1.6.08

யார் சொத்தை யார் விற்பது?

இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைவரையும் பதற்றமடைய வைத்திருக்கும் சிக்கல் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை அமைப்பதற்கு மக்களுக்குச் சொந்தமான நிலம் ஏறக்குறைய பதினொன்றாயிரம் ஏக்கரை அரசே கையகப்படுத்தி டாடா எனப்படும் இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்குக் கொடுக்கும் அரசின் முயற்சியாகும். இந்தச் சிக்கலில் ஒன்றுக்கு மேற்பட்ட பாதிப்புகள் மக்களுக்கும் நாட்டுக்கும் உள்ளன.

1. சென்ற நூற்றாண்டுகளில் அரசியல் சூறாவளிகளால் துரத்தியடிக்கப்பட்டு அடைக்கலம் புகுந்த மக்கள் இந்த மண்ணை வளப்படுத்தி எத்தனையோ வேளாண் விந்தைகளையும் வாணிக - தொழில் நுட்ப அருஞ்செயல்களையும் நிகழ்த்தியுள்ளனர். அவ்வாறு வளம்பெற்ற மண்ணிலிருந்து இவர்களை திசையறியாக் காட்டில் மீண்டுமொருமுறை துரத்தியடிக்கும் முயற்சியாக இதைப் பார்க்கின்றனர் ஒரு சாரார்.

2. கொல்லாமா(முந்திரி), சப்போட்டா, முருங்கை, கொய்யா போன்று ஆண்டுக்கு ஏக்கருக்கு நாற்பதாயிரம் ரூபாய்கள் வரை வருமானம் தரும் நிலத்துக்கு ஏக்கருக்கு 6500 அல்லது 65000 அல்லது அரசு அமைத்த கருத்தறியும் குழு மக்களுக்கு வாக்களித்துள்ளது போல் 1,25,000 ரூபாய்கள் கொடுத்தாலும் ஈடாகுமா என்பது இன்னொரு கேள்வி.

3. மொத்தம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்குமாம் இந்தத் தொழில்சாலையில். அதிலும் தொழில்நுட்பத் தேர்ச்சியுள்ளவர்களின் தேவைதான் மிகுதி. அப்படியிருக்க 5000 மக்களுக்கு வேலை வழங்கும் நிலத்தைப் பறிப்பது என்ன ஞாயம் என்று கேட்கின்றனர் மக்கள்.

4. இந்தத் தொழிற்சாலையில் பிரித்தெடுக்கப்படும் கனிமங்கள் மிக அரியவை, மதிப்பு மிக்கவை. எனவே அவற்றை மிகக் கவனமாகச் செலவிட வேண்டுமென்று கூறும் திரு. சிங்கநெஞ்சன் அவர்களது 8-8-2007 தினமணி கட்டுரை தரும் செய்தி உண்மையானது. இப்பொருட்களின் விலைமதிப்பை நிலவுடைமையாளர்களுக்கு வழங்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்புவாரும் உள்ளனர்.

5. டாட்டா தொழிற்சாலைக்குத் தேவைப்படுவது 300 அல்லது 600 ஏக்கர் நிலம் தான் அப்படியானால் அரசு 11,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவது ஏன் என்றொரு கேள்வியும் உள்ளது.

6. மணலை 7மீட்டர்(23அடி) ஆழத்துக்கு எடுக்கவிருப்பதாகக் கூறுகிறார்கள். அதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ என்ன ஏற்பாடு? அதற்கும் கீழே அந்த வட்டாரத்தில் பாறையாக இறுகிப்போன சிப்பிப் படிவங்கள் உள்ளனவே! அவற்றை உடைத்து எடுப்பார்களே அதற்கு விலை நிலவுடைமையாளர்களுக்குக் கொடுக்க வேண்டாமா?

இவை தவிர சில அடிப்படைக் கேள்விகளுக்கும் விடை காண வேண்டியுள்ளது.

1. முருங்கைக்காய், கொய்யா, சப்போட்டா போன்ற வேளாண் பொருள்கள், மாடு, கோழி, பன்றி போன்ற இறைச்சிப் பொருட்கள், மூலிகைகள் போன்ற மீண்டும் உருவாகும் வளங்கள் போன்றவற்றில் நம் தேவைகளுக்கு மிஞ்சியவற்றை ஏற்றுமதி செய்வதில் தவறில்லை என்று கூறலாம். ஆனால் எந்த உத்தியாலும் திரும்ப உருவாக்க முடியாத கல்லையும் மணலையும் விலைமதிப்புள்ள அருமண்களையும் ஏற்றுமதி செய்வது ஞாயமா அல்லது பகுத்தறிவுக்கு உகந்ததா? அவை காலங்காலமாக வரவிருக்கும் நம் பின்னடிகளுக்கு உரிய சொத்துக்களல்லவா? அவற்றை நம் நாட்டு எல்லையைவிட்டு வெளியேற்றுவது மாபெரும் குற்றமல்லவா?

2. கடற்கரையில் தேரிகள் எனப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக உருவாகின்றன. அவை பெரும் கடற்சூறாவளிகள், ஓதம் எனும் வீங்கலை, சுனாமி எனும் ஓங்கலை ஆகியவற்றிலிருந்து கடற்கரையைக் காக்கும் வலிமையான அரண்களாகும். அவற்றை முறையாகப் பேணினால் உருவாகும் உயிர்ப்பன்மையம் மலைகளில் உருவாவதைவிடச் செறிவானது, விரிவானது என்று இயற்கையியலாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய தேரிகளை அவற்றிலுள்ள அருமண்களுக்காக அகற்றுகிறார்கள். அவற்றில் வீடுகட்ட இலவயமாக இடம் கிடைக்கிறது என்பதற்காக அங்குள்ள மீனவர்களும் அதனை ஊக்குகின்றனர் அல்லது கண்டுகொள்ளாமலிருக்கின்றனர். அதனால் இயல்பான கடலலைகூட நிலத்தை அரித்துச் செல்கிறது. அதைக் காட்டி அரிப்புத் தடுப்புச் சுவரெழுப்புமாறு குரலெழுப்புகின்றனர். மலைகளை உடைத்துக் கடலினுள் கொட்டுகின்றனர் ஆட்சியாளர்கள். பலருக்கு அதில் உடனடியான தற்காலிக ஆதாயம் உள்ளது.

3. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்தும் கேரளத் துறைமுகங்களிலிருந்தும் கருங்கல் சல்லிவகைகளும் மணலும் ஏற்றமதியாகின்றன. தமிழகத்தின் மலைப் பகுதிகளிலிருந்து கிரானைட் கல் கணக்கின்றி ஏற்றுமதியாகிறது. மலைகள் மாயமாய் மறைகின்றன. ஆறுகள் நீரைத் தேக்கிவைக்கும் மணற்போர்வையை இழந்து அம்மணமாய்க் கிடக்கின்றன. தமிழகம் நிலத்தடி நீரை விரைவாக இழந்து வருகிறது. மக்கள் இதற்கெதிராகப் போராட சிறிது சிறிதாக அணிதிரண்டு வருகின்றனர். ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இறுமாந்திருக்கின்றனர். இதைப் பெருமையாக, அயற் செலவாணி திரட்டும் அருஞ்செயலாக விளக்குகிறார்கள்.

நாம் பெற்றுப் போடும் நம் பிள்ளைகளுக்கும் வாழையடி வாழையாகத் தொடர்ந்து வரவிருக்கும் தலைமுறைகளுக்கும் நாம் எதை விட்டுப் போகப் போகிறோம்? மலையில்லாத, மரமில்லாத, மணலில்லாத பாழ்வெளியையா?

நம் செயல் உத்திரத்தை உடைத்து அடுப்பெரிப்பவன், கதவை உடைத்து விற்றுக் கள்ளுண்பவன் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குபவன் ஆகியோர் செயலிலிருந்து எந்த வகையில் மேம்பட்டது?

விரைந்து விடைகண்டு முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

(இக்கட்டுரை தமிழினி மார்ச்சு-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: