28.11.08

அரணமுறுவல் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

நாள்: 23-08-2008

அன்பு நண்பர் அரணமுறுவல் அவர்களுக்கு வணக்கம்.

ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டறிக்கை நேற்று கிடைத்தது. நன்றி. கன்னடம் செம்மொழி ஆனால் உங்களுக்கு என்ன? தமிழைச் செம்மொழி ஆக்கி அதற்கென்று தனி அடிப்படையை வகுத்த போதே அதை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டு அடுத்தவன் மொழியைப் பற்றிய கவலை எதற்கு? தமிழ் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று உரிய நேரத்தில் உரிய வகையில் போராடாமல் ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி வருகிறது என்றதும் வரிந்து கட்டி நின்ற நம் தமிழமைப்புகளை அப்படியே போலச்செய்கிறீர்கள். நமக்கு என்ன தேவை என்று முடிவு செய்யத் தெரியாதவர்களுக்கு இயக்கங்கள் எதற்கு?

சித்த மருத்துவர் சங்கங்கள், கழகங்கள் என்று வைத்துக்கொண்டு வெறும் பதிவு பெற்றுத் தரும் தரகு வேலை செய்பவர்கள் அம்மருத்துவ முறை மக்களை ஈர்க்கும் வகையான மேம்பாடுகளை அடைவதைத் திட்டமிட்டுத் தடுத்து அம்மருத்துவ முறை சிறிது சிறிதாக மக்களிடமிருந்து அயற்பட்டு அழியச் செய்துகொண்டிருப்போரின் செயல் போன்றதே தங்களுடையதும்.

தமிழ் சிறுகச் சிறுகத் தொடங்கி இன்று மிக விரைவாக மக்களின் நாவிலிருந்து அகன்றுகொண்டிருப்பதையும் பல கல்வி நிலையங்களும் நீங்கள் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடலைப் பாடியுள்ள சுந்தரனார் பெயரில் இயங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும் கூடத் தமிழில் மாணவர்கள் பேசுவதைத் தடை செய்திருப்பதையும் கண்டுகொள்ளாமல் யாரோ விரல்விட்டு எண்ணத்தக்க ″தமிழறிஞர்களு″க்கு மட்டும் பயன் தரக்கூடிய ″இருக்கை″ வசதிக்காக இப்படி இளைஞர்களையும் ″தலைவர்களை″யும் கூட்டி நடத்தும் இந்த நிகழ்ச்சியின் பொருள் என்ன? நோக்கம் என்ன?

தாங்கள் கூறியது போல் சமற்கிருதத்துக்கு ஒதுக்கப்படுவது போல் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா மொழிகளுக்கும் ஆய்வுக்காகப் பணம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகை வைப்பதிலிருந்து எது உங்களைத் தடை செய்கிறது என்பது தெரியவில்லை.

இந்திய ″விடுதலை″க்குப் பிறகு உள்நாட்டு அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல்கள் வளர்ந்து விடாமல் தடுத்து வெளிநாட்டு இறக்குமதித் தொழில்நுட்பத்தில் தொழில் நடத்தும் பனியாக்களுக்குப் போட்டியாக எவரும் வரவிடாமல் தடுத்து இந்திய ஆட்சி மொழியாகிய இந்தியையும் ஆங்கிலத்தையும் படித்தவர்களுக்கு மட்டும் வளவாழ்வு என்ற சூழ்நிலையைக் கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேவையை உருவாக்கியதால் தாய் மொழிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. பல்வேறு மொழி பேசும் மாநில மக்களைத் திரட்டி இந்தக் கொடுமைகளிலிருந்து மாநில மொழிகளைக் காப்பாற்ற பொருளியல் - அறிவியல் - தொழில்நுட்ப விடுதலைக்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் நிகழ்காலம், எதிர்காலங்களிலிருந்து மக்களின், மாணவர்களின், இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் செம்மொழிச் சிக்கல் அல்லது மொழியைத் தனிமைப்படுத்தி அதற்காக என்று போராடுவது உண்மையில் தமிழை முற்றாக அழிக்கும் பணியாக இருக்கும். அதை நீங்கள் அறியாமையால் செய்கிறீர்கள் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. உங்கள் இந்த திசைதிருப்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் நீருரிமைகளை தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் வடமேற்கிலும் உள்ளவர்கள் பறிக்கிறார்கள். நிலத்தை நேரடியாகவே பறிக்க முயல்கிறார்கள். கிழக்கில் கச்சத் தீவைச் சிங்களனுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்துத் தமிழர்களை இந்தியப் படையும் இலங்கைப் படையும் சுட்டு வீழ்த்துகிறார்கள். தமிழ் நாட்டை ஆள்வோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணற்ற வழிகளில் தமிழக நிலங்களை அயலவருக்குப் பிடுங்கிக் கொடுக்கிறார்கள். இந்த அனைத்துக் கொடுமைகளையும் எதிர்த்து உரிய கோட்பாட்டை உருவாக்கி மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் அதிலிருந்து இங்குள்ள உணர்வுள்ள, ஆர்வமுள்ள இளைஞர்களின் கவனத்தைத் திருப்புவதாகத் தங்கள் நடவடிக்கை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். தமிழக, அல்லது இந்திய மக்களின் பொருளியல் - அறிவியல் - தொழில்நுட்ப உரிமைகளுக்காகப் போராடத் தாங்கள் ஆயத்தமானால் நாம் இணைந்து செயல்படலாம் என்று மீண்டும் ஒருமுறை உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின், தமிழ் மக்களின் நலன்கள் அனைத்தையும் அயலவருக்கு விற்றுத் தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்த கும்பலையும் வளர்த்துவரும் கருணாநிதியைப் புகழவும் பாராட்டவும் எங்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுத் திரியும் தமிழமைப்புக் கூட்டமைப்பின் நோக்கும் போக்கும் மாறாத வரை தமிழகமும் தமிழக மக்களும் வாழமாட்டார்கள், விளங்க மாட்டார்கள். தமிழும் வாழாது, விளங்காது.

இலங்கைத் தமிழர்கள் மீது உங்கள் அளவுக்குக் குறையாமல் எனக்கும் கவலை உண்டு. அதற்கும் நாம் நம் உரிமைகளுக்காகப் போராட வீறு கொண்டு ஒருங்கிணைந்து நின்றால்தான் நம் நடவடிக்கைகளால் ஈழத் தமிழர்கள் உட்பட எந்த அயலகத் தமிழனுக்கும் பயனுண்டு. இல்லையென்றால் இதுவும் இளைஞர்களைத் திசை திருப்பும் செயலாகவே முடியும்.

அன்புடன்
குமரிமைந்தன்
பொறியாளர்
நிறுவனர்: தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
மேலாண்மை அறங்காவலர்: புதுமையர் அரங்கம் (அறக்கட்டளை)
தமிழ்க் குடில், தெற்குச் சூரங்குடி (அஞ்சல்), குமரி மாவட்டம் – 629 501.
☎ இல்லம்:04652-208194 செல்பேசி:9790652850

இணைப்பு: துண்டறிக்கை

கன்னடம் செம்மொழியா?

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 22.8.2008 வெள்ளி பிற்பகல் 2.00 மணி
இடம்: தொடர்வண்டி நிலையம் எதிரில், திருநெல்வேலிச் சந்திப்பு

தலைமை : தோழர் செம்மணி
தமிழக மக்கள் உரிமைக் கழகம்

கண்டன உரை : தோழர் ப. பொற்செழியன்
வளர்மதி மன்றம்

வழக்கறிஞர் இரா. சி. தங்கச்சாமி
உலகத் தமிழ்க் கழகம்

தோழர் லோக சங்கர்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

தோழர் செந்தில் மள்ளர்
மள்ளர் மீட்புக் களம்

தோழர் இளங்கோ பாண்டியன்
தென்மொழி அவையம்

தோழர் மை.பா. சேசுராசா
தமிழர் களம்

தோழர் செ. பசும்பொன்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் ம. சுதர்சன்
தமிழ்ச் சான்றோர் பேரவை

தோழர் தமிழீழன்
பாவேந்தர் மன்றம்

தோழர் சங்க. வள்ளிமணாளன்
தெய்வத் தமிழ் வழிபாட்டு மன்றம்

தோழர் பொருநை மைந்தன்
தமிழர் கழகம்

தோழர் வேல்முருகன்
சட்டக் கல்லூரி மாணவர்

தோழர் சத்தியா
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

நிறைவுரை முனைவர் ந. அரணமுறுவல்
இந்திய - இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு

தமிழ் உரிமை காக்க

அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, திருநெல்வேலி மாவட்டம்


கன்னடம் செம்மொழியா?

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த போதே செம்மொழிகளின் கால வரையறை குறைபாடுடையது என்று அறிஞர் மணவை முசுதபா போன்றவர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். தமிழ் அறிஞர்களின் எதிர்ப்பால் செம்மொழிக்கான காலவரையறை ஆயிரம் ஆண்டு என்பது ஆயிரத்து ஐநூறாக மாற்றியமைக்கப்பட்டது.

தமிழைச் சமசுகிருதத்திற்கு இணையான தொன்மை மொழிப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்ட தமிழர்களின் குரல் இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டுப் புதிய பட்டியலில் வைக்கப்பட்டது.

தமிழ் உலக முதன் மொழி; உயர்தனிச் செம்மொழி. இருந்தும் அதற்குரிய மதிப்பை நடுவண் அரசு தர மறுக்கிறது.

செம்மொழி என்று ஒரு மொழியை வரையறை செய்ய 10 வகையான வரையறைகளை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகத்திலேயே அந்தப் பத்து வகை இலக்கணங்களுக்கும் பொருத்தமான மொழி தமிழே ஆகும். தொன்மை, தாய்மை, தூய்மை, இளமை, வளமை உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கே உள்ளது. தமிழுக்குள்ள அனைத்துத் தகுதிகளும் சமசுகிருத்ததிற்கு இல்லை. இருந்தாலும் சமசுகிருதம் நடுவண் அரசின் செல்லப் பிள்ளையாய் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடி உரூபாக்களை விழுங்கி ஏப்பம் விட்டு வருகிறது.

இந்தக் சூழலில்தான் நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த கையோடு கன்னடத்தையும், தெலுங்கையும் செம்மொழிகள் என அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

கன்னடமும் தெலுங்கும் தேசிய மொழிகள் என்பதிலோ அவை தமிழுக்குச் சமமாக இந்திய அரசால் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலோ கருத்து வேறுபாடில்லை. இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் மக்கள் தொகைக் கணக்குக்கேற்ப நூற்றுக்கணக்கான கோடி உரூபாக்களை இந்திய அரசு ஒதுக்கி அவற்றை வளர்த்தால் அதை நாம் வரவேற்கலாம்.

உலக மொழியியல் அறிஞர்கள் இந்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்துள்ளார்கள்.

செம்மொழி இலக்கணத்துக்கு எந்தவகையிலும் பொருந்திவராத தெலுங்கையும் கன்னடத்தையும் இந்திய அரசு செம்மொழிகள் என்று அறிவிக்குமானால் அது வெட்கக் கேடான செயலாகும். வேதனை அளிக்கும் செயலாகும்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத் துயிர்த்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறன்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

என்ற மனோன்மணியம் சுந்தரனார் வரிகளை நீக்காமல் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டில் உலவ விட்டிருந்தால் தமிழ் மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு விளங்கியிருக்கும்.

தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டு அதன்சேய் மொழிகளையும் செம்மொழி என்று அறிவிக்க உள்ளது பொருத்தமில்லாததாகும். எனவே, இந்திய நடுவண் அரசு கன்னடத்தையும் தெலுங்கையும் செம்மொழிகள் என்று அறிவிக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்ப் பெருமக்களே!

உலகமே வியந்து போற்றும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகளை இனியேனும் உணர்ந்துகொள்வோம்! நம் உரிமையைக் காக்க அணி திரள்வோம்!!

0 மறுமொழிகள்: