2.6.08

தமிழினி மாத இதழ் (ஏப்பிரல் 2008) - ஒரு பார்வை

அன்புள்ள தமிழினி வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

″வல்லான் வகுத்ததே வாய்க்கால்″ ′ஊழ்′ எது உலகப் போரா? நன்று. ″காலம் உலர்த்திய கண்ணீர்த் துளி″ அண்ணாத்துரை தான் நினைத்தால் பெரியாருக்குப் போட்டியாக வரமுடியும் என்று ஒரு முறை கூறியதாக சென்ற தலைமுறைத் தலைவர் ஒருவர் நினைவு கூர்ந்ததைப் படித்துள்ளேன். அண்ணாத்துரையின் நெருக்கமான தோழர்கள் உட்பட பெரியாரிடம் சம்பளத்துக்குத்தான் வேலை பார்த்து வந்தனர். நூல் எழுதுவது, திரைப்படத்துக்குத் கதை - உரையாடல் எழுதுவது என்று எல்லாமே அவரது ஆணைக்கு உட்பட்டே என்ற நிலையிலிருந்து உடைத்து வெளியேற மணியம்மை திருமணம் உதவியது. என் தமிழ்த் தேசியம் ஆக்கத்தை வலையில் பாருங்கள்.

1961-62இல் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டு சம்பத்தோடு கண்ணதாசன் வெளியேறிய காலகட்டத்தில் ம.கோ.இரா. நடித்து வெளிவந்த தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ஒரு பாடல் வரிகள்,

கண்களிரண்டில் அருளிருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன்பிறந்தாரையும் கருவறுக்கும்

இது அண்ணாத்துரையைப் பற்றிய ஒரு துல்லியமான படப்பிடிப்பு என்பது என் கருத்து.

கே.பி.எசு.கில் அழித்தது பஞ்சாப் போராளிகளை மட்டுமல்ல, கொக்கிப் பந்து விளையாட்டையும்தான். நம் ஊர்ப்புறங்களில் அண்மைக் காலம் வரை விளையாடப்பட்டு வந்த எத்தனையோ ஆட்டங்களை இன்றைய ″இறக்குமதி″ ஆட்டங்களில் இனம் காண முடிகிறது. இந்திய ஆட்சியாளர்கள் நம் விளையாட்டுகளை மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு உரிமைப்பட்ட அனைத்தையுமே அழித்து வருகின்றனர்.

ஆட்சியாளர்களின் அரசின்மையால்(அரசகத்தால்) மண்ணின் மீதுள்ள உயிர்கள் அனைத்தையும் விரைவில் அழித்து விடுவார்கள். அதன் ஒரு படிதான் யானைகளுக்கு வந்துள்ள நெருக்கடி. படங்கள் மிகச் சிறப்பு. கட்டுரையாளரின் புகைப்படத் தொகுப்புக்குப் பாராட்டுகள்.

குமரி மாவட்ட நாஞ்சில் குறவனைப் பற்றிய ஒரு கட்டுரையை நண்பர் எட்வின் எழுதக் கூடும்.

″சிறுத்தை″, கணிணி பயன்படுத்துவோருக்குப் பயன்படும். எனக்கு இன்னும் போதிய பயிற்சி இல்லை.

″π வாழ்த்துக்கள்″இல் πயில் இந்தியர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சில உண்மைகள்:

வண்டிச் சக்கரம் 6 பகுதிகளைக் கொண்டது. ஒரு ஆரைக்காலும் ஒரு வட்டத் துண்டும் கொண்டது ஒரு பகுதி. சக்கரத்தின் வெளிவிளிம்பு வரை ஆரத்தின் அளவு 21 ஒன்றிகள். வட்டத் துண்டின் நீளம் 22 அலகுகள். ஆக ஒரு சக்கரத்தின் சுற்றளவு 6 x 22 = 132 அலகுகள். இதை ஆரையின் நீளத்தால் வகுத்தால் கிடைப்பது 132/21 = 44/7 = 2 x 22/7 = 2π. வட்டத்தின் சுற்றளவுக்கான வாய்ப்பாடு: 2 π x ஆ(ரை) = π x வி(ட்டம்). வண்டிச் சக்கரம் செய்யும் கொல்லர்கள் இதற்கென்று ஒரு அளவுகோலை வைத்துள்ளனர். செங்கம் வளையாம்பட்டைச் சேர்ந்த நடுவரசு அளவைத்துறையிலிருந்து பணி நிறைவு பெற்ற திரு.கு.வெங்கடாசலம் என்பார்(நன்னன் நாடு என்ற இதழை நடத்தியவர்) ஒரு நிகழ்ச்சியின் போது அதைக் காட்டி விளக்கினார். தன் ஆய்வுகளைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளும் விருப்பத்தை அவர் தெரிவித்த போது துணை வேந்தராயிருந்த திரு.வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் ″எம் பேராசிரியர்களே அதைச் செய்வர்″ என்று மறுத்துவிட்டதாகக் கூறினார்.

வட்டத்தில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்கினால் பரப்பு கிடைக்கும் என்பது கிணறு தோண்டுகிறவர்கள் கையாளும் ஓர் எளிய வாய்ப்பாடு. இதைச் சரிபார்ப்போம்:

வட்டத்தில் பாதி என்பது π x ஆ
விட்டத்தில் பாதி என்பது ஆ
எனவே பரப்பளவு = π x ஆ x ஆ = π x ஆ²

பழைய திருவிதாங்கூர் சமத்தானத்தில் ஒரு நாணயத்தின் பெயர் சக்கரம். வண்டி உருளைப் பைதா அல்லது பைசா என்றனர். தமிழ்நாட்டில் அவற்றை முறையே பைசா, சக்கரம் என்ற சொற்களால் இன்று குறிக்கின்றனர். எனவே இந்தப் பைதா அல்லது பைசாவோடு πக்கு தொடர்பு இருக்க வேண்டும் என்பது நண்பர்கள் வெள்ளுவன், எட்வின் ஆகியோர் கருத்து.

இன்னும் ஒரு செய்தி. மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 5¼அடி, அதாவது 63 அங்குலங்கள். அதன் சுற்றளவு 16½ அடிகள். சக்கரம் 4 சுற்றுகள் சென்றால் செல்லும் தொலைவு 66 அடிகள், அதாவது ஒரு அளவுத் தொடரி(சங்கிலி). பத்து தொடரி நீளம் ஒரு படைசால்(பர்லாங்). 8 படைசால் ஒரு மைல் என்பதுதான் தெரியுமே. ஒரு சதுர மைல் 640 ஏக்கர். ஒரு ஏர் உழவு என்பது 2½ ஏக்கர் எனபது முன்னாள் நடைமுறை. இன்றைய எக்டேர் 2.47 ஏக்கர்கள். ஒரு மீற்றர் 3.28அடிகள் என்பதற்குப் பகரம் 3.3 என்றிருந்தால் நமது பழைய ஏர் அளவும் இன்றைய எக்டேரும் ஒன்றாகவே இருந்திருக்கும்.

சக்கரவர்த்தி என்ற சொல் சக்கர வழுதி என்பதன் திரிபாகலாம் என்பது குணா கருத்து. குயவர்களின் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் மண்பாண்டங்கள் பண்டங்களின், குறிப்பாக நீர்மங்களின் போக்குவரத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கும். அதனால் விளைந்த செல்வப் பெருக்கும் வலிமையும் ஒரு பேரரசை உருவாக்க உதவியிருக்கும். அதனால்தான் ஆணை உருள்(ஆக்கினா சக்கரம்) ஆழி என்ற சொல்லாட்சிகள் அரசனின் ஆட்சி அதிகாரத்தைச் சுட்டுவதற்குக் கையாளப்படுகின்றன என்று தோன்றுகிறது. இவ்வாறு உருளால் வலிமை பெற்று உருளை அடையாளமாகக் கொண்டு ஆண்டவர்களைச் சக்கராசுரன் என்றும் அவர்களை அடக்கியதை கண்ணன் சக்கராசுரனை வதைத்தான் என்றும் தொன்மங்கள் கூறுகின்றன என்பது என் கருத்து. இன்னொரு சக்கரம் நெசவாளர்களின் நூல் சுற்றும் இராட்டை(நூல் நூற்கும் இராட்டையை இங்கு குறிப்பிடவில்லை). நெசவினால் வலிமை அடைந்த கலிங்கர்களின் அடையாளமாக அது இருந்திருக்கும் போலும். கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்ற பொருள் தமிழில் உண்டுதானே! அசோகன் கலிங்கத்தை வென்ற பின் அங்கிருந்த சக்கர அடையாளத்தைத்தான் தன் இலச்சினையில் பொறித்தான் என்று படித்த நினைவு. அதுதான் இன்று இந்திய அரசின் இலச்சினையில் பெருமை தரும் உறுப்பாக விளங்குகிறது.

போதுமா நமக்கும் πக்கும் உள்ள உறவு பற்றி. சரியான வரலாற்றுக் கருப்பொருள்களைப் பற்றிய தெளிவே இல்லாத நிலையில் நம் பண்டை வரலாற்றின் உண்மையான வரைவு இன்றுவரை தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் நம் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை நூல்களிலிருந்து தெரிந்துகொள்ள முடியாது, மக்களிடமிருந்துதான் அறிந்துகொள்ள வேண்டும்.

கம்பனை என்னால் சுவைக்க முடிவதில்லை. இலக்கியத்தில் வடிவத்தை விட உள்ளடக்கத்துக்கும் கட்டடத்தில் தோற்றத்தை விட பயன்பாட்டுக்கும் முதன்மை கொடுப்பது என் வழக்கம்.

விபுலானந்தரைப் பற்றிய செய்திகள் ஆர்வமூட்டுவனவாக இருந்தன. ஆனால் சிலப்பதிகாரத்தின் கானல் வரியில் உளங்கோ விளக்கும் யாழ் இன்றைய வீணையே என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுதான் பேரியாழ்.

இராமானுசன் பற்றிய புதினத் திறனாய்வு என்னை ஈர்த்தது. என் ″ஆய்வு″ முறைகளும் பிறர் அறிவியல் அடிப்படையில் அமைந்தது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்கள் ஏற்கும் சான்றுகளைக் கொண்டு அமைவதில்லை. ஆனால் பல முடிவுகளுக்கு பின்னால் சான்றுகள் கிடைத்துள்ளன. என் பல முடிவுகளை மனத்தூய்மையுடன் சரிபார்த்து உறுதிப்படுத்தவும் அல்லது மறுக்கவும் வரும் தலைமுறையினரை எதிர்பார்க்கிறேன்.

சார்லசு டிக்கன்சின் ஆலிவர் டிவிச்டு காட்டுவது போன்ற சூழலை நோக்கி திருப்பூர் சென்று கொண்டிருக்கிறதா? அல்லது பழமைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றனவா? ″மணல் கடிகை″.

எனக்கு சோதிடத்தைக் கற்றுக் கொள்ள அடிப்படைத் தேவையான ஓரை, நாண்மீன்கள் பெயர்களையும் அவற்றின் வரிசை எண்களையும் மண்டையில் புகுத்திக் கொள்ளும் திறமை முற்றிலும் கிடையாது. நம் பண்டை வானியல் அறிவைப் பற்றி மட்டுமல்ல உடலியல், உளவியலில் வான் பொருட்கள் கொள்ளும் தாக்கம் என்பது பற்றியும் ஆய்வு செய்யத் துணை புரியும் ஒருவரை நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். ″கூட்டம்″ நன்றாக இருக்கிறது. இரண்டு ″செல்″லக் கட்டுரைகள்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் பள்ளியுலா ஒன்று சென்றாராம். ஒரு வகுப்புள் புகுந்தாராம். தொடக்கப்பள்ளி மாணவனைப் பார்த்து ′நம் நாட்டில் பிறந்த பெரிய மனிதர்கள் யார், யார்? சொல்லு′ என்றாராம். அவன் எழுந்து, ′ஐயா, நம் நாட்டில் குழந்தைகள்தாம் பிறக்கின்றன. பெரிய மனிதர்கள் பிறப்பதில்லை′ என்றானாம். அது போல் பாரதி மட்டுமல்ல இராமலிங்க அடிகள், பாரதிதாசன் அனைவருக்கும் பருவத்துக்கேற்ற வளர்ச்சி அதாவது திரிவாக்கம் - படிமுறை வளர்ச்சி- உண்டு. முருகனைப் பற்றி எழுந்த அடிகளார் சிவன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து ஒரே கடவுளை நோக்கி ஓடி முடித்து கடவுளே இல்லை என்று முடிக்க இருந்த நிலையில் அவரை முடித்துவிட்டனர் என்கிறார்கள்.

பாரதிதாசன் ′எங்கு நோக்கினும் சக்தியடா′ என்று தொடங்கியவர் இறை மறுப்பாளரானார். குடும்ப விளக்கை ஏற்றியவர் பின்னர் பெண்ணை வீட்டுக்குள்ளேயே அடைத்து விட்டதை எண்ணி வருந்தினார். தன் ஆக்கங்களைத் தூய தமிழுக்கு மாற்றி எழுதினார்.

அதுபோல்தான் பாரதியும். அத்துடன் நமக்குத் தெரிந்த அவரது தனித்தன்மை நீண்ட நெடுங்காலமாகப் பழமையில் ஊறிய நம் குமுகத்தின் மிக பிற்போக்குத் தன்மையிலுள்ள ஒரு குழுவில் தோன்றி அது தன்னை மூடிவைத்திருந்த, காலங்களால் உறைந்து இறுகிப் பாறையாகிக் கிடந்த போர்ப்புகளை உடைத்து வெளியே வர முழு மனதுடன் பாடுபட்டதுதான். இந்த வளர்ச்சி நிலையில் தொடக்க காலத்திலும் பின்னர் தவறான கோட்பாடுகளாலும் நேர்ந்த தவறுகளைச் சிலர் அவருடைய சாதி சார்ந்த நிலைப்பாடு என்று பழிசுமத்துகிறார்கள் என்பது என் கணிப்பு. வள்ளலாரைப் போல் அன்றி தன் கனவுகள் நிறை வேறா என்ற நிலை வந்த போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாராடி என்று மனம் நொந்தவர் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய் என்ற கையறு நிலைக்கு வந்து மதம் பிடித்திருக்கிறதென்று தெரிந்திருந்தும் அதன் முன் சென்று தன்னை முடித்துக் கொண்டார்.

படைப்பாளிகளிடம் நாம் காணும் ஒரு முரண்பாடு புனைவு அல்லது செய்யுள் படைப்பாளிகளாக செயற்படும்போது வெளிப்படும் கருத்துகளுக்கும் கட்டுரைகள் அல்லது மேடைப் பேச்சுகளில் வெளிப்படும், கருத்துகளுக்கும் உள்ளவையாகும். பொன்னீலனின் கரிசல் புதினத்திலும் கருணாநிதியின் வெள்ளிக் கிழமையிலும் இதைப் பார்க்கலாம். ஏன், செயமோகனின் ரப்பர் புதினம் பரிவ பெற்றதே சுற்றுச் சூழல் குறித்த அதன் பரப்பல் பயனுக்காகத்தானே! பாரதியார் எழுத்து நடையில் ஆரியம் – இந்தியம் - சமற்கிருதம் தூக்கலாகத் தெரிந்தாலும் செய்யுள்களில் தமிழ், தமிழன், தமிழ் நாடு பற்றிய பெருமிதம் நிறையவே இருக்கிறது என்பது என் கணிப்பு.

அன்புடன்,
குமரிமைந்தன்.

0 மறுமொழிகள்: