26.9.08

பிண்டத்துள் அண்டம்

பிண்டமாகிய மனித உடலுக்குள் இயற்கையின் ஒட்டுமொத்தமாகிய அண்டமே அடங்கியுள்ளதாம், சொல்கிறார்கள் நம் ஆன்மீகர்கள். பிண்டத்தில் உள்ள அண்டத்தைப் பார்க்க வேண்டுமா? எடுத்துக் கொள்ளுங்கள், மான்தோல் அல்லது புலித்தோலை. விரியுங்கள். ஆடைகளைக் களைந்து தாழ்ச்சீலை(கோவணம்) மட்டும் கட்டிக்கொள்ளுங்கள். அம்மணமாக இருப்பது சிறப்பு. விரித்த தோலின் மேல் சப்பணமிட்டு அமருங்கள். முடிந்தால் தாமரை இருக்கையாக(பத்மாசனமாக) அமரலாம். இப்போது உங்கள் இரண்டு கண்களின் பார்வையையும் உங்கள் மூக்கின் நுனியில் குவித்துக்கொள்ளுங்கள். உங்கள் மூச்சு வலது மூக்கில் செல்கிறதா, இடது மூக்கில் செல்கிறதா அல்லது இரண்டு மூக்குகளிலுமே செல்கிறதா என்று நோட்டமிட வேண்டும். அப்புறம் அந்த மூச்சைத் தடம்பிடித்து உடலினுள் எங்கெங்கே செல்கிறது என்று கவனித்துக் கொண்டே சிறிது சிறிதாக மூச்சைக் குறைத்துக்கொண்டே வந்தீர்களானால் நாடித்துடிப்பும் குறையும். இப்படிக் குறையுந்தோறும் நீங்கள் பிறந்தபோது உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மூச்சுகளும் நாடித் துடிப்புகளும் தீர்வதுவரை கூடுதல் காலம் வாழ்நாளை நீங்கள் நீட்டலாம். அது மட்டுமல்ல, மூச்சின் எண்ணிக்கை குறையக் குறைய ஆங்கிலத் திரைப் படங்களில் அண்ட வெளியில் மனிதர்கள் நுழையும் காட்சிகளில் பார்ப்போமே அதுபோல் அப்படியும் இப்படியும் சுழலும் அண்டவெளியை உங்கள் பிண்டத்துக்குள் நீங்கள் காணலாம். முச்சு குறைந்ததனால் வந்த மயக்கத்தில் இவற்றைக் காண்பதாக யாராவது கூறினால் நம்பாதீர்கள். (ஏதாவது ஐயம் இருந்தால் ஞானியின் கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை? என்ற நூலைப் படித்துப் பாருங்கள்.) அது மட்டுமல்ல நீங்கள் இதன் மூலம் கடவுளே ஆகிவிடலாம். இப்படிச் செல்கிறது நம்மவர்களின் ஆன்மீகத் தேட்டம். இப்படி அமர்ந்திருப்பவன் கடவுள், அவனுக்கு மான்தோலோ புலித்தோலோ கொண்டுவருபவனும் வயலிலும் காட்டிலும் மேட்டிலும் உழைத்துப் பாடுபட்டு உண்ணவும் உடுத்தவும் உறங்கவும் தேவைப்படுபவற்றைக் கொண்டு தருபவனும் வினைபுரிந்து மீண்டும் மீண்டும் பிறந்து உழல்பவர்கள் என்று செல்கிறது ஒப்பற்ற நம் ஒட்டுண்ணிக் கோட்பாடு.

இப்படி உட்கார்ந்தே இருப்பவன் நீண்ட காலம் வாழ்வதால் அவனுக்கோ உலகுக்கோ என்ன ஆதாயம் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் ஒரு முட்டாள்.

மலை, காடு, கடல் என்று எதையும் விடாமல் அலைந்து திரிந்து மூலிகைகளைத் தேடி அவற்றின் வேர் முதல் விதைவரை உள்ள தன்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நிலைத்திணை வாகடங்களை உருவாக்கி விலங்குகள், மண், கல், கனிமங்கள் என்று அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தி வானியலையும் வளர்த்தவர்கள் நம் அறிவியல் - தொழில்நுட்பச் சித்தர்கள். அவர்களின் பெயரால் குத்தகை உழவனின் உழைப்பில் அமர்ந்து உண்டு வாழ்ந்திருந்த ஒட்டுண்ணிகள் ஆகமக் கோயில்கள் தம் சொத்துகளைப் பறித்துக்கொள்ளாமல் காக்கவும் அந்த இடைவெளியில் குத்தகை உழவன் விழித்துக் கொள்ளாமல் இருக்கவும் வகுக்கப்பட்டது இந்த ஒட்டுண்ணிக் கோட்பாடு.

இந்த வித்தகர்களையும் தாண்டிச் சென்றனர் சிலர். பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் உலகத்தைத் எம் கைகளுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்றனர். அதற்கு உலகளாவுதல் (Globalisation) என்று பெயரும் இட்டனர். இன்று அவர்கள் தாம் எங்கிருக்கிறோம் எங்கு போகப் போகிறோம் என்று கூட அறிய முடியாமல் தத்தளித்துத் தடுமாறி நிற்கின்றனர்.

உலகளாவுதல் என்பது உலகத்தில் ஒன்றும் புதிதல்ல. வரலாறு அறிந்த நாள் முதல் நடப்பதுதான். அறிந்த வரலாற்றில் உலக வாணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் பினீசியர்கள். அவர்கள் இப்போலசுக்கு முன்பே நடுக்கடலில் பருவக்காற்றை அறிந்து கப்பலோட்டியவர்கள், எகிப்தின் பரோவா மன்னனுக்காக நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தவர்கள், ஐரோப்பியர்களுக்கு பல்வேறு நாகரிக அடிப்படைகளை அமைத்துக் கொடுத்து அ முதல் ன வரை பதினாறு எழுத்துகளையும் வழங்கியவர்கள், கடல்வாணிகத்தையும் கடற் கொள்ளையையும்(இந்த நடைமுறை இன்றுவரை தொடர் அறுபாடமல் தொடர்கிறது) செய்தவர்கள். ஐரோப்பா என்ற பெயரே யுரோபா என்ற பினீசியப் பெண்ணிடமிருந்துதான் வந்ததாம். இலியடு காப்பியத்தில் வரும் பெண் கடத்தலே இவர்கள் நடத்திய ஒரு பெண் கடத்தலின் எதிர்வினைதானாம். இவர்கள் முதலில் இன்றைய சிரியா பகுதியில் வாழ்ந்து லிபியா வரை பரவினர். இந்தியாவின் தென்முனையிலிருந்து சென்று அங்கு குடியேறியவர்கள், அங்கெல்லாம் தென்னை, பனை முதலியவற்றை அறிமுகம் செய்தவர்கள். பனை என்ற சொல்லின் அடிப்படையில்தான் பினிசீயர்கள் என்ற பெயர் வந்தது என்றும் ஒரு கருத்து உள்ளது. (பார்க்க: இரோடோட்டசு, வி.எசு.வி. இராகவன், Athens and Aeschilles, George Thompson.)

இவர்களை இறுதியாக அழித்தவன் அலக்சாண்டர். இவர்களைத் தொடர்ந்து கிரேக்கர்களும் அடுத்து உரோமர்களும் உலக வாணிகத்தைக் கையில் வைத்திருந்தனர். முகம்மது நபிக்குப் பின் அரேபியர்களும், துருக்கர்களும் வைத்திருந்தனர். இறுதியாக ஐரோப்பியர்கள் அதனைக் கைப்பற்றி அமெரிக்காவிடம் பறிகொடுத்து மீட்க முயன்று கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை கழகக் காலத்தில் செய்ததைத்தான் நாம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். நமது குறுநில மன்னர்கள் தங்கள் குடிமக்களிடமிருந்து யானை மருப்பையும், மிளகு, ஏலம், இலவங்கம் போன்ற எண்ணற்ற மலைபடு பொருட்களையும் அவர்களுக்குக் கள்ளை ஊற்றிப் பறித்துக்கொண்டனர். (சான்று: சங்க கால வாணிகம், மயிலை சீனி.வெங்கடசாமி.) பாண்டியர்கள் முத்துக் குளிப்போரிடமிருந்து அதே போல் கள்ளை ஊற்றி முத்துக்களைப் பெற்றனர். (சான்று: தமிழர் வரலாறு, இரா. இராகவையங்கார்.) இவற்றை ஏற்றுமதி செய்து யவனர் (இந்தச் சொல். அரேபியர், கிரேக்கர், உரோமர் ஆகியோருக்குப் பொதுவான பெயர்) தந்த நன்கலத்தில் அவர்கள் தந்த கடுத்த சீமைச் சாராயத்தை யவனப் பெண்கள் ஊற்றித்தர புலவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அருந்தினர் நம் மன்னர்கள். புலவர்களோ அந்த அரசர்களைப் புகழ்ந்து உலகமே போற்றும் பாக்ககளை இயற்றினர். இவற்றைத் திரட்டித் தந்த குடிமக்களோ காய்கனிகளைப் பறித்தும் எலிகளையும் முயல்களையும் வேட்டையாடியும் மீன்களைப் பிடித்தும் உண்டு உயிர்வளர்த்தனர்.

ஆனால் இன்றைய உலகளாவுதல் வேறுபட்டது. இதன் தோற்றம் என்ன? அரேபியருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட இடைவெளியில் ஆட்சியாளர்களைப் புறந்தள்ளி வாணிகர்கள் வளர்ந்ததன் விளைவாக வெடித்தன அறிவியல் - தொழில்நுட்பப் புரட்சியும் முதலாளியமும். அரசர்களின் தலைகள் மக்களின் புதிய ஆற்றலால் பலி பீடங்களில் வெட்டியெறியப்பட்டன. தொழிலகங்கள் என்ற புதிய கட்டமைப்பினுள் எண்ணற்ற கூலி அடிமைகள் அடைக்கப்பட்டனர். பிரிட்டனின் கையில் இருந்த அமெரிக்காவில் கருப்பின அடிமைகளை வைத்து வேளாண்மை செய்தவர்களுக்கும் தொழில் முதலாளிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் பாட்டாளியர் நன்மைகளைப் பெற்றனர். பொதுமைக் கோட்பாடு உருவானது. பங்கு முதலீட்டு முறை வளர்ந்து குறுகிய தனியுடைமை மறைந்து முதலாளி முகமற்றவனானான். தொழில்சங்கங்கள் உருவாயின. தொழிலாளர்களின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நடப்பில் தொழிலாளர்களின் செல்வாக்குக்குள் தொழிலகங்கள் வந்தன. தொழிலகங்களின் சொத்துகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற தொழிலாளர் வகுப்பின் கேள்வி வலுப்பெற்று செயல்படவும் தொடங்கியது. இப்போது முதலாளியருக்கு இந்த நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தின் நிலை.

வீறுபெற்று எழுந்த ஐரோப்பா தன் வாணிகத்துக்காக இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு வந்தபோது இங்கிருந்த அரசியல் - பொருளியல் - குமுகியல் - நிலைகள் அந்நாடுகளைத் அதன் ஆளுமையினுள் கொண்டுவருவதை எளிமையாக்கின. அங்குள்ள வளங்களும் சந்தையும் ஐரோப்பிய முதலாளியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆனால் இந்த நாடு பிடிக்கும் கட்டத்தில் பிரிட்டனால் ஏமாற்றப்பட்ட செருமனி (பார்க்க: Foot Prints on the Sands of Time, F.G.Pearce, Ch.ⅩⅩⅣ) இங்கிலாந்தைப் பழிவாங்க இரு உலகப் போர்களைத் தொடங்கி பிரிட்டனின் வல்லரசியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இன்று அமெரிக்க வல்லரசியம் வளர்ந்து தேய்பிறைக் கட்டத்தில் உள்ளது.

உலகப் போர்கள் முடிவடைந்ததும் ஐரோப்பாவுக்கு அடிமைப்பட்டிருந்த நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. ஆனால் அவை தங்கள் பொருளியலைத் தொய்வுறாமல் கொண்டு செல்லத் தேவையான மூலதன - தொழில்நுட்பத்தை வளர்க்கத் தினறிய நிலையில் வல்லரசுகள் தாங்கள் உருவாக்கிய உலக வங்கி, உலகப் பணப் பண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் பொருளியலைத் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன. ஐரோப்பாவில் உருவான பொதுமைக் கோட்பாட்டின் திரிபால் அந்நாடுகளிலுள்ள வளம் அனைத்தும் அங்குள்ள ஆட்சியாளரின் கைகளுக்கு வந்தன. ஊழிலில் அவர்கள் கொழுத்தனர். கொள்ளையடித்த பணத்தை முதலில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கினார். அதனால் சிக்கல்கள் வரவே பணக்கார நாடுகளின் தொழில்களில் முதலிட்டனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி உலகளாவுதல் என்ற கருத்தை உருவாக்கித் தங்கள் நாடுகளிலிருந்த தொழில்கள் அனைத்தையும் ஏழை நாடுகளுக்கு வெளியேற்றித் தொழிலாளர் இயக்கங்களின் நெருக்குதல்களிலிருந்து வல்லரசுகள் தற்காலிகமாகத் தப்பின.

தன்னுடைய சொந்த வளத்தைப் பயன்படுத்தாமல், உலகிலுள்ள பிறநாடுகளின் வளங்கள் முற்றிலும் செலவழிந்தபின் தானே தனிக்காட்டு அரசனாகக் கோலோச்சலாம் என்று ″பின்″னெச்சரிக்கையுடன் உலகின் வளங்களை எல்லாம் தன் ஆளுமையினுள் கொண்டுவருவதற்குத் தன் செல்வத்தின் பெரும் பகுதியையும் படைப் பெருக்கத்தில் செலவிட்டதால் இன்று பெரும் கடன் வலையில் குறிப்பாக எண்ணெய் நாடுகளின் கடன் வலையில் சிக்கியிருக்கிறது அமெரிக்கா (Business Standard Channai, 15-07-08) அதுமட்டுமல்ல அமெரிக்காவின் பெருமைக்கும் தன்மானத்துக்கும் அடையாளமாகிய கட்டடங்களைக் கூட அரேபியப் பணக்காரர்கள் வாங்கிக்கொண்டுள்ளனர் (THE HINDU Business Line 19-07-08 p.8). உலக அளவில் டாலரின் மதிப்பு இறங்கிப்போயுள்ளது. விலைவாசிகள் ஏறியபடி உள்ளன. அங்குள்ள பணிகள் பிறநாடுகளுக்குக் கொண்டுசெல்லப் படுகின்றன. அரசியல்வாணர்களும் பொருளியலாரும் இப்போது அமெரிக்காவுக்கு உடனடித் தேவை ஆப்கானித்தானிலோ, ஈராக்கிலோ மக்களாட்சியை நிறுவுவதல்ல, அமெரிக்காவில் மக்களாட்சியை உறுதிப்படுத்துவதுதான் என்று கூறத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் நிலைமை இன்னும் இரங்கத்தக்கதாக உள்ளது. கணக்கற்றுப் பாய்ந்த பணம் இங்கு படைப்போ பணியோ சார்ந்த வளர்ச்சி உள்ளூர் மக்களுக்கு மறுக்கப்பட்டதால் அந்தப் பணம் பாய்ந்து அசையாச் சொத்துகளின் விலை உலக அளவில் மிக உயர்ந்துவிட்டது. கட்டடங்களின் வாடகையும்தான். இங்கு பணியாளர்களின் சம்பளம் பலமடங்கு ஏறிவிட்டது. கறிக்கோழி போல் குறுகிய காலத்தில் பட்டம் பெற்றவர்களுடைய திறமை உலக அளவில் ஒப்பிட கீழிறங்கியுள்ளது. கட்டமைப்பு வசதிகளை இங்குள்ள காலங்கடந்து போன ஆள்வினை முறையால் உரிய காலத்தில் உருவாக்க முடியவில்லை. முதலைப் போட்டுத் தொழில் தொடங்குபவர்களுக்கு உரிய உரிமங்கள் ஒதுக்கீடுகள், இசைவுகளைப் பெறுவதற்கு சிவப்பு வார்த் தடங்கல்களும் அளவுக்கு மீறிய ஊழலும் பெரும் சிக்கல்களாக விளங்குகின்றன. இந்த நிலையில் இங்கு ஏற்கனவே காலூன்றியவர்களும் புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்களும் கடையைக் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியத் தொழில்நுட்பர்களை விட அமெரிக்கத் தொழில் நுட்பர்கள் இன்று குறைந்த கூலிக்கு வருவதால் அமெரிக்காவிலுள்ள இந்தியத்தொழில் முனைவோர் கூட அமெரிக்கத் தொழில் நுட்பர்களை நாடத் தொடங்கியுள்ளனர். தொழில் முனைவோர் ஒவ்வொரு நாடாக ஓடி அங்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டு அங்கெல்லாம் பணப்புழக்கத்தை அளவுக்கு மீறிப் பெருக்கிவிட்டு அது தங்கள் தொழிலைப் பாதிக்கும் நிலை வந்த உடன் அவற்றை அப்படியே போட்டுவிட்டு அடுத்தடுத்த நாடுகளுக்குத் ஓடத்தொடங்கியுள்ளனர். தங்கள் கைகளுக்குள் வந்துவிட்டது என்று இவர்கள் கொக்கரித்த உலகம் இப்போது இவர்களைப் பார்த்து எக்காளமாகச் சிரிக்கிறது.( The Price of Growth, Business World, 21-07-08, p.30 - 34)

எழுதப்பட்ட வரலாற்றில் ஒரு நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்கு மூலப் பொருட்களைக் கொண்டு சென்று தொழிலகங்களில் விளைப்பு நடவடிக்கையில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் பண்டை எகிப்தியர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மெசப்பொட்டோமியாவின் மீது படையெடுத்து மூலப்பொருட்களையும் அடிமைகளையும் அவர்கள் கொண்டு வந்தனராம். அதற்கு அடுத்தபடி அதைச் செய்தவர்கள் ஐரோப்பியர்கள்தாம். இன்று உலகின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு எல்லா மூலப்பொருள்களும் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்தியாவில் நிகழ்வது போல் ஒவ்வொரு பொருளும் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகி உலக மக்களின் ஆற்றல் வளங்களை வீணாக்கி சிலரை மட்டும் கொழுக்கவைத்துக்கொண்டிருக்கிகிறது.

இந்த நிகழ்முறையில் எந்த நாட்டிலோ யாரோ உருவாக்கிய ஒரு தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கி அதற்குத் தேவையான மூலப்பொருளையும் இறக்குமதி செய்து உள்நாட்டு அறிவியல் - தொழில் நுட்பங்களை கருக்கொள்ள விடாமல் நசுக்கி உள்நாட்டு மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு விடுத்தும் கொள்ளை அடிக்கின்றனர் ஏழை நாடுகளை ஆளுவோர்.

ஓர் உண்மையான அறிவியல் - தொழில்நுட்ப மண்டலம் தத்தம் நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தத்தம் தேவைகளை நிறைவேற்றுவதாகவே இருக்க வேண்டும். எம் பல்தொழில் பயிலகத்தின் இறுதியாண்டில்(1960) உரையாற்றிய இந்திய எல்லைச் சாலை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர், தங்கள் பணியின் தன்மையே வெளியிலிருந்து கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வர முடியாது என்பதுதான்; எனவே அங்கங்கே கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே தங்கள் அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் நிறைவேற்றுவதாகக் கூறினார். அவர்களால் முடிவது நம்மாலும் முடியும்.

நம் மக்களிடம் சென்ற தலைமுறைகளில் இருந்து அழிந்தனவும் இன்றும் தொடர்வனவுமாகிய அங்கங்குள்ள மூலப்பொருட்களைக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றுகின்ற தொழில் நுட்பங்களை இன்றைய அறிவியல் வெளிச்சத்தில் மீளாய்வு செய்து மேம்படுத்தி ஒரு தேசிய அறிவியல் - தொழில் நுட்ப மண்டலத்தை ஒவ்வொரு தேசிய மக்களும் உருவாக்க வேண்டும்.

தங்கள் மூலதனம், தங்கள் மூலப்பொருள், தங்கள் அறிவியல் - தொழில்நுட்பம், தங்கள் உழைப்பு, தங்கள் சந்தை என்ற அடிப்படையிலான ஒரு தேசிய முதலாளியத்தை உலகின் ஒவ்வொரு தேசியமும் உருவாக்க வேண்டும். இன்றியமையாதவை என்று ஏதாவது தேவைப்பட்டால் மட்டும் பிற தேசியங்களோடு தொடர்பு வைத்துத் தங்கள் பண்டங்கள், பணிகளை, தேசிய மக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பரிமாறிக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் தேசிய மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் எதனையும் ஏற்றுமதி செய்யக் கூடாது. புதுப்பிக்க முடியாத வனங்களை நேரடியாகவோ, அவற்றைப் பயன்படுத்திச் செய்யும் பண்டங்களாகவோ எக்காரணத்தைக் கொண்டும் எந்தத் தேசியமும் தன் தேசீய எல்லைக்கு வெளியே செல்ல இடம் தரக்கூடாது.

பாராளுமன்ற மக்களாட்சி என்ற பெயரில் செயற்படும் இன்றைய குழுவாட்சி(Oligarchy) முறையில் இன்றிருக்கும் பொருளியல் கட்டமைப்பை உடைப்பது இயலாது. எனவே உண்மையான மக்களாட்சிக்கான ஒரு புதுவடிவை நாம் உருவாக்க வேண்டியது உடனடிப் பணி.

(இக்கட்டுரை தமிழினி செப்டம்பர்-2008 இதழில் உலகளாவுதல் என்ற தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: