப்பும் இல்லாமல் விளக்க முடியாமல் போனதால் புத்தர் 500க்கு மேல் பிறவிகள் எடுத்து உழல வேண்டியதாயிற்று.

இனி, மத நம்பிக்கைகளைப் பரப்புவதைப் பற்றிப் பார்ப்போம். மதங்களின் உருவாக்கம் ஏதோவொரு மக்கள் குழுவின் நலனுக்காகத்தான் நடைபெறுகிறது. சமணத்தின் பெயரில் அயல் வாணிகர்கள் தமிழகத்தைச் சுரண்டியதை எதிர்த்து தமிழ்நாட்டு வாணிகர்களின் பின்னணியில் எழுந்தது சிவனிய எழுச்சி. இது முற்போக்கானது. குத்தகை உழவர்களை மயக்கி ஏமாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக உருவானது இராமானுசரின் இயக்கம். இது பிற்போக்குத் தன்மையானது. ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலினுள் கொண்டு சென்றது பெயரளவில் முற்போக்கானது. இந்த இரு நேர்வுகளிலும் கூட சில காலம் சென்று அதிலுள்ள முற்போக்குக் கூறுகளை அகற்றியதைப் பார்த்தோம். அதைப் போலத்தான் புத்தம், சமணம் போன்றவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்தியாவில் தோன்றிய புத்தம் இன்று பொருளியல் வல்லரசு சப்பான், அதற்கு அடுத்த வல்லரசாகிய சீனம் ஆகியவற்றின் ஒற்றமைப்பாக இந்தியாவிலுள்ள சாதி முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை அந்த அரசுகள் தம் பால் இழுக்கப் பயன்பட்டு வருகிறது. சிங்களரின் புத்தமும்தான்.

உரோமைப் பேரரசின் மேலாளுமையை எதிர்த்துத் தன் பொதுவாழ்வைத் தொடங்கிய ஏசு உள்நாட்டு முரண்பாடுகளுள் சிக்கி தன் தேசத்தாராலேயே தண்டனை அடைந்தார். அங்கிருந்து வெளியேறி உரோமில் நிலைபெற்று விட்ட அந்தச் சமயம் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோமைப் பேரரசால் அரச மதமாக ஏற்கப்பட்டது. அந்த அரசு ஏசுவைக் கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டி யூதர்கள் மேல் அவர் பெயரில் அமைந்த சமயத்தின் பெயரால் படையெடுத்து எந்த யூத குல மக்களுக்காக ஏசு தன் இன்னுயிரை இழந்தாரோ அதே யூத குடிகளைப் பதினாறு நூற்றாண்டுகள் நாடற்றவர்களாக உலகெல்லாம் பரந்து எந்த மக்கள் குழுவும் பட்டறியாத இன்னல்களைத் தூய்க்கக் வைத்தது. இவை எல்லாம் சமயம் என்பதன் நூற்றுக்கு நூறு அரசியல் தன்மையைக் காட்டுகிறது.

மதம் என்ற சொல் மதித்தல் என்ற பொருளில் மெய்யியலை - கோட்பாட்டைக் குறிக்கும். சமயம் என்பது ஒரு அரசியல் கட்டமைப்பு ஆகும். அதற்கும் கடவுளுக்கும் எந்த உறவும் கிடையாது. மனிதர்களையும் சமயங்களையும் படைத்த கடவுள் ஒரேயொருவர்தான் என்றால், மதங்கள் கடவுளின் படைப்புகள் என்றால் மதங்களுக்குள் இந்த மெய்யியல் வேறுபாடுகள் ஏன்?

உலகில் இன்று வரை அரசியலின் பெயரால் நடைபெற்ற போர்களில் பாய்ந்த குருதியை விட சமயப் போர்களாலும் மதக் கலவரங்களாலும் பாய்ந்தோடிய குருதி பல மடங்கு அல்லவா? அது ஏன்? கடவுளா காரணம்? மதங்கள் கடவுளின் படைப்பாக இருந்திருந்தால் இது போன்ற குருதி வெள்ளம் ஓடியிருக்காதே! எனவே சமயப் பரப்பல் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குற்றமற்ற மெய்யியல் கோட்பாடு என்றோ நம்பிக்கைகளின் வெறும் தொகுப்பு என்றோ மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அயல் மதங்களின் நுழைவு எப்போதுமே அதன் பின்னால் அயல் ஆட்சியைக் கொண்டுவரும் என்பது பன்னூறு ஆண்டுகால இந்தியப் பட்டறிவு. இது பற்றிய தெளிவு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. தொல்காப்பியம் பல்வேறு காலகட்டங்களில் உள்ள நிலைமைகளை ஒன்றன் மீது ஒன்றாகக் கொண்டுள்ள ஒரு படைப்பு. பொருளதிகாரத்தில் வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை ஆகிய ஐந்து தெய்வங்களைக் கொண்ட(ஐந்து தெய்வங்கள் ″மேவிய″) ஐந்து நிலப்பகுதிகளை அவ்வவற்றுக்குரிய தலைவர்கள் ஆண்டு வந்த, பூசாரியராட்சி(Theocracy)க் காலத்துக்கு உரியதாக இனம்காணத்தக்க ஒரு நூற்பா உள்ளது.

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே ...... தொல்.பொருள், 3

இதற்குப் பொழிப்புரையாக, தேவரது பூசை முதலாயினவும் மக்களும் முறைமை தப்பியவழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும் பொருளாக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் என்றவாறு:
- (இளம்பூரணம்,கழக வெளியீடு எண் 629, 1967 பக். 31-32)

இதில் கூறப்படுவது அரசு சார்ந்தோர் உள்நாட்டு மக்களிடை ″சமய ஒழுங்கை″ நிலைநாட்டவும் வரி தண்டுவதற்காகவும் தம் இருப்பிடத்திலிருந்து நீங்கும் பிரிவுகள் அதாவது செலவுகள்(பயணங்கள்) பற்றி.

அத்தகைய நிலப்பகுதிகளில் எங்காவது அயல் வழிபாடு நுழைவதாகத் தெரிந்தால் ஆட்சித் தலைவனும் அவனைச் சார்ந்தவர்களும் உடனடியாகச் சென்று அதனைச் சீர்செய்து வந்தனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

எண்ணத் தொலையாத பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்கள் எல்லைப் பாதுகாப்பு பற்றியும் வழிபடும் தெய்வம் குறித்த அரசியல் பற்றியும் எவ்வளவு தெளிவாகவும் விழிப்பாகவும் இருந்திருக்கிறார்கள் என்று அறியும் போது ஒரு புறம் பெருமையாகவும் இன்று தமிழகத்து மீனவர்களில் 400 பேருக்கு மேல் இலங்கை அரசு சுட்டு வீழ்த்தியும் இந்திய அரசு அதைக் கண்டிக்காமல் அதற்குத் துணை போவதுடன் தன் பங்குக்குத் தானும் சிலரைச் சுட்டுக் கொன்றுள்ளதைக் கண்டு இன்னொரு புறம் வெட்கமாகவும் இருக்கிறது. அதே போல் கிறித்துவத் துறவி சவேரியார் தமிழகக் கடற்கரையில் மதமாற்றம் செய்த போது அவ்வாறு மதம் மாறியவர்கள் ″போர்த்துக்கீசிய மன்னனுடைய குடிமக்களாக மாறி, அவனுடைய ஆணைக்கு உட்பட வேண்டுமென்றும் இவர்கள் அப்படி உட்படுவார்களாயின் முசுலீம் கொடுமைகளினின்றும் இவர்களைத் தாம் பாதுகாத்து வருவதாயும் கூறிப் பாதிரிகள் இவர்களுக்கு ஆசை காட்டினார்கள்″
[1]. எவ்வளவு இழிவு? இங்கு யாரைக் குற்றம் சொல்வது? கடற்கரை மக்களைக் கொடுமைப்படுத்திய முகம்மதியர்களையா? அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறேன் என மதமாற்ற வந்த அயலவனையா? அல்லது இந்த நாட்டை, அதன் எல்லையை, அங்குள்ள மக்களைப் பாதுகாக்கத் துப்பில்லாத நம் ஆட்சியாளர்களையா? அல்லது அந்த ஆட்சியாளரை அண்டி வாழ்ந்து தத்தம் குழுக்களுக்கு மக்களை முற்றிலும் அடிமையாக வைத்திருப்பதற்காகத் தங்கள் ஆட்சியாளர்களைத் தங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளத் தயங்காத தாய் மதத்து உயர்குடியினரையா? இந்த நிகழ்வில் வெளிப்படுவது மெய்யியல்களின் மோதலா? மத நம்பிக்கைகளின் போட்டியா? இது பச்சையான அரசியல் இல்லையா?

மாலிக் காபூருடன் வீரபாண்டியன் போரிட்ட களத்தில் அவன் படையில் இருந்த 20,000 முகமதியப் படை வீரர்கள் நடுவில் எதிரிகள் பக்கம் ஓடி வீரபாண்டியனைத் தோற்கடித்தது நம்பிக்கைகளின் மோதலா அல்லது தாய்மண்ணுக்கு எதிராகச் செய்த நம்பிக்கை இரண்டக அரசியலா? அதே போல் விசயநகரப் பேரரசு இராமராயன் தலைமையில் ஐந்து சுல்தான்களுக்கு எதிராகப் போரிட்ட போது அவன் படைத்தலைவர்களாயிருந்த இரு முகம்மதியர்கள் தங்கள் கீழ்ப் பணியாற்றிய எண்பதினாயிரம் படை வீரர்களுடன் கட்சி மாறியது கடவுள் நம்பிக்கையா? மத நம்பிக்கையா? அரசியலா? என்னவென்று அழைப்பது?

அந்த ஐந்து சுல்தான்களில் இரண்டு பேர் பார்ப்பனர்களாக இருந்து மதம் மாறியோர் என்பது உங்களுக்குத் தெரியுமா?


இந்தியாவில் ஆண்ட பாதுசாக்களும் சுல்தான்களும் தங்கள் அரசுகளை ஏற்றுக்கொள்ளக் கேட்டு வெவ்வேறு காலங்களில் ஆப்கானித்தான், ஈரான், அரேபிய அல்லது துருக்கியின் முகம்மதிய மன்னர்களின் வாயில்களில் பரிசுப் பொருட்களுடன் விடுத்த தூதுவர்கள் காத்துக்கிடந்தது அரசியல் இல்லையா? இந்த இழிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்பர் வழிபாட்டுக்காக அயல்நாடு செல்வதைத் தடுக்கும் நோக்குடன் மெக்கா செல்வதற்குத் தடை விதித்ததுடன் உள்நாட்டுச் சமயம் ஒன்று வேண்டும் என்று தீன் இலாகி என்று ஒரு சமயத்தை வடித்ததும் அரசியல்தானே!

சப்பானியர்கள் அயலவரை எப்போதுமே ஐயக் கண்கொண்டு பார்ப்பவர்கள். அங்கும் முதலில் போர்ச்சுக்கீசியர்களே மதமாற்றத்துக்காகச் சென்றனர். 1545 இல் சவேரியார் இரண்டு துணைவர்(சேசு சபையினர்)களுடன் சென்று 1000 பேரை மதமாற்றியுள்ளார். ஒரு தலைமுறையில் சபையினரின் எண்ணிக்கை 70 ஆகவும் மதம் மாறியவர்களின எண்ணிக்கை 1½ இலக்கமாகவும் உயர்ந்துள்ளது. மதம் மாறியவர்கள் சப்பானியப் பேரரசுக்கு எதிராகப் போப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகசாகியின் உள்ளூர் தலைவனைக் கொண்டு புத்தக் குருக்களை விரட்டி கோயில்களை அழித்துள்ளனர். 1597இல் இடையோசி எனும் சப்பானிய ஆளுனன் 20 நாட்கள் எச்சரிக்கை கொடுத்து அனைத்து விடையூழிய(மிசனரி) நடவடிக்கைகளையும் தடைசெய்துள்ளான்.

அடுத்து பதவிக்கு வந்த இயெயேசு 1614இல் கிறித்துவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறும் படி அல்லது தாய் மதத்துக்கு திரும்பும் படி ஆணையிட்டான். 1616இல் அவன் இறந்ததும் கிறித்துவர்கள் தாக்கப்பட்டனர், சிமாபிரா என்ற தீவக்குறைக்கு(தீபகற்பம்)த் தப்பிச் சென்று கோட்டை கட்டி வாழ்ந்த 37,000 பேரில் 105 பேர் தவிர அனைவரையும் 1638இல் அவனது பேரன் இயெமெட்சு கொன்றான்.

இதில் எதுவுமே கடவுள் அல்லது மெய்யியல் குறித்த நிகழ்வு இல்லை. முழுக்க முழுக்க அரசியலே. முதலில் மதம் பரப்பலுக்காகச் செல்வோம். அடுத்து வாணிகம் செய்வோம். மூன்றாவதாக நாட்டைப் பிடிப்போம் என்ற ஒரு போர்த்துக்கீசிய மாலுமியின் கூற்றை வில் டூரான்று பதிவு செய்துள்ளார்.
[2]

தமிழகத்திலும் கிறித்துவர்கள் தொடக்க காலங்களில் தாய்மதக் கோயில்களை இடித்து, கொள்ளையடித்து வெறியாடியுள்ளனர். அரசர்களும் அவர்களை அடக்கியுள்ளனர். ஆனால் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் நடைபெற்ற இடையறாக மேலாளுமைப் போட்டியால் அரசர்கள் பிற சமயத்தாரை ஊக்கியே வந்துள்ளனர். பிற சமயங்களால் ஆதாயம் இருக்கும், அதிகாரம் கிடைக்கும் என்றிருந்ததால் பார்ப்பனர்களும் மதம் மாறியிருக்கின்றனர். நாகூர் தர்காவில் பூசகர்களாக இருப்பவர்கள் முகம்மதியத்துக்கு மாறிய ஐயங்கார்களின் வழி வந்தவர்கள் என்று மீனாட்சிபுரம் மதம் மாற்றக் காலத்தில் ஒரு முகம்மதிய நண்பர் எனக்குக் கூறினார். அவர்கள் தங்கள் பழைய தொடர்புகளை இன்றும் தொடர்கின்றனர் என்றார். தம் சொத்துகளைக் காத்துக் கொள்வதற்காக சிவனிய வெள்ளாளர்கள் பெருமளவில் முகமதியத்துக்கு மாறியுள்ளனர். தங்கள் பக்கத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகவே தாழ்த்தப்பட்ட மக்களைப் பின்னர் இவர்கள் மதம் மாற்றியுள்ளனர். அங்கும் அவர்கள் இந்நிலக்கிழார்களுக்கு அடிமைகளாகவே உள்ளனர்.

இடங்கைச் சாதியினராக ஒடுக்கப்பட்ட கைவினைஞர்களும் வாணிகர்களும் நெசவாளர்களும் பெருமளவில் முகம்மதியத்துக்கு மாறியுள்ளனர்.

குமுக ஒடுக்குமுறை மட்டும் மதமாற்றத்தை ஊக்கவில்லை. வறுமையும்தான். குமுக ஒடுக்கல் என்பதே குமுகச் செல்வத்தில் அம்மக்களுக்குரிய பங்கை மறுப்பதை நோக்கமாகக் கொண்டதுதானே? நம் சமயக் கட்டமைப்பும் நடைமுறைகளும் மேலடுக்கினரின் தேவைகளுக்குப் போக எஞ்சியவற்றை அழிப்பதாகவே உள்ளன. ஆகமக் கோயில்களில் அழிமதியாகும், மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருட்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும். அத்துடன் ஆகமக் கோயில்கள் பார்ப்பனர்களுக்கும் தேவரடியார்க்கும் கருவறை, அரசர், அதிகாரிகள், உள்ளூர் ஆட்சியாளர் ஆகியோருக்கு மண்டபங்கள், வாணிகர்களுக்கு உள்சுற்று, உழவர், உழைப்பாளர்களுக்கு வெளிச்சுற்று, அவர்கள் கருவறையைப் பார்க்க முடியாதபடி ( நந்தி, கருடன் போன்ற)கடவுளின் ஊர்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை மறைக்கும். அவருணர்கள் எனப்படும் வருணம் எதனுள்ளும் வராத பஞ்சமர்கள் கோயில் இருக்கும் தெருப்பக்கமை நடமாட முடியாது. தொலைவிலிருந்து கோபுரத்தைப் பார்த்து வணங்குவதோடு மனநிறைவுகொள்ள வேண்டியதுதான். இந்தக் கடைசி இரு குழு மக்களின் உழைப்பில் கிடைக்கும் பொருட்களைத்தான் கோயில்களில் அழிக்கிறார்கள்.

இன்று ஊர்ப்புறங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை ஆளுக்கு ஆயிரம் உரூபாய்கள் வரை கட்டாயமாக வரி தண்டி கோயில் கொடை நடத்துகிறோம் என்ற பெயரில் கேளிக்கை நடத்துகிறார்கள் ஊரிலுள்ள இளைஞர்கள். வறிய மக்கள் எதிர்த்துப் பேசினால் ஊரை விட்டு விலக்கி வைத்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இவ்வாறு ஓரம் கட்டப்பட்ட மக்கள் மதமாற்றக்காரர்களின் எதிர்ப்பில்லா இலக்காகிவிடுகிறார்கள்.

நம் மக்களிடம் திரளும் பணம் மூலதனமாக மாறி நம் நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பது அரசால் எண்ணற்ற வழிகளில் திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது. பனியாக்கள் ஆகிய மார்வாரிகளும் குசராத்திகளும் பார்சிகளும் மட்டுமே தொழில்களில் முதலிட முடிகிறது. ஆட்சியாளர்கள் இந்த 60 ஆண்டுக் காலத்தில் அள்ளிக் குவித்த ஊழல் கள்ளப்பணம் ″நேரடி அயல் முதலீடாக″ இங்கு பாய்கிறது. உள்நாட்டு மக்கள் நேர்மையாக ஈட்டிய பணம் வரம்புமீறிய வருமான வரியின் மிரட்டுதலுக்கு அஞ்சி கருப்புப் பணம் என்னும் பொல்லாப் பெயர் பெற்றுப் பதுங்கிக் கிடக்கிறது. பரவலான வளர்ச்சி தடுக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் தேங்கிக் கிடக்கும் இந்தப் பணம் தங்களுக்குப் போட்டியாக, தங்களைக் கேள்வி கேட்கும் அரசியலாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே மதப் பூசல்கள் உருவாக்கப்படுகின்றன. அயல் பணத்துடன் கிறித்துவ, முகம்மதிய சமயம் செயல்படுகிறதென்றால் பனியாக்களின் பணம் இரா.சே.ச. - தேசிய தற்பணி மன்றம் - ஆர்.எசு.எசு.ஐயும் பிற இந்துவெறி அமைப்புகளையும் வளர்த்துவிட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்களின் பணம் கோயில் கட்டுவதிலும் கொடை விழாக்கள் நடத்துவதிலும் போட்டி போட்டு வீணாக்கப்படுகிறது.

இவ்வாறு குமுகப் பணம் வீணாகிப் போகும் சூழலில் வறுமையுற்றுவிட்ட மக்களின் முன் பணத்துடன் நுழையும் கிறித்துவம் முன்வைக்கும் திரு. தெய்வநாயகம் உருவாக்கிய வரலாற்றை அம்மக்கள் கேள்வி முறையின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இதை எதிர்கொள்ள வேண்டுமாயின் இரு வழிகளில் நாம் செயற்பட வேண்டும். தாய் மதத்தை, அதன் அடிப்படையை மாற்றியமைக்க வேண்டும். கோயிலில் அனைத்து மக்களும் சமமான மதிப்பு கிடைக்குமாறு அதன் வடிவமைப்பை மாற்ற வேண்டும். அதாவது இன்றைய கோயில்களின் வடிவமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும். வருணமுறையை மனிதநேயமற்ற ஒன்று என்று ஒதுக்க வேண்டும். ஆண், பெண் வேறுபாடின்றி யாரையும் தீட்டுடையவராகக் கொள்ளாமல் அனைவரும் ஒருங்கிருந்து அமைதியாகத் தத்தம் தாய்மொழியில் வழிபாடு நடத்தவும் நடத்திவைக்கவும் உரிமை உள்ள ஒன்றாக ஒரு புதிய மதம் நமக்குத் தேவை.

இந்து மதம் என்ற பெயரில் இன்று அறியப்படுவது மதங்களுக்கான பொதுவான வரையறைகளுக்குப் பொருந்தாத ஒன்றாகும். இங்கு இந்த மதத்தின் நிறுவனர் என்று எவரும் இல்லை. அதற்குரிய ஒற்றை மெய்யியலோ வழிபாட்டுமுறையோ கிடையாது. ஒரு கோடியில் தன்னைத் தீண்ட விடாத பார்ப்பனப் பூசாரியை வைத்து தங்களுக்குப் புரியாத மொழியில் கடவுளுக்குத் தான் வைக்க வேண்டிய வேண்டுகையை அவன் விடுப்பதில் பெருமைகொள்ளும் ஒரு மிகச் சிறுபான்மையினரையும் மறு கோடியில் நாட்டுப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை வெளியில் நிறுத்தி தாரை தப்பட்டை அடிக்கவிட்டு பன்றி முதல் எருமை வரை காவுகொடுத்து தெய்வமாடியிடம் நேரடியாகவே தன் குறைகளைக் கூறும் மிகப் பெரும்பானமை மக்களையும் கொண்ட ஒரு கலவையை ஓர் அடையாளத்துக்காக நாம் இங்கு தாய்மதம் என்றோம். விரிவுக்கு எமது ஆக்கமான சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் என்பதில் எம் வலைபக்கத்தில்(http://kumarimainthan.blogspot.com) பார்க்க.

19ஆம் நூற்றாண்டில் கிறித்துவத்திலிருந்து தாய் மதத்தைக் காப்பதற்காக இந்து சீர்திருத்த அமைப்புகள் வலுவாகச் செயற்பட்டன. அதைக் கண்டு நடுங்கிப் போயிருந்தனர் சாதிவெறியினர். அந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்து வந்தனர் ஆல்காட்டும் பிளாவட்கியும் இறையியல் கழகத்துடன் சென்னைக்கு, வருணமுறை மனித குலத்தின் உயர்ந்த குமுக அமைப்பு என்ற முழக்கத்துடன். சாதிவெறியர்கள் அங்கு சென்று மொய்த்துக் கொண்டனர். சீர்திருத்தர்கள் களத்தில் இல்லாமல் போயினர். இதற்கு அடிப்படை அமைப்பதற்கென்றே அனைத்துச் சமய மாநாட்டைக் கூட்டி அரசன் சேதுபதியை அமெரிக்கா அழைத்தது. அவர் விவேகானந்தரை விடுத்துவைத்தார்.

இறையியல் கழகத்தில் நடந்த மறைமுக அமெரிக்க அரசியலைக் கண்டுதான் அங்கு உறுப்பினராக இருந்து வெளியேறிய ஆங்கிலரான இயூம் இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியை உருவாக்கினார் என்றொரு ஐயம் எமக்கு உண்டு. அதன் பின்னர் ஆங்கிலரான அன்னி பெசன்று இறையியல் கழகத்தைக் கைப்பற்றிக்கொண்டு வீரார்ப்பாக தன்னாட்சி கோட்பாட்டை வகுத்து முனைப்பிய(தீவிரவாத)த் தலைவர்களைக் களத்திலிருந்து அகற்றியது போன்றனவெல்லாம் நடைபெற்றது. இன்றும் அந்த இறையியல் கழகம் சாதி வெறியர்களின் புகலிடமாக விளங்குகிறது.

எனவே தாய் மதத்தைக் காக்க வேண்டும், அயல் மதங்களின் பெயரால் ஊடுருவும் அயல் விசைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தாய்மதச் சீர்த்திருத்தத்தில் முனைப்பாக ஈடுபட்டு வெற்றி ஈட்டியாக வேண்டும். நம்மிடையில் இன்று வேர்கொண்டிருக்கும் அயல் மதங்கள் நம் குமுகக் கோட்பாடுகளின் போதாமைகளால், அவற்றால் நமக்கு ஏற்பட்ட இயலாமைகளால் நம் குமுகத்தின் உடலில் ஏற்பட்ட சீழ் வடியும் புண்கள் என்ற உணர்வுடனும் அது இன்னொரு முறை நிகழ்ந்துவிடாமல் விழிப்புடனும் நாம் செயற்பட வேண்டும்.

அயல் நாட்டுப் பணம், அது உதவியாக வந்தாலும் சரி, முதலீடாக வந்தாலும் சரி நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பணம், அறிவு, உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் பொருளியல் வலிமையை, நாட்டின் பொருளியலை, வளத்தை வளர்க்க கட்டுப்பாடில்லாத உரிமையைப் பெறப் பாடுபடவேண்டும். அவற்றின் பலன்கள் எக்காரணத்தாலும் நம் நாட்டை விட்டு வெளியேறிவிடாமல் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோள்களுக்கு எதிர்நிற்கும் தடைகளை எதிர்த்துப் போராட வேண்டும். இணக்கம் என்பதின்றிப் போரிட வேண்டும். அவ்வாறு தற்சார்பு கொண்டால்தான், நாட்டின் பொதுவான செல்வ நிலையும் மக்களின் தனிப்பட்ட வாழ்நிலையும் மேம்பட்டால்தான் தெய்வநாயகம் போன்றோரின் ஏமாற்றுகளுக்கு இடம் கொடுக்காத, வெளிநாட்டுப் பணத்துக்கு மயங்காத மனநிலையை நம் மக்கள் பெறுவார்கள்.

எந்தச் சமயம் உண்மையான மனித நேயத்தை, மக்களுக்குள்ள பொருளியல் சம உரிமையைப் போற்றிப் பாதுகாக்கிறதோ அதுதான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஒரு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு குழந்தையைக் கண்டு, எடுத்து வளர்க்க விரும்பும் எந்த ″இந்து″வும் அது எந்த சாதியோ என்று குழம்பி வாளா இருக்கிறான். ஒரு கிறித்துவச் சாமியார் கண்டால் அதை எடுத்து கோயிலின் பராமரிப்பில் கிறித்துவக் குழந்தையாக வளர்க்கிறார். இது உண்மையில் பாளையங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி. முகம்மதியர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்றோ பலவோ ஆளற்ற, ஏழ்மையிலுள்ள குழந்தைகளைத் தத்தெடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஆளாளுக்கும் வளர்த்துத் தங்கள் பக்கத்துக்கு வலுவைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் இன்றோ நேற்றோ நம் தாய் மதத்திலிருந்து சென்றவர்கள் தாமே! அவர்களால் முடிவது ஏன் நம்மால் முடியாமல் போயிற்று? இதனால்தான் இன்று இந்து சமயம் அழிவை நோக்கி நிற்கும் உலகச் சமயங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நம் தாய்மதத் தலைவர்களுக்கு, தலைவர்கள் கூடத் தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றுவது தொடர்ந்து வரும் நிகழ்வு, எனவே நேர்மையும் நாணயமும் நாட்டுப்பற்றும் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஓர் எச்சரிக்கை!


அடிக்குறிப்புகள்:

[1] தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும், கே.கே,பிள்ளை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1981, பக். 394 - 95.

[2] History of Far East in Modern Times, Shiv Kumar & Saroj Jain, S.Chend & acompany Ltd., New Delhi, 1978, Story of Civilization Vol Ⅰ- Our Oriental Hertiage, Will Durant ஆகிய நூல்களிலிருந்து இச்செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

(இக்கட்டுரை தமிழினி அக்டோபர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

20.11.08

குணா அவர்களுக்கு 29 - 08 - 2008 நாளிட்ட மடல்

நாகர்கோயில்,
29-08-2008.

அன்பு நண்பர் குணா அவர்களுக்கு வணக்கம்.

நேற்று நண்பகலில் தாங்கள் தொலைபேசியில் கூறிய செய்திகள் குறித்து என் வருத்தத்தைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். 1982 இறுதி அல்லது 83 தொடக்கம் என்று நினைவு, சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு ஒன்று நடைபெற்றது. நான் அப்போது சென்னையில் இருந்தேன். எனவே நானும் சென்றிருந்தேன். அங்கு திரு.அரணமுறுவலிடம் திரு.பொன்.பரமேசுவரன் காசோலை கொடுத்தபோது தான் பஃறுளி முதல் வையை வரை நூலை அச்சிடும் பொறுப்பை அரணமுறுவலிடம் ஒப்படைத்திருந்தீர்கள் என்று தெரிந்தது. நூலுக்கான முன்னுரையில் அரணமுறுவலின் பங்கு பற்றிக் குறிப்பிடாத என் தவறைப் பின்னர் உணர்ந்தேன். நிற்க, அரணமுறுவல்தான் பின்னொரு நேரம் பேசும் போது ″ஆய்வரணுக்கு அயல் நாட்டுப் பணம் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?″ என்று கேட்டார். நாம் பின்னர் ஒருமுறை சந்தித்த போது இதைச் சொன்ன போது உங்கள் விடை ″அதனால் என்ன?″ என்றிருந்தது. இப்பொழுது தாங்கள் தொலைபேசியில் பேசிய போது கூறிய செய்தியை அப்போது சொல்லவில்லை. அதாவது தாங்கள் பணியாற்றிய இந்திய ஏம வங்கி அலுவலகத்தில் உரூ.16,000/- (பதினாறாயிரம்) கடன் வாங்கித்தான் அந்த நூலை வெளியிட்டீர்கள் என்ற செய்தி இந்தத் தொலைபேசி உரையாடலில்தான் வெளிவந்தது. இந்தச் செய்தி இடைவெளிதான் நான் செய்த தவறுக்குக் காரணம். இருந்தாலும் நடப்புக்குப் புறம்பான ஒரு பதிவு என் மூலமாக நேர்ந்ததற்கு நான் மிக வருந்துகிறேன். எந்தக் கட்டுறவும் இல்லாத மன்னிப்பைத் தங்களிடம் கேட்கிறேன். என்னைப் பொறுத்தருள்க.

இது குறித்து மனந்திறந்து..... பகுதியின் இறுதியில் ஒரு பதிவும் செய்துள்ளேன். இணையத்திலும் பார்க்கலாம். இந்த மடலையும்தான். அந்தப் பதிவின் படியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

அனைவரையும் குறை கூறுகிறேன் என்று அன்று நீங்கள் தொலைபேசியில் கூறியது இரண்டாவது முறை. இது பற்றி நான் ஏற்கனவே தமிழ்த் தேசியம் ″மனந்திறந்து….″ பகுதியில் எழுதியுள்ளேன்.

நான் சில குறிப்பிட்ட நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளேன். ″தமிழ்″, ″தமிழ்த் தேசிய″ இயக்கங்கள் நடத்துவோரில் பெரும்பாலோருக்கு அவை குறித்த கட்டுரைகளை விடுத்துள்ளேன். நான் வேலையை விட்டுத் தொழில் செய்து ஐந்து குழந்தைகளைக் கொண்ட என் குடும்பத்தைத் தாங்கிய வறுமை மிகுந்த சூழலிலும் என் வரவில் கணிசமான பகுதியை இதற்குச் செலவு செய்தேன். என் செலவில் எங்கெங்கோ சென்று நிகழ்ச்சிகளில் பங்குகொண்டேன். என் கருத்துகளை ஆணித்தரமாகத் தயங்காமல் எடுத்துரைத்தேன். அவர்கள் நடத்திய இதழ்கள் குறித்து மனம் திறந்த திறனாய்வுகளை எழுதி அவர்களுக்கு விடுத்தேன். ஆனால் அவர்களில் எவரும் என் முன்வைப்புகள் பற்றிய தங்கள் உணர்வுகளை, திறனாய்வுகளை முன்வைத்ததில்லை. பொறுக்க முடியாதவர்கள் புறக்கணிக்கின்றனர். அது பற்றி எனக்கு வருத்தமோ கவலையோ இல்லை. என் கருத்துகள் உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளப்படும் என்றோ என்னைப் புகழின் வெளிச்சத்தில் நிறுத்திவிடும் என்றோ நான் எப்போதும் நினைத்ததில்லை.

இந்த இயக்கங்களுடன் நான் தொடர்பு கொள்ளத் தொடங்கிய காலத்தில் தமிழகத்தில் இருந்த நிலையிலிருந்து நாள்தோறும் தமிழகத்தின் நிலை இறங்குமுகமாகவே இருக்கிறது. தங்கள் விருப்பங்களையும் மீறி தங்கள் மனதுக்குள் தாங்கள் போற்றும் அல்லது போற்றுவது போல்காட்டிக் கொள்ளும் தமிழகத் தலைவர்களை குறைகூறுவதைத் தவிர்க்க முடியாத நிலைக்குப் பலர் வந்துள்ளனர். அவர்களிலும் பலர் சிக்கல்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். என் கருத்து நோக்கி வரவேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அதேவேளையில் இவர்கள் முற்றிலும் மாற்றமடைந்து என்னுடன் தோழமை கொள்வார்களென்று நான் கனவு கூடக் காணவில்லை, ஏனென்றால் அவர்களின் வகுப்புப் பின்னணி அத்தகையது. திராவிட இயக்கத்தால், குறிப்பாகப் பெரியாரின் அரசியல் செயற்பாடுகளால் தமிழகத்தில் உருவாகிவிட்ட செல்வாக்கு மிக்க ஒட்டுண்ணிகளின் நலம் காப்பவர்கள் இவர்கள். ஆனால் விளைப்பு விசைகளை தமிழ்த் தேசிய முதலாளியர் - தொழிலாளர் - வாணிகர்கள் என்ற வகுப்புகளை அரசியல் களத்தில் கொண்டுவந்து நிறுத்துவதுதான் என் பணியின் முதல் கட்டமாக இருக்கும். அதற்கான எந்தக் களப் பணியிலும் இதுவரை என்னால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடைய முடியவில்லை. இதுவரை அதற்கான துணை கிடைக்கவில்லை. என் வாழ்நாளில் அது கிடைக்காமலே கூடப் போகலாம். அந்தப் பணி பிறரால் கூட, பின் இன்னொரு நாளில் நிறைவேறலாம்.

நான் உறவுகளைத் தேடியோ நட்புகளை நாடியோ இங்கு வரவில்லை. புற உறவுகளோ நட்புகளோ இன்றி வாழ்ந்து பழகிவிட்டவன் நான். என் குடும்பம் என்ற மிகச் சிறு வட்டம் என் அந்தத் தேவைக்குப் போதுமானது. அது அரசியல் கொள்கை, கோட்பாடு அடிப்படையில் அமைந்ததல்ல என்பதால் அது தொடர்வதில் பெரும் சிக்கல் இருக்காது.

எனது ஒட்டுமொத்த குறிக்கோள் தமிழக மக்கள் உலகிலுள்ள வேறு எந்த மக்களுக்கும் அடிப்பட்டவர்களாய், அடிமைகளாய் இல்லாமல் உலகிலுள்ள எந்த மனிதக் குழுவுக்கும் இணையாக வரவேண்டும்; தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களும் அவ்வாறே; உலகிலுள்ள எல்லா மக்கள் குழுவினரும் சமநிலையில் வாழ வேண்டும்; அந்தப் பணியைத் தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்; அதற்கு நல்ல கோட்பாட்டு வழிகாட்டி மார்க்சியத்தின் வரலாற்றுப் பருப்பொருளியம், இயங்கியல் பருப்பொருளியம் ஆகியவையே என்பது என் நிலைப்பாடு. பொதுமையியம் இப்போதைக்கு மனித குல வரலாற்றில் இடம் பெற முடியாது; இன்றைய பொதுமைக் கோட்பாடும் பொதுமைக் கட்சிகளும் இயக்கங்களும் மார்க்சியத்தின் மறுப்பு அல்லது அகற்றலே(Negation) என்பது எனது கருத்து. ஏழை நாட்டு மக்களின் இன்றைய துயரங்களுக்கெல்லாம் மட்டுமல்ல வல்லரசுகளின் எல்லையற்ற அரக்கத் தனமான வளர்ச்சிக்கும் காரணம் அந்த ஏழை நாடுகளின் வளர்ச்சி நிலைக்கும் பொருந்தாத பொதுமைக் கோட்பாடும் செயல்திட்டங்களும்தாம் என்பதும் என் உறுதியான கருத்து.

நாம் சந்தித்த ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடையே கருத்துகளில் இடைவெளி தொடங்கி இன்று நெருங்கி வர முடியாத தொலைவில் நாம் இருப்பது போன்ற புரிதல் எனக்கு உள்ளது. மீண்டும் நாம் பழைய புரிதலுக்கு வருவோமா என்பது கேள்விக்குறியே.

தமிழ் அணுவியம் என்ற தலைப்பில் எழுதியிருந்த தங்கள் நூலின் தலைப்பை வள்ளுவத்தின் வீழ்ச்சி என்று மாற்றியதன் பின்னணியில் என்ன முரண்பாடுகள் செயற்படுகின்றனவோ அவையே கர்னாடகத் தமிழர்களின் இன்றைய வீறுகெட்ட மந்த நிலைக்குக் காரணமாகவும் வெளிப்பாடாகவும் எனக்குத் தோன்றுகின்றன. கர்னாடகத் தமிழர்களின் இடையில் உள்ள உறவு நிலைகளை அல்லது உறவுச் சீர்கேடுகளைத் தமிழகத்துத் தமிழ் பேசும் மக்களிடையில் விதைப்பதாக உங்கள் அணுகல் உள்ளது. கர்நாடகத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும் பிறமொழியாளருக்கும் உள்ள முரண்பாடுகளை தமிழக மண்ணில், குறிப்பாக 1956 நவம்பர் 1ஆம் நாளுக்கு முன் பிறந்த(வட இந்தியப் பனியாக்கள் நீங்கலாக) தமிழ் தவிர்த்த வீட்டுமொழி பேசும் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் உருவாக்கித் தமிழகத் தேசியத்துக்குக் கேடுசெய்வதாக உள்ளது.

இன்றைய வானியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று பறையரில் ஒரு பிரிவான வள்ளுவர் சாதியினரைக் குறிப்பிடுகிறீர்கள். அந்த வள்ளுவரில் எத்தனை பிரிவினர் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி தொழில் அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா? அவர்களில் எந்தப் பிரிவினருக்கு வானியல் கண்டுபிடிப்புகள் உரியவை என்பன போன்றவற்றுக்கு விடை தேடியிருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்க விரும்புகிறேன்.

வானியல் உன்னிப்புக்கு அல்லது நோட்டமிடுவதற்கு மக்களில் பல்வேறு தொழில் செய்வோருக்குத் தேவை இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும் போது என் தந்தை பின்னிரவில் எழுந்திருந்து சிறுநீர் கழித்துவிட்டு ″ஏழாங்கோட்டை வெள்ளி″ மேலே இருக்கிறது என்று சொல்லி விட்டுப் படுத்துவிடுவார் அல்லது சாய்ந்து விட்டதென்று கூறி ஊளையிடுவார். அதற்கு மறுமொழியாக வேறு ஊளைகள் கேட்கும். முகத்தைக் கழுவி விட்டுச் சந்தைக்குப் புறப்படுவார். பல வேளைகளில் அவரோடு சந்தைக்குச் செல்பவர்கள் விழித்துக் கொண்டு ஊளையிட்டு இவரை எழுப்புவதும் உண்டு.

என் மனைவியின் ஊர் சற்று ஒதுக்குப் புறமானது. பேருந்து வருமிடமும் ஒலி கேட்காத தொலைவு. பேருந்து வரும் நேரத்தை அறிய வெட்ட வெளியில் நின்று நிழலை அளந்து நேரத்தை அறிவதாக என் மாமனார் கூறுவார்.

அதுபோல் ஊர்ப்புறத்து மக்கள் நெல் அவிக்க வேண்டுமானால் கூட வானத்தையும் பிற அடையாளங்களையும் வைத்து மழை வருமா வராதா என்று அறிவார்கள். பல வேளைகளில் அவர்களது கணிப்புகள் தவறாகப் போய்விடுவதும் உண்டு. ஆனால் இன்றைய வானியல் முன்னறிவிப்பை விட அவர்களது கணிப்புகள் சிறப்பாகவே இருந்தன. இதுபோல் குமுகத்தில் மக்களில் ஏறக்குறைய அனைத்துப் பிரிவினரும் தத்தம் வாழ்நிலை தேவைகளுக்காக தத்தமக்குரிய வானியல் உள்ளடங்கிய, பல்வேறு அடையாளங்களைக் குறியாக வைத்திருந்தனர். உழவன், குயவன், செங்கல் அறுப்போன், இடையன் என்று எத்தனையோ பேர் வானத்தைப் பார்த்து வயிறு வளர்க்க வேண்டியவர் நம் குமுகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளனர். இடையர்கள் என்று எடுத்துக்கொண்டால் இடைக்காடரை விட்டுவிட்டு தமிழர்களின் வானியலை நடுநிலைச் சிந்தனை உடைய எவராலும் பேச முடியுமா? அவரைப் பற்றிய ஒரு தொன்மைக் கதையைப் புறக்கணிக்க முடியுமா? பன்னிரண்டு ஆண்டு வரட்சிக்குப் பின் அவரைப் பார்க்க ஒன்பது கோள்களும் வந்ததாகவும் அவர்களுக்கு தினையை மண்ணில் கலந்து குழைந்து தான் கட்டிய சுவரிலிருந்து தினையைப் பிரித்து ஆட்டின் பாலில் கஞ்சி வைத்து ஊட்டி தலைமாடு, கால்மாடு மாறித் தூங்கிய அவர்களை ஒழுங்காகப் படுக்க வைத்தார் என்ற கதையின் உட்பொருளைத்தான் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? அறுபது ஆண்டுகளுக்கும் அவர் பெயரில் இருக்கும் பாடல்களில் உள்ள தட்ப வெப்பநிலை, வேளாண்மை, செய்தொழில்கள் ஆகியவற்றுக்கான உறவு நிலைகள், விளைந்த முகாமையான உணவுப் பண்டங்களும் ஆமணக்கு போன்ற கொழுப்புப் பொருட்களும், உப்பு போன்ற பண்டமாற்று ஊடகங்களும் என்று அதிலடங்கிய செய்திகள் உலகில் வேறெங்காவது உண்டா? அதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

சேம்சு பெர்க்குசன் என்றொருவர், பெயர் சரிதானா என்று ஐயமாக இருக்கிறது, தொடக்கப் பள்ளியில் படித்தது, எட்டாவதோ, பன்னிரண்டாவதோ கடைக்குட்டி, பள்ளிக்கு விடுக்கவில்லை. அண்ணன்மாரைப் பார்த்து எழுத்தறிவை வளர்த்துக் கொண்டவர். சிறுவனாக இருக்கும் போதே இரவில் ஆடுகளுக்குக் காவலிருந்தார். கையில் செபமாலையை வைத்துக் கொண்டு விண்மீன்களை நோட்டமிட்டு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். பல கதிர்க்கடிகைகளை யாத்தவர்.

இடையர்கள் ஆடுமாடுகளை மேயவிட்டு விட்டு ஓய்வு வேளைகளில் என்னென்னவோ செய்ய முடியும். திருமூலரைப் போல் அரிய சிந்தனைகளையும் உருவாக்க முடியும். இரவில் இடைக்கடரைப் போல், சேம்சு பெர்க்குசன் போல் வானியல் இறும்பூறு பற்றிய புதிர்களை விடுவிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. நீங்கள் குறிப்பிடும் வள்ளுவர்களுக்கு அப்படி இருந்த வாய்ப்பு என்ன?

இனி கடலோடிகளுக்கும் மீனவர்களுக்கும் வருவோம். கடலிலிருந்து பார்க்க கரையும் மரங்களும் கட்டடங்களும் மலைகளும் மறைந்துவிடும் தொலைவில் சென்ற நொடியிலிருந்து பகலில் கதிரவனும் இரவில் வான் பொருட்களும் இன்றி அவர்களால் எவ்வாறு திசையை அறிய முடியும்? அதனால்தான் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் கடற்கரை கண்ணிலிருந்து மறையாத தொலைவுக்குள்ளேயே கடற்செலவு மேற்கொண்டிருந்தனர். தமிழர்களின் முன்னோர்கள் வான்பொருட்கள் மூலம் திசையறிந்து இரவு வேளைகளிலும் நடுக்கடலில் கலம் செலுத்தினர். ஆனால் நாள் முழுவதும் மேக மூட்டத்துடனிருக்கும் காலமழையின் போது எப்படித் திசையறிய முடியும்? அவ்வேளைகளில் அவர்கள் கடற் செலவைத் தவிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் கால், காற்று, காலம், கால மழை போன்ற சொற்கள் வழக்குக்கு வந்தன போலும்.

இந்த இடர்ப்பாடுகளுக்கும் ஒரு முடிவு வந்தது. காந்தத்தின் தன்மையறிந்து காந்த ஊசியைக் கண்டுபிடித்தனர். அதற்குச் சான்றாக காந்த ஊசி தன்னை நிறுத்திக் கொள்ளும் வட திசைக்கு ஊசித் திசை என்ற பெயர் வந்தது. இந்தக் காந்த ஊசியை ஆமை வடிவில் அமைந்த கொள்கலனில் உள்ள எண்ணெயில் மிதக்கவிட்டனர், இரும்பாலான அந்த ஊசி துருப்பிடிக்காமல் இருக்கவும் நூல் போன்றவற்றில் தொங்கவிட்டால் துல்லியம் இருக்காது என்பதாலும். இந்த ஆமை தொன்ம வடிவில் திருமாலின் தோற்றரவுகளில் ஒன்றாக மறைந்து கிடக்கிறது. சீனர்களின் வரலாற்றில் அம்மணமான உண்மையாகப் பதிவாகியிருக்கிறது. தமக்குள் முரண்பாடு கொண்ட இரு நிலப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ″ஆமை″யைப் பயன்படுத்தி குமரிக் கடலைக் கலக்கியதில் எத்தனை எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை இயற்றினர் என்று நம் தொன்மங்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகளில் உங்கள் ″வள்ளுவர்″களின் பங்கு யாது? இப்படிப் பல்வேறு மக்கள் குழுவினரிடையிலும் பொதுமக்களிடையிலும் பரந்துகிடந்த உண்மைகளை ஒருவரோ பலரோ தொகுத்திருக்கக் கூடும். அவர்கள் யார்? அவர்களுக்கு ″வள்ளுவர்″களோடு ஏதாவது உறவு உண்டா என்றாவது உங்களால் காட்ட முடியுமா?

தெற்கன் ஆகிய தட்சன் தன் மக்களில் 27 மகள்களை நிலவுக்கு மணம் முடித்துக் கொடுத்தான் என்று தொன்மம் கூறுகிறது. கதிரவன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் புவியிலிருந்து பார்க்கும் போது 27⅓ நாட்கள், கிட்டத்தட்ட (உண்மையாக அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வது 25⅓ நாட்களில் கிட்டத்தட்ட) அந்த 27⅓ நாட்களை 27 ஆகப் பிரித்து 27 நாண்மீன்களாக வகுத்துள்ளனர். அவற்றை நிலவின் இயக்கத்தோடு சேர்த்துக் கணித்தவன் தெற்கன் என்பது இந்தத் தொன்மக் கதையின் உள்ளடக்கம். ஆனால் நீங்களோ, யாரோ எழுதியவற்றை வைத்துக்கொண்டு, தொன்மங்கள் வான்பொருட்களின் இயக்கங்களை விளக்குகின்றன என்று தலைகீழ்ப் பாடம் படிக்கிறீர்கள். தொன்மங்களின் மனித வரலாற்றுக் குறிதகவுகளிலிருந்து உங்கள் படைப்புகளைப் படிக்கும் மக்களின் கவனத்தைத் திருப்புகிறீர்கள். சிவன் காலனை உதைத்தாக வரும் கதை உண்மையில் காலசாமி வழிபாட்டை ஒழித்துச் சிவன் வழிபாட்டை நிறுவிய நடைமுறையின் ஒரு பதிவு. (எங்கள் வட்டாரத்து அம்மன் கோயில்களில் இன்றும் காலசாமி பீடங்கள் உள்ளன. கொடைவிழாவின் போது மார்க்கண்டன் கதையை வில்லில்பாடும் போது காலசாமி வந்து ஆடுகிறார். இவ்வாறு பல சிறுதெய்வங்களையும் பெருந்தெய்வங்கள் அகற்ற முயன்று தோற்றுப்போன வரலாற்றுண்மையின் புதைபடிவங்களாக ஊர்ப்புற வழிபாடுகள் நிலவுகின்றன.) அதில் வான் பொருட்களின் இயக்கத்தைத் தடம்பிடித்து, இந்தக் குமுக வரலாற்றிலிருந்து உங்கள் எழுத்து திசை திருப்புகிறது. ஒவ்வொரு நாண்மீனுக்கும் தலைவர்கள் இன்னின்னாரென்று ஏதோ நூலில் உள்ளவற்றைப் படித்து எழுதியுள்ளீர்கள். ஒருவேளை அந்தத் தலைவர்கள் தாம் அந்தந்த நாண்மீனை இனம் கண்டவர்களாக இருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றவில்லை.

இவ்வாறு அரிய கருப்பொருட்களை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு சாதிப் பெருமைபேசி அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

நாள், பக்கம், நாண்மீன், யோகம், கரணம் என்ற ஐந்து உறுப்புகளைக் கொண்ட பஞ்சாங்கம் எனப்படும் ஐந்திறத்தை, இந்த ஐந்து உறுப்புகளுக்கும் ஒரு பட்டியல், பகல் நேர நீட்சியான ″அகசு″க்கொரு பட்டியல், கதிரவனின் ஒரு நாளின் 60 நாழிகைக்குள் இடம்பெற்றிருக்கும் ஓரையைக் காட்டும் ஒரு பட்டியல், அந்தந்த மாதத்தில் ஓரைகளின் இருப்பைக் காட்டும் ஓர் ஓரை வட்டம் ஆகியவற்றைக்கொண்டதாகப் படைத்துள்ளனர். வாக்கியம் என்பது பட்டியலைக் குறிக்கும் சொல். எனவே இதனை வாக்கிய ஐந்திறம் என்கின்றனர். புலனங்களை எடுத்துவைப்பதற்கு வாகாக(வாக்காக என்பதுதான் குமரி மாவட்ட வழக்கு) இருப்பதால் பட்டியலை வாக்கு என்று குறித்திருக்கலாம். அதை உருவாக்கியவர் சிவவாக்கியராக இருக்கலாம். இந்த ஐந்திறம் பாண்டியர்களின் தலைநகர் நிலநடுக்கோட்டில், தென் மதுரையில் அமைந்திருந்தபோது அல்லது அதற்கும் முன்பு உருவாகியிருக்க வேண்டும், ஏனென்றால் இப்போதிருக்கும் ஐந்திறத்தில் முதன்மைப் பட்டியல் தலைநகர் கபாடபுரத்துக்கு மாறி ஆண்டுப்பிறப்பு 24 நாட்கள் பின்னோக்கி நகர்ந்த பின்னுள்ள காலத்துக்கு உரியவையாக இருந்தாலும் பழைய நிலைமைக்கு உரிய பதிவுகளையும் அவை கொண்டுள்ளன. இது நம் மரபின் ஒரு சிறப்புக் கூறு. மாற்றங்கள் வரும்போது பழையவற்றின் இடைச்சொருகலாகப் புதியவற்றை வைப்பது ஓர் உத்தி. இங்கே புதியவற்றின் இடைச்சொருகலாகவும் பழையவற்றை அப்படியேயும் இரு உத்திகளையும் கையாண்டுள்ளனர். மாதத் தலைப்பில் மிதுனரவி என்று போட்டிருந்தால் 7, 8, அல்லது 9ஆம் நாளில் கடகாயனம் என்ற குறிப்பு உள்ளது. அன்றே கதிர் உண்மையில் மிதுனத்திலிருந்து கடகத்தினுள் நுழைந்துவிடுகிறது என்பது இதன் பொருள்.

″அகசு″க்கான பட்டியலில் 1, 5, 15 என்று ஐந்தைந்து நாட்களுக்காக பகல் நேர நீட்சியைக் கொடுத்திருக்கையில் 5க்கும் 15க்கும் இடையில் மட்டும் கடகாயனம் என்று குறிப்பிட்டிருக்கும் நாளுக்குக் கொடுத்திருக்கிறது.

அதுபோலவே ஒவ்வொரு மாதத்திலும் கதிர் தோன்றும் நேரத்தில் குறிப்பிட்ட ஓரையின் இருப்பு நேரத்தைக் காட்டும் பட்டியலும் அடுத்த மாதத்துக்குத்தான் பொருந்தும்.

அதுமட்டுமல்ல 12 நேர் கோடுகளில் 12 ஓரைகளையும் காட்டும், நம் கணியர்கள் பயன்படுத்தும் ஓரைவட்டம் ஆகிய அந்தப் பட்டியல் நமக்கு என்றும் பெருமை சேர்க்கும் சிவவாக்கியரின் அருஞ்செயலாகும். இவ்வாறு, பட்டியலிடும் உத்தியை உலகுக்கு வழங்கியவர்களே நாமாகலாம்.

இதைச் செய்தவர் அல்லது செய்தவர்கள் வள்ளுவர்கள் என்றாவது நம்மால் நிலைநாட்ட முடியுமா?

நானறிந்தவரை வள்ளுவர்கள் என்ற சாதியார் தமக்கே உரிய ஓர் ஒப்பற்ற முறையில் சாதகம் கணித்துப் பலன் சொல்பவர்கள் என்பது தெரியும். ஆனால் குமரி மாவட்டத்தில் அவர்கள் செயற்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. நெல்லையில் ஒரு நண்பர் சொல்லித்தான் தெரியும். அவருக்கு வள்ளுவர் எழுதிக்கொடுத்திருந்த சாதகக் கட்டின் கனத்தைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். நான் அதுவரை தமிழகத்தின் பிற பகுதிகளில் கூட ஒற்றைப் பனை ஓலை நறுக்கில் எழுதப்பட்ட சாதகக் குறிப்பை அல்லது ஒரு சிறு குறிப்பேட்டில் எழுதப்பட்டதைத்தான் பார்த்திருக்கிறேன். நிற்க, நான் சொல்ல வருவது என்னவென்றால் வள்ளுவர்கள் வானியல் நுட்பங்களைத் தாமாக அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச் சூழலை இனங்காணாமல் இன்று பஞ்சாங்கங்களில் கிடைக்கும் வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து சாதகம் பார்ப்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள்தாம் அனைத்து வானியல் கண்டுபிடிப்புக்கும் மூலவர்கள் என்பது பேருந்து, சரக்கி ஓட்டுநர் அனைவரும் ஒன்றுசேர்ந்து தாங்கள்தாம் உள்ளெரிப் பொறிகள்(Internal combustion engines) உட்பட உந்துத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூலைப் படித்ததிலிருந்து, இது வள்ளுவத்தின் வீழ்ச்சி அல்ல, குணாவின் வீழ்ச்சி என்று நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அது கூடப் பெரிதில்லை. தமிழகம் இந்தியப் பனியா அரசின் பின்னணியோடு சுரண்டப்படுவதை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட்டுக் கொண்டிருந்த குணா திடீரெனத் திசைமாறி தமிழக மக்களிடையில் மொழி அடிப்படையில் பகைமை வேர்கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியது எனக்குப் பேரிடியாக இருந்தது. இப்பொழுது தமிழ் பேசும் மக்களிடையில் கூட சிவனியத்துக்கு எதிராகவும் கருத்துச் சொல்லத் தொடங்கியுள்ளது, தன் செயல்களின் தன்மையையும அவற்றின் விளைவுகளையும் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டதையே காட்டுகிறது. வேறு வகையான சிந்தனைகள் உங்களை ஆட்கொண்டு விடாதபடி விடுதலை இறையியல் கூட்டம் அரணிட்டுக் காத்து நிற்பது ஊரறிந்த உண்மையாகிப் போனது. இதைப் பயன்படுத்தி படையெடுப்பாளர்களின் காலைப் பற்றிக்கொண்டு தமிழகத்தில் நாட்டுணர்வுடன் பகைவர்களை எதிர்த்துநின்ற மண்ணின் மைந்தர்களை ஒடுக்கிய, இன்றும் ஒடுக்கி வரும் சாதி வெறிபிடித்த ″தமிழ்″ச் சாதியினர் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பதும் அனைவருக்கும் தெரிகிறது.

தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், தமிழகத்தில் உணர்வும் ஈகை நோக்கும் உள்ள இளைஞர் மட்டுமல்ல மூத்தவர்களையும் கொண்ட கூட்டம் ஒன்று உங்கள் வழிகாட்டலில் தங்கள் சிந்தனைகளைத் திருப்பிக்கொண்டு நிற்கிறது. அவர்களுக்குத் தவறான வழியைக் காட்ட வேண்டாம். தமிழக மக்கள் பொருளியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டிய சரியான பாதையை அவர்களுக்குக் காட்டுங்கள். புற முரண்பாடுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய கற்பனைக் கெட்டாத கடும் போரில் உள்முரண்பாடுகள் உருகி மக்கள் ஒன்றாகக் கலந்து விடுவார்கள் என்று வரலாறு நெடுகிலும் நாம் காணும் உண்மையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மேலே எழுதிய கருத்துகளின் மூலம் தங்கள் மனதுக்கு ஏதாவது வருத்தம் நேர்ந்திருந்தால் அதற்காகவும் என்னை மன்னித்திருங்கள்.

நான் தங்களுக்குப் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவற்றைப் பற்றி ஏற்கனவே அந்தக் குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன். அதனை மீண்டுமொருமுறை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்
குமரிமைந்தன்.

26.9.08

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

உலகை இன்று ஒரு பொருளியல் நெருக்கடி கவ்விப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடிப்படை விசை மூலமான கன்னெய்யப் பொருட்களின் விலை நஞ்சாக ஏறிக்கொண்டிருக்கிறது. உலகின் பொது நாணயம் என்ற நிலையிலிருந்த அமெரிக்க டாலர் அந்த இடத்தை இழக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் உச்சாணியில் நிற்கிறது. பண்டங்களின் விற்பனை குறைந்து வருகிறது. இதன் இறுதி விளைவாக உலக மக்களில் அடித்தளத்திலிருப்போர் பட்டினியால் மடிய நேரிடும் என்பது இன்றைய நிலை.

இதன் உண்மையான காரணம் என்ன? இதற்கு முன்பு நேர்ந்த பொருளியல் நெருக்கடிகளில் பெரும்பான்மையும் மக்களிடம் பணச் சுழற்சி குறைவால் உருவானவை. இந்தகுறை பணச் சூழற்சி மிகுந்ததால் நெருக்கடி முற்றி நிற்கிறது. இதற்கு முகாமையான காரணம் புலனத் தொழில்நுட்பத்தின் அளவுக்கு மீறிய வளர்ச்சி எனலாம்.

சென்ற 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள் ஏழை நாடுகளைத் தங்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய நாடுகளையின் மூலமும் தத்தம் நாடுகளிலிருந்தும் பல்வேறு உதவித் திட்டங்களைச் செயற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஏழை நாடுகளிலிருந்து எண்ணற்ற அறிவியல் - தொழில்நுட்ப, குமுகியல், வரலாற்றியல் தரவுகளைத் திரட்டிக்கொண்டன. அவற்றைத் ஒன்றிணைந்து ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சியிலிருந்துதான் கணினித் தொழில்நுட்பம் பாய்ச்சல் நிலை அடைந்தது என்று சொல்லவேண்டும். இதற்கு வேண்டிய பணிப்படையை உருவாக்குவதற்கேற்ற வகையில் ஏழை நாடுகளிலுள்ள கல்வி நிலையங்களை வடிவமைத்து அவற்றிலிருந்து வெளியேறியவர்களை மலிவாகப் பெற்றுக் கொண்டன. அவர்களுக்குத் தங்கள் நாட்டில் கிடைப்பதுபோல் பலமடங்கு சம்பளத்தை வழங்கியதால் மேலும் மேலும் மக்கள் அந்நாடுகளில் குவிந்தனர். அங்கே இந்த ஊழியர்கள் ஈட்டிய பணம் அவர்களின் தாய்நாடுகளுக்கு வந்தாலும் அதனை ஆக்க வழியிலான முதலீட்டுக்கு அந்த நாடுகளில் வழியில்லை. இந்த வல்லரசுகள் இந்த நாடுகளில் தங்கள் உதவித் திட்டங்கள் மூலமாகப் பரப்பியிருந்த பாட்டாளியக் கோட்பாட்டைப் பற்றிக்கொண்ட ஆட்சியாளர் இந்த முதலீடுகளைத் தடுத்ததுதான் அடிப்படையான காரணம். எனவே இந்தப் பெரும் பணம் அசையாச் சொத்துகள், நுகர்வு என்று பாய்ந்து நிலங்களை வேளாண்மையிலிருந்து விடுவித்தன. இதனை எளிமையாக்கியது பாட்டாளியக் கோட்பாட்டைப் பயன்படுத்தி உழவர்களின் வாழ்வைப் பறித்த ஆட்சியாளர்களின் செயல்பாடுதான். பணப் பாய்ச்சல் ஒருபுறம் என்றால் உணவு விளைப்பு முடக்கம் இன்னொரு பக்கம்.

அமெரிக்காவில் மக்களை ஈர்த்துத் தேர்தலில் வெற்றி பெற அங்கு ஆட்சிக்கு வந்த புசு குடும்பத்தினர் 10 ஆண்டுகளில் இரண்டு முறை ஈராக்கு மீதும் ஒருமுறை ஆப்கானித்தான் மீதும் படையெடுத்து குண்டுகளை மழையாகப் பொழிந்தார்கள். அங்கே தற்காலிகமாக உருவாகியிருந்த பொருளியல் நெருக்கடிக்குத் தீர்வாக அங்கு போர்க் கருவித் தொழிற்சாலைகளில் தேங்கிக் கிடந்த ஆயுதங்களை அரசே வாங்கி அயல் நாடுகளில் வானவேடிக்கை காட்டியது. இதனால் அந்தத் தொழிற்சாலைகள் புதிய ஆயுதங்களில் முதலிட்டு பணப் புழக்கத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அவற்றை மக்கள் நுகர்பொருட்களாக்க முடியாதே. இந்தப் பணப் புழக்கமும் அங்கு பணவீக்கத்தை ஏற்படுத்தியது.

அதுபோலவே தேர்தல் கவர்ச்சிக்காக காப்பீடு, மருத்துவம் முதலியவற்றிற்கு அரசு வழங்கிய உதவிகள் பணப்புழக்கத்தை மிகுத்தன. மருத்துவ மறுபெயர்ப்பு(Transcription) பணிகள் போன்று எண்ணற்ற வேலைகளை வெளிநாடுகளுக்கு வெளிப்பணியாகக் கொடுத்ததன் மூலம் அந்த நாடுகளிலும் பணப்புழக்கம் உயர்ந்தது. இந்தியாவில் அரசியல்வாணர்கள் ஊழலில் திரட்டிய பணத்தைப் பலவழிகளிலும் கட்சிக்காரர்களுக்கு வாரி வழங்கியதில் உழைக்காமல் பிழைக்கும் ஒரு பெருங்கூட்டம் உருவாகியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் நாள்தோறும் அரசியலில் இறங்கும் திரை நடிகர்கள் அவர்களுக்கு மறைமுகமாகப் பணம் வழங்கும் பெரிய கட்சிகளிடமிருந்து பெற்றுப் புழக்கத்தில் விடும் பணம் ஏராளம். தமிழகத்திலுள்ள இளைஞர்களில் பெரும்பாலோர் ஒன்றுக்கு மேற்பட்ட, சிலர் நான்கைந்து கூட கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளை வைத்திருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் மிக வரண்ட மாவட்டங்களில் கூட உடலுழைப்புப் பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலை இருக்கிறது. காந்திகிராமம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் கருவிகளைக் குறைத்து மனித உழைப்பை மிகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இங்கு கூட்டுறவுத் துறையின் தலைவர் ஊர்ப்புறங்களில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை, கருவிக்களை நாடுவது தவிர வேறு வழியில்லை என்று தன் கனப்பட்டறிவிலிருந்து கூறினார்.

ஓங்கலையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் தரமான குடியிருப்புகளைக் கட்டித் தந்து அவர்களது தொழில் மேம்பாட்டுக்கும் வழிவகுக்காமல் சகட்டுமேனிக்குப் பணத்தை அள்ளி வீசுவதால் அவர்கள் மீன்பிடிக்கச் செல்வது குறைந்து மீன் விலை கூடியுள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

இதற்கு ஊடாக, நம் நாட்டில் படிப்பவர்கள் எல்லாம் ஏதாவது வெளிநாட்டில் வேலை கிடைக்காதா என்றும் படைப்பவர்கள் எந்த நாட்டுக்காவது ஏற்றுமதி செய்யலாமே என்றும் கருதும் நிலை உறுதியாகிவிட்டது. அப்படியானால் வெளியில் வேலை செய்வோர் பணத்தை உள்ளே விடுவர். பண்டம் படைப்போர் அதனை வெளியே விடுவர். ஆக, பண அளவு கூடும். பண்டத்தின் அளவு கூடாது குறையவும் வாய்ப்புண்டு.

அத்துடன் இன்றைய தொழில் வளர்ச்சி என்பதை ″வெளிநாட்டு நேரடி முதலீடு″ என்ற வளர்ச்சியின் ஒரு வடிவம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. இதன் உள்ளடக்கம் நமக்குப் பயன்படாத பொருட்களை உருவாக்குவதற்கு நமது மின் ஆற்றல், நீர்வளம், நிலவளம், போக்குவரத்து வசதிகள் என்று அனைத்தையும் பயன்படுத்துவது. இதன் மூலம் நமக்கு இந்த வளங்களின் மீதுள்ள ஆளுமை குறைகிறது.

இதுதான் இன்றைய உலகின் நிலை. பணச் சுழற்சி இன்மையால் உருவாக்கி விளைப்புகாரத் துறைகளில் புழங்க விட வேண்டும் என்று கெயின்சு கூறியபடி த்தை சுழல விட்ட பணம் அளவுக்கு மீறி விட்டதால் பணத்தின் மதிப்பும் பண்டங்களின் வழங்கலும் குறைந்து அதனாலேயே மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. பண்ட வழங்கலுக்கும் பணப் புழகத்துக்குமான சமநிலையைப் பேண வேண்டிய இன்றியமையாமையை இது விளக்குகிறது.

இந்த இக்கட்டிலிருந்து விடுபடுவது எவ்வாறு?

நம் நாட்டில் நிலவுவது பொருளியலாளர்களின் கருத்துப்படி உண்மையான பணவீக்கம் அல்ல. உண்மையான பணவீக்கம் என்பது அனைத்து மக்களும் வேலைவாய்ப்பு பெற்று முழுமையான, அதாவது தன்னிறைவு பெற்ற தொழில்வளர்ச்சியும் எற்பட்ட பின்னரும் வரும் கூடுதல் பண வழங்கலால் உருவாவது (Monetary Economics, M.L.Seth,1992,p.160–1). அது இல்லாமல் நம் நாட்டில் போல் தன்னிறைவும் இன்றி முழுமையான வேலைவாய்ப்பும் இன்றி இருக்கும் ஒரு நாட்டில் கூடுதல் பணப்புழக்கம் தொழில்வளத்தைப் பெருக்கி மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். இங்கே அது நடைபெறாததற்கு செயற்கையான தடைகள்தாம் காரணம். கெடுபிடியான வருமான வரிக்கு அஞ்சிய பணம் அரசின் கணிப்புகளை மீறி நுகர்வுச் சந்தையில் முக்காடு போட்டுக் கொண்டு நுழைவது ஒரு காரணம். ஐரோப்பாவில் பிறந்து நம் நாட்டுக்கு வந்த பங்குச் சந்தைச் சூதாட்டம் தொழில்துறையில் முதலாக வேண்டிய பல கோடி கோடி உரூபாய்களை அந்தச் சூதாட்டச் சந்தைக்குள் சுழலவிட்டிருப்பது ஒரு காரணம். பங்கு மூதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய ஈவுத் தொகை தொழில் முனைவோரால் ஏமாற்றப்பட்டு முன்பேரச் சூதாட்டங்களில் பயன்படுத்தப்பதுவது இன்னொரு காரணம். பெருந்தொழிலாகிவிட்ட கல்வி வாணிகர்களும் இதில் ஈடுபடுகின்றனர். அரசு திட்டமிட்டு மக்களின் முதலீட்டு வாய்ப்புகளை நசுக்கி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அந்த வாய்ப்பை வழங்கி எஞ்சிய பணமெல்லாம் நுகர்வுச் சந்தையில் மட்டும் நுழைவது அனைத்துக்கும் அடிப்படைக் காரணம். அமெரிக்காவில் கூட பணித்துறைகளில் முதலீட்டைக் குறைத்து பண்ட விளைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

அனைத்து வளங்களுமே வேளாண்மையில் இருந்துதான் உருவாகின்றன என்பது ஒரு பொருளியல் கோட்பாடு. இது 18 ஆம் நாற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த பிராங்கோயி குவிசுனே என்பவரால் உருவாக்கப்பட்டது. இதனை இயற்பாட்சிக் கோட்பாடு(Physiocracy) என்பர். இதனை மார்க்சு ஏற்கவில்லை. வளங்கள் தொழிற்சாலைகளினுள்ளிருந்துதான் வெளிப்படுகின்றன என்பது அவரது கட்சி. ஆனால் அவரது கட்சியை அவரது தலை மாணாக்கராக வெளிப்பட்ட லெனினே உடைக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் வந்தது.

சோவியத் புரட்சி நடந்த நிலையில் ஐரோப்பிய முதலீட்டாளர்களையே நம்பியிருந்த உருசியத் தொழில்களை எல்லாம் அவர்கள் இழுத்து மூடிவிட்டனர். எதுவுமே இன்றி வெற்றுத்தாளாக இருந்த சோவியத்தின் பொருளியலை அடியிலிருந்தே பிடித்து வளர்க்க வேண்டிய வரலாற்றுத் தேவை லெனினுக்கு ஏற்பட்டது. எனவே அவர் புதிய பொருளியல் கொள்கை (New economic policy NEP) ஒன்றை வகுத்தார். அதன்படி உழவர்கள் வேளாண்மையில் கிடைக்கும் பண்டங்களில் அரசு குறிப்பிடும் ஒரு பகுதியை அரசு நிறுவும் விலையில் அரசிடம் கொடுத்துவிட்டு எஞ்சியதைத் தங்கள் விருப்பம் போல் விற்றுக் கொள்ளலாம் என்றார். (நம் ஆட்சியாளர்கள் அனைத்தையும் தாம் உரிமம் வழங்கியுள்ள வாணிகர்களுக்குத்தான் விற்க வேண்டும் என்று கொல்வதை விட தோழர் லெனினின் வேண்டுகோள் எவ்வளவு மாந்தன்மையானது என்று பாருங்கள்). அரசு அந்த உணவுப் பொருட்களை ஆலைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து ஆலைகளிலிருந்து கருவிகளை உருவாக்கி உங்களுக்கு வழங்குவோம் என்றார். ஆக இயற்புக் கோட்பாடு இதன்மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

இதனால் மார்க்சின் பெருமை குறைந்து விடவில்லை. அவரது கோட்பாடு என்றும் கையாளத்தக்கது. அடிமைக் குமுகம், நிலக்கிழமைக் குமுகம், முதலாளியக் குமுகம், பொதுமைக் குமுகம் என்ற ஒவ்வொன்றுக்கும் அவ்வவற்றுக்கே உரிய குமுகக் கட்டமைப்பு இயல்பாகவே அமையும் என்பதும் இயற்கையும் குமுகமும் மனிதச் சிந்தனையும் என்றுமே தேங்கிப் போவதில்லை மாறிக்கொண்டே இருக்கும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதாகும். ஆனால் அவரது செயல்திட்டத்தில்தான் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அல்லது மகமை தண்டும் கட்சிக்காரர்களால் திசை திருப்பப்பட்டது எனலாம். ஐரோப்பாவை நினைத்துக்கொண்டு பாட்டாளியே புரட்சிகரமானவன் என்பதை வல்லரசுகள் வளர்ச்சியடையாத ஏழை நாடுகளை நசுக்குவதற்குப் பயன்படுத்திவிட்டன, பொதுமைக் கட்சியினரின் தந்திரமான ஒத்துழைப்புடன்

இதைவிடக் கொடுமையான குழப்பத்தைக் கெளதம புத்தர் ஏற்படுத்தினார். மார்க்சியக் கோட்பாட்டுக்கு இணையானது புத்த மதக் கோட்பாடு உலகில் எதுவுமே நிலையானதல்ல, மாயத்தக்கது, மாயை, அதாவது மாறிக்கொண்டே இருப்பது என்பது. ஆனால் மக்களின் இன்னல்கள் தீர வேண்டுமாயின் அவாவை அறுக்க வேண்டுமென்று திட்டம் வகுத்து சங்கத்து உறுப்பினர்கள் கையில் திருவோட்டைத் தூக்கிக் கொடுத்துவிட்டார், இன்று நம் தோழர்கள் பாட்டாளியரின் கைகளில் கொடுத்துள்ளது போல.

பணவீக்கத்தை எதிர்கொள்ள அருண் பிரோடியா என்பவர் பல வழிகளைக் கூறியுள்ளார் (How To Beat Inflation, The Times of India, 08-07-08, p.14). அவற்றில் ஒன்று 1000, 500, 100 உரூபாய்த் நாணயத் தாள்களை ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து செல்லுபடியாகாதென அறிவிக்க வேண்டும். அதற்குள் அவற்றை அனைவரும் வங்கிச் சேமிப்பில் செலுத்திவிட்டு வருமானவரி கட்ட வேண்டும். அல்லது வளர்ச்சிப் பத்திரங்களில் முதலிட்டு வரி விலக்குப் பெறவேண்டும். பணம் வந்த வழியைக் கூற வேண்டியதில்லை என்கிறார். அரசியல் வாணர்களும் அதிகாரிகளும் பணக்காரர்களும் ஏமாற்றி பணமாகவோ எந்தவகை முதலீடாகவோ செய்திருந்தாலும் அவற்றை அறிவித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதை மடை திருப்பினால் ஒரே ஒரு முறை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம் என்று அதில் ஒரு மேம்பாட்டை நாம் முன்மொழிகிறோம்.

உருசியாவில் ″திறந்த செயற்பாடு″ என்ற முழக்கத்தின் பின்னணியில் உருவான மக்கள் எழுச்சியின் போது ஓர் அரசியல் தலைவர் இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்தார். அதை அன்றைய கோர்ப்பசேவும் கூட்டாளிகளும் கேட்டு செயற்பட்டிருந்தால் இன்று அமெரிக்காவின் முன் உரு\சியா கையைப் பிசைந்துகொண்டிருக்க நேரிட்டிருக்காது. தங்கள் நாட்டில் உருவான செல்வங்களையே தங்கள் நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

செல்வம் சேர்ப்பவர்கள் பற்றி நம்மிடம் உள்ளவற்றில் மிகப் பழம் இலக்கிய இலக்கணமாகிய தொல்காப்பியம் கூறுவதைக் கொஞ்சம் பார்ப்போம்.

....நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப பொருள்வாயின் ஊக்கிய பாலினும் .... தொல். பொருள் .41

அதாவது யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, தாளாண்மை, தகுதி, வறுமை, செல்வம், அன்பு, பிரிவு என்று எட்டுவகை மாந்த இயல்புகளையும் கூறுபாடுகளையும் கைவிட்டுப் பொருள் சேர்த்தல் என்பதனையே குறியாகக் கொண்டவர்களை இது கூறுகிறது. இவர்களை யாராலும் மாற்ற முடியாது. குமுகத்தின் ஒரு நோயாகவே விளங்குவர். ஆனால் அவர்களும் வட்டிக்குக் கடன் கொடுத்தல் போன்ற சில நடைமுறைகளால் தற்காலிக உதவிகளைப் பிறருக்குக் செய்யலாம். ஆனால் முதலாளியக் குமுகத்தில் முதலீடு என்ற ஆக்க வழியில் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வதும் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த செல்வத்திரட்சி தொழிலாளர்களின் கைப்பிடிக்குள் வருவதும் இயல்கின்றன. உலகளாவுதல் என்ற வஞ்சக வலையில் உலகம் சிக்காமல் இருந்திருந்தால் இது என்றோ பணக்கார நாடுகளில் நிகழ்ந்திருக்கும்.

இந்த நற்கூறைச் செயற்பட விடாமல், நிலக்கிழமைக் குமுகத்திலிருந்து நேரடியாகப் பொதுமைக் குமுகத்தினுள் குதித்துச் செல்லத் திட்டமிட்டதால் உலகம் இன்று பொறியில் சிக்கிக் கிடக்கிறது. அந்தப் பொறியிலிருந்து விடுபட வேண்டுமாயின் மக்களிடமிருக்கும் அனைத்துச் செல்வங்களையும் வளங்களையும் வளர்ச்சித்துறைகளினுள் பாயவிட வேண்டும். அதற்கு வேளாண்துறையில் முதலீட்டை ஊக்கவேண்டும் அவ்வாறு ஊக்குவதற்கு முதல் தேவை வேளாண்மை மீது பூட்டியிருக்கும் விலங்குகளை உடைப்பது. அதனைச் செய்வோம்!

(இக்கட்டுரை தமிழினி செப்டம்பர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

பிண்டத்துள் அண்டம்

பிண்டமாகிய மனித உடலுக்குள் இயற்கையின் ஒட்டுமொத்தமாகிய அண்டமே அடங்கியுள்ளதாம், சொல்கிறார்கள் நம் ஆன்மீகர்கள். பிண்டத்தில் உள்ள அண்டத்தைப் பார்க்க வேண்டுமா? எடுத்துக் கொள்ளுங்கள், மான்தோல் அல்லது புலித்தோலை. விரியுங்கள். ஆடைகளைக் களைந்து தாழ்ச்சீலை(கோவணம்) மட்டும் கட்டிக்கொள்ளுங்கள். அம்மணமாக இருப்பது சிறப்பு. விரித்த தோலின் மேல் சப்பணமிட்டு அமருங்கள். முடிந்தால் தாமரை இருக்கையாக(பத்மாசனமாக) அமரலாம். இப்போது உங்கள் இரண்டு கண்களின் பார்வையையும் உங்கள் மூக்கின் நுனியில் குவித்துக்கொள்ளுங்கள். உங்கள் மூச்சு வலது மூக்கில் செல்கிறதா, இடது மூக்கில் செல்கிறதா அல்லது இரண்டு மூக்குகளிலுமே செல்கிறதா என்று நோட்டமிட வேண்டும். அப்புறம் அந்த மூச்சைத் தடம்பிடித்து உடலினுள் எங்கெங்கே செல்கிறது என்று கவனித்துக் கொண்டே சிறிது சிறிதாக மூச்சைக் குறைத்துக்கொண்டே வந்தீர்களானால் நாடித்துடிப்பும் குறையும். இப்படிக் குறையுந்தோறும் நீங்கள் பிறந்தபோது உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மூச்சுகளும் நாடித் துடிப்புகளும் தீர்வதுவரை கூடுதல் காலம் வாழ்நாளை நீங்கள் நீட்டலாம். அது மட்டுமல்ல, மூச்சின் எண்ணிக்கை குறையக் குறைய ஆங்கிலத் திரைப் படங்களில் அண்ட வெளியில் மனிதர்கள் நுழையும் காட்சிகளில் பார்ப்போமே அதுபோல் அப்படியும் இப்படியும் சுழலும் அண்டவெளியை உங்கள் பிண்டத்துக்குள் நீங்கள் காணலாம். முச்சு குறைந்ததனால் வந்த மயக்கத்தில் இவற்றைக் காண்பதாக யாராவது கூறினால் நம்பாதீர்கள். (ஏதாவது ஐயம் இருந்தால் ஞானியின் கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை? என்ற நூலைப் படித்துப் பாருங்கள்.) அது மட்டுமல்ல நீங்கள் இதன் மூலம் கடவுளே ஆகிவிடலாம். இப்படிச் செல்கிறது நம்மவர்களின் ஆன்மீகத் தேட்டம். இப்படி அமர்ந்திருப்பவன் கடவுள், அவனுக்கு மான்தோலோ புலித்தோலோ கொண்டுவருபவனும் வயலிலும் காட்டிலும் மேட்டிலும் உழைத்துப் பாடுபட்டு உண்ணவும் உடுத்தவும் உறங்கவும் தேவைப்படுபவற்றைக் கொண்டு தருபவனும் வினைபுரிந்து மீண்டும் மீண்டும் பிறந்து உழல்பவர்கள் என்று செல்கிறது ஒப்பற்ற நம் ஒட்டுண்ணிக் கோட்பாடு.

இப்படி உட்கார்ந்தே இருப்பவன் நீண்ட காலம் வாழ்வதால் அவனுக்கோ உலகுக்கோ என்ன ஆதாயம் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் ஒரு முட்டாள்.

மலை, காடு, கடல் என்று எதையும் விடாமல் அலைந்து திரிந்து மூலிகைகளைத் தேடி அவற்றின் வேர் முதல் விதைவரை உள்ள தன்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நிலைத்திணை வாகடங்களை உருவாக்கி விலங்குகள், மண், கல், கனிமங்கள் என்று அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தி வானியலையும் வளர்த்தவர்கள் நம் அறிவியல் - தொழில்நுட்பச் சித்தர்கள். அவர்களின் பெயரால் குத்தகை உழவனின் உழைப்பில் அமர்ந்து உண்டு வாழ்ந்திருந்த ஒட்டுண்ணிகள் ஆகமக் கோயில்கள் தம் சொத்துகளைப் பறித்துக்கொள்ளாமல் காக்கவும் அந்த இடைவெளியில் குத்தகை உழவன் விழித்துக் கொள்ளாமல் இருக்கவும் வகுக்கப்பட்டது இந்த ஒட்டுண்ணிக் கோட்பாடு.

இந்த வித்தகர்களையும் தாண்டிச் சென்றனர் சிலர். பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் உலகத்தைத் எம் கைகளுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்றனர். அதற்கு உலகளாவுதல் (Globalisation) என்று பெயரும் இட்டனர். இன்று அவர்கள் தாம் எங்கிருக்கிறோம் எங்கு போகப் போகிறோம் என்று கூட அறிய முடியாமல் தத்தளித்துத் தடுமாறி நிற்கின்றனர்.

உலகளாவுதல் என்பது உலகத்தில் ஒன்றும் புதிதல்ல. வரலாறு அறிந்த நாள் முதல் நடப்பதுதான். அறிந்த வரலாற்றில் உலக வாணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் பினீசியர்கள். அவர்கள் இப்போலசுக்கு முன்பே நடுக்கடலில் பருவக்காற்றை அறிந்து கப்பலோட்டியவர்கள், எகிப்தின் பரோவா மன்னனுக்காக நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தவர்கள், ஐரோப்பியர்களுக்கு பல்வேறு நாகரிக அடிப்படைகளை அமைத்துக் கொடுத்து அ முதல் ன வரை பதினாறு எழுத்துகளையும் வழங்கியவர்கள், கடல்வாணிகத்தையும் கடற் கொள்ளையையும்(இந்த நடைமுறை இன்றுவரை தொடர் அறுபாடமல் தொடர்கிறது) செய்தவர்கள். ஐரோப்பா என்ற பெயரே யுரோபா என்ற பினீசியப் பெண்ணிடமிருந்துதான் வந்ததாம். இலியடு காப்பியத்தில் வரும் பெண் கடத்தலே இவர்கள் நடத்திய ஒரு பெண் கடத்தலின் எதிர்வினைதானாம். இவர்கள் முதலில் இன்றைய சிரியா பகுதியில் வாழ்ந்து லிபியா வரை பரவினர். இந்தியாவின் தென்முனையிலிருந்து சென்று அங்கு குடியேறியவர்கள், அங்கெல்லாம் தென்னை, பனை முதலியவற்றை அறிமுகம் செய்தவர்கள். பனை என்ற சொல்லின் அடிப்படையில்தான் பினிசீயர்கள் என்ற பெயர் வந்தது என்றும் ஒரு கருத்து உள்ளது. (பார்க்க: இரோடோட்டசு, வி.எசு.வி. இராகவன், Athens and Aeschilles, George Thompson.)

இவர்களை இறுதியாக அழித்தவன் அலக்சாண்டர். இவர்களைத் தொடர்ந்து கிரேக்கர்களும் அடுத்து உரோமர்களும் உலக வாணிகத்தைக் கையில் வைத்திருந்தனர். முகம்மது நபிக்குப் பின் அரேபியர்களும், துருக்கர்களும் வைத்திருந்தனர். இறுதியாக ஐரோப்பியர்கள் அதனைக் கைப்பற்றி அமெரிக்காவிடம் பறிகொடுத்து மீட்க முயன்று கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை கழகக் காலத்தில் செய்ததைத்தான் நாம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். நமது குறுநில மன்னர்கள் தங்கள் குடிமக்களிடமிருந்து யானை மருப்பையும், மிளகு, ஏலம், இலவங்கம் போன்ற எண்ணற்ற மலைபடு பொருட்களையும் அவர்களுக்குக் கள்ளை ஊற்றிப் பறித்துக்கொண்டனர். (சான்று: சங்க கால வாணிகம், மயிலை சீனி.வெங்கடசாமி.) பாண்டியர்கள் முத்துக் குளிப்போரிடமிருந்து அதே போல் கள்ளை ஊற்றி முத்துக்களைப் பெற்றனர். (சான்று: தமிழர் வரலாறு, இரா. இராகவையங்கார்.) இவற்றை ஏற்றுமதி செய்து யவனர் (இந்தச் சொல். அரேபியர், கிரேக்கர், உரோமர் ஆகியோருக்குப் பொதுவான பெயர்) தந்த நன்கலத்தில் அவர்கள் தந்த கடுத்த சீமைச் சாராயத்தை யவனப் பெண்கள் ஊற்றித்தர புலவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அருந்தினர் நம் மன்னர்கள். புலவர்களோ அந்த அரசர்களைப் புகழ்ந்து உலகமே போற்றும் பாக்ககளை இயற்றினர். இவற்றைத் திரட்டித் தந்த குடிமக்களோ காய்கனிகளைப் பறித்தும் எலிகளையும் முயல்களையும் வேட்டையாடியும் மீன்களைப் பிடித்தும் உண்டு உயிர்வளர்த்தனர்.

ஆனால் இன்றைய உலகளாவுதல் வேறுபட்டது. இதன் தோற்றம் என்ன? அரேபியருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட இடைவெளியில் ஆட்சியாளர்களைப் புறந்தள்ளி வாணிகர்கள் வளர்ந்ததன் விளைவாக வெடித்தன அறிவியல் - தொழில்நுட்பப் புரட்சியும் முதலாளியமும். அரசர்களின் தலைகள் மக்களின் புதிய ஆற்றலால் பலி பீடங்களில் வெட்டியெறியப்பட்டன. தொழிலகங்கள் என்ற புதிய கட்டமைப்பினுள் எண்ணற்ற கூலி அடிமைகள் அடைக்கப்பட்டனர். பிரிட்டனின் கையில் இருந்த அமெரிக்காவில் கருப்பின அடிமைகளை வைத்து வேளாண்மை செய்தவர்களுக்கும் தொழில் முதலாளிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் பாட்டாளியர் நன்மைகளைப் பெற்றனர். பொதுமைக் கோட்பாடு உருவானது. பங்கு முதலீட்டு முறை வளர்ந்து குறுகிய தனியுடைமை மறைந்து முதலாளி முகமற்றவனானான். தொழில்சங்கங்கள் உருவாயின. தொழிலாளர்களின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நடப்பில் தொழிலாளர்களின் செல்வாக்குக்குள் தொழிலகங்கள் வந்தன. தொழிலகங்களின் சொத்துகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற தொழிலாளர் வகுப்பின் கேள்வி வலுப்பெற்று செயல்படவும் தொடங்கியது. இப்போது முதலாளியருக்கு இந்த நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தின் நிலை.

வீறுபெற்று எழுந்த ஐரோப்பா தன் வாணிகத்துக்காக இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு வந்தபோது இங்கிருந்த அரசியல் - பொருளியல் - குமுகியல் - நிலைகள் அந்நாடுகளைத் அதன் ஆளுமையினுள் கொண்டுவருவதை எளிமையாக்கின. அங்குள்ள வளங்களும் சந்தையும் ஐரோப்பிய முதலாளியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆனால் இந்த நாடு பிடிக்கும் கட்டத்தில் பிரிட்டனால் ஏமாற்றப்பட்ட செருமனி (பார்க்க: Foot Prints on the Sands of Time, F.G.Pearce, Ch.ⅩⅩⅣ) இங்கிலாந்தைப் பழிவாங்க இரு உலகப் போர்களைத் தொடங்கி பிரிட்டனின் வல்லரசியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இன்று அமெரிக்க வல்லரசியம் வளர்ந்து தேய்பிறைக் கட்டத்தில் உள்ளது.

உலகப் போர்கள் முடிவடைந்ததும் ஐரோப்பாவுக்கு அடிமைப்பட்டிருந்த நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. ஆனால் அவை தங்கள் பொருளியலைத் தொய்வுறாமல் கொண்டு செல்லத் தேவையான மூலதன - தொழில்நுட்பத்தை வளர்க்கத் தினறிய நிலையில் வல்லரசுகள் தாங்கள் உருவாக்கிய உலக வங்கி, உலகப் பணப் பண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் பொருளியலைத் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன. ஐரோப்பாவில் உருவான பொதுமைக் கோட்பாட்டின் திரிபால் அந்நாடுகளிலுள்ள வளம் அனைத்தும் அங்குள்ள ஆட்சியாளரின் கைகளுக்கு வந்தன. ஊழிலில் அவர்கள் கொழுத்தனர். கொள்ளையடித்த பணத்தை முதலில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கினார். அதனால் சிக்கல்கள் வரவே பணக்கார நாடுகளின் தொழில்களில் முதலிட்டனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி உலகளாவுதல் என்ற கருத்தை உருவாக்கித் தங்கள் நாடுகளிலிருந்த தொழில்கள் அனைத்தையும் ஏழை நாடுகளுக்கு வெளியேற்றித் தொழிலாளர் இயக்கங்களின் நெருக்குதல்களிலிருந்து வல்லரசுகள் தற்காலிகமாகத் தப்பின.

தன்னுடைய சொந்த வளத்தைப் பயன்படுத்தாமல், உலகிலுள்ள பிறநாடுகளின் வளங்கள் முற்றிலும் செலவழிந்தபின் தானே தனிக்காட்டு அரசனாகக் கோலோச்சலாம் என்று ″பின்″னெச்சரிக்கையுடன் உலகின் வளங்களை எல்லாம் தன் ஆளுமையினுள் கொண்டுவருவதற்குத் தன் செல்வத்தின் பெரும் பகுதியையும் படைப் பெருக்கத்தில் செலவிட்டதால் இன்று பெரும் கடன் வலையில் குறிப்பாக எண்ணெய் நாடுகளின் கடன் வலையில் சிக்கியிருக்கிறது அமெரிக்கா (Business Standard Channai, 15-07-08) அதுமட்டுமல்ல அமெரிக்காவின் பெருமைக்கும் தன்மானத்துக்கும் அடையாளமாகிய கட்டடங்களைக் கூட அரேபியப் பணக்காரர்கள் வாங்கிக்கொண்டுள்ளனர் (THE HINDU Business Line 19-07-08 p.8). உலக அளவில் டாலரின் மதிப்பு இறங்கிப்போயுள்ளது. விலைவாசிகள் ஏறியபடி உள்ளன. அங்குள்ள பணிகள் பிறநாடுகளுக்குக் கொண்டுசெல்லப் படுகின்றன. அரசியல்வாணர்களும் பொருளியலாரும் இப்போது அமெரிக்காவுக்கு உடனடித் தேவை ஆப்கானித்தானிலோ, ஈராக்கிலோ மக்களாட்சியை நிறுவுவதல்ல, அமெரிக்காவில் மக்களாட்சியை உறுதிப்படுத்துவதுதான் என்று கூறத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் நிலைமை இன்னும் இரங்கத்தக்கதாக உள்ளது. கணக்கற்றுப் பாய்ந்த பணம் இங்கு படைப்போ பணியோ சார்ந்த வளர்ச்சி உள்ளூர் மக்களுக்கு மறுக்கப்பட்டதால் அந்தப் பணம் பாய்ந்து அசையாச் சொத்துகளின் விலை உலக அளவில் மிக உயர்ந்துவிட்டது. கட்டடங்களின் வாடகையும்தான். இங்கு பணியாளர்களின் சம்பளம் பலமடங்கு ஏறிவிட்டது. கறிக்கோழி போல் குறுகிய காலத்தில் பட்டம் பெற்றவர்களுடைய திறமை உலக அளவில் ஒப்பிட கீழிறங்கியுள்ளது. கட்டமைப்பு வசதிகளை இங்குள்ள காலங்கடந்து போன ஆள்வினை முறையால் உரிய காலத்தில் உருவாக்க முடியவில்லை. முதலைப் போட்டுத் தொழில் தொடங்குபவர்களுக்கு உரிய உரிமங்கள் ஒதுக்கீடுகள், இசைவுகளைப் பெறுவதற்கு சிவப்பு வார்த் தடங்கல்களும் அளவுக்கு மீறிய ஊழலும் பெரும் சிக்கல்களாக விளங்குகின்றன. இந்த நிலையில் இங்கு ஏற்கனவே காலூன்றியவர்களும் புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்களும் கடையைக் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியத் தொழில்நுட்பர்களை விட அமெரிக்கத் தொழில் நுட்பர்கள் இன்று குறைந்த கூலிக்கு வருவதால் அமெரிக்காவிலுள்ள இந்தியத்தொழில் முனைவோர் கூட அமெரிக்கத் தொழில் நுட்பர்களை நாடத் தொடங்கியுள்ளனர். தொழில் முனைவோர் ஒவ்வொரு நாடாக ஓடி அங்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டு அங்கெல்லாம் பணப்புழக்கத்தை அளவுக்கு மீறிப் பெருக்கிவிட்டு அது தங்கள் தொழிலைப் பாதிக்கும் நிலை வந்த உடன் அவற்றை அப்படியே போட்டுவிட்டு அடுத்தடுத்த நாடுகளுக்குத் ஓடத்தொடங்கியுள்ளனர். தங்கள் கைகளுக்குள் வந்துவிட்டது என்று இவர்கள் கொக்கரித்த உலகம் இப்போது இவர்களைப் பார்த்து எக்காளமாகச் சிரிக்கிறது.( The Price of Growth, Business World, 21-07-08, p.30 - 34)

எழுதப்பட்ட வரலாற்றில் ஒரு நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்கு மூலப் பொருட்களைக் கொண்டு சென்று தொழிலகங்களில் விளைப்பு நடவடிக்கையில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் பண்டை எகிப்தியர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மெசப்பொட்டோமியாவின் மீது படையெடுத்து மூலப்பொருட்களையும் அடிமைகளையும் அவர்கள் கொண்டு வந்தனராம். அதற்கு அடுத்தபடி அதைச் செய்தவர்கள் ஐரோப்பியர்கள்தாம். இன்று உலகின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு எல்லா மூலப்பொருள்களும் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்தியாவில் நிகழ்வது போல் ஒவ்வொரு பொருளும் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகி உலக மக்களின் ஆற்றல் வளங்களை வீணாக்கி சிலரை மட்டும் கொழுக்கவைத்துக்கொண்டிருக்கிகிறது.

இந்த நிகழ்முறையில் எந்த நாட்டிலோ யாரோ உருவாக்கிய ஒரு தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கி அதற்குத் தேவையான மூலப்பொருளையும் இறக்குமதி செய்து உள்நாட்டு அறிவியல் - தொழில் நுட்பங்களை கருக்கொள்ள விடாமல் நசுக்கி உள்நாட்டு மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு விடுத்தும் கொள்ளை அடிக்கின்றனர் ஏழை நாடுகளை ஆளுவோர்.

ஓர் உண்மையான அறிவியல் - தொழில்நுட்ப மண்டலம் தத்தம் நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தத்தம் தேவைகளை நிறைவேற்றுவதாகவே இருக்க வேண்டும். எம் பல்தொழில் பயிலகத்தின் இறுதியாண்டில்(1960) உரையாற்றிய இந்திய எல்லைச் சாலை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர், தங்கள் பணியின் தன்மையே வெளியிலிருந்து கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வர முடியாது என்பதுதான்; எனவே அங்கங்கே கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே தங்கள் அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் நிறைவேற்றுவதாகக் கூறினார். அவர்களால் முடிவது நம்மாலும் முடியும்.

நம் மக்களிடம் சென்ற தலைமுறைகளில் இருந்து அழிந்தனவும் இன்றும் தொடர்வனவுமாகிய அங்கங்குள்ள மூலப்பொருட்களைக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றுகின்ற தொழில் நுட்பங்களை இன்றைய அறிவியல் வெளிச்சத்தில் மீளாய்வு செய்து மேம்படுத்தி ஒரு தேசிய அறிவியல் - தொழில் நுட்ப மண்டலத்தை ஒவ்வொரு தேசிய மக்களும் உருவாக்க வேண்டும்.

தங்கள் மூலதனம், தங்கள் மூலப்பொருள், தங்கள் அறிவியல் - தொழில்நுட்பம், தங்கள் உழைப்பு, தங்கள் சந்தை என்ற அடிப்படையிலான ஒரு தேசிய முதலாளியத்தை உலகின் ஒவ்வொரு தேசியமும் உருவாக்க வேண்டும். இன்றியமையாதவை என்று ஏதாவது தேவைப்பட்டால் மட்டும் பிற தேசியங்களோடு தொடர்பு வைத்துத் தங்கள் பண்டங்கள், பணிகளை, தேசிய மக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பரிமாறிக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் தேசிய மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் எதனையும் ஏற்றுமதி செய்யக் கூடாது. புதுப்பிக்க முடியாத வனங்களை நேரடியாகவோ, அவற்றைப் பயன்படுத்திச் செய்யும் பண்டங்களாகவோ எக்காரணத்தைக் கொண்டும் எந்தத் தேசியமும் தன் தேசீய எல்லைக்கு வெளியே செல்ல இடம் தரக்கூடாது.

பாராளுமன்ற மக்களாட்சி என்ற பெயரில் செயற்படும் இன்றைய குழுவாட்சி(Oligarchy) முறையில் இன்றிருக்கும் பொருளியல் கட்டமைப்பை உடைப்பது இயலாது. எனவே உண்மையான மக்களாட்சிக்கான ஒரு புதுவடிவை நாம் உருவாக்க வேண்டியது உடனடிப் பணி.

(இக்கட்டுரை தமிழினி செப்டம்பர்-2008 இதழில் உலகளாவுதல் என்ற தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.)

2008 ஆகத்து தமிழினி பற்றி

திரு. கரு.ஆறுமுகத்தமிழன் இன்னும் கற்காலத்தில் இருக்கிறார். இந்திய அரசியல் தலைவர்கள் உள்நாட்டுத் தொழில் முனைவோரை பணத்திற்காக எதிர்நோக்கிய காலம் எப்போதோ மலையேறிவிட்டது. இந்திரா - இராசீவ் காலத்திலிருந்தே கட்சிக்குப் பணம் பெற இறக்குமதி, அதுவும் ஆயுத இறக்குமதியையும் அயல்நாட்டு ஒப்பந்தங்களையும்தான் சிறப்பாக நம்பியிருக்கிறார்கள். அம்பானிகளை இப்போதைக்கிப் பயன்படுத்திக் கொண்டனர். கையிருப்பும் சேரும் போது நேரு குடும்பத்தை எதிரணியால் எதில்கொள்ள முடியவில்லை. ″சக″ தமிழனின் குருதி நாளும் சிந்தப்படுவதைக் கண்டு கருணாநிதிக்குப் பொறுக்க முடியாமல் போய்விடும் என்ற அவருடைய கற்பனை மிகச் செழுமையானதுதான். அந்தக் கூட்டத்துக்குத் தமிழர்களை விற்றுத் திண்றுதான் பழக்கமே அன்றி வேறில்லை. ″சக″ தமிழர்கள் 400 பேர் குருதி சிந்தியும் வராத வருத்தம் புதிதாக எங்கிருந்து வரும்? மக்களுக்கு ஆட்சியாளர்கள் அஞ்சினால்தான் அவர்களுக்கு விடிவு. தேர்தலில் எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்பதில் அவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேல் நேரடிப் பட்டறிவு உண்டு.

பண வீக்கம் கட்டுரையில் பணவீக்கத்தைப் பற்றிய அடிப்படை சரியாகக் கூறப்படவில்லை. மக்களிடத்தில் மிகுதியாகப் புழங்கும் பணம் பண்டவிளைப்பு, பணிகள் போன்ற துறைகளின் வளர்ச்சிக்குத் திருப்பிவிடப்பட்டால் பண்டங்கள், பணிகளின் நுகர்வு நோக்கிப் பாய்வது குறையும். விலைவாசி நஞ்சாக ஏறாது.

பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் கட்டுரை களத்தின் நடைமுறைகளுக்குப் பொருந்தவில்லை. 31-12-2006 வரையுள்ள கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. கணக்கு எடுக்கப்பட்ட நாளில் கடனாளி செலுத்தியது போக நிலுவையில் நின்ற தொகை மட்டும் தள்ளுபடியானது. 9/2006 இல் பெற்ற கடனுக்கு 1/2008 வரை நான் கட்டிய தொகை போக எஞ்சியதற்கு தள்ளுபடி கிடைத்தது. அரசின் அறிக்கைகளில் உள்ள குளறுபடிகள் அப்படியே கட்டுரையில் இடம் பெற்றுவிட்டன.

மேற்கூறிய இரண்டு கட்டுரைகளில் முதலாவது இன்று ஆளுவோர் தூக்கிப்பிடிக்கும் கோடுபாடுகளின் அடிப்படையில் பணவீக்கத்தைப் பேசுகிறது. அதே போல் இரண்டாமவர் கட்டுரை உழவனுக்கு ஆட்சியாளர் வைத்துள்ள தீர்வுகளிலேயே ஒட்டுப்போட முயல்கிறது. அந்தந்தச் சிக்கல்களின் அடி ஆழங்களில் செல்வது என்ற சிந்தனை வட்டத்திற்கு மிகத் தொலைவில் இருவரும் நிற்கின்றனர்.

பரிதிமாற் கலைஞர் உண்மையில் ஒரு பிறவி மேதை என்பது அ.க.பெருமாளின் கட்டுரையைப் படித்த பின்தான் தெரியவருகிறது. அலக்சாண்டர், ஏசு, விவேகானந்தர், கணிதமேதை இராமானுசம் போன்று குறுகிய வாழ்நாளில் மலைப்பூட்டும் அருஞ்செயல்களை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் அனைவரின் அகவையும் இறக்கும் போது கிட்டத்தட்ட 32. கட்டுரையின் இறுதி மேற்கோள் சிறப்பு. அ.கா பெருமாளுக்குப் பாராட்டுகள்.

இந்துவைப் பற்றிய அமலா சத்தியசீலனின் கொதிப்பு புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அணுவிசை ஒப்பந்தத்தை எதிர்த்ததற்கான எதிர்ப்பைக் காரணமாகக் கொண்டிருந்தால் அவரது நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இடங்கை வகையினர் அதில் மனத்தூய்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது இறுதியில்தானே தெரிந்தது?

உலக வணிக அமைவனம் - காத்திருக்கும் கழுகு. ″தோகா″ என்று எழுதினால் கிடைக்கும் அதே ஒலிக்கு ஏன் ஒரு கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒற்றெழுத்து முன்வராமல் இடையிலும் கடையிலும் தனித்து வரும் உயிர்வல்லெழுத்து மென்மையாகவே ஒலிக்கும். காகம், தக, வசம், பேசு, படம், தவிடு, கதவு, ஓது, கூபம், கோபி, மறம், கூறு. வல்லரசு நாடுகள் வலியுறுத்துகின்றன என்பதால் அதை மறுக்காமல் ஏன் ஏழைநாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.

உள்ளூர் மடம் ராச சுந்தரராசனின் மாறுபட்ட படைப்பு. பண்டை மரபுகளை நினைவூட்டுவது சிறப்பு.

சிறுகதை ஈழத்து நடையில் மனதை உருக்குவதாக இருந்தது ஈழத்தில் அந்தக் காலகட்டத்தில் (எண்பதுகளுக்கு முன்பே) இப்படியொரு வறுமையா?

″அட்டம்″ நன்றாக வந்திருக்கிறது அட்டம் என்றால் பொருட்கள் அடுக்கி வைக்கும் Rackக்குக் கான குமரிமாவட்ட வழக்குச் சொல். சட்டம்(ஆறு), சத்தம்(ஏழு) அட்டம் (எட்டு) என்பவை முறையே கதவு நிலை, ஒலியின் ஏழு பிரிவுகள், அட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திய குறியீட்டு வழக்கு.

ஏகம் - ஒன்றையே நினைப்பது - ஏக்கம் – ஒன்று

துவைதம் – துமித்தல் – பிரித்தல் – இரண்டு

த்ரிதம் - திரி – முப்புரி அறாது, சொலவடை – மூன்று

சதுர(ம்) – நான்கு பக்கங்கள் உள்ள வடிவம் – சதுரம் - நான்கு

பஞ்ச(ம்) - ஐந்தாம் திணை – பாலை – பஞ்சம் – ஐந்து

சஷ்ட(ம்) – பழங்காலக் கதவு நிலை - சட்டம் – ஆறு (சட்டம் நிலைக் கல் படியின் மீது ஊன்றப்படும்.)

சப்த(ம்) – ஏழாக ஒலிப்பது – ஏழிசை – சத்தம் – ஏழு

அஷ்ட(ம்) – பொருட்களை அடுக்கிவைக்கும் பல்கையால் ஆன தளவாடம் - அட்டம் – எட்டு

நவம், தசம் – ஒன்று முதல் பத்து வரை மட்டும் எண்ணிக்கை அறிவு வளர்ச்சிக் கட்டத்தை எடுத்துக் கொள்வோம். ஒன்று என்று தொடங்குவதற்கு மாறாக இலாபம் என்று இன்று வாணிகர்கள் தொடங்குவது போல் அன்று விளைச்சலில் பத்திலொரு பங்காகிய உழவனுக்குரிய தசக்கூலியை முதலில் வைத்து பத்தாவதாகப் பத்தை வைத்திருக்கிறார்கள். உழவன் கூலியை இறுதியில் அளந்தால் பழைய பத்தைப் பழைய பத்து என்று பொருள்படும் தொல் பத்து → தொன்பது → ஒன்பது என்றானது. இது பழையது எனப் பொருள்படும் தொண்டு என்ற சொல்லாலும் இதைக் குறிப்பிடுவர். இதற்கு எதிர்ச் சொல்லான புதுமை என்ற பொருள்தரும் நவம் என்ற சொல்லை சமற்கிருதம் என்ற செயற்கை மொழியை உருவாக்கியோர் வடித்திருக்கின்றனர். எனவே பத்து தசமாயிற்று.

அட்டமி என்பதற்கு பிரதமை, துவிதை, திரிதியை, சதுர்த்தி என்றிருக்க வேண்டும். ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பவை முறையே 11, 12, 13, 14 ஆகியவற்றைக் குறிக்கும். அட்டமி அன்று கடலில் ஏற்றவற்றம் மிகக் குறைவாக இருக்கும். அன்று கடற்செலவுக்கு மிக ஏற்ற நாள். கடலுக்கு வெளியிலும் அவ்வாறுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அன்று கதிர், நிலவு ஆகியவை புவியுடன் ஒப்பில் செங்கோணத்தில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசைகளின் நிகரவிளைவு (Equivalency) மிகக் குறைவாகவே இருக்கும். கடலோடிகளை இழிவு படுத்துவதற்காகவே அந்நாளைத் தீய நாளாக ஆக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதன் தொடர் நடவடிக்கையாக 8 ஒலிகள் உள்ள இசையை (ச, ரி, க, ம, ப, த, நி, ச – Octaves) ஏழாகவும், எட்டாகிய மெய்ப்பாட்டை நவரசம் என்றும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் தெளிவாக ஆய்ந்தால் பல துறைகளிலும் இதனுடைய ஊடுருவலைத் தடம்பிடிக்க முடியும்.

திசைகளில் கன்னித் திசை(மூலை) என்பதை அண்மைக் காலமாக நிருதி என்று கூறத்தொடங்கியுள்ளனர்.

மொத்தத்தில் திரட்டித் தந்துள்ள செய்திகள் மிகப் பயனுள்ளவை. நம் மரபு இலக்கியங்களையும் தொன்மங்களையும் நோக்கித் திரும்புமாறு அவர் விடுத்துள்ள வேண்டுகோள் சரியானது.

செல்வ புவியரசனின் கொதிப்பு ஞாயமானது. சீவாவைப் பற்றிய கணிப்பு மிகத் துல்லியமானது. கருணாநிதியையும் செயகாந்தனையும் குறித்து அவர்கள் கூறுகின்ற கோட்பாடுகளுக்குப் பொருத்தமற்ற வெளிப்பாடுகள் அவர்களது இலக்கியப் படைப்புகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளேன், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பே.

பாதசாரியின் தடப்பதிவும் சிறப்பு

பணக்கார நாட்டு மக்கள் ஏன் செல்ல உயிரிகளை வளர்க்கிறார்கள் என்பதற்கு சுற்றம் சூழ... ஒரு நல்ல விளக்கம். வீட்டில் தனித்திருக்கும் என் மனைவி கோழி வளர்ப்பதை நான் ஊக்குகிறேன்.

″துயர நகரம்″, நகசாகி, இரோசிமா, போல் போபாலையும் எவ்வாறு ஆய்வுக் களமாக அமெரிக்கா கையாண்டது என்பதற்கான ஆவணம். சப்பான் ஆட்சியாளர்கள் தங்கள் மக்களின் துயரங்களை ஆற்ற முன்வந்தனர். நம்மவர்கள் ″ஆய்வாளர்″களுக்குத் துணைநின்றனர்.

தான், தன் குடும்பம் என்பவற்றுக்காக எதையும் செய்யத் தயங்காத இராமதாசின் செயல்கள் காட்டுவிலங்காண்டித்தனமானவை. இவர் போன்றோரது செயல்களைத் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் உருப்படாது. கண்மணிக்கு செயமோகனின் அறிவுரை பாராட்டத்தக்கது.

பாமயனின் கட்டுரை எப்போதுமே அரைக்கிணறு தாண்டுவதுதான். Critical Realism.

யானையை அழித்த பிரான்(அசுரனை என்பது தேவையில்லை) ஒரு பெரும் உண்மையை வெளிப்படுத்துகிறது. யானைத் தோல் போர்த்து என்று கொற்றவையைத்தான் சிலம்பு போற்றுகிறது. அவளது அருஞ்செயல்களைச் சிவனுக்கு ஏற்றியிருப்பது தெரிகிறது.

மொத்தத்தில் தமிழினியின் களம் விரிவடைந்துள்ளது. பாராட்டுகள்.