15.4.18

சிலப்பதிகாரப் புதையல் - 20. வழக்குரை காதை

20. வழக்குரை காதை

ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
5. கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்
10. நங்கோன்றன் கொற்றவாயில்
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற்கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
15. வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென
20. ஆயமுங் காவலுஞ்சென்
றடியீடு பரசியேத்தக்
கோப்பெருந் தேவிசென்றுதன்
தீக்கனாத் திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்
வாயி லோயே வாயி லோயே
25. அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என
30. வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
35. பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற றடக்கைக் கொற்றவை யல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
40. பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே, என
45. வருக மற்றவள் தருக ஈங்கென
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்
50. தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
55. அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
60. சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
65. வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
70. தருகெனத் தந்து தான்முன் வைப்பக்
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே. மணிகண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தங்செங கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
75. யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
80. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

வெண்பா
அல்லவை செய்தார்க் கூறங்கூற்ற மாமென்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே - பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.

காவி யுகுநீருங் கையில் தனிச் சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும் - பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான கூடாயினான்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோள்
கண்டளவே தோற்றான்அக் காரிகதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.
பொழிப்புரை
அங்கே, மன்னவன் கோயில் வாயில்முன் அவள் சென்ற போதில்,
மன்னவனின் வெண் கொற்றக் குடையோடு செங்கோலும் விழவும் நின்று அதிரும் வாயில் மணியின் ஓசையையும் காண்பேன் தோழீ!
எட்டுத் திசைகளும் அதிர்ந்திடவும் அத்துடன் கதிரவனை இருள் விழுங்கவும் காண்பேன் தோழீ!
இரவில் ஒழுங்குபட்ட வானவில் தோன்றவும் கடும் வெய்யில் வீசும் பகலில் விண் மீன்கள் வீழ்வதையும் காண்பேன் தோழீ!

கருப்பம்
அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் மண்செறிந்த நிலத்தில் சாய்ந்து விழும், நம் மன்னனின் வெற்றி தரும் வாயிலில் உள்ள மணி அசையும் ஒலியால் என் நெஞ்சம் நடுங்கும், இராப்பொழுதில் வானவில் தோன்றும் பகல் வேளையில் விண்மீன்கள் எரிந்து விழும், எட்டுத் திசைகளும் அதிரும், எனவே ஒரு துன்பம் வர இருக்கிறது அதனை அரசனுக்கு நாம் கூறுவோம் என்று கூற,

ஒளி வீசும் அழகிய அணிகலன்களை அணிந்த கூனரும் குள்ளரும் ஊமையும் ஆன குற்றேவல் மகளிர் கண்ணாடியையும் அணிகலன்களையும் புதிய நூலாடையையும் பட்டாடையையும் செழுமையான வெற்றிலைச் செப்பையும் பலவகை வண்ணப் பொடிகளையும் சுண்ணங்களையும் கத்தூரிக் குழம்பையும் ஆரங்களையும் மாலைகளையும் கவரியையும் புகையையும் ஏந்திய வராய் சூழ்ந்து வர,

நரை கலந்த மணம் வீசும் கூந்தலை உடைய பெண்டிர் பலர் கடல் சூழ்ந்த இவ்வுலகினைக் காக்கும் பாண்டியனின் பெருந்தேவியாகிய (பட்டத்தரசியாகிய) நீவிர் நீடு வாழ்கவென்று சொல்லிப் புகழ் கலந்த சொறகளால் வாழ்த்த சுற்றமாகிய தோழியரும் காவல் பெண்களும் காலடி எடுத்து வைக்கும் தோறும் போற்றிப் புகழ்ந்திட பாண்டியனின் பெருந்தேவி சென்று தனது தீய கனவின் தன்மைகளை எடுத்துக் கூற திருமகள் மயங்கும் மார்பினையுடைய பாண்டிய மன்னன் அரிமாக்கள் ஏந்திய இருக்கையில் இருந்தனன்.

அதே வேளையில், அறிவு இரண்டகம் செய்த சிந்தனை, செயலிழந்த நெஞ்சை உடைய அரச நெறித் தவறியவனின் வாயில் காப்போனே! சிலம்புகளின் இணையில்(சோடியில்) ஒன்று ஏந்திய கையினள், கணவனை இழந்தவள் அரண்மனை வாயிலில் நிற்கின்றாள் என்று அறிவிப்பாய்! அறிவிப்பாய்! என்று கூறினாள்.

வாயில் காப்போன், எங்கள் கொற்கையின் வேந்தனே வாழ்க! தெற்கில் உள்ள பொதிய மலையின் தலைவனே, வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழி தரும் வழியில் செல்லாத பஞ்சவனே வாழ்க!

வெட்டுவாயினின்றும் செறிந்து எழுந்து ஒழுகும் குருதி அடங்காத பசும் துண்டமாகிய பிடரியோடு கூடிய மையிடன் தலையாகிய பீடத்தில் ஏறி நின்ற இளம் கொடி போன்றவளாகிய வெற்றி தரும் வேலைக் கையிலேந்திய கொற்றவையும் அல்லள், கன்னியர் எழுவருள் இளயவளான பிடாரியும் இறைவனை ஆட வைத்துப் பார்த்து அருளிய சுடலைக் காளியும் அச்சம் விளைக்கும் கானகத்தை இருப்பிடமாக விரும்பி ஏற்றுக்கொண்ட காளியும் தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். வன்மம் கொண்டவள் போலவும் சினம் மிக்கவள் போலவும் தொழில்திறம் அமைந்த பொற்சிலம்பு ஒன்றை ஏந்திய கையுடன் கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் உள்ளாள், வாயிலில் உள்ளாள் என்றான்.

அவள் இங்கு வரட்டும்! அவளை இங்கு அழைத்து வா! என்று அரசன் கூறவும் வாயில் காப்போன் கண்ணகிக்கு அரண்மனைக்குள் வழிகாட்டினான். அரண்மனைக்குள் மன்னனை அவள் நெருங்கிச் சென்றாள். அப்போது மன்னன்,

நீர் ஒழுகும் கண்களுடன் என் முன் வந்த இளங்கொடி போன்ற பெண்ணே நீ யாரோ? என்று கேட்டான்.

தேர்ந்து தெளியும் இயல்பில்லாத மன்னனே, உன்னிடம் செல்ல வேண்டிய செய்தியைக் கேள்!

எவரும் இகழ முடியாத சிறப்பினை உடைய தேவர்கள் இறும்பூது எய்தும் வண்ணம் புறாவொன்றுக்கு நேர்ந்த பெரிய துன்பத்தை நீக்கியவன் மட்டுமின்றி வாயிலில் தொங்கும் மணியின் நடுவிலுள்ள நாக்கு நடுங்கி அசைந்து ஒலியெழுப்ப ஆவின் கண்மணியின் ஒரத்திலிருந்து வழியும் நீர் தன் நெஞ்சைக் சுட்டதால் தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தானே தேர்க்காலிலிட்டுக் கொன்றவனும் ஆகிய இவர்களது பெரும் புகழுடைய புகார் நகரமே என் பிறந்த ஊர். அவ்வூரில் எந்தப் பழிக்கும் ஆட்படாத பெருமையுடைய புகழ் விளங்கும் பெரிய குடியைச் சேர்ந்த மாசாத்துவான் எனும் வாணிகனுடைய மகனாகப் பிறந்து வீரக்கழல் அணிந்த மன்னா, தொழில் செய்து வாழ்வதற்கென்று முன் வினைப்பயன் தன்னைத் துரத்தியதாலே உன் மதுரை நகரத்தினுள் புகுந்து இங்கு என் காலில் உள்ள சிலம்பை விற்பதற்காக வந்த இடத்தில் உன்னால் கொலைக்களப்பட்ட கோலவனுடைய மனைவி நான், கண்ணகி என்பதே என் பெயர் என்றாள்.

அழகிய பெண்ணே, கள்வனைக் கொல்வது கொடுங்கோன்மை அல்ல, அதுதான் வேலால் ஆளும் அரச நெறியாகும் என்பதை அறிந்து கொள் என்று மன்னன் கூறினான்.

ஒளிபொருந்திய அணியினை உடைய கண்ணகி அரசனை நோக்கி, நல்ல நெறியில் செல்லாத கொற்கையின் அரசனே என் கால் சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது என்று கூறினாள். தேன் போன்ற மொழியினை உடைய இந்தப் பெண் கூறியது செம்மையான நல்ல கூற்றாகும். எமது சிலம்பில் உள்ள பரல்கள் முத்துக்களாகும் என்று அரசன் கூறி, கோவலனிடமிருந்து பறித்த சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று கேட்டு வாங்கி தானே எடுத்துக் கண்ணகி முன் வைத்தான். தான் அணியும் அழகிய கால்சிலம்பை எடுத்து நிலத்தில் வீசி உடைத்தாள். சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல்கள் மன்னனின் வாய்வரை தெறித்தன.

அவ்வாறு எறிந்த மாணிக்கப் பரல்களைக் கண்டு, தாழ்வுற்ற குடையும் சோர்வுற்ற செங்கோலும் உடையவனாய் பொன்தொழில் செய்யும் கொல்லன் சொற்களைக் கேட்டுச் செயல்பட்ட நான் ஓர் அரசன் என்பதற்குத் தகுதியுடையவன் அல்லன், யானே கள்வன்; குடிமக்களைக் காக்கும் பாண்டி நாட்டு ஆட்சி என்னிலிருந்து தவறுடையதாயிற்று. என் வாழ்நாள் முடிந்து போகட்டும் என்று மயங்கிச் சாய்ந்தான் மன்னன்.

கோப்பெருந்தேவியான பாண்டிமாதேவி, நிலை குலைந்து நடுங்கினாள். கணவனை இழந்தவர் தம் கணவனென்று காட்டுவதற்கு எவருமே இல்லாதவர் என்று கூறி கணவனது திருவடிகள் இரண்டையும் தொழுது வீழ்ந்தனன்.

வெண்பாக்கள்

தீய செயல்களைச் செய்தவர்களுக்கு அறமாகிய தெய்வமே கூற்றுவனாகித் தண்டிக்கும் என்று பல அறிஞர் பெருமக்களின் கூற்றும் தவறுவதில்லை. கொடிய தீங்கினைச் செய்த வெற்றி மிக்க பாண்டியனுடைய மனைவியே கொடும் வினையைச் சந்தித்தவளாகிய நான் செய்ய இருக்கும் வன்செயல்களையும் காண்பாயாக.

கண்ணகியின் நீல மலர் போன்ற கண்களிலிருந்து பொழிந்த கண்ணீரையும் அவள் கையிலிருந்த ஒற்றைச் சிலம்பையும் உயிர் நீங்கினால் போன்று காட்சியளித்த அவள் தோற்றத்தையும் காடுபோல் அவள் உடல் முழுவதும் விரிந்து கிடந்த கரிய கூந்தலையும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் நான் பாவியானேனே என்று கண்டவுடன் அஞ்சி உயிரற்ற கூடாயினான.

உடம்பில் படிந்த புழுதியையும் விரிந்து கிடந்த கரிய கூந்தலையும் கையிலுள்ள ஒற்றைச் சிலம்பையும் கண்ணீரையும் வையை அரசான பாண்டியன் பார்த்த அளவிலேயே வழக்கில் தோல்வியுற்றான். அப்பெண்ணின் சொல்லைச் செவியிலே கேட்ட அளவிலேயே உயிரையும் இழந்தான்.

இக்காதையின் சிறப்புகள்
1. கேடுகள் வரும் முன் தீக்குறிகளும் தீக்கனவுகளும் வருவதாக இலக்கியப் படைப்பாளிகள் கூறுவர். ஆய்ச்சியர் குரவையில் தீக்குறிகளைக் காட்டிய அடிகளார் இக்காதையில் தீக்கனாவைக் காட்டுகிறார். வானில் துளிநிலையடைந்து நிலத்துக்கு இறங்கியும் இறங்காமலும இருக்கும் நீர்த்திவலைகளின் ஊடாக மேகத்தால் மறைக்கப்படாத கதிரவ ஒளி கடந்துசெல்லும் போது கதிரவனுக்கு எதிர்த்திசையில் தோன்றுவது வானவில். கதிரவனின் வெண்ணிற ஒளி கூம்பு எனப்படும் ஒளி கடத்தும் ஊடகத்தின் ஊடாகச் செல்லும் போது ஊதா, அவுரி(இண்டிகோ), நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் (ஆரஞ்சு – ஆங்கிலத்தில் naranj என்ற அரபு மொழி மூலத்தைக் காட்டுகிறது Chambers Twentieth Century Dictionary. மலையாளத்தில் நாரத்தங்காயை நாரைங்கா என்பது வழக்கு. அது மட்டுமல்ல, சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்தை இரண்டு பப்பாதிகளாகப் பிளக்க முயன்றால் அவற்றிலுள்ள 11 சுளைகளில் ஒரு புறம் ஆறும் இன்னொரு புறம் ஐந்துமாக ஆறைந்தாக – ஆறஞ்சாகப் பிளக்கும் இயல்பை ஒரு பெண்மணி ஒருமுறை சுட்டிக்காட்டினார்.) – vibgyor என்று வானவில்லாகத் தோன்றும். பகலில்தான் நிகழும் இந்த இயற்காட்சி இரவில் நடந்ததாகத் தான் கனவு கண்டதாக கோப்பெருந்தேவி கூறுகிறாள்.
2. அது போல் இரவு வானில் தோன்றும் விண்மீன்கள் நிலம் நோக்கியும் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசை நோக்கியும் பாய்வதைக் காண முடியும். ஆனால் பகல் ஒளியில் இவ்வியக்கங்கள் நம் கண்களுக்குத் தோன்றா. ஆனால் அத்தகைய இயல்பு மீறிய காட்சியைத் தான் கனவில் கண்டதாக அரசி கூறுகிறாள்.
3. தான் கண்ட கனா அவள் உள்ளத்தை மிகவும் வருத்தியதால் சொன்னதையே மீண்டும் மீண்டும் அவளை அறியாமலே சொல்லிப் புலம்புவதை அருமையாக உணர்த்துகிறார் அடிகள். கருப்பம் என்ற சொல் இப்பொருளில்தான் கையாளப்பட்டுள்ளதோ?

ஏன் இந்தப் புலம்பல்? அரசனின் ஏலா நடத்தைகளால் அவனுக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் எப்போது எங்கிருந்து, குறிப்பாக மக்களிடமிருந்து வருமோ என்ற கலக்கம் அவளிடமிருந்து வெளிப்படுகிறது எனலாம். ஊர்காண் காதையில்,
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை அறிந்து மயங்கா மரபின்
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
என்ற வரிகளில்(146 – 154) அரசனும்,
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளும் கோமகன் கொடுப்ப
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்
கிலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும்
நாவோடு நவிலா நகைபடு கிளவியும்
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்ந் தன்ன
செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரு வீதியும்
என்று அரசு அதிகாரிகளும் கணிகையர் வீடுகளுக்கும் பரத்தையர் வீடுகளுக்கும் செல்வதைக் குறிப்பாகத் தந்துள்ளார்.

இதுவரை அரசனின் நடத்தைககளுக்கு எதிர்ப்பாக ஊடலையே உத்தியாகக் கையாண்டுவருபவள் இந்தக் கனாக்காட்சியை அவனுக்கு எடுத்துரைத்து எச்சரிப்போம் என்ற எண்ணம் தன்னை மீறி வாய்விட்ட புலம்பல்களாக வெளிப்படுவதைச் சிறப்பாகப் புலப்படுத்துகிறார் அடிகளார். கொலைக்களக் காதையில் கோப்பெருந்தேவி ஊடியதன் காரணமாக,
கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக்
குலமுதல் தேவி கூடா தேக
என்று அவனது ஒழுக்கக் கேட்டையே காட்டுகிறார். அதை வெளிப்பட எதிர்த்துக் குரலெழுப்பத் துணிவற்ற அரசியோ தலைநோவென்று சாக்குக் கூறித்தான் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறாள். அவள் அரசன் மனதைப் புண்படுத்த விரும்பவில்லையா அல்லது அவனுக்கு அஞ்சினாளா? அப்படிப்பட்டவள் தன் மனக்கலக்கத்தை இப்படிப் புலம்பி வெளிப்படுத்துகிறாள்.
4. அடுத்து அரசியுடன் செல்லும் ஊழியர் அணி பற்றிய ஒரு பட்டியலைத் தருகிறார் அடிகள். கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தியவர்களையும் கோடி எனப்படும் புதிய நூலாடைகளையும் பட்டாடைகளையும், வெற்றிலைத் தாம்பாளத்தையும் பல நிற வண்ணப்பொடிகளையும் கத்தூரி கலந்த சந்தனத்தையும் மலர்தொடுப்புகளையும் மாலைகளையும் கவரியையும் அகிற்புகைக் கூடையையும் தாங்கிய கூனர்கள், குள்ளர்கள், ஊமைகள் அடங்கிய ஏவல் மகளிர் என்பது வியப்பாக உள்ளது. உடற்குறை உடையோருக்கு வேலைவாய்ப்பளிப்பது இதன் நோக்கமா அல்லது குறையில்லாத பெண்களால் அரசனின் கவனம் திரும்பும் என்ற எச்சரிக்கையின் விளைவா இது என்ற ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
5. அரசவை வாயிற் காவலன் அரசனை விளிக்கும் போது அவனது துறைமுகச் சிறப்பையும் மலைச் சிறப்பையும் கூறி வாழ்த்துவது கவனிக்கத்தக்கது.
6. வாயிலில் வந்து நின்ற கண்ணகியின் கோலத்தைக் காவலன் எடுத்துரைக்கும் பாங்கு சீற்றம் மிகுந்த அவளது தோற்றத்தை விளக்குவதற்கு அடிகளார் மேற்கொண்டுள்ள ஒப்பற்ற உத்தி. மயிடன் எனும் காட்டெருமை வடிவிலான அரக்கனை அழித்த பத்திரகாளியோ, ஏழு மாதர்களுள் இளையவளான நாக கன்னிகையோ, சிவனை ஆட வைத்த உமையவளோ, காட்டை இருப்பிடமாகக் கொண்ட காளியோ, தாருகனின் பெரிய வயிற்றைக் கிழித்த பெண்ணாகிய கொற்றவையோ அல்ல என்பதன் மூலம் அவளது சீற்றத்தின் உச்சத்தை விளங்க வைக்கிறார்.
7. யார் நீ என பாண்டியன் கேட்க சோழ அரசர்களின் நயன்மை முறை பற்றிய இரண்டு செய்திகளை கண்ணகி வாயிலாக அடிகள் எடுத்துவைக்கிறார். வேடனால் எய்யப்பட்டு காயமுற்று காலடியில் வீழ்ந்த புறாவுக்கு ஈடாகத் தன் உடம்பை அரிந்து அளித்த செம்பியனாகிய சிபியையும் தன் கன்றின் மீது தேரை ஓட்டிக் கொன்ற இளவரசனைத் தேர்க்காலில் கொன்று கன்றின் தாயான ஆவுக்கு நயன்மை வழங்கிய மனுநீதிச் சோழனையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
8. தன்னை விட செல்வத்தில் உயர்ந்தவனாயினும் பாண்டியனின் மனைவியின் சிலம்பில் அவன் நாட்டின் சிறப்பான கல்லாகிய முத்துதான் இருக்கும் என்ற உறுதியில் தன் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் உள்ளன என்று சொல்கிறாள். அவள் எதிர்பார்த்தவாறே அரசன் தன் அரசியின் சிலம்பில் உள்ளது முத்து எனக் கூறுகிறான்.
9. கோவலனிடமிருந்து பெற்றதாகிய சிலம்பை அரசன் எடுத்துவைக்க கண்ணகி அதை எடுத்து வீச அது உடைந்து தெறித்த வேகத்தில் அரசனின் வாய் மீது தெறித்தது என்றால் கண்ணகியின் சீற்றத்தின் மிகுதியையும் அவள் சிலம்பை எறிந்த வெறியையும் எவ்வளவு சிக்கனமான சொற்செலவில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்!
. ❋ ❋ ❋

0 மறுமொழிகள்: