செங்கொடி அவர்களுக்கு மடல்
28-11-08
அன்பு நண்பர் செங்கொடி அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பதிவுகளை ஓரிரு நாட்களுக்கு முன்தான் பார்க்க முடிந்தது. எனக்கு வரும் மின்னஞ்சல்களையும் எனது வலைப்பக்கப் பதிவுகளையும் கையாள்பவர் நண்பர் எட்வின் பிரகாசு. இந்திய அரசு தொலைத் தொடர்பு அமைப்புத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் செலவு அவருடைய பொருளியல் நிலைக்கு அப்பாற்பட்டதுடன் அதன் செயற்பாடும் சரியில்லை என்று ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி வழி முயன்றார். தொடக்கத்தில் ஓரளவு கிடைத்த தொடர்பு பின்னர் தொய்ந்து போய் விட்டது. பின்னர் கம்பியில்லாத தொலைபேசி (WLL) மூலம் அரசுத்துறையில் உரூ3000/- செலவில் எடுத்ததும் ஊர்ப்புறத்திலுள்ள அவர் வீட்டுக்கு ஓரளவு கிடைக்கிறதே அன்றி நகரத்திலிருக்கும் எம் அலுவலகத்துக்குக் கிடைக்கவில்லை. எனவே அவர் இரவில் வீட்டுக்குச் சென்றபின்தான் அதைப் பயன்படுத்த முடிகிறது. அத்துடன் நம் ஆட்சியாளர்களின் மின்சாரக் கெடுமதி வேறு. இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவரால் வலைதளத்தையோ மின்னஞ்சலையோ பயன்படுத்த முடியாத நிலை. இவ்வளவையும் மீதுற்று அவர் எடுத்து வந்த பிறகுதான் நான் படித்தேன். ஏறக்குறைய உரூ 10,000/- வரை அவர் இதற்காகச் செலவு செய்துள்ளார். அரசுடைமை என்பது மக்கள் நலன்களை பனியாக்கள், பார்சிகளுக்கு அயலவருக்கும் விற்பதாக மாறும் நிகழ்முறையின் தவிர்க்க முடியாத விளைவுதான் இது.
இனி உங்கள் பதிவுக்கு வருவோம். திரு. சு.கி.செயகரனின் நூல் ஒரு பொன்மாற்று(பம்மாத்து). புவி இயங்கியலாளர் என்று சொல்லிக் கொள்ளும் அவர் குமரிக் கண்டக் கோட்பாட்டுடன் தொடர்புடைய ஒரேயொரு புவியியங்கியல் செய்தியைக் கூடத் தன் நூலில் தரவில்லை. எடுத்துக் கொண்ட பொருளாகிய குமரிக்கண்டம் இருந்ததாகக் கருதத் தக்க குமரி(இந்து)மாக் கடலின் நடுப் பகுதிக்கு வரும்போது ‘விரிவஞ்சி விடுகிறோம்’ என்று நழுவிடுகிறார். அவர் கொடுத்ததெல்லாம் வரலாறு, இலக்கியம், தொல்பொருளாய்வு என்ற எந்தத் துறையையும் சாராத ஒரு சிலரது ஆய்வேடுகளை மேற்கோள் காட்டியதே. இது போன்ற “படைப்பு”கள் வெளிவரும் போது அவர்கள் கூறும் “அறிவியல்” செய்திகளை அலசிப்பார்க்க முயலாமல் அவர்கள் “அறிவியல் ஆய்வு” என்று சொன்னவுடன் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வது அல்லது நழுவி விடுவது என்பது நம் படிப்பாளிகளிடையில் உள்ள ஒரு இயல்பாகி விட்டது. அதனால்தான் அறிவுத்திறன் வாய்ந்த வையாபுரியார் போன்றவர்களும் வெறும் பட்டத்தையும் பதவியையும் காட்டி மிரட்டும் செயகரன் போன்றோரும் பகட்டால் படம் காட்டும் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் இங்கு புகழ்பெற முடிகிறது. செயகரனுடைய நூலுக்கு மறுப்பாக குமரிக்கண்ட அரசியல் - காலத்தின் சுவடுகள், குழப்பத்தின் முடிவுகள் என்ற தலைப்பில் எனது குமரிக்கண்ட அரசியல் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முடியவில்லை. முடிந்த பகுதி வரை என் வலைப்பக்கத்தில் உள்ளது. படித்துப் பார்த்து தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
நன்றி
குமரிமைந்தன்.
1 மறுமொழிகள்:
அன்பு நண்பர் குமரிமைந்தன் அவர்களுக்கு செங்கொடியின் வணக்கங்கள்.
உங்கள் மின்னஞ்சல் கண்டேன். ஜெயகரன் நூலின் தாக்கம் நீண்ட நாட்களாய் என்னில் இருந்தது, உங்களின் பதிவுகளை கண்ட பின்புதான் அதிலிருந்து நான் மீள தலைப்பட்டேன். ஆனாலும் பண்பாட்டுத்தடயங்கள் தானே நம்மிடம் இருக்கிறது, குமரிக்"கண்டம்" எனும் அளவிற்கு பண்பாட்டுத்தடயங்கள் மட்டும் போதுமா? என்ற மயக்கம் இன்னும் நீடிக்கிறது.
உங்கள் பதிவுகள் வேறு தலைப்பிலும் பயனுள்ளதாக இருந்தது. காட்டாக எகிப்து பற்றிய குறிப்புகள். தங்கள் நாட்டை அவர்கள் ம்சிர் என்றும் தங்களை ம்சிரி என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். இது குறித்த என் ஐயங்களை உங்கள் பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தேன். உங்கள் வாய்ப்புகளினூடாக விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
உங்கள் வலைதளத்திற்கு என்னுடைய வலைதளத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஜெயகரனின் ஏனைய நூலகள் பற்றி உங்கள் மதிப்பீட்டை அறியும் ஆவலிலுள்ளேன். குறிப்பாக "மூதாதையர்களைத்தேடி" எனும் நூல்பற்றி.
மீண்டும் உங்கள் மின்னஞ்சல் கண்டு
உங்களுக்கும்,நண்பர் எட்வின் பிரகாசு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும்.
தோழமையுடன்,
செங்கொடி.
கருத்துரையிடுக