15.4.18

சிலப்பதிகாரப் புதையல் - 21 வஞ்சினமாலை



21. வஞ்சினமாலை

கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
5. வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக
முன்னி றுத்திக் காட்டிய மொய்குழலாள் பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
10. வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு
15. பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி
மணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
20. நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாண்முகத்தைத்
தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
25. நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறிற் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
30. சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்க முடுத்து குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
35. மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா
நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
40. வானக் கடவுளரும் மாதவருங் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
45. மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்றோன்றி
50. மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
55. தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்

வெண்பா

பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங் கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்
மாத்துவத் தான்மறைந்தார் மற்று.
பொழிப்புரை

மன்னர் மன்னனான பாண்டியனின் பட்டத்து அரசியே கொடியவினைப் பயனாய் கணவனை இழந்தவளாகிய நான் ஒன்றுமறியாத தன்மையை உடையவள் ஆயினும் பிறருக்கு முற்பகலில் கெடுதி செய்த ஒருவனுக்கு அன்றைப் பிற்பகலிலேயே தனக்குக் கேடுவருவதைக் காட்டுவன வினைகள்.

நல்ல பகல் பொழுதிலே வன்னி மரமும் மடைப்பள்ளியும் தனக்குச் சான்று உரைக்கும் பொருட்களாக பலரும் அறிய அவரெதிரில் நிறுத்திக் காட்டிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளும்

பொன்னி ஆற்றின் கரையில் விளையாடுவதற்காக அமைந்த மணலால் ஆன சிற்பத்தை உனக்குக் கணவன் என்று உடன் விளையாடிய பெண்கள் கூறியதால் அவர்களோடு வீடு திரும்பாமல் அலைகள் வந்து அச்சிற்பத்தை அழிக்காமல் சுற்றிச் செல்லுமாறு ஆற்றிடைக் குறையாகிய அவ்விடத்திலே நின்ற வரி பொருந்திய அகன்ற அல்குலை உடைய ஒரு பெண்ணும்

புகழ் மிக்க அரசனாகிய கரிகால் வளவனது மகளான ஆதிமந்தி தான் மணந்த வஞ்சியின் அரசனான ஆட்டனத்தியைக் காவிரி நீர் அடித்துச் செல்ல அவள் அவ்வெள்ளத்தின் பின்னாலே சென்று கடற்கரையில் நின்று கல்லினை ஒத்த தோள்களை உடையவனே என்று அவள் அழைக்கவும் கடல் அவனைக் கொண்டுவந்து அவன் முன்னே நிறுத்திக் காட்ட அவனைத் தழுவிக் கொண்டு பொன்னால் ஆன கொடியைப் போலச் சென்றவளும்

மணல் நிறைந்த பொலிவுபெற்ற பூக்கள் நிறைந்த கடற்கரைச் சோலையிலே கடலில் வரும் கப்பல்களை நோக்கியவாறு சிலையாக நின்று கணவன் கலத்திலிருந்து இறங்கி வந்தவுடன் தன் கல்லுருவத்தை நீக்கியவளும்

தனக்கு இணையான மாற்றாளின்(சகக் கிழத்தி) குழந்தை கிணற்றில் விழுந்துவிட தன் குழந்தையையும் கிணற்றினுள் விழவைத்து இரு குழந்தைகளையும் கிணற்றிலிருந்து மீட்டெடுத்த வேல் போன்ற கண்ணை உடையவளும்.

அயலானொருவன் தன்னைத் தொடர்ந்து பார்த்து வருவதைக் கண்டு நிறைமதி போன்ற வெண்மைமயான தன் முகத்தைக் குரங்கின் முகமாக ஆகட்டுமென்று அவ்வாறே ஆக அயலூர் போயிருந்த கணவன் வரவே. இக்குரங்கு முகத்தைக் கைவிட்ட சிவந்த மணிகள் பதித்த மேகலையணிந்த அல்குலையுடைய பூப் போன்ற பாவையும்

பெண்களின் அறிவு என்பது அறியாமை நிறைந்தது என்று உரைத்த துண்ணறிவுடையோர் பார்வையை மதிக்காமல், அதைப் பற்றி உணர்வின்றி மணலில் விளையாடும் இடத்தில் ஒளிரும் வளையல்களை அணிந்தவளே நான் ஒரு மகளையும் நீ ஒரு மகனையும் பெற்றால் என் மகளுக்கு அவன் கணவன் ஆவான் என்று நான் கூறிய கூற்றைத் தோழியானவள் இப்போது நினைவுறுத்திக் கூறுவதைக் கேட்ட துன்பத்தால் அறிவற்ற எனக்கு மனம் வருத்தமுறுகிறது என்று தாய் தந்தைக்கு எடுத்துக் கூறக்கேட்டு அவளாகவே ஒரு கோடிப் புடவையை எடுத்து உடுத்தி கூந்தலை வாரி முடித்துக் கட்டி நெடிதாகத் தலையை வணங்கி தன் தாய் முன்பு ஒப்புக் கொண்டதனால் கணவனாகத் தக்கவனை தலையில் சுமந்த தங்கத்தால் செய்த பொலிவான பாவையாகிய அவளைப் போன்ற நீண்ட தேன் நிறைந்த கூந்தலை உடைய மகளிர் பிறந்த பதியாகிய புகாரிலே பிறந்தேன்.

அத்தகைய ஊரில் பிறந்த நான் உண்மையாகவே ஒரு பத்தினியானால் நான் விடமாட்டேன் மன்னனோடு மதுரையையும் ஒழிப்பேன் என் கொடுமையையும் நீ காணத்தான் போகிறாய் என்று கூறி அரண்மனையிலிருந்து வெளியேறி,

நான் மாடக் கூடலான மதுரையின் பெண்களும் ஆண்களும் வானத்திலுள்ள தெய்வங்களும் தனமுனிவர்களும் கேட்டுக் கொள்ளுங்கள்.

என் அன்புக்குரிய காதலனுக்குக் கேடு செய்த மன்னனது நகரத்தின் மீது சீற்றம் கொண்டேன், அதற்கு நான் பொறுப்பல்ல என்று கூறி இடப்பக்கத்து முலையைக் கையால் திருகி மதுரை மாநகரத்தை மும்முறை வலமாக வந்து மயங்கி ஊர் எல்லையில் உள்ள ஒரு தெருவில் விளங்குகின்ற அணியினை அணிந்த கண்ணகி சூளுரைத்து விட்டெறிந்தார்கள்.

அவ்வாறு அவள் எறிந்த உடன் வட்டமான நீல, நிறத்தை உடைய பின்னப்பட்ட சிவந்த கடையினையும் பாலை ஒத்த வெண்மையான பற்களையும் கொண்ட பார்ப்பன வடிவத்தோடு ஒழுங்காக எவற்றையும் எரிக்கும் தீக்கடவுள் தோன்றினான். பெரும் பத்தினியான உனக்குத் தவறு செய்யும் நாளில் இந்த நகரை பரந்து விரிந்த நெருப்புக்கு இரையாவதற்கு முன்பே ஒரு கட்டளை நான் பெற்றிருப்பதால் இந்த இடத்தில் எவர் எவர் பிழைத்துச் செல்லத் தகுதியுடையவர் என்று கண்ணகியைக் கேட்டான்.
பார்ப்பனரும் ஆக்களும் கற்புடை மகளிரும் முதியவர்களும் குழந்தைகளும் ஆகியோரைத் தவிர்த்து தீய இயல்புடையவர்கள் பக்கத்திலே சென்று எரிப்பாயாக என்று பொன் தொடிகளை உடைய கண்ணகியின் ஏவலால் தீயோரை எரிப்பதற்கக நல்ல தேரினை உடைய பாண்டியனது கூடல் நகரில் புகையும் நெருப்பு மண்டிற்று.

வெண்பா
பொலிந்து தோன்றும் பாண்டியனும் பெண்களும் அரண்மனையும் வில்கள் மின்னுகின்ற படைகளும் பெரிய யானைகளும் கண்ணகியின் சீற்றம் எனும் தீ உண்ண வெம்மை அடைந்த கூடலில் உள்ள தெய்வங்களும்அச்சத்தால் வெளியேறினார்.

இக்காதையில் சிறப்புகள்:

தான் பிறந்த பதியாகிய புகாரில் கற்பில் சிறந்த பெண்கள் நிகழ்த்திய இறும்பூதுகள் சிலவற்றை அரசி முன் கண்ணகி எடுத்துக் கூறுவதாக சில செய்திகளை இளங்கோவடிகள் பட்டியலிடுகிறார்.
1. பூம்புகாரிலுள்ள ஒரு பெண் தன் முறைமாப்பிள்ளையாகிய தாய்மாமன் மகனுடன் புறப்பட்டு வரும் வழியில் இருந்த சத்திரத்தில் தங்க அங்கு அவளுடன் உறவுகொள்ள அவன் முயன்ற போது சத்திரத்திலிருந்த வன்னி மரத்தையும் மடைப்பள்ளியையும் சான்றாக வைத்துத் திருமணம் முடித்துப் பின்னர் வேறு ஊரில் வாழ்ந்த போது இவர்கள் திருமணம் பற்றி ஐயப்பாடு எழுந்த நிலையில் அவளது கற்பாற்றலால் மடப்பள்ளியையும் வன்னி மரத்தையும் வரவழைத்து சான்றுகூற வைத்தாள் என்று இதற்குப் பொருள்கொள்ள முடிகிறது. இதில் மாமன் மகனென்பதும் பிறவும் கூறப்படவில்லை. உரை எழுதிய வேங்கடசாமியார் திருவிளையாடற் புராணங்களில் திரிஞானசம்பந்தர் நிகழ்த்திய இறும்பூதுகளில் ஒன்றான விடந்தீர்த்த கதையில்தான் இவர்களது உறவு முதலியவையும் அவர்கள் மதுரை செனறதும் கூறப்பட்டுள்ளது. அதில் அவன் பாம்பு கடித்து இறந்து போனதாகவும் அவளது அவல நிலை கண்டு இரங்கிய திருஞானசம்பந்தர் அவனை உயிர்ப்பித்து வன்னி மரத்தையும் கிணற்றையும் சிவக்குறியையும் சான்றாக வைத்து மணவினை முடித்துவைத்தாரென்றும் மதுரையில் மாற்றாளால் இகழப்பபட்ட போது சான்று வைத்த மரமும் கிணறும் குறியும் அங்கு வந்து சான்று கூறியதாகவும் இரு நிருவிளையாடரற் புராணங்களிலும் உள்ளதை உரையாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். திருத்தொண்டர் புராணத்தில் சான்று வைக்கப்பட்டது குறித்து எதுவுமில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சம்பந்தர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் கூறும் நிகழ்ச்சிக்கு மூக்கும் முழியும் வைத்துத் திருவிளையாடல் புராணக் கதை புனையப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார்.

இன்னொரு நோக்கில் பார்த்தால் பின்னாட்களில் நெடுஞ்சாலைகளில் செல்வோர் உண்டு உறங்கிச் செல்வதற்காக இருந்தவையாகக் கூறப்படும் சத்திரம் போன்ற அமைப்புகளைத்தான் மடைப்பள்ளி என்ற சொல் குறிப்பிடுகிறதா என்ற ஐயமும் எழுகிறது. சிலப்பதிகாரத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அசோகர் நிறுவியது போல் தமிழகத்திலும் அன்னச் சத்திரங்கள் இருந்தனவா என்ற கேள்வியும் எழுகிறது. அத்தகைய ஒரு சத்திரத்தில் ஓடி வந்தவர்கள் தங்கிய போது சத்திரத்தின் பொறுப்பிலிருந்தவர்கள் முன்னிலையில் திருமணம் புரிந்து அவளிடம் இன்பம் தூய்த்து பின் சேர்ந்த ஊரில் அவளைக் கைவிட அவன் முயல அவள் உரிய இடத்தில் முறையிட சான்றுக்கு மடைப்பள்ளி ஊழியர்களையும் மடைப்பள்ளியின் அடையாளமாக வன்னி மரத்தையும் அவள் குறிப்பிட்டு அதனை உறுதி செய்து தன் உரிமையை நிலைநாட்டியதாகவும் இந்நிகழ்வைக் கூறலாமல்லவா?
2. இரண்டாவது நேர்வில் பொழிப்புரையில் கூறியவாறு ஆற்றிடைக்குறையில் நின்றதாகத் தோன்றவில்லை. மணல் பொம்மையை நீரலைகள் கலைத்துவிடாதவாறு அவற்றை விலக்கிக்கொண்டு நின்றாள் என்பதுதான் பொருத்தமாகத் தெரிகிறது.
3. கரிகாலனின் மகள் ஆதிமந்தியின் கணவனும் சேர அரசனுமான ஆட்டனத்தி காவிரியில் புதுப்புனல் ஆடும் போது நீர் அடித்துச் சென்றுவிட ஆதிமந்தி காவிரிக் கரை நெடுகிலும் அழுதுகொண்டே தேடிச் செல்ல காவிரி கயவாய்ப் பகுதியின் சிற்றரசன் மகள் மருதி என்ற பெண் அவனை ஆற்றுவெள்ளத்திலிருந்து மீட்டுப் பேணி வந்தவள் ஆதிமந்தியிடம் ஒப்படைத்தாள். இந்நிகழ்ச்சிகள் பற்றி ஆதிமந்தி பாடிய பாடல்கள் கழக இலக்கியங்களில் உள்ளன. அதன் பின்னர் மருதி தான் காதலித்த ஆட்டனத்தியைப் பிரிந்ததனால் கடலில் வீழ்ந்து மாய்ந்தாள் என்றும் புத்த மடத்தில் துறவியாகச் சேர்ந்தாள் என்றும் இருவிதச் செய்திகள் உள்ளன. இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பாரதிதாசன் அவர்கள் சேரதாண்டவம் என்ற அருமையான நாடகம் ஒன்று இயற்றியுள்ளார்கள். ஆட்டன் அத்தி என்பவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாக இருக்கலாமென்று தோன்றுகிறது. ஆடற்கலை பற்றிய ஒரு கோட்பாட்டு நூலை அவன் எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
4. வாணிகத்துக்காகக் கப்பலில் சென்ற கணவன் திரும்பி வரும் வரையும் கற்சிலையாக காயல்(கழிக்கானல்) கரையில் நின்று கணவன் திரும்பியதும் இயல்புருவம் பெற்ற பெண், மாற்றாள்(சகக் கிழத்தி)யின் குழந்தை கிணற்றில் விழுந்துவிட தன் மேல் பழி வருமோ என்று அஞ்சித் தன் குழந்தையையும் கிணற்றில் வீசித் தன் கற்பின் வலிமையால் இரு குழந்தைகளையும் மீட்ட பெண்(ஊரைக் கூப்பிட்டுக் காப்பாற்ற வசதியாகத் தன் குழந்தையையும் தள்ளியிருப்பாளோ?), கணவன் வெளியூர்ச் சென்றிருக்க அயலானொருவன் தன்னை நோக்குவதை வழக்கமாகக் கொணடிருப்பது பொறுக்காமல் தன் முகத்தைக் குரங்குமுகமாக்கிக் கணவன் வந்ததும் முகத்தை மீட்டல் என்பவை பெண்களுக்கு கற்பு என்ற பெயரிலும் கணவனின் பிற மனைவிகளாலும் இழைக்கப்பட்ட கொடுமைகளைக் காட்டுகின்றன என்று கொள்ளலாமா?
5. தாய் தன் குழந்தைப் பருவத் தோழியோடு செய்துகொண்ட வாய்மொழி ஒப்பந்தத்தைத் தாய் தந்தைக்கு எடுத்துரைக்கக் கேட்ட பருவப் பெண் தாயின் தோழியின் ஆண்மகவைக் கணவனாக ஏற்றுக் குழந்தையாக இருந்த அதனைக் கூடையில் சுமந்த கதையை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.
6. மதுரையையும் அதன் ஆட்சியையும் அழிப்பேன், அதைக் காணத்தான் போகிறாய் என்று அரசியிடம் சூளுரைத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியே வரும் கண்ணகி வீதியில் நின்று ஆடவரையும் பெண்டிரையும் முனிவர்களையும் தேவர்களையும் கூவி அழைத்து என் கணவனைக் கொன்று தவறுசெய்த மதுரையை நான் சினப்பது குற்றமாகாது என்று இடது முலையைக் கையால் திருகி மதுரையை மூன்று முறை சுற்றிவந்து எறிந்தாள் என்னும் இந்தப் பகுதியினுள்ள சில செய்திகள் படிப்போரின் கவனத்தில் உரிய வகையில் பதியத்தக்கவை அல்ல. ஆனால் அந்தப் பகுதிகளில் அடிகளார் சில அடிப்படைச் செய்திகளைப் புதைத்து வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஊர்சூழ் வரியில் தெருக்களில் மக்கள் அனைவரும் கண்டும் கேட்டும் கலங்குமாறு சூளுரைத்து கோவலன் கொலையுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி வரும் போது ஆர்ப்பரிக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் அவள் பின்னாலும் முன்னாலும் திரண்டு அவனுடலைக் காட்டுவதை(கம்பலை மாக்கள் கணவனைத் தாங் காட்ட)க் கூறுகிறர். அப்படியானால் அப்பெரும் கூட்டம் அவளைத் தொடர்ந்து சென்று அரசனிடம் ஞாயம் கேட்க அரண்மனையினுள் நுழைந்த போது அரண்மனை வாயிலில் மொய்த்துக்கொண்டுதான் இருந்திருக்கும்.

இந்த இடத்தில் இன்னும் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்வது தேவை. சிலப்பதிகாரத்தைச் சில கால வழுக்களுடன் இளங்கோவடிகள் படைத்திருப்பதாக ஓர் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்காடல் நடைபெற்றது. அதைச் சுருக்கமாக இங்கு கூறுவோம்.

கோவலன் கொலையுண்டதறிந்து அவன் உடல் கிடந்த இடத்துக்கு வந்து அதனைக் கண்டு அரசனிடம் வழக்குரைப்பேன் என்று புறப்படும் முனபே கதிரவன் மறைந்துவிட்டான். அரசவைக்கு அவள் உடனடியாகச் செல்லவில்லை, ஏனென்றால் இரவில் தான் கண்ட தீக்கனவை அரசனிடம் கூறிப் பலம்பியபடியே அரசவைக்கு அரசி வருவதால் அடுத்த நாள் காலைதான் கண்ணகி அரசவைக்கு வருகிறாள். அதுவரை அவள் என்ன செய்தாள்? மதுரை உள் நகர் தெருக்களில் அலைந்து மக்களிடம் முறையிட்டுக்கொண்டிருந்தாள் என்ற விடை தவிர வேறெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே ஊர்சூழ் வரியில் கண்ணகி தன் கணவனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டார்கள் என்று சினமுற்று முறைகேட்பேன் என்று தெருவில் ஓங்கி உரைத்து நடந்ததைப் பார்த்து,
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்
என்ற வரிகளில் வரும் நம் பொருட்டால் என்ற ஒரு சொல் மூலம் அந்நகர மக்கள் படும் துயரங்களுக்கு எதிராகப் போராட ஒருவரும் இல்லாத நிலையில் கண்ணகி எழுப்பும் இந்த எதிர்ப்புக் குரல் தங்கள் துயரங்களுக்கு ஒரு விடியலைத் தரும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருப்பதை அடிகள் வெளிப்படுத்தியிருக்கிறார். வம்பப் பெருந்தெய்வம் என்ற சொற்கட்டு கூட உளவாகிய தெய்வங்கள் அரசனின் கொடுமைகளிலிருந்து தமக்கு விடிவைத் தராத நிலையில் புதிதாக(வம்ப) ஒரு பெருந் தெய்வம் இப்பெண்ணின் வடிவில் வந்துள்ளதாக நினைத்து மகிழ்கிறார்கள் என்றுதான் இதற்குப் பொருள்கொற்ற வேண்டும். இவ்வாறு தன்னைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் மேலும் மேலும் திரளுவதைக் கண்டு இன்னும் மிகுதியான மக்களைத் திரட்ட வேண்டுமென்று விடிந்து அரசவை கூடுவது வரை அவள் நகர வீதிகளில் முறையிட்டுக்கொண்டே அலைந்திருப்பதை அடிகளார் தெளிவாகக் கூறவில்லை. அதற்கான காரணத்தைக் காணும் முன் இன்னொரு கருத்தை அலசிப் பார்ப்போம்.

சிலப்பதிகாரம் கூறும் பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சி எப்படி இருந்திருக்கும்? மக்கள் மகிழ்வுடன் இருந்திருப்பார்களா? அல்லது இந்த நரகிலிருந்து விடுபடுவது எப்போது, எவ்வாறு என்று ஏங்கிக் கொண்டிருந்திருப்பார்களா என்று பார்ப்போம்.

௧.ஊர்காண் காதையில் கோவலன் மதுரை நகரைச் சுற்றி வரும் போது அடிகள் காட்டுபவை அரசன் அடிக்கடி செல்லும் கணிகையர் இல்லங்கள், அரசு அதிகாரிகள் தங்கள் சுற்றத்தாருடன்(பரிவாரங்களுடன்) தங்கும் வகையில் சிறப்புரிமை பெற்ற பரத்தையர் இருப்பிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அரசியின் சிலம்பைத் திருடியவன் கிடைத்துவிட்டான் என்று என்று அரசனிடம் பொற்கொல்லன் அறிவித்த இடமும் நேரமும் அரசன் கணிகையர் வீட்டுக்குச் சென்றதற்காக ஊடியிருந்த அரசியின் வளமனை வாயிற்கதவை அரசன் தட்டிக்கொண்டிருந்த போது.
௨.அரசியின் வளமனை வாயில் வரை வந்து செல்லும் தகுதியுடைய அரண்மனைப் பொற்கொல்லன் கொலைக்கு அஞ்சாத ஒரு கயவாளியாக இருந்தது, மனிதர்களை எடைபோடும் திறமை அரசனுக்கு இருக்கவில்லை அல்லது அவர்களது கூட்டு நடவடிக்கைகள் போற்றும்படியாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
௩.குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை எந்தவோர் உசாவலும் இன்றி வெட்டிக்கொலை செய்ய அரசன் ஆணையிடுவதும் காவலர் தலைவனும் பிறரும் கோவலனைக் கண்டு அவன் திருடியிருப்பானா என்று தயங்கிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் அவன் தலையை வெட்டிக் கொல்வதும் பாண்டிய அரசின் நயன்மை முறையின் இழிநிலையைக் காட்டுகிறது. (எந்த உசாவலும் இன்றி ஒருவனைச் சிறைப்படுத்தும் நிகழ்ச்சி பின்னால் இருக்கும் கட்டுரை காதையிலும் வருகிறது.)
௪.1970இல் இன்றைய திண்டுக்கல், அன்றைய மதுரை மாவட்ட நத்தத்தில் “கோவிலன் கர்ணகி” என்ற பெயரில் ஒரு தெரு நாடகம் பார்த்தேன். அதில் முறை கேட்க வந்த கண்ணகியை நோக்கி பாண்டிய மன்னன் தனக்கு மனைவியாகும் படி கூறி தன் தொடை மீது கைவைத்துக் காட்டுவான். அதைக் கேட்ட கண்ணகி உடனே காளியாக மாறி அவனது குடலைப் பிளந்து கொல்லுவாள். இந்தக் கதைக்கருவுக்கு சிலப்பதிகாரத்தில் ஒரு தடம் இருப்பதாகத் தோன்றுகிறது. பாண்டியனின் ஆட்சித்திறம் பற்றிக் கூறவந்த பாண்டியர்களின் குலதெய்வமான மதுராபதி
கூடன் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்
செய்யாக் கோலமொடு வந்தீர்
என்பது மதுரையின் நகர்ப் பகுதி உயர் வகுப்பு மக்கள் மீது புறநகர்ப் பகுதி உழைக்கும் மக்களுக்கு இருந்த இழிவுணர்ச்சியையும் வெறுப்புணர்வையும் காட்டுகிறது.
….. நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்துவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந் தாராது…..
என்ற இவ்வரிகள் அரசன் பரத்தையர் அல்லது கணிகையர் வீட்டுக்குச் செல்வானென்றாலும் குடும்பப் பெண்களை நாட மாட்டான் என்பதாகும். இதை விட இன்னும் சிறப்பு என்னவென்றால் பாண்டியன் முறைப்படி ஆயாமல் கோவலனுக்குத் தண்டனை விதித்தான் என்ற குற்றச்சாட்டுக்கு அமைதி கூறத்தான் மதுராபதி கண்ணகி முன் தோன்றி விளக்கங்கள் கூறிக்கொண்டிருக்கிறாள் என்பதாகும். பெண்கள் குறித்த அவன் நடத்தை பற்றிய குற்றச்சாட்டு நூலில் வெளிப்படையாக எதுவும் இல்லை. அப்படி இருக்க மதுராபதி வாயிலாக பெண்கள் குறித்த பாண்டியனின் நடத்தைகள் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது கேள்வி. அரசனுடைய முறையற்ற ஆட்சியைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிட்டால் தன் படைப்பு அழிக்கப்பட்டுவிடும் என்பதனாலேயே பல செய்திகளை மறைபொருட்களாக அடிகளார் புதைத்து வைத்துள்ளார் என்ற கண்ணோட்டத்தில் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
௫.கண்ணகி தன் முலையைத் திருகினாளா அல்லது முறை கேட்கப்போன இடத்தில் அவள் முலை அறுக்கப்பட்டதா என்ற ஐயமும் வருகிறது. நம் நாட்டில், குறிப்பாக ஊர்ப்புறங்களில் பெண்களுக்குள் வாய்ச்சண்டைகள் வரும் போது “முலையை அறுத்துவிடுவேண்டி” என்று எடுத்த எடுப்பிலே திட்டுவதுண்டு.

ஆண்களும் பெண்களை இப்படித் திட்டுவார்கள். இது தவிர குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஈத்தாமொழிக்குப் பக்கத்திலிருக்கும் பழவிளை என்ற ஊரைச் சேர்ந்த பிள்ளைத் தாய்ச்சியான ஒரு நாடார் சாதிப் பெண் இராசாக்கமங்கலத்தில் இருந்த பார்வத்தியக்காரர் (அந்தக் கால கட்டத்தில் திருவிதாங்கூர் சமத்தானத்தில் வருவாய்த் துறையில் அடிப்படைப் பிரிவான “பகுதி” என்ற நிலப்பரப்புக்கு அரசு ஆள்வினை அதிகாரியின் பதவிப் பெயர்) அலுவலகமான பகுதிக் கச்சேரிக்கு கரம் எனப்படும் நிலவரி கட்டச் சென்றாள். அங்கு பணம் தண்டும் பொறுப்பிலிருந்த அக்கௌண்டு எனப்படும் கணக்கன் நெடுநேரம் அப்பெண்ணைக் காக்க வைத்தான். இறுதியில் பணம் கட்ட அப்பெண் அவனுக்கு நேரே வந்த போது அப்பெண்ணின் மார்பில் கட்டி முட்டு நின்ற பால் அவளை அறியாமல் கணக்கன் முகத்தில் பீச்சி அடித்தது. அந்நாளில் நாடார்களுக்கு மார்பை மறைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெகுண்ட கணக்கன் அப்பெண்ணின் முலையை அறுத்தான். குருதி வடிய ஊர் நோக்கி ஓலமிட்டபடியே ஓடி வந்த அப்பெண்ணைக் கண்டு செய்தியறிந்த ஒருவர் ஒரு பறையை எடுத்து அடித்துக்கொண்டு நேரே இராக்கமங்கலம் சென்று அந்தக் கணக்கன் சாதியான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சாதிப் பெண் ஒருவரைத் தூக்கிவர, அப்பெண்ணின் சாதியார் அவரைத் துரத்திவர இறுதியில் அவர் பழவிளையிலிருக்கும் கோயில் ஒன்றினுள் நுழைந்து பூட்டிக்கொள்ள துரத்தி வந்தவர்கள் கோயிலுக்குத் தீ வைக்க இருவரும் கருகிச் செத்தனர். இவ்விருவருக்கும் அவ்வூரில் கோயில் ஒன்று இருப்பதாக இந்நிகழ்ச்சியை எடுத்துரைத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் கூறினார்கள்.

இது தவிர பெண்களை வாயில் நடையில் அமர்த்தி உச்சியில் எண்ணெய் விளக்கை வைத்து ஏற்றும் “நடைவிளக்கெரிக்கும்” தண்டனை பற்றியும் பெண்களுக்கிடையிலுள்ள சண்டைகளில் வெளிப்படுவதுண்டு. நாயர் குடும்பங்களில் பெணகளின் மூத்த ஆண் உடன்பிறப்பும் அவள் மக்களுக்கு மூத்த தாய்மாமனுமான காரணவன் என்றழைக்கப்படும் குடும்ப ஆள்வினையாளனின் மனைவி மருமகள்களுக்கு நடைவிளக்கெரிக்கும் தண்டனை வழங்கி நிறைவேற்றுவதைப் பற்றிப் படித்திருக்கிறேன். இத்தகைய ஒரு குமுகத்தில் கோடுங்கோலனான பாண்டிய அரசன் கண்ணகிக்கு இத்தகைய கொடுமையை இழைத்திருக்கும் வாய்ப்பும் உண்டு.

7. அரசவைக்குச் செல்வதற்கு முதல் நாள், அதாவது கோவலன் கொலையுண்ட நாள் இரவில் உள்நகர்த் தெருக்களில் சுற்றி மக்களைத் திரட்டினாள் என்றால் முலையை இழந்த நிலையில் மதுரையை மும்முறை வலம் வந்ததாக அடிகளார் கூறுகிறார். அப்படியானால் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நகர மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யும் ஆயர், குயவர், வண்டியோட்டுவோர், வண்ணார், நாவிதர் பொன்ற எண்ணற்ற மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்று திரும்பினாள் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். கொலைக்களக் காதையில்
கூடன் மகளிர் கோலங் கொள்ளும்
. ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்
செய்யாக் கோலமொடு வந்தீர்
என்ற வரிகள் புறநகரில் வாழும் மக்களுக்கு நகருக்குள் செல்வச் செழிப்புடன் வாழும் மக்கள் மீதிருந்த வெறுப்பையும் கசப்பையும் காட்டுகிறது. அது மட்டுமல்ல,
புரைநீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள
என்ற அழல்படு காதை வரிகள் 6 முதல் 15 வரை, அரசனும் அரசியும் அரியணையிலேயே உயிர்விட்டது அறியாது அவையிலிருந்தோர் திகைத்திருந்த போது அரண்மனை வாயிலில் தீப் பற்றி எரிவதைக் கண்டு தோட்டி, யானை, குதிரைப் பாகர்களும் வாயிலை நெருங்கினார்கள் என்று கூறியிருப்பது கண்ணகி முலையைத் திருகி மதுரையை மும்முறை வலம் வந்து சூளுரைத்து வீச நெருப்புக் கடவுள் தொன்றி ஆணை கேட்க அவள் வழிகாட்டல்கள் கொடுக்க பின்னரே தீப்பற்றியது என்ற கூற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அதாவது அரண்மனையினுள்ளிருந்து அறுபட்ட முலையுடன் கண்ணகி வெளியில் வந்ததைக் கண்டவுடன் வாயிலில் திரண்டிருந்த மக்கள் உள்ளே புகுந்து அரசனையும் அரசியையும் கொன்று தீயும் இட்டனர் என்பதுதான் பொருந்தி வரும்.

8. அடுத்து தீயைக் கையிலெடுத்துக் கிளம்பிய மக்களை வழிப்படுத்திய கண்ணகியின் முயற்சியை, நெருப்புக் கடவுள் அவளை நெருங்கி வழிகாட்டுதல்கள் கேட்டதாகவும் அதற்கு அவள் சில வரையறைகளை எடுத்துரைத்ததாகவும் கூறும் அடிகளைக் காண்போம்.

நெருப்புக் கடவுள் தோன்றுவதும் கண்ணகியைப் பார்த்து யார் யாரை, எது எதை அழிக்கலாம் என்று அறிவுரை பெறுவதையும் நோக்கும் போது நாம் மேலே கூறியபடி மக்கள் முற்ற முழுக்க தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து நெருப்பிட்டிருந்தால் இதற்கு வாய்ப்பில்லை என்பது புரியும். அப்படியானால் ஏதோ ஒரு குழு இதில் ஒருங்கிணைப்பை மேற்கொண்டுள்ளது என்பது தெளிவு. அப்படியானால் அவர்கள் யார் என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அதற்கு ஏற்கனவே அடிகளார் ஒரு குறிப்பை தந்துவிட்டார் பதிகத்தில் .
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
என்று பதிகத்தில் கூலவாணிகன் சித்தலைச் சாத்தனார் “வினைவிளை காலமாதலின்” என்று கூற “யாதவர் வினை” என்று அடிகளார் வினவ அதற்கு விடைகூறும் வகையிலே தான் சிவனின் கோயிலில் இருட்டில் கிடந்ததையும் கண்ணகியைச் சந்தித்த மதுராபதித் தெய்வம் கோவலனின் பழம் பிறப்பு உரைத்ததையும் கூறி இருக்கிறார். இது கட்டுக்கதை என்று அடிகள் நினைத்ததனாலேயே இதற்கான மூலத்தை பதிகத்தில் பதிந்துவிட்டார். ஆக இந்தத் தீமூட்டும் கலவரத்தில் புத்தர்களின் பங்கு இருப்பது உறுதியாகத் தெரிகிறது. அடுத்து கோவலன் கண்ணகி இணையினர் அம்மண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களை அறிந்தவர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்திருக்கிறது. ஆயர் குல மூதாட்டி மாதரி அவர்களை இனம் கண்டதுபோல் (சாவக நோன்பிக ளடிக ளாதலின் – கொலைக்களக் காதை – வரி 18) கொலைப்பட்டவன் அம்மண சமயத்தான் என்ற செய்தியும் அவர்களிடேயே பரவியிருக்கும். அன்றைய புத்தம் இலங்கையின் கயவாகுவினதும் அம்மணம், குறிப்பாக கங்கைச் சமவெளியின் வாணிகர்களினதும் ஒற்றமைப்புகளாக இன்றே போல் செயல்பட்டன. ஆனால் இந்த உண்மையை அறியாது அன்றைய ஆட்சியாளர்களின் கொடுமைகளைக் கண்டு மனம் கசந்து அவற்றின் பரப்பல்களில் மயங்கிச் செயற்பட்ட ஆரவலர்கள் அவர்கள் வெறுத்த அன்றைய ஆட்சியாளர்களின் கட்டமைப்புகளைத் திட்டமிட்டு இனங்கண்டு அழித்தார்கள் என்பதே சரியான விளக்கம். உளநாட்டில் உருவானதாயிருந்தாலும் சரி வெளியிலிருந்து புகுந்ததாயினும் அரசியல், குமுக இயக்கங்களில் முதன்முதல் இடம்பிடிப்போர் நாணயமும் குமுக நலன் குறித்த ஆர்வமும் உள்ளவர்களாகவே இருப்பர். அவர்களின் செயற்பாடுகளைக் கண்டு அவர்கள் பால், அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கங்கள் பால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரளும் போது வாய்ப்பியர்(சந்தர்ப்பவாதி)களும் ஆதாயம், அதிகாரம் தேடிகளும் ஓசைப்படாமல் அந்த நேர்மையாளர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்துக்கொள்வர். ஈ.வே.இராமசாமி, கா.ந.அண்ணாத்துரை போன்ற தலைமைகள் தங்களுக்கு வாய்ப்பான நேரத்தில் கொள்கைகளைக் கைவிட்டு எவரை எதிரிகளாகக் காட்டித் தாங்கள் இயக்கத்தைத் தொடங்கினார்களோ அவர்களோடு கள்ள உறவுகொண்டு பணம் பதவி என்று போய்விடுவார்கள். ஆனால் சிலப்பதிகாரம் - மணிமேகலை காலத் தமிழகத்தில் கோவலன் சாவையும் சாத்தனாரையும் பயன்படுத்தி அம்மணமும் புத்தமும் இங்கு வேரூன்றிவிட்டன. இந்தப் பின்புலத்தில் கண்ணகி என்ற ஒரு பெண்ணின் அரசனையே கேள்வி கேட்கத் துணிந்த வீரம் நிறைந்த நடவடிக்கையின் பின்னணியில் திரண்ட இவ்விரு சமயத் தொண்டர்களும் கண்ணகியை மதுரையைத் தீக்கிரையாக்குவேன் என்ற போது அணுகி அவள் வாய் மோழியாக யார் யாரை எதை எதை அழிக்க வேண்டும் எதை எதை யார் யாரைக் காக்க வேண்டும் என்று அறிவுரை கேட்டு செயற்பட்டதையே நெருப்புக் கடவுள் கண்ணகியிடம் ஆணைபெற்றதாகிய நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்துகிறார் என்று கொள்ள வேண்டும்.
* * *

0 மறுமொழிகள்: