சிலப்பதிகாரப் புதையல் - 18. துன்பமாலை
18. துன்பமாலை
ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
5. தூவித் துறைபடியப் போயினாள் மேவிக்
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
10. சொல்லாடும் சொல்லாடுந் தான்
எல்லாவோ,
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
15. ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ
20. தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ
சொன்னது:-
25. அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள கொலைகுறித் தனரே
எனக்கேட்டு,
30. பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த்
திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்
இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
35. துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அலவங்கொண் டழிவலோ
நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்
40. மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப
அறனெனும் மடவோய்யான் அவலங்கொண் டழிவலோ
தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
45. இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ
காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
50. பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.
பொழிப்புரை
ஆட்டத்தில் ஈடுபட்ட தோற்றத்தை உடைய முதியவளாகிய மாதரி குரவைக் கூடத்தின் முடிவில் மலரும் புகையும் புனையும் சந்தனமும் மாலையும் ஆகியவற்றைத் தூவி இடையறாது பாயும் நீரினையுடைய வையைக் கரையில் திருமாலின் திருவடிகளை வணங்கித் துறையில் நீராடப் போனாள். அவ்வேளையில் நகரத்தினுள் உலவும் ஒரு பேச்சைக் கேட்டு வந்த ஒருத்தி அங்கு வந்து நின்றாள். அவள் தான் கேட்ட மொழிகளைச் சொல்ல வாய் வராதவளாக நின்றாள். அப்படி நின்றவளைப் பார்த்து கண்ணகி, பேச்சுக் கொடுக்கிறாள்.
ஏளா (தோழீ?)
என் காதல் கணவனை இதுவரைக் காணவில்லை என் உள்ளம் கலங்கித் துன்பம் கை மீறுகிது என் நெஞ்சம் கொல்லனது ஊது உலையும் தோற்கும் அளவுக்கு மூச்சிரைக்கிறது. அவ்வாறு ஊது உலையும் தோற்க என் நெஞ்சம் இரைக்கும் அளவுக்கு ஊரார் கூறிய செய்தி என்ன தோழி?
நண்பகல் போதிலேயே நடுங்க வைக்கும் துன்பம் என்னை மீறுகிறது அன்புக் கணவனைக் காணாமல் என் உள்ளம் அலைகிறது. அன்பனைக் காணாது என் உள்ளம் அலைவுறுமனால் ஊர் மக்கள் கூறியதென்ன தோழீ?
என் தலைவன் வரக்காணேனே, இது எளிய நிகழ்ச்சியாக எனக்குத் தோன்றவில்லை, ஏதோ வஞ்சகம் நடந்துள்ளது, என்று என் நெஞ்சம் ஐயுறுகிறது. வஞ்ககம் நடந்துள்ளது என்று என் நெஞ்சம் ஐயுறுவதால் அயலார் கூறிய செய்தி யாது தோழீ?
சொன்னது - (என்ன?)
அரசன் வாழும் கோயிலில் இருந்த அழகு மிக்க சிலம்பினை ஓசையின்றி கவர்ந்த கள்வன் என்றே ஓசையின்றி திருடிய கள்வன் என்றே ஓலிக்கின்ற கழலை அணிந்த ஊர்க்காவலர் அவனுக்குக் கொலைத் தண்டனை விதித்தனர்.
என்பதைக் கேட்டு,
சீறி எழுந்தாள், நிலவினைப் பொழியும் திங்கள் முகிலோடு நிலத்தில் விழுந்தது போல் விழுந்தாள் செவ்வரி படர்ந்த கண்கள் மேலும் சிவக்குமாறு அழுதாள் எங்கிருக்கிறாய் எனத் தன் கணவனை கூவி அழைத்து வருந்தி ஏங்கி உழன்றாள்.
தம்முடன் இன்புற்ற தம் கணவன்மார் அழிக்கும் எரியும் நெருப்பில் மூழ்கவும் துன்பம் தருவனவாகிய கைம்மை நோன்புகளைக் கடைப்பிடித்து துயர மடையும் பெண்டிரைப் போல் மக்கட் கூட்டம் என்னைப் பழிதூற்றுமாறு பாண்டியன் குற்றமிழைத்தனால் கணவனை இழந்த நான் அழுதுக் கொண்டு உள்ளம் அழிவேனோ?
மணம் மிக்க அகன்ற மார்பினை உடைய தன் கணவனை இழந்து ஏங்க பல நீர்த்துறைகளிலும் முறைப்படி அழுக்கு ஆறக் குளித்துத் துயருறும் மகளிரைப் போல் கொடுமை என்பதைத் துணையாகக் கொண்டு திரியும் கொடுங்கோலனாகிய மன்னவன் குற்றம் செய்ய அதற்காக அறம் என்று அழைக்கப்படும் அறிவற்றவனே நான் துன்பத்தைச் சுமந்து உள்ளம் அழிந்து திரிவேனோ?
தம்மோடு பொருந்தி வாழ்ந்த பெருமை மிக்க கணவன் தழலாகிய நெருப்பினுள் முழுகத் தாம் பல நீர்த்துறைகளிலே மூழ்கிக் கைம்மை நோன்பு கடைப்பிடிக்கும் துன்பநிலையிலுள்ள பெண்கள் போன்று செம்மையினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவறு செய்ததால் நான் இப்பிறவியிலும் புகழை இழந்து துன்புற்று உள்ளம் அழிவேனோ?
இதோ என்னைப் பாருங்கள்!
வரவிருக்கும் துன்பத்தை நீக்குவதற்காக நிகழ்த்திய குரவைக் கூத்தில் பங்கேற்க வந்த ஆயர்குலப் பெண்களே நீங்கள் யாவரும் கேட்டுக் கொள்ளுங்கள்! பரந்த அலைகளை உடைய கடலால் வேலியாகச் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ள அனைத்தையும் அறிந்திருகின்ற காயும் கதிர்களை உடைய கதிரவனே நீ சொல் என் கணவன் கள்வனோ? இப்படி, அவள் கேட்ட கேள்விக்கு கள்வன் அல்லன் கரிய கயல் போலும் கண்களை உடைய பெண்ணே இவ்வூரை ஒளிரும் நெருப்பு உண்ணும் என்று ஓர் உருவிலி(அசரீரி) விடை கூறிற்று.
இக்காதையில் உள்ள சிறப்புகள்
1. கணவன் இன்னும் வரவில்லையே என்று நண்பகலிலேயே மனம் கலங்கிய கண்ணகி தான் சொல்ல வந்த செய்தியைச் சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணைப் பார்த்தவுடன் தன் கணவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று எதையெதையோ கற்பித்துத் தவிக்கிற தவிப்பை அழுத்தமாகப் பதிகிறார் அடிகள்.
2. கணவனைக் கள்வனென்று காவல்துறையினர் கொன்றுவிட்டனர் என்ற செய்தி கேட்டதும் அவள் விழுந்து புரண்டழுவதைக் காட்டிய அடிகளார் அவள் வாய்மொழியாக வெளிப்படுத்தும் கருத்துகள் கணவனை இழந்த தமிழகத்தின் உயர்குடிப் பெண்கள் உட்படும் கொடுமைகளுக்குப் பெரும் எதிர்ப்புக் குல்லாக வெளிப்படுகின்றன.
கணவன் எரியும் நெருப்பில் வெந்து நீறாகிப் போக கைம்மை என்னும் கொடிய துன்பத்தை நுகர்வது போல் அரசனின் தவற்றால் அன்புக் கணவனை இழந்து துன்பமுறுவேனா என்று கொதிக்கிறாள்.
வன்முறை கொண்டு திரியும் மன்னவன் பிழையால் கணவனை இழந்த தான் பிற பெண்களைப் போல் ஆற்றுத்துறைகளில் நீராடித் திரிய மாட்டேன் என்று சூளுரைக்கிறாள்.
3. பிணத்தை எரிக்கும் மரபு இங்கு கூறப்படுகிறது. தமிழர்கள் பிணத்தைப் புதைப்பார்களென்றும் ஆரியர்கள் என்ற கற்பனை இனத்தைச் சார்ந்தவர்கள் என்று தவறாகக் கருதப்படும் பார்ப்பனர்கள் எரிப்பார்கள் என்றும் ஒரு தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் பெரும்பாலும் ஊர்ப்புறங்களில் எரிப்பதும் காலியிடம் அரிதாக உள்ள நகர்ப்புறங்களில் புதைப்பதும் பல சாதியினரிடையில் தமிழகத்தில் நிலவும் மரபாகும். பார்ப்பனராகிய முன்னாள் காஞ்சி சங்கராச்சாரியாரான சந்திர சேகரேந்திர சரசுவதி என்பாரது உடலைப் புதைத்தனர் என்பதையும் இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட எரித்து சாம்பலை காப்பறைகளில் வைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளதையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். ஆதி சங்கரர் உலகையே மாயை என்றவர். அவரது பெயரில் இயங்கும் மடம் மனித உடலான ஆச்சாரியாரின் உடலைப் புதைக்க எந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று புரியவில்லை. அது போல்தான் மனிதன் மீண்டெழும் நாள்வரை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கக் கிறித்தவர்களிடையில் முளைவிட்டிருக்கும் எரிக்கும் பழக்கத்துக்கு என்ன கோட்பாட்டு விளக்கம்?
4. பெண்கள் மீது நடத்தப்படும் கைம்மைக் கொடுமை பணம் படைத்தவர்களிடையிலும் உடலுழைப்பற்ற மேற்சாதியினரிடையிலும்தான் என்பது சென்ற 20ஆம் நூற்றாண்டிம் முன்பாதி வரை இருந்த நிலைமை. மணவிலக்கு – மறுமணம், கைம்பெண் மறுமணங்கள் பெரும்பாலான பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரிடையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி நடந்தன. எழுத்தறிவு பரவி பெரும் எண்ணிக்கையில் அரசூழியம் மற்றும் ஒட்டுண்ணி வேலைவாய்ப்புகளில் ஆடவர்கள் நுழைந்த சூழ்நிலையில்தான் சிறிது சிறிதாக மணவிலக்கு பெற்ற அல்லது கைம்மை எய்திய பெண்ணை மணமுடிப்போர் இழிவாகக் கருதப்பட்டு அந்த உரிமைகள் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு பெண்களும் அதை விரும்பாத நிலை இன்று உருவாகியுள்ளது. முன்பு பெண்கள் வயல்களிலும் காடுகளிலும் உழைத்து வருவாய் ஈட்டிய பணம் குடும்பத்தை நடத்தத் தேவைப்பட்டதாலும் மறுமணம் செய்து தன்னோடு வாழவரும் பெண்ணின் குழந்தைகளும் இளம் அகவையிலேயே உழைத்து தம்மால் குடும்பத்துக்கு ஏற்படும் செலவை ஈடுகட்டியதாலும் அது தொடர்ந்தது. இப்போது அரசூழியம் பார்க்கும் கணவனின் வருவாய் குடும்பத்தை நடத்தப் போதியதாக இருப்பதால் உழைத்துப் பணம் ஈட்டக்கூடிய பெண் தேவையில்லாத நிலை ஏற்பட்டதும் ஒரு காரணம். இன்று இருவரும் ஒட்டுண்ணி வேலை செய்து குடும்பத்தை வளமாக நடத்தி மிச்சமும் சேர்த்து வைத்துக்கொள்ள முடிவதால் கணவனை இழந்த பெண் வாழ்க்கைச் செலவுக்காக மறுமணம் செய்துகொள்வது தேவையில்லாமல் போகிறது.
அதே வேளையில் கணவன், மனைவி இருவரும் நல்ல ஊதியம் தரும் வேலைகளில் இருக்கும் குடும்பங்களில் முன் போலின்றி பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்க்க முயல்வதால் மணவிலக்குகளும் மறுமணங்களும் இன்னொரு முனையிலிருந்து நுழைந்துகொண்டிருக்கின்றன. இந்த வரலாற்றுப் போக்கை உணர்ந்துகொள்ளாமல் நம் சட்ட அமைப்பு மணவிலக்கு பெறும் நடைமுறையை மிகச் சிக்கல் நிறைந்ததாக வைத்திருப்பதால் அது மக்களின் மன அமைதியைக் குலைக்கிறது. முன்பெல்லாம் ஊர்க்கூட்டத்திலேயே ஒரே உசாவலில் இணையினர் மணவிலக்கு பெற முடிந்தது. அதிலும் பெண்கள் விலக்கு கேட்டால் ஆண்களிடம் தண்டுவது போல் அவர்களிடம் ஈடு தண்டுவதில்லை.
முகம்மதியர்களிடையில் உள்ள “தலாக்” உரிமை ஆண்களுக்கு மட்டும்தான் என்ற தவறான கருத்து உள்ளது. பல இடங்களில் பெண் மணவிலக்கு கேட்டால் அவன் கணவனுக்கு இழுக்கு என்று கருதி ஊர் மன்றம் முடிவு செய்து கணவனைக் கேடக வைத்து விலக்குகிறார்கள். சில இடங்களில் பெண்களே கேட்கிறார்கள்.
இளங்கோவடிகள் தன் காலத்தில் குமுகத்தில் வெவ்வேறு வகுப்பினரிடையே பெண்ணுரிமையில் நிலவிய முரண்பாடுகளை மனதில் வைத்துத்தான் குமுக மேலடுக்கில் நிலவுய கைம்பெண்களின் அவலநிலைக்கு எதிரான தன் உள்ளக்குமுறலைக் கண்ணகி வாய் வழியாக வெளிப்படுத்தினாரோ?
❋ ❋ ❋
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக