20.11.08

குணா அவர்களுக்கு 29 - 08 - 2008 நாளிட்ட மடல்

நாகர்கோயில்,
29-08-2008.

அன்பு நண்பர் குணா அவர்களுக்கு வணக்கம்.

நேற்று நண்பகலில் தாங்கள் தொலைபேசியில் கூறிய செய்திகள் குறித்து என் வருத்தத்தைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். 1982 இறுதி அல்லது 83 தொடக்கம் என்று நினைவு, சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு ஒன்று நடைபெற்றது. நான் அப்போது சென்னையில் இருந்தேன். எனவே நானும் சென்றிருந்தேன். அங்கு திரு.அரணமுறுவலிடம் திரு.பொன்.பரமேசுவரன் காசோலை கொடுத்தபோது தான் பஃறுளி முதல் வையை வரை நூலை அச்சிடும் பொறுப்பை அரணமுறுவலிடம் ஒப்படைத்திருந்தீர்கள் என்று தெரிந்தது. நூலுக்கான முன்னுரையில் அரணமுறுவலின் பங்கு பற்றிக் குறிப்பிடாத என் தவறைப் பின்னர் உணர்ந்தேன். நிற்க, அரணமுறுவல்தான் பின்னொரு நேரம் பேசும் போது ″ஆய்வரணுக்கு அயல் நாட்டுப் பணம் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?″ என்று கேட்டார். நாம் பின்னர் ஒருமுறை சந்தித்த போது இதைச் சொன்ன போது உங்கள் விடை ″அதனால் என்ன?″ என்றிருந்தது. இப்பொழுது தாங்கள் தொலைபேசியில் பேசிய போது கூறிய செய்தியை அப்போது சொல்லவில்லை. அதாவது தாங்கள் பணியாற்றிய இந்திய ஏம வங்கி அலுவலகத்தில் உரூ.16,000/- (பதினாறாயிரம்) கடன் வாங்கித்தான் அந்த நூலை வெளியிட்டீர்கள் என்ற செய்தி இந்தத் தொலைபேசி உரையாடலில்தான் வெளிவந்தது. இந்தச் செய்தி இடைவெளிதான் நான் செய்த தவறுக்குக் காரணம். இருந்தாலும் நடப்புக்குப் புறம்பான ஒரு பதிவு என் மூலமாக நேர்ந்ததற்கு நான் மிக வருந்துகிறேன். எந்தக் கட்டுறவும் இல்லாத மன்னிப்பைத் தங்களிடம் கேட்கிறேன். என்னைப் பொறுத்தருள்க.

இது குறித்து மனந்திறந்து..... பகுதியின் இறுதியில் ஒரு பதிவும் செய்துள்ளேன். இணையத்திலும் பார்க்கலாம். இந்த மடலையும்தான். அந்தப் பதிவின் படியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

அனைவரையும் குறை கூறுகிறேன் என்று அன்று நீங்கள் தொலைபேசியில் கூறியது இரண்டாவது முறை. இது பற்றி நான் ஏற்கனவே தமிழ்த் தேசியம் ″மனந்திறந்து….″ பகுதியில் எழுதியுள்ளேன்.

நான் சில குறிப்பிட்ட நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளேன். ″தமிழ்″, ″தமிழ்த் தேசிய″ இயக்கங்கள் நடத்துவோரில் பெரும்பாலோருக்கு அவை குறித்த கட்டுரைகளை விடுத்துள்ளேன். நான் வேலையை விட்டுத் தொழில் செய்து ஐந்து குழந்தைகளைக் கொண்ட என் குடும்பத்தைத் தாங்கிய வறுமை மிகுந்த சூழலிலும் என் வரவில் கணிசமான பகுதியை இதற்குச் செலவு செய்தேன். என் செலவில் எங்கெங்கோ சென்று நிகழ்ச்சிகளில் பங்குகொண்டேன். என் கருத்துகளை ஆணித்தரமாகத் தயங்காமல் எடுத்துரைத்தேன். அவர்கள் நடத்திய இதழ்கள் குறித்து மனம் திறந்த திறனாய்வுகளை எழுதி அவர்களுக்கு விடுத்தேன். ஆனால் அவர்களில் எவரும் என் முன்வைப்புகள் பற்றிய தங்கள் உணர்வுகளை, திறனாய்வுகளை முன்வைத்ததில்லை. பொறுக்க முடியாதவர்கள் புறக்கணிக்கின்றனர். அது பற்றி எனக்கு வருத்தமோ கவலையோ இல்லை. என் கருத்துகள் உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளப்படும் என்றோ என்னைப் புகழின் வெளிச்சத்தில் நிறுத்திவிடும் என்றோ நான் எப்போதும் நினைத்ததில்லை.

இந்த இயக்கங்களுடன் நான் தொடர்பு கொள்ளத் தொடங்கிய காலத்தில் தமிழகத்தில் இருந்த நிலையிலிருந்து நாள்தோறும் தமிழகத்தின் நிலை இறங்குமுகமாகவே இருக்கிறது. தங்கள் விருப்பங்களையும் மீறி தங்கள் மனதுக்குள் தாங்கள் போற்றும் அல்லது போற்றுவது போல்காட்டிக் கொள்ளும் தமிழகத் தலைவர்களை குறைகூறுவதைத் தவிர்க்க முடியாத நிலைக்குப் பலர் வந்துள்ளனர். அவர்களிலும் பலர் சிக்கல்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். என் கருத்து நோக்கி வரவேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அதேவேளையில் இவர்கள் முற்றிலும் மாற்றமடைந்து என்னுடன் தோழமை கொள்வார்களென்று நான் கனவு கூடக் காணவில்லை, ஏனென்றால் அவர்களின் வகுப்புப் பின்னணி அத்தகையது. திராவிட இயக்கத்தால், குறிப்பாகப் பெரியாரின் அரசியல் செயற்பாடுகளால் தமிழகத்தில் உருவாகிவிட்ட செல்வாக்கு மிக்க ஒட்டுண்ணிகளின் நலம் காப்பவர்கள் இவர்கள். ஆனால் விளைப்பு விசைகளை தமிழ்த் தேசிய முதலாளியர் - தொழிலாளர் - வாணிகர்கள் என்ற வகுப்புகளை அரசியல் களத்தில் கொண்டுவந்து நிறுத்துவதுதான் என் பணியின் முதல் கட்டமாக இருக்கும். அதற்கான எந்தக் களப் பணியிலும் இதுவரை என்னால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடைய முடியவில்லை. இதுவரை அதற்கான துணை கிடைக்கவில்லை. என் வாழ்நாளில் அது கிடைக்காமலே கூடப் போகலாம். அந்தப் பணி பிறரால் கூட, பின் இன்னொரு நாளில் நிறைவேறலாம்.

நான் உறவுகளைத் தேடியோ நட்புகளை நாடியோ இங்கு வரவில்லை. புற உறவுகளோ நட்புகளோ இன்றி வாழ்ந்து பழகிவிட்டவன் நான். என் குடும்பம் என்ற மிகச் சிறு வட்டம் என் அந்தத் தேவைக்குப் போதுமானது. அது அரசியல் கொள்கை, கோட்பாடு அடிப்படையில் அமைந்ததல்ல என்பதால் அது தொடர்வதில் பெரும் சிக்கல் இருக்காது.

எனது ஒட்டுமொத்த குறிக்கோள் தமிழக மக்கள் உலகிலுள்ள வேறு எந்த மக்களுக்கும் அடிப்பட்டவர்களாய், அடிமைகளாய் இல்லாமல் உலகிலுள்ள எந்த மனிதக் குழுவுக்கும் இணையாக வரவேண்டும்; தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களும் அவ்வாறே; உலகிலுள்ள எல்லா மக்கள் குழுவினரும் சமநிலையில் வாழ வேண்டும்; அந்தப் பணியைத் தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்; அதற்கு நல்ல கோட்பாட்டு வழிகாட்டி மார்க்சியத்தின் வரலாற்றுப் பருப்பொருளியம், இயங்கியல் பருப்பொருளியம் ஆகியவையே என்பது என் நிலைப்பாடு. பொதுமையியம் இப்போதைக்கு மனித குல வரலாற்றில் இடம் பெற முடியாது; இன்றைய பொதுமைக் கோட்பாடும் பொதுமைக் கட்சிகளும் இயக்கங்களும் மார்க்சியத்தின் மறுப்பு அல்லது அகற்றலே(Negation) என்பது எனது கருத்து. ஏழை நாட்டு மக்களின் இன்றைய துயரங்களுக்கெல்லாம் மட்டுமல்ல வல்லரசுகளின் எல்லையற்ற அரக்கத் தனமான வளர்ச்சிக்கும் காரணம் அந்த ஏழை நாடுகளின் வளர்ச்சி நிலைக்கும் பொருந்தாத பொதுமைக் கோட்பாடும் செயல்திட்டங்களும்தாம் என்பதும் என் உறுதியான கருத்து.

நாம் சந்தித்த ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடையே கருத்துகளில் இடைவெளி தொடங்கி இன்று நெருங்கி வர முடியாத தொலைவில் நாம் இருப்பது போன்ற புரிதல் எனக்கு உள்ளது. மீண்டும் நாம் பழைய புரிதலுக்கு வருவோமா என்பது கேள்விக்குறியே.

தமிழ் அணுவியம் என்ற தலைப்பில் எழுதியிருந்த தங்கள் நூலின் தலைப்பை வள்ளுவத்தின் வீழ்ச்சி என்று மாற்றியதன் பின்னணியில் என்ன முரண்பாடுகள் செயற்படுகின்றனவோ அவையே கர்னாடகத் தமிழர்களின் இன்றைய வீறுகெட்ட மந்த நிலைக்குக் காரணமாகவும் வெளிப்பாடாகவும் எனக்குத் தோன்றுகின்றன. கர்னாடகத் தமிழர்களின் இடையில் உள்ள உறவு நிலைகளை அல்லது உறவுச் சீர்கேடுகளைத் தமிழகத்துத் தமிழ் பேசும் மக்களிடையில் விதைப்பதாக உங்கள் அணுகல் உள்ளது. கர்நாடகத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும் பிறமொழியாளருக்கும் உள்ள முரண்பாடுகளை தமிழக மண்ணில், குறிப்பாக 1956 நவம்பர் 1ஆம் நாளுக்கு முன் பிறந்த(வட இந்தியப் பனியாக்கள் நீங்கலாக) தமிழ் தவிர்த்த வீட்டுமொழி பேசும் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் உருவாக்கித் தமிழகத் தேசியத்துக்குக் கேடுசெய்வதாக உள்ளது.

இன்றைய வானியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று பறையரில் ஒரு பிரிவான வள்ளுவர் சாதியினரைக் குறிப்பிடுகிறீர்கள். அந்த வள்ளுவரில் எத்தனை பிரிவினர் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி தொழில் அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா? அவர்களில் எந்தப் பிரிவினருக்கு வானியல் கண்டுபிடிப்புகள் உரியவை என்பன போன்றவற்றுக்கு விடை தேடியிருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்க விரும்புகிறேன்.

வானியல் உன்னிப்புக்கு அல்லது நோட்டமிடுவதற்கு மக்களில் பல்வேறு தொழில் செய்வோருக்குத் தேவை இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும் போது என் தந்தை பின்னிரவில் எழுந்திருந்து சிறுநீர் கழித்துவிட்டு ″ஏழாங்கோட்டை வெள்ளி″ மேலே இருக்கிறது என்று சொல்லி விட்டுப் படுத்துவிடுவார் அல்லது சாய்ந்து விட்டதென்று கூறி ஊளையிடுவார். அதற்கு மறுமொழியாக வேறு ஊளைகள் கேட்கும். முகத்தைக் கழுவி விட்டுச் சந்தைக்குப் புறப்படுவார். பல வேளைகளில் அவரோடு சந்தைக்குச் செல்பவர்கள் விழித்துக் கொண்டு ஊளையிட்டு இவரை எழுப்புவதும் உண்டு.

என் மனைவியின் ஊர் சற்று ஒதுக்குப் புறமானது. பேருந்து வருமிடமும் ஒலி கேட்காத தொலைவு. பேருந்து வரும் நேரத்தை அறிய வெட்ட வெளியில் நின்று நிழலை அளந்து நேரத்தை அறிவதாக என் மாமனார் கூறுவார்.

அதுபோல் ஊர்ப்புறத்து மக்கள் நெல் அவிக்க வேண்டுமானால் கூட வானத்தையும் பிற அடையாளங்களையும் வைத்து மழை வருமா வராதா என்று அறிவார்கள். பல வேளைகளில் அவர்களது கணிப்புகள் தவறாகப் போய்விடுவதும் உண்டு. ஆனால் இன்றைய வானியல் முன்னறிவிப்பை விட அவர்களது கணிப்புகள் சிறப்பாகவே இருந்தன. இதுபோல் குமுகத்தில் மக்களில் ஏறக்குறைய அனைத்துப் பிரிவினரும் தத்தம் வாழ்நிலை தேவைகளுக்காக தத்தமக்குரிய வானியல் உள்ளடங்கிய, பல்வேறு அடையாளங்களைக் குறியாக வைத்திருந்தனர். உழவன், குயவன், செங்கல் அறுப்போன், இடையன் என்று எத்தனையோ பேர் வானத்தைப் பார்த்து வயிறு வளர்க்க வேண்டியவர் நம் குமுகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளனர். இடையர்கள் என்று எடுத்துக்கொண்டால் இடைக்காடரை விட்டுவிட்டு தமிழர்களின் வானியலை நடுநிலைச் சிந்தனை உடைய எவராலும் பேச முடியுமா? அவரைப் பற்றிய ஒரு தொன்மைக் கதையைப் புறக்கணிக்க முடியுமா? பன்னிரண்டு ஆண்டு வரட்சிக்குப் பின் அவரைப் பார்க்க ஒன்பது கோள்களும் வந்ததாகவும் அவர்களுக்கு தினையை மண்ணில் கலந்து குழைந்து தான் கட்டிய சுவரிலிருந்து தினையைப் பிரித்து ஆட்டின் பாலில் கஞ்சி வைத்து ஊட்டி தலைமாடு, கால்மாடு மாறித் தூங்கிய அவர்களை ஒழுங்காகப் படுக்க வைத்தார் என்ற கதையின் உட்பொருளைத்தான் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? அறுபது ஆண்டுகளுக்கும் அவர் பெயரில் இருக்கும் பாடல்களில் உள்ள தட்ப வெப்பநிலை, வேளாண்மை, செய்தொழில்கள் ஆகியவற்றுக்கான உறவு நிலைகள், விளைந்த முகாமையான உணவுப் பண்டங்களும் ஆமணக்கு போன்ற கொழுப்புப் பொருட்களும், உப்பு போன்ற பண்டமாற்று ஊடகங்களும் என்று அதிலடங்கிய செய்திகள் உலகில் வேறெங்காவது உண்டா? அதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

சேம்சு பெர்க்குசன் என்றொருவர், பெயர் சரிதானா என்று ஐயமாக இருக்கிறது, தொடக்கப் பள்ளியில் படித்தது, எட்டாவதோ, பன்னிரண்டாவதோ கடைக்குட்டி, பள்ளிக்கு விடுக்கவில்லை. அண்ணன்மாரைப் பார்த்து எழுத்தறிவை வளர்த்துக் கொண்டவர். சிறுவனாக இருக்கும் போதே இரவில் ஆடுகளுக்குக் காவலிருந்தார். கையில் செபமாலையை வைத்துக் கொண்டு விண்மீன்களை நோட்டமிட்டு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். பல கதிர்க்கடிகைகளை யாத்தவர்.

இடையர்கள் ஆடுமாடுகளை மேயவிட்டு விட்டு ஓய்வு வேளைகளில் என்னென்னவோ செய்ய முடியும். திருமூலரைப் போல் அரிய சிந்தனைகளையும் உருவாக்க முடியும். இரவில் இடைக்கடரைப் போல், சேம்சு பெர்க்குசன் போல் வானியல் இறும்பூறு பற்றிய புதிர்களை விடுவிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. நீங்கள் குறிப்பிடும் வள்ளுவர்களுக்கு அப்படி இருந்த வாய்ப்பு என்ன?

இனி கடலோடிகளுக்கும் மீனவர்களுக்கும் வருவோம். கடலிலிருந்து பார்க்க கரையும் மரங்களும் கட்டடங்களும் மலைகளும் மறைந்துவிடும் தொலைவில் சென்ற நொடியிலிருந்து பகலில் கதிரவனும் இரவில் வான் பொருட்களும் இன்றி அவர்களால் எவ்வாறு திசையை அறிய முடியும்? அதனால்தான் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் கடற்கரை கண்ணிலிருந்து மறையாத தொலைவுக்குள்ளேயே கடற்செலவு மேற்கொண்டிருந்தனர். தமிழர்களின் முன்னோர்கள் வான்பொருட்கள் மூலம் திசையறிந்து இரவு வேளைகளிலும் நடுக்கடலில் கலம் செலுத்தினர். ஆனால் நாள் முழுவதும் மேக மூட்டத்துடனிருக்கும் காலமழையின் போது எப்படித் திசையறிய முடியும்? அவ்வேளைகளில் அவர்கள் கடற் செலவைத் தவிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் கால், காற்று, காலம், கால மழை போன்ற சொற்கள் வழக்குக்கு வந்தன போலும்.

இந்த இடர்ப்பாடுகளுக்கும் ஒரு முடிவு வந்தது. காந்தத்தின் தன்மையறிந்து காந்த ஊசியைக் கண்டுபிடித்தனர். அதற்குச் சான்றாக காந்த ஊசி தன்னை நிறுத்திக் கொள்ளும் வட திசைக்கு ஊசித் திசை என்ற பெயர் வந்தது. இந்தக் காந்த ஊசியை ஆமை வடிவில் அமைந்த கொள்கலனில் உள்ள எண்ணெயில் மிதக்கவிட்டனர், இரும்பாலான அந்த ஊசி துருப்பிடிக்காமல் இருக்கவும் நூல் போன்றவற்றில் தொங்கவிட்டால் துல்லியம் இருக்காது என்பதாலும். இந்த ஆமை தொன்ம வடிவில் திருமாலின் தோற்றரவுகளில் ஒன்றாக மறைந்து கிடக்கிறது. சீனர்களின் வரலாற்றில் அம்மணமான உண்மையாகப் பதிவாகியிருக்கிறது. தமக்குள் முரண்பாடு கொண்ட இரு நிலப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ″ஆமை″யைப் பயன்படுத்தி குமரிக் கடலைக் கலக்கியதில் எத்தனை எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை இயற்றினர் என்று நம் தொன்மங்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகளில் உங்கள் ″வள்ளுவர்″களின் பங்கு யாது? இப்படிப் பல்வேறு மக்கள் குழுவினரிடையிலும் பொதுமக்களிடையிலும் பரந்துகிடந்த உண்மைகளை ஒருவரோ பலரோ தொகுத்திருக்கக் கூடும். அவர்கள் யார்? அவர்களுக்கு ″வள்ளுவர்″களோடு ஏதாவது உறவு உண்டா என்றாவது உங்களால் காட்ட முடியுமா?

தெற்கன் ஆகிய தட்சன் தன் மக்களில் 27 மகள்களை நிலவுக்கு மணம் முடித்துக் கொடுத்தான் என்று தொன்மம் கூறுகிறது. கதிரவன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் புவியிலிருந்து பார்க்கும் போது 27⅓ நாட்கள், கிட்டத்தட்ட (உண்மையாக அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வது 25⅓ நாட்களில் கிட்டத்தட்ட) அந்த 27⅓ நாட்களை 27 ஆகப் பிரித்து 27 நாண்மீன்களாக வகுத்துள்ளனர். அவற்றை நிலவின் இயக்கத்தோடு சேர்த்துக் கணித்தவன் தெற்கன் என்பது இந்தத் தொன்மக் கதையின் உள்ளடக்கம். ஆனால் நீங்களோ, யாரோ எழுதியவற்றை வைத்துக்கொண்டு, தொன்மங்கள் வான்பொருட்களின் இயக்கங்களை விளக்குகின்றன என்று தலைகீழ்ப் பாடம் படிக்கிறீர்கள். தொன்மங்களின் மனித வரலாற்றுக் குறிதகவுகளிலிருந்து உங்கள் படைப்புகளைப் படிக்கும் மக்களின் கவனத்தைத் திருப்புகிறீர்கள். சிவன் காலனை உதைத்தாக வரும் கதை உண்மையில் காலசாமி வழிபாட்டை ஒழித்துச் சிவன் வழிபாட்டை நிறுவிய நடைமுறையின் ஒரு பதிவு. (எங்கள் வட்டாரத்து அம்மன் கோயில்களில் இன்றும் காலசாமி பீடங்கள் உள்ளன. கொடைவிழாவின் போது மார்க்கண்டன் கதையை வில்லில்பாடும் போது காலசாமி வந்து ஆடுகிறார். இவ்வாறு பல சிறுதெய்வங்களையும் பெருந்தெய்வங்கள் அகற்ற முயன்று தோற்றுப்போன வரலாற்றுண்மையின் புதைபடிவங்களாக ஊர்ப்புற வழிபாடுகள் நிலவுகின்றன.) அதில் வான் பொருட்களின் இயக்கத்தைத் தடம்பிடித்து, இந்தக் குமுக வரலாற்றிலிருந்து உங்கள் எழுத்து திசை திருப்புகிறது. ஒவ்வொரு நாண்மீனுக்கும் தலைவர்கள் இன்னின்னாரென்று ஏதோ நூலில் உள்ளவற்றைப் படித்து எழுதியுள்ளீர்கள். ஒருவேளை அந்தத் தலைவர்கள் தாம் அந்தந்த நாண்மீனை இனம் கண்டவர்களாக இருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றவில்லை.

இவ்வாறு அரிய கருப்பொருட்களை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு சாதிப் பெருமைபேசி அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

நாள், பக்கம், நாண்மீன், யோகம், கரணம் என்ற ஐந்து உறுப்புகளைக் கொண்ட பஞ்சாங்கம் எனப்படும் ஐந்திறத்தை, இந்த ஐந்து உறுப்புகளுக்கும் ஒரு பட்டியல், பகல் நேர நீட்சியான ″அகசு″க்கொரு பட்டியல், கதிரவனின் ஒரு நாளின் 60 நாழிகைக்குள் இடம்பெற்றிருக்கும் ஓரையைக் காட்டும் ஒரு பட்டியல், அந்தந்த மாதத்தில் ஓரைகளின் இருப்பைக் காட்டும் ஓர் ஓரை வட்டம் ஆகியவற்றைக்கொண்டதாகப் படைத்துள்ளனர். வாக்கியம் என்பது பட்டியலைக் குறிக்கும் சொல். எனவே இதனை வாக்கிய ஐந்திறம் என்கின்றனர். புலனங்களை எடுத்துவைப்பதற்கு வாகாக(வாக்காக என்பதுதான் குமரி மாவட்ட வழக்கு) இருப்பதால் பட்டியலை வாக்கு என்று குறித்திருக்கலாம். அதை உருவாக்கியவர் சிவவாக்கியராக இருக்கலாம். இந்த ஐந்திறம் பாண்டியர்களின் தலைநகர் நிலநடுக்கோட்டில், தென் மதுரையில் அமைந்திருந்தபோது அல்லது அதற்கும் முன்பு உருவாகியிருக்க வேண்டும், ஏனென்றால் இப்போதிருக்கும் ஐந்திறத்தில் முதன்மைப் பட்டியல் தலைநகர் கபாடபுரத்துக்கு மாறி ஆண்டுப்பிறப்பு 24 நாட்கள் பின்னோக்கி நகர்ந்த பின்னுள்ள காலத்துக்கு உரியவையாக இருந்தாலும் பழைய நிலைமைக்கு உரிய பதிவுகளையும் அவை கொண்டுள்ளன. இது நம் மரபின் ஒரு சிறப்புக் கூறு. மாற்றங்கள் வரும்போது பழையவற்றின் இடைச்சொருகலாகப் புதியவற்றை வைப்பது ஓர் உத்தி. இங்கே புதியவற்றின் இடைச்சொருகலாகவும் பழையவற்றை அப்படியேயும் இரு உத்திகளையும் கையாண்டுள்ளனர். மாதத் தலைப்பில் மிதுனரவி என்று போட்டிருந்தால் 7, 8, அல்லது 9ஆம் நாளில் கடகாயனம் என்ற குறிப்பு உள்ளது. அன்றே கதிர் உண்மையில் மிதுனத்திலிருந்து கடகத்தினுள் நுழைந்துவிடுகிறது என்பது இதன் பொருள்.

″அகசு″க்கான பட்டியலில் 1, 5, 15 என்று ஐந்தைந்து நாட்களுக்காக பகல் நேர நீட்சியைக் கொடுத்திருக்கையில் 5க்கும் 15க்கும் இடையில் மட்டும் கடகாயனம் என்று குறிப்பிட்டிருக்கும் நாளுக்குக் கொடுத்திருக்கிறது.

அதுபோலவே ஒவ்வொரு மாதத்திலும் கதிர் தோன்றும் நேரத்தில் குறிப்பிட்ட ஓரையின் இருப்பு நேரத்தைக் காட்டும் பட்டியலும் அடுத்த மாதத்துக்குத்தான் பொருந்தும்.

அதுமட்டுமல்ல 12 நேர் கோடுகளில் 12 ஓரைகளையும் காட்டும், நம் கணியர்கள் பயன்படுத்தும் ஓரைவட்டம் ஆகிய அந்தப் பட்டியல் நமக்கு என்றும் பெருமை சேர்க்கும் சிவவாக்கியரின் அருஞ்செயலாகும். இவ்வாறு, பட்டியலிடும் உத்தியை உலகுக்கு வழங்கியவர்களே நாமாகலாம்.

இதைச் செய்தவர் அல்லது செய்தவர்கள் வள்ளுவர்கள் என்றாவது நம்மால் நிலைநாட்ட முடியுமா?

நானறிந்தவரை வள்ளுவர்கள் என்ற சாதியார் தமக்கே உரிய ஓர் ஒப்பற்ற முறையில் சாதகம் கணித்துப் பலன் சொல்பவர்கள் என்பது தெரியும். ஆனால் குமரி மாவட்டத்தில் அவர்கள் செயற்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. நெல்லையில் ஒரு நண்பர் சொல்லித்தான் தெரியும். அவருக்கு வள்ளுவர் எழுதிக்கொடுத்திருந்த சாதகக் கட்டின் கனத்தைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். நான் அதுவரை தமிழகத்தின் பிற பகுதிகளில் கூட ஒற்றைப் பனை ஓலை நறுக்கில் எழுதப்பட்ட சாதகக் குறிப்பை அல்லது ஒரு சிறு குறிப்பேட்டில் எழுதப்பட்டதைத்தான் பார்த்திருக்கிறேன். நிற்க, நான் சொல்ல வருவது என்னவென்றால் வள்ளுவர்கள் வானியல் நுட்பங்களைத் தாமாக அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச் சூழலை இனங்காணாமல் இன்று பஞ்சாங்கங்களில் கிடைக்கும் வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து சாதகம் பார்ப்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள்தாம் அனைத்து வானியல் கண்டுபிடிப்புக்கும் மூலவர்கள் என்பது பேருந்து, சரக்கி ஓட்டுநர் அனைவரும் ஒன்றுசேர்ந்து தாங்கள்தாம் உள்ளெரிப் பொறிகள்(Internal combustion engines) உட்பட உந்துத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூலைப் படித்ததிலிருந்து, இது வள்ளுவத்தின் வீழ்ச்சி அல்ல, குணாவின் வீழ்ச்சி என்று நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அது கூடப் பெரிதில்லை. தமிழகம் இந்தியப் பனியா அரசின் பின்னணியோடு சுரண்டப்படுவதை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட்டுக் கொண்டிருந்த குணா திடீரெனத் திசைமாறி தமிழக மக்களிடையில் மொழி அடிப்படையில் பகைமை வேர்கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியது எனக்குப் பேரிடியாக இருந்தது. இப்பொழுது தமிழ் பேசும் மக்களிடையில் கூட சிவனியத்துக்கு எதிராகவும் கருத்துச் சொல்லத் தொடங்கியுள்ளது, தன் செயல்களின் தன்மையையும அவற்றின் விளைவுகளையும் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டதையே காட்டுகிறது. வேறு வகையான சிந்தனைகள் உங்களை ஆட்கொண்டு விடாதபடி விடுதலை இறையியல் கூட்டம் அரணிட்டுக் காத்து நிற்பது ஊரறிந்த உண்மையாகிப் போனது. இதைப் பயன்படுத்தி படையெடுப்பாளர்களின் காலைப் பற்றிக்கொண்டு தமிழகத்தில் நாட்டுணர்வுடன் பகைவர்களை எதிர்த்துநின்ற மண்ணின் மைந்தர்களை ஒடுக்கிய, இன்றும் ஒடுக்கி வரும் சாதி வெறிபிடித்த ″தமிழ்″ச் சாதியினர் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பதும் அனைவருக்கும் தெரிகிறது.

தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், தமிழகத்தில் உணர்வும் ஈகை நோக்கும் உள்ள இளைஞர் மட்டுமல்ல மூத்தவர்களையும் கொண்ட கூட்டம் ஒன்று உங்கள் வழிகாட்டலில் தங்கள் சிந்தனைகளைத் திருப்பிக்கொண்டு நிற்கிறது. அவர்களுக்குத் தவறான வழியைக் காட்ட வேண்டாம். தமிழக மக்கள் பொருளியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டிய சரியான பாதையை அவர்களுக்குக் காட்டுங்கள். புற முரண்பாடுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய கற்பனைக் கெட்டாத கடும் போரில் உள்முரண்பாடுகள் உருகி மக்கள் ஒன்றாகக் கலந்து விடுவார்கள் என்று வரலாறு நெடுகிலும் நாம் காணும் உண்மையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மேலே எழுதிய கருத்துகளின் மூலம் தங்கள் மனதுக்கு ஏதாவது வருத்தம் நேர்ந்திருந்தால் அதற்காகவும் என்னை மன்னித்திருங்கள்.

நான் தங்களுக்குப் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவற்றைப் பற்றி ஏற்கனவே அந்தக் குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன். அதனை மீண்டுமொருமுறை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்
குமரிமைந்தன்.

0 மறுமொழிகள்: