1.6.08

பொய்யிலே பிறந்து....

தமிழக அரசின் வரவு - செலவுத் திட்டம் 2008 – 2009

தமிழ்நாட்டில் பேரவைக் கட்சி பெருமகனார் எசு.ஆர் பாலசுப்பிரமணியம் தவிர ஒருவரைக் கூட சிக்குன் குனியா எனப்படும் மொழி முறிச்சான் நோய் தாக்கவில்லை.
தமிழகத்தில் இந்த ஆண்டு மின்வெட்டே கிடையாது.
தமிழக அரசு போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளில் மறைமுகமாகவோ நேரடியாகவோ எந்தக் கட்டண உயர்வும் கிடையாது.

இது போன்று தமிழக மக்களுக்கு உள்ளங்கைப் புண்ணாகத் தெரிந்த ″உண்மை″களைக் கூறிய தமிழக அரசு முன்வைத்துள்ளது 84 கோடி மிச்சமாகக் காட்டும் ஒரு மீத, அதாவது ″உபரி″ வரவு செலவுத் திட்டத்தை.

″கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்″ என்பது மிகத் தொன்மையான பழமொழி. இன்று அது எட்டு மணிநேரம் கூட நிலைக்கவில்லை. தினமணி 21-03-2008 நாளிதழின் நான்காம் பக்கத்தில் தமிழகத்தின் மொத்தக் கடன்தொகை 2008 – 09 ஆம் ஆண்டின் இறுதியில் உரூ 74,641.35 கோடியாக இருக்கும் என பணச் செயலர் கு.ஞான தேசிகன் கூறினார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 2007-08 ஆம் ஆண்டின் மொத்தக் கடன் தொகை உரூ 65,750.91 கோடியாம். ஆக, இந்த ஆண்டில் தமிழக மக்கள் மீது ஏறியுள்ள கடன் 74,641.35 - 65,750.91 = உரூ 8,890.44 கோடி ஆகும். ஆனால் இத்தொகை நடுத்தர கால நிதித் திட்டம் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள அட்டவணையில் நிதி உபரி(+) / பற்றாக்குறை(-) (சரிக்கட்டப்பட்டவை) என்ற இன விளக்கத்தில் உரூ (-)9752.00 கோடி எனக் காட்டப்பட்டுள்ளது. அடிக்குறிப்பில் ″இவை சரிக்கட்டப்பட்ட எண்கள் என்பதால் இந்த மதிப்பீடுகள் நிதிக் கணக்குகள் மற்றும் ஆண்டு நிதி விபர அறிக்கையுடன் பொருந்தாது″ என்று தரப்பட்டுள்ளது.

நாம் ஒரு பணம் திட்டமிடல் வல்லுநர் அல்ல என்பதால் இதன் உண்மையான பொருள் நமக்கு விளங்கவில்லை. ஆனால் உரூ 9752.00 கோடி பற்றாக்குறை வ.செ.திட்டத்தை உரூ 84.00 கோடி மீத வ.செ. திட்டமாக சட்டமன்றத்தில் அரங்கேற்றியுள்ளனர். இதன் பொருள் இப்படியும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைக்குச் சமமாகக் கடனை வாங்கத் திட்டமிருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவ்வாறு செலுத்திய பிறகு நிலுவையிலிருக்கும் பழையகடனாகிய உரூ 65,750.91 கோடியுடன் கூடுதலாக 8890.44 கோடி நிகரக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அப்படியும் பற்றாக்குறையாக 9752.00 – 84.00 – 8890.44 அதாவது உரூ 777. 56 கோடியை வ,செ. திட்டத்தினுள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்.

ஆக, வெட்டவெளியில் மக்களின் முன்னால் நோய் பற்றியும் மின்வெட்டு பற்றியும் பேருந்துக்கட்டணம் பற்றியும் கூசாமலும் தயங்காமலும் அச்சமின்றியும் திமிராகவும் பொய் கூறியவர்கள், அரசியல் சட்டத்தின்படி ச.ம.உக்களும் பா.உ.க்களும் மிகப் பாதுகாப்பாகக் குற்றங்கள் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களில் ஒன்றில் இப்படி சட்டத்துக்கு உட்பட்டதாகக் கருதப்படும் அல்லது கணக்கீடு உத்திகளின் படி அமைந்த ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதில் வியப்பில்லை. மாநில, நடு பேராளர் மன்றங்களில் நிகழும் குற்றச் செயல்களில் தலையிட நாட்டின் பொது சட்ட ஒழுங்கு துறைக்கு அதிகாரம் இல்லை அல்லவா? நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வாக்களிக்க கைக்கூலி வாங்கியவர்கள் அவ்வாறு வாக்களித்தது அவர்களது கடமையும் உரிமையும்; அதில் தாங்கள் தலையிட முடியாது என்று நாட்டின் நயன்மையைக் காக்கும் உச்ச நிறுவனம் தீர்ப்புக்கூறி இதை உறுதி செய்யவில்லையா? பண அமைச்சரின் பெயரின் முன்னொட்டாகிய பேராசிரியர் எனும் மதிப்பை மட்டும் பகடி செய்யும் எதிர்கட்சித் தலைவருக்கு இந்த வ.செ.திட்டத்தில் உள்ள குறைகள் அல்லது ஓட்டைகள் தெரியாது என்று கூறிவிடுவதற்கில்லை. நேற்று தான் செய்தவை, மீண்டும் தான் செய்ய இருப்பவற்றை விளம்பரம் செய்து தன் தலையிலேயே மண்னை யாராவது அள்ளிப் போட்டுக் கொள்வார்களா? ஊழல் தொழில் நுட்பத்திலும் அறிவியலிலும் வல்லவர், ஊழல் கலையின் நடமாடும் பல்கலைக் கழகம் காட்டியுள்ள புதிய வழியில் ஆசானை மீஞ்சிய மாணக்கராக அவர் மிளிரப் போகிறார் என்பது உறுதி.

இனி, வ.செ.திட்டத்திலுள்ள சிறப்பான சில கூறுகளைப் பார்ப்போம். அமைச்சரின் உரையில் எல்லா இனங்களுக்கும் உரிய ஒதுக்கீடுகள் முழுமையாகத் தரப்படவில்லை. ″பணி தொடர்ந்து நடைபெறுகிறது″ என்ற வகையில் செல்கிறது உரை. இருப்பினும் கிடைத்த தொகைகளை வைத்துப் பார்க்கும் போது மொத்த மதிப்பீட்டில் உதவிகள், மானியங்கள், இலவயங்கள் 15 நூற்றுமேனி அளவுக்கு உள்ளன. ஏறக்குறைய 58 ஆண்டுகளுக்கு முன் ஒரு முழு உரிமை பெற்ற குடியரசாக மலர்ந்ததாகக் கூறப்படும் நம் நாட்டில் நாளுக்கு நாள் முதியவர்களும் கைம்பெண்களும் நல்லவர்களென்று எந்தக் கோணத்திலிருந்தும் மதிப்பிட முடியாத ஆட்சியாளர்கள் முன் கையேந்தி நிற்கும் நிலைமை ஏன் தொடர்கிறது? 37 ஆண்டுகளுக்கு முன் 1971 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் முதல்நாள் நள்ளிரவில் திறந்து ஓடவிடப்பட்ட அரசின் சாராயத்துக்கு இதில் எவ்வளவு பங்கு? அரசின் சாராய வாணிகத்தில் வரி வருவாய் மட்டும் ஏறக்குறைய பத்தாயிரம் கோடி உரூபாய். அப்படியானால் அதன் விலை அதைப்போல் எத்தனை மடங்கு இருக்கும். அரசின் ஒட்டுமொத்த ″உதவிகள், மானியங்கள்″, ″இலவயங்கள்″ கிட்டத்தட்ட ரூ 7500 கோடி தான். மக்களின் வருவாயிலிருந்து இந்த ஒழுக்கு நிகழாமலிருந்தால் இவை தேவைப்பட்டிருக்காதே! மக்கள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேண்டும், அதாவது கிழவனும் சாகக் கூடாது, கட்டிலும் அதாவது மருத்துவமும் ஓயக்கூடாது. அந்த ஏழைகளைச் சிரிக்க வைத்து அதில் இவர்கள் பணமாகிய இறைவனைக் காண்பார்கள்; கொடைவள்ளல்கள் என்று போற்றவும் படுவார்கள். அன்பான அண்ணன் காட்டிய அழகான வழியில் அயராது உழைக்கும் அருமைத் தம்பிகளுக்கு நம் உளம் கசந்த சாபங்கள்.

குடியிருக்க வீடு கூட இல்லாதவர்களுக்கு கறவை மாடுகளாம். அவை இருக்கின்ற புல் பூண்டுகளையும் கறம்பித் தின்றுவிடும். இந்த மாடுகளை வாங்குவதிலும் வழங்குவதிலும் கட்டாயம் நல்ல வரும்படி கிடைக்கும், இலவய மிதிவண்டி, தொ.கா.பெட்டி, எரிவளி இணைப்பு ஆகியவற்றில் போன்று. இது ஒரு பக்கம் என்றால் உரூ. கோடி செலவில் மரம் நடப்போகிறார்களாம். என்றாவது மரம் வளர்த்தல் என்று இவர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோமா?

இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

நெசவாளர்களுக்குக் குடியிருப்புகள் என்று சொல்லி பிற மக்களோடு கலந்து வாழ்ந்து, வசதி உள்ளவர்கள் நகர் விரிவாக்கங்களில் புதிய மனைகளை வாங்கி கலந்து வாழத் தொடங்கியது பொறுக்காமலே அவர்களைப் பெயர்த்துத் தனிக் குடியிருப்புகளில் அமர்த்தினார்கள். அது போல் சமத்துவபுரங்கள் என்ற பெயரில் கட்டப்படும் வீடுகளில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனித் தொகுப்புகளை வழங்க அங்கும் வலுவிழந்தது வரும் சாதியத்துக்குப் புத்துயிரூட்டி வருகிறது இந்த அரசு. இதற்குக் காரணம் தமிழகத்தில் உருவான அரசுகளெல்லாம், மேல் சாதித் தலைவர்களிடையில் உருவான முரண்பாடுகளால் தற்செயலாக கட்சி, ஆட்சிப் பதவிகளில் அமர்ந்து விட்ட காமராசர் தவிர மேல்சாதியினரின் பிடியிலேயே இன்றும் இருந்து வருவதுதான். அத்துடன் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல் என்ற பட்டத்தைப் பெறுவதற்கு மக்கள் மீது வரி கூட விதிக்காமல் அவர்கள் பெயரில் கடன் எடுத்து வட்டியையும் அவர்கள் தலைமேல் சுமத்தவும் முடிகிறதே!

சமச்சீர் கல்வியைப் புகுத்தி கல்வியில் புரட்சிகர மாற்றம் கொண்டு வரப்போகிறார்களாம்! உள்ள பள்ளிக்கே இருந்த ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பாதியாக்கி ஓய்வு பெற்ற ஆசிரியப் பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்பாது, காலாகாலத்தில் கட்டமைப்புகளை உருவாக்காது ஆசிரியர் சங்கங்களுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து அவர்களைப் பிரித்து மோதவிட்டு எதற்குமே உதவாக்கரைகளாக அவர்களை ஆக்கிக் கெடுத்துக் கல்வித் துறையையே குட்டிச் சுவராக்கிவிட்டு அதற்கு மாற்றாக உயர் குடிப் பள்ளிகளை உருவாக்கிய பின் இப்போது அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் பள்ளிகளுக்கு இறுதி அடி கொடுக்க ″அங்கு மட்டும்″ ″சமச்சீர்″ கல்வியை அறிமுகம் செய்யப் போகிறார்களாம். அடித்தளத்திலிருந்தே புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டிய திட்டம் இது. பச்சிளம் குழந்தைகளில் இயல்பாக அமைந்திருக்கும் திறமையை இனம் கண்டு அதை மிகுக்கவும் அதே நேரத்தில் அதனிடம் பதுங்கியிருக்கும் குமுக வாழ்வுக்குப் பொருந்தாத பண்புகளைக் கண்டுபிடித்து அவற்றின் இடத்தில் குமுக மனிதனை உருவாக்கும் பண்புகளை நடவும் தேவைப்படும் பெரும் திறன்களை வளர்த்துக் கொண்ட ஆசிரியர்களைத் தொடக்க கல்வியில் புகுத்துவதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும். மேல் சாதியினரான ஆட்சியாளர்கள் இதைச் செய்வார்களா? அல்லது கல்வியாளர்கள் என்று தன் பட்டம் அடிப்பவர்கள் தாம் இதைப்பற்றிச் சிந்தீத்திருப்பார்களா? இதைப் பற்றி விரிவாக நாம் தனியாகப் பேசலாம்.

அனைவருக்கும் கல்வி, தொடக்கக் கல்வி அனைத்தும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் செயற்பட்டாலன்றி இவர்கள் புகுத்தும் இந்தச் ″சமச்சீர்″ கல்வியால் தமிழக மக்களின் கல்வி நிலை இன்னும் ஒரு தலைமுறையில்18 ஆம் நூற்றாண்டில் போய் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

பள்ளிகளில் கட்டணங்களையும் சிறப்புக் கட்டணங்களை ஒழித்தாயிற்று. இதுவரை இந்தப் பணத்தில் இருந்துதான் பள்ளிக்குத் தேவையான விளையாட்டுத் தளவாடங்கள், நூலகத்துக்குத் தேவையான நூல்கள் போன்ற இன்றியமையாச் செலவுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் தலைமையாசிரியர்கள். கட்டணங்கள் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்தச் செலவுகளை எதிர்கொள்ள அரசு எந்த ஒதுக்கீடும் செய்ததாகத் தெரியவில்லையே என்கின்றனர் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள்.

1940களில் தமிழகத்தில் நெசவாளர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர்கள் கைத்தறித் துணியைச் சுமந்து சென்று விற்று கட்சி வளர்த்தார்கள். மூன்று தலைமுறை ஆகியும் அவர்களுக்கு மாற்று வாய்ப்புகளை உருவாக்கி நெசவை முழுவதும் மேம்பட்ட தொழில் நுட்பத்தின் கீழ் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்கள் எப்போதும் இவர்களை நோக்கி கையேந்தி நிற்கும் நிலையில் வைத்துவிட்டு மானியம், உதவி என்று பேசிவருகின்றனர். அவ்வாறே உழவன் நிலையும்.

உழவனுக்கும் நெசவாளிக்கும் வழங்கும் இலவய மின்சாரத்துக்கு அரசு மின்வாரியத்துக்கு ″மானியம்″ வழங்கிவிடுகிறது. அது போல் மாணவர்களுக்கான இலவய பேருந்து கட்டணத்துக்கும். அப்படி இருக்கும் போது பேருந்து வாங்கவும் மின்வாரியத்துக்கும் அரசு ஏன் தனியாக மானியம் வழங்க வேண்டும்? பொதுமக்கள் நடத்தும் பேருந்து நிறுவனங்களில் ஒவ்வொரு பேருந்திலிருந்தும் கிடைக்கும் வருமானத்திலிருந்து இரண்டாண்டுகளில் ஒரு புதிய பேருந்தை வாங்கி விடுகிறார்களே? அரசு நிறுவனத்திலிருந்து வரும் ஆதாயம் எங்கே போகிறது? அரசுடைமைக்காக ஊழிக் கூத்தாடும் பொதுமைத் தோழர்களே, உங்களுக்கு இதில் எவ்வளவு பங்கு? புதிதாக அமர்த்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் பணி இடங்களுக்கு உரூ. இரண்டு இலக்கத்துக்கும் மேலாகப் பறிக்கப்பட்டதே இதுதான் நீங்கள் கூறும் நிகர்மையா? இதையே பொதுமக்கள் செய்திருந்தால் 5 பேரிடம் வாங்கிய பணத்திலிருந்து ஒரு புது பேருந்து வாங்கி ஓட விட்டிருப்பார்களே!

கடன்களில் வெளிநாட்டு கடன்களாக உலக வங்கியிடமிருந்து 1286 கோடி உரூபாய்களுக்குச் செய்தி அமைச்சரின் உரையிலிருந்து கிடைக்கிறது. சப்பானின் பன்னாட்டு ஒத்துழைப்பு வங்கியிடமிருந்தும் செருமானியின் கடன் வழங்கு நிறுவனத்திலுமிருந்தும் பெற்ற கடன்களுக்குத் தொகைகள் இல்லை. நபார்டு வங்கியிலிருந்து 150 கோடியும்(உரையின் இப்பகுதியில் வேறு பல இடங்களையும் போல் செய்திகள் தெளிவாக இல்லை) தமிழ்நாடு நகர்ப்புறச் சாலைக் கட்டமைப்பு நிதியக் கடன் பத்திரம் மூலம் 853 கோடியும் உரூபாய்களை இனம் காண முடிகிறது.

எண்ணற்ற சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் புலனத் தொழில்நுட்ப வளாகங்கள் உட்பட பலவகை தொழில்நுட்ப வளாகங்கள் அமைப்பதற்கான செலவு அவற்றில் முதலிடுவோர் பற்றிய செய்திகளும் உரையில் இல்லை.

அரசு என்பது எப்போதுமே ஊழல் பதுங்கியிருக்கும் ஓர் இருள் மண்டபம். அதனைத் திருந்துவதென்பது கடினம். அது இல்லாமல் வாழ்கின்ற ஒரு வளர்ச்சி நிலையை மனிதன் இன்னும் எய்தவில்லை. இந்த நிலையில் அரசோடு குமுகம் வாழ வேண்டுமாயின் அதன் அதிகாரங்களை, குறிப்பாகப் பொருளியல் நடவடிக்கைகளை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். அதைத்தான் மார்க்சும் ஏங்கல்சும் ″அரசு உதிர்வது″ என்று கூறினர். ஆனால் அவர்கள் ″பாட்டாளியரின் ஓர் அரசு″ என்று கூறிய இடைநிலைக் கருத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அரசைப் பேயாக வளரத் துணை நின்று உலகையே அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர் பொதுமைக் கட்சியினர்.

மக்களாட்சி என்பது மக்களின் பண்பாட்டை மேம்படுத்தும் ஒரு நடைமுறை. அங்கு ஒவ்வொரு மனிதனும் தன்மானம், தற்சார்பு, தன்னம்பிக்கை, பிறரை மதிக்கும் தன்மை பழிக்கு அஞ்சுதல் போன்ற பண்புகளை உடையவனாக மேம்பட்டு வர வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ தான் கண்காணித்து வழி நடத்த வேண்டிய ஆட்சியாளர் முன் அவன் எச்சிலுக்காக கையேந்தி நிற்பவனாக, ஏழைகளை மட்டுமல்ல, பணம் படைத்தவர்களைக்கூட, ஒரு வேட்டி சேலைக்காக, ஒரு வண்ணத் தொ.கா. பெட்டிக்காக, ஒரு எரிவாயு அடுப்புக்காக மகிழுந்தில் வந்து இரக்க வைத்துவிட்ட தி.மு.க. அரசின் அருஞ்செயலைப் போற்றி மகிழ்வோம்!

சாராயம், அதை ஈடுகட்ட உரூ 2/-க்கு அரிசி வழங்கி உழவனின் உச்சியிலடித்து கள்ள விலைக்கு வெளி மாநிலத்துக்கும் வெளிநாட்டுக்கும் கடத்தி விற்பது, அது போலவே இலவய வண்ணத் தொ.க.பெட்டி, அதையும் விற்றுக் கொடுக்க அமைப்பு, அடுத்து எரிவாயு அடுப்பிலும் அவ்வாறே தொடர இருக்கும் இது போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் என்ற பெயரில் நிகழும் பண வழங்கல்களில் கிடைக்கும் சிதறல்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, புதிதாகக் களத்தில் நுழைந்த திரை நடிகர்களின் கட்சி, அவர்களுக்குப் பின்புலத்தில் இருப்போர் ஆகியோரிடமிருந்தும், சமயங்களின் பெயரிலும் சாதிகளின் பெயரிலும் ″தொண்டு″ நிறுவனங்களுக்கென்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் பாயும் கணக்கில்லாத கள்ளப் பணம், கருப்புப்பணம் அல்ல, அது சட்டப்படி ஈட்டப்பட்டு வருமானவரித் துறையினால் இழி பெயர் சூட்டப்பட்டது, மக்களிடையில் குறிப்பாக இளைஞர்களிடையில் புகுந்து, உழைப்பை மதிக்காத, எந்த நன்னெறிகளையும் புகட்டாத கல்வியுடன் சேர்ந்து பண்பாடறியாத ஓர் இளம் தலைமுறையை உருவாக்கி வைத்துள்ளது நமது ″சனநாயகம்″. மூத்தவர்களும் அதே மனப்பான்மைக்கு உள்ளாகி விட்டனர். அதனால் வேலை செய்வதற்கு இன்று ஆட்கள் கிடைக்கவில்லை. கூலியை எவ்வளவோ உயர்த்தியும் விளைந்த நெல்லை அறுக்கவும் தேங்காயை வெட்டவும் ஆள் இல்லாமல் விளைபொருட்கள் வீணாகின்றன. சக்கரவர்த்தித் திருமகள் என்ற திரைப்படத்தில் ஒரு பாட்டுப் போட்டியில் ″அன்ன சத்திரம் என்பது எதற்காக″ என்ற கேள்விக்கு ″சில திண்ண தூங்கிப் பசங்களுக்காக″ என்று கலைவாணர் விடை கூறுவார். இன்று அனைத்து சமய அனைத்துக் கோயில்களிலும் மதச்சார்பில்லாத அமைப்புகளிலும் அன்ன தானம் என்பது கள்ளக் கணக்கு எழுதி கொள்ளை அடிக்கும் ஒரே நோக்கத்துக்காக தவறாமல் இடம் பெற்று ஒரு பெரும் திண்ணை தூங்கிக் கூட்டம் உருவாகியிருக்கிறது. இவற்றிலும் மகிழுந்தில் வந்து உண்டு செல்வோரைக் காண முடியும். இவ்வாறு மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் புற்றுநோயின் கண்ணறைகளாக மாறி நிற்கின்றனர். அவற்றின் வெளிப்பாட்டை சாலையிலுள்ள தேநீர்க்கடையின் தொ.கா.பெட்டியில் குருவிப் பந்துப் போட்டி ஒளிபரப்பாகும் போது பார்க்கலாம். 28–03–2008 அன்று அதன் ஒரு குவியலைச் சேப்பாக்கம் திடலில் பார்க்க முடிந்தது. இந்த புற்றுநோய் கண்ணறைகளை எப்படி அகற்றுவது?

இந்தப் பண்பாட்டுச் சீரழிவை வளர்க்கும் இன்னொரு வ.செ. திட்டம் இது.

நடுவின் பண அமைச்சர் திருக்குறளை மேற்கொண்டது போலவே தமிழகப் பண அமைச்சர் தனக்கு நிலையான இரண்டாம் இடம் கொடுத்து வந்திருப்பதற்கு நன்றிக் கடனாக 1997 - 98 ஆம் ஆண்டு பணப் பொறுப்பையும் தானே நேரடியாகப் பார்த்த முதலமைச்சர் அப்போது அவை முன் வ.செ. திட்டத்தை வைத்த போது மேற்கொண்ட ஒரு திருக்குறளைச் சொல்லி தலைவர் வாழ்த்துப் பாடிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார். அந்தக் குறள் பா இதோ:

படுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

இதில் எருமை மாடு கரடு முரடான பாதையில் பெரும் பாரத்தை இழுத்துச் செல்வது போல் ஆட்சியாகிய பாரத்தை மக்களின் நலன் என்ற ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு சுமப்பதாகப் பெருமிதப் பட்டாராம். ஆனால் இந்தக் குறளைப் படித்த உடன் எமக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆண்டு முழுவதும் நீர் இருக்கும் குளங்களில் ஆழ் மதகை ஒட்டி ஆழமான சேற்றைக் கொண்ட வயலில் உழ முடியாது, ஏனென்றால் கலப்பையோடு உழவனும் சேற்றினுள் அமிழ்ந்து போவர். எனவே நெல்லை விதைத்துவிட்டு எருமையைக் கட்டி பரம்பு மட்டும் அடிப்பர். எருமை சேற்றில் நீந்திக்கொண்டே பரம்பையும் உழவனையும் இழுத்துச் செல்வது ஓர் அரிய காட்சி. இந்தக் குறளையும் படித்து இந்த வ.செ.திட்ட உரையையும் படித்தபோது அந்த எருமை இருக்கும் இடத்தில் மக்களும், குறிப்பாக உழவர்களும் உழவன் இருந்த இடத்தில் எருமை வடிவில் ஆட்சியாளரும் இருப்பதான ஒரு காட்சியே மனக்கண் முன் விரிகிறது.

மொத்தத்தில், வல்லரசியத்தின் ஓர் உறுப்பாக மாறிவிட்ட இந்திய ஆட்சியாளர்கள் – அவர்களது கூட்டாளிகள் நலனுக்காக வெள்ளையர்கள் வகுத்துத் தந்ததும் நம் பொதுமைப் ″புரட்சியாளர்″களால் நாறடிக்கப்பட்டதுமான இன்றைய வ.செ. திட்ட நடைமுறைகளை இதுவரை உள்ள பட்டறிவின் அடிப்படையில் மேம்பட்ட ஒரு தரத்தில் மாற்றி அமைப்பது உடனடித் தேவை.

(சிற்சில திருத்தங்களுடன் இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: