15.4.18

சிலப்பதிகாரப் புதையல் - 19. ஊர்சூழ் வரி

19. ஊர் சூழ்வரி

என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று

5. பட்டேன் படாத துயரம் படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று

கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று

மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே
10. காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று

காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று
15. அல்லறுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்

மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
20. தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்

மண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கோல்
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்

25. ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்
என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
வன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்
30. செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான்
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்

35. வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்

என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்
40. பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென வுரையாரோ

யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ
45. பார்மிகு பழி தூற்றப் பாண்டியன் தவறிழைப்ப
ஈர்வதோர் வினைகாணா இதுவென வுரையாரோ

கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புணபொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் றவறிழைப்ப
50. உண்பதோர் வினைகாணா இதுவென வுரையாரோ

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
55. ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்

60. என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
65. தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப்
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்

மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று
70. காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்
தீவேந்தன் றனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்

என்றாள் எழுந்தாள் இடருற்ற தீ்க்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்நாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
75. சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.

பொழிப்புரை
காய்கதிர்ச் செல்வன் உன் கணவன் களவனல்லன் என்றான்.

அறுத்து உருவாக்கப்பட்ட வளையல்களை அணிந்த தோள்களை உடைய கண்ணகி அவ்விடத்தில் நிற்காமல் தன்னிடம் எஞ்சி இருந்த சிலம்பு ஒன்றைக் கையிலே ஏந்தி,

முறைமை இல்லாத அரசனின் ஊரில் வாழும் கற்புடைய பத்தினிப் பெண்களே இந்த சிலம்பைப் பாருங்கள், இது அந்தச் சிலம்புடனுள்ள இன்னொன்று, இதனைப் பாருங்கள்!

இம்மாலை வேளையில் பிறர் எவரும் படாத துன்பத்தைப் பட்டேன், பிறர் படாத துன்பத்தை அடைந்தேன், பிறர் அடையாத நிலையை அடைவேன், இது ஒன்று!

என் கணவன் கள்வனே அல்லன், என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் பறிப்பதற்காகக் அவனைக் கொன்றாரே! இது ஒன்று!

தம் கணவரின் காதலுக்குத் தகுந்த பெண்களின் கண் முன்னாலேயே அன்பு நிறைந்த என் கணவனை உயிருடன் காண்பேனே! இது ஒன்று!

என் கணவனை அவ்வாறு கண்டால் அவன் வாய் மொழியாகக் கூறும் குற்றமற்ற இனிய சொற்களைக் கேட்பேன்! இது ஒன்று!

அவ்வாறு குற்றமற்ற நல்ல மொழிகளை அவன் வாயிலிருந்து கேளாமல் இருந்தேனானால் பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தவள் இவள் என்று என்னை இகழுங்கள்! இது ஒன்று!

இவ்வாறு துன்பம் மேலிட்டு ஆற்ற முடியாமல் அழுகின்ற கண்ணகியைக் கண்டு வளம் மிக்க மதுரை நகரம் வாழ் மக்கள் எல்லாரும் தாம் ஏக்கமுற்றுக் கலங்கி களைய முடியாத துன்பத்தை இந்தப் பெண்ணுக்குக் கொடுத்தது என்றும் வளையாத செங்கோல் வளைந்துவிட்டதே இது என்ன கொடுமை!

மன்னர்களுக்கு மன்னனும் திங்களைப் போன்று குளிர்ந்த வெண்கொற்றக் குடையையும் வாளையும் உடைய வேந்தன் ஆகிய பாண்டியனது ஆட்சி இவ்வாறு சிதைந்ததே, இது எப்படி?

மண்ணுலகினைக் குளிரச் செய்யும் மறம் மிக்க வேலையுடைய பெருஞ்சிறப்பு மிக்கவனாகிய மன்னனது குளிர்ந்த குடை வெம்மையாகச் செயற்பட்டதே இது எப்படி?

செம்பொன்னால் செய்த ஒரு சிலம்பைக் கையில் ஏந்தி ஒரு புதிய தெய்வம் நமக்காக இங்கு வந்தது என்ன வியப்பு!

அழகிய வரி பரந்த மை பூகிய கண்கள் அழுது ஏங்கி புலம்புகின்ற இவள் தெய்வம் கொண்டவள் போன்று செயற்படுகிறாளே இது என்ன காரணம்? என்பவற்றைக் கூறி வருந்தி ஏங்கி அரசனின் செயலை வன்மையாகப் பழித்து ஆர்ப்பரித்த மதுரைக் குடிமக்கள் கண்ணகிக்கு அவள் கணவனைக் காட்டினர்.

தன்னைக் கண்ட சிவந்த பொன்னால் செய்த கொடி போன்ற கண்ணகியைக் காணப் பொறாதவனாய் வளம் நிறைந்த பெரிய உலகுக்கு இருளை ஊட்டிப் பெரிய கரிய மலையின் மேல் சிவந்த தன் கதிர்க் கற்றைகளைச் சுருக்கிக் கொண்டு கதிரவன் மறைந்தான்.

சிறிது நேரமே நிலவும் மயங்கும் பூங்கொடி போன்ற மாலைப் பொழுது மறையும் கதிரவனோடு பூசலிடுகின்ற அந்த வேளையில் கோவலன் கொலையுண்டதால் கண்ணகி மக்களிடம் உருவாக்கிய உணர்வுகளால் மாநகரில் பெரும் சலசலப்பு உருவானது.

காலையில் கணவனின் கரிய கொண்டையில் சூடியிருந்த வண்டு ஒலிக்கும் மாலையை வாங்கித் தன் நீண்ட கூந்தலில் சூடிக் கொண்டவளாகிய கண்ணகி இப்போது மாலையில் புண்ணிலிருந்து வழியும் குருதி அவன் உடம்பை நனைக்க அவன் தன்னைக் காண முடியாததால் பெருந்துயரத்தை அடைந்தாள்.

என்னுடைய இந்தப் பெரிய துயரத்தைக் கண்டும் இவள் துன்பமடைவாள் என்று எண்ணாமல் பொன் பொருந்திய மணம் மிக்க தங்கள் உடலம் புழுதி படிந்து கிடக்கலாமா? மன்னவன் செயலால் விளைந்த இந்தத் துயரத்தின் தன்மையை அறியாத என்னை இக்கொலைக்கு என் முற்பிறவி வினைதான் காரணம் என்று ஊரார் கூறாரோ?

துணை என எவரும் இல்லாத இந்த மாலை மயங்கும் நேரத்தில் துயருறும் தனியாளாகிய என் கண் முன்னே மாலைகள் நிறைந்திருக்கும் அழகிய மார்பு வெறும் தரையில் வீழ்ந்து கிடப்பதோ!

உலகத்தார் பெரும் பழிகளைச் சொல்லித் தூற்றும் வண்ணம் பாண்டியன் குற்றம் புரிய நின் தீவீனைகளின் பயன் வெளிப்பட்டுள்ளது என உரைக்க மாட்டார்களா?

நீரைச் சொரியும் கண்களைக் கொண்ட கொடிய தீவினையுடைய என் முன் புண்ணிலிருந்து குருதி வடியுமாறு புழுதியினுள் கிடப்பதோ, குடிமக்கள் பழிகூறித் தூற்ற மன்னவன் குற்றம் புரிய இது நடந்தது நீ செய்த வினையால்தான் என்று பிறர் கூறாரா?

இந்தக் கூடல் நகரில் தன்னுடைய கணவர்களுக்கு படும் பழிகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்களா? பெண்களும் இருக்கிறார்களா?

பிறர் ஈன்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் சான்றோர்கள் இருக்கிறார்களா? சான்றோர்கள் இருக்கிறார்களா?

கூரிய வாளால் கொடிய குற்றத்தைச் செய்த பாண்டியனின் கூடலில் தெய்வமும் இருக்கிறதா? தெய்வமும் இருக்கிறதா?

என்று இவற்றைச் சொல்லி அழுகின்ற கண்ணகி தன் கணவனுடைய திருமகள் தங்கும் மார்பை இறுகத் தழுவிக் கொள்ளவும் கோவலன் உயிர் பெற்று எழுந்து நின்று நிறை மதி போன்ற வெண்மையான முகம் கன்றியது என்று கூறி அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான். அப்பொழுது கண்ணகி புலம்பி ஏங்கி நிலத்தில் வீழ்ந்து தன் கணவனின் கால்களை இரு கரங்களாலும் பற்றினாள். அவ்வளவில் அவன் குற்றமற்றவனாக, பல தேவர்களின் குழுவில் இருப்பதைக் கண்டாள். அவன் அவளை நோக்கி நீ இங்கு இரு என்று கூறிப் போயினான்.

இப்போது நிகழ்ந்தது மாய நிகழ்வோ வேறு எதுவோ, என்னை மருள வைக்கும் ஒரு தெய்வமோ, இனி எங்கு சென்று என் கணவனைத் தேடுவேன் இப்போது கூறிய சொற்கள் உண்மையானவை அல்ல. என் கடும் சினம் தணியாமல் என் கணவனிடம் செல்ல மாட்டேன். தீயவனாகிய பாண்டியனைக் கண்டு அவன் நடத்தைக்கு விளக்கம் கேட்பேன் என்றாள். என்று கூறியவள் எழுந்தாள் துன்ப நிகழ்ச்சியைக் கொண்ட தீய கனவை நீண்ட கயல் போலும் கண்களில் நீர் சொரிய நினைத்துப் பார்த்தாள். நின்று நினைத்து பார்த்து தன் நீண்ட கயல் போலும் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்காமலே அரசனுடைய செழுமையான அரண்மனையில் வாயிலை நோக்கிச் சென்றாள்.

இந்தக் காதையின் சிறப்புகள்
1. கதிரவன் கண்ணகியுடன் பேசிய இறும்பூது உண்மையானதா அல்லது அவள் உள்மனதின் தோற்றமா? தவறு செய்யாத தன் கணவனைக் கொன்ற இந்த அரசனின் தலைநகரை அழிக்க வேண்டுமென்ற வெறியா? பரத்தைகளோடு ஆடியும் மாதவியோடு வாழ்ந்தும் தன் கணவன் தன் வாழ்வையே பொருளற்றதாக்கிவிட மதுரை போய்விடலாம் என்று அவன் கூறியதும் இழந்த வாழ்வை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு நிலத்தையே தொட்டு அறியாத தன் காலால் கரடு முரடான 60 காதம், 180 மைல், கிட்டத்தட்ட 300 கி.மீ. தொலைவை பொறுக்க முடியாத துன்பத்தைப் பொறுத்து வந்த இடத்தில் அவன் திருட்டுப்பழி சுமத்தப்பட்டு வன்கொலையாகக் கொல்லப்பட்டதற்குப் பழியாக அவ்வரசன் ஊரையே அழி என்று அவள் உள்ளம் விடுத்த அறைகூவல்தான் கதிரவன் கூற்றாக, உறுதிப்பாடாக அவள் உள்ளத்தில் வெளிப்பட்டதைத்தான் அடிகளார் நமக்குத் தருகிறார்.
2. தெருவில் இறங்கி தன் இன்னொரு சிலம்பைக் கையிலேந்தி தன் கணவன் கையிலிருந்த சிலம்பின் இணை இதுவென்றும் கணவன் கையிலிருந்த சிலம்பைப் பறிக்கவென்றே தன் கணவனைக் கொன்றுள்ளனரென்றும் கூக்குரலிட்டுச் செல்பவளைக் கண்டு திகைத்து நம் மன்னனைக் குறைகூறி ஒரு பெண் தெருவிலிறங்கி குரலெழுப்புவதைக் கண்டு, பாண்டிய மன்னனின் ஆளுமைக்கு இப்படி ஓர் அறைகூவல் வந்தது கண்டு அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.
3. அடிகளார் இதை மட்டும் சுட்டவில்லை, செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் என்று மக்கள் மக்கள் அரற்றினார்கள் என்று கூறுவதன் மூலம் ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகள் தாங்காது தவித்து வரும் மக்களின் முன் கண்ணகி தம்மை விடுவிக்க வந்த, தாம் அறியாத ஒரு தெய்வமாகவே படுகிறாள் என்பதைப் பதிகிறார். கள்வன் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அயலூரான் ஒருவன் எந்த மூதலிப்பும் இன்றி ஒரு காவலனால் வன்கொலையாகக் கொல்லப்படும் இந்த நடைமுறை அந்நாட்டில் இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கும். அதைத் தட்டிக்கேட்கும் ஒரு தலைமை இல்லாமல் விழி பிதுங்கியிருந்த மக்கள் ஒரு பெண் அந்த இடத்தை நிரப்ப வந்ததைக் கண்டு இறும்பூது எய்தினர் என்பதை இந்த வரிகள் மூலம் அடிகள் நமக்குக் காட்டுகிறார்.
4. கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்ட என்ற வரி கண்ணகி தன் கணவன் கொலைப்பட்டுக் கிடக்கும் இடத்துக்குத் தனியாகப் போகவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆரவாரம் இட்டுக்கொண்டே ஒரு மக்களின் பெருந்திரள் அவளைத் தொடர்கிறது என்பதை ஐயத்திற்கிடமின்றிக் காட்டுகிறது.
5. பகல் பொழுது முடிந்து இரவு வரும் முன் இரண்டும் மயங்கும் வேளையில் கணவன் கிடக்கும் இடத்தைக் கண்ணகி அடைந்த போது ஊர் மக்களிடையில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டதை ஒல்லென் ஒலிபடைத்த தூர் என்ற வரி தருகிறது.
6. கணவனின் குருதி வழியக் கிடந்த உயிரற்ற உடலைக் கண்டு மனம் பதைத்த கண்ணகி மன்னவன் செய்த கொடுவினையைச் சொல்லிக் குமுறுகிறாள். இது தான் செய்த வினையின் விளைவு என்று ஊரார் பழி கூறாரோ என்றும் குமைகிறாள்.
7. அடுத்து அவளுடைய சினம் அவ்வூர் மக்களின் மீது திரும்புகிறது. இந்த ஊரில் கணவனுக்கு வரும் இழிவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்கள் இல்லையா, ஏதிலிகளாக வரும் மக்களைப் பேணும் மேன்மக்கள் இல்லையா, இந்த ஊரில் தெய்வங்கள் இல்லையா என்று குமுறுகிறாள்.
8. இந்த இடத்தில் அடிகளார் ஓர் இறும்பூது நிகழ்த்துகிறார். கணவனின் உயிரற்ற உடலை கண்ணகி தன் மார்போடு இறுகத் தழுவிக்கொள்ள அவன் எழுந்து நிற்கிறான் என்கிறார். “உன் வெண்மையான முகம் கன்றிப்போனதே” என்று அவள் கண்ணீரைத் துடைக்கிறான். அவனுடைய அழகிய அடியை அவள் கையாற்பற்ற எந்த உடலூறும் இன்றி எழுந்து நின்ற அவன் தேவர் குழுவினருடன் “நீ இங்கேயே இரு” என்று சொல்லிச் சென்றான் என்கிறார். இது ஒரு இரும்பூறு(தெய்வீக அற்புதம்) என்றே நமக்குத் தோன்றும். ஆனால் இதை இன்றைய திரைப்பட உத்திகளின்படி பாருங்கள். தன் கணவன் உயிர்த் தெழுந்தது போலவும் தன்னைத் தேற்றித் தேவர்களுடன் விண்ணுலகம் சென்றதாகவும் அவள் மனதுக்கு மட்டும் காட்சியாகத் தெரிந்ததையும் பின்னர் தான் கண்டது ஒரு மாயை, மனக்காட்சி என்று அவள் உணர்ந்ததாகவும் நாம் முடிவு செய்வதற்கு ஏற்றாற்போல், மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.
9. நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் என்ற வரிகள் ஒரு முகாமையான கேள்வியை எழுப்புகின்றன. கண்ணகி கணவனின் பிணத்தைக் கண்டு என் சீற்றம் தணிந்தாலன்றி இறந்து போன என் கணவனைத் தேவருலம் சென்று, அதாவது உயிரை விட்டு அவனுயிருடன் கலக்க மாட்டேன் என்று சூளுரைப்பது மாலை மயங்கி இருள் சூழ்ந்த நேரம். அப்போது அரசன் அவை கூடியிருக்குமோ? வாய்ப்பில்லை. மறுநாள் காலைதான் மீண்டும் அவை கூட வாய்ப்புண்டு. அப்படியானால் இந்தக் கால இடைவெளி இளங்கோவடிகள் செய்த ஒரு காலவழு (anachronism) என்று ஓர் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர்களிடையில் ஓர் உரையாடல் நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்த அதிகாரத் தலைப்பைப் பார்க்க வேண்டும். ஊர்சூழ்வரி என்பது. அதாவது ஊரைச் சுற்றி வந்து ஒரு தனியாள் எழுப்பிய(ஓரி → வரி) பாடல் அல்லது, இந்த இடத்தில், ஒப்பாரி. அதாவது கோவலனின் உடல் கிடந்த இடத்திலிருந்து எழுந்து நின்ற கண்ணகி அரசன் அவை கூடும் நேரம் வரை மதுரை நகரைச் சுற்றிச் சுற்றி வந்து குரல் எழுப்பி மக்களைத் திரட்டினாள் என்ற செய்தியை அதிகாரப் பெயரில் அடிகள் மறைத்து வைத்திருக்கிறார்.
அவர் ஏன் இப்படி மறைத்து வைக்க வேண்டும்? அவர் வாழ்ந்த காலம் முடிமன்னர் காலம். அம் முடிமன்னர்களின் ஆட்சிகள் ஆட்டம் கண்டு அம்மணர்களான அயலவர் ஊடுருவி மக்களை அரசர்களுக்கெதிராகத் திரட்டிக்கொண்டிருந்த காலம். அதாவது அரசர்களின் ஆளும் திறன் சிதைவுற்று கொடுங்கோலாட்சி கோலோச்சிய காலம். அதைப் பதிய வேண்டும். ஆனால் அது வெளிப்படையாக இருந்தால் இந்த நூலாக்கமே வெளியுலகைக் காணாமல் அழிக்கப்பட்டுவிடும். அதனால்தான் ஆங்காங்கு ஒவ்வொரு சொற்களைச் சொருகி அடிகளார் உண்மைகளை அவற்றுக்குள் புதைத்து நமக்குத் தருகிறார். அதனால்தான் ஒட்டுமொத்தச் சிலப்பதிகாரமே ஒரு புதையலின் தன்மையைப் பெற்றிருக்கிறது.
❋ ❋ ❋

0 மறுமொழிகள்: